Mon. Nov 25th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 42/43

(42)

 

அநபாய தீரன் அந்த அறையின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான். படுக்கை விரிப்பு கலைந்திருந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் கிடந்தன. மேசைகள் உடைக்கப்பட்டிருந்தன. சிவார்ப்பணாவின் செருப்பு அங்கும் இங்குமாகச் சிதறியிருந்தன. ஆனால் அவள் மட்டும் அங்கில்லை.

 

இதயம் துடிக்க, உயிர் மூச்சுத் தடைப்பட, நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது என்று புத்தி அறிவுறுத்தினாலும், அதை ஏற்க மறுத்த மனம், சிவார்ப்பணா எங்கே எங்கே என்று தேடியது.

 

ஒரு வேளைக் குளியலறையில்? வேகமாகச் சென்று குளியல் அறையைத் திறக்கப் போனவனின் இதயம் பலமாக அடித்துக் கொண்டது. அவள் நிச்சயமாக அங்கிருக்கமாட்டாள் என்று புத்தி சொன்னது… இல்லை அவள் இங்கேதான் இருக்கிறாள் என்று மனம் சொன்னது. பெரும் பதட்டத்துடன் கதவைத் திறக்கப் போனவனுக்கு முதன் முறையாகக் கரங்கள் நடுங்கின.

 

இந்தக் கதவைத் திறந்தால் வாழ்நாளில் மறக்க முடியாத காட்சியைக் காண நேருமோ? அவளுடைய உயிருக்கு ஏதாவது ஆகியிருக்குமா? திறந்தால், இரத்தத்தில் குளித்திருப்பாளா… பாத் டப்பில் உயிரற்ற உடல்…’ அதற்கு மேல் அவனால் சிந்திக்க முடியவில்லை.

 

இதயத்துடன் சேர்ந்து பதறிய உயிரைத் தன் கரத்தில் பிடிப்பது போல, முஷ்டிகளை இறுக்கிக் கொண்டவன், அச்சத்தில் எச்சிகூட்டி விழுங்கியவாறு, கதவை மெல்லத் திறந்தான்.

 

குளியலறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாப் பொருட்களும் தரையில் கிடந்தன. ஆனால் சிவார்ப்பணா மட்டும் அங்கில்லை. அவள் இல்லை என்று வருந்துவதா, அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மகிழ்வதா? இல்லை அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று பரிதவிப்பதா? புரியவில்லை. ஒரு வித மந்த நிலையுடன் மீண்டும் முன்னறைக்கு வந்தான்.

 

அப்போதுதான் கவனித்தான். மடிக்கணினி வைக்கப்பட்டிருந்த மேசை உடைந்திருந்தது. விரைந்து அதனருகே செற்று உடைந்திருந்த மேசையின் பாகத்தைக் கரத்தில் எடுத்துப் பார்த்தான். அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பையைக் காணவில்லை. ஆத்திரத்துடன் தன் கரத்திலிருந்த அந்த மேசையின் பாகத்தை விசிறி எறிந்தவன், முதன் முறையாகச் செய்வதறியாது மலைத்துப் போய் நின்றான்.

 

தன் பான்ட் பையில் கையை விட்டுப் பார்த்தான். கைக்கடிகாரம் இன்னும் அவனிடம்தான் இருந்தது. நிம்மதியுடன் தன் தலையைக் கோதிக்கொள்ளத் தன் இடக்கரத்தைத் தூக்கியபோதுதான், அவனுடைய கண்களில் சுவரில் தெறித்திருந்த இரத்தமும், அது சற்றுத் தூரம் இழு பட்டு, மெத்தையின் ஓரத்தில் சிந்தி தரையிலும் விழுந்திருப்பது பட்டது.

 

இதயம் நின்றுவிடுவேன் என்று பயமுறுத்துவது போல, வேகமாக அடிக்க, அதனருகே விரைந்து சென்றவன், இரத்தத்தை மெதுவாகத் தொட்டுப் பார்த்தான். காயாமல் இருந்தது. சிவார்ப்பணாவின் இரத்தம். அவனுடைய சிவார்ப்பணாவின் இரத்தம்.

 

யாரோ சிவார்ப்பணாவின் தலையைச் சுவரோடு மோதி இழுத்துச் சென்றிருக்க வேண்டும். கீழே மெத்தையின் மீது விழுந்து பின் தரையில் சரிந்திருக்கிறாள்.

 

தாங்க முடியாத வலியுடன், தன் தலையை இறுகப் பற்றிக்கொண்டவனுக்கு எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. என்னதான், மனம் தன்னை சமாதானப் படுத்தினாலும், தரையிலும், சுவரிலும், மெத்தையிலும் சிந்தியிருந்த இரத்தம் அவன் இறுகிய மனத்தையும் சுக்கு நூறாக உடைத்துக்கொண்டிருந்தன.

 

‘நான் தவறு செய்துவிட்டேன்… மிகப் பெரும் தவறு செய்துவிட்டேன். அவளைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றிருக்கக் கூடாது… எதிரிகளைப் பிடிக்கவேண்டும் என்கிற வெறியில், அவளுக்கு வரக்கூடிய ஆபத்தை யோசிக்கவில்லை… இப்போது அவள் எங்கே… அவள் உயிருக்கு…’ மீண்டும் மனம் அதிலேயே நினைக்க, அதற்கு மேல் யோசிக்க முடியாதவனாக,

 

“நோ… நோ… அவளுக்கு ஒன்றுமில்லை… ஒன்றுமேயில்லை…’ என்று அவன் உருப்போட்டுச் சொல்லிக் கொண்டிருந்தானே தவிர, அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

 

‘அவளைத் தேடிப் போகவேண்டும்… எங்கே போவது? எங்கேயென்று தேடுவது? அவர்களைத் தேடுவதற்குள் காலம் கடந்துவிடுமா?’

 

சிவார்ப்பணாவைத் தாக்கியவன் மட்டும் இப்போது அவன் முன்னால் வந்தால்… அவனை அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொலை செய்துவிடும் மன நிலையில் வேகமாக மூச்சுக் காற்று சீறிப் பாய, அந்தப் படுக்கையில் அமர்ந்தவனுக்கு முதன் முதலாக அடுத்த என்ன செய்வது என்று புரியவில்லை.

 

அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. எதையும் கண்ணிமைக்கும் நொடியில் செய்து பழக்கப்பட்டவன் அவன். ஆனால், இப்போது, என்ன செய்வது என்று விளங்காமல், எதை உணர்வது என்று தெரியாமல் கலங்கி நின்றான் அந்த வீரமகன்.

 

இப்படியே இருக்க முடியுமா? “டாமிட்… டாமிட்…” என்று கத்தியவன் எழுந்து வேக நடை பயின்றான்.

 

அவளை எங்கே கொண்டு பேயிருப்பார்கள்? ஒரு மணி நேரத்தில் எங்கேயென்று போயிருப்பார்கள்? பரந்த பிரதேசத்தில் எந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தேடுவது? கோப மிகுதியால் அருகேயிருந்த கண்ணாடி மேசையைக் குத்தி உதைத்தான்.

 

‘நீ யாராக இருந்தாலும் நான் உன்னை விட மாட்டேன்… விட மாட்டேன்… விட மாட்டேன்…” என்று வெறி வந்தவன் போலக் கத்தியவன், ஓங்கி இரத்தம் தோய்ந்த கரத்தால் சுவரைக் குத்தினான். அப்படியிருந்தும் மனம் சமப்பட மறுத்தது. அவனால் அவனுடைய கோபத்தை அடக்கவே முடியவில்லை.

 

ஒன்றும் செய்ய முடியாதவனாகத் திரும்பி சுவரோடு சாய்ந்தவன், அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தவனின் கண்கள் கலங்கின.

 

‘பாவம் என்ன செய்கிறாளோ தெரியவில்லையே… அவனைக் காணாமல் அவள் பயந்துபோவாளே… தவிப்பாளே… இப்படி தலை மோதச் சுவரில் தள்ளிக் காயப்படுத்தியவர்கள், இன்னும் எப்படியெல்லாம் அவளைச் சித்திரவதைப் படுத்துவார்களோ. அவளால் சிறு வலியையும் தாங்க முடியாது… பெரும் வலியை எப்படிச் சகிப்பாள்…’ நினைக்கும் போதே அவனால் தாள முடியவில்லை.

 

“ப்ளீஸ் பேபி… பி ஸ்ட்ரோங்… ஐ வில் பி தெயர்… உனக்கு ஒன்றுமாகாது… மனதை மட்டும் தளர விட்டுவிடாதே” என்று தன் மனதோடு அவளிடம் பேசியவனுக்கு அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்கிற சந்தேகம் எழுந்தது. பதறிக்கொண்டு எழுந்தவன் தன் நெற்றியை இடது கரத்துப் பெரும் விரலாலும் சுட்டு விரலாலும் அழுந்தப் பற்றி வருடியவாறு,

 

“நோ… நோ… நோ… இல்லை… அவளுடைய உயிருக்கு ஒன்றுமாகாது… அவர்கள் உண்மையை அறியும் வரை அவள் உயிருக்கு எதுவும் ஆகாது… நிச்சயமாக ஆகாது…” என்று துடித்தவனுக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகப் புரிந்தது.

அவனால் சிவார்ப்பணாவை இழக்க முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் அவளை இழக்க முடியாது. அவனுக்கு அவள் தேவை. முழுதாக, உயிருடன். கிடைப்பாளா…?’

 

அவனுடைய பொறுமையை அதிகம் சோதிக்காமல் தொலைப்பேசி அடிக்க அவசரமாகத் தன் பான்ட் பையிலிருந்து அதை எடுத்து உயிர்ப்பித்தான் அநபாயதீரன்.

 

மறு முனையில் சிறிது அமைதி காக்க. இவன் இங்கிருந்து பல முறை ஹலோ… ஹலோ என்று கத்தினான்.

 

இருக்கும் நிலையில் அவனுடைய நிதானமும், பொறுமையும் எங்கோ மறைந்துவிட்டிருந்தன.

 

அதன் பிறகே மறு பக்கம் மெல்லிய சிரிப்பொலி அவனுடைய காதிற்கு எட்ட, சிரமப்பட்டுத் தன்னை நிதானப் படுத்தி, அமைதி காத்தான்.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் தெளிவு மிக மிக அவசியம். அவனுடைய குழப்பமும், பதட்டமும், எதிரிக்கு நேர்மறையான தாக்கத்தைக் கொடுக்கும். அதற்கு வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது.

 

தவிர, அவனுடைய பதற்றம், அவனுக்கு எதிர்மறையான விளைவுகளைக் கொடுக்கும். அவனுடைய புத்தி மழுங்கடிக்கப்பட்டுவிடும். அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்கவோ, அதன் படி நடக்கவோ முடியாது.

 

‘அநபாயன்… கன்ட்ரோல் யுவர் செல்ஃப்…’ என்று தனக்குத் தானே அறிவித்தவன், எதிரிக்குக் கேட்காத வகையில் தன் மூச்சைக் கட்டுப்படுத்தி, நீண்ட பெரும் மூச்சுக்களை எடுத்து மெதுவாக வெளியே விட்டான்.

 

கூடவே, தன்னுடைய காதுகளைக் கூர்மையாக்கி, பேசுபவனின் குரலையும், அவனைச் சுற்றியுள்ள சூழலையும் கிரகிக்க முயன்றான்.

 

“ஹலோ மை ஃப்ரன்ட்…” என்று யாரோ ஒருவன் தன் சொந்தக் குரலை யாரும் அறிந்துவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் கணினியின் குரலில், பேச, அநபாயதீரனோ,

 

“வெயர் இஸ் ஷி…” என்றான் சுற்றி வளைக்காமல்.

 

“நொட் பாட்… உன்னுடைய ஊகம் பிரமாதம்…” என்று மறு பக்கம் அதே ஏளனத்துடன் ஆங்கிலத்தில் கூற,

 

“வெயர் இஸ் ஷி…” என்றான அநபாயதீரன் கடித்த பற்களுக்கிடையே. எதிரியோ, அவனுடைய கோபத்தை நன்கு ரசிப்பவன் போன்று சிரிக்க, இவனுடைய இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறத் தொடங்கியது.

 

“ஹே எதற்கு இந்தக் கோபம்… ம்… ஆனால் சொல்லக் கூடாது… அந்தப் பெண் பேரழகியாகத்தான் இருக்கிறாள்… அவளுடைய அங்க வளைவுகள்… வாவ்… சும்மா…” என்று எதிரி முடிக்கவில்லை,

 

“ஏய்… ஸ்டாப்… இதோ பார்… கவனமாக நான் சொல்வதைக் கேள்… நீ யார்… எந்த நரகத்திலிருந்து நீ வந்திருக்கிறாய் என்று எதுவும் எனக்குத் தெரியாது… ஆனால்… அர்ப்பணாவின் மீது, ஏதாவது ஒரு சின்னக் கீறல்… சின்னக் கீறல் இருந்தாலும்… உன்னை நான் சும்மா விட மாட்டேன்… ஐ பிராமிஸ் யு…. ஐ வில் கில் யு…” என்றபோது, அவன் குரலில் தெறித்த எரிமலையின் சீற்றமும், தீயின் தகிப்பும், கைப்பேசியினூடாகச் சென்று எதிராளியின் காதில் பாய்ந்து சூடேற்ற, எதிரியோ தன்னை மறந்து தன் காதிலிருந்த ரிசீவரைத் தள்ளிப் பிடித்துக் காதைக் குடைந்தவாறே,

 

“ஷ்… அதிக சூடாக இருக்கிறதே… என் காது கூட வெந்து விட்டது…” என்று நகைத்த எதிரி பின்,

 

“வெல் கம் மை பாய்… ஐ ஆம் வெய்ட்டிங்… அன்ட் இதைத்தான் இரண்டு நாட்களுக்கு முன்பும் என்னிடம் சொன்னாய்… நினைவிருக்கிறதா? ஆனால் இன்னும் உன்னைக் காணவில்லையே… சரி சரி… உன்னை நினைக்கவும் பாவமாகத்தான் இருக்கிறது…” என்று கிண்டலுடன் சொன்னவன், திடீர் என்று பளார் என்று எதையோ அறையும் சப்தம் கேட்க, அநபாயதீரன் துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தான்.

 

ஆனால் அந்த எதிரியோ, “எங்கே விட்டேன்… ஆ… எப்போது என்னைத் தேடி வரப்போகிறாய்? உனக்காகக் காத்திருக்கிறேன்.” என்ற கூற, இவனோ,

 

“ஏய்… நீ… நீ என்ன செய்தாய் இப்போது…?” என்னதான் முயன்றும் அவனுடைய குரலில் மெல்லிய நடுக்கம் இழையோடியதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

“ஒன்றுமில்லை… உன்னை அடிக்கவேண்டும் போல் இருந்தது… நீ தான் எங்கேயோ தூரத்தில் இருக்கிறாயே… அதுதான், அந்தப் பெண்ணை அடித்தேன்… நீ ஏன்பா உன்னை அடித்தது போல எதிர்வினை கொடுக்கிறாய்… அவள் என்ன உன் காதலியா? ஓர் யுவர் வைஃப்… இப்படிப் பதறுகிறாயே…” என்று மறுபக்கம் நக்கலுடன் கூற, அநபாயதீரன் கோபத்தின் உச்சிக்குச் சென்றான்.

 

“யூ…” என்று கத்தியவன், என்ன செய்வது என்று புரியாதவனாகச் சுவரை ஓங்கிக் குத்தினான். அவன் குத்திய வேகத்திற்குக் கருங்கல்லே உடைந்து பிளந்திருக்கும். வெறும் ‘ட்ரை வோலா’ல் செய்த சுவர், எப்படி அவன் பலத்தைத் தாங்கும். அடித்த உடன், அவனுடைய கரம் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அதைப் புரிந்து கொண்டது போல மறுபக்கம் நகைத்தது.

 

“ஓ… பயமாக இருக்கிறதே…” என்று கொக்கரிக்க, அநபாயதீரன் தன்னுடைய கோபத்தை அடக்கச் சிரமப்பட்டான்.

 

“ஓக்கே… ஓக்கே… லிசின் டு மி கெயர் ஃபுளி… இந்தப் பெண் உயிரோடு உனக்கு வேண்டும் என்றால்,?” என்று கூறிய அந்த எதிரி சற்று நேரம் அமைதி காக்க, இவனோ உதட்டைக் கடித்து, தெறித்து விழ இருந்த வார்த்தைகளை அடக்கப் பெரும் முயற்சி செய்துகொண்டிருந்தான்.

 

அவன் என்ன கேட்கப்போகிறான் என்பதை அவன் சிரமமின்றி ஊகித்துக்கொண்டான். அவனுடைய கை முஷ்டிகள் இறுக, உடல் அம்பிழுத்த நாணாக நிமிர்ந்து நிற்க, அடுத்து எதிரி சொல்வதைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்ப்படுத்தியவாறு நின்றிருந்தான்.

 

“அந்த பென் ட்ரைவை கொண்டு வா… விரைவாக…” என்று கூற, இவனோ,

 

“என்ன உளறுகிறாய் நீ… என்ன பென் ட்ரைவ்?” என்றான் புரியாதது போல. அடுத்த கணம் அர்ப்பணாவை மீண்டும் அறையும் சத்தம் கேட்க,

 

“ஸ்டாப்… ஸ்டாப்… டோன்ட்…. டச் ஹேர்… நான்… வருகிறேன்…” என்று பதறியவாறு கூறியவன், அவன் சொன்ன விலாசத்தைக் கூற, அதை மனதில் குறித்துக் கொண்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

 

காரணம், அவன் குறிப்பிட்ட இடம், கியூபெக்… அதுவும் டொரண்டோவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கும் அப்பால். விமானம் மூலம் சென்றால் மட்டுமே ஒன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும்.

 

ஒரு கணம் அப்படியே படுக்கையில் அமர்ந்திருந்தவன் தன் இரு விழிகளையும் அழுந்த மூடிக்கொண்டான்.

 

அவன் மனக்கண்ணில் சிவார்ப்பணாவும், அந்த பென்ட்ரைவும் மாறி மாறித் தோன்றின. இதில் எதைக் காப்பான்? அவனுடைய உயிரையா? இல்லை நாட்டின் அழிவையா?’ புரியாமல் தன் முழங்காலின் மீது தன் இடக்கரத்தை ஊண்டியவாறு நெற்றியை அழுத்தமாக வருடிக்கொடுத்துப் பின் இதழ்கள் மீது பதித்து நின்றவனுக்கு, எக்காரணம் கொண்டும் இரண்டையும் இழக்க முடியாது என்பதை அறிந்துகொண்டான்.

 

ஒரு வேளை அவளைக் காப்பாற்ற முடியாமல் போனால்…? அவனால் அதற்கு மேல் நினைக்க முடியவில்லை. விழிகளைத் திறக்க, எதேச்சையாகக் கட்டிலின் அருகே விழுந்திருந்த, செம்மஞ்சள் நிறப் பொருள் ஒன்றின் மீது அவன் பார்வை விழுந்தது.

 

புருவச் சுழிப்புடன், அதைக் குனிந்தெடுத்தவன், அதை உற்றுப் பார்த்தான். அவன் மூளை வேகமாகச் செயற்படத் தொடங்கியது. யோசனையில், விழிகள் சுருங்கின. அது யாருடையது என்பதை யூகித்தவனால், தன்னையே நம்ப முடியவில்லை.

 

“யு…” என்று எழுத முடியாத வார்த்தைகளால் திட்டியவன், தன் பான்ட் பாக்கட்டில் சொருகியிருந்த கைப்பேசியை எடுத்து, சில இலக்கங்களைத் தட்டினான். மறுமுனை எடுக்கப்பட

 

“எம் ஜென்…” என்றவன், நடந்ததை அவன் கூற,

 

“மை காட்… ஆர் யு ஷூர் …” என்றார் மேஜர் ஜெனரல் திகைப்புடன்.

 

“யெஸ்… அதற்கு ஆதாரம் என்னிடம் இருக்கிறது…” என்றான் அவன் தன் கரத்திலிருந்த பொருளைப் பார்த்தவாறு.

 

“ஹூ இஸ் ஹி…” என்றபோது, எம்ஜென்னின் குரலில் அதீத கோபம் தெரிய, இவன் சொன்னான். அநபாயதீரன் ஒன்றைச் சொல்லுவதாக இருந்தால், அதில் எந்தத் தவறும் இருக்காது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட மேஜர்ஜெனரலுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

 

“வாட்… அவனா? அவன் எப்படி…” என்று அவர் குழம்ப,

 

“அதுதான் என் கேள்வியும் கூட எம்ஜென்…”

 

“அப்படியானால், அவனுக்கும் அந்தப் பாதாளக் குழுவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. இஃப் ஐ ஆம் ரைட்… அந்த ஏவுகணை தொலைந்து போவதற்கு இவன்தான் உதவி செய்திருக்கவேண்டும்…” என்றார் எம்ஜென்.

 

“யு ஆர் ரைட் எம்ஜென்… என்னுடைய சந்தேகமும் அதுவே. என்னைப் பற்றி நன்கு தெரிந்தவனும் அவனே. என் பாதுகாப்பில் சிவார்ப்பணா இருக்கும் வரையும், ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்ததால், என்னைத் திசை திருப்புவதற்காக, வெளியே வரவழைத்து, அந்தச் சந்தர்ப்பத்தில் சிவார்பப்ணாவைக் கடத்தியிருக்கிறார்கள்…” என்றான் அநபாயதீரன் சீற்றமாக.

 

“ஒரு வேளை அந்தப் பெண்ணும் இணைந்து…” என்று அவர் முடிக்கவில்லை

 

“நோ… நோ… டெஃபினிட்லி நாட்… அர்ப்… மிஸ் சிவார்ப்பணா வாமதேவனுக்கும், இந்த கேசிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஷி இஸ் இனசன்ட்… சொல்லப்போனால், அவளுடைய தந்தை செய்த எந்தத் தில்லுமுல்லுக்களும் இது வரை தெரியாது.” என்று இவன் இறுக்கத்துடன் கூற, மறு பக்கம் அமைதி காத்தது.

 

“ஆர் யு ஷூர்…”

 

“பொசிடிவ் எம்ஜென்…”

 

“ஒரு வேளை அவள் மீது நீ கொண்ட ஈர்ப்பால்…”

 

“நோ எம்ஜென்… எதுவாக இருந்தாலும், என் நாடே எனக்கு முக்கியம்… தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த நாட்டுக்கு முன்பாக அவர்கள் மண்டியிட வேண்டியவர்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல…” என்றான் அநபாயதீரன் அதே கடுமையுடன்.

 

“சோ வட் நெக்ஸ்ட்…”

 

“ஐ நோ வட் டு டூ…. என்னால் இதைச் சரி செய்ய முடியும்… பட் ஐ நீட் யுவர் ஹேல்ப்…”

 

“தென் ஓகே மை பாய்… நம் இடத்திலேயே கறுப்பாடு இருக்கிறது என்றால், அதை விட்டு வைக்கக் கூடாது. கூண்டோடு அழித்து விட வேண்டும். உனக்கு முழு அதிகாரமும் தருகிறேன்… யார் என்ன கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்கிறேன்… இவர்களுக்கு உன் முறைதான் சரிப்பட்டு வரும்… கோ அஹெட் மை சன்…” என்று அவர் உறுதி கூற, நன்றி கூறிவிட்டு உடனே டானியலுக்குத் தொலைபேசி எடுத்தான்.

 

“யெஸ் கேர்னல்…” என்றான் டானியல் உடனே.

 

“ஐ நீட் ஹெலிகாப்டர் ரைட் நவ்… அதோடு  எனக்கு சில திறமையான வீரர்கள் வேண்டும்… நான் ஏற்கெனவே என்னுடைய இடங்காண் கருவியை (GPS) உயிர்ப்பித்திருக்கிறேன். ஒரு மணி நேரத்தில் நான் எங்கிருக்கிறேனோ அங்கே அவர்களை வரச் சொல்” என்று கூற,

 

“ஒரு நிமிடம் கேர்னல்…” என்ற டானியல் உடனே தன் கணினியை அநபாயதீரனின் இடங்காண் கருவியுடன் இணைத்தான். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பது அது காட்ட,

 

“டன் கேர்னல்…” என்று விட்டுக் கைபேசியை அணைத்தான்.

 

அநபாயத தீரன், தாமதிக்காமல், அறையின் படுக்கையை நெருங்கினான்.

 

ஒற்றைக் கரத்தால், வேகமாக அந்தப் படுக்கையிலிருந்த மெத்தையை இழுத்து எறிந்தான். கட்டில் அடித்தளத்தின் மீதிருந்த துணியை உருவி எடுக்க, கீழே பலகையொன்று பதிக்கப்பட்டிருந்தது. அதை இழுத்து எறிய, பல வகையான துப்பாக்கிகளும், வேறு ஏதோ இனம் பெயர் தெரியாத பொருட்களும் அதற்குள் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

 

அடுக்கிவைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளைக் கரம் கொண்டு வருடியவன், தனக்குத் தேவையானதைத் தேர்வு செய்து, லோட் பண்ணி ஒரு பக்கமாக அடுக்கினான். அதற்குள்ளிருந்த கரிய நிற ஆடையை வெளியே எடுத்து அணிந்து ஸிப்பைக் கழுத்துவரை இழுத்துவிட்டான். அங்கிருந்த ஆயுதங்கள் செருகும் பட்டிகளை எடுத்துக் கட்டவேண்டிய இடங்களில் கட்டினான்.    கைத்துப்பாக்கிகளைச் செருக வேண்டிய இடத்தில் செருகினான்.

 

விதம் விதமான கத்திகள் கொண்ட பட்டியைத் தொடையில் கட்டினான்.

 

அதற்குள் இருந்த நீளப் பையை எடுத்து, அதற்குள் எடுத்து வைத்திருந்த துப்பாக்கிகளை அடுக்கினான்.

 

தொடர்ந்து, ஒரு பக்கமாகச் சிறிய போத்தல் ஒன்றிலிருந்த மாபிள் வடிவான உருண்டைகளை எடுத்துப் பான்ட் பாக்கட்டில் போட்டான். அதே போலச் சற்று பெரிய உருண்டைகளும் இருக்க, அவற்றையும் எடுத்துத் தன்னுடைய பாக்கின் ஓரமாக இருந்த சிறிய பையில் போட்டான்.

 

ஓரமாக இருந்த கைபேசி ஒன்றையும் எடுத்து அதை உயிர்ப்பித்து, அதை இடுப்பில் செருகி, அதற்குள் இருந்த கரிய நிறக் குளிர் கண்ணாடியை எடுத்து அதைச் சட்டைப்பையில் கொழுவிவிட்டுக் கரிய நிறத் தொப்பியை அணிந்துவிட்டு நிமிர்ந்த போது, அவனுடைய ஆறடி நான்கங்குல உயரத்திற்கும், அவன் அணிந்திருந்த கரிய ஆடைக்கும், இடம் விடாது செருகப்பட்டிருந்த ஆயுதங்களும் பார்ப்பதற்கே படு பயங்கரமாக இருந்தது.

அனைத்தும் தயார் என்றபின், அவன் அறையை விட்டு வெளியேறவும் சற்றுத் தள்ளியிருந்த வெட்டவெளியில் ஹெலிக்காப்டர் ஒன்று தரை இறங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

 

வரவேற்பாளரிடம் தலையை ஆட்டி ஏதோ குறிப்புக் கொடுத்துவிட்டு, வாசலைத் திறந்து, வெளியேறி, ஹெலிக்காப்டரை நோக்கிச் சென்றான்.

 

தன் கரத்திலிருந்த பெரிய பையை பின் இருக்கையில் போட்டு விட்டு விமான ஓட்டியின் கையைப் பற்றிக் குலுக்கியவாறு, முன் இருக்கையில் ஏறி அமர்ந்தவன், ஹெட் செட்டைப் போட்டவாறு, கியூபெக் ஃபொரஸ்ட்… என்றான்.

 

(43)

 

மெதுவாகத் தன் விழிகளைத் திறக்க முயன்று முடியாமல் மூடி மூடி விழித்தாள் சிவார்ப்பணா. தலை வேறு விண் விண் என்று வலித்தது. வலித்த தலையை அழுத்துவதற்காகத் தன் கரத்தைத் தூக்க முயல, அது வரமாட்டேன் என்று அடம்பிடிக்க, யோசனையுடன் சிரமப்பட்டுக் குனிந்து பார்த்தாள்.

 

யாரோ அவளைக் கதிரையில் கட்டிவைத்திருந்தார்கள். கைகளும் கால்களும் கட்டுப்பட்டிருந்தன. எப்படி இங்கே வந்தோம்? என்று புரியாமல் யோசித்தவளுக்குச் சற்று முன் நடந்தது நினைவுக்கு வந்தது.

 

அநபாயதீரன் சொன்னதுபோல அவள் பத்து நிமிடங்களுக்குள் தயாராகத்தான் இருந்தாள். ஆனால் அவன் சென்ற சில விநாடிகளுக்குள் யாரோ அந்தக் கதவைத் திறக்க, அநபாயதீரன்தான் திறக்கிறான் என்கிற எண்ணத்தில், நிம்மதியுடன் திரும்பிப் பார்த்தால், பயங்கர ஆயுதங்களுடன், இருவர் வேகமாக உள்ளே நுழைந்தனர்.

 

இவள் கத்துவதற்கு வாய் எடுக்க, அவள் வாயைப் பலமாகப் பொத்திய ஒருவன், ஆவேசமாக அவளைத் தள்ளிவிட, அவன் தள்ளிய வேகத்தில் சுவரோடு முட்டுப்பட்டதுதான் தெரியும். அதற்குப் பிறகு எதுவும் அவள் நினைவில் இல்லை. விழித்துப் பார்த்தால், எங்கோ இதுவரை பார்த்திராத இடத்தில் கைகால் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறாள்.

 

இது என்ன இடம் என்று விழிகளால் அலசியவளுக்கு அது தட்டுப்பட்டது.

 

சற்றுத் தொலைவில் ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள், இரண்டடி நீளமான ஏவுகணை ஒன்று பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.

 

“அடக் கடவுளே… இதுதானா என் தந்தை கண்டு பிடித்த ஏவுகணை… அது இங்கா இருக்கிறது…” என்று மனதிற்குள் அதிர்ந்தவள், சற்றுத் தள்ளி நின்ற ஐந்தாறு பேர்கள் அவள் கவனத்தைக் கவர, யார் அவர்கள் என்கிற யோசனையில் பார்த்தாள். அவர்கள் ஒரு மேசையில் சுற்றி அமர்ந்தவாறு, எதையோ குடைந்து கொண்டிருந்தனர்.

 

தன் விழிகளைச் சற்றுக் கூர்மையாக்கி உற்றுப் பார்த்தவள் அதிர்ந்து போனாள். ‘இது… இது என் தந்தையின் குறிப்பேடும், ரகு கொடுத்துத மடிக்கணினியும் அல்லவா. இது எப்படி இங்கே?’ என்று புரியாமல் திகைத்தவளுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது.

 

அவளை மட்டுமல்ல, அந்த மடிக்கணினியையும், சேர்த்துக் கடத்தியிருக்கிறார்கள்.

 

‘கடவுளே இதைக் காணவில்லை என்று அநபாயதீரன் தவிக்கப்போகிறேனே… நான்தான் இதை எடுத்துக்கொண்டு தப்பிவிட்டேன் என்று தப்பாக நினைத்துவிடுவானோ… இல்லை என்று அவனுக்கு எப்படிப் புரியவைப்பேன்…’ என்று கலங்கியவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

 

‘ஐயோ… இதைக் கொண்டு அவர்கள் நாசகாரியச் செயல்களைச் செய்துவிடுவார்களே… இதை எப்படித் தடுக்கப்போகிறோம்… தீரனிடம் எப்படித் தெரிவிக்கப்போகிறேன்… முதலில் நான் எங்கே இருக்கிறேன் என்று கூடத் தெரியவில்லையே.” என்று தவிக்க மட்டுமே அவளால் முடிந்தது. கூடவே அவளுடைய மனது அநபாயதீரனைப் பெரிதும் நாடியது.

 

அவளுக்கு அநபாயதீரன் வேண்டும். இப்போதே, இந்த நிமிடமே அவன் வேண்டும். அவளை அணைக்க வேண்டும். மார்போடு அவளுடைய முகத்தை அழுத்தி, “கண்ணம்மா… நான் இருக்கிறேன். பயப்படாதே…” என்று சொல்ல வேண்டும். ஒரு முறை, ஒரே ஒரு முறை அவன் கரங்கள் அவள் மேனியில் பட்டால் போதும், அனைத்து வலிகளும் பறந்துபோய்விடுமே. ஒரு விழிப் பார்வை அவள் மீது பட்டால் போதும், அத்தனை கலக்கமும் மாயமாக மறைந்துவிடுமே… அவன் நின்றிருந்தால், நிச்சயமாக இந்த நிலை வர அவன் விட்டிருக்கமாட்டான். இப்போது என்னைத்தான் தவறாக அவன் புரிந்துவைத்திருப்பானோ… தீரன்… சத்தியமாக இவற்றை எடுத்துக்கொண்டு நான் மாயமாகிவிடவில்லை… ப்ளீஸ் என்னைத் தேடி விரைந்து வாருங்கள்…’ என்று பெரும் வேதனையில் தவிக்க மட்டும்தான் அவளால் முடிந்தது.

 

‘கடவுளே… இப்போது இவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கப்போகிறேன்?’ என்று சோர்வுடன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ‘டக்… டக்… டக்…’ யாரோ அவளை நோக்கி நடந்து வரும் சலசலப்புச் சப்தம் கேட்க, அச்சத்துடன் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பயத்தில் உடலும் மனமும் இறுக அப்படியே அசையாது கிடந்தாள்.

எழுந்துவிட்டோம் என்கின்ற உண்மை அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகச் சிரமப்பட்டுத் தன் மனத்தை ஒரு நிலைப் படுத்தி, அச்சத்தில் துடித்த உடலைச் சமாளித்து, மயக்கம் போலவே விழிகளை மூடிக் கிடந்தாள்.

 

அவளை நெருங்கிய காலடி சத்தம், சற்று நேரம் அவளைப் பார்த்துக்கொண்டு அங்கேயே அப்படியே நிற்க, இவளுக்குக் கண்களை மூடி அப்படியே அதிக நேரத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. அவளையும் மீறி, கண் மணி அசைந்து, தாம் எழுந்துவிட்டோம் என்று எதிரிக்குக் காட்டிக்கொண்டிருந்தன.

 

“சிவார்ப்பணா… நீ மயக்கம் தெளிந்து எழுந்துவிட்டாய் என்பது எனக்குத் தெரியும், அதனால் உன்னுடைய நடிப்பை மூட்டை கட்டிவிட்டு எழுந்து கொள்…” என்ற அந்தக் குரலைக் கேட்டதும், ‘இ… இந்தக் குரல்?’ அதிர்ச்சியில் பொறி தட்டியவளாகச் சடார் என்று தன் விழிகளைத் திறந்தாள் சிவார்ப்பணா.

 

விழித்தவளுக்கு அங்கே நின்றிருந்தவரைக் கண்டதும் மீண்டும் மயக்கம் வந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. அப்படியே விறைத்துப் போய் முன்னால் நின்ற மனிதனையே விழிகள் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பேச முடியாமல் நாக்கு அண்ணாக்கோடு ஒட்டிக் கொண்டது.

 

“என்னம்மா அப்படிப் பார்க்கிறாய்? ஆச்சரியமாக இருக்கிறதா? ஆச்சரியப் படாதே… நானே தான்…” என்றவரை மீண்டும் நம்ப முடியாதவளாக விழிகளை மூடி மூடித் திறந்து பார்த்தாள்.

 

ஒரு வேளை அவளுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ? அதனால்தான் இல்லாத உருவம் இருப்பது போலத் தெரிகிறதோ? அவள் சிலையாகி நிற்க, அவள் முன்னால் தன் கரத்தைத் தூக்கிச் சொடக்கியவரை ஏறிட்டவள்,

 

“மாமா… நீ… நீங்களா…?” என்றாள்.

 

அவளால் இன்னம் அந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. மனம் முழுவதும் குழம்பித் தவித்தது. எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாமல், அவரையே மலங்க மலங்கப் பார்த்தாள்.

 

“என்ன… திகைப்பாக இருக்கிறதா? இல்லை சந்தேகமாக இருக்கிறதா? சந்தேகம் வேண்டாம். நானே தான்…” என்றார் ராகவன்.

 

ஆம் ராகவன்… அதே ராகவன்… ரகுவின் தந்தை… பானுவின் அன்புக் கணவன். அவளால் வாய் நிறைய மாமா என்று அழைக்கப்பட்டவர். வாமதேவனின் நெருங்கிய நண்பன்… இப்போது வில்லனாக, விழிகளில் வக்கிரமும், கோபமும், ஏளனமும் போட்டிப்போட அவளையே ஏளனத்துடன் பார்த்து நகைத்துக்கொண்டிருந்தார்.

 

அதே நகைப்பு மாறாமல், சற்றுத் தள்ளியிருந்த இருக்கையை இழுத்து, அவளுக்கருகே போட்டு, கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டார்.

 

சிவார்ப்பணாவைப் பார்த்தவாறு தன் கரத்தைப் பின்புறமாக நீட்ட, அவர் கையில் சிகரட் பாக்கட் ஒன்று வைக்கப்பட்டது.

 

அதை அலட்சியமாக வாங்கியவர், அதில் ஒன்றை எடுத்து, இருக்கையின் கைப்பிடியில் தட்டிவிட்டு உதட்டில் செருக்கி, அதற்குத் தீ மூட்ட அது பற்றிக்கொண்டது. சிவார்ப்பணாவைப் பார்த்துக்கொண்டே, ஆழமாக அந்தப் புகையை உள்ளே எடுத்து வெளியே விட்டவாறு, எதையோ நினைத்துச் சிரித்தார்.

 

பின் அவள் புறமாகக் குனிந்தவர்,

 

“என்ன… அதிக அதிர்ச்சி போலும்? பார்த்துமா… இதயம் நின்றுவிடப் போகிறது… உனக்கு ஒன்றென்றால், நான் இப்போது மேற்கொள்ளும் அத்தனை முயற்சியும் நாசமாகப் போய்விடும்… அதனால்… தயவு செய்து, எனக்கு உண்மை கூறும் வரையும் உயிரைக் கையில் பிடித்துக்கொள் சரியா?” என்று அவர் கூறியபோதும், இன்னும் சுயத்திற்கு வராமல் விழித்தாள் சிவார்ப்பணா.

 

அவள் விழிப்பதைக் கண்டு மேலும் சிரித்தவர்,

 

“அதிகம் மூளையைப் போட்டுக் குழப்பாதே… நானே சொல்லிவிடுகிறேன்…” என்றவர் மீண்டும் புகையை இழுத்து விட்டவாறு,

 

“நீ….. சேவியர்… பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? சேவியர் ஆர்னல்…” என்று அவர் புன்னகையுடன் கேட்க இவளின் மூளையில் எங்கோ வெளிச்சம் எரிந்தது. அன்று அநபாயதீரன் கூறும்போது, கனடடிய அரசால் தேடப்படும் பயங்கரவாதி என்று ஏதோ கூறினான் அல்லவா… அவன்தான் இவனா?’ இவளால் நம்பவே முடியவில்லை.

 

அவளுடைய குழம்பிய முகத்தைக் கண்டு,

 

“உனக்குத் தெரிந்திருக்காது… உனக்குத்தான் வாயில் விரல் வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாதே… நானே சொல்கிறேன், இன்றைய தேதியில்  கனடிய அரசு தேடிவரும் கனடாவின் பயங்கரவாதக் கும்பலின் தலைவன் சேவியர்… அது நான் தான்…” என்றதும் சிவார்ப்பணாவிற்கு விழிகள் விரிந்து தெறித்துவிடும் போல ராகவனை இல்லை இல்லை சேவியரை வெறித்தன. அவளால் நம்பக் கூட முடியவில்லை.

 

“நீங்கள்… நான் எப்படி… பொய்… நான் இதை நம்பமாட்டேன்…” என்று அவள் உறுதியாகக் கூற,

 

“நீ நம்பினால்தான் என்ன நம்பாவிட்டால்தான் எனக்கென்ன… நமக்கு நம்முடைய காரியம் தடையின்றி ஆனால் சரிதான்…” என்றவர், தன் கரத்தை விசிறித் தலையாட்டி,

 

“அதை விடு… இப்போது உன்னை எதற்கு இங்கே கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா? உன் அப்பா… அதுதான் என்னுடைய நண்பன், ஒரு ஆயுதம் கண்டு பிடித்தானே… அது பற்றிய முழு அறிக்கையும் வேண்டும். முக்கியமாக உள்ளே ஊடுருவுவதற்கான கடவுச் சொல்… சரியானது போடப்படவில்லை என்றால், அத்தனையும் அழிந்து விடுமாமே… நான் சொல்லவில்லையம்மா… அதோ அந்த நிபுணர்கள் சொன்னார்கள். உன்னுடைய தந்தையின் குறிப்பேட்டைக் குடைந்ததில், இப்போதைக்கு அதை மட்டும்தான் கண்டு பிடிக்க முடிந்தது. மரியாதையாகச் சொன்னாய் என்றால், சேதாரமின்றி நீ வெளியே போகலாம்… இல்லை என்றால்…?” என்று அவர் இழுத்தவாறு கூற, சிவார்ப்பணாவின் கட்டுப்பாட்டையும் மீறி உடல் நடுங்கியது.

 

நல்லவேளை கரங்கள் கட்டுப்பட்டிருந்தன. இல்லையென்றால், கடவுச்சொல் என்றதும், தலையை வருடிவிட்டிருப்பாள். சும்மா இருந்த அந்த ராகவனுக்கு அவல் கிடைத்தது போலாகிவிடும். சிரமப்பட்டுத் தன் பதட்டத்தை மறைத்தவள்,

 

“இல்லை எனக்குத் தெரியாது… சத்தியமாக இது பற்றி எதுவும் எனக்குத் தெரியாது… அப்பா கண்டு பிடித்த கிருமிகள் கொண்ட ஆயுதமோ, இல்லை அறிக்கைகளோ எதைப்பற்றியும் எனக்குத் தெரியாது…” என்று அவள் அலற, ராகவன் கடகட வென்று சிரிக்கத் தொடங்கினார். ஓரளவு சிரிப்பு முடிந்ததும்,

 

“ஆயுதம் என்றுதானே சொன்னேன்… கிருமிகள் கொண்ட ஆயுதம் என்று சொன்னேனா… என்னம்மா… இப்படி வாய் விட்டு மாட்டிக்கொள்கிறாயே… ம்… உன்னை என்ன பண்ணலாம்…” என்று கேட்க, சிவார்ப்பணாவிற்குத் தன் மீதே பெரும் ஆத்திரம் எழுந்தது. அச்சத்துடன் அவரைப் பார்க்க,

 

“இரண்டு மூன்று நாட்களாக அந்த அநபாயனுடனேயே படுத்தெழுந்திருக்கிறாயே… சொல்லாமலா விட்டிருப்பான்? இதை நம்பச் சொல்கிறாயா?” என்று ராகவன் கிண்டலுடன் கூற,

 

“இதோ பாருங்கள்… மா… சேவியர்… எனக்குச் சத்தியமாக அது பற்றி எதுவும் தெரியாது… இந்த ஆயுதங்கள் பற்றி தீரன் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது… சத்தியமாகத் தெரியாது…” என்று முடிக்கவில்லை,

 

“தீரன் சொன்னானா? என்ன சொன்னான்?” என்று ஆக்ரோஷத்துடன் கேட்டவரிடம், ஒருவன் விரைந்து வந்து, ராகவனின் காதில் எதையோ கூற, வேகமாக எழுந்த ராகவன், அவளுடைய தலையை மடக்கி, முடியைப் பற்றி இழுத்துக் கழுத்துப் புறமாக எதையோ தேடினார். அங்கே அவர் தேடிய எதுவும் கிடைக்காமல் போக, ஆத்திரம் தாள முடியாது, திரும்பித் தன்னருகே நின்றவனின் கன்னத்தில் பளார் என்று ஒன்று கொடுத்தார்.

 

“அவன்தான் புரியாதவாறு எழுதியிருக்கிறான் என்றால், அதைப் படித்துவிட்டுத் தப்பாக வேறு வந்து சொல்கிறாயே… அறிவில்லை…” என்று சீற,

 

“சாரி சார்… அதிலிருந்த ஒரு பாட்டு, கழுத்து வளைவில் கிடைக்கும் என்பதுபோல கூறப்பட்டிருந்தது… அதுதான்…” என்று அடிவாங்கியவன் இழுத்தான்.

 

“போ… போய் சரியாக விஷயத்தை அறியுங்கள்…” என்று திட்டிவிட்டுச் சிவார்ப்பணாவை ஏறிட்டார் ராகவன்.

 

“சாரி ஃபோர் த இன் கன்வீனியன்ட்…” என்று கூறியது ஏனோ சிவார்ப்பணாவின் மண்டைக்குள் ஏறவில்லை.

 

மனம் முழுவதும் தீரனே நிறைந்திருந்தான். அவன் மட்டும் அழிக்காமல் விட்டிருந்தால்…? விட்டிருந்தால் என்ன? அந்த பென்ட்ரைவ் கிடைக்காத வரைக்கும் ஒன்றும் பண்ண முடியாதே. அந்தப் பென்ட்ரைவை அநபாயதீரன் கூட எடுத்திருக்கமாட்டான். அது எங்கே இருக்கிறது என்று அந்தக் கடவுள் ஒருத்தருக்கு மட்டுமே தெரியும்…” என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டிருக்கும் போதே,

 

“உனக்கொன்று தெரியுமா? உன் அப்பனுக்கு கனடிய அரசு இந்த ஆய்வுக்குக் கொடுக்கும் பணத்தை நிறுத்திய உடன், இந்த ஆராய்ச்சி முழுமை பெற மறைமுகமாகப் பணத்தைக் கொடுத்தவன் நான்தான். இல்லையென்றால் இதை அவனால் கண்டு பிடித்திருக்கவே முடியாது. கண்டு பிடித்ததும், அதை எங்களுக்கு விற்கும் படி கேட்டேன்… எத்தனை பணம் வேண்டுமானாலும் தருவதாகக் கூறினேன். ஆனால் அவன்… ஒரு துப்பும் கிடைக்காதவாறு அனைத்தையும் அழித்துவிட்டான்… நன்றி கெட்டவன். மிரட்டிப் பார்த்தும் அவன் மசியவில்லை… கடைசியில் கோழைபோல உங்களிடமே வந்துவிட்டான்…” என்று சீறிய சேவியர் திரும்பி சிவார்ப்பணாவைப் பார்த்து முறைத்து,

 

“எத்தனை வருடக் கனவு இது தெரியுமா? உன் தந்தை, இத்தகைய அற்புதமான பொக்கிஷம் ஒன்றைக் கண்டு பிடித்து, வைக்கோல் பட்டறை போர் நாய் போல, தானும் அனுபவிக்காமல், பிறரையும் அனுபவிக்க விடாமல்… சே… எல்லாம் கை கூடி வருகிற நேரத்தில்… எங்கிருந்தோ ஒருத்தன் வந்து, அதைக் கொண்டு போய் விடுவானா? நான் என்ன கேனையனா?” என்று அவர் சீற, வாயடைத்துப் போனாள் சிவார்ப்பணா.

 

“இந்த ஆயுதத்திற்காக நான் எத்தனை பில்லியன் டாலர் பணம் பிற நாட்டிலிருந்து வாங்கியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? சே… அவர்கள் திடீர் என்று பணத்தைக் கேட்டால் நான் எங்கே போவேன்… கொடுத்த பணம் அனைத்தையும் இன்வெஸ்ட் பண்ணியாகிவிட்டது…” என்றவர் மீண்டும் ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தவாறு,

 

கடைசியாக உன் அப்பனை மிரட்டிக்கூடப் பார்த்தேன். அவன் அசையவில்லை. கடைசியில் நான்தான் சேவியர் என்பதை அவன் அறிந்து இதோ உன்னைப்போலத்தான் பே… என்று விழித்துக்கொண்டிருந்தான்.” என்று சிரித்த ராகவன், பின் தன் கதிரைச் சட்டத்தின் மீது தன் காலைப் போட்டவாறு, “எனக்கும் வேறு வழியிருக்கவில்லை… என்னைப் பற்றிய உண்மைகளை நிச்சயமாக காவல்துறைக்குச் சொல்லுவான் என்பது புரிந்ததால், தூக்கிவிட்டேன்…” என்றதும், அதற்கு மேல் சிவார்ப்பணாவால் கேட்க முடியவில்லை.

 

“எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம்… எப்படியெல்லாம் இவரை அப்பா நண்பன் என்று எண்ணிப் போற்றினார்… ஆனால்… இவர்… சே…” என்று தவித்தவள்,

 

“என்னை… உங்கள் பெண் என்று சொல்வீர்களே… அதெல்லாம்… வெறும் நடிப்புதானா?” என்றபோது, மேலும் அவளுடைய விழிகள் கண்ணீரைச் சிந்தின.

 

“வேறு வழி… உனக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என்றுதான் நினைத்தேன்…  கடைசியில் உன்னையும் கடத்திற் செல்ல இன்னொரு குழு திட்டமிட்டபோதுதான் நான் விழித்துக்கொண்டேன். நான் நினைப்பதற்கு மாறாக உனக்கு விபரங்கள் தெரிந்திருக்குமோ என்று பின்புதான் புரிந்துகொண்டேன்… அதனால் உண்மைகளை அறியத் திட்டம் போட்டேன். அதனால்தான் பேருந்தை விபத்துக்குள்ளாக்கினேன். அந்த விபத்தில் நீ இறந்துவிட்டதாகக் கணக்குக் காட்டலாம் என்கிற எண்ணத்தில், எல்லாவற்றையும் பக்காவாகத் திட்டம் போட்டால், அந்த அநபாயதீரன் வந்து அனைத்தையும் கெடுத்துவிட்டான்…

 

முதலில் நீ காப்பாற்றப் பட்டது எதேர்ச்சையாக நடந்தது என்று எண்ணியிருந்த நேரத்தில்… அந்த அவன் உன் பின்னால் அலைகிறான் என்பதை அறிந்ததும் நான் உசாரானேன்.

 

அநபாயதீரனே உன்பின்னால் அலைகிறான் என்றால், நிச்சயமாக உன்னிடம் ஏதோ முக்கியமான தடயம் இருக்கிறது என்று நான் நம்பத் தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் உன்னைக் கடத்த முயன்ற போதெல்லாம், அங்கே அநபாயதீரன் உனக்குத் தெரியாமலே உன்னைக் காத்து வந்தான்.

 

“பிறகு பார்த்தால் ரகுவின் நண்பன் என்று என் வீட்டிலேயே வந்து நிற்கிறான்… அவன் என் வீட்டிற்குள் நுழைந்தபோதே, விழித்துக்கொண்டேன். எங்கே அவன் கட்டுப்பாட்டிற்குள் நீ போனால், உனக்குத் தெரிந்த உண்மைகளை அவன் அறிந்துவிடுவானோ என்று எண்ணினேன். அப்போது எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது… நீ உயிரோடு இருந்தால், அது நானே எனக்கு வைக்கும் ஆப்பு. வாமதேவனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும் அரச உடைமையாக்கப்பட்டால் என் கனவெல்லாம், வெறும் கானல் நீராகிவிடும். அதுதான் உன்னைப் போட்டுத்தள்ள முயன்றேன்… அப்போதும் அந்த ஒஒஒ ஒஒஒ வந்து தடுத்துவிட்டான்…” என்றவர் பெரு மூச்சொன்றை விட்டவாறு தலையைச் சரித்து சிவார்ப்பணாவைப் பார்த்தார்.

 

“அடுத்து எனக்குத் துரோகம் செய்தது என் மகன் ரகு… அவன் கூட என்னிடம் உண்மையாக இல்லை தெரியுமா? அவன் உன் அப்பனுக்கு உதவி செய்யப்போகிறான் என்பதை அறிந்ததும் எப்படி மகிழ்ந்தேன். பல்கலைக்கழகத்தை இடையில் நிறுத்தியபோது கூட நான் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் அவன், வாமதேவன் பக்கம்தான் நின்றானே தவிர என்னிடம் அந்த ஆய்வைப் பற்றி மூச்சே விடவில்லை? எப்படியெல்லாம் தூண்டில் போட்டுப் பார்த்தேன்… அவன் அசையவே இல்லையே. கடைசியில் அவன் கூட என்னைக் கண்டு கொண்டான்… என்ன நினைத்தானோ, எனக்குத் தெரியாமலே வாமதேவனின் அத்தனை ஆவணங்களையும் உன்னிடம் சேர்ப்பித்திருக்கிறான். வாமதேவனின் மடிக்கணினியில் அவனுக்குத் தெரியாமலே, கண்காணிக்கும் சாதனத்தைப் பொருத்தினேன். இறுதியில் அது உன்னிடம் வந்து சேர்ந்து, அதுதான் உனக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்னபதை முழுதாகத் தெரிய வைத்தது.

 

மகன் என்றும் பார்க்காமல் அவனைக் கடத்திச் சென்று விவரமறிய முயன்றேன்.” என்றதும் சிவார்ப்பணா விதிர் விதிர்க்க அதிர்ந்துபோய் ராகவனைப் பார்த்தாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!