எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு முழுதாக அவன் முன்னுடலோடு பதிந்திருக்கத் தலை, அவனுடைய பலம்கொண்ட புஜத்தின் மீது சரிந்து கிடக்க இன்னும் விசும்பிக்கொண்டிருந்தாள் நேயநறுமை.
விசும்பல் சத்தம் மட்டும் இல்லையென்றால், அவள் மயங்கிவிட்டாள் என்றுதான் அவன் நினைத்திருப்பான்.
தன் கைவளைவில் ஓய்ந்து போய்க் கிடந்தவளை, ஒரு முறை இறுக அணைத்து விடுவித்தவன், பின் அவளைத் தன் கரங்களில் ஏந்தியவாறு எழுந்தான். நடந்து சென்று அவளைப் படுக்கையில் கிடத்தி விட்டு, அவளை ஏறிட, அவளோ அவனைப் பார்க்காமல் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய தலையை ஆதுரத்துடன் வருடிக் கொடுத்தவன்,
“எல்லாம் சரியாகிவிடும் நறுமை… எல்லாமே சரியாகிவிடும்…“ இதை அவளுக்குச் சொன்னானா, இல்லை தனக்குத்தானே சொன்னானா என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம். ஆனால், உறுதியாகச் சொன்னவன், சட்டென்று அவளை விட்டு விலகி வெளியே வந்தான்.
அறையை விட்டு வெளியே வந்தவனுக்குத் திடீர் என்று கால்களில் பலமின்றிப் போனதோ, தடுமாறியவன் சட்டென்று சுவரோடு சாய்ந்து நிற்க, இதயமோ பலமாகத் துடிக்கத் தொடங்கியது. அது கொடுத்த அழுத்தத்தில் வலது கரத்தால் இடது மார்பை அழுத்திக் கொடுத்தவனின் விழிகளில் மீண்டும் கண்ணீர். உதடுகளோ தவிப்பில் ஒன்றை ஒன்று ஒட்டி இறுகிக்கொண்டன.
ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவன், கண்களில் உதித்த கண்ணீரைத் துடைத்துவிட்டு சமையலறைக்கு வந்தான். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சியவன், அதை ஒரு குவளையில் ஊற்றிவிட்டு, அந்தப் பாலில் தூக்க மாத்திரையைக் கலந்து, மீண்டும் நேயநறுமையின் அறைக்கு வந்தான்.
அதுவரை விட்ட இடத்தில்தான் விசும்பலும் வெறித்த பார்வையுமாகப் படுத்திருந்தாள் நேய நறுமை. வந்தவன், குவளையை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, அவளுடைய கரத்தைப் பற்றி எழுந்தமரச் செய்தது, மேசையிலிருந்த குவளையை எட்டி எடுத்து அவளிடம் நீட்டி,
“இதைக் குடி நறுமை…” என்றான் இதமாக. அவன் கரத்திலிருந்த குவளையை வெறுப்பாகப் பார்த்தவள், மறுப்பாகத் தலையசைத்துவிட்டு அவனைக் கலக்கமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையில் என்ன கண்டானோ, தன் கரத்திலிருந்த பாலை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு, அவளுடைய முகத்தைப் பொத்தினாற் போலப் பிடித்தவன்,
“என்னடா?” என்றான். தன் கன்னத்தைப் பற்றிய அவன் கரங்களின் மீது தன் கரத்தைப் பதித்தவள், அவனை ஏக்கமாகப் பார்த்து,
“நா… நான்… கெட்டவளா?” என்றாள் தவிப்போடு. அதைக் கேட்டு அதிர்ந்தவன்,
“நறுமை???” குழப்பமாகப் பார்க்க,
“நான் ஏன் இப்படி இருக்கிறேன்?” என்றாள் அடுத்து. இவனோ இன்னும் புரியாமல் அவளையே பார்த்திருக்க,
“அம்மா அடிக்கடி சொல்வார்கள். உன் பிடிவாதத்தால் நீ நிறைய இழக்கப் போகிறாய் என்று… அதே போல ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். இப்போது அந்தப் பிடிவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு, அவர்களோடு பழையது போலச் சேர்ந்து வாழத் துடிக்கிறேன். முடியவில்லையே…” என்றவளுக்குச் சீறலான மூச்சு ஒன்று வெளி வந்தது.
அவள் சொன்னதைக் கேட்டவன் தவிப்போடு தன் கரத்தை விலக்கி, அவள் கரங்களைப் பற்றி அழுத்திக் கொடுத்து,
“நறுமை… பிளீஸ்… நான்” அவன் எதையோ சொல்ல வர,
“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்னைப் பிடிக்காதா?” என்றாள் அடுத்து. இவனோ அவளுடைய கேள்வியில் அதிர்ந்து,
“ஏன்டா இப்படிப் பேசுகிறாய்… அவர்களுக்கு உன் மீது கொள்ளைப் பிரியம் என்று தெரிந்தும் நீ இப்படிக் கேட்கலாமா?” அவன் தவிப்போடு கேட்க, இவளோ மறுப்பாகத் தலையசைத்தாள்.
“இல்லை… அவர்களுக்கு என்னைப் பிடிக்காது. நேருவைத்தான் பிடிக்கும். அவர்களுக்கு என் மேல் அன்பிருந்தால் இப்படி அநாதையாக என்னை விட்டுச் சென்றிருக்க மாட்டார்கள். நேரிழையைத் தங்களோடு கூட்டிப்போனவர்கள், என்னை மட்டும் ஏன் உயிரோடு விட்டுச் சென்றார்கள்? நான் வேண்டாம் என்றுதானே என்னை மட்டும் அநாதையாக விட்டுச் சென்றார்கள்…” அவள் கேட்க, சட்டென்று அவளுடைய தோள்களைப் பற்றி,
“நறுமை… தயவு செய்து இப்படிப் பேசாதே… அத்தைக்கும் மாமாவுக்கும் நீ என்றால் எந்தளவு உயிர் என்று உனக்கே தெரியும்… தெரிந்திருந்தும் இப்படிப் பேசலாமா?” குழந்தையோடு பேசுவது போல அவள் தோள்களில் அழுத்திய கரத்தின் பெருவிரலால் இதமாக வருடியவாறு கேட்க, அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தான்.
“அப்படியென்றால் என்னை ஏன் உயிரோடு கொன்றுவிட்டு அவர்கள் மட்டும் விடைபெற்றுச் சென்றார்கள்? அவர்கள் இல்லாமல் நான் மட்டும் எப்படி உலகத்தில் இருப்பது? அம்மா அப்பாவைப் பிரிந்திருந்தாலும் ஒரு நாள் கூட அவர்களோடு பேசாமல் இருந்ததில்லை தெரியுமா. இனி நான் யார் கூடப் பேசுவேன். அப்பாவும் அம்மாவும் எத்தனை முறை என்னைத் திரும்ப டொரன்டோ வரும்படி அழைத்தார்கள். பாவி நான்.. அவர்களின் அழைப்பை அலட்சியம் செய்து விலகியே இருந்துவிட்டேன். கடைசியில் நான் எதைச் சாதித்தேன்? இந்த மூன்று வருடங்களும் அவர்களுடனான அருகாமையை இழந்த நான் இப்போது மொத்தமாக இழந்து நிற்கிறேனே. ஐயோ…! இத்தனை நாட்கள் தனியாக வாழ்ந்த இந்தக் குற்ற உணர்ச்சியை நான் எப்படிப் போக்குவேன்… இல்லை… நானும்… நானும் அவர்கள் கூடப் போகவேண்டும்… ஐ நீட் டு கில் மை செல்ஃப்…!” அவள் உறுதியாகச் சொல்ல, ஒரு கணம் அரண்டுதான் போனான் ஆதியதுலன். அவளுடைய மனநிலை இப்போது சமநிலையில் இல்லை என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது. இந்த நிலையில் அவள் ஏதாவது முட்டாள்தனமாகச் செய்துவிடுவாளோ என்கிற அச்சம் அவனைப் புரட்டிப்போட,
“பைத்தியம் போலப் பேசாதே நறுமை…! இதோ பார்… மகிழினி அவர்கள் கூடத்தான் போனாள். ஆனால் அவளுக்கு எதுவும் ஆகாமல் நன்றாகத் தானே என்னிடம் வந்தாள். அப்படியென்றால், அவர்களுக்கு மகிழினி மீது அன்பில்லை என்று அர்த்தமா? உயிரானவர்கள் வாழவேண்டும் என்று தான் விட்டுப் போனார்கள் நறுமை…! இதோ பார்… உனக்கு யாருடைய தேவையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மகிழினிக்கு நீ வேண்டும். அவள் உன் தங்கையின் உதிரம். அவள் வயிற்றில் ஜனித்துப் பிறந்தவள். உனக்கும் மகள் போல. அவளுக்காக நீ மனத்தைத் திடப்படுத்தி வாழத்தான் வேண்டும்… தயவு செய்து உன்னை அமைதிப்படுத்திக்கொள்…” என்றான் பதட்டமும், கலக்கமுமாக.
மகிழினியின் பெயரைக் கேட்டதும், அதுவரை இருந்த வலியும் தவிப்பும் குறைந்து போக,
“மகிழினி… என் நேருமாமா எனக்குக் கொடுத்த பரிசு… எனக்கு அவள் வேண்டும். மகிழ் எங்கே… எனக்கு மகிழ் வேண்டும்… அவள் எங்கே…” கேட்டவாறு அவள் படுக்கையை விட்டு எழ முயல, சட்டென்று அவளைப் பற்றித் திரும்பவும் படுக்கையில் அமர வைத்தான் ஆதியதுலன்.
எட்டி மேசையிலிருந்த பால் குவளையை எடுத்து அவளுடைய கரங்களில் வைக்க முயன்றவாறு,
“முதலில் இந்தப் பாலைக் குடி. அதற்குப் பிறகு மகிழைப் பார்க்கலாம்…” என்றான் அழுத்தமாக. உடனே மறுத்தவள்,
“எனக்கு… எதுவும் வேண்டாம். மகிழ்தான் வேண்டும். அவள் எங்கே…?” கூடப்பிறந்த பிடிவாதம் எங்கே போய்த் தொலையும்? இப்போது கோபமாக அவளைப் பார்த்தவன்,
“நறுமை…! இதுவரை நீ எதுவும் சாப்பிடவில்லை. இருக்கும் மனநிலையில் சாப்பிடுவது இயலாத காரியம் என்றும் எனக்குத் தெரியும். குறைந்தது இந்தப் பாலையாவது குடி… அப்போதுதான் மகிழினியை அழைத்து வருவேன்” என்று அவன் மிரட்ட, சட்டென்று கன்னத்தில் கண்ணீர் வடிய அவனைப் பார்த்தாள் நேயநறுமை.
ஒரு கரத்தால் அந்தக் கண்ணீரைத் துடைத்து விட்டவனின் முகமோ ஒரு விநாடி கசங்கிப் போனது.
கண்ணீரையே கண்டறியாத கண்கள் இப்போது, தொடர்ந்து அதை மட்டும்தான் சிந்துகிறது.
“நறுமை…! உலகம் இன்றோடு முடிந்துவிடப் போவதில்லை. நாளைக்கும் நீ சந்திக்கும் வலிகள் நிறைய இருக்கிறது. அதைத் தாங்குவதற்கான சக்தி உனக்குத் தேவை… இப்படி நீ பட்டினி கிடந்தால் அதை உன் அம்மாவால் தாங்க முடியுமா? அப்பா துடித்துப் போக மாட்டாரா… மறுக்காமல் குடிமா…” கெஞ்சியவனாக, குவளையை அவளுடைய உதட்டின் அருகே எடுத்துச் செல்ல, அதற்குமேல் மறுக்காமல், அவன் நீட்டிய குவளையை தன் கரத்தில் வாங்கிக் கொண்டவள், அதைக் குடித்து முடித்த போது திரும்பவும் அவளிடமிருந்து கேவல் பிறந்திருந்தது.
உடனே குவளையை ஓரமாக வைத்துவிட்டு, அவளருகே அமர்ந்தவன், அவளை இழுத்துத் தன் மீது போட அவளுடைய முகம், அவனுடைய தோள் வளைவில் புதைந்து கொண்டது.
“நேரு கடைசியாக என்னிடம் பேசும்போது சொன்னாள், நான் செத்தால்தான் வருவாயா என்று? என்னை வரவழைக்கத்தான் செத்துப் போனாளா?” கேவலுடன் கேட்க, ஆதியதுலனின் உடல் ஒரு கணம் இறுகியது.
“நறுமை…! சொல்வதெல்லாம் நடக்கும் என்றால், யாருமே இப்போது உயிரோடு இந்த உலகத்தில் இருக்க முடியாது…” என்றான் மென்மையாக.
“ஆனால் நேரு சொன்னது நடந்து விட்டதே…நான்தான்… நான்தான் அவள் சாவுக்குக் காரணம். எல்லாம் என்னால்தான்… நான் பாவி… நான் பாவி… எல்லார் மேலும் சத்தியம் வாங்கினாள். நானும் சத்தியம் செய்தேன். இப்போது அத்தனை பேரும் போய்விட்டார்கள்.. நான் சத்தியத்தைக் காப்பாற்றாததால்தான் செத்துப் போனார்கள். ஐயோ இந்த குற்ற உணர்விலிருந்து நான் எப்படி வெளியே வருவேன்… நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்…” அவள் துடிக்க,
“ஷ்.. ஷ்… போதும் நறுமை… இதற்கு மேல் எதுவும் பேசாதே… இதில் உன் தப்பு எதுவுமே இல்லை… நம்புமா…” என்று சமாதானம் செய்தவன், அவள் குடித்த மருந்து வேலை செய்யும் நேரத்திற்காகக் காத்திருக்க, நேயநறுமையின் உடல் மெல்ல மெல்ல சோரத் தொடங்கியது. அதுவரை அவளுடைய முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன், அவளது தலை கொஞ்சம் சரிய, உடனே அவளுடைய தோள்களைப் பற்றிப் படுக்கையில் சரித்தான். கால்களையும் தூக்கிப் படுக்கையில் வைத்து, கலங்கிய அவளுடைய கண்களைத் துடைத்தவாறு,
“ஷ்… ஷ்… இட் இஸ் இனஃப்… அழ வேண்டிய அளவு அழுதாயிற்று. இனி… அழக் கூடாது… படு…” என்றவன் கலைந்திருந்த கூந்தலை மெதுவாக வருடிக் கொடுக்க, அவள் என்ன நினைத்தாளோ அவனுடைய ஒரு கரத்தை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டவளாக விழிகளை மூட, அவள் படுத்த விதத்தில் அவள் பக்கமாகச் சரிந்தவனின் உள்ளம் அவள் நிலையைக் கண்டு உருகிப் போயிற்று. நீண்ட நேரம் அவளையே பார்த்திருந்தவன், அவளுடைய முகத்தை மறைத்தி இருந்த கலைந்த கூந்தலை மறு கரத்தால் ஒதுக்கி விட்டு அவளுடைய தலையை வருடியவாறே,
“சாரி நறுமை… உன்னை இப்படிப் பார்க்கும் போது என்னால் தாளமுடியவில்லை. உன்னைக் கொல்லும் இந்த வேதனை முழுவதையும் என்னால் வாங்க முடியும் என்றால், ஒரு துளிகூட உன்னைத் தீண்டாமல் வாங்கியிருப்பேன்… ஆனால் அது முடியாதே. நான் என்ன செய்யட்டும். ஒரு வகையில் உன்னுடைய இந்தக் குற்ற உணர்ச்சிக்கு நானும் காரணம். அன்று உன்னுடைய காதலை ஏற்று இருந்தால், நீ வேறு நேயநறுமையாக மாறியிருப்பாய். ஆனால் விதி வேறு நினைத்திருந்ததே நான் என்ன செய்யட்டும்?” மென்குரலில் தனக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னவனின் விழிகளிலும் கண்ணீர் நிறைந்திருந்தது.
அவள் மட்டுமா கண்ணீரைப் புதிதாகக் காண்கிறாள். அவனும்தான். தாய் இறந்த போது அழுதான். அதற்குப் பிறகு இப்போதுதான் அழுகிறான். அதுவும் அவள் நிலை கண்டு அழுகிறான். தன்னை விட்டுச் சென்ற உறவுகளை நினைத்து அழுகிறான். இதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்று புரியாமல் அழுகிறான்.
சற்று நேரம் அவள் தூங்கும் வரை அப்படியே அமர்ந்திருந்தவன், அவள் தூங்கியது புரிய, தவிப்போடு, அவளுடைய ஒற்றைக் கரத்தைப் பற்றித் தன் உதட்டில் பொருத்தியவன், அதில் மென்மையான ஒரு முத்தத்தை வைத்துவிட்டு மெதுவாக அவளிடமிருந்து விலக எத்தனிக்க, அவன் கரம் அசைந்த மறுகணமே நேயநறுமை மீண்டும் அக்கரத்தை உடும்புப்பிடியாகப் பற்றிக்கொண்டாள்.
அந்தப் பிடியிலிருந்து வலிந்து கரத்தை விலக்க மனமில்லாமல் அப்படியே அவள் பக்கமாகச் சரிந்து அமர, அந்த நேரம் அருகாமையில், கைப்பேசி சிணுங்கும் சத்தம் காதில் வந்து விழுந்தது.
எங்கிருந்து இந்தச் சத்தம் வருகிறது? குழப்பத்தோடு அங்கும் இங்கும் பார்த்தவன், கடைசியாக அது அவளுடைய பான்ட் பாக்கட்டிலிருந்து வருகிறது என்பதைக் கண்டுகொண்டவனுக்கு ஒரு கணம் சின்னத் தடுமாற்றம்.
அதை எடுப்பதா, விடுவதா என்று குழம்பிய நேரம், சத்தம் நின்றது. ஆனால் திரும்பவும் அது சத்தமிட, எங்கே அந்தச் சத்தம் அவள் உறக்கத்தைக் குலைத்துவிடுமோ என்று அஞ்சியவனாக, பின் பக்கத்து பாக்கட்டிற்குள் அடங்கிக் கிடந்த கைப்பேசியை இழுத்து எழுத்துப் பார்த்தான். அதில் ஆல்ஃபிரெட் என்கிற பெயரைக் கண்டதும் ஒருகணம் புருவங்களைச் சுருக்கியவன், அந்த அழைப்பை எடுப்பதா விடுவதா என்று தயங்க, அந்த அழைப்பு சட்டென்று துண்டிக்கப் பட்டது.
சரிதான் என்று அவள் கைப்பேசியை அருகே இருந்த விளக்கு மேசையில் வைக்க முயல, திரும்பவும் அது அழைத்தது.
யார் இந்த ஆல்ஃபிரெட்? எதற்காக இவளுக்கு எடுக்கிறான்? அவனையும் மீறிய தவிப்பு உள்ளத்தில் எழ, நேயநறுமையைப் பார்த்தான். தூக்க மாத்திரையின் உதவியால் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அந்த அழைப்பை எடுக்க வில்லை என்றால், திரும்பத் திரும்ப அது சத்தமிடும் என்பதால், அதற்கு மேல் யோசிக்காமல் மறு கரத்தால் அந்த அழைப்பை ஏற்றவன்,
“ஹலோ…” என்றான் கடிய குரலில். இவனுடைய சத்தம் கேட்டதும் மறு பக்கம் ஒரு விநாடி அமைதி காத்தது. அதற்குப் பிறகு,
“ஹூ ஆர் யு…” என்கிற அழுத்தமான கோபமான குழப்பமான குரல் கேட்க, ஏனோ அந்தக் குரல் இவனை உசுப்பி விட்டது. குனிந்து நேயநறுமையைப் பார்த்தவன், பின் நிமிர்ந்து,
“நான் யாராக இருந்தால் உனக்கென்ன… முதலில் நீ யார் என்று சொல்லு…” என்றான் அழுத்தமான காரம் மிக்கக் குரலில்.
கடந்த இரண்டு நாட்களாக நேயநறுமை வேலைக்கு வராதது ஆல்ஃபிரெட்டுக்குப் பெரும் தவிப்பைக் கொடுத்திருந்தது. அதுவும் அவளுடைய வருகையில்லாமல், அந்த அலுவலகமே களை இழந்தது போல அவனுக்குத் தெரிய, பலமுறை அவளை அழைக்க முயல்வதும், பின் வேண்டாம் என்று தவிர்ப்பதுமாக இருந்தவனுக்கு ஒரு கட்டத்தில் முடிந்திருக்கவில்லை. அவளை அழைத்தும் விட்டிருந்தான்.
ஆனால் எடுத்தது ஒரு ஆண். அந்தக் குரலைக் கேட்டதும் ஒரு வித பொறாமை அவனைத் தொற்றிக்கொள்ள, யார் நீ என்றும் கேட்டு விட்டான். ஆனால் அவனோ, பதில் சொல்லாமல் நீ யார் என்று இவனிடமே கேட்க ஆத்திரம் கொண்டான் ஆல்ஃபிரெட்.
“அது உனக்குத் தேவையில்லாதது… இது நேயநறுமையின் கைப்பேசிதானே… அவளுடைய கைப்பேசியில் உனக்கென்ன வேலை? கைப்பேசியை
அவளிடம் கொடு… நேயா…! அவளுக்கு ஒன்று மில்லை தானே? நலமாக.. இ.. இருக்கிறாள் தானே…? திடீர் என்று இரண்டு கிழமைகளுக்கு விடுப்பு எடுத்திருக்கிறாள். அதுவும் நோய்வாய்ப்பட்ட விடுப்பு… அவளுக்கு ஒன்றுமில்லையே…?” அழுத்தமாகத் தொடங்கிக் கடைசியில் பரிதவிப்போடு முடிக்க, அவன் கேட்ட விதத்தில் ஆதியதுலனின் கை முஷ்டிகள் இறுகின.
அவனுக்கு மறுபக்கத்திலிருந்து பேசும் நபரின் தோரணையும், குரல் வளமும் சுத்தமாகப் பிடிக்க வில்லை. அந்தக் குரலில் உரிமை இருந்தது. நேயநறுமையின் மீதான அக்கறை தெரிந்தது. பரிதவிப்பு இருந்தது. இவளின் மீது உரிமை கொண்டாட அவன் யார்? அந்த நிலையிலும் உள்ளே எதுவோ ஒவ்வாமை ஒன்று, படம்விரித்தாடும் பாம்பாகத் தலைவிரித்துக் கிளம்ப,
“அவள் நன்றாகத்தான் இருக்கிறாள். உன் அக்கறைக்கு நன்றி…” என்றவன் மறு கணம் கைப்பேசியை அணைத்துவிட்டுத் திரும்பி நேய நறுமையைப் பார்த்தான்.
அவளுக்குத் தூக்கம் மிக அவசியம். அதனால் தான், பாலில் தூக்க மாத்திரையைக் கலந்தான். இந்த நிலையில், அவளது தூக்கத்தைக் கலைக்கும் விதமாக எதுவும் நடக்கக் கூடாது.
முடிவு செய்தவன், திரும்பவும் அந்த நபர், இவளை அழைத்தால் என்ன செய்வது என்கிற பயத்தில், கைப்பேசியின் உயிரைத் தற்காலிகமாக எடுத்து விட்டு மேசையில் போட்டவன், மீண்டும் தன் கவனத்தை நேயநறுமையிடம் கொண்டு வந்தான்.
எப்படியிருந்தவள், இன்று எப்படி ஆகிவிட்டாள்? நினைத்தவனின் மறு கரம், தன்னை மீறி அவள் கன்னங்களை வருடிக் கொடுத்தது. முன்பு அந்தக் கன்னம் கிள்ளத் தூண்டும் வகையில் குண்டாக இருக்கும் இப்போது எலும்போடு ஒட்டி, குழந்தைத் தனத்தைத் தொலைத்து முதுமை எய்தியது போல இருக்கிறது. பூசினால் போல இருக்கும் தேகத்தையும் காணோம். ஆசைக்குக் கிள்ளி எடுக்கக் கூடச் சதை இல்லாதவள் போல உடல் மெலிந்து, ‘மாடல்’ அழகியாக மாறிவிட்டிருந்தாள். அன்றெல்லாம் அவள் உடலின் பாகங்கள் ஏதாவது வெளியே தெரியும் வகையில்தான் ஆடை அணிவாள். இப்போது, கழுத்திலிருந்து கணுக்கால் வரைக்கும் ஆடை அணிந்திருக்கிறாள். இதற்கெல்லாம் காரணம் அவன்தானே. முன்பு இளமைத் துள்ளலோடு, விழிகள் மின்னச் சிரிக்கும் அந்தச் சிரிப்பை இனி எப்போது பார்க்கப் போகிறான்? கணீர் என்று கவரும் வகையில் பேசும் பேச்சை இனி வாழ்நாளில் கேட்க முடியுமா? அவனைக் கவர்ந்திழுக்கும் அந்த அழகிய உடலின் வனப்பை இனி வரும் காலங்களில் அவனால் பார்க்க முடியுமா?
கேள்விகள் கணைகளாக அவன் இதயத்தைக் குத்திக் கிளற, அந்த நினைவே அவனைத் தவிக்கச் செய்ய, விழிகளை மூடியவாறு நடந்து முடிந்த இறந்த காலத்தை நினைத்துப் பார்த்தான். அவளுடைய வலியை எண்ணிப் பார்த்தான். நெஞ்சம் விண்டு போனது அவனுக்கு.
அவன் செய்த ஒரு செயலால், அவளுடைய வாழ்க்கையல்லவா அதலபாதாளத்திற்குள் சென்று விட்டது. இனி அதை எப்படிச் சரிசெய்வான்? அவனால் சரிசெய்ய முடியுமா? பதில் தெரியா கேள்விகள் அவனுக்குள்.
அதே நேரம், வாசலருகே நிழலாடத் திரும்பிப் பார்த்தான். பாஸ்கரன் நின்றிருந்தார். உறங்கும் நேயநறுமையையும், அந்த உறக்கத்தில் கூடத் தன் மகனின் கரத்தைக் கைவிடாமல் அவள் தூங்கும் விதத்தையும் கண்டு, என்ன என்பது போல மகனைப் பார்க்க உதட்டில் கை வைத்து தன் தந்தையைச் சத்தம் போடவேண்டாம் என்றவன் தன் கரத்தை அவளிடமிருந்து இழுக்க முயன்றான்.
அவளோ அந்த உறக்கத்திலும் அவன் கரத்தை இறுகப் பற்றியிருந்தாள். இனி எனக்கு உறவென்று உன்னைத் தவிர யாருமில்லை என்று சொல்லாமல் சொன்னாளோ. அவளுடைய அந்த நிலையை உணர்ந்து தன் கரத்தை இழுத்தெடுக்க விரும்பாதவனாகத் தந்தையைத் திரும்பிப் பார்த்தவன்,
“நான் பிறகு பேசுகிறேன்” என்றான் உதடுகளை அசைத்துக் குரல் வெளியே வராமல்.
சரி என்று தலையை அசைத்தவர்,
“இல்லப்பா… இவள் என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டுப் போகத்தான் வந்தேன். நீ இவளைக் கவனித்துக் கொள்.. பிறகு பேசலாம்…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் குசுகுசுத்தவர் மீண்டும் இருவரையும் பார்த்துவிட்டு வெளியேற, ஆதியதுலன் அவளை விட்டு விலகாமல் அப்படியே அமர்ந்திருந்தான். தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்திருந்தாலும் கூட அவளைத் தனியே விட்டுச் செல்ல அச்சமாக இருந்தது. இருக்கும் மன உளைச்சலில் ஏதாவது பாரதூரமாகச் செய்து விட்டால்? அந்த நினைவே அவனைக் கலங்கடிக்க, அவளை நீங்கிச் செல்லும் தைரியமற்று இருந்த நிலை மாறாமல் அப்படியே கிடந்தான். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவனையும் மீறி விழிகள் சொக்கத் தொடங்கின. அதையும் மீறி அவன் அமர்ந்திருந்த நிலை கையையும், முதுகையும் வலிக்கச் செய்தது.
இரண்டு நாட்களாக அவனுக்குப் பொட்டுத் தூக்கமில்லை. மனதும் உடலும் சோர்ந்து போன நிலையில், தன்னை மறந்து உறங்கியவன், ஒரு கட்டத்தில், கரத்தை அவளிடமிருந்து விலக்காமல் எழுந்து அவளுக்கு மறுபக்கமாகக் கடந்து சென்று படுக்கையில் விழுந்தவன், மறுகணம் அவளை அணைத்தவாறே உறங்கியும் போனான்.
-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…
-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…
-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…
-7- அவளுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டது தான் தாமதம், அவனுக்கும் அனைத்தும் மறந்து போனது. தான் செய்வது சரியா, தவறா என்று…