Wed. May 20th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 7

-7-

அவளுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டது தான் தாமதம், அவனுக்கும் அனைத்தும் மறந்து போனது.

தான் செய்வது சரியா, தவறா என்று அவனுக்கே புரியவில்லை. அவனும் நேரிழையை இழந்த துயரத்திலிருந்து வெளிவராதவனாக நெஞ்சம் விம்மி வெடிக்கத்தான் நின்றிருந்தான். ஆனால், அதையும் தாண்டி அவளுடைய இந்த நிலை அவனை அச்சமடையச் செய்ய, தன்னை நிலைப் படுத்துவதற்காகவா, இல்லை அவளை நிலைப் படுத்துவதற்காகவா என்று புரியாமலே அவளுடைய உதடுகளை அவன் முற்றுகையிட்டிருந்தான்.

அந்த இளம் உதடுகளை அவன் பலமாக அள்ளி எடுத்ததைக் கூட உணராமல், அவளுக்குக் கிடைத்த முதல் முத்தம் என்பது கூடப் புரியாமல் மலைத்துப்போய் நின்றிருந்தவளுக்கு, அவனிடமிருந்த உணர்ச்சிகள், உதடுகள் வழியாக அவளுடைய உதடுகளுக்குக் கடத்தப்பட்டதோ என்னவோ, மெது மெதுவாக அவனுடைய முத்தத்தையும், அவனுடைய அணைப்பையும் புரிந்து கொண்ட மூளை, அந்தச் செய்தியை அவளுடைய புலனுக்கு அனுப்ப, அது அவசரமாக அவள் உடல் முழுக்க நரம்பு வழியே கடத்திச் செல்லப்பட்டது.

அதுவரை அசையாது கிடந்த உலகம் சட்டென்று அசையத் தொடங்கியது அவளுக்கு. வீச மறந்து ஓய்ந்திருந்த புயல், இப்போது பலமாக வீசித் தள்ளியது. மரத்துப் போன உணர்ச்சிகள் அனைத்தும் பொங்கும் கடலலையாக அவளை முட்டி மோதித் தள்ளியது. அவனால் மட்டும் உயிர்த்தெழச் செய்யும் உணர்வுகள் பேரலையாக அவளை மோதின. உடல் நடுங்கியது. எல்லையில்லாத வலி, அவளுடைய புத்தியைத் தாக்க, அதைத் தாங்கும் சக்தியில்லாமல் அவளுடைய கால்கள் துவண்ட நேரம்,

“அப்பா…. அம்மா…” என்கிற மழலைக் குரல் இருவரின் பின்னாலும் கேட்டது.

அதுவரை அவள் உதடுகள் மூலம் அவளுடைய புலன்களை விழிப்படையச் செய்துகொண்டிருந்த ஆதியதுலனின் உடல் அந்தக் குரலில் அதிரச் சட்டென்று அவளை விட்டு விலக முயன்றான் ஆதியதுலன். ஆனால் அவளோ, அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாகத் துவண்டு சரியத் தொடங்க, சட்டென்று அவளை இறுகப் பற்றி நிலை நிறுத்தியவனுக்கும் உதறியது.

அத்தனை பேருக்கும் கொள்ளி வைத்துக் கழுவிய கால் கூட இன்னும் காயவில்லை. அதற்குள், இவளை முத்தமிட்டு நிற்கிறேன் என்றால்? கடவுளே எனக்கு என்ன ஆயிற்று? ஏன் இவள் வலியை, கலக்கத்தை என்னால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. ஏன் அடிவயிறு வலிக்கிறது. இதயம் நொறுங்கிப்போகிறது? துடித்தவனாகத் தன் கரத்தின் பிடியிலிருந்தவளைக் கைவிடாமலே, திரும்பிப் பார்த்தான்.

நேயநறுமையும் அவன் கொடுத்த முத்தத்தை விட, அம்மா என்கிற அந்த மழலையின் அழைப்பில் தான் குலுங்கிப்போய் நின்றிருந்தாள்.

பதட்டமும் பரிதவிப்புமாக அவனுடைய பிடியை உதறிவிட்டு நடுங்கும் கால்களை நிலை நிறுத்திக் குரல் வந்த திசையை ஏறிட்டுப் பார்த்தாள்.

அங்கே வேலையாளின் கையைப் பிடித்தவாறு கன்னத்தில் சிறிய கீறலோடு, நெற்றியில் புடைப்போடு கன்னத்தில் கண்ணீர் வடிய நின்றிருந்தது அந்த இரண்டு வயது பிஞ்சுக் குழந்தை. அந்தக் குழந்தையைக் கண்டதும், அதுவரை விறைத்துப் போய் நின்றிருந்த நேயநறுமையின் விழிகளில் மாற்றம்.

அவளிடமிருந்த இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து, அங்கே பெரும் வலி பிரவாகித்தது.

அப்படியே நேரிழையை உரித்துவைத்துப் பிறந்திருந்தது அந்தச் சின்னச் சிட்டு. அதைக் கண்டவளுக்கு இதையம் சிதைந்து போனது. தன்னை மறந்து அந்தக் குழந்தையை நோக்கி நகர்ந்தாள் நேயநறுமை.

கால்கள் நடுங்கின. உடல் குலுங்கியது. இத்தனைக்கும் அவளுடைய விழிகள் அந்தக் குழந்தையை விட்டு இம்மிகூட விலகவில்லை.

‘குழந்தை…! நேரிழையின் குழந்தை…! அவளுடைய உயிரான தங்கையின் சதையிலும் உதிரத்திலும் பிறந்த குழந்தை. அதுவும் அவளுடைய உயிரானவனின் விந்தணுவையும் சேர்த்துக் கலந்த உயிர் தேவதை…

நம்பமாட்டா அதிசயத்தைக் கண்டது போலக் குழந்தையை வெறித்துப் பார்த்து நிற்க, அதுவரை வேலையாளின் கரத்தைப் பிடித்திருந்த குழந்தை, அதை உதறிவிட்டுத் தந்தையிடம் பாய்ந்து அவனுடைய கால்களைக் கட்டிக் கொண்டு,

“அப்பா…” என்று விசும்பத் தொடங்கியது.

உடனே குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொண்ட ஆதியதுலன், குனிந்து குழந்தையின் பட்டுத் தலையில் முத்தமிட, கண்ணீரோ உருண்டு வந்து குழந்தையின் தலையில் பொட் பொட் என்று விழுந்தது.

“குழந்தை அம்மா வேண்டும் என்று அழுகிறது சார்… முடிந்த வரை சமாளித்துப் பார்த்து விட்டோம். நிறுத்தாமல் அழவும்தான் இங்கே அழைத்து வந்தேன்…” அந்த வேலையாள் சங்கடத்துடன் சொல்ல,

“இட்ஸ் ஓக்கே பரமு… நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போங்கள்…” என்றுவிட்டு அழுத குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுக்க, அந்தக் காட்சியையே பார்த்திருந்த நேயநறுமையின் தேகம் சட்டென்று சிலிர்த்தது.

அதுவரையிருந்த இறுக்கமெல்லாம் தளர்ந்த போக, இமைக்கும் நொடியில் அவனை நெருங்கி, அவன் கரத்திலிருந்த குழந்தையைப் பறித்துத் தன் கரங்களுக்கு எடுத்துக்கொண்டவள் அந்தக் குழந்தையையே உற்றுப் பார்த்தாள். மறு கணம் அவளிடம் பல மாற்றங்கள். முகம் கசங்கியது. கால்கள் தளர்ந்தன, இதயம் வேகமாகத் துடித்தது. அதற்கு மேல் தன் பாரத்தைக் கூடத் தாங்க முடியாதவளாகக் குழந்தையோடு கால்கள் மடங்கித் தரையில் சரிந்து விழுந்தவள், மறுகணம் குழந்தையின் உடலை அசுரத்தனமாக அணைத்தவாறு காட்டாற்று வெள்ளமாக விம்மி வெடித்துக் கதறத் தொடங்கினாள்.

“என் தங்கமே… என் நேருமாமா… சாரிடி… சாரி… உன்னை வந்து பார்த்திருக்கவேண்டும். தவறு செய்துவிட்டேன்… மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு… பிளீஸ்.. ஃபொர்கிவ் மீ… நீ அழைத்த போதெல்லாம் நான் அலட்சியம் செய்தேன். அது எத்தனை பெரிய தவறு என்று இப்போதுதான் தெரிகிறது… அன்று கூடச் சொன்னாய், செத்தால்தான் வருவாயா என்று… அந்த நேரம் நீ சொன்னதை நான் பெரிதாக எடுக்கவில்லை. இப்போது உன்னை இழந்து குற்ற உணர்வில் தவிக்கிறேன். பிளீஸ் நேருமாமா… என்னை மன்னித்துவிடு…” என்று நெஞ்சு வெடிக்கக் கதறியவள், அந்தக் குழந்தையைத் தனக்குள் புதைத்துவிடுவது போல இறுக அணைத்துக் கொண்டு,

“சத்தியம் செய்கிறேன் நேரு… இனி… இனி உன்னை விட்டுப் போக மாட்டேன். சத்தியமாகப் போக மாட்டேன்… நம்பு…” என்றவள் ஓங்காரமிட்டு அழுது கதற, அந்தக் காட்சியைக் கண்ட ஆதிய துலனின் தேகமே ஒரு கணம் நடுங்கிப் போனது.

யாரோ ஈட்டியால் தன் இதயத்தைக் குத்துவது போன்ற வலியில், குழந்தையை அணைத்தவாறு அழுதுகொண்டிருக்கும் நேயநறுமையைக் கண்டு இவனுடைய கண்களிலும் கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.

அவனால் அந்தக் காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதே நேரம் நேயநறுமையின் இந்த அழுகைச் சத்தம் கேட்டு, உள்ளே ஓடிவந்தார் பாஸ்கரன்.

தரையில் குழந்தையை இறுக அணைத்தவாறு ஓங்காரமிட்டுக் கதறியழும் நேயநறுமையைக் கண்டு, அவரும் ஒரு கணம் ஆடித்தான் போனார். பதட்டத்தோடு அவளைத் தேற்றுவதற்காக நகரத் தொடங்க சட்டென்று அவர் கையைப் பற்றித் தடுத்தான் அதியதுலன்.

கண்களில் எல்லையில்லா வலியோடு, திரும்பித் தந்தையைப் பார்த்து மறுப்பாகத் தலையை அசைத்தவன்,

“அ… அழட்டும்பா… மனம் ஆறும் வரைக்கும் அழட்டும்… விடுங்கள்… “ என்றான் வேதனையோடு அவளைப் பார்த்தவாறு.

இதோ, இவள் கதறி அழுவதைப் போல நெஞ்சமெல்லாம் வெடித்துச் சிதற, உடலில் உள்ள குருதியில் ஒரு துளி கூட மீதமில்லாமல் அதைக் கண்ணீராக மாற்றிக் கொட்டும் அளவுக்குக் கதறி அழவேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் முடியவில்லையே. என்ன செய்வான்.

எல்லையில்லா வலியோடு நின்றிருக்க, குழந்தையோ அவளுடைய அந்த அசுரத்தனமான அணைப்பிலும், அழுகையிலும் பயந்துபோய் வாயைப் பிளந்து கத்தி அழத் தொடங்கியது. இதைக் கண்டு தவித்த பாஸ்கரன்,

“கு… குழந்தைடா… அவளும் அழுகிறாள்…” என்றார் பேரனுக்கே உரித்தான் தவிப்போடு.

நெஞ்சுக்குள் இரத்தம் கசிய, மறுப்பாகத் தலையசைத்து,

“குழந்தை அழுவதால் எதுவும் ஆகிவிடாது. அவளுடைய வலியை மகிழால் மட்டும்தான் போக்க முடியும். மூன்று வருடங்களாக மனதில் அடக்கி இருக்கும் அத்தனை வலியும் வேதனையும், இறுக்கமும் இன்றோடு கரைந்து போகட்டும்…” என்றவன், அசையாமல் அங்கிருந்தவாறே அவள் அழுவதைப் பார்த்துக் கொண்டிருக்க அந்தக் காட்சியைப் பார்க்கும் சக்தியில்லாமல் சட்டென்று வெளியேறிவிட்டார் பாஸ்கரன்.

புயல் ஓய்ந்த பின் வரும் அமைதி போல, நீண்ட நேரத்திற்குப் பிறகு நெஞ்சம் பிழிய அழுது முடித்தவளிடம் கடைசியாக விசும்பல் மட்டும் எஞ்சியிருக்க, குழந்தையோ அவளுடைய பிடியிலிருந்து விலக முயன்று தோற்றது.

இவளும் விலக முயன்ற குழந்தையை இறுக அணைத்தவாறு மறுகரத்தால், குழந்தையைத் தலை முதல் கால்வரை வருடிக் கொடுத்தாள். முதுகைத் தட்டிக் கொடுத்தாள். ஏதோ நேரிழையையே வருடிக் கொடுப்பது போன்ற உணர்வில், குனிந்து அதன் தலையில் ஆழமான முத்தம் ஒன்றை வைத்தவள், குழந்தையைத் திரும்பத் தன் மார்புக் கூட்டில் பொத்திப் பிடித்து,

“ஐ பிராமிஸ் யு… ஐ வோட் லீவ் யு… என்னுடைய உயிர்மூச்சு இருக்கும் வரைக்கும், உன்னைக் கைவிடமாட்டேன் தங்கம்… காலம் முழுக்க உன்னோடு, உன்கூட வருவேன்… நேருமாமா, உன்னை நான் இழந்துவிட்டேன். ஆனால் உன் மகளை என் உயிருள்ளவரை இழக்கமாட்டேன்…” என்றவள், இப்போது விசும்பலோடு குழந்தையை விலக்கிப் பார்த்தாள். அதுவோ கன்னங்களில் கண்ணீர் பொங்கி வழிய, வாயைப் பிளந்து ஆதிய துலனை நோக்கிக் கைநீட்டித் தன்னைத் தூக்கு என்றது.

அந்த அழுகை இவளுக்கு எந்த வேதனையையும் கொடுக்கவில்லை. பதிலுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அப்படியே நேரிழை கண்முன்னால் அழுவது போன்ற திருப்தியில், அழுகையுடன் உதடுகளை விரித்துச் சிரித்தவள்,

“பேபி… யு… ஆர் சோ பியூட்டிஃபுள் லைக் யுவர் மம்…” என்றாள் முகம் கசங்க. பின் மீண்டும் அழுத குழந்தையை அணைத்துக் கொண்டவளின் உதடுகள் திரும்பவும் நடுங்கத் தொடங்க, அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆதியதுலன் அவளை நெருங்கி, மண்டியிட்டமர்ந்து அவளுடைய இறுகிய அணைப்பிலிருந்த குழந்தையை மெதுவாக விலக்க முயன்றான்.

ஆதியதுலன் குழந்தையை விலக்குவது புரிந்ததும், வீறு கொண்ட வேங்கையாகக் குழந்தையைக் கொடுக்க மறுத்துத் தன்னோடு இறுக்கிக் கொள்ள. அவளுடைய அந்த ஆவேச அணைப்பில் குழந்தைக்கு மூச்சு முட்டியது.

“ஷ்… நறுமை… குழந்தை பயப்படுகிறாள் பார்… பிளீஸ்… அவளை விடு…” என்றான் இவன் மென்மையாக.

இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து மேலும் குழந்தையை இறுக்க முயல, சட்டென்று அவளுக்கும் குழந்தைக்கும் இடையில் தன் ஒற்றைக் கரத்தை நுழைத்தவன்,

“ஷ்… இட்ஸ் ஓக்கே… இட்ஸ் ஓக்கே…” என்று இருவருக்குமே சொன்னவாறு வலிக்காமல் அவளிடம் இருந்து குழந்தையைப் பிரித்துத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டவன், திரும்பக் குழந்தையை அவள் பாய்ந்து வாங்க முதல் மறு கரத்தால், அவள் மார்பில் தன் கரத்தைப் பதித்து அவளைத் தடுத்து, குழந்தையைக் கீழே இறக்க, அதுவோ தந்தையின் கால்களை அணைத்தவாறு அவளைப் பயத்துடன் பார்த்து வெடித்து அழுதது.

அழும் குழந்தையைக் கண்டு உயிர் கசிந்தவள்,

“எனக்கு.. எனக்குக் குழந்தை வேண்டும்…” என்றாள் துடித்தவளாக.

“இப்போதில்லை… முதலில் உன்னை அசுவாசப் படுத்திக்கொள்…” என்றவன்

“பரமு…” என்று குரலை உயர்த்தி அழைக்க, ஓடி வந்தார் வீட்டில் வேலை செய்யும் வேலையாள்.

அந்த நேரம் அவனிடமிருந்து குழந்தையை வாங்க முயன்ற நேயநறுமையின் கரங்களை அடக்கும் முகமாகத் தன் ஒற்றைக் கரத்தால் அவளுடைய கரங்களை அழுத்திப் பிடித்தவன், உள்ளே வந்த பரமுவிடம்,

“குழந்தையை அப்பாவிடம் கொடுத்துவிடுங்கள்” என்றான்.

உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு போக முயல,

“நோ… எனக்கு நேரு மாமா வேண்டும்.. அவளை என்னிடம் கொடுக்கச் சொல்லுங்கள்.. பிளீஸ்… அவளை என்னிடம் கொடுக்கச் சொல்லுங்கள்” மீண்டும் அவள் கதறலாய்க் கேட்டவாறு குழந்தையை நோக்கிப் பாய முயல, கணப்பொழுதில் அவள் வயிற்றோடு தன் கரத்தை எடுத்துச் சென்று பாய்ந்தவளைத் தன்னை நோக்கி இழுத்தவன், அவளை இறுக அணைத்தவாறு தரையில் அமர்ந்து அவளையும் மடியில் அமர்த்த முயன்றான்.

மறுத்து விலக முயன்றவளின் வயிற்றோடும் மார்போடும் கரங்களை எடுத்துச் சென்று தன்னோடு இறுக்கிக் கொண்டவன், அவளுடைய கன்னத்தோடு தன் கன்னம் உரச,

“ஷ்… ஷ்… காம் டவுன் நறுமை… பிளீஸ் காம் டவுன்… இத்தனை காலம் சேர்த்துவைத்த அழுகையை எல்லாம் மொத்தமாகக் கொட்டியாயிற்று. இனி உன்னை அமைதிப்படுத்திக் கொள்…” என்று அவளை இளக்கும் குரலில் கூற, அதுவரை அவனிடமிருந்து திமிறிக் கொண்டிருந்தவள், அவனுடைய அந்த இறுகிய அணைப்பில் எதை உணர்ந்து கொண்டாளோ. திரும்பவும் தீராத வலியில் விம்மி வெடித்து விட்டாள்.

அவளை மேலும் தனக்குள் இறுக்கமாய் புதைத்துக் கொண்டவன், தன் மார்பில் விழுந்து கதறுபவளின் உச்சந்தலையில் தன் முகத்தைப் புதைக்க, அவளோ, அழும் வரைக்கும் அழுது முடித்துக் கடைசியாக சக்தியணைத்தையும் இழந்தவள் போல ஓய்ந்துபோய் விசும்பத் தொடங்க, இவனும் தன் அணைப்பை விடாது அப்படியே சிலை போல நீண்ட நேரமாக அமர்ந்திருந்தான்.

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
5
+1
1
+1
0
+1
14
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!