Categories: Ongoing Novel

நீயின்றி உயிராடும் திகிலாலே – 8/9

(8)

 

அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. ஆனால், மனதில் ஆழமாகப் பதிந்துபோன ஏற்றமாதிபனின் நினைவுகள் மட்டும் அவளை விட்டு இம்மியும் விலகவில்லை. அதன் விளைவாக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி அபிநயாவின் வீட்டிற்குச் சென்றுவிடுவாள் விதரணை. அங்கே எப்போதாவது வரும் ஏற்றமாதிபனைச் சந்திக்க மாட்டோமா, அவனுடன் ஒரு விநாடியாவது பேசிவிட மாட்டோமா என்கிற ஏக்கமும் ஆசையும் அவளைப் பாடாய்ப்படுத்தும். கூடவே, தன்னை அவனுடைய நினைவில் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியமும் அவளுக்கு இருக்க, கிடைத்த நேரமெல்லாம் தோழியின் வீட்டிலேயே கதியெனக் கிடந்தாள் விதரணை. அப்போதுதானே அவளையும் அவன் அடிக்கடி நினைவில் நிறுத்திக்கொள்வான்!

ஆனால், அவளுடைய அந்த ஆசை விளலுக்கு இறைத்த நீராக வீணாய்ப்போனதுதான் மிச்சம். ஏற்றமாதிபன் மேற்படிப்புக்காக வான்கூவர் சென்று இருந்ததால், விடுமுறைகளில் அவன் டொராண்டோ விற்கு வந்தாலும் கூட, ஒருசில நாட்கள் மட்டுமே தங்கிவிட்டுத் திரும்பவும் வன்கூவர் சென்றுவிடுவான் அவன். அப்படித் தங்கிச் செல்லும் நேரங்களில் அபிநயாவின் வீட்டிற்கு வந்து போக அவனுக்கு நேரமே கிடைத்ததில்லை. அப்படியே வந்தாலும் கூட, அதிக நேரம் நிற்காமல் ஓடிவிடுவான். இதில் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் எங்கனம் பார்த்துப் பேசுவது? அதனால் விதரணைக்கு அவனைப் பார்த்துப் பேசும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை.

ஆனாலும் அவன் வந்த செய்தியையும், அவன் என்ன செய்கிறான் என்பதையும் தன் தோழியின் வாயிலாகக் கேட்டு, தவித்த வாய்க்குக் கிடைத்த தண்ணீர் போல, தவித்துக் கிடந்த இதயத்திற்கு நிம்மதி என்னும் நீரூற்றி ஆசுவாசப்படுத்திக் கொள்வாள் விதரணை. அவனை நேராகப் பார்க்க முடியவில்லையே, அவனோடு உரையாட முடிய வில்லையே, விழிகளின் தீண்டல் கூடக் கிடைக்க வில்லையே என்று அந்தப் பருவ மங்கை நொந்து போவாள். இருந்தும் அவன் மீதிருந்த அந்தப் பித்து மட்டும் அவளுக்கு எள்ளவும் குறையவில்லை. அந்தளவு அவன் மீது பைத்தியமாகியிருந்தாள் விதரணை.

இரவில் அவனோடான நினைவுகள் அந்த இளம் வயதுக்கே உரிய இளமையை ஆட்டிப் படைத்தது. கற்பனையில் அவனோடு குடும்பம் நடத்தியவளுக்கு, அந்த இன்பகரமான வாழ்க்கை நிஜத்தில் எப்போது நடக்கும் என்கிற ஏக்கம்தான் அவளுக்கு.

இதில் இவள் அடிக்கடி அபிநயா வீட்டிற்குப் போவதும் வருவதுமாக இருந்ததில் நடந்த ஒரே நல்ல காரியம்  – அறிவழகனுக்கும், வித்யாதருக்கும், ஆனந்தகுமாருக்கும் இடையே நல்ல நட்பு உருவானதுதான். அடிக்கடி மகளை அபிநயா வீட்டில் விட்டுச் செல்லும்போதோ, இல்லை அழைத்து வரும்போதே, அறிவழகன் உள்ளே வந்து ஆனந்த குமாரோடு சற்று நேரம் பேசிவிட்டுப் போவார். வித்யாதரும் அடிக்கடி அங்கே வந்து போவதால், அந்த மூவருக்கிடையிலும் நல்ல நட்பு உருவானது.

இவளுக்கும் அதுதானே தேவை! நாளைக்கு இவள் தன் ஆசையைச் சொல்லும்போது வித்யாதரும் அறிவழகனும் மறுக்க மாட்டார்கள் தானே? இப்படி அவள் பல திட்டங்கள் போட்டுத் தன் ஆசையை நிறைவேற்றும் காலத்திற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த வேளை, இவளுக்குப் பதினெட்டு வயதும் முடிந்திருந்தது.

இந்த வயதுக்காகத்தானே காத்திருந்தாள். இந்த வயதைத்தானே உலகம் வயது வந்த பருவமாக எண்ணுகிறது. இனி அவள் தன் காதலை தைரியமாக அவனிடம் சொல்ல முடியும்…! நீ சின்னக் குழந்தை, சிறுமி, அனுபவமில்லாதவள்! என்று அவன் சொல்லி மறுக்க முடியாது. அது மட்டுமா, இப்போது அவளுடைய எழிலுமல்லவா மாறியிருந்தது. சற்றுச் சதைப்பிடிப்போடு, அந்தப் பருவத்திற்கே உரிய அழகோடு கொள்ளை கொள்கிறாளே. அவளைப் பார்த்தால் அவன் நிச்சயமாக மதிமயங்கிப் போவான்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அப்படியிருக்கிறபோது அவளை எப்படி மறுப்பான்? எல்லாவற்றிட்கும் மேலாக, அவனை நெருங்கித் தன் காதலைச் சொல்லிவிடுமு் அளவுக்கு அவள் தைரியம் வளர்ந்திருந்தது…! இதைவிட வேறு என்ன வேண்டும்?

அந்த நல்ல தருணத்திற்காக அவள் காத்திருந்த வேளையில், பெரிய ஒரு பாறாங்கல்லை எடுத்து வந்து இவள் தலையில் போட்டான் ஏற்றமாதிபன்.

ஆம், வான்கூவருக்கு சென்றிருந்தவன், ஆர்.சி.எம்.பி’ (ஸிசிவிறி – ஸிஷீஹ்ணீறீ சிணீஸீணீபீவீணீஸீ விஷீuஸீtமீபீ றிஷீறீவீநீமீ)-இல் இணைந்து ஒரு வருடம் வேலை செய்து முடித்துத் டொரன்டோ வருகிறான் என்கிற செய்தியை அறிந்து உலகிலுள்ள அத்தனை மலர்களும் தலையில் கொட்டிய மகிழ்ச்சியில், விண்கூவிக்கொண்டு அபிநயா வீட்டிற்கு ஓடிவர, அந்தோ பரிதாபம். அவளுடைய அத்தனை ஆசைகளையும், எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் அபிநயாவின் அந்த ஒற்றை வார்த்தை முற்றாக நொறுக்கிவிட்டிருந்தது.

ஆம், ஏற்றமாதிபனுக்குக் காதலாம்! அதுவும் அவனோடு ஒன்றாக முதுகலை படித்த ஒரு கனேடியப் பெண்ணோடு காதலாம். அவளைத்தான் திருமணம் செய்யப் போகிறானாம்.

இந்தச் செய்தியை அறிந்து இடிந்துபோனாள் விதரணை. அன்று அவளிடம், “நன்றாகப் படி, சொந்தக் காலில் நில், அதற்குப் பிறகு பார்க்கலாம்” என்றானே! அவன் சொன்னதை நம்பித்தானே படிப்பில் முழுக் கவனத்தையும் செலுத்தி, நல்ல மதிப்பெண்ணோடு பல்கலைக்கழகம் போகத் தயாராகிறாள். அப்படியிருக்கும்போது எப்படி அவன் இன்னொருத்தியைக் காதலிக்க முடியும்? கோபமும் ஆத்திரமுமாகத் தன் தோழியைப் பார்க்க, அவளோ சோகமாக விதரணையைப் பார்த்தாள்.

“பெரியப்பாவுக்கும் பெரியம்மாவுக்கும் அண்ணா இப்படி வேற்றினப் பெண்ணைக் காதலிப்பதில் சுத்தமாக விருப்பமில்லைதான். ஆனால், அண்ணா அவளைத்தான் திருமணம் முடிக்கப் போவதாக உறுதியாகச் சொல்லிவிட்டார். பாவம், பெரியப்பாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…” எனத் தன் போக்கில் அபிநயா சொல்ல, அதைக் கேட்டுப் பேசும் திறன் இழந்து சிலையென நின்றாள் விதரணை.

அதற்குப் பிறகு தோழி சொன்னது எதுவும் அவளுடைய காதுகளில் விழவில்லை. இதயம் நொறுங்கிப் போன உணர்வு அவளுக்கு. இந்த இரண்டு வருடங்களில் அவனை நினைக்காத நேரமே இல்லை எனலாம். எதைச் செய்தாலும் அவனுக்குப் பிடிக்குமா என்று மனதிற்குள் அவனிடம் கேட்டுத்தான் செய்வாள். அப்படி மனதோடு அவனுடன் வாழ்ந்தவள் அவள். ஆனால் இவன்? அவன் சொன்னதை நம்பி இதயம் முழுக்க ஆசையை நிரப்பி அவன் நினைவில் அல்லும் பகலும் வாழ்ந்தவளுக்கு அவன் கொடுக்கும் பரிசு இதுதானா? இதயம் வெடித்துச் சிதற, அழுகை பொங்க, எப்படியோ விடைபெற்று வீட்டுக்கு வந்தவள், அன்று இரவு முழுவதும் அழுது தீர்த்து விட்டாள்.

அவள் அவனைக் காதலித்துத் தொலைத்து விட்டாளே. அதிலிருந்து வெளியே வர அவளால் முடியவேயில்லை. அவனால் எப்படி அவளை விடுத்து வேறு ஒருத்தியைக் காதலிக்க முடிந்தது? இது மிகப்பெரும் நம்பிக்கை துரோகம் அல்லவா?

நம்பிக்கை கொடுத்துத் துரோகம் செய்தவன் மீது ஆத்திரம் பொங்கியது. அதே நேரம் சரிதான் போடா என்றும் தூக்கியெறிந்துவிட முடியவில்லை. போனால் போகட்டும் விட்டுத் தொலை என்றும் பொறுமையாக இருப்பதற்கும் முடியவில்லை. இத்தனை நாட்கள் அவள் காத்திருந்ததற்கு அவன் பதில் சொல்ல வேண்டாமா?

இல்லை… அவன் இதற்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்! முடிவு செய்தவளாக ஆத்திரத்தோடு தன் கைப்பேசியைத் தொட்டாள் விதரணை. ஆனால் கரங்கள் நடுங்கின. தான் ஒரு நிலைக்கு வரும்வரை அவனோடு பேசுவதில்லை என்கிற முடிவோடு, அவனது கைப்பேசி இலக்கத்தை எப்படியோ அபிநயாவிடமிருந்து வாங்கி வைத்திருந்ததோடு சரி; இதுவரை அவனிடம் பேச அவள் முயன்றதே இல்லை.

“சொந்தக் காலில் நில், அதற்குப் பிறகு வா” என்று அவன் சொன்னதை வேதவாக்காக எண்ணி, தன் ஆசையை அடக்கி வைத்திருந்வளுக்கு அவன் கொடுத்த பரிசு இதுதானா. பல்கலைக்கழகம் சென்று நல்லதொரு நிலைக்கு வந்த பின்புதான் அவன் முன்னால் சென்று நிற்பது என்கிற வைராக்கியத்தோடு இருந்தவளை இப்படி சுக்கு நூறாக உடைத்து விட்டானே!

அவள் மிகப் பெரும் தவறு செய்துவிட்டாள். இப்படி முட்டாள் தனமாக ஒதுங்கியிருந்திருக்கக் கூடாது. அடிக்கடி அவனுக்காகத் தான் காத்து இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை அவனுக்குள் விதைத்திருக்க வேண்டும். அப்படி விதைத்திருந்தால், இப்படி ஓர் அந்நியப் பெண் பின்னால் அவன் போயிருக்க மாட்டான். எல்லாம் காலங்கடந்த ஞானோதயம்! ஆனால் இனியும் தள்ளிப்போட முடியாது; அவளுடைய காத்திருப்புக்கு அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தயக்கத்தை உதறிவிட்டுக் கைப்பேசியை எடுத்தபோது அவளுக்குக் கண்கள் எல்லாம் கலங்கியிருந்தன. எதற்குமே அழாதவள், காதல் தோற்றுவிடுமோ என்று அழுகிறாள். அவசரமாகக் கண்களைத் துடைத்துவிட்டு அவனை அழைத்தாள். இரண்டு அழைப்புகள் போனதுமே அவனுடைய அந்த கம்பீரமான குரல் செவிப்பறையில் விழ, அந்த நேரத்திலும் அவளுக்கு மெய்சிலிர்க்கவே செய்தது. அதையும் மீறித் தொண்டை அடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அல்லவா அவனுடைய குரலைக் கேட்கிறான். ஆழ மூச்செடுத்து அவள் தன்னைச் சமப்படுத்துவற்குள்,

“ஹலோ… யார் பேசுவது?” என்று பொறுமையின்றி இருமுறை கேட்டுவிட்டான் அவன். அவளுடைய எண் கூட அவனிடம் இல்லையா? தவிப்பையும் கலக்கத்தையும் விழுங்கியவள், “ஹ… ஹலோ…” என்றாள் மென்மையாக. அவனோ,

“யார் பேசுகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?” என ஒரு காவல்துறை வீரனுக்கே உரிய அழுத்தத்தோடு அவன் கேட்க, இவளுக்குத் தொண்டை அடைத்தது.

“ஏற்றன்… நான்… விதரணை பேசுகிறேன்…” என்றாள் இவள் தயக்கத்தோடு.

மறுபக்கம் அமைதி. இவள் யார் என்று யோசித்தான் போல.

“விதரணையா? சாரி எந்த விதரணை” எனத் தயக்கத்தோடு கேட்க மொத்தமாக உடைந்து போனாள் விதரணை. அப்போ அவளை அவனுக்குச் சுத்தமாக நினைவில்லை. இவள்தான் முட்டாளாக அவனை நினைத்துக்கொண்டே இருந்திருக்கிறாள்.

ஒரு பக்கம் ஏமாற்றம், மறு பக்கம் வேதனை, இன்னொரு பக்கம் தவிப்பு என்று தடுமாறியவள்.

“நான்.. அபி.. அபிநயாவின் தோழி…” என்றாள் திக்கித் திணறி.

“அபிநயாவின் தோழியா?” கேட்டவன் சற்று நேரம் யோசித்தான் போல. “சாரி… சட்டென்ற நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது… சரி சொல்லுங்கள் விதரணை, உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காக அழைத்தீர்கள்?” என்றான் அவன் எந்த அலட்டலுமின்றி.

அந்தப் பேச்சில்தான் எத்தனை அந்நியத் தன்மை! அந்தக் குரலில் அவளைக் கண்டு கொண்டதற்கான அறிகுறி இம்மிகூட இல்லையே. இரம்பம் கொண்டு இதயத்தைக் கூறுபோட்டது போன்ற உணர்வில், ஆழ்ந்த மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்திக் கொண்டு,

“நான் உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும்” என்றாள் நேரடியாக.

“இப்போது ஃபிரியாதான் இருக்கிறேன்… பேசுங்கள்…” என்றான் அவன்.

“இல்லை.. நான் நேரடியாகப் பார்த்துப் பேச வேண்டும்… பிளீஸ்..” அவள் தடுமாறியவாறு சொல்ல, அந்தக் குரல் அவனைச் சற்றுச் சங்கடப் படுத்தியதோ? என்ன நினைத்தானோ, “சரி, இன்று மாலை ஆறு மணிக்கு என்னை வந்து பாருங்கள்” என்றான்.

“எங்கே வந்து பார்க்க?” என ஏக்கமாகக் கேட்க,

“இடத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன், அங்கே வாருங்கள்” என்றவன் உடனே அழைப்பைத் துண்டிக்க, இவளோ அணைத்த கைபேசியைத்தான் வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஏனோ மனது நம்பிக்கையின்றித் தவித்தது. அந்தத் தவிப்போடு அன்றைய நேரத்தைக் கழித்தவளுக்கு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. கற்பனை உலகிற்கும் நிஜத்திற்கும் வேறுபாடு தெரியாத பதினெட்டு வயதுப் பருவம்  – எதார்த்தத்தை விடுத்து, எண்ணம் போன போக்கில் புத்தியை அலைபாய விட்டது. எதார்த்தம் வேறு, நடைமுறை வேறு என்று அவளுக்கு யார்தான் புரிய வைப்பது?

முட்டாள் பெண், கற்பனையில் வாழ்ந்துவிட்டால் ஆசைப்பட்டத நடந்துவிடுமா என்ன?

 

(9)

 

ஏற்றமாதிபன் அவளை ஓர் உணவகத்திற்குத் தான் வரவழைத்திருந்தான்.

அன்று ஏற்றமாதிபனைப் பார்க்கப் போகிறோம் என்பதால், விதரணை தன்னை மிகக் கவனமாகவே அலங்கரித்திருந்தாள். ஏற்றமாதிபனுக்கு இயற்கை அழகு மிகவும் பிடிக்கும் என்று அபிநயா சொல்லிக் கேட்டிருக்கிறாள். அதனால், முகத்திற்கு அதீத அரிதாரம் பூசாமல், அளவாகத் தன் வெண்ணிறத் தோலுக்கு உகந்ததாய் முகப்பூச்சுப் பூசி, நீண்ட விழிகளை மேலும் மெருகூட்டும் வகையில் கண்மை தீட்டி, சிவந்த உதட்டிற்கு எடுப்பாகத் தெரியாத வகையில் இளம் சாயம் பூசி, ஸ்பகெட்டி ஸ்டிராப் வைத்த மெர்மெய்ட் ஆடை அணிந்து கண்ணாடியில் தன் எழிலைப் பார்க்க, அந்த இந்திரனே இவள் அழகைக் கண்டால் நிச்சயமாகச் சொக்கிப் போவான் என்பதில் ஐயமேயில்லை. அந்த ஆடை அவளுடைய அங்க வளைவுகளையும் எழிலையும் அத்தனை அழகாக வெளிப்படுத்தியிருந்தது. அது செப்டம்பர் மாதம், சற்றுக் குளிரும் என்பதால் வெண்ணிறப் பஞ்சுப்பொதியான சுவெட்டர் ஒன்றையும் அணிந்து கொண்டு புறப்பட்டு விட்டாள் விதரணை.

அவள் உள்ளே நுழைந்ததும், அந்தப் பிரம்மாண்டமான உணவகத்தில் அவனை எங்கே தேடுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க, அங்கே உணவு பரிமாறுபவர் இவளை நோக்கி வந்தார்.

“ஹாய்… நீங்கள்… வி.. வித… விதரணையா…?”   அவர் ஆங்கிலத்தில் தட்டுத்தடுமாறிக் கேட்க, இவளோ ‘ஆம்’ என்றாள். உடனே புன்னகைத்தவர், தலையை அசைத்து, “என்னோடு வாருங்கள்…” என்றவாறு சற்றுத் தூரம் அழைத்துச் சென்று ஓர் அறையைத் திறந்துவிட, இவளோ யோசனையோடு உள்ளே வந்தாள்.

உள்ளே வந்தவள், அங்கே மேசையில் அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் ஒரு கணம் மூச்செடுக்கவே மறந்து போனாள். அவனைப் பார்த்து இரண்டு வருடங்களாயிற்று. ஆனால், அவனுடைய கம்பீரம் முன்னைவிடப் பல மடங்கு அதிகரித்திருந்தது. அவனை முதன்முறையாகப் பார்த்தபோது அவனுக்கு வயது இருபத்திநான்கு. அப்போதே உடலை அத்தனை கவனமாகப் பராமரித்திருந்தான். இப்போது அவனுக்கு வயது இருபத்தாறு. அந்த இருபத்தாறு வயதுக்கே உண்டான முதிர்ச்சியோடு, உருண்டு திரண்ட உடலோடு, டீஷர்ட் – பேண்ட் அணிந்து கையில் ஏதோ ஒரு வாரப்பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தான் ஏற்றமாதிபன்.

நரம்போடிய அவன் முடியடர்ந்த இடது கரத்தின் மணிக்கட்டை கரிய நிற ஆப்பிள் கைக்கடிகாரம் இறுகக் கவ்வியிருக்க, அது நரம்போடிய அவன் கரங்களை மேலும் எடுப்பாகக் காட்டியிருந்தது. ஒட்ட வெட்டிய தலைமுடி; அது அவன் என்ன வேலை செய்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடும். கூடவே அளவான தாடி, மீசை. கடின உடற்பயிற்சி செய்து இறுக்கமாக வைத்திருந்த உடற்கட்டு… இப்படிப்பட்ட ஓர் ஆணழகனை எப்படிப் போனால் போகட்டும் என்று உதறித் தள்ளுவது?

ஆழமாக மூச்செடுத்துக் கதவை மேலும் திறந்து உள்ளே வர, சத்தம் கேட்டுத் தன் கவனத்தைத் திருப்பிப் பார்த்தான் ஏற்றமாதிபன். அங்கே இளமை பொங்க வந்து நின்றவளைக் கண்டதும், அதுவரை இருந்த குழப்பம் மறைந்து இப்போது அவன் முகத்தில் தெளிவு வந்தது. ஆக, இதுவரை அவள் யார் என்று தெரியாமல் யோசனையில் இருந்திருக்கிறான். அவளைக் கண்டதும்தான், இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவளுடனான உரையாடல் அவனுக்கு நினைவு வந்திருக்கிறது. அப்படியென்றால், அவளைச் சுத்தமாக அவன் நினைவில் வைத்திருக்கவில்லை.

அதை உணர்ந்துகொண்டவளுக்குப் பெரும் ஏமாற்றம். அதை முகத்தில் காட்டாமல் லாவகமாக மறைத்தவள், மேலும் முன்னேறி வந்தாலும் பார்வை மட்டும் அவனிடமிருந்து கொஞ்சமும் வேறு திசைக்குச் செல்லவில்லை.

இதோ இந்த நொடி வரை, அவனைப் பார்க்கும் போது சிலிர்க்கும் அந்த உணர்வை எந்தக் கடிவாளம் போட்டு நிறுத்துவது என்று அவளுக்குப் புரியவேயில்லை. இதோ இதயம் படபடக்கிறது. அவனை நினைத்தாலே அடிவயிற்றில் தோன்றும் அந்தச் சிலிர்ப்பான சுகம் இப்போதும் அவளைத் தன்னிலை கெட வைக்கிறது. அதையும் மீறி அவனைக் கண்டதால் உண்டான புதிய உணர்வு பிரளயமாக உருண்டு திரண்டு, அப்படியே மேலேறி அவள் இதயத்தில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்கிறது. அவன் விழிகளின் கூர்விசையைக் கண்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது. இவனால் மட்டும்தானே இவளை இப்படி உணர வைக்க முடிகிறது; அப்படியிருக்கையில், அவனை எப்படி இழப்பாள்?

ஒருவித மாயைக்குள் புகுந்த உணர்வோடு அவனை நெருங்க, அவனோ தன் முன்னாலிருந்த இருக்கையைக் காட்டி, “உட்கார்” என்றான். அவன் அப்படிச் சொல்வதில்தான் எத்தனை கம்பீரம்! அவன் வளையவில்லை, குழையவில்லை, ஏன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை; ஆனால் அது கூடச் சில்லென்று உள்ளே எதையோ பூக்கச் செய்கிறது.

அவன் அமரச் சொன்னதும் மறுக்காது அமர்ந்து கொண்டாள் விதரணை. அவளையும் மீறிக் காரணமின்றியே கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. இதயம் படபடத்தது; வியர்த்துக் கொட்டியது. நெற்றியில் பூத்த வியர்வையைப் புறங்கையால் துடைத்துவிட்டவள், அந்த அறையை நோட்டமிட்டாள்.

அது ஒரு தனி அறை. வரும் வாடிக்கையாளர்கள் தனிமையை விரும்பினால், அதற்கேற்பத் தனிமையில் பேசி உண்பதற்கு ஏதுவாகப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தன் படபடப்பைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகத் தன் கவனத்தை அந்த அறையின் அலங்காரத்தில் செலுத்திவிட்டு, ஓரளவு படபடப்பு அடங்கியதும் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவனோ அவளைத்தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய அந்தக் கூரிய இரு விழிகளிலும் கேள்வி நிறைந்திருந்தது. அந்தக் கேள்விக்குப் பின்னால் பழைய நினைவு ஓடியதோ? அதை அறிந்துகொள்ளும் வேகத்தில் இவளும் அவனுடைய துளைத்தெடுக்கும் விழிகளைத் தான் ஆராய்ச்சியோடு பார்த்தாள். இருவருமே சற்று நேரம் பேசவில்லை. அந்த நேரம், கையில் தண்ணீர்க் குவளைகள் அடங்கிய தட்டோடு உணவு பரிமாறுபவர் வந்தார்.

அதை மேசையில் வைத்துவிட்டு, “ஏதாவது ஆர்டர் கொடுக்கிறீர்களா இல்லை பொறுத்து வரவா?” என்று இனிமையாகக் கேட்க, முகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராமல் திரும்பி அந்த வேலையாளைப் பார்த்தவன்,

“இப்போதைக்கு எனக்குக் காபி போதும்… உணவு பிறகு சொல்கிறேன்…” என்றவன் விதரணையை ஏறிட்டு, “நீ ஏதாவது ஆர்டர் கொடுக் கிறாயா?” என்றான்.

இவளும் திரும்பி, “ஒரு மாங்கோ ஷேக் பிளீஸ்” என்றாள் பட்டும் படாத ஒரு புன்னகையோடு. அவர் வெளியே சென்றதும், விதரணையின் கவனம் இப்போது அவனிடம் நிலைக்க, அவனோ தலை சரித்து அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள், “எ… எப்படி இருக்கிறீர்கள்?” என்றாள் திக்கித் திணறி. அவனோ அதற்குப் பதில் சொல்லாமல் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறு, ஒரு காலின் மீது மறுகாலைப் போட்டு, “சரி… சொல்… எதற்காக என்னைப் பார்க்க வேண்டும் என்றாய்?” என்றான் நேரடியாக.

அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவளுக்கு, எப்படி ஆரம்பிப்பது என்று சுத்தமாகத் தெரியவில்லை. அங்கே முன்னால் கல்லின் இறுக்கத்தோடு இருப்பவனிடம், தன் தவிப்பை எப்படிச் சொல்வது என்றுதான் அவளுக்குப் புரியவில்லை. அப்படியே சொன்னாலும் புரிந்து கொள்வானா என்கிற கேள்வியும் எழுந்தது. ஏனோ அவன் அமர்ந்த நிலையும், அவளை அவன் கையாளும் விதமும், ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் பேச முடியாது என்று எதையோ உணர்த்துவது போல இருக்க, கலக்கமாக அவனைப் பார்த்தவளுக்குத் தன் நிலையைச் சொல்லாமல் அவனுக்குப் புரியாது என்பது புரிய, தன் தயக்கத்தை உதறிவிட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“உ…. உங்களுக்குத் திருமணமாமே…” என்றாள் திக்கித் திணறி.

அதைக் கேட்டு உதட்டோரமாக மென்நகை புரிந்தவன்,

“ம்…” என்றான் ஒற்றைச் சொல்லாக. இப்போது அவனை அழுத்தமாகப் பார்த்தவள்,

“அன்று நான் உங்களிடம் பேசியதும், நீங்கள் என்னிடம் சொன்னது நினைவிருக்கிறதா?” என்றாள் அடக்கி வைத்த ஆத்திரத்தோடு.

அதைக் கேட்டுத் தன் உதடுகளை ஒரு மாதிரி சுளித்து எடுத்தவன், காலுக்கு மேல் போட்டிருந்த காலை விலக்கி இரு கரங்களையும் மேசையில் அழுந்தப் பதித்து,

“சாரி… மனதில் நிறுத்தி வைக்கும் அளவுக்கு முக்கியமானது எதுவும் பேசியதாக நினைவில் இல்லையே…” என்றான் அவன் தெளிவாக.

அதைக் கேட்டதும் இவளுக்குக் கொதித்துக் கொண்டு வந்தது. எத்தனை சுலபமாகச் சொல்லி விட்டான், முக்கியமானது எதுவும் பேசவில்லை என்று. அவள் பேசியது அவளுடைய வாழ்க்கை சார்ந்தது; எதிர்காலம் பற்றியது. அது இவனுக்குப் புரியவேயில்லையா?

நடுக்கடலில் மூழ்கடிப்பது போலப் பெரும் ஏமாற்றம் அவளை மூழ்கடிக்க,

“முக்கியமானதில்லையா? அ.. அன்று நான் உங்களோடு பேசியது என் எதிர்காலம் சம்பந்தப் பட்டது. என் வாழ்க்கை சார்ந்தது… அது உங்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லையா?” கேட்கும் போதே இவளுடைய குரல் நடுக்கம் கண்டது. ஆனால் அவனோ, அதைக் கொஞ்சம் கூடப் பொருட்டாக மதிக்கவில்லை; பதிலுக்கு அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“உன்னுடைய வாழ்க்கை, உன்னுடைய எதிர்காலம் உனக்குத்தானே முக்கியமானதாக இருக்க வேண்டும்? எனக்கென்ன வந்தது? இதோ பார்… வித… விதரணை… அதுதானே உன் பெயர்?” அவளிடமே கேட்டவன் தொடர்ந்து, “இதோ பார்மா… எனக்கு யோசிக்கவும், கவலைப்படவும் ஆயிரம் விஷயங்கள் உண்டு. அதில் உன்னுடைய பிரச்சினையை யோசிக்கச் சத்தியமாக நேரம் இருக்கவில்லை” அவன் முடிக்கவில்லை, சீற்றமாக இருக்கையை விட்டு எழுந்துவிட்டாள் விதரணை.

“போதும் ஏற்றன்… நிறுத்துங்கள்.. அன்று நீங்கள் எனக்கு வாக்குக் கொடுத்தீர்கள். நான் என் சொந்தக் காலில் நிற்கும் வரை காத்திருப்பதாகச் சொன்னீர்கள்…” அவள் கோபமும் வேதனையுமாகக் கூற, இப்போது அவனுடைய பொறுமை காற்றில் பறந்து போனது போல, விழிகளில் சட்டென்று பிறந்த தீயோடு அவளை ஏறிட்டவன்,

“என்ன உளறுகிறாய்? நான் உனக்கு வாக்குக் கொடுத்தேனா? எப்போது கொடுத்தேன்? என்ன வென்று கொடுத்தேன்…? நன்றாகப் படித்து உன் சொந்தக் காலில் நில் என்று சொன்னேன்… அதற்குப் பிறகும் என் நினைவு இருந்தால் பார்க்கலாம் என்று சொன்னேன். அதில் எங்கே நான் கொடுத்த வாக்கிருக்கிறது??” என்று அவன் பொறுமையிழந்த குரலில் கேட்க, வாயடைத்துத்தான் போனாள் விதரணை.

“ஆனால்… நீங்கள்… சொன்… சொன்னீர்களே..?” அவள் தவிக்க, இப்போது ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவன்,

“என்னிடம் வெறும் பதினாறே வயதான பெண் ஒருத்தி, ஆசைப்படுகிறேன் என்று வந்து கேட்டால் உடனே சம்மதிப்பேன் என்று எப்படி நினைத்தாய்?” அவன் எரிச்சலுடன் கேட்க, அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் விதரணை. இவனுக்க எப்படித் தெரியும்? அவள் பதினெட்டு என்றுதானே… தடுமாறியவாறு,

“நான்… அது வந்து… எனக்கு…” அவள் முடிக்க முடியாமல் திணற, அவனோ அவளை முறைத்துவிட்டு,

“அபிநயாவின் தோழி நீ. உன் வயதைக் கண்டுபிடிக்க முடியாதா என்ன?” என்று அவன் சீற்றமாகக் கேட்க, அவளுக்குத் தன்னையே நினைத்து வெட்கமாக இருந்தது. அதுதானே, அபிநயாவின் தோழி என்றால் வயது எப்படி பதினெட்டைத் தொட்டிருக்கும். இதை யோசித்தீருக்க வேண்டாமா? தயக்கத்தோடு அவனைப் பார்த்தவள்,

“அது… அது வந்து… அந்த நேரத்தில்…” என்று தடுமாறியவள், உடனே, “அதனால் என்ன? இந்த வயதில்தான் ஆசை தோன்ற வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? அன்று எந்த அளவு உங்களை எனக்குப் பிடித்திருந்ததோ, மாற்றுக் குறையாமல் அதே அளவு ஆசை இப்போதும் என் மனதில் நிறைந்திருக்கிறது. சொல்லப்போனால் இன்னும் அதிகமாக இருக்கிறது. முன்பு உங்களைப் பார்த்து ஆசைப்பட்டேன்; இப்போது அந்த ஆசை காதலாக மாறியிருக்கிறது. அந்தக் காதல்தான் என்னை இங்கே உங்களிடம் இழுத்து வந்திருக்கிறது. உங்களுக்குத் திருமணம் என்று கேட்ட அந்த நொடியிலிருந்து, என்னால்… என்னால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை ஏற்றன்… எனக்கு நீங்கள் வேண்டும். எனக்கே எனக்காக வேண்டும்… அன்று நீங்கள் சொன்னதை நம்பி இந்த இரண்டு வருடங்களும் உங்களோடு கற்பனையில் வாழ்ந்துவிட்டேன்… எப்போதும் வாழ்வேன்…” என்று அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல, ஏற்றமாதிபனின் கோபமோ உச்சத்தைத் தொடும் நிலைக்குச் சென்றுவிட்டிருந்தது.

அதை வெளிக்காட்டும் வகையில், ஆத்திரத்தோடு மேசையில் பலமாக ஒரு தட்டு தட்டினான். அவன் தட்டிய வேகத்தில் மேசையிலிருந்த பொருட்கள் ஒரு கணம் துள்ளி அடங்க, அந்தச் சத்தத்தில் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைத் தீயாக முறைத்தான்.

“பைத்தியமா நீ? உனக்கு அறிவில்லை? நீ என்னைக் காதலிப்பதா? உன் வயதென்ன, என் வயதென்ன? முட்டாள்தனமாகப் பேசாதே…” என்று அவன் சீற, அவளோ கொஞ்சம் கூட அடங்க வில்லை.

ஆத்திரத்தோடு மேசையில் கரங்களை வைத்து அவனை நோக்கிக் குனிந்து,

“யார் முட்டாள்தனமாகப் பேசுவது? நானா? நீங்களா? காதலுக்கு ஏது வயதெல்லை? பிரான்ஸ் நாட்டு அதிபர் தன்னை விட இருபத்து நான்கு வயது மூத்த பெண்ணை ஒருத்தரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழவில்லையா? நான் என்னை விட எட்டு வயது மூத்தவரைத்தானே காதலிக்கிறேன்! இதில் என்ன தவறு இருக்கிறது? ஓர் ஆணின் மீது ஆசை வைப்பது முட்டாள்தனமாக இருந்தால், அந்த முட்டாள்தனத்தை நான் செய்துவிட்டே போகிறேன்… இதோ பாருங்கள்… அன்று நீங்கள் சொன்னதை நம்பி இத்தனை நாட்களும் இருந்தேன். இனியும் இருப்பேன். நீங்கள் என்னைக் காதலிப்பீர்களா மாட்டீர்களா…?” என்று அவள் முடிவாகக் கேட்க, ஏற்றமாதிபனின் கை முஷ்டிகள் அடக்கப்பட்ட கோபத்தோடு இறுகின.

இதுவரை அவன் யாரிடமும் இந்த அளவு பொறுமையோடும் நிதானத்தோடும் பேசியதே இல்லை. ஆனால் இவள்… இன்னும் குழந்தைத் தனம் மாறாமல், எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு உளறிக்கொண்டிருக்கிறாள். அப்படியிருக்கையில் இவளுக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது என்று சத்தியமாக அவனுக்குப் புரியவில்லை. வாய்க்குள்ளேயே எதையோ சொல்லி முணு முணுத்தவன்,

“விதரணை… உனக்கு இப்போதுதான் பதினெட்டு… சின்னப் பெண்… உண்மையான காதலுக்கும், உடல் கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிக் கொட்டுகிறாய்… உன் காதலுக்கு அர்த்தமே இல்லை, புரிந்து கொள். என்னால் உன்னைக் காதலியாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் நான் ஏற்கனவே ஒருத்தியைக் காதலிக்கிறேன். அவளுடன்தான் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். புரிந்து கொள்…” என்று அவன் சொல்ல, இப்போது விதரணையின் விழிகளில் கண்ணீர் சட்டென்று பெருக்கெடுத்தது.

“அது எப்படி நீங்கள் காதலிக்கலாம்? அப்போ அன்று எனக்குக் கொடுத்த வாக்கு…?” என்று அவள் முடிக்கும் முன்பே, இவனுடைய பொறுமை காற்றில் பறந்து போனது. அவள் முன்னால் தன் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தவன்,

“போதும் நிறுத்து விதரணை. அன்று எப்படி இருந்தாயோ, அதே போலத்தான் இப்போதும் அதே முட்டாள்தனத்தோடு இருக்கிறாய். கொஞ்சமாவது முதிர்ச்சியோடு யோசித்துப் பேசு. நான் எப்போது உனக்கு வாக்குக் கொடுத்தேன்? அந்த நேரத்தில் உன் மனத்தை மாற்றவும், நீ தவறான பாதையில் போகக் கூடாது என்கிற நல்ல எண்ணத்தில்தான் அப்படிச் சொன்னேன். மற்றபடி இந்த விநாடி வரை என் மனதில் நீ இல்லை; இருக்கவும் மாட்டாய். அப்புறம் முக்கியமான விஷயம், நான் ஜாஸ்மினைக் காதலிப்பது ஒன்றும் நேற்றோ இன்றோ அல்ல. அவளை இரண்டு வருடங்களாகக் காதலிக்கிறேன். அவளைத்தான் திருமணம் செய்யப் போகிறேன், புரிந்து கொள்…” என்று அவன் சொல்ல, இவளுக்குக் கோபமும் அழுகையும் ஒன்றாகப் போட்டி போட்டுக் கொண்டு வந்தது.

“இரண்டு வருடங்களாகக் காதலித்தீர்களா…? அப்போதே காதலித்திருந்தால், அதை ஏன் என்னிடம் அன்றே சொல்லவில்லை? சொல்லியிருந்தால் நான் என் மனத்தை மாற்ற முயன்றிருப்பேனே?” – இவள் சீற்றமாகக் கேட்க, எரிச்சலோடு அவளைப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

“அது என் தனிப்பட்ட விஷயம். அதை மூன்றாம்

மனுஷியான உன்னிடம், அதுவும் முதன்முறையாகச் சந்தித்த ஒருத்தியிடம் எப்படிச் சொல்வேன் என்று நினைத்தாய்? நீ யார் எனக்கு? ஆண்களைக் கண்டாலே ஆசையில் மலரும் வயசு அது… அந்த வயசுக்கு நான் முக்கியத்துவம் கொடுத்து என் காதலைச் சொல்வதற்கு, நான் என்ன பைத்தியமா?” என்று அவன் அழுத்தமாகக் கேட்க, ஒரு கணம் அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினாள் விதரணை. ஆனாலும் அவன் தன் கைவிட்டுப் போவதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

இத்தனை காலமும் ‘அவன் எனக்கு’ என்கிற எண்ணத்தில், கற்பனையில் வாழ்ந்து வந்தவளுக்குத் திடீரென்று அப்படியில்லை என்றால், எப்படித்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியும்? வேதனையில் நெஞ்சம் பிளக்க,

“இல்லை… இதற்கு நான்… சம்மதிக்க மாட்டேன். அன்று நீங்கள் சொன்னதை நம்பி…” ஒரே லூப்பில் பாடுவது பொல அவள் சொல்ல, சட்டென்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டான் ஏற்றமாதிபன்.

அதற்கு மேல் அமர்ந்து அவள் பேச்சைக் கேட்டால், ஏதாவது ஏடாகூடமாகக் கை நீட்டி விடுவோமோ என்று பயந்தவனாக இரு கரங்களையும் பான்ட் பாக்கட்டிற்குள் நுழைத்து, ஆழமாக மூச்செடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்று தோற்றவனாக, “இதோ பார் பெண்ணே… உனக்கு வேண்டியது நானில்லை; ஓர் அழகான ஆண்மகன். இந்த வயதுக்குரிய உடல் தேவை என்று ஒன்று உண்டு; அதை என்னிடம் எதிர்பார்க்கிறாய். ஆனால் பார், அதற்குரியவன் நானில்லை. ஏற்கனவே என்னை நம்பி ஒருத்தி இருக்கிறாள். சொல்லப் போனால் அவளோடு ஒன்றாக ஒரே அறையில் தான் தங்கியிருக்கிறேன். அவளை விடுத்து வேறு யாரையும் நான் சிந்தையிலும் தொடுவதாக இல்லை. தயவு செய்து இதற்கு மேல் என் பொறுமையைச் சோதிக்காமல் போய்விடு.” – அவன் சொல்ல, அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் விதரணை.

என்ன வார்த்தைகள் சொல்லிவிட்டான்! அவளுக்கு உடல் தேவை இருப்பதால்தான் அவனை அணுகுகிறாளா? இவனால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது? ஆமாம்… அவளுக்கு அவன் வேண்டும் தான். அவளுடைய பெண்மையை மலர வைக்க, உணர வைக்க, அறிந்துகொள்ள அவன் தேவைதான். ஆனால் அந்த உணர்வு காதலில்லாத இடத்தில் எப்படி வரும் என்று இவன் புரிந்து கொள்ளவே இல்லையே! நெஞ்சு முட்ட வளர்த்து வைத்த காதல்தானே அவன் நெருக்கத்தையும் அருகாமையையும் கேட்கிறது? அது புரியாமல் ஏதோ முட்டாள்தனமாகப் பேசுகிறானே!

நினைத்தவளுக்குக் கொச்சைப்படுத்தப்பட்ட தன் காதலை நினைத்து நெஞ்சம் விம்மியது. கண்கள் கலங்க, மூக்கு விடைக்க, நெஞ்சம் விம்மித் தணிய அவனிடம் எதையோ சொல்வதற்கு வாய் எடுத்த நேரம், அவர்கள் அமர்ந்திருந்த அறைக் கதவு சட்டென்று திறந்தது.

இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே வெள்ளை அழகி ஒருத்தி கம்பீரமாக வந்து நின்றிருந்தாள். கிட்டத்தட்ட ஐந்தடி பத்து அங்குலமாவது உயரம் இருப்பாள். மெலிந்த உடல்வாகு. ஆனாலும் அதற்குத் தோதாகத் தொடை வரை மட்டும் வந்திருந்த ஜிகினா வைத்த ஆடை அணிந்திருந்தாள். அவளுடைய வெண்ணிறத் தோலுக்கு ஏற்றாற் போல் முகப்பூச்சும், சிவந்த நிறத்தில் உதட்டுச் சாயமும் பூசியிருந்தாள். தலைமுடி இறுக்கமாக வாரி பின்னால் கொண்டையாகக் கட்டியிருந்தாள். அவளுடைய உயரம் போதாதென்று, மேலும் மூன்றங்குல உயரக் குதிக்கால் வைத்த செருப்பு அணிந்திருக்க, கிட்டத்தட்ட ஏற்றமாதிபனின் தோள் அளவுக்கு வளர்ந்து நின்றிருந்தாள் அந்த வெள்ளைக்காரி.

அவளைக் கண்டதும் முகம் பளிச்சிட, அவளை நோக்கி வந்த ஏற்றமாதிபன், “ஹே… ஜாஸ்மின்…” என்றவாறு விரைந்து சென்று வந்தவளின் இடை பற்றித் தன்னோடு இழுத்து அணைத்து, அழகாய் அவள் உதட்டில் ஒரு முத்தமிட, அந்த ஜாஸ்மின் அவனுடைய அணைப்பை ஏற்றுத் தானும் அவனை அணைத்து, அவன் கொடுத்த முத்தத்திற்குப் பதில் கொடுத்துவிட்டு விலகி, அங்கே அமர்ந்திருந்த குள்ளமான பெண்ணைப் பார்த்தாள்.

அதே நேரம் விதரணையும் அந்த உயர்ந்து நின்றவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். வேல்ஸ் இளவரசி டயானா போல, மிக அழகாகத் தான் இருந்தாள். அவள் நின்ற தோரணையில் இருந்த கம்பீரம், அவளும் காவல்துறையைச் சார்ந்தவள் என்று சொல்லாமல் சொல்ல, இவள் நெஞ்சம்தான் விம்மியது. அந்த நெடியவள் புன்னகையோடு விதரணையை ஏறிட்டுவிட்டு, பின் ஏற்றமாதிபனைக் காதலோடு பார்த்தாள்.

“ஆதி… இது யார்?” – ஆங்கிலத்தில் கேட்டாள் அவள். அந்தப் பெண்ணின் குரல் கூடக் குழையாமல் வளையாமல் மிகக் கம்பீரமாகவே வந்தது. இவனும் விதரணையைப் பார்த்துவிட்டு,

“ப்ச்… தெரிந்த பெண்… ஏதோ என்னிடம் பேச வேண்டும் என்றாள், வரச் சொன்னேன்…” என்று சொல்ல,

“ஓ… ஐ அம் சோ சாரி… வேண்டும் என்றால் நான் வெளியே நிற்கிறேன். நீங்கள் இருவரும் பேசி முடித்துவிட்டுச் சொல்லுங்கள்…” என்றவாறு அவள் திரும்ப, சட்டென்று அவள் கரங்களைப் பற்றி இழுத்தவன், அவளின் இடை பற்றி அணைத்தவாறே,

“ஓ… நோ… டார்லிங்… டோன்ட் கோ… நாங்கள் பேசுவதைப் பேசி முடித்துவிட்டோம்… இவர்கள் கிளம்புவதாகத்தான் இருந்தார்கள். அதற்குள் நீ வந்துவிட்டாய்…”

சொன்னவன் திரும்பி விதரணையைத் துளைப்பது போல் பார்க்க, இவளுக்கோ யாரோ முகத்தில் ஓங்கி அடித்த உணர்வு.

அப்படியென்றால் இவன் எனக்கில்லையா? இந்தக் கம்பீரத் தேகம் எனக்குச் சொந்தமில்லையா? ஆண்மை ததும்பும் இவன் பேச்சும் செயலும் எனக்குரிமையானதில்லையா? நினைத்தவளுக்குத் தாளவே முடியவில்லை. ஐயோ இதயம் பிளந்து கொட்டும் உதிரத்தை யார் துடைத்து விடுவர்? நம்பிக்கை மொத்தமாக இழந்தவளாக அவனை வெறித்துப் பார்த்தவள், பின் அந்த ஜாஸ்மினையும் வெறித்தாள். மீண்டும் அவனைப் பார்த்தவள்,

“நான் கடவுளிடம் வேண்டுகிறேன், இனி இந்தச் ஜென்மத்தில் உங்களை நான் பார்க்கக் கூடாது என்று… எந்த அளவு உங்களை நான் விரும்பினேனோ, அதை விடப் பல மடங்கு அதிகமாக உங்களை இப்போது வெறுக்கிறேன் ஏற்றமாதிபன்…” எனப் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப, அதுவும் ஆங்கிலத்தில் துப்ப, அந்த ஜாஸ்மினோ எதற்காக இவள் இப்படிச் சொல்கிறாள் என்று புரியாமல் ஏற்றமாதிபனைப் பார்த்தாள்.

“வாட்ஸ் கோயிங் ஆன் ஹியர்?” எனப் புரியாமல் கேட்க, தன் கைவளைவில் இருந்தவளைப் பார்த்து அழகாய்ப் புன்னகைத்தவன்,

“நத்திங் பேபி… நான் பிறகு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்கிறேன்…” என்றவன் திரும்பி விதரணையைப் பார்த்தான்.

“அது உன் இஷ்டம் விதரணை… சொல்லப் போனால் அதுதான் உனக்கும் நல்லது… என்னை வெறுத்துவிடு. மறந்துவிடு. உனக்காகப் புது வாழ்க்கை ஒன்றை அமைத்துக் கொள்… அதற்கு என்னுடைய வாழ்த்து எப்போதும் இருக்கும்…” என்றவன், இப்போது ஜாஸ்மினை விட்டு விலகி நடந்து சென்று, அந்த அறைக் கதவைத் திறந்து விட்டு, “நீ பேசுவதெல்லாம் பேசி முடித்து விட்டால்… ப்ளீஸ்…” என்றவாறு வாசலைக் காட்ட, விதரணைக்கு அவனுடைய செயல் பெரும் அவமானத்தைக் கொடுத்தது. அதற்கு மேல் அங்கே நிற்க அவளுக்குப் பைத்தியமா என்ன? உடனே வெளியேறி வந்துவிட்டாள் விதரணை. ஆனால் அவன் நினைவு?

What’s your Reaction?
+1
15
+1
1
+1
4
+1
0
+1
1
+1
6
Vijayamalar

Recent Posts

நீயின்றி உயிராடும் திகிலாலே – 18

(18) சத்தம் ஏதும் எழுப்பாமல், ஊர்ந்து வரும் பாம்பைப் போல ஏற்றமாதிபனின் வாகனம் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு மத்தியில்,…

13 hours ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 17

(17) இங்கே விதரணையைத் தன் கரத்தில் நசித்துப் பிடித்தவாறு, அங்கிருந்தவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்த வெள்ளையன். அவளோ வலியிலும் அவமானத்திலும்…

2 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 15/16

(15)   ‘யாரோ தலைக்குள் ஏறி மேளம் அடிக்கிறார்களா என்ன?’ - ஷ்... என முனகியவாறு விழிகளைத் திறக்க முயன்றாள்…

5 days ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 14

(14) பேச்சும் சிரிப்புமாக நேரம் அதன் போக்கிற்குச் சென்று மறைந்திருக்க, விதரணையைத் தேடி வந்தான் விதுரன். “அக்கா... எத்தனை நேரமாக…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 13

(13) மனது உலைக்களமாகக் கொதிக்க, ஒருவித ஆத்திரத்தோடு மண்டபத்திற்குள் நுழைந்தாள் விதரணை. அங்கே எழுத்துச் சம்பிரதாயங்கள் முடிந்து, ஆளாளுக்கு மணமக்களோடு…

1 week ago

நீயின்றி உயிராடும் திகிலாலே – 12

(12)   அங்கே சற்றுத் தள்ளி வருண் நின்றிருந்தான். அவனை மண்டபத்தில் எங்கோ பார்த்த நினைவு வர, அவசரமாகச் சேலையைச்…

2 weeks ago