Categories: Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 11

-11-

அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான்.

ஏனோ அவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. வியர்த்தது. ஏதோ தவறு செய்தது போல நெஞ்சம் சுட்டது. நிற்க முடியாமல் கால்கள் பாரமாகத் தோன்ற, நடந்து சென்று அங்கிருந்த கல்லிருக்கையில் தொப்பென்று அமர்ந்தான்.

நினைவலைகளோ தன் போக்கில் எங்கெங்கோ சென்று கடைசியில் நேரிழையிடம் வந்து நின்றது.

“ஓ… நேரிழை… உன் அக்காளை எப்படிச் கையாளப்போகிறேன் என்று தெரியவில்லையே…” முனங்கியவன் ஒரு பெருமூச்சோடு முகத்தைத் தேய்த்துவிட்டுச் சாய்ந்தமர்ந்தான். மனது நிதானமின்றித் தவித்தது.

நிதானிக்கும் அளவுக்குச் சின்னப் பிரச்சனையை அவன் இப்போது சந்திக்கவில்லையே. சோர்வோடு தலைமுடியை அழுத்தி வாரிவிட்டவனின் விழிகள் அங்கே மலர்ந்திருந்த ரோஜா மலர்களிடம் நிலைத்தன.

மனது நேரிழையிடம் சங்கமமானது. அந்தத் தோட்டம் நேரிழைதான் வடிவமைத்தது. இப்போதும் அவனுக்கு நேரிழை வடிவமைத்த காட்சி நினைவில் இருந்தது.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? அக்காவுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் ரோஜா என்றால் பைத்தியம் அவளுக்கு. அவளுடைய பிறந்த நாளுக்கு ரோஜாக் கன்றுகள்தான் வாங்கிக் கொடுப்போம்?” புன்னகையுடன் அவள் நடும் போது அதை இரசனையுடன் பார்த்து நின்றது இன்றும் நினைவிலிருந்தது.

“ஏன் நேரு, உன் அக்காவுக்குப் பிடிக்கும் என்று எல்லாவற்றையும் அதற்கேற்ப செய்கிறாயே… உனக்கென்று எதுவும் பிடிக்காதா?” புன்னகையுடன் அவன் கேட்க பளிச் என்று சிரித்தாள் நேரிழை.

“அக்காவுக்கு பிடித்த எல்லாம் எனக்கும் பிடிக்கும் அதுலன்… எனக்கு அவள் என்றால் உயிர் தெரியுமா…” என்றவளின் முகம் சட்டென்று வாடிப் போனது.

“ஆனால் அவள் என்னை ஏன் விலக்கி வைக்கிறாள் என்றுதான் புரிய மாட்டேன் என்கிறது. எத்தனையோ முறை அவளோடு பேச முயன்று தோற்று விட்டேன். பேசினாலும் பிடிகொடுத்துப் பேசுகிறாளில்லை…” கவலையோடு இளம் சிவப்பு ஹைபிரிட் டீ ரோஸ் நட்டது நினைவுக்கு வர, இவனுடைய முகம் கசங்கியது.

கடைசிவரை நேயநறுமை, தன் தங்கையோடு சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அதற்குக் காரணம் அவன்தானே. வேதனை நெஞ்சை அரிக்க, விழிகளை அழுந்த மூடித் தலையைப் பின்னால் சரித்து நிற்க, அந்த நேரம், ஆதியதுலன் தனியே தோட்டத்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட பாஸ்கரன் வேதனையோடு அவனை நோக்கி வந்தார்.

அரவம் கேட்டு தன் நினைவு கலைந்து நிமிர்ந்து பார்த்தான் ஆதியதலன். பாஸ்கரன் தளர்ந்த நடையோடு வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும் இவனுடைய கண்கள் சட்டென்று கலங்கின. தாயின் இறப்போடு நொடிந்து போன மனிதர். இப்போது நேரிழையின் இழப்பையும், அவரின் உயிரான நண்பனின் இழப்பையும் தாங்க முடியாமல் இத்தனை நாட்களில் பாதியாக இளைத்து விட்டார்.

இவனும் அவர்களின் இழப்பைத் தாங்க முடியாமல் தவிக்கிறான்தான். உள்ளூறத் துடிக்கிறான் தான். ஆனால், அதிலே உழன்றுகொண்டிருந்தால், மிச்சக் காரியங்களை யார் பார்ப்பது? அவனை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கிறதே. இறந்தவர்களின் காரியங்களைச் செய்து முடித்த ஒரு கிழமையில், தொழிற்சாலை வேலைகளைப் பார்க்க வேண்டிய நிலை. வேறு எதையும் யோசிக்கவோ, அதில் உழன்று வருந்தவோ நேரம் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் அவனுடைய வேதனையைக் கழுத்தை முட்டிய வேலைகள்தான் ஓரளவு போக்கியது. அவன் தொழிற்சாலைக்குப் போகாவிட்டாலும், மூச்சு முட்டிய அந்த வேலைகளை வீட்டிலிருந்து கவனித்ததால் ஓரளவு அவனால் தன்னை மீட்டுக் கொள்ள முடிந்தது. ஆனால் பாஸ்கரனுக்கு? அத்தனை சுலபத்தில் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார். எதை இழந்தாலும், உயிர் நட்பை இழப்பதன் வலி வேறுவிதம்தானே.

வந்த தந்தையை வலியோடு பார்த்தவன், எழுந்து நிற்க,

“உட்காருடா…” என்ற பாஸ்கரன் அவனுக்கு முன்பாக இருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தார்.

இவனும் அமர்ந்து கொள்ள. பாஸ்கரன் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.

“தம்பி…”

“ம்… அப்பா…” என்ற மகனைக் கனிவுடன் பார்த்தார் பாஸ்கரன். எப்போதும் கம்பீரமாக, சுத்தமாகத் தன்னைத் தயார் செய்து நிற்கும் மகன், அன்று அலட்சியமாகத் தலை கலைந்து, ஷேர்ட் ஏனோதானோ என்றிருக்க, தன்னில் அக்கறையற்று அமர்ந்திருக்கும் நிலையைக் கண்டதும் மனம் வலிக்க ஒரு பெருமூச்சொன்றை எடுத்து விட, எதுவும் சொல்லாமல் தன்னையே பார்த்திருக்கும் தந்தையைக் கண்டு வியந்தவனாக,

“என்னப்பா… சொல்லுங்கள்…” என்றான் கனிவோடு. இப்போதும் பார்வை மாறாமல் மகனை நோக்கிக் குனிந்தவர், அதிக ஆடம்பரமான வார்த்தைகள் எதையும் சேர்க்காமல்,

“நீ ஏன் நேயநறுமையைத் திருமணம் செய்யக் கூடாது?” என்றார் நேரடியாக. அதைக் கேட்டவன் அதிர்ந்து போனான். அவன் சரியாகத்தான் கேட்டானா? இல்லை மழுங்கிப்போன புத்தி தப்பாகக் கேட்கிறதா?

“சாரி… நான் ஏதோ சிந்தனையில் நீங்கள் சொன்னதைச் சரியாகக் கேட்கவில்லை… என்ன சொன்னீர்கள்?” அவன் சந்தேகம் கேட்க, மெல்லிய புன்னகையைச் சிந்தினார் பாஸ்கரன்.

“நீ ஏன் நேயாவை மறுமணம் செய்யக்கூடாது?” என்றார் அழுத்தமாக. அதைக் கேட்டவனின் முகம் கோபத்தில் இறுகிப்போக,

“அப்பா…! என்ன உளறல் இது?” என்றான் சீற்றமாக. உடனே அவன் முன்னால் தன் கரத்தை நீட்டி அவன் பேச்சைத் தடுத்த பாஸ்கரன்,

“உளறவில்லை ஆதி, நன்றாக யோசித்துத் தெளிவான முடிவு எடுத்த பிறகுதான் உன்னிடம் கேட்கிறேன்…” சொன்ன தந்தையை வெறித்தவன்,

“அப்பா…! எப்படி உங்களால் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறது? நேரிழையும், அத்தை, மாமா எல்லோரும் இறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நேரத்தில் இந்த விதமாக யோசிக்க உங்களால் எப்படி முடிந்தது?” அவன் தடுமாற, அவனை அழுத்தமாகப் பார்த்த பாஸ்கரன்,

“ம்… அவசியம்தான் தம்பி… இப்போதுதான் பேசவேண்டும்…” என்றவர் சற்று நேரம் அமைதி காத்தார்.

“இறந்தவர்கள் யாரும் மீண்டு வரப்போவதில்லை. அவர்கள் இறந்துவிட்டார்களே என்பதற்காக நாம் யாரும் அவர்கள் கூடச் சிதையில் ஏறவுமில்லை. ஆமாம், அவர்களின் மரணம் பெருத்த வலியைத் தான் கொடுக்கிறது. உயிர் விண்டுபோகும் அளவுக்குத் துடிக்கத்தான் செய்கிறோம். அதற்காக வாழாமல் இருக்க முடியாதே… நம்மை விடு… மகிழினிக்கு ஒரு தாய் வேண்டும்… அந்தத் தாய் நேயநறுமையாக மட்டும்தான் இருக்க முடியும்… அதே போல நேயநறுமைக்கு மகிழினி வேண்டும். உனக்கு…?” என்று அவர் முடிப்பதற்குள்,

“அப்பா… பிளீஸ்…! ஏற்கெனவே நிறையக் குழம்பிப்போயிருக்கிறேன். இன்னும் என்னைக் குழப்பாதீர்கள்…” என்றான் ஆதியதுலன் எரிச்சலும் சோர்வுமாக.

ஒரு கணம் அமைதி காத்தவர், அவனை அழுத்தமாகப் பார்க்க, அந்தப் பார்வையில் என்ன கண்டுகொண்டானோ, சட்டென்று தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான் ஆதியதுலன். எழுந்து தன் மகனை நெருங்கியவர், அவன் தோள்களில் கரத்தைப் பதித்து,

“காலம் நமக்காக என்ன வைத்திருக்கிறதோ தெரியாது ஆதி…! கிடைக்கிற சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நேற்று இருந்தவர்கள் இன்று இல்லை. இன்று இருப்பவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்று கூடத் தெரியாது… இதோ பார் ஆதி… இத்தனை காலம் யாருக்காக நீ பார்த்துப் பார்த்துச் செய்தாயோ, அவளும் போய் விட்டாள். இந்த இழப்பில் எஞ்சி இருப்பது, நீயும் நேயநறுமையும், மகிழும்தான். மகிழுக்கு நீங்கள் இருவரும் நிச்சயம் தேவை. அந்தக் குழந்தைக்காகவாவது நீங்கள் இருவரும் சேர்ந்து வாழவேண்டும்…” சொன்ன தந்தையை வலி நிறைந்த புன்னகையோடு பார்த்தான் ஆதியதுலன்.

“அப்பா… இதற்கு நேயநறுமை சம்மதிப்பாள் என்று நினைக்கிறீர்களா? அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது…! அவளுடைய பிடிவாதத்திற்கு முன்னாடி, எல்லாமே தோற்றுப்போகும்…” அவன் உறுதியாகச் சொல்ல, தன் மகனைப் புன்னகையுடன் பார்த்தார் பாஸ்கரன்.

அவன் நேயநறுமை மறுப்பாள் என்றுதான் சொல்கிறானே தவிர, தனக்கு விருப்பமில்லை என்று ஒரு வார்த்தை கூட அவன் கூறவில்லை. அப்படியென்றால், நேயநறுமையை மணப்பதில் அவனுக்கு ஆட்சேபனை இல்லை என்றுதானே அர்த்தம்.

இரண்டு பக்கமும் முறுக்கி நின்றால்தான் சிரமம். ஒரு பக்கம் மறுக்காத போது, மற்றதை இளக வைப்பது அத்தனை சிரமமா என்ன?

“நேயநறுமையைச் சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு… அவள் இந்த வீட்டு மருமகள்…” உறுதியாகச் சொல்ல அந்த வலியிலும் வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினான் ஆதியதுலன்.

“சொல்வது சுலபம். அதைச் செயல்படுத்துவது மிக மிகச் சிரமம். உங்களுக்கு அவளைப் பற்றிச் சரியாகத் தெரியாது. நேயநறுமை வளைந்து கொடுக்கும் நாணல் அல்ல. வளைக்க முடியாத மாமரம்.” என்றவனின் முகத்தில் அளவிடமுடியாத வலி. அவள் வளையமாட்டாள் என்பதால்தானே சுக்குநூறாக உடைந்து போனாள்.

அதே வலியுடன் தந்தையைப் பார்த்தவன்.

“அப்பா…! ஏற்கெனவே நொந்துபோயிருப்பவளை மேலும் நோகடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. தெரிந்தோ தெரியாமலோ அவளுடைய இந்த நிலைக்கு நானும் காரணம்… ஏற்கெனவே மனதோடு மரித்துக் கொண்டிருப்பவளுக்கு மரணவலியாக அத்தை மாமா நேரிழையின் இழப்பு வந்துவிட்டது. இதற்கு மேலும் அவளை வேதனைப்படுத்தும் சக்தி எனக்கில்லை” அவன் அழுத்தமாகச் சொல்ல, அவனுடைய தோள்களில் தட்டிவிட்டு,

“யார் சொன்னா, அவளுக்கு உன்னை மணப்பது வேதனையைக் கொடுக்கும் என்று? இதோ பாருப்பா… இந்த வாய்ப்பை விட்டால், அவள் காலம் முழுக்கத் திருமணம் செய்யாமல் தனியாகவே இருந்து விடுவாள். அப்படி ஒரு வாழ்க்கையை அவளுக்கு நீ கொடுக்கப் போகிறாயா?” கேட்ட தந்தையை தவிப்போடு பார்த்தான் ஆதியதுலன்.

“அப்பா எந்த அடிப்படையில் என்னை மணக்க அவள் சம்மதிப்பாள் என்று சொல்கிறீர்கள். அவளுக்கு என் மீதிருப்பது வெறுப்பு.. நிச்சயமாகச் சம்மதிக்க மாட்டாள்…” அவன் உறுதியாகச் சொல்ல, மறப்பாகத் தலையசைத்தார் பாஸ்கரன்.

“அவள் மறுக்கிறாள் என்பதற்காக ஒதுங்கிப் போக முடியுமா ஆதி. அவள் மறுத்தாலும் சம்மதிக்க வைக்கவேண்டிய பொறுப்பு நம்முடையது. இப்போது அவள் வேதனையில் இருக்கிறாள். புத்தி அதிகம் எதையும் யோசிக்காது. இதுதான் சரியான சந்தர்ப்பம் அவளைச் சம்மதிக்க வைக்க. இதோ பார் ஆதி… உனக்கு இதில் மறுப்பில்லை என்பதே போதுமானது… அவளை ஒப்புக்கொள்ள வைப்பது என் பொறுப்பு. என்னால் முடியவில்லை என்றாலும் அவளை நீ சம்மதிக்கவைக்க வேண்டும். உங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்துவைத்தால்தான், என் மனது நிம்மதியடையும்.” என்றவர் எழுந்து வீட்டிற்குள் செல்ல, ஆதியதுலனோ தன் நெற்றியை அழுத்தமாக வருடிக் கொடுத்தான்.

அவனை மணக்க, நேயநறுமை சம்மதிப்பாளா. அவள் காதலைத் துச்சமாக மதித்து, அவள் கெஞ்சலை உதறித்தள்ளி விட்டு அவள் தங்கையைக் கைப்பிடித்தவன் அவன். அவனை எப்படி ஏற்றுக் கொள்வாள்? வேதனையுடன் நினைத்தவன், இருக்கையில் தலையைச் சரித்து விழிகளை மூட, மனக்கண்ணில் வந்து சிரித்தாள் அவன் மனதைக் கொள்ளையடித்தவள்.

“ஓ… காட்… பிளீஸ் சேவ் மி ஃபிரம் திஸ் பெய்ன்…” முனங்கியவன், சற்றுத் தொலைவில் மெல்லிய சரசரப்புக் கேட்கத் திரும்பிப் பார்த்தான்.

நேயநறுமைதான், காதில் கைப்பேசியை வைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாள். அதைக் கண்டவனின் புருவங்கள் சுருங்கின.

இந்த நேரத்தில் யார் அவளை அழைத்திருப்பார்கள்? யோசனையோடு அமர்ந்திருந்தவனுக்கு சட்டென்று அன்று அழைத்த அந்த நபர் நினைவுக்கு வந்தான்.

ஒருவேளை அவனாக இருக்குமோ? எண்ணியவன் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டான்.

அவனையும் மீறிக் கால்களை அவளை நோக்கி நகரத் தொடங்க, அவன் சந்தேகப்பட்டது சரிதான் என்பதை உறுதி செய்யும் விதமாக,

“ஹாய் ஆல்ஃபிரெட்… சொல்லு…” என்கிற அவள் மென் குரலில் ஆணியடித்தது போல நின்று விட்டான்.

அவனையும் மீறி உடல் இறுகியது. தன்னையும் மீறி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறியும் வேகத்தோடு இன்னும் முன்னேற, அவனுடைய நல்ல நேரமோ என்னவோ, அதுவரை காதில் கைப்பேசியை வைத்துக்கொண்டிருந்த நேயநறுமை, அது காதைச் சுட்டதோ என்னவோ, கைப்பேசியை விலக்கி, அதை ஒலிபெருக்கியில் போட்டுவிட்டு சுவரோடு சாய்ந்து நின்றவாறு ஆல்ஃபிரெட் சொல்வதைக் கேட்கத் தொடங்க இவனுக்கு உடல் எரியத் தொடங்கியது.

இப்படி ஒட்டுக் கேட்பது தவறு என்று புத்திக்குத் தெரிந்தது. அதையும் தாண்டி அந்த நபர் அப்படி என்ன அவளிடம் பேசப்போகிறான் என்பதை அறியும் வேகமும் வர, புத்தியை அடக்கிய மனது அவர்களின் பேச்சைக் கேட்கத் தயாரானது.

“ஹே… எப்படியிருக்கிறாய்…?” என்றான் ஆல்ஃபிரெட்.

“ம்… நன்றாக இருக்கிறேன்… நீ எப்படி இருக்கிறாய்…?” என்றாள் சோர்வும் மென்மையும் ஒன்று சேர. இவள் குரல் கேட்டதுதான் தாமதம் மறுபக்கம் படபடத்தான் ஆல்ஃபிரெட்.

“என்னத்தைச் சொல்லச் சொல்கிறாய்? உனக்கு என்ன ஆயிற்று? இத்தனை நாட்களாக உன்னிடம் இருந்து ஒரு பதிலும் வரவில்லை. எத்தனை முறை உன்னை அழைத்தேன் தெரியுமா? எத்தனை குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்பேன்.. ஏன் எதற்கும் பதில் போடவில்லை? ஏன் அழைப்பை ஏற்கவில்லை? உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது என்று அன்று நான் சொன்னதை இன்னும் மனதில் வைத்துத்தான் ஒதுங்குகிறாயா? ஆனால் அதற்குப் பிறகு உனக்கு நான் எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லையே…? நீ இல்லாமல் இந்த அலுவலகம், அலுவலகமாகவே தெரியவில்லை நேயா…! ஐ மிஸ் யு டெரிபிலி” அவன் சொல்லத் தன்னையும் மீறி வேதனைப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் நேயநறுமை.

“ஆல்ஃபிரெட்… ரிலாக்ஸ்… நீ நினைப்பது போல எதுவுமில்லை… என் கைப்பேசியில் மின்னூட்டம் இல்லை. நேற்றுத்தான் மின்னூட்டியில் போட்டேன்…” சோர்வாக வந்த அவளுடைய குரலில் எதைக் கண்டானோ,

“நேற்றுத்தான் மின்னூட்டியில் போட்டாயா…? ஏன்…? என்னாச்சு? நீ எங்கே போனாய்? என்ன செய்கிறாய் என்று எதுவும் தெரியாமல் எப்படிப் பதறிப்போனேன் தெரியுமா?” அவன் தவிப்போடு சொல்ல, நேயநறுமைக்கு அவனை எப்படிச் சமாதானம் செய்வது என்று சுத்தமாகப் புரிய வில்லை.

அதே நேரம் சற்றுத் தள்ளி நின்று ஒட்டுக் கேட்ட ஆதியதுலனுக்கு இரத்த அழுத்தம் பயங்கரமாக எகிறியது. ஆல்ஃபிரெட் பேச்சிலிருந்து அவன் நேய நறுமையை விரும்பியிருக்கிறான் என்பது புரிய, இவன் தேகம் இறுகியது. பொறாமையில் நெஞ்சம் சுட்டது. பற்களை இறுகக் கடித்து, மேலும் அவர்கள் பேசுவதைச் செவிமடுக்கத் தொடங்கியவனிடமிருந்து சீற்ற மூச்சுப் பயங்கரமாக வெளிவரத் தொடங்கியது.

“நேயா… என்னாச்சு? ஏன் அமைதியாக இருக்கிறாய்? நேயா… இருக்கிறாய் தானே…?” மறுபக்கமிருந்த பதட்டம் அவள் மீதான உண்மையான அக்கறையைக் காட்ட இவனுடைய கைமுஷ்டிகள் இறுகின.

அதே நேரம் அவனுடைய அக்கறையான விசாரிப்பில், நேயநறுமையின் மனது கொஞ்ச ஆசுவாசப்பட்டது என்று சொன்னால் அது பொய் இல்லை. தனக்கு இனி யாருமில்லை என்கிற வெற்றிடத்தை நிரப்ப, ஒரு நண்பனாக ஆல்ஃபிரெட் இருக்கிறான் என்கிற எண்ணம், அவளுடைய வலியைக் குறைப்பதற்கும் பதில் அதிகரிக்கச் செய்ய, அந்த வலியை விழுங்கியவள்,

“ஆல்ஃபிரெட்… ஐ ஆம் ஓகே… எனக்கு ஒன்றுமில்லை” என்றாள் இவள் சமாதானப்படுத்தும் முகமாக.

“அப்படியென்றால், ஏன் விடுப்பு எடுத்தாய்?” கேட்டவனுக்கு என்ன பதிலைச் சொல்வது, அதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் முகம் கசங்கினாள் அவள். வேதனையையும் வலியையும் உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள்,

“ஆல்ஃபிரெட்… நான் இப்போது ஈழத்தில் இருக்கிறேன்…” என்றாள் மெதுவாக. அதைக் கேட்டதும் மறுபக்கம் சற்று அமைதி நிலவியது.

“ஈழமா…? ஏன்…? நான் நினைத்தேன் நீ கனடாவில் இருக்கிறாய் என்று…” ஏகப்பட்ட குழப்பம் அவன் குரலில். அதைக் கேட்டு முணுக்கென்று இவள் கண்களில் கண்ணீர் வர,

“ஐ… ஐ… லொஸ்ட் மை ஃபமிலி… அல்ஃபிரட்…” என்றாள் வலி நிறைந்த குரலில்.

அதைக் கேட்ட ஆல்ஃபிரெட் ஒரு கணம் ஆடிப்போனான். அவன் சரியாகத்தான் கேட்டானா, இல்லை ஏதாவது தவறாக.

“சா… சாரி.. ஐ டிடின்ட் கெட் இட்… (எனக்குப் புரியவில்லை)” அவன் சொல்ல,

“இங்கே என்னைப் பெற்றவர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். அதுதான் உடனே வரவேண்டியதாயிற்று…” அவள் சொல்ல அதிர்ந்தான் ஆல்ஃபிரெட்.

“மை காட்…! நேயா…! ஐ ஆம் சோ சாரி…! எனக்குத் தெரியாது… இதை ஏன் எனக்கு முன்னரே தெரிவிக்கவில்லை…? சொல்லியிருந்தால் நானும் ஈழம் வந்திருப்பேனே…? நான் இப்போதே ஈழம் வருகிறேன்…” அவன் தவிப்பும் வேதனையுமாகச் சொல்ல, மறுத்தாள் நேயநறுமை.

“இல்லை ஆல்ஃபிரெட்… உனக்கே நிறைய வேலைகள் இருக்கும்… தவிர, இங்கே எல்லாம் முடிந்து விட்டது. நானும் விரைவாகக் கனடா வர இருக்கிறேன்… தயவு செய்து அலையாதே…” மறுத்தாலும், அந்த மறுப்பில் அழுத்தமும், கூடவே உன் அக்கறை தனக்குத் தேவையில்லை என்கிற மறைமுக எச்சரிக்கையும் தெரிய, ஆல்ஃபிரெட் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சற்றுத் திணறினான்.

“நறுமை… நான் உனக்கு உதவத்தான் முயல்கிறேன்…” என்றான் சற்றுக் கோபமாக.

“அது எனக்குப் புரிகிறது ஆல்ஃபிரெட்… ஆனால்… எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை… என்னால் எதையும் தனியாகக் கையாள முடியும்… தயவு செய்து…” என்று கொண்டு வந்தவள், எதுவோ அவளை எச்சரிக்க, சட்டென்று திரும்பிப் பார்த்தாள். அங்கே சற்றுத் தொலைவில் ஆதியதுலன் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டதும், முகம் சிவக்கக் கோபமாக அவனை முறைத்தவள், சட்டென்று ஒலிபெருக்கியை நிறுத்திவிட்டுக் கைப்பேசியைக் காதில் வைத்து,

“ஆல்ஃபிரெட்… உன்னுடைய அக்கறைக்கு நன்றி. நான் பிறகு உன் கூடப் பேசுகிறேன்…” என்றவள் கைப்பேசியை அணைத்துவிட்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.

“ஹவ் டெயர் யு…” அவள் சீற்றமாகக் கேட்க, இப்போது அவன் நிதானமாக நேயநறுமையை நெருங்கினான். அவனுடைய பார்வையோ அவளை விட்டு அங்கும் இங்கும் அசைவதாயில்லை.

அவளை நெருங்கியவன், அவளை அழுத்தமாக ஏறிட்டு,

“யார் இந்த ஆல்ஃபிரெட்…? டு யு லவ் ஹிம்…?” என்று அவன் நேரடியாகக் கேட்க, அவனுடைய அந்தக் கேள்வியில் புருவங்களைச் சுருக்கியவள், அவனை எரிப்பது போலப் பார்த்தாள்.

எத்தனை தைரியமிருந்தால், அவளிடமே இப்படி ஒரு கேள்வியைக் கேட்பான். ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வர,

“அதைக் கேட்க நீங்கள் யார்?” சீற்றத்துடன் கேட்டவள், பொங்கியெழுந்த ஆத்திரத்தில், கோர்வையாகப் பேச முடியாமல் வார்த்தைகள் தடுமாற, எதையோ பேச வந்தவள், சற்றுத் தள்ளி அந்த வீட்டு வேலையாள் பரமு கையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு கடந்து செல்வதைக் கண்டதும், கப்பென்று தன் வாயை மூடிக்கொண்டாள்.

அதற்கு மேல் அங்கிருந்தால், ஏடாகூடமாக எதையாவது பேசி, மற்றவர்களின் கவனத்தைத் தம் பக்கம் திசை திருப்பி விடுவோமோ என்கிற அச்சத்தில், சீற்ற மூச்சுடன் வீட்டிற்குள் நுழையப் போக, சட்டென்று அவளுடைய தளிர் கரத்தைத் தன்னுடைய வலிய கரத்தால் அழுந்தப் பற்றிக் கொண்டான் ஆதியதுலான்.

அவனுக்கு எப்படியோ, அவனுடைய கரம் இவளுடைய கரத்தைத் தீண்டியதுதான் தாமதம், வெறுப்பு ஏற்படுவதற்குப் பதிலாக எப்போதும் போல இதம் பரவ, அதிர்ந்து போனாள் அப்பாவை.

எந்த இக்கட்டான நிலையிலும் அவனால் மட்டும்தான் அவளுடைய பெண்மையை அவளுக்கு அறிமுகப்படுத்த முடியும். வெறும் சின்னதாய் ஒரு தீண்டல் போதும், உடலின் அத்தனை பாகங்களுக்கும் சூடான இரத்தம் பாய்ந்து அவளைச் செயலிழக்கச் செய்து விடும். இது அவளுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம். இதோ இப்போதுகூட, நெஞ்சு முட்டக் கரைக்க முடியாத அளவு வலி இருந்தாலும் கூட, அவனுடைய அந்தத் தீண்டல் அவளுக்குள் முடங்கிக் கிடந்த காதலையும், ஆசையையும் தட்டி எழுப்பச் செய்தது. இது என்ன வெட்கக்கேடு. தன் காதலை அவன் காலடியில் கொட்டிய போதும் அதை உதாசீனம் செய்து, அவளை வேண்டாம் என்று மறுத்து அவள் தங்கையை மணந்து கொண்டவன். அவளோடு கொஞ்சிக் குலாவி குழந்தையை வேறு பெற்றுக் கொண்டவன். ஆனபோதும் அவன் தொட்டால் தொலைந்து போகிற என்னை எதனால் எரித்துச் சாம்பலாக்க? ஒரு விநாடி தடுமாறி நின்றவள், மறு கணம் அவனுக்கும் அவளுக்குமான உறவின் தூரம் புரிய, ஆத்திரத்தோடும், அவமானத்தோடும் தன் கரத்தை உதறிவிட்டுத் திரும்பி அவனைப் பார்த்தாள்.

தன் இயலாமையின் மீதே ஆத்திரம் கொண்டவளாக ஓரடி அவனை நெருங்கி நின்றவளின் சூடான மூச்சுக் காற்று, அவன் மார்பில் பட்டுத் தெறிக்க அண்ணாந்து பார்த்தவள், அவன் கண்களுக்குள் தன் கண்களை அழுத்தமாக ஊடுருவச் செய்து,

“நெவர்… எவர்… டச் மி… என்றாள், நிறுத்தி நிதானித்து அழுத்தமாக.

அதைக் கேட்டவனின் உதட்டில் கிண்டலாய் ஒரு புன்னகை மலர்ந்தது. அன்று அவனுடைய கையணைப்பில் அழுது கரைந்து உறங்கினாளே. அப்போது அவனுடைய தொடுகை அவளுக்குக் கசக்கவில்லையா என்ன? எண்ணியவன், சட்டென்று அவள் இடைபற்றித் தன்னை நோக்கி இழுக்க, மின்னாமல் முழங்காமல் அவன் மார்பில் மோதி நின்றாள் நேயநறுமை.

மோதியவள் பதறியவாறு அவனை விட்டு விலக முயல, ஆதியதுலனின் ஒற்றைக்கரம் அவள் பின் முள்ளந்தண்டின் முடிவில் அழுத்தமாகப் பதிந்து அவளைத் தன்னிடமிருந்து பிரிந்து விடாமல் செய்தது.

அதிர்ந்து போனாள் நேயநறுமை. பதட்டத்தோடு விலக முயன்றவள், முடியாமல் போக, கோபமும் இயலாமையும் ஒன்றுசேர அவனைப் பார்த்தாள். அவனோ கூரிய விழிகளோடு அவளையே இமைக்காமல் பார்த்து இருந்தான்.

அந்த விழிகள் என்ன சொன்னதோ, தன் மறுப்பை மறந்து விழிகள் விரிய அந்த விழிகளில் கரைந்து உருகியவளாக அவனையே பார்த்து இருந்தாள்.

ஆதியதுலனும் தன்னுடைய மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டுத் தெறிக்கும் வகையில் குனிந்தான். மறு கணம் நடந்தவை அனைத்தும் அவளுக்கு மொத்தமாக மறந்து போனது.

அவனுடைய ஆண்மையும், அது கொடுக்கும் உணர்வும், அவளது உலகையே மறக்கடிக்க, உடல் சிலிர்க்கத் தன்னையும் மறந்து அவனை நெருங்கி நின்றாள் நேயநறுமை. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து காற்றில் கரைய, ஒரு பொம்மை போல ஏக்கத்தோடு அவன் முகம் பார்த்து நிற்க உலகமே நின்று போனது அவளுக்கு.

காதல்…! அதுதான் எத்தனை பொல்லாதது. ஒருமுறை ஒருத்தன் மீது ஆழமாக வந்துவிட்டால், எக்காலத்திலும் அழியாது இதயத்தில் நிரந்தரமாகப் பச்சை குத்தியது போல நின்று வதைக்கிறது. இதோ அவளை வெறுத்தவன், மறுத்தவன், அவள் வேண்டாம் என்று விலக்கியவன், அவளை ஒரு பெண்ணாகவே மதிக்காதவன், நெஞ்சம் முட்டக் கசப்பை அள்ளிக்கொட்டியவன், இப்போது அவளை

இழுத்து அணைத்திருக்கிறான். ஆனால் அவனுடைய கைவளைவில் கிடக்கும் போது அது எதுவும் நினைவுக்கு வராது அவன் மட்டும் தனித்துத் தெரிகிறான். இந்த விநாடி அவன் கொடுத்த ஏமாற்றத்தின் வடு காணாமல் போய், அவனுடைய அந்த அணைப்பைப் பாழாய்ப் போன இந்த உடல் இரசித்துத் தொலைக்கிறது. மனது உருகிக் குழைகிறது. புத்தி தன்நிலை கெட்டு மயங்கிக் கிடக்கிறது. தொலைந்த உயிரானவர்களின் வலி நிறைந்த நினைவுகள் கூடத் தொலைதூரம் சென்று விட்ட உணர்வு. இது என்ன கொடுமை. தவித்துப் போனாள் நேயநறுமை.

அவனை விட்டு விலகு என்கிறது புத்தி. இல்லை விலகாதே, அவன் அருகாமையை இரசி என்கிறது மனது. அந்த ஆண்மையைச் சுவாசி என்கிறது பெண்மை. இதில் எதைக் கேட்பாள்? அவன் நெருக்கத்தில் தன்னைத் தொலைத்தவளாக, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனுடைய கைவளைவில் கிடக்க, அவனோ அவளைத்தான் உணர்ச்சிகள் பொங்கப் பார்த்து நின்றிருந்தான்.

முதலில் அந்த நீண்ட விழிகளில் தெரிந்த அதிர்ச்சியும், அதன் பின்னர்க் கோபமும், அதைத் தொடர்ந்து மங்கிப்போன கோபத்தின் இடத்தை, காதல் கைப்பற்றிக் கொண்டதையும் கவனித்தவனுக்கு, அதற்கு மேல் எதையும் யோசிக்க முடிந்து இருக்கவில்லை.

“நீ இன்னும் மாறவேயில்லை நறுமை…” தன்னை மறந்து அவள் காதுக்குள் சொல்ல, அதுவரை, ஏதோ ஒரு உலகத்தில் மிதந்து கொண்டிருந்த நேயநறுமை, அவனுடைய குரலில் சுயம் பெற்றவளாக, அவனை உதறித் தள்ளிவிட்டு, எதையோ பேசுவதற்கு வாயெடுத்தாள். ஆனால் வாழ்வில் முதன் முறையாகப் பேச முடியாமல் உள்ளே குரல் அடைத்துக்கொண்டது.

அத்தனை உணர்வுகளையும் மொத்தமாக வார்த்தைகளால் தேக்கிக் கொட்டிவிட முயன்றவளுக்கு அது முடியாமல் போக, தன் மீது ஏற்பட்ட இயலாமையின் வெறுப்பில் அவனை உதறிவிட்டு அங்கிருந்து போக முயல, சட்டென்று அவளுடைய மார்பினூடாகக் கரத்தை எடுத்துச் சென்று தன் முன் உடலோடு அவளுடைய பின்னுடலை மோத வைத்தவன், குனிந்து அவளுடைய காதுகளுக்கு அருகே தன் உதடுகளைக் பட்டும் படாமலும் உரசியவாறு எடுத்துவர, அவனுடைய அந்தச் செயலில் அதிர்ந்து, பேசும் திறன் இழந்து நின்று இருந்தாள் நேயநறுமை.

எத்தனை வருட ஏக்கம் அது. எத்தனை இரவுகள் அவன் அணைப்பில் இருப்பதாகக் கற்பனை செய்திருப்பாள். இன்று அது நிஜத்தில் நடக்கும் போது அதை ஏற்கமுடியாத அவல நிலையில் இருக்கிறாளே. முன்னர் அவன் தனி மனிதன். கற்பனைக்கு ஏற்றவன். ஆனால் இப்போது அவன் அவளுடைய தங்கையின் கணவன். அவனுக்கென்று குழந்தை இருக்கிறது. இதையெல்லாம் மறந்துவிட்டு அவன் அணைப்பில் எப்படி என்நிலை கெட்டு நின்றேன்? என் தனித்துவத்திற்கு என்னாயிற்று? விலகு நேயா… அவனிடமிருந்து விலகு. தூரப் போ… புத்தி அவளை எச்சரிக்கை செய்தது. ஆனால்

மனதோ அதற்கு எதிர்மாறாக அவன் உடல் வெம்மையை உள்வாங்கிக்கொள்ள முயன்றது. இரண்டு சாத்தான்களுக்கும் நடுவே கிடந்து அல்லாடிய நேரம், அவனோ, அணைப்பை இளக்காதவாறு அவளுடைய செவிக்கு தன் உதடுகளை எடுத்துச் சென்றான்.

அவன் முகம் நெருங்க நெருங்க, இவளுடைய தவிப்பு கூடியதேயன்றி இம்மியும் குறையவில்லை. அதற்கு மேல் அவன் வெம்மையைத் தாங்கும் சக்தியில்லாமல் உதடுகள் நடுங்க விழிகளை மூடிக் கொள்ள. அவளை நோக்கிக் குனிந்தவனின் நாசி, அவளுக்கே உரித்தான பிரத்தியேக வாசனையை ஆழ மூச்செடுத்து நுரையீரலை நிரப்ப முயன்றது.

எத்தனை முறை அள்ளி எடுத்தாலும் அந்த வாசனை இவனுக்குப் போதவில்லை. மேலும் அவளுடைய கழுத்தை நோக்கி நெருங்கியவனின் நாசி பட்டும் படாமலும் அவளுடைய கழுத்து வளைவைத் தீண்ட, இவளுடைய உடலின் ஒட்டு மொத்த மயிர்க்கால்களும் எழுந்து நின்றன. அவனுடைய அந்தச் செயலில் தொண்டை வறண்டு போகச் செய்வதறியாது நின்றிருந்தாள் நேய நறுமை. அவனோ மேலும் அவள் உடலைத் தன் உடலோடு இறுக்கிக் கொண்டான். மெதுவாகத் தன் உதடுகளை அவளுடைய காதுகளுக்கு எடுத்து வந்தவன்,

“உன்னிடம் ஒரு கேள்வி கேட்டேன். பதில் சொல்லாமல் போனால் என்ன அர்த்தம்?” கேட்ட போதே அவனுடைய கடிய உதடுகளும், அவன் மீசை தாடியும் காதையும், கன்னத்தின் கரையோரத்தையும் உரச, அதன் தாக்கத்தைத் தாங்க முடியாமல் இவளுடைய கால்கள் நடுங்கி மடியத் தொடங்கின.

அதை உணர்ந்தவன் போல, சட்டென்று மறு கரத்தை வயிற்றோடு எடுத்துச் சென்று அவளைத் தன்னோடு இறுக்கி, அவளுடைய பலவீனத்தைக் கடன் வாங்கிக் கொள்ள, தவித்துப் போனாள் நேயநறுமை.

ஒரு பக்கம் அவன் அணைப்பில் உருகும் உடல். மறு பக்கம் அவன் மீது சீற்றம் கொண்டு சபிக்கும் மனது. இன்னொரு பக்கம் அவனிடமிருந்து விலகச் சொல்லும் புத்தி. இவை மூன்றுக்கும் இடையில் சிக்கித் தவித்தவள்,

“எ… என்ன செய்கி..றீர்கள்… மரியாதையாகக் கை… கையை எடுங்கள்…” என்றாள் அடிபட்ட குரலில்.

அவள் சொல்லிவிட்டாள் தான். ஆனால் அவன் எடுக்க வேண்டுமே. கொஞ்ச நேரம் அந்த அணைப்பின் இதத்தை அனுபவிப்பவன் போல அப்படியே நின்றிருந்தவன், பின் என்ன நினைத்தானோ, அவளை அணைத்திருந்த கரத்தைக் கொஞ்சமாய் விலக்கி, அப்படியே மேலே எடுத்து வந்து அவளுடைய மேல் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திருப்பினான்.

அவளோ அவன் முகம் பார்க்கும் சக்தியின்றி, சிவந்த முகமும், தவித்த உதடுகளுமாய் நிலம் பார்த்து நின்றிருந்தாள். அவளுடைய அந்த நிலை அவனுக்கு என்ன சொன்னதோ,

“நறுமை…!” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் மென் குரலில்.

அவனுடைய அந்த அழைப்பு அவளை உருக்கியதோ? இல்லை தவிக்க வைத்ததோ? அந்த நேரம் இரண்டு துளிக் கண்ணீர் பொட் பொட் என்று கீழே விழ, அதைக் கண்டவனின் விழிகளிலும் வலி. அவளுடைய நாடியைப் பற்றி உயர்த்த முயன்றான். அவளோ மறுத்துத் தலை குனிந்திருக்க,

“என்னைப் பார் நறுமை…” என்றான் மென்மையாக. அவளோ அவனைப் பார்க்க மறுத்து எங்கோ பார்க்க, சட்டென்று அவளுடைய கன்னத்தைப் பற்றித் தன் பக்கமாகத் திருப்பினான் ஆதியதுலன்.

இப்போது அவளுடைய விழிகள் அவனுடைய விழிகளைச் சந்திக்க, அந்தக் கூரிய விழிகளின் தாக்கத்தில் தன்னிலை கெட்டவளாக மீண்டும் தலையைத் திருப்ப முயன்றாள். ஆனால் அவனோ, மீண்டும் அவள் கன்னத்தைத் தன் விரல்களால் அழுத்தித் தன் பக்கமாகத் திருப்பி, அவளுடைய விழிகளை மாறி மாறிப் பார்த்தான்.

“சொல்லு நறுமை… அந்த ஆல்ஃபிரெட்கும் உனக்கும் இடையில் என்ன இருக்கிறது? டு யு லவ் ஹிம்..” என்றான் தவித்த குரலில்.

அந்தக் கேள்வியில் அதுவரையிருந்த மாயை அறுந்து போக, அவனை விறைப்புடன் பார்த்தாள் நேயநறுமை. எத்தனை தைரியம் இவனுக்கு. இந்தக் கேள்வியைக் கேட்க எத்தனை திண்ணம் இருக்க வேண்டும். அதுவரை அடங்கிக்கிடந்த ஆத்திரம் கொப்பளித்துக்கொண்டு வந்தாலும், அதை ஆழ மூச்செடுத்து அடக்கியவள், இப்போது நிதானமாக அவனைப் பார்த்தாள். தன் விழிகளை அவனுடைய விழிகளுக்குள் கலக்க வைத்தாள்.

“அவருக்கும் எனக்கும் இடையில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கேட்க நீங்கள் யார்?” அழுத்தமாகக் கேட்க அவன் உதடுகளில் மெல்லிய புன்னகை. அந்தப் புன்னகை மாறாமல் விழிகளைச் சுருக்கி அவளைப் பார்த்தவன்.

“நான் யாரா? அது உனக்குத் தெரியாது??” என்றான் அவளுடைய விழிகளையே பார்த்தவாறு. அந்த விழி என்ன சொன்னதோ, மீண்டும் தடுமாற முயன்றது நாசமாய் போன இதயம். மீண்டும் குழைந்து உருக முயன்ற இதயத்தைக் கடிவாளமிட்டு இழுத்துப் பிடித்து அவனை வெறுப்போடு பார்த்தவள் மறு கணம் அவன் மார்பில் கரத்தை வைத்துத் தள்ளி விலக்கிவிட்டு,

“எனக்கும் உங்களுக்கும் இருக்கும் சம்பந்தம் ஒன்றே ஒன்றுதான் ஆதியதுலன். அது நீங்கள் என் தங்கையின் கணவர் என்பது மட்டும்தான். இது தவிர எனக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லை… இருக்கப் போவதுமில்லை” அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள், மறு கணம் அவனை வெறுப்போடு பார்த்துவிட்டுத் தன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாற்ற, ஆதியதுலனோ அவள் சொன்னதைக் கேட்டு, முகம் கசங்க நின்றிருந்தான்.

“உங்களுக்கு என் மீது ஒரு விநாடி கூட, சலணம் தோன்றவில்லையா..?”

“நீங்கள் என்னைச் சலனப்படுத்தினீர்கள் அதுலன்…!”

“நான் உங்களைக் காதலிக்கிறேன்…”

அன்று அவள் தன் காதலை வெளிப்படுத்திய நாளும், அந்த நாள் கொடுத்த வலியும் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வர, அவனுடைய இதயத்தில் சுளீர் என்ற ஒரு வலி பிறந்து வதைத்தது. அந்த வலியைத் தாள முடியாமல் வலது கரத்தால் இடது மார்பை அழுத்திக் கொடுத்தவாறு அங்கிருந்த தூணின் மீது சாய்ந்து நின்று கொண்டவன் விழிகளை மூடி ஆழ மூச்செடுத்து விட்டான்.

‘எனக்கும் உங்களுக்கும் இருக்கும் சம்பந்தம் ஒன்றே ஒன்றுதான். அது நீங்கள் என் தங்கையின் கணவர் என்பது மட்டும்தான்… இது தவிர எனக்கும் உங்களுக்கும் எந்த உறவும் இல்லை… இருக்கப் போவதுமில்லை’ அவள் சொன்னது திரும்பத் திரும்ப மனதில் ஓட, நெஞ்சம் தவித்தது அவனுக்கு.

நிஜமாகவே அவர்களுக்கிடையில் எதுவும் இல்லையா என்ன? அவன் மனதே அவனிடம் கேட்டுக்கொண்டது தாள முடியாத வலியோடு.

 

 

What’s your Reaction?
+1
9
+1
2
+1
3
+1
0
+1
3
+1
1
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 14/15

-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…

8 hours ago

வெந்தும் தணியுமோ காதல் – 13

13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…

2 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 12

12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 9/10

-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…

1 week ago

வெந்தும் தணியுமோ காதல் – 8

8- எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு…

2 weeks ago

வெந்தும் தணியுமோ காதல் – 7

-7- அவளுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டது தான் தாமதம், அவனுக்கும் அனைத்தும் மறந்து போனது. தான் செய்வது சரியா, தவறா என்று…

2 weeks ago