Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-20

20

 

கைக்கு தானாக எட்டியது வாய்க்குக் எட்டாது போவது என்பது இதுதானோ? வாய் வரை கொண்டு சென்றவள், அழைப்பு மணி அடித்ததும், திக்கென்றது இவளுக்கு. ஏனோ நெஞ்சம் படபடத்தது. வாசல் கதவுக்கு அப்பால் உள்ளவர் யார் என்று இவளுடைய உள்ளுணர்வு சொல்ல, வாய்க்குக் கொண்டு போன கரத்தைத் தட்டில் வைத்துவிட்டுத் திருதிரு என்று விழிக்க, அப்போதுதான் சாப்பாட்டில் கைவைக்கப் போன விதற்பரை, என்னவென்று பார்க்கப் போன புஷ்பாவைத் தடுத்து,

“நான் பார்க்கிறேன்… நீங்கள் அத்தையைக் கவனியுங்கள்…” என்றுவிட்டு வாசல் நோக்கிச் சென்று கதவைத் திறக்க, அங்கே இறுகிய முகத்துடன் நின்றிருந்தான் உத்தியுக்தன்.

அவனைக் கண்டதும் ஒரு கணம் தடுமாறியவள், அந்த இறுகிய முகத்தையும், கூரிய விழிகளையும் கண்டு தெளிந்தவளாய்,

“மாமா.. நீங்களா.. வந்துவிட்டீர்களா? இத்தனை நேரமாக உங்களுக்காகத்தான் காத்திருந்தோம்… இனி வரமாட்டீர்கள் என்று நினைத்து, இப்போது தான் சாப்பிட அமர்ந்தோம். வாருங்கள் உள்ளே…” என்று குதூகலத்துடன் அவனை வரவேற்க, ஒன்றும் தெரியாதவளிடம், தன் கோபத்தைக் காட்ட முடியாது மெல்லிய தலையசைப்புடன் உள்ளே வந்தான் உத்தியுக்தன்.

தன் மகளுக்குப் பின்னால் வந்திருந்த தயாளனும் உத்தியுக்தனைக் கண்டதும், முகம் பூரிக்க,

“அடடே… வந்துவிட்டீர்களா… வாருங்கள்… வாருங்கள்… புஷ்பா…! உத்தியுக்தன் தம்பி வந்து விட்டார்…” என்று குரல் கொடுக்க இங்கே சாப்பிடத் தயாரான சமர்த்தியின் பாடுதான் திண்டாட்டமாகப் போய்விட்டது.

அவன் தன்னைத் தேடி வந்தது பெரும் குதுகலத்தைக் கொடுத்தாலும், அவனுடைய கோபத்தை எண்ணிப் பெரும் பீதியும் எழுந்தது.

அவனுடைய மறுப்பையும் மீறி அண்ணன் அண்ணி வீட்டிற்கு வந்ததை இட்டு நிச்சயமாக ஆத்திரப்படுவான். கூடவே பாதுகாவலர்களை ஏமாற்றிவிட்டு வந்தது வேறு அவனுடைய சீற்றத்திற்கு எண்ணெய் வார்த்திருக்கும். அவர்களை ஏமாற்றி விட்டு வந்ததற்குக் காரணமே, அவனை இங்கே வரவழைக்கத்தான்… இவளைக் காணவில்லை என்றதும் தேடியாவது வரமாட்டானா என்கிற நப்பாசையில்தான் அப்படிச் செய்தான். இப்போது அவள் நினைத்தது போல அவன் வந்தும் விட்டான்தான். ஆனால் அது நிறைவேறிய பிற்பாடு நெஞ்சம் பயத்தில் தாறுமாறாகத் துடித்தது.

அவளைக் கண்டதும் என்ன செய்வான். அண்ணன் அண்ணிக்கு முன்பாகத் தன் கோபத்தைக் காட்டுவானோ? அப்படிக் காட்டினால் எப்படிச் சமாளிப்பது? என்று தடுமாறியவளுக்கு, அதையும் மீறி முன்னால் பரிமாறப்பட்ட உணவைக் கண்டதும் ஐயோ என்றானது.

இத்தனை விரைவாகவா அவள் இருப்பிடத்தை அவன் கண்டுபிடிக்க வேண்டும்? அதுவும் ஆசையாகச் சாப்பிட அமர்ந்த நேரத்தில் வந்து தொலைத்து விட்டானே. ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தால் குடியா முழுகிவிடும். அப்படித் தாமதமாக வந்திருந்தால் உணவை ரசித்து ருசித்திருப்பேனே… என்று பரிதாபமாகத் தன் உணவுத் தட்டைப் பார்க்க, பிடித்த பதார்த்தங்கள் அவளைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பது போலத் தோன்றியது சமர்த்திக்கு.

ஐயோ.. இத்தனை பதார்த்தங்களையும் எப்படிச் சாப்பிடாது விடுவது? அவனுக்குத்தான் எதைக் கொடுத்தாலும் கல்லைச் சுவைப்பதுபோல விழுங்கி வைப்பான். இவள் இப்படியா. இனி இத்தகைய சுவையான உணவை எங்கே சென்று சாப்பிடுவாள். அந்த லீயிற்கு ஆடு மாடுகளுக்குக் கொடுப்பதுபோல இலை குலைகளைப் படைக்க மட்டும்தான் தெரியும். இல்லையென்றால் பஸ்டா, பேர்கர், லசானியா என்று எல்லாம் மேற்கத்திய உணவுகளைத்தான் செய்வாள். இப்படிக் கார சாரமாகக் குழம்பு பொரியல், வறை, பிரட்டல் என்று எதுவும் செய்யத் தெரியாதே.

ம்கூம் எதை விடுத்தாலும் இந்த உணவை விட முடியாது. ஒரு கை பார்த்துவிடவேண்டியதுதான். முடிவு செய்தவளாக, அவசரமாக உணவைப் பிணைந்து வாயில் வைக்க முயன்ற விநாடி,

“சத்திமா… யார் வந்திருக்கிறார்கள் பார்…” என்று புஷ்பாவின் குரல் கேட்க, வாய்வரை கொண்டு சென்றவளுக்கு அந்தக் கவளத்தை வாய்க்குள் திணிக்க முடியவில்லை. அதற்கு மேல் உண்ண முடியாமல் கவளத்தைத் தட்டில் போட்டவள், கரங்களை அங்கிருந்த துண்டாலே துடைத்துவிட்டுக், காதலனை விட்டுப் பிரிய முயலும் காதலி போலப் பரிதாபமாகத் தன் உணவுத் தட்டைப் பார்த்துவிட்டு எழுந்தவளுக்கு இப்போது உத்தியுக்தன் வந்து பயமுறுத்தினான்.

அவனுடைய கோபம் ஒன்றும் அவளுக்குப் புதிதல்லதான். ஆனால் அந்தக் கோபத்தை அண்ணன் அண்ணியின் முன்னால் காட்டிவிட்டால்… எப்படியோ அவனை வரவழைத்தாயிற்று. இனி அவன் கோபத்தில் எரியாமல் காக்கவேண்டுமே… இப்போது எப்படிச் சமாளிப்பது? நினைக்கும்போதே அடிவயிறு கலங்கியது.

எச்சில் கூட்டி விழுங்கியவள், நடுக்கத்துடன் வெளியே வர, அங்கே அனைவரையும் குள்ளமாக்கியவாறு மாமலை போல நின்றிருந்தான் உத்தியுக்தன். இவளைக் கண்டதும் அவனுடைய முகம் இறுகிக் கறுத்துப் போயிற்று. அவனுடைய முக மாற்றத்தைக் கவனிக்காத புஷ்பாவோ,

“வாருங்கள் தம்பி… எங்கே வராமல் போய் விடுவீர்களோ என்று மிகவும் கவலையாக இருந்தது? இத்தனை நேரம் உங்களுக்காகக் காத்திருந்துவிட்டு இப்போதுதான் சாப்பிட அமர்ந்தாள் சத்தி… நீங்களே வந்துவிட்டீர்கள்…” என்று மெய்யான மகிழ்ச்சியில் உரைத்தவர், திரும்பி சமர்த்தியைப் பார்த்து, போமா… போய்த் தம்பிக்கும் சாப்பாட்டுத்தட்டை எடுத்து வை…” என்று உத்தரவிட,

“இல்லை… எனக்கு வேண்டாம்…” என்று வேகமாக மறுத்தவன், விரைந்து சென்று சமர்த்தியின் கரத்தைப் பற்றியவாறு வெளியேறத் தொடங்க, அதைக் கண்ட புஷ்பா குழம்பிப் போனார்.

“என்ன தம்பி இப்போதுதான் வந்தீர்கள்… அதற்குள் கிளம்பிவிட்டீர்கள்… சாப்பாடு எல்லாம் தயாராகத்தான் இருக்கிறது. சாப்பிட்டுவிட்டுச் செல்லலாமே…” என்று கெஞ்சுவதுபோலக் கேட்க உத்தியுக்தனோ உள்ளே எழுந்த கோபத்தை அடக்கும் வழி தெரியாது சமர்த்தியின் மணிக்கட்டை அழுந்த பற்ற, அது கொடுத்த வலியில் திணறிப் போனாள் சமர்த்தி. தன் கரத்தினை விடுவிக்க முயன்று தோற்றவளாய்,

“இ… இல்லை அண்ணி… நா… நாங்கள் இன்னொரு நாள் வருகிறோமே… முக்கியக் கூட்டத்தை நிறுத்திவிட்டு வந்திருக்கிறார் போல…” என்று எதையோ கூறி சமாளிக்க முயல, தயாளனின் விழிகள் கூர்மையாகச் சமர்த்தியையும், உத்தியுக்தனையும் அளவிட்டன. இறுதியாக சமர்த்தியின் விழிகளைக் கூர்மையாகப் பார்க்க, அந்த விழிகளைச் சந்திக்க முடியாது பெரிதும் தடுமாறிப்போனாள்.

பேசாமல் உத்தியுக்தனை வரவிடாது செய்து இருக்கலாமோ? அவன் வராதிருந்திருந்தால் இந்தச் சிக்கல் எதுவும் இருந்திருக்காதே. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்று இதைத்தானோ சொல்வார்கள். தடுமாறி நிற்கையில் தயாளன் என்ன நினைத்தாரோ,

“விடு புஷ்பா… அவருக்கு என்ன சிக்கலோ… இன்னொரு நாள் ஆறுதலாக வந்து சாப்பிடட்டுமே…” என்று விழிகளால் எச்சரித்தவாறு கூற, புஷ்பா வோ மெல்லிய கலக்கத்துடன் தயாளனையும், சமர்த்தியையும் பார்த்தார். உத்தியுக்தனோ கடப்பாரையை விழுங்கியவன் கணக்காக எங்கோ வெறித்துக்கொண்டிருந்தான்.

அதைக் கண்டதும் இவளுக்குள் சுள்ளென்று எதுவோ எழுந்தது. இப்படித்தான் அண்ணன் அண்ணி முன்பாக விறைப்போடு நிற்கவேண்டுமா? கொஞ்சம் வளைந்து கொடுத்தால்தான் என்ன? அடிக்கும் புயல்காற்றிற்கு வளைந்து கொடுக்கும் நாணற்புல் தானே நின்று பிடிக்கிறது. திமிராக நிமிர்ந்து நிற்கும் கடியமரம் உடைந்துபோகும் என்று இவனுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது? சரி நடிக்கத் தெரியவில்லை என்றால் இயல்பாகக் கூடச் சாதாரணமாக இருக்க முடியாதா? எத்தனை ஆசையாக அண்ணி கேட்கிறார்கள். ஒரு வாய் சாப்பிட்டால் அவருடைய பெருமை குறைந்துவிடுமா என்ன? எரிச்சலுடன் எண்ணும்போதே இவள் பக்கமாகக் குனிந்தவன்,

“கிளம்பலாமா…?” என்றான் பற்களைக் கடித்தவாறு. இதற்காகவா இத்தனை சிரமப்பட்டு இவனை வரவழைத்தாள்? தவிர வா என்றதும் கிளம்பிவிட இவள் என்ன இவனுக்கு வேலைக்காரியா? அதுவும் அண்ணியின் சாப்பாட்டைச் சாப்பிடாமல்… எரிச்சலுடன் நினைத்தவளுக்கு என்ன தோன்றியதோ, முகம் சட்டென்று மலர்ந்தது. அந்த மலர்ச்சியுடனேயே, அவன் பக்கமாகத் திரும்பியவள், இறுக்கத்துடன் நின்றிருந்தவனின் கழுத்தைச் சுற்றி ஒற்றைக் கரத்தைப் போட்டு, அவனைப் பார்த்துப் புன்னகைத்தவாறு சற்றுத் தலையைச் சரித்து,

“ஓ… மை பேபி… கிளம்பலாமே…! அதற்கு முதல் நான் சாப்பிட்டுவிட்டு வருகிறேன்… நீங்கள் கூட்டத்தில் போட்ட பலகாரங்களைத் தின்றுவிட்டு வந்திருப்பீர்கள். நான்…. அப்படியா? அண்ணி அன்போடு சமைத்துப் பரிமாறிய உணவு. இதை எப்படி வேண்டாம் என்று மறுப்பேன். அதைச் சாப்பிடவும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்… அந்தப் புண்ணியத்தை இழக்க நான் தயாராக இல்லை… நீங்கள் கொஞ்ச நேரம் எனக்காகக் காத்திருப்பீர்களாம், நான் சாப்பிட்டுவிட்டு வருவேனாம்… சரியா…” என்று அத்தனை பேரின் முன்னாலும் காதலித்த மனைவிபோல, தேகம் உரசக் கூறியவள், அவன் தடுமாறி நின்ற கணத்தைப் பயன்படுத்துபவளாக மறு கரத்தை உதறிவிடுவித்துவிட்டு, இறுகிய அவன் இரு கன்னங்களையும் தன் தளிர் கரம் கொண்டு பற்றி இழுத்து,

“சோ… ஸ்வீட்… இப்படி நீங்கள் உர் என்று இருப்பதைப் பார்த்தால் நமக்குள் சண்டையென்று அண்ணாவும் அண்ணியும் நினைக்கப்போகிறார்கள் பேபி… அதனால் நீங்கள் அண்ணாவோடு சிரித்துப் பேசிக்கொண்டே இருப்பீர்களாம்… நான் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு வருவேனாம்… ஓக்கே…” என்றவள், பதிலையும் எதிர்பார்க்காமல் எட்டிப் பெருவிரலில் நின்று அவனுடைய கன்னத்தில் பசக் என்று ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, அவன் எதிர்வினை ஆற்ற முதல் அங்கிருந்து சாப்பாட்டு மேசை நோக்கி ஓடி விட்டிருந்தாள். உத்தியுக்தனோ, அவளடைய செயலில் அதிர்ந்தவனாக சிலையென நின்றிருந்தான்.

அவனையும் மீறி எழுந்த வலக்கரம் அவள் முத்தமிட்டுச் சென்ற கன்னத்தைத் தொட்டுப் பார்த்தான். ஏனோ இன்னும் அவளுடைய மென் உதடுகள் கன்னத்தில் உராய்ந்துகொண்டு இருப்பது போன்ற அவஸ்தையில் சிலிர்த்துப் போனான்.

தயாளனோ, தன் தங்கைக்கும் அவனுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நம்பியவராகத் தன் தங்கையின் செயலில் மெல்லியதாக நகைத்தவர், உத்தியுக்தனின் கரத்தைப் பற்ற. ஏதோ மாயை அறுந்த உணர்வில் அவரை நிமிர்ந்து பார்த்தான் உத்தியுக்தன்.

“உள்ளே வாருங்கள் தம்பி…” என்றவர் அவனுடைய கரத்தைப் பற்றி அழைத்துச் செல்ல, அங்கே உணவு மேசையில் அமர்ந்தவாறு அண்ணி சமைத்த சமையலை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள் சமர்த்தி.

இவனுக்கோ உள்ளே பெரும் உலைக்களமே கொதித்துக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் அவனை என்ன பாடுபடுத்திவிட்டாள்.

அங்கே இவளுக்கு என்னாயிற்றோ என்று பதறித் துடித்திருக்க, இவள் என்னவென்றால், இங்கே கூடிக் குலாவிக்கொண்டிருக்கிறாளே. இதில் அத்தனை பேரின் முன்னாலும் அன்பான கணவன் மனைவி என்று காட்ட முயலும் முயற்சி வேறு. யாருக்குக் காட்ட இந்த நடிப்பு. நிரந்தரமில்லாத நடிப்பில் பயன்தான் ஏது? கண் மண் தெரியாத சினம் தோன்றியது உத்தியுக்தனுக்கு.

இத்தனைக்கும் தயாளன் அவனை இருக்கையில் அமரச் சொன்னதோ, தான் அமர்ந்ததோ, அவர் ஏதேதோ பேசியதோ எதுவுமே அவன் காதுகளில் விழவில்லை. அவன் நினைவில் நின்றது முழுதும் சமர்த்திச் சமர்த்திச் சமர்த்தி மட்டுமே.

ஆத்திரத்தை அடக்கும் வழி தெரியாது சிலையென இருக்கையில் அமர்ந்திருந்தவனின் கவனத்தைத் திசை திருப்பியது, அவனுடைய கைப்பேசி.

எதையோ வாய்க்குள் முணுமுணுத்தவனாய், கைப்பேசியை. எடுத்துப் பார்க்க, வேலைத் தளத்தலிருந்து எடுத்திருந்தார்கள்.

உடனே எடுத்துக் காதில் பொருத்தி அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுக்கொண்டிருக்க, அவனுடைய நேரம் இன்மையைப் புஷ்பாவும் தயாளனும் நன்றாகவே உணர்ந்துகொண்டார்கள். அவன் அலைபேசியில் பேசி முடியவும் சமர்த்திக் கைகழுவிவிட்டு வரவும் நேரம் சரியாக இருந்தது.

நேராக அவளிடம் சென்று கரத்தைப் பற்றியவன், “சாரி… முக்கிய வேலை இருக்கிறது… இன்னொரு நாள் வருகிறேன்…” என்று விடைபெற்றவன், தன்னவளைப் பற்றிய கரத்தை விடாமலே இழுத்துச் சென்று வண்டியில் அமரவைத்துவிட்டுப், படுவேகமாக விட்டை நோக்கி வாகனத்தை விடத் தொடங்கினான்.

சமர்த்தியோ அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தோடு சிலையென அமர்ந்திருக்க வீடு வந்து சேர்ந்தது.

What’s your Reaction?
+1
30
+1
8
+1
3
+1
8
+1
0
+1
0

Related Post

2 thoughts on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-20”
  1. அருமையான பதிவு 😍😍😍😍😍.
    அடப்பாவி சோத்து வட்டில கைய வக்கும்போது சரியா வந்து நிக்கறானே😯😯😯😯😯.
    வந்ததும் இல்லாம இப்புடி 😤😤😤😤😤😤😤 புஸ்ஸூ புஸ்ஸூ ன்னு நிக்கறானே.
    இம்பூட்டு தூரம் வேலை வுட்டு போட்டு வராம அங்கனயே ரோசிச்சமாதிரி தயாளுக்கு ஒரு போனைப் போட்டு சத்தி வந்தாளான்னு கேட்டுட்டு வேலைய பாக்க போயிருக்க வேண்டியதுதானே🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. அதான் அந்த சோடிகார்ட்ஸ் இருக்கானுங்க தானே. அவுனுங்களை அனுப்பியிருக்கலாம்.😎😎😎
    சத்தியாவது ஹாப்பி யா அண்ணியோட சாப்பாட்டை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டு வந்திருப்பா😇😇😇😇. இப்படி அவதிஅவதியா சாப்பிட்டிருக்க மாட்டா.😁😁😁😁😁

    1. ஹீ ஹீ ஹீ எஸ் ஆனது அவன் பொண்டாட்டி. தான் ஆடலைன்னாலும் சதை ஆடும்பல. பயபுள்ள பயந்திருச்சுயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!