Mon. Nov 25th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 29/30/31

(29)

 

அந்த வெள்ளையனின் கரங்கள், சிவார்ப்பணாவின் உடலில் படர்ந்தது மட்டுமல்லாது, அவளுடைய ஜாக்கட்டைக் கழற்ற முயல, இவனுடைய வெறி அதிகரிக்கத் தொடங்கியது. அந்த இடத்திலேயே அந்த மல்லனின் கழுத்தை நெரித்துவிடவேண்டும் என்கிற ஆவேசம் பிறந்தது.

 

அந்த வெள்ளையனின் கரங்கள், சிவார்ப்பணாவின் ஜாக்கட்டைக் கழற்றும் போது, அவனுடைய கரங்கள் தாராளமாக அவளுடைய உடலின் மென்மையை உணர்ந்து கொண்டாலும் , அவனுடைய விழிகள் மட்டும் அநபாயதீரனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

 

அந்த மல்லனின் வெறித்த பார்வையைக் கண்டதும், தன்னை வீழ்த்துவதற்குப் பலம் போதாது என்பதால், மனதளவில் தன்னைப் பலவீனப் படுத்த முயல்கின்றார்கள் என்பதை அவன் அறிந்துகொண்டான். அதற்கான ஆயுதமாக அர்ப்பணாவைப் பயன்படுத்த அவர்கள் முயல்கிறார்கள்.

 

இத்தினை நேரத்திற்கு அவர்கள் துப்பாக்கியைப் பிரயோகித்திருக்கலாம். ஆனால் அவர்கள் பாவிக்கவில்லை. அதற்கு முக்கிய காரனம் இவர்கள் இருவரும் உயிரோடு இருக்கவேண்டும். அடுத்தது துப்பாக்கியைக் குடியிருப்புப் பகுதிகளில், உபயோகித்தால், தேவையற்றுப் பிறரின் கவனத்தைத் திசைதிருப்ப வேண்டி வரும் என்பதால், இயன்ற வரைக்கும், சத்தமில்லாமல் காரியத்தை முடிக்கவே நினைப்பார்கள். அதுதான் அவனுடைய ப்ளஸ் பாய்ன்ட்.

 

எப்படியும் அவர்களுடைய குறிக்கோள் சிவார்ப்பணா மட்டுமே. அதனால் எது நடந்தாலும், அவர்களுக்கு வேண்டியது கிடைக்கும் வரைக்கும் அவளைக் கொல்ல மாட்டார்கள். என் பாதுகாப்பில் இருக்கும் வரைக்கும் சிவார்ப்பணாவை அவர்களால் தொட முடியாது. அதனால், எப்படியும் அவளை என்னிடமிருந்து பிரித்துச் சென்றுவிடுவார்கள். அதற்கு நான் வாய்ப்புக் கொடுக்கக் கூடாது’ என்று எண்ணியவன், அந்த மல்லனை வெறித்தான்.

 

இப்போது அந்த எதிரியின் முகம், சிவார்ப்பணாவின் கழுத்து வளைவில் பதிந்திருந்தவாறே தன் சகாக்களைப் பார்த்து, மின்தூக்கியை இயக்குமாறு மெலிதாகத் தலையை அசைத்துக் கூற, அடுத்து மின்தூக்கியின் இலக்கம் ஜி என்பது அழுத்தப் பட்டது. சிவார்ப்பணாவோ அவன் பிடியிலிருந்து துடித்து வெளியேற முயல, விழிகள் மட்டும் அநபாயதீரனைப் பார்த்துத் தன்னை விடுவிக்குமாறு இறைஞ்சியன.

 

சிவார்ப்பணாவின் தவிப்பைப் புரிந்துகொண்டவன், அவளை ஏறிட்டுத் தன் விழிகளை மூடி அவளை ஆறுதல் படுத்தி தைரியமாக இருக்குமாறு கூற, அவனுடைய விழியசைவைப் புரிந்துகொண்டவளின் மனம் அவளையும் அறியாது அமைதிப்பட்டது.

 

அநபாயதீரன் மின்னல் விரைவுடன் தன் சூழ்நிலையை உள்வாங்கிக்கொள்ளத் தொடங்கினான்.

 

ஒருவனின் கவனம் தன்மீது இருந்தாலும், உள் மனது சிவார்ப்பணாவின் மேல் காமத்தின் வசப்பட்டிருக்கிறது..

 

இன்னொருவன் மின்தூக்கியின் இலக்கத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறான். மற்றைய நால்வரின்  கவனமும், தங்கள் தலைவனிடமும், சிவார்ப்பணாவிடமும் இருக்கிறது… மீண்டும் என்மீது தமது கவனத்தைத் திருப்ப, ஐந்து வினாடிகளாவது வேண்டும்… இன்னும் 38 விநாடிகளில் மின்தூக்கித் தரையை அடைந்துவிடும்… கூடவே அவர்களின் கையிலிருக்கும் ஏகே 47ஐ மின்தூக்கிக்குள் தூக்க முடியாது. அதன் நீளம் இடைஞ்சலாக இருக்கும். எடுப்பதாக இருந்தால், கைத்துப்பாக்கி, அல்லது கத்தி. எதை எடுப்பதாக இருந்தாலும், அவர்களுக்குக் குறைந்தது ஒரு விநாடியாவது வேண்டும். கணக்குப் போட்டவன் மெதுவாகத் திரும்பி, மின்தூக்கியின் கதவருகே வந்து, எதிரிகளைப் பார்த்தவாறு திரும்பி நின்றான், ஓரளவு போதுமான இடைவெளியிருக்க, வேகமாகச் செயற்பட்டான்.

 

மற்றவர்கள் சுதாரிக்கும் முன்பாக, ஒரு துள்ளலில், பின்புறமிருந்த கரத்தை, கால்களுக்கு இடையேயாக, முன்புறம் கொண்டு வரும் போதே, தனக்கு முன்புறமிருந்தவனின் தொடையில் செருகியிருந்த கத்தியைப் பற்றியவாறு நிமிர்ந்து எழுந்த விநாடியில், ‘சதக்… சதக்.. சதக்… சதக்… டிங்’ என்று யாரிடமிருந்து தன் கத்தியை எடுத்தானோ, அவனின் மார்பிலும், கழுத்திலுமாக அதிவேகமாகக் குத்தியவன், அவனுக்கு அருகேயிருந்தவனின் கழுத்தில் வலமிருந்து இடமாக ஓங்கிக் கீறியவாறு, அவனுக்கு அடுத்திருந்தவனின் நடு மார்பில் இதயத்தை நோக்கிச் சற்றுச் சரித்துச் சொருகி, அப்படியே இழுத்து, அந்தக் கத்தியைக் கொண்டு சென்று  மின்தூக்கியின் ‘நிறுத்தும் பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்து நின்றான்.

 

கிட்டத்தட்ட ஆறு விநாடிகளில் மூவர் தரையில் கிடந்தனர். இதை யாரும் எதிர்பார்க்காததால் மற்றவர்களின் புத்தியும் அதை உள்வாங்க எடுத்துக்கொண்ட நேரத்தைப் பயன்படுத்தியவன்,

 

கையோடு தனக்கு முன்னே நின்றிருந்தவனை நோக்கிப் பாய்ந்து அவன் தொடையில் ஓங்கிக் கத்தியால் குத்த, அவன் தாங்கமுடியாத வலியுடன் குனிய, மார்புக் குழியில், இடது பக்கமாகச் சரித்து கத்தியை இறக்கிவிட்டு, மீண்டும் அவன் கழுத்தின் கரையோரம் அடுத்த குத்தை லாகவமாக இறக்க, இரத்த வெள்ளத்தில் அவனும் விழுந்திருந்தான்.

 

நான்கு எதிரிகளை வீழ்த்தியவனுக்கு அடுத்த இருவரை விழுத்துவதா சிரமம்.

 

இப்போது ஓரளவு ஆசுவாசப் படுத்தியவன், இரத்தம் தேய்ந்த முகத்துடன், சிவார்ப்பணாவை அணைத்து வைத்திருந்தவனை ஏறிட்டுப் பின் மல்லனுக்கு அருகே அச்சத்தில் விழி பிதுங்கக் கரங்கள் நடுங்க நின்றிருந்தவனை ஏறிட்டான்.

 

ஓங்கிப் பாய்ந்து, தன் முழங்கையால், அவனுடைய மார்பில் குத்தித் தன் தலையால் அவன் மண்டையில் ஓங்கி அடிக்க, மறு கணம் அவன் சுயநினைவு இழந்து கீழே விழுந்தான். , இப்போது ஒருவன் மட்டும் தனித்திருந்தான்.

 

இது தான் அநபாயதீரன். எந்த நிலைமையையும் சுலபமாகத் தன் கரங்களில் எடுத்துக் கொள்ளும் வல்லமை கொண்டவன். எத்தனை சிறந்த போர்வீரர்கள் வந்தாலும், அவர்களைச் சுலபத்தில் தரையில் விழுத்தி மண்ணைக் கவ்வ வைத்துவிடுவான். அவனுக்குத் தெரியாத யுத்தக் கலைகளேயில்லை. சொல்லப்போனால், உலகின் மிகப் பழமையானதும், தமிழரின் பாரம்பரிய யுத்தக்கலையுமான, களரியில் கூட அவன் மிகுந்த தேர்ச்சி பெற்றவன். இது வரை அவனை யாரும் வென்றதில்லை. அவனிடமிருந்த சாணக்கியன் புத்தியும், அதி சிறந்த வீரமும், குறுகிய நேரத்தில், சரியாக முடிவெடுக்கும் திறமையும், யாரிடமும் இது வரை பார்க்கமுடியாத சேர்க்கை.

 

இதுவரை இந்த உலகம் அவனைப் போன்ற வீரர்களைப் பார்த்திருக்கிறதா? இல்லை பார்க்கப்போகிறதா என்பது கேள்விக்குறியே. அதனால்தானோ என்னவோ, வைல்ட் ஃபயர் என்றாலே அனைவருக்கும் ஒரு முறை இதயம் நின்று துடிக்கும். அப்படிப் பட்டவனை, வெறும் கூஜாவிற்குள் அடைப்பது என்றால் அது நடக்கும் காரியமா?

 

இப்போது அந்த இருவரும் சுதாரித்திருக்க, தன் கரத்திலிருந்த சிவார்ப்பணாவை அநபாயதீரன் மீது தள்ளிவிட்ட அந்த மல்லன், தன் கரத்தில் இரு கத்தியைத் தூக்கியிருந்தான்.

 

அவனுடைய இரு கரங்களும் கட்டுப்பட்ட நிலையில் ஒற்றைக் கத்தியை வைத்திருக்க, சிவார்ப்பணா  வைத் தள்ளிய வேகத்தில், அவள் கீழே விழுந்து விடாமலிருக்கவும், எங்கே தன் கரத்திலிருந்த கத்தி அவளைக் காயப்படுத்தி விடுமோ என்கிற மெல்லிய பயத்திலும், தன் கரத்திலிருந்த கத்தியைக் கீழே போட்டுவிட்டு, அவளைப் பற்றக்கொள்ள, நச் என்று அவனுடைய மார்பில் மோதி விழ இருந்தவளை இணைந்த கரங்கள் கொண்டு தாங்கி, நின்றிருந்தான்.

 

சிவார்ப்பணாவோ தன் கண்களைக் கூட நம்ப முடியாதவளாக, அவனுடைய மார்பில் சாய்ந்தவாறே, தலையை நிமிர்த்தி அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அவளால் இன்னும் நடந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியவில்லை.

 

‘இத்தினை பயங்கரமானவனா அவளுடைய தீரன். கண்ணிமைக்கும் நொடியில் எப்படி இத்தினை கொலைகளைச் செய்தான்… ஐயோ… இது வெளியே தெரிந்தால், அவன் நிலைமை கேள்விக் குறியாகிவிடுமே. வாழ் நாள் முழுவதும் சிறையில் அல்லவா இருக்கவேண்டி வரும்… அவன் சிறைக்குப் போனால் அவளின் கதி என்ன? அவன் இல்லாமல் அவள் எப்படி வாழ்வாள்?’

 

நினைத்ததுப் பார்க்க முடியாத அச்சம் அவளைச் சூழ, அநபாயதீரனின் கரங்களிலிருந்தவாறு அவனுடைய சட்டையை உயிர்போகும் அச்சத்தில் பிடித்து இறுக்கியவாறே, கீழே குனிந்து பார்த்தாள்.

 

மின்தூக்கி முழுவதும் இரத்தம் ஆறாகப் பரவத்தொடங்கியிருந்தது. ஏன் அவள் உடல் முழுவதும் இரத்தம் தெறித்திருந்தது.

 

மூச்சு வேறு நின்றுவிடவா என்று பயமுறுத்தியது. அவனுடைய சட்டையில் எதுவோ பிசுபிசுக்கக் கரத்தைத் தூக்கிப் பார்த்தாள். கரம் முழுவதும் இரத்தக் கறை.

 

எந்தத் தப்பும் செய்யாமலே, இரத்தக் கறையைச் சுமந்திருக்கிறாள்… இது யாருடைய குற்றம்? யார் செய்த தவறு? எதற்காக அவள் சிலுவை சுமக்கவேண்டும்? கரங்கள் நடுங்க, தன் கரத்தையும், தரையில் இரத்தம் சிந்த, உயிர் போகின்ற நிலையிலும் இருந்தவர்களைப் பார்த்தவளுக்குக் குமட்டிக்கொண்டு வந்தது.

 

சும்மா இரத்தத்தைக் கண்டாலே பதறித் துடிப்பவளுக்கு, குளமாகத் தரையிலிருந்த இரத்தத்தையும், அது கொடுத்த வெடுக்கு வாடையையும், நுகர்ந்தவளுக்கு அதற்கு மேல் தாளமுடியவில்லை. தன் வாயை இறுகப் பற்றிக்கொண்டவளுக்கு எங்கே இப்பொதே வாந்தியெடுத்துவிவோமோ என்று அச்சமாக இருந்தது. கூடவே தன் உடலிலிருந்து இரத்தம் வடிந்து காலினூடாகத் தரையைச் சென்று அடைவது பொன்ற உணர்வு தோன்ற, நிமிர்ந்து தன் முன்னால் நின்றிருந்தவனைப் பார்த்தாள்.

 

அவனோ தன் எதிரிகளையே முறைத்துக்கொண்டிருக்க, தன் நடுங்கும் கரங்களைத் தூக்கி அவனுடைய கன்னத்தில் பதித்தவளுக்கு அதற்கு மேல் முடிந்திருக்கவில்லை.

 

தன் கரத்தில் தோய்ந்து சரிந்தவளை, கவனிப்பதற்குக் கூட நேரம் கொடுக்காமல், அந்த மல்லன், அநபாயதீரனை நோக்கிப் பாய்ந்தான்.

 

தன் கரத்திலிருப்பவளை அப்படியே தன் காலடியில் விழுமாறு விட்டவன், தன் மார்பை நோக்கிப் பாய்ந்து வந்த இரு கத்திகளிடமிருந்து தன்னைக் காக்க, இடப்பக்கம் சரிந்து, ஒரு கத்தியிடமிருந்து விலகியவன், விலங்கிட்டிருந்த கரத்தால் எதிரியின் மறு கரத்தை வேகமாகத் தாக்கித் தடுத்துத் தன்னைக் காத்துக்கொண்டான்.

 

மீண்டும் மல்லன், வலது கரத்துக் கத்தியை அவனுடைய வயிற்றை நோக்கியும், இடது கரத்துக் கத்தியை மார்பை நோக்கியும், இறக்க வர, மார்புக்கு நேராக வந்த கரத்தை பலமாகத் தட்டிவிட்டவாறே வயிற்றை நோக்கிக் குத்தவந்த கரத்திடமிருந்து தப்புவதற்காப் பின்னுக்கு விலகி அக்கரத்தையும் தன் கரத்தால், பலமாகத் தட்டிவிட, குறி தப்பிய கத்தி, வேகமாகத் தரையில் விழுந்திருந்த சிவார்ப்பணாவின் தலையை நோக்கி இறங்கத் தொடங்க, அதை முன் கூட்டியே ஊகித்த அநபாயதீரன், சற்றும் தாமதிக்காமல், வேகமாக அந்தக் கத்தியைத் தடுப்பதற்காகத் தன் கரத்தைக் கீழே கொண்டு சென்றான்.

 

மின்னல் விரைவுடன், தன் கரங்களைப் பறவை போல விரித்துக் கீழே கொடுத்து, அந்தக் கத்தியைத் தன் விலங்கிற்கு இடையே செருகுமாறு செய்தவன், பின் உள்ளங்கைகளைக் குவித்து, அக் கத்தியைக் கைப்பற்றி, ஒரு திருப்புத் திருப்பித் தன் தலையால் எதிரியின் மண்டையில் ஓங்கி அடிக்க, பொறிகலங்கிய மல்லன், தன் வலக்கரத்துக் கத்தியைக் கைவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்து தன் தலையை உலுப்பி நிலைப்படுத்த முயன்றான்.

 

இதை அந்த மல்லன் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அதிர்ந்துபோயிருந்த அவனுடைய முகம் எடுத்துக் காட்ட, மெல்லிய புன்னகையைச் சிந்திய அநபாயதீரன் தன் கரத்திலிருந்த கத்தியைத் தயாராகப் பிடித்தவாறு, அடுத்த தாக்குதலுக்கும் தயாரானான்.

 

இப்போது, அந்த மல்லன், எஞ்சிய கத்தியைத்  தொடையிலிருந்து  இழுத்து எடுத்தவன், இவனுடைய கழுத்தை நோக்கிக் கொண்டு வர, அதை லாகவமா தன் கத்தியைக் கொண்டே தடுத்தவன், ஓங்கி எதிரியின் காலை உதைய முயல, அதையே அந்த எதிரியும் செய்ய முயல, இருவரின் கால்களும் ஒன்றோடு ஒன்று பலமாக முட்டி, பின் உதைய முயன்று தோற்றுப் போய் தம் நிலையை அடைந்தன.

 

இவன் இப்போது எதிரியின் கழுத்தை நோக்கிப் பாய, அதை அந்த எதிரி தடுத்தவாறு அக் கத்தியைக் கீழிறக்கி இவனுடைய வயிற்றில் குத்தவர, அதையும் இவன் இலகுவாகத் தடுக்க,  கோபம் கொண்ட எதிரி தன் இடக் கரத்தை முஷ்டியாக்கி, அநபாயதீரனின் முகத்திற்கு நேராகக் குத்தவர, கணப்பொழுதில் பின்னே சரிந்து, அந்தக் குத்திலிருந்து தப்பியவன், ஓங்கித் தன் மண்டையால், எதிரியின் மண்டையை  மிகப்பலமாக இடிக்க அதை எதிர்பாராத மல்லன் ஓரடி பின்னால் சென்று நின்றான்.

 

இவன் மீண்டும், தன் கத்தியை எதிரியின் கழுத்திற்குள் செருக முயல, அதை அந்த மல்லன் வேகமாகத் தடுத்து, பின் இவனுடைய மார்புக்கருகே கத்தியைக் கொண்டு வந்தான்.

 

மின்னல் விரைவுடன், இரண்டு அடி பின்னால் வைத்தவன், தன் கத்தியை அவனுடைய இடையை நோக்கிக் கொண்டு சென்றான். அதையும் அந்த மல்லன் லாகவமாகத் தடுக்க. இப்போது இவன், அவனுடைய வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு சொல்ல, அதையும் அவன் தடுத்தவாறு  நக்கலுடன் பார்த்துச் சிரித்தான்.

 

கூடவே, தன்னுடைய கத்தியை அநபாயதீரனின் நடு மார்புக்குக்கொண்டு செல்ல, அதைத் தடுக்க வந்த நேரத்தில் குறி சற்றுப் பிசகியதால், அது அவனுடைய மார்பின் மேற்புறத்தை ஷேர்ட்டுடன் சேர்த்துக் கிழித்துக்கொண்டு சென்றது.

 

குனிந்து தன் காயத்தைப் பார்த்தவன், நிதானமாகத் தன் எதிரியை ஏறிட்டான்.

 

‘இனியும் தாமதிக்க முடியாது… அநபாயதீரனைக் கொன்றுவிடவேண்டியதுதான் என்கிற ஆவேசத்தில், வலக்கையில் கத்தியைப் பிடித்துத் தயாராக இருந்தவாறு, இடக்கரத்தைக் கொண்டு சென்று துப்பாக்கியை எடுக்க முயன்ற தருணம், அவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்ட அநபாயதீரன், தன் கத்தியைத் தலைக்கு மேலாக இறுகப் பற்றி ஓங்கியவாறு, இரண்டடி மேலே பாய்ந்தவன், கத்தியை இறக்கும்போதே எதிரியின், நடு மண்டையில் இறக்கியவாறு தரையைத் தொட்டான்.

 

அந்த மல்லன், கைத்துப்பாக்கியைப் பற்றியவாறே, தலையில் கத்தியைத் தாங்கியவாறு அப்படியே தரையில் மடங்கிச் சரிந்தான்.

 

அதே நேரம், அந்த மல்லனின் வலக்கரம், தரையில் விரிந்திருக்க, அந்த நேரத்திலும் அந்தக் கரம், அர்ப்பணாவைப் பற்றியிருந்தது நினைவுக்கு வர, சினம் கொண்டவனாகத் தன் சப்பாத்தின் குதிக்காலால், ஓங்கி மிதித்து, நசித்து ஒரு திருப்புத் திருப்ப, கறகற என்கிற ஓசையுடன்   எலும்புகள் முறியும் சத்தத்தைக் கேட்டு திருப்தி அடைந்தவனாக, சிவார்ப்பணாவின் அருகே விரைந்து வந்தான்.

 

மண்டியிட்டு அமர்ந்தவாறே, அந்த மின்தூக்கியினுள் பார்த்தான். இந்தக் காட்சியைக் கண்டால், நிச்சமாக மீண்டும் மயங்கி விழுவாள் என்பது தெரிந்தது.

 

“அர்ப்பணா…” என்று அவள் கன்னத்தைத் தட்ட, ஒருவாறு தன் விழிகளை மலர்த்தி மலங்க மலங்க அநபாயதீரனைப் பார்த்தாள். அவளுடைய முகத்தில் புரியாத தன்மை வந்து வந்து போக, அவளுடைய நிலையைப் புரிந்துகொண்டவனாக,

 

“ப்ளீஸ்… எங்கே இருக்கிறேன் என்கிற கேள்வியை மட்டும் கேட்டுவிடாதே… அதற்கு இது நேரமில்லை… கெட் அப்…” என்று அவன் அழுத்தமாகக் கூற, இரத்தம் தேய்ந்த அவனுடைய முகத்தையும், ஆடையையும் இரத்தத்தால் நனைந்திருந்த மின்தூக்கியையும், கூடவே, தனக்கு முன்னல் தலையில் கத்தியுடன் விழுந்துகிடக்கும் அந்த மல்லனையும், மற்றைய எதிரிகளையும் கண்டவள் கதறுவதற்கு  வாய் எடுத்தவளுக்கு  மீகுரல் வர மறுத்தது. ஏதோ  புரியாத தேசத்தில். புரியாத  நரகத்தில் சஞ்சரிப்பது போன்ற  மாயையில் திணறிப்பொனாள், மீண்டும் மயக்கம் வரும்போல் இருந்தது. அதை உணர்ந்தவன் போல

 

“டோன்ட்… மயங்கி விழ இது நேரமில்லை… வி ஹாவ் டு கோ… கெட் அப்…” என்றவாறு அவளைப் பிடித்து எழுப்ப, அவன் கரத்தின் பலத்துடன் எழுந்தாலும், அவன் மேலிருந்த வெறித்த பார்வையை அவள் விலக்கவேயில்லை.

 

‘இவன் மனிதன் அல்ல… ராடஷசன்… மனித வெறி பிடித்த ராட்சசன்… சாதாரண மனிதன் செய்யும் வேலைகளையா இவன் செய்துகொண்டிருக்கிறான், இவன்… இவன்…” அதற்கு மேல் யோசிக்க முடியாமல், அநபாயதீரன் அங்கே விழுந்துகிடந்தவனின் பான்ட் பாக்கட்டை பரிசோதித்து, ஒரு திறப்பை வெளியே எடுத்தவாறு சிவார்பப்பணாவை நெருங்க, என்றுமில்லா அச்சத்துடன் அவள் இரண்டடி பின்னே வைத்தாள்.

 

“டாமிட்… அர்ப்பணா… இந்தத் திறப்பால் இந்தக் கைவிலங்கைத் திறந்து விடு…” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, அவளோ மலங்க மலங்க விழித்தாள்.

 

“இவர்கள் வெறும் ஆரம்பம்தான்… இன்னும் சந்திப்பதற்கு நிறைய இருக்கிறது… ஓப்பன் த டாம் கஃப்..” என்று அவன் கத்த, திடுக்கிட்டு நிமிர்ந்தவள், அவன் நீட்டிய திறப்பை நடுங்கும் கரங்களால் வாங்கி ஒற்றைக் கரத்தைத் திறக்க முயல, இருந்த பதட்டத்தில், சாவி துவாரத்திற்குள் நுழையாமல், வேறு எங்கெங்கோவெல்லாம் நுழைந்தது.

 

“டாமிட் அர்ப்பணா… ஃபோகஸ்…” என்று இவன் சீற, எப்படியோ ஒரு வழியாகத் துவாரத்திற்குள் நுழைத்துத் திறந்து விட, வலக் கரத்தை விலங்கின் பிடியிலிருந்த விலக்கியவன், நடுங்கும் அவள் கரத்திலிருந்த திறப்பைப் பறித்து, மறு கரத்தைத் தானே விடுவித்தான்.

 

கையோடு வந்த கைவிலங்கை, கீழே விழுந்திருந்தவர்களை நோக்கி எறிந்துவிட்டு, மின்தூக்கியை மீண்டும் இயக்க, அது நிலக்கீழ் தளத்திற்குச் சென்றது.

 

சருகென நடுங்கியவளை நெருங்கி நின்று அவளுடைய கரத்தைப் பற்றி இறுக்கியவன்,

 

“எவ்ரிதிங் வில் பி ஓக்கே…” என்று சமாதானப் படுத்த,

 

‘எல்லாமே நன்றாகத்தான் இருந்தன… நீ என் வாழ்வில் வரும் வரை…’ என்பது போல அவனைப் பார்த்து விரக்தியுடன் அவள் சிரித்த நேரம் மின் தூக்கியின் கதவு திறந்தது.

 

அதுவரை கீழ் தளத்தில், மின்தூக்கிக்குக் காத்திருந்த ஒரு சிலர், உடல் முழுவதும் இரத்தம் தோய்ந்திருக்க, ஏதோ படங்களில் வரும் ‘வம்பயர்ஸ்…’ போல வெளியே வந்த இருவரையும் கண்டு அதிர்ந்துபோய் நின்றனர்.

 

கூடவே, இரத்தத்தால் தோய்ந்திருந்த மின்தூக்கியையும், அங்கே மயங்கியோ, இறந்தோ கிடந்த அறுவரையும் கண்டதும், ஒரு பெண் அலறத் தொடங்க, அவளுக்கருகே நின்றிருந்த ஒருவர் பயமும் பதட்டமும் போட்டிபோட, நடுங்கும் கரம்கொண்டு கைப்பேசியை எடுத்து, வேகமாகக் காவல் நிலையத்தை அழைக்கத் தொடங்கினார்.

 

இது எதையும் கருத்தில் கொள்ளாத அநபாயதீரன் சிவார்ப்பணாவின் கரத்தை விடாமலே அவளை இழுத்துக்கொண்டு செல்லத் தொடங்கினான்.

 

(30)

 

சிவார்ப்பணாவின் கரத்தை விடாமலே, இழுத்துக்கொண்டு, அந்தக் கட்டடத்தின் தனிப்பட்ட இடத்திற்கு வந்தவன், அங்கே கார் ஒன்றை மூடியிருந்த துனியை இழுத்து எடுக்க, லம்போகினி கலார்டோ 2012… சிலிர்த்துக்கொண்டு நின்றது.

 

வாகனத்தின் முன் கதவைத் திறந்து, அவளை இழுத்து வந்து முன்னிருக்கையில் அமருமாறு கட்டளையிட, மறு பேச்சுப் பேசாமல், தன் முதுகில் தொங்கிக்கொண்டிருந்த பையைக் கழற்றித் தன் கரத்தில் வைத்தவாறு, இருக்கையில் அமர்ந்து கதவை இழுத்துச் சாத்தினாள்.

 

“புட் யுவர் சீட் பெல்ட் ஆன்…” என்று கூறிவிட்டுத் தன் இருக்கைவாரை போட்டு, அக்சிலரேட்டரை அழுத்தினான்.

 

“ப்ரூம்… ப்ரூம்… ப்ரூம்….” என்று அவன் விட்டு விட்டு அழுத்த, அதற்கேற்றாற்போல் தன் குரலைக் கொடுத்தது வாகனம்.

 

சிவார்ப்பணா நடுங்கும் கரங்கள் கொண்டு இருக்கைவாரை போடும் வரை காத்திருந்தவன், மறு கணம், கியரை மாற்றி, வாகனத்தை வேகமாக எடுக்க, ஒரு சில நிமிடங்களில், வாகனம் பிரதான பாதையில் ஏறி வேகம் எடுக்கத் தொடங்கியது.

 

தன் வாகனத்தின் வேகத்தை அதிகரித்தவாறு, ஃப்ரீ வே 401 இல் ஏற, வாகனம் கிழக்குப் பக்கமாகப் பாயத் தொடங்கியது. கிட்டத்தட்ட 180 km/hr வேகத்தில் ஓட, சிவார்ப்பணா   அச்சத்துடன் அருகேயிருந்த பிடிமானத்தைப் பற்றியவாறு அநபாயதீரனையும், தெருவையும் சற்றும் பயம் குறையாது பார்க்கத் தொடங்கினாள்.

அவன் ஓடிய பாதையில் சில வாகனங்கள் போய்க்கொண்டிருக்க, தன் காரை வெட்டிக் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிக்கொண்டு சென்றவனுக்கு ஏதோ சந்தேகம் வர, யோசனையுடன் முன்னாலிருந்த கண்ணாடியைப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் வலுப் பெற, மீண்டும் காரை ஒடித்துத் திருப்பி, மறு பாதையில் காரை ஓட்டத் தொடங்கினான்.

 

அதே போல அவனுடைய வாகனத்திற்குப் பின்புறமாகக் கடும் வேகத்தில் வந்த இரு கார்கள், தம் பாதையின் திசையையும் ஒடித்து, அநபாயதீரனுக்குப் பின்னால் வரத் தொடங்கின.

 

டாமிட்… யாரோ அவர்களைப் பின் தொடர்கிறார்கள். அப்போதுதான் அநபாயதீரனின் மூளைக்கு ஒன்று இடித்தது.

 

“இது எப்படிச் சாத்தியம். சரியாக அவர்கள் இருக்கும் இடத்தை சுலபமாக அதுவும் கச்சிதமாகக் கண்டு பிடிக்கிறார்கள் என்றால், அவர்கள் நிற்கும் திசையறிகருவி எங்கோ பொறுத்தப் பட்டிருக்க வேண்டும். எங்கே?

 

‘சிவார்ப்பணாவின் ஆடையில்…? அதற்கு வாய்ப்பில்லை. ஏன் என்றால் அவள் அணிந்திருப்பது அவனுடைய ஆடையை. அவனிலும் பொருத்தியிருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் எங்கே.?’ அநபாயதீரனுடைய பார்வை சிவார்ப்பணாவின் கரத்திலிருந்த பையில் நிலைத்தது.

 

அதே நேரம் அவர்களைப் பின் தொடர்ந்து வந்த வாகனத்திலிருந்து ஒருவன் கண்ணாடி வழியாகத் துப்பாக்கித் தோட்டாவைத் துப்ப, அதை உணர்ந்து கொண்ட அநபாயதீரன் வேகமாகத் தன்னுடைய காரைப் பாதை மாற்றி ஓடினான்.

 

அதனால் அந்தக் குண்டு அவனுடைய காரைத் தாக்காமல் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது பாய, அந்தக் வாகனம் உடனேயே தடம் புரண்டு, அருகே வந்த காருடன் மோத, இடிவாங்கிய வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகேயிருந்த சுவருடன் இடித்து நசுங்கியது.

 

இது எதையும் கவனிக்கும் நிலையில் யாரும் இருக்கவில்லை. சிவார்ப்பணாவோ அச்சத்தில் தாறுமாறாகத் துடித்த இதயம் நின்றுவிடாமல் இருப்பதற்காகத் தன் கரம் கொண்டு மார்புப் புறமாகத் தன் ஜாக்கட்டை இறுகப் பற்றி, என்ன நடக்கிறது என்று புரியாமலே மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தாள்.

 

திடீர் என்று அவளுடைய தலையில் பதிந்த அநபாயதீரனின் வலக்கரம், வேகமாக அவளைக் குனியச் செய்தது.

 

“நான் சொல்லும் வரை இப்படியே படுத்திரு… எக்காரணம் கொண்டும் எழுந்து கொள்ளாதே… புரிந்ததா?” என்று கேட்க அவள் குனிந்தவாறே தலையை அசைத்தாள்.

 

அவளுடைய நிலையைப் புரிந்துகொண்டவனாக, அவள் தலையை வருடி அப்படியே கரத்தை இறக்கி, இடதுபக்கத்துத் தோளை அழுத்திக்கொடுத்தவன், பின் இரு கரத்தையும் ஸ்டியரிங் வீலில் பதித்து, காரை இடதுபக்க பாதைக்குத் திருப்பினான்.

 

அவன் திருப்பியதும், மற்றைய வாகனமும் திரும்பிக் கொண்டதோடு மட்டும் நின்றுவிடாது, துப்பாக்கியிலிருந்து இன்னொரு குண்டையும் துப்பியது.

 

அது சரியாக பின் புறக் கண்ணாடியை உடைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட சிவார்ப்பணா அமர்ந்திருந்த இருக்கையின் மேற்புறத்தைக் குடைந்து முன் புறக் கண்ணாடியைத் துளைத்து வெளியேறியது.

 

“ஸ்டுபிட் XXX XXX XXX” என்று கத்தியவாறு அடுத்த இடது பாதைக்கு, அருகே 120 Km/hr வேகத்தில் வந்துகொண்டிருந்த யாரோ ஒருவருடைய வாகனத்தைத் தாண்டி, கதிர் முனையளவு இடைவெளியில், இடிபடாமல், மாற்றித் தன் காரைச் சீறிக்கொண்டு பாயவிட்டான்.

 

அதே நேரம் இத்தினை நெருக்கமாக தன் காரை இடிப்பதுபோல ஒரு வாகனம் வரும் என்பதை எதிர்பார்க்காத, அந்தக் காரின் உரிமையாளர் பயத்தில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல், தடையைப் போட, அது தடை போட்ட வேகத்தில் திரும்பி நின்றது வாகனம். அதற்குப்  பின்னால் வந்திருந்த வாகனத்துக்காரனும், தன் கட்டுப்பாட்டை இழந்து, படு வேகமாகத் தன் முன்னால் திரும்பி நின்றிருந்த காரை இடிக்க, இரண்டு வாகனங்களும் அப்பளமாக நொறுங்கிப்போன நேரம், அவர்களுக்குப் பின்னால் வந்திருந்த இன்னொரு கார், தடை போட நேரம் கிடக்காமல், ஏற்கெனவே முட்டிக்கொண்டிருந்த வாகனங்களின் மீது, மோதுப்பட்டுப், பின், உருண்டு பிரண்டு, வலப்பக்கப் பாதையில் சரிந்து நிற்க, அந்தப் பெரும் விபத்தைத் தவிர்ப்பதற்குத் தொலைவில் வந்துகொண்டிருந்த வாகனங்கள் சடுதியில் தடைகளைப் போட்டு, அந்த அந்த இடத்தில் அப்படியே நின்றன .

 

இதை அந்த எதிரிகள் எதிர்பார்க்கவில்லை போலும், தாமும் மோதுப்படப் போகிறோம் என்கிற பதட்டத்தில் சற்று நிதானித்த நேரத்தில், தமக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த வாகனங்கள், நிறுத்தியிருந்ததால், உடனேயே காரை எடுத்து, அநபாயதீரனைத் தொடரமுடியாத நிலையில், தாமதிக்க வேண்டியதாயிற்று.

 

எதிரிகளின் தாமதம், அவனுக்குப் போதுமானதாக இருக்க, இப்போது மேலும் தன் வேகத்தைக் கூட்டினான்.

 

ஆனால் எதிர்பாரா தருணத்தில், இன்னொரு கார், அநபாயதீரனுக்கு அருகாமையில் எப்படியோ நுழைந்து முன்னேறி நெருங்கி வர, அநபாயதீரன் தன் காரின் வேகத்தை 200 Km/hr இற்குக் கொண்டு வந்தான்.

 

ஆதே நேரம், வலது புறப் பாதையில், மிக அருகே அநபாயதீரனின் வாகனத்துக்கு ஈடு கொடுத்து வந்த காரின், பின் புறமிருந்தவனின் துப்பாக்கி, அநபாயதீரனின் கார் டயரை நோக்கிச் சுடுவதற்குக் குறி பார்க்க, இவனோ அந்த வேகத்திலும் தன் வாகனத்தின் தடையைப் போட, அவன் தடை போட்ட வேகத்தில், சிவார்ப்பணா, குனிந்திருந்த வாக்கிலேயே முன்னுக்குத் தள்ளப்பட, எங்கே அவளுடைய தலை அடிபட்டுவிடுமோ என்று பயந்தவன் தன் வலக்கரத்தை நீட்டி அவளுடைய தலையின் உச்சியில் வைக்க. நல்ல வேளை அவளுடைய தலை அடிபடாமல் தப்பித்தது. ஆனால், அவனுடைய கரம் பலமாக அவளுக்கும், டாஷ்போடிற்கும் இடையில் அடிபட்டுச் சிக்கிக்கொண்டது.

 

அநபாயதீரனோ தன் கரம் அடிபட்ட வலியை உணரும் நிலையில் இருக்கவில்லை. சிவார்ப்பணாவிற்கு ஒன்றுமில்லை என்பதை உறுதி செய்தவன், அவள் எழ முயல்வதைக் கண்டதும்,

 

“டோன்ட் கெட் அப்…” என்றவாறே, தன் வலது கரத்தை விலக்கி, மீண்டும் ஸ்டியரிங் வீலில் பதித்தான்.

 

இப்போது எதிரியின் வாகனம் சற்று முன்னேறியிருக்க, உடனே தன் ஸ்டியரிங் வீலை, வலப் புறமாக ஒடித்துத் திருப்ப, அவனுடைய லம்போகீனியின் முன் புறம், அந்த எதிரியின் கார் பின் புறத்தைப் பலமாக மோத, அவர்கள் ஓடிய வேகத்திற்குப் பின் புறம் அடி பட்டதால், தன் கட்டுப்பாட்டை இழந்த, எதிரியின் வாகனம், இடப் புறம் திரும்பிச் சுழன்று இழுபட்டு, பாதையைப் பிரிக்கும், மீடியனில் மோதி, அது உடைந்து, மேற்குத் திசைக்குச் செல்லும் பாதையில் கவிழ்ந்து விழுந்து இழுபட்டுக் கொஞ்சத் தூரம் சென்று நசுங்கி நின்றது.

 

இப்போது மற்றைய வாகனமும், அநபாயதீரனின் காரை நோக்கி வேகமாக வர, அதைக் ரியர் வியூ கண்ணாடி மூலம் கண்டவன், தனக்கும் எதிரிக்கும் இடையில் உள்ள நேரத்தைக் கணித்து, தன் வாகனத்தின் வேகத்தை மேலும் கூட்டி காரைப் படு வேகமாக வலது பாதைக்கு மாற்றினான். பின் தனக்கு இடது புறத்துப் பாதையில் ஒரு பெரிய ட்ரக் போவதைப் பார்த்தவன், உடனேயே ட்ரக்கைத் தாண்டி அதற்கு முன்பாகத் தன் பாதையை மாற்றி ஓடத் தொடங்கினான்.

 

பின் அதே வேகத்தில், வலப்புறம் வந்துகொண்டிருந்த ஜீப் ஒன்றைக் கடந்து, அதன் முன்னால் பாய்ந்து, பின் இடது பக்கம் தன் காரை மின்னல் விரைவில் செலுத்திக்கொண்டு செல்ல, இந்தத் திடீர் ‘zig zag’ ஐ எதிர்பாராத எதிரிகள், நிதானிப்பதற்குள்ளாக, அந்த எதிரியின் வாகனத்துக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த ட்ரக், இவனுடைய பைத்தியக்கார ஓட்டத்தைக் கண்டு அதிர்ந்து தன் வாகனத்தின் தடையை உடனே போட, இதை எதிர் பார்க்காத எதிரியின் வாகனம், படு வேகமாக, அந்த ட்ரக்குடன் மோதி வெடித்துச் சிதறியது.

 

அப்பாடா என்று நிமிர்வதற்குள்ளாக, இன்னொரு கார் அவர்களைத் துரத்தியது. இருந்தாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில், எதிரிக்கும் அவனுக்குமான இடைவெளியை அதிகரித்தவன், திடீர் என்று தன் காரை ஒடித்து, எதிர்புறமாகத் திருப்பி, மீடியன் அமைக்கப்படாத, இடை வெளிக்குள், தன் காரைச் செலுத்தி, 401 மேற்குப்புறம் செல்லும் பாதைக்குத் திருப்ப, அவன் திருப்பிய வேகத்தில், இரண்டு பாதைகளையும் பிரிக்கும், நிலப்பரப்பில், விழுந்து எழுந்து சுழன்று, பெரும் புகையுடன் தெருவில் ஏறி நின்றது, லம்போகீனி.

 

இத்தினை ஆவேசமான ஓட்டத்திலும், சிவார்ப்பணாவின் உடல், எங்கும் ஆடி அசைந்து முட்டுப்படாத வகையில், தன் வலக்கரம் கொண்டு, அவளுடைய முதுகின் மீது தன் காரத்தைக் கொடுத்து அழுந்தப் பற்றி இறுக்கியிருந்தான்.

 

திடீர் என்று செல்லக் கூடாத இடத்தினூடாக அவன் காரைச் செலுத்தி, மறுபக்கம் வருவான் என்பதை அந்தப் பரம்பொருள் கூட அறிந்திருக்க மாட்டார். சாதாரண மனிதர்களால், முடியுமா என்ன?

 

நல்ல வேளையாக, மேற்குப் புறமாகச் சென்ற வாகனங்களின் தொகை மிகக் குறைவாக இருந்ததால், பெரிய விபத்தொன்றும் அந்தப் பக்கத்தில் நடக்கவில்லை.

 

ஆனால், அவனுக்குப் பின்னால் வந்திருந்த ஒரு கார், இதை எதிர்பார்க்கவில்லை… பெரிய ஹோர்ன் சத்தத்துடன், அந்த ஓட்டுநர் எப்படியோ, தன்னுடைய காரை, வலது பக்கத்திற்கு மாற்றி ஓட்டியவர், கத்திக் குழறி, தகாத வார்த்தைகளால் திட்டியவாறு சினத்துடன் அநபாயதீரனை முட்டுவது போல வர, இவனுடைய உதட்டில் மெல்லி குறும்புப் புன்னகையொன்று மலர்ந்து பின் மறைந்தது.

 

பின் சிவார்ப்பணாவின் பக்கத்துக் கண்ணாடிக் கதவைத் திறந்தவன், தன்னவளைப்  பார்த்து,

 

“அர்ப்பணா… எழுந்துகொள்…” என்றான்.

 

அது வரை, அவன் சொன்ன கட்டளைக்கு இணங்கக் குனிந்திருந்தவள், எழுந்து அமர்ந்த போது, அவளுடைய முகம் அந்தக் குளிரிலும் வியர்த்து தலை முடி குலைந்து, ஏதோ மனநலம் குன்றிய மருத்துவமனையிலிருந்து வந்தவள் போல இருந்தவளை ஒரு கணம் பரிதாபமாகப் பார்த்தான்.

 

மீண்டும் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் எதையோ ஆவேசமாகத் திட்டியவாறு வரக் குனிந்து கண்ணாடிக்கு ஊடாக அந்த வெள்ளையனைப் பார்த்தவன், என்ன நினைத்தானோ சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“அர்ப்பணா… கண்ணாடிக்கு வெளியாக உன்னுடைய வலக்கரத்தைக் கொண்டு செல்…” என்றான் தன் பாதையில் கவனத்தைச் செலுத்தி.

 

இவள் புரியாமல் எதற்கு என்பது போலப் பார்க்க, “டூ வட் ஐ ஆம் சேயிங்…” என்று இவன் கர்ஜிக்க, உடனே தன் வலக்கரத்தைக் கண்ணடிக்கு வெளியாக அவள் கொண்டு செல்ல,

 

“உன்னுடைய விரல்களை மூடிக்கொள்” என்றான் அடுத்து. அவளும் மூடிக்கொண்டாள்.

 

“இப்போது உன்னுடைய நடு விரலை மட்டும் நீட்டி உன் கரத்தை உயர்த்திப் பிடித்துக்கொள்…” என்று எதையோ முன் கண்ணாடி வழியாகப் பார்த்தவாறு அவன் கூற, அவன் சொன்னது போலச் செய்துவிட்டுத் திரும்பி அநபாயதீரனைப் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த குரும்பையும், மெல்லிய நகைப்பையும் கண்டவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

 

அதே நேரம், அந்த ஓட்டுநர், சிவார்ப்பணா காட்டிய குறியீட்டைக் கண்டதும், முதலில் அதிர்ந்து பின் மேலும் மேலும் எதையோ திட்டிக்கொண்டு வர, எதற்காகத் திட்டுகிறார் என்பதைப் புரியாமல், அந்த ஓட்டுநரைப் பார்த்தவள், தன் கரத்தை இன்னும் மடக்காமல், அநபாயதீரனைத் திகைப்புடன் பார்த்தாள்.

 

அவன் இன்னும் தன் நகைப்பு மாறாமல் இருக்கத் திரும்பித் தன் கரத்தைப் பார்த்தாள்.

 

அப்போதுதான் தான் எத்தகைய குறியீட்டைப் பிடித்து வைத்திருக்கிறோம் என்பது அவளுக்குப் புரிந்தது.

 

வாய் அடைக்கக் கோபம் கொப்பளிக்க, திட்டிக்கொண்டு வந்த கார்க் காரனைப் பார்த்து அசடு வழிந்தவள், திரும்பி அநபாயதீரனைப் பார்த்து முறைத்து,

 

“ஐ கில் யு…” என்று கத்தியவாறு அவனுடைய கரத்தில் ஓங்கிக் குத்த, அது ஏற்கெனவே காயம்பட்ட கரம் என்பதால், அது மெல்லிய வலியைக் கொடுத்தாலும், அவன் சிரித்தவாறே, தன் வாகனத்தின் பாதைகளை மாற்றி 401 மேற்கிலிருந்து விலகிக் கொஞ்சத் தூரம் சென்றவன், அங்கிருந்த ஒரு காட்டுப் புரத்திற்குள் காரை விட்டான்.

 

அரவமற்ற பாதையூடாகச் சென்றவன், சிவார்ப்பணாவின் மடியிலிருந்த பையை ஏறிட்டுப் பார்த்தான்.

 

அவளோ ஜன்னலுக்கு வெளியாக, குளிரில் இலைகளை உதிர்த்துவிட்டு அடையற்று நின்றிருந்த மரங்களையும், அதனூடாக ஓடிக்கொண்டிருந்த சிற்றாற்றையும், வேடிக்கை பார்த்தவாறிருக்க, அந்தப் பையைச் சற்றுச் சரிந்து இழுத்து எடுத்தவன், அதைத் தூக்கி ஜன்னல் புறமாக வீசி எறிந்தான்.

 

தன் மடியிலிருந்த பையை, அவன் இழுக்க, எதற்காக இழுக்கிறான் என்று புரியாமல் இவள் திரும்பிப் பார்ப்பதற்குள், அவன் அதை ஜன்னலுக்கு வெளியாக எறிந்து விட்டிருந்தான்.

 

“என்ன செய்கிறீர்கள்… அதில் என்னுடைய ஆடைகள் இருக்கின்றன… அதன் விலை தெரியுமா உங்களுக்கு?” என்று இவள் பதறியவாறு கூற,

 

“தெரியுமே… என்ன வெறும் பதினைந்து இருபது டாலர்கள்தானே…” என்று அவன் கிண்டலாக்கக் கூற,

 

“பதினைந்து இருபது டாலர்கள் உங்களுக்குச் சாதாரணமாகப் போய்விட்டதா? அதை உழைக்க, நான் இரவு பகல் விழித்திருக்கிறேன்…” என்று சீறினாள் அவள்.

 

“ப்ச்… இப்போ என்ன? உன் ஆடைகள் வேண்டும் அவ்வளவுதானே… சரி விடு… உனக்கு அதை விட நல்லதாகவே வாங்கித் தருகிறேன்…” என்று அவன் கூற,

 

“நீங்கள் ஒன்றும் வாங்கித்தர வேண்டியதில்லை…” என்று சுள்ளென்று கூறியவளுக்கு அப்போதுதான் ரகு கொடுத்த மடிக்கணினியின் நினைவு வந்தது.

 

“ஐயையோ…” என்று இவள் பதற, இவன்

 

“வட்…” என்றவாறு அவளுடைய பதற்றத்தைப் பொருட்படுத்தாமல், தன் வாகனத்தின் வேகத்தைக் கூட்டத் தொடங்க.

 

“டாமிட் தீரன்… ரகு தந்த லப்டாப்பும் அதில் இருக்கிறது.” என்று அவள் எரிச்சலுடன் கத்தியவாறு முடிந்த வரை திரும்பிப் பின் புற ஜன்னலூடாக எட்டிப் பார்த்துக் கூற, அநபாயதீரனின் கார் பெரும் சத்தத்துடன் கிறீச்சிட்டு நின்றது.

 

“என்ன சொன்னாய்? ரகு தந்த லப்டாப்பா… எப்போது கொடுத்தான்? யு ஸ்டுபிட் வுமன்… இதையேன் என்னிடம் முதலே சொல்லவில்லை” என்றான் அவன் சீற்றமாக.

 

“என்னுடைய பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தான்…” என்று கூறியபோது ஏனோ அவளுடைய குரல் உள்ளடங்கிப்போயிருந்தது.

 

ஏற்கெனவே, அவன் கொடுத்த கீ பெண்டனில் பெரிய குண்டே இருந்தது. இந்த மடிக்கணினி என்ன பெரிய வெடிகுண்டை வைத்திருக்கிறதோ… இதை முதலிலேயே அவனிடம் கூறியிருக்க வேண்டும்… சும்மாவே என் மீது சந்தேகத்தில் இருப்பவன், இப்போது, தில்லானாவே ஆடுவான்…’ என்று அவள் மனதிற்குள் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, இவன் தன் காரைப் படு வேகமாக ஒடித்துத் திருப்பி, சிவார்ப்பணாவின் பை விழுந்து கிடந்த இடத்திற்கு அருகாமையில் நிறுத்தினான்.

 

படு வேகமாகக் காரை விட்டு வெளியே வந்தவன், அவளுடைய பையை எடுத்துத் திறந்து உள்ளேயிருந்த மடிக்கணினியை மட்டும் கரத்தில் எடுத்து, அவளுடைய பையைத் தூற எறிந்தான்.

 

மீண்டும் தன் பையை அவன் தூற எறிய, ஏற்பட்ட சினத்தில், மனதிற்குள் அவனை நன்றாகத் திட்டியவாறு ஓடிப்போய் அந்தப் பையை எடுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டவாறு அவனை நெருங்கினாள்.

 

அநபாயதீரனோ அந்த மடிக்கணினியில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இப்போது இதைத் திறந்து உயிர்ப்பித்துப் பார்க்க முடியாது. அதற்கு இது நேரமும் இல்லை… இது ரகு கொடுத்த லப்டாப் என்றால், நிச்சயமாகக் கண்காணிக்கும் கருவி இங்கேதான் பொருத்தி வைக்கப்பட்டிருக்கும்…’ என்று யோசித்தவன், கவனமாக அதை அவதானித்தான்.

 

அவன் என்ன அந்த மடிக்கணினியில் பார்க்கிறான் என்பதை வியப்புடன் அவனை நெருங்கி நின்றவாறு பார்த்தாள் சிவார்ப்பணா.

 

அவனோ தன்னை அவள் நெருங்கி நிற்கிறாள் என்கிற உணர்வே இல்லாதவனாக, அந்த லாப்டப்பைத் திருப்பி, கவிழ்த்து, திறந்து எல்லாம் பார்த்தான். எதுவும் அவன் கண்களுக்குத் தட்டுப் படவில்லை. கோபத்துடன் அதை மூடியவன், யோசனையுடன் தலையைக் கோதினான்.

 

எங்கே என்று கண்டு பிடிப்பது? எதேச்சையாக லப்டப்பைத் திருப்பியவனின் விழிகளில் அதன் பின்புறத்தில் அமைக்கப் பட்டிருந்த நான்கு ரப்பர் பகுதிகளும் தென்படச் சந்தேகத்துடன் உற்றுப் பார்த்தான்.

 

அவசரமாக அதைத் தூக்கி அருகே பிடித்துப் பார்த்தான். அந்த நான்கு ரப்பர் பகுதிகளையும் பெருவிரலால் அழுத்திக் கொடுத்து வருடிப் பார்த்தான்.

 

ஏதோ சந்தேகம் தோன்ற, வேகமாகத் தன் பான்ட் பாக்கட்டிலிருந்து, பேனாக் கத்தியை எடுத்தவன், குறிப்பிட்ட ரப்பர் பகுதியை மட்டும் கிண்டி எடுத்தான்.

 

இரண்டு வயர்களுடன், அந்த ரபர் வெளியே வர, அதைத் தூக்கிப் பார்த்தான். உள்ளே கண்சிமிட்டிக்கொண்டிருந்தது, கண்காணிப்பு சாதனம். (tracking device).

 

அதைக் கண்டதும், அவனுடைய உதட்டில் ஏளனப் புன்னகை மலர்ந்தது. இதை வைத்துத்தான் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டு கொண்டார்களா? இன்னும் இதை விட வேறு என்ன என்ன பொருட்கள் இவளுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன?

 

அப்படியானால் இந்த மடிக்கணினியில்தான் ஏதோ இருக்கிறது…’ அதை நினைத்ததும், அவனுடைய முகம் இறுகியது. வேகமாகக் கண்காணிப்புச் சாதனைத்தைக் கரத்தில் எடுத்துப் பொத்திப் பிடித்தவன், ஓங்கி அருகே ஓடிக்கொண்டிருந்த ஆற்றை நோக்கி வீசி எறிய அது சிறிய சத்தத்துடன் தண்ணீரில் விழுந்து மிதந்து ஆறு போன திசைக்கு அது செல்ல அவன் உதட்டில் புன்னகை தவழ்ந்தது. இனி அதன் திசைக்கு எதிரிகள் ஓடி அலையட்டும் என்று நிம்மதியாக எண்ணியவன் திரும்பிக் குழம்பி நின்றிருந்தவளை ஏறிட்டான். அவளோ,

 

“என்ன அது… எதை அந்த மடிக்கணணியிலிருந்து எடுத்தீர்கள்?” என்று கேட்க, அநபாயதீரன் சற்று நிதானித்தான். இப்போதைக்கு எதிரிகளால் பயமில்லை. மீண்டும் இவர்களைக் கண்டுபிடிக்க முதல், அவனுடைய வேலையை முடித்துவிட வேண்டும்… அவனுக்கு வேண்டிய முக்கிய தடையம் இப்போது கிடைத்துவிட்டது. இனி அனைத்தும் சுலபமே’ நிம்மதியுடன் நிமிர்ந்தவன் சிவார்ப்பணா  வைப் பார்த்து,

 

“கண்காணிப்பு சாதனம்… இந்த லப்டப் எங்கேயிருக்கிறது என்பதைச் சுலபத்தில் கண்டுபிடிப்பதற்காக வைத்திருக்கிறார்கள்…” என்றவாறு அவன் காரை நோக்கித் திரும்ப, ஒரு பெருமூச்சொன்றை விட்டவாறு,

 

“ஓ… இதற்காகத்தான் என்னைத் துரத்துகிறார்களா? சொல்லியிருந்தால், இதை எப்போதோ கொடுத்து ஆளை விடு சாமி என்று ஓடியிருப்பேனே… இத்தனை வதை தேவையில்லை…” என்று சோர்வுடன் கூற, அவன் சிவார்ப்பணாவை, மெல்லிய வலியோடு பார்த்தான்.

 

“அவர்களின் டார்கட் வெறும் லப்டாப் மட்டுமா? அப்படியானால் இந்த லாப்டப்பைக் கண்டுபிடிப்பது அத்தனை பெரிய சிரமமா என்ன? மடிக்கணினி மட்டும்தான் வேண்டுமானால் எதற்காக அவளைக் கடத்த முயலவேண்டும்? எதற்காக… அவளைச் சுற்றி இத்தினை கும்பல் அலைய வேண்டும்? அவர்களுக்கு வேண்டியது இந்த லாப்டப்பா சிவார்ப்பணாவா, இல்லை இரண்டுமா…’ யோசித்தவன், எதையும் அவளிடம் கூற முடியாதவனாக மடிக்கணினி இல்லாத கரத்தால், தன் தலையை வாரப்போனவன், அப்போதுதான் அதில் படிந்திருந்த இரத்தக் கறைகளைக் கவனித்தான்.

 

குனிந்து பார்த்தான். அவனுடைய சட்டை வேறு கிழிந்திருந்தது. அதனூடாக இரத்தம் வேறு வழிந்துகொண்டிருந்தது. .

 

தன் கரத்திலிருந்த மடிக்கணினியை வாகனத்தின் ட்ரங்கைத் திறந்து, அதற்குள் பத்திரப்படுத்தியவன், திரும்பி சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“வெய்ட் ஹியர்…” என்றவன், மேலும் கீழிறங்கி, ஆற்றை நோக்கிச் செல்லத் தொடங்கியவன், நின்று, கிழிந்திருந்த தன் சட்டையைக் கழற்றி அதை ஒரு ஓரமாகப் போடுவதற்காக அவன் திரும்ப, அப்போதுதான் அவனுடைய மார்பிலும், கரத்திலும் இருந்த காயங்களைக் கவனித்தாள் சிவார்ப்பணா.

 

(31)

 

“அம்மாடியோவ்… எத்தனைப் பெரிய காயம்… என்று பதறியவாறு, அநபாயதீரனின் அருகே விரைந்து சென்றாள் சிவார்ப்பணா.

 

தன்னை நோக்கி வந்தவளைக் கண்டு

 

“என்ன அர்பப்ணா?” என்று அவன் கேட்க, அவளோ பதில் கூறாது, தன்னை மறந்து காயம் பட்ட அவனுடைய மார்புக்கும், வயிற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் தன் வலக்கரத்தைப் பதிக்க, ஏனோ இவனுக்கு, மயிர்க்கூச்செறிந்தது. அந்த பூஜ்யத்திற்கும் ஐந்து பாகைக்குக் கீழே உள்ள காலநிலையில் சிலிர்த்தெழாத அவனுடைய காட்டு உடல், அந்தத் தளிர் கரத்தின் ஒற்றைத் தீண்டலில்,  முடிகள் அனைத்தும் எழுந்து நின்று நர்த்தனம் ஆடின.

 

அந்த உணர்வில் தன்னை இழக்கத் தொடங்கியவன், அதற்குரிய நேரம் அதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டவனாக, வேகமாக அவளுடைய கரத்தைப் பற்றி விலக்கி,

 

“டோன்ட் டச் மி…” என்றான் அவசரமாக. அவளோ அதைக் கவனிக்காமல்,

 

“தீரன்… இது பெரிய காயம்… பார்த்தால் தையல் போடவேண்டும் போலிக்கே… பாருங்கள்… எவ்வளவு இரத்தம்… இன்னும் வழிந்துகொண்டிருக்கிறது… ஐயையோ… கையில் வேறு… காயம் இருக்கிறது… இது எப்போது… கட்டு வேறு போட்டிருக்கிறீர்கள்… ஓ மை காட்… தீரன்… வி நீட் டு கோ டு த ஹாஸ்பிடல்…” என்று இவள் பதறித் துடிக்க,

 

“ஹேய்… ஹேய்… ஸ்டாப் இட்… கூல்… இது ஒன்றும் பெரிய காயமில்லை அர்ப்பணா… வெறும் கீறல்தான்… ஜெஸ்ட் லீவ் இட்… இந்தக் காயத்தினால் நான் ஒன்றும் இறந்துவிட மாட்டேன்…” என்று அவன் அலட்சியமாகக் கூற, ஏனோ இவள் துடித்துப்போனாள்.

 

“ப்ளீஸ் தீரன்… முதலில் இதற்கு வைத்தியம் பார்க்கவேண்டும்…” என்று ஏதோ தனக்கு ஏற்பட்ட வலி போல அவள் தவிக்க,

 

“இனஃப் அர்ப்பணா… போ… போய் வாகனத்தில் உட்கார்… நான் இந்த இரத்தக் கறைகளைக் கழுவிவிட்டு வருகிறேன்…” என்று உறுதியாகக் கூறிவிட்டுத் தன் சப்பாத்தையும், சாக்சையும் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டுவிட்டுப் பான்டை நன்கு மடித்து, அந்தக் குளிரிலும், ஓடிக்கொண்டிருந்த அந்த சிற்றாற்றை நெருங்கினான்.

 

சிவார்ப்பணா தன் கண்களை நம்ப முடியாமல் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

இப்போது அவனுடைய முதுகு தெரிய, அவனுடைய முதுகை உற்றுப் பார்த்தவள் மேலும் அதிர்ந்தாள்.

 

அவனுடைய முதுகின் ஓரிரண்டு இடங்களில் எரிந்து போன காயங்கள் போல, வட்டமாகவும், கத்தியால் வெட்டியது போல இரண்டு மூன்று இடங்களில் தையல் போட்ட அடையாளங்களாகக் கோடுகளும், கண்களுக்குத் தெரிய இவள் விறைத்தாள். காயங்களைப் பார்த்தால் மிகப் பழைய காயங்கள் போலத் தோன்றின. வெட்டுக் காயங்கள் ஓரளவு அவனுடைய தோள் நிறத்திற்கு மாறியிருந்தாலும், எரிந்தது போல இருந்த காயங்கள், பயங்கரமாககத் தெரிந்தன.

 

அன்று பேருந்து விபத்தில் கூட அவன் வெற்றுடம்போடு நின்றிருந்தான்தான். அப்போது இருந்த பதட்டத்தில் அந்தக் காயங்களை அவள் கவனிக்கவில்லை. பின் புறத்தில் இருப்பது போல முன்புறத்திலும் இவனுக்குக் காயங்கள் இருக்கின்றதா என்று எண்ணிப் பார்த்தாள். முடியடர்ந்த மார்பும் வயிறும்தான் நினைவுக்கு வந்தனவேயன்றி, வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. ஒரு வேளை அவற்றிற்குள் மறைந்து விட்டனவோ என்னவோ?

 

தன்னையும் மறந்து அவன் பின்னால் சென்றவள், அந்தப் பழைய காயங்களின் மீது தன் விரல்களை ஓட விட, மீண்டும் இவன் சிலிர்த்தெழுந்து, திரும்பி அவளுடைய கரத்தைப் பற்றி,

 

“ஸ்டாப் இட் அர்ப்பணா… என்னைத் தொடாதே என்று சொன்னேன்…” என்று அவன் கடித்த பற்களுக்கிடையேயாகத் தன் வார்த்தைகளைத் துப்பினான். இப்போதும், அவனுடைய கோபத்தைத் தன் கருத்தில் கொள்ளாத அர்ப்பணா,

 

“இந்தக் காயங்கள் எப்படி உங்களுக்கு வந்தன?” என்றாள் குரல் அடைக்க.

 

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாலும், எதிரிகளின் கத்தி வீச்சினாலும் ஏற்பட்ட வீரத் தழும்புகள் என்று எப்படிச் சொல்வது? அதனால் சற்று அமைதி காத்தவன்,

 

“ஒரு சின்ன ஆக்சிடன்ட்… அதனால் வந்தது…” என்று கூறிவிட்டு ஆற்றிற்குள் இறங்கித் தன் இரத்தக் கறைகளைக் கழுவத் தொடங்க,

 

“நான் உதவி செய்கிறேனே…” என்று அவன் மேல் ஏற்பட்ட பரிதாபத்தினால் இவள் கூற,

 

“நோ நீட் டு அர்ப்பணா… என் வேலையை எனக்குச் செய்யத் தெரியும்… ஜெஸ்ட் ரிலாக்ஸ்…” என்று கூறிவிட்டுத் தன் கை, முகம், கழுத்து, மார்பு எனக் கழுவி எழுந்தவன், குறிப்பாகக் குனிந்திருந்தவாறு, எரிந்துகொண்டிருந்த மார்புக் காயத்தின் மீது அதிகமாகக் குளிர் நீரை அள்ளி அள்ளி எறிந்து கழுவி, இரத்தப் போக்கைத் தடுக்க முயன்றான். ஓரளவு இரத்தம் வழிவது, குறைந்திருந்தது. தையல் போட்டால் மட்டுமே இரத்தம் முழுவதும் நிற்கும்.

 

தன் கைக்காயத்தைப் பார்த்தான். கட்டுப்போட்டிருந்ததால் இரத்தம் வருவது நின்றிருந்தது ஆனாலும் அதற்கும் தையல் தேவை.

 

மீண்டும் குளிர் நீரை அள்ளி முகத்தைக் கழுவி எழுந்தவன், அங்கே ஓரமாகக் கழற்றி வைத்திருந்த தன் சப்பாத்து சாக்சை எடுத்துக்கொண்டு, அங்கே நின்றிருந்த சிவார்ப்பணாவைத் தாண்டி, தன் வாகனத்தின் அருகே வந்தான்.

 

அதன் ட்ரங்கைத் திறக்க, அதிலிருந்த ஒரு பையில், சில ஆடைகள் இருக்க, அதிலிருந்து ஷேர்ட் ஒன்றை எடுத்து, வேகமாக அணிந்துகொண்டவாறு சிவார்ப்பணாவைப் பார்த்து,

 

“போய் நீயும் முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு வா அர்ப்பணா… இப்படியே விடுதிக்குள் போனால், இப்போதுதான் பத்துக் கொலையைச் செய்துவிட்டு வருகிறோம் என்பதைப் பறைசாற்றியதுபோல இருக்கும்…” என்று கூற, அது வரை அவன் மேலிருந்து பரிதாபம் போய், இப்போத அங்கே கோபம் குடிகொண்டது.

 

“என்னது? செய்துவிட்டு வருகிறோமா?” என்று அகலத் திறந்த வாயில் தன் வலக் கரத்தின் உள்ளங்கையை வைத்து எடுத்தவள்,

 

“அத்தினை கொலைகளை நானா செய்தேன்… நீங்கள்தானே மதம் பிடித்த யானைபோல, அத்தினை பேரையும் துவசம் செய்தீர்கள்… அதுவும் கத்தியால்… நீங்கள் செய்துவிட்டு அதற்குள் என்னை இழுக்கிறீர்களே…” என்று இவள் சீற,

 

“ஓக்கே… ஓக்கே… நானே செய்தேன்… போதுமா போய் முகத்தையும் கழுத்தையும் கழுவி விட்டு வா…” என்று உத்தரவிட,

 

“ஏன் அப்படிக் கொன்றீர்கள்… அதுவும் மிகக் குறுகிய நேரத்தில்… உங்களுக்கு எப்படி இப்படி வெறி வந்தது…? எப்படி சண்டை பிடித்தீர்கள்… உங்களுக்குச் சண்டை பிடிக்கத் தெரியுமா? தற்காப்புக் கலை படித்திருக்கிறீர்களா? உன்மையில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று அவள் கேள்விகளை அடுக்க,

 

“அர்ப்பணா… ப்ளீஸ்… நேரம் போய்க்கொண்டே இருக்கிறது… போய் முகத்தைக் கழுவிவிட்டு வா….” என்று தன் குரலை உயர்த்திக் கூற, அவனை முறைத்துக்கொண்டே அந்த ஆற்றை நோக்கிச் சென்றாள். சிவார்ப்பணா.

 

அவனுடைய கட்டளைக்குப் பணிந்து, அந்த ஆற்றில் கையை வைத்ததுதான் தெரியும், பதறிக்கொண்டு தன் கரத்தை எடுத்தவள், இரண்டடி பின் வைத்தவள்,

 

“அம்மாடியோவ்… என்னமாக குளிர்கிறது… நான் கழுவமாட்டேன்…” என்று மூக்கைச் சுழித்துக் கூறியவளின் அழகை அந்த நிலையிலும் மெய் மறந்து பார்த்தான். சின்னச் செயல்களில் கூடப் பித்தம் கொள்ளச் செய்கிறாளே ராட்சசி… என்று மனதிற்குள் திட்டியவாறு ஈரத்தைத் துடைத்துக்கொண்டிருந்த துவாயை எடுத்துக்கொண்டு, அவளருகே வந்தான்.

 

அதை ஓடும் நீரில் நனைத்துப் பிழிந்து எடுத்து, “என்னைப் பார்…” என்றான். அவள் திரும்பியதும், அவளுடைய கரங்களைப் பற்றி, ஒவ்வொரு விரல்களாக எங்கே உடைந்துவிடுமோ என்று அஞ்சியவன் போல, மெதுவாகத் துடைத்து விட்டான்.

 

கரங்களிலிருந்த இரத்தக் கறைகள் ஓரளவு காணாமல் போனதும், குனிந்து மேலும் தன் துவாயை நனைத்து இறுகப் பிழிந்து எடுத்தவன், அவளுடைய நாடியை இடது கரத்தால் பற்றி, மென்மையாக அவளுடைய முகத்தைத் துடைக்கத் தொடங்கினான்.

 

நெற்றி, இமைகள், வழிகள், நாசி, உதடுகள்… என்று ஒவ்வொரு அங்கங்களையும், ரசித்து ரசித்துத் துடைத்தவனின் கரங்கள், இப்போது கன்னங்களைத் துடைக்கத் தொடங்கின.

 

கன்னங்கள்… அவளுடைய கன்னங்களைத் துடைத்தவனுக்கு ஏனோ அவ்விடத்தை விட்டுக் கரத்தை விலக்க மனமே வரவில்லை.

 

செழுமையான, குளிரினால் சிவந்து ஆப்பிள் பழம் போலக் கடித்துப் புசிக்கத் தூண்டும் அதன் அழகில் தன்னிலை கெட்டுப் பார்த்துக்கொண்டிருந்தவனின் பெரும் விரல்கள், அவனையும் மீறி, கன்னத்தை வருடிக் கொடுத்தன. கூடவே, பெரும் விரலாலும், சுட்டு விரலாலும் மெதுவாகக் கிள்ளி, அதன் செழுமையை அறிய முயன்றன.

 

அப்படியே கன்னத்தை வருடிய பெரும் விரல், இப்போது, அவளுடைய உதடுகளின் அருகாமையில் நின்று அங்கும் இங்கும் அசைய முடியாததாக அங்கேயே நிலைத்து நின்றது.

 

உதடுகள்… எத்தனை மென்மையான சிவந்த செழித்த உதடுகள். அன்று ஆறு மாதங்களுக்கு முன்பு, அவனையும் அறியாமல், தன் நிலை கெட்டு, அவள் உதடுகளை, சுவைத்திருக்கிறான். அந்த உதடுகளின் சுவையை இந்தக் கணம் வரை அவன் மறந்தானில்லை. மறக்கக் கூடிய சுவையையா அவை கொடுத்தன. கனவிலும், நினைவிலும் அவனை அலைக் கழித்த அந்த உதடுகள், இப்போது மீண்டும் அவன் உதடுகளுக்கு மிக மிக அருகாமையில்… இப்போதே, இந்தக் கணமே, அந்த உதடுகளைத் தன் உதடுகளால் வருடிக் கவிபாடிக் கூடி மகிழ வேண்டும் என்கிற பெரும் வெறியே தோன்ற, அதைப் பெரும் சிரமப்பட்டு அடக்கியவன், தன் உதட்டை நாக்கால், வருடிக் கொடுத்துத் தன்னைச் சமப்படுத்த முயன்றான். பின் பெரிய மூச்சொன்றை வெளியிட்டு,

 

மிக மிக அருகே இருந்தாலும், தொட முடியாத தொலைவில் அந்த உதடுகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டவனின் கவனம் இப்போது அவளுடைய நாடிக்குச் சென்றது. அங்கும் தெறித்திருந்த இரத்தக் கறைகளை அவன் துடைத்துவிட்டு அப்படியே கழுத்தடிக்குக் கொண்டு வந்தான்.

 

அந்தக் கழுத்தின் அருகாமையில் ஓடிய நரம்பு இப்போது குளிரினால் சற்று நீலம் பாரித்துத் தெரியத் தன்னை மறந்து தன் விரல்களினால் அந்த நரம்புகளில் கோலம் போட, இவள் உடல் குழைந்து போனது.

 

அவளுடைய விழிகள், விரிந்து, உதடுகள் சற்று பிளக்கத் தன்னவனின் முகத்தில் தெரிந்த காமத்தைக் கண்டு மயங்கிப்போய் கிறங்கி நின்றாள் அந்த மங்கை.

 

இப்போது இந்தக் கணம், அவள் மனதில் தன்னைச் சுற்றியிருந்த ஆபத்து எதுவும் நினைவில் இருக்கவில்லை. அவள் மனக்கண்ணில் நிலைத்திருந்தவை தீரன் தீரன் தீரன் மட்டுமே.

 

என்னதான் அவன் தன்னைக் கட்டப்படுத்த முயன்றும், ஒரு நிலைக்கு மேல் அவனால் முடிந்திருக்கவில்லை.

 

விழிகளாலே தன்னுடைய செயலுக்குச் சம்மதம் கொடுத்தவளின் மதிவதனத்தைப் பார்த்தவன், தன்னையும் மறந்து, மேலும் நெருங்கி வந்து, ஈரத் துவாயால், அவளுடைய கழுத்தின் பின்புறத்தைத் துடைத்தவாறு, அவளுடைய முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தான்.

 

சிவார்ப்பணாவும், ஏதோ ஒரு மந்திரத்தால் கட்டுப்பட்டவள் போல, நிமிர்ந்து சூரியனைப் பார்க்கும் தாமரை போலத் தன்னை நோக்கியிருந்தவனின் முகத்தை இமைக்காது பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய வலது கரம், அவனுடைய சட்டையை அழுந்தப் பற்றிக்கொண்டது.

 

இருவரும் ஒன்றாகவே வாய்க்குள் சுரந்த உமிழ்நீரைக் கூட்டி விழுங்கினர். விழுங்கும்போது, அசைந்த அவளுடைய தொண்டையின் மீது அவனுடைய கவனம் செல்ல, அந்த மென்மையைத் தன் உதடுகளால் உணரவேண்டும் என்றும், நாசியால் கழுத்து வளைவின் சுகந்தத்தை நுகரவேண்டும் என்றும், மனம் போராட்டம் நிகழ்த்த, அதற்கு மேல் முடியாதவனாகத் தன் உதடுகளை அவளுடைய கழுத்து வளைவில் பொருத்திவிட்டிருந்தான் அந்தத் தீரன்.

 

தன்னையும் மறந்து அவள் கழுத்தை மென்மையாகக் கடித்துப் பின் உதடுகளால் சுவைத்தான்.

 

இதுவரை அறியாத, நுகராத, தெரியாத, புரியாத ஒரு வித உணர்வில் ஜனித்தவளின் விழிகள், அவனுடைய தேடலை ரசித்தவாறே தன் விழிகளை மூடிக்கொண்டு, முதன் முறையாக ஒரு ஆண்மகனின், அதுவும் அவள் மனதிற்குப் பிடித்தவனது உதடுகளின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து ரசித்து அனுபவிக்கத் தொடங்கினாள்.

 

அவனுடைய உதடுகள், மேலும் கீழும் அசைந்து, அந்த வளைவின் மென்மையை அணு அணுவாக நுகர்ந்தும், வருடியும் உள்வாங்கிக்கொள்ள, அந்தக் கழுத்து வளைவின் பாதை போதாது என்பது போல, உதடுகள் மேலும் பயணம் நடத்தி, அப்படியே கன்னத்தை உரசிப் பின் உதட்டின் அருகே நெருங்கி வர, சிவார்ப்பனா தன் நிலை மறந்து, உணர்வு மறந்து, அவளைச் சுற்றியிருந்த சூழல் மறந்து, கூடவே தன்னைச் சூழ்ந்துள்ள ஆபத்தை மறந்து, அவனும் அவளும் மட்டுமாய் அந்த அகிலத்தில் சுகபோகத்தில்.

 

ஈரத் துவாயை எறிந்த அந்தக் கள்வனின் கரங்களோ, அவளுடைய தோள்களை அழுந்தப் பற்றிப் பின் மேல் கரங்களுக்கும் அழுத்தம் கொடுத்தவாறு, கீழே  பயணித்துக் குரங்கெனத் தாவி இடையில் தஞ்சம் புகுந்தன.

 

சற்று நேரம் இடையில் குடியிருக்க முயல, அதற்குத் தோதான இடம் கிடைக்கவில்லையோ? அவளுடைய இடையை மேலும் கீழுமாக வருடிக் கொடுத்துப் பின் ஒரு இடத்தில் வாகாக உட்கார்ந்து கொண்டன.

 

அந்த உள்ளங்கைகளின் வெம்மை அணிந்திருந்த தடித்த ஜாக்கட்டையும் மீறி, உள்ளேற, அந்த வெம்மையின் தன்னை மறந்து விழிகளை மூடினாள் சிவார்ப்பணா.

 

அந்த உள்ளங்கைகளுக்கு, பொறுமையில்லையோ, தன் குடியிருப்பை விடுத்து, மறைந்திருந்த புதையலைத் தேட முயல்வன, போல, மேலே மேலே செல்ல முயல, அது வரை தன்னை மறந்திருந்த சிவார்ப்பணாவிற்கு உடல் விறைத்தது.

 

போதாத காலமாக, மின்தூக்கியில் வைத்து அந்த மல்லனின் கரங்கள் தன் உடலில் பயணித்தது நினைவு வர, அத்தினை நேரமாக அவளை ஆட்சி செய்த, அந்த இனிமையான மாயவலை அறுந்து போக, மூடியிருந்த இமைகள் படக் என்று திறந்து அதிர்ச்சியுடன், தன் முகத்தோடு உரசிக்கொண்டிருந்தவனின் செயலில் விறைத்துப் போய் நின்றாள்.

 

‘ஓ… அர்ப்பணா… என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? நீ எத்தகைய ஆபத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறாய்? இது புரியாமல்…’ என்று அவளுடைய மனம் அவளை அதட்ட, அது வரை அவனுடைய பிடியிலிருந்தவள் பதறிக்கொண்டு இரண்டடி பின்னுக்கு வைத்தாள்.

 

அவள் வைத்த இடத்திலிருந்த கூழாங்கற்கள், சந்தர்ப்பம் பார்த்துக் காலை வாரிவிட, அப்படியே பின்னுக்குச் சரியத் தொடங்கினாள்.

 

திடீர் என்று தன்னை விட்டு சிவார்ப்பணா பிரிந்ததும், அதுவரை தன் நிலை கேட்டிருந்தவனுக்கு உடனேயே முற்று முழுதாகத் தன் சுயநினைவு பெற முடியவில்லை.

 

கையில் விளையாடிய பொம்மை ஒன்றை, யாரோ பறித்ததுபோன்ற உணர்வில் தவித்தவன், பல்லைக் கடித்துத் தன் கோபத்தை அடக்க முயன்றான்.

 

அதே நேரம், சமநிலை தவறிப் பின்புறமாக அவள் விழத் தொடங்க, ஓர் எட்டில், அவளுடைய முன்புற மேற்சட்டையைப் பற்றித் தண்ணீரில் விழா வண்ணம் காத்தவன், அப்படியே பிடித்துக்கொண்டு சில விநாடிகள் நின்றான்.

 

அப்போதுதான் சற்று முன் தான் செய்ய விழைந்த காரியத்தின் தாற்பரியம் புரிந்தது.

 

என்ன காரியம் செய்யத் துணிந்தான்… அவன் செய்ய வேண்டிய கடமை என்ன? செய்துகொண்டிருப்பது என்ன? டாமிட்…’ என்று தன்னையே திட்டியவன், அவளை இழுத்து நிமிர்த்தி, விடுவித்து, வாய்க்குள் எதையோ கடுப்புடன் முணுமுணுத்துக்கொண்டு, தன் தலைமுடியை அழுந்தக் கோதி, ஓரளவு நிதானத்திற்கு வர முயன்று அதில் வெற்றியும் கண்டான். .

பின் வேகமாக அவளை விட்டு விலகியவன் விரைந்து வாகனத்தில் ஏறி, அதை உயிர்ப்பித்து அக்சிலரேட்டரை அழுத்த அது சீறியது.

 

உடல் நடுங்க, ஏதோ ஒரு வித பதட்டத்துடன், அவனுடைய அழைப்பைப் புரிந்துகொண்டவளாக, வாகனத்தில் ஏறிக் கதவைச் சாற்றினாள்.

 

இப்போதும் அவன் காரை எடுத்தான் இல்லை. மீண்டும் ஆக்சிலரேட்டரை அழுத்த, அவள் புரியாமல் அவனைப் பார்த்து விழித்தாள். மீண்டும் வாகனம் “ப்ரூம்…” என்று சீற, அப்போதுதான் அவன் என்ன கூற வருகிறான் என்பதைப் புரிந்துகொண்டவளாத் தன் இருக்கைவாரை போட, அதற்குப் பிறகு கியரை மாற்றியவனின் கார், சீறிக்கொண்டு, அடுத்த சாகசத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

 

அவர்கள் எதிரிகளிடமிருந்து தப்பியாகிவிட்டது என்று நினைத்தாலும், அவர்கள் ஒன்று நினைக்க எதிரிகள் வேறு நினைக்கிறார்கள் என்பதை மிக விரைவில் இருவரும் உணர்ந்துகொள்ளவேண்டி வந்தது. என்னதான் சிவார்ப்பணாவிற்குக் காவலனாக இருந்து காத்தாலும், ஒரு சந்தர்ப்பத்தில் அவளைத் தொலைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!