Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-14

14

 

அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய்,

“விடுங்கள்… விடுங்கள் என்னை… இல்லை… இப்படி வேண்டாம்… நான் சொல்வதை ஒரு முறையாவது கேளுங்களேன்…” என்று கெஞ்ச இவனோ,

“உன்னை விடுவதற்காகவா மணம் செய்து அழைத்து வந்தேன்..” என்று கிண்டலாகக் கேட்டவன், அறையின் உள்ளே ஏந்தி வந்து படுக்கையில் எறியத் துள்ளி அடங்கியவள் பதறிப் போய்ப் பின்னால் செல்ல, அதை ரசனையுடன் பார்த்தவாறே அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியை நோக்கிச் சென்றான். இவளுக்கோ தேகம் உதறத் தொடங்கியது.

குளிர்சாதனப் பெட்டியின் கதவைத் திறந்தவாறு இவளைத் திரும்பிப் பார்த்து,

“ஏதாவது அருந்தப் போகிறாயா? வைன், விஸ்கி.. ஆர் ஸப்ரிட்” என்றான். பற்களைக் கடித்தவள் மறுப்பாகத் தலையை அசைத்து,

“எனக்குப் பழக்கமில்லை…” என்றாள் நடுக்கத்துடன். தன் தோள்களைக் குலுக்கியவன்,

“ஓக்கே தென்…” என்றவாறு ஒரு போத்தலை எடுத்து, அருகே தொங்கிக் கொண்டிருந்த குவளையையும் கூடவே இழுத்து எடுத்து அதில் ஊற்றியவாறு,

“டு யு நோ வட்…” என்றவன், போதிய மதுவைக் குவளையில் ஊற்றிவிட்டு மீண்டும் போத்தலை உள்ளே வைத்தவாறு இவளை நோக்கித் திரும்பினான்.

கரத்திலிருந்த மதுவை ஒரு இழுவை இழுத்துச் சுவைத்தவன், குவளையை ஏந்திய கரத்துச் சுட்டு விரலால் உதடுகளை இழுத்துத் துடைத்துவிட்டு,

“ஜூலியட்டாக இருந்தால் எனக்குக் கம்பனி கொடுத்திருப்பாள்… என் ரசனை பற்றித் தெரிந்து அதற்கேற்ப நடந்திருப்பாள். சொல்லப்போனால் சொர்க்கத்தை எனக்குத் திகட்டத் திகட்டக் காட்டுவாள்…” என்றவன் படுக்கை நோக்கி வர, இவளோ பின்னேறியவாறு,

“உங்களை யார் தடுத்தார்கள்… அன்று எடுத்த நிகழ்பதிவை என்னிடம் கொடுத்துவிட்டுத் தாராளமாக அந்த ஜூலியட்டிடம் போகலாம் யாரும் தடுக்க மாட்டார்கள்…” என்றாள் ஒரு வித அவசரத்துடன்.

விழிகளோ அவன் கரத்திலிருந்த மதுவையும் அவனையும்தான் மாறி மாறிப் பார்த்தன.பொதுவாகவே அவளுக்கு மது பிடிக்காது. அதை அருந்தும் ஆடவரையும் பிடிக்காது. ஆனால் அவள் தலையெழுத்து எதுவும் பேச முடியாது கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அவன் முன்னால் நிற்க வேண்டியிருக்கிறது. நினைக்கும் போதே அழுகை வந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டாள். வினை விதைத்தவ்ள அவள். அறுவடை செய்யத்தானே வேண்டும்.

அவள் சொல்வதைக் கேட்ட உத்தியுக்தன், தன் உதடுகளைச் சுழித்து,

“என்னை விட்டு விலகிய எதையும் நான் தேடிச் சென்றதில்லை சமர்த்தி. தவிர… எனக்குத்தான் தற்போதைக்கு நீ இருக்கிறாயே. பிறகு எதற்கு இன்னொருத்தி? ஒருத்தியோடு பழகிவிட்டால் அவளுக்கு ஒரு போதும் துரோகம் செய்யமாட்டேன்” என்றவனை முறைத்தவள்,

“அடேங்கப்பா… அதி நியாயவாதிதான்…” என்றாள் ஏளனத்துடன். அதைக் கேட்டு நகைத்தவன்,

“நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் நியாயவாதிதான்மா… நான் இதுவரை யாருடைய குடியையும் கெடுத்ததில்லை… அந்தப் பழக்கம் எனக்கு இருந்ததும் கிடையாது…” என்றவன் மிச்சத் திரவத்தையும் வாய்க்குள் கொட்டிவிட்டு, அதை அங்கிருந்த மேசையில் வைத்தவாறு நிதானமாக படுக்கையை நோக்கி வரத் தொடங்கினான்.

பதறி அடித்து எழுந்த சமர்த்தி, அவனிடமிருந்து தப்பும் முயற்சியாக,

“ப்ளீஸ்… ப்ளீஸ்… ஒரு முறை நிதானமாக…” முடிக்க முதல் ஒரு கரத்தைத் தூக்கி அவளுடய பேச்சைத் தடுத்தவன்,

“பேசும் நேரம் முடிந்துவிட்டது சமரம்த்தி… இப்போது கொஞ்சும் நேரம்… அன்று விட்டதைத் தொடரலாமா…” என்றவாறு அவளை நெருங்கிக் கரத்தைப் பற்றி, விதிர் விதிர்த்துப் போனாள் சமர்த்தி.

வேகமாகத் தன் கரத்தை உதற முயன்றாள். உதறியதும் விட்டுவிட இவன் என்ன நல்லவனா? மிக அழுத்தமாக அவளுடைய கரத்தைப் பற்றி இருந்தான் உத்தியுக்தன்.

அழுகையுடன் அவனைப் பார்த்தவள்,

“ப்ளீஸ்…” என்று கெஞ்சுவது போலக் கேட்க, மறு கணம் அவன், இழுத்த வேகத்தில் அவன் மார்பின் மீது விழுந்தாள் சமர்த்தி.

விழுந்த வேகத்தில் அவனிடமிருந்து துடித்துப் பதைத்துத் திமிற, அவள் திமிறலை சுலபமாகவே அடக்கியவாறு,

“ஷ்.. எதற்குத் திமிறுகிறாய்?” என்றவாறு மேலும் அவளைத் தன்னோடு நெரித்துச் சேலைக் கூடாகக் கரத்தை விட்டு வெற்றிடையைப் பற்ற, இவளோ துள்ளிக் குதித்தாள். அவனோ, குதித்தவளின் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தி,

“சேலை கூட வசதிதான்…” என்றான் அந்த மென்மையை ரசித்தவாறு.

“விடுங்கள் என்னை… சே… பிடிக்காத பெண்ணைத் தொடுவது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா?” என்று சீற, இவனோ குலுங்கிச் சிரித்தவாறு,

“கடந்த இரண்டு வருடங்களாகப் பிரமச்சரியம் காப்பவன் நான்… கிடைத்ததை விடுவதற்கு நான் என்ன முட்டாளா? உன்னை எதற்கு மணந்தேன் என்று நன்றாகத் தெரிந்தும் எதற்கு இந்த நாடகம்?” என்றான் ஏளனத்துடன்.

மேலும் திமிறியவளை அடக்கியவனாக,

“ஆனால் கவலைப்படாதே…! எனக்கு எப்போது தேவைப்படுகிறாயோ, அப்போது மட்டும் இந்தப் படுக்கையை அலங்கரித்தால் போதுமானது. மற்றும் படி உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன்…” என்றவனின் அவசர ஆவேச வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியவளுக்கு அவன் பேச்சு மேலும் அவளைச் சோர்வுறச் செய்தது.

இதை விட ஒரு பெண்ணுக்கு எந்த அவமானமும் இருக்க முடியாதே. இரவுக்கு மட்டும் தான் அவள் வேண்டுமானால், அங்கே அர்த்தம் வேறாக மாறிப்போகிறதே. கண்கள் மேலும் கலங்க, நெஞ்சம் ஆத்திரத்தில் விம்ம,

“உங்கள் படுக்கைக்கு மட்டும்தான் நான் என்றால்… நான் என்ன விப… பரத்தையா?” என்றாள் சீற்றமாக. அவனோ அவளை ஒரு தள்ளலில் படுக்கையில் விழ வைத்துவிட்டு அதே வேகத்தில் அவள் மீது விழுந்தவன், அவள் முகத்தை உற்றுப் பார்த்து,

“இதில் என்ன சந்தேகம்…?” என்றான் அவள் உதடுகளைப் பார்த்தவாறு.

இவளோ ஏளனத்துடன் தன் உதடுகளை நெளித்து,

“அப்படியானால் அவள் அந்த ஜூலியட்டும் உங்களுக்கு அதுவாகத்தான் இருந்தாளா?” என்று கேட்டவளை ஒரு கணம் முகம் இறுகப் பார்த்தான் உத்தியுக்தன். அடுத்த கணம் மெல்லியதாகச் சிரித்தவன்,

“நிச்சயமாக இல்லை… அவளும் நானும் காதலித்தோம். ஒன்றாக வாழ்ந்தோம்… ஆனால் நீ… உன்னால் இழந்த உடல் சுகத்தை மீளப் பெறுவதற்காக மட்டும் மனைவி என்கிற பெயரில் அழைத்து வரப்பட்டவள்…. தவிர உன்னால் நான் பட்ட அவமானங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், வேதனைகளுக்கும் யார் மருந்து இடுவது? அந்த வலியைக் கொடுத்தவள் நீ. அதற்கான மருந்தும் நீதான்…” என்றவன் பேச்சுப் போதும் என்பது போலத் தன் உதடுகளால் அவளுடைய உதடுகளை அழுந்தப் பற்றிக் கொண்டான் உத்தியுக்தன்.

முதலில் திமிறியவள், ஒரு கட்டத்தில் அது முடியாமல் தளர்ந்து போக, மெதுவாக அவளுடைய உதடுகளை விட்டு விலகியவன், தேன் குடித்த வண்டானான். உதடுகளால் அவள் முகம் எங்கும் ஊர்வலம் நடத்த, சமர்த்திக்கு உடலே கூனிக் குறுகிப் போனது.

திருமணம் என்பது வெறும் மஞ்சள் கயிறும், இரவில் பிறக்கும் உறவும் மட்டும்தானா. அதை எல்லாம் தாண்டி இரு மனங்களின் பிணைப்பு இருக்க வேண்டாமா? அது இல்லாமல் வெறும் உடலுக்காக மட்டும்தான் இந்தத் திருமணம் என்றால் அதை விடப் பெரும் அவமானம் ஒரு மனைவிக்கு இருந்துவிடப் போகிறதா என்ன? அருவெறுக்க அவள் கழுத்தில் பதிந்த அவன் முகத்தைப் பற்றித் தள்ள முயன்றவளாக,

“தயவு செய்து விடுங்கள் என்னை… நீங்கள் இப்படித் தொடும்போது எனக்குப் பிடிக்கவில்லை… அருவெறுக்கிறது… இறுதிவரைக்கும் மறக்கமுடியா வடுவை இது ஏற்படுத்தும்… கெஞ்சிக் கேட்கிறேன்… விட்டுவிடுங்களேன்…” என்று கண்ணீர் வழியச் சொன்னவளை நிமிர்ந்து கண்களில் பளபளப்புடன் பார்த்தான் உத்தியுக்தன்.

“பிடிக்கவில்லையா… பிடிக்கவில்லையா…?” என்று தலையைத் தூக்கி கேட்டவன், அதே மகிழ்ச்சியோடு,

“சந்தோஷம்… மிக்கச் சந்தோஷம்… எனக்குப் பிடித்திருக்கிறதே… இப்படி உன் கண்ணில் கண்ணீர் வருவதைப் பார்க்க எனக்குப் பிடித்திருக்கிறதே… இந்த இரண்டு வருட காலங்களாக நான் பட்ட வேதனைக்கு இது சிறந்த மருந்தாகத் தோன்றுகிறதே. ம்… பழிவாங்குவதில் கூட இத்தனை மகிழ்ச்சி இருக்கிறதா என்ன?” என்று கேட்டவன், இன்னும் அவளைத் தன்னோடு பிணைக்க, இவளுக்கோ மூச்சு முட்டியது.

வெளிநாட்டில் வளர்ந்தாலும் கூட, புஷ்பாவின் கண்டிப்பில் வளர்ந்தவள் சமர்த்தி. இதுவரை ஆண் பெண் உறவின் அரிவரி கூட அறியாதவள். அப்படிப் பட்டவளுக்கு ஆரம்பப் பாடமே கசப்பாகிப்போனால்?

அவனுடைய செயல் அவளுக்கு மேலும் வலியைக் கொடுக்க, அவனைத் தடுக்க முயன்று தோற்றாள் சமர்த்தி.

“பழிவாங்குவதுதான் வாழ்க்கையா?  மன்னிப்பு என்பதே கிடையாதா?” என்று ஏக்கத்துடன் கேட்க, அவனோ தன் காரியமே கண்ணாகியவனாக அவள் தேகம் என்னும் வீணையைத் தன் கரம்கொண்டு ஆவேசத்துடன் மீட்டத் தொடங்கியவாறு,

“சும்மா சொல்லக்கூடாது… கோவிலில் வடித்த சிற்பம்போல வளைவு சுளிவுகளோடு நன்றாகத்தான் இருக்கிறாய்… அதுவும் இந்தக் கண்கள்…” என்றவன் அவள் கண்களோடு தன கண்களைச் செலுத்தி உற்றுப் பார்த்தான். இப்போது மெல்லியதாகச் சிரித்தவன்,

“கடந்த இரண்டு வருடங்களாக என்னைத் தூங்கவிடாமல் செய்த விழிகள்… எத்தனை நாள் உறக்கமில்லாமல் எழுந்து தவிப்போடு அமர்ந்து இருக்கிறேன் தெரியுமா?” என்றவன், அவனைத் தடுக்க முயன்ற கரங்களைப் பற்றித் தலைக்கு மேலாகக் கொண்டு சென்று இறுகப் பற்றியவனாக, அவளை உறுத்து விழித்தவன்,

“இந்த நிலைக்கு என்னைத் தள்ளியது யார்? நீ தானே… நீ மட்டும் என் வழியில் வராது இருந்திருந்தால், என் வாழ்க்கையே திசைமாறாது இருந்திருக்கும்…” என்றவன், ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி நின்றான். மனதில் ஜூலியட்டும், அவள் நிராகரிப்பும் வந்து போனதோ, திறக்கும் போது தீயைச் சிந்தும் ஆத்திரத்தோடு திறந்தவன், அதை வெளிக்காட்டும் வகையில் தன் கரங்களால் அவள் மேனியை வலிக்கச் செய்தவனாக, ஆத்திரத்தோடு அவளைப் பார்த்து,

“ஒவ்வொரு முறையும் நான் உன்னை அணைக்கும்போது நீ பிடிக்காமல் துடிப்பதை நான் பார்க்கவேண்டும்… நான் கொடுக்கும் இம்சையில் நீ துடிக்கவேண்டும்… அதில் நீ படும் வலியை நான் பார்த்துப் பார்த்து ரசிக்கவேண்டும்… அதில் தான் இத்தனை காலம் நான் பட்ட வலியை தீர்த்துக் கொள்ளப் போகிறேன். போகிறேன்…” என்றதும் அவன் செயலால் துடித்துப்போனவளாக, மீண்டும் மீண்டும் கெஞ்ச, அவனோ, அவள் கெஞ்சலை அலட்சியம் செய்தவனாகத் தன் காரியத்திலேயே கண்ணானான்.

ஒரு கட்டத்தில் அவன் நெருக்கத்தின் வேகத்தைத் தாங்க முடியாதவளாக விடுபடப் போராட, அவனோ அவளுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தித் தன் தேடலைச் சற்று வேகத்துடன் தொடங்க அங்கே அவளுடைய மறுப்புக்கு மதிப்பில்லாது போனது.

அதுவும் இன்னொரு பெண்ணின் படத்தை மார்பில் பச்சை குத்தியவாறு அவளைத் தொட முயன்றபோது இவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. கூடவே அருவெறுத்தும் போக, இயலாமையில் ஏற்பட்ட அழுகையினூடே,

“ஒரு பெண்ணின் அனுமதியில்லாது தொடுவது அசிங்கம்… அது மனைவியே ஆனாலும்… தயவு செய்து என்னை விடுங்கள்…”

“ஹா… ஹா… ஹா… இன்னொருவனுடைய வாழ்க்கையை அம்பலப்படுத்துவது… அது மட்டும் கௌரவமா என்ன? உன்னை எதற்கு மணந்தேன் என்று நினைத்தாய்? கண்ணாடிப் பெட்டியில் வைத்து அழகு பார்க்கவா? உன்னால் எதையெல்லாம் இழந்தேனோ, அதையெல்லாம் உன்னை வைத்துத் தான் பெறப்போகிறேன் சதி… ஐ மீன் சதிகாரி…” என்றவன் அதற்குமேல் அவளைப் பேசவிடவில்லை.

ஒரு கட்டத்தில் அவனிடமிருந்து தன்னை மீட்க முடியாதவளாய் உதடுகள் நடுங்கக் கண்களில் கண்ணீர் சொரிய வேறு வழியில்லாமல் அவன் விருப்பத்திற்கு ஏற்ப தன் மறுப்பைத் தளர்த்தி நின்றவளை முழுவதுமாக அவளை ஆட்கொள்ளத் தொடங்கினான்.

ஒரு நேரம் அவள் மீதிருந்த ஆத்திரத்தில் சற்று வன்மமாய்க் கையாண்டாலும், அடுத்த கணம் வலியில் துடித்தவளை உணர்ந்தவனாய் சற்று மென்மையாய் கையாள, ஒரு கட்டத்தில் அவனுடைய கரங்கள் செய்த மாயாஜால வித்தையில் திமிறல் அடங்கி, உலகம் மறந்து பெண்ணாய் மலர்ந்து முழுவதுமாக தன்னைத் தொலைத்து நிற்க, அவளை முற்றுகையிட்டு ஆட்கொண்டவன், இறுதியில் அவள் உதடுகள் தேடி ஓய்ந்து நின்றான்.

மழை பெய்த பின்னாடி கலைந்து செல்லும் கார்மேகம் போல, அவளை விட்டு விலகியவன், தன் அசுரவேகத்தில் காயம்பட்ட அவள் திருமேனியைக் கண்டு மெல்லியதாகச் சிரித்து,

“அப்படியொன்றும் வெறுப்பானதாகத் தெரிய வில்லையே… நான் எதிர்பார்த்ததை விட நன்றாகத் தான் இருந்தது… அதுவும் உன் உடல்…” என்றவன் ரசனையோடு அவளைத் தரிசித்து விட்டு “மிக மிக ரசித்தேன்… இரண்டு வருடக் காத்திருப்புக்கும் அர்த்தம் இருக்கிறது…” என்றவன், ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல் தொட்டோமே என்கிற எந்த விதக் குற்ற உணர்ச்சியும் இல்லாதவனாக அவளை விட்டு விலகிச் சென்று குளியலறைக்குள் நுழைய, இவளோ விழிகளில் கண்ணீர் மல்க அவன் முதுகையே வெறித்துப் பார்த்தாள்.

அவளுக்குத் தன்னை எண்ணியே பெரும் அவமானமாக இருந்தது. அவன் தொட்டதும் தன் உடல் அவனை ஏற்காது என்றுதான் நினைத்தாள். ஆனால் உள்ளே இருந்த எதோ ஒன்று அவன் தொடுகையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதோடு, அவளையும் அல்லவா தன்னிலை இழக்கச் செய்தது. அத்தனை பலவீனமானவளா அவள்?’ அதை எண்ணித் தன்மீதே ஆத்திரம் கொண்டவளாகச் சரிந்து படுத்தவள் விம்மி அழ, இங்கே குளியலறைக்குள் நுழைந்த உத்தியுக்தனுக்குச் சற்று நேரம் தேவைப்பட்டது நிஜத்தைத் தொடுவதற்கு.

நடந்து சென்று கை கழுவும் தொட்டியில் தன் கரங்களைப் பதித்தவன் சற்று நேரம் தலை குனிந்து நின்றிருந்தான்.

ஆத்திரத்துடன் அவளை இழுத்து அணைத்த போது உடலில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. அதுவும் அவளை நெருங்கும்போது ஜூலியட் கூட நினைவிலிருந்து மறைந்து போனாள்…

அன்றும் அவளை மிரட்டுவதற்காக என்றாலும், தொட்டபோது கொஞ்சம் சுயநினைவு இழந்து இருந்தான். ஏனோ காலம் முழுவதும் அவள் வேண்டும் என்கிற ஒரு வேகம், வெறி அதையும் மீறிய எதோ ஒரு தேவை அவனை அலைக்கழிக்க, இனி ஒரு போதும் அவளைத் தொடாது இருக்க முடியாது என்கிற நிஜமும் புரிய, கூடவே அவளைப் பழிவாங்கும் வழிமுறையும் கைவசப்பட அந்தக் கணம் முடிவுசெய்தான் அவளை மணப்பதென்று.

இதோ மணந்தும் விட்டான். வேண்டியது கையில் கிடைத்தும் விட்டது. ஆனால் பழிவாங்க எடுத்துக்கொண்ட முயற்சிதான் படு தோல்வியில் முடிந்துவிட்டது.

அவளைத் தொட்டதும் அனைத்துமே அவனுக்கு மறந்து போயிற்று. அங்கே அவனும் அவளும் மட்டும்தான் இன்ப உலகில் கோலோச்சி நின்றனரே அன்றி அவனுடைய கோப தாபங்கள் சுத்தமாய் தொலைந்து போயிற்று. அதை நினைக்க நினைக்க இவனால் தாழவே முடியவில்லை. எத்தனை பெரிய ஏமாற்றம் இவனுக்கு. ஒன்று நினைத்தால் நடப்பது வேறாக அல்லவா இருக்கிறது.

எனக்கு என்ன ஆகி விட்டது? நான் ஏன் இப்படி அவள் முன்னால் இளகிப் போகிறேன்… நெஞ்சம் தடுமாறிப் போகிறேன். அதுவும் அவளை முத்தமிட்டதும் அவனுடைய உலகம் வேறாக அல்லவா மலர்ந்து போனது.

இதோ இப்போது கூட, அவள் வேண்டும் என்று தேகம் ஏங்கித் தவிக்கிறதே. இந்த விநாடியே அவளை அணைத்து உணற்சிக் கொந்தளிப்பை அடக்கவேண்டும் என்கிற வேகம் பிறக்கிறதே. அவளைக் கையணைப்பில் வைத்து, அவளுக்கே உரித்தான அந்த வாசனையை நுகரவேண்டும் என்று நாசி ஏங்குகிறதே.. ஏன்? எதனால்…? பதிலில்லா புரியாக் கேள்விகள் அவனுக்குள்.

அப்போதுதான் அவனுக்குச் சடார் என்று ஒரு உண்மை நெற்றிப்பொட்டில் அடிப்பதுபோல உறைத்தது.

அன்று சமர்த்தியை அந்த விடுதியில் வைத்துப் பார்த்தபின் அவனால் ஜூலியட்டோடு உல்லாசமாக இருக்க முடியவில்லை. குறிப்பாக ஜூலியட்டை அணைக்கும்போதெல்லாம் அந்த இரு விழிகளும், அந்த விழிகளுக்குரியவளின் பிரத்தியேக மணமும் வந்து அவனைப் பெரிதும் இம்சிக்க, அந்த வாசனையை ஜூலியட்டிடம் தேடப் போய் கிடைக்காமல் அவளை அணைக்கும் எண்ணத்தைத் தொலைத்துப் படுக்கையை விட்டு எழுந்து சென்று இருக்கிறான்.

ஜூலியட்டும் ஏமாற்றத்துடன் அவனைப் புரியாமல் பார்க்க, அதற்கான பதில் கூடத் தெரியாமல் குழம்பி இருக்கிறான். இவன் விலகலை உணர்ந்து ஜுலியட் தானாகவே இவனை அணைக்க முயன்றபோது அவளை மறுத்துவிட்டு விலகிச் சென்றிருக்கிறான். அதுவே தொடரவும் ஜுலியட்டிற்குக் கூட இவன் மீது கோபம் வந்திருக்கிறது.

எந்த சங்கடங்களும் இல்லாமல் ஜூலியட் அவனை விட்டுப் பிரிய இவன் விலகலும் ஒரு காரணமாக இருக்கலாம். இவன் கூட அவள் பிரிந்ததும் கோபப்பட்டான் அன்றித் துடிக்கவில்லை. தன்னை நம்பாமல் அவள் விலகிவிட்டாள் என்று ஆத்திரப்பட்டுக் கவலைப்பட்டானே அன்றி, அவளிடம் சென்று சமாதானப்படுத்தவேண்டும் என்று அவன் சிறிதும் எண்ணவில்லை.

இத்தனைக்கும் அவள் பிறிதொரு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டதை அறிந்தபோது கூட பொறாமைப்படவில்லை. அந்த வாழ்க்கையைத் தடுக்கவுமில்லை. இவ்வளவு ஏன்? அவள் தொடங்கிய புதிய தொழிலுக்கு எந்தக் கிலேசமும் இன்றிப் பங்குதாரராகவும் சேர்ந்துகொண்டான். அதற்குப் பிறகு அவளை வேறு எந்தத் தப்பான கண்ணோட்டத்திலும் அவன் பாரக்கவில்லை. உண்மையான காதல் என்றால் அது எப்படிச் சாத்தியம்? என்று குழம்பியவனுக்குத் தன்மீதே ஆத்திரம் வந்தது.

இது என்ன அங்கிடுதத்திக் குணம். அங்கும் இல்லாமல் இங்குமில்லாமல். அவளால் தானே அவனுடைய வாழ்க்கை அதலபாதாளத்திற்குப் போனது. இவளை திருமணம் முடித்ததே பழிவாங்க தானே… அதை விடுத்து முட்டாள் போல என்ன யோசித்துக்கொண்டிருக்கிறேன்…? அவளைப் பழி வாங்கும் வெறி எனக்குள் இருந்ததால்தான் மறக்க முடியாமல் திணறி இருக்கிறேன். அதை தவிர வேறு எதுவுமில்லை. நிச்சயம் இல்லை…’ என்று தனக்குத் தானே சொன்னவன், ஆழ மூச்செடுத்தவாறு நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்தான்.

பாழாய்ப் போன மனம், மீண்டும் அவளிடம்தான் சென்றது. முதன் முதலாய் ஆண்மகனின் கரம் பட்டு வேதனையில், வலியில் துடித்துக் கூசிய உடல் நினைவுக்கு வர, ஏனோ இவனுடைய இதயமும் கசங்கியது. அதை உணர்ந்தவனாக ஆத்திரத்துடன் தன் பற்களைக் கடித்தவன் அந்த நினைவை உதறும் பொருட்டுத் தலையை உலுப்பிவிட்டு, எரிச்சலுடன் தலைமுடியைக் கோதியவாறு குளியலறையை விட்டு வெளியேறுவதற்காகக் கதவைத் திறக்க, மீண்டும் மனக்கண்ணில், அவன் கைபட்டு வலித்துச் சுருண்ட கன்னி உடல் நினைவுக்கு வந்தது. ஒரு கணம் தடுமாறியவாறு பற்களைக் கடித்தவனுக்கு, ஏனோ தானோ என்று வெளியேறவும் முடியவில்லை.

ஒரு வித தவிப்புடன் நின்றிருந்தவன் அதற்கு மேல் முடியாதவனாக வாய்க்குள் எதையோ முணுமுணுத்தவாறு குளிக்கும் தொட்டியை நெருங்கி அளவான சுடுநீரைத் திறந்துவிட்டு எரிச்சலுடன் அது நிரம்பும்வரை பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கே தன்னை எண்ணிப் பிடிக்கவில்லை. ஒரு பக்கம் அவளைப் பழிவாங்கவேண்டும் என்று துடிக்கும் மனம். மறு பக்கம் அவளுக்காய் இரங்கும் மனம். இரண்டுக்கும் மத்தியில் சில்லம்பலப் பட்டவன், இறுதியில் தன்னிடமே தோற்றவனாய் தொட்டியில் நீர் நிறைந்ததும், அதற்குள் ‘பாத் பாம்’மைப் போட, அது அவன் மனம் போலவே பொங்கிக்கொண்டு வெளியே வந்தது.

எரிச்சல் அடங்காமல் மீண்டும் படுக்கையறைக்கு வர, அங்கே அவன் அணைப்பில் கண்டிப்போன உடலைப் போர்வையால் மறைத்தவாறு சுருண்டு படுத்திருந்தாள் சமர்த்தி.

அதைக் கண்டதும் மேலும் இவனுக்குள் மாபெரும் குற்ற உணர்ச்சி. சற்று மென்மையாகக் கையாண்டிருக்கவேண்டுமோ… காலம் கடந்த ஞனோதையம். அவனையும் மீறித் தவிப்பு இதயத்தின் துடிப்பை அதிகரிக்கச் செய்ய, அவளை நோக்கிச் சென்றான்.

அவன் தன்னை நோக்கி வருவதை அவள் உணர்ந்திருந்தாள் போல. போர்வையை மேலும் தன்னோடு இறுக்கிக் கொள்ள, சட்டென்று அந்தப் போர்வையை இழுத்து எறிந்தவன் மறு கணம் அவளைக் கரங்களில் எந்தியிருந்தான் உத்தியுக்தன்.

சமர்த்திக்கு அச்சத்தில் உயிரே போய்விடும் போலத் தோன்றியது. நடுக்கத்தோடு அவனைப் பார்த்தவள்,

“லெட் மி கோ…” என்று திணற,

“ஷ்… ஸ்டே காம்…” என்றவாறு குளியலறைக்கு எடுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த தொட்டியில் அவளை எறிந்தும் எறியாமலும் போட, அவன் போட்ட வேகத்தில் ஒரு கணம் மூழ்கி மேலே வந்தாள் சமர்த்தி.

தண்ணீருக்குள் மூழ்கிய வேகத்தில் புரையேற, இருமியவள் பதறியவாறு எழ முயல. அவளுடைய தோள்களைப் பற்றி, மேலும் தண்ணீருக்குள் அமிழ்த்தியவன்,

“பத்து நிமிடங்களாவது அசையாமல் கிட…” என்றான் பற்களைக் கடித்தவாறு. அந்தக் குரலுக்கு மறுக்க முடியாது மீண்டும் தண்ணீருக்குள் அமர, ஏனோ இவனால் அவளுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை.

அவனையும் மீறி மெல்லிய குற்ற உணர்ச்சி அவனை ஆட்கொள்ள, வாய்க்குள் எதையோ கூறி முணுமுணுத்தவன், அடுத்த கணம், எழுந்து தன் அறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாற்றினான்.

அவன் சாற்றிய வேகத்தில் அது கொடுத்த ஒலியில் இவள் உடல் ஒரு கணம் அதிர்ந்து நின்றது.

படபடத்த நெஞ்சைச் சமப்படுத்தும் நோக்கில் மார்பை அழுத்திக் கொடுத்தவளுக்கு எதற்கு அவளைத் தூக்கிவந்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டான் என்று சத்தியமாகப் புரியவில்லை. ஆனாலும் அவனால் காயப்பட்ட உடலுக்கு அந்த வெந்நீர் மிகப் பெரும் இதமாக இருக்க, அவன் கொடுத்த வலியை மறந்தவளாகச் சற்று நேரம் விழிகளை மூடி அப்படியே கிடந்தாள். ஆனாலும் கண்ணீர் வழிவது மட்டும் நிற்கவில்லை.

என்ன மாதிரி மனிதன் இவன். ஒரு பெண்ணின் விருப்பத்தைக் கூடக் கேட்காமல் தொட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல்… இது கூட ஒரு வகையில் கற்பழிப்புதானே… என்று ஆத்திரத்துடன் எண்ணினாலும், அதையும் மீறி, அவன் தொட்ட போது குழைந்த தன் உடலை எண்ணிப் பெரும் அவமானமும் கொண்டாள் சமர்த்தி.

இது வரை எந்த ஆணுடைய ஸ்பரிசமும் அறியாதவள். எந்த ஆணுக்கும் அருகே நெருங்காதவள்… முதன் முறையாக அவளை இழுத்து அணைத்தவனும் அவன்தான், அவளை நிலையிழக்கச் செய்ததும் அவன்தான்.

மீண்டும் அழுகை வர, சற்று நேரம் அப்படியே கிடந்தவள் உடல் குளிரத் தொடங்க சுய நினைவு பெற்றவளாக எழுந்தாள்.

எழுந்தவளின் விம்பம் அங்கிருந்த கண்ணாடியில் விழ, அது தான்தான் என்று அறியவே அவளுக்குச் சற்று நேரம் பிடித்தது.

தலை கலைந்து கண்கள் சிவந்து, முகம் அதைத்து அதையும் மீறி அவள் உடலில் தெரிந்த கண்டல்களும், கீறல்களும் அவனுடைய ஆவேசக் கோபத்தை வெளிப்படுத்த உடல் குலுங்கியது.

காதல் கொண்டு மனந்திருந்தால் அதுவே காதலின் அடையாளங்களாகத் தெரிந்திருக்கும். ஆனால் அவளுக்கோ அவனுடைய பழி உணர்ச்சியில் கீறப்பட்ட வடுவாகவே தோன்ற தேகம் மேலும் நொந்துபோனது. எத்தனை நாட்களுக்கு இத்தகைய வாழ்க்கையை அனுபவிக்கப்போகிறாள். இந்த ஒரு நாளே அவளுக்கு மூச்சு முட்டுவதுபோல இருக்கிறதே… இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வேதனை… நினைக்கும்போதே இயலாமையில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

சிரமப்பட்டுத் தன்னை நிலைப்படுத்தியவளாகக் கிடைத்த துவாயைக்கொண்டு உடலைத் துடைத்தவள் அங்கிருந்த பாத்ரோப்பை அணிந்தவாறு வெளியே வர, அவள் வரும் வரைக்கும் காத்திருந்தானோ? திடீர் என்று அவனுடைய அறைக் கதவு திறந்தது.

திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவனோ இவள் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காது, தன் கரத்திலிருந்த நிகழ்ப்பதிவு சாதனத்தைப் படுக்கையை நோக்கி விட்டெறிந்துவிட்டு இவளைப் பார்த்து,

“நான் சொன்ன சொல் தவறுபவன் அல்ல… அன்று உன்னை இதில்தான் நிகழ்பதிவு செய்தேன்… இனி இது தேவைப்படாது. நீயே அழித்துவிடு…” என்றவன், தன் அறைக்குத் திரும்பினான். மீண்டும் என்ன நினைத்தானோ, நின்று திரும்பி,

“இதை அழித்தபின், சாட்சிகள் இல்லைதானே என்று உன் ஆட்டத்திற்கு ஆடலாம் என்று நினைக்காதே.. என் கரங்கள் மிக மிக நீளமானவை.. அதில் உன் அண்ணன் அண்ணி பொசுங்கிப் போகாமல் இருப்பது உன் செயற்பாட்டில் தான் இருக்கிறது…” என்று விட்டு உள்ளே சென்று கதவைச் சாத்த, படுக்கையை நெருங்கியவள் நடுங்கும் கரங்கள் கொண்டு அந்த நிகழ்பதிவு சாதனத்தை எடுத்தாள்.

எச்சியைக் கூட்டி விழுங்கியவாறு அவசரமாக ஒளிப்பதிவை ஓடவிட, அதில் அவனுடைய பழைய ஒரு சில நிகழ்பதிவுகளைத் தவிர்த்து அன்று நடந்த சம்பவத்தைத் தேட, அந்த நிகழ் பதிவுக்கு கருவி அன்று நடந்த அத்தனையையும் வஞ்சகமில்லாது தனக்குள் சேகரித்திருந்தது. ஒரு கட்டத்திற்குமேல் அதைப் பார்க்க முடியாதவளாக அத்தனையையும் அழித்தபின்தான் அவளுக்குப் பெரும் நிம்மதியே தோன்றியது.

மீண்டும் கருவியை அணைத்துக் கட்டிலில் போட்டவள், படுக்கையில் தொப்பென்று அமர்ந்தாள்.

மனமோ எங்கெங்கோ சுழன்று வந்தது. முன்பு, அவள் செய்த தவற்றுக்குப் பிராயச்சித்தமாகத் தண்டனையை அனுபவித்துவிடலாம் என்றுதான் நினைத்தாள். நினைவுகளில் செயல்கள் மிகச் சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறையில் அதை அனுபவிக்கும்போதுதானே அதன் சிரமம் புரியும். அப்போது சுலபமாக நினைத்தவளுக்கு செயல்படுத்துவதில் உள்ள சிரமம் புரிய திணறிப் போனாள் அந்தப் பேதை.

நிச்சயமாக அவளால் இன்றைய இரவைப் போல் இன்னொரு இரவை சமாளிக்க முடியும் போலத் தோன்றவில்லை. முதல் உறவு வலி நிறைந்தது என்று அறிந்திருக்கிறாள்தான். ஆனால் இத்தனை வலியைக் கொடுக்கும் என்று அவள் கனவிலும் எண்ணவில்லையே. அது சரி… காதலித்து மணந்திருந்தாலோ, இல்லை விரும்பி மணந்து இருந்தாலோ அந்த வலிகூடச் சுகமானதாக இருந்து இருக்கும். இது பழிவெறிக்காக மணந்த திருமணமாயிற்றே. எந்த இன்பத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் அது கசக்கத்தானே செய்யும்.

இனி என்ன செய்யப்போகிறாள் பேசாமல் கண்காணாத தேசத்திற்கு ஓடிவிடலாமா என்ன? அதுதான் அவன் கொடுத்த ஒளிப்பதிவை அழித்தாகி விட்டதே. இனியும் அதை வைத்து அவளை மிரட்ட முடியாது… ஆனால்…” என்று எண்ணியவளின் கண் முன்னால் புஷ்பாவும் தயாளனும் வந்து நிற்கக் கண்களில் மீண்டும் கண்ணீர் மழை.

அவள் போய்விடலாம்தான். ஆனால் அவளை உயிராய் வளர்த்தவர்கள் வாழ்க்கை… அவர்களை நினைத்ததும் அதுவரை அழுத்தியிருந்த அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. அவளுக்கு எப்படி இந்தச் சிக்கலிலிருந்து வெளியே வருவது என்று சுத்தமாகத் தெரியவில்லை. ஏனோ வருங்காலம் மிகப் பயங்கரமாகத் தோன்றியது. உலகமே அன்னியமாகிப்போன உணர்வில் பெரிதும் தவித்துப் போனாள் சமர்த்தி. தவறு செய்யும் போது தெரிவதில்லை அதன் விழைவு என்னவென்று. தெரிந்தபின் அதிலிருந்து மீளும் வழியும் புரிவதில்லை.

சோர்வுடன் படுக்கையில் விழுந்தவளின் இடையை எதுவோ உறுத்த, கரங்களைச் செலுத்தி அதை எடுத்துப் பார்த்தாள். நிகழ்பதிவுக் கருவி. அதைக் கண்டதும் ஆத்திரம் வர, அதைத் தூக்கி அங்கிருந்த மேசையில் கிட்டத்தட்ட எறிந்துவிட்டு மறுபக்கமாகச் சரிந்து படுக்க வலியில் உயிர் போனது. பற்களைக் கடித்து விழிகளை முடிச் சற்று நேரம் கிடந்தாலும் தூக்கம் அவள் பக்கம் வருவதாகவேயில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அதற்கு மேல் படுக்கையில் கிடக்க முடியாதவளாக எழுந்து சப்பனமிட்டு அமர்ந்தாள்.

நிச்சயமாக இனி அவளால் தூங்க முடியாது. சோர்வுடன் திரும்பியவளின் விழிகள் சற்றுத் தள்ளிப் போட்டிருந்த நிகழ்படக் கருவி மீது விழ, அதில் ஏற்கெனவே சில பதிவுகள் இருந்தது நினைவுக்கு வந்தது. சற்றும் யோசிக்காமல் அதை எடுத்து பதிவுகளைப் பார்க்கத் தொடங்கினாள்.

அது அவனும் அவனுடைய காதலி ஜூலியட்டினுடையதுமான நிகழ் பதிவுகள்.

ஜூலியட் அழகி என்று தெரியும். ஆனால் இத்தனை அழகி என்று இப்போதுதான் சமர்த்திக்குத் தெரிந்தது. இருக்காதா பின்னே. இவளைக் காதலியாக அடையவென்றே கனடாவில் பணம் படைத்தவர்களுக்கிடையில் போட்டி நடந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறாள்… அது உண்மையென்று அவள் உடல் லாவண்யங்களைப் பார்க்கும்போதே அப்பட்டமாகத் தெரிந்தது.

அந்த நிகழ் பதிவுகளில் முக்கால்வாசியிலும் ஜூலியட் நீச்சலுடையில்தான் வலம் வந்து கொண்டிருந்தாள். அது அவளுடைய இடை வளைவுகளையும், மார்புகளின் பரிணாமத்தையும், தொடைகளின் நளினத்தையும் அப்பட்டமாகப் படம் விரித்துக் காட்டிக்கொண்டிருந்தன.

அதைப் பார்க்கும்போதே உத்தியுக்தன் அவள் மீது பைத்தியமாகத் திரிந்ததில் எந்தத் தவறுமில்லை என்பது புரிந்தது. அந்தளவுக்குக் கடைந்தெடுத்த நவீனச் சிலையாக இருந்தாள் அவள். மிக மிக உயரமானவள். வெற்றுக்காலில் நிற்கும்போதே கிட்டத்தட்ட உத்தியுக்தனின் தோள்வரைக்கும் வந்திருந்தாள். இல்லையென்றால் பிரபல மாடல் அழகியாக உலகம் முழுவதும் வலம் வந்திருக்க முடியுமா என்ன?

அவளுடைய விழிகளிலும் காதல் இருப்பது போலத்தான் தெரிந்தது. ஜூலியட்டை விட்டு உத்தியுக்தனின் மீது தன் பார்வையைத் திருப்பிய சமர்த்திக்குத் தன்னுடைய விழிகளை சிமிட்ட முடியவில்லை. அது உண்மையாகவே உத்தியுக்தன் தானா? இவனால் இப்படியெல்லாம் சிரிக்கத் தெரியுமா? குதுகலிக்கத் தெரியுமா? குழந்தைபோலத் துள்ளித் திரிய முடியுமா? அத்தனை ஒளிப்பதிவுகளிலும் முகம் முழுக்கச் சிரிப்புடன் இவள் தன்னவள் என்கிற இறுமாப்புடன் ஜூலியட்டை அணைத்தவாறு காதல் கடலில் நீச்சலடித்துக்கொண்டிருப்பவன் உத்தியுக்தன்தானா?

கடவுளே எத்தனை அழகாக இருக்கிறான். அதுவும் அவன் சிரிக்கும்போது அவனுடைய கம்பீரம் இன்னும் அதிகமாக அல்லவா தெரிகிறது. தன்னையும் மறந்து சமர்த்தி உத்தியுக்தனை ரசிக்கத் தொடங்க, அதைக்கூட உணராமல் அடுத்த பதிவைப் பார்த்தாள்.

ஒரு பதிவில் கடற்கரைப் பகுதியில் இவன் அரைக்கால் சட்டை அணிந்தவாறு தினவெடுத்த உடலை அப்பட்டமாகக் கட்டியவாறு வெற்று மேலுடன் எங்கோ நின்று குளிர்பானம் குடித்துக் கொண்டிருக்க, திடீர் என்று அவன் மீது தண்ணீர் ஊற்றப் படுகிறது,

“ஹே… ஜூ… ஸ்டாப் இட்…” என்றவாறு ஈரம் வடிந்த உடலைத் துடைத்து விட்டவாறு அவளை நோக்கிப் பாய்கிறான் போலும் ஒலிப்பதிவு சாதனம், கீழே விழுந்து மணலைப் படம்பிடித்துக் கொண்டிருக்க அந்த ஜூலியட்டின் கலகலச் சிரிப்பு மட்டும் அதில் பதியப்பட்டிருந்தது. அடுத்தது கடலில் ஜூலியட் குளிக்கும் போது. நீச்சலுடையில் அழகிய உடல் மொத்தமாய்த் தெரிய இவனைப் பார்த்துச் சிரித்தவாறு போஸ் கொடுக்கிறாள். அடுத்ததில் உத்தியுக்தன் கடலில் நீந்தும் காட்சி… அதைப் பார்க்கும் போதே ஜூலியட் மிக மிக ரசித்துத்தான் எடுத்திருக்கிறாள் என்பது தெரிந்தது.

அடுத்ததில் ஒரு கடையில் உத்தியுக்தனின் திறந்த மார்போடு அமர்ந்திருக்கிறான். அடுத்து உடல் முழுவதும் பச்சை குத்திய ஒரு மொட்டைத் தலை வெள்ளையன், அவன் மார்பில் பச்சை குத்த, அது கொடுத்த வலியைப் பற்களைக் கடித்து அடக்கிக்கொண்டிருக்கும் அவனைப் படம்பிடித்துக் கொண்டிருக்கிறாள் ஜூலியட். இறுதியாக அவன் மார்பில் ஜொலித்தது அந்த ஜூலியட்டின் திரு உருவம். அதைக் கண்டதும் குதூகலிக்கிறாள் அவள். அவனோ தன் சுட்டுவிரலையும் நடு விரலையும் சேர்த்து அந்தப் படத்தில் பதித்துப் பின் தன் உதட்டில் வைத்து எடுக்க, அடுத்து அந்த ஜூலியட்டின் உதடுகள் அவனுடைய உதட்டை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள. ஏனோ சமர்த்தியின் மேல் பற்கள் கீழ் உதடுகளை வலிக்குமாறு கடித்து நின்றன. கூடவே கன்னத்தில் கண்ணீர் பொலபொலவென்று கொட்டவும் தொடங்கியது.

அடுத்துச் சமையலறையில் உத்தியுக்தன் எதையே மின் அடுப்பில் செய்துகொண்டிருக்கிறான். அதிலும் வெற்று மேலுடன்தான்…

“உத்… லுக் அட் ஹியர்…” என்று அந்த ஜுலியட் கூறுகிறாள்… இவன் காரியத்தில் கண்ணாக இருந்தவாறு இவளைப் பார்த்து தன் வரிசைப் பற்கள் தெரியச் சிரிக்கிறான். திடீர் என்று அவன் பின் புறமாக நின்று அணைத்தவாறு இருவரையும் படம்பிடித்திருந்தாள். அந்த ஜூலியட் அணிந்து இருந்தது ஒரு ஆணுடைய மேல் சட்டை. அது அவனுடையதாகத்தான் இருக்கவேண்டும்.

எத்தனை மகிழ்ச்சியாக, நிறைவாக இருந்து இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை இவள் குலைத்துவிட்டாளே. நினைக்கும் போது குற்ற உணர்ச்சி மேலும் அழுத்தியது சமர்த்திக்கு.

ஆனாலும் அந்த ஜூலியட் மீது ஒரு வித கோபம் எழவே செய்தது. இத்தனை காலம் அவனோடு ஒன்றாக வாழ்ந்தவளுக்கு அவனைப் பற்றித் தெரியாமல் போனதா? யாரோ ஒருவர் போட்ட செய்தி போதுமானதாகப் போனதா இவனை விட்டுப் பிரிய… அப்படிச் சுலபமாகப் பிரியக் கூடிய காதல் என்றால் அது எப்படி உண்மையான காதலாக இருக்கமுடியும்? ஆத்திரத்துடன் அந்த ஒளிப்பதிவை அணைத்து ஒரு ஓரமாகப் போட்டு விட்டு மல்லாக்காகப் படுத்தவளுக்கு மீண்டும் மீண்டும் உத்தியுக்தனின் சிரித்த முகம்தான் மனதில் வந்து நின்றது.

அவளால் அவனுக்கு எத்தனை பெரும் வேதனை. இழப்பு… அவளுக்கு மட்டும் இறந்தகாலத்தை நிகழ்காலமாக்கும் சக்தி கிடைத்தால்… நடக்க முடியாததைக் கற்பனையில் மட்டும்தானே கண்டு கலங்கித் தவிக்க முடியும்.

“தெய்வமே… செய்த தவற்றைத் திருத்த முடியாது… ஆனால் அதனால் ஏற்பட்ட தவறை மாற்றி அமைக்கும் சக்தியைத் தா…” என்று மனதார வேண்டியவாறே விழிகளை மூடும்போது நேரம் மூன்று மணியையும் கடந்துவிட்டிருந்தது.

What’s your Reaction?
+1
27
+1
6
+1
1
+1
0
+1
5
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!