“மரி மீ…” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது.
பின் குழம்பி, அதிர்ந்து, அவன் சொன்னது புத்திக்குப் புரிந்து கொண்ட மறு கணம், ஆவேசம் கொண்டவளாக அவனைத் தள்ளியவள் மறு கணம் ஓங்கி அவனை அறைந்திருந்தாள்.
எதற்காகக் கோபப்பட்டாள், எதற்காக அறைந்தாள்? ஏன் அறைந்தாள்?
இன்று அவள் இந்த நிலைக்கு இருப்பதற்குக் காரணம், அன்று அவள் காதலை அவன் நிராகரித்துச் சென்றதனால்தானே. இப்போது எந்த தைரியத்தில் அவளை மணக்கக் கேட்கிறான்? அதுவும் அவன் தங்கையோடு வாழ்ந்து முடித்த பின் அவளை மணக்கக் கேட்கிறானே. எத்தனை தைரியம் அவனுக்கு. அவளுக்கு அவன் வேண்டும்தான். இதோ இந்தக் கணம் வரை அவனுக்காக உடலும் உள்ளமும் ஏங்கத்தான் செய்கிறது. அதற்காக விலை போனவனை அவள் திரும்ப வாங்குவதா? எத்தனை தைரியம் அவனுக்கு. ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வர,
“ஹௌ டெயர் யு…?” சீறியவள், அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல், திரும்ப, அவளுடைய மேல் கரத்தைச் சட்டென்ற பற்றிக்கொண்டான் ஆதிய துலன்.
“இதற்கு என்ன அர்த்தம்? எதற்கு இத்தனை கோபம்?” நிதானமாகக் கேட்டவனைத் திரும்பிப் பார்த்து வெறித்தாள் நேயநறுமை.
“என்ன அர்த்தமா? எந்த தைரியத்தில் உங்களை மணக்கக் கேட்பீர்கள்? எச்சிலிலையில் சாப்பிட நான் ஒன்றும் பிச்சைக்காரியில்லை மிஸ்டர் ஆதியதுலன்…” என்றாள் வெறுப்போடு. அதைக் கேட்டுக் கிண்டலாகச் சிரித்தவன்,
“ரியலி? ஆனால்… எச்சில் இலை என்று தெரிந்தும் எதற்காக இன்னும் என்னைக் காதலிக்கிறாய்?” என்றான் புருவங்களை மேலேற்றி. அதைக் கேட்டு அதிர்ந்தவள்,
“கா… நான் காதலிக்கிறேனா…? என்ன உளறல்?” மெய் மறைத்து அவள் கேட்க, அவனோ கிண்டலாக அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“ம்… நீ இன்னும் என்னைக் காதலிக்கிறாய்… இல்லை என்று உன்னால் மறுக்க முடியாது. அதுவும் பொய்க்காகக் கூட இன்னொருத்தனைக் காதலிப்பதாகச் சொல்ல முடியாத அளவுக்கு என் மீது வெறித்தமான காதலை வைத்திருக்கிறாய்…” அவன் சொல்லத் திக்குமுக்காடிப் போனாள் நேய நறுமை.
அவன் சொல்வது நிஜம். இல்லை என்றால், ஆல்ஃபிரெட் உனக்கு யார் என்று அவன் கேட்ட போது, பொய்க்காகவாவது அவன் என் காதலன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அது கூட அவளால் முடியவில்லை. சும்மா வாய்வார்த்தையாகக் கூட இன்னொருத்தனைத் தன்னோடு இணைத்துச் சொல்ல முடியாதவளின் காதல் எத்தனை பரிசுத்தமானதாக இருக்கவேண்டும். அதை வேறு அவன் கண்டுகொண்டானே. கசப்போடு அவனைப் பார்த்தவளுக்கு உடனே வார்த்தைகள் வெளிவர மறுத்தன.
“நான்… நான்… உங்களை…” என்று தட்டுத் தடுமாறியவளுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் உண்மையை மறைக்க முடியவில்லை. மானங்கெட்டுத் தவிக்கும் தன் மீதே வெறுப்பும் அருவெறுப்பும் கொண்டவளாக, அவனை உதறித் தள்ளிவிட்டு,
“ஆ… நான் இன்னும் உங்களைக் காதலிக்கிறேன்தான். சாகும்வரைக்கும் காதலித்துக் கொண்டுதான் இருப்பேன். ஆனால், இந்த நேரிழைக்குச் சொந்தமான ஆதியதுலனை அல்ல… என்று முதன் முறையாக என் வீட்டு வாசலில் வைத்துப் பார்த்தேனோ, அந்த ஆதியதுலனைத்தான் நான் காதலிக்கிறேன். காதலித்துக்கொண்டும் இருக்கிறேன்… இந்த உடலில் உயிர் இருக்கும் வரைக்கும் காதலிப்பேன்… ஆனால்… உங்களை என் கணவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்… உங்களை மட்டுமல்ல, எவனையும் நான் திருமணம் செய்ய மாட்டேன்” அவள் உறுதியாகச் சொல்ல, தோள்களைக் குலுக்கினான் ஆதியதுலன்.
“அதிகம் திரைப்படம் பார்ப்பாயோ? அதுவும் தமிழ், தெலுங்கு திரைப்படங்கள். அதில்தான் வாழ்வியலுக்குக் கொஞ்சம் கூட ஒத்துவராத காட்சிகளைக் காண்பிப்பார்கள்… வாழ்க்கை வேறு, கற்பனை வேறு எதார்த்தம் வேறு நறுமை. எத்தனை நாட்களுக்கு உன்னால் இப்படியே இருக்க முடியும்? உன் இளமை உன்னை நிம்மதியாக இருக்கவிடும் என்று நினைக்கிறாயா? அது கொடுக்கும் உணர்ச்சிகளுக்கு வடிகால் வேண்டாமா? அதற்கென்று ஒரு தேவை இருக்கிறது. கடைசிவரை இப்படியேவா இருக்கப் போகிறாய்?” அவன் கேட்க, அவனை வெறித்துப் பார்த்தாள் நேயநறுமை.
“உங்களுடைய முட்டாள்தனமான பேச்சுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது…” அழுத்தமாகச் சொன்னவள், வேகமாக நடந்து செல்ல முயல,
“அப்படியென்றால் மகிழினி வேண்டாமா?” என்றான் தலை சரித்து. நின்று திரும்பி அவனைப் பார்த்து.
“என் தன்மானத்தை அடகு வைத்துத்தான், எனக்கு ஒரு உறவு கிடைக்கும் என்றால், அப்படிப் பட்ட உறவு எனக்கு வேண்டாம். சாகும்வரைக்கும் அநாதையாகவே இருந்து செத்துப் போகிறேன்…” அழுத்தமாகச் சொன்னவள், அவன் திகைத்து நிற்பதை, வெறுப்போடு பார்த்துவிட்டு விறுவிறு என்று வீடு நோக்கி நடக்க இவன்தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கவேண்டியது ஆயிற்று.
அதே பிடிவாதம், இன்னும் மாற்றுக்குறையாமல் அப்படியே இருக்கிறது. இந்தப்பிடிவாதத்தால் அவள் இழந்தவைதான் எத்தனை. அதையேன் இன்னும் அவள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாள்.
மனம் தவிக்க அவளை மாற்றும் வழி தெரியாது கலைந்த முடியை வாரிவிட்டான் ஆதியதுலன்.
நேயநறுமையின் உறுதியான முடிவில் மனம் நொந்து போனார் பாஸ்கரன். அவளிடம் வந்து பல வகையில் பேசிப் பார்த்தார். அவளோ காதுகளை மூடியவாறு, தன் முடிவில் உறுதியாக இருக்க, ஒரு கட்டத்தில் பாஸ்கரனும் பொறுமையிழந்து விட்டார்.
“நேயா… உன்னுடைய மறுப்புக்கான காரணம் எனக்குப் புரிகிறது. ஆனால் நீ நினைப்பது போல…” அவர் எதையோ சொல்லவர, “அப்பா…” என்கிற அழுத்தமான குரல் பின்னாலிருந்து கேட்டது. திரும்பிப் பார்க்க ஆதியதுலன்தான் நின்றிருந்தான். அவனுடைய விழிகள் என்ன சொன்னதோ, பேச வந்ததை இடை நிறுத்தியவர்,
“அது வந்து… இவள்… தன் முடிவிலேயே உறுதியாக இருக்கிறாளே… அதுதான்…” அவரும் முடிக்க முடியாமல் திணற, திரும்பி நேயநறுமையை வெறித்தவன்,
“ம்… அதுதான் அவர்களின் விருப்பம் என்றால், நாம் என்ன செய்யமுடியும்? போகட்டும் விடுங்கள்…” அவன் சொல்ல மகனைக் கோபமாகப் பார்த்தார் பாஸ்கரன். அவர் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்கிறதே. அவள் போய்விட்டால், மகனின் வாழ்க்கை? தவித்தவராக ஆதியதலனை ஏறிட்டவர்,
“தம்பி ஆனால்.. நீ…”
“அப்பா… இது அவளுடைய முடிவு… அப்படியே இருக்கட்டும் விடுங்கள்…” என்றவன் திரும்பி நேய நறுமையைப் பார்த்தான்.
“அங்கே போனதும் திரும்பி வரும் உத்தேசம் இருக்கிறதா இல்லை..?” அவன் முடிக்கவில்லை,
“இல்லை.” என்றால் பட் என்று.
“அப்படியென்றால், மகிழினியின் மீது பாசம் இருப்பது போலக் காட்டியதெல்லாம் வெறும் நடிப்பு தானா?” அவன் கேட்க, அடிபட்ட பாவனையுடன் அவனைப் பார்த்தாள் நேயநறுமை.
அவளுக்கு மகிழினி வேண்டும். அவளைத் தன் சொந்தக் குழந்தையாகப் பொத்திப் பார்த்துக் கொள்ளும் வெறி இருக்கவே செய்கிறது. ஆனால், அவளை உடைமையாக்குவதாக இருந்தால், இவளுடைய தன்மானத்தை விட்டுக் கொடுக்க வேண்டுமே. அது இன்னும் வலியைக் கொடுக்கும். ஆழ மூச்செடுத்து விட்டவள்,
“மகிழினி மீதான என் அன்பின் கனத்தை, தராசில் நிறுத்தித்தான் நிரூபிக்கவேண்டும் என்கிற அவசியம் எனக்கில்லை. இப்போதும் சொல்கிறேன், மகிழை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் வியந்து பார்க்கும் வகையில் அவளை வளர்த்து ஆளாக்குகிறேன்…” அவள் உறுதியாகக் கூற, அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் ஆதியதுலன்.
“அதற்கு நீ என்ன செய்யவேண்டும் என்றும் உனக்குத் தெரியும்…” அவன் சொல்ல, அவனை முறைத்தவள், அங்கிருந்து சென்றுவிட, பரிதாபமாகத் தன் மகனைப் பார்த்தார் பாஸ்கரன்.
“ஏன்பா இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறாள்… உன்னை மணந்து கொண்டால், அவளுக்குத்தானே நன்மை…” என்று கூற வேதனையுடன் சிரித்தான் ஆதியதுலன்.
“அந்தப் பிடிவாதம் அவள் கூடவே பிறந்தது… கடைசிவரை இப்படித்தான்.” அவன் விரக்தியாகச் சொல்ல, என்னசெய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்தார் பாஸ்கரன்.
“பாவம் தனிமையில் அவதிப்படுவாள். பேசாமல் மகிழினியை அவளிடம் கொடுத்தால் என்ன… அந்தத் தனிமை அவளை விட்டுப் போகுமே…” சொல்ல, தந்தையை அர்த்தத்தோடு பார்த்தான் ஆதியதுலன்.
“குழந்தை எங்களிடமிருக்கும் வரைக்கும்தான் அவளுக்கும் எங்களுக்குமான தொடர்பு நிரந்தரமாக இருக்கும். குழந்தைக்காகவேனும் இங்கே வருவாள். நம்மோடு தொடர்பிலிருப்பாள். இல்லையென்றால் மொத்தமாகத் தன்னை எங்களிடமிருந்து பிரித்து விடுவாள்…” அவன் சொல்ல, பெருமூச்சொன்றை விட்டார் பாஸ்கரன்.
“நீ சொல்வதும் சரிதான்… ஆனால் அவள் போகிறேன் என்கிறாளே…. இப்போது என்னதான் செய்யப் போகிறாய்? அவளைக் கனடாவுக்குச் செல்ல அனுமதிக்கப் போகிறாயா?” கேட்க, அர்த்தத்தோடு புன்னகைத்தான் ஆதியதுலன்.
“உங்களுக்கு அவளைப் பற்றித் தெரியாதுபா… நாங்கள் மறுத்தால் அவளுடைய பிடிவாதம் மேலும் அதிகரிக்கும். அவளை அவளுடைய போக்கிற்கு விட்டுத்தான் பிடிக்கவேண்டும்.” அவன் சொல்ல எரிச்சலோடு மகனைப் பார்த்தவர்,
“இந்தளவு சிரமப்படுவதற்குப் பேசாமல் பேசாமல் உண்மையைச் சொல்லலாம். அவளும் புரிந்து உன்னை ஏற்றுக் கொள்வாள்.?” பாஸ்கரன் சொல்லத் திரும்பித் தந்தையைக் கோபமாகப் பார்த்தான் ஆதியதுலன்.
“எந்த உண்மையைச் சொல்லச் சொல்கிறீர்கள்?” கேட்டான் பட்டென்று. பின் விழிகளை அழுந்த மூடித் திறந்து,
“தெரிந்தால் இன்னும் உடைந்து போவாள்பா… தவிர, நேரிழைக்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.?” என்றான் வலியோடு. அதைக் கண்டு கண் கலங்கியவர்,
“அதுதான் நேரிழை இப்போது உயிரோடு இல்லையே. அவளுக்கு நீ கொடுத்த சத்தியத்திற்கும் அர்த்தமில்லை…” சொல்ல மறுப்பாகத் தலை அசைத்தான் ஆதியதுலன்.
“தப்புப்பா. ஒருத்தர் இறந்துவிட்டார் என்பதற்காக, அவர்களுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை எப்படி மீற முடியும்? அது தவறு?”
“அதைப் பார்த்தால் உன்னுடைய வாழ்க்கை? அவள் வேறு இத்தனை பிடிவாதமாக இருக்கிறாளேடா… உண்மை தெரிந்தால், நிச்சயமாக உன்னை மன்னித்து ஏற்றுக்கொள்வாள்…” அவர் சொல்ல, மறுப்பாகத் தலையசைத்தவன்,
“அப்பா உண்மை தெரியாமலே அவள் என்னை ஏற்றுக்கொள்வாள். அவள் கனடா போக முதல், என்னை மணக்கச் சம்மதிப்பாள்…” அவன் உறுதியாகக் கூற, நம்பாதவராகத் தன் மகனைப் பார்த்தார் பாஸ்கரன்.
“எப்படிடா? அவள் பிடிவாதத்தைப் பார்த்தால், அவள் மனத்தைக் கரைப்பது அத்தனை சுலபம் போலத் தோன்றவில்லையே…?” வியப்புடன் கேட்க, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் உதட்டில் புன்னகை ஒன்று மலர்ந்தது.
“அவள் வழியில் போய்தான்…” என்றான் அமைதியாக.
“புரியவில்லை…” தந்தை குழம்ப சிரித்தான் ஆதியதுலன்.
“அப்பா… சாப்பாடு பக்கத்திலிருக்கிற போது பசியின் அருமை நமக்குத் தெரியாது. இதுவே நன்றாக பசிக்கிற போது சாப்பாடு பக்கத்தில் இல்லை என்றால்???” அவன் கேட்க இன்னும் குழம்பினார் பாஸ்கரன்.
“என்னடா சொல்கிறாய்? ஒன்றுமே புரிய வில்லை…” சொல்ல,
“புரியும்பா… விரைவாகவே புரியும்…” அவன் உறுதியாகச் சொல்ல, பெருமூச்சொன்றை எடுத்து விட்ட பாஸ்கரன்,
“ஏதோ நீ சொல்கிறாய்… நடக்கும் என்று நம்புகிறேன்…” சொல்லிவிட்டு அங்கிருந்து விலகிச் செல்ல, அந்த நேரம், ஆதியதுலனின் கால்களை இரண்டு குட்டிக்கரங்கள் கட்டிக்கொண்டன. அது வரை ஒரு வித யோசனையோடு இருந்தவன், புன்னகையைத் தேக்கிக் கொண்டவனாக, குழந்தையை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து,
“ஹே… ஏஞ்சல்…” என்றான் கனிவாக. அவன் கழுத்தைக் கட்டிக்கொண்ட குழந்தை,
“அப்பா…” என்றது. அந்த அழைப்பில் உருகிப் போனவனாக,
“ம்… அப்பாதான்டா கண்ணம்மா…” என்று முணுமுணுப்பாகச் சொன்னவன், குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு,
“உங்கள் அம்மாவை நான் திருமணம் செய்வதற்கான சதித்திட்டத்தைத் தீட்டலாமா ஏஞ்சல்?” அவன் கேட்க, குழந்தையோ அவன் என்ன சொல்கிறான் என்று எதுவும் புரியாமல், சரி என்று தலையை ஆட்டிச் சிரித்தது,
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…
-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…
-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…
8- எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு…
-7- அவளுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டது தான் தாமதம், அவனுக்கும் அனைத்தும் மறந்து போனது. தான் செய்வது சரியா, தவறா என்று…