10
இருவருக்குமே சற்று நேரம் எடுத்தது, நிதானத்திற்கு வர. அதுவும் நேயநறுமைக்குத் தன் விழிகளை அவனிடமிருந்து கொஞ்சமும் விலக்க முடிந்திருக்கவில்லை. அவனுடைய நினைவு கொடுத்த தவிப்பில்தான் உறக்கம் வராமல் எழுந்து வந்தாள். இங்கே வந்தால், அவள் தவிப்புக்கு யார் காரணமோ அவனே கண்முன்னால் நிற்கிறான். அதுவும், அகன்ற
கழுத்தும், கையில்லாத பெனியனின் ஊடாக முறுக்கித் திரண்டிருந்த, புஜங்களும், இறுகிக் கிடந்த உடலுமாகக் கம்பீரமாக, திரைப்பட நாயகர்களுக்கே சவால்விடும் வகையில் நின்றிருந்தான். அவனுடைய ஆண்மை நிரம்பிய அந்தக் கோலம், அவளுக்குள் தூங்கிக் கிடந்த பெண்மையைத் தட்டி எழுப்ப, தன்னை மீறி எச்சில் கூட்டி விழுங்கினாள் அந்தப் பெண்ணவள்.
“கடவுளே… இவன் ஏன் இப்படி இத்தனை கம்பீரமாக இருந்து தொலைக்கிறான். பார்த்தாலே சர்வமும் குழைந்து உருகிப் போகிறதே. இதுவரை யாரிடமும் தோன்றாத உணர்வு, இவனிடம் ஏன் வருகிறது. மற்றவர்களைப் போல இவனைப் பத்தோடு பதினொன்றாக நினைக்க முடியவில்லையே. என்ன செய்வது…?’
வெட்கம் கெட்ட விழியே,
குடை சாய்ந்து கொள்
இல்லையேல் குருடாகிப்போ
நீ பார்க்கும் விம்பத்தால்
இதயக் கருவறை கன்னி கழிந்து போகிறது.
காதல் எனும் கர்ப்பம் தரிக்கிறது.
பிரசவத்திற்கு வழி தெரியாமல்
இதயம் நடுங்கிப் போகிறது…
அவசரமாய் கவிதை பிறப்பெடுக்க, விழிகளால் அவனை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கினாள். ஐயோ கொள்ளை கொள்கிறானே. இவன் இப்படி இருந்தால், எப்படித்தான் கோபத்தை இழுத்துப் பிடிப்பது? தவித்து நிற்கையில்,
“கொஞ்சம் வழி விடுகிறாயா?” அவன்தான் கேட்டிருந்தான். அந்தக் குரல் கூட அவளை மயக்கித் தொலைக்கத் தடுமாறியவள், அவசரமாகத் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தவளாய்,
“சா… சாரி… நீங்கள் இங்கே இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை..” என்றவள் சங்கடத்தோடு விலகிக் கொள்ள, அவனும் அவளுடைய காந்த விழிகளை ஏறிட்டு,
“நீயும் திடீர் என்று உள்ளே வருவாய் என்று எதிர்பார்க்கவில்லை…” என்றான் எந்த உணர்ச்சியும் இன்றி.
“நீங்கள் இங்கே இந்த நேரம் என்ன செய்கிறீர்கள்…? ஏதாவது வேண்டுமா? எடுத்துத் தரவா” ஏனோ அவனுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட மனம் பரபரத்தது அவளுக்கு.
தன் கரத்திலிருந்த குவளை ஒன்றை அவள் முகம் நோக்கித் தூக்கிப் பிடித்தவன்,
“இ… இல்லை… வேண்டாம்… புது இடம். தூக்கம் வரும் போல இல்லை. அதுதான், பால் குடித்துப் புத்தகம் ஏதாவது படித்தால் தூக்கம் வரும்…” என்றவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள் நேயநறுமை.
அட, அவளைப் போலவே யோசிக்கிறானே? வியப்போடு விழிகள் விரிக்க, அவனோ தலை அசைத்து விட்டு முன்னறைக்குச் செல்ல, இவள் உதடுகளைச் சுழித்தாள். ஏன் கொஞ்சம் நின்று பேசினால்தான் என்னவாம்.
மனம் சிணுங்கியது. கூடவே அவன் பின்னால் செல் என்று எதுவோ கட்டளையிட, அவசரமாகச் சமையலறைக்குள் நுழைந்து, கிடைத்த குவளையில் பாலை நிரப்பி நுண்ணலை அடுப்பில் சூடேற்றி எடுத்துக்கொண்டு வந்தாள்.
அவளைக் களவாட முயலும், அந்த ஆண்மகன், ஒரு கரத்தில் பாலும், மறு கரத்தில் புத்தகமுமாக மேசை விளக்கின் ஒளியில் ஒற்றை மென் இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்திருந்தான்.
அவளும், அமரவேண்டும் என்றால், அவனைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். இல்லை என்றால் சுத்திப் போக வேண்டும். ம்கூம்… அவனைக் கடந்து செல் என்று உள்ளேயிருந்த ஏதோ ஒரு பேய் கட்டளையிட, கொஞ்சமும் யோசிக்காமல் அவனைக் கடைக் கண்ணால் பார்த்தவாறே கடக்க முயல, கவனம் அவளிடமில்லாத காரணத்தால், நீட்டியிருந்த அவன் காலில் தடக்குப்பட்டு, நிலை தடுமாறிச் சுழன்று அவன் மடியில் தொப்பென்று அமர்ந்திருந்தாள் நேயநறுமை.
கண்ணிமைக்கும் நொடியில் இந்த விபத்து நடந்துவிட்டிருந்தது. இருவருமே, அந்த விபத்தை எதிர்பார்க்கவில்லை என்பதால், முதலில் உணர்ந்தது அதிர்ச்சியைத்தான்.
இதுவே திரைப்படமாக இருந்திருந்தால், கண்ணும் கண்ணும் ஒன்றை ஒன்று நோக்கியிருக்கும். உதடுகள் நடுங்கி இருக்கும். மார்புகள் விம்மி மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியிருக்கும். இதயத்தில் சிலிர்ப்பு ஓடி இருக்கும். அடிவயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறந்து கதக் ஆடி இருக்கும். பின்னால் அரை குறை ஆடையில் பெண்கள் வந்து நடனமாடியிருப்பார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவனும் அவளுமாய் எலும்பை உருக்கும் உறை பனியில் அவள் கவர்ச்சி ஆடையிலும், அவன் கோட் சூட்டும் போட்டு ஒரு டூயட் பாடி முடித்திருப்பார்கள். ஆனால் அந்தளவுக்கு அவள் அதிர்ஷ்டம் செய்யவில்லையே.
அவளுடைய போதாத நேரம், அவள் விழுந்த வேகத்தில் இருவரின் கரங்களிலும் இருந்த சூடான பால் மொத்தமாக ஆதியதுலனின் நெஞ்சு மற்றும் தொடை என்று பாரபட்சமின்றி கொட்டித் தரையில் வழியத் தொடங்கியது.
ஒரு கணம் தாண்டி உணர்ந்த சூட்டு வலியில் பதறிய அந்த ஆண் மகன், அவளைத் தள்ளிவிட்டு எழுந்து நின்று கொள்ள, இவளோ வாயைப் பிளந்தாள்.
நல்ல வேளை அவள் வேர்ட்ராப் அணிந்து இருந்ததால், அந்தத் தடித்த ஆடையை மீறிச் சூடான பால் அவள் மேனியைத் தீண்டவில்லை. ஆனால் அவன்…? பதட்டத்தோடு அவனை ஏறிட, அவன் முகம் வலியில் சுணங்கிக் கிடந்தது.
எரிச்சலும் கோபமுமாக, ஈரமாகிவிட்ட டீஷேர்ட்டை இழுத்துப் பிடித்தவாறு குனிந்து பார்த்தவன், பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் நின்றிருந்த கோலத்தைக் கண்டதும், வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவன்,
“ஆர் யு ஓகே…?” என்றான் கடுப்புடன். சட்டென்று சுயம் பெற்றவளாக,
“ம்… ஐ ஆம் ஓக்கே… பட்.. ரிய.. ரியலி சாரி… இட்ஸ் மை ஃபோல்ட்… என்னுடைய தப்புதான்…” என்று தடுமாறி நிற்க, இவனோ, அணிந்திருந்த கையில்லா மேலாடையைச் சட்டென்று கழற்றி ஈரமான மார்பையும் வயிற்றையும் துடைக்கத் தொடங்க, இப்போது இவளுடைய விழிகள் அதிர்ச்சியை மறந்து இரசனையில் விரிந்தன.
நேயநறுமைக்கு வெற்றுடலோடு ஆண்களைப் பார்ப்பது ஒன்றும் புதிதல்லதான். ஜிம் போகும் போது, ஆண்கள் சர்வசாதாரணமாக மேலாடையைக் கழற்றிவிட்டு உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதை எல்லாம் அவள் அலட்சியமாகப் பார்த்துவிட்டுக் கடந்து செல்பவள்தான். இதுவரை எந்த ஆனாலும் அவளுடைய மனத்தைச் சலனப்படுத்த முடிந்தது இல்லை. வின்சன் கூட ஹாலிவூட் நாயகர்கள் போலத் தான் கட்டுக்கோப்பான உடலோடு இருப்பான். ஆனால் அவனால் இவளை இம்மி கூடக் கவர முடிந்ததில்லை. ஆனால் இவன்…? தன்னை மறந்து அவன் தேகத்தில் இலயித்துப் போனாள் அந்தப் பேதை.
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்றால் கிலோ என்னவிலை என்று கேட்பவளுக்கு, அந்த ஆண்மகனை அப்படி வெறித்துப் பார்ப்பது ஒன்றும் தப்பாகத் தெரியவில்லை. என்ன செய்வது 2ரி ளீவீபீs ஆயிற்றே. அந்த இளமைக்கே உரித்தான குறுகுறுப்போடும் அசட்டுத்தனத்தோடும் அந்தக் கட்டுடல் ஆண்மகனை ஜொள்ளு வடிவது கூடத் உறைக்காமல் பார்த்திருக்க, அவனோ அவளை ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு, விரைந்து தன் அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாற்றத் திடுக்கிட்டு விழித்தாள் நேயநறுமை.
ஐயையோ… என்ன காரியம் செய்துவிட்டாள்? தன் தலையிலேயே அடித்தவள், எரிகாயத்திற்குப் போடும் களிப்பை எடுத்துக்கொண்டு அவனுடைய அறைக்கு முன்பாக வந்து நின்றாள். கதவைத் தட்டுவதற்காகக் கரத்தைத் தூக்கியவள் ஒரு வினாடி தயங்கினாள்.
பின் மெதுவாகத் தட்ட, அடுத்த ஒரு சில நிமிடங்களில் தகவு திறந்தது. இப்போது அவன் கை வைத்த பெனியன், மற்றும் பைஜாமா அணிந்து இருந்தான்.
“ரியலி ஐ ஆம் சாரி… நான் வேண்டும் என்று பண்ணவில்லை. வந்து நான்… வரும் போது… பால் தடுக்கி, நான் மேலே கொட்டி… சீ, கால் தட்டி, பால் கொட்டி…” ஐயோ பைத்தியம் போல உளறுகிறோமே, மனதிற்குள் புலம்பியவள்,
“ஹீ… ஹீ… கால் தடுக்கி, உங்கள் மேலே நான் விழுந்து பால் கொட்டி… சாரி… இந்தாருங்கள்… இந்தக் களிம்பைப் சூடு பட்ட இடத்தில் பூசுங்கள். எரிச்சல் குறைந்துவிடும்…” அவள் சொல்ல, அவள் நீட்டிய டியூபைப் பார்த்தவன், பின் அவளைப் பார்த்தான்.
“தேவையில்லை…” என்றவாறு அறையை விட்டு வெளியே வர இவள் கரங்களைப் பிசைந்தாள்.
“சா… சாரி… அதுலா…” என்றாள் நிஜமான வருத்தத்தோடு. அவனோ அவளுடைய அந்த அதுலா என்கிற அழைப்பில் சட்டென்று தடை போட்டவனாக நின்று, பின் திரும்பி அவளை ஒரு மாதிரி புருவங்கள் சுருங்கப் பார்த்தான்.
“என்னை எப்படிக் கூப்பிட்டாய்?” ஒரு மாதிரிக் கேட்டவனை அசடு வழியப் பார்த்தாள் நேயநறுமை.
“அது… அது வந்து… உங்கள் பெயர்… ரொம்ம்ம்பப் பெரிசா… அதுதான், சுருக்கமாக அதுலன் என்று அழைத்தேன்… நன்றாக இருக்கிறதா?” கேட்டவளின் வாயிலிருந்து கொட்டிய அசட்டை அள்ளுவதற்கு ஐம்பது லிட்டர் குடம் இருந்தாலும் போதாது.
“உனக்குத்தான் என்னைப் பிடிக்காதே. பிடிக்காதவர்கள் எப்படிக் கூப்பிட்டாலும் அந்த அழைப்புக்கு அர்த்தம் இருக்காது என்ற நான் சொல்லி நீ தெரிந்து கொள்ளவேண்டும் என்றில்லை… அதனால் என்னை முழுப்பெயர் சொல்லியே கூப்பிடு…” என்றவன் முன்னறைக்குச் செல்ல, அவன் சொன்ன விதத்தில் இவள் முகம் கறுத்துப் போனது.
அவனுடைய அந்த மறுப்பு இவளுக்கு மூக்குடைப்புதான். ஆனாலும் அதை வெளியே காட்டவில்லை அவள். அவனிடம் காட்டத் தோன்றவும் இல்லை. இரும்பிழுத்த காந்தமாக அவன் பின்னால் சென்றவள்,
“சாரி… நான் இன்று பேசியதை மனதில் வைத்துப் பேசுகிறீர்கள் என்று புரிகிறது. நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது. அதுவும் வீட்டிற்கு விருந்தினராக வந்த உங்களைப் பற்றித் தப்பும் தவறுமாகப் பேசி இருக்கக் கூடாது. மன்னித்துவிடுங்கள்…” வாழ்வில் முதன் முறையாக இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டாள் நேயநறமை. ஆனால் அவனோ கொஞ்சம் கூட இரங்கினானில்லை.
குனிந்து மேசையில் முன்பு வைத்த புத்தகத்தைக் கரங்களில் எடுத்தவாறு திரும்பி அவளை அழுத்தமாகப் பார்த்து,
“லிசின்… எனக்குப் பொய்யாக நடிக்க எல்லாம் தெரியாது நேயநறுமை. ஆரம்பத்திலிருந்தே உனக்கு என்னைப் பிடிக்காது என்று எனக்கும் தெரியும்… பிடிக்காத ஒருத்தனைப் பற்றித் தப்பும் தவறுமாகப் பேசுவது இயல்புதான். ஆனால் நீ சீண்டியது என் தன்மானத்தை. அதிலிருந்து வெளியே வருவது அத்தனை சுலபமில்ல” அவன் சொல்ல அதிர்ந்தாள்.
“அது… அது வந்து… எனக்கு உங்களைப் பிடிக்காது என்று யா… யார் சொன்னா… அது அப்படியல்ல… எனக்கு வந்து…” அவள் தடுமாற, அவளுக்கு முன்பாகக் கரத்தை நீட்டி அவளுடைய பேச்சைத் தடுத்தான் அவன்.
“எப்போது நான் அத்தையோடு பேசினாலும், நேரிழை இடையில் புகுந்து பேசுவாள். ஆனால் நீ? ஒரு முறை கூட என்னோடு பேசியதில்லை. ஏன் பேசுவதற்கு முயன்றது கூட இல்லை. நானும் பல முறை உன்னோடு பேச ஆசைப்பட்டிருக்கிறேன். நான் பேசுகிறேன் என்பதற்காகவே நீ வீட்டைவிட்டு வெளியேறி விடுவாய்… அத்தை கூட என்னோடு பேசவைக்க உன்னை அழைத்திருக்கிறார்கள். நீ அந்தப் பக்கமே வரமாட்டாய். இதுவே போதாதா? ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று அறிந்து கொள்ள?” கேட்டவன், ஒரு விநாடி அமைதி காத்தான். அவன் முகத்தில் வேதனையின் சாயலிருந்ததோ? கண்ணிமைக்கும் நொடியில் அது மறைந்து போக, அவளை ஏறிட்டு,
“உன்னுடைய உணர்வை நான் மதிக்கிறேன் நேயநறுமை. பிடிக்காத நபரோடு முகம் கொடுத்துப் பேசுவது எத்தனை சிரமம் என்று எனக்கும் தெரியும்… தயவு செய்து உன்னை நீயே சிரமப் படுத்திக் கொள்ளாதே… என்னால் புரிந்து கொள்ள முடியும்… நீ நீயாகவே இரு…” அவன் சொல்ல, உள்ளூரத் தவித்தாள் இவள்.
அவன் மீது வெறுப்பிருந்தது உண்மை. ஆனால் இப்போது அந்த வெறுப்பு இருந்த இடம் தெரியாமலும் போய்விட்டது என்று எப்படிச் சொல்வாள்?
தன்நிலை விளக்கத்தை அவனிடம் சொல்வதற்காக, நிமிர, அவனோ, திரும்பவும் பழைய இடத்தில் அமருந்து புத்தகம் வாசிக்க ஆரம்பித்திருந்தான்.
“நான்… வேண்டுமானால் பால் எடுத்து வந்து
கொடுக்கவா?” எப்படியாவது அவனுடைய நன்மதிப்பை பெற்றுவிடவேண்டும் என்கிற அவஸ்தை அவளுக்கு. அவனோ புத்தகத்தின் பக்கங்களைப் பிரித்தவாறு,
“எதற்குத் திரும்பவும் என் மீது கொட்டவா?” என்றான் எந்த உணர்ச்சியுமற்று. அதைக் கேட்டவளின் முகம் இப்போது கோபத்தில் சிவந்தது.
“நான்தான் வேண்டும் என்று உங்கள் மீது கொட்டவில்லை என்றேனே…” இவள் சொல்ல, இப்போது நிமிர்ந்து அவளைப் பார்த்தான் ஆதியதுலன்.
“நானும் வேண்டும் என்று கொட்டினாய் என்று சொல்லவில்லையே…” அவன் சொல்லவில்லை தான், ஆனால் அவனுடைய செயல் காட்டாதா அவன் என்ன நினைக்கிறான் என்று.
திரும்பவும் அவனிடம், நீங்கள் நினைப்பது போல இப்போதெல்லாம் உங்கள் மீது வெறுப்பில்லை, சொல்லப்போனால் உங்களுடன் பேசப் பழகப் பிடித்திருக்கிறது, என்று சொல்லிடலாமா என்று நினைத்தவள், சட்டென்று அந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டாள். எப்போதும் முந்திரிக் கொட்டையாக எழுந்து நிற்கும் தன்மானம் அவளை வழி மறித்து நின்றது.
‘அவன்தான் உன்னை ஒதுக்க நினைக்கிறானே. பிறகு ஏன் அவனிடமே செல்ல நினைக்கிறாய். போ… போய் தூங்கு…’ மனது அவளை விரட்டி அடிக்க, அதையும் மீறி தன் மீதிருக்கும் தவறான அபிப்பிராயத்தைப் நீக்கிவிடவேண்டும் என்கிற வேகத்தோடு அவனை நோக்கி நகர்வதற்காக முயல்வதும், பின் வேண்டாம் என்று தடுமாறுவதுமாக இருந்தவள், கடைசியாக, தன்மானத்திடம் தோற்றுப் போய் அறைக்குள் வந்து படுக்கையில் தொப்பென்று விழுந்தாள்.
அவளால் அவனுடைய நினைவுகளைச் சுத்தமாக அழிக்க முடியவில்லை.
“ஐயோ… எனக்கு யாராவது சூனியம் கீனியம் வைத்துவிட்டார்களா என்ன? இப்படிப் பைத்தியம் போல நடந்துகொள்கிறேனே. அவனைக் கண்டால் மட்டும் சுயம் இழக்கிறேன். இப்படி யாராவது என்னுடைய முகத்தை முறித்துப் பேசினால், ஜென்மத்திற்கும் திரும்பிப் பார்க்கமாட்டேன். ஆனால் இவனிடம் மட்டும் என்னுடைய மனம், செக்கு மாடாகச் சுற்றித் திரிகிறதே. இப்படி என் சிந்தையில் நின்று பசுமரத்தில் ஆணி அடித்தது போல அவன் நினைவுகளைப் பலமாக அடித்துத் தொலைக்கிறானே. இரும்பிழுத்த காந்தமாக அவனை நோக்கியே சிந்தனையால் வட்டமிடுகிறேனே. அதுவும் அவன் தன் மனநிலையைத் தெளிவாகச் சொன்ன பின்னும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன். ம்கூம் நிச்சயமாக யாரோ எனக்குச் சூனியம் வைத்து விட்டார்கள். இல்லை என்றால் இப்படிப் பைத்தியம் போல நடந்து கொள்ள மாட்டேன்… யார் அந்தக் கபோதி? நெற்றியை வருடிக் கொடுத்தவள், படுக்கையில் சரியத் தூக்கம் கிட்டே நெருங்குவேனா பார் என்றது.
இளமை வேறு, அவளை உசுப்பி விட்டது. இதுதான் இளமைத் தேடலா? என்னுடைய வயதுக்கு, கவர்ந்திழுக்கும் ஆணைக் கண்டதும் சலனப்படுகிறேனோ? ஆமாம்… நிச்சயமாக அப்படித் தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் இப்படிப் பைத்தியம் போலச் சதா அவனையே நினைத்துக் கொண்டிருக்க மாட்டேன். இது நிச்சயமாக வயது கோளாறுதான். புதிதாக ஒரு ஆணைக் கண்டதும் தவிக்கிறேன்…’ தனக்குத் தானே சமாதானம் சொன்னாலும், பாவம், இதுதான் காதலின் ஆரம்பம் என்று அந்தப் பேதைக்கு அப்போது தெரியவில்லை.
எத்தனையோ ஆண்களை நாளாந்தம் சந்திக்கிறாள், பேசுகிறாள். பழகுகிறாள். அத்தனை பேரையுமா அவளுடைய மனது தேடுகிறது? இவனை மட்டும் ஏன் திரும்பத் திரும்ப யோசிக்கிறாள்? அவனை நினைத்துப் பைத்தியமாகிறாள். இவ்வளவு ஏன் உடல் கூட அவனைத்தானே தேடுகிறது. காதலில்லாத இடத்தில் புத்தியும் உடலும் அந்த ஒருத்தனுக்காக ஏங்குமா என்ன? அது புரியாமல் பைத்தியம் போல குழம்பித் தவிக்கிறாள்.
பைத்தியக்காரி. மனது ஒரு ஆண்மகனை முழுதாகத் தன்னவன் என்று ஏற்றுக்கொண்டு அவனிடம் சரணாகதி அடைந்தால், அதுதான் காதலின் தொடக்கம் என்பதை அவள் புரிந்து கொள்ளவில்லை.
அதைப் புரிந்துகொள்ளும் காலம் வரும்போது, அவள் வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள் வருமோ. அதையெல்லாம் இவளால் தாங்கிக் கொள்ள முடியுமா? விதிதான் எத்தனை கொடியது? வலிக்கச் செய்து விட்டுக் கைகொட்டிச் சிரிக்கும். அதிலிருந்து தப்பிக்க இதுவரை யாரும் பிறந்திலர். இனிப் பிறக்கப்போவதுமில்லை.

