(21)
ஆதிபன் மனம் அமைதி அஅடையும் வரைக்கும், இரவின் குளிரில் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய போது, மனம் சற்று அமைதி அடைந்திருந்தது.
இதே அமைதி அவளைக் கண்டதும் இருக்குமா, இல்லை தொலைந்து போகுமா என்று தெரியவில்லை. சலிப்போடு வீட்டிற்கு வந்தவன் கதவைத் திறக்க, பெரும் அமைதிதான் அவனை வரவேற்றது.
‘தூங்கிவிட்டாளா? ஒரு பக்கம் நிம்மதி எழுந்தாலும், இன்னொரு பக்கம், இப்போதேயா?’ என்கிற கேள்வியும் எழுந்தது. அவனையும் மீறி அவனுடைய கால்கள் மதிமையின் அறையை நோக்கிச் சென்றன. கதவின் குமிழில் கரம் பதித்துத் திறக்க முயன்றவன், சட்டென்று கரத்தை இழுத்துக் கொண்டான்.
‘என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறான்? சும்மாவே ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. இதில், உறங்கும் அவளைப் பார்த்துவிட்டால் இப்போது அமைதியாக இருக்கும் மனம் மீண்டும் சலனப்படும்.’ தன்னைத் தானே.. திட்டிக் கொண்டவன், தன் முயற்சியைக் கைவிடுத்துத் தன் அறைக் கதவைத் திறக்க, அங்கே அவனுடைய மகனை அணைத்தவாறு உறங்கியிருந்த மதிமையின் உடல் எழில்தான் அவனை வரவேற்றது.
அதைக் கண்டவனுக்குள் மிகப் பெரும் பிரளயம். சத்தியமாக இந்தக் காட்சியை அவன் எதிர்பார்க்கவேயில்லை. அவளுடைய அறைக்குள் நுழையாமல் தப்பி வந்ததே, அவளைக் காணக் கூடாது என்பதால்தான். அதுவும் இந்த தனிமை கொடுத்த இரவின் வேகம், அவனை மேலும் தவிக்கச் செய்ய, அதற்கு மேல் அவளுடைய நிழலைக் கூடத் தீண்ட முடியாமல்தான் வெளியே ஓடினான். இப்போது என்னவென்றால்,
அவனுடைய அறைக்குள், அவனுடைய படுக்கையில் படுத்திருக்கிறாளே…!
அவசரமாக, அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவனின் கால்கள் தடைபோட்டாற் போல நின்றன. அவனுடைய கள்ள விழிகளோ, அவளை நோக்கிச் சென்றன. அவள் வேறு படுத்திருந்த நிலை சற்று எசகுபிசகாக இருக்க, பெண்மையின் மென்மை அவனுக்கு விருந்தாகியது. விழிகளோ, காமத்தோடு அவளைத் தலை முதல் கால் வரை ஏறிட்டன. பார்க்கும் இடங்களெல்லாம் விரல்கள் கொண்டு கோலம் வரைய, அவசரமாய் உணர்வு கட்டளையிட்டது.
‘சீ.. என்ன காரியம் செய்யத் துணிகிறாய்… இது தவறு… வெளியே போ என்றது பகுத்தறிவு. காமத்திற்கும் பகுத்தறிவுக்கும் உள்ளே சண்டை நடந்து கொண்டிருக்க, அவர்களின் சண்டையை ஓரம் கட்டிவிட்டு விழிகள் தாராளமாகவே அவளுடைய எழிலைப் பருகத் தொடங்கின.’
எத்தனை நேரமாக அங்கேயே நின்று இருந்தானோ, அதுவரை தாயின் அணைப்பில் படுத்திருந்த வரோதயன், திரும்பிப் படுக்க முயல, அந்த நிலையிலும், குழந்தையின் அணைப்பை விடாமல் இறுக்கிப் பிடித்திருந்த மதிமை, மகனை மெல்லமாகத் தட்டிக் கொடுக்க, அந்தத் தட்டலில் மீண்டும் கண்ணயர்ந்தான், வரோதயன்.
இதைக் கண்ட ஆதிபன் சுயம் பெற்றவனாகத் தன் தலையை உலுப்பிவிட்டுக்கொண்டான்.
அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா என்ன? அவன் மனநிலை அவளுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பாள்? தன் மீதே கோபம் வரக் கதவைச் சாற்றிவிட்டுத் திரும்பி நின்றவனுக்கு, அன்றைக்கு சிவராத்திரிதான் என்பது நன்றாகப் புரிந்து போனது.
ஆதிபனுக்குத் குறுகிய நாட்களில் மாறிப் போன தன் வாழ்க்கையை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.
‘எந்த சிக்கலுமில்லாமல் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று நன்றாகத்தான் இருந்தான். திடீர் என்று உனக்கொரு குழந்தை இருக்கிறது என்று வந்த கடிதத்தில் தடம்புரண்டது அவன் வாழ்க்கை.
சரி மகன் இருக்கிறான், அவனை அழைத்த வந்தால் போயிற்று, என்று நினைத்திருந்த வேளையில், அவனை வளர்த்தவளையே திருமணம் முடிக்கவேண்டிய சூழ்நிலை. சரி திருமணம் முடித்தாகிவிட்டது, நண்பர்களாகவே இருந்து வரோதயனை வளர்க்கலாம் என்று முடிவு செய்த வேளையில், அந்த எல்லையைத் தாண்டி, மனம் வேறு எதையோ எதிர்பார்க்கிறதே. அதுவும் அவளிடம், இதை மீறி உன்னிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டேன், என்று சொன்ன பின்பும் மனம் ஆலாய்ப் பறந்து தொலைக்கிறது.
இல்லை, இதை இப்படியே விடக் கூடாது. இந்த உணர்வுகளுக்குக் கடிவாளம் பூட்டியே ஆக வேண்டும்.
இல்லையென்றால், தாறுமாறாக எதை எதையோ அது யோசிக்கும். ஈழம் போகும் வரைக்கும் தான் இந்த சிக்கல். போய்விட்டால் அவனுடைய உலகம் மாறிவிடும். இவளைப் பார்ப்பதற்கோ, இல்லை.. இவளோடு நேரம் செலவிடவோ நேரம் கிடைக்காது. அதற்கு பிறகு மனம் ஒரு கட்டுக்குள் வந்துவிடும். சந்தேகமில்லை.
நிம்மதி கொண்டவனாக, முன்னறைக்கு வந்தவன், நீள் இருக்கையில் தொப்பென்று விழுந்தான். விழிகளை மூட மதிமைதான் அழகிய சிரிப்போடு அவனைப் பார்த்து என்ன என்பது போலக் கேட்டாள்.
மறுநாள் அதிகாலை மதிமை எழுந்த போது சற்றுத் தாமதமாகிவிட்டிருந்தது. முன்னிரவு தூக்கம் வராததன் விளைவு. அவசரமாக வரோதயனை அருகில் தேட, அவனைக் காணவில்லை. நெஞ்சில் பயப்பந்து அடிக்க, எழுந்த போதுதான் சேலையோடு படுத்திருப்பது புரிந்தது. தட்டுத் தடுமாறி குளியலறை நோக்கி ஓடியவள், காக்கா குளியல் குளித்துச் சேலையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது, மேசையிலிருந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தான் வரோதயன்.
அவனை அங்கே கண்ட பின்புதான் மதிமைக்கு பெரும் நிம்மதியே எழுந்தது.
மகனை நெருங்கி, அவனுடைய தலையை வருடி, உச்சியில் முத்தமிட்ட மதிமை,
“என் கட்டித் தங்கம்… என்ன சாப்பிடுகிறீர்கள்…” என்று செல்லம் கொஞ்ச, சமையலறையிலிருந்து தட்டில் டோஸ்டோடு வந்துகொண்டிருந்தான் ஆதிபன்.
அவனைக் கண்டதும் மீண்டும் இதயம் படபடக்கத் தொடங்க, அவசரமாகத் தன் விழிகளை விலக்கிக்கொண்டாள், மதிமை. அவனைக் கண்டால்தானே மனம் ஏதேதோ நினைக்கிறது. பார்க்காமல் இருக்க வேண்டியதுதான். ஆனால், அவன் பக்கத்தில் நின்றால் கூட தேகத்தில் ஒருவித சூடு பிறக்கிறதே. இது என்ன கொடுமை. மனதிற்குள் திட்டும்போதே, ஆதிபனும் அதே நிலையில்தான் இருந்தான்.
சிரமப்பட்டு அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தவனாக, மேசையில் டோஸ்டை வைத்தவன், உணவின் மீது விழிகளைப் பதித்தவாறே,
“தூங்கினாயா?” என்றான். இவளும் எங்கோ பார்த்தவாறு, ஆம் என்றாள்.
“குட்…” என்றவன், சமையலறைப் பக்கமாகத் தலையை அசைத்து,
“காப்பி வார்த்திருக்கிறேன்… டோஸ்ட்டும் போட்டு வைத்திருக்கிறேன்… சாப்பிடு… இன்று, நாம் வெளியே செல்ல வேண்டும்… உனக்கும், வரோதயனுக்கும் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டும். திங்கள் பிறந்தால், இதற்கெல்லாம் நேரம் கிடைக்காது…” என்றவன், அவசரமாகத் தன் உணவை முடித்துக்கொண்டு, தன் அறைக்குள் நுழைந்து கொள்ள, இவள் நிம்மதி மூச்சொன்றை விட்டாள். அவன் அங்கே இருக்கும் வரைக்கும் ஏதோ அடைப்பது போல ஒரு உணர்வு.
அன்று மாலை, பிரசித்தி பெற்ற மால் ஒன்றுக்கு மதிமையை அழைத்துக்கொண்டு சென்றான் ஆதிபன். அங்கே பல கடைகள் ஏறி இறங்கினார்கள். ஆதிபன், வரோதயனுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் குவித்தான். மதிமைக்காக அவன் வாங்க முயன்ற போது, உடனே தடுத்துவிட்டாள்.
“இல்லை… என்னிடம் போதியளவு ஆடைகள் இருக்கின்றன… வேண்டாமே…” என்றவளை ஒரு மாதிரி பார்த்தவன்,
“முன்பு நீ எப்படியோ, இப்போது என் மனைவி. அங்கே போனதும், நைந்துபோன துணியோடு இருக்கும் உன்னை மனைவியாக எப்படிச் சுட்டிக் காட்டுவது?” என்றவனை கோபத்துடன் பார்த்தாள் மதிமை.
“என்னுடைய ஏழ்மைதான், உங்களுடைய தராதரத்தை நிர்ணயிக்கிறதா?” என்கிற கேள்வி சீற்றமாக எழ, அதையே அவனிடம் வாய் விட்டும் கேட்டுவிட்டாள் மதிமை. ஒரு கணம் அவளை அழுத்தமாக ஏறிட்டு,
“நீ நம்பினாலும், நம்பவில்லை என்றாலும் நிதர்சனம் அதுதான். ஆள் பாதி ஆடை பாதி…! கேள்விப்பட்டதில்லை நீ?” என்றவனிடம் வாக்குவாதமாக எதையோ கூறவர, உடனே கை நீட்டித் தடுத்தவன்,
“நான் சொல்லி முடித்து விடுகிறேன்… நீ இப்படி மலிந்த ஆடைகளைப் போடுவதால், உனக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை என்று தப்பாக நினைப்பார்கள். இல்லை என்றால், நீ பணத்திற்காக என்னை எய்த்தாய் என்று கூசாமல் சொல்வார்கள்! அதுவுமில்லை என்றால், நாம் இருவருக்கும் இடையில் புனையப்பட்ட கதை பொய் என்பதைச் சுலபமாகவே கண்டு பிடிப்பார்கள். இது நமக்குத் தேவையா? பேசாமல் விவாதம் செய்யாமல் பொருட்களை வாங்கு…” என்றவன் அங்கும் இங்குமாகப் பார்த்தவாறு,
“உனக்கு எத்தகைய ஆடைகள் பிடிக்கும். நவீன ரகமா? இல்லை…” என்றவாறு திரும்பியவன், அவளை ஒரு முறை மேலும் கீழும் பார்த்தான்.
பாகி பான்ட், அதற்கேற்பத் தொளதொள மேல்சட்டை. சேலை உடுத்திய போது அழகாய் தெரிந்த இடையின் அழகு மொத்தமாகத் தொலைந்திருந்தது.
மதிமைக்கு மிக அழகிய உடல். மெல்லிசும் இல்லாமல், அதிக சதைப்பற்றும் இல்லாமல், கோவிலில் செதுக்கிய சிற்பம் போல, ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்கும். அந்த அழகிய உடலை இத்தகைய உடையில் மறைப்பதென்றால்… எரிச்சலுடன் திரும்பியவன், அவள் உடலுக்கேற்ற வகையில் ஆடைகளைத் தேர்ந்தெடுக்கத் தொடங்க. இவளுக்குத்தான் விழிகள் பிதுங்கிக் கொண்டு வந்தன.
மதிமை ஒன்றும் நாகரீகம் தெரியாதவள் அல்ல. அதே நேரம், எத்தகைய ஆடைகள் நாகரீகத்தைச் சாரும், எத்தகைய ஆடைகள் அநாகரிகத்தைச் சாரும் என்பதைத் தெளிவாகவே தெரிந்து வைத்திருப்பவள் தான். ஆனால் அவன் எடுத்து வைத்த ஆடைகளைப் பார்க்கும் போது, இவளுக்குத்தான் உதறல் எடுத்தது.
ஒரு ஆடைக்குத் தொடை வரை வெட்டியிருந்தது. பெரும்பான்மையான ஆடைகள் அப்படித்தான் இருந்தன. சில ஆடைகளுக்கு முதுகைக் காணவில்லை. ஒரு சிலதுக்கு மார்பகங்களின் அரைப்பாகம் நிச்சயமாக வெளியே தெரியும். அவள் ஒன்றும் கட்டுப்பெட்டி கிடையாது தான். அந்த அந்த இடத்திற்கேற்ப, ஆடைகள் அணியத் தெரிந்தவள்தான். என்ன, நான்கு வருடங்களாகப் புதுத் துணிகள் வாங்குவது மிக அருமையாகிப் போனது. அப்படி வாங்குவதாக இருந்தாலும், நான்கு விதமாக யோசித்து, குளிர்காலத்திற்கும் அணியக் கூடியதாக, பொது வெளியில் அணியக் கூடியதாக என்று பொதுவான ஆடைகளை வாங்குவாள். இங்கே கனடாவில் எப்படி ஆடை அணிந்தாலும் யாரும் எதுவும் கருத்தில் கொள்வதில்லை என்பதால், மதிமையும் ஆடைகள் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுமில்லை. இப்போது அவன் தேர்ந்தெடுத்த ஆடைகள் அத்தனையும், ஃப்லிம் ஃபஸ்டிவலுக்கு அணியும் ஆடைகள் போல மிகக் கவர்ச்சியாக இருக்க, தன்னை மறந்து அவனை நெருங்கியவள், அவனுடைய கரத்திலிருந்த ஆடைகளைப் பறித்து அங்கேயே வைத்துவிட்டு, அவன் கரத்தைப் பற்றித் தரதர என்று இழுத்துக்கொண்டு போக,
“ஏய்… இன்னும் ஆடைகள் எடுத்து முடிய வில்லை…” என்றான் அவன் அவசரமாக. அவளோ நின்று திரும்பி அவனைப் பார்த்து முறைத்து,
“ஆடை எனக்கா இல்லை உங்களுக்கா?” என்றாள் எரிச்சலாக. இவனோ புருவங்கள் சுருங்க அவளை ஏறிட்டு,
“இந்த வகை ஆடைகள்.. நான் அணிவதில்லை. வெறும் பான்ட், ஷேர்ட் தான்…” என்றதும், எரிச்சல் மாறாமலே, அவனை முறைத்துவிட்டு,
“உங்களுக்கு வெறும் பான்ட் ஷேர்ட் என்றால், எனக்கெதற்கு இத்தனை வகையறா ஆடைகள்… நான் என்ன மாடலா இப்படி அணிந்து கொள்ள…? தவிர என் வேலை வரோதயனைப் பார்த்துக் கொள்வது. இந்த ஆடைகளை அணிந்து அவனைத் தூக்கக் கூட முடியாது…” என்றவள், சுத்தவரப் பார்த்துவிட்டு,
“இப்போது என்ன… எனக்கு ஆடைகள் எடுக்கவேண்டும் அவ்வளவுதானே…! என் கூட வாருங்கள்…” என்றவள் மறு கரத்தைப் பற்றியிருந்த வரோதயனைத் தூக்கி இடையில் செருகிவிட்டு அந்த மாலின் இன்னொரு திசை நோக்கி நடந்தாள்.
கண் முன்னே விரிந்தது வால்மார்ட். அதைக் கண்டதும் எரிச்சலுடன் மதிமையை ஏறிட்டவன்,
“இங்கே எதுவும் நன்றாக இருக்காதே… விலை கூடக் குறைவு… அணுரேகா இந்தப் பக்கமே வரமாட்டாள்…”
என்றதும் சுருக்கென்று இவளுடைய இதயத்தில் அது சென்று தைத்தது. பட்டென்று திரும்பியவள்,
“நான் அணுரேகா இல்லை… மதிமை…! ஆடை என்பது, நம் வசதிக்குத்தானே தவிர, நான்கு பேர் பார்ப்பதற்கல்ல…” என்றவள்,
இடையிலிருந்த வரோதயனைக் கீழிறக்கி, அங்கேயிருந்த வண்டில் ஒன்றை இழுத்து, அதில் வரோதயனை அமர வைத்துவிட்டு, வண்டியைத் தள்ளிக்கொண்டு தன் விருப்பத்திற்குரிய ஆடைகள் இருக்கும் இடம் நோக்கி நடந்தாள், மதிமை.
அடுத்த அரை மணி நேரத்தில் தனக்கு வசதியான, அதே நேரம் நல்ல தரமான ஆடைகளைத் தேர்வு செய்து வண்டிக்குள் போட்டவள், திரும்பி ஆதிபனைப் பார்த்து,
“வாங்கியாயிற்று…” என்றாள் தெளிவாக. அவனோ முகத்தில் எரிச்சலைத் தேக்கி அவள் வாங்கிக் குவித்த ஆடைகளைப் பார்த்தான்.
அதே பாகி பான்ட், ஷேர்ட். ஒன்றிரண்டு பாவாடை, அதற்கேற்ற டீ ஷேர்ட்…
“மதிமை இவை மட்டுமா… இது போதுமா… கொஞ்சம் மாடலாக..”
“ஆடை எனக்குத்தான்… அணியப்போவதும் நான்தான்… சோ… இதுதான் என் தேர்வு… தவிர நாம் போவது ஈழம்… மேற்கத்திய நாடுகளில்லை.
எந்த விழாக்களாக இருந்தாலும் அங்கே அணியப் போவது சேலைதான். சேலை என்னிடம் அதிகமில்லை. அதை அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம். அது தவிர, சாதாரண தேவைகளுக்கு இந்த ஆடைகள் போதும்.”
“ஆனால் நாம் போனதும் நிறைய விருந்துக்கு அழைப்பார்கள் மதிமை. அதற்குச் சேலையும், இந்த ஆடைகளும் சரி வருமா?” தயங்கியவனை ஏறிட்டவள்,
“விருந்து என் ஆடைக்காகவா இல்லை நமக்காகவா?” என்று பட்டென்று முடித்தவள்,
“லிசின்… நான் சாதாரணப் பெண். என் தேவைகள் எப்போதும் வரோதயனைச் சுற்றித்தான் இருக்கும்… அதனால், அதற்குரிய ஆடைகளைத் தான் நான் தேர்ந்தெடுப்பேன். அதுதான் எனக்குப் பழக்கமும் கூட. தவிர, பதினேழு வயதுவரை, அம்மா இப்படித்தான் அணியவேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அவர்களை இழந்த பின், அவர்களின் உபதேசத்தைத் தூக்கி எறிய நான் தயாராக இல்லை. அது மட்டுமில்லை, இந்த நவீனரக ஆடைகளின் மீது எப்போதும் எனக்கு ஆர்வம் இருந்ததில்லை. அதனால் தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள். நீங்கள் வற்புறுத்துவதால், என்னுடைய பிடிவாதம் இன்னும் அதிகமாகுமே தவிரக் குறையாது.. ஐ ஹோப் யு அன்டர்ஸ்டான்ட் தட்…” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள், முன்னேறிச் செல்ல, வேறு வழியில்லாமல் அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான் ஆதிபன்.
(22)
காதில் ஒலிவாங்கியை மாட்டிக் கொண்டு, ஏதோ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த ஆதிபன் இப்போது சலிப்புக் கொண்டவனாகக் காதில் மாட்டியதைக் கழற்றி வைத்துவிட்டு இருக்கையின் பின்புறம் சாய்ந்தவாறு வெளியே பார்த்தான். இருட்டில், பதினைந்தாயிரம் அடிக்குக் கீழே பூமி மிகச் சின்னதாகத் தெரிந்தது. கூடவே சிதறடிக்கப்பட்ட மின்மினிப் பூச்சிகளாய் மின்விளக்குகள் கண்களுக்கு விருந்தளிக்க, சற்று நேரம் அதைப் பார்த்துவிட்டு, அந்த ஜன்னலின் தடுப்பை இழுத்து விட்டுத் திரும்பிப் பார்த்தான்.
பக்கத்தில் வரோதயன், நல்ல உறக்கத்தில் இருக்க, அடுத்த இருக்கையில் மதிமையும் ஒரு கோணத்தில் தலை சரிந்திருக்க, உதடுகள் சற்று பிளந்த நிலையில் குளிருக்கு ஏற்ப, தன் உடலைக் குறுக்கியவாறு உறங்கிக் கொண்டிருந்தாள்.
ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு, விமானம் தரையிலிருந்து எழும்பும் போது அவளுடைய விழிகளில் தெரிந்த பயமும், வெளிறிப்போன முகமும் நினைவுக்கு வந்தது.
கூடவே பக்கத்தில் புதிய பயணத்தை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்த வரோதயனின் பிஞ்சுக் கரத்தை இறுகப் பற்றியவாறு விழிகளை அழுந்த மூடி அமர்ந்திருக்க, அதைக் கண்டு, அவளுடைய கரத்தில் நசுங்கிய வரோதயனின் கரத்தை விலக்கிவிட்டு, தன் கரத்தால், அவளுடைய கரத்தை இறுகப் பற்ற, எந்த மறுப்பும் கூறாமல், அவனுடைய கரத்தைப் பற்றிக்கொண்டாள், மதிமை.
விமானம் மேலேறி, சீராக ஓடத் தொடங்கிய பின்னும் அவனுடைய கரத்தை மதிமை விட்டாளில்லை. மூடிய விழிகளைத் திறந்தாளும் இல்லை.
அதைக் கண்டு மெல்லியதாக நகைத்தவன், தன் கரத்தை விலக்கப் போக, மேலும் இறுகப் பிடித்துக் கொண்டாள், மதிமை.
சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், பின் அவளை நோக்கிக் குனிந்து,
“ஹே… விமானம் சீராக ஓடத் தொடங்கி விட்டது…. இனி நீ என் கரத்தை விடலாம்…” என்று மென்மையாகக் கூறத்தான், மதிமை தன் விழிகளைத் திறந்தாள்.
ஆனாலும் படபடப்பு அடங்காமல் சுத்தவரப் பார்த்தவள், நிம்மதி கொண்டவளாகத் திரும்பி ஆதிபனைப் பார்க்க, அவனோ புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தான்.
“கடவுளே…! மிகப் பயங்கரம்.” என்று ஆங்கிலத்தில் சொல்ல, அதைக் கேட்டுப் பற்கள் தெரியச் சிரித்தவன்,
“அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வதால், எனக்குத் தெரியவில்லை…! ஏன்…? நீ விமானத்தில் பயணம் செய்ததில்லையா…?” என்று இதமாகக் கேட்க, அழகாய் உதடுகளைப் பிதுக்கியவள்,
“ப்ச்… இல்ல… ஆனால், லண்டன் போவதாக இருந்தோம்… அதற்கிடையில்…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைத்தது. வலியுடன் அவனைப் பார்த்துவிட்டு,
“அந்த விபத்திற்குப் பிறகு, இப்படியான பயணங்கள் வெறுப்பாக இருக்கும். பிடிப்பதில்லை… நான் வாகனம் ஓட்டிப் பழகாததற்கும் அதுதான் காரணம்…” என்று மெல்லிய குரலில் கூற, அவளுடைய வலியைத் தன்னதாக உணர்ந்து கொண்டவனாய், தன் கரத்தை விடாது பற்றிக் கொண்டிருந்தவளின் கரத்தை அழுத்திக் கொடுத்து,
“ஐ… ஐ ஆம் சாரி… உன் வேதனையைக் கிளற வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லை… பேச்சுக் கொடுத்தால், கொஞ்சம் பயம் தெளியுமே என்று தான் கேட்டேன்…” என்று மனதார மன்னிப்புக் கேட்க,
“ஐயோ….! அதெல்லாம் இல்லை… நான்தான் சட்டென்னு உணர்ச்சி வசப்படுகிறேன்…” என்றவள் விழிகளை மூடியவாறு சற்று நேரம் கிடந்தாள். பின் திரும்பி இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த வரோதயனைப் பார்த்தாள். விழிகளில் அன்பு பொங்க நிமிர்ந்து ஆதிபனிடம்,
“இவன் எனக்குக் கிடைத்த வரம் தெரியுமா? மருத்துவமனையில் கண் விழித்தபோது, நான் கேட்ட செய்தி, என் உலகமே அழிந்துவிட்டது என்றுதான்…!
கடவுள் ஏன் இப்படி ஒரு தண்டனையை எனக்குக் கொடுத்தார் என்று சத்தியமாக இதுவரை தெரியவில்லை. அவர்களோடு என்னையும் எடுத்துச் சென்றிருக்கலாம் தானே. பாவம் என் தம்பி. வாழ்க்கை என்றால் என்ன என்று அறிய முதலே அவனுடைய வாழ்க்கை முடிந்து போனது.” என்று அவள் சொன்ன போது, இவனுடைய உள்ளமும் கலங்கிப் போனது. ஆனாலும் அவளையாவது பிழைக்க வைத்த கடவுளுக்கு அவசரமாக நன்றி சொன்னான் ஆதிபன்.
ஒரு வேளை அவளுக்கு ஒன்று நடந்து இருந்தால், அவனுடைய மகனுக்கு நல்ல தாய் கிடைக்காது போயிருக்கும். அணுரேகா நிச்சயமாக யாருக்காவது தத்துக் கொடுத்திருப்பாள். தத்துக் கொடுத்த இடத்தில், வரோதயனை என்ன கொடுமை செய்திருப்பார்களோ. நினைக்கும்போதே நெஞ்சம் பதறியது. அது மட்டுமா, அவனுக்கும் அவள் கிடைக்காது போயிருக்குமே. அந்த நினைவே பெரும் வெறுப்பைக் கொடுக்க, தன் கரத்தில் சிக்கியிருந்த அவளுடைய கரத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,
“காரணம் இன்றிக் காரியமில்லை, மதிமை. என் மகனுக்குத் தக்க தாய் கிடைக்கவேண்டும் என்று கடவுள் உன்னைப் பிழைக்க வைத்திருக்கிறார்…” என்று கூற, அதை ஏற்றுக்கொண்டது போல மதிமையின் உதடுகளில் அழகிய புன்னகை. விழிகளை மூடி அந்த நாளை நினைவுக்குக் கொண்டு வந்தவள், அந்த அழகிய நினைவிலிருந்து விலகாமலே,
“உண்மைதான்… வரோதயன் மட்டும் என் வாழ்வில் வரவில்லை என்றால், நிச்சயமாக எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். என்னை மேலும் முன்னேறச் சொன்னது, வாழச் சொன்னது இந்தக் குட்டிப் பையன் தான். அவனை என் மடியில் கிடத்திய போது, எனக்குள் ஊற்றெடுத்த உணர்ச்சியை எப்படி விபரிப்பேன்? இந்தப் பொல்லாத உலகத்தைத் தொட்டு இரண்டு நாட்கள்தான் இருக்கும். விழிகளைத் திறந்து அப்படியே என் தம்பியைப் போல வாய் பிளந்து சிரித்தான்….” என்றபோது உதடுகள் சிரித்தாலும், அவளுடைய மூடிய கண்களில் கண்ணீர் பொங்கியது. கூடவே மூக்கு விடைக்க, அதை உணர்ந்து கொண்ட ஆதிபனுக்கு, அவளை மார்பில் விழுத்தி முதுகைத் தடவி ஆறுதல் படுத்தப் பெரும் வேகம் எழுந்தது. ஆனாலும் தன்னை அடக்கியவனாக அவளையே பார்த்திருக்க, மதிமையோ தன் விழிகளைத் திறந்தாள். அப்போது வழிந்த கண்ணீரை மறு கரம் கொண்டு துடைத்து விட்டு,
“அந்தக் கணமே! எனக்கும் இவனுக்குமான உறவு பிணைக்கப்பட்ட விட்டது போல. பிறகுதான் இவனை யாருக்கோ தத்துக் கொடுக்க முயல்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவனை நானே வளர்ப்பதற்காக அணுரேகாவிடம் கேட்டேன். முதலில் மறுக்கத்தான் செய்தாள். ஆனால், என்ன நினைத்தாளோ, என்னை அவள் கூடவே வைத்துக்கொண்டாள்.
ஆனால் இப்போது யோசிக்கும்போது அணுரேகா எனக்காகவும் யோசித்திருக்கிறாள் என்று புரிகிறது. எனக்கும் இருக்க இடம் கொடுத்து, இவனுக்கும் ஒரு துணை கிடைக்கச் செய்து… அந்த நன்றிக் கடனுக்காகத்தான், கடைசி நேரத்தில், அவளுடைய மருத்துவச் செலவுக்கு என் சேமிப்பு அனைத்தையும் கொடுத்தேன். ப்ச்…! என்ன பயன்…? அவள் பிழைக்கவில்லையே! ஒரு வேளை அவள் பிழைத்திருந்தால், இப்போது இந்த இடத்தில் எனக்குப் பதில், அவள்தான் இருந்திருப்பாள் இல்லையா…” என்று கேட்டபோது, அவளையும் மீறிப் பெரும் வேதனை எழவே செய்தது. ஏனோ, அவனை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுப் பார்க்க மதிமையால் முடியவில்லை.
ஆனால் ஆதிபனோ, மறுப்பாகத் தலையசைத்து,
“ப்ச்… இல்லை மதிமை… அணுரேகா குழந்தையைப் பெற்று அவளோடு வைத்து இருந்தாலும் கூட, நான் குழந்தையை என்னோடு அழைத்துச் செல்லத்தான் முயன்றிருப்பேனே தவிர, நிச்சயமாக அவளை மணந்திருக்க மாட்டேன்…” என்றான் தெள்ளத் தெளிவாக. அதைக் கேட்டு வியந்தவள்,
“ஏன்… நீங்கள் அவளைக் காதலித்தீர்கள் தானே…” என்று வியக்க, சற்று நேரம் யோசித்தவன்,
“தெரியவில்லை மதிமை. அப்போது நான் அவளைக் காதலித்ததாகத்தான் நினைத்தேன். இப்போதும் அவளை நினைத்தால், மனம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால், முன்பிருந்த அந்த நெருக்கம், இப்போது வந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். அன்று என் காதலை அவள் ஏற்றிருந்தால், அவளை மணந்து வாழ்ந்திருப்பேன். எப்போது என்னை விட இன்னொருத்தன் பெரிது என்று போனாளோ, அந்தக் கணமே அவள் மீதிருந்த நம்பிக்கை அத்தனையும் பொய்த்து விட்டது. அணுரேகாவின் கடிதம் வந்தபோது, வரோதயனை என்னோடு அழைத்து வந்துவிடவேண்டும் என்று நினைத்துத்தான் கனடா வந்தேனே தவிர, அணுவை அழைத்து வரும் எண்ணம் எனக்குத் தோன்றவேயில்லை…!” என்றவனுக்கு இன்னொன்றும் உறுத்தியத.
தந்தை விசித்திரா பற்றி சொல்லி அவளை மணக்கச் சொன்ன பொது, அந்த இடத்தில் மதிமைக்குப் பதில், அணுரேகா இருந்திருந்தால் அவளிடம் திருமணம் முடிக்கக் கேட்டிருப்பானா என்று யோசித்தால், அந்த யோசனையே அவனுக்குப் பெரும் அருவெறுப்பைக் கொடுத்தது. ஒட்டு மொத்த உடல் திசுக்களும் அதற்கு எதிராக நின்று அவனைப் பார்த்து முறைத்தது. வேகமாகத் தலையைக் குலுக்கியவன்,
“இல்லை மதிமை… நிச்சயமாக அனுரேகாவை நான் மணந்திருக்க மாட்டேன்… நீ என்பதால்தான் தைரியமாக உன்னை மணக்கக் கேட்டேன்.” என்று உறுதியுடன் கூற, மதிமையின் முகம் சட்டென்று மலர்ந்தது. இதயம், உவகையில் பொங்கியது.
ஆதிபனோ மதிமையை ஏறிட்டு,
“அணுரேகாவுக்கு இந்த நோய் வராமல் இருந்திருந்தால், எனக்கு இப்படி ஒரு மகன் இருந்தான் என்றே தெரிந்திருக்காது. இப்போதும் என் வேலைத் தளத்தில் கோப்புகளோடு மாரடித்து இருப்பேன். இப்படி ஒரு புத்தம் புதிய உலகம் எனக்கு மலர்ந்திருக்காதே!” என்றவன், தன் கரத்தில் சிக்கியிருந்த அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துத் தன் உதட்டில் பொருத்த, எப்போதும் போலச் சிலிர்த்துப் போனாள், மதிமை.
அதுவரை குளிர்ந்த தேகம் அனலாய் கொதிக்க, அதற்கு மேல் அந்த முத்தத்தைத் தாங்கும் சக்தியில்லாமல், அவசரமாகத் தன் கரத்தை இழுத்து எடுத்துக் கொண்டாள்.
சட்டென்று அவள் விரல்களை இழுத்துக் கொள்ள, ஆதிபனின் முகம் ஏமாற்றத்தில் கூம்பிப் போயிற்று. அவனுடைய முத்தம் பிடிக்காமல் கரத்தை விலக்கினாளோ என்று எண்ணியவனாக, சங்கடமும், அவஸ்தையும் ஒன்றாக எழ,
“சா… சாரி…” என்று விட்டு, அவளுடைய முகத்தைப் பார்க்கச் சக்தி இல்லாதவனாக, முன்னிருக்கையில் இருந்த திரையை உயிர்ப்பித்தவாறு சத்தம் வெளியே வராதிருக்கக் காதுக்கு ஹெட் ஃபோனை மாட்டித் திரையைப் பார்க்கத் தொடங்கினான்.
மதிமையும் அவனைப் பார்க்கும் சக்தியில்லாமல் வேறு திசைக்குத் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
அதன் பிறகு இருவருக்குள்ளும் மயான அமைதி. அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அவள் உறங்கும் விதத்தைக் கண்ட ஆதிபனுக்கு மனம் கசங்கியது. உடனே அங்கிருந்த ஒரு பொத்தானை அழுத்த, அடுத்த அரை விநாடியில் ஒரு விமானப் பணிப் பெண் அவனருகே வந்து,
“ஹாய்… உனக்கு என்ன வேண்டும்?” என்றாள் முகம் புன்னகையில் விரிந்திருக்க.
“இரண்டு போர்வைகள் வேண்டுமே…” ஆங்கிலத்தில் கேட்க,
“இதோ…” என்று விட்டு உள்ளே சென்றவர், திரும்பி வரும் போது, கணகணப்பாக இருந்த போர்வைகள் இரண்டை அவனிடம் நீட்டினார். நன்றியோடு பெற்றுக் கொண்டவன், ஒன்றை வரோதயனுக்குப் போ்த்திவிட்டு எழுந்தவன் ,மற்றதை மதிமைக்கும் போர்த்திவிட, அந்தக் குளிருக்கு இதமாகக் கணகணப்போடு போர்த்தப்பட்ட போர்வையைப் பக்கென்று பற்றிக் கொண்டாள் மதிமை.
இப்போது அவளை விட்டு விலகியவன், கழிவறைக்குச் சென்று விட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்தமர்ந்து விட்டுத் திரும்பி மதிமையைத்தான் ஏறிட்டான். கலைந்திருந்த குழல் அவளுடைய முகத்தை மறைத்திருக்க, அவளை நோக்கிச் சரிந்தவன், ஒற்றை விரலால் அந்தக் குழலை அவள் முக வடிவைச் சற்று நேரம் தரிசித்தான்.
இவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது? சட்டென்று அவளை மணம் முடிக்க எது தூண்டியது.
விசித்திராவிடமிருந்து தப்பிக்கத் தான் இந்தத் திருமணத்தை முடித்தான் என்றால், அது நிச்சயமாகப் பொய்தான். நகையும் சதையுமாகப் பழகிய அணுரேகாவை இப்போது ஏற்றுக் கொள்ள மறுத்த மனம், இவளைத் தன் மனைவி என்கிற இடத்தில் சுலபமாகவே பொருத்திப் பார்க்க முடிந்தது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அணுவிடம் இல்லாத ஏதோ ஒன்று மதிமையிடம் இருக்கிறது. அது இதுதான் என்று சுட்டிக் காட்ட முடியவில்லை. அவளைக் கண்டால் மட்டும் புத்தி தறிகெட்டு ஓடுகிறது. ஒரு நிலையில் நிற்க மறுக்கிறது. அவளைத் தொட்டால் மின்சாரம் பாய்கிறது. ஆண்மை விழித்துக் கொள்கிறது. அவள் வேண்டும் என்று கேட்கிறது… அவள் விழிப் பார்வையில் உள்ளம் குழைந்து போகிறது.
மதிமையையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஆதிபனின் விழிகள், இப்போது உறக்கத்தை அணைத்தவாறு மெதுவாக மூடிக் கொள்ள, அதுவரை நல்ல உறக்கத்திலிருந்த மதிமையின் விழிகள் மெதுவாகத் திறந்தன.
திறந்தவளின் விழிகளுக்குப் பட்டது, விழிகள் மூடி உறங்கிக்கொண்டிருந்த ஆதிபன்தான்.
அவன் முகத்தைக் கண்டவளின் தூக்க முகம், அந்த நிலையிலும் மலர்ந்தது. உதடுகள் மெல்லிய புன்னகையைச் சிந்தின.
இவனைக் கண்டு இரண்டு கிழமைகள்… ஆகியிருக்குமா? அதற்குள்தான் எத்தனை மாற்றங்கள். ஒரு குழந்தைக்கு வளர்ப்புத் தாயாக இருந்தவள், இப்போது அந்தக் குழந்தையின் தந்தைக்கு மனைவியாக, அந்தக் குழந்தைக்கு உரிமையுள்ள தாயாக மாறி விட்டாள். மகன், கணவன் என்று அழகிய குடும்பம் அவளுக்கே அவளுக்காய்…!
அவளுக்கு ஆதிபனை நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் தித்தித்தது. சற்று முன் கரங்களைப் பற்றி அதில் முத்தமிட்டது நினைவுக்கு வர, கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். இன்னும் முத்தத்தின் ஈரம் இருப்பது போலத் தோன்ற, சிலிர்த்தவளாய், கரங்களை மார்புக்குள் புதைத்தவாறு அவனை ஏறிட்டாள்.
மனம் அவனை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கியது. போர்வையை மேலும் இழுத்து இறுக்கிக் கொண்டவளின் விழிகள் மட்டும் ஆதிபனை விட்டு இம்மியும் விலகவில்லை. அப்படியே அவனைப் பார்த்துக் கொண்டிருக்க விழிகள் மீண்டும் உறக்கத்தின் வசமானது.
அடுத்த பன்னிரண்டாவது மணி நேரத்தில், விமானம் தரை இறங்கப்போவதாக அறிவிக்க, அதுவரை சோம்பியிருந்த பயணிகள் பரபரப்புடன் நிமிர்ந்து அமர்ந்து கொண்டார்கள்.
ஆதிபனோ, இரு கரங்களையும் விரித்துச் சோம்பல் முறிக்க, அவனுடைய மூடிய கரம், மதிமையின் கன்னத்தில் உரசிச் செல்ல, அதுவரை உறக்கத்திலிருந்தவள், அவன் கரம் கன்னத்தை உரசியதும், மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தாள்.
அவசரமாகக் கரத்தை இழுத்து எடுத்த ஆதிபன்,
“நெருங்கி விட்டோம்…” என்றான் மொட்டையாக.
“ஓ” என்றவள், இப்போது சரியாக எழுந்தமர்ந்து, உறங்கியதால், ஏறி இறங்கியிருந்த மேலாடையைக் சரியாக்கிவிட்டுக் கலைந்த கூந்தலைக் கரத்தாலேயே வாரிவிட்டு, கையின் மீது போட்டிருந்த ரபர்பான்டை இழுத்தெடுத்துத், தலையில் கட்டிவிட்டுத் தயாராக, அடுத்த அரை மணி நேரத்தில் விமானம் தரையைத் தொட, பத்திரமாகத் தரையிறக்கிய விமான ஓட்டியைப் பாராட்டும் விதமாக எல்லோரும் கைதட்டிவிட்டு எழுந்து தம் பொருட்களை எடுக்கத் தொடங்க, முதலில் அமர்ந்திருந்த மதிமைதான் முதலில் எட்டிப் பொருட்களை எடுக்கத் தொடங்கினாள்.
அதே நேரம் வரோதயனின் இருக்கைப் பட்டியைக் கழற்றிவிட்டு நிமிர்ந்த ஆதிபனின் விழிகளுக்கு முதலில் தட்டுப்பட்டது பளிச் என்ற வெண்ணிற வயிறுதான்.
மதிமை சற்று உயரம் குறைந்தவள்தான். பொருட்களை எடுப்பதற்காக அவள் எக்கி நின்றிருந்த போது, அவள் அணிந்திருந்த பாகி ஷேர்ட் மேலே ஏறிக் கொண்டதால், அவளுடைய பெண்மை நிறைந்த வயிறு அவனுக்குக் காட்சிப்பொருளாகிப் போனது. கூடவே அடி வயிற்றில் குட்டியாய் ஒரு மச்சம். அந்த மச்சத்தில் பதிந்த விழிகள் சுத்தமாய் மறு திசை பார்ப்பதாயில்லை..
உலகத்திலேயே மனைவியை இத்தனை திருட்டுப் பார்வையாகப் பார்ப்பவன் அவன் ஒருவனாகத்தான் இருக்கும். அவசரமாய் அந்த வயிற்றில் விரல்களால் தீண்டிடும் வேகம் எழுந்தது. தீண்டிய இடத்தில் உதடுகளைப் பொருத்த ஆவேசம் வந்தது. அந்த உணர்வுகள் கொடுத்த தாக்கத்தில் பதறிப்போனான், ஆதிபன்.
எங்கே முட்டாள் தனமாக எதையாவது செய்து தொலைத்து விடுவோமோ என்று அஞ்சியவனாக, கடிவாளமிட்டு விழிகளை விலக்கியவன், அவசரமாக இருக்கையை விட்டு எழுந்து,
“என்ன செய்கிறாய்?” என்றான், தன்னை அடக்க முடியாத எரிச்சலை அவளிடம் காட்டியவாறு. அவளோ எக்கி எக்கி எடுக்க முயன்ற பெட்டியை எடுக்க முடியாமல் திணறியவளாக,
“பெ…. பெட்டியை எடுக்கிறேன்…” என்றவாறு பின்னால் வந்த ஒருவரின் மீது மோதிக் கொள்ள, பின்னால் வந்திருந்தவன் அவளைச் சரியாகப் பற்றி,
“ஹே… கெயர்ஃபுள்… பேபி டு யு நீட் எனி ஹெல்ப்…?” என்றான் ஈ என்று பற்களை இழித்தவாறு. அப்படித்தான் ஆதிபனுக்குத் தெரிந்தது. பாவம், அவர் இவள் படும் சிரமத்தைக் கண்டு உதவி செய்யத்தான் வந்தார். இவனுக்குத்தான் பொறாமைத்தீ தானாகப் பற்றிக்கொண்டது.
விளைவு, ஏகத்திற்கும் இரத்த அழுத்தம் எகிறப் பற்களைக் கடித்தவன்,
“நோ நீட் டு…” என்றான் இவன் பட்டென்று. மதிமையோ அவசரமா சற்று விலகி, அந்தப் புதியவனைப் பார்த்து அழகாய் புன்னகைத்து,
“உங்கள் உதவிக்கு நன்றி… ஆனால் தேவையில்லை…” என்று ஆங்கிலத்தில் கூற,
“நோ ப்ராப்ளம்…” என்று விட்டு முன்னேறும் போது, அவளை மெதுவாய் உரசியவாறு செல்ல, இவனுக்குப் பயங்கரமாகப் பற்றிக்கொண்டத.
அந்த ஆத்திரத்தை அவளிடம் காட்ட முயன்றவனாக, “அவனிடம் பற்களைக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? அவன்தான் வேண்டும் என்று முட்டி நிற்கிறான் என்று தெரிகிறதுதானே…? தள்ளி நிற்க வேண்டியதுதானே?” என்று எரிச்சலுடன் கேட்க, இவளோ அவனை வியப்புடன் பார்த்து,
“முட்டி நின்றாரா… பாவம்… நான் படும் சிரமத்தைப் பார்த்து உதவிக்கு வந்தவரைத் தப்பாகப் பேசக்கூடாது. பாருங்கள்…! அத்தனை பேரும் இறங்க அவசரப்படும் போது, முட்டாமல் எப்படி நகர்ந்து செல்வது? அதைப் போய் தப்பு என்கிறீர்களே? எல்லாம் பார்க்கும் கண்களைப் பொறுத்தது.” என்று அந்தப் புதியவனுக்காக வக்காலத்து வாங்கியவள், மீண்டும் எக்கி பெட்டியை எடுக்கப் போக, அதற்கு மேல் பொறுமையை இழந்தவனாக. அவளை நெருங்கியவன், அவள் எடுக்க முயன்ற பொட்டியை எடுத்துக் கீழே வைக்க, அதை வாங்குவதற்காக அவன் கரங்களின் மீது தன் கரத்தைப் பதிக்க, இருவருக்கும் மீண்டும் மின்சாரம் உட் புகுந்தது.
‘வெறும் கரங்களைத் தொட்டாலே உணர்வுகள் கொந்தளிக்க வேண்டுமா என்ன?’ அவசரமாகத் தன் கரத்தை விலக்கிக் கொண்ட மதிமை, மற்ற பெட்டியையும் சுட்டிக் காட்டி,
“அது… வரோதயனுடையது…” என்றாள் முணுமுணுப்பாய். அதையும் கீழே இறக்கிக் கொள்ள, வரோதயனுடையதையும் எடுத்துக் கீழே வைக்க, அப்போதுதான் வரோதயன் சின்ன விரலைத் தூக்கிக் காட்டி,
“அம்மா… பிப்பி…” என்றான். உடனே அவன் பக்கம் போக விளைந்த மதிமை, சட்டென்று நின்றாள். ‘வரோதயனிடம் போக வேண்டும் என்றால், இவனை உரசாமல் போக முடியாது. ம்கூம், இவனைத் தொட்டால் மனம் புரியாத பல உணர்வுகளுக்கு ஆட்படும். ஆனால் அவனைக் கடக்காமல் வரோதயனிடம் செல்ல முடியாதே…! இப்போது என்ன செய்வது?’ தவித்து நிற்க, அவளை அதிகம் தவிக்க விடாது, ஒரு பயணி போகும் வேகத்தில் அவளை முட்டித் தள்ளிவிட்டுப் போக, எதற்குப் பயந்து அவனைக் கடக்க யோசித்தாளோ, அது செவ்வனவே நடந்து விட்டிருந்தது.
அந்தப் பயணி தள்ளிய வேகத்தில் மொத்தமாய் ஆதிபன் மீது சரிந்து விழுந்திருந்தாள், மதிமை. அடுத்த கணம், அழையா விருந்தாளியாக ஆதிபனின் ஒற்றைக் கரம் அவளுடைய இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்திருந்தது.
மனமோ, இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று எள்ளி நகையாடியது.
மீண்டும் இருவருக்குள்ளும் மயக்கும் உணர்வு. அவனை விட்டு விலக வேண்டும் என்று அவளுக்கும், அவளை விட்டுப் பிரிய வேண்டும் என்று அவனுக்கும் சுத்தமாகத் தோன்றவில்லை. நின்ற வாக்கிலேயே ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்த்திருக்க,
“மா… பிப்பி…” என்றான் வரோதயன் இப்போது குரலைச் சற்று உயர்த்தி. திடுக்கிட்டு விழித்தவர்களாக, இருவரும் ஒருவரை ஒருவர் விட்டு விலக, அவசரமாக மகனருகே சென்ற மதிமை, ஆதிபனைப் பார்த்தும் பார்க்காதவளுமாக,
“நான் இவனைக் கழிவரை அழைத்துச் சென்று வருகிறேன். வேண்டுமானால் நீங்கள் பெட்டிகளோடு வெளியேறுங்கள்…” என்று விட்டு, கடகடவென்று மகனோடு கழிவறை நோக்கிச் செல்ல,
ஆதிபனோ பொட்டிகள் மூன்றையும் கரங்களில் பற்றியவாறு இருக்கையில் தொப்பென்று அமர்ந்து கொண்டான்.
மதிமை திரும்பி வரும் வரைக்கும் அந்த இடத்தை விட்டு அசையவில்லை அவன்.

