(21)
மறு நாள் அபயவிதுலன் விழிகளைத் திறந்த போது தன் மேலிருந்த பூங்கொத்தைக் காணவில்லை. மாறாக, அவன் காயம் பட்ட கரம் பக்குவமாக ஒரு தலையணியின் மீது வைக்கப்பட்டிருந்தது. அது வேறு நான் இருக்கிறேன் நானிருக்கிறேன் என்று அவனுக்கு உணர்த்திக் கொண்டிருக்க, மெல்லியதாகத் திறந்த விழிகளினூடாகக் காயம் பட்ட கரத்தைத் தூக்கிப் பார்த்தான்.
அதைப் பார்க்கும் போதே எரிச்சல்தான் வந்தது. இனி இதைப் பார்க்கும் போதெல்லாம் எதிரிகளின் நினைவுதான் வரும்… கூடவே அவர்களை அழிக்கும் ஆத்திரமும் வரும்.. அது அவனுடைய நல்ல எண்ணத்தை மறக்கடிக்கும்… போதாததற்கு இதைக் கண்டு கேட்கும் நண்பர்கள் உறவினர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். சோர்வுடன் தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு, எழுந்த மறு கணம் மிளிர்மிருதை அவன் முன்னால் அஜாராகியிருந்தாள்.
அவள் மலர் முகத்தைக் கண்டதும் இவனுடைய எரிச்சல் மறைந்துபோனது. காலையில் பூத்த பனிமலர் ரோஜா அவள்… அந்தச் சிவந்த உதடுகளில் தெரியும் மெல்லிய சிரிப்பே அவன் வலியை முழுதாகப் போக்கடிக்கச் செய்துவிடும்.
குளித்து முடித்ததற்கான சாட்சியாகத் தலை முடியிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு கோபம் கொண்டவனாக,
“ஏய்… இன்னுமா தலையைத் துவட்டாமல் வைத்திருக்கிறாய்… எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்… ஈரத் தலையோடு இருக்காதே என்று… துவாயை எடு… துவட்டி விடுகிறேன்…” என்றவாறு எழ,
“எப்படி… இப்படியா…” என்று ஒற்றைக் கரத்தால் துடைப்பது போலக் காற்றில் கரங்களை விசிறிக் கேட்டவள், “காயம் பட்டும் அடங்க மாட்டேன் என்கிறீர்களே தலை…” என்று கிண்டலடித்தவளாக” சரி சரி எழுந்திருங்கள்… எனக்கு நிறைய வேலை இருக்கின்றன…” எனப் பரபரக்க, அவள் பரபரப்பு அவனையும் தொற்றிக்கொண்டதோ, எழுந்தவன்,
“குழந்தைகள் எழுந்துவிட்டார்களா…” என்றான் கன அக்கறையாக.
“எழுந்து விட்டார்கள் எழுந்துவிட்டார்கள்…” என்று சொன்னவள், அவன் பின்புறமாகச் சென்று முதுகில் கரம் வைத்துத் தள்ள,
“என்னடி செய்கிறாய்…” என்றான் வியந்து.
“ம்… நடுவில் நிற்கும் தூணை அசைத்துப் பார்க்கிறேன்…” என்று அவனைப் பலம் கொண்ட மட்டும் தள்ள, அவள் தள்ளலுக்கு இசைந்தவனாகப் பொது அறைக்கு வந்தவனிடம்,
“எல்லோரும் குளித்துத் தயாராகி விட்டார்கள். நானும் நீங்களும்தான் தயாராக வேண்டும்… போங்கள்… போய்ப் பல்லைத் தீட்டுங்கள்… தேநீர் கசாயம் எடுத்து வந்திருக்கிறேன்…” என்று உத்தரவிட, அப்போதுதான் அன்று ஆராதனாவின் நிச்சயதார்த்தம் நினைவுக்கு வந்தது.
பதறியவனாக நேரத்தைப் பார்க்க, எட்டு முப்பது என்றது கடிகாரம்.
“ஏய் இத்தனை நேரமாகத் தூங்கியிருக்கிறேன், எழுப்ப வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா…” என்றவன், அவசரமாகக் குளியலறைக்குள் நுழைந்து கதவைச் சாற்ற, அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்து இரு கால்களையும் இருக்கையில் பதித்து மடிந்திருந்த முழங்கால்களைக் கரங்களால் கோர்த்தவாறு அமர்ந்தவளின் விழிகளில் அவனுடைய கரிய தேநீர் வரவேற்றது.
எப்போதும் போல ஆவல் பொங்க, இடது கரத்தால் எட்டி எடுத்து உதட்டில் வைத்து உறிஞ்சியவளுக்கு அதன் கசப்பு உச்சியில் அடிக்க, முகத்தைச் சுளுக்கியவாறு மேசையில் வைத்துவிட்டு முழங்காலில் தாளம் போட்டாள்.
சற்றுப் பொருத்து, டாய்லட் ஃப்ளஷ் பண்ணும் ஓசை கேட்டுத் தண்ணீர் திறக்கும் சத்தம் கேட்டது. சற்று பொறுத்து, வெளி வந்தவனிடம் தேநீரை கொடுக்க,
“எதற்கு எடுத்துவந்தாய்? நான் கீழே வந்து குடித்திருப்பேனே…” என்றவாறு அவன் பருகத் தொடங்கியவனிடம், ,
“கீழே எல்லாரும் வந்துவிட்டார்கள்… அதுதான் மேலே எடுத்து வந்தேன்… குடியுங்கள்…” என்றவாறு, அவன் குடித்து முடிக்கும் வரைக்கும் காத்திருந்தவள், அவன் முடித்ததும் குவளையை வாங்கிக்கொண்டு கீழே சென்றாள்.
திரும்பி மேலே வந்தபோது, மீண்டும் குளியலறை மூடி இருந்தது. உடனே சற்றும் தாமதிக்காமல், ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த ப்ளாஸ்டிக் கதிரையை எடுத்துக்கொண்டு குளியலறைக் கதவைத் திறக்க, எப்போதும் போல அவன் மூடாமல்தான் வைத்திருந்தான்.
காயம் பட்ட இடது கரத்தை முகம் கழுவும் தொட்டியில் அழுந்த பதித்தவாறு பல்லைத் தீட்டிக்கொண்டிருந்தவன், கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளைக் கண்டு புருவம் சுருங்க, “என்ன” என்பது போலத் தலையை ஆட்டினான். இவளும் பதிலுக்கு என்ன என்று தன் தலையை ஆட்டினாள். வாயிலிருந்த நுரையைத் துப்பிவிட்டுத் தண்ணீரைத் திறந்து வாயைக் கொப்பளித்துவிட்டு,
“என்னம்மா… ஏதாவது எடுக்க வந்தாயா?” என்றான்.
அவளோ, நின்று குளிக்கும் இடத்தில் கதிரையை வைத்து விட்டு, அவன் புறமாகத் திரும்பி.”இல்லை உங்களைக் குளிப்பாட்ட வந்தேன்…” என்று அலட்சியமாகக் கூறிவிட்டு, அங்கிருந்த கபேர்ட்டைத் திறந்து துவாயை இழுத்தெடுக்க, இவன் அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து,
“வட்… என்னைக் குளிப்பாட்ட வந்தாயா? ஆர் யு கிரேசி… நானே குளித்துக்கொள்வேன்… நீ போய்த் தயாராகும் அலுவலைப் பார்…” என்று அவன் அவசரமாகக் கூற, இடுப்பில் கைவைத்தவாறு அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனை நெருங்கி, காயம் பட்ட கரத்தைத் தூக்கிக் காட்டி,
“இதை வைத்துக்கொண்டா… எப்படி…” என்று தலையை ஆட்டிக் கேட்க, தன்னை மறந்து சிரித்தவன்,
“ஏய்… எனக்குக் கையில்தான் அடிபட்டிருக்கிறது… இடுப்பிலில்லை… என்னால் நன்றாகக் குளிக்கமுடியும்… முதலில் நீ வெளியே போ…” என்று கறாராகக் கூறியவனை, புருவத்தை மேலேற்றிப் பார்த்தவள்,
“இந்தக் கதிரை உங்களுக்கென்றா நினைத்தீர்கள்…? அதுதான் இல்லை… அது எனக்கு…” என்றாள் கெத்தாக.
“உனக்கா… எதற்கு… என்னோடு சேர்ந்து குளிக்கப்போகிறாயா?” என்று ஆவல் பொங்கக் கேட்க, அவனைப் பார்த்து முறைத்தவள்,
“ம்… ஆசை தோசை…” என்றவள், அவனை நெருங்கி, அணிந்திருந்த பைஜாமா ஷேர்ட்டின் மீது தன் கரங்களை வைத்து ஒவ்வொரு பொத்தானாகக் கழற்ற முயல, அவள் கரத்தில் தன் கரத்தைப் பதித்து இறுக்கிப் பிடித்துத் தடுத்தவன்,
“ஏய்… என்னடி செய்கிறாய்?” என்றான் அதிர்ச்சியுடன்.
அடுத்தப் பொத்தானைக் கழற்றியவாறு,
“ம்… முடி சிரைத்துக்கொண்டிருக்கிறேன்….” என்றவாறு அவனுடைய அடுத்தப் பொத்தானைக் கழற்ற, அவள் சொன்னதைக் கேட்டு நகைத்தவன், அவள் நோக்கம் புரிந்தவனாக,
“இல்லைடா… ஐ கான் மனேஜ்… நீ உன் வேலையைப் போய்ப் பார்…” என்று கூறி முடிக்கும் போதே, ஒற்றைப் பார்வையால் அவன் பேச்சைத் தடுத்துவிட்டு ஷேர்ட்டைக் கழற்றி அழுக்குக் கூடைக்குள் போட்டாள். பின் அவன் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று குளிக்கும் இடத்தின் நடுவில் நிறுத்தியவள், கதிரையைப் பற்றி அதன் மேல் ஏறி நிற்க, அதைக் கண்டு தன்னை மறந்து வாய்விட்டுச் சிரித்தான் அபயவிதுலன்.
“ஏய் குள்ள வாத்து… உனக்கிது தேவையா?” என்று நக்கலடிக்க, அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, எட்டி ஷவரை இழுத்து எடுக்க அது வயரோடு அவள் கரத்தில் வந்து சேர்ந்தது. சற்றுத் தள்ளிப் பிடித்தவாறு இயக்க, முதலில் குளிருடன் வெளி வந்த தண்ணீர் பின் இதமான சூட்டுடன் வெளி வர, அதை அவன் அடர்ந்த சுருள் குழலில் பிடிக்க முதல், கீழே தொங்கிக்கொண்டிருந்த அவன் காயம் பட்ட கரத்தை நன்றாக மேலே தூக்கிச் சுவரில் பதித்துவிட்டுத் தலையில் பிடிக்க, தண்ணீர் பெரும் காதலுடனும் உவகையுடனும் அவன் தலையை அணைத்து முத்தமிட்டு, கடிய தசைகொண்ட மேனியில் படர்ந்து கால்வரை வருடிச் சென்றது.
காயம் படாத கரத்தால் தன் முகத்தை வழித்து எடுத்தவன், அது உதட்டில் பட்டுத் தெறிக்க,
“ஏய் உனக்கே இது ஓவரா இல்லை… கையில் தான்டி காயம்… அதற்கு இப்படியா… யாராவது பார்த்தால் சிரிக்கப் போகிறார்கள்…” என்று அவன் பலம் பொருந்திய உருண்டு திரண்ட உடலை வலது கரத்தால் தேய்த்து விட்டவாறு கூற, அவளோ எதுவும் கூறாது, தன் கரத்திலிருந்த ஷவரை உடலைத் தேய்த்துக்கொண்டிருந்த கரத்தைப் பற்றி, அதில் திணித்துவிட்டு, மேலே வைத்திருந்த ஷாம்புவை எட்டி எடுத்து ஈரமான அவன் முடியில் ஊற்றவிட்டு, இதமாக அழுத்தித் தேய்த்துவிட முதலில் மறுத்த அபயவிதுலனுக்கு ஏதோ சொர்க்கத்தில் இருக்கும் உணர்வு.
தன்னை மறந்து அவள் கரங்களின் அழுத்தத்தில் மயங்கிப்போய் இருக்க, அந்தமென் கரங்கள் மெல்ல மெல்லமாக அவன் காதுகளைப் பற்றித் தேய்த்து, அவன் கழுத்தில் பதிந்து அகன்ற பரந்த தசை உருளைகளின் மீது பயணித்துச் செல்ல, அபயவிதுலனுக்குள் ஆயிரம் மின்னல்கள்.
அத்தனை இன்பமும், அவளுடைய கரங்களினூடாக அவன் உடல் முழுவதும் பரவிச் செல்லத் தன்னை மறந்து கண்களை மூடி அந்தச் சுகத்தை அனுபவித்தான் அபயவிதுலன். அதைக் கண்டு மெல்லியதாக நகைத்தவள், பாடி சோப்பை எடுத்துக் கரத்தில் ஊற்றி, அவன் மார்பிலும் வயிற்றிலும் பூச, அந்த இறுகிய உடலில் வருடலில் மிளிர்மிருதையின் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகளின் படபடப்பு.
எப்படியோ தன்னை ஒரு கட்டுக்குள் கொண்டுவந்தவள், அவனைத் திருப்பி, இப்போது முதுகில் பூச முயல, அது வரை தன்னிலை கெட்டிருந்த இருவருக்கும், அதுவரையிருந்த இனிமை அறுபட்டுப் போனது.
அந்த முதுகில் உணர்ச்சி இருந்திருந்தால், அவளுடைய வருடலை அவன் உணர்ந்திருப்பானே… அந்தக் கணம் தான் செய்த முட்டாள் தனத்தின் மீது கோபம் கொண்டவனாகப் பல்லைக் கடிக்க, மிளிர்மிருதைக்கே கண்களை முட்டிக்கொண்டு வந்தது.
பல முறை அந்த முதுகைப் பார்த்துவிட்டாள். ஆனால் எப்போதும் போல, புதியது போன்ற மரண வலியை அவளுக்குக் கொடுக்க அந்த முதுகு தவறுவதில்லை.
ஒரு வித வலியுடன் அவன் மேனியிலிருந்த சவர்க்கார்தையும் பொருட்படுத்தாது, கரங்களை அவன் கழுத்தைச் சுற்றி எடுத்துச் சென்று இறுகக் கட்டிக்கொண்டவள், ஷாம்பு நுரையில் அடர்ந்திருந்த முடியில் தன் கன்னத்தைப் பதித்துக் கண்ணீர் மல்க,
“ஏன் விதுலா…! இப்படிச் செய்தீர்கள்… பாருங்கள் உணர்ச்சியே இல்லையே…” என்றாள் குரல் நடுங்க. அவனுக்கும் பதில் எளிதில் வெளிவரவில்லை. ஆனால் அவள் வருந்துவது பிடிக்காது, தன் கழுத்தைச் சுற்றியிருந்த கரத்தைப் பற்றி, அதில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்த அபயவிதுலன்,
“இதைச் செய்திருக்காவிட்டால் குற்ற உணர்ச்சியில் செத்திருப்பேன் கண்ணம்மா… என்னை ஓரளவு உயிரோடு வைத்திருந்ததே இந்தக் காயங்கள்தான்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே குளியலறைக் கதவு படார் என்று திறந்தது.
அதை எதிர்பார்க்காத மிளிர்மிருதை, அவனை அணைத்தவாறே, தன் சமநிலையைத் தவற விட, அது வரை அவளைத் தாங்கியிருந்த கதிரை பின்புறமாகச் சரிந்து தரையில் விழுந்தது.
நல்ல வேளை அவனுடைய கழுத்தை இறுக அவள் கட்டிக்கொண்டதால், உப்பு மூட்டை போல அவன் முதுகில் தொங்கிக்கொண்டிருக்க, எங்கே அவள் விழுந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போலக் காயம் பட்ட கரம் கொண்டு மிளிர்மிருதையின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான் அபயவிதுலன் . பற்றியவாறே இப்போது யார் குளியலறையைத் திறந்தார்கள் என்று திரும்பிப் பார்த்தால், வெறும் ஜட்டியுடன் இரண்டு புயல் காற்றுகள் “அப்பா… நாங்களும் குளிக்கிறோம்…” என்று கத்தியவாறு அபயவிதுலனை நோக்கிப் பாய, அது வரை தன் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த மனைவியைக் கீழே இறக்க முயன்றான்.
அவளோ மேலும் அவன் கழுத்தை இறுகப் பற்றியவாறு உள்ளே ஓடிவந்த குழந்தைகளை வாய் பிளந்து அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவசரமாகத் தன் கழுத்தை இறுக்கியிருந்த அவள் கரத்தை விலக்கி கீழே இறக்கியவன், பெரும் குதூகலத்துடன் ஓடிவந்த குழந்தைகளைக் காயத்தைக் கூடப் பொருட்படுத்தாது வாரி அணைத்துத் தன்னோடு தூக்கி, “டேய்… இன்னும் குளிக்காமலா இருந்தீர்கள்…” என்றான் வியந்தவனாய்.
மிளிர்மிருதையோ பிளந்த வாயில் தன் கரத்தைப் பதித்து அதிர்ச்சியுடன் தன் குழந்தைகளைப் பார்த்தவள், அடுத்தக் கணம், தன்னுடைய கரத்திற்கு வாகாக அமர்ந்திருந்த ஆத்விகனின் தலையில் முடிந்த வரை எட்டி நங்கென்று ஒரு கொட்டு வைத்து,
“டேய்… என்னடா செய்து வைத்திருக்கிறீர்கள்… சற்று முன், எத்தனை சிரமப்பட்டு உங்களைத் தயார்ப்படுத்தினேன்… எல்லாவற்றையும் களைந்துவிட்டு வந்திருக்கிறீர்களே… உங்களை…” என்று மீண்டும் அவர்களைக் கொட்ட வர, தங்கள் தந்தையின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்கிற இறுமாப்பில், அவள் சினத்தைக் குழந்தைகள் கருத்தில் கொள்ளவேயில்லை. தங்கள் தந்தையை நிமிர்ந்து பார்த்து, அவன் தாடையில் வழிந்துகொண்டிருந்த நுரையைத் தனது குட்டிக்கையால் வழித்துத் துடைத்தவாறு,
“குளிச்சாச்சுப்பா… ஆனால் நீங்கள் இன்னும் குளிக்கவில்லை என்று தெரிந்ததா… அதுதான் சேர்ந்து குளிக்கலாம் என்று வந்துவிட்டோம்…” என்ற குழந்தைகளை ஆவலுடன் இறுக அணைத்துக்கொண்டான் அபயவிதுலன்.
இது எப்போதும் நடப்பதுதான். அபயவிதுலன் வீட்டில் தங்கும்போது ஆண்கள் மூவரும் ஒன்றாகக் குளிப்பது வழக்கம். அன்றும் அவன் குளியலறையில் இருக்கிறான் என்று தெரிந்ததும், அவனுடன் சேர்ந்து தண்ணீரில் குதித்து விளையாடும் ஆவலில் ஆடைகளைக் களைந்து விட்டு ஓடிவந்துவிட்டிருந்தனர்.
“டேய்… எத்தனை கஷ்டப்பட்டு வெளிக்கிடுத்தி விட்டேன்… உங்களை…” என்றவாறு தன் கரத்தை மீண்டும் ஓங்க, தன் கரங்களால் குழந்தைகளைக் காத்துக் கொண்ட அபயவிதுலன்,
‘இட்ஸ் ஓக்கேமா… குளிக்கத்தானே கேட்கிறார்கள்… எதற்கு இத்தனை கோபம்…” என்று கண்டித்தவனாக,
“சரி நாம் சேர்ந்தே குளிக்கலாம்…” என்று கூறும்போதே
“விதுலா…! நிறையச் செல்லம் கொடுக்கிறீர்கள்… குழந்தைப் பிள்ளைகளுக்கும் குட்டி நாய்க்கும் இடங்கொடுக்கக் கூடாது என்பார்கள்… நீங்கள் செல்லம் கொடுக்கக் கொடுக்கப் பயம் விட்டுப் போகிறது இவர்களுக்கு… பிறகு நாம்தான் சிரமப்படுவோம் சொல்லிவிட்டேன்…” என்று பெரிய லெக்ஷர் அடித்தவாறு மீண்டும் கதிரையை நிமிர்த்தி அதில் ஏறி நிற்க முயல, ஏற்கெனவே விழ இருந்தவள் என்பதால், அவளைத் தடுத்துவிட்டு, நிமிர்த்திய கதிரையில் தான் அமர்ந்து குழந்தைகளை இரு தொடையிலும் இருத்த, மிளிர்மிருதை வாய்க்குள் குழந்தைகளைத் திட்டியவாறே அபயவிதுலனின் தலையில் தண்ணீரைப் பிடிக்கத் தொடங்கினாள்.
சாத்விகன் அவனுடைய தலையைத் தன் குட்டிக் கரத்தால் தேய்த்துக் கழுவிவிட, ஆத்விகன், அபயவிதுலனின் உடலிலிருந்த நுரையைத் தேய்த்துவிடத் தொடங்கினான்.
அந்தக் கணம் அபயவிதுலனின் உள்ளம் நிறைந்துபோனது. குழந்தைகளின் வருடலில் பெரும் இன்பத்தில் லயித்துப்போனான். இதைவிட வேறு என்ன வேண்டும்… இதை விட மகிழ்ச்சி என்ன இருந்துவிடப் போகிறது…” தன்னை மறந்து குழந்தைகளை இறுக அணைத்து அவர்களின் தலையில் அழுந்த முத்தமிட்டுத் திளைக்க அப்போதுதான் மிளிர்மிருதைக்கு அது உறைத்தது. கவனித்தால், அபயவிதுலனின் கைக்காயம் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தது.
பதட்டத்துடன் தூக்கிப் பார்த்தவளுக்குக் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
“டேய்… உங்கள் இருவராலும்தான் அப்பாவின் காயம் நனைந்துவிட்டது… அறிவில்லை…” என்று திட்டத் தொடங்கும் போதே,
“ஷ்… மிளிர்…! எதற்கு அவர்களைத் திட்டுகிறாய்? காயம்தானே நனைந்திருக்கிறது… விடு… திரும்பத் துடைத்துவிட்டுக் கட்டுப்போட்டால் சரியாகிவிடும்…” என்றவாறே கட்டை அவிழத்துத் துர எறிய, இன்னும் அங்கே நின்றால், கோபம் தாங்காமல் குழந்தைகளை மேலும் கடியத் தொடங்கிவிடுவோம் என்பதைப் புரிந்தவளாக, அவர்களை விட்டு விலகியவள், அவன் மடியிலிருந்த சாத்வீகனிடம் ஷவரைக் கொடுத்து,
“காயத்தில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காகத்தான் நானே உங்களைக் குளிப்பாட்ட வந்தேன். அதுவே நனைந்துவிட்டது என்கிறபோது நான் எதற்கு…?” என்று எரிச்சலுடன் கேட்டவள்,
“டேய் அப்பாவிற்குக் கையில் காயம், அழுத்தாமல், தண்ணீர் அதிகம் பட விடாமல் விளையாடுங்கள்… அதிகம் ஸ்ட்ரெய்ன் பண்ண விடாதீர்கள்… புரிந்ததா” என்று கறாராகக் கூறிவிட்டு மறு தொடையிலிருந்த ஆத்விகனைப் பார்த்து,
“டேய் உன் குறும்புத் தனத்தை இன்று மூட்டை கட்டி வை… அப்பாவைப் பார்த்துக் கொள்… அதிக நேரம் நிற்காதீர்கள்… சீக்கிரமாக வெளியே வாருங்கள்…” என்கிற உத்தரவுடன் ஸ்டான்டிங் ஷவரின் கதவைத் திறந்து வெளியே செல்ல முயல,
“ஏய்… நீ எங்கே போகிறாய்?” என்றான் அபயவிதுலன். அவனுக்கு ஏனோ அவர்கள் நால்வரும் இணைந்திருக்கும் அந்த அற்புதத் தருணத்தை விட்டுவிட மனம் வரவில்லை.
திரும்பித் தன் கணவனை முறைத்தவள்,
“ம்… காய்கறி வாங்கப் போகிறேன்… வந்ததும் பேசிக்கொள்கிறேன்…” என்று கடு கடுத்தவள், பின் குழந்தைகளைப் பார்த்துவிட்டு அபயவிதுலனிடம்,
“அதுதான் உங்கள் உத்தம புத்திரர்கள் வந்துவிட்டார்களே… நான் எதற்கு… நீங்கள் மூவருமே கும்மியடியுங்கள்…” என்றுவிட்டு வெளியேற, ஸ்டான்டிங் ஷவர் கதவு தானாகச் சாற்றிக் கொண்டது.
வெளியே வந்தவளின் ஆடை சுத்தமாக நனைந்துவிட்டிருக்க. எட்டிக் கபேர்ட்டைத் திறந்து பாத் ரொப்பை எடுத்து, ஈர ஆடைகளைக் களைந்து அதை அணிந்தவாறு பொது அறைக்கு வர, அன்று அவள் குழந்தைகளுக்கு அணிவித்திருந்த வேட்டியும் சட்டையும் தரையில் கிடந்தன.
பார்த்ததும் புசு புசு என்று கோபம் வந்தது. எத்தனை சிரமப்பட்டு அவர்களுக்குக் கட்டிவிட்டாள்… ஆனால்… அவர்கள்… குனிந்து அனைத்தையும் வாரி எடுத்தவள், அதைக் கட்டிலில் போட்டுவிட்டு, முன்தினம் அபயவிதுலன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த டிசைனர் சேலையைக் கட கடவென்று கோபம் மாறாமலே கட்டத் தொடங்கினாள்.

