தாயைத் தேடிச் சென்ற ஏற்றமாதிபன் அவர்களின் அறைக் கதவைத் தட்ட, வந்து திறந்தார் மதிவதனி. அங்கே வாசலில் நின்றிருந்த தன் மகனைக் கண்டதும் அவருக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
இதுவரை அவன் இரவில் வந்து இப்படித் தட்டி எழுப்பியதில்லை. சொல்லப்போனால், அதில் ஆர்வம் காட்டியதில்லை என்றும் சொல்லலாம். அதற்காக அவர்கள் மீது அவனுக்கு அன்பில்லை என்று அர்த்தமில்லை; தாய் தந்தை மீது உயிரையே வைத்திருக்கிறான்தான். ஆனால் காட்டமாட்டான்; காட்டவும் தெரியாது. இவர்களாகச் சென்று
“என்னடா செய்கிறாய்?” என்று கேட்டால் மட்டும் பதில் சொல்வான். மற்றபடி அவனாக நெருங்கி வந்ததில்லை. இப்போது நள்ளிரவில் அறைக் கதவைத் தட்டுகிறான் என்றால், ஏதோ விபரீதம் என்று தோன்றியது.
”ஆதிபா… என்னாச்சு? விதரணைக்கு ஒன்றுமில்லையே…?” என்று பதற… அவனோ சட்டென்று தன் தாயின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துவிட்டு, அறைக்குள் தன் தந்தையை எட்டிப்பார்த்தான். அவர் நல்ல உறக்கத்தில் இருப்பது தெரிய… மெதுவாகக் கதவை இழுத்துச் சாற்றியவன், திரும்பித் தாயைப் பார்த்தான். அவரோ முகம் கலங்க, தன் மகனைத்தான் புரியாமல் பார்த்திருந்தார்.
“கண்ணா… என்னடா ஆச்சு…?” என்றார் கலக்கமாக.
அவன் ஒரு பெருமூச்சுடன் தாயைப் பார்த்து,
“உங்களோடு கொஞ்ச நேரம் பேசவேண்டும்… முடியுமா?” என்றான், புருவத்தைச் சுட்டுவிரலால் சொரிந்தவாறு.
மறுக்காமல் நடந்தவர், அவர்களின் அறைக்குத் தள்ளி அமர்ந்து பேசும் இடத்திலிருந்த நீளிருக்கையில் அமர்ந்துகொள்ள… அவனோ அவரது காலடியில் சப்பணமிட்டு அமர்ந்துகொண்டான். அதிலும் மதிவதனிக்கு வியப்புதான்! எத்தனை காலமாயிற்று இப்படி அவன் அவர் காலடியில் அமர்ந்து!
பதின்மூன்று வயது தொடங்கியதுமே அவன் தனக்கென்று ஒரு தனி உலகத்திற்குள் சுருண்டுகொண்டான். கண்டால் ‘ஹாய்’ என்பான்; சமைத்தால் அமைதியாகச் சாப்பிடுவான். மற்றபடி அவனது வாழ்க்கை அவனது முடிவுதான்; அதில் யாரும் தலையிட முடியாது. யாராவது தலையிட வந்தால், “எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்” என முகத்திலடித்தாற் போலச் சொல்லிவிடுவான். அது ‘டீன் ஏஜ்’ பருவக் கோளாறாக இருக்கும் என்று சற்று விட்டுக்கொடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அவனது ஒதுக்கம் காலம் செல்லச் செல்ல விரிந்ததே தவிர, சுருங்கவில்லை.
ஒருவேளை அவனுடன் யாரும் கூடப் பிறக்காதது ஒரு காரணமாக இருக்கலாம் என்று மதிவதனி பலமுறை யோசித்திருக்கிறார். பிள்ளைகளைப் பார்க்க நேரமில்லாததாலும், தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதாலும், ‘பெற்ற ஒரு குழந்தையை மட்டும் நன்றாக வளர்த்தால் போதும்’ என்கிற முடிவில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொண்டார் மதிவதனி. ஆரம்பத்தில் அது வசதியாகத்தான் இருந்தது. ஆனால், ஏற்றமாதிபன் வளர வளரத் தாங்கள் செய்தது தவறோ என்று புரியத் தொடங்கியது. தனி ஒரு பிள்ளையாக வளரும் குழந்தைகள் சந்திக்கும் அதே சிக்கல்களைத் தங்கள் மகனும் சந்திப்பதை உணர்ந்த பிறகுதான் விழித்துக்கொண்டார்கள். இன்னொரு குழந்தை இருந்திருந்தால், ஏற்றமாதிபன் கொஞ்சம் கலகலவென்று இருந்திருப்பான், அவனுக்கும் ஒரு பிடிப்பு இருந்திருக்கும் என்று நினைத்தார்.
ஆனால், அந்த விழிப்பு காலம் கடந்த ஒன்றாகியது. அவனுக்குத் துணையாக இன்னொரு குழந்தையைப் பெறலாம் என்று நினைத்தபோது, உடல்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. கர்ப்பப்பையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவனுக்காக அவர்கள் வருந்தினாலும், அவன் பெற்றவர்கள் மீது உயிரையே வைத்திருந்தான். தாய் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு மகளாகவே மாறி, அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகள் அனைத்தையும் அவனே செய்திருக்கிறான். இணையத்தில் தேடித்தேடித் தாய்க்கு எது நல்லது, எது தேவையெனப் பார்த்து வாங்கிக் கொடுத்திருக்கிறான். தொழிலுக்கும் மனைவிக்கும் இடையில் தவித்த தந்தையைத் தொழிலைப் பார்க்க அனுப்பிவிட்டு, இவன் பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துத் தாயைப் பார்த்துக் கொண்டான். வேலையாட்கள் இருந்தும் கூட, தாய்க்கு எல்லாம் சரியாக நடக்கிறதா என்று தானே வந்து கவனித்துவிட்டுச் செல்வான். தந்தைக்கு இரத்த அழுத்தம் என்று தெரிந்ததும், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை மட்டுமே நம்பியிருக்க விடாமல், அவரை உடற்பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.
தொலைவில் படிக்கச் சென்றபோதும், தானாக அலைபேசியில் பெற்றோருடன் பேசுவது மிக அரிது என்றாலும், அவர்களின் உடல்நிலையை விசாரிக்க அவன் தவறுவதில்லை. அவர்களுக்குச் சிறிய உடல்நலக் குறைவு என்றாலும் அவனுக்கு உடனே தெரிந்துவிடும்; மறு கணம் அவனிடமிருந்து அழைப்பு வந்துவிடும்; மருத்துவரிடம் பேசுவான். அதன்பின், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற கட்டளை இவனிடமிருந்து பறக்கும்.
“அப்பா நடைப்பயிற்சி ஒழுங்காகச் செய்கிறாரா அம்மா? இல்லையென்றால் சொல்லுங்கள், நான் அவரிடம் பேசுகிறேன்…” என்பான் அழுத்தமாக. இப்படி நிறையவே அவன் அக்கறை எடுத்துப் பார்த்திருக்கிறான். ஆனால், அதையும் தாண்டித் தாய்-தந்தையை அணைப்பது, அன்பைப் பரிமாறுவது என்பதெல்லாம் அவனிடம் எதிர்பார்க்க முடியாது. கரிசனையாகப் பேசுவதும் அவனிடம் இருக்காது; சட்டென்று வார்த்தைகளைக் கொட்டிவிடுவான்.
பதின்மூன்று வயதிலேயே தன் தேவையைத் தானே பூர்த்தி செய்ய வேண்டும் என்கிற கொள்கையில், தனக்கான பணத்தைத் தானே உழைத்துச் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டான் ஆதிபன். அந்த வயதில் என்ன சம்பாதிக்க முடியும்? ஆனால் அவன் சம்பாதித்தான். பக்கத்து வீடுகளில் இருப்பவர்களின் நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று, அதில் கணிசமாக ஈட்டினான். வித்யாதரும் அவனைத் தடுக்கவில்லை. வீட்டில் அளவுக்கு அதிகமாகப் பணம் இருந்தும் தன் காலில் நிற்க நினைக்கிறானே என்கிற பெருமைதான் அவருக்கு! எதற்காக இப்படி வேலை செய்கிறாய் என்று அவனைக் கண்டித்ததோ, அதட்டியதோ இல்லை. இதெல்லாம் அவனுக்கான அனுபவம் என்று அவனது முடிவை மதித்தார்.
ஆனால் மதிவதனிதான் தாங்க முடியாமல் புலம்புவார். கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது; என் மகன் நாய்களை அழைத்துச் சென்று சம்பாதிக்கிறானே என்று நொந்துபோனார். அதை அவனிடம் சொல்லியும் பார்த்தார்.
“அம்மா… வீட்டில் பணம் இருக்கிறது என்பதற்காக அதை நம்பியே வாழச் சொல்கிறீர்களா? என் செலவுக்கு நானே சம்பாதிக்க வேண்டும்… புரிந்து கொள்ளுங்கள்!” – அந்தப் பதின்மூன்று வயதிலும் உறுதியாகச் சொன்ன மகனிடம் அதற்கு மேல் என்ன பேச முடியும்?
அதற்குப் பிறகு அவன் தன் கைச்செலவுக்கு ஒரு டாலர் கூட அவர்களிடம் எதிர்பார்த்ததில்லை. வளர்ந்ததும் தங்கள் வியாபாரத்தைப் பார்த்துக்கொள்வான் என்று அவர்கள் எதிர்பார்க்க, அதிலும் மண்ணை அள்ளிப் போட்டான். ஏழு தலைமுறைக்கும் சும்மா இருந்து சாப்பிட்டாலும் கரையாத அளவு சொத்து இருக்கிறது. அதை மேற்பார்வை பார்க்க ஒரு ஆள் வேண்டாமா? இவன் என்னவென்றால் அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கி வேலை செய்யப்போகிறேன் என்கிறானே! அதுவும் ராயல் கனடியன் ஸ்பெஷல் ஃபோர்ஸில் (Royal Canadian Special Forces). எத்தனை ஆபத்தான தொழில்! பெற்றது ஒரே ஒரு பிள்ளை; இவனுக்கு ஏதேனும் ஒன்று நடந்துவிட்டால் என்ன செய்வது? பதறி மறுக்க முயல, அவனோ இவர்களிடம் செய்தியைத்தான் சொன்னான்; அனுமதி கேட்கவில்லை. அவர்கள் மறுத்தும் அவன் தன் படிப்பை முடித்ததும் காவல்துறையில் இணைந்துவிட்டான். செய்திகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்களின் மரணச் செய்திகளைப் படிக்கும்போதெல்லாம் மதிவதனிக்கு அடிவயிறு கலங்கும்.
வித்யாதரும் ஒருமுறை சொல்லிப் பார்த்தார். ஆனால் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையிடம் எதைச் சொல்லி வற்புறுத்த முடியும்? அமைதியாகிப் போனார். அதற்குப் பிறகு அவனது படிப்பு, தொழில் எல்லாமே தள்ளித்தான். படிக்க என்று வாட்டர்லூ போனான்; விடுமுறைக்கு மட்டும் வருவான்.
அப்படிப்பட்டவன் இப்போது காலடியில் அமர்ந்து தாயிடம் ஏதோ பேச முயன்று கொண்டிருக்கிறான். மதிவதனிக்கு நெஞ்சமெல்லாம் குழைந்து போனது. ஆசையோடு அவனை நோக்கிக் குனிந்தவர், அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து, “என்ன கண்ணா? என்ன பிரச்சினை?” என்றார் மென்மையாக.
தாயின் இந்தக் கனிந்த குரலில் அவன் இரும்பு இதயமும் கொஞ்சம் இளகித்தான் போனது. அன்றைய சூழலில் கனத்துக்கிடந்த இதயம் தாயின் ஒற்றை வருடலில் சூரியனைக் கண்ட பனியாக விலகிப்போவதைக் கண்டு வியந்தவனாக, கன்னத்தில் பதித்த தாயின் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து, அன்னையின் அந்த அன்பான தொடுகையின் இதத்தைத் தன் இதயம் முழுக்க நிரப்பிக்கொண்டான் ஏற்றமாதிபன். என்னதான் பாறையாக இருந்தாலும் தாயின் கனிந்த தொடுகை அந்தப் பாறையையும் பூக்கச்செய்துவிடும் என்பது எத்தனை பெரிய ஆச்சரியம்!
ஆழ மூச்செடுத்தவன், தன் கன்னத்திலிருந்த தாயின் கரத்தை மெதுவாக விலக்கி, அதில் தன் மறுகரத்திலிருந்த தூக்கமாத்திரைக் குப்பியை வைக்க… மதிவதனியோ புரியாமல் தன் கரத்திலிருந்ததைப் பார்த்தார். பார்த்தவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“கண்ணா… இது அப்பாவோட தூக்க மாத்திரை… இது எப்படி உன்னிடம் வந்தது?” அவர் குழம்பியவாறு கேட்க… அவர் விரல்களை மெதுவாக அந்தக் குப்பியின் மீது மடித்தவன்,
“இந்தத் தூக்கமாத்திரையை விதரணையிடமிருந்து எடுத்தேன் அம்மா…” என்றான் நிதானமாக.
அதைக் கேட்டதும் ஆடிப் போனார் மதிவதனி.
“என்னப்பா சொல்கிறாய்? இது எப்படி அவளிடம்?” என்றவர், அன்று இரவு சாப்பாட்டு நேரம், அவள் அறையிலேயே அடைந்து கிடப்பதைக் கண்டு பொறுக்கமுடியாமல், அவளைக் கீழே அழைத்து வந்து உணவு கொடுத்ததும், தன் கணவருக்கு மருந்து கொடுப்பதற்காக மாத்திரைப் பெட்டியை எடுத்து வந்ததும் நினைவுக்கு வர… முகம் வெளிறிப் போனார். அங்கே என்ன நடந்திருக்கும் என்று கூட்டிக் கழித்துப் பார்க்கத் தெரியாதா அவருக்கு?
“ஐயோ…! விதரணை… அவள் ஒன்றும் தவறாக எதுவும் செய்துவிடவில்லையே?” என்று பதறியவர் அவசரமாக இருக்கையை விட்டு எழப் போக… சட்டென்று அவர் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன், அவரை மீண்டும் இருக்கையில் அமர வைத்துவிட்டு,
“பதறவேண்டாம்மா…! நல்லவேளை, அப்படி எதுவும் அவள் செய்து தொலைக்கவில்லை. அதீத மன உளைச்சலில் இப்படியான எண்ணங்கள் வருவது இயல்புதான். அவளை நம் வீட்டிற்கு அழைத்து வந்ததற்குக் காரணமே அவளை இருபத்தி நான்கு மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனாலும் பாருங்கள், கிடைத்த சிறு வாய்ப்பையும் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறாள் என்று! இதற்கு மேலும் இவளை இப்படியே விட முடியாது…” என்று அவன் சொல்ல… மதிவதனியோ மகனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர, அவரால வேறு எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை.
அவருடைய இதயம் பலமாகத் துடித்துக் கொண்டிருந்தது; மாத்திரைக் குப்பியை ஏந்தியிருந்த கரங்கள் நடுங்கின. மகனின் வார்த்தைகளை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒருவேளை அந்தப் பெண் ஏதேனும் விபரீத முடிவு எடுத்திருந்தால்…? கடவுளே! காலத்திற்கும் அவரால் அவரையே மன்னித்திருக்க முடியாதே!
துடித்து நின்றவரின் கரத்தை மெதுவாக வருடிக் கொடுத்தவன், “அம்மா… இதில் உங்கள் தவறு எதுவுமில்லை. தயவுசெய்து கலங்காதீர்கள்…” என்றவன், சற்று நேரம் எதுவும் பேசாமல் எதையோ யோசித்தான். எப்படித் தாயிடம் விஷயத்தைச் சொல்வது என்று மனதிற்குள் வார்த்தைகளைச் சரிபார்த்துக் கொண்டான் போல! மீண்டும் நிமிர்ந்து தாயைப் பார்த்தான்.
“அம்மா… இனி விதரணை இப்படித்தான். அவள் முழுமையாகச் சரியாகும் வரை இப்படியான சிந்தனைகள் அவளது மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அது ஏன் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை…” என்று அவன் சொல்ல… கலங்கிய கண்களோடு தன் மகனைப் பார்த்தார் மதிவதனி.
“அது புரிகிறதுடா… ஆனால் அவளை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்? பாவம்டா குழந்தை… என்னால் அவள் செய்ய விளைந்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு வேளை நீ பார்க்காமல் இருந்திருந்தால்?” என்று அவர் கவலையோடும் நடுக்கத்தோடும் சொல்ல… ஏற்றமாதிபனின் இதயமும் அதைக் கேட்டுக் குலுங்கி அடங்கவே செய்தது. இதை அவன் பலமுறை நினைத்துப் பார்த்துவிட்டான்; இதோ இப்போது கூடப் பச்சையாக அவனை வதைக்கிறது அது.
“இனி இப்படிச் செய்ய மாட்டாள்… செய்யவும் விடமாட்டேன்…” அவன் உறுதியாகச் சொல்ல… தாயோ அவனை ‘எப்படி?’ என்பது போலப் பார்த்தார்.
தாயின் பார்வையிலிருந்த கேள்வியைக் கண்டவன்,
“இனி எப்போதும் அவளருகே இருப்பதென்று முடிவு செய்திருக்கிறேன்மா… அது மட்டுமில்லை, அவளுக்கு வாழ்வதற்கான அர்த்தத்தைப் புரியவைக்க வேண்டும். ‘நீ தனியாக இல்லை, உனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது’ என்கிற நம்பிக்கையை அவளுக்குக் கொடுக்க வேண்டும். அந்த நம்பிக்கை அவளை நிச்சயமாக மீட்டு வரும்…” என்றான்.
தன் மகனைப் பார்த்த மதிவதனி,
“சரிப்பா… அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறாய்? அவள் குணமாக என்ன வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்…” என்று அவர் உறுதியாகச் சொல்ல… ஒரு விநாடி தாயின் முகத்தை அழுத்தமாக ஏறிட்டான் ஏற்றமாதிபன்.
“நான் விதரணையைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதுவும் நாளைக்கே!” – அவன் உறுதியாகச் சொல்ல, ஒரு விநாடி மதிவதனியின் முகத்தில் அதிர்ச்சி தோன்றி மறைந்தது.
“ஆதிபா…? உணர்ச்சிவசப்பட்டோ அல்லது பரிதாபப்பட்டோ எடுக்கும் முடிவு ஒருபோதும் சரியாக வராது என்பதை உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை…” என்று அவர் அழுத்தமாகச் சொல்ல… அவனோ தாயின் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். பின் கரங்களை விடுவித்து மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு மதிவதனியை நிமிர்ந்து பார்த்தான்.
“நான் பரிதாபப்பட்டு உணர்ச்சிவசப்படும் ஆள் என்று நினைக்கிறீர்களா?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க… ஒரு கணம் என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் மதிவதனி.
நிச்சயமாகத் தன் மகன் ‘எமோஷனல் இடியட்’ இல்லை என்று அவருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் கேட்டது தவறுதான். ஆனால் அந்தப் பெண்ணை மணந்து கொள்கிறேன் என்றால், அதற்கு வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது…? ஒன்றில் அந்தப் பெண் மனதுக்குப் பிடித்தவளாக… ‘பிடித்தவளாக…!’ நினைத்தவர் அதிர்ந்து போய் ஏற்றமாதிபனைப் பார்த்தார். அவனுடைய தாய்தானே அவர்!
“தம்பி.. அப்போ நீ… அந்தப் பெண்ணை…” அவர் முடிக்க முடியாது திணற… தலையை ‘ஆம்’ என்பது போல அசைத்தான் ஏற்றமாதிபன். அதைக் கண்டவரின் விழிகள் இன்னும் அதிர்ச்சியில் பெரிதாகின.
‘அவருடைய மகனுக்குக் காதலா?’ நினைத்தவருக்கு இன்னும் நம்பவே முடியவில்லை. அவனுடைய நடை உடை பாவனைக்கும், செயல்பாடுகளுக்கும், கொஞ்சமாய்ப் பேசி எதிராளியை ஒதுக்கிவைக்கும் அவனுக்கும் காதல் ஒருபோதும் சரிவராது என்றுதான் முழுதாக நம்பியிருந்தார். அப்படிப்பட்ட அவர் மகனுக்குக் காதலா!
“கண்ணா… நீ உண்மையாகத்தான் சொல்கிறாயா?” என்றார் இன்னும் வியப்பிலிருந்து வெளியே வராதவராக. இப்போது அவன் உதடுகளில் மெல்லிய புன்னகை.
“ம்… நான் அவளைக் காதலிக்கிறேன். அவள் உயிர்வாழ என் உயிரையே கொடுக்க வேண்டும் என்றாலும் தயங்காமல் கொடுக்கும் அளவுக்கு அவளைக் காதலிக்கிறேன்!” – அவன் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல… இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராதவராக அவனைப் பார்த்தார் மதிவதனி. இப்போது கூட அவனையும் காதலையும் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை அவரால்.
“நிஜமாகவே உனக்குக் காதலா?” – ஒருவேளை தன் காதுகள் தவறாகக் கேட்டுவிட்டதோ என்று அவர் தயங்க… கேட்ட தாய்க்குப் பதில் சொல்லாமல் முகம் இறுக, ஒருவித அழுத்தத்தோடு தாயைப் பார்த்தான் ஏற்றமாதிபன். அந்த மௌனமே அவருக்கான பதிலை ஆதாரத்தோடு சொல்லிவிட, சற்று அசடு வழிந்தவராக,
“இல்லை… உன்னால் எல்லாம் காதலிக்க முடியுமா என்று நினைத்தேன். அதுதான்…” என்றார் தயக்கமாக. அதைக் கேட்டவனின் முகம் இன்னும் இறுகிப் போக…
“ஏன்? நான் காதலிக்கக் கூடாதா?” என்றான், குரலில் சிறு எரிச்சலைத் தேக்கி.
“ஐயோ…! அப்படி இல்லைடா…! உன்னுடைய குண இயல்போடு காதலைப் பொருத்திப் பார்த்தேனா… அது பொருந்த மாட்டேன் என்கிறது… அதுதான்…” அவர் தயங்க… இப்போது அவன் முகம் இளகி, பற்கள் தெரியச் சிரித்தான் ஏற்றமாதிபன். ஏனோ அந்தப் புன்னகையில் குளிர்ந்துபோனார் மதிவதனி.
அதுவரை மார்பில் கட்டியிருந்த கரத்தை விலக்கியவன், தரையிலிருந்து எழுந்து நின்றவாறு, பேண்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்துக் கொண்டு,
“நாளைக்கே திருமணத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன்…” என்று சொல்ல… அவனுக்கு நிகராக எழுந்து நின்றவர், தன் மகனை அண்ணாந்து பார்த்தார். எப்போதும் போல ‘இவன் என் மகனா?’ என்கிற ஆச்சரியம் எழவே செய்தது. மதிவதனி ஐந்தடி மூன்று அங்குலம்தான்; வித்யாதர் ஐந்தடி பத்தங்குலம். ஆனால் இவனோ ஆறடி நான்கு அங்குலம்! அந்த உயரமே எப்போதும் அவனிடம் அவரை அடங்கிப்போகச் செய்துவிடும்.
“எதற்கு இத்தனை அவசரம் கண்ணா… திருமணத்திற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டாமா?” அவர் கேட்க… அவனோ வெளிப்படையாகத் தாயை எரிச்சலோடு பார்த்தான்.
“நாள் நட்சத்திரம் எதற்கு? அதுவா என் கூட வாழப்போகிறது? அம்மா… எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று மெல்லிய கோபத்துடன் கேட்டவன், பின் குனிந்து தன் ஆழ்ந்த விழிகளால் தாயை ஏறிட்டான்.
“இப்போதிருக்கும் நிலையில், ஒரு விநாடியும் அவளை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. அவள் பக்கத்திலேயே இருக்க வேண்டும்; அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க வேண்டும்; அவளைத் தேற்ற வேண்டும். அது என்னால் மட்டும்தான் முடியும். தவிர, காதலித்தவளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, கட்டுப்பாடோடு இருப்பது என்பது இயலாத காரியம். உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று நினைக்கிறேன்… திருமணமாகாமல் ஒருத்தியைத் தொடும் வகையில் நீங்கள் என்னை வளர்க்கவில்லை… அதனால்தான் சொல்கிறேன்.. நாளைக்கே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம். யாரும் வேண்டாம். எளிமையாக வீட்டில் வைத்து பதிவுத் திருமணம் செய்துவிடலாம்…” என்று அவன் சொல்ல… திகைத்துப் போய் அவனைப் பார்த்தார் மதிவதனி.
எத்தனை சுலபமாகச் சொல்லிவிட்டான்! திருமணம் என்பது பகடைக்காயா? உருட்டிப்போட்டு விளையாட! அது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்க வேண்டாமா? அதையே அவனிடம் சொல்ல… சிரித்தான் ஏற்றமாதிபன்.
“அம்மா… ஏழு வருடங்களாக அவள் இங்கே இருக்கிறாள்…” என்று இடது மார்பில் அழுத்தமாகக் கை வைத்துச் சொன்னவன், “வெறும் மந்திர தந்திரங்களும் சம்பிரதாயங்களும் முறையாகச் செய்யாததால் நம் வாழ்க்கை அழிந்துவிடப் போவதில்லை. அனைத்தையும் விட அவள் மீது நான் வைத்திருக்கும் காதலும் நேசமும் நம்மை எக்காலத்திலும் பிரிக்காது. அப்படிப் பிரிந்தால் அது காதலுமில்லை… நம்புங்கள்!” என்று உறுதியாகச் சொன்னவன் தாயை அழுத்தமாக ஏறிட்டு,
“நான் விதரணையை உடனே திருமணம் செய்ய முடிவு செய்ததற்கு, விதரணையின் பாதுகாப்பு மட்டும் காரணமில்லை…” அவன் சொல்லத் தன் மகனைப் புரியாமல் பார்த்தார் மதிவதனி.
“இன்னொரு காரணம் விதுரன்…” என்றான் எற்றமாதிபன்.
“விதுரனா? அவனுக்கு என்னப்பா?”
“ம்… நானும் விதரணையும் மணம் முடிக்கவில்லை என்றால், விதுரனை அரசாங்கம் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும்.” என்றவன் நடந்தது அனைத்தையும் தாயிடம் சொல்லிவிட்டு,
“விதுரனை என் பொறுப்பில் அனுப்பி, ஒரு மாதம் முடியப் போகிறது. அதனால், அவனைத் தாங்கள் அழைத்துச் செல்லப்போவதாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். விதரணையின் வயது, அவளுடைய உடல் நிலை, மனநிலை இது எதுவும் சாதகமாக இல்லை. இந்த நிலையில் விதுரனை அவளோடு தங்க அரசாங்கம் சம்மதிக்காது. எப்படியும் விதுனை எங்காவது தற்காலிக பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கத்தான் பார்ப்பார்கள். இது அறிந்தால் விதரணை இன்னும் நொடிந்து போவாள்… விதுரனுக்கு ஒன்று என்றால் விதரணையால் தாங்க முடியாதுமா… விதுரணை எங்களோடு வைத்திருக்கவேண்டும் எனற்ால், அவனுக்கு பாதுகாப்பான உறவினராக நாங்கள் இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, விதரணையை நான் மணப்பது மட்டும்தான். எந்த நேரமும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிலிருந்து அதிகாரிகள் வந்துவிடுவார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் திருமணத்தை உடனே வைக்கச் சொல்கிறேன்… ஏற்கெனவே முட்டாள் தனமாக எதை எதையோ செய்யப் பார்க்கிறாள். விதுரனும் போய்விட்டால் மொத்தமாக நொறுங்கிப் போவாள்.. என் விதரணைக்கு, அப்படியொரு நிலை வர நான் விடமாட்டேன்…” சொன்னவன், அங்கிருந்து நகர… மதிவதனியோ அசையக் கூடச் சக்தியற்று அப்படியே நின்றிருந்தார்.
தன் மகனுக்குக் காதலா? அதனால்தான் திருமணம் என்றாலே இத்தனை காலம் வெறுத்து ஒதுக்கினானா? எத்தனை முறை அவனிடம் கெஞ்சியிருப்பார்! அப்போதெல்லாம் ஆர்வமில்லை என்று சொன்னவன், இத்தனை வருடங்களாக ஒருத்தியை மனதிற்குள் காதலித்ததாகச் சொல்கிறானே! இதை எப்படி நம்புவது? ஆனால் நம்பாமலும் இருக்க முடியாது; அவர் மகன் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டான் என்பதில் அவருக்கு உறுதியே!
‘ஒருவேளை நான் கனவு ஏதும் காண்கிறேனோ? கொஞ்ச நேரத்தில் புதுமைகள் நடந்து மறைந்து விட்டதே… அதனால்தான் ஏதேதோ நினைக்கிறேன் போல!’ குழம்பியவர் தன் கரத்தைக் கிள்ளிப்பார்த்தார்; வலித்தது. இல்லை…! அவர் கனவு எதுவும் காணவில்லை. நிஜமாகவே மகன் அவரிடம் தன் காதலைப் பற்றியும் திருமணம் பற்றியும் பேசிவிட்டுத்தான் போயிருக்கிறான்.
அதுவும் நாளைக்கு… நாளை திருமணம் என்றால், அது எப்படிச் சாத்தியம்? தலை சுற்றிக்கொண்டு வந்தது மதிவதனிக்கு. ‘அது எப்படி உன் இஷ்டத்திற்கு நாளைக்குத் திருமணம் செய்வது? அதெல்லாம் முடியாது’ என்று அவரால் மறுத்துவிட முடியும்தான். ஆனால், அவர் மறுத்தாலும் ஏற்றமாதிபன் அதைக் கருத்தில் எடுப்பான் என்று சொல்ல முடியாது. எப்போதும் அவன் செய்தியைத்தான் சொல்வான்; முடிவு அவனுடையதுதான். இப்போது கூட முடிவு எடுத்துவிட்டுத்தான் சொல்கிறான். அதன் அர்த்தம் ‘நீ ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் இதுதான் நடக்கும்’ என்பதுதான். இதற்கு மேல் மறுக்க அவர் யார்?
குழப்பத்துடனேயே தன் அறைக்கு வந்தவர் கணவனைப் பார்க்க… அவர் நல்ல உறக்கத்திலிருந்தார். அதிக வேலைப்பழுவினால் உறக்கம் அவர் ஆசைப்பட்டது போல வருவது அரிது; இதில் இரத்த அழுத்தம் வேறு இருக்கிறது. இந்த நிலையில் அவரை எழுப்பிச் செய்தியைச் சொல்வது சரியா என்று தெரியவில்லை. வித்யாதரன் எதுவும் சொல்லமாட்டார்தான்; ஆனால் நிச்சயமாகக் கவலைப்படுவார். திடீரென்று திருமணம் என்றால் எப்படி என்று கேட்பார்… வருந்துவார். ‘ம்ஹூம்… உறங்கட்டும். எழுந்ததும் விஷயத்தைச் சொல்லலாம்’ என முடிவு செய்தவர், அங்கிருந்த மேசையின் இழுப்பறையைச் சத்தம் போடாமல் திறந்து பஞ்சாங்கத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிச் சாமியறைக்கு வந்தார்.
மனதோ கனத்துக் கிடந்தது. ஒற்றைப் பிள்ளையின் வாழ்க்கையை எண்ணி நெஞ்சம் தவித்தது. ‘ஒருவேளை நாள் கெட்டதாக இருந்தால்?’ என்னதான் நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கையில்லாமல் அவனுக்கு இருந்தாலும், அதிலேயே ஊறிப்போன மதிவதனிக்கு அப்படியே விட்டுவிட முடியவில்லை. சாமித்தட்டில் பஞ்சாங்கத்தை வைத்தவர், கை கூப்பிக் கண்ணீர் மல்க தெய்வத்திடம் வேண்டினார் மதிவதனி.
“தெய்வமே, அவனுக்கு என்ன தீங்கு வர இருந்தாலும் அதை எனக்குக் கொடுத்துவிடு, நான் தாங்கிக் கொள்கிறேன். அவனை மட்டும் பத்திரமாகப் பார்த்துக் கொள்… அவன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக் கொடுத்துவிடு…” என வேண்டியவராகப் பஞ்சாங்கத்தைக் கரத்தில் எடுத்து, மறுதினம் நாள் நன்றாக இருக்கிறதா என்று விரித்துப் பார்த்தார். இதயம் படபடத்தது.
மறுநாள் தினத்தைப் பார்த்தவரின் முகத்தில் இருந்த வேதனை, வலி, பயம் அனைத்தும் துடைத்தாற்போல மாயமாகிப்போக… அவர் உதடுகளோ பெரும் நிம்மதியில் மலர்ந்து சிரித்தது. வளர்பிறை, தசமி, ரோகிணி நட்சத்திரம், அமிர்தசித்தம்! அதைக் கண்டதுமே அவர் மனது நிறைந்து போனது.
(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…
(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…
(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…
(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…
(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…
(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…