Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 11

(11)

 

சற்றுத் தொலைவிலேயே தம்பியின் கரத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் விதரணையைக் கண்ட வசந்தாவின் விழிகள் சுருங்க, உடனே அவளை நோக்கி விரைந்து வந்தார்.

“என்னம்மா…? எங்கே கிளம்பிவிட்டாய்…?” என்றார் அவளையும் விதுரனையும் பார்த்தவாறு. வசந்தா கேட்டதற்கு என்ன பதிலச் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விதரணை விழிக்க,

“நல்லா கேளுங்கள் ஆன்டி… நான் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று புறப்படு என்று இழுத்து வருகிறாள்…” – தன் நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருந்த தருணத்தைச் சகோதரி நாசமாக்கிவிட்டாளே என்கிற கடுப்பில் அவன் சொல்ல, திரும்பித் தன் தம்பியைப் பார்த்து முறைத்தாள் விதரணை.

மீண்டும் வசந்தாவைப் பார்த்து அசடு வழியச் சிரித்தவள்,

“ஹி… ஹீ… அது… அது வந்து… நான்… இருட்டுவதற்கு முன்னால் வீட்டுக்குப் போகலாம் என்று…”  – இவள் தடுமாற, விதரணையைப் பார்த்து முறைத்தார் வசந்தா.

“என்னது? இருட்டுவதற்கு முன்னால் புறப்படப் போகிறாயா? இது என்ன குளிர்காலமா, ஆறு மணி என்றதும் இருட்டிப்போக? கோடையில் இரவு ஒன்பது மணிக்குக் கூட அத்தனை இருட்டு வராது! அப்படியிருக்கும்போது கிளம்புகிறேன் என்கிறாயே. இதுதான் நீ உன் தோழிக்குக் கொடுக்கும் மரியாதையா?” என்று அவர் கேட்க, இதற்கு என்ன பதிலச் சொல்வாள்?

தயங்கி நின்ற விதரணையின் கரத்திலிருந்து விதுரனின் கையைப் பிரித்துவிட்ட வசந்தா, தன் கரத்திலிருந்த வெள்ளிக் குத்துவிளக்கை அவள் கையில் திணித்தார். அதுமட்டுமல்லாமல், அவளது மறுகரத்தை அழுந்தப் பற்றி,

“நீ முதலில் என்னோடு வா…” என்றார். பின் திரும்பி விதுரனைப் பார்த்து, “கண்ணா… போ… போய் உன் அக்காவின் மற்றத் தோழிகளையும் பெண் இருக்கும் அறைக்கு வரச் சொல்…” என்று விட்டு, அவளுடைய கரத்தை விடாமலே மணப் பெண் அமர்ந்திருந்த அறையை நோக்கி இழுத்துச் சென்றார்.

வேறு வழியில்லாமல் தன் தம்பியைப் பரிதா பமாகப் பார்த்துவிட்டு வசந்தாவோடு இழுபட்டுச் சென்றாள் விதரணை. ‘சே…! என்ன கொடுமை இது? நிம்மதியாக ஒரு முடிவுகூட எடுக்க முடியவில்லையே…’  – தனக்குள் முனங்கியவள், அபிநயாவுக்கு உரிய அறைக்குச் செல்ல, சற்று நேரத்தில் அவளுடைய மற்றத் தோழிகளும் வந்துவிட்டிருந்தனர். அதற்குப் பிறகு எதையும் சிந்திக்க முடியாத நிலை.

அவளின் கரத்திலிருந்த வெள்ளிக் குத்து விளக்குக்கு, அளவாய் எண்ணெய் ஊற்றி, அதில் திரியை வைத்து விளக்கேற்றி, அவளைக் கவனமாகப் பிடிக்குமாறு பணித்த வசந்தா, மற்றத் தோழிகளிடம் மலர் இதழ்கள் அடங்கிய தட்டுகளைக் கொடுத்து,

“பசங்களா…! விதரணை முன்னால் போகட்டும். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இந்தத் தட்டோடு அபிக்குப் பூத்தூவிச் சென்று கடைசியில் அபி அமலனுக்கு அருகே நின்றதும் இருவருக்கும் சேர்ந்து மூழுப் பூவையும் ஒன்றாகத் தூவ வேண்டும்” அவர் சொல்ல இவளுக்குத்தான் கடுப்பானது.

யார்தான் இப்படியான ஐடியாக்களை இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களோ. புதிது புதிதாக ஒன்று செய்யவேண்டியது… பற்களைக் கடித்தவள் தன் கையிலிருந்த குத்துவிளக்கை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவளுக்குத் தன் நிலையை எண்ணிப் பரிதாபமாக இருந்தது. ‘விட்டால் போதும்’ என்கின்ற நிலையில் இருந்தவளுடைய விதி, இப்படி அத்தனை பேரும் பார்க்கும் வகையில் விளக்குடன் மேடைக்குப் போக வேண்டிய நிலையை உண்டாக்கிவிட்டது. ஏற்றமாதிபன் இவளைக் கவனிப்பானோ? மீண்டும் உள்ளே தவிப்பு.

வேறு வழியில்லாமல் வசந்தாவும் ஆனந்த குமாரும் முன்னே செல்ல, இவள் பின்னே விளக்கோடு செல்ல, இரு பக்கமும் தோழிகளும் உறவுகளும் மலர் தட்டை ஏந்தி மணமகளுக்கு பூச்சொரிய நடுவில் கையில் பூங்கொத்தோடு அபிநயா வெட்கமும் மகிழ்ச்சியுமாக நடக்கத் தொடங்கினாள்.

“வாவ்… லுக் அட் ஹர்…” – ஓர் இளைஞன், முன்னால் விளக்கோடு மலர்க்கொத்தாய் வந்த பெண்ணைக் கண்டு வாய் பிளக்க, எதேச்சையாக அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஏற்றமாதிபன் வாய்பிளந்த நண்பனைப் பார்த்துவிட்டு, அவன் விழிகள் சென்ற திசையில் தன் கவனத்தைச் செலுத்தினான். அங்கே செயற்கையாக வரவழைக்கப் பட்ட புன்னகையுடன், கையில் வெள்ளிக் குத்து விளக்கை ஏந்தியவாறு அழகுப் பதுமையாக மென்நடையிட்டு வந்துகொண்டிருந்தாள் விதரணை.

சுருண்ட கார்குழலை அழகாக வாரி, தலை நிறைய மல்லிகைப்பூச் சூடி, சந்திரப்பிறை நெற்றியில் அழகாய்ப் பொட்டிட்டு, அடர் வில் போன்ற புருவங்களுக்கிடையே துள்ளி விளையாடும் மீனாய் நீண்ட விழிகளோடு, சின்னதாய் நேரான நாசியில் மின்னும் மூக்குத்தியும், சிவந்த இதழுக்குப் பொருத்தமாய் உதட்டுச் சாயமும் என்று அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தாள் விதரணை.

அங்கே அழகோவியமாய் நடந்து வந்த பெண்ணவளைக் கண்டு ஏற்றமாதிபனின் பார்வை ஒரு விநாடி அசைய மறந்தது என்பது மட்டும் நிஜம்.

“அம்மாடி! என்ன அழகுடா… இடையைப் பாரேன்… கோவில் சிலை போல, குறுக வேண்டிய இடங்கள் குறுகி, பெருக்க வேண்டிய…” – தன் போக்கில் அந்த நண்பன் இரசனையாய் சொல்லிக் கொண்டு வர, அவனுடைய பேச்சு சுருக்கென்று இவன் இதயத்தைத் தைத்ததோ, சட்டென்று திரும்பித் தன் நண்பனைப் பார்த்து முறைத்தான் ஏற்றமாதிபன். ஆனால் அந்த நண்பனுக்கு அது கொஞ்சம் கூட உறுத்தியதாகத் தெரியவில்லை.

“எனக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. வாழ்ந்தால் இவள் போல ஒருத்தியோடுதான் வாழ வேண்டும்…” – அவன் பாட்டிற்குப் பிதற்ற, அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல் எழுந்துவிட்டான் ஏற்றமாதிபன்.

“வருண்… அந்தப் பெண் அபிநயாவின் தோழி… பார்த்துப் பேசு…” என்றான் பற்களைக் கடித்தவாறு. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் அந்த வருணின் விழிகள் விரிந்தன.

“நம்முடைய அபிநயாவின் தோழியா? ஆனால் இவளை நான் அபியோடு பார்த்ததே இல்லையே!”  அவன் திகைக்க, ஏனோ ஏற்றமாதிபனின் பற்கள் ஒன்றோடொன்று அரைபட்டன.

“அபிநயா கனடாவில் இருந்தபோது இருவரும் நல்ல நண்பர்கள்…” என்றவன் திரும்பி மீண்டும் விதரணையைப் பார்த்தான். ஏழு வருடங்களுக்கு முன்பு, விழிகளில் கனவோடு அவனைப் பார்த்திருந்ததும், அடுத்து அவனைக் காதலோடு அவள் பார்த்ததும் நினைவுக்கு வர, சட்டென்று தன் தலையை உலுப்பி அந்த நினைவை உதறினான் ஏற்றமாதிபன்.

“டேய்… அந்தப் பெண்ணுடைய பெயர் என்ன?”   என்ற வருண் விடுவதாக இல்லை.

ஆழ மூச்செடுத்துத் தன்னை ஒருநிலைப் படுத்தியவன், “இவள் அபிநயாவின் தோழி என்று சொன்னேன். அப்படியென்றால் நம்மை விட மிகவும் சின்னப் பெண்… உனக்கு ஒத்துவராது… அதனால் அவள் சார்ந்த விபரங்கள் உனக்குத் தேவையில்லாதது” என்று ஏற்றமாதிபன் மிக அழுத்தமாகச் சொல்ல, தன் நண்பனை ஒரு மாதிரிப் பார்த்தான் வருண்.

“சோ வாட்? ஓர் ஆணும் பெண்ணும் ஆசைப் படுவதற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? கமான்… எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது… வாழ்ந்தால் அந்தப் பெண் போன்ற ஒருத்தியோடு தான் வாழ வேண்டும். முடிவு செய்துவிட்டேன்… நான் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்யப் போகிறேன்…” – வருண் உறுதியாகச் சொல்ல, ஒரு விநாடி ஏற்றமாதிபனின் உதடுகள் இறுகிப் பின் தளர்ந்தன. பின் மெல்லிய புன்னகையோடு நண்பனைப் பார்த்தவன்,

“உனக்கு அந்தப் பெண்ணை உண்மையாகவே பிடித்திருக்கிறது என்றால், என்னுடைய ஆதரவு உனக்கு உண்டு. அதை விடுத்து, வெறும் இச்சைக்காக அந்தப் பெண்ணை நீ நெருங்குவது தெரிந்தால்…” – அவன் ஒரு மாதிரிச் சொல்ல, அந்தக் குரலில் வருண் ஒரு கணம் நடுங்கித்தான் போனான்.

“டேய்… எனக்கு இப்போது வயது முப்பது. இனியாவது திருமணம், குழந்தைகுட்டி என்று வாழ வேண்டாமா? அம்மா வேறு நச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டுக்கு வரும் மருமகள் நிச்சயமாகத் தமிழ்ப் பெண்ணாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரை பார்த்த பெண்கள் யாரும் மனதுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தப் பெண்… எனக்கு

ரொம்பப் பிடித்திருக்கிறது…” என்றவன், சட்டென்று தன் கைப்பேசியை எடுத்து நடந்து வந்து கொண்டிருந்த விதரணையைப் படம் பிடிக்க, கொஞ்சம் அதிர்ந்துதான் போனான் ஏற்றமாதிபன்.

“என்ன செய்கிறாய்?” – என்று சீறலாகக் கேட்டவாறு எழுந்து நிற்க, தன் நண்பனைப் பார்த்துப் புன்னகைத்த வருண், “ஹே.. புரோ… கூல்… அம்மாவுக்குக் காட்டப் போகிறேன்..” என்றான் தன் கைப்பேசியில் புகைப்படமாய்ப் புன்னகைத்திருந்த விதரணையைப் பார்த்து.

கண்ணிமைக்கும் நொடியில் அவன் கரத்தில் இருந்த கைப்பேசியைப் பறித்த ஏற்றமாதிபன், தன் நண்பன் எடுத்திருந்த புகைப்படத்தை ஒருமுறை ஏறிட்டான். திரைப்படங்களில் நாயகியை எத்தனை அழகாகக் காட்டுவார்களோ, அத்தனை அழகாக இருந்தவளை, மாற்றுக் குறையாத அழகுடன் எடுத்திருந்தான் வருண். அதைக் கண்டு முகம் இறுக, அதை இரண்டே தட்டில் சுத்தமாக நீக்கி விட்டு, மீண்டும் கைப்பேசியை நண்பனிடம் நீட்டி,

“ஒருவரின் அனுமதியின்றிப் புகைப்படம் எடுப்பது பெரிய குற்றம். அதுவும் காவல்துறையில் இருந்துகொண்டு நீ இப்படிச் செய்வது மிகப்பெரும் தவறு… உனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்து இருக்கிறது என்றால், நேராகப் போய்ப் பேசு. உன் விருப்பத்தைச் சொல். உன் அம்மாவையும் அப்பாவையும் அழைத்துச் சென்று சம்மதம் கேள். அதை விடுத்து இப்படித் கீழ்த்தரமான காரியங்களைச் செய்யாதே…” என்று சீறிவிட்டுப் பின் தன் நண்பனை நெருங்கி அவனை அழுத்தமாகப் பார்த்து, “இனி இப்படி ஏதாவது ஒரு பெண்ணின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுத்ததைக் கண்டேன்…” – அவன் பார்த்த பார்வையில் அந்தக் காவல்துறை வீரனே கொஞ்சம் நடுங்கித்தான் போனான்.

ஏற்றமாதிபன்… அவன் பெயரைச் சொன்னால் யார் அதிர்கிறார்களோ இல்லையோ, அவனுடைய குழு நிச்சயமாக அதிரும்; அத்தனை கடுமையானவன். படிப்பை முடித்ததும் முழுதாக ‘ரோயல் கனடியன் மௌன்டட் பொலிஸில்’ (Royal Canadian Mounted PoliceRCMP). தன்னை இணைத்துக் கொண்டவன், பின் அதிலிருந்து அவசரகாலப் பதிலடிக் குழுவில் (Emergency Response TeamERT) சேர்ந்துவிட்டான்.

RCMP – ERT என்பது கனடிய காவல்துறையின் ஒரு பிரத்யேகத் தந்திரோபாயப் பிரிவாகும். இதில் பணியாற்றும் வீரர்கள் பெரும்பாலும் ராணுவப் படைகளுடன் இணைந்து பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களால் சர்வ சாதாரணமாக எந்த விதமான ஆயுதங்களையும் இலகுவாகக் கையாள முடியும். இந்தக் குழு வழக்கமான RCMP தரவரிசை அமைப்பிற்குள்ளேயே செயல்பட்டாலும், இவர்களுக்கு நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன்னிச்சையாகச் செயற்பட அத்தனை அதிகாரங்களும் உண்டு.

ஏற்றமாதிபனின் திறமையாலும், அவனுடைய புத்திசாதுரியத்தாலும், முப்பத்தொரு வயதிலேயே பன்னிரண்டு பேரைக் கொண்ட குழுவை வழி நடத்தும் தலைவனாக ‘சார்ஜென்ட்’ என்கிற பதவியைப் பெற்றதும் மிகப்பெரும் சாதனைதான். அவனுடைய பன்னிரண்டு பேர் கொண்ட அந்தக் குழு, ஒரு சிறு ராணுவக் குழுவிற்குச் சமம். அவன் இடும் கட்டளைக்காக அவர்கள் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிவார்கள். கொடுத்தும் ஆகவேண்டும்.

ஏற்றமாதிபன் அனைவருடனும் நட்போடுதான் பழகுவான், சிரிப்பான், தட்டிக்கொடுப்பான்; புரிய வில்லை என்றால் புரிய வைப்பான். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் அவன் வேறு மாதிரி!

கனடாவில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்பாடுகளை முறியடித்த பெருமை அவனையும், அவன் குழுவையுமே சாரும். அரசியல் சார்ந்த பாதுகாப்பு, வேற்று நாடுகளுக்குத் தெரியாமல் இரகசியமாக நடத்த வேண்டிய அரசியல் நடவடிக் கைகள் அனைத்தையும் எந்தச் சிக்கலும் இல்லாமல் திறம்பட நிறைவேற்றியிருக்கிறான். வேற்று நாட்டின் அந்நிய ஊடுருவல் தங்கள் நாட்டில் இருப்பது தெரிந்தால், அதை முறியடிக்க அவன் குழுவைத்தான் அரசாங்கம் களமிறக்கும். அதனால், ஏற்றமாதிபன் என்றாலே காவல்துறையில் தனி மரியாதை உண்டு. அந்த இளவயதில் இத்தனை பெரிய இடத்திற்கு வந்தது, அவன் காவல்துறை மீது வைத்த அதீத ஆசையாலும், அவன் திறமையினாலுமே ஆகும்.

வருண், ஏற்றமாதிபனோடு பல்கலைக்கழகத்தில் இருந்து ஒன்றாகப் படித்தவன்; நல்ல நண்பனும் கூட. அவனும் காவல்துறையைச் சேர்ந்தவன்தான். ஆனால், ஏற்றமாதிபன்போல ஆர்.சி.எம்.பி அல்ல. அவன் ஒன்டாரியோ காவல்துறையைச் சேர்ந்தவன். வருணின் அதிகாரம், மாகானம் சார்ந்தது. ஏற்றமாதிபனின் அதிகாரம் கனடா முழுவதுக்குமானது. வருணின் தொழிலில் ஆபத்துகள் குறைவு; ஆனால் ஏற்றமாதிபனின் குழு மிகுந்த ஆபத்தானது, அவர்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை.

இதில் வருண், அழகான பெண்களைக் கண்டால், வழிவது ஆணுக்கு இலக்கணம் என்று நினைக்கும் இரகம். ஏற்றமாதிபனுக்கு அது சுட்டுப்போட்டாலும் வராது; எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஓர் அடி தள்ளி நின்றே பேசுவான். அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுப்பதோடு விலகிவிடுவான். அப்படிப்பட்டவன், வருணின் திடீர் ஆசைக்கு எப்படித் துணை போவான்?

தன் நண்பனின் முகத்திலிருந்த கோபத்தைக் கண்டதும்,

“சரிடா… ஐ அம் சாரி… இனி இப்படிச் செய்ய மாட்டேன்… போதுமா?” என வருண் சமாதானப் படுத்தினாலும், உள்ளுக்குள்ளே அவனை வறுத்து எடுக்கத் தவறவில்லை. ‘தானும் வாழமாட்டான், மற்றவனையும் வாழ விடமாட்டான்!’ – பற்களைக் கடித்தவன் திரும்பி விதரணையை விழிகளால் தேட, அவளோ இவர்களைக் கடந்து அதிக தூரம் சென்றுவிட்டிருந்தாள்.

மேடை ஏறி, மணமகள் மணமகன் அருகே நின்றதும், கையிலிருந்த விளக்கை பத்திரமாக அங்கிருந்த பெரியவர் ஒருவரின் கரத்தில் கொடுத்து விட்டு அங்கிருந்து விலகப் போக, ஒரு கரம் அவள் கரத்தைப் பற்றி நிறுத்தி மணமக்களுக்கு அருகே நிற்க வைத்தது. வேறு யார், வசந்தாதான்! பின்னால் வந்திருந்த அத்தனை பேரையும் மணமக்களுக்கு அருகே நிற்க வைத்துப் புகைப்படத்திற்கு ‘போஸ்’ கொடுக்கச் சொல்லிவிட்டு விலகிய வசந்தா, மேடையின் முனைக்கு வந்து, சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஏற்றமாதிபனைப் பார்த்து,

“ஆதிபன்…” என்றார் சற்றே உரத்த குரலில். அந்தக் குரலில் இவள் மெல்லிய தேகம் தூக்கிப் போட்டது.

‘ஐயோ… இப்போது எதற்கு அவனை இங்கே அழைக்கிறார்?’ – கோபமாக நினைத்தாலும், புகைப் படத்திற்குத் தயாராக இருந்ததால் அவளால் எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், விழிகள் மட்டும் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி ஏற்றமாதிபனை நோக்கிப் பயணிக்கவே செய்தது.

அதேநேரம், வசந்தா அழைப்பதைக் கேட்டவன், அருகே நின்ற வருணிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டே அவரை நோக்கி வந்தான்.

அந்த நேரம், புகைப்படக்காரரும் படம் எடுத்து முடித்துவிட்டதாகப் பெருவிரலைத் தூக்கிக் காட்ட, ‘விட்டால் போதும்’ என்று மேடையை விட்டு இறங்க முயன்றாள் விதரணை.

ஏற்றமாதிபன் வசந்தாவை நெருங்கிவிட்டிருந்தான். வசந்தா மேடையில் நின்றிருக்க, ஏற்றமாதிபன் கீழே நின்றிருந்தான். மேடையின் உயரம் ஒன்றும் அத்தனை அதிகமல்ல, மூன்றடி தான் இருக்கும். ஆனாலும், வசந்தாவின் மார்பின் உயரத்திற்கு நின்றிருந்தான் ஏற்றமாதிபன்.

வசந்தா அவனை நோக்கிக் குனிந்து, “டேய்… அம்மா, அப்பாவை வரச் சொல்கிறாயா? சாட்சிக் கையெழுத்தை உன் அப்பாதான் போட வேண்டும்..” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே நகர்ந்தவளுக்கு, அவளையும் மீறிப் பதற்றமாகிப் போனது. ‘இதோ வசந்தாவைக் கடக்கும்போது அவன் வாசனையை நுகர வேண்டும்; அதை உணர்ந்தால் வெட்கம் கெட்ட மனது மீண்டும் அவன் வேண்டும் என்று பேயாட்டம் ஆடும். இல்லை… அவனைக் கடக்கும் வரை மூச்சே எடுக்கக் கூடாது; முதலில் இங்கிருந்து வேகமாகச் சென்றுவிட வேண்டும்…’

அவள் முயற்சி செய்தாலும், அவளோடு சேர்ந்து கீழே இறங்க முயன்றவர்களும் ஒத்துழைக்க வேண்டுமே! இருவர் மட்டும் இறங்கிச் செல்லும் படிகளில் எப்படி முண்டியடித்துப் போவது? இதில் பின்னாலும் முன்னாலுமாக ஆட்கள் இருக்கும் போது அவள் எப்படி விரைந்து ஓட முடியும்?

பற்களைக் கடித்துத் தன் இயலாமையை எண்ணி எரிச்சல் கொண்டவள், அவன் வாசனையை நுகரா வண்ணம் தன் மூச்சை உள் இழுத்துக் கொண்டு வசந்தாவை நெருங்க முயன்றாள். அந்த நேரம், அவளுக்குப் பக்கத்திலிருந்த ஜெயா என்ன நினைத்தாளோ, சட்டென்று விதரணையைத் தள்ளிக்கொண்டு முன்னேறிச் செல்ல, அதை எதிர்பார்க்காத விதரணை சமநிலை தவறித் தடுமாறி, தன்னை நிலைநிறுத்த முயன்று தோற்று, மேடையிலிருந்து கீழே விழப்போன அந்த நொடி…

வசந்தாவுடன் பேசிக்கொண்டிருந்த ஏற்றமாதிபன், ஒரு பெண் அவசரத்தில் விதரணையைத் தள்ளிவிடுவதையும், விதரணை தடுமாறுவதையும் கண்டு, அடுத்த கணம் என்ன நடக்கப்போகிறது என்பதை ஊகித்தவனாகப் பாய்ந்தவன், விதரணை விழப்போகும் இடத்தை நெருங்கிய அதே கணம்… குப்புற விழத்தொடங்கியவளின் இடைபற்றித் தாங்கி, தன் ஆண்மைமிக்க மேனியோடு இறுகப் பற்றி அணைத்துக் கொண்டவன், அப்படியே நறுமண மலரை மென்மையாய் மேசையில் வைப்பது போல, அவளைத் தரையில் இறக்கியும்விட்டான்.

இது ஒரு சில நொடிகளில் நடந்து முடிந்து இருந்தது. ‘இதோ கீழே விழுந்து அத்தனை பேரின் முன்னாலும் மண்ணைக் கவ்வி அவமானப்படப் போகிறோம்’ என்று விதரணை நினைத்திருக்க, அப்படி நடக்காமல் மார்புகள் அவன் முகத்தில் மோத, அவளின் தளிர் தேகமோ அப்படியே கீழிறங்கி அவன் கடிய உடலை உரசி, பாராசூட்டில் இருந்து லாவகமாய்த் தரையைத் தொடுவது போல அவளுடைய கால்கள் தரையில் பதிந்தன. மின்னலாய் நடந்தேறிய அந்த கற்பனைக்கும் எட்டாத காவிய இலக்கிய நயத்தில் தன் மதி கெட்டுப் போனாள் அந்தப் பாவை.

தன்னை மறந்தால் உலகை மறப்பதுதானே இயல்பு; சுற்றம் காணாமல் போவதுதானே மரபு! விதரணைக்கும் அப்படியே! அனைத்தும் மறந்து போனது. தன் கண்முன்னே அவனும் அவளுமாய் பரந்த வானில் கருந்துளையினுள் இழுக்கப்படுவது போல, அவனுடைய அணைப்புக்குள் காணாமல் போன உணர்வோடு, தேகம் சிலிர்க்க அவனை அண்ணாந்து பார்த்தாள்.

அவனும் அவளைத்தான் குனிந்து பார்த்தவாறிருந்தான். அந்தப் பார்வையில் என்ன இருந்தது? அந்த விழிகளில் எந்த உணர்ச்சியுமில்லை; படித்தறிய முடியாத கூரிய விழிகள். ஏழு வருடங்களுக்கு முன்பு அவளைக் கண்டு இளகிப் புன்னகைத்த விழிகளை இப்போது காணோம். மலர்ந்து சிரித்த உதடுகள் இப்போது பிரிக்க முடியாத இரும்புக் கோடுகளாய் ஒன்றை ஒன்று ஒட்டி நின்றிருந்தன. உணர்ச்சிகளற்ற முகம்!

ஆனால், அவனுடைய கரங்கள் மட்டும் அவள் இடையை இன்னும் அழுத்தமாகத்தான் பற்றியிருந்தன. அதில் அவனுடைய வலது கரம் அவளுடைய வெற்று இடையில் தாராளமாகவே படிந்திருக்க, அந்தக் கரத்தில் ஏதாவது மின்சாரம் பாய்கிறதா என்ன? ஏன் இப்படித் தேகம் சிலிர்க்கிறது? இரத்தம் இல்லாதவனுக்கு இரத்த தானம் செய்யும்போது, அந்த இரத்தம் நரம்புகள் வழியோடி அத்தனை உறுப்புகளுக்கும் பாய்வது போல, அவனுடைய கைச்சூடு அவள் இடைவழியே பயணித்துப் பெண்மை என்கிற நரம்பில் ஊடுருவி, இதயம் முதற்கொண்டு புத்தி வரை பாய்ந்து செல்கிறதே! இது என்ன விந்தை? வியந்து நிற்கையில்…

“விதரணை… விதரணை…  என்னம்மா… உனக்கு ஒன்றுமில்லையே…?” – யாரோ பக்கத்தில் அவளை அழைக்க, அவளோ அவர்களின் அழைப்புக் கூடக் காதில் விழாதவளாக அவனைத்தான் இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.

“யூ ஓகே?” – அதுவரை அழுத்திக் கிடந்த அவன் உதடுகள் சற்றுப் பிரிந்து அவளிடம் கேட்க, அதற்குப் பிறகுதான் இமைதட்டி விழித்தாள் விதரணை. அப்போதுதான் பக்கத்திலிருந்தவர்களின் அழைப்பும் உலுப்பலும் அவளுக்குப் புரிந்தது. திடுக்கிட்டு விழித்தவளாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று முன் அவளை அணைத்த வாக்கில் நின்றிருந்த ஏற்றமாதிபன், இப்போது சற்றுத் தள்ளி நின்றிருந்தான்.

‘இவன் எப்போது தள்ளி நின்றான்?’ – குழப்பத்தோடு தன்னை அழைத்த வசந்தாவை மலங்க மலங்கப் பார்த்தாள் விதரணை.

“என்னம்மா ஆச்சு… உனக்கு ஒன்றுமில்லையே?”  அவர் அக்கறையாகக் கேட்க, அப்போதுதான் முழுதாக இந்த உலகத்திற்கு வந்து விழுந்தாள் விதரணை. தன்னை யாரோ தள்ளிவிட்டதும், தான் சுழன்று விழுந்ததும், விழுந்தவளை ஏற்றமாதிபன் இடைபற்றித் தூக்கிக் கீழே இறக்கியதும், அதற்குப் பிறகு ஏதோ மாயலோகத்தில் விழுந்தது போலத் தன்னை மறந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, பதற்றத்தோடு ஏற்றமாதிபனை ஏறிட்டாள். அவனோ தன் கடமை முடிந்தது என்பது போல அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.

மனம் சுட, நிமிர்ந்து வசந்தாவைப் பார்த்தாள். கூடவே அபிநயாவும் பதற்றத்தோடு தன் வருங்காலக் கணவனோடு மேடையின் முனையில் நின்று இவளிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். ‘ஐயோ! அத்தனை பேர் முன்னாலும் இப்படி ஒரு நிகழ்வு நடந்துவிட்டதே’ என்று தன்னையே திட்டியவள், புன்னகையுடன் அவர்களைப் பார்த்துவிட்டு,

“எ.. எனக்கு ஒன்றுமில்லை… கால்… தடுக்கி விட்டது போல… ஐ அம் ஓகே…” என்று அவர்களைச் சமாதானப்படுத்திவிட்டு, “சா… சாரி…” என்றாள் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்கும் முகமாக.

உடனே தன் தோழியை முறைத்த அபிநயா,

“லூசா நீ? நீ விழப்போவதைக் கண்டதும் பதறிவிட்டேன் தெரியுமா! நல்லவேளை அண்ணா வந்து பிடித்துக்கொண்டார். இல்லையென்றால் என்னாகியிருக்கும்? ஒரு விநாடி இதயமே நின்று விட்டது… உனக்கு ஒன்றும் அடிபடவில்லையே…?” என அக்கறையாகக் கேட்க, உள்மனதோ, ‘அவன் பிடித்ததை விடப் பிடிக்காமலே விட்டிருக்கலாம்… அதுதான் மிகவும் வலிக்கிறது…’ என்று தனக்குள்ளேயே முனங்கியவாறு,

“எனக்கு ஒன்றுமில்லை அபி… தயவுசெய்து நீயும் அமலனும் போய் மேடையில் நில்லுங்கள்…” என்று அவளை அனுப்பிவிட்டு, மீண்டும் வசந்தாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத் திரும்பியவளுக்கு இப்போது வியர்த்துக் கொட்டியது.

நடந்த சம்பவம் அவளைப் புரட்டிப் போட்டிருந்தது. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல், தப்பித்தால் போதும் என்பது போல மண்டப அறையை விட்டு வெளியே வந்தவள், அங்கிருந்த நீள் மென் இருக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

மனதோ கடும் குளிரில், பனிக்கட்டியின் மீது வெறுங்காலோடு நிற்பது போல விறைத்துப் போயிருந்தது. கூடவே பெருவிரலில் ‘சுளிர்’ என்று ஒரு வலி பிறக்க, புருவங்களைச் சுருக்கியவாறு சேலையைச் சற்றுத் தூக்கிக் காலைப் பார்த்தாள். அணிந்திருந்த காலணியையும் மீறிப் பெரு விரலின் ஓரம் நகம் பிறழ்ந்து இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. அவள் தடுக்கி விழும்போது மேடையின் ஓரத்திலோ, இல்லை அங்கிருந்த ஆணியிலோ பெருவிரல் பலமாக மோதியிருக்க வேண்டும்.

வலியில் உதடுகள் சுழிய, “ஷ்…” என்கிற முனகலோடு அவள் காயத்தைத் தொடப் போக, சட்டென்று நரம்புகள் ஓடிய ஆண்மைமிக்க மாநிறக் கரம் ஒன்று அவள் கரத்தைப் பற்றியது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்; அது வேறு யாருமில்லை, ஏற்றமாதிபனே!

விழிகள் விரித்து நம்ப முடியாமல் அவனையே வெறித்துப் பார்க்க, அவனோ அவள் முன்னால் ஒற்றைக்கால் மடித்து மண்டியிட்டு அமர்ந்தான். அமர்ந்தவன், அவளுடைய சேலையைச் சற்று மேலே தூக்கிவிட்டு அவள் பாதத்தைப் பார்த்தான். அவள் அணிந்திருந்த மூன்று அங்குலக் குதிக்கால் காலணியிலும் பெருவிரலிலும் இரத்தம். நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன், மெதுவாக அவளுடைய காலணியைக் கழற்ற முயல, அப்போது தான் அவளுக்குச் சுயநினைவே வந்தது.

பதற்றத்தோடு தன் காலை இழுக்க முயல, சட்டென்று அவள் காலைத் தன் கரத்தால் அழுத்திப் பற்றியவன் நிமிர்ந்து பார்வையாலேயே அவளை அடக்க, என்ன மாயமோ மந்திரமோ, அவளால் அதற்கு மேல் காலை இழுத்தெடுக்க முடியவில்லை. அவனையே பார்த்திருக்க, அவள் கால்களைத் தன் கரங்களால் ஒரு மலரை அள்ளி எடுப்பது போலப் பற்றித் தூக்கி, மடித்திருந்த தன் முழங்காலின் மீது பதித்தான். அவன் காலில் பாதம் பட்டதும் அவள் மயிர்க்கால்கள் அனைத்தும் எம்பி நின்றன.

அவளால் சிலிர்ப்பை அடக்கவே முடியவில்லை. நடப்பதை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவள் ஏதாவது கனவு காண்கிறாளா என்ன? வியந்து பார்த்திருக்கையில், அவள் பெருவிரலிலிருந்து வழிந்த இரத்தத் துளி அவன் கரிய நிறப் பேண்டில் விழ,

“ஐயோ… உங்கள் பேண்டில் இரத்தம்…” எனத் தடுமாறினாள்.

அவனோ அவள் தடுமாற்றத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. மாறாகத் தன் பையிலிருந்த வெண்ணிறக் கைக்குட்டையை எடுத்து அவள் பெருவிரல் முனையில் வைக்க, சுளிர் என்று எழுந்த வலியில் “ஷ்… ஆ…” என காலை இழுக்கப் போக, சட்டென்று மறுகரத்தால் அவள் காலை அசையவிடாமல் பிடித்துக்கொண்டு விட்டதைத் தெடர, இவளோ நம்ப முடியாமல் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் எதுவும் பேசவில்லை; ஆனால் அவன் செயல் பேசியது. மிக அக்கறையாக அவளுக்கு வலிக்காமல் துடைத்துவிட்டவன் காயத்தைப் பார்த்தான். பெருவிரலின் நகம் கொஞ்சம் சதையோடு பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அப்படியே இருந்தால் சேலையில் பட்டு இன்னும் வலிக்கும். நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன், மறுகணம் கண்ணிமைக்கும் நொடியில் தொங்கிய அந்த நகத்தைப் பிய்த்து எடுக்க, அவளோ உயிர் போக அலற முயன்றாள். அந்த நேரம் சட்டென்று தன் மறுகரத்தை அவள் வாயில் பொத்தி அவள் சத்தத்தை நிறுத்த, அவளோ பலமான மூச்செடுத்தவாறு அவனை முறைத்தாள்.

இனி அவள் சத்தம் போடமாட்டாள் என்கிற உறுதியில் கரத்தை விலக்கியவன், மீண்டும் உதிரம் கொட்டத் தொடங்கிய பெருவிரலின் மீது தன் கைக்குட்டையை அழுத்தி இரத்தத்தைத் தடுக்க முயன்றவாறு அங்கும் இங்கும் பார்த்தான்.

அந்த மண்டபத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் உள்ளே போய்க்கொண்டிருக்க, “தம்பி…” என்றான் ஏற்றமாதிபன் தன் அழுத்தமான குரலில். அவர் திரும்பிப் பார்க்க, இடது கரத்தைத் தூக்கிச் சுட்டு விரலையும் நடுவிரலையும் மட்டும் உயர்த்தி அவனைத் தன்னை நோக்கி வருமாறு சைகை செய்ய, உடனே அவன் வந்துவிட்டான்.

“சார்…”

“தம்பி… முதலுதவிப் பெட்டியை எடுத்து வருகிறாயா…?” என்று அவன் கேட்க, அவனும் நிலைமை அறிந்து,

“இதோ சார்…” என்றவன் உடனே உள்ளே விரைந்தான். அதற்கிடையில், அதுவரை அழுத்தி இருந்த கைக்குட்டையை விலக்கிப் பார்க்க, இரத்தம் ஓரளவு நின்றிருந்தது. இவளோ இன்னும் அவனைத்தான் முறைத்துக்கொண்டிருக்க, காயத்தைப் பரிசோதித்துவிட்டு நிமிர்ந்து விதரணையைப் பார்த்தான்.

“சாரி… நகத்தை இழுத்து எடுக்கவில்லை என்றால் உன் சேலை பட்டு வலிக்கும்; உன்னால் சரியாக நடக்க முடிந்திருக்காது…” – விளக்கம் சொன்னவன், திரும்பி அந்த ஊழியரைத் தேட, இவளோ பற்களைக் கடித்தாள்.

“அதை முதலிலேயே சொல்லியிருந்தால் நான் கொஞ்சம் தயாராக இருந்திருப்பேனே…” அவள் தன்னை மறந்து குறைபட,

“சொல்லியிருந்தால் உன் உடலை இறுக்கமாக வைத்திருப்பாய். பிடுங்கப்போகிறேன் என்று தெரிந்து

இன்னும் அலறியிருப்பாய்..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிவந்த நிற முதலுதவிப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி வந்தான் அந்த ஊழியர். அதை இவனிடம் நீட்ட, நன்றியுடன் வாங்கிக்கொண்டவன், ஒரு கரத்தாலேயே அதைத் திறந்தான். அவசரத்திற்குத் தேவையான முதலுதவிப் பொருட்கள் இருக்க, அதிலிருந்து ‘ஆல்கஹால் வைப்ஸ்’ ஒன்றை எடுத்து அவளைப் பார்த்தான்.

“கொஞ்சம் எரியும், கத்தாதே…” – அவன் சொன்னவாறு காயத்தின் மீது வைப்பை வைக்க, அடுத்த நொடி, அந்த மருந்தின் எரிச்சலில் முகம் சுருங்கப் பற்களைக் கடித்தவாறு குனிந்தவள், எரிச்சல் தாங்க முடியாமல், அவனது திரண்ட புஜத்தை நகங்கள் பதியும் அளவுக்கு அழுந்தப் பற்றிக்கொண்டாள் விதரணை.

அவனோ, காயத்தைத் துடைத்துத் தொற்று நீக்கி மருந்தைப் போட்டுச் சுத்தம் செய்து, அப்போதைக்கு மேலோட்டமாகப் பஞ்சு வைத்துக் கட்டும் வரை அவன் தோளிலிருந்து அவள் கரத்தை எடுக்கவேயில்லை.

கட்டுப் போட்டு முடித்தவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். வலியில் கசங்கிய சிவந்த முகம்; அவனை நோக்கிக் குனிந்ததால் சற்று விலகிய முந்தானை; அதனூடாகத் தெரியும் பெண்மையின் எழில் வடிவம். பட்டு வயிறு… அதை விழிகளால் அளவெடுத்தவன், மீண்டும் தன் பார்வையை அவள் முகத்தில் நிலைக்கவிட்டான்.

“கட்டி முடித்தாகிவிட்டது… நீ கையை விட்டால் நான் எழுந்து சென்றுவிடுவேன்…” – அவன் சொல்ல, அப்போதுதான் அவனது தோளைத் தான் அழுந்தப் பற்றிக்கொண்டிருப்பதே அவளுக்குத் தெரிந்தது. பதற்றத்தோடு கரத்தை விலக்கியவள்,

“சா.. சாரி… அது..” என முடிக்கவில்லை. வெளியே எடுத்த பொருட்களைப் பையில் அடுக்கி வைத்து மூடியவன், கழற்றி ஓரமாக வைத்திருந்த அவள் காலணியை எடுத்து, அதில் பரவியிருந்த இரத்தத்தயும் துடைத்து, மீண்டும் அவள் பாதத்தில் அணிவித்தான்.

“அதிகம் நடக்காதே. காலுக்கு அழுத்தம் கொடுக்காதே. வீட்டுக்குப் போனதும் ‘பாலிஸ் போரின்’ போடு. தொற்று வராமல் காயம் விரைவில் ஆறிவிடும்…” – சொன்னவன், முதலுதவிப் பட்டியை எடுத்துக்கொண்டு எழுந்தான். அதற்குமேல் எதுவும் பேசாமல் அவன் சென்றுவிட, இவளோ அவன் செயலில் மலைத்துப்போய் நடந்தது கனவா, உண்மையா என்று புரியாமல் குழம்பிக் கொண்டு இருந்தாள்.

பெருவிரலில் எழுந்த வலியும் அதில் இருந்த கட்டுமே நடந்தது உண்மையென்று சொன்னது. அவளால் அதை இன்னும் நம்பவே முடியவில்லை. இப்போது கூட அவன் தீண்டலை உணர்ந்த பாதங்கள் மீண்டும் அந்தத் தீண்டலுக்காக ஏங்கியது. அவன் தனக்குச் சொந்தமில்லை என்று தெரிந்தும் அவனுக்காக ஏங்கும் மனத்தை என்னவென்று சொல்வது? சற்று முன் தான் விழுந்தபோது அவன் தாங்கிப் பிடித்ததும், இடையில் இன்னும் நீடித்திருக்கும் அந்தக் குறுகுறுப்பும் நினைவுக்கு வர, அவன் கரம் பட்ட இடத்தைத் தொட்டுப் பார்த்தாள். பார்த்தவள் அதிர்ந்தாள். சட்டென்று குனிந்து பார்க்க, முந்தானை விலகி முன்னழகு மொத்தமும் காற்றில் காட்சியாகத் தெரிந்தது.

அதிர்ந்து போனாள் அவள். தனது எழில் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்கிற பதற்றத்தில் அவசரமாகச் சேலையை இழுத்துவிட்டாள். முகமோ காரணமின்றிச் சிவந்திருந்தது. ‘அவனை ஈர்க்கவே இப்படி அமர்ந்திருந்தேன் என்று நினைத்திருப்பானோ? சே… சே… நான் என் பாட்டிற்கு இங்கு வந்து அமர்ந்திருந்தேன். அவனாகத்தான் வந்தான், காயத்தைக் கண்டு கட்டும் போட்டான்… இதில் என் தவறு என்ன இருக்கிறது?’ எனச் சமாதானம் செய்தாலும், மனம் மீண்டும் மீண்டும் அவனிடமே உழன்று கொண்டிருந்தது.

அந்த நேரம் அவள் கவனத்தைக் குலைப்பது போல, ‘ஹாய்…’ என்கிற சத்தம் சற்றுத் தொலைவில் இருந்து கேட்க, அதுவரை ஒரு மாய உலகத்தில் இருந்தவள் சத்தம் வந்த திசையை நோக்கினாள். அங்கு மிக அழகான, கம்பீரமான இளைஞன் ஒருவன் இவளையே பார்த்தவாறு நின்றிருந்தான்.

What’s your Reaction?
+1
21
+1
2
+1
3
+1
3
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில்,…

11 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும்…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 15/16

(15)   ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 14

(14) பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன். “அக்கா... எத்தனை நேரமாக…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 13

(13) மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 12

(12)   அங்கே சற்றுத் தள்ளி வருண் நின்றிருந்தான். அவனை மண்டபத்தில் எங்கோ பார்த்த நினைவு வர, அவசரமாகச் சேலையைச்…

2 weeks ago