Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 47/48/49

(47)

 

குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது.

 

உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட எடுத்துக்கொண்ட நேரத்தில்,

 

தன் காலடியில் விழுந்திருந்தவனின் மார்பில் சுட்டுவிட்டு சிவார்ப்பணாவைத் தரையில் தள்ளிவிட்டு அவளுடன் தானும் விழுந்து அவளை அணைத்தவாறே உருண்டு அங்கிருந்த தூண் ஒன்றிற்குப் பின்னால் மறைந்து கொண்டான்.

 

தன் கை வளைவில் சிவார்ப்பணாவைக் கொண்டு வந்தவன் அவளைத் தன்னோடு இறுக்கிக்கொண்டான். அதே நேரம், எதிரிகளின் துப்பாக்கி, அவர்கள் நின்ற தூணைப் பதம் பார்க்க, அந்தத் தூணின் ஒரு பகுதி சிதறித் தெறித்தது.

 

தன்னவளுக்குப் பட்டுவிடுமோ என்று அஞ்சியவனாக, அந்தக் கற்களின் தாக்குதலைத் தன் முதுகு கொண்டு எதிர்கொண்டவன், சிவார்ப்பணாவைத் தன் முழு உருவத்தாலும் மறைத்து அவளுடைய முகத்தைத் தன் மார்பில் பதித்துப் பெரிய பலம் பொருந்திய கரங்களால், அவள் உடலை மறைத்துக்கொண்டு தன்னோடு இறுக அணைத்துக்கொண்டான்.

 

அந்தத் தூண் அத்தனை பாதுகாப்பானதல்ல என்பதைப் புரிந்துகொண்டவன், மீண்டும் அவளை இழுத்துச் சென்று ஒரு பக்கமாக இருந்த மறைவான பகுதியில் அவளை அமருமாறு உத்தரவிட்டவன், ஒரு குத்துக்கரணத்தில் மறுபக்கமிருந்த ஒரு தூணின் பின்னால் மறைந்து கொண்டான்.

 

தன் கரத்திலிருந்த துப்பாக்கியால், பட பட என்று சுட, ஏற்கெனவே அவர்கள் சுட்டதால் ஏற்பட்ட புழுதியில் அவனால் சரியாகப் பார்க்கக் கூட முடியவில்லை. ஆனாலும், குண்டு வந்த திசையை நோக்கி அவன் சுட,  துப்பாக்கியின் குண்டு தீர்ந்து போனது.

 

எரிச்சலுடன் அதைத் தூர எறிந்துவிட்டுச் சுற்றிப் பார்த்தான்.

 

சற்றுத் தொலைவில் கீழே கிடந்த அவனுடைய துப்பாக்கியும், அதற்கு நான்கடிக்கு அப்பால், மினிமௌஸ் கடிகாரம் இருப்பதையும் கண்டவன், சற்றும் தாமதிக்காமல் அதனை நோக்கிக்

குத்துக்கரணம் அடித்து, சுழன்று இரத்தம் படிந்திருந்த சிவார்ப்பணாவின் கைக்கடிகாரத்தையும் இழுத்து எடுத்துக்கொண்டு, கைத்துப்பாக்கிகளையும் கைப்பற்றியவாறு, மல்லாக்காகப் படுத்தவனட தலையை மட்டும் தூக்கி, பட பட பட பட என்று  சுட்டவாறு எதிரிகளைச் சூர சம்காரம் செய்யத் தொடங்கினான்.

 

கிடைத்த இடைவெளியில், ராகவன், எங்கோ மறைந்துவிட்டிருந்தார். அந்த இக்கட்டான நிலையில் ராகவனை யோசிக்க அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. முதலில் இருக்கும் அல்லக்கைகளுக்கு ஒரு வழி பார்க்கவேண்டும் என்று எண்ணியவன், தன் துப்பாக்கியிலிருந்து குண்டுகளை மழையாகப் பொழியத் தொடங்கினான்.

 

ஒரு கட்டத்தில், துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்து போக, வேகமாக அதை இரண்டு பக்கமும் எறிந்துவிட்டு, சற்றுத் தொலைவில் இருந்தவனைக் கண்டு, கண்ணிமைக்கும் நொடியில்  அவனை நெருங்கினான் அநபாயதீரன்.

 

இப்படி  திடீர் என்று அநபாயதீரன் கண்முன்னால் வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். அதிர்வுடன் அவன் நின்ற வினாடியைப் பயன்படுத்திக்கொண்ட வினாடி, எதிரியின் துப்பாக்கி இவன் கரங்களுக்கு இடம்பெயர்ந்திருந்தது. குண்டை வீணாக்காமல், சுழன்று காலால் அந்த எதிரியின் முகத்தில் ஒரு வெட்டு வெட்ட, அவன் வீசிய வேகத்தில் தலை திரும்பி அப்படியே குப்புறத் தரையில் விழுந்திருந்தான்.

 

ஆவேசத்துடன், நிமிர்ந்தவனின் விழிகள், மறைந்திருந்த ராகவனை அலசின.

 

இப்போது அவனுடைய பாதை சுத்தமாக இருக்க, ஒவ்வொரு இடமாக ராகவனைத் தேடினான்.

 

இவனுடைய காலடியோசை கேட்டு ஒரு தூணுக்குப் பின்னால் மறைந்திருந்த ராகவன், தன் கரத்திலிருந்து இரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல், ஓரமாகப் போட்டிருந்த ஒரு இரும்புக் கம்பியைக் கரத்தில் எடுத்து, இவனைத் தாக்கத் தயாரான நேரம், சற்றுத் தொலைவில், அநபாயதீரன் சொன்னதற்கமையப் பதுங்கியிருந்த சிவார்ப்பணாவின் முன்னாலிருந்த கண்ணாடியில், ராகவன் இருப்புக் கம்பியுடன் தன்னவனை நெருங்குதது தெரியப் பதறிப்போனாள்

 

எங்கே தன்னவனைத் தாக்கிவிடுவானோ என்கிற அச்சத்தில், கண்ணாடி திசை காட்டிய பக்கமாக ஓடத் தொடங்க, அநபாய தீரனும் அந்தத் தூணைத் தாண்டிய நேரம், ராகவன் அந்த இரும்புக் கம்பியைப் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அவனுடைய  மண்டையைத் தாக்க முயன்ற தருணம், தன் பின்னால் கேட்ட மெல்லிய அசைவை அறிந்து சுதாரித்துக்  கொண்டவன் வேகமாக விலக முயன்றாலும், அந்தக் கம்பி அவனுடைய தலையின் கரையோரத்தைப் பலமாகத் தாக்கித் தரையில் விழுந்தது.

 

தன்னுடைய தாக்குதல் அத்தனை பலன் தரவில்லை என்பதைப் புரிந்துகொண்ட ராகவன் அதிர்ந்து போய் என்ன செய்வது என்று புரியாது விழித்தது சில விநாடிகளே.

 

அவனின் கரங்களில் பிடிபட்டால், தன் நிலை அதோ கதிதான் என்பதைப் புரிந்துகொண்டவர், வேகமாக ஓடத் தொடங்கினார்.

 

தலையில் திடீர் என்று அடிபட்டதும், ஒரு கணம் தடுமாறி நின்றவன், கம்பி பட்ட இடத்தை அழுத்திக்கொடுத்துத் தன்னை அடித்தது யார் என்று திரும்பிப் பார்க்க, கரத்தில் ரத்தமுடன் ராகவன் ஓடுவது தெரிந்தது.

 

“சன்… ஆஃப்… எ… XXX” என்று சீறியவன், பாய்ந்தான். ஓடும் போதே, தரையில் இறந்து கிடந்த ஒருவனின் துப்பாக்கியையும் குனிந்து எடுத்து,  ராகவனின் காலை நோக்கிச் சுட, அடுத்து தரையில் மல்லாக்காக விழுந்தார் அவர்.

 

அடுத்து ராகவனைத் தாங்க வந்த எஞ்சிய உதவியாளர்களுக்கு வேகத்தைக் குறைக்காமலே தன் துப்பாக்கிக் குண்டைப் பரிசளித்தவன், அடுத்த விநாடிகளில் ராகவனை நெருங்கியிருந்தான்.

 

விழுந்து கிடந்த ராகவனுக்குத், தன் முன்னால் ராட்சசன் போல, பத்துத் தலை இராவணன் போல வந்துகொண்டிருந்த அநபாயதீரனைக் கண்டதும், முதன் முறையாக விழிகளில் பீதி வழிய, உடல் நடுங்க விழுந்திருந்த வாக்கிலேயே பின்னோக்கிச் செல்லத் தலைப்பட்டார்.

 

“ச்சோ ச்சோ ச்சோ…. ராகவன்… ஐ ஆம் சாரி… சேவியர்… நீ எப்போதும் முன்னோக்கிச் செல்பவன்…இப்படிப் பின்னோக்கிப் போகிறாயே? ம்…” என்றவாறு ராகவனின் இரு பக்கமும் காலைப்போட்டு, மிக மிக நிதானமாகத் தன் இடக் காலின் பலத்தில் அமர்ந்தவனின் உதட்டில் ஏளனப் புன்னகை ஒன்று தவழ்ந்தது.

 

கரத்திலிருந்த துப்பாக்கியை ராகவனின் தாடையில் வைத்து அழுத்தியவன்,

 

“உனக்கு அன்று தொலைப்பேசியில் சொன்னேன் நினைவிருக்கிறதா? உன்னைக் கண்டுபிடிப்பேன், கொல்லுவேன்… என்று… அர்ப்பணா மீது சிறு கீறல் விழுந்தாலும் உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொன்னேன்… ஆனால் நீ…” என்றவன் ஓங்கித் துப்பாக்கியால், ராகவனின் தாடையில் அடிக்க, அவருடைய தாடை வெடித்து அதிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது.

 

“ஹேய்… என் பலம் தெரியாமல் மோதுகிறாய்… மரியாதையாக என்னை விட்டுவிடு…” என்று ராகவன் கூற, மெல்லியதாக நகைத்தான் அநபாயதீரன்.

 

“விடுவதா… உன்னையா… ஹா ஹா ஹா… இத்தனை நாளும் உன்னை விட்டு வைத்தது போதாதா? இத்தனை நாளும் இந்த ஏவுகணை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கத்தான் உன்னை உயிரோடு விட்டு வைத்திருந்தேன் சேவியர்… உன்னால் கனடிய அரசுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?” என்றவன் மீண்டும் ஓங்கி மறுபக்கத் தாடையிலும் ஒன்று கொடுக்க,

 

“இதோ பார்… என்னை விட்டு விடு… இந்த உலகில் நான் மட்டும் ஒருவன் அல்ல. என்னைப் போல பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள்… அவர்கள் எல்லோருடைய விபரங்களையும் உன்னிடம் தருகிறேன்… என்னை விட்டுவிடு… வேண்டுமானால் பணம் கூடத் தருகிறேன்… என்னை விட்டுவி விடு…” என்று கெஞ்ச இவனுடைய நகைப்பு விரிந்தது.

 

“பணம் நீ எனக்குத் தரப்போகிறாயா? ஹா ஹா ஹா…. குட் ஜோக்… இதோ பார், நீ கேட்கிற பணத்தை விட நான் உனக்கு அதிகமாகத்தருகிறேன், அர்ப்பணாவின் தாய் தந்தையை உன்னால் திருப்பிக் கொடுக்க முடியுமா? நீ செய்த நாசகாரியங்களால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை உன்னால் திருப்பிக் கொடுக்க முடியுமா? முடியும் என்றால் சொல்… உன் உயிரை விட்டுவிடுகிறேன்…” என்று கூற, அதே நேரம், ராகவனின் கரம் தரையில் எதையோ தேடியது.

 

தேடிய கரத்தில் ஒரு பெரிய கல் தட்டுப்பட, ஆவேசம் கொண்டவராக அவனை அடிப்பதற்காக ஓங்க, அதுவரை பொறுமையாக இருந்தவன், ஓங்கிய கரத்தைத் தன் கரத்தால் தடுத்தவன், அதே கரத்தைப் பற்றி ஓங்கி, அவர் தலையிலேயே அடிக்க வைத்தான். பின் தன் துப்பாக்கியைப் பரிசீலிப்பது   போலப் பார் த்தவாறு,

 

“உனக்கொன்று தெரியுமா… எனக்குக் கொடுக்கப்பட்ட உத்தரவு… நீ உயிருடன் பிடிபடவேண்டும் என்பது. எப்படியாவது என்னைக் கட்டுப்படுத்தி உன்னை உயிரோடு பிடிக்கத்தான் நினைத்தேன். ஆனால், அன்று அர்ப்பணாவை உன் ஆட்கள் கொண்டு தாக்க வைத்தாய் பார்… அப்போது முடிவெடுத்தேன்… உன் மூச்சு என் கரத்தால்தான் நிற்கவேண்டும் என்று. அது மட்டுமல்ல, உன்னைக் கைதுசெய்து, விசாரணை வைத்து, அதற்குத் தீர்ப்பு சொல்லக் குறைந்தது இரண்டு வருடங்கள் எடுக்கும். அதற்குள் நீ எத்தனையோ தில்லாலங்கடி வேலைகளைச் செய்துவிடுவாய்… அதை விட” என்றவன், “கௌன்ட்ஸ் யுவர் செக்கன்ட்ஸ்…” என்றவாறு, சிறிதும் தாமதிக்காமல், சுடு விசையை இழுக்க, தோட்டா பாரபட்சமின்றி அவருடைய நெற்றியில் நுழைந்து, பின்புறத்து மண்டைவெளியாக வெளியேறியது.

 

அப்படியிருந்தும் அவனுடைய கோபம் அடங்கவில்லை. தன் நாட்டுக்குத் துரோகம் செய்ய நினைத்தவனை எப்படி உயிரோடு விடுவது? கூடவே பேருந்தில் பயத்துடன் நின்ற சிவார்ப்பணா, தாக்க வந்த வாகனத்துக்கு முன்னால் செய்வதறியாது நின்ற சிவார்ப்பணா, கிட்டத்தட்ட உயிரை விட்டிருந்த சிவார்ப்பணா, அவனுடைய பலத்தில் 19ஆம் மாடியில் உயிரைக் கையில் பிடித்து நடந்த சிவார்ப்பணா… குளிரில் நடுங்கிய சிவார்ப்பணா, வாகனத்தில் அவனுடன் நடுங்கியவாறிருந்த  சிவார்ப்பணா, என்று அவள் சந்தித்த ஆபத்துக்கள் ஒவ்வொன்றாக அவன் நினைவில் வர, ஒவ்வொரு நினைவுக்கும் வெறி அடங்காதவனாகத் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்களை, அவருடைய உடலில் செலுத்திக்கொண்டிருந்தான். உயிரை விட்டிருந்தவரிடம், ஆத்திரம் அடங்காதவன் போல,

 

“சொன்னேன்… சிவார்ப்பணாவின் உடம்பில் சின்னக் கீறல் இருந்தாலும் நான் சும்மா விட மாட்டேன் என்று…” என்று திரும்பத் திரும்பச் சொன்னவன் தன் துப்பாக்கியிலிருந்த மிச்சத் தோட்டாக்களையும் இறந்துபோனவரின் உடலில் துப்பிக்கொண்டேயிருந்தன துப்பாக்கியிலிருந்த தோட்டாக்கள் தீர்ந்த பின்னாலும், அதை உணராமல் விசையை அழுத்திக்கொண்டே இருந்தான்.

 

திடீர் என்று அவனுடைய தோளில் மென்கரம் ஒன்று விழ, சுய நினைவு பெற்றவனாகச் சுடுவதை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். சிவார்ப்பணா அவனைத்தான் அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் .

 

வேகமாக எழுந்தவன், அடுத்த கணம் அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.

 

“சாரிம்மா… சாரி… நான் உன்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடாது. ஐ ஆம் சாரி…” என்றவன், அவளுடைய நெற்றியிலும், உதட்டிலும் கன்னத்திலும் என தன் உதடுகளை அழுத்தமாகப் பொருத்திப் பொருத்தி எடுத்தான். தன் உதடுகளால், அவளுடைய வலியைப் போக்க முயன்றான்.

 

அவளும் தன்னவன் கிடைத்த மகிழ்வில், தன்னை அவன் காத்துவிட்டான் என்கிற பூரிப்பில், அவனை இறுகி அணைத்தவாறு அப்படியே அவன் மார்பில் சரிந்தாள். அவளுடைய உடல் பயத்தில் நடுங்கியது.

 

அவளை இறுகத் தன்னோடு அணைத்திருந்த அந்தக் கணம், அவன் உலகை மறைந்தான். தன்னை மறந்தான். தான் எதிர்நோக்க இருக்கும் பிரச்சனையை மறந்தான். அந்த நேரம் ஒருவன் பின்புறம் வந்ததை அவன் கவனிக்க வில்லை.

 

வந்தவன் இவனுடைய இடது பக்க முதுகில் இதயத்திற்கு நேராகத் தன் துப்பாக்கியை வைத்தான்,

 

(48)

 

அநபாயதீரனின் முதுகில் துப்பாக்கியை வைத்தவன், “ம்… எங்கே அந்த பென்ட்ரைவ்…” என்றான்.

 

திடீர் என்று ஒருவன் தன்னவனின் முதுகில் வைப்பான் என்று சிவார்பப்ணா எதிர்பார்க்கவில்லை. கடவுளே… இன்னுமா முடியவில்லை? என்று எண்ணியவளின் உடல் நடுங்கியது. ஆனால் இவனோ, அதைப் பற்றி எந்த அக்கறையும் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக,

 

“எகெய்ன்…” என்கிற சலிப்புதான் அவனுடைய குரலில் தெரிந்தது.

 

சிவார்ப்பணா பதட்டத்துடன் அநபாயதீரனிடமிருந்து விலக எத்தனிக்க, அவளை மேலும் தன்னோடு இறுக்கியவன், பின் மெதுவாக விடுவித்தவாறு,

 

“ஐ நோ… இட்ஸ் யு… டேவிட்சன்… கேம் ஓவர்…” என்றான் அழுத்தமாக.

 

அநபாயதீரன், தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளப் பின் புறமாக நின்றவனின் துப்பாக்கியின் அழுத்தம் சிறிது மட்டுப்பட்டது.

 

“எப்படித் தெரியும்?” என்றவாறு, தன்னுடைய துப்பாக்கியை இறக்கினான் அவன்.

 

சிவார்ப்பணாவைக் கவனமாகத் தன் பின்னால் தள்ளியவாறு திரும்பி, நேருக்கு நேராக டேவிட்சனை எதிர்கொண்ட வனின் உடல் இறுகின.

 

அவன் கண் முன்னால் சிவார்ப்பணாவைச் சுவர் ஓரமாகத் தள்ளிய டேவிட்சனின் உருவம் படமாக ஓடியது. அதே போல அவனுடைய தலையையும் சுவர் ஓரமாக மோதி உடைக்கவேண்டும் என்கிற ஆத்திரம் வந்தது.

 

அநபாயதீரனின் முகம் போன போக்கைக் கண்டதும், உள்ளூரக் குளிர் எடுத்தாலும், அதைச் சாமர்த்தியமாக மறைத்தவாறு,

 

“இட் இஸ் சிம்பிள்… இதற்கெல்லாம் அதிக புத்திசாலித்தனம் தேவையில்லை டேவிட்சன்…” என்று அநபாயதீரன் ஏளனத்துடன்கூற, அவனை எரிச்சலுடன் பார்த்து,

 

“அது தான் எப்படி என்று கேட்கிறேன் ஃபயர்…” என்றான் கோபமாக.

 

“வெல்… இன்று வரை, உன்னுடைய பெயர் டேவிட்சன் சேவியர்… என்பது என்னை உறுத்தவில்லை… ஆனால், என்றவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்து அந்தச் செம்மஞ்சள் பொருளை எடுத்துக் காட்ட, அதிர்ந்தான் அவன்.

 

“இது…” என்று அவன் இழுக்க,

 

“இயர் பில்லர்… இதைக் கண்டதும், என் மூளைக்குள் பளிச்சென்று ஒன்று நினைவுக்கு வந்தது. எங்கள் குழுவிலேயே இயர் பில்லரைக் குளிருக்காகக் காதில் அடைக்கும் ஒரே ஒரு நபர் நீ தான்… அன்றும் மேலிடம் என்னோடு பேசியபோது, நீதான் அங்கே நின்றாய்… ஆனால் வேறு ஏதோ வேலை செய்வது போலப் பாவலா காட்டிக்கொண்டு…. ஆனால் உன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை அப்போது நான் கவனிக்கவில்லை. இப்போது தான் அதைப் பற்றி யோசிக்கிறேன். சோ… இரண்டும், இரண்டும் நான்கு என்று கண்டு பிடித்தேன்…

 

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரியத் தொடங்கியது. ஷார்ப் நோர்ஸ் பற்றித் தெரிந்தது, மிக மிகக் கொஞ்சப்பேர். நான், என்னுடைய மேலதிகாரிகள். அதைத் தவிர ஷார்ப் நொர்ஸ் பற்றி இதுவரை யாருக்குமே தெரியாது. அதையும் மீறி அது தொலைந்திருக்கிறது என்றால் எப்படி? ஷார்ப் நோர்ஸ் இருக்கும் இடத்திற்குள் நுழைவது அத்தனை சுலபமல்ல. அத்தனை பாதுகாப்பையும் மீறி ஒருவன் உள்ளே நுழைந்திருக்கிறான் என்றால். நிச்சமயாக அவன், நம்முள் ஒருத்தனாகத்தான் இருக்கமுடியும்.

 

அது யாராக இருக்கும் என்று நான் குழம்பினேனே தவிர, இதைக் காணும் வரை உன் மீது எனக்குச் சந்தேகமே வரவில்லை டேவிட்சன். அதன் பிறகுதான் உன் லாஸ்ட் நேம் என்னை யோசிக்க வைத்தது. டேவிட்சன் சேவியர்… கனடிய அரசினால் தேடப்பட்டு வரும், பயங்கரவாதக் கும்பலின் தலைவனின் பெயர் சேவியர் ஆர்னல். ஒரு வகையில் உனக்கும் சேவியருக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

 

ஏன், எதற்காக இப்படிச் செய்தாய்? உன் தாய்நாட்டுக்குத் துரோகம் செய்ய உனக்கு வெட்கமாக இல்லை…” என்று அநபாயதீரன் சீற, டேவிட்சன் கடகட என்று சிரித்தான்.

 

“தாய் நாடா? எது என் தாய்நாடு… என் தாய் நாடு ரஷ்யா… என் தாய் பிறந்தது ரஷ்யாவில்… நான் கனடிய விமானப் படையில் சேர்ந்ததற்குக் காரணமே, உங்கள் ராணுவ ரகசியத்தை அறிவதற்காகத்தான். வாமதேவனின் ஆராய்ச்சி பற்றித் தகவலை என் தந்தைக்குக் கொடுத்ததே நான்தான். உங்களுக்கு முன்பாக, அதைக் கைப்பற்ற முயன்றோம்… பட்… நீ முந்திவிட்டாய். எப்படியோ திட்டமிட்டு யாருக்கும் சந்தேகம் வராதவாறு அதை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தோம். என்ன பயன்? இன்று வரை அதை இயக்குவதற்கான வழிமுறைகள் நமக்குத் தெரியவில்லையே…” என்றவன் அவனுக்குப்  பின்னால் மறைந்திருந்தவளைச் சுட்டிக்காட்டி,

 

“அதை எப்படி இயக்குவது, என்பது பற்றி உனக்குத்தான் தெரியும் என்று உன் காதலி சொன்னாள்…” என்று கூற, இவனுடைய விழிகள் மின்னின.

 

மெதுவாகத் திரும்பி சிவார்ப்பணாவைப் பார்க்க, அவனுடைய முதுகோடு ஒட்டி நின்றவள், எக்கி, அவன் காதுக்குக் கிட்டப் போக முயன்றும் முடியாமல் அவனுடைய உயரம் தடைபோட, இவனோ சற்றுக் கால் மடக்கி, அவள் உயரத்திற்கு ஏற்றாற்போல குனிந்தான்.

 

இவளோ, அந்த டேவிட்சனைப் பார்த்து முறைத்தவாறு, “உங்களை வரவழைக்க வேறு வழி எனக்குத் தெரியவில்லை தீரன்… அப்படிச் சொன்னாலாவது அந்த ஏவுகணை இருக்கிற இடம், உங்களுக்குத் தெரியவரும் நீங்கள் வருவீர்கள் என்பதனால் சொன்னேன்…” என்றதும் இவன் முகம் பெருமையில் மலர்ந்தது.

 

அப்படி சிவார்ப்பணா சொல்லாது இருந்திருந்தால், அந்த சேவியர் இவனை அழைத்திருக்கமாட்டார். இவனும் இந்த இடத்திற்குச் சுலபத்தில் வந்திருக்கவும் மாட்டான்.

 

“அந்த ஏவுகணை இப்போது எங்கே இருக்கிறது… அர்ப்பணா?” என்று இவன் கேட்க,

 

“உள்ளே… ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்திருக்கிறார்கள் தீரன்…” என்றதும்,

 

“என்ன இருவரும் ரகசியம் பேசி முடித்துவிட்டீர்களா…” என்றவன், தன்னருகேயிருந்தவனைப் பார்த்துக் கண்களால் சைகை செய்ய, உடனே அவன் உள்ளே சென்று அந்த மடிக்கணினியையும், குறிப்பேட்டையும் கொண்டு வந்தான்.

 

அங்கே கீழே விழுந்திருந்த மேசையைக் கால்கொண்டு நிமிர்த்திய டேவிட்சன்.

 

“தீரன்… உன்னைச் சுற்றி இருபது பேர் துப்பாக்கியோடு இருக்கிறார்கள். நீ எப்படியும் தப்பிவிடுவாய்… ஆனால் அந்தப் பெண்… நிச்சயமாகத் துப்பாக்கிச் சூட்டைத் தாங்கமாட்டாள்.” என்றதும், அதைக் கேட்டதும் பயத்தில் சிவார்ப்பணா நடுங்குவாள் என்று பார்த்தால், அவள் முகத்தில் எந்த அச்சமும் தெரியவில்லை.

 

மிகக் கவனமாக தன்னவனின் முழு உருவத்திற்குப் பின்னாலும் மறைந்துகொண்டு, அவனுடைய சட்டையை இறுகப் பற்றித் தலையை மட்டும் பக்கவாட்டில் நீட்டி,

 

“கிழிப்பாய்… இத்தனை பேரைத் தாண்டி என்னைக் காப்பதற்காக வந்தவன் என் தீரன், என்னை அம்போ என்று விட்டுவிட்டு அவன் போய்விடுவான் என்று நினைத்தாயா? முட்டாள்…” என்று இவள் பரமசிவனின் கழுத்திலிருந்த பாம்பாகச் சீற, அநபாயதீரன் அந்த நிலையிலும் உடல் குலுங்கிச் சிரித்தான்.

 

தன்னவனின் சிரிப்பைக் கண்டு இவள் அதிர்ந்து போனாள்.

 

நம்ப மாட்டாமல் தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்து,

 

“சிரித்தீர்களா?” என்றாள் சந்தேகமாக. லாகவமாகத் தன் நகைப்பை மறைத்தவன்,

 

“வட் சிரித்தேனா… நானா? எதற்காகச் சிரிக்கவேண்டும்…” என்று மிகக் கவனமாக அவன் பின்னால் மறைத்துக்கொண்டவளைப் பார்த்துக் கேட்க,

 

“அதுதானே பார்த்தேன்… பறை எப்போது சிரித்திருக்கிறது” என்றவள் பின் டேவிட்சனைப் பார்த்து முறைத்து,

 

“தீரன்… இவனை சும்மா விடக் கூடாது… இவனை… இவனை எண்ணெய்யில் போட்டுப் பொரித்து ஹியூமன் 65 ஆக்கவேண்டும்…” என்றவள், அது அருவெறுக்க, “சீ சீ… உவ்வே… அதை விட, இவனைக் கட்டிக் காட்டில் தொங்க விடவேண்டும் தீரன். கழுகுகளும், நரிகளும், துண்டு துண்டாக…” என்று அவன் கூறி முடிக்கவில்லை, டேவிட்சன் அடிபட்ட புலியாக,

 

“இனஃப்… ஸ்டாப் இட்…” என்று சீறியவாறு அர்ப்பணாவை நெருங்க வர, அதைக் கண்டவள் அதிர்ந்தாள். அவசரமாகத் தன் தலையை உள் இழுத்து, தன்னவனின் முதுகுக் குழிக்குள் தன் முகத்தைப் பதித்துக்கொள்ள, அதைக் கண்டு சிரித்தவாறே டேவிட்சனைப் பார்த்தான் அநபாயதீரன்.

 

அவன் உதடுகள் சிரித்தாலும், விழிகளில் தெறித்த கனலைக் கண்டு, டேவிட்சன் கொதிப்பு மாறாமலே அவனை வெறிக்க,

 

“டோன்ட் ஈவன் திங்க் எபவுட் இட்…” என்றவன், டேவிட்சனுக்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல், அவன் மார்பில் தன் வலக்காலால் ஓங்கி உதைத்திருந்தான்.

 

இதை டேவிட்சன் எதிர்பார்க்கவில்லை. உதைத்த வேகத்தில் நான்கடி தள்ளிப்போய் சமாளித்து நின்ற நேரம், ஆத்திரம் மிகுதியால், அவனுடைய காவலாட்கள், அநபாயதீரனை சுட முயல, அதைக் கண்ட டேவிட்சன் பதறி,

 

“டோன்ட்… டோன்ட் ஷூ ட் ஹிம்…” என்று கர்ஜித்தான்.

 

அநபாயதீரனின் உயிருக்கு ஒன்று நடந்தால், அவ்வளவுதான். அந்த ஏவுகணையின் வரலாறு முடிந்து விடும்.

 

சிவார்ப்பணாவும் பாதுகாப்பாக அவன் முதுகிலேயே ஒட்டுண்ணிபோல ஒட்டியிருந்ததால், அவளையும் அவர்களால் துவசம் செய்ய முடியாமல் போக, அத்தனை பேரும் தம் துப்பாக்கிகளைக் கீழே இறக்கிக் கொண்டனர்.

 

ஆனாலும் தன்னை உதைத்துவிட்டான் என்கிற தாள முடியாத கோபத்துடன் தன்முன்னால் நின்றிருந்தவனை நெருங்கினான் டேவிட்சன்.

 

டேவிட்சனின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், சற்றுத் திரும்பி, சிவார்ப்பணாவிடம்,

 

“அர்ப்பணா… என்ன நடந்தாலும், டோன்ட் லீவ் மி… புரிந்ததா?” என்று கேட்க அவள் தலையை ஆட்டினாள். இவள் தலையை ஆட்டினால் அவனுக்கு எப்படித் தெரியும்.

 

“அர்ப்பணா… நான் சொன்னது புரிந்ததா?” என்று இவன் தன் குரலை உயர்த்திக் கேட்க,

 

“அதுதான் ஆம் என்று தலையை ஆட்டினேனே…” என்றாள் இவள்.

 

“உடனே அநபாயதீரனும் அவனுடைய அடுத்த தாக்குதலுக்குத் தயார் என்பது போல, இரண்டு கால்களையும் விரித்து மடித்துக் கரங்களை முன்னுக்கு நீட்டி முஷ்டிகளை மடக்கியவாறு தயாராக இருந்தான்.

 

டேவிட்சன், வேகமாக அவன் முகத்திற்கு நேராகத் தன் கரத்தைக் கொண்டு போக, லாகவமாக அதிலிருந்து விலகியவனின் இடது கரத்து முஷ்டி படு வேகமாக டேவிட்சனின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அடுத்து டேவிட்சன் தன் வலக் காலைத் தூக்கி, இவனுடைய இடது பக்கத்து இடையைக் குறிவைத்துத் தாக்க, எங்கே சிவார்ப்பணாவிற்கு அடிவிழுந்துவிடும் என்கிற பதட்டத்தில், தன் இடக் கரத்தைப் பின் கொண்டு சென்ற அவளைத் தன்னோடு இறுக்கிப் பிடித்தவாறு விலகியவனின், வலது முஷ்டி, டேவிட்சனின் இடது மார்பின் கரையோரத்தில் பலமாகத் தாக்கியது.

 

டேவிட்சனும் இராணுவத்திலிருந்ததால், அநபாயதீரனின் அந்தப் பலம் பொருந்திய தாக்குதலிலிருந்து எதுவும் உடையாது தப்பிக்கொண்டான்.

 

வேகமாகத் திரும்பிய டேவிட்சன், தன் முஷ்டியால், அநபாயதீரனின் மார்பிலும் இடது புறத்துக் கழுத்திலும் ஒரே நேரம் தாக்க, கழுத்தில் அடி படக்கூடாது என்று விலகியவனின் இடது மார்பு பலமாக அடி வாங்க, இரண்டடி பின் வைத்தான். என்னதான் பின் வைத்தும் தன்னவளை விட்டு அவன் விலகவேயில்லை.

 

வெற்றிக் களிப்பில் சிரித்த டேவிட்சன், மீண்டும் முன்நோக்கி, அநபாயதீரன்ன கழுத்தை நோக்கிச் சுழன்று தன் இடக் காலை வீச, அதை இடக் கரம் கொண்டு ஓங்கி அடித்துத் தடுத்து அதே காலில் நரம்பு ஓடும் இடத்தில், தன் வலது கரத்தைக் கத்தியாக்கி, கணுக்காலிலும், தொடையில் பலமாக ஒரு வெட்டு வெட்ட, அவன் அடித்த வேகத்தில் கால் நரம்பும் தசையும் செயலிழந்து போக, துடித்துப்போனான் டேவிட்சன்.

 

சிரமப்பட்டுத் தன் காலை உதறியவனுக்கு சுளீர் என்கிற வலிதான் அதிகரித்ததே தவிர, சற்றும் குறைந்த பாடில்லை.

 

கோபத்துடன் மீண்டும், தன் வலக் கரத்தைக் கொண்டு அநபாயதீரனுடைய வயிற்றில் குத்த வர, குத்த வந்த கரத்தைப் பற்றி நிறுத்தியவன், சிவார்ப்பணாவை உதறித் தள்ளிவிட்டு,  டேவிட்சனைத்  தன்னை நோக்கி இழுத்து, அவனுடைய கழுத்தைத் தன் கைவளைவால் வளைத்துப்பிடித்து,  காலை இடறிவிட இருவருமாகத் தரையில் சரிந்தனர்.

விழுந்தவனைக் கைவிடாது, டேவிட்சன் அசையாதவாறு அவனுடைய கால்களைத் தன் கால்களால் வளைத்துப் பிணைத்துக் கொண்டவன், இடது கரத்தால் டேவிட்சனின் கழுத்தை வளைத்துப் பிடித்து, வலது கரத்தால் அவனுடைய தலையை சுற்றிப்போட்டு கிடுக்குப் பிடி போட, டேவிட்சன் அசைய முயன்று முடியாமல் தடுமாறினான். அநபாயதீரனின் இடது கரம் அவனுடைய கழுத்தை அழுத்தப் பற்றிக்கொண்டதால், மூச்சு தடைப்பட்டது.

 

இதே நேரம் சிவார்ப்பணா தனியாகத் தள்ளி நிற்க, அதைப் பயன்படுத்திய ஒரு காவலாளி, வேகமாகப் பாய்ந்து சிவார்ப்பணாவின் கழுத்தைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு இறுக்கித் துப்பாக்கியை அவள் கழுத்தடியில் பிடித்து,

 

“லீவ் ஹிம்…” என்று சீறினான்.

 

சிவார்ப்பணா எதிரியின் பிடியிலிருக்கிறாள் என்பதைக் கண்டதும், அநபாயதீரனின் கரங்கள் தாமாக டேவிட்சனை விடுவித்தன.

 

துள்ளித் தன்னை விடுவித்த டேவிட்சன், இருமியவாறு தன் ஆளைப் பார்த்து “குட் ஜாப்” என்று விட்டுத் முழங்கையால் ஓங்கி அநபாயதீரனின் மார்பில் குத்திவிட்டு எழுந்தவனுக்கு சற்று நேரம் எடுத்து சுயத்திற்கு வர.

 

எப்படியோ தன்னை சமாளித்தவன் மார்பை பிடித்துக்கொண்டிருந்த அநபாயதீரனைப் பார்த்து,

 

இதோ பார் தீரன், மரியாதையாக அந்த பென் ட்ரைவை எப்படி இயக்குவது என்று சொல்லிவிடு… இல்லை… நிச்சயமாக நீங்கள் இருவரும் உயிரோடு போக மாட்டீர்கள்…” என்று கர்ஜிக்க, இவனும் தள்ளாட்டத்துடன் எழுந்தான்.

 

தன் கரத்தைத் தூக்கி, “ஓக்கே… ஓக்கே…” என்றவன்,

 

“லெட் ஹர் கோ…” என்றான் அந்தக் காவலாளியை எரிக்கும் பார்வை பார்த்து.

 

“முதலில் கணினியை இயக்கு ஃபயர்…” என்று சீறும் போதே, தன் காவலாளியைப் பார்த்துக் கண்ணசைக்க, அவன் தன் துப்பாக்கியால் சிவார்ப்பணாவின் தோள் புறமாக ஒரு குண்டைப் பாய்ச்சத் துடித்துப்போனாள் சிவார்ப்பணா.

 

சிவார்ப்பணா மட்டுமல்ல, அநபாயதீரனும் துடித்துப்போனான்.

 

(49)

 

சிவார்ப்பணாவை சுடுவான் என்று அநபாயதீரன் கனவிலும் நினைத்திருக்கவில்லை . உள்ளம் பதற உடல் துடிக்க “அர்ப்பணா” என்று அலறியவாறு சிவார்ப்பணாவை நெருங்க முயல, இடையில் வந்த  டேவிட்சன்,

 

“மேலால்தான் சுட்டிருக்கிறான் ஃபயர்… இந்தக் காயத்திற்கு அவள் சாகமாட்டாள்… என்ன எக்ஸ்ட்ராவாகக் கொஞ்சம் இரத்தம் போகும் அவ்வளவுதான்… மரியாதையாகக் கணினியை உயிர்ப்பித்து விடு… இல்லை… அடுத்த குண்டு கால்களில்… இந்த முறை சற்று ஆழமாக…” என்று கூற, தாமதிக்காமல், அந்தக் கைக்கடிகாரத்தை வெளியே எடுத்தான் அநபாயதீரன்.

 

அதைத் திருப்பி, பென் ட்ரைவைப் பிரித்து எடுத்தான். அதை அவர்கள் நீட்டிய மடிக்கணினியில் போட்டு, கடவுச்சொல்லை அழுத்தி, ஒவ்வொரு படி முறைகளாக அவன் திறந்து கொடுக்க, உடனே அந்த மடிக்கணினி பறிக்கப்பட்டது.

 

அதைப் பரிசோதித்த டேவிட்சனின் முகத்தில் மலர்ச்சி தெரிய, தன் காவலாளியைப் பார்த்து,

 

“இன்ஃபோர்ம் த ரஷ்யன்ஸ்…” என்று கூறித் திரும்பி அவனைக் கிண்டலுடன் பார்த்து,

 

“முட்டாள்… தங்க்யூ ஃபயர்… “ என்று கூறியவன் கரத்தில் இரத்தம் வழிய மயங்கிவிழும் நிலையிலிருந்தவளை இழுத்து அவனை நோக்கித் தள்ளிவிட, அவளைத் தாங்கி அணைத்துக்கொண்டவன், அவளுடைய தலையை வருடி,

 

“ஆர் யு ஓக்கே…” என்றான் பெரும் தவிப்புடன். அவசரமாக அவளுடைய காயத்தைப் பரிசோதிக்க, நல்லவேளை, அது சதையை மட்டும்தான் கிழித்துக்கொண்டு போயிருந்தது. தாங்க முடியாத வலியுடன்,

 

“சாரிடா… ஐ ஆம் சாரி…” என்றவனின் உதடுகள் அவளுடைய கூந்தலில் படிந்து ஆசுவாசப் படுத்த முயல, கரங்களோ, அவளுடைய முதுகை வருடிக் கொடுத்தன.

 

இந்தக் காட்சியைக் கண்டு ஏளனத்துடன் நகைத்த டேவிட்சன்,

 

“வெல்… யார் முதலில் சாகப் போகிறீர்கள்? சொய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றான் எகத்தாளமாக.  ஒருவித பதட்டத்தோடு முன்னால் நின்றிருந்தவனை ஏறிட்ட  அநபாயதீரன்,

 

“நீ செய்வது சரியல்ல டேவிட்சன்… அதுதான் நீ கேட்டது போல எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேனே… பிறகு எதற்காக…” என்று கேட்க, சிவார்ப்பணாவிற்கோ பயத்தில் இதயம் வாய் வழியாக வந்துவிடும் போலத் துடித்தது.

 

அநபாயதீரன் அலட்சியமாக இருந்திருந்தால் டேவிட்சனுக்கு சந்தேகம் வந்திருக்காது. ஆனால் அவன் பதட்டப்படுகிறான்… இது வரை அவனிடம் இல்லாத குணாதிசயம் அது… எதற்காகப் பதட்டப்படுகிறான்? ஏதாவது திட்டம் போட்டுவிட்டானா?’ புரியாமல் விழித்தவன், பின்  தோள்களைக் குலுக்கி,

 

“ஓக்கே… உனக்குச் சந்தர்ப்பம் கொடுத்தேன்…. நீ அதைப்  பயன்  படுத்தத் தவறிவிட்டாய். சோ… நானே… தேர்வு செய்கிறேன்…” என்று கூறியவன், துப்பாக்கியை சிவார்ப்பணாவின் புறமாக நீட்டினான். அநபாயதீரன் உடனே அவளைத் தனக்குப் பின்புறமாக இழுத்து விட, டேவிட்சனின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

 

“எப்படியோ இருவரும் சாகப் போகிறீர்கள். யார் முதலில் செத்தால் என்ன?” என்று கிண்டலுடன் கேட்க, அதுவரை இருந்த பதட்டம் மறைந்து அநபாயதீரன் இப்போது சிரித்தான்.

 

“ஓ… மான்… இன்னும் உனக்கு என்னைப் பற்றித் தெரியவில்லையே… ம்… அவ்வளவு அப்பாவியா நீ….” என்று வியந்தவன் போலக் கேட்டவன், பின்,

 

“ஒரு சின்ன செய்தியை உனக்குச் சொல்ல வேண்டுமே…” என்றவனின் புன்னகை இப்போது நன்கு விரிந்திருந்தது.

 

“ம்… சொல்லு. எப்படியும் நீ இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப் போகிறாய்… சொல்லு… கடைசியாக நீ சொல்வதையும் கேட்கிறேன்…” என்று பவ்யமாக நிற்பது போல நின்றவனை நகைப்புடன் பார்த்தான் அநபாயதீரன்.

 

“இப்போது நீ எடுத்து வைத்தாயே கணினி அதை இன்னொரு முறை போட்டுப் பார் உண்மை புரியும்…” என்றான் கிண்டலுடன்.

 

புரியாமல் புருவங்களைச் சுழித்த டேவிட்சன் தன் காவலாளியைப் பார்த்துத் தலையை ஆட்ட, அவன் மீண்டும் கணினியை உயிர்ப்பித்தான்.

 

அங்கே விரிந்த காட்சியைக் கண்டதும், அவனுடைய முகம் மாறத் தொடங்கியது. அச்சத்துடன் டேவிட்சனைப் பார்க்க, டேவிட்சன் என்ன என்று வினாவினான்.

 

“தெரியவில்லை சார்… பட் சம்திங் இஸ் ராங்…” என்றவாறு லப்டப்பில் எதை எதையோ தட்டினான். சந்தேகத்துடன் டேவிட்சன் மடிக்கணினியில் அருகே சென்றவன், பல முறை கீ போர்டில் எதை எதையோ தட்டினான்.

 

அவனுடைய தட்டல் பயனில்லாது போக, அதே நேரம் அந்த மடிக்கணினியிலிருந்து புகை வெளியே வர, வெடிக்கத் தொடங்கியது.

 

“டாமிட் டாமிட்… டாமிட்…” என்றவன் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் அநபாயதீரனைத் திட்டித் தீர்த்தவன், ஆத்திரம் தாங்க முடியாதவனாக அநபாயதீரனை நெருங்கி,

 

“என்ன செய்தாய் நீ…?” என்றான் சினத்துடன்.

 

“அவனுடைய சினம் அநபாயதீரன்வுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோ, உடனேயே நகைத்தான்.

 

“முட்டாள்… நாட்டின் உயிர் நாடியைச் சுலபமாக உன்னுடைய கைக்கு வரவிடுவேன் என்று நினைத்தாயா?” என்று கேட்டவன் மீண்டும் நகைத்தான்.

 

“வட் த ஹேல் ஆர் யு டாக்கிங்?”

 

“சிம்பிள் வாமதேவன், இதைப் ப்ரோகிராம் செய்யும் போது, ஒரு படிமுறை தவறினாலும். அது தானாக அழிந்துவிடும் என்பதுபோல உருவாக்கியிருந்தார். நீ வேறு என்னையே உயிர்ப்பிக்கச் சொன்னாயா… அதுதான், இரண்டே இரண்டு படிமுறைகளை மாற்றிப் போட்டேன்… முதலில் வேலை செய்வது போலத்தான் இருக்கும். இரண்டாம் முறை திறக்கும் போது, அது தன் வேலையைக் காட்டும்…என்றவன் பெரும் நிம்மதியுடன்

 

“முடிந்தது டேவிட்… இனி வாமதேவன் உயிரோடு வந்தால் மட்டுமே, அந்த கிருமிகளை எப்படி உருவாக்குவது என்பது பற்றிய விபரங்கள் தெரிய வரும்… இதோடு எல்லாம் அழிந்து விட்டது…” என்று நிம்மதியுடன் கூறியவனை ஆத்திரம் தாளமுடியாமல் பார்த்தான் டேவிட்சன்.

 

“உன்னை… ஐ வில் கில் யு…” என்று சீறிக்கொண்டு பாய முயல,

 

“டிஷ்யும்…” என்கிற சத்தம் திடீர் என்று பின்னால் கேட்க, அனைவரும் அதிர்ந்து போய் திரும்பிப் பார்த்தனர்.

 

அங்கே கிட்டத் தட்ட அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர், இராணுவ உடை முழுவதும் விதம் விதமான பதக்கங்கள் தொங்க, கம்பீரமாக உள்ளே வந்துகொண்டிருந்தார். அவருக்குப் பின்னால், அதே போலப் பல பதக்கங்கள் பொறிக்கப்பட்ட இராணுவச் சீருடையுடன், இன்னொருவர் தன் கரங்களைப் பின்புறமாகக் கட்டியவாறு வந்துகொண்டிருந்தார். முதலாவதாக வந்திருந்தவரின் தோளில் பதித்திருந்த குறிச்சொற்கள் அவர் மேஜர் ஜெனரல் என்றும், பின்னால் வந்துகொண்டிருந்தவர், பிரிகேடியர் ஜெனரல் என்றும் தெரிந்தது. அவர்களைத் தொடர்ந்து, இன்னும் சில இராணுவ வீரர்கள், கரத்திலே பெரிய துப்பாக்கிகளை ஏந்தியவாறு, டேவிட்சனை நோக்கிக் குறிவைத்துக்கொண்டு நிற்க, டேவிட்சன் அதிர்ச்சியுடன் அனைவரையும் பார்த்தான்.

 

“ச… சார்… ஐ…” அவன் முடிப்பதற்குள்ளாகவே, இரண்டு இராணுவ வீரர்கள் டேவிட்சனைப் பிடித்து, அவனுடைய கரத்தைப் பின் புறமாக வளைத்து விலங்கிட்டுக்கொண்டனர்.

 

அதே நேரம் உள்ளே சென்ற சிலர் கண்ணாடிப் பெட்டிக்குள்  இருந்த ஏவுகணையை வெளியே எடுத்து வந்தனர்.

 

அவர்களைத் தடுத்த அநபாயதீரன் அந்தக் கண்ணாடிப்பெட்டியைப் பக்குவமாகத் திறந்து அந்த ஏவுகணையின் ஓரமாக இருந்த ஒரு பொத்தானை அழுத்த அதன் சிறு கதவு சிக்கலின்றித் திறந்து கொண்டது.

 

அதில் இலக்கங்கள் அழுத்துவதற்கான திரை வர, அதில் சிவரப்பனாவின் கழுத்திலிருந்த கடவுச்சொல்லை அழுத்தினான். அழுத்தியதும் சற்று நேரம் அமைதியாக இருந்த திரை பின்பு  விழித்துக்கொண்டு  சில கேள்விகளைக் கேட்டது. உடனே வாமதேவனின் குறிப்பேட்டிலிருந்த படிமுறைகளின் விதிப்படி பதில்களை அழுத்த, உடனே அது சரி என்று ஏற்றுக்கொண்டது போல அடுத்து வேண்டியதைத் தேர்ந்தெடுப்பதற்கான திரையை விரித்தது. ஒவ்வொரு படிமுறைகளையும் சரியாகச்செய்து முடிக்க,

அந்த ஏவுகணையை செயல் இழக்க வைக்கும் முக்கிய பகுதி  மலர்ந்தது.

 

அந்த ஏவுகணையை இயக்கப்போகிறாயா இல்லை செயலிழக்க போகிறாயா என்கிற கேள்வி வர, செயல் இழக்க செய்தல் என்பதை அழுத்தினான். அதை தொடர்ந்து உறுதிப்படுத்துமாறு இன்னொரு கேள்வி வர, இறுதியாக  டிலீட் என்பதை அழுத்த மாறு வினாடி அந்த ஏவுகணையும், கூடவே அந்த கிருமிகளும் உயிரை விட்டன என்பதை அறிவுறுத்துவது போல முதலில் சூடேறிப் பின் குளிர்ந்து இறுதியில் திரை செயல் இழந்து போனது.

 

அனைத்தையும் முடித்துப் பெரும் நிம்மதியுடன் அவன் எழ அங்கிருந்தவர்கள் அனைவரும் தமது கரங்களைத் தட்டிப் பாராட்டுச் செலுத்தியதோடு மட்டும் நின்று விடாது, அனைவரும் நிமிர்ந்து நின்று அவனுக்கு தமது நெற்றியில் கரம் வைத்து  மரியாதை செலுத்த அதை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டவன் அங்கிருந்த எம் ஜென்னை நோக்கிச் சென்றான்

 

எம் ஜென்னும் அவனை நோக்கித்தான் வரத் தொடங்கினார். அவரை நெருங்கியதும், நிமிர்ந்து நின்று சல்யூட் அடித்தான்.

 

இதை எல்லாம் சிவார்ப்பணா அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க, அதைப் பொருட்படுத்தாத அநபாயதீரன் சல்யூட் அடித்தவாறே

 

“ஆல் க்ளியர் எம் ஜென்…” என்றான் இரும்பை ஒத்த குரலில்.

 

“குட்” என்று பெருமையுடன் கூறியவர்

 

“வெல் டன் மை பாய்… எங்கள் நாட்டையே காப்பாற்றிவிட்டாய்… உனக்கு விருது காத்திருக்கிறது…” என்று கூறத் தன் கரத்தை இறக்கிப் பின்னால் கட்டியவாற,

 

“ஐ ஆம் ஆனர்ட்…” என்றான்  அதே இறுக்கத்தோடு.

 

“சோ… எப்போது வேலைக்குச் சேருகிறாய்?”  என்று கேட்க,

 

“டுமோரோ சேர்…” என்றான் சற்றும்  இளகாமல்,

 

“குட்…” என்றவாறு அவர் நடக்கத் தொடங்க அவருக்ககுப் பின்னால் நின்றிருந்த பிஜென் அநபாயதீரனை நெருங்கினார். அவனையும் சிவார்ப்பணாவையும் மாறி மாறிப் பார்த்தவர்,

 

“ஐ நீட் டு டாக் டு யு…” என்றார் அலட்சியமாக. மறு பேச்சுப் பேசாமல், அவருடன் இணைந்து நடந்தான்.

 

ஒன்றாகச் செல்லும் இருவரையும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. நாளைக்கே சேரப்போகிறானா… அப்போ இனி அவனைப் பார்க்கவே முடியாதா? வேதனை அரிக்க, உள்ளமும், விழிகளும் கலங்க, கண்ணீர் ஆறாகப் பெருக அதிர்ந்துபோய் நின்றாள் அவள்  .

 

அதே நேரம் ஆகாய அம்புலன்ஸ், அங்கிருந்த வெட்டவெளியில் இறங்கத் தொடங்கியது.

 

அநபாயதீரனைத் தன்னோடு அழைத்துச் சென்ற பிஜென், திரும்பி அவனைப் பார்த்து முறைத்தவர் தன் தொப்பியைக் கழற்றி,

 

“என்னிடம் இதைப்பற்றிய அறிக்கையைக் கொடுக்கவேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?” என்றார் கறாராக.

 

“உங்களுக்கு அறிவிக்கச் சொல்ல எனக்கு உத்தரவிடப்படவில்லை… பிஜென்… ஐ மீன் அப்பா…” என்று இவன் கூறப் பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டார் பிஜென்..

 

“ஓ மை சன்… ஐ ஆம் ஸ்பீச்லெஸ்… உன்னை நினைத்து… நான் வருந்தாத நாளில்லை…” என்றவர், கண்கள் கலங்க மெதுவாகத் தன் மகனை விடுவித்தார் அவர்.

 

“ஷ்… அப்பா… என்ன இது… இது என்னுடைய கடமை… என்னுடைய நாட்டுக்காக நான் எதையும் செய்யத் தயங்கமாட்டேன்… உங்களுக்குத் தெரியுமல்லவா?” என்று இவன் கேட்கத் தன்னைச் சமாளித்தவர்,

 

“ஐ நோ மை பாய்… உன் அம்மா இறந்த போது, உன்னை இவர்கள்தான் வளர்த்தார்கள். சொல்லப்போனால் இந்தக் கனடியன் விமானப்படை உனக்குத் தாய்வீடு போல…” என்றவர் பின் பெரு மூச்சுடன் “பட்… எனக்கிருக்கும் ஒரே உறவு நீதானேப்பா… உனக்கொன்று நடந்தால்… என்னால்…” என்று தவித்தவர், தன் மகனை ஏறிட்டு, “ஐ லவ் யு மை சன்…” என்றவர் பின் கம்பீரமாக நிமிர்ந்து நின்று, திரும்பி முதலுதவி செய்யப்பட்டுக்கொண்டிருந்த சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“ஹெள இஸ் ஷி…” என்றார் ஏதோ அறிய விரும்பியவராக.

 

“ஷி இஸ் அன் ஏஞ்சல்பா…” என்றான் முகம் கனிவுற. அவனுடைய பார்வை சிவார்ப்பணாவைத் தாபத்துடன் வருட, அதைக் கண்டவரின் மனம் நிம்மதி அடைந்தது.

 

“டூ யு லவ் ஹர்…” என்று அவர் அடுத்த கேள்வியைக் கேட்கத் தன் தந்தையை முறைத்தவன்,

 

“அப்பா… திஸ் இஸ் டூ மச்…” என்று விலகிப் போனவனின் பின்னால் தொடர்ந்தவர்,

 

“நீயும் வாழ்வில் முன்னேறவேண்டுமே … உனக்கென்று குடும்பம், குழந்தை குட்டியென்று வாழ்வதை நான் பார்க்க வேண்டும். இன்னும் இரண்டு வருடங்களில் நான் ஓய்வெடுத்துவிடுவேன்… அதற்கிடையில் நீ குடும்பஸ்தனாகிவிடவேண்டும் …” என்று கூற,

 

“அப்பா… எம்ஜென்… உங்களை அழைக்கிறார்… போங்கள்…” என்று கூறிவிட்டு தந்தையின் பேச்சை அலட்சியம் செய்து, வேகமாக சிவார்ப்பணாவின் அருகே சென்றான் அநபாயதீரன்.

 

சுற்று நேரம் சிவார்ப்பணாவை வைத்த விழி எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவன், பின் தன் முடிவை அவளிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் தவித்தான். எப்படியும் சொல்லித்தானே ஆகவேண்டும்.

 

தவித்தவன், திரும்பி தன் சகாக்களைப் பார்த்தான். பின் சிவார்ப்பணாவைப் பார்த்து,

“இப்போது சென்றாரே… அவர்தான் என் தந்தை…” என்றதும் இவள் திகைத்தாள்.

 

“ஓ…”

 

“நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் இறந்துவிட்டார்கள். என் அப்பா வேறு திருமணம் முடிக்கவில்லை. எனக்காகவே வாழ்ந்தார்… இதோ… இந்த விமானப்படைதான் என்னை வளர்த்தது.” என்று கூற, சிவார்ப்பணாவிற்கு ஓரளவு அவனுடைய முடிவு தெரிந்துபோனது.

 

நேற்று வந்த காதலுக்காக, அவன் தன் தொழிலை விட்டுக்கொடுக்கமாட்டான் என்பது புரிந்தது. கூடவே அவன் செல்லும் இடமெல்லாம், அவனைச் சுற்றி நின்ற வீரர்கள். சல்யூட் அடித்தவாறு விறைத்து நிற்பதையும் இவள் பார்த்துக்கொண்டுதானே இருந்தாள். அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.

 

அவன், எட்டாக் கனி என்பது.

 

ஓரளவு தன் நிலையை அவள் புரிந்துகொண்டாள் என்பதை அறிந்தவன், அவள் கட்டுப் போட்டிருந்த இடங்களை வேதனையுடன் பார்த்தான். தன்னையும் மீறிக் கரங்களை அவள் காயத்தின் மீது வைத்து மெதுவாக வருடிக்கொடுத்தவன்,

 

“இனி உனக்கெந்த ஆபத்துமில்லை அர்ப்பணா… நீ இனி சுதந்திரப் பறவை. எதற்கும் அஞ்சவேண்டியதில்லை…” என்று கூற, அவள் ஆம் என்பதுபோலத் தலையாட்டினாள். அதற்கு மேல் அவளுக்குப் பேச்சு வரவில்லை.

 

“ஆர் யு ஓக்கே…” என்றான் தவிப்புடன். இவளுக்கோ வார்த்தைகள் வராது தடுமாற, உதடுகள் நடுங்க, தலையை மீண்டும் ஆம் என்பது போல ஆட்டினாள்.

 

இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த காதலைப் பற்றிக் கூறவில்லை. ஆனால், அந்தக் காதலை இருவருமே உணர்ந்து கொண்டனர். காதல் என்பது வெறும் வார்த்தைகளால் தெரிவிக்கும் உணர்வா என்ன? இதயத்தால் நுகர்ந்து, உள்ளத்தால் சேகரித்து, உயிரால் கலந்து உடலால் தகித்து புத்தியால் கிறங்கி உணரும் உணர்வல்லவா அது. அதை எப்படி வெறும் சொற்கால் தெரிவிக்க முடியும்?

 

சிவார்ப்பணாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் தனக்குரியவன் அல்ல என்பது. இவன் இந்த நாட்டிற்கு உரியவன். இவனால்தான் இந்தப் பெரிய ஆபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. இவனை வெறும் ஜாடிக்குள் பூட்டிவைக்க முடியாது. இவன் சமுத்திரம். இவனுடைய உதவி இந்த நாட்டுக்குத் தேவை. என் காதல் இவனை வீழ்த்துமன்றி உயர்த்தாது. பெரும் வலியுடன் தன்னவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் சிவார்ப்பணா.

 

“அர்ப்பணா… நான்….” என்று எதையோ கூற வர, உடனே அவன் உதடுகளில் தன் விரலை வைத்துத் தடுத்தவள். எதையும் கூறாதே என்பது போலத் தன் தலையை மறுப்பாக ஆட்டியவள்,

 

“ஐ ஆம் கோய்ங் டு மிஸ் யு தீரன்…” அவன் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவள், எம்பி முதன் முறையாக அவன் உதடுகளைத் தன் உதடுகளால் ஆழ சிறை செய்தாள். எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தனரோ, மெதுவாக விடுவித்தவள்,

 

“ஐ அன்டர்ஸ்டான்ட்… தீரன்…” என்று அவனை விடுவிக்க, அவனும், எதையும் கூறாது, அவளுடைய எலும்புகள் நொறுங்குவதுபோல இறுக அணைத்து விடுவித்து,

 

“ப்ராமிஸ் மி… யு வில் லுக் ஆஃப்டர் யுவர் செல்ஃப் வெரி வெல்…” என்று பரிதவிப்போடு அவள் விழிகளைத் தன் விழிகளால் சிறை செய்தவாறு வேண்டினான்.

 

அவள் நகைப்பும், வேதனையும் வலியும் போட்டிப்போடத் தலையாட்ட, அதற்கு மேல் பொறுக்க முடியாதவனாக, அவள் உதடுகளைத் தன் உதடுகளால் ஆழப் பொருத்தி விடுவித்தவன், அவள் தலையை வருடிவிட்டுத் திரும்பி நடக்கத்   தோடங்கினான்.

 

எங்கே திரும்பிப் பார்த்தால், தன் மனத்தைத் தொலைத்துவிடுவோமோ என்று அஞ்சியவன் போல வேகமாக நடந்தவன் தன் சகாக்களுடன் கலந்துகொண்டான் அநபாயதீரன்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!