Tue. Oct 22nd, 2024

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 17

(17)

 

இந்தப் பிள்ளைக்கு என்னவாகிவிட்டது? நான் இவ்வளவு காட்டுக் கத்தலாகக் கத்தியும், கேட்காதவளைப் போல் அறையில் அடைந்துகிடக்கிறாளே…” என்று முணுமுணுத்தவாறு யசோதா அம்மேதினியின் அறைக்கதவைத் தட்ட உள்ளே அமர்ந்திருந்தவளுக்கோ திக்கென்றானது.

முன்னிரவு எந்தத் தைரியத்தில் அவனுக்கு முத்தம் கொடுத்துத் தன் காதலைக் கூறினாள். ‘இரவு கொடுத்த தைரியத்தாலும், நிலவு துணையிருக்கிறது என்கிற துணிச்சலும்தானே காரணம். அதனால்தான் இரவு காதலர்களுக்கு உரிய காலமாகப் புலவர்கள் சொல்லிவைத்தார்களோ. ஆனால் அப்போது இருந்த தைரியம் இப்போது சுத்தமாகத் தொலைந்து போய்விட்டதே. எந்த முகத்தோடு அவனை நிமிர்ந்து பார்ப்பாள். இல்லை இவளைக் கண்டால் அவன் என்னதான் நினைப்பான். சீ என்று நினைக்கமாட்டானா? நீ இவ்வளவுதானா என்று கடிய மாட்டானா? கடவுளே… குழந்தை முதல் அவன் கண்காணிப்பில் வளர்ந்தவளுக்கு எப்படி அவன் மீது காதல் வந்தது. அதுவும் அசைக்க முடியாத காதல்.’ நெஞ்சத்தில் பெரும் படபடப்புத் தோன்ற அசையவும் சக்தியற்றவளாக அப்படியே அமர்ந்திருக்க, வெளியே நின்றிருந்த யசோதாவிற்குத் தன் மகளின் இந்தப் புதிய பரிநாமத்தைக் கண்டு வியப்பாகிப்போனது.

“இவளுக்கு என்னவாகிவிட்டது? ஏன் இப்படி நடந்துகொள்கிறாள்…” யசோதா விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் கதவைத் தட்ட,

ஒரு கட்டத்தில் இன்னும் அமைதியாக இருந்தால், தாய் பதறிவிடுவாள் என்பதைப் புரிந்துகொண்டவளாக, எழுந்தவளுக்கு ஏனோ கால்கள் நடுங்கின. எச்சிலை விழுங்கிக் கொண்டவள், சென்று கதவைத் திறக்க, அங்கே அன்னை சற்றுக் கோபத்துடன் நின்றிருந்தார்.

தன் மகளின் முகத்தில் தெரிந்த சிவப்பையும், நெற்றியில் பூத்திருந்த வியர்வையும் கண்டு புருவங்கள் சுருங்க,

“என்ன மேதினி… ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய். முகம் எல்லாம் சிவந்து வீங்கி இருக்கிறதே” என்று திகைத்தவர், வீங்கிச் சிவந்திருந்த ஒருபக்கத்துக் கன்னத்தைக் கண்டு அதிர்ந்தவராக,

“என்னடி கன்னத்தில்… இப்படி வீங்கி இருக்கிறது? விழிகள் வேறு அழுதது போலப் பொங்கி… உனக்குக் காய்ச்சலா?” என்று கேட்டவர் அவளுடைய நெற்றியைத் தொட்டுப் பார்க்க நெற்றிக் குளிர்ந்திருந்தது.

“காய்ச்சல் இருப்பது போலத் தெரியவில்லையே…” என்று கூறியவர், தன் மகளை நிமிர்ந்து பார்த்து,

“என்னடி செய்கிறது? என்ன பிரச்சனை உனக்கு? எதுவென்றாலும் சொல்லித் தொலையேன்…” என்று யசோ கேட்க, இவளோ வலுக்கட்டாயமாக உதட்டில் புன்னகையைப் பூசி,

“அது வந்து… அது… ஒன்றும் இல்லையம்மா… நேற்று பெரிய குளவி ஒன்று கொட்டிவிட்டது… அதுதான்… கன்னம் வீங்கி…” என்று முடிக்கவில்லை,

“ஐயையோ…! இப்போது வந்து சொல்கிறாயே… முட்டாள்… உனக்குக் குளவி கொட்டினால் ஒத்துக்கொள்ளாது என்று தெரியும் அல்லவா… பிறகு எதற்கு அதன் பக்கத்தில் போய் நின்றாய்?” என்று அன்னையாய் கடுகடுக்க,

“ப்ச்… அதுதான் புளி வைத்தேன்… விஷம் இறங்கிவிட்டது… தவிரப் பெரிதாக அது கொட்டவுமில்லை… நாளைக்குச் சரியாகிவிடும்மா…..” என்று சமாளித்தவள் உள்ளே வந்துகொண்டிருந்த கந்தழிதரனின் கூர் விழிகளைப் பார்க்க முடியாது தலையைக் குனிந்து கொள்ள,

“பின்னே… தன் பாட்டிற்குச் சிவனே என்றிருந்த குளவியிடம் தேவையற்று மல்லுக்கு நின்றால் அது கொட்டத்தான் செய்யும்… அவர் அவர் அவர்களின் இடத்திலிருந்து கொண்டால் எந்தப் பிரச்சனையுமில்லை… அதை விட்டுவிட்டுக் குளவியோடு குடும்பம் நடத்த முயன்றால் இப்படித்தான் ஆகும்” என்றான் கந்தழிதரன் எரிச்சலுடன்.

“நல்லா சொல்லுங்கள் தம்பி… நான் சொன்னால் எங்கே கேட்கப்போகிறாள்?..” என்று ஆதங்கத்துடன் கூறிவிட்டு,

“சரி… சரி… முகத்தைக் கழுவிவிட்டு வா… சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்றுவிட்டுச் சமையலறை பக்கம் போகக் கந்தழிதரன் நிதானமாக அம்மேதினியை ஏறிட்டான். வீங்கியிருந்த அவளுடைய முகத்தைப் பார்க்கும்போது இவனுக்கு வலிக்கத்தான் செய்தது. ஆனால் அதையும் மீறி அவளுடைய எண்ணங்களும் சிந்தனைக்கும் தடுமாறி நிற்பதை நினைக்கும் போது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

அம்மேதினிக்கோ கந்தழிதரனைக் கண்டதும் முகம் வெளிறிப்போனது. முன்பிருந்த தைரியம் சுத்தமாகத் தொலைந்துபோய், அங்கே பதட்டமும் தவிப்பும் கூடி நின்றன. ஒரு பக்கம் உதறினாலும், இன்னொரு பக்கம் ஓடிச்சென்று அவனை அணைக்கவேண்டும் என்று ஏக்கமாக இருந்தது. எப்போதும் போல அவளை இறுக அணைத்து ‘நானிருக்கிறேன் அம்மணி’ என்று சொல்லமாட்டானா என்று பெரும் ஆவலாக இருந்தது. ஆனால் அவன் அப்படிச் செய்யும் நிலையிலா விட்டு வைத்திருக்கிறாள். முட்டாள் தனமாக, எல்லாவற்றையும் சின்னா பின்னப்படுத்திவிட்டாளே. அவளும்தான் என்ன செய்வாள். எல்லாம் அந்த ரோகிணி போட்ட மோதிரத்தால் வந்த வில்லங்கம். அவள் மட்டும் பேசாமல் இருந்திருந்தால், இவள் இப்படியான காரியத்தைச் செய்திருக்கமாட்டாள். எங்கே அவன் இனி தனக்கில்லையோ என்கிற அச்சத்தில் இப்படி நடந்து கொண்டாள். இப்போது எப்படி அவனை நிமிர்ந்து பார்ப்பது என்கிற தவிப்பில் தடுமாறுகிறாள்.

ஆனால் வந்தவனோ, சும்மா இருந்தானா,

“அத்தை…!” என்று அழைக்கத் திரும்பிப் பார்த்தார் யசோதா.

“சொல்லு தம்பி…!” என்று அன்பாகக் கேட்க,

“வந்து, அன்று கேட்டீர்களே… ரோகிணியைப் பற்றி…” என்று அவன் இழுக்க இவளோ அதிர்ந்துபோய் நிமிர்ந்து இவனைப் பார்க்க, யசோதாவோ முகம் மலர,

“ஆமாம்… என்ன முடிவு எடுத்திருக்கிறாய் கந்தழி?” என்று கேட்க, இவனோ இவளை ஒரு கணம் ஆழப் பார்த்துவிட்டு,

“அவளை மணம் முடிக்க எனக்குச் சம்மதம்தான் அத்தை… இதைப் பற்றி அம்மாவிடம் பேசுகிறீர்களா…” என்று கேட்க அம்மேதினியின் விழிகளில் கண்ணீர்க் குளம் கட்டியது.

தன் காதலை வாயால், செய்கையால் எல்லாம் கூறி முடித்தாகிவிட்டது. ஆனால் அதை ஒரு பொருட்டாகவே மதித்தது போலத் தெரியவில்லையே. பெரும் ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் அங்கே நின்றிருந்தவனை வெறிக்க, அவனோ இவளைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை., யசோதாவோ முகம் முழுக்கப் பூரிப்புடன்,

“உண்மையாகவா தம்பி… மெத்த மகிழ்ச்சி… நான் சந்தியில் உள்ள தொலைபேசிக் கடைக்குச் சென்று அண்ணா அண்ணியோடு பேசிப் பார்க்கிறேன் தம்பி… ஆனால் இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்றீர்களே..” என்று யோசனையுடன் கேட்க, இவனோ,

“அப்படித்தான் நினைத்தேன். ஆனால் பாருங்கள் வேண்டாதவை நம்மைப் புரட்டிப்போடும்போது, நம்முடைய திட்டங்களையும் மாற்ற வேண்டித்தான் இருக்கிறது… ஒரு சிலரின் நன்மைக்காக இப்படி அவசர அவசிய முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கிறது… இல்லை என்றால் கண்ட கண்ட சிந்தனைகள் சிலரது மனதைக் குழப்பி விடுகிறது…” என்று எரிச்சலுடன் கூற,

“என்ன சொல்கிறாய்?” என்றார் யசோதா புரியாமல்.

“ஒன்றுமில்லை அத்தை… இப்போது அவசியம் வந்துவிட்டது என்று சொன்னேன். நீங்கள் அம்மாவிடம் பேசுங்கள்.. இப்போதைக்குப் பதிவுத் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம். இரண்டு வருடங்கள் கழித்துக் கோவிலில் வைத்துத் தாலி கட்டலாம்…” என்று விட்டு அவன் உள்ளே செல்ல இவள்தான் காலில் ஆணி அடித்த உணர்வில் மலைத்துப் போய் நின்றாள்.

‘அப்படியானால் அவளுடைய விருப்பத்திற்கு மதிப்பே கிடையாதா? அவன் எப்படி ரோகிணியை மணக்கச் சம்மதிக்கலாம். இல்லை… இல்லை… அதற்கு நான் விட மாட்டேன். கந்தழிதரன் எனக்கு… எனக்கு மட்டுமே உரித்தானவன். அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது…’ உறுதியாக எண்ணியவள் வேகமாக அவனுடைய அறைக்கு முன்னால் வந்து கதவைச் சடார் என்று திறக்க, படுக்கையில் மல்லாக்காக விழுந்து கிடந்தவன், கதவு திறந்த வேகத்தில், அவசரமாக முழங்கைகளை ஊன்றி உடலை மட்டும் நிமிர்த்திக் கதவின் முன்னால் நின்றிருந்தவளைக் கோபத்தோடு பார்த்தான்.

அவளோ அவனுடைய கோபத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வேகமாக நெருங்கியவள்,

“யாரைக் கேட்டு ரோகிணியை மணக்கச் சம்மதித்தீர்கள்… அதுவும் நேற்று என் மனதை உங்களுக்குத் தெரியப்படுத்திய பின்னும் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறீர்களே… ஏன்…? அப்படியானால் என்னுடைய காதலுக்கு என்ன மதிப்பு…?” என்று குரல் கம்மக் கேட்டவள், பின் அவசரமாகத் தன் விழிகளைத் துடைத்து, மூக்கை உள்ளே இழுத்து,

“நீங்கள் ரோகிணியை மணக்கக் கூடாது…! அதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக. அவனோ நிதானமாக எழுந்தமர்ந்து, கலைந்த முடியைக் கோதிவிட்டவாறு, அவளை ஏறிட்டு,

“முதலில் அன்னிய ஆண்களின் அறைக்குள் நுழையும் போது கதவைத் தட்டிவிட்டுச் செல்லும் நாகரிகத்தைக் கற்றுக்கொள் அம்மேதினி…” என்றான் கந்தழிதரன் அழுத்தமாக. இவளோ,

“எப்போது உங்கள் அறைக்குள் நுழையும் போது அனுமதி கேட்டு நுழைந்திருக்கிறேன்…?” என்று சுள் என்று விழ, இப்போது ஆவேசத்துடன் அவளை ஏறிட்டவன்,

“இது… இந்தச் சுதந்திரம்தான் உன்னைத் தப்பாக நினைக்க வழி வகுத்திருக்கிறது. அப்போதே உன்னைச் சற்றுக் கண்டிப்புடன் வளர்த்திருக்க வேண்டும். உனக்கான இடத்தைக் காட்டித் தள்ளி நிற்கச் செய்திருக்கவேண்டும். சிறுமிதானே… பாவம் என்று நினைத்து அதீத உரிமை கொடுத்தது தவறாகப் போயிற்று… ஒற்றைக் குழந்தை என்று செல்லம் கொடுத்ததால்தான் இப்படி என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் நின்று திணறுகிறாய். தயவு செய்து வெளியே போ அம்மேதினி…” என்று இவன் கடுமையாகக் கூற, இவளோ அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு,

“வெளியே போ என்றால் போய்விடுவதற்கு நான் என்ன பாப்பாவா? அம்மேதினி… அதுவும் உங்கள் அம்மேதினி… இதோ பாருங்கள்… நான் உங்களை விரும்புகிறேன்… உயிருக்கும் மேலாக. அது உங்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் நீங்கள் எப்படி அந்த ரோகிணியை மணக்கச் சம்மதிக்கலாம்… இதற்கு நான் ஒரு போதும் சம்மதிக்கமாட்டேன்…” என்று அவள் அழுத்தமாகக் கூற இவனோ எரிச்சல் சற்றும் மாறாமல்,

“உன்னுடைய சம்மதத்தை யார் கேட்டார்கள் அம்மேதினி…? இது என்னுடைய விருப்பம்… இதில் மறுப்பதற்கும், சம்மதிப்பதற்கும் உனக்கென்ன அதிகாரம் இருக்கிறது?” என்றான் கந்தழிதரன் கராராக. இவளோ வேகமாக அவனை நெருங்கி,

“உங்கள் விருப்பத்தைக் கொண்டு உடைப்பில் போடுங்கள்… உங்களை நான் விரும்புகிறேன்… உயிருக்கும் மேலாக…! என்னைத் தவிர நீங்கள் யாரையும் மணக்க முடியாது…! முடியாது…! முடியாது…!” என்று ஆவேசத்துடன் சீற, இவனோ வேகமாகப் படுக்கையிலிருந்து எழுந்து,

“சீ… மூடு…! நீ யார் சம்மதிப்பதற்கும் மறுப்பதற்கும்…? இது என்னுடைய வாழ்க்கை. என்னுடைய விருப்பம்… இதுவரை என் விருப்பத்தை விமர்சிப்பதற்கான அதிகாரத்தையோ, உரிமையையோ யாருக்கும் கொடுத்ததில்லை. என் அம்மா அப்பா உட்பட. அப்படி இருக்கும் போது என் வாழ்க்கைக்கான தேர்வை உன்னிடம் கொடுப்பேன் என்று எப்படி நினைத்தாய்…? தவிர நான் ஒன்றும் உன்னைப் போல மைனர் கிடையாது… என் முடிவு சரியா தவறா என்று ஆராய்வதற்கு…! இதோ பார் உன்னுடைய எல்லை இதுதான்… இதைத் தாண்டி வர நினைத்தாய்…! யார் என்றுகூடப் பார்க்கமாட்டேன். ஏறி மிதித்துவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன்… போனால் போகிறது என்று பார்த்தால் எனக்கே சவால்விடுகிறாயா…? பொசுக்கிவிடுவேன் ஜாக்கிரதை…!” என்று கர்ஜிக்க, அந் குரலில் ஒரு கணம் ஆடித்தான் போனாள் அம்மேதினி. ஒரு கணம் ஆழ மூச்செடுத்தவள், விழிகள் கலங்க, குரல் கம்ம அவனை அண்ணாந்து பார்த்து,

“ஏன் கந்து…? உனக்கு என்னைப் பிடிக்கவில்லையா…? நான் என்றால் உனக்கு உயிர் இல்லையா…?” என்று கன்னத்தில் கண்ணீர் வழியக் கேட்க ஒரு கணம் உள்ளே துடித்துத்தான் போனான் கந்தழிதரன்.

‘அவன் இரக்கப்படலாம்… ஆனால் அதற்குப் பிறகு அதை வைத்துக்கொண்டே உரிமை கொண்டாடுவாளே… அவனுடைய உணர்வுகளைச் சொன்னாலும் புரிந்துகொள்ளும் நிலையில் அவள் இல்லையே…! குழந்தையாகப் பாவித்தவளைச் சுலபத்தில் பெண்டாள முடியாது என்று எப்படிப் புரிய வைப்பான்…? அதுவும் வயது வித்தியாசம்… எதைப் பார்க்காவிட்டாலும் அதைப் பார்க்க வேண்டாமா…? இவள் குழந்தை… வாழ்க்கையின் பாரதூரமான மேடு பள்ளங்களைப் பற்றி அறியாதவள். மின்னுவதெல்லாம் பொன் என்று எண்ணும் பருவம் கொண்டவள். இவளிடம் போய்ச் சரி பிழையைச் சொன்னால் அதைப் புரிந்து கொள்ளவும் மாட்டாள். அப்படியே புரிந்து கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டாள்.’ தன்னையும் மீறி அவளை நோக்கி எழுந்த கரத்தைச் சிரமப்பட்டு அடக்கியவன் வேகமாகத் தன் தலையை உலுப்பி நிகழ் காலத்திற்கு வந்தவனாக, மறுப்பாகத் தலையை ஆட்டி,

“இல்லை அம்மேதினி… நீ அந்தக் கட்டத்தைத் தாண்டிச் சென்று விட்டாய். குழந்தைப் பிள்ளைகள் குழந்தைப் பிள்ளைகள் போல இருக்க வேண்டும். ஆனால் நீ…” என்று முடிக்கவில்லை,

“குழந்தைப் பிள்ளையா? எனக்கு இப்போது பதினாறு வயது… உங்கள் அப்பம்மா திருமணம் முடித்தபோது அவர்களுக்கு வயது பதினைந்து தெரியும்தானே… ஏன் உங்கள் அம்மாவிற்குப் பதினெட்டு கூட ஆகவில்லையே… இவ்வளவு ஏன் அப்பா வழிப் பாட்டி திருமணம் முடித்தபோது வயது பதின்மூன்று… அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து குழந்தைகள் பெறவில்லையா என்ன? ஏன் பருவம் வந்த பெண்களுக்கு உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா? ஆசைகள் வரக் கூடாதா? காதல்தான் பிறக்கக் கூடாதா? இந்த வயதில் பிறக்கக் கூடாது என்றால் எந்த வயதில் பிறக்கவேண்டும் என்கிறீர்கள்…” என்று சீற கந்தழிதரனோ சலிப்புற்றவனாக அவளைப் பார்த்து,

“இந்த வயதுதான் பிரச்சனையே அம்மணி… இது சரி பிழை எதையும் பார்க்காது நல்லது கெட்டதை யோசிக்காது. இந்த வயதுக்குப் புத்திக்கும் மனதுக்கும் தொடர்பு படுத்தத் தெரியாது. உடல் தாபத்தைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைத் தேடி, காதல் என்று முட்டாள் தனமாக எண்ணி இத்தனை நாடகங்களையும் ஆடச் சொல்லும்… கொஞ்சம் புரிந்துகொள் அம்மேதினி…” என்று அவன் கோபத்துடன் கூற,

“சரி… இப்போது என்ன…? எனக்கு வயது பதினாறு… மைனர்… எதுவும் புரியாத அறியாத வயசு… அதனால்தானே என்னை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறீர்கள்…? சரி… உங்கள் வழிக்கே வருகிறேன்…! இன்னும் ஐந்து வருடங்கள்… ஐந்தே வருடங்கள்… எனக்காகக் காத்திருக்க முடியுமா? நான் படித்து முடித்ததும்… நாம் திருமணம் முடித்துக் கொள்ளலாம்… நீங்கள் எனக்காக இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கையில் ஐந்து வருடங்களையும் சந்தோஷமாகவே கழித்துவிடுவேன்…?” என்று பெரும் நம்பிக்கையுடன் கேட்க அவனோ, உனக்கென்ன பைத்தியமா என்பது போல அவளைப் பார்த்தான்.

“அம்மேதினி… நான் மறுக்க உன்னுடைய வயது மட்டுமல்ல காரணம்… நமக்கான வயது வித்தியாசத்தைக் கொஞ்சமாவது யோசித்தாயா? கிட்டத்தட்ட பதினொரு வயது வித்தியாசம்…” அவன் முடிக்கவில்லை,

“இல்லை… இல்லை… பத்து வயதுதான் வித்தியாசம்…” என்றாள் இவள் மறுப்பாக. அவனோ இவளை எரிச்சலுடன் பார்த்து,

“உனக்கும் எனக்கும் பத்து வயதும் ஆறு மாதங்களும் வித்தியாசம் இருக்கிறது அம்மேதினி…” என்று பற்களைக் கடித்தவாறு கூற,

“அது… அந்த ஆறு மாதங்கள்… கணக்கில் எடுக்க முடியாது…” என்று மறுத்தாள் இவள்.

“சரி… பத்து வயது என்றே வைத்துக் கொள்வோம்… இந்த வயது வித்தியாசம் உனக்கு உறுத்தவில்லையா? உன் அருகே நான் நிற்கும் போது நான் வயதானவனாகத் தெரியாதா? அது உன்னைப் பாதிக்காதா? இதையும் தாண்டி நீ குழந்தை…! உன்னை எப்படி நான் மனைவி ஸ்தானத்தில் யோசிப்பேன். எத்தனை வருடம் கழித்தாலும் என் மீது உப்பு மூட்டையாக ஏறித் தொங்கிய அந்த இளம் குருத்துதானே நினைவில் வரும்… அதையேன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்…? நிச்சயமாக உன்னை என்னால் அப்படியெல்லாம் யோசிக்க முடியாது அம்மேதினி…” என்று அவன் மறுக்க இவளுடைய கண்கள் பொங்கின.

“ஏன் யோசிக்க முடியாது…? கொஞ்சம்… கொஞ்சம் எனக்காக எண்ணிப் பாருங்களேன்… கந்து…! எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது… மிக மிகப் பிடித்திருக்கிறது. நீங்கள் இல்லாத வாழ்வில் எனக்கு எதுவுமே இல்லை என்கிற அளவில் பிடித்திருக்கிறது… அதையேன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறீர்கள்…?” என்று குரல் கம்மக் கூறியவள், சரி என் கேள்விக்குப் பதிலைக் கூறுங்கள்,

“என்னை… என்னை… உங்கள் தங்கையாகவா பார்த்துக் கொள்கிறீர்கள்?” என்று தன் உயிரைக் கையில் பிடித்தவாறு கேட்க, இவனோ அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,

“தங்கையா… உன்னையா… எதற்காக அப்படி நினைக்கவேண்டும். நீ என்ன என் கூடவா பிறந்தாய் தங்கையென்று நினைக்க?” எனச் சுள்ளென்று விழ, இவளோ நிம்மதி மூச்சுடன்,

“அப்படியானால் என்னை இத்தனை அன்பாகப் பாதுகாத்தீர்களே… அதன் பின்னே இருந்த உறவு என்ன?” என்றவள் அவனை நெருங்கி,

“எனக்கு அப்பாவாக நினைத்தாயா?” என்றாள் அடுத்து. இப்போது இவன் குழம்பிப் போனான். ஒரு போதும் அவளைத் தங்கையென்று மட்டும் அவன் நினைத்ததில்லை. அவனுடைய முறைப்பெண் என்று கூட அவன் எண்ணியதில்லை. அப்படியானால் அவளுக்கும் அவனுக்குமான பந்தம் என்ன? தவிப்புடன் நிமிர்ந்து அம்மேதினியைப் பார்த்தவன், பின் தரையைப் பார்த்து எங்கோ கனவுலகில் மிதப்பவன் போல,

“குழந்தைடி நீ எனக்கு… எனக்குப் பத்துவயது இருக்கும்போது இந்தக் கரங்களில் உன்னைக் கிடத்தி, இந்தா இவளைப் பத்திரமாக நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அத்தை சொன்னபோது, இந்த விரல்களைப் பிடித்துப் பொக்கைவாய் தெரியக் கன்னங்குழிய என்னைப் பார்த்துச் சிரித்தாய் அம்மணி… அப்போது…” என்றவன் தன் இடது மார்வை அழுத்திக் கொடுத்து,

“இங்கே… இங்கே சிலிர்த்தது. அதற்குப் பின்னால் இருந்த பாசத்திற்கு அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் உன்னைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. நான் உன் மீது வைத்த பாசத்திற்குப் பின்னால் என்ன உறவு முறை இருந்தது, இருக்கிறது என்றெல்லாம் இந்தக் கணம் வரை நான் யோசிக்கவில்லை. என் பாசத்திற்குப் பின்னால் இருந்த உறவு முறைக்கு அர்த்தமும் தெரியவில்லை அம்மணி. உனக்குச் சகோதரனாக நினைக்கிறேனா, தந்தையாக நினைக்கிறேனா, நண்பனாக நினைக்கிறேனா… இதெல்லாம் எனக்குத் தெரியவில்லை… ஆனால்… சத்தியமாக உனக்குக் காதலனாகவோ கணவனாகவோ நான் இம்மியளவும் நினைத்துப் பார்த்ததில்லை. என்னால் அப்படிப் பார்க்கவும் முடியாது… இத்தகைய தப்பான அபிப்பிராயம் உனக்கு எங்கிருந்து வந்தது என்றும் எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து இந்த எண்ணத்தை விட்டுவிடு…” அவளுக்குப் புரியும்படி கூற, இவளோ அவனை அழுத்தமாகப் பார்த்து,

“சரி… உங்களால் என்னை மனைவியாகவோ, காதலியாகவோ, ஏற்றுக்கொள்ள முடியவில்லை… அவ்வளவுதானே… பரவாயில்லை… என்னை மணந்து கொள்ளுங்கள்… மனம் மாறும் வரைக்கும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். இல்லை இறுதி வரைக்கும் உங்கள் மனம் மாறவில்லையென்றாலும் பரவாயில்லை… நண்பர்களாகவே இருந்து மடிந்து விடலாம்… எனக்கு நீ அருகே இருக்கவேண்டும்… அதுவும் யாருக்கும் இல்லாத உரிமையோடு இருக்கவேண்டும்… அந்த உரிமையைக் கணவன் என்ற உறவு மட்டும்தான் கொடுக்கும் கந்து…” என்று அவள் கூறக் கந்தழிதரனோ பொறுமையிழந்த கோபத்தில், அவளை எரிப்பது போலப் பார்த்தான்.

“இது… இதைத்தான் நாடகத்தன்மை என்பார்கள். கொஞ்சமாவது எதார்த்தமாக இருக்கப் பழகு அம்மேதினி… கடவுளே…! அம்மேதினி… கொஞ்சம் என் இடத்திலிருந்து நினைத்துப் பார்… எனக்குரியவள் நீ அல்ல… என் கற்பனையில் உள்ள பெண் வேறு… அது நிச்சயம் நீ இல்லை…” என்று அவன் முடிவாகக் கூறியவன் கசங்கிய அவள் முகத்தைக் கண்டு நெஞ்சம் வலிக்க, அவளை நெருங்கி அவள் தோள்களில் கரங்களைப் பதிக்க முயன்றவன், பின் என்ன நினைத்தானோ தன் கரங்களை இழுத்துக்கொண்டவனாக,

“இதோ பார்… உனது வயதுதான் உனக்கு எதிரி. அதுதான் உன்னை இப்படிக் கதாநாயகி போலச் சிந்திக்க வைக்கிறது… பேச வைக்கிறது. இது உனது குற்றமில்லை… எல்லாம் நீ பார்த்த திரைப்படங்களால் வந்த வினை. இதோ பார் அம்மணி…! இன்னும் இரண்டு வருடங்கள் கழிய இந்த நாளை எண்ணி நீயே வெட்கப்படுவாய்… சிரிப்பாய்… என்னை விட நல்லவனாய், உன் வயதுக்கு உரியவனாக ஒருவன் வருவான். அப்போது நீ அவனை முழு மனதாக ஏற்றுக் கொள்வாய். அந்தக் கணம் இந்தக் கந்தழிதரனின் நினைவுகள் மெல்ல மெல்ல உன்னை விட்டு அழிந்து போகும். இன்னும் இருபது வருடங்களோ, முப்பது வருடங்களோ கழிந்த பின், காலம் நமக்கு வழி வகுத்தால் நாம் இருவரும் சந்திப்போம். நீ உன் கணவனோடு, நான் என் மனைவியோடு, இருவருக்குமே குழந்தை குட்டிகள் என்று இருக்கும். அப்போது நான் எடுத்த இந்த முடிவை நீ போற்றுவாய். நம்பு அம்மேதினி… உனக்கானவன் நானில்லை…” என்று அவன் மென்மையாகக் கூற, அவனை வெறித்துப் பார்த்தாள் அம்மேதினி.

‘இவ்வளவு சொல்லியாயிற்று. இன்னும் பிடிவாதமாகத் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவனிடம் என்னவென்று சொல்வது. அவளுக்கு வயது பதினாறாக இருக்கலாம். அதற்காக அவளுடைய காதல் தப்பாகிவிடுமா என்ன? ஏன் பதினாறில் காதலித்துக் கை சேர்ந்தவர்கள் யாருமே இந்த உலகத்தில் இல்லையா என்ன? ஆனால் அவளுக்கு ஒன்று மட்டும் நன்கு புரிந்தது. இந்த ஜென்மத்தில் அவள் கணவனாக ஒருவன் வருவான் என்றால், அது கந்தழிதரன் மட்டுமே.’

“இதுதான் உங்கள் முடிவா…?” என்று கேட்டபோது அவள் குரலிலிருந்த அழுகை முற்றாக மறைந்து போய், அங்கே அழுத்தமும், உறுதியும் நிலைத்திருக்க, அவனோ சற்றும் மனம் தளராதவனாக,

“ஆமாம்… இதுதான் என்னுடைய உறுதியான முடிவு. எனக்கானவள் நீ அல்ல. உனக்கானவன் நான் அல்ல… சும்மா இந்த விசர் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டுப் படிப்பதில் கவனத்தைச் செலுத்து…” என்று அவன் உறுதியாகக் கூற, தன் உயரத்திற்கு ஏற்ப நிமிர்ந்து நின்றவள்,

“சரி… இதுதான் உங்கள் முடிவென்றால், நான் சொல்வதையும் நன்றாகக் கேளுங்கள். நீங்கள் யாரை வேண்டுமானாலும் மணந்து கொள்ளுங்கள்… இது பற்றி ஏன் என்று கூடக் கேட்கப் போவதில்லை. ஆனால் என் வாழ்க்கையில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உங்கள் கூடத்தான்… இல்லை என்றால் மணமாகாமலே காத்திருப்பேன்… இறுதிக் காலம் வரைக்கும்…” என்று அவள் உறுதியுடன் முடிக்க, ஏனோ அவனையும் மீறிப் புன்னகை எழுந்தது.

‘இந்தப் பேச்சையெல்லாம் உண்மையென்று எப்படி நம்புவான்? கதை எழுதுவதற்கும், திரைப்படத்திற்கும், நாடகத்திற்கும் வேண்டுமானால் நன்றாக, அழகாகக் காதல்துவமாக இருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கைக்கு? எதார்த்த வாழ்க்கைக்கு இது புரியாமல் இந்தக் கற்பனை உலகம்தான் உண்மை என்று நினைத்து அதன் படி வாழ நினைக்கும் இவளை என்ன செய்தால் தகும்?’ ஒரு கணம் ஆழமாக அவளைப் பார்த்தவன்,

“சரி… அது உன்னுடைய விருப்பம். நீ மணம் முடிப்பதும், முடிக்காமல் விலகி இருப்பதும் உன் தனிப்பட்ட விருப்பம். அதற்குள் நான் தலையிட முடியுமா? ஆனால் நான் ரோகிணியை மணப்பதில் எந்த மாற்றமும் இல்லை அம்மேதினி…” என்று உறுதியாகக் கூற, தலையை ஆட்டியவள்

“வாழ்த்துக்கள்…” என்று விட்டு அறையை விட்டு வெளியே சென்றபோது, ஏனோ இவனுடைய மனதும் சொல்ல முடியாத ஒரு வித அவஸ்தையில் தவிக்கத்தான் செய்தது.

What’s your Reaction?
+1
10
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!