மறு நாள் நேயநறுமை எழுந்த போது, தான் படுக்கையில் கிடப்பதைக் கண்டு குழம்பிப்போனாள். முன்னிரவு ஆதியதுலனின் வருகைக்காகக் காத்திருந்து கடைசியாக மகிழினியை ஆடுகதிரையில் வைத்துக்கொண்டு உறங்கிப்போனது நினைவுக்கு வந்தது. ஐயோ குழந்தை? பதறியவள், தான் இரவாடை அணிந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்தவளாக வெளியே வந்து, குழந்தையின் அறைக்குள் நுழைந்து பார்த்தாள். குழந்தை தொட்டிலில் சமத்தாக உறங்கிக்கொண்டிருந்தது.
நெஞ்சில் கரம் பதித்து நிம்மதி கொண்டவளுக்குக் குழந்தை எப்படி தொட்டிலுக்கு வந்தது என்பதை ஊகிக்க முடிந்தது. அவளுடைய அணைப்பிலிருந்த குழந்தையை ஆதியதுலன்தான் தூக்கி அதன் தொட்டிலில் கிடத்தியிருக்க வேண்டும். குழந்தை சென்றதும், தூக்கக் கலக்கத்தில் எழுந்து கட்டிலில் வந்து படுத்திருக்கிறாள் போல.
ஆக, ஆதியதுலன் வந்துவிட்டான். அவளையும் மீறி இதயம் மகிழ்ச்சியில் துள்ள, குனிந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, ஆசையுடன் அதன் தலைமுடியை வருடிவிட்டு மீண்டும் அறைக்கு வந்தாள்.
குளிக்கும் எண்ணத்தில், தன்னுடைய ஆடைகள் அடங்கிய பெட்டியை முக்கித் தக்கித் தூக்கிக் கட்டிலில் வைத்தவளுக்கு, நெஞ்சே விண்டு போனது. அந்தப்பா பாரமான பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் வைப்பதற்கே தனியாக முட்டை குடிக்கவேண்டும் போல.
எரிச்சலுடன் நினைத்தவள், பேசாமல் பாஸ்கரன் சொன்னது போல ஆடைகளை அங்கிருந்த அலமாரியில் வைத்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியது. எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிப் பெட்டியைத் தூக்குவதும் வைப்பதுமாகச் சிரமப்படுவது? நினைத்தவள், விரைந்து சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள். இரண்டு அலமாரிகளிலும், அவனுடைய ஆடைகள்தான் தொங்கிக்கொண்டிருந்தன. உடனே ஒரு பக்கத்து ஆடைகளை அப்படியே அள்ளி எடுத்து மறுபக்கம் வைக்கத் தொடங்கியவள், கடைசியாகத் தொங்கிய ஆடைகளை வெளியே எடுக்கும்போது, அவளுடைய கால்களில் வந்து விழுந்தது அந்த சிவப்பு நிறக் கோப்பு.
அது நேரிழையுடையது. அன்றும் அதைப் பார்த்துவிட்டு, உள்ளே சென்று ஆராயப் பிடிக்காமல் அதே இடத்தில் வைத்திருந்தாள். இப்போது அதில் என்ன இருக்கும் என்று பார்க்கும் ஆவல் உந்த, மெதுவாக அந்தக் கோப்பை விரித்தாள் நேயநறுமை. அந்த நேரம் பார்த்தா அவளுடைய கைப்பேசி அழைக்க வேண்டும்?
கைப்பேசி அழைக்கக் கவனம் சிதைந்து திரும்பிப் பார்த்தாள். உடனே தன் கையிலிருந்த கோப்பை கட்டிலில் வைத்துவிட்டு நடந்து சென்று கைப்பேசியை எடுத்துப் பார்க்க, ஆல்ஃபிரெட்தான் அழைத்திருந்தான். அவசரமாக அதை உயிர்ப்பித்துக் காதில் வைத்தவள்,
“ஹாய் ஆல்ஃபிரெட்… எப்படியிருக்கிறாய்” என்றாள். சம்பிரதாயக் கேள்வியாக.
“ப்ச்… நீ இல்லாமல் நன்றாகவேயில்லை நறுமை. எப்போது இங்கே வருகிறாய்? ரியலி ஐ மிஸ் யு” அவனுடைய குரலில் பரிதவிப்புத் தெரிய, இவளுக்கு இப்போது எரிச்சல்தான் வந்தது.
என்னதான் தன் நிலையைச் சொன்னாலும், கேட்காமல், அதிலேயே தொங்கிக் கெண்டிருந்தால், இவளும் என்னதான் செய்வது?
“கமான் ஆல்ஃபிரெட்… தயவு செய்து இப்படி உளறுவதை நிறுத்து? ஏற்கெனவே உன்னிடம் சொல்லிவிட்டேன், எந்த ஆசையையும் வளர்க்காதே என்று… திரும்பவும் அதிலேயே நின்றால் நான் என்ன செய்யட்டும்?” எரிச்சலும் கோபமுமாகக் கேட்க, ஆல்ஃபிரெட்டோ அவள் மறுப்பை ஒரு பொருட்டாக எடுப்பதாயில்லை.
“என்றாவது ஒரு நாள் உன் மனது மாறும் என்கிற நம்பிக்கைதான் நேயா…” என்றான் அவன் எதிர்பார்ப்போடு. அதைக் கேட்டவளின் உதடுகள் இளக்காரமாக வளைந்தன.
மாறும் மனதா அவளுடையது? இல்லை அவள் மனத்தைத்தான் யாராலும் மாற்ற முடியுமா?
“ஆல்ஃபிரெட்… புரிந்து கொள். நீ நினைப்பது ஒரு போதும் நடக்காது. பேசாமல் உன் இனத்தில் ஒருத்தியை பார்த்து மணந்து கொள்…” அவள் அழுத்தமாகச் சொல்ல,
“என்று நீ எனக்கில்லை என்பதை நான் உறுதி செய்கிறேனோ, அதற்குப் பிறகுதான் அது பற்றி யோசிப்பேன்…” அவன் சொல்லப் பொறுமையிழந்தாள் நேயநறுமை.
“அல்ஃபிரட்…” அவள் எதுவோ சொல்ல வர, சட்டென்று அவளுடைய கைப்பேசி பறிக்கப்பட்டது. அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்க்க, ஆதியதுலன்தான் இறுகி விறைத்துப் போன முகத்தோடு நின்றிருந்தான்.
“வட் த ஹெல் ஆர் யு டூயிங்…” சீறியவள், அவன் கரத்திலிருந்து தன் கைப்பேசியைப் பறிக்க முயல, அவனோ தன் கரத்தை மேலே தூக்கியிருந்தான். அவனுடைய உயரத்திற்கு இப்படித் தூக்கிப் பிடித்தால், அவளால் எப்படி வாங்க முடியும்? துள்ளி அவனிடமிருந்து பறிக்க முயன்ற நேரம், அவன் மேனியோடு இவள் தேகம் மோதிக்கொள்ள, அவனோ சுலபமாகவே அவள் இடையோடு தன் கரத்தை எடுத்துச் சென்று தன்னோடு அழுத்தியவன், அவளை நகர விடாமல் செய்து, தன் கரத்திலிருந்த கைப்பேசியைக் காதில் வைத்தான்.
இவளோ அவனிடமிருந்து விடுபட முட்டி மோதித் தன்னைப் பிரித்தெடுக்க முயன்று தோற்றவள், முடியாமல் போக ஆத்திரத்தோடு அவன் மார்பில் படபடவென்று அடிக்க, அங்கே சுளீர் என்று ஏற்பட்ட வலியில் முகம் சுருங்கினாலும், அவன் தன் பிடியை விட்டானில்லை.
“நேயா… ஆர் யு ஓகே… என்னாயிற்று… நான் பேசுவது கேட்கிறதா? நேயா…? இதோ பார் நேயா நீ சம்மதிக்கும் வரை உன்னை விடப்போவதில்லை. தயவு செய்து என்னை மணந்து கொள்ளச் சம்மதம் சொல்… நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன்…” அவன் முடிக்கவில்லை,
“யு xxxx xxxx xxxx அதற்கு அவள் புருஷன் நான் இருக்கிறேன்… நீ யார் இடையில்…” என்று ஆங்கிலத்தில் வார்த்தைகளைத் தெறிக்க விட்டவன், மறு கணம் நேயநறுமையின் கைப்பேசியை சுவரை நோக்கி விட்டெறிய, சீமந்தால் கட்டப்பட்ட சுவரில் மோதிய கைப்பேசி மறு கணம் சுக்குநூறாக உடைந்து சிதறித் தரையில் தெறித்தது.
அதுவரை அவன் பிடியிலிருந்து விலக முயன்றுகொண்டிருந்த நேயநறுமை, அவனுடைய அந்தச் செயலில் அதிர்ந்து நின்றாள். அவன் உடைத்தது சாதாரண கைப்பேசியை அல்லவே. ஆத்திரமும் வேதனையுமாகத் திரும்பி ஆதியதுலனை வெறித்தவள், மறு கணம் அவனைப் பலமாக உதறிவிட்டுப் பாய்ந்து சென்று சிதறிய துண்டுகளை வாரி அள்ளி எடுத்துப் பார்த்தாள். ‘இனி எதற்கும் பயன்படமாட்டேன் சாரி…’ என்பது போலப் பரிதாபமாக அவளைப் பார்த்தன கைப்பேசித் துண்டுகள். அதைக் கண்டதும் நெஞ்சில் இரத்தம் கசிய, ஆத்திரத்துடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
இத்தனைக்கும் அவன் இடது மார்பில் அவள் அடித்ததால் உள்ளே பெரிதாகப் பூத்திருந்த பொக்களம் உடைந்து, தண்ணீர் கசியத் தொடங்கியது. நல்ல வேளை அவன் அணிந்திருந்தது கரிய நிற ஆடை என்பதால், கசிந்த ஈரம் பெரிதாக வெளியே தெரியந்திருக்கவில்லை.
இவளோ தன் கரத்திலிருந்த கைப்பேசியையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு, ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தத,
அது கைப்பேசியல்ல. அவளுடைய ஒரு அங்கம் என்பது அவனுக்கு எப்படித் தெரியும்? இத்தனைக்கும் ஏழாயிரம் கனடிய டாலர்கள் மாதா மாதம் உழைத்துச் சேமிப்பில் ஒன்றரை இலட்சம் கனடிய டாலர்கள் இருந்த போதும் கூட புதிதாக எந்தக் கைப்பேசியும் வாங்காமல் அதையே வைத்திருந்தவள். இவ்வளவு ஏன் ஆல்ஃபிரெட் கூட புத்தம் புது கைப்பேசி வாங்கிக் கொடுத்தபோது, அதை நிராகரித்தவள். அப்படிப் பட்ட கைப்பேசியை, ஒரு விநாடியில் உடைத்து நொறுக்கிவிட்டானே…
மீண்டும் அந்தத் துண்டுகளைப் பார்த்தவளுக்கு ஓவென்று வந்தது. அதற்குள் சொல்ல முடியாத நினைவுகள் அடங்கியிருக்கிறது. அம்பிகா, தேவசகாயம், நேரிழை, அவன் என்று, அத்தனை பேருடனும் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எல்லாம் அதில்தான் இருக்கிறது. அவளை இத்தனை நாளும் தனிமை அண்டாமல் வைத்திருப்பதும் அந்தக் கைப்பேசிதான். அதைப் போட்டு உடைத்து நொறுக்கிவிட்டானே.
அழுகையும் ஆத்திரமும் கட்டுக்கடங்காமல் வர, மறு கணம் உடைந்த துண்டுகளைக் கீழே போட்டவள், சட்டென்று எழுந்து வேகமான அவனை நெருங்கி அவன் அணிந்திருந்த டீஷேர்ட்டைப் பற்றி இழுத்துப் பின் அவன் மார்பில் கரம் வைத்துத் தள்ளி, ஆத்திரத்தோடு அவனைப் பார்த்து முறைத்து,
“என்ன காரியம் செய்திருக்கிறீர்கள்… அது… என் அம்மா அப்பா வாங்கிக் கொடுத்தது. அதைப் போட்டு உடைத்து விட்டீர்களே…” என்றாள் கொதிப்போடு. இவனோ ஒரு கணம், அவளையும் அந்தக் கைப்பேசியையும் பார்த்தான். அவனையும் மீறி விழிகளில் ஒரு வலி தெரிந்து பின் அங்கே இளக்காரம் வந்து உட்கார்ந்து கொண்டது.
“வெறும் கைப்பேசிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, அத்தைக்கும் மாமாவுக்கும் அன்றே கொடுத்திருந்தால், உன்னைப் பற்றிய வலியில்லாமல் செத்திருப்பார்கள். உயிரோடு இருக்கும் போது அவர்களின் ஆசையை மதிக்காத நீ, இப்போது வெறும் இந்தக் கைப்பேசிக்காகக் கவலைப்படுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.” அவன் விரக்தியாகச் சொல்ல, அதைக் கேட்டு ஆடிப்போனாள் நேயநறுமை.
அவன் சொல்வதும் சரிதானே. அவள் மட்டும் தன் பிடிவாதத்தைத் தளர்த்தி, தாய் தந்தையோடு கூடியிருந்தால், இந்த மூன்று வருடங்கள் அவர்களோடான வாழ்க்கையை இழந்திருக்க மாட்டாள். இப்போது ஆசைப்பட்டால் கூட அந்த நாள் திரும்ப வராதே. பெரும் குற்ற உணர்ச்சி அவளை அரிக்க, கண்களில் சட்டென்ற கண்ணீர் பூக்க அவனை வெறித்தவள், அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றாமல் விலக முயல, சட்டென்று அவளுடைய கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தான் ஆதியதுலன்.
அவன் இழுத்த வேகத்தில் அவன் தேகத்தோடு மோதி நின்றவளின் இடைபற்றித் தன் கரத்தை எடுத்துச் சென்று மேலும் தன் உடலோடு மோத வைத்தவன், மறு கரத்தால், அவள் முகம் பற்றித் தூக்கிப் பார்த்தான். அந்த விழிகளில் தெரிந்த ஆழ்கடல் வலியைக் கண்டவனின் விழிகள் சட்டென்று கனிந்து பேனது.
சும்மாவே நொந்துபோயிருப்பவளை, மேலும் வலிக்கச்செய்துவிட்ட குற்ற உணர்வு ஏற்பட,
“ஐ ஆம் சாரி… நான் அப்படிச் செய்திருக்கக் கூடாது…” என்றான் பெருவிரலால் அவளுடைய கன்னத்தை வருடியவாறு. அவளோ ஆத்திரத்தோடு அவன் கரத்தைத் தட்டிவிட்டவள், அவனை முறைத்துப் பார்த்து திமிறியவாறு,
“நீங்கள் உடைத்த கைப்பேசி திரும்ப அதேபோல என்னிடம் வரும் என்றால்… உங்களை மன்னிக்க முயல்கிறேன்…” சீறியவள், மேலும் அவனிடமிருந்து தன்னை விடுவிக்க முயன்று தோற்றவளாக,
“என்னை விடுங்கள்…” என்றாள் அடைத்த குரலில். அவளால் அவன் செய்த செயலை ஜீரணிக்கவே முடியவில்லை. நெஞ்சம் வெடித்து விடும் அளவுக்கு வலிக்க முகம் கசங்கிப் போக மேலும் தன்னை விடுவிக்கப் போராட, அவளுடைய போராட்டத்தில், போடுப்பட்டிருந்த இரவாடையின் பொத்தான்கள் மேலும் கழன்று அவளுடைய வெண் நெஞ்சை வெளிக்காட்ட, அதில் முத்திரை குத்தப்பட்ட, அவர்கள் இருவரின் முதல் எழுத்தையும் தாங்கி நின்ற கிறுக்கலான வடு இப்போது முழுதாக வெளியே தெரிந்தது. அந்த வடுவைக் கண்ட அவனுடைய விழிகளில் இப்போது பெரும் வலி.
முகம் கசங்கியவனாக வலது கரத்தைத் தூக்கி விரல்களால் அந்த வடுவைப் பட்டும் படாமலும் வருட, அதிர்ந்து போனாள் நேயநறுமை.
பதட்டத்தோடு குனிந்து பார்க்க, அவளுடைய முட்டாள்தனத்தால் ஏற்படுத்தப்பட்ட அந்த வடு, பல்லிளித்தவாறு அப்பட்டமாக வெளியே தெரிந்துகொண்டிருந்தது. அதில் அவனுடைய விரல்கள் பட்டதும், திரும்பவும் அந்தக் காயத்தின் வலியை உணர்ந்தவளாக ஆத்திரம் கொண்டவள், அத்தனை பலத்தையும் மொத்தமாகச் சேர்த்து அவனைத் தள்ளி விட்டவள், மறு கணம் நடுங்கும் கரங்களால், பொத்தானைப் பூட்டிவிட்டுப் அவனை வெறுப்போடு பார்த்தாள். அவனோ, வலி கொஞ்சம் கூடக் குறையாதவனாக அவளை ஏறிட்டு,
“ஏன் இப்படிச் செய்தாய் நறுமை… எப்படி வலித்திருக்கும்…” திரைபோட்டு மறைக்கப்பட்டாலும் அவன் பார்வை வடு கிடந்த இடத்தில்தான் நிலைத்திருந்தது.
அவன் கேட்டதும், இளக்காரமாக அவனைப் பார்த்தவள்,
“என்ன செய்வது, வலித்த இதயத்தைக் குத்திக் கிழித்து வெளியே எடுத்து எறிவதற்குத் தைரியமிருக்கவில்லை. அதுதான், இப்படியொரு முட்டாள்தனத்தை செய்தேன்…” வெறுப்போடு உமிழ்ந்தவள், அவனுடைய பார்வையின் வீரியம் தாங்க முடியாமல்.
“த… தயவு செய்து வெளியே போங்கள்…” என்றாள் குரல் கம்ம. அவளுடைய கலங்கிய குரலில் தவித்தவனாக,
“நறுமை…” என்று எதையோ சொல்ல வர, ஆத்திரமும் கோபமுமாக விழிகளை அழுந்தத் துடைத்தவள், சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து,
“தயவு செய்து வெளியே போங்கள் அதுலன்.. எனக்கு உங்கள் முகத்தைப் பார்க்கவே பிடிக்கவில்லை.” சீறலாகச் சொல்லிவிட்டு மண்டியிட்டமர்ந்தவள், தரையில் கிடந்த கைப்பேசியைப் பொறுக்கத் தொடங்க, உடனே அவனும் அவளுக்குப் பக்கமாக மண்டியிட்டமர்ந்து துண்டுகளைப் பொறுக்கி அவளிடம் நீட்டினான். அதை ஆத்திரத்தோடு பறித்தவள்,
“உங்களை வெளியே போகச்சொன்னேன்…” என்றாள் பற்களைக் கடித்தவாறு. இன்னும் விட்டால் அவன் முன்பே கதறிவிடுவோமோ என்கிற பயம் அவளை ஆட்டுவிக்க அவன் முகம் பார்க்க மறுத்தாள் நேயநறுமை.
அவளுடைய அந்த நிலையை உணர்ந்து கொண்ட ஆதியதுலன்,
“நான் வேண்டும் என்று இந்தக் கைப்பேசியை உடைக்கவில்லை . நீ அந்த ஆல்ஃபிரெட்டோடு உரிமையாகப் பேசுவதைக் கண்டதும், என்னால்… கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை… மன்னித்துவிடு.” அவன் சொல்ல, இப்போது ஆத்திரத்தோடு எழுந்தவள், கையிலிருந்த உடைந்த துண்டுகளை அங்கிருந்த மேசையில் பொத்தென்று வைத்துவிட்டு, அவனை வெறுப்போடு திரும்பிப் பார்த்தாள்.
“சோ வட்… அவன் என்னிடம் உரிமை எடுத்துப் பேசினால் உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் யார் அதைக் கேட்க?” என்றாள் சீற்றமாக. அதைக் கேட்டவனின் முகம் இறுகிப் போக, எழுந்து அவளை நெருங்கி,
“நான் யாரா? யு ஆர் மைன். மை வைஃப். என்னுடைய மனைவியை யாரோ ஒருத்தன் திருமணம் முடிக்கக் கேட்பான், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறாயா? எத்தனை தைரியம் அவனுக்கு,” அவன் சீற, அதைக் கேட்டு ஏளனமாகச் சிரித்தாள் நேயநறுமை..
“என்னது? மனைவியா? ஹா ஹா ஹா… இதைக் கழுத்தில் கட்டி, கையெழுத்திட்டால் நீங்கள் எனக்குக் கணவராகிவிடுவீர்களா? உங்களைக் காதலித்தேன் என்கிற ஒரே காரணத்திற்காக உடனே நானும் அதை ஏற்று உங்களோடு வாழத் தொடங்கிவிடுவேன் என்று நினைத்தீர்களா…? பிக் ஜோக்…” சீற்றமாகக் கேட்டவள், சட்டென்று தன் ஆடையின் நெஞ்சுப்புறத்தைப் பொத்தான் தெறிக்கக் கழட்டி, தன்னால் ஏற்படுத்தப்பட்ட வடுவைக் காட்டி,
“இந்த வடு… உங்களை இழந்துவிட்டோமே என்கிற வலியில் கிறுக்கினேன் என்று நினைத்தீர்களா அதுலன்? என்னுடைய முட்டாள்தனத்தையும், பைத்தியக்காரத் தனத்தையும், எனக்குச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்காகத்தான் இந்த வடுவை ஏற்படுத்தினேன்… ஒவ்வொரு முறையும் இந்த வடுவைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு உங்கள் மீது வெறுப்பும் கோபமும்தான் தோன்றும்…” என்றவள் அவன் கட்டிய தாலியைத் தூக்கிக் காட்டிவிட்டு,
“இதைக் கட்டின ஒரே காரணத்திற்காக உங்களின் மனைவியாக வாழ்வேன் என்று நினைத்தீர்களா என்ன? இந்த ஜென்மத்தில் அது நடக்காது… நான் உங்களைத் திருமணம் முடித்தது மகிழினிக்காக. அவள் எனக்கு வேண்டும் என்பதற்காக…” அவள் அழுத்தமாகச் சொல்ல, ஆதியதுலனின் உதட்டில் அழகிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
அவளை நெருங்கி, அவளால் கழட்டி விடப்பட்ட, ஆடையின் நெஞ்சுப்புறத்தைச் சரியாக்கி, வெளியே தெரிந்த அவள் அழகை மறைத்தவன், இப்போது அவளுடைய வெற்று மேல் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து மென்மையாக அழுத்திக் கொடுத்தவாறு, அவளுடைய விழிகளை ஏறிட்டான். அவளோ சீற்றத்தில் சிவந்த விழிகளும், கலங்கிய கண்ணீருமாக அவனைப் பார்க்க, அந்த விழிகளை ஒரு விநாடி உற்றுப் பார்த்தான் ஆதியதுலன். அந்த சீற்றத்தையும் தாண்டி அவன் கரம் பட்டதால் குழையும் அவள் விழிகளைக் கண்டு, மேலும் புன்னகையை விரித்தவன்,
“மகிழினிக்காக மட்டுமில்லை… எனக்காகவும்தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாய் நறுமை…” என்றான் அவன் தெளிவாக.
“எ… என்ன உளறல் இது?”
“உளறவில்லை. உண்மையைச் சொல்கிறேன். இப்போ… மகிழினியின் தந்தை என்னை விடுத்து வேறு ஒருத்தனாக இருந்திருந்தான் என்று வை, நீ அவனை மணந்திருப்பாயா?” அவன் கேட்க, அதற்குப் பதில் சொல்ல முடியாது பேந்தப் பேந்த விழித்தாள் நேயநறுமை.
இதற்கு என்ன பதிலைச் சொல்வது?
“அது… நான்… அது வந்து…” அவள் தடுமாற, இப்போது அவளுடைய கரங்களை வருடியவாறே, தன் கரத்தைக் கீழே கொண்டு வந்தவன், அவளுடைய வலது உள்ளங்கையைப் பற்றித் தன் கரங்களில் வைத்து அழுத்திக் கொடுத்து,
“லிசின் நேயா… யு லவ் மி… அன்கெண்டிஷன்லி லவ் மி. நீ என்னை மறக்க நினைத்தாலும், நெஞ்சில் நீ கிறுக்கி வைத்திருக்கிறாயே… நம் முதல் எழுத்துக்கள், அவை உன்னை மறக்க விடாது… உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், என் நினைவு உனக்குள் எப்போதும் இருக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான், அங்கே கிறுக்கி வைத்தாயே தவிர, நிச்சயமாக நீ சொன்ன காரணமில்லை. அது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். என்னை விடுத்து, வேறு எவனையும் உன்னால் கணவனாக உன்னால் ஏற்க முடியாது…” அவன் முடிக்கவில்லை, ஆத்திரத்தோடு தன் கரத்தை உதறி விடுவித்தவள், அவனை எகத்தாளமாகப் பார்த்து,
“என்ன… அவ்வளவு உறுதியோ?” என்றாள். அதைப் பார்த்து சிரித்தவன், மறுப்பாகத் தலையை அசைத்து,
“இல்லை… உன்னைப் பற்றிய தெளிவு. நீ என் மீது வைத்த காதலின் மீதிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை…” என்றவனை வெறுப்போடு பார்த்தாள் நேயநறுமை.
“நல்ல உளறல்… நான் செத்தாலும் சாவேனே தவிர, என் காதல் உங்களை வந்து சேராது ஆதியதுலன்… அதுவும் என்னை விடுத்து என் தங்கையைக் காதலித்து மணந்த உங்களிடம் என் காதல் கடைசிவரை வந்து சேராது.” அவள் வெறுப்பும் கோபமுமாகச் செல்ல, மேலும் சிரித்தான் ஆதியதுலன்.
அவளை நெருங்கி, அவளுடைய முகத்தில் சதிராடிய மயிர்க்கற்றையை ஒதுக்கிவிட்டு, கன்னங்களில் தன் உள்ளங்கையை வைத்து அவளுடைய சந்திர வதனத்தைத் தன்னை நோக்கி நிமிர்த்தியவன், சுட்டுவிரலாலும் பெருவிரலாலும் அவளுடைய உதட்டோரக் கன்னத்தைப் பற்றி அழுத்த, அவளுடைய உதடுகள் மீன் உதடுகளாய் குவிந்து கொண்டன. அந்தக் குவிந்த உதடுகளையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தவன்,
“இப்படிப் பேசும் இந்த வாய்க்குத் தண்டனையாக என்ன கொடுக்கலாம்?” என்றான் கிசுகிசுப்பாக. அவனுடைய அந்தச் செயலில் அதிர்ந்தவள், விழிகளை விரித்து அவனைப் பார்க்க இப்போது அவனுடைய பார்வை அவளுடைய விழிகளுடன் கலந்தன. பின் என்ன நினைத்தானோ, அவளை விட்டு விலக்கியவன், அவளை அழுத்தமாகப் பார்த்து,
“உலகத்தில் விலை மதிக்க முடியாதது ஒன்று இருக்கிறது என்றால், அது உயிர் மட்டும்தான் நறுமை. எதை வேண்டுமானால் பணம் கொடுத்து வாங்கிவிடலாம். சந்தோஷம் உட்பட. ஆனால் இந்த உயிர்…” என்றவன் தன் விழிகளை அழுந்த மூடித் திறந்து, “இனி உன் வாயிலிருந்து உயிரை விடுவது பற்றியான பேச்சு எதுவும் வரக் கூடாது… மீறி வந்தால்…” என்றவன், மீண்டும் அவளுடைய சொக்கையை அழுந்தப் பற்றி உதடுகளைக் குவியச் செய்து, அவள் முகம் நோக்கிக் குனிந்து,
“பேசுவதற்கு இந்த வாய் உன்னிடமிருக்காது…” என்றான் தெளிவாக.
அவன் இலகுவாக, கிண்டலாகப் பேசுவதுபோலத்தான் இருந்தது. ஆனால் அவனுடைய விரல்கள் அழுத்திய அழுத்தத்தில், அவனுடைய கோபத்தின் அளவு தெரிய, ஏனோ அவளுடைய இதயம் பயத்தில் கொஞ்சம் துள்ளவே செய்தது. ஆனாலும், ஆத்திரத்தோடு அவனிடமிருந்து தன்னை விடுவித்தவள், அவன் அழுந்தப் பற்றியதால் வலித்த கன்னத்தைத் தேய்த்து விட்டு,
“ஏன்… அப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்…’ அவள் முடிக்க முதல் அவனுடைய சுட்டுவிரல் அவளுடைய உதட்டில் பதிந்தது. கூடவே எல்லையில்லா வலியைத் தன் முகத்தில் தேக்கியவன், மறுப்பாகத் தலையை அசைத்து,
“வேண்டாம் நறுமை. நாம் இருவரும் இழந்தது மிக அதிகம். இதற்கு மேலும் இழப்பைச் சந்திக்கும் தைரியமும் திடமும் என்னிடம் இல்லை… அதுவும் உன்னை… நிச்சயமாக முடியாது நறுமை… நீயாவது எனக்கு வேண்டும்… ஆயுள் வரைக்கும்…” சொன்னவன் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட, இவளோ அந்தப் பார்வையில் தெரிந்த ஆழ்கடல் அளவு வலியையும் வேதனையையும் கண்டு வாயடைத்துப் போய் நின்றிருந்தாள்.
அவளுடைய இழப்பு அவனுக்கு அத்தனை வலியைக் கொடுக்குமா என்ன? ஆனால் ஏன்? அவனுக்குத்தான் அவளைப் பிடிக்காதே. அதனால்தானே நேரிழையை மணந்தான்? ஆனால் இப்போது அவள் வேண்டும் என்கிறானே. அதுவும் ஆயுள் வரைக்கும்? அதன் அர்த்தம் என்ன? அதுவும் அவன் சொன்ன போது அந்தக் குரலில் தெரிந்த தவிப்பும் துடிப்பும் அதையும் தாண்டித் தெரிந்த நடுக்கமும்… இது… ஒரு காதலனுக்குக் காதலியிடம் இருக்கும் உணர்வு அல்லவா? அப்படியென்றால், இவனுக்கும் என் மீது காத…’ நினைக்கும்போதே பதட்டமாகத் தலையை உலுப்பி அந்த உணர்வைக் கலைந்தாள் நேயநறுமை.
‘சீ… சீ… அவனுக்கு என் மீது காதலா? காதல் என்ன திடீர் என்று சமைக்கும் நூடுல்ஸா? நினைத்த உடன் பிறந்துவிட. அவன் காதலித்தது, காதலித்துக்கொண்டிருப்பது எலாம் நேரிழையைத்தான் ஆனால் அவன் சொன்ன விதம்? அதில் தெரிந்த உணர்வுகள்… அதைக் கேட்டபோது என் தேகம் சிலிர்த்ததே. மயிர்க்கால்கள் எழுந்து நின்றதே. இத்தனை நாளும் ஆறாத வடுவாக இருந்த இதயத்திற்கு மருந்து போட்டது போல இதமாக இருந்ததே. அந்தக் குரலில், அந்தப் பேச்சில், அந்த உணர்ச்சியில் காதலை உணர்ந்தேனே…’ அவள் தவித்து நிற்கையில் அவளுடைய உள்ளுணர்வோ அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
முட்டாளா நீ? அன்று நீ எத்தனை கெஞ்சினாய். அதையெல்லாம் அவன் மதித்தானா என்ன? அன்று உதறிவிட்டு நேரிழைதான் வேண்டும் என்று போனானே. அவனுக்கா உன் மீது காதலிருக்கப் போகிறது. சும்மா மனத்தை அலைய விடாதே நறுமை. அவனுக்கு உன் மீது எந்தக் காதலும் இல்லை. அக்கறையும் இல்லை…’ தனக்குத் தானே அறிவுரை சொன்னவள், சோர்வோடு நடந்து சென்று கட்டிலில் தொப்பென்று அமர்ந்து கரங்களைப் படுக்கையில் வைக்க, ஒற்றைக் கரத்தில் தட்டுப்பட்டது அந்தக் கோப்பு.
புருவங்கள் சுருங்கக் குனிந்து பார்த்தவள், அந்தக் கோப்பைத் தன் கரத்தில் எடுத்துப் பார்த்தாள்.
ஏனோ கண்கள் கலங்கின. தன்னை மறந்து அதில் எழுதியிருந்த நேரிழையின் பெயரை விரல்களால் வருடிக் கொடுத்தவளுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆசை துளிர் விட, மெதுவாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினாள் நேயநறுமை
(19) மேலும் ஒரு கிழமை எந்த மாற்றமுமில்லாமல் கடந்துவிட்டிருந்தது. இந்த ஏழு நாட்களிலும், ஆதியதுலனும் சரி, நேரிழையும் சரி பெரிதாக எந்த நெருக்கமும் காட்டிக்கொள்ளவில்லை.…
(17) இதோ, ஆதியதுலனின் மனைவியாக, ஒரு கரத்தில் மகிழினியை ஏந்தியவாறு, பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுச் சட்டப்படியும், சம்பிரதாயப்படியும் அவன் மனைவியாக மாறியிருந்தாள் நேயநறுமை. கழுத்திலே புத்தம் புதிய தாலிக்கொடி தொங்கிக்கொண்டிருக்க, அவளுடைய கரத்திலிருந்த குழந்தை, அந்தக்…
(16) என்னதான் நடந்தாலும் ஊருக்குப் போவது என்கிற முடிவில் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிய நேயநறுமையின் முடிவையும் ஆட்டம் காண வைத்தாள் மகிழினி. ஆம், மறு நாள் நேயநறுமை எழுந்து மகிழினியைத் தேட, அவளைக் காணோம். பதறியவளாக…
-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…