Mon. Sep 16th, 2024

நீ பேசும் மொழி நானாக – 24

 

(24)

 

அன்று தாய் தந்தையின் ஒப்புதல் கிடைத்த பின், சர்வாகமனின் ஆட்டம் சற்று கூடித்தான் போயிருந்தது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம், நிரந்தரியை வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்தான் அவன். அதனால், நிரந்தரி முடிந்த வரை, அவனை விட்டு ஒதுங்கியிருக்க முயன்றாலும், அவன் விடுவதாயில்லை.

 

இதற்கிடையில் முல்லைத்தீவிற்குப் போவதற்கான ஏற்பாடுகளை அவன் செய்யத் தொடங்க, அவன் அங்கே சென்று உதவி செய்யவேண்டுமானால், சில பெரிய இடங்களில் அனுமதி பெற வேண்டி இருந்தது. சொந்த இடங்களுக்கு செல்வதற்குக் கூட அனுமதி வேண்டுமா? என்கிற கோபம் எழுந்தாலும், ஒன்றும் செய்ய முடியாத நிலை.

 

இது சார்ந்து குலவேந்தர், தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, பெரிய இடங்கள் மூலம் அதற்கான ஆயத்தங்களைச் செய்ய, அதற்கான அனுமதி சில நாட்களில் கிடைத்துவிடும் என்று அவர்கள் உறுதி கூறியதால், நிம்மதியுடன், நிரந்தரியுடன் கிடைத்த நேரங்களை சந்தோஷமாக அனுபவிக்கத் தொடங்கினான் சர்வாகமன்.

 

ஆனால் அவளோ கண்ணில் அகப்பட்டால் அல்லவோ. அவன் வீட்டிலிருந்தால், அவள் தோட்டத்தில் இருநதாள். இவன் தோட்டத்திற்குப் போனால், அவள் வீட்டிற்குள் இருந்தாள். இப்படி கண்ணா மூச்சியாட்டம் ஆடிக்கொண்டிருந்தவளை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று  தெரியாது விழித்தான் சர்வாகமன்.

 

அன்று பிரகாஷ், சர்வாகமனை அழைத்துக்கொண்டு, வவுனியாவின் முக்கிய இடங்களுக்குச் சென்றிருக்க, அவன் இல்லை என்கிற நிம்மதியில், சுதந்திரமாகத் தன் வேலைகளைச் செய்துகொண்டிருந்தாள் நிரந்தரி.

 

அன்றைக்கென்று நீர் இறைக்கும் இயந்திரம் பழுதாய்ப் போனதால், சமையலறைக்கும், குளியலறைக்கும் தண்ணீர் நிரப்பவேண்டிய நிலை. அடிக்கடி பழுதாய் போகும் இயந்திரம்தான். திருத்திவிட்டால் ஒழுங்காக ஓடும்… இந்த முறை திருத்த முடியாது என்று இயந்திர வல்லுநர், கைகழுவி விட, புதிய இயந்திரம் வாங்கிப் பூட்டும் வரை, இவள்தான் நீர் நிறைக்கவேண்டும். பிரகாஷ் இருந்திருந்தால், தாய்க்குத் தெரியாமல் உதவியிருப்பான்.

 

பெரிய கிடாரத்தில் தண்ணீர் எடுத்து வந்து ஊற்றியபோதுதான், தோட்டத்தில் இவளைக் காணாது சமையலறைக்குள் தேடிவந்தான், சர்வாகமன்.

 

சமையற்கட்டுக்குள் நுழைந்தவன் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாகப் பெரிய கிடாரத்தில் நீர் ஊற்றிக்கொண்டிருப்பதைக் கண்டு மெல்லிய விசிலை அடித்தவன், இரும்பிழுந்த காந்தமாக… இல்லை இல்லை… காந்தம் இழுத்த இருப்பாக, அவளை நோக்கிப் போகத் தொடங்கினான்.

 

சுலபமாக வேலைசெய்வதற்காகத் தூக்கிச் செருகியிருந்த சேலையும், முந்தானையை இடையில் செருகியிருந்ததால், சற்றுக் கீழிறங்கிய சேலையையும், மீறித் தெரிந்த வெண்ணிற இடையும், பளிங்குக் கால்களும், இவன் கட்டுப்பாட்டைக் குலைக்கப் போதுமானதாக இருந்தது.

 

இவள் என்னவள் என்கிற கர்வம் அவனையும் மீறி எழுந்ததால், அவளை நெருங்கிச் செல்ல, அப்போதுதான் தண்ணீரை ஊற்றிவிட்டு நிமிர்ந்தவள், வந்துகொண்டிருந்த சர்வாகமனைக் கண்டு அதிர்ந்து போனாள்.

 

‘இவன் எங்கே வந்தான்…’ என்று யோசித்தவள், தன்னையும் மீறி தடதடத்த இதயத்தை அடக்கியவாறு, வேகமாகச் சமையலறையை விட்டுக் கிணற்றடிக்குப் போக, சர்வாகமனின் முகம், கூம்பிப் போனது.

 

இப்படி ஒவ்வொரு முறையும், அவனை ஊதாசினப்படுத்தும் போதெல்லாம், சொல்ல முடியாத வலியும் கோபமும் இவனை ஆக்கிரமிக்கும். தன்னை மீறிய கோபத்தில்,

 

“நிரந்தரி! நில்…” என்று அவளை நிறுத்த முயன்றான்.

 

அவன் அழைப்பை அவள் கருத்தில் கொண்டால் அல்லவோ… அவனைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கிணற்றடிக்குப் போக, இவனும் அவளைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான்.

 

வாளியில் விறுவிறு என்று தண்ணீர் அள்ளி ஊற்றத் தொடங்க, அவனுக்கு அதைக் கண்டு பெரும் பரிதாபம்தான் எழுந்தது.

 

“என்ன நிரந்தரி இது… இத்தனை பெரிய வாளிகளில் நீர் அள்ளவேண்டியதன் அவசியம் என்ன? அதுவும் தனியாளாக. இதைத் தூக்குவதற்கு யாரும் இல்லையா? நீதான் இதைச் செய்ய வேண்டுமா?.” என வினாவியவனைக் காது கேளாதவள் போல, நீர் இறைத்து முடித்து, வாளியைத் தூக்கக் குனிந்த மறு கணம், கீழே விழுந்திருந்தாள்.

 

சிறிது நேரத்தின் பின்தான் சர்வாகமன் தன் கரத்தை இழுத்த வேகத்திற்கு, கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டது புரிந்தது. கோபத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைக்க, ‘இதில் ஒன்றும் குறைச்சலில்லை…’ என்று சினந்தவன் அவளைத் தளராது நோக்க, அந்த விழி வீச்சின் அதிர்வில் நிரந்தரிதான் தன் விழிகளைத் தாழ்த்தவேண்டியதாயிற்று.

 

“நிரந்தரி….! நன்றாகக் கவனி. தயவுசெய்து… தயவுசெய்து  நான் சொல்வதை இனி ஒருதரம் அலட்சியம் செய்யாதே… எப்போதும் நான் ஒரே போல் இருக்கமாட்டேன்… நானும் மனுஷன்தான்… என் பொறுமைக்கும் ஒரு அளவுண்டு. புரிந்ததா?” என்றவன் அவள் முகத்தில் பயத்தின் ரேகையைக் கண்டதும், தன்னையே வெறுத்தவனாக அவள் அருகே மண்டியிட்டமர்ந்தான்.

 

“இதோ பார்! நீ நினைப்பது போல் நான் கெட்டவன் இல்லைம்மா… என்னைப் பார்த்துப் பயந்து ஓடவேண்டியதன் அவசியம்தான் என்ன?” என்றவன் பின், அவள் நிறைத்திருந்த வாளியைக் காட்டி,

 

“எந்த ஒரு மனிதனும் தான் செய்யும் வேலைக்கென்று ஒரு அளவுகோல் வைத்திருப்பான். ஏன் இயந்திரங்கள் கூட ஒரு அளவுதான் வேலைசெய்யும்… ஆனால் நீ…  நான் இங்கே வந்த இத்தனை நாட்களில், நீ ஓய்ந்திருந்து பார்த்ததில்லை. இரண்டு மனிதர்கள் செய்யும் வேலைகளை நீ ஒருத்தியாகவே செய்துகொண்டிருக்கிறாயே. உன் உடலுக்கும் ஓய்வு வேண்டும்… இதையேன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்?” என்றவன் எழுந்து. தன் வலது கரத்தை அவள் முன்னால் நீட்டி,

 

“தயவு செய்து எழுந்திரு. ஐ ஆம் சாரி… உன்னை விழுத்தவேண்டும் என்று எண்ணவில்லை… உன்னை இழுத்த வேகத்தில் கீழே விழுந்துவிட்டாய்… கம் கெட் அப்…” என்று தன் தலையை அசைத்துக் கூற, அவளோ அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அதைக் கண்டதும் இவனுடைய கோபத்தின் அளவு மேலும் அதிகரிக்கத் தொடங்க,

 

“இதோ பார் நிரந்தரி… நீ இப்போது எழுந்திருக்கா விட்டால் நானே உன்னைத் தூக்கி நிறுத்தவேண்டியிருக்கும்… செய்ய மாட்டேன் என்று நினைக்காதே. நான் சொல்லமாட்டேன், சொன்னால் செய்யாமல் விடவும் மாட்டேன் சாய்ஸ் இஸ் யுவரஸ்” என்றாவறு அவளை நோக்கிக் குனிய முயல, அவள் விதிர் விதிர்த்துப் போனாள்.

 

பதறியவாறு, பின்புறமாகத் தேய்த்தவாறு சென்ற நேரம்,

 

“எங்கே… எங்கே விழுந்தது.” என்று பதறியவாறு பிரகாஷ் ஓடிவந்தான்.

 

‘பூஜை வேளைக் கரடி…’ என்று மனதிற்குள் தன் தம்பியை வைதவன், “ என்ன விழுந்தது? “ என்று புரியாமல் கேட்டான்.

 

“ என்ன விழுந்ததா… ஈழத்தில் எனக்குத் தெரிந்து குண்டிலிருந்து தம்மைக் காக்கத்தான் கீழே விழுந்து கிடப்பார்கள்… இங்கே அம்மாவைத் தவிர வேறு குண்டு விழுந்ததாகத் தெரியவில்லை. அதுதான்… என்ன அண்ணி… எந்தப் பக்கத்திலிருந்து குண்டு விழுந்தது” என்றான் பிரகாஷ் குறும்பாக.

 

அத்தனை நேரமும் இறுகியிருந்த நிரந்தரியின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன. பிரகாஷை ஏறிட்டுப் பார்த்து,

 

“இரு… இரு….. அம்மாவிடம் சொல்கிறேன்” என்று கைகளால் மிரட்ட

 

“சொல்லுங்கள்… எனக்கென்ன பயம்…” என சட்டையை இழுத்து திமிராய் நிமிர்ந்து நிற்க, அதே நேரம், “நிரந்தரி…” என வள்ளியம்மையின் குரல் கேட்ட விநாடி,

 

“நான் இல்லை… எனக்கொன்றும் தெரியாது” என்றபடி பிரகாஷ் பதறியடித்தவாறு ஓட அதைக்கண்ட நிரந்தரி தன்னையும் மறந்து சிரித்தாள்.

 

அவள் சிரித்ததும் அழகாக விரிந்த அந்த உதடுகளை சற்று நேரம் தன்னை மறந்து பார்த்தான் சர்வாகமன்.

 

அவன், தன்னைப் பார்ப்பதையும், முகம் மாறுவதையும் கண்ட நிரந்தரியின் சிரிப்பு உதட்டிலேயே உறைய, முகம் இறுக அவசரமாக எழுந்து மிச்ச நீரையும் நிரப்புவதற்காகக் கயிற்றைப் பற்றப் போக, வேகமாகச் சென்று அந்தக் கயிற்றில் தன் கரத்தையும் பதித்து,

 

“இப்போது என்ன… உனக்கு இந்த அண்டாவை நிரப்பவேண்டும். அவ்வளவுதானே… ஐ வில் டூ இட்…” என்று சொன்னவன், கயிற்றைப் பற்றி, வாளியை இறக்கித், தண்ணீரை மொண்டு, மேலிழுத்து, அங்கிருந்த அண்டாவில் ஊற்றத் தொடங்கியவனுக்கு, இரண்டு வாளிக்குமேல் அள்ளுவதே பெரும் சிரமமாக இருந்தது.

 

பழக்கப் படாத கைகள் சிவந்து எரிச்சலைத் தரத் தொடங்கின. அவன் ஐந்தாவது வாளி அள்ளும் போதே அவன் கைகள் தளர்வதையும், சிரமப் படுவதையும் கண்டவளுக்கு அதற்கு மேல் எனக்கென்ன என்று பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை.

 

அவள் உள்ளத்தில் இரத்தம் கசிவதுபோல் இருக்க விரைந்து அவனை நெருங்கியவள்,  கயிற்றில் தன் கரத்தை வைத்து பலவந்தமாக அவன் கரங்களை விலக்கி, அரைவாசி வரை அள்ளியிருந்த வாளியை மேல் இழுத்து அண்டாவில் இறைத்தவள், வாளியைத் தள்ளி வைத்துவிட்டுத் தன்னையும் மறந்து அவன் கைகளைத் தன் கரத்தில் எடுத்து விரித்துப் பார்த்தாள். அவன் உள்ளங்கைகள் சிவந்துபோய் இரண்டு கொப்பளங்கள் கூடத் தோன்றத் தொடங்கியிருந்தன.

 

‘வாழ்வில் சிரமத்தைக் கண்டறியாத கரங்கள்…’ என எண்ணிக் கலங்கியவள், கண்களில் நீர் கோர்க்க, அவன் சிவந்த உள்ளங் கைகளைத் தன், தளிர் விரல்களால் தன்னையும் அறியாது தடவிக் கொடுத்தவாறு அவனை நிமிர்ந்து பார்த்து,

 

“உங்களுக்கு இது தேவைதானா” என்றாள் தன் மொழியில் கலக்கமாக.

 

“நிரந்தரி நான் ஆண்… என்னால் கூட இந்த முரட்டுக் கயிற்றைப் பற்ற முடியவில்லையே… உன்னால் எப்படி… என்னைப் போலத்தானே ஆரம்பத்தில் நீயும் சிரமப்பட்டிருப்பாய்?” என வேதனையுடன் வினாவியவாறே தன் உள்ளங்கைகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்த அவளுடைய கரங்களைப் பிரித்துப் பார்த்தான்.

 

ஐந்து வருடங்களாக ஓயாது வேலைசெய்தே அவள் இரேகைகள் அழிந்து போய் கைகள் கரடு முரடாகக் காய்ப்பு ஏறி கோரமாகக் காட்சிகொடுத்தன. அவற்றைப் பார்க்கும் போது சர்வாகமனின் இதயம் வேதனையால் சுருங்கியது. அந்தக் கரத்தைத் தன் கைகளில் மென்மையாகப் பற்றியவன் தன்னையும் மீறி அந்தக் காயங்களில் தன் உதடுகளைப் பதித்தெடுத்தான்.

 

ஏனோ, அவன் உதட்டுத் தொடுகையில் இத்தனை காலம் அவள் பட்ட வேதனைகள், துன்பங்கள் அனைத்தும் மாயமாகப் போக, தன்னையும் மறந்து அவன் அன்பில் கட்டுண்டு கிடந்தாள் அந்தப் பேதை.

 

சுற்று நேரத்தில், திடுக்கிட்டுத் தன் உணர்வு பெற்றவள், தவிப்புடன், அவனிடம் இருந்து தன் கரங்களைப் பிடுங்கிக்கொண்டு ‘என்ன காரியம் செய்தோம்’ என்று தன்னைத் தானே கண்டித்தவாறு ஈரச் சேலை தட தடக்க, வீடு நோக்கி ஓடியவளை, வேதனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் சர்வாகமன்.

 

சற்று முன், தன் கரத்தைப் பற்றி, அவள் காயங்களைப் பரிசோதித்தது நினைவுக்கு வர, சிறிதாய் அவன் உதடுகள் மலர்ந்தன.

 

‘உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் நிரந்தரி. நீ அதை மறுத்தாலும், மறைத்தாலும் அதுதான் உண்மை. மிக விரைவில் அந்த அன்பை உடைத்து வெளிவருவாய்… என்னை ஏற்றுக் கொள்வாய். அதுவரை நான் ஓயப் போவதில்லை’ என்று எண்ணியவாறு, அவள் போன திசைக்கே போகத் தொடங்கினான்.

 

தன் அறைக்குள் புகுந்து கொண்ட நிரந்தரிக்கோ தன் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. ஐந்து வாளி தண்ணீர் கிணற்றிலிருந்து அள்ளவே இத்தனை சிரமப்படுகிறானே, இவன் போய் என் மீது  அன்பை வைக்கிறானே… இவனுக்கும் எனக்கும் என்ன பொருத்தமிருக்கிறது…? “ என்று நினைத்தவளுக்கு, எங்கே தான் அவனை விரும்பினாலே, அவன் உயிர் போய்விடுமோ என்கிற அச்சம் வேறு எழுந்தது.

 

என்மேல் அன்பை வைக்கும் இவனையும் நான் பலிகொடுக்க வேண்டுமா’ என்ற சிந்தனை எழ இயலாமையும், கிடைத்த அன்பை அனுபவிக்க முடியாத தன் கோழைத்தனத்தின் மீதும் வெறுப்புத் தோன்ற, வாய்விட்டலற முடியாது சுற்றுப் புறம் அவளை எச்சரிக்கப் புடவைத் தலைப்பை வாய்க்குள் அடைத்து தன் கோரக் குரல் வெளியே கேட்காவண்ணம் அழத் தொடங்கினாள்.

 

கொழுகொம்பு கிடைக்காது தரையில் விழுந்து, மனிதர்களிடம் மிதி பட்டிருந்த கொடிக்கு, பெரிய ஆலமரமே கரம் நீட்டியபோது, அதைப் பற்றிக்கொள்ள முடியாத கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அவலத்தில்,  பெரிதும் கசங்கிப் போனாள் நிரந்தரி.

What’s your Reaction?
+1
19
+1
2
+1
0
+1
0
+1
7
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!