Sun. Apr 5th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 11

11

மறுநாள் அவள் குளித்து ஆடைமாற்றி வெளியே வந்த போது, அம்பிகா, நேரிழையின் உதவியோடு சமைத்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனால் மனதில் பசை

போட்டு ஒட்டிக்கொண்டிருந்தவனை மட்டும் காணோம். அவர்களை நெருங்கியவள், தன் தங்கையின் தலையில் ஒரு தட்டுத் தட்டிவிட்டு,

“மா…” என்றாள்.

“என்னடி…?”

“எங்கே காணோம்?”

“என்னடி காணோம்?”

“அதுதான்… பனை மரம்…”

“பனை மரமா என்னடி சொல்கிறாய். கனடாவில் ஏது பனைமரம்?”

“ப்ச்… நான் கேட்கிற பனை மரம் உயிர் உள்ள பனை மரம்… அதுதான் உங்கள் மருமகன்…” என்றாள் நேயநறுமை கிண்டலுடன்.

“அடித்தேன் என்றால்… முப்பத்திரண்டும் கொட்டிவிடும். என் பையனையா பனைமரம் என்கிறாய்… உன்னை?” தாய் ஆதியதுலனுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வர,

“என்னது.. பையனா..? அவர் பையன் என்றால் நாங்கள் யாராம்?” கோபமாகக் கேட்டவளுக்கு எப்போதும் போல இனம்தெரியாத கோபம் அவளை ஆட்டுவித்தது. அது எப்படி அவனைத் தன் மகன் என்று சொல்லலாம்?

“ஆமாம் அவன் எனக்குப் பையன்தான்.. உங்கள் இருவரையும் மடிதாங்க முன் அவனைத் தான் என் மடியேந்தினேன். எப்படிப் பார்த்தாலும் அவனுக்குப் பிறகுதான் நீங்கள்…” அநியாயமாக எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார் அம்பிகா.

“கங்கையில் குளித்தாலும் காகம் அன்னமாகாது என்று அடிக்கடி சொல்வீர்களே அம்மா. என்னதான் பாசம் வைத்தாலும், உயிராக நினைத்தாலும், அவர் உங்களுக்கு மருமகனே தவிர மகனாக முடியாது..” திமிராய் சொன்னாள் நேயநறுமை.  அதைக் கேட்டு மகளை முறைத்த அம்பிகா,

“அதை நான் சொல்ல வேண்டும். தவிர எங்களுக்கு இடையே வராதே.. மூக்குடைபடுவாய்” அழுத்தமாகச் சொன்னவர், பின் மக்களை முறைத்து,

“அதுசரி..? இத்தனை நேரமாக நீ எங்கே இருந்து விட்டு வருகிறாய்? ஏழு மணி வரை குறட்டை விட்டுத் தூங்கத் தெரிகிறது… வேளைக்கு எழத் தெரியவில்லை… இப்போது வந்து வியாக்கியானம் பேசுகிறாய்..” என்று சிடுசிடுத்தாள் அன்னை.

‘ம்கும்… அது எத்தனை சிரமம் என்று எனக்குத் தானே தெரியும்… தூங்கியதே தாமதமாக. இதில் அவன் நினைவு வேறு. அந்த நினைவுகளோடு மல்லுக்கட்டி, அதை ஒதுக்க முயன்று முடியாமல் தூக்கம் தொலைத்தவளால் எப்படி வேளைக்கு எழ முடியும்? அந்த வயதுக்கே உரியப் புலம்பல் அவளுடைய மனதில்.

“ப்ச்… நீங்கள் வேறு, இந்த அதிகாலையில்… அதுவும் இந்தக் குளிரில் பேய், பிசாசு கூட எழுந்திருக்காது… இதில் ஏன் எழவில்லை என்று கேள்வி வேறு…” என்று முனங்கியவள், எம்பி, சமையல் மேடையில் அமர்ந்து கொள்ள,

“அப்போ நீ பேய் பிசாசு என்று ஒத்துக் கொள்கிறாய்?” என்றார் அம்பிகா கிண்டலாக. தாயைப் பார்த்து முறைத்தவள்,

“நான் பேய் பிசாசு என்றால், பெற்ற நீங்கள் என்னவாம்?” என்றாள் இவள் பதிலுக்கு. மகளைக் கோபமாகப் பார்த்துவிட்டு,

“இந்த வாய் மட்டும் இல்லை என்றால், என்றைக்கோ நாய் உன்னைத் தூக்கிக்கொண்டு போயிருக்கும்…” என்றார் கடுப்பாக. அதைக் கேட்டுச் சிரித்தவள்,

“மா… அது எப்படிமா…? என்னுடைய பாரத்தை நாயால் தூக்கமுடியுமா என்ன? லாஜிக் இடிக்குதே மா” இவள் கிண்டலாகச் சொல்ல, கிளுக் என்று சிரித்தாள் நேரிழை.

“ம்கும் இதற்கு மட்டும் குறைச்சலில்லை… அது சரி…? இன்று முக்கியப் பரீட்சை இருக்கிறது என்று சொன்னாயே… போகவேண்டாமா…? ஏன்டி இப்போதும் நீ பள்ளிக்கூடம் போகிற நினைப்பா உனக்கு? நீ பல்கலைக் கழகம் போய் இரண்டாவது வருடமும் முடியப் போகிறது. இதுவரை பாடப் புத்தகத்தை எடுத்துப் படித்து நான் பார்க்கவேயில்லை… நீ பல்கலைக்கழகம் தேறி வருவாயா? இல்லை மாப்பிள்ளை பார்க்கட்டுமா?” என்று தாய் கறாராகக் கேட்க நேரிழையோ வாயை மூடிச் சிரித்தாள்.

அதைக் கண்டதும் கோபம் கொண்டவளாக,

“இப்போது எதற்கு கெக்கே பிக்கே என்று சிரிக்கிறீர்…?” கேட்டவளுக்குத் தங்கை தயாராகி இருப்பது அப்போதுதான் உறுத்தியது. அதைக் கண்டதும் மெல்லிய பொறாமை எழுந்தது. எப்போதும் அவள்தான் எல்லா விதத்திலும் சிறந்திருப்பாள். படிப்பாகட்டும், நடத்தையாகட்டும் அனைத்திலும் அவள் ஒரு படி மேல்தான்.

“ஏய்… அதிகாலையே எழுந்து தயாராக இருக்கிறாயே…? எப்போது எழுந்தாய்…?” என்றாள் குற்ற உணர்வோடு.

“அவள் உன்னைப் போலவா? ஐந்து முப்பதிற்கெல்லாம் எழுந்துவிட்டாள்… எழுந்தது மட்டும் இல்லை, எனக்குக் கூடமாட உதவியும் செய்தாள்… நீயும் இருக்கிறாயே” என்ற அன்னை திட்டினாலும் தன் மகளுக்குப் பக்குவமாகத் தேநீர் வார்த்து நீட்ட, அதை வாங்கிக் கொண்டவள், சமையல் கட்டிலிருந்து கீழே இறங்கியவாறே,

“நான் வேளைக்கு எழவில்லை என்று சொல்கிறீர்களே, உங்கள் மருமகனும்தான் இன்னும் எழவில்லை. அதை ஏன் என்று கேட்டீர்களா?” கேட்டவளின் காதுகள் கூர்மையாகின. பின்னே அவன் எங்கே என்று அறிந்துகொள்ள வேண்டுமே.

“ஆதியை எதற்கு வம்புக்கு இழுக்கிறாய்? அவன் விருந்தாளி என்கிறதை மறந்துவிடாதே. விரும்பியது போலத் தூங்கி எழ அவனுக்கு அத்தனை உரிமையும் இருக்கிறது. தவிர அவன் உன்னைப் போலவா? ஆறுமணிக்கு எழுந்து தயாராகி நண்பர்களோடு வெளியே சென்றுவிட்டான். நேருதான் தம்பிக்குத் தேநீர் வார்த்துக் கொடுத்து சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்தாள்…” போகிற போக்கில் அன்னை சொல்ல, முன்னறைக்குப் போனவளின் நடை தடைப்பட்டது.

ஆஹா… நல்லதொரு வாய்ப்பை இழந்து விட்டோமே. மனது சுணங்கிக் கொண்டது.

“அவர் எப்போது வருவார்?” அக்கறையற்று கேட்பது போல இருந்தாலும், அறிந்து கொள்ளும் ஆர்வம் மிதமிஞ்சிக் கிடந்தது.

“மதியத்திற்கு மேல்தான் வருவேன் என்று சொன்னான். தெரியவில்லை. போகிற இடத்தில் நேரத் தாமதம் ஆகலாம்… எதுவாக இருந்தாலும் சாப்பிட வருவான் என்று நினைக்கிறேன்…” என்றார் அன்னை உணவு போட்ட பாத்திரத்தின் மூடியை அழுத்தி மூடியவாறு.

“ஆமாம்… மதியத்துக்கு மேல் வந்து யாரோடு பேசிக்கொண்டிருக்கப் போகிறாராம் உங்கள் அன்பு

மருமகன்? மேசை கதிரையோடா?” என்று கிண்டலுடன் கேட்டவாறு தனக்குப் பிடித்தமான இருக்கையில் அமர்ந்தாள் நேயநறுமை.

தாய் பக்குவமாகப் போட்டு மூடிய உணவுப் பாத்திரங்களைச் சாப்பாட்டு மேசையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நேரிழை, திரும்பி சகோதரியைப் பார்த்து,

“ஏன் அப்படிக் கேட்கிறீர்?” என்றாள் புரியாதவளாக.

“பின்ன… நானும் நீரும் பல்கலைக் கழகம் போய்விடுவோம். அம்மாக்கும் அப்பாவுக்கும் விடுப்பு எடுக்க முடியாது. இதில் அந்தத் தங்கக் கம்பி தனியாக வீட்டிலிருந்து என்ன செய்யப் போகிறாராம்…” கேட்டவள் ஆசையோடு தேநீரை உறிஞ்சிக் குடிக்க, மறு கணம் புரையேறி அதை வெளியே துப்பினாள். காரணம், சகோதரி சொன்ன செய்தி அப்படி.

“இல்லை அக்காச்சி… நான் இன்று பல்கலைக் கழகம் போகவில்லை…” என்றதும் நேயநறுமை உலகமே ஒரு முறை நடுங்கி அடங்கிய உணர்வு.

“இன்னாது பல்கலைக்கழகம் போக வில்லையா?” அதிர்ச்சியையும் மீறி பொறாமைத்தீ தான் உள்ளே கொழுந்து விட்டு எரிந்தது.

அவளோ முகத்தில் மகிழ்ச்சியைத் தேக்கி,

“ம்…” என்றாள் குதுகலமாக.

“ஏன்…” அவளையும் மீறிக் கடுப்புக் குரலில் தெரிந்தது.

“ப்ச்.. இன்றைக்கு வகுப்புக்குப் போகாவிட்டால் குடி எதுவும் மூழ்கிவிடாது. இணையத்தில் அந்த வகுப்பைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். தவிர பரீட்சை வேறு வருகிறதே. படிக்கவேண்டும்…” சொன்னதும் இவளுக்கு இதயம் நிற்காத குறை. அதிர்ஷ்டசாலி முதலாம் ஆண்டு என்பதால் சிரமமின்றிப் பல்கலைக்கழக வாழ்க்கை போகிறது. இவளுக்கு அப்படி இல்லையே. ஞாயிற்றுக் கிழமை என்றாலும் பரீட்சை இருந்தால் போயாகவேண்டும்.

ஆனால் இவள் எப்படித் தனியாக, ஒரு ஆண் பிள்ளையோடு. அம்மா எப்படி விட்டார்கள். அதை வாய்விட்டும் கேட்டுவிட்டாள் நேயநறுமை.

“அது… அது எப்படிச் சரி வரும்…? அப்பா, அம்மா உம்மைத் தனியாக வீட்டிலிருக்க விட மாட்டார்கள்… அது சரியும் வராது…! பேசாமல் வகுப்புக்குப் போகிற வழியைப் பாரும்…” படபடத்தாள் இவள்.

பின்னே இங்கே ஒருத்தி பரீட்சைக்குப் போக வேண்டும். இவள் அவனோடு கும்மாளம் அடிக்க வேண்டுமா. கோபம்தான் வந்தது நேயநறுமைக்கு.

“அக்கா… ரிலாக்ஸ். ஆனாலும் அநியாயத்துக்கு என் மீது இத்தனை அக்கறையாக இருக்கத் தேவையில்லை. ஏன் என்றால், அப்பா நான்கு நாட்களுக்கு விடுப்பு எடுத்திருக்கிறார். அம்மாவும் போகவில்லை.” என்றதும் நேயநறுமைக்கு அதிர்ச்சியில் வாய் பிளந்தது.

“என்னது.. அப்பா விடுப்பு எடுத்திருக்கிறாரா…?” அதிர்ந்து பின் மறுப்பாகத் தலையை அசைத்து, தங்கை சொன்னது தனக்குத் தவறாகக் கேட்டு இருக்கிறது என்று நினைத்தவளாக,

“சாரி… நேரு… நீ சொன்னது புரியவில்லை.. திரும்பச் சொல்லும்…” என்றாள். அதைக் கேட்ட நேரிழைக்குச் சிரிப்பு வந்தது.

“நீர் சரியாகத்தான் கேட்டிருக்கிறீர் அக்கா, அப்பா விடுப்பு எடுத்திருக்கிறார்…” என்றதும் அப்படியே பின்னால் சரிந்து விழுந்தாள் நேயநறுமை.

“ஐயோ… இரண்டாயிரமாம் ஆண்டு உலகம் அழியும் என்று சொன்னார்கள். அது இருபத்தைந்து வருடங்கள் கழிந்துதான் என்று சொல்லவே இல்லையே….” என்றவள் பின் சட்டென்று நிமிர்ந்து அமர்ந்து,

“நேரு.. சரியாகத்தான் சொன்னாயா? நம்முடைய அப்பாவா விடுப்பு எடுத்தார்…” என்றாள் பாதிக் கிண்டலாகவும், பாதி வியப்பாகவும்.

“இங்கே என்ன என் தலை உருளுகிறது?” என்றவாறு தன் தலையைத் துவட்டிக்கொண்டு வந்த தேகசகாயம், பெரியவளுக்கு அருகே அமர, உடனே தன் கரத்திலிருந்த தேநீரை, தேநீர் மேசையில் வைத்து விட்டுத், தந்தையின் கரத்தில் இருந்த துவாயை வாங்கி அவர் முடியைத் துடைத்து விடத் தொடங்கியவாறு,

“ஒன்றுமில்லையப்பா… இன்றோ நாளையோ உலகம் அழிந்து விடுவதற்கான சாத்திய கூறுகள் தெரிகிறதே… அதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தோம்…” என்றாள் கிண்டலும் கேலியுமாக. அதைக் கேட்டு அதிர்ந்த தேகசகாயம், தலையை நன்றாகவே தன் மகளிடம் ஒப்படைத்து விட்டு,

“என்னது உலகம் அழியப் போகிறதா? யார் சொன்னார்கள்? ஏதாவது எரிகல் விழப் போகிறதாமா… எந்த நாட்டில் விழப்போகிறதாம்?” என்று கேட்டவர் தலையைச் சற்று திருப்பி, தள்ளி நின்றிருந்த மனைவியிடம்,

“அம்மா… டீ கொடுங்கள்…” என்றுவிட்டு தன் தலையைத் துவட்டிக்கொண்டிருந்த மகளை ஏறிட்டுப் பார்த்தார். அவளோ துவாயை ஓரமாகப் போட்டு விட்டு ஒரு கரத்தால் தந்தையின் நாடியைப் பற்றித் தூக்கி, துடைத்ததால் கலைந்திருந்த தந்தையின் முடியை கரங்களால் சரியாக்கியவாறே,

“இல்லையப்பா… நீங்கள் நான்கு நாட்களுக்கு லீவு எடுத்திருக்கிறீர்களாமே… அப்போ உலகம் அழியப் போகிறது என்றுதானே அர்த்தம்” என்றாள் நக்கலாக.

அதைக் கேட்டதும் தேவசகாயம் சிரித்தார்.

தன் மகளின் சேவையில் உள்ளம் கனிந்து போனவராக அவளை இழுத்துத் தன்னருகே அமர்த்தி, அவளுடைய உச்சியில் தன் உதடுகளைப் பதிக்க, இளையவளோ அந்தக் காட்சியைப் பொறாமையாகப் பார்த்தாள்.

அதைக் கண்டு சிரித்தவர் தன் மறு கரத்தையும் விரிக்கச் சந்தோஷமாக ஓடிவந்து மறுகைவளைவில் புகுந்து ஒடுங்கிக் கொள்ள அவளையும் தன் உடலோடு இறுக்கி உச்சந்தலையில் முத்தமிட்டுப் பின் பெரியவளைப் பார்த்து,

“என்னம்மா செய்வது…? வராத பிள்ளை வந்திருக்கிறான். அவனை மனங்குளிர உபசரிக்க வேண்டாமா? வந்த பிள்ளையை ஏனோதானோ என்று எப்படி விடுவது. என்ன இருந்தாலும், ஆதியதுலனுடைய அப்பா…” அவர் முடிக்கவில்லை அவசரமாக அவரிடமிருந்து தன்னை விடுவித்த நேயநறுமை, காதுகளைப் பொத்தி,

“ஐயா… சாமி… ஆளை விடுங்கள்… வேண்டாம்பா… கிட்டத்தட்ட பத்து லட்சம் தடவை இதைக் கூறிவிட்டீர்கள்… இதற்கு மேல் கேட்டால் காதுகள் தாங்காது” கிண்டல் மாறாமல் கூறும் போதே அம்பிகா கணவனுக்குத் தேநீர் குவளையை நீட்டினார்.

தன் மகள்கள் அறியா வண்ணம் மனைவியின் கைதொட்டு குவளையை வாங்கியவர், மனைவிக்கு மட்டுமே புரியும் அந்தக் குறும்பு புன்னகையைச் செலுத்திவிட்டுத் தேநீரைச் சுவைக்கத் தொடங்கினார்.

அவரும் தன் மகள்கள் அறியாவண்ணம் மெல்லிய முறைப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டு,

“சரி சரி… இப்படியே பேசிக்கொண்டிருக்கப் போகிறீர்களா என்ன? நேயா… முதலில் கிளம்பு… பரீட்சைக்கு நேரமாகவில்லையா?” என்ற அன்னை கூறிவிட்டு விலக, தன் தந்தையின் கரத்திலிருந்த குவளையைப் பற்றித் தன் வாய் அருகே இழுத்தவள், அதிலிருந்து ஒரு மிடறு தேநீரை உறிஞ்சி விட்டுத் தன் கரத்திலிருந்த தேநீரையும் குடித்து முடித்துவிட்டு அந்தக் குவளையைத் தன் தங்கையை நோக்கி நீட்டிக் கண்களைச் சிமிட்ட, தன் சகோதரியை முறைத்துப் பார்த்தாள் நேரிழை.

“ஏன் உம்முடைய கை கால்கள் உடைந்து விட்டதா?” கேட்டாலும் சகோதரி நீட்டிய குவளையை வாங்க அவள் மறுக்கவில்லை.

“ப்ச்… நீர்தான் இன்று வேலைக்குப் போக வில்லையே. வீட்டில் தண்டமாக வெட்டியாகத்தானே உட்காரப் போகிறீர். இதையாவது செய்யும்…” என்று கெத்தாகச் சொல்ல, கோபத்தோடு சகோதரியின் தலையில் எஞ்சியிருந்த தேநீரை ஊற்ற வந்தாள் நேரிழை. அந்தோ பரிதாபம். அவள்தான் அந்தக் குவளையில் இம்மிகூட விடாமல் குடித்து முடித்து விட்டிருந்தாளே.

“ர்ர்ர்…” கோபமாகக் கர்ஜித்தவள் சமையலறைக்குள் நுழைய, அழகாய் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு விலகியவள், குனிந்து தந்தையின் கன்னத்தில் ஒரு இச் வைத்துவிட்டு குளியலறைக்குச் சென்றாள்.

அவள் அங்கிருந்து பல்கலைக் கழகம் சென்ற பின்தான் வீடு மயான அமைதியை அடைந்தது.

 

(அன்பு நட்புகளே, இது நேரயாகக் கதையாக வந்த நாவல். அதனால், இந்த நாவல் எப்படியிருக்கிறது என்கிற தெளிவு உங்களிடமிருந்து எனக்குத் தேவை. அப்போதுதான் நான் ஏதவாது தவறு விட்டால், அதைத் திருத்திக்கொள்ள முடியும். என்னையும் மெருகேற்ற வசதியாக இருக்கும். வாசிக்கும் அன்பர்கள் உங்கள் கருத்துக்களை தயங்காமல் எனக்குத் தெரியப்படுத்துங்கள். ஆவலுடன் காத்திருப்பேன்.)

 

What’s your Reaction?
+1
13
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!