16 -A
இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன். மெல்ல மெல்லச் சுயநினைவு பிறக்க அங்கமெல்லாம் தோன்றிய சொல்லொணா வலியை விட, அவனைத் தாக்கியது இதயத்தின் வலி.
கண்முன்னால் படமாய் ஆகாயத்தில் மிதந்த சமர்த்தியின் வாகனம் நினைவுக்கு வரத் துடித்துப் பதைத்து எழுந்தவனுக்கு அப்போதுதான் தெரிந்தது தான் மருத்துவமனையில் இருப்பது.
அவனுடைய சதிக்கு என்னவானது. நெஞ்சமெல்லாம் தீயாய்த் தகிக்கத் தன் கரங்களில் ஏறியிருந்த ட்ரிப்பை அறுத்தெறிந்துவிட்டுத் தரையில் கால் பதித்தவனுக்கு உலகம் தட்டாமாலையாகச் சுழன்றது. அந்த நேரம், உத்தியுக்தனின் அறையை நோக்கி வந்துகொண்டிருந்த அவ்வியக்தன்,
“ஹே ப்ரோ… வட் த ஹெல் ஆர் யு டூயிங்…” என்று பதறியவாறு நெருங்கித் தன் அண்ணனைப் பற்றிக்கொள்ள,
“சதி… சதிக்கு என்னவாயிற்று… அவளுக்கு… எப்படி… எப்படி இருக்கிறது? அவள் வாகனம் வி… விப… விபத்துக்குள்ளானதைக் கண்டேன்.. அவளுக்கு… அவளுக்கு ஒன்றுமில்லை தானே…” என்று தன் உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்டவன், தன்தம்பியிடமிருந்து திமிற, தன் சக்தி அனைத்தையும் சேர்த்து அண்ணனை இறுகப் பற்றிய அவ்வியக்தன்,
“ப்ரோ… லிசின்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…” என்றான் தன் அண்ணனை சமாதானப்படுத்த வேண்டி.
“xxxx ஆஃப் ஃபரம் மீ அவ்வி… நான் சதியிடம் போகவேண்டும்… நான் அருகே இல்லையென்றால் பயந்து போவாள்…” என்று மேலும் நடக்க முயன்றவனுக்கு உடலில் அங்கும் இங்குமாக எரியத் தொடங்கியது. வலது தோள் பட்டையிலும் கழுத்திலும் யாரோ தீயை வைத்ததுபோலத் தகிக்கத் தன்னை மறந்து ஒற்றைக் கரத்தால் கழுத்தைத் தொட்டுப் பார்த்தான். பெரிய கட்டுப் போடப்பட்டிருந்தது.
“வட் இஸ் தட்… வட் ஹப்பன் டு மி…” என்று எரிச்சலுடன் தன் தம்பியைப் பார்த்துக் கேட்க,
“நீ மோதுப்பட்ட வேகத்தில் உன் வாகனம் எரியத் தொடங்கிவிட்டது… உன்னை மீட்பதற்குள்… சில இடங்களில் தீக்காயங்கள் பட்டுவிட்டன…” என்று மெல்லிய வலியோடு கூற,
“எவ்வளவு நேரமாகச் சுயநினைவின்றி இருந்து இருக்கிறேன்…” என்று கேட்டான் உத்தியுக்தன்.
“எட்டு மணி நேரம்…” என்றதும் பற்களைக் கடித்தவாறு அமைதி காத்தான் உத்தியுக்தன்.
இத்தனை மணி நேரம் அவன் மனைவியின் அருகே இல்லாமல் இருந்திருக்கிறான்… நினைக்கும் போதே ஆத்திரம் வந்தது. மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தவாறு,
“சமர்த்தி எங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்..” என்றான் அடுத்து.
“ப்ரோ… லிசின்… உனக்கும் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது… இந்த நிலையில் நீ வெளியேற முடியாது… சொல்வதைக் கேள்…” என்று தடுக்க முயல, இவனோ திரும்பித் தன் தம்பியை அழுத்தமாகப் பார்த்தான்.
“சமர்த்தி எங்கே…” என்றான். அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தையும், வலியையும், இயலாமையையும், அதை வெளிக்காட்டாதிருக்க அவன் படும் முயற்சியையும் கண்ட அவ்வியக்தன்,
“சரி நான் அழைத்துச் செல்கிறேன்.. இங்கேயே இரு.. இதோ வருகிறேன்.” என்றுவிட்டுச் சென்றவன், எங்கிருந்தோ ஒரு சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் உத்தியுக்தன் நின்றிருந்த இடம் காலியாக இருந்தது.
அதைக் கண்டதும், ஆத்திரத்துடன் எதையோ முணுமுணுத்தவன், சக்கர நாற்காலி அங்கேயே விட்டுவிட்டு எலிவேட்டரை நோக்கிப் பாய்ந்தான்.
அதற்கிடையில் சமர்த்தி அனுமதிக்கப்பட்ட அறையை விசாரித்தவாறு வந்த உத்தியுக்தனை யாரும் உள்ளே விட அனுமதிக்கவில்லை.
“நோ யு கான்ட் கோ இன் சைட்…” என்று ஒரு தாதி மறிக்க, இவனோ அடக்கிய சீற்றத்துடன் அவரைப் பார்த்து,
“ஐ ஆம் ஹேர் ஹஸ்பன்ட்… ஐ நீட் டு சீ ஹர்…” என்றான். தாதியோ சற்றும் இரங்காதவராக,
“அவர் உங்கள் மனைவியாக இருக்கலாம்…. ஆனால் இப்போது அவர் எங்களுடைய நோயாளி… எங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் உள்ளே போக முடியாது…” என்று மறுக்க,
“ஸ்டாப் மி இஃப் யு டேர்…” என்றவன் ஆவேசத்துடன் கதவைத் திறந்து உள்ளே நுழைய, அங்கே தன் மனைவியின் நிலை கண்ட உத்தியுக்தன் மீண்டும் ஒரு முறை மயங்கும் நிலைக்கே சென்றுவிட்டான்.
“இல்லை… இல்லை… இது அவனுடைய மனைவியில்லை… நிச்சயமாக இல்லை… இப்படி முகம் கண்டி வீங்கி, முகம் தெரியாத அளவுக்குக் கழுத்தைச் சுற்றி, பாதுகாப்புப் பட்டிபோட்டு, தெரியும் இடங்கெல்லாம் குழாய்களைப் பொருத்தி, எஞ்சிய இடங்கள் முழுவதும் பிளாஸ்தர் என்று அடையாளம் தெரியாதிருந்த தன் மனைவியைக் கண்டு, மொத்தமாய் நடுங்கிப்போனான் உத்தியுக்தன்.
பாய்ந்து அவளை நெருங்கியவன், விழிகளில் கண்ணீர் பொங்கத் தலை முதல் கால்வரை பார்த்தான். அவன் கட்டுப்பாட்டையும் மீறித் தேகம் நடுங்கியது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. உடலிலிருந்து இரத்தம் வழிந்து செல்ல, நெஞ்சமோ சொல்லொணா வலியில் கிடந்து அடித்தது.
சிரமப்பட்டுத் தன்னைச் சமப்படுத்தியவனாக, தீப்பட்ட கரம் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தவனின் உதடுகள் நடுங்கின.
“நோ… நோ… நோ பேபி… ப்ளீஸ்… சே திஸ் இஸ் ஜெஸ்ட் எ ட்ரீம்… ப்ளீஸ் சே திஸ் இஸ் நத்திங்… ஓ காட்… சதி… உன்னை இப்படி என்னால் பார்க்க முடியவில்லையே… ப்ளீஸ் ஸ்டே வித்மி… பம்கின்… ஐ பெக் யு ப்ளீஸ்… ஸ்டே வித் மி…” என்று உடலோடு குரலும் நடுங்க கண்களில் கண்ணீர் பொங்கி வழிய, அவளைப் பார்த்து வேண்டினான்.
அவனுடைய குரலைக் கேட்டதும் அவளுடைய விழிகள் மட்டும் திறக்க முயல்வன போல அசைந்தன. மெல்லியதாக விரிந்து பின் மூடின…
அதைக் கண்டதும் பெரும் பரபரப்புத் தோன்ற, பாய்ந்து தன் மனைவியின் முகம் நோக்கிக் குனிந்தவன், அவளுக்குப் பக்கமாக மண்டியிட்டு அமர்ந்து,
“லிசின் டு மி கெயர்ஃபுளி பேபி… உனக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமேயில்லை… புரிகிறதா… நீ நலமாகி வீடு வந்துவிடுவாய்… நான் சொல்வது கேட்கிறதா… பம்பின்… வித்தவுட் யு ஐ ஆம் நத்திங்… ரியலி நத்திங்… நான் சொல்வதைக் கேட்கிறாய் தானே… ப்ளீஸ்… சதி… ப்ளீஸ்… டோன்ட் பணிஷ் மி லைக் தட்… ப்ளீஸ்… ப்ளீஸ்… இதோ பார் நீ நினைத்தது போல எதுவுமே தப்பாக நடக்கவில்லை… நம்புமா… சத்தியமாக எதுவும் நடக்கவில்லை… உன்னைத் தவிர வேறு எவளையும் இந்த ஜென்மத்தில் காதலியாய் மனைவியாய் யோசிக்கவே மாட்டேன்… இதோ பார்…” என்றவன் பரபரப்புடன் எழுந்து கண்ணீரைத் துடைத்து,
“என் வாழ்வில் நான் அழுதது கிடையாது சதி… இந்த அளவு கலங்கியது கிடையாது… ஏன் என்னுடைய வியாபார சாம்ராஜ்யம் உடைந்த போது கூட நான் உடைந்து போகவில்லை. ஜூலியட் என்னை விட்டு விலகியபோது கூடத் துடித்ததில்லை… ஆனால் இப்போது, உன் முன்பாக நான் அழுகிறேன்… துடிக்கிறேன்… தவிக்கிறேன்… அச்சம் கொள்கிறேன்…” என்றவன் நடுங்கும் கரம் கொண்டு அவளுடைய கரத்தைப் பற்றித் தன் இடது மார்பில் பதித்து,
“என் இதயத்தின் துடிப்பு உனக்குத் தெரிகிறதா சதி… இப்படி அச்சத்தில் ஒருபோதும் என் இதயம் துடித்ததில்லை தெரியுமா… அதுவும் கண்முன்னால் உன் நிலையைக் கண்ட நொடியிலிருந்து வேகமாகத் துடிக்கும் இந்த இதயம் இந்த விநாடிவரை குறைய வில்லை… இந்த நொடி வரை உனக்காக இது துடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வேளை உன்னதும் நின்றால், என்னதும் நின்றுவிடுமோ என்று பயமாக இருக்கிறது…” என்றவன் பேரலையாக எழுந்த வலியுடன் மெல்லியதாகச் சிரித்து,
“சாரி… எனக்கு எப்படி மன்னிப்புக் கேட்பது என்று தெரியாது… எப்படி யாசிப்பது என்றும் தெரியாது… இதுவரை இத்தகைய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டதில்லை… பம்கின்… இதுவரை நான் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அப்படியே நான் தவறு செய்ததாக நீ நினைத்தால்… என்னை நீ… மன்னிப்பாயா…? எதையும் என்னால் இழக்க முடியும் போலத் தோன்றுகிறது… ஆனால் உன்னை… உன்னை இழப்பது…” என்றவன் அவளுடைய கரத்தில் முத்தமிட்டுக் கண்ணீர் மல்கக் குலுங்கினான். வழிந்த கண்ணீரோ அவளுடைய கரத்தில் விழுந்து வழிந்து சென்றதன்றி அவளைக் கொஞ்சம் கூட அசைத்து எழுப்பவில்லை.
“அழுகிறேன்… முதன் முறையாக நிறைய அழுகிறேன் உனக்காய்… கண்ணம்மா… நீ எழுந்து வரவில்லை என்றால்… நானும் எழமாட்டேன் சதி… உன்னோடு என் உலகமே அழிந்து போகும்… ப்ளீஸ்… ஐ பெக் யு… வேக் அப் பேபி… ஐ கான்ட் லொஸ்ட் யு… நான் சொல்வது உண்மை… சத்தியம்… நீ மட்டும் திரும்ப வந்துவிடு சதி… நீ என்ன வேண்டினாலும் நான் செய்கிறேன்…” என்றவன் மீண்டும் அவள் விரல்களை அழுத்திக் கொடுத்து,
“பம்கின்… இதை எப்படியாவது உன்னிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன்… ஆனால்… சொல்ல முடியவில்லை… இப்போது சொல்லத் தோன்றுகிறது… ஆனால் அதைக் கேட்கும் நிலையில் நீ இருக்கிறாயா தெரியவில்லை… பட் ஐ ஹாவ் டு சே திஸ்… ஐ லவ் யு பம்கின்… ஐ லவ் யு சோ மச்… இந்த உலகை விட, என் உயிரை விட, எனக்கு உன்னை… உன்னை மட்டும்தான் பிடிக்கும் சதி… ஐ லவ் யு… எனக்கிருக்கும் குடும்பம் நீ மட்டும்தான்… நீயும் என்னை அனாதையாக்கிவிட எண்ணாதே… ப்ளீஸ் கம் பக் டு மி…” என்று தன்னை மறந்து வாய்விட்டழத் தொடங்க, அறைக் கதவு திறந்தது. இவனோ கதவு திறந்ததைப் பற்றி அக்கறை கொண்டதாகவே தெரியவில்லை. அவன் போக்கில் தன்னவளிடம் மன்றாடிக்கொண்டிருக்க,
“மிஸ்டர் இங்கே என்ன செய்கிறீர்கள்…” என்கிற கடினமான குரல் வந்தது. அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்தவன் சிரமப்பட்டு எழுந்து திரும்பி அங்கே நின்றிருந்த வைத்தியரைப் பார்த்தான்.
வைத்தியரும் அவன் முகத்தைக் கண்டதும், என்ன நினைத்தாரோ, கோபத்தைக் குறைத்தவாறு,
“யார் நீங்கள்…” என்று இழுக்க,
“இவளுடைய.. இவளுடைய கணவன்.” என்ற போது மீண்டும் கண்களில் கண்ணீர் உற்பத்தியானது. உடனே தன் கோபத்தை மறந்தவராக,
“ஐ ஆம் சாரி… மிஸ்டர்…” என்று பெயர் தெரியாமல் விழித்தவர், பின் தன் தலையைக் குலுக்கி,
“உங்கள் கூட நான் பேசவேண்டும் வாருங்கள்?” என்றவர் அவனை அழைத்துக்கொண்டு இன்னொரு அறைக்குச் சென்றார். இவனுடைய நிலையற்ற தன்மையைக் கண்டு, வருந்தியவராக, அங்கிருந்த இருக்கையில் அமருமாறு பணிய, அவனிருந்த நிலைக்கு அமரவேண்டித்தான் இருந்தது. இல்லை என்றால் சக்தி அணைத்தும் இழந்த நிலையில் கீழே கூட விழுந்திருப்பான்.
வைத்தியரோ சற்றுநேரம் அவனை இமைக்காது பார்த்தார். பின், “நீங்களும் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டீர்களா?” என்று கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவன்,
“எ… எனக்கு முன்னால்தான்… வி.. விபத்து நடந்தது…” என்று உடைந்தவனாய் கூறிய உத்தியுக்தனைப் பார்த்த வைத்தியர்,
“உங்கள் மனைவியை இங்கே அழைத்து வந்த போது, கிட்டத்தட்ட அவர்கள் மரணித்த நிலை தான்…” என்றதும் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய வலியுடன் வைத்தியரைப் பார்த்தவனுக்கு, நெஞ்சமே சிதைந்து போனது.
“காற்றுப் பைகள் அவரைக் காப்பாற்றி இருந்தாலும், இருக்கைப் பட்டி போடாததால் கையிலும் மார்பிலும் காலிலும் எலும்புகள் முறிந்திருக்கின்றன. முள்ளந்தண்டு எலும்பிலும் சின்ன பிசகல் வந்திருக்கிறது. கூடவே அடிபட்ட வேகத்தில் ஏற்பட்ட இரத்தபோக்கை எங்களால் நிறுத்த முடியவில்லை. அதனால்தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டியதாயிற்று…” என்றதும் கலங்கிப்போனான் உத்தியுக்தன்.
காலம் வரும்முன்னே மண்ணில் ஜனித்து விட்டதா குழந்தை. துடித்தவனாய்,
“கு… குழந்தைக்கு இப்போது… எ… எப்படி இருக்கிறது…” என்று உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்க, அவனைப் பரிதாபமாகப் பார்த்த வைத்தியர் சற்று நேரம் அமைதி காத்தார். பின் ஒரு பெருமூச்சுடன்,
“உங்கள் குழந்தையைப் பற்றிக் குழந்தை நல வைத்தியர் கூறுவார்…” என்று கூறியவர் பின், அவன் மனைவிக்கு, எப்படி எப்படி எலும்புகளை இணைக்கப்பட்டிருக்கிறது, இரத்தப் போக்கை நிறுத்த எந்த எந்த மருந்தைக் கொடுக்கவேண்டி இருந்தது, உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட காயத்திற்கு என்ன வைத்தியம் செய்தோம்… என்று அக்குவேறு ஆணிவேறாக அவர் விளங்கப்படுத்த, அவர் சொன்னதைக் கேட்டானா இல்லையா என்பது அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம். அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல் இவனுடைய காதுகள் அடைக்கத் தொடங்கின. புத்தி மந்தமாகிப் போனது. உலகம் சுழற்சியை நிறுத்தியிருந்தது. சுவாசத்திற்கான காற்றை யாரோ கொடுக்க மறுத்ததுபோலச் சுவாசிப்பதற்குச் சிரமப்பட்டவன் போலத் திணறிக் கொண்டிருக்கும்போதே,
“இப்போது அவர்களுக்குச் செயற்கை சுவாசம் கொடுத்திருக்கிறோம்… உங்கள் மனைவி உயிரோடு வருவதற்கு முப்பது விகிதங்கள்தான் வாய்ப்பிருக்கிறது. அப்படியே அவர் பிழைத்தாலும், அவருடைய வாழ்க்கை சக்கர நாற்காலி என்றாகலாம். ஏன் என்றால், லம்பர் ஸ்பைனல் எல் 4 விலகி இருக்கிறது… முடிந்தவரைச் சரியாக்கியிருக்கிறோம். எந்தளவு வெற்றிகரமாக இந்தச் சத்திர சிகிச்சை நடந்திருக்கிறது என்று அவர்கள் எழுந்தபின்தான் தெரியும்;…” என்று வைத்தியர் கூற, இவனோ, பலமாகத் தலையை அசைத்த, எதையோ கூற முயன்றான். வார்த்தைகள்தான் வர மறுத்தன.
மீண்டும் முயன்று வெற்றி கண்டவன் போல,
“ஐ… ஐ டோன்ட் கெயர்… என் மனைவியின் வாழ்க்கை சக்கர நாற்காலியில் என்றாலும் நான் கவலைப்படப்போவதில்லை… எனக்கு அவள் உயிரோடு வேண்டும்… உயிரோடு இருந்தால் மட்டும் போதும்… அவளுக்குக் கால்களாக நான் இருந்து கொள்கிறேன்… புத்தி செயல்படவில்லையா? அந்தப் புத்தியாக நான் இருந்துவிட்டுப் போகிறேன். கரங்கள் வேலை செய்யவில்லை என்றால் அந்தக் கரங்களாக நான் இருந்துவிட்டுப் போகிறேன்…” என்றவன் தன் இரு கரங்களையும் ஏந்தி,
“அவளை என் உள்ளங்கரங்களில் வைத்துத் தாங்கிக் கொள்கிறேன். எனக்கு அவளை உயிரோடு கொடுத்துவிடுங்கள் டாக்டர்… எவ்வளவு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை… என் மனைவியை மட்டும் என்னிடம் திருப்பக் கொடுத்துவிடுங்கள்… ப்ளீஸ்…” என்று குலுங்கி அழுதவாறு கேட்டவனைப் பரிதாபமாகப் பார்த்தார் வைத்தியர்.
அவராலும் வேறு என்னதான் செய்ய முடியும்… அவருடைய சிகிச்சையையும் மீறி ஒன்றிருக்கிறதே. என்னதான் அவர் முயன்றாலும், விதி என்ன நினைக்கிறது என்று அவருக்கெப்படித் தெரியும். அவருடைய அனுபவத்தில் இத்தகைய விபத்துகளில் சிக்கியவர்கள் உயிர்பிழைத்ததாகச் சரித்திரமில்லை. அதுவும் சமர்த்திக்கு வாய்ப்பேயில்லை என்கிற முடிவில் இருப்பவர் அப்படியிருக்கையில் எப்படிப் பொய்யான நம்பிக்கையை கொடுப்பார்? பரிதாபமாக உத்தியுக்தனைப் பார்த்தவர்,
“மிஸ்டர் உத்தியுக்தன்… வீ ட்ரை அவர் பெஸ்ட்… தயவு செய்து நம்பிக்கையைக் கை விடாதீர்கள்…” என்றவாறு, இருக்கையை விட்டு எழுந்து உத்தியுக்தனை நெருங்கினார்,
“உங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள் மிஸ்டர் உத்தியுக்தன்,” என்று கூற,
அந்த அதிர்ச்சியைத் தாங்கும் சக்தியில்லாமல் நடுக்கத்துடன் எழுந்தான் உத்தியுக்தன்.
அவனுக்கு எங்கே போவது என்ன செய்வது எதுவும் மந்தமாகிப்போன புத்திக்குப் புரிவதாயில்லை. அவன் மட்டும் ஏன் தப்பினான்? அவன் ஏன் இறக்கவில்லை. இத்தனை வலியையும் சுமக்கத்தான் உயிரோடு தங்கினானா? இப்படித் தாங்க முடியாத வலியைச் சந்திப்போம் என்று தெரிந்திருந்தால், மயங்கிய நிலையிலும் பாரதூரமாக எங்காவது மோதி உயிரை விட்டிருப்பானே… ஏன்… ஏன் அவனுக்கு மட்டும் உறவுகளின் பலம் கிடைக்க மாட்டேன் என்கிறது. அவன் அத்தனை அதிர்ஷ்டம் இல்லாதவனா…? எழுந்த வேதனையில் யாரோ இதயத்தை ஊசிகொண்டு குத்துவதுபோல வலிக்க மார்பைப் பிடித்தவாறு வெளியே வந்தவனுக்கு நடையில் பெரும் தள்ளாட்டம்.
அதே நேரம் உத்தியுக்தனின் வருகைக்காக வெளியே நின்றிருந்த அவ்வியக்தனைக் கூடப் பொருட்படுத்தாது, என்ன செய்கிறோம் என்கிற அறிவுமில்லாது, கனவில் நடப்பது போல நடந்து கொண்டிருந்தவனை வழிமறித்த அவ்வியக்தன்,
“ப்ரோ… வைத்தியர் என்ன சொன்னார்?” என்றான் மெல்லிய கலக்கத்துடன்.
அப்போதுதான் சுயம் வந்தவனாய் நிமிர்ந்து தன் தம்பியைப் பார்த்தான்.
இவன்… இவன் மட்டும்தான் இதற்கெல்லாம் காரணம். இவன் மட்டும் சமர்த்தியின் பார்வையில் சிக்காது இருந்திருந்தால், இன்று சமர்த்தி இவன் வாழ்க்கையில் நுழைந்திருக்கமாட்டாள். இப்போது வேர் பிடுங்கப்பட்ட கொடியாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்க மாட்டாள். அவனிடம் சிக்கி சின்னாப்பின்னப் பட்டிருக்க மாட்டாள்… இதற்கெல்லாம் மூல காரணம் இவன்.. இவன் மட்டும் தான்… அத்தனை வலியும் தேவனையும் தவிப்பும் ஆத்திரமாய் உருப்பெற, சற்றும் யோசிக்காமல் தன் தம்பியின் மூக்கில் ஓங்கி ஒரு குத்துவிட்டான் உத்தியுக்தன்.

