Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-9

(9)

“கிறீச்…” என்கிற சத்தத்தில் உறக்கம் கலைந்து, மெதுவாகக் கண்களைத் திறந்தாள் விதரணை. பளீர் என்று முகத்தில் அடித்த சூரிய வெளிச்சத்தில் விழிகளைச் சுருக்கியவாறு நிமிர்ந்து பார்க்க, அங்கே அபிநயா அறையை இருட்டடித்திருந்த திரைச்சீலைகளை விலக்கி, சூரியக் கதிர்களின் ஆதிக்கத்தை அறைக்குள் அனுமதித்துக் கொண்டிருந்தாள்.

அபிநயாவைக் கண்டதும் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்த விதரணை, கரங்களால் முகத்தை அழுத்தித் தேய்த்துவிட்டுப் பார்க்க, அவளோ பகலவனுக்குப் போட்டியாக மலர்ந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அபி..” இவள் முனங்க,

“ஹாய் விது… குட் மார்னிங்!” – அழகிய புன்னகையுடன் அவள் சொல்ல, அந்தப் புன்னகைக்கு சிறிதாய் கூடப் பதில் கொடுக்கமுடியவில்லை விதரணையால். முகம் வாடியவளாக எழுந்து தலை குனிந்து விரல்களைப் பின்னியவாறு அவற்றையே பார்த்தவாறு படுக்கைத் தலைமாட்டுச் சட்டத்தில் சாய்ந்து கொண்டாள்.

தோழியின் நிலை புரிந்து வாடியவளாக, “எப்படி இருக்கிறாய் விதரணை…” என்றாள் மென்மையாக. தன் தோழியின் கரிசனையான விசாரிப்பில் மறைந்த வலி மீண்டும் கண்விழித்துக் கொண்டது.

சிரமப்பட்டு ஒரு புன்னகையைச் சிந்தியவள், “இருக்கிறேன்… இன்னும் சாகாமல் உயிரோடுதான் இருக்கிறேன்…” என்று அடக்கமுடியாத விரக்தியோடு சொல்ல பதறிப்போனாள் அபிநயா.

எத்தனை குதுகலமானவள் இவள்! எப்போதும் அவளிருக்கும் இடத்தில் புன்னகைக்குப் பஞ்சமிருக்காது. ஆனால் இப்போது…? தன் தோழியின் அந்த நிலையில் கண்கள் கலங்க, “விது…” என்றவள் பாய்ந்து வந்து அவளை அணைத்துக் கொள்ள, அழுதுவிட்டாள் விதரணை.

“முடியவில்லை அபி.. சத்தியமாக என்னால் முடியவில்லை… ஒவ்வொரு நொடியும் அவர்களின் நினைவாகவே இருக்கிறது. யாரோ வாளால் அறுப்பது போல இதயமே விண்டு போகிறது… அம்மா அப்பாவோடு நானும் போயிருக்கவேண்டும். போயிருந்தால் உயிரைக் கொல்லும் இந்த வலி எனக்கு இருந்திருக்காது… விடியும் போது அம்மாவின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. திட்டியவாறே தேநீர் எடுத்து வந்து கொடுப்பார்கள். தினம் தினம் அம்மாவின் கையால் தேநீர் குடிக்க மனது ஏங்குகிறது அபி… விதுரனோடு சண்டைபிடிக்கும்போது கோபமாக என்னைத் திட்டும் அந்த அம்மா எனக்கு வேண்டும்… ஒரு கவளம் சோற்றை உருட்டி வாயில் திணிக்கும் என் அம்மா வேண்டும்… அப்பா… என் அப்பா… யாருக்குமே அவரைப் போல ஒரு அப்பா கிடைக்காது அபி… அவர் முகத்தில் நான் கோபத்தைக் கண்டதேயில்லை… இப்போது கூட, தலையைத் தடவி நன்றாகப் படிக்கிறாயா கண்ணம்மா என்று அவர் கேட்கும் அந்தக் கேள்விக்காக உயிரே ஏங்குகிறது. அவர் ஒருபோதும் எங்களைத் திட்டியதில்லை தெரியுமா… அம்மா திட்டினாலும் இடையில் வந்து காத்துக்கொள்வார்… எனக்கு என்ன தேவை என்றாலும் கேட்காமலே நிறைவேற்றிவிடுவார் அபி… அவருக்கு கடிந்து கூடப் பேசத் தெரியாது. அவரைப் போய்… அவரைப் போய்… என்னால் முடியவில்லையே… இதயமே வெடித்துச் சிதறுவது போல இருக்கிறதே…” அவள் விம்மி விசும்ப, அபிநயாவின் விழிகளிலும் கண்ணீர் பொங்கவே செய்தது.

இதற்கு எப்படி ஆறுதல் சொல்வது? ஆறுதல் சொல்லத்தான் முடியுமா? ஒரே நேரத்தில் தாய் தந்தையை இழப்பது என்பது, அதுவும் கண்முன்னே கொடுமையான வகையில் இழப்பது என்பது எத்தனை கொடுமை! அதை நேரே அனுபவித்தவளுக்குத்தானே தெரியும் அதன் வலியும் வேதனையும். இதில் ஆறுதல் எங்கிருந்து சொல்வது?

“விதுமா.. எனக்கு உன் வலி புரிகிறதுமா… ஆனால்… என்ன செய்ய முடியும்…? இறந்த காலத்தை மாற்றும் சக்தி நமக்கில்லையே…? உன்னைத் திடப்படுத்திக் கொள்…” என்று சொல்ல, இப்போது மெதுவாக அபிநயாவிடமிருந்து விலகினாள் விதரணை.

கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தவள், வலி நிறைந்த புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டு,

“சாரி… இப்போதெல்லாம் நிறையவே உணர்ச்சிவசப்படுகிறேன்… நிறைய அழுகிறேன்… நானும் அழுது என்னைச் சுற்றியிருப்பவர்களையும் அழ வைக்கிறேன்…? என்னை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது அபி… எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…” என்றவள், மீண்டும் கண்ணீர் வழிந்த கன்னத்தைத் துடைத்துவிட்டு, “குறைக்க முயல்கிறேன்… நான் அழுதால் அப்பாவுக்குப் பிடிக்காது. அதுக்காகவேனும் அழுகையை நிறுத்தத்தான் முயல்கிறேன்…. ஆனால்… என்னால் முடியவில்லை…” என்று அழுகையுடன் சிரித்தவள், மீண்டும் கண்ணீரைத் துடைத்தவாறே, “என்னை விடு… நீ சொல்லு… நீ… நீ சந்தோஷமாக இருக்கிறாயா அபி… நீ எப்போது அமரிக்காவிலிருந்த வந்தாய்? நீ இடையில் மருத்துவமனையில் என்னை வந்து பார்த்த நினைவு இருக்கு… நான் உன்னிடம் பேசவில்லை தானே…” மென்மையாகக் கேட்டாள் விதரணை.

“ப்ச்… உன்னுடைய மனநிலையில் யார் இருந்திருந்தாலும் இதை விட மோசமாக நடந்திருப்பார்கள். அதை விடு… உன்னை விடுவிக்கப் போகிறார்கள் என்று அண்ணா சொன்னதும் ஓடி வந்துவிட்டேன்…. அப்புறம் நான் நல்ல சந்தோஷமாக இருக்கிறேன்…” என்றதும், தன்னை மறந்து நிம்மதிப் புன்னகை சிந்தியவள் பின் எதையோ யோசித்தவளாகப் புருவங்களைச் சுருக்கியவள்,

“உன்… உன்னுடைய அவர் பெயர் என்ன?” ஒரு விநாடி குழப்பத்தில் தடுமாறியவள், “ஆ… அமலன்… அமலன்தானே அவர் பெயர்… சாரி… என் புத்தியும், சிந்தனையும் ஒரு நிலையில் இல்லயா… அதுதான்… சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது… அவர் நலமா?” என்று முதலில் குழம்பிப் பின் கேட்க, தன் தோழியின் மனநிலையைப் புரிந்து நொந்து போனாள் அபிநயா. முன்பு கண்ணிமைக்கும் நொடியில் நினைவு கூர்ந்துவிடுவாள்… ஆனால் இப்போது, வலியுடன் நினைத்தவள், அதை வெளிக்காட்டாமல்,

“அவருக்கென்ன… நன்றாகவே இருக்கிறார். இப்போது வியாபார விஷயமாக இலங்கை போயிருக்கிறார்… சீக்கிரம் வந்துவிடுவார்…” என்று சொல்ல, அவள் சொன்னது அவள் புத்திக்கு எட்டியதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் சிரித்தாள்.

அப்போதுதான் தன் தோழி பட்டுச் சேலை அணிந்திருப்பதைக் கண்டு வியந்து, “எங்காவது வெளியே போகிறாயா அபி… பட்டுச் சேலையெல்லாம் உடுத்தியிருக்கிறாயே…” என்று கேட்க,

“ஓ… அதுவா… சொல்கிறேன், அதற்கு முதல்…” என்றவள் நடந்து சென்று மேசையிலிருந்த தட்டொன்றை எடுத்துக்கொண்டு விதரணையை நெருங்கி வந்தாள்.

அந்தத் தட்டை அவளிடம் நீட்டி, “இது உனக்குத்தான்… போய் குளித்துவிட்டு வந்து இந்தப் பட்டுச் சேலையைக் கட்டித் தயாராகு” என்று சொல்ல, விதரணையோ புரியாமல் அபிநயாவும் அவள் கரத்திலிருந்த பட்டுச் சேலையையும் மாறி மாறிப் பார்த்தாள். இளஞ்சிவப்பில் சரிகை வேலைப்பாடுகள் செய்த பட்டுச் சேலை. அதன் மீது தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்தன.

“இது… இது எனக்கு எதற்கு? நான் ஏன் அணியவேண்டும்? யாருக்காவது ஏதாவது விசேஷமா…?” என்றாள் குழப்பமாக. அதற்கு உடனே பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவள்,

“அது.. பிறகு சொல்கிறேன். முதலில் குளித்துவிட்டு வாமா…!” – சூழ்நிலையை இலகுவாக்கச் சிரித்தவாறு அபிநயா சொல்ல, இப்போது தன் தோழியைக் குழப்பமாகப் பார்த்தாள் விதரணை. இந்தப் பட்டுச் சேலைகளையும் நகைகளையும் அணியும் மனநிலையிலா அவள் இருக்கிறாள்? அந்தப் பட்டையும் பகட்டையும் காணும்போதே அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. அன்றும் அப்படித்தானே அழகாக அலங்காரம் செய்து வெளியே சென்றாள்? திரும்பி வந்த போது அவள் கண்ட காட்சி… மீண்டும் மனது செக்கு மாடாக அதிலேயே நிலைத்துக்கொள்ள, கசங்கிய முகத்தோடு மறுப்பாகத் தலையசைத்து,

“தயவுசெய்து என்னைத் தவறாக நினைக்காதே அபி. நானிருக்கும் மனநிலையில் இதையெல்லாம் உடுப்பதாக இல்லை… என்னை வற்புறுத்தாதே.. நான்.. நான் தனியாக இருக்கவேண்டும். நிறைய யோசிக்கவேண்டும். அங்கே நடந்ததை முழுதாக நினைவுபடுத்த வேண்டும். போய்விடு….” முடிவாகச் சொல்ல, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள் அபிநயா.

“அது… அது வந்து… உனக்கு… இன்று…” என்று நடக்கவிருக்கும் அவள் திருமணம் பற்றி எப்படி அவளிடம் சொல்வதென்று தெரியாமல் திக்கினாள். விதரணை இருக்கும் மனநிலையில், அவள் சொல்வதை விதரணை எப்படி எடுத்துக்கொள்வாள் என்பதும் தெரியவில்லை. இந்தப் பட்டுச் சேலையை அணிவதற்கே முகத்தை இப்படிக் கசக்குகிறாள். இதில் “உனக்குத் திருமண ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று சொன்னால் எப்படி எதிர்கொள்வாள்? ஏனோ உண்மையைச் சொல்ல முடியாமல் நாக்கு அண்ணாக்கோடு ஒட்டிக்கொண்டது.

நிச்சயமாக அதற்குச் சம்மதிக்கமாட்டாள்; பிடிவாதம் பிடிப்பாள். சொல்லப்போனால், அங்கிருந்து கிளம்புகிறேன் என்று சொல்லி உடனே வெளியே போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படிச் செல்பவளைத் தடுப்பதும் சாத்தியமில்லை. இப்போது என்ன செய்வது? தடுமாறி நிற்கையில், அறைக் கதவைத் திறந்து கொண்டு ஏற்றமாதிபன் உள்ளே வந்தான்.

பட்டு வேட்டி சட்டை அணிந்து மிகக் கம்பீரமாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த பட்டுச் சட்டையை மீறி, அவனுடைய தசைக்கட்டுகள் எம்பிக் கிடக்க, ஒரு திரைப்பட நடிகனைப் போன்ற கச்சிதமான தோற்றத்தில் இருந்தவனைக் கண்டால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் உருகித்தான் போவாள். ஒரு காலத்தில் அவனைக் கண்டு விதரணை மயங்கியதில் தவறில்லைதான். அதுவும் காவல்துறையினருக்கே உரித்தான ஒட்டவெட்டிய தலைமுடியை வாரி இழுத்திருந்த நேர்த்தி அவனது ஆண்மையையும் கம்பீரத்தையும் பல மடங்கு அதிகரித்திருந்தது.

அவனைக் கண்டதும் எப்போதும் போல இதயம் துடித்தெழ, ஒருவித பதற்றத்தோடு கட்டிலுக்கு வெளியே காலைப் போட்டவாறு நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள் விதரணை. சட்டென்று முந்தைய நாள் நடந்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவன் வந்தது, அவள் நிலை பார்த்துப் பதறியது, திட்டியது… அதற்குப் பிறகு அவன் முத்தமிட்டது என ஒவ்வொன்றாக நிழலாட, அவளையும் மீறி இதயம் படபடத்தது. அவனது முகத்தைப் பார்க்கும் தைரியமின்றித் தலையைத் திருப்பிக் கொள்ள, அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன், அபிநயாவை ஏறிட்டு,

“என்னாச்சு… சொல்லிவிட்டாயா?” என்பது போலப் பார்க்க, அவளோ தயக்கத்தோடு உதடுகளைப் பிதுக்கி ‘இல்லை’ என்பது போலத் தலையை அசைத்தாள். சற்று நேரம் அமைதியாக இருந்தவன்,

“சரி நீ போ அபி… நான் பேசிக் கொள்கிறேன்” என்றதும், அபிநயா தலையாட்டிவிட்டு வெளியேற, அவன் விதரணையைப் பார்த்தான். அவளோ அவனைப் பார்ப்பதைத் தவிர்த்துச் சுவரையே பார்த்துக் கொண்டிருக்க,

“எத்தனை நேரமாக இப்படியே சுவரையே பார்ப்பதாக உத்தேசம்?” என்றான் சிறு கிண்டலுடன். அவளோ அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை. ஏனோ அவனைப் பார்க்க அவளால் முடியவில்லை.

“விதரணை உன்னைத்தான்… எத்தனை நேரமாக அப்படியே அமர்ந்திருக்கப் போகிறாய்?” – அவன் அழுத்தமாகக் கேட்க, பற்களைக் கடித்தவள்,

“நீங்கள் வெளியே போகும் வரை!” என்றாள் ஆத்திரமாக.

அவன் நிதானமாக அவளை நெருங்கி முன்னால் வந்து நிற்க, அவளது இதயம் வேகமாகப் படபடத்தது. அவனைப் பார்க்கத் தைரியமின்றி தன் உடலைக் குறுக்கி ஒடுங்கி அமர்ந்து கொள்ள, அதை மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அவன். கடைசியில் அவள்தான் தன் பிடிவாதத்தை விடுத்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

மீண்டும் அவன் உருவம் அவளைத் தடுமாற வைக்க, அந்த நிலையிலும் முகம் சிவக்க, எரிச்சல் கொண்டவளாக,

“இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றாள் விழிகளை விலக்கியவாறு.

“நீதான் வேண்டும்…!” – அவன் சொல்ல, அதிர்ந்து போனாள் அந்தப் பேதை.

“என்ன?” என்று அவள் சத்தமாகக் கேட்க, தன்னை மறந்து சிரித்தவன், பின் திரும்பிச் சென்று, மேசையிலிருந்த பட்டுச் சேலையையும் நகைகளையும் ஏந்தி வந்து அவளருகே வைத்தான்.

“போய்க் குளித்துவிட்டு வந்து இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் உனக்கும் எனக்கும் வீட்டில் வைத்து எளிமையாகத் திருமணம்!” அவன் சொன்னதும் அதிர்ச்சியோடு விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் விதரணை. அவளுக்குத் தன் காதுகளை நம்பவே முடியவில்லை. என்ன சொன்னான் இப்போது? திருமணமா? அவனுக்கும் அவளுக்குமா? திகு திகு என்று உள்ளே எதுவோ எரிய,

“வட்…?” என்கிற சீறலோடு எழுந்துவிட்டாள் விதரணை.

அவள் எழுந்த வேகத்தில் தலை மெதுவாகச் சுற்ற, சட்டென்று அவள் படுக்கையில் அமர்ந்து விட்டாள். அவள் நிலையைப் புரிந்து கொண்டவனாக, அவளுக்கு முன்பாக ஒற்றைக்கால் மடித்து அமர்ந்த ஏற்றமாதிபன், அவள் கரங்களைப் பற்றிக்கொள்ள, அவளோ வேகமாக அவன் கரத்தை உதறித் தள்ளிவிட்டு,

“கெட் அவுட்…” என்றாள் அடக்கப்பட்ட சீற்றத்தோடு.

அதைக் கேட்டுப் புன்னகைத்தவன், அவளுடைய முழங்கால்களில் தன் உள்ளங்கையை வைத்து அங்கும் இங்கும் வருடிக் கொடுத்தவாறு,

“போகிறேன்… உன் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டுப் போகிறேன். எனக்கும் வெளியே கொஞ்சம் வேலை இருக்கிறது…” என்றான் கம்பீரம் குறையாத கிண்டலோடு. அதைக் கேட்டவளுக்கு யாரோ காதுக்குள் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போலத் தோன்ற, அவனை வெறுப்புடன் பார்த்து,

“ஓவர் மை டெட் பாடி….” என்றாள் வெறுப்புடன்.

அதைக் கேட்டு ஆத்திரத்தோடு காரசாரமாக எதையோ சொல்ல வந்தவன், சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக்கொண்டவனாக,

“எனக்குத் தெரியும், இது உனக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று. ஆனால் இது காலத்தின் கட்டாயம்… நீ விரும்புகிறாயோ இல்லையோ, இந்தத் திருமணம் நடக்கும். நடந்தே ஆகும்… அதனால் நேரத்தை வீணாக்காமல் தயாராகி வா!” என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, அவனை வெறித்துப் பார்த்தாள் விதரணை.

“என்ன… எனக்கு கட்டளையிடுகிறீர்களா?” என்றாள் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.

“வட்…? நோ…! உனக்கு கட்டளையிடும் அதிகாரம் எனக்கில்லைமா… நடக்கவிருக்கிற கட்டாயத்தைச் சொல்கிறேன்…” அவன் அழுத்தமாகச் சொல்ல, முறைத்தாள் இவள்.

ஒரு காலத்தில் அவனது பார்வைக்காகவும் காதலுக்காகவும் ஏங்கியவள்தான். அவனை மணந்து ஒவ்வொரு விநாடியையும் ரசித்து அனுபவிக்க ஆசைப்பட்டவள்தான். அவனின் விரலின் தீண்டலில் உடல் சிலிர்க்க, அவன் ஆலிங்கனத்திற்குள் அடங்க விரும்பியவள்தான். ஆனால், அன்று ஒருத்தியைக் காட்டி அவளை மொத்தமாய்ப் புதைகுழியில் தள்ளி மூழ்கடித்ததோடு, அவளுடைய மெய்க்காதலையும் கொன்று புதைத்துவிட்டு, இப்போது எந்தத் தைரியத்தில் இவளை மணக்கக் கேட்கிறான்? என்ன, அவள் மீது பரிதாபமா அவனுக்கு? அவனுடைய பரிதாபம் அவளுக்கு எதற்கு? அப்படி பிச்சையெடுக்கவேண்டிய நிலை அவளுக்கு இல்லையே!

ஆத்திரமும் இயலாமையும் அவளை வதைக்க, வெறுப்பையெல்லாம் ஒன்று திரட்டி அவன் தன் முழங்கால்களை வருடிய நிலையிலிருந்த அவன் கரங்களைத் தள்ளிவிட்டு, அவனை வெறுப்புடன் பார்த்தாள் விதரணை. அந்த வெறுப்புகள் வார்த்தைகளாகித் தொண்டைக்குழி வரை நிறைந்திருந்தது. அத்தனையையும் ஒன்றாகச் சேர்த்து அவன் மீது கொட்டிவிட முயன்றாள்; ஆனால் முடியவில்லையே! ஒரு எல்லை வரை வந்துவிட்ட வார்த்தைகள் அதற்கு மேல் வர மறுத்துச் சிக்கிக் கொள்ள, தன்னையே பலவீனமாக உணர்ந்தாள் விதரணை.

அதில் உள்ளம் குமைந்து போக, தன் பலவீனத்தை அவனுக்குக் காட்டப் பிடிக்காமல்,

“பிளீஸ்… கெட் அவுட்!” என்று தன்னைச் சிரமப்பட்டு நிலைறுத்த முயன்று தோற்றவாறு சொன்னாள் விதரணை. ஆனால் அவனோ கொஞ்சமும் அசைந்துகொடுத்தானில்லை.

அவனுடைய கூரிய பார்வை அவளை விட்டு எத்திசையும் அசைவதாக இல்லை. அவள் வெளியே போ என்று சொன்னதற்காக அவன் வருந்தவும் இல்லை. கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல, அவளை மணந்தே ஆகவேண்டும் என்கிற உறுதி அவனிடமிருக்க,

“நேரம் போகிறது விதரணை. உனக்கு என்ன பேச வேண்டும் என்றாலும் திருமணம் முடிந்த பிறகு பேசலாம். இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் ஐயர் வந்துவிடுவார். ஒருவேளை உனக்குக் குளிக்கப் பிடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை… இந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு வா!” – அவன் சொல்ல, அவளோ ஆத்திரத்தோடு அவனை வெறித்துப் பார்த்தாள்.

அவன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவன் சொன்னால் இவள் அதைச் செய்தே ஆக வேண்டுமா? அவள் நிலை என்ன, அவள் எந்தச் சூழ்நிலைக்குள் சென்று வந்திருக்கிறாள் என்கிற எண்ணம் அவனுக்கு இருக்கிறதா இல்லையா? ஒரு வேளை அன்றே அவள் காதலை அவன் ஏற்றிருந்தால் மனமிளகி மணக்க சம்மதித்திருப்பாளோ என்னவோ. ஆனால் அவளை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியவன். அவள் முன்பாகவே ஒருத்தியை முத்தமிட்டவன். இப்போது எந்தத் தைரியத்தில் அவள் முன்னால் வந்து நின்று திருமணம் முடிக்கலாம் வா என்பான். இவளைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது?

பற்களைக் கடித்தவள், இப்போது அவனை அழுத்தமாகப் பார்த்தாள். ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவளாக,

“என்ன… வாழ்க்கைப் பிச்சை போடுகிறீர்களா? அந்தப் பிச்சை எனக்குத் தேவையே இல்லை… தயவுசெய்து வெளியே போங்கள்… இந்த ஜென்மத்தில் உங்களைத் திருமணம் செய்ய மாட்டேன் ஏற்றமாதிபன்!” – பற்களைக் கடித்து அவள் வார்த்தைகளைத் துப்ப, அவனோ லேசாக நகைத்தான்.

“அதற்காக அடுத்த ஜென்மம் வரைக்கும் காத்திருக்கச் சொல்கிறாயா?  எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லையே… பம்கின். அதனால் இந்த ஜென்மத்திலேயே நாம் திருமணம் செய்துகொள்ளலாம். எழுந்து கொள்!” – அவன் அதிலேயே நிற்க, பொறுமையிழந்தவளாக அவனைத் தள்ளிவிட்டு எழுந்து விலகி நின்றுகொண்டாள் விதரணை. அவனும் எழுந்து அவளையே பார்த்திருக்க,

“ஏன்… எதற்கு? எதற்காக இந்தத் திடீர் கரிசனை?” – அவள் எரிச்சலுடன் கேட்க, ஏற்றமாதிபனோ தன் இலகுநிலை மாறி அவளைத் தீர்க்கமாகப் பார்த்தான்.

“உன் மீது எனக்குக் காதல் என்று சொன்னால் நம்புவாயா?” அவன் நிதானமாகக் கேட்க, ஒரு கணம் அதிர்ந்துதான் போனாள் விதரணை. அவனுக்கு அவள் மீது காதலா? அதைக் கேட்டதும் வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது அவளுக்கு. கூடவே ஆத்திரம் பொங்கி எழ,

“இல்லை… நம்ப மாட்டேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக. அதைக் கேட்டவனின் உதட்டில் மென்புன்னகை.

“சரி நம்பாதே… ஆனால் உன்னை முழு நேரமும் பாதுகாக்கும் கடமை எனக்கு இருக்கிறது. அதனால்தான் இந்தத் திருமணம்…” அவன் சொல்ல,

“என்னைப் பாதுகாக்க எனக்குத் தெரியும். யாருடைய உதவியும் தேவையில்லை…” என்றாள் வெறுப்புடன் கூடிய உறுதியாக. அதைக் கேட்டு கிண்டலாக நகைத்தான் ஏற்றமாதிபன்.

“ரியலி?” அவன் புருவத்தை உயர்த்திக் கேட்க, ஒரு கணம் தடுமாறித்தான் போனாள் விதரணை.

“அது… அது நேற்று… ஏதோ முட்டாள்தனமாக… நான்… நான் இனி இப்படிச் செய்ய மாட்டேன்!” – அவள் மழுப்பலாகச் சொல்ல, ஏற்றமாதிபனோ உதடுகளைப் பிதுக்கினான்.

“தற்போதைய நிலையில், உன் மீதிருக்கும் நம்பிக்கை எனக்கு வெறும் பூஜ்யமே! நேற்றிரவு நீ செய்த விபரீதத்திற்குப் பிறகு, உன்னைப் பாதுகாக்க 24/7 மணி நேரமும் உன் அருகிலேயே இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன். இந்த முடிவு இப்போதைக்கு மாற்றும் எண்ணம் எனக்கில்லை. அதனால்…” அவன் முடிப்பதற்குள் அவனை அழுத்தமாகப் பார்த்தாள் விதரணை.

“என்னைப் பாதுகாக்க நீங்கள் யார்? உயிரோடு இருப்பதும் சாவதும் என் விருப்பம். அதைத் தடுக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்? எனக்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை. முக்கியமாக உங்களின் பாதுகாப்பு எனக்குத் தேவையே இல்லை! தயவுசெய்து என்னை என் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிடுங்கள். என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக உங்களைத் திருமணம் செய்ய மாட்டேன்…!” முடிவோடு சொன்னவள், அவனை அழுத்தமாகப் பார்த்து, “அதுதான் உங்கள் காதலி ஜாஸ்மின் இருக்கிறாளே… அவளை வேண்டுமானால் மணந்து கொள்ளுங்கள்…” என்றாள் வெறுப்பாக.

அதைக் கேட்டுப் பற்கள் தெரிய நகைத்தவன்,

“ப்ச்… ஆனால் பாரேன்… அவளுக்கு என்னை விட ஜார்ஜைத்தான் பிடித்திருக்கிறதாம் என்று என்னை வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்…” அவன் சோகமாகச்   சொல்ல, அவளோ அவனை அதிர்வுடன் பார்த்தாள்.

“உண்மைதான்மா…” அவன் சொல்ல, மறுகணம் எரிச்சலோடு பேசப் பிடிக்காமல் அங்கிருந்து நகர முயல, சட்டென்று அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்திருந்தான் ஏற்றமாதிபன்.

அவன் இழுத்த வேகத்தில் அவனது மார்போடு அவள் மோதி நிற்க, மோதி நின்றவளின் இடையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டவன் அவளைக் குனிந்து பார்க்க, அவளோ கோபம், இயலாமை, தவிப்பு, மறுப்பு என்ற பலவித உணர்வோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள். இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கலந்து விலகிக் கொள்ள, அவன் உடல் சூட்டில் அந்த நிலையிலும் உருகிப்போகும் தன் உடலை வெறுத்தவளாக,

“எ… என்ன செய்கிறீர்கள்? விடுங்கள் என்னை…” என்றாள் பலவீனமான திமிரலோடு. அவனோ விலக முயன்றவளை மேலும் தன்னோடு நெருக்கிப் பிடித்தவன், அவள் நாடியைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான். அவளுக்குத்தான் அவன் விழிகளைப் பார்க்கும் தைரியமில்லையே. விழிகளை மூடிக்கொள்ள,

“விதரணை…” என்றான் ஆழமான அழுத்தமான குரலில். அவனைப் பார்த்தால் பாழாய் போன இதயம் குழைந்து போகுமே. இன்னும் விழிகளை இறு மூடிக்கொள்ள, இப்போது மெதுவாகத் தன் பிடியை இளக்கியவன் அவளைத் தன்னிடமிருந்து பிரித்து அவள் தோள்களில் கரங்களைப் பதித்து மேதுவாக அழுத்திக் கொடுத்து,

“விதரணை…. இங்கே பார்…” என்றான் மென்மையாக. இன்னும் அவள் விழிகள் திறந்தாளில்லை.

“விதரணை… உனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்தத் திருமணம் நடந்தே ஆகவேண்டும்… நீ மட்டும் பிரச்சனையில் சிக்கியிருந்தால், உன் மறுப்புக்கு மரியாதை கொடுத்திருப்பேன். ஆனால், இப்போது ஆபத்திலிருப்பது உன் தம்பி விதுரன்… அவனுக்காகவேனும் நீ இந்தத் தீருமணத்திற்கு சம்மதித்துத்தான் ஆகவேண்டும்” அவன் அழுத்தமாகச் சொல்ல, படக்கென்று விழிகளைத் திறந்து அவனைப் பார்த்தாள் விதரணை.

“என்… என்ன சொல்கிறீர்கள்? என் தம்பி… அவனுக்கென்ன…?” என்று அவள் பதற்றத்தோடு கேட்க,

“உன் தம்பிக்கு ஒன்றுமில்லை, ஆனால் அவனை குழந்தை பாதுகாப்பு அமைப்பு தங்கள் வசம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்கிறது…” என்று அவன் சொல்ல அதிர்ந்து போனாள் விதரணை. பதறியவளாக அவன் ஷேர்ட் மேல் புறத்தை அழுந்தப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவள்,

“எ…. என்ன சொல்கிறீர்கள்…?” என்றாள் அதிர்ச்சியோடு. தன் சட்டையைப் பற்றியிருந்தவளின் கரத்தை மெதுவாக விலக்கித் தன் கைக்குள்ளேயே சிறைப்பிடித்துக் கொண்டவனாக,

“ம்… எனக்கு மின்னஞ்சல் வந்திருக்கிறது. உன் தம்பிக்கு இப்போதுதான் பதினான்கு வயது. காவல்துறை அதிகாரியாக நான் இருப்பதால்தான், அரசாங்கம் தற்காலிகமாக அவனை என் பொறுப்பில் விட்டு வைத்திருக்கிறது. இல்லையென்றால், இந்நேரம் அவனை மருத்துவமனை விடுவித்த போதே, அரசாங்கம் தன் வசம் எடுத்து, காப்பகத்துக்கோ அல்லது ஏதேனும் ஒரு வளர்ப்பு இல்லத்திற்கோ (Foster Home) அனுப்பியிருக்கும்! நீ நினைத்தால் கூட அவனை உன்னோடு வைத்திருக்க அரசு சம்மதிக்காது…” அவன் சொல்ல விதரணையின் கண்களிலிந்து கண்ணீர் பொங்கத் தொடங்கியது. கூடவே முகம் வெளுறியும் போனது. அதை கண்டு, மனதிற்குள் வருந்தியவனாக,

“நீ வருந்துவாய் என்பதால்தான் உன்னிடம் இது பற்றிச் சொல்லவில்லை… இப்போது விதுரன் மிகப் பெரும் சிக்கலில் இருக்கிறான்… நீ தற்போதிருக்கும் நிலையில், உன்னால் அவனைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று சமூக நலத்துறை அதிகாரி நினைக்கிறார்.” அவன் சொல்ல, அவசரமாக அவன் கரத்தை உதறிவிட்டு விலகியவள்,

“யார்.. யார் சொன்னா.. என்னால் அவனைப் பார்த்துக் கொள்ள முடியும்…” என்றாள் அழுகையும் தவிப்புமாக.

“அதை நீதான் சொல்கிறாய் விதரணை… ஆனால் மருத்துவரும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பும் சமுகநல அதிகாரியும் சொல்லவேண்டுமே. நீ உன் குடும்பத்தை இழந்த அதிர்ச்சியில் இருப்பதால், உன் மனநிலை உன் வசமில்லை என்று மருத்துவர்கள் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். நீ மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறாய் என்று அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையிலும், உன் தம்பியின் நிலையும் ஏற்புடையதாக இல்லாத காரணத்தினால், விதுரனை உன்னிடம் விட்டுவைக்க முடியாது என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைக்கு உறுதியாகச் சொல்லியிருக்கிறது. சமுக நலத் துறையும் அதையே வலியுறுத்தியிருப்பதால், விதுரணைத் தங்கள் பொறுப்பில் எடுக்க, அரசு முடிவு செய்திருக்கிறது. “என்றவன் அன்று மருத்துவமனையில், நடந்ததை சுருக்கமக அவளுக்குச் சொல்லிவிட்டு,

“அவர்களிடம் பேசி, தற்காலிகமாகத்தான் உன் தம்பியை என் பொறுப்பில் கொண்டு வந்தேன் விதரணை. நேற்று சமூக நலத்துறையிலிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். என் பாதுகாப்பில் அவனை விட்டுவைத்த காலக்கெடு விரைவில் முடிவடைவதால், விதுரனை அழைத்துச் செல்லப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

உனக்கே தெரியும் விதரணை… கனடா சட்டத்தின்படி அநாதரவாக்கப்பட்ட ஒரு குழந்தையை வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, அந்தப் பிள்ளையின் நெருங்கிய உறவினர்களுக்குத்தான் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கும். இப்போது நான் உன்னைத் திருமணம் செய்துகொண்டால், சட்டத்தின் பார்வையில் விதுரனுக்கு நான் முறைப்படி உறவினனாகிவிடுவேன். அதற்குப் பிறகு விதுரனை நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது… புரிந்து கொள் விதரணை… உன் தம்பியை மீட்டெடுக்க இந்தத் திருமணம்தான் ஒரே வழி!” என்றவன், ஆழ மூச்செடுத்து விட்டு…

“நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், விதுரனை இழப்பதற்கு நாம் கொடுக்கும் நேர அவகாசம் என்பதை மறந்துவிடாதே… இவ்வளவு அவசரமாக இந்தத் திருமணத்தை வைக்க அதுதான் முக்கிய காரணமே! அவர்கள் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்வதற்கு முன்பாக, நாம் திருமணம் செய்து கொண்டதற்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். உன்னையும், உன் தம்பியையும் நான் பொறுப்பேற்கிறேன் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் உன் தம்பிக்கு பதினெட்டு வயது ஆகும் வரை எங்கோ இனம் தெரியாத ஒருத்தரின் வளர்ப்பு இல்லத்தில் அவன் வாழ வேண்டியதாகிவிடும்.

அது உனக்குச் சம்மதம் என்றால் சொல்… நான் இப்போதே போய்விடுகிறேன்! ஆனால் ஒன்று, அவனை அங்கெல்லாம் அநாதையாக வாழவிட்டு நீ நிம்மதியாக இருப்பாயா? கொஞ்சம் யோசித்துப் பார். இந்தத் திருமணம் என் தேவைக்காக மட்டுமில்லை… இது காலத்தின் கட்டாயம்; உன் தம்பியின் வாழ்க்கைப் பிரச்சினை! நீ என்னை மணந்தால் மட்டும்தான் விதுரன் உன்னோடு இருக்க முடியும்” என்று அழுத்தமாகச் சொன்னவன், இப்போது அவளை விட்டு விலகி நின்றவாறு…

“உனக்கு அவகாசமில்லை விதரணை… உடனே முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய். இந்தத் திருமணம் நடக்கவில்லை என்றால், இன்றே நான் அவர்களுக்கு அவனை அழைத்துச் செல்ல நேரம் குறித்து மின்னஞ்சல் அனுப்பிவிடுகிறேன். நீ இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தால், நமக்கு நடந்த திருமணத்திற்கான ஆதாரத்தையும் இணைத்து, அவனை எங்கும் அனுப்புவதாக இல்லை என்று மறுபதில் போட்டுவிடுகிறேன்…” அவன் சொல்ல, அவன் சொன்னதைக் கேட்டு அவள் முகமே வெளுத்துப் போனது.

இதை எப்படி யோசிக்காமல் விட்டாள்! நிச்சயமாக அரசாங்கம் விதுரனை அவளுடைய பொறுப்பில் இருக்க விடாது. எந்த நேரமும் அவனைத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ளும். அப்படி எடுத்துக்கொண்டால், அவனுக்குப் பதினெட்டு வயது வரும் வரைக்கும் இருவரும் ஒன்றாக வாழ முடியாது. எல்லோருக்கும் அருமையான வளர்ப்பு இல்லம் கிடைத்துவிடாது என்பது அவளுக்கும் தெரியும். தன் தம்பியையும் தொலைத்துவிட்டு எப்படி வாழ்வாள்? நினைக்கும் போதே இதயம் நடுங்கிப் போனது அவளுக்கு.

அவளது தவிப்பை உணர்ந்து கொண்டவனாக, “நீ என்னை மணந்தால் மட்டும்தான் விதுரன் நம் கையில் இருப்பான் விதரணை. நான் சத்தியம் செய்கிறேன், விதுரனின் பாதுகாப்பு இனி என் பொறுப்பு… அவன் ஏற்கனவே பெற்றோரை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறான். உன்னுடைய முட்டாள்தனமான பிடிவாதத்தால், அவன் வாழ்க்கையைப் பாழாக்கிவிடாதே” என்றவன், வாசல் நோக்கிச் சென்று நின்று திரும்பிப் பார்த்தான்.

“கீழே காத்திருக்கிறேன். என்னை மணப்பதும், வேண்டாம் என்று மறுப்பதும் உன் விருப்பம். தம்பியைக் காப்பதா, இல்லை பிடிவாதம் பிடித்து யாருமற்ற அநாதையாக அவனை மாற்றுவதா என்பது உன் கையில்தான் இருக்கிறது…” என்றுவிட்டு அவன் வெளியேற… அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றிருந்தாள் விதரணை.

கால்கள் நடுங்கின. இதயம் பயங்கரமாகத் துடிப்பது கூட அவளுக்குத் தெரிந்தது. ஒருவித கலக்கத்தோடு தொப்பென்று படுக்கையில் அமர்ந்தவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

அவள் ஏன் இதை யோசிக்காமல் விட்டாள்? அவள் விதுரனை இழக்க நேரிடுமா? அவனையும் இழந்தால் அவள் நடைபிணமாகிவிடுவாளே! நெஞ்சம் கதறியது அவளுக்கு. அவளால் தன் தம்பியை யாருடையதோ ஒருத்தரின் பொறுப்பில் விட்டுவைப்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த நினைப்பிலேயே, உடலில் இரத்தம் முழுதாக வறண்டுபோவது போலத் தோன்றியது அவளுக்கு.

அவளுக்கு இருக்கும் ஒரே உறவு அவன் மட்டும்தானே… அவனை எப்படித் தொலைப்பாள்?

நோ… நோ… தனக்குள் துடித்தவள், மறுகணம் கண்களைத் துடைத்துவிட்டுத் தீர்க்கமான முடிவோடு படுக்கையை விட்டு எழுந்து நின்றாள்.

What’s your Reaction?
+1
21
+1
0
+1
5
+1
0
+1
5
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-23

(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…

16 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-22

(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…

3 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…

6 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-20

(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-19

(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-18

(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…

2 weeks ago