3
தன் இரு பெண்களுக்காகவும் சாப்பிடாமல் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த தேவசகாயம் கிறீச் என்கிற அலறலிலும், குய்யோ முறையோ என்கிற கூச்சலிலும் அலறி அடித்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்து கொள்ள, அவருடைய மூத்த மகள், புயல் வேகத்தில் தன் தந்தையை நோக்கிப் பாய்ந்து வர, வந்தவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டவர், அவள் கனம் தாங்காமல் பின்னால் இழுபட்டுச் சென்று சுவரில் மோதி நின்றார். ஆனாலும் மகளை அணைத்தவாறு,
“என்னடா…? என்னாச்சு…? எதற்காக இப்படி ஓடி வருகிறீர்கள்…?” என்று விசாரிக்கும் போதே, முறுக்கிய மீசை, தடித்த புருவங்கள், அது வேறு அழிந்து முகம் முழுவதும் பரவிப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்த தன் இளைய தேவதையைக் கண்டு முதலில் அதிர்ந்தவர் பின் சிரிப்பு பொங்க, தன்னை மறந்து பலமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
அதைக் கண்ட நேரிழைக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இடுப்பில் கைவைத்தவாறு தன் தந்தையை முறைத்தவள், புசுபுசு என்று எழுந்த கோபத்தோடு அவர் கையணைப்பில் சிக்கியிருந்த அக்காளைக் கண்டதும், விழிகளில் தீப்பொறி பறக்க,
“பாருங்கள்பா உங்கள் மூத்த மகள் செய்து வைத்திருக்கும் கைங்கரியத்தை…” என்றாள் கோபமாக.
தந்தையோ தன் சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கியவாறே,
“சரிடா… சரி… நான் கேட்கிறேன் தங்கம்… என் மைனாக் குட்டி எதற்காக இப்படிக் கோபப் படுகிறீர்கள்…? இருங்கள் நான் கேட்கிறேன்…” என்றவர் தன் கையணைப்பில் இருந்த மகளைப் பிரித்து,
“என்னடா இதெல்லாம்?” என்றார் வலுவாகக் கொண்டுவர முயன்ற கோபத்தோடு.
“அப்பா… எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்? உங்கள் மனைவியிடமே கேளுங்கள்…!” என்றாள் தங்கையைப் பார்த்து கலகலவென்று சிரித்தவாறு.
“என்னது…? அம்பியா இப்படியெல்லாம் செய்யச் சொன்னாள்…? என்ன தைரியம் அவளுக்கு. அம்மா… அம்பி…!” தன் குரலை உயர்த்திக் கூப்பிட, கையில் தும்புத்தடியோடு முன்னறை வந்தார் அம்பிகா.
அவர் வந்த கோலத்தைக் கண்டதும் சட்டென்று தன் தொனியை மாற்றிய தேவசகாயம், மெல்லிய அச்சத்தோடு அவர் கரத்திலிருந்த தும்புத்தடியைப் பார்த்தார்.
“என்ன சத்தம் இங்கே…?” அந்த வீட்டுக்கு அரசியாக இவர் குரலை உயர்த்திக் கேட்க,
“ஹீ… ஹீ… அதில்லைமா… மூத்தவளுக்கும் சின்னவளுக்கும் என்ன பிரச்சனை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்… நீங்கள்… போய் உங்கள் வேலையைப் பாருங்கள்…” என்று மனைவியை அங்கிருந்து அப்புறப் படுத்த முயல, அவரோ கரத்திலிருந்த தும்புத் தடியை ஓரமாக வைத்துவிட்டு,
“ம்… இதில் விசாரிக்க என்ன இருக்கிறது? காலையில் எழுந்து கொள்ளாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு உங்கள் மகள்கள் படுத்துக் கிடந்தார்கள். இதோ, இவளை எழுப்பி விட்டு, சின்னவளை எழுப்பச் சொல்லிச் சொன்னேன். அதற்கு இந்த வேலை பார்த்து வைத்திருக்கிறாள். இவளை…” என்றவர் திரும்பவும் தும்புத்தடியை கரத்தில் எடுக்க, பதட்டத்தோடு தன் மகளைக் கைவளைவிற்குள் கொண்டு வந்தார் தேவசகாயம்.
“சரிமா…! அதற்கேன் இப்படிக் கோபிக்கிறீர்கள். நான் பேசுகிறேன்… அந்தத் தும்புத்தடியைக் கொஞ்சம் அந்தப் பக்கம் வையுங்களேன்… பிளீஸ்…” கெஞ்ச, கோபம் மாறாமலே தும்புத் தடியை ஓரமாக வைத்தார் அம்பிகா.
நிம்மதி கொண்டவராக, குனிந்து தன் மகளைப் பார்த்த தேவசகாயம்,
“ஏன்மா இப்படிச் செய்தீர்கள்? பாவமில்லையா நேரு…?” என்றவர் தன் இளைய மகளைப் பார்த்து,
“நீங்கள் இங்கே வாருங்கள்…” என்றார் மறு கரத்தை விரித்து.
இப்போது இருவரையும் சமாதானப் படுத்த வில்லை என்றால், அன்றைய ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் தீர்ப்பு வழங்குவதிலேயே போய்விடும். தவிர, வீடு இரண்டு படும். ம்கூம் கட்டுப்படியாகாது.
ஆனால் இளையவளோ, தந்தையையும், அக்காளையும் முறைத்துவிட்டு,
“எனக்கும் ஒரு வாய்ப்பு வரும்.. அப்போது வைக்கிறேன் உமக்கு ஆப்பு…” கோபமாகச் சொன்னவள், தன் முகத்தில் பூசிய பூச்சை அழிப்பதற்காகக் குளியலறை நோக்கிச் செல்ல, மறு கணம் சுளீர் என்று நேயநறுமையின் பிட்டத்தில் ஒரு அடி விழுந்தது.
நேயநறுமைய துடித்தாளோ இல்லையோ, தந்தை துடித்துவிட்டார்.
“ஏய்… அம்பி… எத்தனை தரம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், குழந்தைகள் மீது கை வைக்காதீர்கள் என்று… கேட்கமாட்டீர்களா?” கோபமாகக் கேட்க,
“இல்லை… கேட்க முடியாது. முதலில் உங்கள் பெண்ணை ஒழுங்காக அடக்க ஒடுக்கமாக இருக்கச் சொல்லுங்கள்… எப்ப பார்த்தாலும், இளையவளோடு போட்டி போடவேண்டியது… இப்படி ஏதாவது செய்து அவளை அழவைக்க வேண்டியது. அவள் அமைதியாக இருக்கிறாள் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமா? ஏய் அப்பாவை கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தது போதும்… போ… போய்க் குளி…” மகளைக் கோபமாகத் திட்ட, வாகாகத் தன் தந்தையின் தோளில் சாய்ந்தவள், பழம்பெரும் நடிகை சரோஜாதேவியைப் போலக் காதுகளைப் பொத்தி,
“ஓ காட்… ஏன் மிஸ்டர் தேவசகாயம்… உங்களுக்கு இப்படி ஒரு மனைவி தேவையா? உங்களுக்கென்ன தலை எழுத்தா? பேசாமல் இவர்களை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு அழகான அமைதியான அடக்க ஒடுக்கமான பெண்ணாகப் பார்த்துக் கட்டவேண்டியதுதானே..” என்றாள் அன்னையைப் பார்த்தவாறு.
அதைக் கேட்ட தந்தைக்கோ சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கியவராக,
“நானா வேண்டாம் என்கிறேன்… உங்களுடைய அம்மா சம்மதித்தால் இப்போதே விவாகரத்துக் கொடுக்கத் தயார்தான்…” என்ற கணவனை விழிகள் இடுங்கப் பார்த்தார் அம்பிகா.
“ஆஹா… சும்மா இருந்த சிங்கத்தைச் சீண்டி விட்டேன் போல இருக்கிறதே… கன்றுக்குட்டி…. உங்கள் அம்மா நம் இருவரையும் விளக்குமாற்றால் சாற்றுவதற்குள்ளாக, போய்க் குளித்துத் தயாராகி வாருங்கள்… நான் அம்மாவைச் சமாதானப் படுத்துகிறேன்…” என்று அவசரமாகக் கூற, அதைக் கேட்டுச் சிரித்தவள், தன் தாயைப் பார்த்தாள்.
பின் கரத்தை நாடியில் வைத்து, முகத்தில் வியப்பைத் தேக்கி, எழுபதுகளில் வந்த நடிகைகள் போல விழிகளைப் படபடத்து,
“பாருங்களேன் அம்மா உங்கள் கணவரின் ஆசையை. சும்மா ஒரு பேச்சுக்கு விவாகரத்து எடுத்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யுங்கள் என்றுதான் சொன்னேன். கொஞ்சம்கூட மறுக்காமல், உடனே சரி என்றுவிட்டார். இவ்வளவும் தானா அவர் உங்கள் மீது வைத்திருக்கும் காதல்.?” என்றவள் ஒற்றைக் கரத்தை நெற்றியில் வைத்து, “ஐயகோ… இதைக் கேட்க யாருமே இல்லையா…? அதுவும் அழகான அடக்கமான அமைதியான பெண்ணாக அல்லவா பார்க்கப் போகிறாராம்! அப்படி என்றால், என்னுடைய அம்மா அழகாக இல்லையா? அறிவாக இல்லையா? அடக்கமாக ஒடுக்கமாக இல்லையா? எங்கள் வீட்டின் குத்து விளக்கைப் போய் இப்படிச் சொல்லி விட்டாரே இந்தப் பெரிய மனுஷன்! ஆணாதிக்கத்தைக் காட்டிவிட்டீர்களே அப்பா…! ஆணாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? இந்த வீட்டுக்காக ஓடாகத் தேய்ந்து, பாதியாக இளைத்துப் போயிருக்கும் என் அம்மாவைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா???” நீட்டி முழங்கியவள், பின் கோபமாகத் தந்தையைப் பார்த்து, “இதைச் சொன்னதற்காகவே அம்மா உங்களை விவாகரத்துச் செய்யவேண்டும்…” என்று அழகாகத் தட்டை திருப்பிப் போட, தேவசகாயத்திற்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது.
ஆணாதிக்கமா…? இது வரைக்கும் கட்டிய மனைவியைப் படுக்கையில் தவிர வேறு எங்கும், வா போ என்றுகூடச் சொன்னதில்லை. காலையில் மனைவி எழச் சிரமப்பட்டால் இவராக எழுந்து தேநீர் வார்த்துக்கொண்டு வந்து மனைவிக்கும் கொடுத்து தானும் குடிப்பார். இன்றைக்கும் மாதவிடாயின் போது அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் இவரே அனைத்தையும் செய்வார். அவரைப் போயா ஆணாதிக்கம் பிடித்தவர் என்று தன் மகள் சொல்கிறாள்…? அதுவும் என்ன மாதிரி தட்டை திருப்பிப் போட்டு விட்டாள்! அதிர்ந்து போய்த் திருத்திரு என்று விழித்தவர்,
“நான் எப்போது மகள் சொன்னேன். நீங்கள் தானே சொன்னீர்கள்?”
“அது… அது வந்து.. நான் சொன்னால் உடனே சம்மதம் சொல்ல வேண்டுமா? எனக்கு என் மனைவிதான் உலகம். அவள் தான் வாழ்க்கை. அவளை விவாகரத்துச் செய்வது இந்த ஜென்மத்தில் நடக்காது… அப்படி ஒன்று நடந்தால் என் உயிர் உடலில் தங்காது. இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும்?” என்றவள் திரும்பி தாயைப் பார்த்து,
“நன்றாகக் கேளுங்கள் அம்மா… உங்கள் கணவர் உங்கள் மீது வைத்திருக்கும் காதலின் லட்சணத்தைப் பாருங்கள்… இதில் பதினான்கு வயதிலிருந்து உங்கள் மீது காதலாம்…” என்று தாயின் கோபத்தைத் தந்தையின் பக்கம் திசை திருப்பியவள், திரும்பி தந்தையைக் கிண்டலாகப் பார்த்து,
“ஈ..” என்று பற்களைக் காட்டிவிட்டு, ஏதோ தன்னால் முடிந்த நல்ல காரியத்தை நிறைவு செய்தாகி விட்டது என்பது போலக் குளிக்கச் செல்ல, தேவசகாயமோ பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார். அதைக் கண்டதும் அம்பிகாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.
தன்னவரைப் பற்றி அவருக்குத் தெரியாதா என்ன?
“மூத்தவளோடு சேர்ந்து சிஞ்சா அடித்தீர்களே? இப்போது எப்படி? எத்தனை வாட்டி சொன்னேன், மூத்தவளை நம்பி பேசாதீர்கள் என்று! எப்போதும் போல, இன்றும் மூக்கு உடைபட்டீர்களா?” கிண்டலாகக் கேட்டவர், வாடி நின்ற கணவனைப் பார்த்து மேலும் சிரித்துவிட்டு,
“சரி… வாருங்கள் சாப்பாடு எடுத்து வைக்க உதவி செய்யுங்கள்…” என்று கணவனையும் அழைத்துக்கொண்டு சமையலறை செல்ல, இங்கே இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவளோ குளியலறைக்குள் தன் கைப்பேசியில் ஆங்கிலப் பாடல் ஒன்றைச் சத்தமாக எழுப்பிவிட்டு, அதற்குத் தோதாகக் கரத்தில் கிடார் பிடித்து, பிரேக் டான்ஸ் ஆடியவாறு, குளியலறை முழுவதும் தண்ணீர் தெறித்து விழக் குளித்துக் கொண்டிருந்தாள்.
நேயநறுமை குளித்துவிட்டு வந்தபோது மேசையில் உணவுத் தட்டில் உணவு படைத்திருக்க, தந்தையும், தங்கையும் அமர்ந்தவாறு இவளுக்காகக் காத்திருந்தார்கள்.
ஓடிவந்தவள், இருக்கையில் அமர்ந்திருந்த தங்கையின் தலையில் ஆசையாக ஒரு முத்தம் வைத்துவிட்டுப் பக்கத்தில் அமர்ந்து கொள்ள, திரும்பி தன் தமக்கையை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள் நேரிழை.
உடனே தன் தங்கையை இழுத்து அணைத்துக் கொண்டவள்,
“ஏய்.. என் தங்கை குட்டிக்கு இன்னும் கோபம் போகவில்லையா…? சாரிடி என் செல்ல கட்டி… நீ நல்ல உறக்கத்திலிருந்தாயா? கைகள் துருதுரு என்றதா? அதுதான்… அப்படிச் செய்துவிட்டேன். இனி இந்த ஜென்மத்திற்கும் இப்படி ஒரு தப்பைச் செய்ய மாட்டேன். சத்தியம்…” என்றவள் தட்டில் இருந்த இடியாப்பத்தைப் பிய்த்து தங்கையின் வாயில் ஊட்ட, அதை வாங்கிக் கொண்டாலும், முறைப்பு மாறாமல்,
“இதை ஆயிரமாவது தடவையாகச் சொல்கிறீர் அக்கா….” விழிகளை உருட்டினாள் இளையவள்.
“ஹீ… ஹீ… இனிமேல் செய்ய மாட்டேன் நேரு குட்டி… அம்மா மேல சத்…” அவள் முடிக்கவில்லை,
“கண்ணம்மா… என் மேல சத்தியம் செய்யடா… அம்மா மேல் வேண்டாம்…” பதறினார் தந்தை.
“சரி… அப்பா மேல சத்…”
“துடப்பங்கட்டை பிய்ந்துவிடும்….” காளியாக முறைத்தார் அன்னை.
“சரி… உன் மேல் சத்…” வேண்டாம் நேயா…” தாயும் தந்தையும் பதற,
“சரி… என் மேல்…”
“ஐயோ… நீ/நீங்கள்/நீர் சத்தியமே செய்ய வேண்டாம்….” என்று மூன்று குரலும் ஒன்றாக இவளுடைய காதைக் கிழிக்க, வில்லச் சிரிப்போடு மூவரையும் பார்த்து பல்லைக் காட்டினாள் நேய நறுமை.
“அப்போ நான் சொல்வதை நம்புகிறீர்தானே…” நேரிழையைக் கிண்டலாகப் பார்த்துக் கேட்க, கையெடுத்துக் கும்பிட்ட நேரிழை,
“ஆத்தா… நம்பிட்டேன்…” என்றாள் இதற்கு மேல் போராட முடியாதவளாக.
ஒவ்வொரு முறையும் இப்படி அக்காவிடம் ‘பல்ப்’ வாங்குவது அவள்தான். பல முறை இவளுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதுதான். ஆனால், அவளால் செய்ய முடிவதில்லை. அந்தக் குழந்தை போன்ற அழகிய குண்டு முகத்தை அசிங்கமாக்க இவளுக்கு மனம் வருவதில்லை. மீசை தாடி வரையப் போவதும், பின் முடியாமல் சின்னதாய் அவளுடைய கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பதுமாக வந்து விடுவாள்.
ஆனால் மூத்தவளுக்கு அந்த இரக்கமெல்லாம் கிடையாது. அவளுக்கு விளையாடக் கிடைத்த அழகிய பொம்மைதான் அவளுடைய தங்கை. அவளிடம் உயிரைக் கொடுக்கும் அளவுக்குப் பாசம் இருக்கிறது. அதே நேரம் அவளை வைத்தும் செய்வாள். இதோ இந்தச் சத்தியம் கூடப் பொய் தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல, திரும்பவும் வாய்ப்புக் கிடைத்தால், தங்கையை வைத்துக் கும்மி அடிப்பாள்.
அதனால் சத்தியம் செய்த தமக்கையைப் பார்த்து முறைத்துவிட்டு உணவில் கவனமாக, தன் தங்கையை அணைத்துக் கொண்டவள்,
“என் நேரு மாமா இப்படி எல்லாம் கோபிக்கக் கூடாது…! உம் ஆசை அக்கா இல்லையா நான்…? இன்னும் எத்தனை நாட்களுக்கு உன்னோடு இப்படி விளையாடப் போகிறேன்? இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், என்னை யாராவது ஒருத்தனுக்குத் திருமணம் செய்து வைத்து அனுப்பிவிடுவார்கள். அதற்குப் பிறகு இப்படி விளையாட நம்மால் முடியாது இல்லையா…?” குரலில் அத்தனை சோகத்தைத் தேக்கி முகத்தைப் பாவமாக வைத்துக் கூற, சட்டென்று கண்களில் கண்ணீர் உதித்தது தங்கைக்கு.
ஐயோ, அக்காவை திருமணம் செய்துவைத்து அனுப்பிவிட்டால் இவள் என்ன செய்வாள்? இவளால் சகோதரியைப் பார்க்காமல் இருக்கவே முடியாதே? அவளிடம் நடந்த விஷயங்களைச் சொல்லாவிட்டால் தூக்கமே வராதே? கலக்கத்துடன், நேயநறுமையைப் பார்த்தவள்,
“அப்படி எல்லாம் ஆகாது அக்கா… உமக்குத் திருமணம் ஆனாலும், இப்போது போலவே நாம் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாம்…” சொன்ன தங்கையை, நடிகை பத்மினி சோகமாகப் பார்க்கும் வகையில் பார்த்தாள்.
“ஆனால் உமக்கும் திருமணம் செய்து அனுப்பி விடுவார்களே நேரு… அதற்குப் பிறகு?” உதடுகள் நடுங்க, கன்னம் துடிக்கப் பெரிய விழிகளில் சோகம் வழியக் கூறிய அக்காளைக் கண்டு மனம் கசங்கித்தான் போனாள் இளையவள்.
“அது… நானும் என் புருஷனும் உம் கூடவே இருந்து கொள்கிறோம்…” சொன்ன தங்கையை உள்ளே எழுந்த சிரிப்போடு பார்த்தாள் பெரியவள்.
“பேசாமல் ஒன்று செய்யலாமா?”
“என்னக்கா…? திருமணம் செய்யாமல் இப்படியே இருக்கலாம் என்கிறீரா…? அதற்கு அம்மா அப்பா விடவேண்டுமே…”
“அதுதான்டி என் நேரு மாமா… நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பேசாமல் நாம் இருவரும் ஒருத்தனையே திருமணம் செய்து கொள்ளலாமா? அப்படி என்றால் ஒரே வீட்டிலிருந்து விடலாம்…” சகோதரி சொல்ல,
“ம் அது நல்ல…” என்றுகொண்டு வந்தவள், அப்போதுதான் சகோதரி சொன்னது மனதில் உறைக்க, வாயில் வைத்த இடியப்பம் பிரக்கேறி வெளியே தெறிக்க, விழிகள் அதிர்ச்சியில் தெறித்து விழ, “எதே…?” என்றாள். அதைக் கண்டதும் கலகலவென்று சிரிக்கத் தொடங்கிவிட்டாள் பெரியவள்.
பின் அதிர்ந்து பார்த்த தங்கையைக் கிண்டலாகப் பார்த்து,
“நீர்தானே கேட்டீர்? ஒரே வீட்டில் இருக்கலாம் என்று? அதற்கு நல்ல யோசனை சொன்னேன். இது தவறா?” என்றவள் மேலும் பொங்கிச் சிரித்தவாறு உணவை அள்ளி வாயில் போட,
“ஏய்… ஏன்டி கெக்கே பிக்கே என்று சிரிக்கிறாய்?” கேட்டவாறு வந்தாள் அன்னை.
அன்னையைக் கண்டதும், வாய்க்குள் இருப்பதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நேரிழை திருத்திரு என்று விழிக்க, அவளுடைய அதிர்ச்சிக்குக் காரணமானவளோ, எதுவுமே நடக்காதது போலத் தன் உணவை வாய்க்குள் அள்ளிப் போட்டவாறு,
“ஒன்றுமில்லை… இன்று எத்தனை மணிக்கு வகுப்பு..?. அழைத்துச் சென்று விடவேண்டுமா? என்று கேட்டேன்மா…” என்றாள் சாதுவாக.
“என்னது? இன்றைக்கு வகுப்பு? அதுவும் ஞாயிற்றுக் கிழமை…? இதில் நீ வேறு அழைத்துச் சென்று விடப்போகிறாய்? உன்னைப் பத்து மாதம் வயிற்றில் சுமந்து சிரமப்பட்டுப் பெற்று இந்தப் பூமிக்குப் பாரமாகப் போட்டவள் நான்… நீயாவது, உன் தங்கையை அழைத்துச் சென்று விடுகிறேன் என்று கேட்பதாவது… நம்புகிற மாதிரி ஒன்றைச் சொல்லேன்டி…?” என்றார் அம்பிகா கிண்டலாக.
அதைக் கேட்டதும் விழிகளை விரித்தவள்,
“அடக் கடவுளே… அம்மா… நீங்கள் என்னைப் பத்துமாதமாகவா சுமந்தீர்கள்… ச்சு… ச்சு… ச்சு… வட் எ ஸாட்… வட் எ ஸாட்… ஏம்மா…? மற்ற அம்மாக்கள் எல்லாம், தங்கள் குழந்தைகளை எத்தனை மாதம் சுமக்கிறார்களாம்?” என்றாள் வியப்புடன் புருவங்களை மேலேற்றி.
“வாயில் ஒன்று போட்டேன் என்றால் முப்பத்திரண்டும் கொட்டிவிடும்… வாயைத் திறக்காமல் சாப்பிடு…” என்றவர் தேவசகாயத்திற்குப் பக்கத்தில் அமர்ந்து கொள்ள,
“மா…”
“ம்…”
“கொஞ்சம் பழைய ஜோக்தான்… ஆனாலும் இந்த இடத்தில் சொல்லவில்லை என்றால், என் தலை சிதறிவிடும்… பிளீஸ்… சொல்லவா…?” கெஞ்சிக் கேட்க, மகளை ஒரு மாதிரி பார்த்தார் அம்பிகா.
“என்ன… வாயை மூடினால், எப்படிச் சாப்பிடுவது அதுதானே…?” அன்னை கேட்டதும் பற்களைக் காட்டி ஈ என்று இளித்து விட்டு,
“அதேதான் மம்ஸ்…” என்றாள் திருப்தியாக.
“ஏய்… மம்ஸ் என்றாய் அடுத்துக் கம்ஸ் வைத்து வாயை ஒட்டி விடுவென்… பேசாமல் சாப்பிடு…” தாய் மிரட்ட, சட்டென்று தந்தையின் பக்கம் சரிந்தவள்,
“பா… நிஜமாக இந்த லேடி ஹிட்லர் உங்களுக்குத் தேவையா… பேசாமல் அப்போது நான் சொன்னது போல, ஒரேயடியாகக் கழற்றி விட்டு, புதுசா, அழகா, அம்சமா முக்கியமா இளமையா, லேட்டஸ்ட் மாடலா ஒருத்தியைப் பார்க்கலாமா… பிளீஸ்… அப்போதுதான் நல்ல நாள் பெரு நாட்களில் எனக்கும் நேருவுக்கும் இரண்டு பரிசுகள் கிடைக்கும்…. பிளீஸ்பா… சே யெஸ்…” என்று கெஞ்சலாகக் கேட்க, தேவசகாயமோ, தொண்டையில் இட்டலி விக்க, பரிதாபமாகத் தன் மகளைப் பார்த்து விட்டுப் பின் தன் மனைவியைப் பார்த்தார்.
அம்பிகாவோ ஒரு துண்டு இட்டலியை வாயில் திணித்தவாறு,
“என்னடி…? திரும்பவும் விவாகரத்துச் செய்யச் சொல்லி பரிந்துரையா?” என்றார் கிண்டலாக.
அதைக் கேட்ட நேயநறுமை, வாயில் வைத்து இருந்த இட்டலியை மெல்ல முடியாமல் மலங்க மலங்க விழித்துவிட்டு அவசரமாக, தண்ணீரைக் குடித்துத் தொண்டைக்குள் அடைத்த இட்டலியை உள்ளே தள்ளிவிட்டு, அசடு வழிந்து,
“ஐயோ அம்மா…! எப்போது பார்த்தாலும் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என்னை ஒரு வில்லியாகவே காட்ட முயல்கிறீர்கள்… நான் விவாகரத்துச் செய்யச் சொல்லிச் சொல்லவே இல்லை. பேசாமல் உங்களைக் கழற்றி விட்டுவிட்டு, புதுசா, அழகா, அம்சமா முக்கியமா இளமையா ஒருத்தியை பார்த்துத் திருமணம் முடியுங்கள் என்று தான் சொன்னேன்… இல்லையாப்பா…” என்று தந்தையை வம்புக்கு இழுக்க, தேவசகாயம் தன் இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தினார்.
“ஆத்தா…! கெஞ்சிக் கேட்கிறேன், என்ன விட்டு விடு…! நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை… உங்களுடைய அம்மாவுடன் மல்லுக்கு நிற்க என்னால் முடியாதப்பா… ஆனாலும் நீங்கள் சொன்ன அழகாய்… இளமையாய்… ம்.. அது பிடித்து இருக்கிறது… யோசிக்கலாம்…” என்றார் நமட்டுச் சிரிப்புடன். அதைக் கேட்ட அம்பிகாவோ,
“ம்கும்… முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையில் பார்த்தால் தெரியும்… இவர்லாம் அதற்குச் சரிப்பட்டு வரமாட்டார்…” என்றார் உறுதியாக.
“என்னது…? என்னோட அப்பா அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டாரா? ஹலோ… என்னோட அப்பாவைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவரின் அறிவுக்கும், அழகுக்கும், கம்பீரத்துக்கும், இப்போ… இந்த நிமிஷமே… இப்படி… இப்படி விரலைச் சுண்டினால் போதும், ஆயிரம் பேர் வரிசையில் வந்து நிற்பார்கள்…” மகள் தந்தையைப் பற்றிப் பெருமையாகச் சொல்லச் சொல்ல, தேவ சகாயத்தின் நெஞ்சு பெருமையில் நிமிர்ந்தது. தலை உயர்ந்து பெருமையின் பீற்றலோடு தன் மனைவியைப் பார்க்க, அம்பிகாவோ, கிண்டலாகத் தன் கணவனைப் பார்த்தார்.
“நீ சொல்வது என்னவோ சரிதான். ஆனால், இன்னொருத்தியைப் பார்ப்பதற்கு முக்கியமானது தேவை தைரியம். அந்தத் தைரியம் என்கிற வஸ்து உன் அப்பாவிடம் இருக்கிறதா என்று முதலில் பார்த்துக் கொள். பிறகு நடு வழியில் உன்னை அம்போ என்று விட்டு விடுவார்…”
“ஏன்…? ஏன் இல்லை…? அப்பாவுக்கு அது எல்லாம் நிறைய இருக்கிறது. அந்தக் காலத்திலேயே உங்களைத் தைரியமாகப் பார்த்து சைட் அடித்துத் திருமணம் முடித்தவருக்கு, இப்போது மட்டும் அந்தத் தைரியம் இல்லாமல் போய்விடுமா என்ன?”
“அப்படி என்கிறாய்? ஏன்பா…? நிஜமா இன்னொருத்தியை ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் உங்களுக்கு இருக்கா என்ன?” கேட்ட மனைவியைத் தைரியமாகப் பார்ப்பது போலப் பார்த்தார் தேவ சகாயம்.
“ஏன்… ஏன் இல்லை…? அது நிறையவே இருக்கிறது…” சொன்னவரை நமட்டுப் புன்னகையுடன் பார்த்த அம்பிகா,
“எப்படி…? போகவிட்டுப் பின்னால் பார்ப்பது தானே…? அதுதான் எனக்குத் தெரியுமே…!” அம்பிகா கிண்டலுடன் சொல்ல, அசடு வழிந்தார் தேவசகாயம்.
“அப்பா… நிஜமாவாபா…” நேரிழை கேட்க, தன் மகள்களைப் பரிதாபமாகப் பார்த்தார் தேவசகாயம்.
“உங்கள் அம்மா சொல்வது என்னவோ உண்மை தான்டா… இருபத்தாறு வருடங்களுக்கு முன்னாடியே உங்களுடைய அம்மாவின் முகத்தைப் பார்த்து இருந்தால் ஆளை விடு சாமி என்று தப்பிப் பிழைத்திருப்பேன்… ஆனால் தைரியம் இல்லாமல், உன் அம்மாவின் பிடரியைப் பார்த்தல்லவா காதலில் விழுந்தேன். இப்போதிருக்கும் அறிவு அப்போது இருந்திருந்தால்… ம்.. நீ சொன்னது போல இன்னும் அழகான ஒருத்தியாகத் திருமணம் முடித்து, இன்னும் அழகான பெண்களாகப் பெற்று இருக்கலாம்… காலம் கடந்த ஞானோதயம்…” என்று தன் மக்களின் காலையும் ஒன்றாகச் சேர்த்து வாரி விட்டவர் பின் யோசனையாகத் தன் தாடியைச் சொறிந்தவாரே.
“நீங்கள் சொல்வதும் சரிதான் மகள்… வேண்டு மானால் ஒன்று செய்யலாம்… நீங்களே அழகான, இளமையான பெண்ணாகப் பாருங்கள். உங்களைப் போல இல்லாமல் வடிவான தேவதைகள் போலக் குழந்தைகளாகப் பெற்று உலக அழகிப் போட்டிக்கு அனுப்பி வைக்கிறேன்…” என்று அவர் சொல்ல, இரண்டு பெண்களுக்கும் முகம் சிவுசிவு என்று சிவந்தது.
“அப்போ நாங்கள் அழகில்லையா…?” கோபத்துடன் எகிற, அம்பிகாவோ அதிகம் அலட்டிக் கொள்ளாமல்,
“சரி… நீங்கள் ஆசைப்பட்டது போலவே அழகான பெண்களைப் பார்க்கிறோம். அதற்கு முதல் நீங்களும் பார்ப்பதற்கு ஓரளவு நன்றாக இருக்கவேண்டுமே. ஒரு வேளை உங்களைக் கொண்டு குழந்தைகள் பிறந்து விட்டால்…” மனைவி கேட்க அவரை முறைத்தார் தேவசகாயம்.
“ஏன்… எனக்கு என்ன குறைச்சல் அம்மா…? நான் ஆம்பிளை சிங்கம்… என்னுடைய கடைக் கண் பார்வைக்காக வேலைத் தளத்தில் எத்தனை பெண்கள் காத்திருக்கிறார்கள் தெரியுமா?” சொன்னவரை நிதானமாக ஏறிட்டார் அம்பிகா.
“ஆ… அது தெரியுமே. ஏன் என்றால் அவர்களுக்குக் கிடைத்த ஒரே இளிச்சவாயன் நீங்கள் தான். சார்… சார்… இது டலி பண்ண மாட்டேன்கிறது… ஒரு வாட்டி சரி பார்க்கிறீர்களா?” என்று கேட்டதும், உடனே அவர்களின் வேலையை உங்கள் தலையில் போட்டுச் செய்து முடிப்பவராயிற்றே… அப்படி இருக்கையில் உங்களைப் பார்த்து வழியாமல் என்ன செய்வார்களாம்…?” என்றார் அவர்.
“அது… அதெல்லாம் இல்லை… அன்று கூட ஒருத்தி சொன்னாள் தெரியுமா…? சார் யு லுக் ஹான்ட்சம் என்று…”
“அப்படியே சொல்லிவிட்டு அவள் வேலையை உங்கள் தலையில் கட்டி இருப்பாளே…” என்றார் அம்பிகா என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்தவாறு.
ஒரு கணம் அசடு வழிந்தவர்,
“என்ன செய்வது அம்பி… அவர்களைப் பார்த்தால் என் நேயா, நேருவைப் பார்க்கிறது போலவே இருக்கிறதுடா. மறுக்க முடிவதில்லை…” அவர் சொல்லச் சிரித்தார் அம்பிகா.
ஆனாலும் உங்கள் தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அந்த வயதுக்கேற்ற நரை முடியை வைத்துக் கொண்டும் ஒருத்தியைப் பார்க்க முயல்கிறீர்கள் பாருங்கள், அங்கே இருக்கிறீர்கள் நீங்கள்…. எதுவாக இருந்தாலும் முதலில் அந்த நரைத்த முடிக்கு டை அடியுங்கள் இல்லை என்றால் அவள் பயந்து ஓடிவிடுவாள்…” என்றாள் அம்பிகா நகைப்புடன்.
“ஏய்… எதை வேண்டுமானாலும் பேசுங்கள். என் நரை முடியைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். இளமைக்கு நரை அழகு… ஐயா எப்போதும் இளமையாக்கும்… இப்போது கூட என்னை எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள்…” பீற்றிக் கொள்ள, விழிகளை வியப்போடு விரித்தார் அம்பிகா. அப்படியே தன் மகள்களைப் பார்த்து,
“உங்கள் அப்பாவிற்கு வயதுதான் போய் விட்டது என்று நினைத்தேன். ஆனால் காதும் போய்விட்டது என்று இப்போது தான் தெரிகிறது…” என்றவரைப் புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.
“ஏன்மா…” என்றாள் நேரிழை.
“இல்லை… எந்தக் கல்லூரியில் ஹெட் மாஸ்டராக இருக்கிறீர்கள் என்று கேட்டது, இவர் காதில் எந்தக் கல்லூரியில் படிக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறது பாரேன். எதற்கும் நல்ல இ.என்.டி ஸ்பெஷலிஸ்டிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும்…” என்றார் கவலையாக.
அதைக் கேட்டு இரு பெண்களும் பலமாகச் சிரிக்க, அந்தச் சிரிப்பை இரசித்துப் பார்த்தார் தேவசகாயம். கூடவே தானும் சேர்ந்து சிரித்துவிட்டு,
“இப்போது சிக்கல் அதில்லை அம்பி… உங்களோடு வாழ்ந்த பிறகு இன்னொரு திருமணத்தை நினைத்தாலே பகீர் என்று ஆகிறது தெரியுமா. நினைக்கும் போதே பயம்ம்ம்மா இருக்கிறது… அதனால் இந்த ஜென்மத்தில் உங்கள் கூடவே வாழ்ந்து தொலைக்கிறேன்… அழகான பெண்களைப் பெற்றுக்கொள்வதையெல்லாம் அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்கிறேன்..” என்றார் அவருக்கு விதித்த விதி அதுதான் என்பது போல.
“அப்போ, அழகான ஒருத்தியை மணந்தால் தான் அழகான குழந்தைகளைப் பெற முடியும் என்றால், நீங்கள் அழகாக இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே…” இளையவள் தந்தையின் காலை வார,
“அது… அது வந்து.. ஆம்பளைக்கு என்ன அழகு… அவன் அறிவானவனா கம்பீரமானவனா இருந்தால் போதும்…” என்றார் சமாளிப்பாக.
அதைக் கேட்ட அம்பிகாவோ,
“இதைத்தான் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது. இந்த மூஞ்சைக்கு நானே அதிகப்படிதான், பேசாமல் சாப்பிட்டு முடியுங்கள். நிறைய வேலை இருக்கிறது எனக்கு…” என்றவர் நேரிழையைப் பார்த்தார்.
“நேருமா… உன்னுடைய பரிட்சை எப்போது முடிகிறது?” கேட்க, சொன்னாள் அவள்.
“ம்… முடிந்ததும் வைத்தியரிடம் போய் வரலாமாடா…” கேட்க யோசித்த நேரிழை சரி என்று தலையை ஆட்டினாள்.
“ஏன்மா… நேரு மாமாவுக்கு என்ன பிரச்சனை?” கவலையாகக் கேட்டாள் நேயநறுமை. வாய்க்குள் உணவை அதக்கியவாறே,
“ப்ச்… புதிதாக ஒன்றுமில்லை. வருடாந்த பரிசோதனைகள்தான்…” என்றார் அம்பிகா. இவளோ உச்சுக்கொட்டிவிட்டு,
“அதுதான் அவளுக்கு விரைவாக எல்லாம் சரியாகிவிடும் என்று வைத்தியர் சொன்னாரேமா…” என்ற மகளிடம் தலையை ஆட்டிவிட்டு,
“ம்… ஆனால்… இன்னும் சரியான பாடில்லையே நேயா… இப்போதும் மூன்ற நான்கு மாதங்கள் கழித்துத்தான் மாதவிடாய் வருகிறது…” என்றார் வருத்தமும் யோசனையுமாக.
“கமான் மா… அவளுக்கு உட்சுரப்பிகளின் செயற்பாடு குறைவதால் மாதவிடாய் மாதா மாதம் வராமல், ஒரு சில மாதம் விட்டு வருகிறது. முன்னைக்கு இப்போது பரவாயில்லைதானே… விடுங்கள்மா… சரியாகிவிடும்…” அவள் தைரியம் சொல்ல,
“நன்றாக சொல்லும் அக்கா… இந்த அம்மாவுக்கு இதுவே வேலையாகப் போய்விட்டது. விட்டால் எனக்கு மாதவிடாய் வரும் மாதங்களில் எல்லாம் பூப்புனித நீராட்டுவிழா செய்துவிடுவார்கள் போல…” கிண்டலாகச் சொல்ல, மகள்களை முறைத்த அம்பிகா,
“தாயாக இருந்து பாருங்கள். அப்போதுதான் என் தவிப்பும் கவலையும் தெரியும்… நீயாவது பன்னிரண்டு வயதில் பெரியபெண்ணானாய். இவள் பதினைந்து வயதில்தான் பெரியபெண்ணானாள். அதற்குப் பிறகு ஒரு வருடம் கழித்துதான் அடுத்த மாதவிடாய் வந்தது. இந்த மூன்று வருடங்களில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்தான் வருகிறது. இதைச் சொன்னால், ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று என்னையே கேட்கிறீர்கள்.” கவலையாகச் சொல்ல, தன் மனைவியையும் மகளையும் கவலையாகப் பார்த்தார் தேவசகாயம்.
“அம்மா சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறதுடா. எதற்கும் வைத்தியரைப் பார்த்துவிட்டு வந்தால் நல்லதுதானே…? தகுந்த நேரத்தில் செய்யும் சிகிச்சைதான் பலனளிக்கும்” சொல்லச் சிரித்தாள் இளையவள்.
“அதுதான் வருடத்திற்கு ஒரு முறை அம்மா அழைத்துச் சென்றுவிடுகிறார்களே அப்பா. நான் மாட்டேன் என்றாலும் விடவா போகிறார்கள்…” மகள் சொல்ல, சிரித்த தேவசகாயம், தன் உணவில் கவனமாக, அந்த நேரம் கைப்பேசி சத்தமிட்டு அவரை அழைத்தது.

