Sat. Apr 25th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 26 (முதல் பாகம் முற்றும்)

26

அதே நேரம் மண்டபத்தில் நேயநறுமையைத் தேடிக்கொண்டிருந்த அம்பிகா, அவளைக் காணாமல் குழம்பிப் போனார்.

“கண்…” எப்போதும் போலத் தன் கணவரை அழைக்கத் தொடங்கியவர், சுத்திவர ஆட்கள் இருப்பதை உணர்ந்து, “இஞ்சாருங்கோ… நேயாவை எங்காவது பார்த்தீர்களா?” கணவனிடம் அம்பிகா கேட்க, தேவசகாயமோ குழம்பினார்.

“இல்லையேமா… நான் பார்க்கவில்லையே… கொஞ்சத்துக்கு முன்னாடி மணமேடைக்குப் பக்கமாகத்தானே இருந்தாள்” சொன்னவாறு அங்கும் இங்கும் பார்த்தவர்,

“எங்காவது கழிவறைக்குப் போயிருப்பாள்… அங்கே பார்த்தீர்களா?” என்றார் கேள்வியாக.

“ம்… அங்கே எல்லாம் பார்த்துவிட்டுத்தான் வந்தேன். ஆளைக் காணோம்…” என்று சொன்னவர், அவளைத் தேடத் தொடங்க, தன் தாய் அங்கும் இங்கும் யோசனையாக நடந்து திரிவதைக் கண்டு கொண்ட நேரிழை, தாயை அழைத்தாள்.

அப்போதைக்குத் தன் மூத்த மகளை மறந்தவராக, இளைய மகளிடம் வந்தார் அம்பிகா.

“அம்மா… என்னாயிற்று…? யாரைத் தேடுகிறீர்கள்?” கேட்க, சுற்றும் முற்றும் பார்த்தவாறு,

“உன் அக்காவைக் காணவில்லை மா… இங்கேதான் இருந்தாள்… திடீர் என்று பார்த்தால் ஆளைக் காணோம்.” சொல்ல அதுவரை இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதுலனின் உடல் சட்டென்று இறுகியது.

“எல்லா இடமும் தேடிப் பார்த்தீர்களா அத்தை?” கேட்டபோதே அவனுடைய முகத்தில் ஒரு வித தவிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.

“தேடிப் பார்த்துவிட்டேன் ஆதி… காணவில்லை”

“ப்ச்… எங்காவது நண்பர்களைக் கூட்டுச் சேர்த்து இடம் பார்க்கப் போயிருப்பாள். கவலைப் படாதீர்கள் அம்மா… வந்துவிடுவாள்…” நேரிழை சொல்லும் போதே தன் கழுத்திலிருந்த மாலையை அவசரமாகக் கழற்றி ஓரமாகப் போட்ட ஆதியதுலன்,

“இதோ வருகிறேன் அத்தை… நீங்கள் எதற்கும் உள்ளே ஒரு வாட்டி தேடிப் பாருங்கள்…” சொன்னவன் நேரிழையின் கரத்தைப் பற்றி,

“நான் எதற்கும் வெளியே தேடிப் பார்த்துவிட்டு வருகிறேன் நேரிழை…” என்றவன் மணமேடையை விட்டு வேகமாக வெளியேறினான்.

அவனுடைய விழிகளோ பதட்டத்தோடு சுத்தி வரப் பார்த்தன. அவனையும் மீறி உடலில் நடுக்கம் ஓடியது.

“நேயா… எங்கே போனாய்…? பிளீஸ்… எந்த விதமான முட்டாள்தனமாகக் காரியத்தையும் செய்து விடாதே. திரும்ப வந்துவிடு.” மனதிற்குள் மந்திரமாக உச்சரித்துக் கொண்டிருந்தவன் அங்கும் இங்கும் பார்த்தவாறு மேலும் முன்னேற, சற்றுத் தொலைவில் தளர்வான நடையோடு ஒரு பெண் நடந்துவருவது தெரிந்தது.

தெளிவில்லாத அந்த உருவமே சொன்னது அது நேயநறுமைதான் என்று. அதுவரை அழுத்தியிருந்த அச்சம் மெதுவாகக் கரைந்து போக, அடிவயிற்றில் எழுந்த பயவலியால் சுருங்கிக்கொண்ட வயிற்றை அழுந்தப் பற்றியவாறு ஒரு கணம் ஆழ மூச்செடுத்து விட்டான் ஆதியதுலன். அவனையும் மீறி நடுங்கிய கால்களை அசைத்தவன், மறு கணம் அவளை நோக்கி புயலென விரைந்தான்.

தன்னை நோக்கிக் கடும் வேகமாக வந்து கொண்டிருந்த ஆதியதுலனைக் கண்ட நேயநறுமை, அவன் நெருங்கி வந்ததும், அவன் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் விலகிச் செல்ல முயல, சட்டென்று அவளுடைய தோள்களைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான் ஆதியதுலன்.

இவளோ உணர்ச்சியற்று அவனைப் பார்க்க,

“எங்கே போயிருந்தாய்?” என்றான் ஒரு வித சீற்றத்தோடு.

அவளோ அவனை ஒரு மாதிரிப் பார்த்தாளன்றி பதில் சொல்லவில்லை. அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டு நகர முயல, மேலும் அவளை அழுத்தமாகப் பற்றியவன், அவளை ஒரு உலுப்பு உலுப்பி,

“உன்னைத்தான் கேட்கிறேன் நறுமை. எங்கே போனாய்?” என்றான் கோபமாக. மறு கணம் வெறுமையாக இருந்த அவள் முகத்தைக் கண்டதும், உள்ளே எதுவோ பிசைய,

“நறுமை…” என்றான் கலங்கிய குரலில். அவனுடைய அந்தக் குரலில் இதயம் குளிர்ந்து நடுங்க, சட்டென்று இவளுடைய விழிகளில் கண்ணீர் பூத்தது. ஆனாலும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர,

“என்னை அப்படி அழைக்காதீர்கள்.” சொன்னவள் அவனை உதற முயன்றாள். ஆனால் அவனுடைய பிடி அழுத்தமாக இருக்க,

“அதுலன் மரியாதையாக என்னை விடுங்கள்…” என்றாள் பொங்கி எழ முயன்ற அழுகையை நிறுத்த முயன்று. ஆனால் பாழாய் போன அழுகை, அவள் மனநிலையைப் புரிந்து கொள்ள மறுத்தது.

“விடுகிறேன். அதற்கு முதல் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும்…” என்றான் உறுதியான குரலில். இவளோ நிமிர்ந்து அவனை வெறித்துப் பார்க்க, மேதுவாகத் தன் கரத்தை விலக்கியவன், விலக்கிய கரத்தை அவளுடைய கன்னத்தில் வைத்தான். பட்டை வருடுவது போலப் பெருவிரலால் அவளுடைய கன்னத்தை வருடி,

“நறுமை… உன்னுடைய வலியும் ஏக்கமும் எனக்குப் புரிகிறது… ஆனால் பார்… நாம் இருவரும் எப்போதுமே இணைய முடியாது… உன் பாதை வேறு என் பாதை வேறு. உனக்கு என்னை விட நல்லவனாக, உன்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிக்கொள்ளும் வகையில் ஒருத்தன் நிச்சயமாக வருவான். அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள். அவனோடு சந்தோஷமாக வாழ்… உன் மனதில் இருக்கும் என் மேலான அபிப்பிராயத்தை அழித்து விடு… எப்போதும் நான் உனக்குச் சொந்தமாக முடியாது..” அவன் சொல்ல, சட்டென்று அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டு விலகி நின்றாள் நேயநறுமை. அவளுடைய உதட்டில் இளக்காரமான புன்னகை ஒன்று தவழ்ந்தது.

“உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி மிஸ்டர் ஆதியதுலன். ஆனால் பாருங்கள், உங்கள் அறிவுரையைக் கேட்டுத்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை.” சொன்னவள், அதற்கு மேல் அவனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்காமல் ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைய, ஆதியதுலனோ அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தான்.

சற்று முன் அவளைக் காணவில்லை என்றதும் ஒரே ஒரு விநாடி மனது தப்பும் தவறுமாக எதை எதையோ நினைத்தது உண்மைதான். அவன் கிடைக்காத கோபத்தில் ஏதாவது பாரதூரமாகச் செய்துவிட்டாளோ என்று அஞ்சி நடுங்கியது அவனுக்கு மட்டும்தான் தெரியும். அந்தப் பயத்தில் தான் வெளியே ஓடி வந்தான். ஆனால் அவன் நினைத்தது போல அல்லாமல், திரும்ப வந்து விட்டாள். அதுவே பெரு நிம்மதியைக் கொடுக்க, நெஞ்சில் முட்டிமோதும் உணர்ச்சிகளை அடக்கச் சற்று நேரம் வெளியே நின்றான்.

அவனுக்கு மண்டபத்திற்குள் நுழையப் பிடிக்க வில்லை. ஏதோ பாரம் நெஞ்சை அழுத்தியது. இடையில் கை பதித்தவன், ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்று தோற்றவனாக, அங்கும் இங்கும் நடக்கத் தொடங்கினான்.

அதே நேரம் மண்டபத்திற்குள் நுழைந்த நேயநறுமை குனிந்து பார்த்தாள். ஆதியதுலன் உழுப்பிய உழுப்பில் அடங்கியிருந்த இரத்தம் சற்றுக் கசிந்து புதிதாய் மாற்றியிருந்த சேலையிலும் படிய ஆரம்பித்திருந்தது. பதறியவள், பின்னால் விட்டிருந்த கூந்தலை வாரி எடுத்து இடதுபக்க மார்பில் போட்டுக் கொஞ்சமாய்க் கசிந்திருந்த இரத்தக் கறையை மறைத்துக்கொண்டாள். தாயின் பார்வை கழுகுப் பார்வை. சட்டென்று மாற்றத்தைக் கண்டு கொள்ளும். நல்லவேளை, அவள் அணிந்திருப்பது கருஞ்சிவப்பில் வேலைப்பாடுகள் செய்த சேலை. அதனால் கறை சட்டென்று தெரியாது. அவள் மூச்செடுத்து விடுவதற்குள், தன் மகளைக் கண்ட அம்பிகா ஓடிவந்து தன்விசாரணையை ஆரம்பித்து இருந்தார்.

“என்னாச்சு… ஏன் சேலை மாற்றினாய்? எங்கே போனாய்? போகும்போது சொல்லிவிட்டுப் போயி இருக்கலாமே?” என்று ஏகப்பட்ட கேள்விகள். அதையெல்லாம் புன்னகையுடன் கேட்டுக்கொண்டு இருந்தவள்,

“அம்மா… சேலையில் பழச்சாறு கொட்டிவிட்டது. அதுதான் சேலையை மாற்றிவிட்டு வரலாம் என்று வீட்டுக்குப் போய் வந்தேன். இது பெரிய குற்றமா?” கேட்ட மகளை முறைத்தார் அம்பிகா.

“அதை என்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்கு என்ன? பதறிப்போனேன் தெரியுமா…?” தாய் சொல்ல தன் வலியை மறைத்துச் சிரித்தாள் நேயநறுமை.

அவளுடைய முட்டாள் தனத்தால் சேலை முழுக்க இரத்தம். அந்த இரத்தக் கறையோடு எப்படி மண்டபத்திற்கு வருவது. அதுதான், உடனே சென்று, காயத்திற்கு மருந்திட்டு, சேலையையும் மாற்றி விட்டு வந்தாள்.

காயத்திற்கு மருந்திடும் போதுதான் தன் முட்டாள்தனத்தின் மீது அவளுக்குக் கோபமே வந்தது. உணர்ச்சி கொந்தளிக்கும் நேரத்தில், கோபம் உச்சத்தைத் தொடும் வேளையில் ஒரு மனிதன் சுயமாகச் சிந்திக்காது எத்தனை முட்டாளாக இருக்கிறான். அதற்கு அவள்தான் சரியான உதாரணம். மனம் தடுமாறி நிற்கையில், பைத்தியம் போலப் புத்தி செயற்பட்டு விடுகிறது.

அவன் திருமணம் முடித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறான். அவள்தான் வதை படுகிறாள். இதில் அவன் தவறு எதுவும் இல்லைதான். எல்லாம் அவள் தவறுதான். ஒருதலைக் காதல் ஒரு போதும் வெற்றி அடையாது என்பது உண்மைதான். ஆனாலும் அந்தக் காதலைத் தூக்கி எறிய முடியாத தன் பைத்தியக்காரத் தனத்தின் மீது வெறுப்புதான் வந்தது அவளுக்கு.

மீண்டும் அவன் நினைவில் தவித்திருக்க,

“சரி.. வா… எல்லோரும் சாப்பிட்டு விட்டார்கள். இனி மணமக்களும் நாங்களும்தான் சாப்பிட வேண்டும்… அதற்காகத்தான் உன்னைத் தேடினேன்” அன்னை அவள் கரத்தைப் பற்ற, சுயம் வந்தவளாக அன்னையின் இழுப்புக்கு பந்தி பரிமாறும் இடம் நோக்கிச் சென்றாள் நேயநறுமை.

சாப்பாடா? அவள் இருக்கும் மனநிலைக்குச் சாப்பாடு ஒன்றுதான் கேடு.

“அம்மா… பசிக்கவில்லை. நிறையச் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டேன். பிறகு சாப்பிடுகிறேனே…” தன் கரத்தை தாயிடமிருந்து பிரிக்க முயல, திரும்பி தன் மகளை முறைத்தார் அம்பிகா.

“சிற்றுண்டி சாப்பிட்டாயா. இன்று முழுக்க என்னோடுதான் இருந்தாய். காலையும் எதுவும் சாப்பிடவில்லை. இவ்வளவு ஏன் இந்த ஒரு வாரமாக நீ சரியாகச் சாப்பிடவில்லை. நீ என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?” கோபமாகக் கேட்டவர் அவளை இழுத்துவந்து நேரிழைக்குப் பக்கமாக நிறுத்த, இவளோ முள்ளின் மீது நின்றிருப்பது போலத் தவிப்போடு நின்றிருந்தாள்.

“என்னக்கா… இத்தனை நேரம் எங்கே போயிருந்தீர். காணவில்லை என்றதும் கொஞ்சம் பதறிவிட்டோம் தெரியுமா?” தங்கை அன்பாகக் கண்டிக்க, வராத புன்னகையை வரவழைத்துத் தங்கையைப் பார்த்தவள்,

“ப்ச்… சேலையில் கறை பட்டுவிட்டது. அது தான் போய் மாற்றிவிட்டு வந்தேன்…” என்றவள் தவிப்போடு தாயைப் பார்க்க, அம்பிகாவோ, நேரிழையைப் பார்த்து,

“எங்கே ஆதி?” என்றார்.

“அக்காவைத் தேடிக் கொண்டு வெளியே சென்றாரே.. இன்னும் வரவில்லை..” யோசனையாகச் சொல்லும்போதே ஆதி வந்துகொண்டிருந்தான்.

“இதோ வந்துவிட்டான்… வாப்பா ஆதி… சாப்பிட்டு முடித்துவிட்டால், அடுத்த சடங்குகளைச் செய்யலாம்…” சொல்ல, ஆதியதுலன் தானாகவே நேரிழைக்கும், நேயநறுமைக்கும் இடையில் வந்து நின்றுகொண்டான்.

மீண்டும் அவளுக்குள் பதட்டம் உச்சத்தைத் தொட முயன்றது. அவன் உரசவில்லை, தொட வில்லை. ஆனாலும் அவன் தேகம் தன் மீது படுவது போன்ற மாயையில் திணறிப்போனாள் நேயநறுமை.

வேண்டாம் என்று விலக ஓட நினைத்தாலும், பாழாய்ப் போன விதி அவனைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கிறது. அருகே நிற்கவைக்கிறது. உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்கிறது. பற்களைக் கடித்தவள் அதற்கு மேல் அவனுடைய அருகாமையைத் தாங்க முடியாமல் விலகப் போனாள். அவள் கிரகம் அவள் பின்னால் வந்து நின்ற பாஸ்கரன்,

“எங்கேமா போகிறாய்…?” என்று கேட்டு அவளை இழுத்துத் தனக்கு முன்பாக நிறுத்த, வேறு வழி இல்லாமல் பற்களைக் கடித்தவாறு வரிசையில் நின்றிருந்தாள் நேயநறுமை.

அது தமக்குத் தாமே பரிமாறிச் சாப்பிடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சாப்பாட்டுப் பகுதி என்பதால், ஆள் ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துக் கொண்டு தங்களுக்குப் பிடித்த உணவைத் தாமே பரிமாறிக்கொண்டவாறு நகர, மணமகனும் மணமகளும் முன்னேறி தங்களுக்கான உணவைத் தட்டில் எடுக்க ஆரம்பிக்க, அம்பிகா நேரிழையை நோக்கி ஓடிவந்தார்.

“நேருமா… ஆதிக்கு நீ பரிமாறு…” என்றார் காதுக்குள். நிமிர்ந்து ஆதியதுலனை ஏறிட்ட நேரிழை அழகிய புன்னகை ஒன்றைச் சிந்திவிட்டு அவனுக்கு உணவு பரிமாறத் தொடங்க, அவனும்,

“அதிகம் வேண்டாம் நேரு… கொஞ்சமாக வை…” என்றவன் தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லச் சொல்ல இவள் எடுத்து வைக்க, பின்னாலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் உடல் எரியத் தொடங்கியது. நெஞ்சை அடைத்தது.

இது என்ன நரகவேதனை. இதிலிருந்து எப்போது விடுதலை பெறுவது. அவர்களின் ஒவ்வொரு செயலும் என்னைக் கொன்று புதைக்கிறதே. இதில் இருந்து எப்படி மீண்டு வரப்போகிறேன்.

கலங்கித் தவித்தாள் நேயநறுமை.

அன்று மணமக்கள் தங்களின் முதலிரவுக்காக, கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற விடுதி ஒன்றுக்குப் புறப்படுவதாக இருந்தது. அந்த வேலையில் அத்தனை பேரும் பரபரப்பாக நின்று இருக்க, நேயநறுமையால் எதிலும் ஒன்ற முடியாமல் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றிருந்தாள்.

அவள் இருக்கவேண்டிய இடத்தில் அவளுடைய தங்கை இருப்பதைக் கண்டு நொறுங்கிப்போனாள். அவள் சுகிக்க வேண்டிய இரவு. மொத்தமாகத் தொலைத்துவிட்டு அநாதைபோல இருப்பதாக அவள் மனம் கதறித் தவித்தது.

ஆனால் இவளுடைய வலியும் வேதனையும் அவனிடமில்லையே. அவன் மகிழ்ச்சியாக நேரிழையின் கரங்களைப் பற்றியவாறு காருக்கு அழைத்துச் சென்றான். நேரிழையும் முகம் முழுக்கப் பூரிப்போடு அத்தனை பேரிடமும் கையசைத்து விட்டு விடை பெற்றுத் தன் கணவனோடு வண்டியில் ஏற, அந்தக் காட்சியைப் பார்க்கும் சக்தியற்றுத் திணறியவள், கடைசியாக ஆதியதுலனின் உருவத்தைக் கண்களால் உறிஞ்சி மனம் என்னும் பெட்டகத்தில் நிறைத்துக் கொண்டாள்.

இனி அவன் அன்னியன். எக்காலத்திலும் அவளுக்கு சொந்தமாகமாட்டான். இதோ இதுதான் நீ அவனைப் பார்க்கும் கடைசித் தருணம். நன்றாகப் பார்த்துக் கொள்… இதற்குப் பிறகு மொத்தமாக அவனை மறந்து விட்டுப் புதுவாழ்க்கை அமைத்துக் கொள்…’ மனது அவளை எச்சரிக்க மறுப்பாகத் தலையசைத்தாள் நேயநறுமை.

அவனை மறப்பதா? இந்த ஜென்மத்தில் அது முடியுமா? தன்னையே கேட்டவளுக்கு அந்த நொடியே அவனை விட்டுத் தொலைதூரம் சென்று விடும் வேகம் வந்தது.

“நோ… முடியாது. இதற்கு மேல் அந்த நாட்டில் ஒரு விநாடி கூட அவளால் இருக்க முடியாது. அவன் மூச்சுக்காற்றுக் கலக்கும் இடத்திலிருந்தாலே உடைந்து போவாள். நொறுங்கிப் போகிறாள். பலவீனமாக உணர்கிறாள். இதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், அவள் உடனே அங்கிருந்து புறப்படவேண்டும். அவனை விட்டுத் தொலைதூரம் சொல்லவேண்டும். இனி வாழ்நாளில் அவன் முகத்தைப் பார்க்கவே கூடாது. அவனை மட்டும் இல்லை. நேரிழையையும் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் இவள் மனது தவிக்கும். தங்கையைச் சபிக்கும். அவளைத் திட்டித் தொலைக்கும். இவள் சாபமும், கோபமும் அவள் தங்கையின் வாழ்க்கையில் வினையாகிப் போனால் அதன் பிறகும் கலங்கித் தவிப்பது அவள்தானே.

இல்லை… அப்படி ஒரு போதும் நடக்கக் கூடாது. இனி அவள் நிழல் கூட இவர்களின் மீது படக் கூடாது. முடிவு செய்தவள், அவர்கள் சென்று மறைந்த திசையையே வெறித்து விட்டுது் தன் கைப்பேசியை எடுத்தாள் நேயநறுமை.

அடுத்து, “ஹலோ… ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்…”

என்றாள் இறுகிய குரலில்.

இத்தோடு முதல் பாகம் முற்றியது.

தன் காதல் கைகூடாத வலியில் மொத்தமாகத் தன்னைத் தொலைத்தவள் அதிலிருந்து மீண்டு எழுவாளா? அவளுக்கான புதிய வாழ்க்கை மலருமா? இல்லை இறுதிவரை அவன் நினைவிலேயே வாழ்ந்து மரித்துப் போவாளா? ஒரு வேளை கை நழுவிப் போன காதல் மீண்டும் அவளை வந்து சேருமோ? யாருக்குத் தெரியும்? விடை இரண்டாம் பாகத்தில் உங்களுக்காக.

தொடரும்…

What’s your Reaction?
+1
8
+1
2
+1
1
+1
0
+1
6
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!