(22)
“ஐயோ… அவன் அந்த ஆவணங்களைக் கொண்டு தப்பிச் செல்கிறானே!” அவள் பதறியவளாக அவன் கரத்தை உதறிவிட்டு அவன் பின்னால் ஓடத் தொடங்க, சட்டென்று அவள் கரத்தை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன்.
அவளோ கலக்கமும் தவிப்புமாகப் பார்க்க, ஏற்றமாதிபன் நிதானமாக விதரணையை ஏறிட்டுவிட்டு, அவள் மீது அதிகப் பலம் போடாமல் எழுந்தான். அவனது வயிற்றிலிருந்து உதிரம் கொட்ட, அப்போதுதான் அவன் இடையிலிருந்து வழியும் குருதியைக் கண்டாள் விதரணை. அதைக் கண்டு துடித்துப்போனாள்.
“கடவுளே… உதிரம் கொட்டுதே!” துடித்தவளாக நடுங்கும் கரங்களால் காயத்தின் மீது கை வைக்கப் போக, சட்டென்று அவள் கரத்தைப் பற்றித் தடுத்தவன்,
“ஹே… பயப்படும் அளவுக்கு ஒன்றும் அது பெரிய காயமில்லை பம்கின்… லேசான காயம்தான்…” என்றான்.
கலங்கிய விழிகளோடு அவனை ஏறிட்டவள்,
“சின்னக் காயமா? பாருங்கள் எப்படி இரத்தம் கொட்டுது… கடவுளே…!” தன் கழுத்தில் வட்டமாகத் தொங்கியிருந்த அவன் ஷர்ட்டை அவிழ்த்து எடுத்தவள், அவனை அணைத்தாற்போல ஷர்ட்டை எடுத்து வந்து அவன் காயத்தில் பலமாகக் கட்ட முயன்றாள்.
ஆனால், அவளுடைய பலவீனத்தாலும் நடுங்கிய கரத்தினாலும், ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட காயத்தின் வலியாலும் அவளால் இறுக்கமாகக் கட்டுப் போட முடியவில்லை. அழுகையுடன் அவனைப் பார்த்தவள்,
“ரொ… ரொம்ப வ… வலிக்குதா கண்ணா?” என்று தன்னை மறந்து கேட்க, அவள் தன்னை விளித்த அழகில் அவனுடைய புருவங்கள் ஆச்சரியத்தில் மேலெழுந்தன. அது அவளுடைய தாய் தன் கணவனை அழைக்கும் முறை அல்லவா?
அவனையும் மீறி அவனது உதட்டில் புன்னகை மலர, அவள் முடிச்சிட்ட பகுதியைத் தன் கரத்தால் பற்றி, பலம் முழுவதையு திரட்டி இறுக்கமாய் ஒரு முடிச்சிட்டு இரத்தப் போக்கைத் தடுக்க, அதைக் கண்டவள் உயிர்போகும் வலியை உணர்ந்தவளாக அவனைப் பார்த்தாள்.
“ஏற்றன்… நீங்கள்.. நீங்களும் என் அம்மா அப்பா மாதிரி என்னை விட்டுப் போய்விடமாட்டீர்களே…” நெஞ்சம் வெடித்து இரத்தம் கசிவது போன்ற வலியில், பயத்தோடு அவனிடம் கேட்க, குனிந்து தன்னவளைப் பார்த்தான் ஏற்றமாதிபன்.
இரத்தம் தோய்ந்த கரத்தை அவன் தலையில் வைத்து அழுத்திக் கொடுத்தவன்,
“ஹே… ஐ ஆம் ஓகே… பயப்படும் அளவுக்குப் பெரிய காயமில்லை, நம்பு…” என்றவனுக்கு உயிர் போக வலிக்கவே செய்தது. ஆனால் அதை அவள் முன்னால் காட்ட முடியாது. காட்டினால் அவள் இன்னும் பயந்து போவாள். திடமாகவே நிற்க, அவளோ இன்னும் இரத்தம் கசியும் அவன் காயத்தைப் பார்த்துக் கலக்கத்தோடு,
“எ… எனக்கு பயமாக இருக்கிறதே. உங்களுக்கு ஒன்றென்றால்… அதை.. அதை என்னால்…” முடிக்கமுடியாமல் திணற, சட்டென்ற அவள் தோளைச் சுற்றித் தன் ஒற்றைக் கரத்தைப் போட்டு தன்னை நிலைநிறுத்தியவன், அவளைத் தன்னோடு இறுக்கி,
“ஹே… பம்கின்… ஐ பிராமிஸ் யு… எனக்கு ஒன்றும் ஆகாது. உன் தந்தை தாயைக் கொன்ற குற்றவாளிகளை கூண்டோடு அழிக்கும் வரை எனக்கு ஒன்றுமாகாது… இவ்வளவு ஏன்.. எங்கள் பேரப்பிள்ளைகளின் திருமணத்தைப் பார்க்காமல் எனக்கு எதுவும் ஆகாது. நம்பு…” என்று உறுதியாகச் சொன்னவன், அவளை இழுத்துக்கொண்டு ஒரு பக்கமாகச் சென்றான். அங்கே ஒரு பக்கத்தில் மறைவாகச் சொருகப்பட்டிருந்த அந்தக் கோப்பை வெளியே எடுத்தான்.
அதைப் பார்த்து வியந்தவள், புரியாமல் அவனை ஏறிட, அவளிடமிருந்து தன் கரத்தை இழுத்து எடுத்துவிட்டு, அவள் ஷர்ட்டை மேலே தூக்கிவிட்டு அவள் வயிற்றுக்குள் அந்தக் கோப்பைச் செருகியவன், மீண்டும் ஷர்ட்டைச் சரியாக்கிவிட்டு, அவள் தோள் மீது கைப்பிடித்து இழுத்துச் செல்ல,
“இது என்ன கோப்பு? மை காட்! இதுதான் நாங்கள் எடுத்த கோப்பா? அப்போ அவர்கள் எடுத்துச் சென்றது?” அவள் வியந்து கேட்க, தன்னவளைப் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரித்தவன், “போலி…” என்றான் கிண்டலாக.
ஒரு பக்கம் தன்னவனை நினைத்து வியப்பு எழுந்தாலும், அந்த இக்கட்டான நேரத்திலும் அவன் சமயோசித புத்தியோடு நடந்திருக்கிறானே என்கிற பெருமிதமும் அவளுக்கு எழவே செய்தது. அந்த நேரம் தொலைவில் காவலரின் வண்டிச் சத்தம் கேட்க, இருவரின் உடலும் விறைத்தது.
“மை காட்… காவல்துறை வந்துவிட்டது…” விதரணை பதற, அதற்கு மேல் அங்கே தங்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டவர்களாக, முடிந்தவரை விரைவாகப் படிகளில் ஏறி மேலே வந்தார்கள்.
ஏற்றமாதிபனுக்கோ அதீத ரத்தப்போக்கால் கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது. நேற்று துப்பாக்கிக் குண்டால் ஏற்பட்ட காயத்திற்குப் போட்டிருந்த தையல்களில் ஒரு சிலது சண்டையிட்ட வேகத்தில் அறுந்துபோயிருந்தது. அதிலிருந்து வேறு இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. போதாதற்கு இடையில் வேறு கத்திகுத்து! பற்களைக் கடித்தவாறு மெல்லிய தள்ளாட்டத்தோடு அவள் பின்னே நடக்க, இருவரும் ‘பேக்யார்டின்’ சங்கிலி வேலியின் அருகே வந்தார்கள்.
இப்போதும் ஏற்றமாதிபன் தன் கரங்களைக் கோர்த்து அவள் ஏறுவதற்குத் துணை நிற்க முயன்றான். ஆனால், விதரணை இப்போது அவனது நிலையை உணர்ந்து, அவன் உதவியை ஏற்காமல் தானே அந்த ஆறடி வேலியில் தாவி ஏறி மறுபக்கம் பாய்ந்து இறங்குவதற்கு முயன்றாள். ஏறும்போது சற்றுத் தள்ளாட, உடனே தன் தோள் கொடுத்து உதவினான் ஏற்றமாதிபன். அவன் தோளில் கால் பதித்து ஏறி மறு பக்கம் குதித்ததும், ஏற்றமாதிபனும் தன் காயத்தை சட்டை செய்யாமல் முன்போலவே எம்பிப் பாய்ந்து, மறுபக்கம் காட்டின் சரிவில் விழுந்தான். விழுந்தவன் அதற்கு மேல் எழ முடியாமல் வேலியோரம் அமர்ந்துவிட்டான்.
அவனது நிலை கண்டு பதறிவிட்டாள் விதரணை.
“ஏற்றன்… என்னாச்சு..?” கலக்கத்துடன் கேட்டவாறு அவனை நெருங்க,
“ஐ ஆம் ஓகே பம்கின்… ஜெஸ்ட் டயர்ட்… நீ போ விதரணை… நான் பின்னாடியே வருகிறேன்…” சமாளிப்பாகச் சொன்னவனுக்கு, சத்தியமாக அந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே முடியவில்லை.
அதே நேரம், வீட்டின் பின்பக்கமாக இரு காவலர்கள் வந்து சுத்திவரப் பார்க்க, சட்டென்று விதரணையும், ஏற்றமாதிபனும் தரையில் பதுங்கிக்கொள்ள, காவலர்களோ, அங்கும் இங்கும் பார்த்தவாறு வேலியோரம் நகரத் தொடங்கினர்.
“ஏற்றன்… இந்தச் சரிவில் கீழே இறங்கிவிட்டால், காவலர்களின் பார்வையிலிருந்து தப்பிவிடலாம்… சீக்கிரம் வாருங்கள்…” இவள் அவனது கரத்தைப் பற்றி அவசரப் படுத்த, அதற்கு மேல் தாமதிக்காமல் எழ முயன்றவன் அப்போதுதான் பார்த்தான், அவன் விழுந்த இடத்தில் இரத்தம் சிந்திக்கிடப்பதை.
“ஷிட்…” முனங்கியவன், சுத்த வரப் பார்க்க, அங்கும் இங்குமாக சிறிய கற்கள் இருக்க காயம் படாத கரத்தால் அதை அள்ளி எடுத்தவன் சிந்திய இரத்தத்தின் மீது காவலர்களின் கவனத்தைக் கவராத வகையில், வைத்தவன், அப்படியே படுத்தவாக்கில் அசைந்து கீழிறங்கி விதரணையோடு மரங்களுக்க மத்தியில் மறைந்துகொண்டான் ஏற்றமாதிபன்.
மீண்டும் அந்தப் பள்ளத்தில் இறங்கி, ஆற்றைக் கடந்து, சமதரையில் ஏறி, ரவீன் நடைபாதையை அடைந்து வெளியே வந்து வாகனத்தை நெருங்கியபோது, ஏற்றமாதிபனுக்குள் இருந்த அத்தனை சக்தியும் வடிந்து சென்றிருந்தது.
தனக்கிருக்கும் நிலையில் வண்டியோட்ட முடியாது என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து காரின் சாவியை எடுத்தவன், “உன்னால் வண்டி ஓட்ட முடியுமா பேபி?” என்றான் மிகுந்த சோர்வோடு.
அதற்கான காரணம் அவளுக்குத் தெரியாதா என்ன?
“ம்… நான் ஓட்டுகிறேன்…” என்றவள் அவனைப் பத்திரமாக வண்டியில் ஏற்ற, அவனோ சோர்வோடும் கடுமையான வலியோடும் முகம் சுருங்க இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
அவனுடைய அந்த நிலையைத் தன் கண்முன்னே கண்டு அவளுக்குக் கண்கள் கலங்கினாலும், இது பயந்து அழும் நேரமில்லை என்பதை உணர்ந்துகொண்டவளாக, வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவள், காரை மிக வேகமாகச் சீறவிட்டு,
“கண்ணா… நாம் மருத்துவமனை போகலாம்…” இவள் பதட்டத்தோடு சொல்ல, மறுப்பாகத் தலையசைத்தவன்,
“நோ… வீட்டிற்குப் போ… ஜாஸ்மினை வரச் சொன்னால் அவள் வந்து தையல் போடுவாள்..” வலியில் முகம் சுருங்க அவன் சொல்ல, அவனைக் கொபமாக முறைத்தாள் விதரணை.
“பைத்தியம் போல உளறாதீர்கள் ஏற்றன்… நிறைய இரத்தம் போகிறது. காயம் வேறு பெரிது போலத் தோன்றுகிறது… சொன்னால் கேளுங்கள்… நாம் மருத்துவமனையே…” அவள் முடிக்கவில்லை,
“ஸ்டாப் இட் விதரணை… மருத்துவமனைக்குப் போவது சிக்கல்… சொன்னதைச் செய்..” என்று கோபமும் அழுத்தமாகவும் சொல்லிவிட்டு விழிகளை, மூட, இவளோ தன்னவனைப் பார்த்து முறைத்துவிட்டு வண்டியின் வேகத்தைக் கூட்டினாள்.
ஏற்றமாதிபன் மெல்ல இமைகளைத் திறந்தபோது, வெறிச்சோடிய அந்த வெண்மை நிறச் சுவர்கள் அவன் பார்வையில் மங்கலாகப் பதிந்து போக, அவனுடைய நாசியைத் துளைத்த தீவிரமான ஆன்டிசெப்டிக் மற்றும் மருந்துகளின் நெடி, அவனை மீண்டும் நினைவுலகிற்கு இழுத்துவர முயன்றது.
அந்த நெடியே சொன்னது அவன் மருத்துவமனையில் இருப்பதை.
“xxxx விதரணை…” என்று கோபமாக முனங்கியவன், தன் வலது கையை லேசாக அசைக்க முயன்றபோது, மணிக்கட்டுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த சிரையைக் (IV) கண்டு எரிச்சலானான் ஏற்றமாதிபன்.
அந்த எரிச்சலோடு எழ முயன்றவனின் தோளிலும், இடுப்புப் பகுதியிலும் சுளிர் என்கிற வலி ஏற்பட, பற்களைக் கடித்தவாறு ஐ.வி போடாத கரத்தால் தொட்டுப் பார்த்தான். கத்திக் குத்துக் காயத்திற்குத் தையல் போடப்பட்டு, இறுக்கமான வெள்ளை மருத்துவத் துண்டால் கட்டப்பட்டிருக்க,
“யா… குட்…” என்று முணுங்கியவன், விழிகளை அழுந்த மூடி அந்த வலியைப் பொறுத்துக்கொள்ள முயன்றான்.
வீட்டிற்கு அழைத்துச் செல்லச் சொன்னால் எங்கே அழைத்து வந்திருக்கிறாள் என்று மனதிற்குள் அவளைத் திட்டியவாறு தன் பார்வையைத் திருப்பி அறைக்குள் துழாவினான். அந்த அறையின் ஜன்னல் ஓரமாக இருந்த சோபாவில் விதரணை அமர்ந்து, தலையைப் பின்னே சரித்து விழிகளை மூடியிருந்தவள் இவனின் அசைவை உணர்ந்தவளாகச் சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அங்கே தன்னவன் எழுந்துவிட்டதைக் கண்டதும் முகம் மலர, விழிகள் கலங்க,
“கண்ணா… ஆர் யு ஓகே?” என்றவாறு அவனை வேகமாக நெருங்கினாள்.
அவனோ அவளை எரிச்சலுடன் பார்த்து,
“என்னை எதற்கு இங்கே அழைத்து வந்தாய்? வீட்டிற்குத்தானே கூட்டிப் போகச் சொன்னேன்?” என்று கோபமாகக் கேட்டான் ஏற்றமாதிபன்.
ஆனால் அவளோ அவனுடைய தலையை மெதுவாகப் பற்றித் தூக்கித் தன் மார்போடு அணைத்து, தலையணையைச் சரியாக்கிவிட்டு மீண்டும் அவன் தலையைத் தலையணையில் வைத்துவிட்டு அவனை நிதானமாகப் பார்த்தாள். அவனோ அவளைத்தான் முறைத்துக்கொண்டிருந்தான்.
“உன்னிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறேன் விதரணை… என்னை ஏன் இங்கே அழைத்து வந்தாய்… காட்… இந்த செய்தி என் குழுவுக்குத் தெரிந்தால் என்னாகும் தெரியுமா. அதுவும் என் மேலதிகாரிக்குத் தெரிந்தால் இன்னொரு மாதம் ஓய்விலிரு என்று அனுப்பிவிடுவார். இதில் இந்தக் கத்திக்குத்து எப்படியானது என்கிற விசாரணை வேறு வரும். அதற்கு யார் முகம் கொடுப்பது?” என்று அவளிடமே கேட்க, அவளோ அவனைத் தலை சரித்துப் பார்த்து முறைத்தாள்.
அவளது பார்வையில் இருந்த கோபமும் எரிச்சலும் அவனது பேச்சை அப்படியே தடுத்து நிறுத்த,
“ப்ச்… ஏன்மா இங்கே கூட்டி வந்தாய்…” என்றான் இப்போது கொஞ்சம் இறங்கிய குரலில். அவளோ அவனை முறைத்துவிட்டு,
“விசாரணை வருமா? வரட்டும் பெரிய விசாரணையே வரட்டும்… மேலதிகாரி திட்டுவாரா? திட்டட்டும். வண்டி வண்டியாகத் திட்டட்டும். வேலை போகுமா போகட்டும்…. ஐ டோன்ட் கெயர் எ டாம்?” என்று சீறியவள், தன் இடுப்பில் இரு கரங்களையும் ஊன்றி ஆவேசத்தோடு அவனைப் பார்த்து,
“உங்கள் இடையை ஒன்றும் கத்தி கீறிவிட்டுப் போகவில்லை. அது உள்ளே இறங்கியிருக்கிறது… அதுவும் மூன்றரை அங்குலம் இறங்கியிருக்கிறது. நான் சொல்வது உங்கள் காதுக்குக் கேட்கிறதா? மூன்றரை அங்குலம்… உங்களுடைய நல்ல நேரம்… அது உள்ளே இருந்த எந்தவொரு முக்கிய நரம்பையும் தொடவில்லை. தொட்டிருந்தால் என்னாகியிருக்கும் தெரியுமா? இந்த விதரணை இந்நேரம் அழுது அழுது பைத்தியமாகியிருப்பாள்!” சீறியவாறு சொன்னவளின் குரல் இப்போது தழுதழுத்துப் போயிருந்தது.
ஆனாலும் தன் பலவீனத்தைக் காட்டப் பிடிக்காமல்,
“உள்ளே பாய்ந்த கத்தியால் சதை கிழிந்து, தசை நார்கள் அறுந்து போயிருந்தன. எவ்வளவு இரத்தம் தெரியுமா. உங்களை இருக்கையிலிருந்து வெளியே இழுத்து எடுத்த பொது, இருக்கை முழுக்க இரத்தம் அப்பிக் கிடந்தது. உங்களுக்கு சுயநினைவு வேறு இல்லை… மருத்துவர்கள் இரத்தப் போக்கை நிறுத்தி, உள்ளேயும் வெளியேயுமாகச் சேர்த்து மொத்தம் இருபத்தெட்டுத் தையல்கள் போட்டிருக்கிறார்கள். நான் சொல்வது கேட்கிறதா? இருபத்தெட்டுத் தையல்கள்!” என்று அந்த எண்ணிக்கையை ஆத்திரத்தோடு விரல் நீட்டிச் சொல்ல, அவனுக்கோ அவளுடைய கோபத்தைக் கண்டு சிரிப்புத்தான் வந்தது. ஆனாலும் அடக்கிக்கொ்ணடான். சிரிப்பை காட்டினால் அவளுக்கு இன்னும் கோபம் வரும். ஆனாலும் தனக்காக அவள் கலங்கவதும் துடிப்பதும் கோபப்படுவதும் கூடப் பார்ப்பதற்கு இதமாக நன்றாகத்தான் இருந்தது அவனுக்கு.
“இந்த லட்சணத்தில், உங்களை அப்படியே என் வண்டியில் போட்டுவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தால், இந்நேரம் உங்களின் நிலை என்னவாகியிருக்கும் என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா? வழியிலேயே இரத்தப் போக்கு அதிகமாகி, சுயநினைவை இழந்துவிட்டீர்கள். அப்படியிருக்கிபோது, எக்கேடும் கெட்டுப் போ என்று உங்களை எப்படி வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியும். உங்களுக்கே தெரியும், இந்த உலகத்தில் நான் அதிகம் ஆசைப்பட்டது உங்கைளத்தான் என்று. இதில் கோபம் வேறு கொள்கறீர்களா? உங்களை உங்களின் மேலதிகாரி திட்டினாலும் சரி, இல்லை ஆர்மியே இங்கே வந்தாலும் பரவாயில்லை.. எனக்கு உங்களின் உயிர்தான் முக்கியம், புரிந்ததா?”
அவள் மூச்சு வாங்கப் பேசி முடிக்க, ஏற்றமாதிபனோ அவளது அந்த ஆவேசத்தைக் கண்டு தன்னை மறந்து உதடுகள் விரித்துச் சிரித்துவிட்டான்.
அதைக் கண்டவளுக்கு இன்னும் ஆத்திரம் பன்மடங்கானது. இங்கே ஒருத்தி உயிர்வதையில் தவிக்கிறாள். அவனுக்கு சிரிப்பு வருகிறதா.
“என் வலி உங்களுக்கு நகைப்பாக இருக்கிறதா?” ஆத்திரமாகக் கேட்டாலும் அவள் கண்களில் தெரிந்த பயத்தையும் வேதனையையும் கண்டு,
“ஹே… மை பேபி கேர்ள்… பிளீஸ்… நான் அதற்காகச் சிரிக்கவில்லை. என் மீது உனக்கு இத்தனை அக்கறையா என்று நினைத்துச் சந்தோஷத்தில் சிரித்தேன். பிளீஸ்டா… அதுமட்டுமில்லை, நீ கோபிக்கும் போது அத்தனை அழகாக இருந்தாய் தெரியுமா?” அவன் சொல்ல, அவன் சொன்னதற்காகவே ஓங்கி அவன் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தவள், மறுகணம் அவன் கழுத்தைக் கட்டி அவன் அருகே அமர்ந்து அவன் மார்பில் விழுந்து விசும்பிவிட்டாள் விதரணை.
இதுவரை அவளுக்குள் அழுத்தியிருந்த பாரம் அனைத்தும் கரைந்து போகும் அளவுக்குத் துடித்தாள் அவள்.
“ஓ மை ஏஞ்சல்… பிளீஸ்… அழாதே… மை டார்லிங் பம்கின்… இங்கே பார்டா… அதுதான் எனக்கு ஒன்றும் ஆகவில்லையே. என்னுடைய உயிர் உன் கையில் இருக்கும் போது இப்படி அழலாமா… பேபி கேர்ள்… அவுச்!” திடீரென்று அவன் வலிப்பது போல அலற, பயத்தில் விலகியவள்,
“ஐயோ… என்னாச்சு? எங்கே வலிக்குது? டாக்டரை வரச் சொல்லவா?” என்று பதறினாள்.
இப்போது பற்கள் தெரியச் சிரித்தான் ஏற்றமாதிபன். அவன் தன்னோடு விளையாடியிருக்கிறான் என்று புரிய, அவன் மார்பில் ஓங்கி ஒரு தட்டுத் தட்டியவள் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். பின்னர், தன் ஷர்ட்டுக்குள் கைவிட்டு அந்த ஆவணக் கோப்பை எடுத்து அவனிடம் நீட்ட, அதை ஆவலாக வாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன்.
பின் அதை ஒவ்வொரு பக்கமாகத் திருப்பத் தொடங்க, அவனுடைய முகத்தின் நிறம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. அதைக் கண்ட விதரணை,
“என்னாச்சு ஏற்றன்… அதில் அப்படி என்ன இருக்கு?” என்று கேட்டவாறு அவனருகே அமர்ந்து அந்தக் கோப்பைப் பார்க்கத் தொடங்கினாள்.
நிமிர்ந்து விதரணையை ஏறிட்டவன்,
“உன் அப்பா… கடவுளுக்கு நிகர் விதரணை…” என்றான் மென்மையாக.
தன்னவன் சொன்னதைக் கேட்டு வியந்தவள், அப்படி என்ன இருக்கிறது என்று தானும் அவனோடு ஒட்டி நின்றவாறு பார்க்கத் தொடங்கினாள். அடுத்த நொடி, அவள் முகத்திலும் வர்ணிக்க முடியாத அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. முகம் வெளுத்துப் போனது; தேகமே நடுங்கியது. அப்படி என்னதான் அந்தக் கோப்பில் இருந்தது?

