October 19, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 20

(20)

டொரண்டோவின் புகழ்பெற்ற சென்ட் மைக்கேல் மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு வாயிலில், அந்த அவசர ஊர்தி பெரும் சத்தத்துடன் வந்து நின்றது. வண்டி முழுமையாக நிற்பதற்கு முன்பே, அதன் பின்னங்கதவுகள் கடுகதியில் திறந்து கொள்ள, அதிலிருந்து வேகமாக இறங்கினார் உதவி மருத்துவர்.

அங்கே ஏற்கனவே ஒரு மருத்துவக் குழு (ஜிக்ஷீணீuனீணீ ஜிமீணீனீ) தயார் நிலையில் காத்திருக்க, அவர்களிடம்

“பெண்… வயது இருபதுகளில்… மார்பிலும் முதுகிலும் கத்திக்குத்து! இரத்தப்போக்கு அதிகமாக உள்ளது. கார்டியாக் அரெஸ்ட்… அட்ரினலின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை இன்ட்யூபேஷன் (மிஸீtuதீணீtவீஷீஸீ)!” என்று உதவி மருத்துவர் உரக்க அறிவித்தவாறு, அவசர ஊர்தியில் ஸ்ட்ரச்சரில் இருந்த விதரணையை இழுத்து எடுக்க, ஏற்றமாதிபனும் விதரணையின் கையை விடாமல் அந்த வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.

உதவிமருத்துவர் சொன்ன தகவலைக் கேட்டதும் அங்கிருந்த மருத்துவர்கள் மின்னல் வேகத்தில் செயல்படத் தொடங்கினர். இறக்கப்பட்ட தள்ளுவண்டியைத் தங்கள் கரத்திற்கு மாற்றி, மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்குள் தள்ளிச் செல்ல, அவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஏற்றமாதிபனும் ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

அப்போது ஒரு செவிலியர், “சார்… எங்களுக்கு இடம் தேவை… தயவுசெய்து தள்ளி நில்லுங்கள்!” என்று அவனை மென்மையாக, அதே சமயம் உறுதியுடன் விலக்கிவிட்டு, அவன் நின்றிருந்த இடத்தில் தான் புகுந்துகொண்டு வண்டியைத் தள்ள… ஏற்றமாதிபன் அவர்களின் பின்னே வேகமாக நடக்கத் தொடங்கினான்.

அதே நேரம் இன்னொரு அவசர ஊர்தியில் இருந்து விதுரன் இறக்கப்பட்டு அவனை இன்னொரு திசைக்குத் தள்ளிச் செல்ல, இவனோ அது கூட உறைக்காமல் விதரணை பின்னால்தான் சென்றுகொண்டிருந்தான்.

“இவரது இரத்தம் என்ன வகை என்று தெரியுமா?” என்று ஒரு தாதி கத்த, பின்னால் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஏற்றமாதிபன் கொஞ்சமும் தாமதிக்காமல்,

“ஓ பாசிட்டிவ்…” என்றான் சத்தமாக.

அவனைத் திரும்பிப் பார்த்த அந்தத் தாதி,

“நல்லது… இவருக்கு ஏதாவது ஒவ்வாமை உண்டா?” என்றார் அடுத்து.

“அமோக்சிசிலின் ஒத்துக்கொள்ளாது. கைகளிலும் உடலிலும் அரிப்பு ஏற்படும். அதைத் தவிர இவள் மிகவும் ஆரோக்கியமானவள். எந்த மருந்து மாத்திரைகளும் எடுப்பதில்லை. மாதவிடாயின்போது மட்டும், வயிற்றுவலி காரணமாக மேஃபனாமிக் அமிலம் (விமீயீமீஸீணீனீவீநீ கிநீவீபீ) மட்டும் எடுத்துக் கொள்வாள். இதுவரை எந்த அறுவைச் சிகிச்சைக்கும் உட்பட்டதில்லை…” என்று அவளைப் பற்றிய தகவல்களைச் சொல்லிக் கொண்டே விதரணையின் பின்னே விரைந்து வந்தான் ஏற்றமாதிபன்.அங்கே விதரணையின் நிலையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட முக்கிய மருத்துவர், “எங்களுக்கு நேரமில்லை… இவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்… விரைவாகச் சிவப்பு மண்டலத்திற்கு (red zone) எடுத்துச் செல்லுங்கள்! உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டும். அறுவைச் சிகிச்சை நிபுணரை வரச் சொல்லுங்கள்!” என்று அவசரமாகக் கட்டளையிட்டவாறு, அருகே வந்த தாதி நீட்டிய கோப்பில் எதையெதையோ டிக் பண்ணி கையெழுத்திட்டுக் கொடுத்தவாறே, விதரணைக்கு முன்பாக முன்னேறி, மற்றொரு கதவின் வழியாக உள்ளே செல்ல… விதரணையைத் தள்ளிக்கொண்டு மருத்துவக் குழு கடுகதியில் அவர் பின்னே சென்றது. அதற்கு மேல் அவனால் உள்ளே நுழைய முடியாது. கதவு மூடிக்கொள்ள, உடலிலிருந்த பலமெல்லாம் வடிந்து சென்ற உணர்வில், அங்கிருந்த சுவரின் மீது சாய்ந்து தலையைப் பற்றியவாறு அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான் ஏற்றமாதிபன்.

இத்தனை நேரம் திடமாக இருந்தது போலத் தோன்றினாலும் அவனுடைய உடலும் உள்ளமும் பயத்தில் உதறவே செய்தது. நெஞ்சம் அடைத்தது. தொண்டை வறண்டது. அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. மூளை மரத்துப் போனவன் போல, தலையைப் பற்றியவாறு மூடிய கதவைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

இனி என்னவும் நடக்கலாம்… என்னவும்… எது நடந்தாலும் அதைத் தாங்கிக்கொள்ளும் சக்தி அவனுக்கு இருக்கிறதா என்றால், இம்மியும் இல்லை தான்… அதை நினைக்கும்போதே அவனது உடல் தூக்கிப் போட்டது. இல்லை… அவளுக்கு எதுவும் ஆகாது. அவள் என்னிடம் திரும்பி வந்துவிடுவாள்… நிச்சயமாக வந்துவிடுவாள் என்றுத் திரும்பத் திரும்பச் சொன்னவனின் முகமோ வலியில் இறுகிப் போனது.

அவன் சொன்னதையெல்லாம் அவளது காதுகள் உள்வாங்கிப் புத்திக்கு அனுப்பியிருக்குமா? அவளை அவன் காதலிப்பதை அவள் உணர்ந்திருப்பாளா…? உயிர் மீண்டு அவனிடம் திரும்ப வருவாளா…? மீண்டும் அவளை உயிரோடு பார்ப்போமா…? தவித்துத் துடித்தவனுக்கு, விதரணையைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை.

“ஓ… விதரணை…” என்று மனதுக்குள் கதறியவன், கரங்களை விலக்கித் தூக்கிப் பார்த்தான். காய்ந்து போன அவளுடைய இரத்தம்! அதை உணரும் போதே அக்கரங்களில் தீப்பற்றிக் கொண்டதுபோல எரிய, வீரம் செழித்த அந்த அதிகாரி, திக்குத் தெரியாத காட்டில் தொலைந்து போன சிறுவனைப் போலச் செய்வதறியாது மலங்க மலங்க விழித்தவாறு தன் கரங்களையே பார்த்திருந்தான். அவளுடைய இரத்தம்… நினைக்கும்போதே யாரோ இதயத்தைப் பிய்த்து எறிவது போல உணர்ந்தான் அவன்.

அப்போது அவனருகே வந்த தாதி ஒருவர், ஏற்றமாதிபனின் தோளில் கரம் பதிக்க, அதுவரை ஏதோ ஒரு உணர்விலிருந்தவன், திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்போதுதான் அவனுக்குச் சுயமே வந்தது. எத்தனை நேரமாக அப்படியே அமர்ந்து இருந்தான் என்று கூடத் தெரியவில்லை. ஏதோ இருட்டறையிலிருந்து வெளியே வந்தவன் போல, சட்டென்று எழுந்து நின்றவன் கன்னத்தில் ஈரம் உணர்ந்து அவசரமாக அதைத் துடைத்துவிட்டுத் தன் உணர்வுகளைக் கட்டுக்குக் கொண்டுவந்தவனாக, “சொ.. சொல்லுங்கள்…” என்றான்.

“நீங்கள் அந்தப் பெண்ணுக்கு யார்?” என்று அவர் கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ஒரு விநாடி தயங்கினான். காதலனா, நண்பனா, இல்லை யாரோ ஒருவனா…? என்னவென்று அறிமுகப்படுத்த? மீண்டும் புத்தி மந்த நிலைக்குப் போக முயல, தலையை உலுக்கித் தன்னிலை பெற்றவனாக,

“நா… நான்… அவளுடைய கணவனாகப் போகிறவன்…” என்றான் இறுக்கமான, அதே நேரம் உறுதியான குரலில்.

“நல்லது… அவர்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும், எனக்கு உங்கள் உதவி தேவை…” என்றவர் முன்னேற, அவர் பின்னே வேகமாக நடக்கத் தொடங்கினான் ஏற்றமாதிபன்.

தாதி கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் தங்கு தடையின்றி அவன் பதில் சொல்ல, குறிப்பெடுத்துக் கொண்டவர்,

“ஹெல்த் கார்ட் உங்களிடம் இருக்கிறதா?” என்றார் அடுத்து. மறுப்பாகத் தலையசைத்தவன்,

“அவசரத்தில் எதுவும் எடுத்துவரவில்லை… நாளை எடுத்துவந்து கொடுக்கிறேன்…” அவன் திணற, அதையெல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டவர், அனைத்தும் முடிந்ததும், அவனைப் போகுமாறு பணித்துவிட்டு, மற்றைய வேலைகளில் அவர் மும்முரமாக… எழுந்தவன் மீண்டும் முன்பு நின்று இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

அதில், அங்கிருந்த ஒரு சிலர் இவனை ஒரு மாதிரிப் பார்க்க, குனிந்து தன்னைப் பார்த்தான்.

அவன் அணிந்திருந்த பனியன் முதற்கொண்டு கையெல்லாம் இரத்தக் கறை! அதைக் கழற்றி எறிய முடியாது. புலனாய்வு அதிகாரிகள் வந்தால் ‘பிளட் ஸ்பேட்டர் அனாலிசிஸ்’ (Blood Spatter Analysis) -இற்காகக் கழற்றிக் கொடுக்க வேண்டியிருக்கும்; அதிலிருப்பது விதரணையின் இரத்தம் என்று அவனுக்குத் தெரியும், ஆனால் அதைக் காவல்துறை உறுதி செய்ய வேண்டும். மேலும், இரத்தம் எப்படி அவன் சட்டையில் தெறித்திருக்கிறது என்பதை வைத்து, அங்கே என்ன நடந்திருக்கும் என்பதைத் துல்லியமாக அவர்களால் கணிக்க முடியும். அது மட்டுமல்ல… அவன் சட்டையில் எங்காவது ஒட்டி இருக்கும் கொலையாளியின் இரத்தமோ அல்லது முடியோ குற்றவாளியை யார் என்று இனம் காண உதவும். அதனால் நிச்சயமாக அவனுடைய இரத்தம் தோய்ந்த ஆடையைக் கேட்டுப் புலனாய்வுக் காவல் துறையினர் வருவார்கள்.

அவன் அணிந்திருந்தது கோட் சூட்தான். கோட்டை ஏற்கனவே விதரணையின் வீட்டிலிருந்து காவலர்கள் கைப்பற்றியிருப்பார்கள். ஷர்ட், விதரணையின் மார்பை அழுத்துவதற்காகக் கழற்றி இருந்தான். இப்போது அவனிடமிருப்பது பேன்ட்டும் பனியனும்தான். அதைக் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

நினைத்தவனாகக் கழிவறைக்கு வந்தவன், பனியனைக் கழட்டி உருட்டி ஒரு பக்கமாக வைத்து விட்டு, தண்ணீர்க் குழாயைத் திறந்து கொட்டிய நீரில், கைகளைக் குவித்துத் தண்ணீரை ஏந்தினான். ஏந்தியவன், ஒரு கணம் தயங்கினான். அந்த இரத்தம் விதரணையுடையது! ஒருவேளை இது மட்டும்தான் கடைசியாக அவளுடைய நினைவாக… அவனோடு ஒட்டி நிற்கப் போகிறதோ…? நினைத்தவன் உடனே தன் தலையை உலுப்பிக்கொண்டான்.

“நோ… நோ… அவளுக்கு ஒன்றும் ஆகாது. ஆகவும் கூடாது…” – திரும்பத் திரும்ப மனதிற்குள் சொன்னவன், கைகளிலும் கழுத்திலும் முகத்திலும் இருந்த காய்ந்த இரத்தக் கறையின் மீது நீர் ஊற்றி, அழுந்தத் தேய்த்துக் கழுவிவிட்டு, முகத்தில் நீர் அடித்துச் சுத்தம் செய்தான்.

இப்போது புத்தி ஓரளவு தெளிவது போல இருந்தது. மீண்டும் நீரால் தன் முகத்தைக் கழுவி விட்டு, நீர் சொட்டச் சொட்டத் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தான். பின் இரண்டு கரங்களையும் கைகழுவும் மேசையில் பதித்தவாறு, அந்தக் கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தை உற்றுப் பார்த்தான். அவனுடைய விழிகளில் இப்போது வலியில்லை; ஆனால், என்றுமில்லாத கூர்மை தென்பட்டது!

“யார் அவர்கள்?” அவனே அவனிடம் கேட்டான்.

பதில் சொல்லாத அந்த முகத்தைச் சற்று ஆத்திரத்தோடு பார்த்தவன், “எதற்காக விதரணையின் தாய், தந்தையைக் கொன்றார்கள்…? எதற்காக விதரணையைச் சித்திரவதை செய்தார்கள்…? அவர்களுக்கான தேவை என்ன…? அவள் பெற்றவர்களை கொல்ல வேண்டிய அவசியம் என்ன…? அந்த எதிரி யார்…? மோட்டிவ் என்ன? அவளுடைய குடும்பம் ஒன்றும் அரசியல்வாதிகளோ, பெரிய பணம் படைத்தவர்களோ இல்லையே! சாதாரண குடும்பம். அவர்களுக்கு எதிரிகள் என்று யார் இருக்கப் போகிறார்கள்…? இருந்தாலும் கொல்ல வேண்டிய தேவை இல்லை… எனக்குத் தெரிந்த வரை அவர்களின் குடும்பத்தில் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. இது அப்படியான குடும்பமும் இல்லை. அப்படியிருக்கும்போது ஏன்…? ஒரு வேளை அந்தக் காவலதிகாரி சொன்னது போலத் தவறுதலாக வேறு யாரையோ தேடிப் போக வேண்டிய இடத்தில் இவர்களின் குடும்பத்தைப் பழி தீர்க்கவென்று பலிவாங்கிவிட்டார்களோ…?”

ஆயிரம் கேள்விகள் அவனுக்குள்!

‘இதற்கு விடை மூவரிடம்தான் இருக்கிறது. ஒன்று, அரை மயக்கத்திலிருக்கும் அந்தக் குற்றவாளி; அடுத்தது விதரணை; மூன்றாவது விதுரன்…’ நினைத்தவனின் மனக்கண்ணில் விதுரன் வந்து நின்றான். அதுவும் வெறித்த பார்வையோடு… ம்கூம்… இப்போது அவன் அதிர்ச்சியிலிருப்பான், அவனால் எதுவும் சொல்ல முடியாது… விதரணை… அவளை நினைத்ததுமே நெஞ்சம் விண்டு போனது அவனுக்கு!

சட்டென்று குனிந்தவன், மீண்டும் தன் முகத்தில் தண்ணீர் அடித்துக் கழுவினான். அங்கிருந்த மென் தாளில் ஈரத்தை அழுந்தத் துடைத்தவன், சுருட்டி வைத்த ஆடையைத் தன் கரத்தில் ஏந்தியவாறு வெளியே வர, அங்கிருந்த ஒரு சில நோயாளிகள் தங்களை மறந்து அவனைத்தான் வெறித்துப் பார்த்தார்கள்.

நெடுநெடுவென்ற உயரத்தில், மேலாடை இல்லாமல், எட்டடுக்கு வயிற்றோடு, கைகளின் தசைத்திரட்சி பொங்க, நடந்த சம்பவத்தால் இரத்த அழுத்தம் எகிறியதன் விளைவால் திமிறிப் புடைத்த நரம்புகளோடு, இறுகிய முகத்தில் துளியும் இரக்கம் இல்லாதவனாய், கிரேக்கச் சிலை போல நடந்து வந்தவனைக் கண்டால் யார் தான் பத்தோடு பதினொன்றாக ஒதுக்கிச் செல்வர்…? தங்களையும் மறந்து பார்வையால் அவனைத் துகிலுரிய, அவனோ அது எதுவும் புத்திக்கு உறைக்காதவனாக முன்னேறினான்.

அங்கே வாசலில் அவனுக்காக ஒண்டாரியோ காவலர்கள் இருவர் காத்திருந்தார்கள். இருவரும் கரங்களை மார்பில் அணிந்திருந்த செஸ்ட் வெஸ்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தவாறு, அவனுக்குச் சற்றும் குறையாத கம்பீரத்தோடு வாசலருகே நின்று இருந்தார்கள்.

ஒருத்தர் ஏற்கனவே விதரணையின் வீட்டில் அறிமுகமானவர்தான். அவருக்குப் பக்கத்தில் இன்னொருத்தர். அவர்தான் ஏற்றமாதிபனைக் கண்டதும் முன்னால் வந்து, தன் கரத்தை நீட்டி, “ஹாய் ஆபிசர்… ஐ ஆம் வின்சென்ட் மேத்யூ. நடந்த சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டறியும் பொறுப்பு என்னிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது…” என்று அவர் தன்னை அறிமுகப் படுத்த, நீட்டிய அவர் கரத்தில் தன் கரத்தை வைத்துக் குலுக்கி விடுவித்தவன், உடனே தன் கரத்திலிருந்த பனியனை அவரை நோக்கி நீட்டினான்.

ஏன் எதற்கு என்கிற கேள்விகள் எதுவுமில்லாமல் நன்றி சொன்னவர் சற்றுத் தள்ளியிருந்த காவலரை அழைத்து அதை வாங்கிக் கொள்ளச் சொல்ல, உடனே தடையம் வைக்கும் பை ஒன்றை எடுத்து வந்து அவன் முன் நீட்டினார் அந்தக் காவலர். அதை வாங்கி, அதில் அந்த பெனியனைப் போட்டு மூடிய ஏற்றமாதிபன், அதைக் காவலரிடம் நீட்ட அவரோ அவன் பான்டைப் பார்த்தார். அவனும் குனிந்து தன் பான்டைப் பார்த்தான்.

நிமிர்ந்து அந்தக் காவலரைப் பார்த்து,

“மாற்றுத்துணியில்லை… இதை பிறகு கொடுக்கிறேன்…” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

புரிந்தவராகத் தலையை அசைத்தவர், அவன் நீட்டிய பையை வாங்கிக்கொண்டு அங்கிருந்து செல்ல, வின்சன் தன் கவனத்தை ஏற்றமாதிபனின் மீது வைத்தார்.

“ஆபிசர்.. அங்கே நடந்ததை திரும்பவும் என்னிடம் சொல்ல முடியுமா?” அவர் கேட்க மீண்டும் அவன் எதையும் மறைக்காமல் அனைத்தையும் சொன்னான். அவரும் அவன் முன்பு சொன்னதும் இப்போது சொல்வதும் ஒத்துப் போகிறதா என்று சரிபார்த்தவாறே, அவன் சொன்னதைக் குறிப்பெடுக்கத் தொடங்க, அந்த நேரம், பனியனை எடுத்துச் சென்ற காவலர் ஒரு பையை எடுத்துவந்து ஏற்றமாதிபனிடம் நீட்டினார். அதை வாங்கித் திறந்து பார்க்க, உள்ளே கரிய நிற டி-ஷர்ட் ஒன்று இருந்தது.

நன்றியோடு வாங்கிக் கொண்டவன், அதை அணிந்தவாறே வின்சென்ட்டைப் பார்த்து, “எனக்கு விதுரனைப் பார்க்க வேண்டும்…” என்றான்.

வின்சென்ட்டும் தலையசைத்து,

“நானும் அவனைத்தான் பார்க்க வேண்டும்…” என்றவர், எழுதிய குறிப்பை முடித்துக்கொண்டு பேனாவைத் தன் வெஸ்டில் செருகியவாறே முன்னேற… ஏற்றமாதிபன் அவர் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

விதுரன் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்ததும், அங்கே ஒரு மருத்துவரும், தாதியும் விதுரனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும் மரியாதையாக அவர்களை நோக்கி வந்த மருத்துவர்,

“ஹாய்… ஐ ஆம் டாக்டர் ஜோஷ்வா… மனநல மருத்துவர்…” என்று தன்னை அறிமுகப்படுத்த, ஏற்றமாதிபன் அவரை வின்சென்ட்டுடன் பேசவிட்டு விட்டு, விதுரனை நோக்கிச் சென்றான்.

விழிகள் திறந்திருந்த நிலையில் விதுரன் படுத்திருந்த கோலம் நெஞ்சைப் பிசைய… அவனுடைய வலது கரத்தைப் பற்றி மெதுவாக அழுத்திக்கொடுத்தான் ஏற்றமாதிபன். ஆனால், அதுகூடப் புரியாமல் எந்த உணர்ச்சியுமற்றுச் சரிந்து படுத்திருந்தான் விதுரன்.

அன்று திருமணத்தில் எத்தனை குதூகலமாகத் தன் நண்பர்களோடு அளவளாவிக்கொண்டிருந்தான்! அவனுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஏற்றமாதிபன், அவர்கள் பேசிச் சிரிப்பதைக் கண்டு தனக்குள் புன்னகைத்துக்கொண்டானே! அந்தக் குதூகலத்தை ஒரேயடியாகத் தகர்த்துவிட்டார்களே… பற்களைக் கடித்துத் தன் கோபத்தை அடக்கிக் கொண்டவன், முகத்தில் அமைதியைத் தேக்கியவாறு திரும்பி வின்சென்ட்டோடு பேசிக்கொண்டிருந்த மருத்துவரைப் பார்த்தான்.

அவன் சந்தேகப்பட்டது சரி என்பது போல, வின்சென்ட்டிடம் விதுரனின் நிலை பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

“உடலில் எந்தக் காயங்களுமில்லை. ஆனால், நடந்த சம்பவத்தின் கடுமையான அதிர்ச்சியில் (Post-traumatic Stress), அவனது மூளை தற்காலிகமாகச் சிந்திக்கும் ஆற்றலையும் பேசும் திறனையும் இழந்திருக்கிறது. இது சரியாவதற்குச் சில நாட்கள் எடுக்கலாம். இப்போதைக்கு அவரிடம் விசாரணை நடத்துவது அத்தனை புத்திசாலித்தனமில்லை…” என்று அவர் சொல்ல, அதைக் கேட்டவாறே விதுரனைக் கனிவோடு பார்த்தான் ஏற்றமாதிபன்.

இப்போது அவன் முன்பாக முழங்கால் மடித்து அமர்ந்தவன்,

“ஹே படி… ஹவ் ஆர் யூ…? நான் ஏற்றமா திபன்… திருமணத்தில் சந்தித்தோமே, நினைவிருக்கிறதா…?” என்று அவன் இதமாகக் கேட்க, அவனிடமிருந்து எந்த அசைவுமில்லை. ஏன், அவனைக் கண்டுகொண்டதற்கான எந்த அறிகுறியுமில்லை.

அவன் நிலை இதயத்தில் முள்ளாய்க் குத்த, அவனது தலைமுடியை வருடிக் கொடுத்தவன், பின் நெற்றியோரம் தன் பெரிய பலமிக்க கரத்தைப் பதித்து, பெருவிரலால் அவனது நெற்றியின் மையத்தை வருடிக் கொடுத்தவாறே, அவனை நோக்கி இன்னும் குனிந்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“உன்னுடைய வலியும் வேதனையும் எனக்குப் புரிகிறது விதுரன். அந்த வலியை அத்தனை சுலபத்தில் உன்னிடமிருந்து விலக்கிவிடமுடியாது. ஆனால்… உனக்கும் உன் அக்காவுக்கும் சத்தியம் செய்கிறேன்; மிக விரைவாக இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தைக் கண்டுபிடிப்பேன். அந்தக் காரணத்திற்குப் பின்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களைக் கருவறுப்பேன்… இது உனக்கும் உன் அக்காவுக்கும் நான் கொடுக்கும் வாக்கு…!” என்று தமிழில் சொன்னவன், மெதுவாகக் கரத்தை விலக்கி அவன் தோளில் தட்டிக்கொடுத்து, “அதற்கு உன் உதவி வேண்டும் விதுரன்… விரைவாகக் குணமாகி வா…” என்றுவிட்டு, அவன் மேல் கரத்தை அழுத்திக் கொடுத்துவிட்டு எழ, அதே நேரம், மருத்துவர் சொன்னதைக் கேட்டுவிட்டு விதுரனை நெருங்கிய காவலதிகாரி, வெறித்த பார்வையோடு படுத்திருந்தவனை யோசனையோடு பார்த்துவிட்டுப் பின் நிமிர்ந்து ஏற்றமாதிபனை ஒரு மாதிரிப் பார்த்தார்.

அவர் பார்வையில் தெரிந்த சந்தேகத்தக் கண்டு, என்ன என்பது போல அவன் ஏறிட,

“இப்போது இவரிடம் தமிழில் என்ன சொன்னீர்கள்?” என்றார் அழுத்தமாக.

அதைக் கேட்டு மென்புன்னகை சிந்தியவன், நிதானமாகப் பேண்ட் பாக்கெட்டிற்குள் கைவிட்டு, காவலரை அழுத்தமாகப் பார்த்தான்.

“மிக விரைவாகக் குணமடைய வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் குற்றவாளிகளைப் பிடிக்க முடியும் என்று சொன்னேன்,” என்று அவன் அழுத்தமாகச் சொல்ல, அவனுடைய தளராத பார்வையைப் புருவம் சுருங்கப் பார்த்தார் வின்சென்ட். அந்த விழிகளில் இருந்த அழுத்தத்தையும் ஆளுமையையும் கண்டு என்ன நினைத்தாரோ, “அடுத்த முறை எங்களுக்கு முன்பாகப் பேசும்போது ஆங்கிலத்தில் பேசுங்கள்…” என்றார் அழுத்தமாக.

அதற்கான காரணமும் ஆதிபனுக்குப் புரியவே செய்தது. ஏற்றமாதிபன் என்னதான் காவல் துறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், அவன் சம்பவ இடத்தில் இருந்தவன். அவர்களைப் பொறுத்த வரை அவன் ஒரு சாட்சி; இல்லையென்றால் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்படுபவன்! அப்படி இருக்கும்போது, அவன் எது செய்தாலும் அவர்களுக்குச் சந்தேகத்தைத்தான் விளைவிக்கும். இதில் தமிழில் பேசினால், விதுரனிடம் எதையோ குறிப்புக் கொடுத்துப் பேசுவதாக நினைப்பார்கள். அதில் அவர்களின் தவறு எதுவும் இல்லையே!

அவர் சொன்னதைக் கேட்டுத் தலையசைத்தவன், “நீங்கள் சொல்வதும் சரிதான். அடுத்த முறை கவனமாக இருக்கிறேன்…” என்று ஒப்புக்கொள்ள, நன்றியோடு அவனைப் பார்த்தவர்,

“உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஏற்றமாதிபன். நீங்கள் ஆர்.சி.எம்.பியில் டாப் ரேங்கில் இருப்பதை அறிந்தேன். நிச்சயமாக எங்களுக்கு நீங்கள் உதவியாக இருப்பீர்கள் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமுமில்லை…” என்று அவர் சொல்ல, பட்டும் படாமலும் ஒரு புன்னகையைச் சிந்தியவன், “நிச்சயமாக…” என்றான் அடுத்து.

“சரி… நான் இப்போதைக்கு விடைபெறுகிறேன்… ஏதாவது தேவையென்றால் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்…” என்று வின்சென்ட் சொல்ல,

“தாராளமாகத் தொடர்பு கொள்ளுங்கள்… எப்படியும் ஒரு மாதத்திற்கு என் துறையே எனக்குக் கட்டாய ஓய்வு கொடுக்கும். அதனால் வீட்டில்தான் இருப்பேன்… நீங்கள் எந்த நேரமும் என்னை அழைக்கலாம்…” என்று அவன் சொன்னதும் தலை ஆட்டினார் வின்சென்ட்.

“ம்… புரிகிறது… நீங்கள் சந்தித்த நிகழ்வு அத்தனை பயங்கரமானது. கட்டாய ஓய்வுக்கு நிர்ப்பந்திப்பார்கள். அதே நேரம் உங்களைக் கவுன்சிலிங்கிற்கும் அனுப்புவார்கள்… மறுக்காமல் அதில் பங்குபற்றுங்கள்… அப்போதுதான் உங்களால் எதையும் சுயமாகச் சிந்திக்க முடியும்…”

அவர் சொல்லிவிட்டு விடைபெற்றுச் செல்ல, ஏற்றமாதிபனின் உதட்டில் என்னவென்று பிரித்தறிய முடியாத புன்னகை ஒன்று மலர்ந்தது.

அவனுக்கு விடுப்பா…? அதுவும் கவுன்சிலிங்… நினைக்கும் போதே மேலும் உதடுகள் சிரிப்பில் பிரிந்தன.

எண்ணுக்கணக்கற்ற எதிரிகளை அசால்ட்டாக விண்ணுலகம் அனுப்பி இரசித்தவன் அவன்; அவனுக்கு எதற்கு விடுப்பும், கவுன்சிலிங்கும்! ஆனால், கனடியச் சட்டத்தின்படி இத்தகைய ஒரு சம்பவத்தில் ஈடுபட்டாலோ, இல்லை அதில் ஒரு அங்கமாக இருந்தாலோ… அந்தக் காவலருக்கு கட்டாய விடுப்புக் கொடுத்து, கவுன்சிலிங்கிற்கும் போக வலியுறுத்தும்.. அவன் அடுத்த பணிக்குத் தயார் என்று சான்றிதழ் கொடுத்தால்தான் அவன் மீண்டும் காவல்துறையில் இணையமுடியும்.

முன்பெல்லாம் அப்படி அவனுக்கு விடுப்பைக் கொடுத்து, கவுன்சிலிங் கொடுக்கும் போது எரிச்சலோடும் வெறுப்போடும்தான் அவற்றை ஏற்றுக் கொள்வான். ஏற்றுக்கொள்வான். அந்த விடுப்பில் தான் அவன் நாடுகள் சென்று பார்த்து வருவதே.

ஆனால், கிடைக்கும் இந்த விடுப்புக்காக ஆவலுடன் காத்திருப்பது இதுதான் முதன் முறை. அவனே இதற்குப் பின்னணி என்னவென்று புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கால அவகாசம் தேவை!

வின்சென்ட் மேத்யூ ஒண்டாரியோவுக்கான காவல் துறை அதிகாரி. உள்ளூரில் நடக்கும் குற்றங்களைக் கண்டறிந்து கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. ஆனால், ஏற்றமாதிபன் ஆர்.சி.எம்.பி (RCMP) அதிகாரி. ஒரு ஆர்.சி.எம்.பி அதிகாரிக்குத் தன் சொந்த ஊரில் நடக்கும் இத்தகைய ஒரு குற்ற வழக்கில் தலையிடச் சட்டப்படி அனுமதி இல்லை. இதில் ராயல் கனடியன் மவுண்டெட் போலீஸிற்கு (ஸிசிவிறி) கனடா முழுவதும் குற்றவாளிகளைக் கைது செய்யும் அதிகாரம் இருந்தாலும், அவர்கள் கையாளும் குற்றமானது தேசிய பாதுகாப்புக்கு எதிரானதாகவோ, போதைப்பொருள் கடத்தல், எல்லைப் பாதுகாப்பு, பணமோசடி மற்றும் பயங்கர வாதம் போன்ற பெரிய அளவிலான குற்றங்களாக இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நிலையில், விதரணையின் குற்றப்பிரிவு உள்ளூர் குற்றப்பிரிவுக்கு (Local Jurisdiction) உட்பட்டது என்பதால், ஏற்றமாதிபனுக்கு அதில் புலனாய்வு செய்வதற்கு அதிகாரமில்லை. தவிர, அவனும் இந்தக் குற்றப்பிரிவில் சந்தேகத்திற்கு உட்பட்டவனாக இருப்பதால், இவனாகப் புலனாய்வு செய்யக் உள்ளூர் காவல்துறை மட்டுமல்ல, ஆர்.சி.எம்.பியும் அனுமதிக்காது. அந்த வகையில், அவன் தனிப்பட்ட முறையில், யாருக்கும் தெரியாத இரகசிய வழியில்தான் குற்றவாளியைக் கண்டு பிடிக்க வேண்டும். அதற்கு அவனுக்கு அவகாசம் தேவை. அதற்காக இந்தக் கட்டாய ஓய்வு அவனுக்கு மிகவும் அவசியமே! அதனால்தான் என்றுமில்லாத திருநாளாக இந்தக் கட்டாய ஓய்வை அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

எப்படியாவது அந்த எதிரிகளைக் கண்டு பிடித்து கருவறுத்தால்தான் அவன் நிம்மதியாக உறங்குவான்.

அந்த நினைவோடு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தலையைப் பின்னால் சரித்து விழிகளை அவன் மூடி யோசனையில் இறங்கவில்ல, அதற்கிடையில் அவன் கைப்பேசி அலறியது. திடுக்கிட்டு விழித்தவன், கையிலிருந்த கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். விடியற்காலை மூன்று மணி. இந்த நேரத்தில் யார் அழைக்கிறார்கள்…? யோசனையோடு எடுத்துப் பார்த்தால் அவனது மேலதிகாரி ஜேசன் அழைத்திருந்தார்.

திரையில் விழுந்த பெயரைக் கண்டதுமே அவன் முகம் இறுகியது. அந்த இறுக்கத்தோடு தன் நெற்றியை அழுந்த வருடிக் கொடுத்தவனுக்கு மறுபக்கம் அழைக்கும் அவன் மேலதிகாரியை எப்படிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. அதற்கு முதலில் மூளை சரியாக வேலை செய்யவேண்டுமே. இந்த நேரத்தில் அவனை அழைக்கிறார் என்றால், செய்தி அவர் காதுக்கு எட்டிவிட்டது என்று பொருள். இந்தாள் வேறு என்ன சொல்லப் போகிறாரோ…? மனதிற்குள் நினைத்தவாறு, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்து,

“குட் மார்னிங் ஆபிசர்…” என்றான் சிரமப்பட்டுக் குரலை நேராக்கியவாறு.

மறுபக்கத்திலிருந்த ஜேசனோ, “என்ன…? எங்களை எல்லாம் தூங்க விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாய் போல?” என்று எரிச்சலுடன் கேட்க, இவனோ உதடுகள் இறுக பதில் சொல்லாமல் நின்றிருக்க மறுபக்கம் அவருடைய இரத்த அழுத்தம் எகிறியது போல.

“நான் உன்னிடம்தான் பேசுகிறேன் ஏற்றமாதிபன்.

அங்கே என்ன நடக்கிறது…? ஏதோ நிகழ்ச்சிக்குப் போய்விட்டு இரண்டு நாட்களில் வந்து விடுகிறேன் என்று கிளம்பிச் சென்றாய்.. பார்த்தால் நம் டிபார்ட் மென்ட் துப்பாக்கியால் சாகச விளையாட்டுக்கள் நடத்தியிருக்கிறாய் போல…” என்று கிண்டலும் கோபமுமாகக் கேட்க, ஏற்றமாதிபனோ அதற்கு மேல் எதையும் மறைக்காமல் நடந்ததை அவருக்கு முழுமையாகத் தெரிவித்தான்.

அதைக் கேட்டவர், “ம்… சரி… அடுத்து என்ன செய்யப்போகிறாய்?” என்றார் அழுத்தமாக.

“அந்தச் சம்பவம் என்னை மனதளவில் பாதித்து விட்டது… எனக்கு ஒரு மாத விடுப்பு வேண்டும்…” அவன் சொல்ல, மறுபக்கம் சற்று நேரம் அமைதி காத்தது.

“ஆஃபிசர்…? “இவன் அழைக்க,

“ஏற்றமாதிபன்.. உனக்கு மேலதிகாரி என்பதையும் தாண்டி, உன் மீது பாசம் வைத்திருக்கும் ஒரு நண்பனாகச் சொல்கிறேன்… எந்த முட்டாள்தனமும் செய்துவிடாதே. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அங்கே காவலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்வார்கள்…” என்று அவனைப் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்தவராக அவர் சொல்ல, ஏற்றமாதிபன் பற்களைக் கடித்துத் தன்னை நிதானப்படுத்தினான்.

“ஆபிசர்… ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்… நீங்கள் நினைப்பது போல நான் எதுவும்…” அவன் முடிக்க வில்லை.

“போதும் ஏற்றமாதிபன்… உன்னோடு கடந்த ஐந்து வருடங்களாகப் பயணிக்கிறேன். உன் சிந்தனை, உன் எண்ணம், உன் நடவடிக்கை அனைத்தும் எனக்கு அத்துப்படி! என் கீழ் வேலை செய்யும் அத்தனை பேரையும் எனக்கு நன்றாகத் தெரியும்; அதுவும் உன்னை… இன்னும் நன்றாகத் தெரியும்… வேண்டாம்… உன் மனதில் பழிவாங்கும் எண்ணங்கள் இருந்தால் அதை இத்தோடு அழித்து விடு…” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, முகம் இறுக நின்றான் அவன். இருந்தாலும் தன்னை நிதானப்படுத்தியவனாக,

“அப்படியென்றால் நீங்கள் என்னைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். இங்கே, அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை நடந்துகொண்டு இருக்கிறது. உயிரோடு வருவாளா மாட்டாளா என்கிற பதற்றத்தில் மூளை வேலையே செய்யமாட்டேன் என்கிறது. அங்கே நடந்த சம்பவத்தில் என்னால் சரியாக எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை… என் மனநிலை..” அவன் முடிக்கவில்லை.

“கமான்.. பாய்.. இப்படியான சம்பவங்கள் உனக்கு ஒன்றும் புதிதல்ல என்று எனக்குத் தெரியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த மறைமுக வேட்டை (Covert Operation) நினைவிருக்கிறதா…? அது அரசுக்கே தெரியாத ஒரு ரகசியப் புலனாய்வு! நம் நாட்டிற்குள் சட்ட விரோதமாக ஊடுருவிய பன்னிரண்டு பயங்கர வாதிகளை இரண்டே மணி நேரத்தில் கண்டு பிடித்து, ஒருத்தரின் உயிரைக் கூட மிச்சம் வைக்காமல் கொன்று குவித்தவன் நீ! அப்போது கூடக் கட்டாய விடுப்பு கொடுக்கிறேன் என்று சொன்னபோது, ‘வேண்டாம், அந்த விடுப்பை நீக்கிவிடு’ என்று மல்லுக்கு நின்றவன். இப்போது நீயாக விடுப்பு கேட்கிறாய் என்றால், இதைக் கூட ஊகிக்க முடியாத முட்டாளல்ல நான்… உன்னை எச்சரிக்கிறேன் ஏற்றமாதிபன்… தனித்து விடப்பட்ட ஓநாய் (Lone Wolf) போலத் தன்னிச்சையாக இதை உன் கைகளில் எடுக்காதே. இதில் பிடிபட்டால் உன் எதிர்காலமே நாசமாகிவிடும். ஒரு நல்ல காவலனை இழக்க நான் தயாரில்லை… புரிந்துகொள்…”

அவர் அவனுக்கு அறிவுரை கூற முயல, அந்த அறிவுரை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது.

“ஏற்றமாதிபன், நீ செய்வது உனக்குப் புரிகிறதா இல்லையா…? நீ அங்கே சென்றது உன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக. இதில் எங்களின் அனுமதியில்லாமல் துப்பாக்கியை எடுத்துச்

சென்றதே குற்றம்! போதாதற்கு அதை வேறு பயன் படுத்தித் தொலைத்திருக்கிறாய்! இது எத்தனை பெரிய சிக்கலைக் கொண்டு வரும் தெரியுமா…? உன் மீது உள்வாரியான விசாரணை பாயும். இதிலிருந்து வெளியேறுவது அத்தனை சுலபமில்லை. இதற்கு மேலும் பிரச்சினையை இழுத்து வரப்போகிறாயா…? கொஞ்சம் யோசி…” அவர் அழுத்தமாகச் சொல்ல, ஏற்றமாதிபனின் இரும்பு உடல் ஆத்திரத்தில் மேலும் இறுகியது.

“ஒரு மாதக் கட்டாய ஓய்வு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சார். கவுன்சிலிங் எப்போது என்று அறிவியுங்கள், வந்துவிடுகிறேன். இப்போது வைக்கிறேன்… பாய்!” என்று கூறிவிட்டுக் கைப்பேசியை அணைத்தவனின் முகம் இப்போது கடுமையாக மாறிப்போயிருந்தது.

அதே நேரம், ஏற்றமாதிபன் கைப்பேசியை வைத்ததும் எரிச்சலுடன் தன் கைப்பேசியைப் பார்த்த ஜேசனுக்குக் கோபம் வந்தது.

“யு ஆர் எ xxxx ஸ்டபர்ன் இடியட்…” – கோபத்துடன் முணுமுணுத்தவர், ஏற்றமாதிபனை எப்படி அந்தச் சிக்கலில் இருந்து வெளியே கொண்டு வருவது என்று தெரியாமல் நெற்றியைத் தேய்த்துக்கொண்டார். அவனைப் போல ஒரு சிறந்த வீரனைத் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது; நீதியோ, அநீதியோ அவனை இந்தச் சிக்கலிலிருந்து மீட்டெடுத்தேயாக வேண்டும்! நினைத்தவருக்கு ஆயாசமானது.

“இடியட்… இப்படி அதிகாலை மூன்று மணிக்கே புலம்ப வைத்துவிட்டானே…” என்று அவனைத் திட்டித் தீர்த்தவாறு, அவனை உள்வாரியான விசாரணையில் இருந்து எப்படிக் காப்பது என்று யோசிக்கத் தொடங்கிய நேரம்… இங்கே ஏற்றமாதிபன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

மனம் முழுக்க விதரணைதான் நிலைத்து இருந்தாள். அவசரச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவளுக்கு என்னானது என்றும் தெரிய வில்லை. சோர்வோடு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன், காலுக்கு மேலாகக் காலைப் போட்டு, தலையை இருக்கையில் சாய்த்தவாறு நெற்றியை வருடிக் கொடுத்தபடி எதை எதையோ யோசித்தான். என்னதான் யோசித்தும் எந்தத் தெளிவுக்கும் வர முடியவில்லை. தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என்றால், விதரணை உயிரோடு முழுதாக அவன் கரங்களுக்கு வர வேண்டும்! வருவாளா…?

அதே சிந்தனையோடு உழன்றவன், அதீதமாகப் புத்தி களைத்துப் போனதில் தன்னை மறந்து உறங்கியும் போனான்.

What’s your Reaction?
+1
13
+1
1
+1
5
+1
0
+1
8
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!