October 19, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 25

(25)

 

மூன்று நாட்கள் கடந்திருந்தன. அவளுக்குப் பொருத்தியிருந்த பெரிய பிராணவாயு குழாயை நீக்கிவிட்டு, மூக்கில் மட்டும் பிராணவாயு போகும் வகையில் சின்னதாய் ஒரு டியூப் போட்டிருந்தார்கள். அது தவிர, ஒருசில கருவிகள் தேவையில்லை என்று அகற்றிவிட்டார்கள். ஆனாலும் விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை.

ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண் விழித்தால்தான் அவனுடைய மூளை முற்று முழுதாக இயங்கும்; சரியாக யோசிக்கும். இல்லை யென்றால் ஒருவித மந்த நிலையில்தான் செயல் படுவான். எப்போதும் அவளருகே அமர்ந்திருப்பவன், வீட்டிற்குப் போகும் போது மட்டும் ஒருத்தரைப் பாதுகாப்பிற்காக அமரவைத்துவிட்டுச் செல்வான். திரும்பி வந்ததும் அவள் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொள்வான் ஏற்றமாதிபன்.

இரவில் அவள் கரங்களைப் பற்றியவாறு அமைதியாக அவளையே பார்த்திருப்பான். உறக்கம் வரும் போது அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றியவாறே, படுக்கையில் அவள் வயிற்றுப் பக்கமாகத் தன் தலை வைத்துப் படுத்திருப்பான்.

அன்றும் இரவு, ஏற்றமாதிபன் விதரணையின் ஒரு கரத்தைப் பற்றியவாறு, மறுகரத்தால் அவளுடைய பிறை நுதலைத் தன் புறங்கைகளால் வருடிக் கொடுத்தபடி இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான்.

“பேபி கேர்ள்….”

அவனுடைய ஆண்மை ததும்பும் இறுகிய கரகரத்த குரல் இளகி மென்மையாக ஒலிக்க… விதரணையோ கொஞ்சம் கூட அசைவின்றி அப்படியே கிடந்தாள்.

“பம்கின்…” என்றான் இப்போது மிக மிக மென்மையாக.

முதன்முறையாக அவளைப் பார்த்தபோது அவன் அப்படித்தானே உணர்ந்தான்? குட்டியாய், சற்று உருண்டு திரண்ட உடல்வாக்கோடு, அது எப்போதாவது மறந்து போகுமா அவனுக்கு? அந்தப் பெரிய விழிகளும், துடிக்கும் உதடுகளும் இன்று வரைக்கும் அவன் மறந்ததில்லையே! மீண்டும் அதேபோல ஆர்வம் பொங்கி வழியும் அவள் விழிகளைப் பார்க்கும் ஏக்கம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், அது சாத்தியமா என்றும் தெரியவில்லை.

தன்னை மறந்து குனிந்தவன், தன் தாடி, மீசை, உதடுகள் என்று முழுதாய் அவள் நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் வைத்தான். அதைக் கூட உணராதவளாக அவள் கண்கள் மூடிக் கிடக்க… மீண்டும் இன்னொரு முறை ஆசையாக ஒரு முத்தம் வைத்தான்.

முன்பு எதற்காக அவளை விலக்கி நிறுத்தினானோ, இப்போது அதற்கான காரணங்களுக்கு அர்த்தமேயில்லாமல் போயிருக்க, அவளோடு வாழும் ஆசை வெறித்தனமாகக் கிளம்பியது. இதற்கு மேலும் அவளை விட்டு விலகியிருக்க முடியாது. போதும் இதுவரை தள்ளி இருந்தது; இனியும் முடியாது! அவள் எழுந்ததும் அவளை மணந்து, தன் கரங்களுக்குள் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் பொத்திப் பாதுகாப்பது போல அவளைப் பாதுகாக்கத்தான் போகிறான். அவள் மனதில் தீராத வடுவாகப் பதிந்து போன கசடுகளை அவனுடைய அன்பால், காதலால், ஆண்மையால் போக்கிவிடத்தான் போகிறான். அதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், அவன் உறுதியைச் செயற்படுத்த அவள் கண்விழித்துப் பார்ப்பாளா? ஏக்கம் நெஞ்சை அரித்தது.

“எழுந்து கொள் கண்ணம்மா… மூன்று நாட்களாகச் சுயநினைவு இல்லாமல் இருக்கிறாய். இன்னும் ஒரு நாள் கழிந்தால் அது உனக்குத்தான் சிக்கலாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதற்கு மேலும் உன்னை இவர்கள் வதைப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை. எத்தனை ஊசிதான் குத்துவார்கள்? எத்தனை முறை இரத்தம் எடுத்துவிட்டார்கள்… நெஞ்சம் வலிக்கிறதுமா… தயவுசெய்து விழித்துக்கொள்…” மென்மையாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவன், தன் கரத்திலிருந்த அவள் கரத்தை எடுத்து அதைத் தன் உதட்டில் அழுத்தமாகப் பொருத்திக் கொண்டான்.

அந்த நேரம் விக்டோரியா உள்ளே வந்தார். அவர்தான் அடிக்கடி வந்து விதரணையைப் பரிசோதித்து விட்டுச் செல்லும் செவிலியர். விக்டோரியாவைக் கண்டதும் மெதுவாக அவள் கரத்தை விடுவித்தவன் வந்தவரைப் பார்க்க… ஏற்றமாதிபனைக் கண்டு மென்புன்னகை ஒன்றைச் சிந்தினார் விக்டோரியா.

“ஹாய் ஆதிபன்… எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டவாறே, தன் கடமையைப் பார்க்கத் தொடங்கினார். அவளுடைய இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துவிட்டு

“இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது…” என்றவர், உடனே வெளியேறி மீண்டும் திரும்ப… ஏற்றமாதிபன் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்த இயந்திரத்தைப் பார்த்தான். 190/100 என்று காட்டியது. அதைக் கண்டு இவனும் பதறித்தான் போனான்.

இரத்த அழுத்தம் சட்டென்று உயர்வது நல்லதில்லை. அது இதயத்தின் செயற்பாட்டை நிறுத்துவதற்கு ஏதுவாகிவிடும். ஏற்கனவே கார்டியாக் அரஸ்ட்டிலிருந்து மீண்டு வந்திருக்கிறாள். அவனையும் மீறி உடல் சில்லிட,

“எதற்காக இவளின் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது?” என்றான் பதற்றமாக.

“பயப்பட ஒன்றுமில்லை ஆதிபன். இவர்கள் மயக்க நிலையில் இருந்தாலும், இவர்களின் ஆழ் மனது நடந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்காது. அது திரும்பத் திரும்ப உள்ளே படமாக விரிந்து கொண்டிருக்கும்; உடல் அதற்கேற்ப எதிர்வினை ஆற்றுகிறது. இது ஒருவிதத்தில் நல்ல குறியீடுதான். நினைவு திரும்புவதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால், மிக அவதானமாக இவர்களைக் கண்காணிக்க வேண்டும். ஒரு கட்டத்திற்கு மேல் உயரும் இரத்த அழுத்தம் இதயத்திற்கு நல்லதல்ல. அப்படி ஏறினால் தாமதிக்காமல் அழைப்பு மணியை அழுத்துங்கள். உடனே இதற்கான தணிப்பு மருந்தின் அளவை அதிகரிக்கிறேன்,” என்றுவிட்டு, எடுத்து வந்த இரத்த அழுத்தத் தணிப்பு மருந்தினை அவளுடைய சிரை வழியே ஏற்றினார்.

ஒருசில விநாடிகளில் விதரணையின் இதயத் துடிப்பு சீராகி, இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது. அதைக் கண்டு நிம்மதியடைந்தவராக, “குட்…” என்றவர், வழக்கம்போல விதரணையின் மேலாடையைத் தளர்த்தி காயங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.

முதுகில் ஏற்பட்ட காயத்தைப் பார்த்துத் திருப்தி கொண்டவராக, “குட்… தொற்று எதுவுமில்லை…” என்றுவிட்டு, முன்பக்கம் வந்து ஆடையை இழுத்து விட்டுப் பார்த்தார். மெதுவாகக் கட்டுப் போட்டதை விலக்கி, எங்காவது துர்மணம் வருகிறதா, நிறம் மாறியிருக்கிறதா, ஏதாவது கசிவு இருக்கிறதா, இல்லை சிவப்பாக இருக்கிறதா என்று பரிசோதித்து விட்டு, கட்டில் கொஞ்சம் பழைய இரத்தம் பட்டு அழுக்காகி இருக்க… மெதுவாக அவற்றைக் கழற்றி ஓரமாக வைத்தார். அந்த நேரத்தில் ஏற்றமாதிபனும் விதரணையின் மார்புக் காயங்களையும், மார்பகங்களில் ஏற்பட்டிருந்த கண்டல்களையும்தான் வெறித்துப் பார்த்தான்.

இப்போது கண்டல் மார்பகம் முழுவதும் பரவி கருநீலமாக மாறியிருந்தது. சொல்லப்போனால் நெஞ்சு முழுவதும் கருநீலமாக மாறிவிட்டிருந்தது. அவள் இரும்புத் தூணின் மீது மார்பு அடிபட விழுந்திருக்கிறாள் என்பது பார்க்கும் போதே உணர முடிந்தது. அது அவளது வெண்மை நிறத்திற்குப் பச்சை குத்தியது போல ஆழமாகத் தெரிந்தாலும், முன்னை விட வீக்கம் சற்றுக் குறைந்திருந்தது. அதையே விக்டோரியாவும் உறுதி செய்தாள்.

“வீக்கம் வத்திக்கொண்டு போகிறது…” என்றவர் அவளுடைய மார்பகத்தை மெதுவாக அழுத்திப் பார்த்துவிட்டு, “எந்தக் கட்டியோ இறுக்கமோ இல்லை. பயப்படாதீர்கள், விரைவில் உங்கள் மனைவி குணமடைந்துவிடுவார்,” என்று சொன்ன விக்டோரியா, காயத்திற்குக் கட்டுப்போட்டு முடித்து அவள் அங்கியை சரியாக்கிவிட்டு எழுந்து போக, விக்டோரியா சொன்னதைக் கேட்டவாறு, விதரணையின் மறுபக்கம் வந்தவன், ஏனோதானோ என்று போட்டிருந்த மருத்துவ ஆடையைச் சரியாக்கி, ஆடையின் முடிச்சைப் போட்டவாறே, விக்டோரியாவைப் பார்த்து,

“அவளுக்கும் வேறு வழியில்லை விக்டோரியா. அவள் குணமாகியே ஆக வேண்டும்…” என்றான் அழுத்தமாக.

அதைக் கேட்டுப் புன்னகைத்த விக்டோரியா, “உங்கள் மனைவி மிகவும் அதிர்ஷ்டசாலி, உங்களைப் போன்ற ஒரு கணவனை அடைவதற்கு…” என்றார் விரிந்த புன்னகையுடன்.

அதைக் கேட்டு மெலிதாக நகைத்தவன்,

“நானும் அதிர்ஷ்டசாலிதான் விக்டோரியா… இவள் எனக்குக் கிடைக்க…” என்று கூற… அதற்கும் புன்னகைத்துவிட்டு கொண்டுவந்த வண்டியைத் தள்ளிக்கொண்டு அவர் வெளியேறியதும், தன்னவளின் முதுகுப்பக்கம் பக்குவமாகத் தலையணை வைத்து, போர்வையை அவள் மீது போர்த்திவிட்டு, மீண்டும் அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக் கொண்டான் ஏற்றமாதிபன். அன்றைய நாளும் கடந்தது.

மறுநாள் அதிகாலை நான்கு மணியளவில், ஏற்றமாதிபன் விதரணையின் கரங்களைப் பற்றிய வாறே, அவளுடைய வயிற்றுக்கு அருகாமையில் படுக்கையில் தலை வைத்து நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அவசரச் சிகிச்சைப் அறையின் இயந்திரங்களின் ‘பீப்’ சத்தம் மட்டும் அந்த அறையை நிறைத்திருக்க… விதரணையின் சுட்டுவிரலில் மெல்லிய அசைவு. அதைத் தொடர்ந்து இரண்டு விரல்கள் அசைந்தன. தொடர்ந்து அவளுடைய கால்களின் அசைவு. அவளது மூடிய இமைகளுக்குப் பின்னால் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து மெல்ல… மிக மெல்ல அவளது இமைகள் பிரிந்தன.

இருண்ட அறையில் அவளுக்கு எதுவும் தெளிவில்லை. முதலில் அவளுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்றுகூடத் தெரியவில்லை. உள்ளே ஏதேதோ தவிப்பு, குழப்பம், தடுமாற்றம், புரியாத நிலை. இதில் அடித்துப் போட்டது போலத் தேகமெல்லாம் வலி. எதற்கு வலிக்கிறது? காரணம் தெரியவில்லை. அந்த வலியிலிருந்து மீள விழிகளை மெதுவாக மூடித் திறந்தாள். இருந்தும் வலியும் அந்த மந்த நிலையும் போகவில்லை. மெதுவாகத் தலையை அசைத்து எதையோ தேட முயன்றாள்; ஒன்றும் புலப்படவில்லை.

உடலின் வலிதான் கூடியது. அந்த வலியோடு முனக முயன்றாள், முடியவில்லை; தொண்டை அடைத்துக் கிடந்தது. கண்ணின் மணியான பெற்றவள் நினைவுக்கு வந்தாள். அம்மா பக்கத்தில் இருந்தால் இந்த வலி அனைத்தும் காணாமல் போய்விடும், இந்த மந்த நிலை தொலைந்து போகும். இந்த நேரத்தில் அவளருகே இல்லாமல் எங்கே போனாள்…? “அம்மா…” மீண்டும் அழைக்க முயன்றாள்; குரல் வரவில்லை. ஏன் குரல் எழும்ப மறுக்கிறது? ஏதாவது பயங்கரக் கனவு காண்கிறோமோ…? ஏன் இடது மார்பில் இத்தனை வலி?

“அம்மா… எங்கேம்மா இருக்கிறீர்கள்? வலிக்கிறது…” சொல்ல முயன்றாள், முடியவில்லை. யாராவது உதவிக்கு வாங்களேன்… கத்தத் தோன்றியது; முடியவில்லை. சிரமப்பட்டு அங்கும் இங்கும் பார்க்க முயன்றாள்.

அடுத்த சில விநாடிகளில், அவளது மூளைக்குள் அந்தப் பழைய நினைவுகள் மின்னலென மோதின! இரத்தம் படிந்த கத்திகள், தன் பெற்றோரின் கடைசி அலறல், அந்தக் கயவர்களின் கொடூரமான கைகள்… எல்லாம் ஒன்றுசேர நினைவுக்கு வர, அவளது உடல் சட்டென்று தூக்கிப் போட்டது. அவளது இதயத் துடிப்பைக் காட்டும் திரையில் இப்போது அபாயச் சத்தம் எழுந்தது!

மூச்சு விட முடியாமல் திணறியவளுக்குக் கத்திக் குத்து விழுந்த இடமெல்லாம் நெருப்பாய் எரிந்தது. அவளது கைகள் காற்றில் எழ முயன்றன; முடியவில்லை.

“வேண்டாம்… அவர்களை விடுடா… டேய்… அப்பா… அம்மா… விதுரா…!” என்று அவளது வாய் சத்தமில்லாமல் முணுமுணுத்தது.

அதுவரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஏற்றமாதிபனுக்கு, திடீரென்று யாரோ அவனை உலுப்புவது போலத் தோன்ற… எப்போதும் எச்சரிக்கையாக இருந்தே பழக்கப்பட்டவன், திடுக்கிட்டுச் சடாரென்று எழுந்து பார்த்தான். அங்கே விதரணையின் உடலில் ஏற்பட்ட அசைவைக் கண்டு முதலில் மகிழ்ந்தவன், மறுகணம் அவளுடைய விழிகள் சொருகிய விதத்தையும் முகத்தில் தெரிந்த பயத்தையும் கண்டு பதறிப்போனான்.

எப்போதும் சரிந்த நிலையில் படுக்க வைக்கப் பட்டிருப்பவள், இப்போது மல்லாக்கப் படுத்து இருந்தாள். பின்னால் வைத்திருந்த தலையணையைக் காணோம்.

இப்போது கைகளோ மெல்லிய அசைவில் தொடங்கி, விநாடிக்குள் பலமாக அசையத் தொடங்கின; அடுத்து உடல் துடிக்கத் தொடங்கியது. தொண்டையோ எதையோ சொல்லத் துடித்தது. சீற்ற மூச்சு அவளை விட்டு வெளியேற, தலையோ பலமாக வலமும் இடமுமாக அசையத் தொடங்க… வேகமாக அவளுடைய தோள்களைப் பற்றிக் கொண்டான் ஏற்றமாதிபன்.

அவளுடைய தொண்டையின் அசைவை வைத்து அவள் எதையோ சொல்ல முயல்கிறாள் என்பது அவனுக்குப் புரிய,

“விதரணை… பயப்படாதே! கண்ணம்மா… மை பேபி கேர்ள்… உனக்கு ஒன்றுமில்லை… நான் இங்கே தான் இருக்கிறேன். உனக்குப் பக்கத்தில்தான் இருக்கிறேன்… நீ இப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். விதுமா… என்னைப் பார்…” என்று அவளுடைய புத்திக்கு ஏறும் விதத்தில் அவன் சொல்ல… அவளோ மேலும் துடித்து உதறத் தொடங்கினாள்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் பாய்ந்து அவளருகே படுத்தவன், அவளை மென்மையாக இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு அவள் தலையையும் முதுகையும் மென்மையாக வருடி,

“கண்ணம்மா… காம் யுவர்செல்ஃப்… உன்னைத் திடப்படுத்திக்கொள்… நீ நன்றாக இருக்கிறாய்… என்னைப் பார்… இங்கே உன் பக்கத்தில்தான் இருக்கிறேன். நீ நன்றாக இருக்கிறாய்…” என்று அவளை மென்மையாக அணைத்தவாறு தட்டிக் கொடுத்தும் அசுவாசப்படுத்தியும் சொல்ல… அவளுடைய கண்கள் இப்போது கண்ணீரைப் பொழியத் தொடங்கின.

தொண்டை கமறியது. மண்டையில் ஏறிய அந்தத் கொடூர நினைவுகள் தரை இறங்காமல் அவளை வதைக்க, உள்ளே இழுத்த மூச்சு வெளிவராமல் தடுமாறியது. அதைப் புரிந்தவனாக அவளுடைய முகத்தை ஒரு கரத்தால் பற்றி,

“ஷ்… ஷ்… பம்கின்… யு ஆர் ஓகே… டு யு ஹியர் மி…? யு ஆர் பெர்ஃபெக்ட்லி ஓகே…! இங்கே பார்… என்னைப் பார்… விதுமா… இங்கே என்னை ஒரு முறையாவது பாரேன்… உனக்கு ஒன்றுமில்லை.” என்றவன், அவள் தவிப்பு கொஞ்சம் கூடக் குறையாமல் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறினான். அவளை எப்படி விழிப்படையச் செய்வது என்று சத்தியமாகப் புரியவில்லை; அவளை அந்த நிலையில் கண்கொண்டு பார்க்கவே அவனால் முடியவில்லை.

அவளுடைய கண்களில் தெரிந்த மரண பயமும், ஆற்றாமையும், தவிப்பும், கலக்கமும், இயலாத தோல்வியும் ஆதிபனின் இதயத்தை அறுத்தன. இன்னும் அவள் தன்னிலைக்கு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு, முதலில் அவளைச் சுயத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பது மட்டும் புரிய… அவள் முகத்தைத் தன் கடிய மார்பில் புதைத்து, இராட்சதப் பராந்து கோழிக்குஞ்சொன்றைப் பாதுகாப்பாக அணைத்துப் பிடிப்பது போல இறுக அணைத்துக் கொண்டான்.

அவளோ திமிறினாள்; இவனோ இழுத்துப் பிடித்தான். “பேபி… பேபி… காம் யுவர்செல்ஃப்… காம்…” என்றவனின் கரங்கள், அவள் வெற்று முதுகை வருடி, தட்டி, தடவி, அழுத்தி என்று அவளைச் சமாதானம் செய்யத் தொடங்க… சற்று நேரம் துடித்த அவளுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப்போகத் தொடங்கியது. அவனுடைய அணைப்பா, இல்லை அவன் வாசனையா, அல்லது அவன் உடலின் வெம்மையா… என்னவென்று தெரியவில்லை… மெல்ல மெல்ல அவள் தவிப்பும் துடிப்பும் அடங்கிப் போக, வெறித்துத் துடித்த அவள் விழிகள் இப்போது அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டன.

தன் அணைப்பில் அவள் துடிப்பு அடங்கி இருப்பதைக் கண்டவன், மெதுவாக அவளைத் தன் மார்பிலிருந்து விலக்கிக் குனிந்து பார்த்தான். அவளது கண்கள் இப்போது நிலைகுத்தி அவனையே பார்த்தன. மந்த நிலை விலகி, மெல்ல மெல்லத் தன் முன்னே இருப்பது ஏற்றமாதிபன் என்பதை அவளது மூளை அடையாளம் கண்டுகொண்டது. அவனது கூரிய விழிகளில் தெரிந்த அந்தத் தவிப்பும் கலக்கமும், அதையும் மீறித் தெரிந்த உறுதியும் அவளுக்குள் ஏதோ ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க… சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தாள் விதரணை. மெல்ல மெல்ல கண்முன்னே தெரிந்த அந்த கம்பீர முகத்தை விழிகளால் கவ்விப் பிடித்து இதயத்திற்கு அனுப்பியவள்,

“ஏற்றன்….” என்று அவளது இதழ்கள் சத்தம் இல்லாமல் உச்சரித்தன.

அவளது அந்த மென் குரலிலும், அவள் அழைத்த ‘ஏற்றன்’ என்கிற அழைப்பிலும் ஒரு கணம் சிலிர்த்துத்தான் போனான் அந்த ஆண்மகன்.

அவனுடைய உடலில் மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வில், சட்டென்று அவன் விழிகளில் கண்ணீர்த்துளி கோடாய் இழுக்க… வலது கரத்தின் உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் பொத்தினாற் போல வைத்தவன், அவள் விழிகளை மாறி மாறிப் பார்த்தவாறே,

“யெஸ் பேபி… யெஸ்.. இட்ஸ் யுவர் ஏற்றன்…” என்று கரகரத்த குரலில் சொன்னவன், மறுகணம் அவளுக்கு வலிக்காத வகையில் மென்மையாகத் தன் உடல் படர அவளைத் தன்னோடு மீண்டும் அணைத்துக் கொண்டான்.

இதயமோ அவளுடைய அந்த ஒற்றை அழைப்பில் தேனாய் உருகிப் போக, தேகமெங்கும் இனிப்பாய் தித்தித்தது. இத்தனை நாட்களாக அவன் காத்துக் கொண்டிருந்த அந்த ஒரு வார்த்தை! அதைக் கேட்ட மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் பாகாய் உருகியவன், மெதுவாக அவளை விடுவித்து அவளுடைய நெற்றியில் மென்முத்தம் ஒன்றைப் பதித்தான். பின் என்ன நினைத்தானோ, சற்றுக் கீழிறங்கி காய்ந்து வறண்ட செவ்விய இதழ்களை அப்படியே கவ்விப் பற்றித் தன் ஈரத்தை அவளுக்குக் கடத்த… விதரணையோ எந்த மறுப்பும் சொல்லாமல் அவன் முத்தத்தை உள்வாங்கி அப்படியே அவன் கரங்களில் கிடக்க, மெதுவாகத் தன் உதடுகளை அவளிடமிருந்து பிரித்து எடுத்தான் ஏற்றமாதிபன்.

பின் அவள் கன்னத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“மை பேபி கேர்ள்…” என்றான் கிசுகிசுப்பாக. அவன் விழிகளோ அவள் முகத்தையே இமைக்காமல் அங்கும் இங்கும் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்டது. பின் அவள் விழிகளில் தன் விழிகளை அழுத்தி, “பயப்படாதே… உனக்கு ஒன்றுமில்லை சரியா… நான் உன் பக்கத்தில்தான் இருக்கிறேன்… எப்போதும் இருப்பேன். இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது; வரவும் விடமாட்டேன். உன் நிழலாக நான் எப்போதும் இருப்பேன் தங்கம்மா… ஐ பிராமிஸ் யு… டோன்ட் பேனிக்… ஓகே…” என்று அவன் கரகரத்த குரலில் சொல்ல… விதரணையின் கண்களில் இருந்து பல துளி கண்ணீர் வழிய, துடித்துப்போனான் அவன்.

“ஷ்..ஷ்.. ஷ்.. டோன்ட் பேபி… டோன்ட் கிரை… அதைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை…” தவிப்போடு அவள் கன்னத்தை வருடிய அதே பெருவிரலால் அவள் கண்ணீரையும் துடைத்துவிட்டவன், மறுபக்கம் வழிந்த கண்ணீரைத் தன் கடிய உதடுகளால் துடைத்துவிட… விதரணையின உதடுகளோ அழுகையில் மேலும் நடுங்கத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் வழிந்த கண்ணீரைப் பெருவிரலும் உதடுகளும் துடைத்துவிட, சற்று நேரம் இருவரும் அப்படியே இருந்தனர்.

இப்போது விதரணையின் மூச்சு கொஞ்சம் சீராகத் தொடங்கியிருந்தது. ஆனால், அடுத்த கணமே அவளது பார்வை அறை முழுதும் அலைபாய்ந்தது. ஏதோ ஒன்றைத்தேடியது அவளது கண்கள். பின் பீதியில் முகம் வெளுக்க, வலது கரத்தால் அவனது சட்டையைப் பலமாகப் பற்றிக்கொண்டவள், தன்னிடமிருந்து விலக்கியவாறே,

“அப்பா… அம்மா… விதுரன்… அனைவரும் எங்கே? ஏன் இங்கே இல்லை?” என்று திக்கித் திணறி வினவ… ஏற்றமாதிபனுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று சத்தியமாகப் புரியவில்லை.

அவள் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கிடந்து தவிக்கிறாள் என்பது புரிந்தது. அதனால்தான் பெற்றவர்களுக்கு நடந்த துன்பம் தெரிந்திருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நிகழ் கால மனது தவிப்பதை அறிந்து… அவளுடைய கேள்விக்கு உண்மையைச் சொல்வதா, இல்லைப் பொய் சொல்வதா என்று புரியாமல் அவன் தயங்கி நின்ற நேரம், அவளது மார்பிலிருந்த காயத்தின் வலி அவளைச் சுண்டி இழுத்தது.

அந்த வலியில் முகம் கசங்கியவள், மெல்லிய முணங்கலோடு அவன் ஷேர்ட்டைப் பற்றியிருந்த தன் கரத்தை விலக்கித் தன் நெஞ்சைத் தொட முயன்றாள்.

அதை உணர்ந்தவனாகச் சட்டென்று அவளை விட்டு விலகி எழுந்தவன், அவள் உதறியதால் தள்ளிப்போன தலையணையை எடுத்து அவளைச் சரியவாகப் படுக்கவைத்து, அவள் முதுகில் அரணாய் வைக்கப் போக… சட்டென்று அவன் கரத்தைப் பற்றினாள் விதரணை.

“அம்மா… அப்பா… அவர்கள் எங்கே…?” திக்கித் திணறிக் கேட்டாள்.

தொண்டைக்குள் சேர்ந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கியவன், அவள் முகம் பார்க்கச் சக்தியின்றி அவள் கரத்தை விலக்கிவிட்டு, தலையணையைச் சரியாக அவள் முதுகின் பக்கமாக அரணாக வைத்தவாறு, அவள் படுக்கையில் கட்டியிருந்த அழைப்பு மணியை அழுத்த, சுவரில் பொருத்தி இருந்த இன்டர்காமில் இருந்து,

“ஏதாவது வேண்டுமா?” என்கிற தாதியின் குரல் கேட்டது. அதற்குத் தன்னவளைப் பார்த்தவாறே,

“விதரணை விழித்துவிட்டாள்…” என்று அவன் சொன்னதும்,

“நல்ல செய்தி… இதோ…. இப்போதே தகவலை விக்டோரியாவுக்கு சொல்லிவிடுகிறேன். தயவு செய்து அவர்கள் எழுந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்… விக்டோரியா இன்னும் ஒரு சில நிமிடங்களில் வந்துவிடுவாள்…” என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, இவளோ ஏற்றமாதிபனை வெறித்து,

“அம்மா எங்கே…. அப்பா எங்கே…” என்றாள் திக்கித் திணறி.

இப்போடு இவள் பக்கமாக வந்தவன்,

“அவர்களைப் பற்றி இப்போது யோசிக்காதே விதரணை. நீ முதலில் குணமாக வேண்டும். அவர்கள்… அவர்கள் பாதுகாப்பாக ந.. நன்றாகத் தான் இருக்கிறார்கள்,” என்று அந்தப் பொய்யைச் சொல்லும்போது அவனது குரலில் இருந்த தயக்கத்தை விதரணை அந்த நிலையிலும் கண்டுகொண்டாள்.

கழுத்தில் இரத்தம் பீறிட்டுப் பாய தந்தை சரிந்தது நினைவுக்கு வந்தது; அதேபோலத் தாயும்… மெல்ல மெல்ல அவர்களின் மரணம் நினைவுக்கு வர, அவளுடைய விழிகள் சொல்ல முடியாத வலியோடும் வேதனையோடும் விரிந்தன. மறுகணம் அவளுக்குப் போர்வையைப் போர்த்த முயன்றவனின் மேல் சட்டையை வலது கரத்தால் கசக்கிப் பற்றியவள், பலமில்லாமலே அவனைத் தன்னை நோக்கி இழுக்க… அவளுடைய இழுப்புக்குத் தானாகவே அவள் முகம் நோக்கிச் சரிந்தவனை வெறித்தவள்,

“பொய்… பொய்தானே சொல்கிறீர்கள்… அங்கே இரத்தம்… அப்பாவின் கழுத்து வெட்டப்பட்டு… அம்மா வேறு… நோ…. நோ…” என்றவளின் குரல் உடைந்து விம்மலாக மாற… அதை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் ஏற்றமாதிபன் தவித்த அந்த இக்கட்டான நிலையைக் காப்பாற்றவென்று உள்ளே நுழைந்தாள் விக்டோரியா.

What’s your Reaction?
+1
12
+1
1
+1
5
+1
0
+1
15
+1
2

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!