Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-7

(7)

மூன்று நாட்கள் கடந்து சென்றிருந்தன.

அன்று ஏற்றமாதிபன் வீட்டிற்கு வந்தபோது நேரம் இரவு பத்து மணி.  அவனது மூளையும் உடலும் தொடர் ஓட்டத்தில், அத்தனை களைப்பால் மரத்துப் போயிருந்தன. கடந்த மூன்று நாட்களாக அவனுக்கு நிற்கக் கூட நேரமிருக்கவில்லை. அன்றும் அப்படித்தான். தனக்கு வேண்டிய முக்கிய வேலையை முடித்துக் கொண்டு, வருணுடன் இணைந்து அந்த ஜெனஸிஸ் பயோ – பார்மா  குறித்துத் தீவிரப் புலனாய்வில் ஈடுபட்டிருந்தான். அங்கேதான் ஏதோ நடக்கிறது என்பது அவனுக்கு உறுதியே! ஆனால் அதை நிறுவ ஆதாரம் தேவையே.

அவர்களின் தேடலுக்குத் தீனி போடும் விதமாக எந்தவொரு ஆவணமோ அல்லது சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளோ சிக்கவே இல்லை; ஒரு சிறு துரும்பு கூடக் கிடைக்கவில்லை. அப்படியிருக்கும்போது, எங்கே என்று தேடிப் போய் குற்றவாளிகளைப் பிடிப்பது?

வெறும் மருத்துவமனையில் கிடைத்த அந்த மருந்துக்குப்பியை மட்டும் வைத்துக்கொண்டு, அந்தப் பயோ பார்மாவைக் கைகாட்டிவிட முடியுமா என்ன? குறைந்தது அவர்கள் என்ன குற்றத்தைச் செய்தார்கள் என்று தெரிந்தாலாவது, அதை ஒரு புள்ளியாக வைத்துக்கொண்டு மேலே முன்னேற முடியும். இவர்களின் துரதிர்ஷ்டம், அது கூடத் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எதன் அடிப்படையில் புலனாய்வை நகர்த்துவது? நேரம் வீணாய்ப் போனதுதான் மிச்சம்!

ஒன்று, அவர்கள் தரப்பில் எந்தவொரு தவறுமே இல்லாமல் இருக்க வேண்டும்; இல்லை என்றால், எல்லாம் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டிருக்க வேண்டும். தவறு நடக்காத மருந்தாலை என்று எங்காவது உண்டா என்ன? ஆனால், இந்த மருந்தாலையில் ஒரு சிறு தவறு கூட நடந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதுவே ஏற்றமாதிபனின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அதீத நேர்மையும் கூடப் தவறை மறைக்கும் ஒரு  கருவிதானே!

நம்பிக்கையில்லாமல் அக்குவேறு ஆணிவேறாக அவன் அலசி ஆராய்ந்துவிட்டான்; பலன் என்னவோ பூஜ்யமே! ஒன்று, நினைத்துப் பார்க்க முடியாத பெரும் சட்டவிரோதச் செயலை மறைக்க, யாரும் கண்டுபிடிக்க முயாதவகையில், இணையத்தில் மிக நுணுக்கமான ‘காகிதத் திரை’ (Paper shield) போடப்பட்டிருக்க வேண்டும். அல்லது, பிடிபட்டுவிடுவோமோ என்கிற அச்சத்தில், அனைத்துத் தகவல்களையும், யாருக்கும் சிக்காத வைகயில் முற்றுமுழுதாக நீக்கியிருக்கவேண்டும.. அதுவுமில்லையென்றால்,  பல அடுக்குகளாகப் போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் சட்டவிரோதச் செயல்களைச் செய்திருக்க வேண்டும். இது எதுவுமில்லையென்றால், கண்ணுக்குத் தெரியாத மேகக் கணிமையின் (Cloud) மூலம் தரவுகளைப் பாதுகாத்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் ஒரே நாளில் புலனாய்வு செய்து கண்டுபிடித்துவிட முடியாது. ஆரம்பக்கட்ட தடயங்களைக் கண்டறியவே குறைந்தது இரு வாரங்களாவது தேவைப்படும்; அதுவுமே போதுமா என்று தெரியவில்லை. இதில் அவர்களுக்குக் கிடைத்தது வெறும் பனிப்பாறையின் நுனி மட்டும்தான்; அது கூட இன்னும் சரியாகத் தட்டுப்படவில்லை. இதில், அதன் அடியில் புதைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பெரு மர்மத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

சலித்துப் போனது ஏற்றமாதிபனுக்கும் வருணுக்கும். கொஞ்சம் ஓய்வெடுத்துத் தூங்கி எழுந்தால்தான் புத்தியும் மூளையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தனர். இதுவரை எந்தவொரு வழக்கும் இந்த அளவிற்கு இழுபட்டதில்லை. இடைவிடாமல் தேடிப்பார்த்தாயிற்று, ஊடுருவிப் பார்த்தாயிற்று; ஆனால் எந்தப் பயனுமில்லை.

முடிந்தவரை போராடிப் பார்த்துவிட்டுக் கடைசியில் விடைபெற்று வீட்டுக்குத் திரும்பும் நேரத்தில், இன்னொரு புதிய சிக்கல் ஏற்றமாதிபனுக்கு மின்னஞ்சலின் வாயிலாக வந்திருந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான சி.ஏ.எஸ்-ஸிடமிருந்து (Children’s Aid Society – CAS) வந்திருந்த மின்னஞ்சல் அது! விதுரனைத் தற்காலிகமாக அவன் பொறுப்பில் விட்டுவைத்திருந்த கால அவகாசம் நிறைவடைவதால், அவனைத் தங்கள் வசமெடுத்து, தகுந்த பாதுகாப்பான இல்லத்தில் சேர்ப்பதற்குரிய வேலைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவாக அவனைத் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் அதில் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் படித்ததிலிருந்து அவனுடைய மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.

விதுரனை மருத்துவமனை விடுவித்தபோது அவனுக்குப் பதினெட்டு வயது ஆகாத நிலையில், அவனைக் குழந்தைகள் பாதுகாப்பகத்திடம் ஒப்படைப்பதற்கான அத்தனை ஆயத்தங்களையும் மருத்துவமனை நிர்வாகமே செய்திருந்தது. ஏனெனில், தாய் தந்தை இல்லாத மைனர் குழந்தையைப் பாதுகாப்பான வளர்ப்பு வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டியது கனடா நாட்டுச் சட்டம் என்பதால், மருத்துவமனையும் அதையே பின்பற்றியது. அந்த நிலையில் மருத்துவமனையின் அறிவித்தலின் படி, அவனை அழைத்துச் செல்ல சி.ஏ.எஸ் அமைப்பிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருந்தனர்.

விதுரனை அழைத்துச் செல்ல, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்து ஒரு கணம் அதிர்ந்துதான் போனான் ஏற்றமாதிபன். விதுரனை அழைத்துச் சென்றால், அதன் பிறகு விதரணையின் நிலை?

இவன் மட்டும் இடையே புகுந்து தடுக்காமல் இருந்திருந்தால், விதுரனை அன்றே அவர்கள் அழைத்துச் சென்றிருப்பார்கள். இவன் காவல்துறையில், அதுவும் உயர் மட்டத்தில் வேலை செய்கிறான் என்பதால், ‘அவனைத் தற்காலிகமாகப் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்’ என்று உறுதி அளிக்க… அவர்களும் ‘தகுந்த பாதுகாப்பான இருப்பிடம் அவனுக்குக் கிடைத்ததும் சொல்கிறோம், அவனை உடனே தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும்’ என்கிற உறுதியோடு தற்காலிகமாக விதுரனை இவனிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெற்றுச் சென்றிருந்தனர்.

இப்போது அந்தக் காலக்கெடுதான் முடிவுக்கு வர இருப்பதால், அவனை ஒப்படைக்கும்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள்.

அதுவேறு அவன் அழுத்தத்தை அதிகரித்திருந்தது. இதில் இருந்த களைப்புக்கு அப்படியே படுக்கையில் விழுந்து ஒரு பொழுதாவது உறங்கிவிடமாட்டோமா என்று வேறு தோன்றியது. நன்றாக உறங்கி எழுந்தால்தான், எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியும். முதலில் விதுரனின் பிரச்சனைக்கான தீர்வைக் காணவேண்டும். இல்லை என்றால் அவன் கைவிட்டுப் போய்விடுவான். அதன் பிறகு அவனை மீட்பது அத்தனை சுலபமில்லை. யோசனையோடு, மெதுவாக மாடியேறித் தன் அறைக்குச் சென்றவன், சற்றுத் தயங்கி விதரணையின் அறையைப் பார்த்தான்.

ஒருமுறை அவளை எட்டிப்பார்த்துவிட்டுப் போகலாமா என்று மனது கேட்க… மெதுவாக நடந்தவன், கொஞ்சமாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். அங்கே படுக்கையில் முழங்கால்களை மடித்தவாறு, அதில் தலையைப் புதைத்துக் கிடந்தவளைக் கண்டவனுக்கு, ‘அவள் உறங்காமல் என்ன செய்கிறாள்?’ என்கிற ஆதங்கத்தோடு, “விதரணை…” என்றான் மென்மையாக.

அவள் தன் நினைவுகளில் மூழ்கியிருந்ததால் அவன் அழைப்பு அவளுக்குக் கேட்கவில்லையோ? மீண்டும் அவளை அழைத்தான், “விதரணை…”

இப்போது அவன் குரலின் சத்தம் சற்று அதிகரித்திருந்தது. அவளிடம் இன்னும் அசைவில்லை. ‘ஒருவேளை அமர்ந்தவாக்கிலேயே உறங்கிவிட்டாளா என்ன?’ என்று நினைத்தவனுக்கு ஏனோ அவளுடைய அந்த அமைதி பதற்றத்தை ஏற்படுத்த, வேகமாக அவளை நெருங்கி, “விதரணை…” என்றான் அழுத்தமான, ஆழமான குரலில்.

அப்போதுதான் அவன் அழைத்தது அவளுடைய காதுக்குள் சென்று நுழைந்தது போல, திடுக்கிட்டுக் கொஞ்சமாய்த் தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அவளுடைய விழிகள் கொவ்வைப் பழங்களாகச் சிவந்து வீங்கியிருந்தன. அழுதிருக்கிறாள் என்பது புரிய, தன் பதற்றத்தை ஓரமாகத் தள்ளி வைத்தவன்,

“ஸாரி.. அழைத்துத் தான் பார்த்தேன்… நீ கவனிக்கவில்லை. அதுதான் கொஞ்சம் சத்தமாக அழைக்க வேண்டியதாகப் போயிற்று…” சொன்னவன், அவள் இன்னும் உறங்காமலிருப்பதைக் கண்டு, “என்னாச்சு… தூக்கம் வரவில்லையா?” என்றான் பட்டுப் போன்ற மென்குரலில்.

அவளோ பதில் சொல்லாமல் சற்று நேரம் அவனை வெறித்துப் பார்த்தாள். அந்த நேரத்தில் அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை என்பது, கொஞ்சமாய்ப் பதறிய அவளது விழிகளில் தெரிந்தது. ஆனாலும் ஏற்றமாதிபன் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுடைய தற்போதைய மனநிலையில், அவளின் தவிப்பும் கலக்கமும் இயல்புதானே!

“ஏதாச்சும் கனவு கண்டு விழித்துவிட்டாயா?” இப்போதும் இளக்கமான குரலில்தான் கேட்டான். அவளோ பதில் சொல்லாமல், அவன் முகத்தையும் பார்க்காமல் எங்கோ தலையைத் திருப்ப… இப்போது ஏற்றமாதிபனுக்குப் பொறுமை கொஞ்சம் காற்றில் பறந்தது.

அன்று பகல் முழுவதும் நாய் பேயாக அலைந்ததன் விளைவாகப் புத்தியும் உடலும் அடித்துப் போட்டது போலக் களைத்துவிட்டிருந்தது. இதில் இவள் வேறு! அவளுக்காகத்தான் இத்தனை போராட்டம் என்று எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறாளோ!

“உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் விதரணை. பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்…?” என்றவாறு இன்னும் அவளை நெருங்க… இப்போது விதரணையிடம் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டது. அவசரமாகத் தான் அமர்ந்த நிலையை மாற்றிக் கால்களைக் கட்டிலுக்கு வெளிப்புறமாகப் போட்டுவிட்டு, இரண்டு பக்கமும் கரங்களை அழுத்தியவாறு அமர்ந்து கொள்ள… அவளை நோக்கிக் குனிந்தவன், தன் வலது கரத்தால் அவள் நாடியைப் பற்றி மேலே தூக்கினான்.

சிவந்து வீங்கிப் போன அவள் முகத்தைக் காணக் காண அவனுக்குள்ளும் பெரும் வலிதான்! ஒரு பெருமூச்சோடு அவளை ஏறிட்டவன்,

“விதரணை… இப்படி உன்னையே வருத்திக்கொண்டால் எல்லாமே சரியாகிவிடுமா? ம்… நடந்ததையே நினைத்திருந்தால் அதிலிருந்து மீளுவதுதான் எப்போது?” என்று கேட்டவன், அப்போதுதான் கவனித்தான் அவளுடைய வலது கரத்திற்குள் எதுவோ சுருண்டிருப்பதை.

புருவங்கள் சுருங்க அவளுடைய வலது கரத்தைப் பார்த்தவன்,

“உன் கையில் என்ன?” என்று கேட்க… ஒரு கணம் பதறிப்போனாள் விதரணை. அவசரமாக அந்தக் கரத்தை அங்கிருந்து விலக்க முயன்று தன் முதுகுக்குப் பின்னால் எடுத்துச் சென்றவள், அவன் முகம் பார்க்காமல்,

“ஒ… ஒன்றுமில்லை” என்றாள் அழுத்தமாக.

அவளுடைய அந்தப் பதற்றமும், அவன் முகம் பார்க்காமல் விழிகளைத் தாழ்த்திக் கொண்ட விதமும் ஏதோ சரியில்லை என்று அவனுக்கு அறிவுறுத்த… மெதுவாக அவளிடமிருந்து கரத்தை விலக்கியவன்,

“உன் கையில் என்ன என்று கேட்டேன் விதரணை…” என்றான் சற்றுக் கடுமையாக. அவள் விழிகள் அவனை ஏறெடுத்துப் பார்க்க மறுத்தன. உடலில் ஒரு நடுக்கம்! இது ஏதோ தவறு என்று அவனுக்கு எச்சரிக்க, “விதரணை… உன் கையில் என்ன?” இப்போது குரலின் கடுமை கூடியிருந்தது. இப்போதும் அவனைப் பார்த்தாளில்லை.

“அது… அதுதான் சொல்கிறேனே… ஒன்றுமில்லை என்று…” அவள் சொல்லி முடிக்கவில்லை, சட்டென்று அவளுடைய வலது கரத்தைப் பற்றித் தன்னை நோக்கித் தூக்கினான் ஏற்றமாதிபன்.

இதை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை! ‘ஒன்றுமில்லை’ என்றதும் விலகிவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவன் அவள் கரத்தைப் பற்றித் திருப்பியதும் பதறியவள், அவனுடைய கரத்திலிருந்து தன் கரத்தை இழுத்து எடுக்க முயன்றாள். அவனுடைய கரமோ இரும்புப் பிடியாக இருக்க, அந்தப் பிடியில் கரம் வலித்தாலும், தன் கரத்திற்குள் சிக்கியிருப்பதை அவன் கண்டுவிடுவானோ என்கிற அச்சத்தில் அவனை ஏறிட்டவள்,

“அதில் ஒன்றுமில்லை… என் கரத்தை விடுங்கள்…” என்றவாறு மீண்டும் இழுக்க முயன்றாள்.

அவனோ பிடிவாதமாக அவளுடைய விரல்களைப் பிரித்துப் பார்க்க, அங்கே அவளுடைய உள்ளங்கையில் இருப்பதைக் கண்டவனுக்குச் சர்வமும் நடுங்கிப் போனது! முகமோ வெளுறிப் போனது; இதயத்தின் துடிப்பு காதில் கேட்க, அதிர்ச்சியும் ஆத்திரமுமாக அவளை நிமிர்த்திப் பார்த்தவனின் பார்வையில் அத்தனை அனல்! அவள் கரத்திலிருந்த அந்தச் சிறிய குப்பியை வெடுக்கென்று பறித்தவன், அதிலிருந்த லேபிளைப் பார்த்தான்.

‘அல்பிரசோலம்’ (Alprazolam) வகை மாத்திரைகள்! அதன் கீழே வித்யாதருக்குப் பரிந்துரைக்கப்பட்டதாக எழுதியிருக்க… அவனுக்கு மூச்சே நின்று போனது போலிருந்தது!

தன் உறக்கம், உடல்நலம் என அனைத்தையும் துறந்துவிட்டு இத்தனை தூரம் போராடுவது அவளுக்காகத்தான். ஆனால் அவளோ, அதைக் கூட யோசிக்காமல் அத்தனை போராட்டங்களையும் அர்த்தமற்றதாக்கிவிட்டு, இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுக்கத் துணிந்துவிட்டாளே!

எரிமலையாய் பொங்கி எழுந்த ஆத்திரத்தோடு, கரத்திலிருந்த அந்த மருந்துக் குப்பியை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டவன், மின்னல் வேகத்தில் அவள் தோள்களைப் பற்றி உலுக்கித் தன்னை நோக்கி எழுப்பினான்.

“முட்டாள்… முட்டாள்… எதையாச்சும் விழுங்கித் தொலைத்தாயா… சொல்லுடி!” என்று சீறியவனுக்கு ஒரு விநாடி மூளை மரத்துப் போன உணர்வு.

அந்தக் கணம் அவன் காவலதிகாரி என்பதையே மறந்து போனான். என்னதான் இக்கட்டான நிலைமையில் இருந்தாலும், நிதானமான பேச்சுதான் அங்கே எடுபடும் என்று அவனுக்குத் தெரிந்தும், உள்ளே பேரலையாக எழுந்த கோபத்தை அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாள்… அவனால் அவளுடைய செயலை இம்மிகூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்டுக்கடங்காத ஆத்திரத்தோடு அவளை உலுக்கியவன், “சொல்லு… எத்தனை விழுங்கித் தொலைத்தாய்…!” என்று கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடு சீறியவன், மறுகணம் தன் விரல்களை அவளுடைய வாய்க்குள் நுழைக்க முயல, அவளோ அவனைத் தள்ளிவிட்டு விலக முயன்றாள்.

அடுத்த கணம் ஆவேசம் கொண்டவனாக அவளை இழுத்துச் சுவரில் மோதவைத்தவன், தன் உடலை அவள் உடல் மீது அழுத்தி, ஒற்றைக் கரத்தால் அவள் தாடையை அழுந்தப் பற்றி, மறுகரத்தின் விரல்களை அவளுடைய வாய்க்குள் நுழைத்து வாந்தி எடுக்க வைக்க முயல… அவளோ ஓங்கரித்தவாறு அவன் கரங்களை இழுத்துத் தள்ளிவிட முயன்றாள். தள்ளும் உருவமா அவனது? அவன் இரும்புப் பிடியிலிருந்து விலக முடியாமல் தவித்தவள், வாய்க்குள் நுழைந்திருந்த அவன் விரல்களை, வேறு வழியில்லாமல் பலமாக நறுக்கென்று கடித்துவிட… வலியில் சட்டென்று விரல்களை எடுத்துவிட்டான் ஏற்றமாதிபன்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தியவள், கண்ணிமைக்கும் நொடியில் அவனைத் தள்ளிவிட்டுத் தொண்டையைப் பிடித்தவாறு படுக்கையில் தொப்பென்று அமர்ந்து கொள்ள, அவனோ கரங்களை உதறிவிட்டு, மீண்டும் அவளை நோக்கி வந்தான்.

அவளைத் தடுக்க முயன்றவளாகக் கரத்தை வேகமாக உயர்த்தியவளுக்கு  மார்புக் காயம் வலிக்க, “ஆ… அவுச்…” என்றவாறு முகம் சுருங்க, இடது மார்பைப் பற்றிக்கொண்டவள், வலியோடு அவனைப் பார்த்து, “ஐயோ… என்னை விடுங்கள்… நான் எந்த மாத்திரையையும் விழுங்கவில்லை!” என்றாள் இயலாமை கொடுத்த கோபத்தோடு.

அவனோ அவளை நம்பாமல் தன் கைப்பேசியை எடுத்து அவசர எண்ணை அழுத்த முயல… பதறியவள் வேகமாக எழுந்து, அவன் கரத்திலிருந்த கைப்பேசியைப் பறித்தவாறு மீண்டும் கட்டிலில் தொப்பென்று அமர்ந்து, கரத்திலிருந்த கைப்பேசியை ஓரமாகப் போட்டுவிட்டு, அவளுடைய தொண்டைக்குள் அவன் விரல்கள் நுழைந்ததால் ஏற்பட்ட இருமலிலும் வலியிலும் முகம் சுருங்க,

“சத்தியமாக எதையும் நான் விழுங்கவில்லை… நம்புங்கள்” என்றாள் சோர்ந்து போன குரலில்.

“விதரணை… தயவு செய்து இந்த விஷயத்தில் பொய் சொல்லாதே…” அவன் முடிக்கவில்லை, சோர்வுடன் விழிகளை மூடித் திறந்தவள் அவனை எரிச்சலோடு நிமிர்ந்து பார்த்தாள்.

“நீங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர் தானே? மாத்திரை உட்கொண்டிருந்தால் இப்படி உங்கள் முன்பாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பேனா?” என்றவள் சிரமப்பட்டு எச்சிலைக் கூட்டி விழுங்கிவிட்டு, கண்ணீர் மல்க விழிகளைத் தாழ்த்தி,

“அம்மா அப்பாவின் நினைவு என்னைக் கொல்கிறது. உயிரோடு இருக்கப் பிடிக்கவில்லை. செத்துப் போக வேண்டும் போல இருந்தது… செத்துவிடலாம் என்றுதான் நினைத்தேன்… ஆனால் என்னால்… என்னால் அதுவும் முடியவில்லையே! எதுவோ என்னைத் தடுக்கிறதே… நான் என்ன செய்யட்டும்?” என்று குரல் கம்ம, கலக்கத்தோடு சொல்ல… அவனோ பதில் சொல்லாமல் ஆத்திரம் சற்றும் குறையாமல் அவளை வெறித்தான்.

கொஞ்ச நேரத்தில் அவனுக்குச் சாவையே கண்முன்னால் காட்டிவிட்டாளே! வந்த ஆத்திரத்திற்கு ஓங்கி அவள் கன்னத்தில் ஒன்று கொடுத்தால் என்ன என்று கூடத் தோன்றியது. ஆனாலும் பெண்களின் மீது கை வைத்துப் பழக்கப்படாதவனுக்கு அது இயலவில்லை. என்னதான் அவள் சமாதானம் சொன்னாலும், அவனால் அவள் செய்யத் துணிந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“அதற்கு இதுதானா முடிவு? நீ செத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? யோசிக்க வேண்டாமா? நீயும் போனால் உன் தம்பியின் நிலை என்ன? நான்… நான் என்ன…” என்றவன் பற்களைக் கடித்துச் சொல்லவந்ததை இடையில் நிறுத்திவிட்டு, “இது அப்பாவோடது… அவருக்கு உறக்கம் வரவில்லை என்றால் எப்போதாவது எடுப்பார்… இது உன் கையில் எப்படி வந்தது?” என்று கேட்டான் அடங்கா சினத்தோடு.

குற்ற உணர்வோடு அவன் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் விழிகளைத் தாழ்த்தியவள்,

“இரவு உணவுக்காக ஆன்டி என்னை அழைத்துக் கொண்டு கீழே சென்றார்கள். சாப்பிட்டு முடித்ததும் மாமாவுக்கு மாத்திரைகள் எடுப்பதற்காக மருந்துப் பெட்டியை எடுத்து வந்தார்கள். அந்தப் பெட்டியில் இந்த மாத்திரையும் இருந்தது…” என்று அவள் சொல்ல, சற்று நேரம் அவளை வெறித்துப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

தன் தாயின் கவனக்குறைவின் மீது கோபம் வந்தாலும், விதரணையை நினைத்துப் பெரும் பயமும் எழவே செய்தது. கொஞ்ச நேரக் கவனக்குறைவில் எத்தனை பெரிய காரியம் செய்ய நினைத்தாள்! அப்படியென்றால் அவள் ஒரு விநாடியும் குறையாமல் இறப்பைப்பற்றி மட்டும்தானே சிந்தித்துக்கொண்டிருக்கிறாள்! ஏதோ அவனுடைய நல்ல நேரம், அவள் எந்த மாத்திரையையும் உட்கொள்ளவில்லை. ஒருவேளை உட்கொண்டிருந்தால்? அவன் வந்து பார்க்காமல் போயிருந்தால்? நினைக்கும் போதே அவன் உடல் உதறி நடுங்கியது; நெஞ்சம் துடித்தது; இதயம் நின்றுவிடும் போலப் பயமுறுத்தியது. எதற்காக அவளுடைய காதலைப் புறக்கணித்தானோ, அதற்கு அர்த்தமே இல்லாமல் போயிருக்குமே!

“அதற்கு இதுவா வழி? எல்லாவற்றிற்கும் மரணம்தான் முடிவு என்றால், இன்று உலகத்தில் அத்தனை பேரும் மரணித்து உலகமே சுடுகாடாக மாறியிருக்கும் தெரியுமா?” என்றான் கொஞ்சம் கூட மனம் சமாதானம் அடையாமல்.

விதரணையோ அவனை நிமிர்ந்து வெறித்துப் பார்த்தாள். இப்போது கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு ஓடத் தொடங்க,

“என்னை என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? இந்த உலகத்தில் வாழ்வதே சாபம் என்று நினைக்கத் தோன்றுகிறதே… கண்களை மூடினால் என் அம்மா அப்பாவின் மரணம்தானே காட்சியாய் விரிகிறது…” என்றவள் ஒருவித சீறலுடன் தன் காதுகளைப் பொத்தியவாறு,

“ஐயோ… என் பெற்றோர் என்னைக் காப்பாற்றச் சொல்லி அலறுவது போலவே என் காதில் கேட்கிறதே! அப்பாவின் கெஞ்சல் பார்வை, அம்மாவின் கதறல்… கடவுளே…! நான் சாகும் வரைக்கும் இந்த உணர்விலிருந்து என்னால் வெளியேற முடியாது போல இருக்கிறதே, நான் என்ன செய்வேன்? இங்கே… நான் மட்டும் பாதுகாப்பாக, சொகுசாக இருக்கிறேன். ஆனால் அவர்கள் மீளாத, திரும்பி வராத இடத்திற்குச் சென்றுவிட்டார்களே… இதிலிருந்து எப்படி நான் வெளியே வரப்போகிறேன் என்று தெரியவில்லையே! நான் தப்பிப் பிழைத்ததை நினைத்து வெறுக்கிறேன் ஏற்றன்… சத்தியமாக என்னையே நான் வெறுக்கிறேன்! அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை… அதை நினைத்து நினைத்துத் துடிக்கிறேன். அதை விடச் செத்து மடிவது விடுதலை போலத் தோன்றுகிறதே…” என்று அவள் கதற…

மறுகணம் பாய்ந்து அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் ஏற்றமாதிபன்.

“ஓ… மை பேபி கேர்ள்… ஷ்… ஷ்… இட்ஸ் ஓகே கண்ணம்மா…” என்று அவளைத் தேற்ற முயல… அவளோ அவனிடமிருந்து விடுபடப் போராடியவளாக,

“என்னால் முடியவில்லை… நான் என்ன செய்யட்டும்? ஏதாவது மருந்தோ, ஊசியோ போட்டு என்னைக் கொன்றுவிடுங்களேன்… இல்லை உங்கள் துப்பாக்கியாலாவது என்னைச் சுட்டுக் கொன்று விடுங்களேன்… நிம்மதியாகச் செத்துப் போகிறேன்… அம்மா அப்பா இல்லாமல் தனியாக அநாதையாக…” என்று அவள் முடிக்கவில்லை, மறுகணம் ஏற்றமாதிபனின் அழுத்தமான உதடுகள், கதறித் துடித்த அவளுடைய உதடுகளை அள்ளி அணைத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டன! அதிர்ந்து போனாள் விதரணை.

மறு கணம் அவன் செயல் புத்திக்கு உறைக்க, வேகமாகத் தன்னை விடுவிக்க முயல… சட்டென்று அவளுடைய மென் முகத்தைத் தன் இரு கரங்களாலும் ஒரு வித ஆவேசத்தோடு பற்றி நிலை நிறுத்தியவன், தன் இதழ்களால் இன்னும் அழுத்தமாகக் கடுமையா அவள் உதடுகளை முழுமையாக ஆக்கிரமித்துத் தனக்குள் சிறைப்படுத்தி விழுங்க முயன்றான் அவன்.

அவன் செயலில் தோன்றிய அதிர்வில் விரிந்த விழிகளோ, மெல்ல மெல்ல அந்த அதிர்ச்சியைத் தொலைத்துப் புதுவித உலகிற்குள் நுழைய முயன்றாள் விதரணை. கூடவே கண்களிலிருந்து வழிந்த கண்ணீர், அப்படியே கீழிறங்கி இரு உதடுகளுக்குள்ளும் நுழைந்து அந்த முத்தத்தின் வீரியத்தைக் கூட்ட, அங்கே புதுவித உலகம் இருவரின் மத்தியிலும் சுழரத் தொடங்கியது.

அந்த முத்தத்தை சாதாரண முத்தம் என்று எப்படிச் சொல்லிவிட முடியும்? சிதைந்து போயிருந்த ஒரு மனதைச் செப்பனிடும் உன்னத ஔடதம் அல்லவா அந்த முத்தம்! அவளுக்குள் படிந்திருந்த துயரத்தின் கறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்து, உயிர்ப்பூட்டும் நம்பிக்கையூற்றல்லவா அந்த முத்தம். வார்த்தைகள் தோற்றுப்போன அவ்விடத்தில், அந்த முத்தமே ஒரு மொழியாய் மாறி அவளது பாரத்தைத் தளர்த்த முயன்ற அற்புதத் திருவாசகமல்லவா அந்த முத்தம்!

புணர்ச்சியின் வகையைச் சார்ந்து கொள்ள, அதில்சீற்றமாய் பிறந்த இருவரின் மூச்சுக்காற்றும் பிணைந்து, ஒன்றோடு ஒன்று கலந்து சங்கமித்து அவள் ஆயுளைக் கூட்டும் மகா மிருத்யுஞ்சய மந்திரமாகிப் போக, அவளுக்குள் சொல்லமுடிாயத திடமும், மன அமைதியும் பரவத் தொடங்கியது.

அந்தத் தீராத முத்தத்தின் பிடியில் கிடைத்த பாதுகாப்புணர்விலும், அதன் வீரியம் தந்த போதையிலும் அவளை ஆக்கிரமித்த சொல்லொணா வலி மெல்ல மெல்ல அவளை விட்டு வடிந்து செல்ல, அதுவரை அவளைக் கொல்லாமல் கொன்ற தவிப்பும் பரிதவிப்பும் தற்காலிகமாக அவளை விட்டு விலகிச் செல்ல… அதற்கு மேல் இயங்கும் சக்தியைத் தொலைத்தவளாக, அப்படியே விழிகள் மூடி சோர, அதுவரை ஆவேசமாக அவளை முத்தமிட்டிருநதவன் மெதுவாக அவள் உதடுகளை விட்டுத் தன் உதடுகளைப் பிரிக்க முடியாமல் பிரித்தான் ஏற்றமாதிபன்.

கண்களில் கண்ணீர் வழிந்தோட, அவனைப் பார்க்கும் சக்தியற்று உதடுகள் கடித்து விழிகள் மூடித் தன் தலை கவிழ்ந்தவளைத் கைவளைவில் தாங்கி மென்மையாக அணைத்துக் கொண்டவன், அவளுடைய உச்சந்தலையில் உதடுகளைப் பொருத்திச் சற்று நேரம் அப்படியே இருந்தான்.

அவனுடைய மனதும் பேரமைதியை இப்போது தத்தெடுத்திருந்தது. வெறும் இதழ் முத்தத்திற்கு இத்தனை சக்தியா? நம்பமுடியவில்லை அவனுக்கு. அவனையும் மீறி முகம் மலர்ந்திருக்க, அவள் தலையில் தன் கன்னத்தைப் பதித்து சற்று நேரம் அப்படியே இருந்தனர் ஏற்றமாதிபன்.

அவனுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. ‘இவளுக்குப் பாதுகாப்பு வெளியிலிருந்து மட்டுமில்லை, வீட்டிற்குள்ளும் 24 மணி நேரமும் தேவை’ என்பது.

அவள் இத்தகைய ஒரு முட்டாள்தனத்தைச் செய்ய முயன்றாள் என்றால், அதற்குப் பின்னே இருக்கும் அந்த வலியை அவனால் புரிந்துகொள்ளவே முடிந்தது. ஆண்கள் எப்போதும் வலியைப் புத்தியால் யோசிப்பார்கள்; ஆனால் பெண்களுக்கு வலி என்பது உணர்வு சம்பந்தப்பட்டது, ஆத்மார்த்தத்திலிருந்து பிறப்பது. அது எந்தளவுக்கு அவர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கும் என்பதை முழுதாக உணர்ந்துகொண்ட ஏற்றமாதிபனுக்கு, முதலில் அவளுக்கு ‘வாழ வேண்டும்’ என்கிற ஆசையை உருவாக்க வேண்டும் என்பது அந்தக் கணம் புரிந்தது.

அவளுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதையும், அவளை நம்பி அவள் தம்பி இரக்கிறான் என்பதையும் முதலில்  அவளுடைய மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். இல்லையென்றால், இதோ இப்படித்தான் மனம் துடிக்கும்போது எதையாவது முட்டாள்தனத்திற்குள் தன்னை உட்படுத்துவாள். இப்போது கடவுளின் அருளால் எதையும் செய்யாமல் தப்பிவிட்டாள்; எல்லா நேரமும் இப்படியே இருக்கும் என்று சொல்ல முடியுமா? இன்று இல்லை என்றாலும், நாளை இதே அழுத்தம் முழுதாக ஆதிக்கம் செய்யும்போது, இப்போது தன்னைக் காத்துக் கொண்டது போலக் காத்துக் கொள்வாளா என்பது கேள்விக்குறிதானே!

“நோ… நோ… இனி இப்படி ஒருபோதும் நடக்காது; நடக்கவும் கூடாது. அதற்கு வாய்ப்பு அமைத்துக் கொடுக்க மாட்டேன்… இதற்காகவா அவளை விட்டு ஒதுங்கியிருந்தேன்? அவளைப் பார்க்காமல் தள்ளி இருந்தேன்? இல்லை… இனி எக்காரணம் கொண்டும் அவளை விட்டுத் தள்ளி நிற்க மாட்டேன். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும்!” என முடிவு செய்தவன், தன் மார்பில் கிடந்தவளை மெதுவாக நடத்திச் சென்று படுக்கையில் அமர்த்த, அவளோ குற்ற உணர்ச்சியில் அவன் முகம் பார்க்காமல், தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்த நிலையே சொன்னது, இரவு முழுவதும் உறங்காமல் அப்படியேதான் இருக்கப் போகிறாள் என்று.

கடந்த மூன்று நாட்களாக அவள் தூக்கமில்லாமல் அறைக்குள் நடை பயின்றது அவனுக்குத்தான் தெரியுமே. தொடர்ந்து தூக்கமில்லாததும், அவள் மன வலியும் சேர்த்துத்தான் அவளை இப்படியான முட்டாள் தனமாக யோசிக்க வைத்திருக்கிறது. முதலில் அவள் நன்றாக உறங்கி எழ வேண்டும். முடிவு செய்தவன், தன் கரத்திலிருந்த குப்பியைத் திறந்து அதிலிருந்த ஒரு மாத்திரையை எடுத்தவன், அங்கிருந்த தண்ணீர் போத்தலைத் திறந்து அவளிடம் நீட்ட அவளோ அது கூட உறைக்காமல் ஒருவித மரத்த நிலையில் அமர்ந்திருந்தாள்.

“விதரணை…” அவன் அழைக்க, கடலளவு சோகத்தோடு நிமிர்ந்து பார்த்தாள் அவள். அவள் பார்வையும் செயலும் இவளைக் கொல்லாமல் கொல்லவே செய்தது. ஆனால் அவனாலும் என்னதான் செய்யமுடியும்?

அவளை நெருங்கியவன், தன் கரத்திலிருந்த தண்ணீர் போத்தலை பக்கத்து மேசையில் வைத்துவிட்டு, கையிலிருந்த மருந்துக் குப்பியைப் பான்ட் பாக்கட்டிற்குள் திணித்துவிட்டு, எடுத்து வைத்திருந்த மாத்திரையைப் பாதியாக உடைத்து,

“வாயைத் திற…” என்றான். இவள் ஏன் என்பது போலப் பார்க்க,

“ப்ச்… சொல்கிறேனே… வாயைத் திற…” என்றான் அழுத்தமாக. அவள் மெதுவாகத் திறக்க, அவள் வாயில் அந்த அரைவாசி மாத்திரையைப் போட்டவன், மேசையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவள் வாயில் ஊற்ற, மறுக்காமல் அந்தத் தண்ணீரைக் குடித்தாள் விதரணை.

அவள் மாத்திரை விழுங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்தவன், மீண்டும் தண்ணீர் போத்தலை மேசையில் வைத்துவிட்டு அவள் தோள்களைப் பற்றிப் படுக்கையில் சரித்துிவட்டுக் கால்களையும் தூக்கிச் சரியாக வைத்தவன்,

“தூங்கு…” என்றான் இதமாக. அவளோ,

“தூக்கம் வரமாட்டேன் என்கிறது ஏற்றன்…” என்றாள் கலக்கமாக.

“இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். கண்களை மூடு…” என்றான் அவன் அழுத்தமாக. அவளோ விழிகளை மூடாமல்,

“விதுரன்… அவன்… அவன் தூங்கிவிட்டானா…?” கேட்டாள் ஏக்கமாக.

“ம்… அவன் உறங்கிவிட்டான். நீ தூங்கு…” சொன்னவன், போர்வையை எடுத்து அவளுக்குப் போர்த்திவிட்டு, அவளுக்கு அருகே படுக்கையில் அமர, அதற்கு மேல் விவாதம் செய்யாமல் விழிகளை மூடியவள், எப்போது உறங்கினோம் என்று தெரியாமலே விழிகளை மூடி உறங்கிவிட்டிருந்தாள் விதரணை.

அவள் உறங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்தவனாகத், தன்னை மறந்து குனிந்தவன், அவள் நெற்றியில் மென்மையான முத்தம் ஒன்றை வைத்துவிட்டு விலகியவன், வெளியேறி சத்தம் எழாத வகையில், கதவை மூடிவிட்டுத் தன் தாயைத் தேடிச் சென்றான்.

What’s your Reaction?
+1
18
+1
1
+1
4
+1
0
+1
7
+1
3
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago