Thu. Sep 19th, 2024

முள்ளில் கசிந்திடும் தேன்துளி பாகம் 1-2

2

 

தன் அண்ணனிடம் இந்த நல்ல செய்தியைக் கூறுவதற்காகத் துள்ளிக்கொண்டு வந்த சமர்த்தியின் காதில் புஷ்பா தயாளனைக் கடிந்துகொண்டிருப்பது விழுந்தது. கூடவே இவளுடைய பெயரும் அதில் அடிபட, சற்று நிதானித்து அவர்கள், என்ன பேசுகிறார்கள் என்று கேட்க முற்பட்டாள்.

“என்ன தயா… உங்களுக்குப் பொறுப்பே கிடையாதா… நீங்கள் பாட்டிற்கு லண்டனுக்கு எல்லோரையும் அழைத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறீர்கள்… இப்போது நாம் இருக்கும் நிலைக்கு இந்த வெளிநாட்டுப் பயணம் அவசியமா?” என்று குரலை உயர்த்தாமல் கடிய,

“ப்ச்… என்னடி… நமக்கு எப்போதுதான் பிரச்சனை இல்லாமல் இருந்திருக்கிறது புதிதாக முளைப்பதற்கு? நாம் இப்போது போகாமல் பொல்லுப் பிடிக்கும் காலத்திலா போய்வர முடியும். தவிர குழந்தைகள் நம்மோடு இருக்கும் போதுதானே எல்லோருமாகப் போய்வரலாம்…” என்று மறுக்கப் புஷ்பாவோ,

“கொஞ்சமாவது யோசித்துப் பேச மாட்டீர்களா? ஏற்கெனவே நம் குடும்ப வருமானம் போதாமல் கடன் எடுத்து இரண்டு லட்சத்திற்கும் மேல் ஏற்றியாவிட்டது. போதாததற்கு வீட்டை வங்கியில் அடைமானம் வைத்தாகிவிட்டது. நமக்கு ஆறு குழந்தைகள் நினைவிருக்கிறது அல்லவா? சமர்த்தி படிப்பை முடித்ததும், அவளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்கவேண்டும். அதற்குப் பணம் தேவை… விதற்பரையும் பல்கலைக் கழகம் போகப் போகிறாள். அதற்கு வேறு தங்கும் செலவு, சாப்பாடு என்று நிறைய செலவு வரப்போகிறது… அப்படியிருக்கையில் நீங்கள் பணத்தை இப்படிக் கரியாக்க நினைக்கிறீர்களே.. இங்கிருந்து லண்டனுக்கு எட்டுப்பேரும் செல்வதற்கு, குறைந்தது இருபதாயிரம் டால்களாவது வேண்டாமா. இனி அங்கேயும் செலவு இருக்கிறதே… எப்போதுதான் பொறுப்போடு நடக்கப்போகிறீர்கள்”

“ப்ச்… என்னடி நீ… பிறக்கும் போது எதைக் கொண்டு வந்தோம் ஐயோ ஐயோ என்று அழ…! போகும் போதும் எதையும் கொண்டுபோகப் போவதில்லை… இடைப்பட்ட இந்த நேரத்தில் எதற்காகப் பணம் பணம் என்று அழுகிறாய்…? இதோ பார்! குழந்தைகள் நம்மைக் கேட்டுப் பிறக்கவில்லை. நாம்தான் அவர்களைப் பெற்றோம். அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் கடமையும் நமக்கு இருக்கிறதே…! அன்று சத்தியும் விதற்பரைவும் பேசிக்கொண்டதைக் கேட்டேன்… இருவருக்கும் லண்டன் அரண்மனையைப் பார்க்க ஆசையாக இருக்கிறதாம். பாவம் குழந்தைகள்… இதுவரை ஆசைப்பட்டு நம்மிடம் எதுவும் கேட்டதில்லை. அதுதான் அவர்களின் ஆசையை நிறைவு செய்ய முடிவு செய்துவிட்டேன்… இதோ பார் புஷ்… பணம் இன்று போகும் நாளை வரும்… அந்தக் கறுமத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் நம்முடைய குழந்தைகளின் மகிழ்ச்சியை மீளப் பெற முடியுமா சொல்…” என்று கூற, அதைக் கேட்டுக்கொண்டிருந்த சமர்த்தியின் கண்களில் குளம் கட்டியது.

அன்றிலிருந்து இன்றுவரை அவளுக்காகவே பார்த்துப் பார்த்துச் செய்யும் அந்த அன்பு உள்ளங்களுக்காக என்ன செய்யப் போகிறாள். இந்த நன்றிக்கடனை எப்படித் தீர்த்து வைக்கப் போகிறாள்? நெஞ்சம் கனத்துப்பேனது.

தன் அண்ணனிடம் சொல்ல வந்ததை விடுத்துத் திரும்பியவளுக்குப் பசித்தது.

இது ஒன்று, பசி வந்தால் இவளுக்குப் பத்தும் பறந்து போகும். உடனே சமையலறை சென்றவள், ஒரு தட்டில் நொறுக்குத் தீனியை எடுத்து வைத்துக்கொண்டு, தன் அறைக்கு வந்தவள் கணினிக்கு முன்பாக வந்தமர்ந்தாள்.

அவர்கள் கொடுத்த வேலையை மட்டும் திறம்பட முடித்தால் கணிசமான தொகை கிடைக்கும். அதை அண்ணாவிடம் கொடுத்தால் அவர் சுமை குறையுமே. முடிவு செய்தவளாக, நொறுக்குத் தீனியை உண்டவாறே, உத்தியுக்தனைப் பற்றிய செய்திகளைச் சேகரிப்பதில் தீயாக வேலை செய்தாள். அவளுக்குக் கிடைத்த தகவல்கள் அனைத்தும், அனைவரும் அறிந்த கதைதான்.

தாயின் பெயர் ரதி. தந்தை ஆதித்தன். இருவருமே அமெரிக்காவில் தொழில் செய்கிறார்கள். அவ்வியக்தன் என்று அவன்கூடப் பிறந்த தம்பி ஒருவன் உண்டு. அவன் அவுஸ்திரேலியாவில் சொந்தமாகத் தொழில் செய்கிறான். இதைத்தவிர இவனுக்கு ஒரு பெண் தோழியும் உண்டு. ஜூலியட். உலகின் பிரபல மாடல் அழகி. அவள் சொந்தமாக ஆடை வடிவமைப்புத் தொழிற்சாலை மற்றும் இதர தொழில்களும் வைத்திருக்கிறாள். விரைவாகவே இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.

அதைத்தவிர, அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி இம்மிகூட அவளால் அறிய முடியவில்லை. அவளால் மட்டுமில்லை யாராலும் அறிய முடிந்திருக்கவில்லை.

இதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

கட்டுரைக்குத் தலைப்புப் போட்டால் கூட அது சுண்டியிழுக்கும் தலைப்பு போல இருக்க வேண்டாமா? அதற்குச் சுவாரசியமாகச் செய்தி வேண்டாமா… எப்போதும் பொதுச் செய்திகளை விட அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த செய்திகள்தானே வாசகர்களைக் கவர்ந்திழுக்கும்.

மீண்டும் தூண்டித் துருவத் தொடங்கினாள். அவள் மட்டும் பெரிய அப்பாடக்கரா? இவள் தேடுகிறாள் என்றதும் உடன் கரங்களில் கிடைத்து விட. ம்கூம் மருந்துக்கும் எந்தத் தனிப்பட்ட தகவல்களும் கிடைக்கவில்லை.

ஒரு பேட்டியில்கூட அவன் தாய் தந்தை பற்றிக் கூறுமாறு கேட்டபோது, நாகரீகமாகவே அந்தப் பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டான் உத்தியுக்தன். இன்னொரு பேட்டியில் தன் குடும்பத்தின் பாதுகாப்புக் கருதி, அவர்களைப் பற்றிய செய்தியைக் கூற விரும்பவில்லை என்று கூறியிருந்தான்.

பில்கேட்ஸ் கூட இந்தளவு தனிப்பட்ட வாழ்க்கையை மறைமுகமாக வைத்திருக்கவில்லை என்று பெரும் எரிச்சலே தோன்றியது.

இதில் சமர்த்தி ஒன்றை மறந்துவிட்டாள். ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதது தனிமனித சுதந்திரம். அவனுக்கான தனிப்பட்ட இடம். அதை மதிக்காவிட்டாலும், அதற்குரிய உரிமையைக் கொடுப்பது மிக மிக அவசியம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருத்தனுக்கும் தன் இஷ்டப்படி, மனசுப்படி வாழச் சுதந்திரம் உண்டு. அந்தச் சுதந்திரத்தில் தலையிடுவது என்பது, படுக்கையில் கூடும் ஆண் பெண்ணை ஒளிந்திருந்து பார்த்து இரசிப்பதற்கு ஒப்பாகும். அதுவும் கொஞ்சம் பிரபலமானவர்கள் என்றால் போதும். வெளியே தலைகூடக் காட்ட முடியாது. அந்தளவுக்குப் பத்திரிகையாளர்களும், செய்தியாளர்களும் குடைந்தெடுத்து விடுவார்கள்.

அவ்வாறு செய்யும்போது, அவனுடைய சுதந்திரத்தை அது சிதைக்கும் என்பதை ஊடகங்கள் சிந்திப்பது இல்லை. தீய செயலை அம்பலப்படுத்துவதில் தப்பில்லை. அதையே சாதாரண மனித வாழ்வில் மூக்கை நுழைத்து அவன் வாழ்க்கையை சிதைத்தால்.

உதாரணமாக வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பின்னாலும் இந்த ஊடகங்கள்தானே இருந்தன. ஒரு தவறான அரசியல்வாதியை வாழ வைக்கவும் இந்த ஊடகங்களால் முடியும் நல்ல அரசியல்வாதிகளை வீழ்த்தவும் ஊடகத்தால் முடியும். அதே வேளை கெட்ட சாமியார்களை இனம் காட்டவும் முடியும், கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் போட்டு அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கவும் ஊடகங்களால் முடியும். குடும்பங்களைப் பிரிக்கவும் அதற்குத் தெரியும், தேவைப்பட்டால் சேர்த்து வைக்கவும் தெரியும். இலவசமாக விவாவகரத்து வாங்கிக் கொடுக்கவும் தெரியும், திருமணமாகாது நட்போடு இருக்கும் பிரபலங்களுக்குத் திருமணம் செய்த வைக்கவும் தெரியும். பேசினாலும் அது தப்பென்று சொல்லும். பேசவில்லை என்றாலும் திட்டித் தீர்க்கும். முன்பு நல்லவனாக இருந்தவன், பின்னாளில் கெட்டவனாகவும் மாறமுடியும். முன்பு கெட்டவனாக இருந்தவன் திடீர் என்று நல்லவனாகவும் மாற முடியும். இப்படி ஊடகங்களால் முடிந்தது முடியாதது என்று எதுவுமில்லை. அது கை நுழைக்க வேண்டிய இடத்திலும் நுழையும், நுழையக் கூடாத இடத்திலும் நுழைந்து சதிராடும்.

சமர்த்தியும் எப்படியாவது அவனைப் பற்றிய சுவாரசிய தகவல்களை அறிந்தேயாகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற கொக்காக இரவு பகல் பார்க்காது தீயாக வேலை செய்தாள்.

அவனுடன் நேர்காணலுக்கு அனுமதி கேட்டாள். இவள் கேட்டதும் கொடுத்துவிட சாதாரணமான ஆளா அவன். பொது மேடையில் பேசும்போது நேர்காணலுக்கு வரச்சொல்லி அறிவுறுத்தப்பட்டது. பலமுறை அதற்கு முயன்றும் அனுமதி வழங்காது போக, அவளுடைய பொறுமை மெல்ல மெல்லக் குறையலாயிற்று.

ஆனால் அவளுடைய முயற்சி, அந்தத் தனி மனித வாழ்க்கையை அம்பலப்படுத்திவிடும் என்றோ, அது அவனுடைய மன அமைதியைக் குலைத்து விடும் என்றோ அவள் சிறிதும் எண்ணவில்லை. மாறாகத் தன்னால் முடியும் என்று நிறுவும் வலிமையும், யாரும் வெளியிடாத தகவல்கள் வெளியிட்டால் பெயர் கிடைக்கும் என்கிற ஆவலும், தேவைக்குக் கிடைக்கும் பணமும், அவள் மூளையை சற்று மழுங்கடித்து என்றுதான் சொல்லவேண்டும்.

அவன் சார்ந்த சுவாரசியமான சின்னப் பொறி… அதுவும் விவாதத்திற்குரிய விவகாரமான சிறிய பொறி… கிடைத்தாலும் போதும். அவள் பெயர் நிலைத்து விடும். ஆனால் எப்படி… எங்கே…? தலைவலிதான் வந்தது சமர்த்திக்கு.

இதற்கிடையில் இங்கிலாந்தும் போகவேண்டிய நிலை. விடுப்பும் எடுத்தாயிற்று. ஆனால் கட்டுரை மட்டும் குறித்த திகதிக்குக் கொடுக்க முடியவில்லை. எப்படியோ தலைமையாசிரியரைச் சமாளிக்க வேண்டுமே. தனக்குத் தெரிந்த தகவல்களைத் திரட்டி ஒரு கட்டுரை வடிவில் தலைமையாசிரியரிடம் கொடுத்தபோது, அவளைக் கீழ்க்கண்ணால் பார்த்து, இதற்காகத்தானா இந்தப் பொறுப்பு உன்னிடம் கொடுக்கப்பட்டது? என்று எரிச்சலோடு பார்க்க இவளால் அசடுதான் வழிய முடிந்தது.

இவளும் என்னதான் செய்வாள். என்னதான் தேடியும் சுவாரசியமாக எந்தக் கறுமமும் சிக்கவில்லையே.

நெளிந்தவளை எரிச்சலுடன் பார்த்தவர்,

“போ… போய்ச் சமையல் குறிப்புகள் எழுதிப் போடு… நீ அதற்குத்தான் லாயக்கு…” என்று கூறி அனுப்பிவிட, இவளுக்குச் சுள்ளென்று வந்தது.

அவள் வைத்துக்கொண்டா கொடுக்க மாட்டேன் என்கிறாள். எரிச்சலுடன் வீட்டிற்கு வந்தவளுக்கு ஏனோ கோபம் கோபமாக வந்தது. ஆனால் கோப்பட்டு என்ன பயன்? காரியம் நடக்கவில்லையே.

எது எப்படியோ. அப்போதைக்கு உத்தி யுக்தனின் தலைவலியை ஓரமாகப் போட்டுவிட்டுக் குடும்பத்தோடு லண்டன் பயணமானாள் சமர்த்தி.

புஷ்பாவின் ஒன்றுவிட்ட சகோதரி லண்டனில் இருந்ததால், சந்தோஷமாகவே தயாளன் குடும்பம் பயணித்தது.

புஷ்பாவின் சகோதரி அம்பிகா இவர்களுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு, எல்லா இடங்களுக்கும் சந்தோஷமாகவே அழைத்துச் சென்று வர, ஒரு கிழமை எப்படிப் பறந்தது என்று கூடத் தெரிய வில்லை.

அன்று இங்கிலாந்து அரசியின் அரண்மனையைக் காட்ட அழைத்துச் சென்றார் அம்பிகா.

ஆர்வத்துடன் சுத்திவரப் பார்த்துக்கொண்டு வரும்போதுதான், எதிர்த்தாற் போல், ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

முதலில் சர்வ சாதாரணமாகத்தான் பார்த்தாள். பின்பு எதுவோ உறுத்த உற்றுப் பார்த்தாள். பார்த்தவளின் விழிகள் வியப்பில் மலர்ந்தன. கூடவே மெல்லிய அதிர்ச்சியும் பிறந்தது. அவள் சரியாகத்தான் பார்க்கிறாளா என்ன? மீண்டும் உற்றுப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. அது அவளுடைய விருப்பத்திற்குரிய ஒன்டாரியோ மாகாணத்தின் முதல்வராகப் போட்டியிட இருக்கும் உத்தியுக்தன்தான். அவன் எப்படி இங்கே. குதூகலத்தோடு அவனை நெருங்க முற்படுகையில் எங்கிருந்தோ ஒருத்தி கையில் ஐஸ்க்ரீமை ஏந்தியவாறு அவனை நோக்கி வந்து, அணைத்தாற் போல நிற்க, இவள்தான் தடை போட்டதுபோல அப்படியே நின்றுவிட்டாள்.

அந்த உத்தியுக்தனும், ஓடி வந்தவளின் இடை பற்றி, அவள் இதழோடு இதழ் பதித்து முத்தமிட, ஏனோ தனக்கு முத்தமிட்டதுபோல விதிர் விதிர்த்துப் போனாள் சமர்த்தி.

அதோடு விட்டானா. அவளுடைய இடையைப் பற்றித் தன்னோடு இறுக்கியவாறு அவளுடைய காதுக்குள் எதையோ கூறிச் சிரிக்க, அந்தப் பெண்ணும் கெக்கே பிக்கே என்று சிரித்தவாறு அவனோடு இழுபட்டு நடக்கத் தொடங்கினாள்.

இவள்தான் அதிர்ச்சியில் அசையக் கூட மறந்தவளாக அப்படியே நின்றிருந்தாள்.

அடப் பாவி, அங்கே நல்லவன் போல வேடமிட்டு மக்களை ஏமாற்றிவிட்டு, இங்கே இன்னொரு வாழ்க்கை வாழ்கிறாயா? என்று எண்ணிவளுக்கு ஏனோ அந்த உத்தமனையும், இவனையும் ஒருத்தன் என்று நினைக்கவே முடியிவல்லை.

ஒருவேளை அவள்தான் தவறாக நினைக்கிறாளா? சந்தேகம் தோன்ற, வேகமாக அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள்.

தன் கண்கள் ஒன்றும் பொய் சொல்லவில்லை என்பதை உறுதிப்படுத்தியபோது, அவளால் அதை சற்றும் நம்ப முடியவில்லை. நிச்சயமாக அவனுடைய அணைப்பில் இருப்பது அவனுடைய காதலி ஜூலியட் இல்லை. அந்த மாடல் அழகி பற்றி உலகமே அறியுமே. தவிர ஜூலியட் இத்தாலிய நாட்டுப் பெண். இவள் சீனத்தி போலத் தோன்றினாள்.

அடக் கடவுளே, அவனுடைய காதலிக்கு மட்டுமல்ல, அவனை நம்பியிருக்கும் நாட்டு மக்களுக்குமல்லவா துரோகம் செய்கிறான். பற்றிக்கொண்டு வந்தது சமர்த்திக்கு. இவனையா நல்லவன் என்று நினைத்தோம்? படுபாவி…’ என்று எண்ணியவளுக்குப் பளிச்சென்று புத்தியில் ஒன்று உறைத்தது.

இது… இதுதானே அவளுக்கும் வேண்டும். சுவாரசியமான பதிவுகள். இவனுடைய இரட்டை வாழ்க்கையை அம்பலப்படுத்தியதாகவும் ஆகிவிடும், அவள் எதிர்பார்த்ததுபோலப் பெயரும் கிடைத்து விடும். அத்தோடு அவளுக்கு அந்தஸ்தும் உயரும். தவிர போதிய பணமும் கிடைக்கும். வேறு எண்ண வேண்டும். ‘மகனே… இருக்கிறதுடா உனக்குச் சங்கு…’ மனதிற்குள் கொக்கரித்தவாறு அவன் பின்னாலேயே நடக்க, அவனுக்குச் சந்தேகம் வந்ததோ? சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தான். அதை உணர்ந்தவள் போலச் சடார் என்று திரும்பி வேறு எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்ய, அவன் மீண்டும் அந்தப் பெண்ணை அணைத்துக் கொண்டு அங்கிருந்த விடுதிக்குள் நுழைந்தான்.

இன்னும் அவளால் அது உத்தியுக்தன் என்று நம்ப முடியவில்லை. எதற்கும் அவன் எங்கே இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தலாம் என்று எண்ணியவளாகத் தன் கைப்பேசியை எடுத்து இணையத்தின் உதவியுடன் தேடிப் பார்த்தாள். அவளுடைய நம்பிக்கையைப் பொய்யாக்கி அவன் இங்கிலாந்திற்கு வந்திருப்பதாக இணையம் கூறியது.

அதைக் கண்டதும் கோபம் உள்ளே கொழுந்து விட்டெரிந்தது. எத்தனை பெரிய ஏமாற்று! யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிற தைரியம்தானே… இரு… உன்னை அம்பலம் ஏற்றுகிறேன்…’ என்று கறுவியவாறு மேலும் அவன் பின்னே செல்லத் தொடங்க, அவள் தோளில் ஒரு கரம் விழுந்தது. திரும்ப, விதற்பரை நின்றிருந்தாள்.

“அங்கே என்ன பராக்குப் பார்க்கிறாய் சத்தி…?” கேட்டவளிடம்,

“ஐந்து நிமிடம்… விது… இரு… இதோ வருகிறேன்…” என்றுவிட்டு விதற்பரையின் பதிலைக் கூடக் கேட்காது, அவன் சென்ற திசை நோக்கி ஓடத் தொடங்கினாள்.

அதைச் சற்றுத் தொலைவலிருந்து பார்த்த தயாளன் தன் மகளை நெருங்கி,

“அத்தை எங்கே போகிறாள்?” என்றார் குழப்பமாய்.

“தெரியவில்லையே… இதோ வருகிறேன் என்று ஓடுகிறாள்…” என்று தந்தையிடம் கூறிவிட்டு தன் சகோதரர்களோடு இணைவதற்காகச் செல்ல, தயாளனும் திரும்பித் திரும்பித் தன் தங்கையைத் தேடியவாறே தன் மகள் பின்னால் சென்றார்.

சமர்த்தியோ உத்தியுக்தனை கையும் களவுமாகப் பிடித்துவிடும் வேகத்தோடு விடுதிக்குள் நுழைந்தாள்.

What’s your Reaction?
+1
14
+1
13
+1
4
+1
2
+1
0
+1
0

Related Post

One thought on “முள்ளில் கசிந்திடும் தேன்துளி பாகம் 1-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!