November 25, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 2-21

(21)

அந்த ஆவணங்கள் அவன் கையில் சிக்கிய மறுகணம், இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் தழுவிப் பின் அந்த ஆவணத்தில் நிலைத்தன. அது எந்த மாதிரியான அபாயகரமான ரகசியத்தைச் சுமந்திருக்கிறதோ என இருவருக்குமே இதயம் கட்டுப்பாட்டை மீறித் துடித்தது.

முக்கியமான ஆவணங்கள் கிடைத்த மகிழ்ச்சியில் ஏற்றமாதிபன் கீழே வேகமாக இறங்க முயன்றபோது, அவன் ஏறி நின்ற ஏணி நிலைதடுமாறிச் சரியத் தொடங்கியது. அவன் எவ்வளவு முயன்றும் தன்னைச் சமநிலைப்படுத்த முடியாமல் கீழே விழத் தொடங்கினான். தனக்குக் கீழே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த விதரணையைக் கண்டதும்,

“ஏய்… தள்ளு!” என்று அவன் எச்சரிப்பதற்குள் ஏணியிலிருந்து கீழே குதித்துவிட்டிருந்தான் ஏற்றமாதிபன்.

குதித்தவன் சரியாக விதரணையின் மீது விழ, அவனுடைய எடையைத் தாங்கும் சக்தியில்லாமல் அவனைக் கட்டியணைத்தவாறே விதரணையும் கீழே சரிந்தாள். அவளுக்கு எங்கே அடிபட்டுவிடுமோ என்று அஞ்சி, தன்னை நிலைப்படுத்துவதற்குள்ளாக அவளது உடலின் மீது மொத்தமாக விழுந்துவிட்டிருந்தான் ஏற்றமாதிபன்.

“யு ஓகே?” என்று அவன் கேட்பதற்காக வாய் எடுத்த வினாடி, வெளியே ஒரு மெல்லிய சரசரப்புச் சத்தம் விதரணையின் காதில் விழ, அவளது தேகம் சட்டென்று இறுகிப் போனது. அவன் பேச வாயெடுத்த நேரம், கண்ணிமைக்கும் நொடியில் ஏற்றமாதிபனின் வாயைத் தன் உள்ளங்கையால் அழுத்தமாகப் பொத்திக்கொண்டவள், அவனை உற்றுப் பார்த்தாள். அவனோ புருவங்கள் சுருங்க அவளைப் பார்க்க, அவன் வாயைப் பொத்திய கரத்தை விலக்கித் தன் உதட்டில் வைத்து அவனைச் சத்தம் போடவேண்டாம் என்று சைகை செய்தவள், மீண்டும் உண்ணிப்பாக எதையோ கேட்டாாள். பின் ஏற்றமாதிபனைப் பார்த்துத் தன் காதைத் தொட்டுக் காட்டி, வெளிப்புறத்தைச் சுட்டிக்காட்ட, ஏற்றமாதிபனின் உடல் மறு கணம் எதிர்வினையாற்றத் தயார்நிலைக்கு மாறியது..

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிந்துகொண்டவனாக, உன்னிப்பாகக் காதுகளைத் தீட்டி, ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று அவதானித்தான்.

முதலில் அவனுக்கு எதுவும் கேட்கவில்லைதான். ஆனால், இன்னும் உன்னிப்பாக அவதானித்துக் கேட்க, கண்ணாடித் துகண்டுகளின் சரசரப்புச் சத்தம் அவன் காதுகளில் வந்து விழுந்தது. உடனே புரிந்து கொண்டான் யாரோ பின்வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைகிறார்கள் என்று.

அவன் முன்னமே இதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். நிச்சயமாக இந்த வீட்டை நோட்டமிட்டவாறு எதிரிகள் நின்றிருப்பார்கள் என்று யூகித்திருக்க வேண்டும். ஒரு மாதமான நிலையில் எதிரிகள் சோர்ந்திருப்பார்கள் என்று எண்ணி, அலட்சியமாக உள்ளே நுழைந்தது மிகப்பெரும் தவறுதான்! காவலர்களின் கண்காணிப்புக் கேமராவைத் தாண்டி எதிரிகளும் எங்கோ ஒரு ரகசியமாகக் கேமராவைப் பொருத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், இவர்கள் உள்ளே நுழைந்து அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும். எந்த நேரமும் காவல்துறை உள் நுழையலாம். முடிவு செய்தவன், எந்தவொரு சத்தமும் எழுப்பாமல் விதரணையை விட்டு மெதுவாக விலகியவன், தன் கரத்திலிருந்த ஆவணங்களை அப்படியே பேண்ட்டின் முன்பக்கமாகச் செருகி, தன் ஷர்ட்டை வெளியே எடுத்து அதை மறைத்தான். பின் விதரணையை இழுத்து எழுப்பி, தன் பின்னால் நிறுத்திவிட்டுப் பேண்ட்டின் பின்புறத்தில் செருகியிருந்த கைத்துப்பாக்கியை வெளியே எடுத்து, அதன் முனையில் ‘சைலன்சரை’ப் பொருத்திவிட்டுச், சத்தமில்லாமல் அதன் பாதுகாப்புப் பூட்டையும் திறந்துவிட்டு, அந்த அறையின் கதவை மூடுவதற்காக முன்னேறியபோது, படிகளிலிருந்து யாரோ ஒருவன் கீழே இறங்குவது தெரிந்தது.

உடனே விதரணையைச் சுவரோடு சேர்த்து அணைத்துத் தானும் சாய்ந்து கொண்டவனுக்கு, இப்போது இந்த ‘பர்னஸ்’ (Furnace) அறையிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பர்னசின் எரிவாயுவைக் கொண்டு வரும் பிரதான குழாயிலோ அல்லது பர்னஸின் கட்டுப்பாட்டு வால்விலோ ஏதேனும் ஒரு தோட்டா பாய்ந்தால் அவ்வளவுதான்! எரிவாயு கசிந்து, அத்தனை பேரும் பரலோகம் போவது நிச்சயம்.

முதலில் கீழே இறங்கி வரும் எதிரிகள் எதிர்வினையாற்றுவதற்கு முன்பாக அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டும்; இவளைப் பாதுகாப்பான ஓரிடத்தில் பதுங்கச் செய்ய வேண்டும் என்று யோசித்தவன், கதவின் இடுக்கினூடாக இறங்கி வரும் எதிரிகள் எத்தனை பேர் என்று பார்த்தான். கீழே வருவது ஒருவன்தான். அடையாளம் தெரியாதவாறு முகம் மூடப்பட்டிருந்தது; கையில் துப்பாக்கி இருந்தது. முதலில் அவன் படியை விட்டு இறங்கி உள்ளே வரட்டும் என மீண்டும் சுவரோடு சாய்ந்து நின்றவன், திரும்பி விதரணையைப் பார்த்தான். அவளோ அச்சத்தில் ஏற்றமாதிபனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்து லேசாகச் சிரித்தவன், சட்டென்று மறைவிடத்திலிருந்து துவக்கை நீட்டியவாறு வெளியே வர, அதை எதிர்பார்க்காத எதிரி சுதாரிப்பதற்குள், ஏற்றமாதிபனின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு கனகச்சிதமாக எதிரியின் நெற்றியில் பொட்டு வைத்திருந்தது.

இது கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டிருந்தது. மின்னாமல் முழங்காமல் தரையில் சரிந்தவனை, பான்டின் பின்பக்கமாகத் தன் துப்பாக்கியைச் செருகியவாறு  நெருங்கிய ஏற்றமாதிபன், எதிரியின் கரத்திலிருந்த துப்பாக்கியை எடுத்து, நொடிக்கும் குறைவான நேரத்தில் அதை அங்கம் அங்கமாக்ப பிரித்து சத்தம் எழுப்பாமல் ஓரமாகப் போட்டவன், தன் ஷேர்ட்டைக் கழட்டியவாறு மீண்டும் ஃபேர்னஸ் அறை நோக்கி வந்தான்.

விதரணையோ பயத்தோடு பல்லி போல சுவரோடு ஒட்டியவாறு நின்றிருக்க, அவளை நெருங்கியவன் தன் கையிலிருந்த ஷேர்ட்டால் அவளுடையமூக்கைச் சுற்றிக் கட்டிவிட்டு, கண்ணிமைக்கும் நொடியில், பர்னஸின் கட்டுப்பாட்டு வால்வை (Gas valve) ஒரு இழுவை இழுக்க, அது சீற்றத்தோடு எரிவாயுவைக் கக்கியவாறு அங்கும் இங்கும் நடனமாடியது. சற்று நேரம் எரிவாயுவைப் பரவ விட்டவன், மீண்டும் அந்த வால்வை அதனிடத்தில் பொருத்திவிட்டு, விதரணையை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான்.

அங்கே மிகக் கனமான இரும்பினாலான வேலைசெய்யும் மேசை  இருப்பதைக் கண்டவன்,விதரணையைப் பற்றி இழுத்துக் கொண்டு அதை நோக்கி விரைந்தான். சட்டென்று அந்த இரும்பு மேஜையைச் சரித்தவன், விதரணையின் இடைபற்றித் தூக்கிக் மேசையின் நான்கு கால்களுக்கு இடையில், இறக்கிய நேரம் படபடவென்று படிகளிலிருந்து நான்கைந்து பேர் கீழே இறங்கிவரும் காலடிச் சத்தம் கேட்டது.

நல்லவேளை, நிலவறையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் தரைக்கீழ் ஜன்னல் இருந்தது. அதன் வெளிச்சம் தவிர, வேறு எந்த வெளிச்சமும் நிலவறையில் இல்லாததால் இருட்டடித்துக் கிடந்தது இவர்களுக்கு வசதியாக இருந்தது.

திரும்பி விதரணையைப் பார்த்து,

“என்ன நடந்தாலும் வெளியே வராதே, புரிந்ததா…” என்று இரகசியக் குரலில் சொன்னவன், சுற்றுமுற்றுப் பார்த்துவிட்டு, அந்த நிலவறையைத் தாங்கி நிற்கும் இரும்புத் தூணின் பின்னால் ஒரு குத்துக்கரணம் அடித்து மறைந்து கொண்டான். விதரணையோ அவன் என்ன செய்கிறான் என்று எதுவும் புரியாத கலக்கத்தோடு விழிகளை மூடி அப்படியே முழங்காலிட்டு அமர்ந்து பதுங்கிக் கிடந்தாள்.

இங்கே இரும்புத் தூண் அருகே பதுங்கிக் கிடந்தவனின் மனதில் ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டிருந்தது. எதிரிகளைப் பர்னஸ் பக்கம் திரும்ப விடக் கூடாது; சின்னதாய் ஒரு விபத்து நடந்தாலும் போதும், தப்பக் கூட வழியிருக்காது!

முடிவு செய்தவன், அந்த நிலவறையை அவசரமாக நோட்டமிட்டான். அது முழுதாகக் கட்டி முடிக்கப்படாத நிலவறை. அதில் ஒரு பக்கமாகத் தேவையற்ற பழைய பொருட்கள் போடப்பட்டிருந்தன. அதற்கு முன்பாக, அறிவழகன் மற்றும் அமுதாவைக் கட்டி வைத்திருந்த இருக்கை… அதன் கீழே அவர்களை அவிழ்த்த கயிறு பாம்பெனச் சுருண்டு கிடந்தது. அதனருகே ஒரு சிகரட் லைட்டர். மறுபக்கம் ஏதேதோ தாள்கள் தரையில் சிதறிக் கிடந்தன. அவை அறிவழகனின் மருத்துவ ரீதியான ஆய்வுக் கட்டுரைகளாக இருக்கலாம். நடுவில் மேலே இருந்து கீழே இறங்குவதற்கான படிக்கட்டுகள். பெரிதாக மறைய இடமில்லை. ஆனால், ஒரு பக்கமாகப் போடப்பட்டிருந்த பழைய மரச்சாமான்கள் படிக்கட்டுகளின் எதிர்ப்புறம் இருக்க, அதை நோக்கிச் செல்லலாம் என்று அவன் முடிவு செய்த நேரம், எதிரிகள் கடைசிப் படிகளை நெருங்கிவிட்டிருந்தனர்.

திரும்பி விதரணையை ஏறிட்டான். அவளோ மேசைக்குள் மறைந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி, அவளுக்கு ஒன்றும் ஆகக் கூடாது! முடிவு செய்தவன், வயிற்றில் சொருகியிருந்த அந்த ஆவணம் அடங்கிய கரிய நிறக் கோப்பை வெளியே எடுத்தான். எதிரிகளின் ஆவேசத்தைத் தற்காலிகமாக நிறுத்தப் போவது அந்த ஆவணங்கள்தான். ஆழ மூச்செடுத்து அவன் நகரத் தொடங்கிய நேரம், கீழே தரையில் இறந்து கிடந்த தங்கள் நண்பனைக் கண்டு அதிர்ந்தவர்கள், துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தவாறு தங்கள் நண்பனைச் சுட்டவனைத் தேட, அவர்களுக்குப் பின்னால் கரத்தில் அந்த ஆவணத்தை உயர்த்திப் பிடித்தவாறு கம்பீரமாக நின்றிருந்தான் ஏற்றமாதிபன்.

“ஐ ஆம் ஹியர் …” அவன் சொல்ல, சட்டென்று அந்த ஐந்து எதிரிகளும் துப்பாக்கியை அவனை நோக்கிப் பிடித்தவாறு திரும்பி நின்றார்கள்.

ஏற்றமாதிபன் சட்டென்று அந்த ஆவணம் அடங்கிய கோப்பைத் தன் மார்புக்கு நேராகப் பிடித்தவாறு, மறுகரத்தில் லைட்டரை ஏந்தியவாறு நின்றிருக்க, ஒருத்தன் ஆவேசத்தோடு அவனைச் சுடுவதற்குத் தன் துப்பாக்கியை உயர்த்திய நேரம், பின்னால் நின்றிருந்தவன் சட்டென்று அவன் கையைத் தடுத்து நிறுத்தினான்.

துப்பாக்கியை ஏந்தியிருந்தவன், கோபத்தோடு ‘ஏன் தடுத்தாய்?’ என்பது போலத் தன் நண்பனைப் பார்க்க, அவனோ மூக்கைச் சுருக்கிக் காற்றின் மணத்தை உணர்ந்தவாறு சீன மொழியில் எதையோ சொல்ல, அப்போதுதான்  அனைவரும் அந்த எரிவாயுவின்  நெடியை உணர்ந்தார்கள். அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்க்க, புன்னகைத்தவன்,

“துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு சீறினாலும் போதும், அனைவரும் ‘பூம்…’” என்று சொல்ல, ஐவரும் அச்சத்தில் திருதிருவென்று விழிக்க, ஏற்றமாதிபனோ அவர்களைப் பார்த்து, தன் கரத்திலிருந்த லைட்டரை உயர்த்திக் காட்டி,

“இறப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை… ஆனால் உங்களுக்கு?” என்று கேட்டவாறு லைட்டரை ஆன் செய்வது போலப் பாசாங்கு செய்ய, பதறிப்போனார்கள் அனைவரும்.

அவர்கள் உடனே மறுப்பாகத் தலையசைத்து வேண்டாம் என்று சைகை  செய்து ஏற்றமாதிபனைப் பரிதாபமாகப் பார்க்க, அதைத் தலை சாய்த்துப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

“குட்… அப்படியென்றால் ஜென்டில்மேன் அக்ரிமெண்ட் ஒன்று போடலாமா? மேன் டு மேன் (Man to man). நீங்கள் ஐவரும் ஒரு பக்கம்… நான் ஒருத்தன். யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கு இந்தக் கோப்பு உரிமையாகும். என்ன சொல்கிறீர்கள்?” என்று அவன் கேட்க, இப்போது ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்தார்கள்.

அவர்களில் ஒருவன், “நீ ஒருத்தன் எங்கள் ஐவரோடும் மோதப்போகிறாயா?” என்று ஏளனமாகக் கேட்டுச் சிரிக்க,

“வை நாட்… முடியாதா?” என்றான் ஆதிபன் அப்பாவியாக.

“ஏய்… எங்களைப் பற்றி நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நாங்கள் யார் தெரியுமா?” என்று அவன் ஆத்திரத்தோடு கேட்க, இவனோ புருவங்களைச் சுருக்கி அவர்களைப் பார்த்தான். பின் அவர்களின் மணிக்கட்டுகளைப் பார்த்தான். அத்தனை பேரும் கையில் ஒரு குறிப்பிட்ட அடையாளக் காப்பு அணிந்திருந்தார்கள். அதைக் கண்டதும் மெதுவாகத் தலையசைத்து,

“ம்… தெரிகிறதே! நீங்கள் ‘டிரையாட்’ (Triads) கும்பல்தானே?” அவன் கேட்க, அவர்கள் ஐவரின் முகத்திலும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.

“உனக்கு… உனக்கு எப்படித் தெரியும்?” ஒருத்தன் தடுமாற,

“எப்படியோ தெரியும்… அதை விடு. நான் சொன்ன டீலுக்கு சம்மதமா?” அவன் கேட்டான்.

அதில் ஒருத்தன் ஆத்திரத்தோடு ஏற்றமாதிபனை நோக்கிப் பாய முயன்றான். அதைக் கண்ட ஏற்றமாதிபன், கரத்திலிருந்த லைட்டரை உயிர்ப்பிப்பது போல விரல்களை அசைக்க, காஸ் வெடித்துவிடுமோ என்ற பயத்தில் சட்டென்று தன் கோபத்தை அடக்கிக்கொண்டு இரண்டடி பின்னே வைத்தான் அவன்.

அவர்களில் ஒருவன் அந்த ஐவருக்கும் தலைவன் போல இருந்தான். அவன் சீன மொழியில், “நமக்கு அந்த ஆவணம்தான் மிக முக்கியம். அதை எப்படியாவது எடுத்துவிட வேண்டும்,” என்று தன் ஆட்களிடம் சொல்ல, அதைக் கேட்ட ஏற்றமாதிபன்,

“அதையேதான் நானும் சொல்கிறேன். இந்த ஆவணம் தேவை என்றால், நான் ஒருவன், நீங்கள் ஐவர். நேருக்கு நேர் மோதி வென்றவருக்கு இந்த ஆவணம்… என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர்களின் சீன மொழியிலேயே கேட்க, ஐவரும் அவனை நம்ப முடியாமல் பார்த்தார்கள்.

இவனுக்குத் தங்கள் மொழி தெரிந்ததில் அவர்களுக்கு வியப்புதான்! ஒருவேளை அவன் தங்கள் மொழியைப் பேசியதாலோ, இல்லை சீனர்கள் இயல்பாகவே தங்களின் பாரம்பரிய யுத்த நெறிகளை மதிப்பவர்கள் என்பதாலோ சற்று நேரம் யோசித்தான் அந்தத் தலைவன்.

சீன பாதாள உலகக் குழுக்களிடம், அதுவும் இந்த டிரையாட்களிடம் ஒரு பண்பு இருந்தது; அது, சொன்ன வாக்கைக் காப்பாற்றுவது. அவர்களுக்கு அந்த ஆவணம் தேவை, அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள்; அதே நேரம், கொடுத்த வாக்கையும் மீற மாட்டார்கள். அப்போதைய நிலையில் பர்னஸ் அறையில் துப்பாக்கியைப் பயன்படுத்துவது தற்கொலைக்குச் சமம். அதே நேரம், அந்த ஆவணங்களையும் சேதமில்லாமல் எடுக்க வேண்டும். இதற்கு வேறு வழியும் அவர்களுக்கு இருக்கவில்லை. எப்படிப் பார்த்தாலும் இவர்களில் ஐவர், அவன் ஒருவன். சுலபமாகவே வென்றுவிடலாம் என கணக்குப்போட்டான் தலைவன்.

அதனால் அந்தத் தலைவன் தன் பின்னால் நின்றிருந்தவர்களைப் பார்த்துத் தலையசைத்துவிட்டுத் தன் துப்பாக்கியைப் பேண்ட்டின் பின்புறம் செருக, மற்ற நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை உள்ளே செருகிக்கொண்டார்கள். ஆனால், அதே நேரம் ஆளுக்கொரு குறுங்கத்தியைக் கையில் எடுத்தார்கள்.

ஏற்றமாதிபனின் புருவங்கள் உயர்ந்தன. அவர்களின் கரங்களிலிருந்த கூரிய கத்திகளைப் பார்த்தபோது, தன்னுடைய யுத்தகலையின் (Martial Arts) வீரியம் என்ன என்று தானே பரிசீலித்துப் பார்க்க ஒரு வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவனாக,

“குட்… ஐ லைக் இட்…” என்றான் தன்னை மறந்து.

தொடர்ந்து, அந்தக் கோப்பை மீண்டும் வயிற்றுப் பக்கம் செருகிவிட்டு, லைட்டரை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டான். உள்ளங்கைகளை ஒன்றோடு ஒன்று பலமாகத் தட்டிவிட்டு, தாக்குதலுக்குத் தயார் என்பது போலக் கரங்களைத் தயார் நிலையில் வைத்தவாறு, நிலையாக நிற்க, அவன் ஆயுதம் எதையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டுகொண்ட எதிரி,

“நீ கத்தி எதுவும் எடுக்கவில்லை?”  என்ாற்ன.

“எனக்குத் தேவையில்லை…” என்றான் ஏற்றமாதிபன் அலட்சியமாக.

ஆனால், அந்தத் தலைவனோ மறுப்பாகத் தலையசைத்துவிட்டு, தன் இடையில் தொங்கிய குறுங்கத்தியை எடுத்து ஏற்றமாதிபனின் மார்பை நோக்கிப் பலமாக வீச, தன்னை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கத்தியின் பிடியை லாவகமாகப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன்! கொஞ்சம் பிசகியிருந்தாலும் அவனுடைய நெஞ்சுக்குழிக்குள் அந்தக் கத்தி ஊடுருவிச் சென்றிருக்கும்.

ஒரு கணம் அந்தத் தலைவனின் விழிகளில் ஆச்சரியம் வந்து மறைந்தது. ஏற்றமாதிபனிடம் இத்தகைய அசாத்திய வேகத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. தங்கள் எதிரி சாதாரணமானவன் அல்ல என்பது புரிந்து போக, திரும்பித் தன் சகாக்களைப் பார்த்துச் சீன மொழியில், “இவன் யுத்தகலைகளில் தேர்ந்த பயிற்சி பெற்றவன்… சாதாரணமாக நினைக்க வேண்டாம்…” என்றான்.

அதைக் கேட்ட நால்வரின் முகத்திலும் ஏளனப் புன்னகை மலர்ந்தது. எப்படிப் பார்த்தாலும் அவர்கள் ஐவர், இவன் ஒருவன்தானே!

தன்னை நோக்கிக் கத்தியை வீசிய அந்தத் தலைவனைப் பார்த்த ஏற்றமாதிபன், “இது எதற்கு எனக்குக் கொடுத்தாய்?” என்றான் வியப்போடு. அதற்கு அந்தத் தலைவனோ,

“நீ வெற்றுக் கரத்தோடு இருக்கும்போது நாங்கள் ஆயுதம் ஏந்துவது எப்படி தர்மமாகும்? இது என்னுடைய தனிப்பட்ட குறுங்கத்தி… எனக்கு மிகவும் பிடித்தது, இதுவரை யாருக்கும் கொடுத்ததில்லை. எங்கள் ஐவரோடும் தனியாகப் போட்டியிட நீ துணிந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. இதைப் பயன்படுத்திக் கொள்…” என்று அவன் சொல்ல, உதடுகளைப் பிதுக்கிப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

“ஆர் யு ஷூர்?” என்று அவன் கேட்க, அதற்குப் பதில் சொல்லாமல், தன் ஆட்களைப் பார்த்துச் சீன மொழியில், “அவனை வெட்டி வீழ்த்துங்கள்!” என்று கட்டளையிட்டான் தலைவன்.

அடுத்த நொடி, கையில் கத்திகளுடன் நின்றிருந்தவர்கள் ஏற்றமாதிபனை நோக்கிப் பாய்ந்தனர்!

இதே நேரம், மேஜையின் இடுக்கில் பதுங்கியிருந்த விதரணைக்கு அங்கே நடக்கும் காட்சியைக் கண்டதும் மூச்சே நின்றுவிடும் போலத் தோன்றியது. நடுக்கத்தோடு தன் வாயையும் மூக்கையும் சேர்த்துக் கட்டியிருந்த அவனது ஷர்ட்டைக் கழற்றிக் கழுத்தில் தொங்க விட்டவளுக்குக் கண்களில் கண்ணீர் பொங்கத் தொடங்கியது. ‘ஐந்து பேர்… அவர்களின் கைகளில் கூரிய கத்திகள்… இவன் தனி ஒருவன்! இவர்களை எப்படிச் சமாளிக்க முடியும்?’ தன் கணவனை எண்ணித் தவித்துப்போனாள்.

ஆனால், ஏற்றமாதிபனின் முகத்திலோ மருந்துக்கும் சலனமில்லை. தன் வேலைத் தளத்தில் நடக்கும் சண்டைப் பயிற்சிக்குத் தயாராவது போல, ஸ்லீவ்லெஸ் பனியனும் பேண்ட்டுமாக மிக லாவகமாகத் தன் இரு கால்களையும் சற்று அகட்டி வைத்து, ஒரு கரத்தில் கத்தியை ஏந்தி, உடலின் எடையைச் சமநிலைப்படுத்தி வரப்போகும் தாக்குதலுக்குத் தயாராக நின்றிருந்தான்.

அவர்களில் ஒருவன் சட்டென்று ஆவேசத்துடன் முன்னேறி ஆதிபனின் கழுத்தைக் குறிவைத்துத் தன் கத்தியை வீச, ஆதிபன் சற்றும் பதறாமல் தன் உடலை லேசாகப் பின்னோக்கி வளைத்தான். கத்தி அவனது முகத்திற்குச் சில அங்குல தூரத்தில் காற்றை வெட்டியவாறு நகர்ந்து சென்ற நொடி, மின்னல் விரைவில் அசைந்தது ஏற்றமாதிபனின் கரம்!

காற்றைக் கத்தியால் கிழித்துச் சென்ற எதிரியின் கரத்தைப் பற்றி, தன்னை நோக்கி இழுத்துத் தன் உடலோடு மோத வைத்தவன், மறுகரத்திலிருந்த கத்தியால் அவனுடைய கழுத்தின் பக்கவாட்டிலும் நெஞ்சுக்குழியிலும் சலனமின்றி இறக்கினான். இதைச் சற்றும் எதிர்பாராத எதிரிகள் ஒரு கணம் ஸ்தம்பித்துத்தான் போனார்கள்.

அவர்களும் ஏற்றமாதிபன் இத்தனை தேர்ச்சி பெற்றவனாக இருப்பான் என்று இம்மிகூட எதிர்பார்க்கவில்லை. கண்ணிமைக்கும் நொடியில் தங்கள் நண்பனை வீழ்த்தியதோடு, அதே வேகத்தோடு அடுத்த தாக்குதலுக்குத் தயாராக நின்றிருக்க, இத்தகைய மின்னல் வேகத்தை இதுவரை யாரிடமும் பார்த்திராத நிலையில், எஞ்சியிருந்தவர்களின் மனதுக்குள் ஒருவித நடுக்கம் ஊடுருவியது என்பது மட்டும் நிஜம்.

ஆனாலும், அமைதி காத்தால் அவர்கள் என்ன சீன பாதாள உலகக் கும்பல்? அடுத்த கணம் எஞ்சியவர்கள் ஒன்றாக ஏற்றமாதிபனை நோக்கிப் பாய, முன்னால் வந்த ஒருவன் என்ன ஏது என்பதை உணர்வதற்குள்ளாகவே ஏற்றமாதிபனின் கிடுக்குப் பிடியில் சிக்கியிருந்தான். சிக்கியவனை அவன் தூக்கி எறிந்த வேகத்தில், அங்கே அடுக்கியிருந்த பழைய மரச்சாமான்களின் மீது விழ, அதிலிருந்த கூரிய மேஜை முனை அவனுடைய நெறியில் பலமாக மோத, அப்படியே அவன் மயங்கிச் சரிந்தான்.

அதே நேரம் இன்னொருவன் ஏற்றமாதிபனின் மார்பைக் குறிவைத்தும், மற்ற இருவர் அவனது விலாப்பகுதியைக் குறிவைத்தும் கத்திகளை வீச, அதைக் கண்டு, நொடிப் பொழுதில் தரையில் விழுந்து, அந்தத் தாக்குதலில் இருந்து தப்பியவன், படுத்த நிலையிலேயே தன் இரு கால்களாலும் தனக்கு மிக அருகில் நின்றிருந்த இருவரின் கால்களையும் சுழற்றி உதைத்தான். அவர்கள் இருவரும் நிலைதடுமாறித் தரையில் விழ, தனக்கு அருகே விழுந்தவனின் கழுத்தை வளைத்துப் பிடித்துத் தன் உடலோடு இறுக்கியவன், ஏற்கெனவே இரத்தம் பார்த்த கத்தியால் அவன் நெஞ்சின் இதயப்பகுதிக்குள் பலமாகச் சொருகி ஒரு இழுப்பு இழுக்க, அவனோ அலறியவாறு அவனிடமிருந்து தன்னை மீட்கப் போராடினான். ஆனால் ஏற்றமாதிபன், அவனுடைய மூச்சு அடங்கும் வரை, கழுத்தை இறுக்கியவாறு கத்தியை விலக்காமல் வைத்திருந்தவன், அவன் உயிர் அடங்கியதும் அவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டு எழுந்து நின்றான் ஏற்றமாதிபன்.

அதே நேரம், சற்று முன் அவனால் தூக்கி எறியப்பட்டவனிடமிருந்து அசைவு வருவதை உணர்ந்த ஏற்றமாதிபன், கண்முன்னால் நின்றிருந்த கடைசி எதிரிகளையும் பார்த்தவாறு பின்னால் நகர்ந்து சென்றான். தளபாடங்களுக்கு மத்தியில் சிக்கிக் கிடந்தவனின் ஷர்ட்டைப் பற்றித் தூக்கித் தன் முன்னால் நிறுத்தித் தலைவனைப் பார்த்து,

“இந்தக் கத்தியை என்னிடம் கொடுத்து மிகப் பெரும் தவறு செய்துவிட்டாய்…” என்று சொன்னவாறே அவனது கழுத்தின் ஓரமாகக் கத்தியை நுழைத்து எடுத்தவன், கையோடு கத்தியை இடது கரத்திற்கு மாற்றி, இடது பக்கமாக நெஞ்சின் இதயத்தை நோக்கிக் கத்தியை ஏற்றிவிட்டிருந்தான். அவனுடைய அந்த ஆவேசமான செயலில், எஞ்சியிருந்த மற்ற இருவரின் முகத்திலும் பீதி அப்பட்டமாகத் தெரிந்தது!

இந்த நேரத்தில் ஏற்றமாதிபனின் தேகமோ இரத்தத்தில் குளித்திருந்தது. அவனுடைய வெண்ணிறப் பனியன் செந்நிறத்தில் நனைந்திருந்தது. அவன் வயிற்றிலிருந்த ஆவணக் கோப்பும் இரத்தத்தில் நனைந்து, உள்ளே இருந்த தாள்களின் நிறம் மாறத் தொடங்கியிருந்தது.

இப்போது ஏற்றமாதிபன் அடுத்த தாக்குதலுக்குத் தயாராக நின்றிருந்த நேரம், அந்தத் தலைவனுக்குத் தாங்கள் வெற்றிபெறுவது அத்தனை சாத்தியமல்ல என்று தெரிந்து போக, கொஞ்சம் கூட யோசிக்காமல், தன் முன்னால் நின்றிருந்த தன் நண்பனை சட்டென்று ஏற்றமாதிபனை நோக்கித் தள்ளிவிட, தள்ளிவிடப்பட்டவனிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்ற நேரம், அந்த எதிரியின் கத்தி மிகச் சரியாக   ஏற்றமாதிபனின் இடையைத் துளைத்துக்கொண்டு சென்றிருந்தது!

இதனால் சமநிலை தவறிய ஏற்றமாதிபன், தன்னைக் குத்தியவனின் கழுத்தைச் சுற்றிக் கரத்தைப் போட்டவாறு தரையில் விழ, அவனது இரும்புப் பிடியில் சிக்கியிருந்த எதிரியோ எப்படியாவது விலகிக் கொள்ளப் போராடினான். எங்கே… அது சுலபமாக விலகிக் கொள்ளும் பிடியா? இரும்புச் சங்கிலி கூட இத்தனை இறுக்கமாக இருக்காது!

திமிறிய எதிரியைக் கொல்லும் வெறியில், ஆதிபன் தன் கத்தியைத் தூக்க முயன்றான். அதைக் கண்டுகொண்ட தலைவன், கண்ணிமைக்கும் நொடியில் அவனை நெருங்கி, கத்தியைத் தாங்கியிருந்த அவனது கரத்தின் மீது தன் காலை வைத்து, அவனை அசையவிடாதபடி அழுத்திக் மிதித்தான்.

அதே நேரம், ஆதிபனின் பிடியிலிருந்த அந்த எதிரி தப்பிக்கக் கூட முடியாமல் அவனது கரங்களில் கிடந்து துடித்தான். ஏற்றமாதிபனின் கரத்திலிருந்த கத்தியைக் தன் கரத்தில் எடுத்துக்கொண்ட தலைவன், கட்டுக்கடங்கா ஆத்திரத்தோடு, ஓங்கி ஏற்றமாதிபனின் தலையில் தன் காலால் ஒரு உதை கொடுத்தான். அப்படியிருந்தும் ஏற்றமாதிபன் தன் பிடியை இளக்கினானில்லை. திரும்பி தலைவனை வெறித்துப் பார்த்தவாறு, இன்னும் தன் இறுக்கத்தைக் கூட்ட, இதற்கு மேலும் தாமதித்தால் தன் நண்பன் இறந்துவிடுவான் என்று அஞ்சியவனாகத், தன் நண்பனிடம், “விலகு…” என்று கத்தியவாறு கத்தியை ஓங்கினான்.

ஆதிபனின் பிடியிலிருந்த எதிரி சிரமப்பட்டுத் தன் உடலை விலக்க, இப்போது அப்பட்டமாகத் தெரிந்த ஏற்றமாதிபனின் மார்பைக் குறிவைத்துத் தலைவன் கத்தியை இறக்க முயன்ற நேரம்… “சுரீர்…!” என்ற கொடூர வலியில் அவனுக்குக் கண்களில் பொறி பறந்தது. தலையைப் பற்றியவாறு அலறிக்கொண்டு திரும்பிப் பார்த்தான் அந்தத் தலைவன்.

அங்கே காளியவதாரம் எடுத்த நிலையில், கையில் ஒரு மேஜையின் உடைந்த மரக்காலை ஏந்தியவாறு நின்றிருந்தாள் விதரணை! அதே நேரம் அந்தத் தலைவனின் தலையிலிருந்து இரத்தம் கொப்பளித்து ஊற்றெடுத்துக் கொட்டத் தொடங்கியது. கன்னத்தில் சூடாக ஏதோ வழிவதை உணர்ந்து தொட்டுப் பார்த்தான் அந்தத் தலைவன். அது உதிரம் என்று தெரிந்ததும் அவனுக்குத் தலை மேலும் சுற்றியது.

அதிர்ச்சியோடு அவன் குனிந்து பார்க்க, இன்னமும் ஏற்றமாதிபனின் இறுகிய பிடிக்குள் கிடந்தபடியே அவனது கூட்டாளி தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருந்தான். அதுகூடப் பரவாயில்லை… மரணத்தின் விளிம்பிலும் ஏற்றமாதிபனின் வெறித்த பார்வை தன் மீது நிலைத்திருப்பதை கண்டதும் அந்தத் தலைவனுக்கு ஈரக்குலையே நடுங்கிப்போனது! மறுபக்கம் திரும்பிப் பார்க்க, இன்னும் தன் நிலை மாறாமல் மேலும் அவன் மண்டையைப் பிளக்கத் தயாராகக் கட்டையோடு நின்றிருந்தாள் விதரணை.

ஒரு பெண் தன்னைத் தாக்குவதா? ஆத்திரத்தோடு விதரணையை நோக்கி அந்த எதிரி திரும்பிய அதே விநாடி, தன் பிடியில் கிடந்தவனின் தலையைப் பற்றி ஒரே திருப்புத் திருப்பியிருந்தான் ஏற்றமாதிபன்! அவன் திருப்பிய வேகத்தில் கழுத்து உடைந்த ‘சடக்’ என்ற சத்தமும், அந்த எதிரியின் ‘ஹக்’ என்கிற மரண ஓசையும் சேர்ந்து தலைவனின் காதில் விழ, அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்த தலைவனுக்கு ஈரக்குலையே நடுங்கிப் போனது.

நிச்சயமாக இதற்கு மேல் இவர்களோடு போராட முடியாது என்பதைப் புரிந்துகொண்ட தலைவனுக்கு, தப்பி ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அந்த நேரம் பார்த்துத்தான் அவன் கவனித்தான்; ஏற்றமாதிபன் ஆவேசமாகச் சண்டையிட்டதில் அவனுடைய வயிற்றில் செருகியிருந்த கரிய நிறக் கோப்பு இப்போது அநாதையாகத் தரையில் ஒரு ஓரமாக விழுந்து கிடந்தது!

இப்போது ஏற்றமாதிபன் காயத்தையும் மீறித் தரையிலிருந்து எழுவதைக் கண்டதும் அந்தத் தலைவன் பதறிப்போனான். அடுத்துத் தன் முறைதான் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்துபோனது. ஏற்கனவே தலையில் பலமாக அடிபட்டதில் கண்முன்னே உலகம் சுற்றத் தொடங்கியிருந்தது. அதிக நேரம் எதிர்த்துப் போராட முடியாது என்று அவனது புத்தி எச்சரிக்க, அவன் குனிந்து தரையில் கிடந்த கோப்பைப் பார்த்தான். அவர்கள் தேடிவந்த ஆவணம் இப்போது கண் முன்னே இருக்கிறது! இப்போதைக்கு இதனோடு தப்பிச் செல்வதுதான் புத்திசாலித்தனம் என்று முடிவு செய்தவன், கண்ணிமைக்கும் நொடியில் தன் முன்னால் நின்றிருந்த விதரணையைப் பற்றிப் பலமாக ஆதிபனின் பக்கமாகத் தள்ளிவிட்டு அதே வேகத்தில் தரையில் கிடந்த கோப்பை அள்ளிக்கொண்டு மின்னல் வேகத்தில் படிக்கட்டுகளை நோக்கி ஓடினான். தள்ளப்பட்ட விதரணை நேராக ஏற்றமாதிபனின் மீது மோத, இருவருமே தரையில் தொப்பென்று விழுந்தார்கள்.

அந்த எதிரி ஆவணத்துடன் படிகளில் ஏறித் தப்பித்துச் செல்வதைக் கண்டு அதிர்ந்த விதரணை, சட்டென்று ஏற்றமாதிபனைத் தள்ளிவிட்டு, எழுந்துஅவன் பின்னே துரத்திச் செல்ல முயன்றாள். ஆனால், ஏற்றமாதிபனோ அவளது கரத்தைப் பற்றி அவளைத் தடுத்துவிட்டு, எதிரி தப்பி ஓடிய திசையையே கூர்மையாகப் பார்த்தான்.

இத்தனை சிரமப்பட்டுக் கண்டுபிடித்த முக்கிய ஆவணம், கண்முன்னே எதிரியின் கைகளில் தப்பிச் செல்வதைக் கண்டு, அதிர்ந்து போய் விழிகள் கலங்க உறைந்து நின்றிருந்தாள் விதரணை.

What’s your Reaction?
+1
19
+1
0
+1
3
+1
1
+1
4
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!