“ஏம்மா… இதிலே ஒரு கையெழுத்துப் போடுங்கோ…”
தலையில் கொண்டை, நெற்றி நீளத்திற்குப் பட்டை, நடுவிலே குங்குமம் எனத் தெய்வ கடாட்சமாக நின்றிருந்த ஐயர், பேனாவை விதரணையிடம் நீட்டினார். கிட்டத்தட்ட அந்தப் பேனாவைப் பறித்தவள், அவசரமாக அதில் கையெழுத்திட்டு, ஏற்றமாதிபனைத் தன் கணவனாக்கிக் கொண்டாள் விதரணை.
நேற்றைய பொழுது இதே நேரத்தில், இன்று தான் ஏற்றமாதிபனின் மனைவியாகப் போகிறோம் என்று அவள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள். இப்போது… தன்னை மறந்து அருகே நின்றவனை அண்ணாந்து பார்த்தாள் விதரணை. அவனோ தன் தாய் நீட்டிய தட்டிலிருந்து ஒரு மோதிரத்தைக் கரத்தில் எடுத்தவாறு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவளும் மறுக்கவில்லை. தன்னை மறந்து இடது கரத்தை நீட்ட, அந்தக் கரத்தை மிக அழுத்தமாக உறுதியோடு பற்றிக்கொண்டவன், அவளுடைய பொன் விரலில் மோதிரத்தைத் தன் விரல்கள் படப் போட்டுவிட்டு கரங்களை விலக்காமல் அப்படியே அவளைப் பார்த்திருக்க, விதரணையோ அவரசமாகத் தன் கரத்தை அவன் பிடியிலிருந்து இழுத்து எடுத்துவிட்டுத் திரும்ப, இப்போது விதரணையிடம் இன்னொரு தட்டை நீட்டினாள் அபிநயா. அவள் முகத்தில் புன்னகையும் மலர்ச்சியும் அப்பட்டமாகத் தெரிய, மறுக்காமல் அந்த மோதிரத்தை வாங்கி ஏற்றமாதிபனின் விரலில் தன் விரல்கள் படாமலே அணிவிக்க முயன்றாள். அந்தக் கள்வனோ வேண்டும் என்றே தன் கரத்தை அங்கும் இங்கும் அசைக்க, பொறுமையிழந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் விதரணை.
அவன் உதட்டில் குறும்புப் புன்னகை ஒன்று வெளிவரத் துடித்துக்கொண்டிருக்க, அதை உணராதவள் மீண்டும் அவன் விரலில் மோதிரத்தைப் போட முயன்றாள். இப்போதும் கொஞ்சம் தன் விரலை அசைக்கத் தன்னை மறந்து அவன் கரத்தை இறுகப் பற்றியவள், அவன் விரலில் மோதிரத்தைப் போட்டுவிட,அந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேரின் முகத்திலும் இறுக்கம் தளர்ந்து புன்னகை மலர்ந்திருந்தது.
ஆனால் விதரணைக்கு அதில் எந்த சுவாரசியமும் தெரியவில்லை. அவனை மணந்து கொள்ள வேண்டும். அவள் தம்பி அவள் கூடவே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
இதோ… சட்டப்படி திருமணம் நடந்துவிட்டது. அவள் இனி அவன் மனைவி!
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, நெஞ்சில் நயகரா அருவியாகப் பொங்கிய மகிழ்ச்சி, அவன் முகத்தில் அபபட்டமாக வெளிப்பட, இளம் புன்னகையுடன் விதரணையைப் ஆசையாகப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஏற்றமாதிபன்.
அவனால் இன்னும் அவள் தன் சொந்தமானதை நம்பவே முடியவில்லை. கடந்த ஏழு வருடங்களாகக் கனவிலும் கற்பனையிலும் அவளோடு வாழ்ந்தவனுக்கு இப்போது நிஜமாகவே அவள் மனைவியானதில் சொல்ல முடியாத உவகைதான். ஏழுகடல் தாண்டிப் பெற்ற பொக்கிஷம் என்பார்களே. அப்படித்தான் உணர்ந்தான் அவனும்.
அந்த உவகையோடு அவளை இமைக்காமல் பார்த்து இரசித்தான் ஏற்றமாதிபன்.
முன்பை விட மிக மெலிந்திருந்தாள். ஆனாலும் அவளது அழகு இம்மி கூடக் குறையவில்லை. வாரியிழுத்துப் பின்னலிட்ட தலையில், அவசரமாக வாங்கி வந்த மல்லிகைச்சரம் மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கழுத்தில் வெண்மையும் சிவப்பும் கலந்த மலர் மாலை, அவள்தான் மணமகள் என்று பறைசாற்றியது. நீண்ட அடர்ந்த புருவங்கள்; ஏற்கனவே பெரிய விழிகளுக்கு மையிட்டு, அந்த விழிகள் இன்னும் வசீகரமாக்கப்பட்டிருந்தன.
இருப்பினும், அந்த ஒப்பனைகளை மீறி அவள் உடலில் விழுந்த காயத்தின் தழும்புகள் ஆங்காங்கே தெரிய, அதைக் கண்ட ஆதிபனின் நெஞ்சம் வலியில் விண்டுதான் போனது. நெற்றியின் ஓரத்தில் தையல் போடப்பட்டிருந்த சிறிய வடு ஓரளவு ஆறியிருந்தாலும், அவளுடைய இரணத்தின் வலியை அது சொல்லாமல் சொல்ல, நாசியில் குத்தியிருந்த மூக்குத்திக்கு அருகே லேசாகக் கறுத்துப் போயிருந்த சிராய்ப்பு அவள் பட்ட வேதனைக்கு சாட்சியாக நின்றிருந்தது. கூடவே உதட்டின் ஓரத்தில் வெடிப்பால் ஏற்பட்டிருந்த தழும்பு பூசப்பட்ட உதட்டுச்சாயத்தையும் மீறித் தெரிய, அது பலமடங்கு அவள் அனுபவித்த வலிக்கு ஆதாரம் காட்டி நின்றிருந்தது.
முகத்தில் அதிக அலங்காரங்களை அவள் அனுமதிக்கவில்லை என்பதைப் பார்க்கும்போதெ தெரிந்து கொள்ள முடிந்தது. கொடுத்த நகைகளில் கழுத்தில் ஒரு சங்கிலியும், காதில் ஜிமிக்கியும் மட்டுமே அணிந்திருந்தாள். மெஜந்தா நிறப் பட்டுப்புடவை அவளுடைய நிறத்தை இன்னும் எடுப்பாகக் காட்டினாலும், ஜாக்கெட்டும் பட்டுச் சேலையும் மறைக்காத பெண்மையின் எழில் அந்த நிலையிலும் அவனை நிலைகுலையச் செய்யத் தவறவில்லை.
மொத்தமாகச் சொல்ல வேண்டும் என்றால், சிதைந்த சிற்பம் ஒன்றை ஒட்டவைத்து அலங்கரித்தது போல, ஒட்டும் ஒட்டாமலும் வலிகளையும் வேதனைகளையும் தேக்கி நின்றிருந்தாள் அந்தப் பாவை. அந்தச் சிற்பத்திற்கு உயிரூட்டுவது அத்தனை சுலபமில்லைதான். அதற்கு அவன் நிறையவே பாடுபட வேண்டும்.
அதே நேரம், ஏற்றமாதிபனைத் தன் கணவனாக ஏற்றுக்கொண்ட பின்பு, விதரணைக்கு, விந்தையிலும் விந்தையாக மனது அமைதியாக இருந்தது. ஏற்றமாதிபனை மணந்ததில் அவளுக்குத் துளியும் வருத்தமில்லை. சொல்லப்போனால் நிம்மதிதான். அவளையும் மீறி மனது பெரும் பாதுகாப்பை உணர்ந்து கொண்டது.
அவளுக்கு ஏற்றமாதிபனைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். அவன் ஒரு பொறுப்பை எடுத்தால் எக்காலத்திலும் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழிக்க மாட்டான். விதுரனை இனி யாராலும் அவளிடமிருந்து பிரிக்க முடியாது. இனி எப்போதும் அவன் அவள் பக்கம், கண்முன்னாடிதான் இருக்கப் போகிறான். இதை விட அவளுக்கு வேறு என்ன வேண்டும்? அந்த நிம்மதியோடு அவள் தன் தம்பியைப் பார்க்க, விதுரனும் தன் சகோதரியைத்தான் ஒரு வித திருப்தியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
“தம்பி… இந்தத் தாலியை உங்கள் மனைவியின் கழுத்தில் கட்டுங்கோ…” என்றவாறு, அவசரமாக வாங்கி வைத்த பொற்றாலிக்கொடியை இரு பக்கமும் பற்றி அவனிடம் ஐயர் நீட்ட, நினைவு கலைந்து அதை வாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன்.
ஆசையோடு தன்னவளைப் பார்த்தவாறு, அவள் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவிக்க, அந்தக் காட்சியை வருண் தன்னிடமிருந்த புகைப்படக் கருவியால் தாராளமாகக் கிளிக்கத் தொடங்கினான்.
“மாங்கல்யம் தந்துனானேநா மம ஜீவன ஹேதுனா…” – ஐயரின் கணீர் குரல் மந்திரம் ஓத, அக்னி சாட்சியின்றி, எந்த ஆடம்பரச் சடங்குகளுமின்றி, சட்டப்பூர்வமாகவும் சம்பிரதாயப்படியும் அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் ஏற்றமாதிபன். அவன் தாலி கட்டும்போது சுற்றியிருந்தவர்கள் மலர் தூவ, மதிவதனியோ தன்னை மறந்து விம்மி அழத் தொடங்கினார்.
ஒரே ஒரு மகன்; அவனுடைய திருமணம் இப்படி உற்றார் உறவினர் யாருமின்றித் திடீரென நடக்க வேண்டுமா? கலங்கி நின்றவரின் தோள் மீது கரத்தைப் போட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டார் வித்யாதர்.
“எதற்கு இப்போது அழுகிறாய்? நம் மகன் திருமணம் செய்துகொள்ள மாட்டானோ என்று நாம் வருந்தாத நாளில்லை. இதோ, இன்று அவன் ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிட்டான். இதை விட நமக்கு வேறென்ன வேண்டும்? தயவுசெய்து நல்ல நாளில் அழாதே…” – அவர் மென்மையாக அதட்ட, சிரமப்பட்டுத் தன் வேதனையை அடக்கிக்கொண்டார் மதிவதனி.
என்னதான் ஆறுதல் சொன்னாலும் ஏக்கம் எழாமல் இருக்குமா? அவர் கற்பனையில் கண்ட காட்சி என்ன, நடப்பது என்ன? ஏக்கமாக நினைத்தவருக்கு மனம் தாளவேயில்லை. வேதனையுடன் வந்திருந்த உறவினர்களை ஏறிட்டார் மதிவதனி.
ஏற்றமாதிபனின் திருமணம் என்பதை அறிந்து வசந்தாவும் ஆனந்தகுமாரும் இரவோடு இரவாக விமானத்தில் ஏறி வந்துவிட்டிருந்தார்கள். அமலன் ஈழம் சென்றிருந்ததால் அவனுடைய பெற்றோர்கள் மட்டும் வந்திருந்தார்கள். நெருங்கிய உறவுகள் என்று பத்துப் பேரோடு மட்டும்தான் அந்தத் திருமணம் நடந்துகொண்டிருந்தது. அதைக் கண்ட மதிவதனி ஏக்கத்தோடு மீண்டும் மணமக்களிடம் தன் கவனத்தைச் செலுத்தினார்.
சடங்குகள் முடிந்ததும் ஐயர் மணமக்களை வாழ்த்தி விடைபெற்றுச் சென்றுவிட, அடுத்து வந்தவர்களை வைத்துப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அனைவரையும் சேர்த்துக் குழுவாக ஒரு புகைப்படம் எடுத்து முடித்த பின்பு ஏற்றமாதிபன் வருணைக் பார்க்க, வருணோ ஏற்றமாதிபனின் கட்டளையைத் தெரிந்து கொண்டவனாக,
“சரி சரி… அனைவரும் சாப்பிடச் செல்லுங்கள்…” என்று உத்தரவு போலச் சொல்லிவிட்டு ஏற்றமாதிபனை ஏறிட்டு,
“டேய் ஆதிபன்! விதரணையை அழைத்துக்கொண்டு வெளியே வா… தோட்டத்தில் வைத்துப் புகைப்படம் எடுக்கலாம்” என்று கூறிவிட்டு வெளியே செல்ல, உடனே ஆதிபன் விதரணையை நோக்கித் தன் கரத்தை நீட்டினான்.
அவளோ ‘என்ன?’ என்பது போல அவனைப் பார்க்க,
“வருண் சொன்னது கேட்கவில்லையா? புகைப்படம் எடுக்க வேண்டும்… வா!” என்றவன், அவளது அனுமதியை எதிர்பார்க்காமலே அவளது கரம் பற்றி வெளியே அழைத்து, இல்லை இல்லை… இழுத்து வந்தான்.
கோடைகாலம் என்பதால் உச்சியைப் பிளக்கும் சூரியனின் வெளிச்சத்தில் விழிகள் கூசச் சற்று தடுமாறியவளை, சட்டென்று இழுத்துத் தன் கைவளைவில் அணைத்துக் கொண்டவன்,
“பார்த்து வா விதரணை…” என்றவாறு அவளோடு நடக்க, இவளும் ஏனோதானோ என்று அவனோடு சேர்ந்து நடக்கத் தொடங்கினாள். ‘நாய் வேஷம் போட்டாயிற்று, குரைக்காவிட்டால் எப்படி?’ என்கிற ஒருவித விரக்தி கலந்த சலிப்பு அவளுக்குள்!
சற்றுத் தூரத்தில், சுத்தமாகப் பராமரிக்கப்பட்ட அந்தப் பரந்த பூந்தோட்டம் அவர்களை இரு கரம் நீட்டி வரவேற்க, அதுவரை எந்திரத்தனமாக இழுபட்டு வந்துகொண்டிருந்தவள், அந்தத் தோட்டத்தின் அழகில் ஒரு கணம் மெய்மறந்துதான் போனாள்.
ஏற்றமாதிபன் வசதி படைத்தவன் என்று அவளுக்குத் தெரியும்; ஆனால், ஒரு பூங்காவனமே அவன் வீட்டிற்குள் இருக்கும் அளவுக்கு அவன் வசதி படைத்தவன் என்று அவள் யோசிக்கவே இல்லை. வீட்டைச் சுற்றி இரண்டு ஏக்கர் நிலத்தில், ஒரு பக்கம் முழுவதும் கவர்ந்திழுக்கும் பல வண்ணத் துலிப் (Tulip) மலர்களும், பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜாக்களும், வாசனையால் நாசியைத் துளைக்கும் ஹனிசக்கிள் மலர்களும், விதவிதமான காட்டுப் பூக்களும் எனச் சீராகப் பராமரிக்கப்பட்டிருந்த அந்தத் தோட்டம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ‘புட்சார்ட் கார்டன்ஸ்’ அழகையே விஞ்சிவிடும் அளவுக்கு அத்தனை அற்புதமாக இருந்தது.
சாதாரணமாகவே மலர்களின் மீது தீராக் காதல் கொண்டவளுக்கு, அந்த மலர்த்தோட்டம் ஈர்க்காமல் விடுமா என்ன? தன்னை மறந்து விழிகளை விரித்து ரசித்த அந்த நேரம், அவளுடைய இடையில் சட்டென்று அழுத்தமான கரம் ஒன்று பதிந்தது.
அதுவரை பூக்களின் அழகில் லயித்திருந்தவள், தன் இடையில் கரம் பட்டதும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
ஏற்றமாதிபன்தான்! அவளைக் கூர்மையான விழிகளுடன் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
‘ஐயோ… இவனை நினைத்தாலே இதயம் தன்நிலை கெடுமே! இவன் என்னவென்றால் இடுப்போடு அணைத்து, விழி என்னும் காந்தத்தால் கவர்ந்து இழுக்க முயல்கிறானே…’ – அதிர்ந்தவளாய் அவன் கூர்விழிகளைத் தன் விழிகளால் வருடியதுதான் தாமதம், அடுத்த நொடி அத்தனையும் மறந்து போனது அவளுக்கு. அவளைக் கொன்று புதைக்கும் அந்தப் பயங்கர நினைவலைகள் தாளம் தப்பித் தற்காலிகமாகக் காணாமல் போக… காற்று, ஆகாயம், பூமி என அனைத்தும் மங்கிப்போக, அவனும் அவளும் மட்டுமே அந்த மலர்களுக்கு மத்தியில் தனித்திருக்க, அதற்கு மேல் எதுவுமே அவள் நினைவுக்குப் புலப்படவில்லை.
அவளைக் கவ்வி இழுக்கும் அந்தக் காந்த விழிகளையே தன்னை மறந்து இமைக்காமல் பார்த்திருக்க… அவனோ அவளது இடை தாங்கித் தன்னை நோக்கி இழுத்து, ஒரு மலரின் முன்பாக அவளை நிற்க வைத்தான். அது கூடப் பாவம் அவளுக்குப் புரியவில்லை. அவன் இழுத்தான், இவள் இழுபட்டாள்; அவன் நிறுத்தினான், இவள் நின்றாள்; அவன் பற்றினான், இவள் மயங்கினாள். அது மட்டும்தான் அங்கே நடந்து கொண்டிருந்தது.
இந்த மனம்தான் எத்தனை விசித்திரமானது! அவனை வெறுப்பதாக நினைத்திருந்தாலும், அவன் விரல் தொட்ட அந்த நொடியில் எப்படி உருகிக் கரைந்து போகிறது? இதனால்தான் ‘மெய்யான காதல் எப்போதும் அழியாது’ என்பார்களோ? அல்லது, அவன் இவளுக்கே உரியவன் என்று முத்திரை குத்தப்பட்டதால் எழுந்த மாற்றமோ… தெரியவில்லை. உலகம் அவன் தொடுகையில் தொலைந்து போனது என்பது மட்டும் நிஜம்.
அவனோ முதலில் அவளை இடை பற்றி அணைத்து நின்றான். பின் அவளைத் தன்னை நோக்கி இழுத்து, தன் மார்போடு அவள் மோதும் வண்ணம் அழுத்தி அணைத்து, அவள் நாடியைப் பற்றித் தூக்கினான். மெதுவாகக் குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவந்தான் முத்தமிட்டானா, இல்லை மென்தென்றல் அவள் நெற்றியில் முட்டிச் சென்றதா? முத்தமிட்ட உதடுகள் அப்படியே அவள் நாசியைத் தொட்டு வருடியவாறு கீழிறங்க… ‘இது என்ன அதிசயம், பனிக்கட்டிகள் கரைந்து நாசியில் வடிந்து செல்கிறதே!’ என அவள் சிலிர்த்து நின்றாள்.
இறங்கிய உதடுகள் இப்போது மெதுவாக அவளது மேலுதட்டில் பதிந்தன. ‘அடடா… இது என்ன அதிசயம்? மொத்த உயிரும் மொத்தமாய் உதட்டில் சங்கமமாகி நிற்கிறதே…?’
அவள் தன்னை மறந்து மயங்கிக் கிறங்கிக் கிடந்த அந்த நொடி, அவனுடைய கடிய ஆண்மை மிக்க உதடுகள், அந்த இரண்டு அழகிய கொவ்வை இதழ்களையும் ஆழமாய்க் கவ்வித் தன் இதழ்களுக்குள் சிறைப்படுத்திப் புதைத்துக் கொண்டன!
இது… இதுதான் அவளுக்குத் தேவைப்பட்டது. அவளுடைய வலியை, தவிப்பை, கலக்கத்தை, அவளைக் கொல்லும் அந்தப் பயங்கர உணர்வுகளை மொத்தமாய் அழித்திட இதோ… இந்த முத்தம்தான் அந்த நேரத்தில் அத்தியாவசியமாகத் தெரிந்தது. கசடு நிறைந்த அந்த உலகில் வாழவும் பிடிக்காமல், சாகவும் முடியாமல் தவித்துக் கிடந்தவளுக்கு அந்த முத்தம் ஒன்றுதான், தத்தளிக்கும் அவளைக் கரையேற்றும் நாவாய் எனத் தோன்ற, அந்த முத்தத்தை இறுகவே பற்றிக்கொள்ள முயன்றாள்.
‘ஏன் என் உடல் இளகிப் போகிறது? சூரியனின் ஒளிபட்ட தாமரை போல ஏன் இப்படி பெண்மை மலர்ந்து சிலிர்க்கிறது? எனக்கு என்னதான் ஆயிற்று?’ – அவனது அந்த முத்தத்தில் மொத்தமாய்த் தொலைந்த விதரணை விழிகளை மூட, அந்த மூடிய விழிகளுக்குள்ளிருந்து அத்தனை வலியும் கண்ணீராய் மாறிக் கன்னத்தை வருடிச் சென்றது.
இருந்தும் அவன் தன் உதட்டை அவளிடமிருந்து விலக்கவில்லை. ஒருவித வேகத்தோடும் வேட்கையோடும் அவள் உதடுகளில் தன்னைத் தொலைத்திருந்தவன், முத்தமிட்டவாறே, உள்ளங்கையால் அவள் முகத்தைத் தாங்கிக்கொண்டு, தன் பெருவிரலால் அந்தக் கண்ணீரைத் துடைத்தெடுத்தான். அவனுடைய அந்தச் செயலில், அவளது மேனி அந்தக் கணம் முற்றுமுழுதாகக் குழைந்து உருகிப்போக, அவன் உதட்டுக்குள் சிக்கியிருந்த உதடுகளைப் பிளந்து அவன் பெயரைச் சொல்ல முயன்றாள். ஆனால், அவளால் சொல்ல எங்கே முடிந்தது? அவன்தான் அவள் உதடுகளை முற்றாக முற்றுகையிட்டிருந்தானே. அதற்கு மேல் எதையும் யோசிக்க முடியாமல், விதரணை முழுவதுமாக அந்த முத்தத்தில் இரண்டறக் கலந்து போனாள்.
அவளின் உருகிக் குலைந்த தேகம் அவனை மேலும் போதைக்கு இட்டுச் செல்ல, சுவைத்த தித்திப்பை மேலும் பருகவேண்டி, ஒற்றைக் கரத்தைக் கீழே இறக்கி, அவள் இடையைப் பற்றித் தன்னோடு இறுக்கி, மேலும் தன் முத்த நிமிடத்தை அதிகரிக்கச் செய்ய,
“பெர்ஃபெக்ட்!” – வருணின் குதூகலமான சத்தத்தில் தன் நிலைக்கு வந்தான் ஏற்றமாதிபன்.
இருப்பினும், அவளது உதடுகளைச் சட்டென்று கைவிட மனமில்லாமல், தன் அழுத்தத்தைக் குறைத்தாலும் இன்னும் அவள் உதடுகளை அள்ளி எடுத்துத் தீண்டவே செய்தான்.
“ஆதிபா… இது போதுமா… இல்லை இன்னும் வேண்டுமா?” என்று புகைப்படக் கருவியின் திரையில் விழுந்த படங்களைப் பார்த்தவாறு வருண் கேட்க… அவனுடைய குரலில் மெதுவாகப் பூமிக்குத் திரும்பியவன், மென்மையாய் மலர்களின் இதழ்களைப் பிரிப்பது போல அவளிடமிருந்து தன் இதழ்களைப் பிரிக்க முயன்ற நேரத்தில், இப்போது அவன் உதடுகளைச் சிறைப்படுத்த முயன்றது என்னவோ அவள்தான்!
ஏனோ அவளுக்கு அந்த முத்தத்திலிருந்து விலகிச் செல்லச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. வெளியே வந்தால் திரும்ப மனது செக்கு மாடு போல நடந்ததை எண்ணித் துடிக்கும்; இழந்த பெற்றோரை நினைத்துக் கலங்கும். இதோ, இப்போது நடக்கும் கூத்தை நினைத்து மருகித் தவிக்கும். சரியா தவறா என்று ஆராயும். கலங்கும்.. வேண்டாம்… வேண்டவே வேண்டாம்! அவளைக் காக்க அந்த ஒற்றை முத்தத்தால் மட்டும்தான் முடியும் என்று தோன்ற, பாய்ந்து பற்றும் பூனைக்குட்டி போல அவன் இதழ்களைத் தானே மீண்டும் கவ்விப் பற்ற முயன்றாள் விதரணை.
ஆனால், காலமும் சூழ்நிலையும் அவள் ஆசைக்கு ஏதுவாக இருக்க வேண்டுமே! மீண்டும் அவன் உதடுகளை நோக்கி அவள் நகர்ந்த விநாடி,
“இப்போது விதரணையை அணைத்தாற்போல நில் ஆதிபா..” என்று வருண் சொல்ல, திடுக்கிட்டு விழித்தாள் விதரணை.
கடவுளே… இப்போது இங்கே என்ன நடந்தது? நினைத்தவளுக்குத் தலைசுற்றிக்கொண்டு வந்தது.
அவளை இழுத்துக்கொண்டு ஏற்றமாதிபன் வெளியே வந்ததும், அழகிய நந்தவனக் காட்சியின் மத்தியில் பாதுகாப்பு அரணுக்குள் தான் பத்திரமாக இருப்பதும், அந்த அரணாக ஏற்றமாதிபன் இருப்பதும் இப்போதுதான் ஒன்றன்பின் ஒன்றாக அவளுக்கு நினைவுக்கு வந்தது.
கடவுளே, என்ன செய்யத் துணிந்தாள்? அவளா அவனை முத்தமிட நினைத்தாள்? அதுவும் எந்தவொரு சந்தர்ப்பத்தில்? அவள் பட்ட வலியின் வடுகூட இன்னும் ஆறவில்லை. அப்படியிருக்கும்போது அவன் ஒற்றை முத்தத்தில் மொத்தமாகத் தொலைந்து போனாளே! இப்போது மட்டுமா தொலைந்தாள்? முன்னிரவு கூடத்தான் அவன் முத்தமிட்டதில் தன்னை மறந்தாள்.
‘ஐயோ…. எனக்கு என்னதான் ஆயிற்று? இவன் மீது வைத்த பைத்தியக்காரத்தனமான காதல், அவள் இழந்ததை ஒன்றுமேயில்லை என்பது போல மாற்றுகிறதா? இத்தனைக்கும் அவளை வேண்டாம் என்று மறுத்தவனைப் போய்…’
தன் மீதே கோபமும் வெறுப்பும் கொண்டவளாகச் சட்டென்று அவனைத் தள்ளிவிட்டு விலக முயல… அவனோ அவளை இம்மியும் அசையவிடும் எண்ணமில்லாமல், பற்றிய இடையை அழுத்தமாகப் பற்றித் தன்னை நோக்கி இழுத்துத் தன் உடல் மீது மோதச் செய்ய, கோபத்தொடு எதையோ சொல்வதற்காக நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், குழம்பிப் போனாள்.
அவள் காண்பது கனவா, நிஜமா? ஏற்றமாதிபனின் விழிகளில் காதலா? அதுவும் தன் மீதா? விதரணையால் அதை நம்பக்கூட முடியவில்லை. தன்னை மறந்து அவன் விழிகளை உற்றுப் பார்த்தாள். அவனுடைய விழிகள் பொய் சொல்லவில்லை; அவன் அவளை அப்பழுக்கற்ற காதலோடுதான் பார்த்துக் கொண்டுதானிருந்தான். இது எப்படி சாத்தியம் என்று குழம்பி நின்ற வேளையில்…
“பெர்ஃபெக்ட் ஷாட்!” என்கிற வருணின் குரலில் முழுவதுமாகச் சுயம் பெற்று மாயையிலிருந்து வெளியே வந்தாள் விதரணை.
அதுவரை அவளை இறுகப் பற்றியிருந்த ஏற்றமாதிபனின் கரங்களும் சட்டென்று விலகிப்போக, அவனது விழிகளில் தெரிந்த அந்தக் காதலும் மாயம் கலந்தது போல நொடியில் மறைந்திருந்தது. அப்போதுதான் அவளுக்கு அங்கே நடப்பதே புரிந்தது.
‘போட்டோ ஷூட்! இந்த அணைப்பு, முத்தம், காதல் பார்வை அனைத்துமே வெறும் புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தானா…! இது புரியாமல்…’ – அவளையும் மீறிப் பொங்கி வழிந்த ஏமாற்றத்தோடு, ஏற்றமாதிபனையும் வருணையும் மாறி மாறிப் பார்த்தாள் விதரணை.
வருண் ஆதிபனிடம் புகைப்படக் கருவியை நீட்ட… அவனோ சற்று முன் நடந்தது ஒன்றுமேயில்லை என்பது போலச் மிகச் சுவாதீனமாக, வருண் நீட்டிய கருவியை வாங்கி, அதிலிருந்த புகைப்படங்களை விதரணைக்குக் காட்டியவாறே ஒவ்வொன்றாகத் தட்டிப் பார்க்கத் தொடங்கினான்.
அதுவரை அதிர்விலிருந்த அவள் விழிகள், மெதுவாக இடம்மாறி ஏற்றமாதிபன் காட்டிய திரையின் திசைக்குத் தாவின. தாவிய விழிகள் மீண்டும் பேரதிர்ச்சியைத் தத்தெடுத்துக் கொண்டன!
விதரணையால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இத்தனை படங்களை வருண் எப்போது எடுத்தான்? ஒவ்வொரு புகைப்படமும் ஒரு புதிய புதிய கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தது.
அவள் இடை பற்றி, முன்பக்கமாக அணைத்து, நாடியைப் பற்றித் தூக்கி, அவளைக் காதலுடன் பார்த்து, அப்படியே நெற்றியில் ஒரு முத்தம்… நாசியில் ஒரு முத்தம்… அப்படியே கீழிறங்கி அவள் மேலுதட்டில்…
அதற்கு மேல் அந்தப் புகைப்படங்களைப் பார்க்க முடியாமல் சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, ஈரடி தள்ளிப் போய் நின்றுவிட்டாள் விதரணை.
அப்போதுதான் உதடுகளில் தெரிந்த தளர்ச்சியும், அதன் வீக்கமும், அதில் ஏற்பட்ட ஒருவித நமநமப்பும் அவளுக்குப் புரியத் தொடங்க… தன் மென் விரல்களால் உதடுகளைத் தொட்டுப் பார்த்தாள் விதரணை. அவளால் நடந்ததை நம்பவே முடியவில்லை. ஏற்றமாதிபன் அவளை நிஜமாகவே முத்தமிட்டானா? அதை வேறு புகைப்படம் எடுத்திருக்கிறானே! அதுவும் எத்தனை அழகாக அந்தப் புகைப்படங்கள் வந்திருக்கின்றன!
இவள் நம்ப முடியாத திகைப்புடன் நின்றிருக்க, ஏற்றமாதிபனோ தன் விழிகளை அப்புுகைப்படங்களிலிருந்து மீளப்பெற முடியாதவனாக, ஆசையுடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தேவதைதான் எத்தனை அழகாக இருக்கிறாள்? அவன் கண்ணே பட்டுவிடும் போல இருக்கிறதே! சுற்றிலும் அழகான ரோஜா மலர்கள் பூத்திருக்க, அதன் மத்தியில் அவளும் ஒரு கொத்து மலராக அவன் கரங்களில் வீழ்ந்து கிடக்க… காதலும் காமமும் பின்னிப் பிணையும் வகையில், அவள் உதடுகளை அவன் முழுதாகத் தன் வசம் கவர்ந்திழுத்திருக்கும் அந்த அழகை எப்படித்தான் வர்ணிப்பது?
அவன் என்ன கம்பனா, செந்தமிழ் சொட்டச் சொட்ட கவி பூண?? இல்லை கண்ணதாசனா அந்தக் காதலைக் கவியாய் வடித்தெடுக்க? சாதாரண மனுஷன்… என்னவென்று அதன் அழகை வர்ணிப்பான்?
அந்தப் புகைப்படம் அவன் இதயத்தின் ஒவ்வொரு அணுவிலும் தாமரை மலர்களைப் பூக்க வைக்க, தன்னை மறந்து அந்தப் புகைப்படத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தான் ஆதிபன். மீண்டும் அவளை இழுத்து, அவள் உதடுகளைத் தன் சொந்தமாக்கும் வெறி அவனையும் மீறிப் பிறக்க… திரும்பி அவளைப் பார்த்தான்.
அவளோ தொலைந்து போன குழந்தையைப் போல, உதடுகளை விரல்களால் மூடியவாறு எங்கோ வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள். அதைக் கண்டவனுக்குப் பெருமூச்சுதான் வந்தது.
‘அவள் இருக்கும் நிலையில், இந்தப் புகைப்படம் எடுக்க விட்டதே பெரிது…’ – நினைத்தவனாக வருணைப் பார்த்தவன்,
“அனைத்தும் நன்றாக இருக்கிறது வருண். நாம் இதையே பயன்படுத்தலாம்…” என்று சொல்ல, தலையாட்டிவிட்டு வெளியே சென்றான் வருண்.
அவன் சென்றதும் திரும்பித் தன் மனைவியைப் பார்த்த ஏற்றமாதிபன்,
“விதுரனைப் பற்றி இனிக் கவலைப்படாதே விதரணை. இனி அவனை உன்னிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது… நமக்குத் திருமணமானதற்கான ஆதாரங்கள், புகைப்படங்கள் அனைத்தும் அனுப்ப வேண்டியவர்களுக்கு இன்றே அனுப்பிவிடுவேன்…” அவன் சொல்ல, ஏனோ இனம் புரியாத வலி அவளுக்குள்.
இதற்காக மட்டும்தான் இத்தனை தீவிரமாக முத்தமிட்டானா? காதல் சொட்டப் பார்த்தானா? இடைபற்றி அணைத்து அவளை உருகச் செய்தானா? அவனுக்கு எதுவும் தோன்றவில்லையா? எப்படித் தோன்றும்? அவன்தான் அந்த ஜஸ்மினைக் காதலித்தானே… இவள் மிது அவனுக்க எப்படிக் காதல் வரும்…? நினைக்கும் போதே நெஞ்சம் அடைத்தது அவளுக்கு.
சிரமப்பட்டுத் தன் உணர்வுகளை அடக்கியவள், “ம்…” என்று தலையை ஆட்டிவிட்டு, ஆவனைப் பார்த்து, “ந… நன்றி…” என்றாள் உளமாற. இவனோ தலையைச் சரித்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் என்ன கண்டாளோ, அவசரமாகத் தலையைக் குனிந்து கொண்டவள்,
“உங்கள் மீது இன்னும் அதே கோபம், வெறுப்பு இருக்கவே செய்கிறது. ஆனால், அதையும் மீறி என் தம்பி எனக்கே எனக்காகக் கிடைக்க நீங்கள் உதவி செய்திருக்கிறீர்கள். இந்த உதவியை நான் எப்போதும் மறக்க மாட்டேன்…” என்றாள் விழிகள் கலங்க.
பின் அவனை ஏறிட்டுப் பார்த்து,
“உங்களுக்கு எப்போது விவாகரத்து வேண்டும் என்றாலும் அதைக் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன் ஏற்றன். என் சுயநலத்திற்காகப் பிடிக்காத பந்தத்தில் உங்களைக் கட்டிவைப்பது நியாயமுமில்லை…” என்றவள், அதற்கு மேல் அவனைப் பார்க்கும் சக்தியின்றி வீட்டிற்குள் நுழைய… பேன்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு அவள் சென்ற திசையையே வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் ஏற்றமாதிபன்.
“விவாகரத்தா… அவனிடமிருந்தா… இந்த ஜென்மத்தில் அதற்கு வாய்ப்பேயில்லை…” என்று நினைத்தவனுக்கு ஆழ்ந்த மூச்சொன்று வெளிப்பட்டது.
இதோ இப்போது கூட அவளிடம் தன் காதலைச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அவள் நம்ப மாட்டாள்; ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். அப்படியே அவள் புரிந்துகொண்டாலும் அவளிருக்கும் மனநிலையில் ‘காலம் கடந்து காட்டும் காதல் தேவையில்லை’ என்று முகத்தில் அடித்தாற்போலச் சொன்னாலும் சொல்வாள். இன்று காலை கூட, அவளைக் காதலிப்பதாகச் சொன்னால் நம்புவாயா என்று கேட்டதற்கு, கொஞ்சம் கூட யோசிக்காமல் இல்லை என்றவள்தானே… அப்படியிருக்கிற போது, இப்போது சொன்னதும் நம்பிவிடுவாளா என்ன? தவிர அவன் காதலை அவள் புரிந்து கொள்வதற்கான சூழ்நிலையோ, இடமோ இதுவல்ல.
இப்போது விதுரனின் பிரச்சனைக்குத் தீர்வு கண்டாலும், இனி, அவள் பெற்றோரைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்து அவள் முன் நிறுத்த வேண்டும். அவள் மனது அமைதியடைய வேண்டும். அதன் பிறகுதான் அவன் காதலை அவளுக்குப் புரிய வைக்க முடியும். அதுவும் அவன் சொல்வதை விட, அவளாக உணரவேண்டும். அவன் கண்களைப் பார்த்து அவள் மீது அவனுக்கிருக்கும் அப்பழுக்கற்ற காதலை அவள் கண்டுகொள்ளவேண்டும்… அப்போதுதான் எதற்காக அவளை விட்டு விலகி நின்றான் என்பதை அவன் சொல்லும்போது அதை சந்தேகமின்றி நம்பி ஏற்றுக்கொள்வாள்.
அதுவரைக்கும் அவன் காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.
உலைக்களமாகக் கொதித்த மனத்தை அடக்கும் வழி தெரியாமல், வேகமாக வீட்டிற்குள் நுழைந்த விதரணை, தன் அறைநோக்கிச் செல்வதற்காக படிநோக்கி நகர, அவள் வேகத்தைக் கண்டு வியந்த மதிவதனி,
“விதுமா… எங்கே போகிறாய்?” வேகமாக மாடியில் ஏறிய தன் புதிய மருமகளைப் பார்த்துக் கேட்டார் மதிவதனி.
அவளோ தயங்கிவிட்டு, “அது… கொஞ்சம் உடல் சோர்வாக இருக்கிறது… அதுதான் தூங்கலாம் என்று…” என இழுக்க,
“நீங்கள் இருவரும் இன்னும் பாலும் பழமும் சாப்பிடவில்லையே… இருமா… முதலில் ஆதிபனை அழைக்கிறேன். அதற்குப் பிறகு போகலாம்…” என்றவர், அபிநயாவைப் பார்த்து, “ஆதிபனை அழைத்து வருகிறாயாமா..?” என்றார் அன்பாக.
“இதோ போகிறேன் பெரியம்மா…” என்றவள் அண்ணனைத் தேடிச் செல்ல, இவளோ கரங்களைப் பிசைந்தாள். அதுதான் திருமணம் முடிந்துவிட்டதே, இனிப் பாலும் பழமும் எதற்குச் சாப்பிட வேண்டும்? தயங்கியவாறு நிற்க, ஏற்றமாதிபனை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தாள் அபிநயா. அவனோ ‘என்ன?’ என்பது போல் தாயைப் பார்க்க,
“திருமணம் தான் அவசரமாக முடிந்துவிட்டது. குறைந்தது சடங்கு சம்பிரதாயங்களாவது எங்கள் விருப்பப்படி நடக்கட்டுமே…” என்று அவர் சொல்ல, ஏற்றமாதிபனால் அதை மறுக்க முடியவில்லை. அவன் விருப்பத்திற்கு உடனே திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டார்கள். குறைந்தது இதையாவது அவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிடலாமே.
“சரிமா… நான் என்ன செய்ய வேண்டும்?” தாயின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டவனாக ஏற்றமாதிபன் கேட்க, பளிச்சென்று சிரித்த மதிவதனி,
“முதலில் நீ உட்கார்…” என்று மலர்ந்த முகத்துடன் சொன்னவர், பின் திரும்பி விதரணையைப் பார்த்து, “நீயும் ஆதிபன் பக்கத்தில் உட்காருமா…” என்றார் மகிழ்வோடு.
விதரணை தயக்கத்தோடு ஏற்றமாதிபனைப் பார்க்க, அவனோ எதுவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அபிநயாதான்,
“அதுதான் பெரியம்மா சொல்கிறார்களே… வந்து உட்கார் விது…” என்றவள் தன் தோழியை இழுத்து வந்து ஏற்றமாதிபனுக்குப் பக்கத்தில், அதுவும் நெருக்கமாக அமர்த்த, இல்லை தள்ளிவிட, இவளோ பொத்தென்று அவனை உரசியவாறு அவனருகே அமர்ந்துவிட்டாள். பின் பதறியவளாகத் தயக்கத்தோடு விலகி அமர முயல, அருகே நின்றிருந்த அபிநயா,
“ப்ச்… நெருக்கமாக அமர்ந்து கொள் விது… அவர் இனி உன் கணவன்..” என்று கிண்டலாகச் சொல்ல விதரணைக்கு எரிச்சல்தான் வந்தது. இவள் அவஸ்தை புரியாமல் பேசுகிறாளே. கேபம் வர, தன் தோழியை முறைக்க முயன்ற நேரம், மதிவதனி தேனோடு கலந்த பாலும், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட வாழைப்பழமும் அடங்கிய ஒரு வெள்ளிக்கிண்ணத்தை ஏந்தியவாறு அவர்களின் முன்னால் வந்து நின்றார்.
புன்னகை மாறாமல், அந்தக் கிண்ணத்தை அவளிடம் நீட்டி, “கண்ணம்மா, இந்தக் கரண்டியில் பாலும் பழமும் எடுத்து ஆதிபனுக்கு ஊட்டிவிடுமா… அப்போதுதான் உங்கள் வாழ்க்கையும் பாலும் பழமும் போல இனிமையாக சுவைக்கும்” என்றார் கனிவோடு.
அவளோ கொஞ்சம் வெறுப்போடுதான் அந்தக் கிண்ணத்தையும் ஏற்றமாதிபனையும் பார்த்தாள். முறைப்படி நடந்த திருமணமாக இருந்திருந்தால் இது சுவைக்குமோ என்னவோ… ஆனால் தேவைகருதி நடந்த திருமணமாயிற்றே, இதில் சுவைக்க என்ன இருக்கிறது? எரிச்சலுடன் நீட்டிய கிண்ணத்தை வாங்கப் பிடிக்காமல் அப்படியே அமர்ந்திருக்க, மதிவதனியின் முகம் வாடிப்போயிற்று.
அதைக் கண்டுகொண்ட ஏற்றமாதிபன் நிதானமாக விதரணையைப் பார்த்தான். பின் என்ன நினைத்தானோ, தாயின் கரத்திலிருந்த கிண்ணத்தை வாங்கியவன், அதை விதரணையின் கையில் திணிக்க, திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள் விதரணை.
“அம்மா நீண்ட நேரமாக நீட்டிக்கொண்டேயிருந்தார்கள்…” என்றவன், அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கிண்ணத்திலிருந்த கரண்டியால், பாலையும் பழத்தையும் அள்ளி எடுத்து அவள் வாயருகே கொண்டு செல்ல, அதை வாங்காமல் தயக்கத்துடன் ஏற்றமாதிபனைப் பார்த்தாள் விதரணை. அவனோ ‘வாங்கு’ என்பது போலச் சைகை செய்ய, அதற்கு மேல் ஏனோ அவளால் மறுக்க முடியவில்லை. சிரமப்பட்டு வாயைத் திறந்து அவன் நீட்டிய பாலையும் பழத்தையும் வாங்கியவளுக்கு மீண்டும் கண்கள் கலங்கத் தொடங்கியிருந்தன. ஆனாலும் சிரமப்பட்டுத் தன் கண்ணீரை அடக்கிக்கொண்டவளாக முகத்தைத் திருப்ப முயல,
“ஆதிபா… மூன்று வாட்டி கொடுக்க வேண்டும் கண்ணா…” என்றார் மதிவதனி மகிழ்வோடு. ‘யார் முதலில் கொடுத்தால் என்ன, வாழ்க்கை இனிமையாய்த் தொடங்க இந்தப் பாலும் பழமும் சாப்பிட்டால் சரிதான்’ என்ற எண்ணத்தோடு அவர் பார்த்திருக்க, விதரணையும் வேறு வழியில்லாமல் அவன் ஊட்ட ஊட்ட வாங்கித் தின்றாள்.
அடுத்து அவள் வலது கரத்தைப் பற்றி, அதில் தன் கரத்திலிருந்த கரண்டியைத் திணித்தவன், கரண்டியை ஏந்திய அவள் கரத்தைப் பற்றிக் கிண்ணத்திலிருந்த பாலையும் பழத்தையும் அள்ளி எடுத்துத் தன் வாயில் வைத்துச் சுவைக்க, ஏனோ அவன் செயலில் முகம் சிவந்து போனாள் விதரணை. அதுவும் அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்துச் சிரிக்க, சங்கடத்தில் தவித்துப் போனவளாய், அவசரமாக அவனிடமிருந்து தன் கரத்தை விலக்க முயன்றவள் முடியாமல் தடுமாற, மூன்றாம் வாய் வைக்கும் போது, கரண்டியிலிருந்து பாலும் பழமும் அவன் சட்டையிலும் வேட்டியிலும் மொத்தமாய்க் கொட்டிவிட்டிருந்தது.
பதறிவிட்டாள் விதரணை. சங்கடத்தோடு அவனைப் பார்த்தவள்,
“சா… சாரி… நான்… வேண்டுமென்று…” என்று தடுமாற, அவனோ மூன்றாவது வாயை மீண்டும் அவள் கரம் கொண்டே அள்ளித் தன் வாயில் திணித்துவிட்டு, அவள் கரத்திலிருந்த கிண்ணத்தை வாங்கித் தாயிடம் ஒப்படைத்தான்.
“இப்போது மகிழ்ச்சியாமா?” என்றான் தாயைப் பார்த்து. அவருக்கும் கண்கள் கலங்கித்தான் போனது. ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்ட, புன்னகைத்தவன் எழுந்து தன் வேட்டி சட்டையைக் காட்டி, “இதை மாற்றிவிட்டு வருகிறேன்மா…” என்று சொல்ல,
“அதை பிறகு மாற்றலாம்பா… முதலில் இருவரும் வந்து அமுதுண்ணுங்கள். திருமணம் ஆனதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் சாப்பாடு, இன்பதுன்பங்கள் அனைத்திலும் இணைபிரியாமல் இருப்போம் என்று காட்டும் சடங்கு… வாருங்கள்.. வந்து சாப்பிடுங்கள்… நீங்கள் இருவரும் சாப்பிடாமல் புகைப்படம் எடுக்க வெளியே சென்றுவிட்டீர்கள். அதனால் நாங்கள் யாரும் இன்னும் சாப்பிடவில்லை…” என்றவர் அபிநயாவைப் பார்த்து, “எல்லோரையும் வரச்சொல்லுமா… சேர்ந்தே சாப்பிடலாம்…” என்றார். பின்னர் திரும்பி வித்யாதரைப் பார்த்து, “விதுரனையும் அழைத்துக்கொண்டு வாருங்கள்… சாப்பிடலாம்…” என்றதும், அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைவரும் சாப்பாட்டு மேசையை நிறைத்திருந்தார்கள்.
இதில் அபிநயா மிகக் கவனமாக ஏற்றமாதிபனின் அருகே விதரணையை அமரவைத்திருக்க, வேறு வழியில்லாமல் அவனை நெருக்கியடித்தே அமர்ந்திருந்தளர் விதரணை.
ஏற்றமாதிபன் ஆனந்தகுமாரோடும், அமலனின் பெற்றோருடனும் பேசியவாறே சாப்பிடப் போக,
“டேய்… கொஞ்சம் பொறுடா…” என்று அவனைத் தடுத்த மதிவதனி, “விதுமா… ஆதிபனுக்கு ஊட்டிவிடுடா…” என்றார் இனிமையாக.
அத்தனை பேருக்கு முன்பாக மறுப்பது நாகரிகமில்லையே! தவிர பாலும் பழமும் கொடுக்கத் தயங்கியபோது அவள் கரத்தைப் பற்றிப் பலவந்தமாக உண்டானே. அப்படி ஏதும் செய்துவிடுவானோ என்கிற பயத்தோடு, உண்ண மனமின்றிச் சும்மா அளைந்துகொண்டிருந்த தன் உணவைக் கூட்டி அவன் வாய்க்கு எடுத்து வர, அந்தக் கள்வனோ, அவள் கரத்தை இடது கரத்தால் அழுந்தப் பற்றி, அவள் விரல்களையும் சேர்த்து வாய்க்குள் திணித்துவிட்டிருந்தான்.
மற்றவர்களுக்கு எப்படியோ… விதரணை கூச்சத்திலும் சங்கடத்திலும் சிவந்து போனாள். அதுவும் அவனுடைய வெம்மையான உதடுகளும், அவன் நாவும் தன் விரல்களில் பட்டதும், அவளையும் மீறி உடல் சிலிர்த்துப் போக, பெண்மை தன்னையறியாமல் மணம் வீச ஒரு கணம் தடுமாறியவள், மறுகணம் பதற்றத்தோடு தன் கரத்தை இழுத்து எடுக்க முயன்றாள். ஆனால் அவனோ, அவளுடைய விரல்களில் ஒற்றைப் பருக்கை கூட இல்லாமல் மொத்தமாய் நாவால் வருடி வழித்துத் துடைத்து உண்டுவிட்டு அவள் கரத்தை விட, இவள்தான் தன் பெரிய விழிகளை விரித்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி நின்றிருந்தாள்.
“ஆதிபா… இப்போ நீ ஊட்டிவிடுப்பா…” தாய் சொல்ல, உதட்டின் ஓரம் மெல்லிய புன்னகையுடன் உணவை அள்ளி அவள் வாய்க்குள் திணிக்க வர, அவளோ வாங்க மறுத்து உதடுகள் இறுக அமர்ந்திருக்க, அவனோ தன் விரல்களை அவள் உதட்டில் முட்டி ‘வாங்கு’ என்று விழிகளால் சைகை செய்தான்.
மறுகணம் வாயைத் திறந்தவள், அவன் ஊட்டியதும் யாரும் அறியாமல் ‘நறுக்’ என்று அவன் விரலைச் சற்றுப் பலமாகக் கடித்துவிட, அவனோ அவள் செயலில், குறும்பாய் புன்னகைத்தவாறு விரல்களை விலக்கும் எண்ணம் இல்லாமல் அவளையே பார்த்திருந்தான். அவனுடைய அந்த செயலில் குற்ற உணர்ச்சி கொண்டவளாகத் தயக்கத்தோடு, தன் பல்லில் சிக்கியிருந்த அவன் விரல்களை விடுவித்துவிட்டு அவனை ஒரு மாதிரிப் பார்க்க,
“அடுத்த வாயை ஊட்டிவிடுமா…” என்றார் மதிவதனி.
அதிர்ந்தவள், “நான்… ஏற்கனவே… ஊ… ஊட்டிவிட்டேனே….” என்று தயங்க,
“ம்.. மூன்று முறை ஊட்ட வேண்டும்… ஊட்டிவிடுமா…” என்றதும், வேறு வழியில்லாமல் அள்ளி அவனுக்கு ஊட்டிவிட்டாள். இப்போதும் முன்பு செய்தது போலவே அவள் விரல்களைச் சப்புக்கொட்டி சுவைத்தவாறே உணவை எடுத்துக்கொண்டவன், மெதுவாய் வலிக்காமல் விரல்களைக் கடித்து விடுவிக்க, மீண்டும் குப்புற விழுந்து எழுந்தாள் விதரணை. அடுத்து ஏற்றமாதிபன் ஊட்டிவிட, இந்த முறை எதுவும் செய்யாமல் அவள் வாங்கி உண்ண, மூன்றாம் முறையும் அவளைத் தடுமாற வைத்தே அவள் விரல்களை விடுவித்தான் ஏற்றமாதிபன்.
அவன் செயலில் கூச்சமும் தவிப்புமாகப் பார்வையைத் திருப்ப, விழிகளில் விழுந்தான் விதுரன். நெஞ்சம் அடைத்துப் போனது அவளுக்கு. அவன் சாப்பிடாமல் உணவை அளைந்துகொண்டிருந்தான்.
‘எப்படி மறந்தோம்? பெற்றவர்களைத் தொலைத்துவிட்டு அநாதையாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மறந்து அவனுடைய செயலில் தன்னிலை கெட்டிருக்கிறாளே… எத்தனை பெரிய அநியாயம்!’ நினைத்தவளுக்கு நெஞ்சம் முட்டிக்கொண்டு வந்தது; தொண்டை அடைத்தது. ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்தது போல மனம் குற்ற உணர்ச்சியில் துடிக்க, இப்போது ஏற்றமாதிபன் கடைசி உணவுக் கவளத்தை அவள் வாயை நோக்கி நீட்ட, திரும்பி அவனைப் பார்த்து வெறித்தாள் விதரணை.
அமர்ந்திருக்கும் இடமெல்லாம் முட்களைப் போட்டது போலத் துடித்தவள், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல், தன்னை நோக்கி உணவு நீட்டியவனின் கரத்தைத் தட்டிவிட்டு, தன் முன்னாலிருந்த உணவுத்தட்டை இழுத்து விசிறியடித்துவிட்டு…
“லீவ் மீ அலோன்…” என்கிற சீறலும் அழுகையுடனும் எழுந்தவள், அதற்கு மேல் யாருடைய முகத்தையும் பார்க்கப் பிடிக்காமல் படிகளில் ஏறித் தன் அறைக்குள் நுழைந்து, அறைக் கதவை அடித்துச் சாற்றிக்கொண்டாள்.
(23) தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள்.…
(22) “ஐயோ... அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால்…
(21) அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில்…
(20) எத்தனை நேரமாக அந்த முத்தம் நீடித்ததோ, விழிகள் மூடத் தன் உயிர் குழைய, ஆன்மா கரைய அவன் கொடுத்த…
(19) மெதுவாகத் தூக்கம் கலைந்து விழிகளைத் திறந்தான் ஏற்றமாதிபன். கோடை காலம் என்பதால் காலை ஐந்து மணிக்கே வெளிச்சம் பரவ…
(18) அந்தச் சிலிர்ப்போடு அவன் அவளை ஏறிட, முத்தமிட்ட கையோடு அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் கன்னத்தோடு…