Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 12

(12)

 

அங்கே சற்றுத் தள்ளி வருண் நின்றிருந்தான். அவனை மண்டபத்தில் எங்கோ பார்த்த நினைவு வர, அவசரமாகச் சேலையைச் சரியாக்விட்டு அமர்ந்தவள், அவனை ‘என்ன?’ என்பது போலப் பார்த்தாள். அவனோ புன்னகையுடன் அவளை நெருங்கி, தன் கரத்தை நீட்டி,

“ஹாய்… ஐ அம் வருண்…” என்றான்.

அவனை யோசனையுடன் பார்த்தவாறே, “ஹாய் வருண்…” என்றவள், அவன் நீட்டிய கரத்தில் தன் கரத்தை வைத்து மெதுவாக அழுத்திவிட்டு விலக்கிக் கொண்டாள். அவன் மெல்லிய புன்னகையுடன், அவளுக்குப் பக்கத்து இருக்கையைக் காட்டி,

“நான் இங்கே உட்காரலாமா?” என்று அனுமதி கேட்க, அவன் காட்டிய இடத்தைப் பார்த்துவிட்டு உதடுகளைப் பிதுக்கியவள்,

“வை நாட்?” என்றாள்.

அவள் அனுமதி கிடைத்ததும், அமர்ந்த கொண்டவன், அவளை ஆவலுடன் பார்த்த,

“யூ ஆர் விதரணை.. ரைட்?” என்றான் அவளைக் குறுகுறு என்று பார்த்தவாறு.

சும்மா சொல்லக் கூடாது அவள் அழகு தேவலோகத்து இரம்பை போலத்தான் இருக்கிறது. இவளை மணம் முடிப்பவன் நிச்சயமாக அதிர்ஷ்டசாலியாகத்தான் இருப்பான். நினைக்கும் போதே இவளடைய விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. என்னுடைய பெயர் இவனுக்கு எப்படித் தெரியும்? குழம்பியவளாக,

“என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்?”  வியந்து கேட்டாள் அவள்.

“அது… வந்து… ஆ… அபிநயா… உங்களை விதரணை என்று அழைக்கும்போது காதில் விழுந்தது” என வருண் அசடு வழிய, அதைக் கேட்டு ‘ஓ..’ என்றவள், “நீங்கள் அபிநயாவுக்கு யார்?” என்றாள் புருவங்களைச் சுருக்கி. அவளுக்குத் தெரிந்து அவனை அபிநயாவின் வீட்டில் வைத்துப் பார்த்த நினைவில்லை.

“ம்… நீங்கள் என்னை அதிகம் பார்க்க வாய்ப்பில்லைதான். அமலனோட அண்ணா கமலன், ஏற்றமாதிபன் நான் என்று மூவரும் ஒரே பாடசாலையில் ஒன்றாகத்தான் படித்தோம். நான் இருப்பது பிராம்டன் என்பதால், அடிக்கடி அபிநயா விட்டிற்கு வர முடிவதில்லை. அதனால் நீங்கள் என்னைப் பார்த்திருக்க மாட்டீர்கள்” என்று அவன் சொல்ல, ‘ஓ…’ என்றவள் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள். ஆனால் வருணுக்கு அவளுடன் பேசவேண்டிய கட்டாயம். அதுவும் வாடியிருந்த அவள் முகத்தைக் கண்டு,

“ஆர் யூ ஓகே விதரணை?” என்று அவன் அக்கறையாகக் கேட்க, இவளோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஏன் கேட்கிறீர்கள்?” – இப்போது அவள் முகத்தில் மெல்லிய எரிச்சல் தெரிந்தது.

“இல்லை… நிச்சயதார்த்தத்திற்கு வந்துவிட்டு இங்கே தனியே அமர்ந்திருக்கிறீர்களே! முகம் வேறு வாடியிருக்கிறது… அதுதான் கேட்டேன்.” அவன் சொல்ல மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தாள் விதரணை.

“தனியே இருந்தால், ஏதாவது பிரச்சனை என்று அர்த்தமா? யார் சொன்னா?” அவள் கிண்டலாகக் கேட்க, இப்போது சிரிக்கும் முறை வருணுடையதாயிற்று.

“ஊப்ஸ்.. நைஸ் நோஸ் கட்…” சொன்னவனின் விழிகள், அவனையும் மீறி அவளை இரசனையுடன் பார்க்க அந்த இரசனை விதணைக்கு ஒருவித ஒவ்வாமையைக் கொடுத்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“ஏதாவது என்னிடம் சொல்லவேண்டுமா?” அவள் கேட்க, சற்றுத் தயங்கியவன்,

“உங்கள் தோழிக்குத் திருமணம் நடக்கப் போகிறது; உங்களுக்கு எப்போது?” என்றான் அவளையே பார்த்தவாறு. அதைக் கேட்டதும், இப்போது இவள் முகத்தில் எரிச்சல் வெளிப்படையாகவே தெரிந்தது. அதே எரிச்சலோடு அவனைப் பார்த்தவள்,

“ஏன்.. அபிநயா திருமணம் முடித்தால் நானும் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன?” என்று அவள் கிண்டலாய்க் கேட்க, அழகாகச் சிரித்தவன்,

“இல்லையா பின்னே? ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்றாயிற்றே! அதுதானே அவளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது…” என்று கூற, நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தாள் விதரணை.

“யார் சொன்னது இதை? அப்படி எந்தப் பெண்ணுக்கும் இன்னொருவனின் தயவில் வாழ வேண்டிய அவசியமில்லை. எத்தனை பெண்கள் திருமணமே இல்லாமல் கடைசி வரை வாழ்கிறார்கள்!” – அவள் மறைக்காத கோபத்துடன் அவனிடம் சொல்ல, அவனோ பதற்றமானவன் போல,

“ஹே… ரிலாக்ஸ்… அப்படியில்லை, சும்மா உங்களுக்குத் திருமதணத்தில் ஆர்வம் இருக்கிறதா என்று அறிய ஆசைப்பட்டுக் கேட்டேன் தயவுசெய்து தப்பாக நினைக்காதீர்கள்…” என்றான். இப்போது எரிச்சலோடு அவனை ஏறிட்டாள் அவள்.

அவள் விழிகளைப் பார்க்கத் தயங்கி அவன் விழிகளைத் தாழ்த்துவதைக் கண்டதும் இவளின் உதட்டில் மெல்லிய ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது. என்ன நினைத்தாளோ, சாய்வாக அமர்ந்து தன் காலுக்கு மேல் காலைப் போட்டுக் கரங்களைக் கோர்த்தவாறு மடியில் வைத்தவள், தன் அருகே அமர்ந்திருந்தவனை அழுத்தமாகப் பார்த்தாள்.

அவனுடைய பார்வையில் தெரிந்த எதிர்பார்ப்பும், அதையும் தாண்டிய இரசனையும் அவளுடைய இலகுத் தன்மையைக் கொன்றுவிட, முகம் இறுகத் தன் மடியில் கோர்த்திருந்த கரங்களை ஒரு விநாடி வெறித்துவிட்டு நிமிர்ந்து வருணைப் பார்த்தாள்.

“டூ யூ லைக் மீ?” – அவள் நேரடியாகக் கேட்க, ஒரு கணம் அதிர்ந்துதான் போனான் வருண். இப்படி அவள் நேரடியாகக் கேட்பாள் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. பதில் சொல்லத் தயங்கிவிட்டு,

“அதில் தவறு இருக்கிறதா?” என மறுக்காமல் கேட்டான். அதைக் கேட்டுப் புருவங்களைச் சுருக்கியவள்,

“தவறில்லைத்தான்… ஆனால்…” என்று அவள் பதில் சொல்ல முயன்ற நேரம்…

“வருண்…” என்கிற அழுத்தமான, ஆழமான, அதிகாரமான குரல் ஒன்று பின்னாலிருந்து வந்தது. அதுவரை விதரணையை ஒருவித ஆர்வத்துடன் விழிகளால் இரசித்துக் கொண்டிருந்த வருண், ஏற்றமாதிபனின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்தான்.

அங்கே ஏற்றமாதிபன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கரங்களை நுழைத்தவாறு அழுத்தமாக வருணையே முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். அந்தப் பார்வையில் அவன் ஒன்றும் அலறியடிக்கவில்லை. அந்த முறைப்புக்குப் பயப்பட இது ஒன்றும் காவல்துறையல்லவே. அதனால்,

“ஹாய் ஆதிபன்…” என்று அவன் சொல்ல, ஏற்றமாதிபனோ வருணை விறைப்புடன் பார்த்து,

“என்ன செய்கிறாய்?” என்றான் அடுத்து.

வருணோ இலகுவாக அமர்ந்தவாறு,

“என்னடா கேள்வி இது?” என்றவன் விதரணையை இரசணையாகப் பார்த்தவாறு “பார்த்தால் தெரியவில்லை… விதணையோடு பேசிக் கொண்டு இருக்கிறறேன்…” என்றுவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்து, “அப்போது சொன்னேனே… அதற்கு முயற்சி செய்கிறேன்…” என்றான் ஒரு மாதிரி. அதைக் கேட்டதும் ஏற்றமாதிபனின் முகம் இறுகிக் கறுத்துப் போனது. அந்த இறுக்கத்தோடு திரும்பி விதரணையைப் பார்க்க, அவளோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அவனையும் அந்த வருணையும்தான் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ஏற்றமாதிபனுக்கு வருணின் பேச்சு சுத்தமாகப் பிடிக்கவில்லையோ ஒருவித இறுக்கத்தோடு, நிதானமான நடையோடு வருணை நெருங்கியவன் அவனை அழுத்தமாகப் பார்க்க, அந்தப் பார்வையில் என்ன இருந்தது? கோபம்? சீற்றம்? எரிச்சல்? இல்லையெனில் பகைவரைக் கண்டதும் தோன்றும் கொல்லும் வெறியா? தெரியவில்லை. ஆனால், அந்தப் பார்வைக்குப் பின்னால் தெரிந்த அகோரத் தாண்டவத்தைக் கண்டுகொண்ட வருணுக்கு, அடிவயிற்றில் ‘சுளீர்’ என்கிற பயப்பந்து ஒன்று எழுந்து நெஞ்சில் குந்தாணியாக அமர்ந்துகொண்டது.

அவனுக்கு ஏற்றமாதிபனின் அந்தப் பார்வைக்கான விளக்கம் நன்றாகவே தெரியும். அது அவன் எதிரிகளை நெருங்கும்போது வெளிக்காட்டும் பார்வை! அந்தப் பார்வையின் எச்சரிக்கையை மீறினால் விளைவு பயங்கரமாக இருக்கும் என்பதை அனுபவத்தின் ஊடாகத் தெரிந்து கொண்ட வருணுக்கு, ஏன் அவன் தன்னை அப்படிப் பார்க்கிறான் என்பதற்கான காரணம் புரிந்தாலும், தன் பயத்தைக் காட்டாமல் உள்ளே மறைத்தவனாக திடமாகவே தன் நண்பனைப் பார்த்தான்.

அவன் அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? கண்ணுக்கு அழகாக, கருத்தைக் கவரும் வகையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறான்; அது பெரிய குற்றமா? பேச்சுக் கொடுத்துப் பழகினால்தானே அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? புரிந்தால்தானே அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும்? ஆனால், அவனுடைய அவஸ்தை ஏற்றமாதிபனுக்குப் புரிந்தால்தானே! இப்போது திரும்பி விதரணையைப் பார்த்து,

“நீங்கள் சொல்லுங்கள் விதரணை… உங்களுக்கும் அபிநயாவுக்கும் இடையில் எத்தனை காலப் பழக்கம்…” சுவாரசியம் போலக் கேட்க ஏற்றமாதிபனின் கொதிநிலை வேறு படிநிலைக்குச் செல்லத் தொடங்கியது. அதன் விளைவாக பற்களைக் கடித்தவன்,

“உள்ளே உன்னைத் தேடுகிறார்கள் வருண்…” என்றான் ஏற்றமாதிபன் மறைக்காத எரிச்சலோடு. அதைக் கேட்டதும் திரும்பி நண்பனைப் பார்த்த வருண்,

“யார் அழைத்தார்கள்?” என்றான் அடுத்து. இவனோ பொறுமையிழந்து ஆழ மூச்செடுத்து விட்டு,

“ஆன்டி கூப்பிட்டார்கள்…” என்றான் சீற்ற மூச்சோடு.

“அம்மாவா? இருக்காதே… அம்மா ஏன் என்னை அழைக்கவேண்டும்…” – அவன் முடிக்கவில்லை.

“வருண்…” என்றான் எற்றமாதன் கடுமையாக. ஏனோ அவனால் வருணும் விதணையும் பக்கத்துப் பக்கத்தில் அமர்ந்து பேசுவதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அவனையும் மீறி ஒருவித ஒவ்வாமை, இல்லை பொறாமை அவனை ஆட்டு விக்க, வருணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றான் அவன்.

இதற்கு மேல் ஏதாவது பேசினால் அத்தனை பேருக்கு முன்பாக அடித்தாலும் அடித்துவிடுவான்; அதுவும் இந்த அழகிக்கு முன்பாக! ம்கூம்… கட்டுப்படியாகாது.

வேறு வழியில்லாமல் எழுந்தவன், தன் நண்பனை நெருங்கி,

“நீ வைக்கோல் பட்டறைப் போர்நாய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றான் எரிச்சலாக. அதைக் கேட்டுப் புரியாமல் ஏற்றமாதிபன் வருணப் பார்க்க, “கூகுளில் தேடிப்பார், அர்த்தம் புரியும்…” என எரிச்சலுடன் சொல்லிவிட்டு விதரணையிடம் விடைபெற முயன்றான். ஆனால், சட்டென்று அவனுக்கும் விதரணைக்கும் இடையில் வந்து நின்று, அவளை அவனுடைய பார்வையிலிருந்து மறைத்து,

“உன் அம்மாதான் தேடுகிறார்கள் என்று சொன்னேனே… பிறகு ஏன் தாமதிக்கிறாய்?” என்று அப்பட்டமான எரிச்சலோடு சொல்ல, தன் நண்பனை முறைத்தான் வருண்.

‘ம்கும்… இதிலொன்றும் குறைச்சலில்லை. தானும் அனுபவிக்க மாட்டான், மற்றவர்களையும் அனுபவிக்க விடமாட்டான்… சாடிஸ்ட்!’  – எரிச்சலுடன் முணங்கியவாறே, நண்பனைப் பார்த்து, “சரிடா… பார்க்கவில்லை… போதுமா?” என்று சொல்லிவிட்டு நண்பனைத் தாண்டிச் சென்றவன், ஏற்றமாதிபன் நிம்மதி மூச்சு எடுத்து விடுவதற்குள், சட்டென்று நின்று திரும்பி, விதரணையைப் பார்த்து ஒரு கரத்தைத் தூக்கி அசைத்து, அழகாய் புன்னகைத்து

“பாய் விதரணை… பிறகு நாம் இருவரும் தனியாகச் சந்திக்கலாம்…” என்று புன்னகையுடன் சொல்ல, அவனைத் திரும்பி விழிகளால் எரித்தான் ஏற்றமாதிபன். வருணோ தன் நண்பனை ‘சரிதான் போடா…’ என்பது போலப் பார்த்துவிட்டு உள்ளே செல்ல, இப்போது திரும்பி விதரணையை வெறித்தான் ஏற்றமாதிபன்.

“வருண் உன்னிடம் என்ன சொன்னான்?” கேட்டான் கோபமும் எரிச்சலுமாக. அதைக் கேட்டவள், அவனை அலட்சியமாகப் பார்த்து விட்டுத் தலையைத் திருப்பிக் கொள்ள. இப்போது ஏற்றமாதிபனின் விழிகள் அமர்ந்திருந்தவளின் நிலையை மேலிருந்து கீழாக ஒரு விநாடி அழுத்தமாக ஏறிட்டன. அவள் அமர்ந்திருந்த விதத்தில் பெண்மையின் செழிப்பு அப்பட்டமாகக் கண்களுக்கு விருந்தாகத் தெரிய, தங்கத்தில் வார்த்த இளம் வயிறும் இடையும் ‘என்னையும் கொஞ்சம் கவனியேன்’ என்று அவனுக்கு அழைப்பு விடுத்தன. இப்படிக் கவர்ச்சியாக அமர்ந்திருந்தால் சும்மா போகிறவனும் வந்து பேச்சுக்கொடுக்கத்தான் செய்வான்!

பற்களைக் கடித்தவன்,

“நிச்சயதார்த்தம் இங்கேயா நடக்கிறது?” எனப் பொறுமையிழந்து கேட்டான் ஏற்றமாதிபன். அவளோ எரிச்சலோடு திரும்பி அவனைப் பார்த்து விட்டு மீண்டும் முகத்தைத் திருப்ப, “உன்னைத் தான் கேட்கிறேன்.. இன்னும் உள்ளே செல்லாமல் இங்கே என்ன செய்கிறாய் விதரணை? இப்படி அமர்ந்திருந்தால் போகிறவன் வருபவன் எல்லாம் பேச்சுக்கொடுக்த்தான் செய்வான்..” என்று தனக்குள் அவன் முணுமுணுக்க, இவளோ திரும்பி அவனை வெறித்துப் பார்த்தாள்.

“நான் எங்கே இருந்தால் உங்களுக்கு என்ன?” என அடக்கி வைத்த எரிச்சலுடன் கேட்க, அவனோ,

“கவனம் சிதறுகிறதே… என்ன செய்வது?” என்றான் பார்வையால் அவள் எழிலை அலசியவாறு.

ஆனால் அது அவளுக்கு உறைக்கவேயில்லை. எப்போதும் சேலை கட்டிப் பழகியவர்களுக்கு இயல்பாகவே அதை சரிசெய்யத் தெரிந்திருக்கும். ஆடிக்கொருக்கா, அமாவாசைக்கு ஒருக்கா என்று சேலை கட்டும் இளம் பெண்களுக்கு சேலை எத்திசை விலகினாலும் அது புத்திக்கு உறைப்பதில்லையே. அதுவும் அவன் விழிகளால் அவள் மேனியை வெறித்துப் பார்ப்பது கூட அவளுக்குப் புரியவில்லை. அந்தளவுக்கு அவன் மீது கோபம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

அதற்குமேல் அங்கிருந்தால், ஏதாவது எரிச்சலில் வார்த்தைகளை விட்டுவிடுவொமோ என்று அஞ்சி யவள், அவனைப் பார்க்கப் பிடிக்காமல் எழுந்து அவனைக் கடந்து செல்ல முயல, சட்டென்று அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான் ஏற்றமாதிபன். அதில் அதிர்ந்து அவனைப் பார்த்தவள், தன் கரத்தை உதற முயல, மறுகணம் அவளைத் தன்னை நோக்கி இழுத்திருந்தான் அவன். அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது மோதி நின்றவள் அதிர்ந்து விலகி,

“வாட்… த xxxx ஆர் யூ திங்கிங்?” எனச் சீறலாகக் கேட்க, அவனோ அவள் விழிகளையே பார்த்தவாறு,

“யெஸ்… தட் இஸ் வாட் த xxxx ஐ அம் திங்கிங்!” என்று சீறியவன், மீண்டும் அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு, “ஒரு அந்நிய ஆணோடு அமர்ந்து பேசும்போது ஆடைகளில் கவனம் செலுத்த மாட்டாயா? முதலில் சேலையைச் சரியாக்கு!” என்றான் கடும் சீற்றமாக. அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள் தன்னையும் மறந்து குனிந்து பார்க்க அங்கே முன்னெழில் அழகுரச் சிற்பமாய் தெரிவதைக் கண்டு கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.

கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் விலகி இருக்கிறது என்று அதைச் சரியாக்கினாள். ஆனால், அந்த ‘டிஷ்யூ’ சேலை திரும்பத் திரும்ப உருண்டு ஒதுங்கித்தான் திருவேன் என்று அவள் எழிலை எகிறிக் காட்டிக் கொண்டிருந்தால் அவளும்தான் என்ன செய்வாள். ‘கடவுளே, அந்த வருணின் முன்னால் இப்படியா நின்று தொலைத்தேன்?’ ஒரு வித சங்கடத்தோடு, அவசரமாக முந்தானையை இழுத்துவிட்டு, இடையில் இறங்கியிருந்த சேலையைச் சரியாக்க முயன்றாள். அவளுடைய பதற்றத்திற்குச் சேலை ஒத்துழைக்க மறுத்தது. கையில் சிக்க வேண்டிய கரைப்பகுதியை விடுத்து, இடையில் செருகிய சேலைதான் கையில் சிக்கியது. அவசரமாக இழுத்துப் பார்த்தவளுக்கு எரிச்சல் வர, பதற்றமாக நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு அவளையே பார்த்தவாறு நின்றிருந் தான். அவன் அங்கில்லாமல் சென்றிருந்தாலாவது சுலபமாகச் சேலையைச் சரிசெய்திருப்பாள். அவனது வீரியமிக்க கண்கள் அவளை முறைக்கவும், அவளுடைய கரங்கள் சரியான முறையில் ஒத்துழைக்க மறுத்தன.

அவள் பதற்றத்தை அவன் உணர்ந்துகொண்டான் போல! இதில் கால் பெருவிரலில் ஏற்பட்ட வலியில் அவள் நிற்க முடியாமல் தடுமாறுவதையும் கண்டவன், என்ன நினைத்தானோ சட்டென்று அவளை நெருங்கி நின்றுகொண்டான்.

அவன் நெருக்கம் கொடுத்த தவிப்பில் பதறி இரண்டடி பின்வைக்க அவள் முயன்ற நேரம், பின்னாலிருந்த சோபா அவள் கால்களைத் தட்டிவிட, பின்னால் சரிய முயன்றவளின் முள்ளந்தண்டின் முடிவில் தன் உள்ளங்கையை அழுத்தித் தாங்கிக் கொண்டான் ஏற்றமாதிபன். அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ அவளைத் தன்னை நோக்கி இழுத்து, அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்தவாறே, நிதானமாகத் தன் வலது கரத்தை அவளுடைய முதுகுப்புறமாக எடுத்துச் சென்றான். கீழே இறங்கியிருந்த சேலையின் கரையோரத்திற்குள் சுட்டுவிரலை இறக்கி, நடு விரலின் துணை கொண்டு சேலைக்கரையைப் பற்றியவாறு மேலே இழுத்துக்கொண்டே இடை முதல் வயிறு வரை கொண்டுவந்து தேன்சிந்தும் பட்டு இடையினதும் வயிற்றினதும் மென்மையை விரல்களால் உரசி உணர்ந்தவாறு சேலையைச் சரியாக்கிவிட்டான். அவனுடைய அந்த செயலில் அதிர்ந்தவள், அவன் கரம் பட்டதால் சிலிர்த்த தேகத்தை உணர்ந்து பதறி அவனைத் தள்ளிவிட்டுத் திரும்பிப் போக முயல, சட்டென்று அவன் கரத்தில் சிக்கிக் கொண்டது அவளுடைய முந்தானை.

அதை உணர்ந்து பதறித் திரும்பிப் பார்க்க அவனோ மெதுவாக அவள் முதுகை நோக்கி நெருங்கி வந்தான். அவனுடைய மார்பின் சூட்டை உணர்ந்து கொண்டவளுக்கு, இதயத்தின் துடிப்பைக் காதுகள் கேட்டன. தன்னை மீறி எச்சில் கூட்டி விழுங்கியவள், அவன் செயலுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் தவித்து நிற்கையில், இன்னும் அவளை நோக்கி நெருங்கியவன், அழகாய் மடித்து, ஜாக்கட்டோடு பின் குத்தியிருந்த சேலை முந்தானையில் கைவைக்க, அவன் விரல்கள் தோளில் தீண்டிய இடத்தில் சட்டென்று மலர்ந்த பூக்களால் சிலிர்த்துப் பொனாள் விதரணை.

தன்னையும் மறந்து விழிகளை மூடியவளுக்கு அப்படியே தன் தேகம் உருகிக் கரைவதை உணர்ந்து வெட்கித்தான் போனாள்.

என்னதான் அவன் மறுப்பில் நொறுங்கிப் போயிருந்தாலும், அதையும் தாண்டி அவனுடைய நெருக்கத்தை அவள் உள்ளமும் தேகமும் ஏற்றுக் குழைந்து போகிறதே. இந்தக் கொடுமையை என்ன வென்று சொல்வாள்.

அவள் தவித்து நிற்கையில், எற்றமாதிபனின் கரம் ஜாக்கட்டோடு முந்தானை குத்தப்பட்டிருந்த ஊசியை உணர்ந்து அதை மெல்ல அவிழ்க்க, அதுவரை அழகாய் மடித்திருந்த முந்தானை எந்த சிரமமுமின்றி மடிப்புக் கலைந்து கீழிறங்க, தேர்ந்த அனுபவம் வாய்ந்தவன் போல, அவள் முந்தானையின் முனையைப் பற்றிச் சரியாக ஜாக்கட்டோடு சேர்த்துப் பின் குத்திவிட்டுத் தன்னையும் மறந்து விரல்களால் அவள் முதுகை மென்மையாக வருட, உடலில் அத்தனை அணுவும் மயங்கியவளாய் உருகிப் போனாள் விதரணை. அவன் விரல்கள் தொட்ட இடமெல்லாம் குறுகுறுக்க, உள்ளே இழுத்த மூச்சை வெளிவிட மறந்தவளாக சிலையென அவள் நின்றிருக்க, இப்போது அவளை விட்டு விலகியவன்,

“இப்போது உள்ளே போ… விதரணை” என்றான் அவன் எந்த உணர்வும் குரலில் காட்டாமல்.

இவளும் எதுவும் பேசாமல், பேசத் தோன்றாமல், இயக்கத்தை இழந்த இயந்திரப் பெண் போல மண்டபத்தை நோக்கி நகரத் தொடங்கிய நேரம்,

“விதரணை..” என்று அழைத்தான் ஏற்றமாதிபன். அதே மந்த நிலையோடு நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தை ஒரு விநாடி இமைக்காமல் பார்த்தவன், மெதுவாக அவளை நெருங்கி வந்தான். நெருங்கியவனை எதுவும் பேசாமல் அண்ணாந்து பார்த்தாள் விதரணை. இரு விழிகளும் ஒரு விநாடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ள, ஒரு பெருமூச்சோடு,

“இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி உன்னுடன் பேசியவன்… அவன் என் நண்பன்… நண்பன் என்பதை விட அவனும் காவலதிகாரிதான்…” என்றான் நிதானமாக.

அதுவரையிருந்த மந்த நிலை மாறி, ‘இதை ஏன் என்னிடம் சொல்கிறாய்?’ என்பது போல அவனைப் பார்க்க, “அவன் உனக்கு ஏற்றவன் அல்ல விதரணை…” என்றான் சற்று அழுத்தமாக.

இவன் என்னதான் சொல்ல வருகிறான்? சுத்தமாகப் புரியவில்லை அவளுக்கு. அதனால் எதுவும் சொல்லாமல் அவனை அழுத்தமாகப் பார்க்க அவனோ சீற்றமாய் ஒரு மூச்செடுத்துவிட்டு, தான் சொல்ல நினைப்பதை எப்படி அவனிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து உதடுகளைக் கடித்து நின்வன் பின் ஆழ மூச்செடுத்து,

“அவனுக்கு உன் மீது…” என்றான் மேலும் தயங்கியவனாக. அவனுக்கு எப்படி அந்த வசனத்தை முடிப்பது என்று புரியவில்லை போல. ஒரு விநாடி குழம்பி நின்றவன், பின் அவளை அழுத்தமாகப் பார்த்து, “அவனுக்கு உன் மீது ஆர்வம் வந்திருக்கிறது. தன் வாழ்க்கைத் துணையாக உன்னை அடைய ஆசைப்படுகிறான்… ஆனால் இது சரிவராது விதரணை… அவனை விட்டு கொஞ்சம் ஒதுங்கியே நின்றுகொள்… அது உனக்குத்தான் நல்லது…” என்று அவன் சொல்ல, இப்போது விதரணையின் உதட்டில் ஏளனப் புன்னகை ஒன்று மலர்ந்தது. அதுவரையிருந்த சிலிர்ப்பு மொத்தமாகக் காணாமல் போயிருக்க உதடுகளில் ஒரு நக்கல் சிரிப்போடு,

“ஓ… ரியலி?” என்றாள். இப்போது மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டிக்கொண்டு, அவனை அழுத்தமாக, அதே நேரம் சீற்றம் நிறைந்த விழிகளுடன் பார்த்து, “நான் யாரோடு பேசுகிறேன், யார் என்னோடு பேச வருகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்படவோ, மேற்பார்வை பார்க்கவோ உங்களுக்கு நான் அதிகாரம் தந்தது போல நினைவில் இல்லையே மிஸ்டர் ஏற்றமாதிபன்… அது உங்கள் வேலையும் இல்லை என்று நினைக்கிறேன். என் விஷயத்தில் தலையிட யாருக்கும்… குறிப்பாக உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை… அதனால்… உங்கள் வேலையை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்! என் விஷயத்தில் தலை இடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டுச் சட்டென்று மண்டபத்திற்குள் நுழைய, ஏற்றமாதிபன் ஒரு பெருமூச்சோடு தன் இடது கரத்தால் பிடரியில் அடர்ந்து வளர்ந்த முடியை அழுந்த வருடிக் கொடுத்தான்.

முகம் இறுகிப்போயிருந்தது. உள்ளே ஏதேதோ உணர்வுகள் அவனை ஆக்கிரமித்தன. அதை வெளிப்படுத்தும் வகை தெரியாமல், தன் தடித்த இறுகிய கீழ் உதட்டை மேற்பற்களால் அழுந்தக் கடித்து அடக்க முயன்றான். பின் முடியாமல் ஆழமாக ஒரு மூச்சை எடுத்து, உதடுகளைக் குவித்து வெளிவிட்டவாறு திரும்பி மண்டபத்தைப் பார்த்தான். விதரணை அவன் கண்ணை விட்டு மறைந்துவிட்டிருந்தாள். ஆனாலும் உள்ளே போக மனமில்லாமல், வெளியே வந்து வெளிக்காற்றைச் சுவாசித்தான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு… குட்டியாய், அப்போதுதான் சிறகடித்துப் பறக்கத் தயாரான புறாக்குஞ்சாய் அவன் முன்னால் நின்றிருந்தாள். விழிகளில் கனவு மின்ன அவனைப் பார்த்திருந்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள். அவள் விழிகளில் கனவு இருந்தது; ஆசை இருந்தது; ஏதோ யாரும் பார்த்தறியாத அற்புதத்தைப் பார்த்தது போல அந்த விழிகளில் ஆச்சரியம் இருந்தது. அந்த ஆச்சரியம் கொஞ்சம் கூடக் குறையாமல், “என்னைப் பிடித்திருக்கிறதா?” என்று கேட்டபோது, அவளது மௌனம் “ஆம்” என்றது. அந்த அழகும் குழந்தைத்தனமும் இதோ இந்த விநாடி வரை அவன் மறக்கவில்லை. அப்படியே மணிரத்தினம் இயக்கிய திரைப்படத்தின் காட்சியாய் அவன் மனதிற்குள் பதிந்துவிட்டிருந்தது.

அன்று விழிகளில் மின்னிய ஆச்சரியமும் பேருவகையும் இப்போது அவள் விழிகளில் சுத்தமாக இல்லை. மாறாகக் கோபம், வெறுப்பு, ஏமாற்றம் எனப் பலவகை உணர்வுகளோடு அவனைப் பார்க்கிறாள். அந்தப் பார்வை அவனைக் கொல்லாமல் கொல்கிறதே! என்ன செய்வான்? வேதனையோடு அங்கிருந்த தூணில் சாய்ந்து நின்றுகொண்டான் ஏற்றமாதிபன்.

What’s your Reaction?
+1
23
+1
6
+1
4
+1
0
+1
2
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில்,…

11 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும்…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 15/16

(15)   ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 14

(14) பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன். “அக்கா... எத்தனை நேரமாக…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 13

(13) மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 11

(11)   சற்றுத் தொலைவிலேயே தம்பியின் கரத்தைப் பற்றி இழுத்துச் செல்லும் விதரணையைக் கண்ட வசந்தாவின் விழிகள் சுருங்க, உடனே…

2 weeks ago