என்னதான் நடந்தாலும் ஊருக்குப் போவது என்கிற முடிவில் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிய நேயநறுமையின் முடிவையும் ஆட்டம் காண வைத்தாள் மகிழினி.
ஆம், மறு நாள் நேயநறுமை எழுந்து மகிழினியைத் தேட, அவளைக் காணோம். பதறியவளாக பாஸ்கரனிடம் சென்று கேட்க,
“அதுவாமா… ஆதிக்கு ஏதோ வியாபார விஷயமாக நுவரெலியா போய்விட்டான். போகும் போது குழந்தையையும் அழைத்துச் சென்றுவிட்டான்…” சொல்ல அதிர்ந்தாள் நேயநறுமை.
‘குழந்தையையும் அழைத்துச் சென்றுவிட்டானா? ஏன்? அவள்தான் கனடா போகிறாள் என்று தெரியுமே. அதுவரைக்கும் குழந்தையை அவளோடு விட்டுவைத்தால் என்னவாம்?’ மனதிற்குள் புலம்பியவள்,
“அவர்கள் எப்போது வருவார்களாம்?” என்றாள் தவிப்போடு.
“தெரியவில்லையே. வேலை முடிந்ததும் வந்துவிடுவான்…” பாஸ்கரன் அலட்சியம் போலச் சொன்னாலும், அவருடைய கடைக்கண் பார்வை, நேயநறுமையை அக்குவேறு ஆணிவேராக அலசத் தொடங்கியது.
குழந்தையைக் காணவில்லை என்கிற பரிதவிப்பும், தவிப்பும், அவள் முகத்திலிருப்பதைக் கண்டு உள்ளுக்குள் தன் மகனைப் போற்றாமலில்லை. எங்கே அடித்தால், அவள் மாறுவாள் என்று தெரிந்து காயை நகர்த்துகிறான் ஆதியதுலன்.
‘அப்போ அவன் சொன்ன சாப்பாடு மகிழினிதானா? மகிழினி அருகே இருந்தால் அவள் மீதிருக்கும் ஏக்கமும், அன்பும் அவளை வதைக்காது. இதுவே குழந்தையைப் பிரித்து வைத்தால், குழந்தையின் அருகாமைக்காக ஏங்குவாள். துடிப்பாள். அந்தத் துடிப்பும் ஏக்கமும், எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இப்போது மகிழினி இல்லை என்றதும், அவளுக்காக ஏங்குகிறாள். தவிக்கிறாள். நிச்சயமாக மகிழினியைப் பிரிந்து இருக்க முடியாது என்பது தெரியும்போது, ஆதியதுலனின் விருப்பத்திற்குச் சம்மதிப்பாள்.
அடேங்கப்பா…. ஆதி…. உன்னை என்னவோ நினைத்தேன். ஆனால் நீ வேறு இரகம்டா. பெருமையாகத் தன் மகனை நினைத்துக் கொண்டவர், இப்போது நேயநறுமையின் பேச்சில் கவனம் செலுத்தினார்.
“ஏன்… ஏன் மகிழினியை அழைத்துச் சென்றார். நான் கனடா போகிறேன் என்று தெரியும்தானே… அதுவரை அவள் என்கூட இருந்திருக்கலாமே…” அவள் முகம் கசங்கக் கேட்க, உதடுகளைப் பிதுக்கினார் பாஸ்கரன்.
“நானும் இதைத்தான் சொன்னேன். ஆனால் அவன்தான், கனடா போவதால் உனக்கு நிறைய வேலைகள் இருக்கும். மகிழிருந்தால், உன்னால் எதுவும் செய்ய முடியாது. அதனால் அவளை அழைத்துச் செல்வதாகச் சொன்னான்…” சொல்ல இவளுக்குக் கோபம் வந்தது.
யாரைக் கேட்டு அழைத்துச் சென்றான்? இருப்பதோ கொஞ்ச நாட்கள்தான். அதற்குள், குழந்தையோடு முழு நேரத்தையும் செலவழிக்க நினைத்தால், இப்படி அதில் ஆப்பு வைத்துவிட்டானே. கரங்களைப் பிசைந்தவளுக்கு அன்றைய நாள் சுத்தமாக நகரவில்லை.
மனது கிடந்து தவித்தது. காய்ந்த தொண்டைக்குத் தண்ணீர் எந்தளவு அவசியமோ, அது போல மகிழினியின் அருகாமையும், அவளுடைய தொடுகையும் மிக அவசியமாகப் பட்டது நேயநறுமைக்கு.
எப்படியோ இரண்டு நாட்களைக் கடத்தியவளுக்கு அதற்கு மேல் சுத்தமாக முடியவில்லை. உடனே ஆதியதுலனுடன் தொடர்பு கொள்ள முயல, அவனுடைய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இவளுக்கு கோபம்தான் வந்தது. வேண்டும் என்றே செய்கிறானா என்ன? பற்களைக் கடித்தவள், மீண்டும் பாஸ்கரனிடம் தஞ்சம் புகுந்தாள்.
“அவர்கள் எப்போது வருவார்கள். அதியதுலனுக்கு அழைத்துப் பார்த்தேன். அவருடைய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது… நான்… நான் குழந்தையுடன் பேசவேண்டும்… ஒரு முறையாவது அவரை என்கூடப் பேசச் சொல்லுங்களேன்.” அவள் கெஞ்ச ஒரு கணம் அவளைப் பரிதாபமாகப் பார்த்தார் பாஸ்கரன். அவளுடைய தவிப்பும், கலக்கமும் அவருக்கு புரியாமலில்லை. ஆனால் இப்போது பாவம் பார்த்தால் மொத்தமாக விலகிவிடுவாளே.
“நானும்தான் முயற்சி செய்து பார்க்கிறேன்மா. அவன் கைப்பேசி அணைத்துக் கிடக்கிறது… எப்படியும் நீ புறப்படும் நாளுக்குள் வந்துவிடுவதாகச் சொன்னான்” என்றவர், “ப்ச்… இப்போது அவர்களைப் பற்றி நீ ஏன்மா கவலைப்படுகிறாய்… நீ ஆடைகள் எல்லாம் அடுக்கிவிட்டாயா? இன்னும் இரண்டு நாட்களில் புறப்படவேண்டுமே… கனடாவுக்கு ஏதாவது வாங்கிச் செல்லப் போகிறாயா நேயா… அப்படியென்றால் லிஸ்ட்டைக் கொடு, பரமுவிடம் கொடுத்து வாங்கி வரச் சொல்கிறேன்…” பாஸ்கரன் சொல்ல இவளுக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது.
இவளோ குழந்தையைப் பார்க்காமல் எதுவும் செய்ய முடியாமல் வதை படுகிறாள். இவர் என்னவென்றால் கனடாவிற்குப் போவதற்குப் பொருட்கள் வாங்குவதைப் பற்றிப் பேசுகிறாள். எரிச்சல் பட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்றும் புரியவில்லை.
அவள் புறப்படுவதற்குள் வந்துவிடுவதென்றால் எப்போது? அதையே அவரிடம் கேட்க “தெரியவில்லையேமா…” என்றார் சோகமாக.
“ஏன் குழந்தையை அழைத்துச் செல்ல விட்டீர்கள்? அவளை இங்கே விட்டுவிட்டு அவர் மட்டும் போயிருக்கலாமே.” இவள் கோபமாகக் கேட்க, இவரோ உதடுகளைப் பிதுக்கினார்.
“அது அவன் குழந்தைமா. பெற்றவன் செய்வதைத் தடுக்க நான் யார்? எனக்கு என்ன உரிமையிருக்கிறது?” அவர் கேட்கத் தவித்தாள் நேயநறுமை.
உண்மைதானே. பெற்றவன் அவன். அவனுக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது? கலங்க.
“இதற்குத்தான் சொன்னேன். அவனை மணந்து கொண்டால், குழந்தை உனக்கும் உரியவளாவாள். அவன் என்ன செய்தாலும், உன்னால் தடுக்க முடியும். ஏன் என்றும் கேட்க முடியும். உரிமையில்லா இடத்தில் என்னத்தைச் சொல்ல முடியும்?” போகிற போக்கில் ஊசியை ஏற்றிவிட்டுப் போக, இவளோ மேலும் தவித்தாள்.
இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தாள். குழந்தையின் முகம் காணாமல், அதன் அம்மா என்கிற அழைப்பை கேட்காமல், அதன் தொடுகையை உணராமல், மரக்கட்டை போல உணர்ந்தாள் நேயநறுமை.
திரும்பத் திரும்ப ஆதியதுலனை அழைத்து விரல்கள் நொந்ததுதான் மிச்சம். ஒரு கட்டத்தில் அவளுக்கே குழந்தையைப் பார்க்க முடியாமல் மூச்சடைப்பது போலானது. பாஸ்கரனோ அவளுடைய குழந்தையைக் கேட்டுச் செய்யும் தொல்லையில் காதில் இரத்தம் வராத குறை. அதற்காகவே அவளுடைய கண்களுக்குத் தெரியாமல் ஒளிந்து மறைந்து திரிந்தார்.
இதோ அவள் கனடாவுக்குப் புறப்படும் நாளும் வந்திருந்தது. இத்தனை நாட்களும் அவன் குழந்தையை அவள் கண்ணில் காட்டவேயில்லை.
சமுத்திரத்தின் மத்தியிலிருந்து தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் அல்லல் படுவது போலத் தவித்துப் பொனவளுக்க வெறுமை நெஞ்சை முட்டச் செய்தது.
அவள் எடுத்த முடிவு சரிதானா? யாருக்குக் காட்ட இத்தகைய முடிவை எடுத்தாள்? இந்த முடிவால் எதைச் சாதிக்கப் போகிறாள்? கடவுளே… ஏன் என் மனது இப்படிக் கிடந்து தவிக்கிறது? என்னால் ஏன் சீராக எதையும் யோசிக்க முடியவில்லை…? குழந்தையைப் பார்த்தாலாவது மனது அமைதியடையுமே! அவளையும் காட்டாமல் வதைக்கிறானே!’ உள்ளே துடித்தாள் நேயநறுமை.
அந்த நேரம் பாஸ்கரன் அவளைத் தேடி வந்தார்.
“என்னம்மா… பெட்டி எல்லாவற்றையும் அடுக்கி வைத்துவிட்டாயா? வண்டி வந்துவிட்டது…” சொல்ல அதிர்ந்தாள் நேயநறுமை. ‘ஐயோ… இந்த வண்டி ஏன் சீக்கிரமாக வந்து தொலைத்தது…’ தனக்குள் முனங்கித் தவித்தவள்,
“மாமா… குழந்தை… மகிழ் எப்போது வருவாள்?” என்றாள் குரல் கம்ம.
“இப்போது எதற்கு குழந்தையைப் பற்றிக் கேட்கிறாய்? அவளைப் பார்த்து நீ என்னதான் செய்யப்போகிறாய்? நீதான், உன் பிடிவாதம் மட்டும் போதும். வேறு எதுவும் வேண்டாம் என்று கனடாவுக்கு புறப்பட்டு விட்டாயே? இனிக் குழந்தை வந்துதான் என்ன, வராமல் விட்டுத்தான் என்ன? நீ புறப்படுமா. நேரம் போகிறது… வண்டி வேறு நீண்ட நேரமாக வெளியே நிற்கிறது..” அவர் சொல்ல, இவளுக்கோ கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
கடைசியாகக் குழந்தையைப் பார்க்காமலே புறப்படப் போகிறோமோ என்று நினைத்தவளுக்கு நெஞ்சம் விண்டு போனது. ஆனாலும் பற்களைக் கடித்து தன் வலியை மறைத்தவள், பெட்டியை எடுத்துக்கொண்டு புறப்படத் தொடங்க புயலாய் ஒரு குட்டிப் பூம்பந்து அவளுடைய கால்களைக் கட்டிக்கொண்டு, அம்மா என்றது இனிமையாய்.
மறு கணம் நேயநறுமையின் கரத்திலிருந்த பெட்டித் தரையில் விழுந்து முத்தமிட்டது.
முதலில் நம்ப முடியாமல் குழந்தையைப் பார்த்தவள் மறு கணம் விம்மலுடன் அவளை அள்ளி எடுத்து மார்போடு அணைத்து அதன் முகம் எங்கும் முத்தமிட்டாள் நேயநறுமை.
“நேருமாமா… என் நேரு மாமா… எங்கே போனீர்கள் இத்தனை நாட்களும். உங்களைக் காணாமல் நான் எப்படித் தவித்தேன் தெரியுமா?” கேட்டவள் குழந்தையை இறுக அணைத்துத் தன்னை மறந்து கண்ணீர் சொரிய, ஒரு கரம் குழந்தையை அவளிடமிருந்து பிரிக்க முயன்றது.
ஆவேசமாகக் குழந்தையை இறுக அணைத்துக் கொண்டவள், நிமிர்ந்து பார்க்க ஆதியதுலன்தான் குழந்தையை வாங்க முயன்றுகொண்டிருந்தான்.
ஆற்றில் மீன் பிடிப்பதற்குத் தூண்டில் போடுவது பொலக் குழந்தையைக் காட்டி அவள் உணர்வுகளை கிளறவைத்துக் கொண்டிருந்த ஆதியதுலன்,
“அவளை விடு நறுமை… உனக்கு நேரம் போகிறது… வண்டி வேறு காத்திருக்கறிது” அவன் சொல்லப் பதட்டத்தோடு அவனைப் பார்த்தாள் நேயநறுமை.
“இல்லை… நான் குழந்தையை விடமாட்டேன். எனக்கு இவள் வேண்டும்…” என்றாள் கன்னங்களில் கண்ணீர் வடிய.
அதைக் கேட்டதும் திரும்பித் தன் தந்தையை அர்த்தத்தோடு பார்த்துவிட்டுத் திரும்பி அவளிடம் தன் கவனத்தைச் செலுத்தி,
“குழந்தை வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று உனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உனக்குத்தான் உன்னுடைய பிடிவாதம் முக்கியமாயிற்றே…. அதனால், அது சாத்தியமில்லை என்று உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்… பிறகு ஏன் கேட்கிறாய்?” சொன்னவன் மேலும் குழந்தையை இழுக்க முயல, மறு கணம் அவனுடைய மார்பில் தன் கரத்தைப் பதித்து ஒரு தள்ளுத் தள்ளினாள் நேயநறுமை.
அதை எதிர்பார்க்காத ஆதியதுலன், இரண்டடி தள்ளிச் சென்று நிற்க, சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்றவாறு குழந்தையின் உச்சந்தலையில் தன் முத்தைப் புதைத்து, விழிகளை அழுந்த மூடி, ஒரு முழு நிமிடம் யோசித்தாள். பின் என்ன நினைத்தாளோ, தன் விழிகளைத் திறந்த போது, அந்த விழிகளில் தீவிரம் குடிகொண்டிருந்தது.
அவள் பிடிவாதத்தால் இழந்தவை ஏராளம். இனியும் அவள் இழக்கக் கூடாது. அதுவும் குழந்தையை இழக்கவே கூடாது. இந்த ஒரு சில நாட்களில், குழந்தையைப் பாராமல் அவள் பட்ட வலி வேதனை… எல்லாம் போதும். இனியாவது பேதலிக்கும் அவளுடைய ஆன்மா அமைதி அடையவேண்டும். முடிவு செய்தவளாக ஆழ மூச்செடுத்து விட்டவள், இப்போது திரும்பி ஆதியதுலனைப் பார்த்தாள். பின் பாஸ்கரனை ஏறிட்டாள். மீண்டும் ஆதியதுலனின் மீது தன் விழிகளை நிலைக்கச் செய்தவள்,
“நா… நான்… உங்களை… மண… மணந்து கொள்கிறேன்…” என்றாள் அழுத்தமாக.
அவள் சொன்னதைக் கேட்டவனின் உடல், தன் அசைவைத் தொலைத்து நின்றது. நம்ப முடியாமல் அவளைப் பார்க்க.
“நான்… உங்களை மணக்கச் சந்திக்கிறேன்… ஆனால்…” என்றவள் சொல்ல வந்ததை நிறுத்தி, பாஸ்கரனைப் பார்த்தாள்.
“மாமா… நான் இவர் கூட கொஞ்சம் பேசவேண்டும்..” சொல்ல அதுவரை அவள் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டுக்கொண்டிருந்த பாஸ்கரன், உணர்வு வந்தவராக இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
அவர் சரியாகத்தான் கேட்டாரா? இல்லை… அவர் காதில் தவறாக ஏதும் வந்து விழுந்ததா? குழம்பி நிற்கையில், அவரை நெருங்கியவள், அவரிடம் மகிழினியை நீட்டி,
“மாமா… ஒரு ஐந்து நிமிடம் இவளை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மகனோடு பேசிவிட்டு வருகிறேன்…” என்றாள் மரத்த குரலில்.
இன்னும் நடப்பதை நம்பாதவராக, முடுக்கப்பட்ட இயந்திர மனிதன் போல, அவள் நீட்டிய குழந்தையை வாங்கியவர், மெதுவாக வெளியேற, அவர் சென்று மறைந்ததும் சற்று நேரம் அப்படியே இருந்தவள், இப்போது திரும்பி ஆதியதுலனைப் பார்த்தாள்.
அவனுடைய விழிகளும் அவளிடம்தான் நிலைத்திருந்தன. தன் விழிகளால், அவனுடைய விழிகளை ஊடுருவ முயன்றவாறு அவனை நெருங்கியவள்,
“நான் உங்களை மணந்து கொள்கிறேன்… ஆனால்…” என்றவள், அவனை இறுகிய உணர்வோடு பார்த்து,
“நான் உங்களோடு வாழ மாட்டேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக. ஆனால் ஆதியதுலனோ எந்த பதிலும் சொன்னானில்லை. அவளையே பார்த்திருக்க,
“எனக்கு… மகிழினி வேண்டும்… எனக்கே எனக்காக வேண்டும்… அதற்காக உங்களை மணந்து கொள்கிறேன். ஆனால், அவளை என்னுடைய முழுப்பொறுப்பிலும் விடவேண்டும். அவளை அழைத்துக் கொண்டு கனடா போய்விடுவேன். அதற்குப் பிறகு அவளுடைய முடிவுகள் அனைத்தையும் நான்தான் எடுப்பேன். அவளுடைய நன்மை தீமை அனைத்திலும் நான்தான் இருப்பேன்… நீங்கள் எதிலும் தலையிடக் கூடாது… வேண்டுமானால் குழந்தையை வந்து பார்த்துவிட்டுப் போங்கள். அதற்கு நான் தடை சொல்ல மாட்டேன்” அவள் சொல்ல, இப்போது அவனிடம் கொஞ்சம் அசைவு. உதட்டின் ஓரம் அவனையும் மீறி மெல்லிய புன்னகையைச் சிந்தியதோ? தெரியவில்லை. ஆனால் அவளை ஏறிட்டவன்,
“மகிழினி என் குழந்தை என்பதை நீ மறந்துவிட்டாய் போல…” அவன் முடிக்கவில்லை,
“எனக்கு அதைப்பற்றிக் கவலையுமில்லை, அக்கறையுமில்லை. உங்களை மணந்து கொண்ட விநாடியிலிருந்து அவளுக்கு அம்மா அப்பா எல்லாம் நானாகத்தான் இருக்கவேண்டும்…” அவள் அடுக்கிக் கொண்டு போக, அதுவரை இளகியிருந்தவனின் முகம் இப்போது இறுகத் தொடங்கியது.
அவள் பேசும் வரைக்கும் அமைதியாக இருந்தவன்,
“சரி சொல்லி முடித்துவிட்டாயா?” என்றான் நிதானமாக.
இவளோ குழம்பினாள். அவள் சொல்வதைக் கேட்டுக் கோபப் படுவான். எகிறுவான் என்று நினைத்திருக்க, நிதானமாக முடித்துவிட்டாயாயா என்று கேட்கிறானே. குழப்பமாக அவனைப் பார்க்க,
“முடித்து விட்டாய் என்றால், புறப்படு… விமானத்திற்கு நேரமாயிற்று…” என்றான் எந்த அலட்டலுமின்றி.
அதைக் கேட்டவள்தான் குழம்பித்தான் போனாள்.
“எ… என்ன சொல்கிறீர்கள்… நான்.. உங்களை மணந்து கொள்வதாகச் சொன்னேன்…” அவள் சொல்ல, இப்போது மெல்லிய புன்னகையை வெளிப்படையாகச் சிந்தினான் ஆதியதுலன்.
“அப்படியா? ஓ… நான் நினைத்தேன் நீ ஏதோ வியாபார விஷயமாகப் பேசுகிறாய் என்று… சாரி… ஆனால் பாரேன்… எனக்கு உன்னை மணக்கும் எண்ணம் இப்போதில்லை…” அவன் சொல்ல இவளோ பேந்தப் பேந்த விழித்தாள்.
“என்னது…? என்னை மணக்கும் எண்ணம் இப்போதில்லையா? அது எப்படி? நோ… நீங்.. நீங்கள்தானே… குழந்தை.. வேண்டும் என்றால் உங்களை மணக்க வேண்டும் என்றீர்கள்… இப்போது..” அவள் முடிக்கவில்லை, அவளுக்கு முன்பாகத் தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தான் ஆதியதுலன். அவனுடைய உதட்டில் ஏளனத்துடனான கிண்டல் புன்னகை மலர, உதடுகளைப் பிதுக்கியவன்,
“எனக்கு வேண்டியது மனைவி… மேற்பார்வை பார்க்கும் அதிகாரியல்ல. இரண்டாவது, மகிழினி எனக்கும் மகள். அவளை சார்ந்த அத்தனை பொறுப்புகளும் என்னுடையது. என்னுடையதாக மட்டும்தான் இருக்கும். அவள் என் கண்ணுக்கு முன்னால், என் கண்காணிப்பில்தான் வளர்வாள். வளர வேண்டும். அவளுக்குத் தாயாக நீ இருக்கலாம்… கூடவே தந்தையாக அவளுடைய நல்லது கெட்டதிலும் நான் இருப்பேன். ” அவன் சொல்ல வர, இடையில் புகுந்து மறுப்பாக எதையோ சொல்ல வந்தாள் நேயநறுமை.
உடனே அவள் பேச்சை நிறுத்தியவன்,
“நான் இன்னும் முடிக்கவில்லை…” அழுத்தமாக அதே நேரம் அவன் ஆணித்தரமாகச் சொல்ல, அந்தக் குரலில் சட்டென்ற வாயை மூடிக்கொண்டாள் நேயநறுமை.
“இதோ பார் நறுமை, தேவை எனக்கல்ல. உனக்குத்தான். உனக்கு மகிழினி வேண்டும் என்றால், என்னை மணக்க வேண்டும். என்னோடு வாழ வேண்டும். ஒத்துக் கொள்கிறேன், நெஞ்சம் நிறைய வலியை வைத்துக்கொண்டு சேர்ந்து வாழ்வது இயலாத காரியம்தான். நான் ஒன்றும் திருமணம் முடித்த உடனே சேர்ந்த வாழவேண்டும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். அது முடியவும் முடியாது என்று எனக்கும் தெரியும். அதற்காகக் காலம் பூராக இப்படியே தள்ளி இருக்கவேண்டும் என்று நீ எதிர்பார்த்தால்…” என்றவன் விலகி நின்று வாசலைக் காட்டி,
“சாரி… இதுதான் வாசல். உன்னை அழைத்துச் செல்ல, வண்டி வெளியே நிற்கிறது. தாராளமாக நீ இங்கிருந்து கிளம்பலாம். ஆனால் ஒன்று, இப்போது நீ கிளம்பினால், இந்தக் கணத்திலிருந்து நீ மகிழினியை மறந்துவிட வேண்டும். அதன் பிறகு எக்காலத்திலும் அவளை நீ பார்க்க முடியாது… தேடிவரவும் கூடாது..” சொன்னவன், ஒரு விநாடி அமைதி காத்துப் பின்,
“நீ உன்னுடைய பிடிவாதத்தால் இழந்தது மிக அதிகம் நேயநறுமை. இப்போதும் அதையேதான் செய்யப் பார்க்கிறாய்… கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் விழத் துடிக்கும் உன்னை, கைப்பற்றி அழைத்துச் செல்லவே முயல்கிறேன். ஆனால் நீ… இல்லை கிணற்றில் குதித்தேதான் தீருவேன் என்கிறாய்… இதோ பார்… உன் பிடிவாதத்திற்கு முதலுரிமை கொடுத்து தனித்தீவாக எங்கோ ஒரு மூலையில் யாருமற்ற அநாதையாக வாழப்போகிறாயா? இல்லை, என் மனைவியாக, மகிழினிக்கு அம்மாவாக, என் அப்பாவுக்கு நல்ல மருமகளாக, உனக்கென்று ஒரு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இங்கேயே என் கூட இருக்கப்போகிறாயா? தேர்வு உன்னுடையதுதான். நீயே முடிவு செய்து கொள்…” சொல்ல அவனை வெறுப்போடு பார்த்தாள் நேயநறுமை.
“எப்படி உங்களால், நேரிழையை மறந்துவிட்டு என்னோடு வாழ மனம் ஒப்புக் கொள்கிறது? நேரிழையை உண்மையாகவே நீங்கள் காதலித்தீர்களா? அவள் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் என்னை மணக்கத் தயாராகிவிட்டீர்களே…? இது எந்த விதமான காதல்?” அவள் கேட்க, அவனோ விரக்தியாகச் சிரித்தான்.
“நீயும் உன் அம்மா அப்பா மீது தீராத அன்பு கொண்டவள்தானே. உன் காதல் தோற்றதற்காக, அவர்களைத் தனியே அம்போ என்று விட்டுவிட்டு, உன்னுடைய பிடிவாதத்திற்காக தனியே செல்லவில்லையா? இது எந்த விதமான அன்பு? இவ்வளவு ஏன் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதற்காக நீயும் இறந்து போனாயா என்ன? இறந்தவர்களுக்காக நாமும் கூடவே சிதையில் ஏறவா முடியும்? அவர்கள் இல்லை என்பதற்காகச் சாப்பிடாமல் இருக்கிறோமா, இல்லை குளிக்காமல்தான் இருக்கிறோமா? நடந்ததுக்காக வருத்தப்பட்டால், நடக்க இருப்பதைச் சமாளிப்பது எப்படி? இறந்த காலத்திற்காக வருந்தத்தான் முடியும் நறுமை. நாமும் சேர்ந்து அந்த இறந்தகாலத்தோடு போய்விட முடியாது…” சொன்னவன், குழந்தையைக் காட்டி,
“குழந்தை வேண்டும் என்றால், என் முடிவுக்கு நீ கட்டுப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. வாசல் திறந்திருக்கிறது. இன்னும் கார் வெளியே உனக்காகக் காத்திருக்கிறது. வெளியே போவதும், உள்ளே இருப்பதும் உன்னுடைய தேர்வுதான்…” சொன்னவன், விலகிச் சென்றுவிட, நேயநறுமையோ பேசும் சக்தியை இழந்தவளாக அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.
என்ன செய்யப் போகிறாள்? முன்னது போல யாரும் வேண்டாம் என்று திரும்பப் பழைய இடம் சென்று ஒடுங்கப்போகிறாளா? இல்லை குழந்தைக்காகப் பிடிவாதத்தைத் தளர்த்தி புது வாழ்க்கை வாழப் போகிறாளா? என்ன முடிவை எடுப்பது? குழம்பி நிற்கையில், வெளியே வந்த ஆதியதுலனின் உதட்டில் திருப்திகரமான புன்னகை நிரம்பி வழிந்தது.
வெளியே பாஸ்கரன், கரங்களைப் பிசைந்தவாறு தவிப்புடன் நின்றிருக்கத் தந்தையிடம், குழந்தையை ஒப்படைத்தவன்,
“நல்ல நாள் பார்க்கச் சொல்லுங்கள்பா…” என்றான் இதமாக. அதைக் கேட்டுப் பளிச்சென்று மலர்ந்தவர்,
“ஆனாலும் உனக்குத் தைரியம் மிக அதிகம்தான்டா… நறுமை கிளம்புகிறேன் என்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பாய்?” கேட்க, உதடுகளைப் பிதுக்கியவன்,
“எனக்கு நேரிழையை விட, நறுமையைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். எப்படித் தட்டினால், எப்படிச் சாய்வாள் என்பது எனக்கு அத்துப்படி… நறுமை குழந்தைக்காக மாறுவாள் என்று எனக்குத் தெரியும்…” என்று அவன் சொல்ல, மலர்ந்தவர்,
“சரிபா… இரு வண்டியை அனுப்பிவிட்டு வருகிறேன்…” என்றவர் குதுகலமாக வெளியே சென்றுவிட்டு உள்ளே வந்தார். அந்த நேரம் பார்த்து நேயநறுமையின் அறைக்கதவு திறக்க, அதுவரை இலகுவாக நின்றிருந்த ஆதியதுலன், கண்ணிமைக்கும் நொடியில் இலகு பாவனையை மாற்றி, இறுக்கத்தோடு திரும்பிப் பார்த்தான்.
முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லாதவளாக வந்தாள் நேயநறுமை.
“என்ன…? புறப்பட்டு விட்டாயா? பெட்டி எங்கே? இரு நான் போய் எடுத்து வருகிறேன்…” சொன்னவன் உள்ளே போகத் தொடங்க, பாஸ்கரனோ அதிர்ச்சியோடு தன் மகனைப் பார்த்தார். இப்போதுதானே வண்டியை அனுப்பிவைத்தார். இவன் என்னவென்றால், எதுவும் தெரியாதவன் போல அவளைக் கிளம்பு என்கிறானே? குழப்பமுமாகத் தன் மகனைப் பார்க்க, அதுவரை அவர் கரங்களில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை நேயநறுமையைக் கண்டதும் அவளிடம் பாய முயன்றது.
உடனே விரைந்து குழந்தையைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டவள்,
“மா… மாமா… நா… நான் கனடா போகவில்லை…” என்றாள் மொட்டையாக. அதைக் கேட்டதும் பாஸ்கரனின் இதயத்தில் மகிழ்ச்சி ஆரவாரமாய்க் கிளம்பியது. ஆனாலும் அடக்கிக் கொண்டவராக,
“ஏன்மா??” என்றார் புரியாதவர் போல.
“நா… நான் இங்கேயே இருக்கிறேன்…” என்றாள் திக்கித் திணறி.
“இங்கேயே இருக்கிறேன் என்றால்? புரியவில்லை…?” பின்னாலிருந்து அவன் சத்தம் வர,
எரிச்சலும் கோபமுமாக அவனைத் திரும்பிப் பார்த்தவள்,
“உங்களை மணந்து கொள்கிறேன் போதுமா…?” என்றாள் தோல்வியை ஒத்துக் கொள்ள மனமில்லாதவளாக.
அதைக் கெட்டதும், ஆதியதுலனின் முகம் அவனையும் மீறி மலர முயல, சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டவனாக,
“ஆர் யு ஷூர்?” என்றான் புருவங்களைச் சுருக்கி. பற்களைக் கடித்தவள்,
“யெஸ் ஐ ஆம்…” என்றாள்.
“நான் சொன்னதற்கெல்லாம் நீ சம்மதிக்கிறாய் தானே…?” அவன் கேட்கத் தயக்கத்தோடு பாஸ்கரனைப் பார்த்துத் தலையை மட்டும் அசைத்து ஆம் என்று கூற,
“குட்…” என்றவன், தந்தையைப் பார்த்து,
“அப்பா… நாள் பார்க்கச் சொல்லுங்கள்…” என்றான் அவளையே பார்த்தவாறு. இவளோ முகம் இறுகக் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டார். பாஸ்கரனோ, முகம் பளபளக்க, மலர்ச்சி முகத்தில் அப்பட்டமாகத் தெரிய,
”இதோ… அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும் நேயாவுக்கும் திருமணம்…” என்றார் குதுகலமாக. ஏதோ நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த வீடே மலர்ந்ததாகத் தோன்றியது அவருக்கு. அதைக் கேட்டதும் ஆதியதுலனின் முகத்தில் வெற்றிப் புன்னகை.
இவளுக்குத்தான் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் சக்தியிருக்கவில்லை.
அதீத பிடிவாதம் கொண்டவர்களின் மனநிலை அதுதானே. பிறரிடம் தோற்றுப்போவோமோ என்கிற அச்சம்தான் அவர்களின் பிடிவாதத்தை அதிகரிக்கச் செய்கிறது. நேயநறுமையும் விதிவிலக்கல்ல. ஆனால், குழந்தை மீதான பாசமும், அதைத் தாண்டி ஆதியதலனின் மீதான காதலும் அவளுடைய அந்த பிடிவாதத்தைச் சுக்குநூறாக உடைத்து, யோசிக்க வைத்திருந்தது.
இவள் திருமணத்திற்குச் சம்மதித்ததும் பாஸ்கரன் ஓடிப்போய்ப் பஞ்சாங்கத்தை எடுத்து ஏதேதோ கணக்குப் போட்டார். அவருக்கு ஒரு விநாடி கூட வீணாக்க விருப்பமில்லை. இதோ இப்போது திருமணம் செய்து வைப்பதாக இருந்தாலும் அவருக்குச் சம்மதமே. பின்னே, ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலும் நேயநறுமை மனம் மாறிவிடுவாளோ என்கிற அச்சம் அவருக்கு.
பஞ்சாங்கத்தைப் பார்த்தவரின் முகம் மலர்ந்தது.
“நாளைக்கு நாள் அருமையாக இருக்கிறது…. நாளைக்கே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார் அவரசமாக. அதைக் கேட்டு நேயநறுமை அதிர்ந்து போனாள். ஆதியதுலனின் முகத்திலே திருப்தியின் புன்னகை.
“நாளைக்கேவா… மாமா… எதற்காக இத்தனை அவசரம். அப்பாவும் அம்மாவும் என்னை விட்டுப் போய் ஒரு மாதம் கூட ஆகவில்லை. இந்த நிலையில் திருமணத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும்… புரிந்து கொள்ளுங்கள்..” என்று அவள் மறுக்க,
“ஒரு வீட்டில் துன்பம் நடந்தால், உடனேயே நல்ல காரியம் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். அது மட்டுமில்லை, எனக்கு மாதங்களில், நாட்களில் நம்பிக்கையிருக்கிறது. அது சொன்னதுபோலச் சொன்ன நேரத்திற்கு வந்துவிடும். ஆனால் உன் மீது….? ம்கூம்… எப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறும் என்று தெரியாமல் ஒரு விநாடியைக் கூட என்னால் கடத்த முடியாது…” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசாமல், மறுநாளுக்கான ஆயத்தங்களைச் செய்யக் கிளம்பி விட, பதட்டத்தோடு ஆதியதுலனைப் பார்த்தாள் நுயநறுமை.
“எதற்கு இத்தனை அவசரம். கொஞ்ச நாட்கள் போகட்டுமே… இன்னும் அப்பா அம்மாவின் இழப்பிலிருந்து என்னால் வெளி வரமுடியவில்லை.” என்றாள் கலக்கமும் தவிப்புமாக. அதைக் கேட்டுத் தோள்களைக் குலுக்கியவன்,
“திருமணம் செய்வது என்று முடிவான பின்னாடி எப்போது மணந்துகொண்டால்தான் என்ன? தவிர, நீ மணக்கப்போவது தெரிந்தாலே அத்தையும் மாமாவும் மேலேயிருந்து நிம்மதியாக சாந்தியடைவார்கள்.” அவன் சொல்ல, சட்டென்று விழிகளில் கண்ணீர் கோர்த்தது அவளுக்கு.
“ஆனால் இத்தனை சீக்கிரமாக வேண்டாமே… நான் ஒரு வாட்டி கனடா போகவேண்டும். அம்மா அப்பா வாழ்ந்த வீட்டைப் பார்க்கவேண்டும்… மாமாவிடம் சொல்லுங்கள்…” கலக்கத்துடன் சொன்னாள் அவள். உடனே திருமணம் என்பதை இன்னும் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
“நீ கனடாவுக்குப் போவதற்கும் திருமணத்தைத் தள்ளி வைப்பதற்கும் என்ன சம்பந்தம்? நீ தாராளமாக என் மனைவியாகக் கனடாவுக்குப் போ. மகிழின் அன்னையாகப் போ… யார் தடுக்கப்போகிறார்கள்?” அவன் சொல்ல, அப்போதுதான் அவளுக்கு அது உறுத்தியது.
ஆதியதுலன் அவளை மணந்துகொள்ள ஆசைப்படுகிறான். தீவிரம் காட்டுகிறான். அன்று அவள் காதலைச் சொன்னபோது, மறுத்து விலகியவன், இன்று அவனாகவே அவளை மணக்க வேகம் காட்டுகிறான். ஏன்? எதற்கு…? இத்தனைக்கும் நேரிழையைக் காதலித்து மணந்தவன். அவனால் எப்படி அவளை மறந்து விட்டு இவளை ஏற்க முடிகிறது. குழம்பியவள்,
“நீங்கள்… என்னை மணக்க ஆசைப்படுகிறீர்கள்…” என்றாள் ஒரு மாதிரி. அதைக் கேட்டவனிடம் ஒரு விநாடி அசைவு நின்று போனது. அடுத்த கணம், தோள்களைக் குலுக்கி உதடுகளைப் பிதுக்கியவன்,
“ம்… மகிழுக்காக அவசரப்படுகிறேன்…” என்றான் எங்கோ பார்த்தவாறு. அதைக் கேட்டு மறுப்பாகத் தலையசைத்தவள்,
“இல்லை… மகிழுக்காக இல்லை… மகிழுக்காக என்றால், திருமணம் முடிப்பதுதான் ஒரே வழி என்றில்லை அதுலன்… அதையும் தாண்டி என்னவோ இருக்கிறது. அன்று என்னை மணந்து கொள்ளுங்கள் என்று சொன்னபோது அலட்சியமாக விலகிச் சென்றீர்கள். ஆனால் இப்போது, நீங்களாகவே மணக்க முயல்கிறீர்கள்? ஏன்…” அவள் கேட்க, இப்போது அவளை அழுத்தமாகப் பார்த்தான் ஆதியதுலன்.
“ஏன் என்றால் நீ எனக்கு…” என்று சொல்ல வந்தவன், மறு கணம் தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதைப் புரிந்து கொண்டவன் போலத் திடுக்கிட்டுச் சுதாரித்தவனாக,
“ஏன் என்றால் நீ எனக்குப் பக்கத்திலிருந்தால், அத்தையும் மாமாவும் நிம்மதியடைவார்கள். தன் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று திருப்தி கொள்வார்கள். அவர்களின் ஆத்மா சாந்தியடையும். அதுதான் காரணம் போதுமா…?” பட்டென்று சொன்னவன், மறு கணம் அங்கிருந்து சென்றுவிட, இவளோ அவன் சொன்னதைக் கேட்டு புருவங்கள் சுருங்க நின்றிருந்தாள்.
அவன் சொன்ன பதில் அவளுக்குச் சுத்தமாகத் திருப்தியாக இல்லை. அவளை மணக்கத் தீவிரம் காட்டுவதற்குக் காரணம் தாய் தந்தையா? இல்லை அதையும் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறதா? குழம்பி நிற்கையில், தன் தந்தையைத் தேடிச் சென்றிருந்தான் ஆதியதுலன்.
அவர் ஏற்கெனவே திருமண ஆயத்தங்களைச் செய்ய ஆரம்பித்திருந்தார்.
“அப்பா…” இவன் அழைக்க, பொருட்களின் பட்டியலை பரமுவிடம் நீட்டிவிட்டு அதற்கான பணத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தவர், திரும்பித் தன் மகனைப் பார்த்து,
“என்னடா?” என்றார்.
“இல்லை… இன்னும் அத்தை மாமாவின் காரியம் முடியவில்லை. இந்த நிலையில் நாளைக்கே திருமணம் செய்வது சரிவருமா? நான்கு பேர் நான்கு விதமாகப் பேசமாட்டார்களா? கொஞ்ச நாட்கள் போகட்டுமே…” அவன் தயக்கமாகச் சொல்ல, தன் மகனை அழுத்தமாகப் பார்த்தார் பாஸ்கரன்.
“அந்த நான்கு பேருக்கும் நான்கு விதமாகப் பேச மட்டும்தான் தெரியும் ஆதி. அவர்களுக்கு நம்முடைய சிக்கல்கள், பிரச்சனைகள் பற்றி எதுவும் தெரியப்போவதில்லை. அப்படியே தெரிந்தாலும் நமக்காக அவர்கள் அந்தச் சிக்கல்களை வாங்கப்போவதுமில்லை. இவ்வளவு ஏன், இதைச் செய்வதால் இறந்தவர்கள் உயிர்த்து வரவா போகிறார்கள்? போனவர்கள் போனதுதான் ஆதி. தவிர அவர்களின் ஆத்மா கூட உங்கள் இருவரின் திருமணத்தாலும் குளிர்ந்து போகும். எனக்கு என் நண்பனின் ஆத்மா சாந்தியடையவேண்டும். அதற்கு இந்தத் திருமணம்தான் ஒரே வழி…” என்றவர் முகம் கசங்க,
“உங்கள் இருவரின் திருமணத்தையும், ஊர் உலகம் அறியப் பெரிதாகச் செய்யவேண்டும் என்றுதான் ஆசையாக இருக்கிறது. ஆனால்…” தவிக்க, தந்தையின் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தவன்,
“ஊர் உலகம் அறிய நடக்கிற திருமணங்கள் எல்லாம், வெற்றியாக முடிந்து விடுவதில்லை அப்பா…” என்றான் அவரைத் தேற்றும் முகமாக. அதைக் கேட்டு தலையை ஆட்டியவர்,
“இனியாவது உன் வாழ்க்கையும், நேயநறுமையின் வாழ்க்கையும் நன்றாக இருக்கட்டும். அதற்கு இந்தக் கடவுளும் துணை இருக்கட்டும்…” சொன்னவர், கைப்பேசியில் அடுத்து நடக்கவேண்டிய காரியங்களைக் கட்டளையிடத் தொடங்கினார்.
-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…
-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…
-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…
8- எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு…