16B
அதைச் சற்றும் எதிர்பார்க்காத அவ்வியக்தனுக்குப் பொரி கலங்கியது. உத்தியுக்தன் குத்திய வேகத்தில் மூக்குடைந்து இரத்தம் கொடகொடவென்று கொட்டத் தொடங்க, தடுமாறிய அவ்வியக்தன் மூக்கைப் பொத்தியவாறு,
“ப்ரோ… என்ன காரியம் செய்கிறாய்…” என்று சீறினான். இவனோ, ஆவேசத்தோடு தன் தம்பியை நெருங்கி,
“எல்லாவற்றிற்கும் காரணம் நீதான்… நீ மட்டும் தான். அன்று மட்டும் நீ லன்டனில் அந்தக் கூத்து ஆடாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையில் சமர்த்தி வந்திருக்கமாட்டாள். என்னைப் பற்றி எழுதியிருக்கமாட்டாள். அவளைக் கடிமணம் புரிந்து இப்படிச் சித்திரவதைப் படுத்தியிருக்கமாட்டேன்… அவள் யாரோ ஒருவணை மணந்து மகிழ்ச்சியாக இருந்திருப்பாள். இப்படி மருத்துவமனையில் கிடக்க மாட்டாள். இதற்குக் காரணம்.. நீதான்… நீ மட்டும்தான்…” என்று மேலும் ஓங்கி அவன் வயிற்றில் ஒரு குத்து விட, மடங்கினான் அவ்வியக்தன்.
அண்ணனின் பலம் பொருந்திய குத்தில் குடலே அறுந்துவிட்ட உணர்வில் வலியில் முனங்கியவன்,
“ப்ரோ… ப்ளீஸ் ஸ்டாப்…” என்றானே தவிர அண்ணனுக்கு எதிராகத் தன் கரத்தைத் தூக்கவேயில்லை. அவ்வியக்தனுக்கு உத்தியுக்தனின் நிலை நன்கு புரிந்துபோயிற்று.
எங்கே சமர்த்திக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்கிற அச்சம், பயம், அவனை ஆட்டுவிப்பதையும், தன்னால் அவளைக் காக்க முடியாது போய்விடுமோ என்கிற துடிப்பும், தன்னால்தான் இவளுக்கு இந்த நிலை என்கிற குற்ற உணர்ச்சியும் அவனை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது என்பது புரிய, இப்போதும் உத்தியுக்தனை சமாதானப் படுத்த முயன்றவன், போல,
“ப்ரோ… உன் நிலை எனக்குப் புரிகிறது… நான் சொல்வதைக் கேள்… இதோ பார்…” என்றவாறு நெருங்க முயல,
“அவளுடைய இந்த நிலைக்கு நீ தான் காரணம்.. நீ மட்டும்தான் காரணம்..” என்று திரும்பத் திரும்ப அதையே கூறிக்கொண்டு பைத்தியம் பிடித்தவன் போல, அவ்வியக்தனின் கழுத்தைப் பற்றித் தள்ளியவாறு சுவரில் மோத, அவன் சுவரில் மோதிய வேகத்தில் அவ்வியக்தனுக்குப் பூச்சிகள் பறந்தன. தன்னை மறந்து வலியில் முனங்கியவனுக்கு அடுத்துப் பேச உத்தியுக்தன் வாய்ப்புக் கொடுக்கவேயில்லை.
“ப்ரோ… ப்ளீஸ்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்று வேண்டியவனை மதிக்கவுமில்லை.
“உன்னைச் சும்மா விடமாட்டேன் அவ்வி… என் சதி இந்த நிலைக்கு வரக் காரணம் நீ.. நீ தான்.. என்று மேலும் ஒரு குத்து விட, தன் அண்ணனை அடக்க முயன்று தோற்க, உத்தியுக்தன் அவ்வியக்தனை இழுத்தவாறு இன்னொரு சுவரில் மோத முயலத் தன்னைக் காக்க முயன்றவனாய், உத்தியுக்தனை ஒரு தள்ளுத் தள்ளினான் அவ்வியக்தன்.
அவன் தள்ளிய வேகத்தில், அவ்வியக்தனை இழுத்துக்கொண்டு தரையில் பின்பக்கமாக விழுந்தான் உத்தியுக்தன். விழுந்த வேகத்தில் அவ்வியக்தனை கீழே விழுத்தி, சுழன்று எழ, இப்போது உத்தியுக்தன் மேலும் அவ்வியக்தன் கீழுமாகக் கிடந்த அடுத்த விநாடி, அவ்வியக்தன் மேலும், உத்தியுக்தன் கீழுமாகக் கிடந்தனர்.
இப்படி இரண்டு மலைகளும் ஒன்றை ஒன்று அணைத்தவாறு தரையில் புரண்டன. அவர்கள் புரண்ட வேகத்தில் இடையில் சிக்கிய பொருட்கள் அங்கும் இங்குமாகச் சிதறின.
அதே நேரம் இவர்களின் சண்டையைக் கண்டு பதறித் துடித்து வந்த தயாளனும், புஷ்பாவும் விதற்பரையும், அவர்களை நெருங்க முடியாமல் கரங்களைப் பிசைந்து நின்றனர்.
யாரைப் பிடிப்பது, யாரை நிறுத்துவது? உத்தியுக்தனின் ஆவேசத்திற்கும் இடையில் யாராலும் நெருங்கவே முடியவில்லை. அப்படியிருந்தும் தயாளன் உத்தியுக்தனை நெருங்கி அவனுடைய தோளில் கரத்தைப் போட, அவன் உதறிய ஒரு உதறலில் தயாளன் நான்கடி தள்ளிச் சென்று கீழே விழுந்தார்.
விதற்பரையோ, ஒரு வித வலியோடும் பயத்தோடும் இருவரையும் மாறி மாறிப் பார்த்து, அவர்களின் சண்டையை எப்படித் தடுப்பது என்று புரியாமல் கைகளைப் பிசைய, பார்வையாளர்களோ தங்கள் பிரச்சனைகளை மறந்து இவர்களை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.
ஒரு கட்டத்தில் உத்தியுக்தனை அடக்கும் வழி தெரியாது பலம் அனைத்தையும் திரட்டி அண்ணனைக் கீழே விழுத்தி முன் உடல் தரையில் படுமாறு புரட்டிப் போட்டவன், இரண்டு கரங்களாலும் அவனுடைய கழுத்தைச் சுற்றி கிடுக்குப் பிடி போட்டு ஒற்றைக் காலால் உத்தியுக்தனின் கால்களைப் பற்றி இறுக்கி அசையவிடாமல் செய்தவன்,
“ஸ்டாப்… ஸ்டாப் இட் ப்ரோ… இட்ஸ் இனஃப்…” என்று சற்றுக் குரலை அழுத்திக் கூற, உத்தியுக்தனோ திணறியவாறு,
“ஜ்ஜ்ஜ்ஜ் ஆஃப் மி…” என்றான். அப்போதும் அவ்வியக்தன் விட்டானில்லை.
“விடுகிறேன்… முதலில் உன்னை நிதானப் படுத்து…” என்று பிடிவாதமாகக் கூற, முடிந்தவரைத் திமிறியவன், ஒரு கட்டத்தில் முடியாதவனாக, அத்தனை ஆத்திரமும் கோபமும் வடிந்தவனாக, உடலைச் சற்று இளக்கக் கண்களோ கண்ணீரைப் பொழியத் தொடங்கியது.
தன் அண்ணன் தளர்ந்துவிட்டான் என்பதைப் புரிந்துகொண்ட அவ்வியக்தன் மெதுவாக அவனை விடுவித்து விலகிய நேரம், உத்தியுக்தனோ எல்லையில்லா வலியில், தலையை நிலத்தில் விழுத்தி விழிகளை மூடி,
“ஐ நீட் ஹேர்… ஐ வோன்ட் ஹேர்… ஐ கான்ட் லொஸ்ட் கேர்… ஐ நீட் ஹேர் அவ்வி…” என்று வாய்விட்டு அழத் தொடங்கினான்.
பாய்ந்து தன் அண்ணனுக்கு அருகே படுத்தவன், அவனைத் தன்னோடு இறுக அணைத்து, அவன் முதுகை வருடிக்கொடுத்து,
“ஷ் ப்ரோ… ப்ளீஸ்… ப்ளீஸ்… அழாதே… சமர்த்திக்கு ஒன்றுமாகாது… அழாதே ப்ரோ…” என்றபோது அண்ணனின் அழுகையைக் கண்டு இவனுடைய கண்களும் கலங்கிப்போயின.
அதேநேரம் இங்கே பெரும் பிரளயமே நடக்கிறது என்பதை அறிந்துகொண்ட, வைத்தியர்களும், தாதிகளும் இவர்களை நோக்கி ஓடி வந்தனர். அதில் ஒரு வைத்தியர் உத்தியுக்தனுக்கு அமைதிப் படுத்தும் ஊசி ஒன்றைப் போட வர, சடார் என்று தன் கரத்தைத் தூக்கி அவருடைய முயற்சியைத் தடுத்தவன்,
“வேண்டாம்… அவனுக்கு ஒன்றுமில்ல… இன்னும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடுவான்…” என்றுவிட்டுத் திரும்பி உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ ஒரு பக்கமாகச் சரிந்து, தன்னை மறந்து அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தான். அதைக் கண்ட அவ்வியக்தனுக்குத் தாள முடியவில்லை.
எப்போதும் இறுகிப்போய் அசைக்க முடியாத கேடயமாய் இருக்கும் அவனுடைய உடன் பிறந்தவனுக்கு இந்த நிலையா? தாளா தவிப்புடன்,
“ஹே ப்ரோ… எனக்கு உன் நிலை புரிகிறது… இதோ பார்… நீ சமர்த்தியை விரும்புகிறாய் அல்லவா… உன் காதல் உண்மையாக இருந்தால், நீ அவள் மீது வைத்திருக்கும் அன்பு பாசம் உண்மையானது என்றால், எழுந்து வருவாள்… தயவு செய்து இப்படிக் கசங்காதே…” என்று அப்போதும் அவனைச் சமாதானப்படுத்த முயல, தன் விழிகளை அழுந்த மூடிச் சற்று நேரம் அப்படியே கிடந்தான் உத்தியுக்தன்.
சற்று முன் பொங்கியதில் மனமும் புத்தியும் தளர்ந்திருந்தது. எப்படியோ தன்னை நிலைப் படுத்தியவன், தம்பியை விட்டு விலகி எழுந்தான். அவனுக்கு யாரையும் பிடிக்கவில்லை. யாரோடும் பேசத் தோன்றவில்லை.
தள்ளாட்டத்தோடு சமர்த்தியின் அறை நோக்கிச் சென்றான்.
அவ்வியக்தனோ, உதட்டிலும், மூக்கிலும் வழிந்த இரத்தத்தைப் புறங்கையால் துடைத்தவாறு திரும்ப, அதைப் பெரும் வலியோடு பார்த்திருந்த விதற்பரை, அவனுக்கு முன்பாக டிஷூ அடங்கிய பெட்டியை நீட்டினாள். மறுக்காது வாங்கிக் கொண்டவன்,
“எனக்கொன்றுமில்லை பேபி… நான் நன்றாகத் தான் இருக்கிறேன்… கலங்காதே…” என்றுவிட்டு அவள் பதிலையும் கேட்காது, அண்ணனின் பின்னால் சென்று அவனுடைய கரத்தைப் பற்ற, ஏதோ நினைவுகள் தடைப்பட்டவன் போலத் திரும்பிப் பார்த்தான்.
அங்கே சட்டை முழுவதும் இரத்தம் சிதறி இருக்க, மூக்கிலும் உதட்டிலும் துடைத்தும் துடைக்காமலும் இருந்த இரத்தத்தோடு நின்றிருந்த தம்பியைக் கண்டவன், தன் அரக்கக் குணத்தை நினைத்துக் கலங்கியவனாய்,
“அவ்வி… ஐ ஆம்…” என்று மன்னிப்புக் கேட்க முயன்றான். இடையிலேயே அவனைத் தடுத்த அவ்வியக்தன்,
“எதுவும் பேசாமல் என் கூட வா….” என்றவாறு அவனுடைய கரத்தைப் பற்றி இழுத்துச் செல்ல, அதை மறுக்கும் நிலையில் உத்தியுக்தன் இருக்கவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு மூளையே குழம்பிப் போயிருந்தது. அடுத்து என்ன செய்யவேண்டும் என்றும் தோன்றவில்லை. ஆனால் சமர்த்தியின் அருகே, அவளைத் தொட்டுக் கொண்டாவது இருக்க வேண்டும் என்கிற வெறி மட்டும் அவனைப் பாடாய்ப் படுத்தியது.
ஒரு கட்டத்தில் உடல் தளர,
“அவ்வி… நான் கொஞ்சம் அமரவேண்டும்… உடல் களைத்தது போலத் தோன்றுகிறது…” என்றான் பெரும் பலவீனமான குரலில். திரும்பித் தளர்வாக நின்ற அண்ணனைக் கண்டவன்,
“ஆறுதலாக ஓய்வெடுக்கலாம்… இப்போது சிரமத்தைப் பார்க்காமல் என் கூட வா…” என்றவாறு ஒரு திருப்பத்தில் திரும்பி, அங்கிருந்த கதவைத் திறந்து, செல்ல அங்கே சுவரில் எழுதியிருந்ததைக் கண்டவனுக்கு மேலும் உடல் நடுங்கத் தொடங்கியது.
என் ஐ சி யு (ழிமிசிஹிழிமீஷீஸீணீtணீறீ மிஸீtமீஸீsவீஸ்மீ சிணீக்ஷீமீ ஹிஸீவீt) அதைக் கண்டதுமே உத்தியுக்தனுக்குப் புரிந்து போனது தன் குழந்தையைப் பார்க்க அழைத்து வந்திருக்கிறான் என்று.
கதவைத் திறந்து நகர மறுத்த கால்களோடு யுத்தம் புரிந்துகொண்டிருந்த உத்தியுக்தனைப் பற்றி இழுத்துக்கொண்டு உள்ளே வந்தான் அவ்வியக்தன். அங்கே இங்கியூபேரட்டரில் உள்ளங்கை அளவேயான குழந்தை ஒன்று உடல் முழுவதும் ஏதேதோ வயர்கள் ஓட அசைவற்றுக் கிடந்தது.
அதைக் கண்டதும் உத்தியுக்தனின் கண்களில் மீண்டும் கண்ணீர் மழை.
அந்தச் சிறிய உருவத்தின் உடல் முழுவதும் ஊசியால் துளைத்திருக்கிறார்களே. அதை எப்படி இந்தக் குழந்தை தாங்கும். ஏதோ தன் உடல் முழுவதும் ஊசிகள் குத்திய வலியில் துடித்துப் போனான் உத்தியுக்தன்.
கடவுளே… ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தாங்கப்போகிறான். இன்னுமா அவனுடைய இதயம் நிற்கவில்லை?” துடித்தவனாய் கண்ணாடிப் பேழைக்குள் கிடந்த குழந்தையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, குழந்தையின் தந்தை வந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்ட வைத்தியர் அங்கே வந்துவிட்டிருந்தார்.
அங்கே நோயாளிகளுக்குரிய ஆடையை அணிந்தவாறு விறைப்புற்ற நிலையில் நின்றிருந்த உத்தியுக்தனைக் கண்டு, நெருங்கி அவனுடைய தோளில் கரத்தைப் பதிக்க, உணர்வில்லாமல் திரும்பிப் பார்த்தான் உத்தியுக்தன். அவன் விழிகளில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்ட அந்த வைத்தியருக்கும் ஒரு கணம் கண்கள் கலங்கித்தான் போனது.
“ஹாய்…. ஹெள ஆர் யு…” என்று கேட்க, வலியோடு சிரித்தவன்,
“என் குழந்தை எப்படி இருக்கிறது?” என்றான்.
வைத்தியரோ பதில் சொல்லத் தயங்கியவராகக் குழந்தையைப் பரிதாபமாகப் பார்த்தார். அவருடைய பரிதாபமே உத்தியுக்தனின் மிச்ச சொச்ச உயிரையும் கொண்டுபோகத் தயாரானது.
அவர் பதில் கூறாமலே நிலைமையைப் புரிந்து கொண்டவனுக்கு இதயமே கசங்கி, இதயத்திலிருந்து பீறிட்ட இரத்தம் விழிகளின் வழியாகக் கன்னத்தில் வழியத் தொடங்க,
“எங்களால் முடிந்த வரைக்கும் முயற்சி செய்து பார்த்தோம்… எங்களால் முடியவில்லை. இன்றும் கொஞ்ச நேரம்தான் அவள் உயிரோடு இருப்பாள்…” என்றதும் ஒரு முறை தள்ளாடினான் உத்தியுக்தன். தள்ளாடியவனைப் பற்றிக்கொண்ட அவ்வியக்தன் பரிதாபமாகக் குழந்தையைப் பார்க்க, உத்தியுக்தனுக்கோ அழுகை மேலும் வெடித்துக் கொண்டு வந்தது.
இதைச் சமர்த்தி எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறாள். அதை இவன் எப்படிக் கையாளப் போகிறான்? தாங்க முடியாத அவல நிலையில் வைத்தியரைப் பார்த்தவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஏனோ இதயம் அந்தக் கணமே நின்றுவிடாதோ என்று தோன்ற, எல்லையில்லா வலியுடன் நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தவன்,
“நான் குழந்தையைத் தூக்க வேண்டும்…” என்றான் அடைபட்ட குரலில்.
“பட் ப்ரோ… இந்த நிலையில்…” என்று தயங்க,
“ப்ளீஸ் அவ்வி… நான் அவளைத் தூக்க வேண்டும்… ஒரு வேளை இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம்?” என்றபோது உத்தியுக்தன் மட்டுமல்ல அவ்வியக்தனும் உடைந்து போனான்.
வைத்தியரைப் பார்த்த அவ்வியக்தன்,
“ஒரு முறை குழந்தையைத் தூக்குவதற்கு அனுமதியுங்கள்.” என்று அண்ணனுக்காய் வேண்ட, மறுக்காது சம்மதித்தார் வைத்தியர்.
அடுத்து அந்தப் பேழை திறக்கப்பட, சற்றுத் தள்ளி நின்றிருந்த தாதி, குழந்தையை அலுங்காமல், குலுங்காமல் தூக்கி உத்தியுக்தனிடம் நீட்டினார்.
உத்தியுக்தனுக்கோ உடல் முதல் இதயம் வரை உதறத் தொடங்கியது. அது கரங்களில் கூட அப்பட்டமாகத் தெரிந்தது. எங்கே குழந்தையைச் சுமந்தவாறே மயங்கி விழுந்துவிடுவோமோ என்கிற அச்சம் வேறு பிறந்தது. ஆனாலும் அந்த சிசுவைத் தூக்கி மார்போடு அணைக்க வேண்டும் என்கிற வேகமும் எழுந்தது.
சிரமப்பட்டு, வெறும் உள்ளங்கை அளவேயிருந்த தன் மகளைத் தூக்கிப் பக்குவமாய்த் தன் மார்போடு அணைத்துக் கொள்ள, அவனுடைய உடல் மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் உடலிலும் மெல்லிய சிலிர்ப்புடனான ஒரு அசைவு.
அது புரியாதவனுடைய கண்களோ தாரை தாரையாகக் கண்ணீரைச் சிந்தின. எங்கே இறுக அணைத்தால் குழந்தை நசிந்துபோகுமோ என்று அஞ்சியவன் போலக் கரங்களால் பொத்திப் பிடித்துக் கொண்டவன், குனிந்து பார்த்தான். அவனுடைய இரண்டு உள்ளங்கைகளுக்குள்ளும் குழந்தை மறைந்துபோயிருந்தது.
குழந்தையைச் சுற்றி அதிக வயர்கள் பூட்டி இருந்ததால் மெதுவாக அங்கிருந்த இருக்கையில் அமர, தந்தைக்கும், குழந்தைக்கும் சற்றுத் தனிமை கொடுத்துவிட்டு அனைவரும் விலகிச் சென்றனர். இவனோ மார்போடு அணைத்த தன் குழந்தையின் முதுகைப் பெருவிரலால் மென்மையாக வருடிக் கொடுத்தவாறு,
“ஹே… மை லிட்டில் ஏஞ்சல்… இட்ஸ் மீ… யுவர் டாட்… வெல்கம் அவர் வேர்ள்ட்… ஹெள ஆர் யு…” என்று மென்மையாகக் கேட்க, இன்னும் குழந்தையின் விழிகள் மூடித்தான் இருந்தன.
“கண்ணம்மா… வைத்தியர்கள் என்னன்னவோ எல்லாம் சொல்கிறார்கள்… அவர்கள் கிடக்கட்டும்… எனக்கு உன்னைப் பற்றித் தெரியும்… பெண் என்றாலே மகா சக்தி… அது எதையும் ஆக்கும் அழிக்கும் ஜெயிக்கும்… நீ சாதிக்கப் பிறந்தவள்… ஜெயிக்கப் பிறந்தவள்… அத்தனை கோடி அணுக்களில் வென்று குழந்தையாய் ஜனித்தவள்… இந்தப் போராட்டம் ஒன்றும் உனக்குப் புதிதல்ல… இப்போது இந்தப் பயங்கர நிலைமையைத் தகர்த்து ஜெயித்தால் நீ உலகையே ஜெயிப்பாய்… கண்ணம்மா… உன் திடத்தையும் தைரியத்தையும் கைவிடாதே… உன் அப்பா நான் இருக்கிறேன். இம்மைக்கும் மறுமைக்கும் உனக்குத் துணையாய் உன் கூடக் கைகோர்த்து வருவேன்… உன்னுடைய நம்பிக்கையை விடாதே…” என்று குழந்தையோடு ஏதேதோ பேச, அவன் கூறியது அந்தக் குழந்தைக்குக் கேட்டதா இல்லையா என்றுகூடத் தெரியவில்லை.
குழந்தையை முத்தமிடுவதா நினைத்துத் தன் விரல்களுக்கு முத்தமிட்டவன்,
“ஏஞ்சல்… உனக்குச் சத்தியம் செய்கிறேன், எந்தக் காலத்திலும் உனக்குச் சலிப்பேற்படும் வகையில் பேச மாட்டேன்… உன்னிடம் எந்தக் குற்றப் பத்திரிகையும் வாசிக்கமாட்டேன்… குறிப்பாக உனக்கு அலுப்புத் தட்டும் வகையில் அதிகம் பேசமாட்டேன்… அது உனக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும்… தயவுசெய்து எழுந்து கொள்…” என்று கலங்கிய குரலில் கூற, அதுவரை அடங்கிப் போய்க்கொண்டிருந்த குழந்தையின் இதயத் துடிப்பு சற்று வேகம் எடுக்கத் தொடங்கியது.
“உனக்கு ஒன்று தெரியுமா… எனக்கு அம்மா பாசம் என்றால் என்ன என்றே தெரியாது. ஆனால் அந்தப் பாசத்தை உன்னிடம் உணரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் கண்ணம்மா… அந்த அன்பை எனக்குக் கொடுக்கவாவது எழுந்து வா… எனக்காக… வா… காதலைக் கொடுக்க உன் அம்மா, பாசத்தைக் கொடுக்க நீ… நீங்கள் இருவரும் எனக்கு வேண்டும்.. தயவுசெய்து எழுந்து வா கண்ணம்மா…” என்றவனுக்கு இப்போது அழுகையில் குரல் விம்மியது.
இப்போது அந்தக் குழந்தையின் விரல்களில் மெல்லிய அசைவு. அது தெரியாமல் குழந்தையை அணைத்தவாறு நீண்ட நேரமாக அப்படியே அமர்ந்திருக்க, நேரம் கடந்துவிட்டதென்று எண்ணி வந்த தாதி, பரிதாபமாக அவனையும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே நின்றிருந்தார்.
இறுகித் தினவெடுத்த அந்த உயர்ந்த மனிதனின் மார்பில் சிறிய பாவப்பிள்ளையாக உள்ளங்கை அளவில் அடங்கிப்போயிருந்த அந்தச் சிசுவிடம் ஏதேதோ பேசிக்கொண்டிருந்த உத்தியுக்தனைக் கண்டு பெரும் கவலை கொண்டவராக மெதுவாக அவர்களை நெருங்கினார்.
அவருக்குத் தெரியும், அந்தக் குழந்தை நிச்சயமாக அன்றைய இரவைத் தாண்டாதென்று. அதனுடைய இருதயத்தின் பலம், கர்ப்பத்தை விட்டு வெளியே வந்தபின் இயங்குவதற்குப் போதுமான அளவு சக்தியோடு இருக்கவில்லை. அதன் காரணத்தால், இரத்த அழுத்தம், இருக்கவேண்டிய அளவுக்கு மிகக் கீழாக இருந்தது. தவிரப் பிராணவாயுவின் விகிதம் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவான நிலையிலிருந்தது. இந்நிலையில் மருந்துகள் மாத்திரையோடு குழந்தையை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்றாலும், அதனுடைய இருதயத்தின் பலவீனம் அத்தனையையும் ஓரம் கட்டிவிட்டு அந்த உலகத்தை விட்டுச் செல்கிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மகிழ்ச்சியான செய்தியைக் கூறுவது என்பது இயலாத காரியம்தான்.
வேதனையோடு உத்தியுக்தனை நெருங்கியவர்,
“குழந்தையைத் தொட்டிலில் போடலாமா?” என்றவாறு நெருங்க, இவனோ மறுப்பாகத் தலையை ஆட்டியவாறு மேலும் குழந்தையைப் பாதுகாப்பது போல இறுகப் பொத்திக் கொள்ள. அந்தத் தாதியின் கண்களும் கலங்கிப் போயின.
ஆனாலும் அதிக நேரமாக அவனை அங்கே விட முடியாதே. மீண்டும் குழந்தையை வாங்குவதற்காகக் கரங்களை நீட்ட, குனிந்து அதன் தலையில் முத்தமிட்டவன், குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுக்க, அந்தக் கணம் தன் தந்தையை விட்டுப் பிரிய மனமில்லாத குழந்தை, தன் சிறிய குரலெடுத்துக் கைகால்களை உதைத்து வீறிட்டு அழ முயற்சித்தது. அந்தத் தாதி மட்டுமல்ல உத்தியுக்தனும் அதிர்ந்துதான் போனான்.
எத்தனை போராட்டம் அந்தச் சிசுவை உயிர்ப்போடு வைத்திருக்க…
அத்தனை போராட்டங்களையும் தகர்த்தெறிந்து தந்தையின் அரவணைப்பில், அவன் கொடுத்த பலத்தின் உறுதியில் மீண்டெழுந்து விட்டதே.
தந்தையாய் மீண்டும் குழந்தையை வாரி அணைத்துக் குழந்தைக்கு மேலாக இவன் சிரித்தவாறு அழத் தொடங்க, தாதியோ அவசரமாக வெளியே ஓடினார். மறுகணம் சற்று முன் இவனோடு பேசிய வைத்தியர் உள்ளே வந்தார். இப்போது குழந்தையின் அழுகை நின்றிருந்தது. ஆனால் தந்தையின் அழுகைதான் சற்றும் நிற்பதாயில்லை.
“டாட்… வீ நீட் டு செக் அப் யுவர் ஏஞ்சல்…” என்று தாதி குதூகலமாய்க் கூற, இப்போது மறுக்காது குழந்தையைத் தாதியிடம் நீட்ட, மீண்டும் குழந்தை உதடுகளைப் பிதுக்கத் தொடங்கியது.
மெல்லிய நீண்ட கால்களை உதைத்தது. பொத்திய குட்டிக் கரங்களால், தந்தையிடமிருந்து தன்னைப் பிரித்த தாதியை அடிக்க முயன்றது. தாதியோ, குழந்தையை இங்கியூபெட்டரில் வைக்க, வைத்தியர் உடனேயே பல பரிசோதனைகளைச் செய்து ஒரு சில மருந்துகள் ஏற்றப்பட்டன. அடுத்த ஒரு மணி நேரத்தில் முகத்தில் நிம்மதி பரவ உத்தியுக்தனைத் நோக்கித் திரும்ப, வெளியே செல்லாமல் அங்கேயே நின்றிருந்தவன் அந்த ஒரு மணி நேரத்தில் பலமுறை செத்துப் பிழைத்தான்.
உத்தியுக்தனை நெருங்கிய வைத்தியர், அவன் தோள்களில் கரங்களைப் போட்டு, அழுத்திக் கொடுத்து,
“தாங் காட் மிஸ்டர் உத்தியுக்தன்… உங்கள் குழந்தைக்கு இனி எந்த ஆபத்துமில்லை. அன்னையின் பாசத்திற்கு நிகரானது தந்தையின் பாசம் என்று நிருபித்திருக்கிறீர்கள்… உங்கள் குழந்தைக்கு இரண்டாம் முறையாக உயிர் கொடுத்திருக்கிறீர்கள்…” என்று தட்டிக் கொடுத்தவர்,
“நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குழந்தையை அணைத்துக்கொண்டு அமருங்கள்… எங்களால் முடியாததை உங்கள் பாசம் மீட்டெடுத்துக் கொடுக்கிறது. ஒத்துக் கொள்கிறேன்… நம்பிக்கைக்கு முன்னால், அன்புக்கு முன்னால் மருத்துவம் வெறும் காகிதங்கள்தான்…” என்று விட்டுச் செல்ல, இனியும் அங்கே தங்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டவனாய், வெளியேறியவனைத் தேடிப் பரபரப்புடன் ஓடிவந்தாள் விதற்பரை.
“மாமா… அத்தை கண் முழித்துவிட்டார்கள்…”

