Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 10

(10)

இதோ… அவனைப் பார்த்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. அதில் அவனை மறக்க அவள் எடுத்துக்கொண்ட காலம்…? ஏன், இப்போது கூட அவனை நினைத்தால் இதயத்தின் சுரம் தப்பத் தானே செய்கிறது!

‘ஐயோ…! கடவுளே…! அவன் நினைவு எப்போது தான் அவளை விட்டுப் போய்த் தொலையுமோ?’ – தெரியவில்லை அவளுக்கு. அந்தப் பிஞ்சு வயதில் பசுமரத்தாணியாக இதயத்தில் ஆழமாகப் பதிந்து போன அந்த ஆணவக்காரனின் நினைவைத் தூக்கி எறிவது ஒன்றும் அத்தனை சுலபமில்லையே. முயன்று தோற்று, முயன்று தோற்று என்று எத்தனை முயற்சி, எத்தனை தோல்வி!

மூத்தது கோணல் முற்றும் கோணல் என்பது போல, முதல் காதலே பெரும் கசப்பான உணர்வை அவளுக்குள் விதைத்துவிட்ட காரணத்தால், அதன் பிறகு காதல் என்கிற ஒன்றுக்கே இடமில்லாமல் போனது. பல்கலைக்கழகத்தில் எத்தனையோ ஆண் நண்பர்கள் காதல் என்று அவளிடம் யாசகம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் இவளோ, இம்மியும் அசைந்து கொடுத்தாளில்லை. “நட்பாகப் பேசுவதாக இருந்தால் பேசு; இல்லையா, கிட்டே கூட நெருங்காதே!” என்று முகத்தில் அடித்தாற்போலப் பேசி விலகிவிடுவாள்.

ஏற்றமாதிபன் கொடுத்த காயம், அவளுக்கு ஆண்களிடம் ஒருவித இறுக்கமான உணர்வைக் கொடுத்துவிட்டிருந்தது. கூடவே அவனை ஏற்றுக் கொண்ட மனத்தால் இன்னொருவனின் நிழலைக் கூட நினைக்க முடியவில்லை என்பதுதான் கொடுமையே.

இதில் அவன் தவறு எதுவும் இல்லைதான். அவள் ஆசைப்பட்டால் போதுமா? அவனுக்கும் அவள் மீது ஆசை வரவேண்டுமே! அவன்தான் தெளிவாகச் சொல்லிவிட்டானே, சரிவராதென்று. அப்படியிருந்தும் அவன்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது?

இனி அவன் தனக்குக் கிடைக்க வழியே இல்லை என்று தெரிந்த பின்னும், அவன் நினைவுகளைத் தூக்கி எறிந்துவிட்டு, எதிர்காலத்தைப் பார்த்து முன்னேறுவதுதானே புத்திசாலித்தனம்? அதை விடுத்து, ‘குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவேன்’ என்று கங்கணம் கட்டித் திரிபவளை என்னதான் செய்ய முடியும்?

நல்லவேளையாக, அந்த நேரத்தில் அபிநயாவும் குடும்பத்தோடு அமெரிக்கா போய்விட்டிருந்தாள். இல்லையென்றால், பேச்சுவாக்கிலாவது அவனுடைய பெயரைச் சொல்லி இவளை நரகத்திற்குள் தள்ளி இருப்பாள். சும்மாவே அவனை மறக்க முடியாமல் தவிக்கிறாள்; இதில் அவனும் அந்த ஜாஸ்மினும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையை அபிநயா வாயிலிருந்து கேட்டு மனம் சாகவேண்டுமா?

அபிநயா அமெரிக்கா போன பிறகு, இவளாகவே தான் தோழியின் தொடர்பைக் குறைத்துக்கொண்டாள். அது அத்தனை சிரமமாகவும் இருக்கவில்லை. தலைக்கு மேலிருந்த பாடங்களைப் படிப்பதும், நல்ல பெறுபேறுகள் எடுக்க வேண்டுமே என்கிற கவனமும் இருந்ததால், பேசுவதற்கு இருவருக்குமே நேரம் கிடைக்கவில்லை. இடையில் மட்டும் அபிநயா வந்து சென்றிருக்க, போய் பார்த்துவிட்டு வந்தாள். அப்போது கூட, ஏற்றமாதிபனின் பேச்சை இவள் மறந்தும் எடுக்கவில்லை.

எப்படியோ இந்த ஐந்து வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவனை நினைப்பதைத் தவிர்த்து, தன் பாதையை ஒரு கணக்கோடு நகர்த்திக் கொண்டிருக்கிறாள் விதரணை. ஆனால், இப்படித் திரும்பவும் கண் முன்னால் வந்து அவளைக் கொன்று புதைப்பான் என்று அவள் நினைக்கவேயில்லை.

அவன் வரமாட்டான் என்று அபிநயா சொன்னதை நம்பி வந்தது தவறாகப் போயிற்று. அபிநயா சொன்னால் இவளுக்கு எங்கே புத்தி போனது? அபிநயாவின் குடும்பத்திற்கும் அவனுடைய குடும்பத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. சொல்லப்போனால், ஏற்றமாதிபனை அபிநயா சொந்த அண்ணனாகத்தான் பார்க்கிறாள். அதுமட்டுமல்ல, அபிநயாவை மணக்க இருக்கும் அமலன் ஏற்றமாதிபனின் நண்பனும் கூட. அப்படி இருக்கும்போது, அவன் வரமாட்டான் என்று எப்படி அலட்சியமாக நினைத்தேன்? – நினைத்தவளுக்குச் சுரீர் என்று அது உறுத்தியது.

இல்லை, அவளுடைய ஆழ்மனதிற்கு அவன் வருவான் என்று தெரியும். தெரிந்தேதான் வந்தாள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் கொழுந்துவிட்டு எரிந்ததால்தான், இத்தனை அலங்காரத்துடன் இந்த நிச்சயதார்த்தத்திற்கு வந்தாள்.

வந்த பின்தானே தெரிகிறது, இதயம் இன்னும் அவனுக்காக ஏங்குகிறது என்று! அவனுடைய நினைவு அவளுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்ட நிலையில், அவனை எப்படி மறக்க முடியும்? ‘கடவுளே… இது எத்தனை பெரிய அவமானம்!’ அன்று அமில வார்த்தைகளைக் கொட்டி, அவள் முன்னாடியே ஒருத்தியை முத்தமிட்டு நின்றவனை இன்னும் மனது ஏக்கத்தோடு நினைக்கிறது என்றால், அதை என்னவென்று சொல்வது? இத்தனைக்கும் அவன் திருமணம் செய்திருப்பான்; குழந்தைகள் கூட இருக்கும். ஆனால் மனது அவனைத் தேடுகிறது.

‘சே… கேடுகெட்ட மனம்! இத்தனை அவமானப் பட்டும் இன்னும் அவனைக் கண்டு உருகிப் போகிறது…’ – தன்னையே சபித்தவளுக்கு, தன்னைச் சமப்படுத்தி மண்டபத்திற்குப் போக வேண்டும் என்று தோன்றாமல் அப்படியே கதவின் மீது சாய்ந்து நின்றிருந்தாள் விதரணை.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ, யாரோ கதவைத் திறக்க முயல்வது புரிய, திடுக்கிட்டு நிமிர்ந்தாள் விதரணை.

அப்போதுதான் கதவின் மீது சாய்ந்திருப்பதே அவளுக்கு உறைத்தது. அவசரமாக விலகியவளுக்கு, கண்களில் கண்ணீர் உருண்டு ஓடிக்கொண்டிருப்பது தெரிய, எரிச்சலோடு, உள்ளே வரும் நபர் பார்க்காதிருப்பதற்காகக் கண்ணீரை அழுந்தத் துடைத்து விட்டு, நடந்து சென்று குழாயைத் திறந்து கையை கழுவத் தொடங்கினாள். உள்ளே வந்த பெண்மணி கைகழுவும் விதரணையை ஒரு மாதிரிப் பார்த்து விட்டுக் கழிவறைக்குள் நுழைந்து கதவைச் சாற்றிக்கொள்ள, தொடர்ந்து இன்னொரு பெண்ணும் உள்ளே நுழைந்து மற்றொரு அறைக்குள் சென்றார். ஆழ மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்தியவளாக, ஓடும் தண்ணீரில் கரங்களை நனைத்தாள். அவன் நினைவுகளையும் இப்படிக் கழுவினால் எத்தனை நன்றாக இருக்கும்.

பாழாய் போன மனது திரும்பவும் அவனைத் தான் நினைத்தது.

“அவனுக்கு இப்போது என்னை நினைவு இருக்கிறதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை நான் கடந்து சென்ற மேகம் போல. அப்படியிருக்கும்போது, அவனுக்காக நான் ஏன் அழ வேண்டும்?” என்று தன்மீதே கோபப்பட்டவள், மீண்டும் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தெறிந்துவிட்டு முகத்தைக் கழுவினாள். அங்கிருந்த மென்தாளில் முகத்தைத் துடைத்துவிட்டுக் கண்ணாடியைப் பார்த்தாள்; இமைகள் வீங்கித் தடித்திருந்தன.

“ஷிட்…” என முனங்கியவள், கையிலிருந்த ஈரத்தாளைக் குப்பையில் போட்டுவிட்டு அதையே வெறித்தாள். அந்த ஈரக் காகிதத்தைக் குப்பையில் போட முடிந்தது; ஆனால் அவளது நினைவுகளை? காதலை? நினைத்தவளுக்கு இப்போது அவள் மீதே எரிச்சல் வந்தது. ‘திரும்பவுமா?’ – தன்னையே திட்டியவள் ஆழ மூச்செடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

மூச்சு முட்டுவது போல இருந்தது. கவனமாக யாரின் கவனத்தையும் கவராமல் மண்டபத்தை விட்டு வெளியே வந்து, வெப்பக் காற்றைத் தன் முகத்தில் தாங்கிக்கொண்டாள் விதரணை. கொஞ்சம் இப்படிக் காற்றோட்டமாக நின்றால் கண்ணின் வீக்கம் குறையும், அழுத சுவடு மறையும் என நினைத்தவாறு, சிரமப்பட்டுத் தன் சிந்தனையை வேறெங்கோ செலுத்த முயன்று தோற்றவளாக அப்படியும் இப்படியும் நடந்தாள்.

“ஹலோ… ஆதிபன்… எப்படியிருக்கிறாய்? நீ ஊரில் இல்லை என்று சொன்னார்களே…”  – யாரோ ஒருத்தர் சற்றுத் தொலைவில் பேசுவது கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள் விதரணை.

சற்றுத் தள்ளி, ஒற்றைக் காலை மரத்தில் மடித்துப் பதித்தவாறு, அந்த மரத்தின் மீதே சாய்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசியவாறு நின்று இருந்தான் ஏற்றமாதிபன். கோடைகாலச் சூரியன், மாலை நேரம் ஐந்து மணியைக் கடந்திருந்தாலும் இன்னும் தன் கரங்களை விலக்க ஆர்வமின்றி கனடாவை வருடிக்கொண்டுதான் இருந்தான். அதன் விளைவு, மரங்களின் ஊடாகப் பரவிய ஒளிக்கீற்று சரியாக ஏற்றமாதிபனின் உடலின் மீது பட்டும் படாமலும் விழுந்தது. அந்தச் சூரிய வெளிச்சத்தில், அவன் ஒரு கிரேக்கச் சிற்பமாக அத்தனை உயிரோட்டமாக நின்றிருந்தான்.

விதரணைக்கு அவன் நின்றிருந்த கோலம் மீண்டும் இதயத்தைக் கனக்கச் செய்ய, அவனுடைய இயல்பான நிலை, யாரோ மனதுக்குப் பிடித்தவர்களுடன் பேசுவது போன்ற தோற்றத்தைக் கொடுக்க, ஒரு வேளை அது அவன் மனைவியாக இருக்குமோ என்கிற எண்ணம் அவள் மனதில் எழ, சட்டென்று முகம் வாடிப்போனது அவளுக்கு.

‘அவன் மனைவி எத்தனை அதிர்ஷ்டசாலி!’ – அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரம் அவனோடு பேச்சுக்கொடுத்த அந்த நபர் ஏற்றமாதிபனை நெருங்க, அவனும் வந்தவரைப் பார்த்துப் பெரிதாகப் புன்னகைக்காமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு, கைப்பேசியில் மறுபக்கமிருந்தவரிடம் எதையோ கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துப் பேண்ட் பையில் போட்டவன், தன் நிலையை மாற்றி நிமிர்ந்து நிற்க, அவன் நின்ற நிலையே விஸ்வரூபம் எடுத்தவன் போலத் தோன்ற வைத்தது விதரணைக்கு. இந்த உயரத்தைக் கண்டுதானே முதலில் வியந்தாள்! விதரணையால் தன் பார்வையை அவனை விட்டு விலக்கவே முடிய வில்லை.

வந்த நபர் ஏற்றமாதிபனிடம் பேச்சுக் கொடுத்தவாறே தன் கரத்தை நீட்ட, நீட்டிய கரத்தைப் பற்றிக் குலுக்கியவன், அவரிடம் எதையோ பேசியவாறு மறுகரத்தால் பிடறி மயிர்க்கற்றையை வருடினான். எதேச்சையாக இவள் பக்கம் அவன் திரும்ப, திரும்பியவனின் விழிகளில் இவள் விழுந்ததும் ஒரு கணம் அவன் விழிகள் சுருங்கி விரிந்தன. ஒரு விநாடிக்கும் குறைவாக அவனுடைய ஒற்றைப் புபுருவம் சட்டென்று மேலேறிப் பின் கீழ் இறங்கியது. அடுத்த கணம் அவளிடமிருந்து தன் பார்வையை விலக்கியவன், வந்து நின்று பேசிய நபரிடம் தன் கவனத்தைச் செலுத்த, அவனுடைய அந்த ஒரு விநாடிப் பார்வையே விதரணையைத் தடுமாற வைக்கப் போதுமானதாக இருந்தது.

ஐயோ! அவன் நினைவிலிருந்து தப்ப முடியாமல் வெளியே வந்தால், இங்கேயும் நின்று அவளை வதைக்கிறானே! பற்களைக் கடித்தவளுக்கு மூச்சு பலமாக உள்ளே வெளியே என்று போய் வரத் தொடங்கியது. இதோ, இன்னும் இந்தப் பாழாய்போன பார்வை அவனிடம்தான் தஞ்சம் புகுந்திருந்தது. அவளை அவன் ஒரு விநாடிதான் பார்த்தான்; பார்த்தும் பார்க்காதது போலத் திரும்பிக்கொண்டான். ஆனால் இவள்… விழிகளை விலக்க முடியாமல் சேலை முந்தானையைப் பற்றிக் கரங்களால் சுருட்டி உருட்டியவாறு அவனையே அல்லவா வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்! பற்களைக் கடித்தவளுக்கு மானம் கெட்ட மனத்தை எந்தத் தொற்று நீக்கியால் சுத்தம் செய்வது என்று சத்தியமாகத் தெரியவில்லை.

அந்த நேரம், அவனும் அந்த நபரோடு பேசியவாறு மண்டபம் நோக்கி வரத் தொடங்க, இவளுடைய அசைவு அப்படியே நின்றது. அவளையும் மீறி விழிகள் அவனிடமே நிலைத்திருக்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூடக் கருத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக அந்த மனிதருடன் ஏதோ உலகத்தைக் காப்பாற்ற முக்கியமான ஆலோசனையில் ஈடுபடுவது போலப் பேசியவாறு இவளை நோக்கி வர, விதரணையின் இதயம் சுரம் தப்பிப் பலமாகத் துடிக்கத் தொடங்கியது. உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை ஒருவித சூடு பரவ, எப்போதும் அவனால் மட்டும் உணர வைக்கும் பெண்மை சட்டென்று மலர்ந்து மணம் வீச, அவனையே வெறித்து நின்றாள் விதரணை. அவனோ அவளை விழி அசைத்துக் கூடப் பார்த்தானில்லை. அவன் பாட்டிற்கு அவளைக் கடந்து செல்ல, தன்னையும் மறந்து தலைதிருப்பி அவனைப் பார்த்தாள் விதரணை.

விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாகக் கண்ணானதே…

மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்யில்லையே…

தொலைதூரம் சென்றாலும்

தொடுவானம் என்றாலும் –

நீ விழியோரம் தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்!

அவன் கடந்து சென்ற அந்த நொடி, அவனுக்கே உரித்தான ஆண் வாசனையும் அவன் தேகச் சூடும் ஒருமுறை அவளை வருடிக் கடந்து செல்ல, தன்னை மறந்து விழிகளை மூடினாள் விதரணை. ஐந்து வருடங்களுக்கு முன்பு அவள் சுவாசித்து உணர்ந்த அவன் வாசனை, அவள் தேகம் உரசிய அவன் சூடு… இன்னும் மாற்றுக் குறையாமல் அவளை அரவணைத்துப் புதைகுழிக்குள் தள்ள, அதிலிருந்து வெளிவரப் பிடிக்காது அப்படியே விழிகள் மூடி அவன் விட்டுச் சென்ற வாசனையைக் காற்றோடு பேரம்பேசி நாசிக்கு அனுப்பிக்கொண்டிருந்தாள் அவள்.

மெதுவாக அவன் வாசனை கரைந்து சென்றதும் தான் விழிகளைத் திறந்தாள். திறந்தவளுக்கு நிதர்சனம் புரிய, ஓங்கித் தன் தலையில் அடித்தவளுக்குத் தன் மீதே வெறுப்பு வந்தது.

என்ன காரியம் செய்கிறாள்? சே… அவளை வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கியவனை, யாரோ ஒருத்தியை விரும்பியவனை, திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்பவனை வெட்கம் கெட்டு இன்னும் இரசிக்கிறேன் என்றால் எனக்குப் பைத்தியம்தான்! பற்களைக் கடித்தவளுக்கு ஒன்று மட்டம் நன்றாகவே புரிந்தது. அங்கே நிற்கும் ஒவ்வொரு விநாடியும் அவள் தன்னிலை கெட்டுப் போகிறாள்.

இந்த நாசமாய்ப் போன காதலுக்குத்தான் மானம் மரியாதை எதுவும் புரியமாட்டேன் என்கிறதே! வெட்கம் கெட்டுத் திரும்பவும் அவனிடம் சென்று யாசகம் கேட்டுவிடுமோ என்கிற அச்சம் எழ, விதிர்விதிர்த்துப் போனாள் விதரணை. இதோ, இப்போது கூட இதயத்தின் ஓரத்தில், ‘போய் பேசிப் பாரேன் விது… திருமணம் முடித்துவிட்டானா என்று கேட்டுப் பாரேன்…’ என்று ஒரு குரல் ஒலிக்கிறதே!

அதை உணர்ந்தவளுக்கு நடுக்கம்தான் பிறந்தது. திரும்பத் திரும்ப அது சொல்வதைக் கேட்டால் அதையே செய்துவிடுவோமோ என்கிற அச்சம் அவளைக் கதிகலங்கச் செய்ய, அப்படி அவமானப்படுவதற்கு முன்பு இங்கிருந்து போய்விட வேண்டும் என முடிவு செய்தவளாக, அவசரமாகப் பொங்க முயன்ற கண்ணீரைப் பிடிவாதமாக உள் இழுத்தவாறு ஒரு வேக நடையோடு மண்டபத்திற்குள் வந்தாள்.

விழாக்களில்தானே உறவுகள் கூடிப் பேசி மகிழ்வது! ஆளாளுக்குக் கிடைத்த மேசையில் அமர்ந்து சிரிப்பதும் பேசுவதுமாக இருக்க, யாருடைய கவனத்தையும் கவராமல் விதுரன் எங்கே என்று தேடினாள் விதரணை. சற்றுத் தொலைவில் புதிதாகச் சேர்ந்த நண்பனுடன் பேசிக்கொண்டிருந்தான் அவன். அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்ற, விரைந்து அவன் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றாள் விதரணை.

அவளுடைய கவனம் முழுவதும் தம்பியிடம் மட்டும் இருந்ததால், சுற்றிலும் இருந்தவர்கள் யார் என்கிற கவனம் அவளிடம் சுத்தமாக இருக்க வில்லை. விதுரனோ சாய்வாக ஓர் இருக்கையில் அமர்ந்தவாறு, தன்னை ஒத்த வயதுடையவர்களோடு ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“வி… விதுரா…” என அழைக்க, நிமிர்ந்து பார்த்தான் விதுரன்.

“என்னக்கா…?”

“அது வந்து… நாம் வீட்டிற்குப் போகலாமாடா?” என்று இவள் கெஞ்சுவது போலக் கேட்க,

“இப்பவேயா? இன்னும் தட்டுக்கூட மாற்ற வில்லையேக்கா… இப்போதே புறப்படு என்றால் எப்படி? இன்னும் கொஞ்சத்தில் தட்டை மாற்றி, முறைப்படி நிச்சயதார்த்தத்தை முடித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு எழுத்து இருக்கிறது. எல்லாம் முடிந்ததும் போகலாமு…?” என்றவன், புதிதாகச் சேர்ந்த நண்பர்களோடு சுவாரசியமாகப் பேசத் தொடங்க, இவளுக்குத் தம்பியின் மண்டையில் ஓங்கிக் கொட்ட வேண்டும் போல வேகம் வந்தது. வந்த கோபத்திற்குச் செய்தாலும் செய்துவிடுவாள். ஆத்திரத்தோடு தன் குரலைத் தாழ்த்தியவள்,

“பேசியது வரைக்கும் போதும்… கிளம்புடா! நாங்கள் இருந்தாலும் இல்லையென்றாலும் நிகழ்ச்சி நடக்கத்தான் போகிறது…” என்று பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, எப்போதாவது அதீத கோபத்தில் பிரயோகிக்கும் தன் சகோதரியின் அந்த குரலைக் கேட்ட விதுரன் ஒரு கணம் திகைத்துத் தான் போனான்.

அவனுடைய சகோதரி எப்போதும் இப்படிப் பொதுவெளியில் அவனோடு பேசமாட்டாள். இப்போது கோபப்படுகிறாள் என்றால்? அதற்கு மேல் மறுக்காமல், நண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு இருக்கையை விட்டு எழுந்தவன் தன் சகோதரியைப் பார்த்து முறைத்தான்.

“என்னடா முறைக்கிறாய்?” – யாருடைய கவனத்தையும் அதிகம் கவராமல் பெரியவளாக இவள் எகிற,

“நீ எனக்கு மூத்தவளாகப் பிறந்து அதிகம்தான் வதைக்கிறாய் என்னை…” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு முனங்கியவன் அவளருகே வந்தான். சற்று நேரம் சகோதரியின் முகத்தைப் பார்த்தவன், “என்னாயிற்று உனக்கு? கண்கள் சிவந்திருக்கே… அழுதாயா என்ன?” என்று வியந்து கேட்க, அவசரமாகத் தன் முகத்தில் புன்னகையைத் தேக்கிக்கொண்டாள் விதரணை.

“அழுதேனா? சீ… சீ… என்னை அழவைக்க ஒருத்தன் பிறந்துதான் வரவேண்டும்… உனக்குத் தெரியாதா?” – அவள் கேட்க, விதுரனோ தலை சரித்துத் தன் சகோதரியைப் பார்த்தான்.

“ஆனால் உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே… கண்ணெல்லாம் சிவந்து முகம் வீங்கியிருக்கு; நிஜமாக உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே…?” – இப்போது அக்கறை கொண்ட தம்பியாக மாறிவிட்டிருந்தான் விதுரன். என்னதான் சகோதரி மீது ஏட்டிக்குப் போட்டியாக நடந்துகொண்டாலும், அவளுக்காக எதுவும் செய்வான்.

“ஒன்றும் இல்லைடா…! திடீரென்று கண்கள் வறண்டு எரிகிறது. அதுதான் சிவந்திருக்கிறது. ‘ஐ டிராப்ஸ்’ கொண்டுவர மறந்துவிட்டேன்… அது தான் வீட்டுக்குப் போகலாம் என்கிறேன்… வா போகலாம்..” – அவசரமாக நடக்கத் தொடங்க, தன் சகோதரியின் பின்னால் சென்றவாறே,

“ஆனால் எப்படியக்கா போகப் போகிறோம்? நாம்தான் வாகனம் எதுவும் கொண்டு வரவில்லையே? அப்பா ஒன்பது மணிக்குப் பிறகுதானே வருவதாகச் சொன்னார்?” – இவன் கேட்க, இவளுக்குச் சுரீர் என்று கோபம் வந்தது.

இவள் நிலை தெரியாமல் இவன் வேறு கேள்வி கேட்டுக் கொல்கிறான்! திரும்பித் தம்பியை முறைத்தவள், “எப்படியாவது போய்த் தொலையலாம், முதலில் வா…” என்றவாறு தன் தம்பியின் கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு நடக்கத் தொடங்கினாள். திடீரென்று முளைத்த காளான் போல, கோபத்தோடு நிற்கும் சகோதரியை வியந்து பார்த்தவாறு விதரணை இழுப்புக்குத் தோதாக நடக்கத் தொடங்கிய நேரம், வழியில் நின்று இவர்களை வழிமறித்தார் அபிநயாவின் தாய் வசந்தா.

நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் தான் எதற்கு?

What’s your Reaction?
+1
19
+1
5
+1
2
+1
1
+1
1
+1
0
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில்,…

12 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும்…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 15/16

(15)   ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 14

(14) பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன். “அக்கா... எத்தனை நேரமாக…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 13

(13) மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 12

(12)   அங்கே சற்றுத் தள்ளி வருண் நின்றிருந்தான். அவனை மண்டபத்தில் எங்கோ பார்த்த நினைவு வர, அவசரமாகச் சேலையைச்…

2 weeks ago