Mon. Sep 16th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-25

25

 

மறு நாள் காலை சமர்த்தி எழுந்தபோதே மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்த உணர்வு. அந்த நிலையிலும் உத்தியுக்தன் எங்கே என்று விழிகள் தேட, அவனைக் காணாமல் பெரும் ஏமாற்றம் எழுந்தது. கூடவே அவனுடைய பாராமுகம் அவளுடைய பொறுமையைச் சிறிது சிறிதாக அழிக்கத் தொடங்கியது. முகத்தை ஒரு முழத்திற்கு நீட்டியவாறு குளியலறைக்குள் நுழைந்தவள், காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வெளியே சோர்வோடு வந்தபோது, அங்கிருந்த மேசையில் வெண்தாள் ஒன்று படபடத்தவாறு இவளுடைய கவனத்தைக் கவர்ந்தது.

எடுத்துப் பார்க்க,

“சாப்பாட்டறை கீழ்த் தளத்தில் இருக்கிறது… காத்திருக்கிறேன் வா” என்கிற ஆங்கிலக் கையெழுத்து அவனைப் போலவே கம்பீரமாக அவளை அழைக்க, அந்தச் செய்தியைக் கண்டதும் உள்ளுக்குள் சுறுசுறு என்று எதுவோ கிளம்பியது.

‘ஏன் துரைக்கு நின்று அவளை அழைத்துச் செல்ல முடியவில்லையோ? எப்படி முடியும். அதுதான் பழைய காதலி மீண்டும் அவனுடைய வாழ்க்கையில் வந்துவிட்டாளே” கண்மண் தெரியாத ஆத்திரம் வந்தது. போதாததற்கு முன்தினம் இரவு சாப்பிடாத பசி வேறு அவளுடைய சினத்திற்குத் தூபம் போட, அவனைப் பார்த்து நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்கவேண்டும் என்கிற வேகத்தோடு, கிடைத்த ஆடையை மாற்றிக் கொண்டு மின்தூக்கியில் ஏறினாள்.

அங்கே ஒரு அறுபது வயது முதியவர், அன்றைய சஞ்சிகை ஒன்றைப் படித்துக்கொண்டிருக்க, இவளோ சோர்வுடன் மின்னியக்கியின் சுவரில் சாய்ந்தாள். ஏனோ மனம் முழுவதும் ஜூலியட்டும் உத்தியுக்தனும் தான் நிறைந்திருந்தார்கள்.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல, மஞ்சள் காமாலைக் காரனுக்குப் பார்க்கும் இடமெல்லாம் மஞ்சள் என்பதுபோல, உத்தியுக்தனுக்கும் அந்த ஜூலியட்டிற்குமான உறவு எந்த எல்லைவரை என்கிற தப்பான சிந்தனை அவளைப் பெரிதும் அலைக்கழித்தது.

சலிப்புடன், இருந்த நிலை மாறி நிமிர்ந்து நின்றபோது, இவளுடைய விழிகள், அந்த முதியவர் வைத்திருந்த சஞ்சிகையின் அட்டைப்படத்தில் பதிய, ஒரு கணம் இவளுடைய விழிகள் வியப்பில் இல்லை இல்லை அதிர்ச்சியில் விரிந்தன. நம்ப முடியாமல் மீண்டும் பார்த்தாள். சந்தேகமேயில்லை, அது உத்தியுக்தன்தான். பதட்டத்தோடு, முதியவரை நெருங்கியவள்,

“எக்ஸ்கியூஸ்மி…” என்கிறவாறு அவருடைய அனுமதியையும் பெறாது, கிட்டத்தட்ட அந்தச் சஞ்சிகையைப் பறிக்க, அந்த வயோதிபரோ, கோபத்துடன் அவள் வெறித்தார்.

இவள்தான் அவரைக் கவணிக்கும் நிலையில் இல்லையே. அவசரத்துடன் கூடிய பதட்டத்துடன் அந்த அட்டைப்படத்தை நடுங்கும் கரங்கள் கொண்டு திருப்பிப் பார்த்தாள்.

அங்கே அவளுடைய சந்தேகம் சரி என்பது போல, உத்தியுக்தன் அந்த ஜூலியட்டை அணைத்தவாறு நடனமாடிக்கொண்டிருந்தான். அந்த ஜூலியட்டுடைய தேகம் பசைகொண்டு ஒட்டியது போல உத்தியுக்தனை நெருங்கி நின்றிருந்தது. இவனுடைய வலது கரம் துடியிடையாளின் இடையை வளைத்துச் சுற்றியிருக்க, அந்த ஜூலியட்டின் இடது கரமோ, இவனுடைய கழுத்தை அணைத்தாற் போல பற்றியிருந்தது.

மறு இரு கரங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்து சற்று மேலேறி நிற்க, அந்தக் காட்சி மிகக் கச்சிதமாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. ஆத்திரத்துடன் அந்த அட்டைப்படத்திற்குரிய பக்கத்தைப் புரட்டிப் பார்த்தாள்.

அங்கேயும் அந்த இருவரின் படங்கள்தான் நான்கைந்து பொட்டிருந்தார்கள். அதில் ஒன்று உத்தியுக்தன் விருது பெற்றுவிட்டு வரும்போது ஜூலியட் அவனை முத்தமிடும் காட்சி. மற்றதில், இருவரும் நெருக்கமாக நின்றிருக்கும் காட்சி. கூடவே பழைய நாட்களில் இருவரும் மிக மிக நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு சில படங்கள். அதைப் பார்க்கப் பார்க்க இவளுடைய இரத்தம் பயங்கரமாகக் கொதிக்கத் தொடங்கியது. விழிகளோ அங்கிருந்த தலைப்புகளைப் படித்தன.

பெரும் புள்ளியான உத்தியுக்தன் ஆதித்தன், அவர் முன்னால் காதலியுடனான மகிழ்வுத் தருணங்கள்… மனைவிக்குத் துரோகம் செய்தாரா உத்தியுக்தன்?” என்கிற தலைப்புகளோடு கீழே,

“தன் மனைவியை அழைத்து வராத நிலையில், முன்னால் காதலியை அழைத்துவந்த உத்தியுக்தன், மகிழ்ச்சியாகவே விருதைப் பெற்றுக் கொண்டதோடு, காதலியின் காதல் முத்தத்தையும் பெற்றுக் கொண்டார். இருவரின் நெருக்கமும், விடுபட்ட காதலின் தொடக்கத்திற்கான ஆரம்பப்புள்ளியாக இருக்கலாம் என்று நெருங்கிய நட்பு வட்டாரங்கள் சந்தேகம் தெருவிக்கினறன. அவர்களின் நெருக்கம், அடுத்த கட்டத்திற்கான ஆரம்பமாகவே அனைவரும் கருதுகின்றனர்?” என்று இன்னும் கண்ட மேனிக்கு எழுதியிருக்க, அதற்கு மேல் சமர்த்தியால் ஒரு சொல்லைக் கூடப் படிக்க முடியவில்லை.

பெரும் ஏமாற்றமும் வேதனையும் வலியும் ஒன்று சேர, மனமோ முன்பு சந்தேகப்பட்டது நிஜமாகிவிட்டதே என்கிற பரிதவிப்பில், தேவையற்று நாலா திசையும் பயணிக்கத் தொடங்கியது.

முன்தினம் மாலை அவன் வராததற்கு இது தானா காரணம். இருவரின் அணைப்பும் நடனமும் இதோடு முடிந்ததா, இல்லை இதற்குப் பின்னாலும் இருக்கிறதா? ஆத்திரமும், வேதனையும், அழுகையும் ஒன்றாய் இணைந்து இவளை வதம் செய்யக் கண்களில் கண்ணீர் பொங்க, நிமிர்ந்தபோது கதவு திறந்தது.

அந்த முதியவரோ, அவள் தன் சஞ்சிகையைத் தருவாள் என்று நம்பியவராக ஆவலுடன் அவளை நிமிர்ந்து பார்க்க, இவளோ அவரை மறந்தவளாக அந்த மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தாள். வந்தவளுக்கு அங்கே காலுக்கு மேல் காலைப் போட்டவாறு மேசையில் தாளம்போட, ஒரு நிலையில்லாமல் அமர்ந்திருந்த உத்தியுக்தனைக் கண்டம் அத்தனை ஆத்திரமும் மொத்தமாய்க் கட்டவிழ்ந்துகொண்டு வெளியேற, அவனோ நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள். அங்கே இருக்கையில் அமர்ந்திருந்த உத்தியுக்தனோ நிலை இல்லாமல் தவித்துக்கொண்டிருந்தான்

ஏனோ நெஞ்சம் படபடத்தது. வலக்கரமோ அடிக்கடி பான்ட் பாக்கட்டைத் தடவி அவளுக்காய் வாங்கிய மோதிரம் பத்திரமாக இருக்கிறதா என்று பரிசோதித்துக்கொண்டது. கூடவே தன் சிறுபிள்ளைத் தனத்தை எண்ணி மெல்லிய அவஸ்தையும் வந்தது. ஆனாலும் அது பிடித்தும் இருந்தது.

இப்போது வாசலை ஆயிரத்தெட்டாவது தடவையாகப் பார்த்து ஏமாற்றத்துடன் மேசையில் தாளம்போடத் தொடங்கினான். மனமோ, அவளைக் கண்டதும் என்ன பேசுவது என்று ஒத்திகை எடுத்துக் கொண்டிருந்தது.

அவள் வருவது தாமதமானதும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரமோ, எட்டு மணியையும் நெருங்கிக்கொண்டிருக்க மெல்ல மெல்லப் பொறுமை இழக்கத் தொடங்கினான் உத்தியுக்தன்.

“இன்னுமா எழுந்திருக்கவில்லை? ஒருவேளை அவனுடைய துண்டுச் சீட்டை அவள் கவனிக்க வில்லையோ? யோசனையுடன் மீண்டும் கைக் கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்க திடீர் என்று எதிர்பார்க்காத வகையில், எதுவோ ஒன்று அவன் முகத்தில் பலமாக மோதித் தரையில் விழுந்தது. அதிர்ந்து போனான் உத்தியுக்தன். குழப்பத்துடன் தன் முகத்தில் வந்து விழுந்தது என்ன என்று குனிந்து பார்த்தான். சஞ்சிகை. புருவங்கள் சுருங்க அதைக் கரத்தில் எடுத்தவன் எங்கிருந்து வந்தது என்கிற குழப்பத்துடன் நிமிர்ந்த பார்க்க, அங்கே விழிகள் சிவக்க, முகம் கடுக்க, அவனைக் கொலை செய்யும் ஆத்திரத்துடன் நின்றிருந்தாள் சமர்த்தி.

உத்தியுக்தனுக்குச் சற்று நேரம் எடுத்தது, அந்தச் சஞ்சிகையை அவன் முகத்தில் விட்டெறிந்து சமர்த்திதான் என்பதைப் புரிந்துகொள்ள. அதுவரை அவன் மனதை ஆக்கிரமித்திருந்த காதல் என்னும் உணர்வு தண்ணீர் தெளித்த பாலாக அடங்கிப்போக, அந்த இடத்தில் முறைத்த ஆத்திரத்தைப் பற்களைக் கடித்து அடக்கியவனாக,

“வட் த ஹெல் ஆர் யு டூயிங்?” என்றான் பற்களைக் கடித்து வார்த்தைகளைத் துப்பி.

“என்ன செய்கிறேனா? பார்த்தால் தெரியவில்லை…? அந்தச் சஞ்சிகையை உங்கள் முகத்தில் விட்டெறிந்தேன்…” என்றாள் அவள் கடும் சீற்றமாக.

அந்தப் புதிய அவதாரம் எடுத்திருந்தவளை புருவங்கள் சுருங்கப் பார்த்தான் உத்தியுக்தன். அவனையும் மீறி விழிகள் நாலா பக்கமும் அலசின. அங்கும் இங்கும் அமர்ந்திருந்தவர்களின் கவனம் தம் பக்கம் படு சுவாரசியத்துடன் திரும்புவதைக் கண்டு, எரிச்சலுடன் சமர்த்தியைப் பார்த்து,

“முதலில் எங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக்கொள் சமர்த்தி… இது நம்முடைய அறையில்லை.. பொது இடம்..” என்றான் கடித்த பற்களுக்கூடாக வார்த்தைகளைத் துப்பி.

அதைக் கேட்டதும் ஏளனமாகச் சிரித்தவள், “ரியலி… அடடே… எனக்குத் தெரியாதே…” என்று கூறிவிட்டு, மேலும் அவனை நெருங்கி,

“உங்கள் கதையே சந்தி சிரிக்கிறது. அது உங்களுக்கு உறுத்தவில்லை… இதோ இப்படி நான் வந்து பேசுவதுதான் உங்களுக்குக் குத்துகிறதோ..?” என்றாள் தாங்க முடியாத ஆத்திரத்துடன். அப்போதும் நிதானம் காத்த உத்தியுக்தன்,

“சமர்த்தி, இந்த நிமிடம் வரைக்கும் நீ எதற்காக இப்படி நடந்துகொள்கிறாய் என்பது எனக்குத் தெரியாது… எதுவாக இருந்தாலும் அமர்ந்து நிதானமாகப் பேசு… இப்படிப் பைத்தியக் காரத்தனமாக நடந்துகொள்ளாதே…” என்று இவன் எச்சரிக்க, இவளுக்கோ நேற்று முழுவதும் அடக்கி வைத்த ஆத்திரம் கண் மண் தெரியாமல் சுனாமியாய் பொங்கி எழுந்தது.

“என்னது பைத்தியக்காரத் தனமா… ஆமாம் பைத்தியக்காரத் தனம்தான். கட்டிய கணவனையே ஒருத்திக்குத் தாரை வார்த்து அதுவும் முன்னால் காதலிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது கூடத் தெரியாமல், இதோ இப்போது உங்கள் முன்னால் நிற்கிறேன் பாருங்கள்… ஆமாம் நான் பைத்தியக்காரி தான்…” என்றவள், நடந்து சென்று உத்தியுக்தன் மேசையில் போட்ட சஞ்சிகையை வெளியே எடுத்து ஆத்திரத்தோடு பிரித்து அதை அவன் முன்னால் விரித்துக் காட்டி,

“இதற்கு என்ன அர்த்தம்?” என்றாள் கடுமையாக.

இவனோ அந்தச் சஞ்சிகையை அவளிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு “கார்பேஜ்…” என்கிற சொல்லோடு அதே மேசையில் தூக்கிப் போட்டு விட்டு, “யார் யாரோ எதை எதையோ எழுதுகிறார்கள் என்றால், அதை உடனே நம்பிவிடுவாயா?” என்றான் எரிச்சலோடு.

இவளோ, “நம்பாமல் இருப்பதுபோலவா நடந்தீர்கள்?… அதைத்தான், தொலைக்காட்சியில் பார்த்தேனே… முத்தம் வேறு தந்தாளே.. அது எப்படி, நாள் தவறாமலும் என்னோடு படுத்து எழும்பிய பின்னும், இன்னொருத்தியைத் தேடிப் போகிறீர்களே, உங்களுக்கு அசிங்கமாக இல்லை?” என்று ஆத்திரத்துடன் கேட்டவளை ஏறிட்டவனுக்க உடல் இறுகிப் போனது.

என்ன நினைத்தானோ, அங்கிருந்த கண்ணாடிக் குவளையில் தண்ணீரை ஊற்றி, அதைச் சமர்த்தியிடம் எடுத்து நீட்டியவாறு,

“உட்கார் சமர்த்தி, உனக்குப் பசி இருக்கிறது. அதுதான் இப்படி அர்த்தமற்று நடந்து கொள்கிறாய். எதுவாக இருந்தாலும் பிறகு தெளிவாகப் பேசலாம். முதலில் இந்தத் தண்ணீரைக் குடி, உன் கோபம் கொஞ்சம் குறையட்டும்… அதற்குப் பிறகு பேசலாம்…” என்று அவன் வரவழைத்த நிதானத்துடன் சொல்ல, இவளோ அவனை அருவெறுப்போடு பார்த்தாள்.

“சீ… போதும் நிறுத்துங்கள்… ஒருத்தியை மணந்துவிட்டு, முன்னால் காதலியோடு, கூத்தடித்து விட்டு வந்திருக்கிறீர்கள்… இதைக் கேள்வி கேட்டால் உங்களுக்கு அர்த்தமற்றதாகத் தெரிகிறதா?”; என்று சீற, இவனோ,

“இனஃப் சமர்த்தி… டோன்ட் பிகேவ் லைக் எ சைல்ட்… என்னைப் பற்றித் தெரிந்தும் இப்படிப் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது… எனக்கு மனைவி என்று ஒருத்தி இருக்கும் போது கண்ட இடத்திற்கு நான் ஏன் போகிறேன்… இதோ பார் சமர்த்தி… என் பழைய வாழ்க்கை ஒன்றும் ஒளிவு மறைவு கிடையாது… நான் எதையும் மறைத்து வாழ்ந்ததும் கிடையாது. இப்போதும் சொல்கிறேன்… இந்தக் கணம் வரை, உன்னை மணந்த பின், யாரையும் நான் தொடவும் இல்லை. தொடவும் மாட்டேன்… எனக்கெல்லாம், வீட்டில் ஒருத்தி, வெளியில் ஒருத்தி என்று வாழத் தெரியாது… மனைவி இருக்கும்போது இன்னொருத்தியைத் தேடிச் செல்லும் தரம் கெட்டவனும் நான் கிடையாது… இதைப் பற்றி உனக்கு ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்” என்று அழுத்தமாகக் கூற, இவளோ அவனை ஏளனத்துடன் பார்த்தாள்.

“நீங்களா இரட்டை வாழ்க்கை வாழ மாட்டீர்கள்? இதை நம்பச் சொல்கிறீர்களா? அப்படியானால் இந்தச் சஞ்சிகை சொல்வது பொய்யா என்ன?” என்றவளை இப்போது ஆத்திரத்தோடு பார்த்தான் உத்தியுக்தன்.

“உயிரற்ற இந்தச் சஞ்சிகை சொல்வதை நம்புகிறாய், உயிரோடு இருக்கும் நான் சொல்வதையா நம்ப மறுக்கிறாய்… நான் எதற்குப் பொய் சொல்லவேண்டும்… எனக்குப் பொய் சொல்லத் தெரியாது சமர்த்தி. உனக்கும் அது தெரியும்…” என்றவனைப் பார்த்துக் கிண்டலுடன் சிரித்தவள்,

“அடேங்கப்பா… இதை நீங்கள் சொல்கிறீர்களா? கட்டிய கணவன் இருக்கும்போதே, உடல் சுகத்திற்கு இன்னொருத்தனைத் தேடிச் சென்றவர்கள்தானே… உங்கள் அம்மா… அவர் மகன் நீங்கள் எப்படி இருப்பீர்கள்… உங்கள் தம்பி… தூணுக்குத் துணியைக் கட்டினாலும் பெண்ணென்று நம்பிப் போகும் தரங்கெட்ட மனிதர்தானே… அந்தக் குடும்பத்திலிருந்து வந்த நீங்கள் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறீர்களா” என்று தன்னை மறந்து எகத்தாளமாகக் கூற உத்தியுக்தனின் கரத்திலிருந்த கண்ணாடிக் குவளை அதீத ஆத்திரத்தில் விளைந்த ஆவேசத்தில், உடைந்து நொறுங்கி அவனுடைய கையைப் பதம்பார்க்க, இவளோ அது எழுப்பிய சத்தத்தில் ஒரு கணம் அதிர்ந்து அவன் கரத்தைப் பார்த்தாள். இரத்தம் உதிக்கத் தொடங்கியதைக் கண்டவளுக்கு இரக்கம் வருவதற்குப் பதில் ஆத்திரம்தான் வந்தது.

செய்வதையும் செய்து விட்டு இப்படிக் கண்ணாடிக் குவளையை உடைத்தால் அவள், பயந்து விடுவாளா என்ன? சீற்றத்துடன் அவன் முகத்தைப் பார்க்க, அவனுடைய முகமோ இவளை விடப் பல மடங்கு ஆத்திரத்தைக் கடன் வாங்கியிருந்தது.

உத்தியுக்தனின் இரத்தமோ, நாடி நரம்பு முழுவதும் பெரும் கொதிப்புடன் பயணிக்கத் தொடங்கத் தன் பற்களைக் கடித்தவன்,

“இப்போது எதற்கு நமக்கிடையில் வேறு யாரையோ இழுக்கிறாய் சமர்த்தி… இது உனக்கும் எனக்குமான பிரச்சனை. இதில் மூன்றாம் நபரை இழுப்பது அசிங்கம். இதைக் கூடவா உன்னை வளர்த்தவர்கள் உனக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை. என்னைச் சொல்கிறாயே, உன் அப்பா கூட மனைவி எப்போது மண்டையைப் போடுவாள், எப்போது இன்னொரு திருமணம் முடிக்கலாம் என்று காத்திருந்தவர்தானே… நீ இன்னொருத்தியைப் பற்றிப் பேசுகிறாயா? வியப்பாக இல்லை… என்று கேட்டபோது சமர்த்தியின் முகன் கறுத்துச் சுண்டித்தான் போயிற்று…” எதையோ சொல்ல வாயெடுத்தவளைத் தடுத்தவன், சுத்தவரப் பார்த்து விட்டு,

“நம் பேச்சை இத்தோடு நிறுத்தலாம்.. ஆட்கள் பார்க்கிறார்கள் சதி… தயவு செய்து உன் உணர்ச்சிகளை இப்படி வெளியிடையில் காட்டாதே. நீ நினைப்பது போல எனக்கும் ஜூலியட்டிற்கும் இடையில் எதுவும் இல்லை. இருக்கவும் போவதில்லை…” என்று முடிந்தவரை நிதானத்துடன் அவன் கூற, இவளோ,

“இதை நம்பச் சொல்கிறீர்களா?” என்று அடங்கா ஆத்திரத்துடன் கேட்க இவனோ தோள்களைக் குலுக்கி,

“நம்புவதும் நம்பாததும் உன் இஷ்டம்… சதி… நீ நம்பவேண்டும் என்பதற்காகப் பொய்யையா கூற முடியும்… எனக்குப் பொய் சொல்லவும் வராது… நடிக்கவும் தெரியாது… நான் சொல்வது நிஜம்… தவிர, இந்த நாடகத்தைப் பிறகு வைத்துக்கொள்ளலாம்… தயவு செய்து உட்கார்…” என்று கடிய, அது எரியும் விளக்குக்கு எண்ணெய் விடும் கதையாயிற்று. ஆத்திரத்துடன் இரண்டடி எடுத்து வைத்தவள்,

“என்னது… நாடகமா… எனது கோபம் உங்களுக்கு நாடகமாகவா தெரிகிறது?” என்று ஆவேசத்துடன் சீற, அவளுடைய குரலின் வெளிப்பாட்டில், அத்தனை பேரின் கவனமும் இவர்களின் முழுவதுமாகத் திரும்பியது.

இதில் சிலர் இந்தச் சண்டையைச் சுவாரசியத்துடன், நிகழ் பதிவு வேறு செய்யத் தொடங்கினர். அதைக் கண்டதும், உத்தியுக்தனுக்கு உடலிலிருந்த இரத்தம் அனைத்தும் கொதி நிலைக்குச் சென்றது.

அவள் எகிறுவது போல இவனாலும் எகிற முடியும். ஆனால், இவனுடைய நெருப்பு அவளை அல்லவா பொசுக்கிவிடும். அது மட்டுமா? அது நாளை செய்தியாகப் பத்திரிகையில் வருமே. ஒரு முறை அத்தனை மக்களின் முன்னாலும் கூனிக் குறுகி நின்றது பற்றாதா? மீண்டும் ஒரு முறை அவன் மானத்தை அடகு வைப்பதா? சிரமப்பட்டுத் தன் கோபத்தை அடக்கியவன்,

“சமர்த்தி.. இட்ஸ் இனஃப்.. பிகேவ் யுவர் செர்ஃப். இந்தச் சஞ்சிகை வெறும் வீண் பேச்சுகளையும், வதந்திகளையும் மட்டும் வெளிப்படுத்திப் பணம் சம்பாதிக்கும் சஞ்சிகை. இதை உண்மையென்று நம்பினால், நீ தான் முட்டாள்… இதோ பார் சமர்த்தி.. எல்லோரும் நம்மைத்தான் பார்க்கிறார்கள்… அதனால் உன்னை அடக்கிக்கொள்” என்றவனை அலட்சியமாகப் பார்த்தவள்,

“ரியலி…” என்றவள் பலமாகச் சிரித்தாள். பின் தன் கரங்களைப் பலமாகத் தட்டி, அந்த உணவகத்தின் நடுப்பகுதிக்கு வந்தாள். இவனோ, மறுப்பாகத் தலையை அசைத்து,

“நோ… ப்ளீஸ் டோன்ட் டு திஸ் டு அஸ்…” என்றபோது அவனுடைய குரலிலிருந்த சூடும் தவிப்பும் அவளை இளக்குவதாகவேயில்லை. மாறாக, ஆத்திரச் சிரிப்போடு அங்கிருந்தவர்களைப் பார்த்து,

“லேடீஸ் அன்ட் ஜென்டில் மென்… திஸ் மான்…” என்று இவனைச் சுட்டிக் காட்டி,” ஆத்திரத்துடன் அவனை உறுத்துப் பார்த்து,

“என் கணவர்… மிஸ்டர் உத்தியுக்தன்… மிகப் பெரும் வியாபாரி… நேற்றுதான் பிரதம மந்திரியின் கரத்தால் விருது கூட வாங்கினார்… ஆனால்…” என்றவள் உத்தியுக்தனை வெறுப்போடு பார்த்து, அவருக்கு ஒருத்தி போதாதாம்… இன்னொருத்தியும் தேவைப்படுகிறதாம்…” என்றவள் எல்லையில்லா ஆத்திரத்தோடு அந்தச் சஞ்சிகையைத் தூக்கிக் காட்டி, இதோ, அவருடைய மாஜிக் காதலியுடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்ததற்கான ஆதாரம்… அதுவும் எனக்குத் தெரியாமல்.. ஆனால் பாருங்கள், கட்டிய மனைவிக்குத் துரோகம் செய்து விட்டு எதுவுமே தெரியாதவர் போல என்னமா நடிக்கிறார்… அதுவும் தவறே செய்யாதவர் போலப் பேச்சு வேறு…” என்று சீறியவள், உத்தியுக்தனை எரிப்பதுபோலப் பார்த்து அத்தனை பேரும் கேட்கிறார்களே என்கிற சிறு மனக் கிலேசமும் இன்றி,

“என்னைப் பழிவாங்கத்தானே திருமணம் முடித்தாய்… இதுதான் உன் பழிவாங்கலா? அதற்கு நீ என்னைத் திருமணம் முடிக்காமல் இருந்திருக்க வேண்டும்… என்ன நீ என்ன செய்தாலும் வாயை மூடிக்கொண்டு ஒரு ஓரமாக விழுந்து கிடப்பேன் என்று நினைத்தாயா? இல்லை இன்னொருத்தியோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டதும், ஐயோ இப்படிச் செய்துவிட்டாரே என்று ஒரு முலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பேன் என்று நினைத்தாயா? நான் சமர்த்தி… உன்னையும், அந்த ஜூலியட்டையும் சந்தி சிரிக்க வைத்துவிடுவேன்…” என்று சீறியவள், அழுகையில் நனைந்த கண்ணீரைத் துடைத்தவாறு ஆத்திரம் அடங்காதவளாக அவனை முறைக்க, உத்தியுக்தனோ ஒரு வார்த்தை தன்னும் பேசினானில்லை. உடல் இறுக, முகம் கறுக்க அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க, அது வேறு அவளுடைய கோபத்தை எகிறச் செய்தது.

“டு யு நோ வட்… நீ மனிதனே அல்ல… ஜடம்… உனக்கு உணர்வுகள் கிடையாது… நான் ஒரு பைத்தியக் காரி, உன்னைப் பற்றித் தெரிந்தும், நீ என்னைப் பழிவாங்க மணந்துகொண்டாய் என்பது தெரிந்தும், என் காதலை உன் காலடியில் வைக்கத் தயாராக இருந்தேன் பார்…. என்னைச் சொல்ல வேண்டும்… என்னை எப்படியெல்லாம் சித்திரவதைப் படுத்தினாய்… மனதளவில் எவ்வளவு நொறுங்கிப் போனேன்… கொஞ்சமாவது இரக்கம் காட்டினாயா? என்னைப் பற்றிக் கொஞ்சமாவது யோசித்தாயா? ம்கூம்… நீ எங்கே யோசிக்கப்போகிறாய்? உனக்குத் தான் உணர்ச்சியே கிடையாதே. ஒரு நல்ல தாயின் வளர்ப்பில் வளர்ந்திருந்தால் அன்பு பாசம் என்றால் என்னவென்று தெரிந்திருக்கும்… நீதான் வறண்ட நிலத்தில், உன் போக்குக்கு வளர்ந்தவனாயிற்றே. உன்னிடம் போய் இதை எதிர்பார்க்கிறேன் பார் என்னைச் சொல்லவேண்டும்?” என்றவள், ஆத்திரம் அடங்காதவளாக, அவனை நெருங்கி, அவனுடைய சட்டைக் காலரைப் பற்றி,

“எனக்கு மட்டும் சக்தியிருந்தால் உன்னை இந்த இடத்திலேயே கொன்று புதைத்திருப்பேன் தெரியுமா?” என்று எகிறும்போதே, எங்கிருந்தோ பல வெளிச்சங்கள் பளிச் பளிச் என்று இவர்களின் மீது பட, அதுவரை அகோர ஆத்திரத்திலிருந்தவள், அப்போதுதான் சுயநினைவு பெற்றவளாக அதிர்வுடன் சுத்தவரப் பார்த்தாள். அங்கே பல பத்திரிகை நிருபர்கள் அவனுடைய சட்டையைப் பற்றியிருக்கும் காட்சியைப் படங்கள் எடுத்துத் தள்ளிக்கொண்டிருக்க, முழுதாகச் சுய நினைவுக்கு வந்தவளாக நம்ப மாட்டாதவளாக, உத்தியுக்தனைப் பார்த்தாள்.

அவனோ இவளைத்தான் வெறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான். தலைக்கு மேலாக வெள்ளம் போன பின்னாடி, சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்பதுபோல, ஒரு வெற்றுப் பார்வையுடன் நின்றிருந்தவனைக் கண்டதும், அதுவரையிருந்த ஆத்திரம் அந்தக் கணம் மறைந்து போக, அச்சத்தில் உடல் வெடவெடத்தது.

இவனோ அதை உணர்ந்தவன் போல, அவளைப் பெரும் வலியோடு பார்த்து,

“ஜூலியட் என்னை உதறும்போது நான்கு சுவருக்குள்தான் உதறிவிட்டுச் சென்றாள், ஆனால் நீ…” என்றவன் சுத்தவரப் பார்த்து, “தாங்ஸ் டு யு… என்ன சொன்னாய் உன்னைப் பழிவாங்குகிறேனா… இப்போது நீ செய்வது என்ன சமர்த்தி? இதோ இப்போது நீ செய்தது போல நான்கு பேருக்கு மத்தியில் உன்னை வதைக்க முடியாதா என்ன? அப்படிச் செய்தால், என்னோடு சேர்த்து உன்னுடைய மரியாதையும்தானே கெட்டுப்போகும்… மல்லாக்காகப் படுத்துக்கொண்டு நீ துப்பிய எச்சில், என் மீது படவில்லை சமர்த்தி… அது உன்மீதுதான் விழுந்திருக்கிறது…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன், தன் சட்டையைப் பற்றியிருந்த அவள் கரத்தை விலக்கி,

“இந்த சஞ்சிகையில் உள்ளதுக்கு நியாயம் கேட்டாயே… சொல்லவா…? நீ என்னைப் பற்றி வதந்தி எழுதினாயே, அதுக்கு எந்த விதத்திலும் மாற்றில்லாத ஒரு செய்திதான் இது… இதற்கு மேல் உனக்கு விளக்கம் கொடுக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று அழுத்தமாகச் சொன்னவன். சுத்தவரப் பார்த்துவிட்டு,

“இனி உன்னுடைய நாடகம் முடிந்துவிட்டது என்றால், கிளம்பலாம்…” என்றான்.

சொன்னதோட விடாமல், அவளுடைய கரத்தைப் பற்றி, இழுத்தவாறு அந்த இடத்தை விட்டு விலக முயல, அடுத்த கணம் அத்தனை பத்திரிகையாளர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாரு மாறாகக் கேள்விகேட்கத் தொடங்கினர்.

“உங்களுக்கும் ஜூலிக்கும் இடையேயான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டு விட்டதா?”

“அப்படியானால் உங்கள் மனைவியின் நிலை என்ன?”

“உங்கள் மனைவியை ஏமாற்றியதை இட்டு நீங்கள் வருந்தவில்லையா?”

“உங்கள் மனைவியா காதலியா என்று வந்தால், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்…?”

“மனைவி இருக்கும்போதே இன்னொருத்தியைத் தேடிச் செல்ல உனக்கு வெட்கமாகவில்லையா…?”

“நீ ஆண்களுக்கே அவமானச் சின்னம்…”

“உங்கள் கணவரை சட்டத்தின் பிடியில் நிறுத்தப் போகிறீர்களா?”

“உங்கள் கணவரின் துரோகத்தை அறிந்த பின்னும் அவரோடு சேர்ந்து வாழ்வீர்களா? இல்லை விவாகரத்துப் பெறுவீர்களா?”

“அவரை விவாகரத்துப் பெற்றபின் உங்களது புது வாழ்க்கை எப்படியிருக்கும்.

“உங்கள் கணவர் உங்களைப் பழிவாங்கத்தான் மணந்ததாகக் கூறினீர்கள்… உங்களை உடல் ரீதியாகக் காயப்படுத்தினாரா?”

“அவருக்கு எதிராக வழக்குத் தொடுப்பீர்களா?”

“உங்களைத் துன்புறுத்த எப்படி இடம் கொடுத்தீர்கள்?”

“பழிவாங்க மணந்தார் என்றால், அது சட்டப்படி குற்றமாயிற்றே. ஏன் காவல்துறையின் உதவியை நீங்கள் பெறவில்லை?”

இத்தனை கேள்விக்கு மத்தியிலும் அவனை நோக்கி குதிக்கால் உயர்ந்த செருப்பொன்று பறந்து வந்து அவனுடைய நெற்றியில் நச்சென்று விழ, ஒரு கணம் வலியில் முகம் சுணங்கச் செருப்புப் பட்ட இடத்தைப் பொத்திக்கொண்டவனுக்குச் சற்று நேரம் எடுத்தது சுயத்திற்கு வர.

அன்று சமர்த்தி விளக்கால் அடித்துவிட்டுப் போன அதே இடத்தில் குதிக்கால் செருப்புப் பாட்டு உயிர் போகும் வலியைக் கொடுக்க, விழிகள் கலங்கியவனாக எங்கிருந்து செருப்பு வந்தது என்று திரும்பிப் பார்த்தான் உத்தியுக்தன்.

சமர்த்தியும் அதிர்ச்சியுடன் செருப்பு வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஒரு வெள்ளையினத்துப் பெண் பெரும் ஆத்திரத்துடன் உத்தியுக்தனைப் பார்த்து,

“பெண் என்றால் அத்தனை கேவலமாகப் போய்விட்டதா? உன் உடலில் பலமிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? xxxxx” என்று காது கொடுத்துக் கேட்கமுடியாத வார்த்தைகளால் இவனைத் திட்ட, அந்தப் பெண்ணைத் தொடர்ந்து பலரும் உத்தியுக்தனுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இது எதற்கும் உத்தியுக்தன் பதில்கொடுத்தானில்லை. அந்தப் பெண்ணோ, சமர்த்தியைப் பார்த்து,

“உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னைக் கேள், நான் செய்கிறேன், இவனைச் சும்மா விடாதே. இவனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடு. நான் உதவுகிறேன்… வழக்குத் தொடுப்பதற்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் வா… இவனைப் போன்றவர்களைத் தண்டித்தால் தான் பெண்களைக் கேவலமாக நினைக்கும் ஆண்களுக்கு அது பாடமாக அமையும்?” என்று பெருங்குரல் எடுத்துக் கத்த, அதைக் கேட்டுச் சமர்த்தியே பயந்து போனாள்.

பதட்டத்துடன் உத்தியுக்தனைப் பார்க்க, அவனோ உள்ளே எரிக்கும் தீயை அணைக்கும் வழி தெரியாது பல்லைக் கடித்துக்கொண்டு, பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு,

“சாரி நோ கமன்ஸ்.” என்று பதில் சொன்னவாறே இவளை இழுத்துக்கொண்டு மின்தூக்கியில் ஏறிவிட்டான். இப்போது சமர்த்தி வெளிப்படையாகவே நடுங்கத் தொடங்கிவிட்டிருந்தாள்.

ஆத்திரத்தில் அறிவிழந்து பேசினாளே தவிர, இப்படி உத்தியுக்தனைப் பயங்கரமான பிரச்சனையில் சிக்கவைப்பாள் என்று சுத்தமாக யோசிக்கவில்லை.

கூடவே, ஐயோ, இவனைப் பற்றி இத்தனை பேசி விட்டோமே, உள்ளே சென்றதும், பழிவாங்குகிறேன் என்று இன்னும் என்ன குண்டைத் தூக்கிப் போடப் போகிறானோ என்கிற பயத்தில் உதடுகள் உலர்ந்து போயின…?

மின்தூக்கி நின்றதும், கரத்தை விடாமலே அவளை இழுத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவன் கதவைச் சாத்திவிட்டுப் பயணப் பெட்டியை எடுத்துக் கட்டிலில் போட்டு,

“பொருட்களை எடுத்து வை. டொரன்டோ போகிறோம்…” என்றுவிட்டுத் தன் உடமைகளையும் அடுக்கத் தொடங்க அவளும் அதிகம் வாதிடாமல், தன் பொருட்களை அடுக்கத் தொடங்கினாள்.

பெட்டியை மூடியவன், வாகனத் திறப்பை எடுப்பதற்காகப் பான்ட் பாக்கட்டில் கைவிட்டு வெளியே எடுக்க. கீழே விழுந்தது அந்த வெல்வெட் பெட்டி. குனிந்து அதை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் பெரும் கசப்பு எழுந்தது. என்ன நினைத்தானோ, சமர்த்தியைப் பார்த்து,

“யு ஆர் ரைட்… சமர்த்தி. எனக்கு வேண்டியது உடல் சுகம் மட்டும்தான்… இந்தக் காதல், அக்கறை, அன்பு, கரிசனை, ப்ளா ப்ளா ப்ளா… இந்தக் கண்டராவி பற்றி எனக்கு எதுவும் தெரியாது… ஆனால்…” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை.

நெஞ்சில் தாள முடியாத பெரும் வலி எழ, அதை விழுங்கி அடக்குபவன் உமிழ் நீர் கூட்டி விழுங்கியவன், கரத்திலிருந்த பெட்டியைப் பான்ட் பாக்கட்டில் மீண்டும் போட்டுவிட்டுத் தன் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியேற, இவளும் பதில் கூற முடியாது, அவனைப் பின் தொடர்ந்தாள்.

சமர்த்திக்கோ அவனுடைய அமைதி பெரும் கிலியைக் கிளப்பினாலும் கோபம் எழவே செய்தது. தவறு செய்த அவனே இத்தனை திடமாக இருக்கும் போது, இவள் ஏன் கலங்க வேண்டும். மனைவி இருக்கும்போது, இன்னொரு பெண்ணைத் தேடிச் செல்லும் ஆண்களுக்கு நல்ல பாடம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறாள். இதில் அவள் ஏன் தவறு செய்தது போலக் குறுக வேண்டும்?

தலையை நிமிர்த்திக்கொண்டு அலட்சியமாகவே அவன் பின் சென்றாள் சமர்த்தி. ஐந்து மணி நேரத்திற்குப் பின்பு, உத்தியுக்தனின் வாகனம் சமர்த்தியின் அண்ணன் வீட்டிற்கு முன்னால் வந்து நிற்க, குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள் சமர்த்தி.

நேராகத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வான் என்று பார்த்தால், இங்கே அழைத்து வந்திருக்கிறானே. ஏன்?

“உன்னுடைய பொருட்கள் இன்னும் இரண்டு நாட்களில் உன் வீடு தேடி வரும்…” என்று விட்டு அவளை வாசலிலேயே இறக்கிவிட்டுப் போனவன்தான், அதன் பின் அவளோடு தொடர்பு கொள்ளவில்லை.

அவளை அவளது வீட்டில் விட்டுச் சென்ற மறுநாள், அவளுடையதும், அவனுடையதுமான செய்திகள் அத்தனை ஊடகங்களிலும் பேசு பொருளானது. அதிலும் உத்தியுக்தனைக் கடைந்து எடுத்த வில்லனாகவே அத்தனை பத்திரிகைகளும் சித்தரித்திருந்தன.

கூடவே அவன் மறைத்து வைத்திருந்த தாயினது வரலாறும் தெளிவாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அவள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அட்சரம் பிசகாமல் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரு பெண்ணைப் பழி வாங்கவென்று மணமுடித்தான் என்கிற செய்தி கிடைத்தால் போதாதா? அதன் அடிப்படையில், சமூகவலைத்தளங்கள், மனித உரிமைக் குழுக்கள் என்று போட்டிப் போட்டுக் கொண்டு அவனுக்கு எதிராக வழக்குத் தொடுத்தன.

பின்னே கிடைத்தது ஒரு ஆண் ஆயிற்றே. சும்மா விடுவார்களா என்ன?

இங்கே சமர்த்தியின் வீட்டில், தயாளனும் புஷ்பாவும் பேசும் திராணியற்று அதிர்ந்துபோய் நின்றனர்.

தங்கள் செல்லக் குழந்தையை உத்தியுக்தன் பழிதீர்க்கத்தான் மணந்தான் என்கிற உண்மை தெரிந்தபின் துடித்துப் போனார்கள். அவள் என்ன சித்திரவதைப் பட்டாளோ. உடலால் எப்படியெல்லாம் வதைத்தானோ என்று எண்ணி எண்ணிக் கலங்கினார்கள். ஆனால் அவளிடம் சென்று என்ன நடந்தது என்று கேட்கத் திராணியற்றுப்போய், தனிமையில் அழுதார்கள்.

சமர்த்தியும் வாயடைத்துத்தான் போயிந்தாள். அந்த நேரத்துக் கோபத்தில் அவள் உளறியது இத்தனை பெரிய சிக்கலைக் கொண்டுவரும் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. ஆனாலும் அவன் மீதிருந்த ஆத்திரம் அவளுக்கு இம்மியும் குறையவில்லை. படட்டும். நன்றாகப் படட்டும். அவள் இருக்கும்போதோ இன்னொருத்தியிடம் போய் வந்தான் அல்லவா… அவனுக்குரிய இந்தத் தண்டனை மிக மிகக் குறைவுதான் என்று எண்ணி தன் கோபத்தை மேலும் வளர்த்தாள். அதுவும் நேராகத் தன்னை அண்ணன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டது அவள் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்த நேரத்தில் உத்தியுக்தனுக்கும் சமர்த்திக்கும் ஊடகங்கள் கொடுத்த அழுத்தம் மிக மிக அதிகமாயிற்று. அது இருவரையும் சும்மா இருக்க நிற்க விடவில்லை. அவர்களின் வீட்டு வாசலிலேயே செய்தி பெறுவதற்காகத் தவமிருக்கத் தொடங்கின. இதை அறிந்துகொண்ட உத்தியுக்தன், மறு நாளே அவள் வீட்டைச் சுற்றிக் காவலுக்கு ஏற்பாடு செய்தான். இது சமர்த்தி வீட்டாருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் யார் எங்களுக்குக் காவல் வைக்க? நாங்கள் கேட்டோமா?” என்று ஆத்திரப் பட்டவர்கள், கவலர்களை வெளியேறக் கேட்டும், அவர்கள் அசைந்தார்களில்லை.

கடைசியாகத் தயாளன் நேராக உத்தியுக்தனின் வீட்டிற்குச் செல்ல, அங்கும் வீட்டைச் சுற்றிக் காவலர்கள்தான்.

தயாளன் வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், அடுத்த கணம் உள்ளே அழைக்கப்பட்டார். உத்தியுக்தனைக் கண்டதும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வர, அவனுடைய சட்டையைப் பற்றி ‘எதற்காக என் பெண்ணுடைய வாழ்வில் விளையாடினாய்? என்று கேட்கவேண்டும் என்கிற ஆத்திரம் வந்தது. ஆனாலும் அதிர்ந்து பேசாத அவருடைய குணம் கட்டிப்போட்டது.

அவரை நோக்கி வந்தவன், இருக்கையைச் சுட்டிக்காட்டி,

“அமருங்கள்…” என்றான் மென்மையாக. ஆனால், அதை மறுத்துவிட்டு நிற்கவும், இவனும் அமராமல் அவரை நேராகப் பார்த்து

“ஏதாவது குடிக்கிறீர்களா?” என்றான் அடுத்து. அவர் அதற்குப் பதில் கூறாமல் எங்கோ வெறிக்க, சற்றுத் தயங்கி நின்றான் உத்தியுக்தன். பின் தன் தொண்டையைச் செருமி,

“நீங்கள் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் உங்கள் வேண்டுதலை என்னால் உடனேயே நிவர்த்திச் செய்ய முடியாது…” என்றான் அமைதியாக.

தயாளன் இவனைக் கோபமாகப் பார்த்து, “நான் ஒன்றும் என் தங்கையை உங்களோடு சேர்த்து வைக்க வரவில்லை…” என்றார் சுள்ளென்று. அதைக் கேட்டு மெல்லியதாகச் சிரித்தவன்,

“ஐநோ… நீங்கள் அதற்கு வரவில்லை என்று எனக்குத் தெரியும்… நான் சொல்வது காவலர்களைப் பற்றி… இந்த நிலையில், ஊடகங்களின் அத்துமீறல் சற்று அதிகமாக இருக்கும் இது உங்கள் அனைவருக்கும் பெரும் சிக்கலைக் கொடுக்கும். குறிப்பாகச் சதிக்கு…” என்றவன் எதையோ மென்று விழுங்கிவிட்டு, தயாளனைப் பார்த்து,

“உங்கள் தங்கைக்குக் கோபம் வந்தால் என்ன பேசுவது என்று தெரியாது. பத்திரிகையாளர்களிடம் ஏதாவது வரம்பு மீறிப் பேசினால் அது அவளுக்குத் தான் ஆபத்தாக முடியும். அதனால்தான் காவலுக்கு ஆட்களை வைத்திருக்கிறேன். எனக்கு என்ன ஆனாலும், நான் சமாளித்துக்கொள்வேன். ஆனால் சமர்த்தியால் அது முடியாது. அது அவளை மட்டுமல்ல, உங்களையும்தான் பாதிக்கும். இது அதிக நாட்களுக்கு இல்லை. இன்னும் இரண்டு கிழமைகளுக்குத்தான். அதற்குப் பிறகு, அவர்களின் கவனம் திசைமாறிவிடும். அதுவரைக்கும் நீங்கள் இதைத் தாங்கத்தான் வேண்டும்.” என்றவன் தன் பான்ட் பாக்கட்டில் கரங்களைச் செலுத்தியவாறு தயாளனை நெருங்கி,

“ஜெஸ்ட் ஃபோர் டூ வீக்ஸ்… ப்ளீஸ்… ஃபோர் சேக் ஆஃப் சமர்த்தி… அன்ட் ஹர் பிலவ் ஃபமிலி…” என்று மென்மையாகக் கூற, ஒரு கணம் திகைத்துப் போனார் தயாளன்.

சமர்த்திக்காகப் பார்த்து பார்த்துச் செய்கிறானே.. இவனா என் தங்கையைப் பழிவாங்க மணந்தான்? இவனா அவளை வதைத்தான்? நம்ப முடியாமல் உத்தியுக்தனை உற்றுப் பார்த்தார். அந்த விழிகளில் தவறு செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. மாறாக, அதில் தெளிவு இருந்தது. கம்பீரமும் இருந்தது. இப்போது தயாளனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து போனது.

அவருடைய தங்கை உலக அனுபவம் அற்றவள். எதையும் வெளிப்படையாகப் பேசிவிடக் கூடியவள். பேசும் போது யோசிக்கத் தெரியாதவள். ஒரு வேளை தவறாகப் புரிந்துகொண்டாளோ. அதுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமோ? எதுவோ புரிந்தும் புரியாமலும் போக, உத்தியுக்தனைப் பார்த்து,

“சத்தி ஏதாவது தவறாகப் பேசி…” என்று அவர் முடிக்க முதல், அவருடைய தோளில் கரத்தைப் பதித்தவன்,

“அவளைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அது போதும்” என்றவன், இத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல அவரைப் பார்க்க, தயாளனாலும் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை.

கோபமாகத்தான் வந்தார். ஆனால் இப்போது கோபம் சென்ற இடம் தெரியவில்லை.

சமர்த்திக்காக இவ்வளவு யோசிப்பவன் எப்படி அவளை வலிக்கச் செய்திருப்பான். அதுவும் இப்போது கூட அவளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளத்தானே சொன்னான்… நம்ப முடியாதவராக வீட்டிற்கு வந்தவருக்கு எதுவுமே புரிபடவில்லை.

புஷ்பாவிடமும் நடந்த அனைத்தையும் கூற, அவர் கூட தயாளனின் தயக்கத்தைத்தான் பிரதிபலித்தார். அதன் பின் சமர்த்தியே தன் சிக்கலான வாழ்க்கையைத் தானே சரிப்படுத்தட்டும் என்று ஒதுங்கிக்கொண்டனர்.

இதற்கிடையில் அவளுடைய வாக்குமூலத்தை எடுப்பதற்காகக் கவால்துறை அவள் வீடு தேடி வர, குடும்பமே சற்று அதிர்ந்துதான் போனது.

இதுவரை காவல்துறையின் படியைக் கூட மிதிக்காதவர்கள் அவர்கள். அப்படியிருக்க காவல் துறையே வீடுதேடி வந்தால்? என்ன பேசுவது என்று தெரியாமல் திணற, சமர்த்தியோ வந்த காவலர்களைத் தைரியமாகவே எதிர்கொண்டாள்.

அவளிருந்த ஆத்திரத்திற்கு நடக்காததையும் கூறி அவனை உள்ளே தள்ளவேண்டும் என்கிற ஆவேசம்தான் எழுந்தது. ஆனாலும் அவளால் அது முடிந்திருக்கவில்லை.

அவனை விரும்பித் தொலைத்து விட்டாளே. அவனுக்கு வலித்தால் இவளுக்கும் வலிக்குமே.

“உங்கள் கணவர் உடல் அளவில் உங்களைத் துன்புறுத்தினாரா?” என்றபோது ஏனோ இவளுடைய நெஞ்சம் தடுமாறியது. விரல் நகத்தால் கூட உடலளவில் வலிக்கச் செய்யாதவன் அவன். ஆனால் மனதளவில்… அதற்குப் பதில் கூற முடியாது தொண்டை அடைக்க, இல்லை என்று மறுப்பாகப் பதில் கூற, காவல் துறையினரோ,

“அவரை நினைத்துப் பயப்படுகிறீர்களா? உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்… அச்சம் வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லுங்கள். உங்களைப் பழிவாங்க மணந்து கொண்டவர் என்றீர்களே… என்ன விதமான துன்புறுத்தல்களை உங்களுக்குக் கொடுத்தார். மனதளவில், உடலளவில்…” என்று மாறி மாறிக் கேட்க, ஒரு கட்டத்தில் மொத்தமாய்ப் பொறுமை இழந்தாள் சமர்த்தி.

“ஸ்டாப்… ஜெஸ்ட் ஸ்டாப்… அவர் எனக்கு என்ன செய்திருந்தாலும் அது எனக்கும் அவருக்கும் இடையேயான பிரச்சனை, அதில் தலையிட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. நான் வந்து புகார் கொடுத்தேனா? இல்ல என்னை வந்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினேனா… இல்லை அல்லவா… பிறகு எதற்கு இந்தத் தேவையற்ற விசாரணை… எனக்கும் என் கணவருக்கும் ஆயிரமிருக்கும். அதை நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்…” என்று சீற வேறு வழியில்லாமல காவல்துறை விடைபெற்றது.

ஆனாலும் உத்தியுக்தனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால், நீதி மன்றத்திற்கு சமர்த்தி போகவேண்டித்தான் இருந்தது.

அங்கே உத்தியுக்தனும் வந்திருந்தான். கூடவே அவனுடைய தம்பியும் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.

அண்ணனுக்கு சிக்கல் என்றதும் ஓடி வந்துவிட்டான். இருக்கையில் அமர்ந்தபோது, உத்தியுக்தன் தன்னை ஒரு முறையாவது ஏறிட்டுப் பார்ப்பான் என்று அடிக்கடி அவன் பக்கம் திரும்பியவளுக்குப் பெரும் ஏமாற்றமே கிட்டியது.

அவன் மருந்துக்குக் கூட அவள் பக்கம் திரும்பினானில்லை. கடைசியாக அவளுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் உத்தியுக்தன் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டான்.

அனைவரும் நீதி மன்றத்தை விட்டு வெளியே வந்தான். வந்தவன் எப்படியும் தன்னோடு பேச வருவான், அப்படி வந்தால், நாக்கைப் பிடுங்குவது போல இரண்டு கேள்வி கேட்பதாகவும்தான் நினைத்தாள். ஆனால், வெளியே வந்தவன், அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்று கருத்தில் கூட எடுக்கவில்லை.

நீ யாரோ, நான் யாரோ என்பது போல, நேராகத் தன் வாகனத்தில் ஏற, அவ்வியக்தன்தான் ஒரு கணம் சற்றுத் தயங்கினான்.

உத்தியுக்தன் வாகனத்தை உசுப்பவும், அதற்கு மேல் நேரம் கடத்தாமல், ஓடிச்சென்று அண்ணனின் வண்டியில் ஏற, அவனோ குளிர் கண்ணாடியை அணிந்துவிட்டு, இதுதான் இறுதி முறை என்பது போலச் சமர்த்தியை ஏறிட்டான். அதற்குப் பின் அவனுடைய வாகனம் புகையைக் கக்கியவாறு அந்த இடத்தை விட்டுப் பறந்து செல்ல, எதையோ இழந்த உணர்வோடு உத்தியுக்தன் சென்று மறைந்த பாதையையே பார்த்துக்கொண்டிருந்தாள் சமர்த்தி.

பாகம் ஒன்று முற்றும்.

What’s your Reaction?
+1
23
+1
6
+1
1
+1
1
+1
19
+1
2

Related Post

4 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-25”
  1. அருமையான பதிவு 😍😍😍😍.
    சுத்தம் சோலி முடிஞ்சுது. 😢😢😢😢😢
    ஏம்மா சத்தி எதையும் ஆராஞ்சு பேசி செய்ய மாட்டியா?🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.
    எடுத்தோம் கவுத்தோம் ன்னு பேசி விளைவுகளை விபரீதமாக்கிட்டியே.🫤🫤🫤🫤😔😔😔😔😔

  2. அடிப்பாவி அவனே இப்போதான் மலையிறங்கி லவ் மோடுக்கு வந்த உன் அவசர புத்தியில எரிமலையா ஆக்கிட்டியே ஆனாலும் சமர்த்திக்கு இவ்ளோ ஆகாது சிஸ்டர் பாவம் அவனை எப்போ பார்த்தாலும் எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துறதே வேலைய வச்சுருக்க இவளை அவன் படுத்துறதுல தப்பே இல்ல உதி பாவம்ல அவனை பத்தி தெரிஞ்சும் அவன் பேரன்ட்ஸ் பதிலா ஏன் பேசணும் இவளை தூக்கி என்னயில போடுங்க 😡😡😡😡

    1. நா சந்தோஷமா எண்ணெயில போடுறேன். ஆனா கீழே வைஷூன்னு ஒருத்தி இருக்கால்ல. அவ அதுக்கு முன்னாடி என்ன தூக்கி போட்டிருவாங்களே. அதுதான் பயமா கீதுபா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!