(21)
சிவார்ப்பணா மெதுவாக விழிகளைத் திறந்தாள். உடம்பு அடித்துப் போட்டதுபோல வலித்தது. தொண்டை காய்ந்துபோயிருந்தது. அதைச் சமப்படுத்துவதற்காக விழுங்க முற்பட்டாள். வலியில் உயிர் போவது போலிருந்தது.
அறைக்குள் இருட்டு படர்ந்திருந்ததால், கூர்ந்து எதையும் ஆராய முடியவில்லை. எழும்பி அமர வேண்டும் போலிருந்தது. ஆனால் தோள் பட்டையின் புறமாக வலித்தது.
சிரமப் பட்டு இடது கரத்தை வலது கரத்தால் வருடிக் கொடுத்தவள், தனக்கு என்னவாகி விட்டது என்பதை யோசித்தாள். தலை வேறு வலித்தது. கரத்தால் பின் தலையைத் தொட்டுப் பார்த்தாள். யாரோ அங்கு ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்திட்டிருக்கவேண்டும். யார்? என்று யோசித்தவளுக்கு
நடந்தவை அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன. அந்த மல்லன் அவளை எட்டி உதைத்த போது, சுவரில் அடிபட்டு மயங்கியிருக்கவேண்டும். அதற்குப் பிறகு என்ன நடந்தது?
ஒரு வேளை அவளை அவன்… சிந்திக்க முடியாமல் விறுக்கென்று எழுந்தமர்ந்தவள், தன்னை ஒரு முறை தடவிப் பார்த்தாள்.
அவளுடைய ஆடைகளைக் காணவில்லை. ஆனால் யாருடையதோ டீ சேர்ட் போடப்பட்டிருந்தது. அவளை விட பெரிய டீசேர்ட் என்பதால், தோள்களிலிருந்து வழுக்கி விழுந்துகொண்டிருந்தது. இழுத்து, சரியாக்கியவளுக்கு அச்சத்தில் உடல் வெடவெடத்தது. அவளுக்கு என்ன நடந்தது என்பதை ஊகிக்கக் கூட அவளால் முடியவில்லை. எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியாமல் மூளை மரத்துப்போனது.
சுற்றும் முற்றும் பார்த்தவள், அந்த அறைக்குள் மெல்லிய வெளிச்சம் வந்தால்தான் அவளால் எதையும் கவனமாக ஆராய முடியும் என்பது புரிந்தது. தள்ளாடியவாறு எழுந்தவள் எங்கோ சென்ற உடலை நிலைப்படுத்த முடியாமல் எதிலோ தட்டுப்பட, “ஆ…” என்கின்ற சிறு முனங்கலுடன் தொடையைத் தடவிக் கொடுத்தவாறு மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள். தட்டுப் பட்டது என்ன என்று தடவிப் பார்த்தாள். சிறிய மேசை. அதில் மேசை விளக்கு இருப்பது தெரிய அதன் பொத்தான் எங்கே இருக்கிறது என்று தேடி அழுத்தினாள்.
லைட் வெளிச்சத்தைப் பரப்ப, விழிகளைக் கூர்மையாக்கி அந்த இடத்தை அலசினாள். அவளுடைய விழிகளுக்குச் சுவரின் ஓரமாக இருந்த கதவு தட்டுப் பட்டது. சிரமப்பட்டு எழுந்தவள், தள்ளாடியவாறு அந்தக் கதவின் குமிழைப் பிடித்துத் திருக அது திறந்து கொண்டது.
பெரிதாக இருந்தது குளியலறை. எல்லா வித வசதியுடனும் இருந்தது. முடிந்த அளவு விரைவாகச் சென்றவள், காயம் படாத கரத்தைத் தூக்கி நீர்க் குழாயைத் திறந்து அதிலிருந்து வந்த குளிர் நீரால் முகத்தை அடித்துக் கழுவினாள். மீண்டும் மீண்டும் அநபாயதீரனின் நினைவு வந்தது. அவனைக் குளியலறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வந்தாளே, வெளியே வந்திருப்பானா? இல்லை தப்பியிருப்பானா? ஏனோ அவனை நினைக்கும் போது பரிதாபமாக இருந்தது.
முகம் கழுவியிருந்ததாலும், அவளைப் பற்றியிருந்த அம்மல் பெரிதும் விலகவில்லை.
இரண்டாம் முறை அவள் அதே ஆட்களிடம் சிக்கியிருக்கிறாள். யார் அவர்கள். ஏன் அவளைக் காயப்படுத்த வேண்டும்? அவளிடம் ஏதோ ஒன்றைக் கேட்டார்களே? எதைக் கேட்டார்கள்? ஏன் அவளிடம் கேட்கவேண்டும்… எதற்குமே அவளுக்குப் பதில் தெரியவில்லை. ஆனால், அவள் நினைத்தது போல, இது சாதாரண பிரச்சனையல்ல… ஏதோ ஒரு பெரிய பிரச்சனைக்குள் தெரிந்தோ தெரியாமலோ சிக்கியிருக்கிறாள். முன்பு அந்த பேருந்து விபத்து. பின்பு யாரோ அவளைக் கடத்த வந்தார்கள். அந்தத் துப்பாக்கிச் சூடு. இப்போது உயிர் போகும் அளவுக்குச் சென்றுவிட்டாள்.
முதலில் அந்த துப்பாக்கிச் சூடு… அது வேறு யாருக்கோ என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், இல்லை… அதுவும் அவளுக்குப் போட்ட ஸ்கெட்ச்… துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு, இன்று அவளைக் கொல்ல முயன்றார்கள்… ஒவ்வொரு முறையும் தீரனே அவளைக் காத்திருக்கிறான்… அவனுக்கு முன்பே இது பற்றித் தெரியுமா? தெரிந்ததால்தான் அவளைப் பின்பற்றி வருகிறானா? ஏன் என்னைப் பின்பற்றி வரவேண்டும். எனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம். உன்மையில் தீரன் நல்லவன்தானா? நாம்தான் அவனைத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா. தீரன் சொன்னது போல, அவன் பேச்சைக் கேட்டிருந்தால், அவள் இத்தனை பெரிய சிக்கலில் சிக்கியிருக்க மாட்டாளோ? ஆயிரம் கேள்விகள் மனதில் எழுந்தன. ஆனால் எதற்கும் அவளிடம் பதிலிருக்கவில்லை.
எதுவும் புரியாமல் தடுமாறினாள் சிவார்ப்பணா.
அநபாயதீரன் அவளைத் தேடி அசுர வேகத்தில் வந்ததோ, அவளைக் காத்ததோ, தன் உயிர் மூச்சைக் கொடுத்து, அவள் உயிரை மீட்டுக் கொடுத்ததோ எதுவும் அவள் நினைவுக்கு வரவில்லை.
ஆனால் மங்கலாக ஒரு உருவம் தன்னை இழுத்து அணைத்தது நினைவுக்கு வந்தது. ஏதேதோ புரியாத மொழியில் எதை எதையோ பிதற்றியது போல இப்போதும் அவளுடைய காதுகளுக்கு மங்கலாகக் கேட்டது. தன்னோடு இருக்கும்படி கேட்டுக்கொண்டது… இவையெல்லாம் எங்கோ ஒரு மூன்றாம் உலகத்தில் நடந்த கனவு போல அவள் மனதினில் வந்து வந்து போனது.
அவளை ஆசுவாசப் படுத்திய குரலின் உதடுகள் இப்போதும் தன் செவியைத் தீண்டுவது போல உணர்ந்து சிலிர்த்தாள் சிவார்ப்ணா. தன் தலையைக் குலுக்கியவள், கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
அவளால் அங்கே தெரியும் பிம்பம் தான்தான் என்று நம்ப முடியவில்லை. கன்னத்தில் அந்தக் கறுப்பன் அடித்ததற்கு அடையாளமாகக் கண்டிக் கறுத்திருந்தது. தலையின் பின் புறம் வலிக்க, உதட்டைச் சுழித்தவாறு தடவிப் பார்த்தாள். கட்டுப்போடப்பட்டிருந்தது. சுழித்த உதடுகள் வலிக்க, “ஷ்..” என்றவாறு விரல்களால் காயம் பட்ட உதட்டோரத்தை வருடிக் கொடுத்தாள். உதட்டோரம் வீங்கியிருந்தது. உடம்பு வேறு அடித்துப் போட்டது போல வலித்தது.
சிரமப்பட்டு, அதிலிருந்தே தண்ணீரைக் கரங்களில் எடுத்து கொஞ்சம் அருந்தினாள். தொண்டைக்குள் போகமாட்டேன் என்று அடம் பிடிக்கக் கமறினாள். காய்ச்சல் போல உடம்பெல்லாம் எரிந்தது.
எங்கே இருக்கிறோம் என்பது கூட அவளுக்குப் புரியவில்லை. பாதுகாப்பாக இருக்கிறோமா இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை..
அங்கே எப்படி வந்தோம் என்பது கூடப் தெரியவில்லை. சோர்வுடன் மீண்டும் படுக்கையறைக்குள் வந்தவள், கட்டிலில் அமர்ந்தாள். அந்த அறையைக் கவனமாக அளந்தாள்.. ஒரே ஒரு படுக்கை. சற்றுத் தள்ளி கொம்பியூட்டர் மேசை. சுவரிலேயே பதித்திருந்த குளோசட். அதைத் தவிர வேறு எந்தப் பொருளும் பிரத்தியேகமாக அங்கே இருக்கவில்லை.
மெதுவாக எழுந்தவள், போதிய ஆடையில்லாமல் இருப்பது புரிய, தள்ளாடியவாறு க்ளோசட்டின் அருகே சென்று வலிக்காத கரத்தால் திறந்து பார்த்தள். அப்படியிருந்தும் காயம் பட்ட கரத்தின் தோள் பட்டை விண் என்று தெறிக்க, மெதுவாக அதை வருடிக் கொடுத்தவாறு உள்ளே அவதானித்தாள். எல்லாம் ஆண்களுக்குரிய ஆடைகள். மருந்துக்கும் ஒரு பெண்ணின் ஆடை இருக்கவில்லை. அப்படியானால் , அந்த விட்டில் இருப்பவர் ஆணாகத்தான் இருக்கவேண்டும்.
க்ளோசட்டை மூடியவள், தன் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்டியவாறு, மெதுவாக அறையைச் சுற்றிப் பார்த்தாள். அந்த அறைக்குள் இரண்டு கதவுகள் இருந்தன. ஒன்று குளியல் அறைக்குப் போவதற்கான வழி என்பது அவளுக்குத் தெரியும்.
விரைவாக மற்றைய கதவுப் பக்கமாகச் சென்றவள், அதை இழுத்துத் திறந்தாள். சத்தமில்லாமல் திறந்து கொண்டது. கவனமாகத் தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள். கும்மிருட்டு அவளை வரவேற்றது. ஏனோ இருட்டைக் கண்டால் அவளையும் மீறி இதயம் வேகமாகத் துடித்துப் பயமுறுத்தியது.
அந்த இடம் என்ன என்பது தெரியவில்லை. மீண்டும் ஏதாவது ஒன்றில் தட்டுப்பட்டு, உள்ளே இருக்கிற எதிரிக்கு, விழித்துவிட்டோம் என்பதைத் தெரிவிக்க அவள் விரும்பவில்லை. அதனால் தட்டுத் தடுமாறி மிகக் கவனத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள்.
பயத்திலே இதயம் தொண்டைவரை எம்பி அடித்தது. வாய் உலர்ந்தது. உடல் நடுங்கியது. இந்த நிலைமை நீடித்தால் அவளையும் அறியாமல் மயங்கி விழுந்துவிடுவாள் என்பது அவளுக்கே தெரிந்தது.
அந்தப் பயத்துடன் முன்னேறியவள், இரண்டடி வைத்திருக்கமாட்டாள். அவளுடைய உடல் ஒரு உருவத்துடன் முட்டிக்கொண்டது. எங்கே முட்டிக்கொண்டோம் என்பதை அறிந்தவள், வேகமாகப் பிரிந்து ஓடத் தொடங்கினாள். ஆறடி வைத்திருக்கமாட்டாள்,
“அர்ப்பணா… டோன்ட் ரன்… இட்ஸ் மீ…” என்கிற அவனுடைய குரலில் தடை போட்டது போல அப்படியே ஒரு கணம் நின்றாள்.
அவளை விட்டுச் சென்ற அத்தினை தைரியமும், அவனுடைய ஒரு குரலில், மீண்டும் அவளை வந்து அணைத்துக்கொள்ள, என்ன செய்கிறோம் என்பதை உணர்வதற்குள்ளாகப் புயலின் வேகத்தில் திரும்பி அவனை நோக்கிப் பாய்ந்தவள், குழந்தை போலத் துள்ளி அவன் கழுத்தை இறுக்கக் கட்டிக்கொள்ள, அவளுடைய இரு கால்களும், அவனுடைய இடையைச் சுற்றி இறுக்கிக் கொண்டன. அவளுடைய முகம் அவனுடைய கன்னத்தில் அழுந்தப் பதித்தவாறு அப்படியே கொஞ்ச நேரம் கிடந்தாள்.
சிவார்ப்பணாவின் திடீர் தாக்குதலை அநபாயதீரன் எதிர்பார்க்கவில்லை. அவள் பாய்ந்து அவன் மீது ஏறியதும், ஒரு கணம், தடுமாறியவன், அவள் விழுந்துவிடுவாளோ என்கிற பயத்தில், தன்னுடைய வலக்கரத்தால், அவளுடைய இடையையும், இடக்கரத்தால், அவளுடைய முதுகையும் இறுகப் பற்றியவன், தன் கால்களைச் சற்று அகட்டி சமநிலைப் படுத்தி அவளை ஏந்தியவாறு நின்றிருந்தான்.
“ஹே… அர்ப்பணா… ரிலாக்ஸ்… யு ஆர் சேஃப் நவ்…” என்று தன் கரங்களில் ஏந்தியிருந்தவளின் முதுகை வருடிக் கொடுக்க, அவளோ, முழுதாகத் தளர்ந்தாள்.
இத்தினை நேரமும் பெரும் பயத்தில் உலர்ந்துபோயிருந்த சிவார்ப்பணாவுக்கு, அச்சம் எல்லாம் மாயமாய் மறைந்து போக, துவண்டு போன கொடிக்கு ஒரு கிளை கிடைத்ததுபோல அவனை மேலும் இறுகக் கட்டிக்கொண்டவளின் உடல், பதட்டத்திலோ, இல்லை மகிழ்ச்சியினாலோ நடுங்கியது.
“தீரன்… தீரன்… என்னைக் காப்பாற்றுங்கள்… என்னைக் காப்பாற்றுங்கள்… யாரோ… என்னை… என்னை… ஓ காட்… நான் இங்கிருந்து போக வேண்டும்… ப்ளீஸ். என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்….” என்று அவனுடைய கழுத்து வளைவில் தன் முகத்தைப் பதித்துக் கதறியவளை மேலும் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டான் அநபாயதீரன்.
அவளுடைய உடல் நடுக்கத்திலிருந்து நன்றாகப் பயந்துவிட்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்கு புரிந்தது.
“ஷ்… அர்ப்பணா.. பயப்பட ஒன்றுமில்லை… இதோ பார்…” என்று அவளைத் தேற்ற முயன்றான். ஆனால் அவளோ அவனுடைய பேச்சைக் கேட்பதாகவே இல்லை.
“உ.. உங்களுக்கு… உங்களுக்குப் புரிய… வில்லை… அவர்கள்… என்னை… என்னை…” அதற்கு மேல் கூற முடியாமல், மேலும் அந்தப் பயங்கர நினைவு அவளை ஆட்கொள்ள, அவள் மேலும் அழ, இப்போது இடது கரத்தால் அவள் இடையைச் சுற்றி வளைத்து, வலக் கரத்தால், அவளுடைய முதுகை வருடிக்கொடுத்து தன் கழுத்தை வளைத்திருந்த இரு கரங்களிலும் தன் உதட்டைப் பதித்து எடுத்தவன்,
“ப்ளீஸ் மா… உணக்கொன்றுமில்லை…. அதுதான் நான் இங்கே இருக்கிறேன் அல்லவா… ம்…” என்று அவன் மென்மையாகக் கேட்க,
இவன் எப்படி அங்கே வந்தான், அவனுக்கு அவள் அங்கே இருப்பது எப்படித் தெரியும் என்கின்ற கேள்விகளெல்லாம் அவளுக்கு எழவே இல்லை. அவளுக்கு அவனுடன் அங்கிருந்து தப்பினால் போதும் போலிருந்தது. இப்போது அவள் அநபாயதீரனுடன் நரகத்திற்கு வேண்டுமானாலும் போகத் தயாராக இருந்தாள்.
“நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா? நாம் இங்கிருந்து போக வேண்டும் தீரன். யாரோ என்னை இங்கே கடத்திக்கொண்டு வந்துவிட்டார்கள். யார் எவர் என்று எதுவுமே எனக்குத் தெரியாது அவர்கள்…” அதற்கு மேல் முடிக்க முடியாமல் தன் தலையை நிமிர்த்தாமலே கதற,
“அர்ப்பணா… லிசின் டு மி… நீ நினைப்பது போல உனக்கு ஒன்றும்…” என்று அவன் முடிப்பதற்குள், அவனிடமிருந்து இறங்கும் எண்ணமேயில்லாமல். அவன் கழுத்தைச் சுற்றியிருந்த கரத்தை எடுத்து, அவன் ஷேர்ட்டின் கழுத்துப் பட்டியைப் பற்றியவள், தலையை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்து முறைக்க, சிவார்ப்பணா தன் கரத்தை விலத்தினதும், எங்கே அவள் விழுந்துவிடுவாளோ என்று அஞ்சியவன் போல, அவளை மேலும் தன் கரம் கொண்டு அழுந்தப் பற்றி,
ஏய் பார்த்து… விழுந்துவிடப் போகிறாய்…” என்று அவன் எச்சரித்த பிறகுதான் அவளுக்குத் தான் நிற்கும் நிலையே புரிந்தது. வெட்கமும், சங்கடமும் போட்டிப்போட, பதற்றத்துடன்,
“ஐ.. ஐ ஆம் சாரி…” என்றவள் அவசரமாக அவன் இடையைச் சுற்றியிருந்த கால்களைப் பிரித்து விலக்கி கீழே இறங்க, அவனும் அவளைச் சிரமப்படுத்தாமல் விடுவிக்க, இரண்டடி தள்ளி நின்றுகொண்டாள்.
அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை. எப்படி அத்தினை வேகத்தில் அவன் மீது ஏறினோம் என்று அவளுக்குப் புரியவில்லை. கூடவே பெரும் சங்கடமாகவும் இருந்தது. எந்தத் தைரியத்தில் அவள் அப்படிச் செய்தாள். அவனைக் கண்டதும், கண் மண் தெரியாத மகிழ்ச்சியில் என்ன செய்கிறோம் என்பது கூடப் புரியாமல் ஏறிவிட்டாள்.
“சா… சாரி தீரன்… உங்களைக் கண்டதும்… என்னை மறந்து…” என்று அவள் கூற,
“ஷட் அப் அன்ட் லீவ் இட் அர்ப்பணா… நீ இனி எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை… நான் சொல்வது புரிகிறது அல்லவா?” என்று அவன் கேட்க, அப்போதுதான் தன் நிலை புரிந்தவளாக,
“அநபாயதீரன் என்னுடைய நிலைமை புரியாமல் பேசுகிறீர்கள்… இன்று… யாரோ… என்னைக் கொல்லப் பார்த்தார்கள்… என்னை அடிக்கக் கூட செய்தார்கள்… தெரியுமா… அதுவும் பலமாக… ஒருத்தன்… ஒருத்தன் என்னை… உதைத்தான்… எப்படி… வலித்தது… தெரியுமா…” என்று அழுகையுடன் அவள் கூற, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவனுடைய உடல் இறுகி இரும்பென அந்த இடத்திலேயே நிலைகொண்டது.
“ஓ மை பேபி…” என்றவன் சற்றும் தாமதிக்காது, அவளை நெருங்கி, தன் இரு கரங்களாலும் ஏந்திச் சென்று, அங்கிருந்த சோஃபாவில் தன் மடியில் இருத்தியவாறே அமர்ந்தவனுக்கு, இந்த நிலைக்குள் தள்ளியவர்கள் யாராக இருந்தாலும் அதற்குப் பதில் கூறியே ஆகவேண்டும் என்கிற வெறி வந்தது. கூடவே அவளை புதைந்தவனைச் சாகடிக்காது சித்திரவதைப் படுத்திக் கொன்றிருக்க வேண்டும் என்கிற ஆங்காரம் அப்போது தோன்றியது. ஆனாலும் அவளை நிலைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தவனாக, அவள் முகத்தைத் தன் இரு உள்ளங் கைகளாலும் பற்றித் தூக்கினான். துடித்த உதடுகளையும் கலங்கிய விழிகளையும் கண்டவனுக்கு உள்ளம் வலித்தது.
“ஷ்… லிசின் டு மி…” என்றவன் ஒரு கரத்தை இறக்கித் தன் சட்டைப் பையிலிருந்து ஏதோ ஒன்றை வெளியே எடுத்தான். அதைத் தூக்கிப் பிடித்து, அதில் இருந்த பொத்தானைத் தட்ட அந்த அறை வெளிச்சமானது.
வியப்புடன் சிவார்ப்பணா அவனுடைய கரத்தையும், ரிமோல்ட் கொன்ட்ரோலையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“யு ஆர் சேஃப் நௌ அர்ப்பணா… நீ இப்போது என்னுடைய பாதுகாப்பில்தான் இருக்கிறாய்… என்னை மீறி இனி யாரும் உன் மீது கை வைக்க முடியாது…” என்று கூற அது வரை அவளை அழுத்தியிருந்த பாரம் அவளை விட்டு விலக, பெரும் நிம்மதியுடன் தன்னையும் மறந்து, அவன் கழுத்தைச் சுற்றிக் கரங்களைப் போட்டு, அவன் மார்பில் வாகாக சாய்ந்தவளின் விழிகள் தம்மையும் மறந்து நிம்மதியாக மூடிக்கொண்டன.
(22)
தன் மார்பில் சக்தியெல்லாம் வடிந்து விழிகளை மூடிச் சோர்ந்து கிடந்தவளை, சற்று நேரம் அப்படியே இருக்கவிட்டவனின் வலது கரம், அவளுடைய தலைமுடியை வருடிக்கொண்டிருக்க, அவனுடைய இடது கரம், அவளுடைய வலது கரத்தைத் தத்தெடுத்து, அழுத்தி விட்டுக்கொண்டிருந்தன.
கிட்டத்தட்ட அரை மணி நேரம், அவளைத் தன் கை வளைவில் வைத்திருந்தவன், அவளுடைய மேல் கரங்களைக் கொஞ்ச நேரம் வருடிக்கொடுத்தான். அவனையும் மீறி அவனுடைய உதடுகள், அவன் வசமில்லாது, அவளுடைய முடியில் புதைந்து புதைந்து எதையோ தேடிக்கொண்டிருந்தன. நாடி வேறு அவளுடைய உச்சந்தலையில் பதிவதும், பின் உரசுவதுமாக டாப் நடனம் ஆடிக்கொண்டிருந்தது. அது போதாது என்பது போல, அவளைத் தன்னோடு இறுக அணைத்துக் கொண்டவன், கரங்களை, அவளுடைய கரத்தின் மேற்புறம், தோள்கள் என்று வருடிக்கொடுத்தன. காயம் பட்ட பகுதியை, தன் விரல்களின் நுணியால், வட்டமாக மிக மிக மென்மையாகத் தடவிக் கொடுத்தவன், அவள் உச்சந்தலையில் உதட்டைப் பொருத்தி எடுத்தான்.
பின் இடது கை சற்று மேல் எழும்பி அவளுடைய கன்னத்தில் பதிந்து வருடிக் கொடுத்தன.
ஒரு கணம் அதன் மென்மையில் தன்னை மறந்திருந்தவன், பெரு விரலால் மெதுவாக உதடு நோக்கிப் பயணிக்க, அது இறுதியாகக் காயம் பட்டு வீங்கியிருந்த இடத்தில் நிலைத்து நின்றது. அதை வலிக்காதவாறு வருடிக்கொடுத்தவனின் உள்ளம் துடித்தது.
இத்தகைய மென்மையானவளை அடிக்க எப்படி அவர்களுக்கு மனம் வந்தது? முஷ்டி இறுக, அவளுடைய தலையைச் சரித்து மேலும் ஒரு முறை அந்தக் காயத்தைப் பரிசோதித்தான். அவனையும் மீறி உதடுகள், அவளுடைய நெற்றியில் மென்மையாக உரசி மீள, இருவரும் கொஞ்ச நேரம் அப்படியே தம்மை மறந்த மோன நிலையில் அமர்ந்திருந்தனர்.
பின் எதையோ யோசித்தவளாக. “இது யாருடைய வீடு?” என்றாள் விழிகளால் சுத்தவரப் பார்த்தவாறு. அவனோ இது என்ன கேள்வி என்பது போல அவளை ஏறிட்டுவிட்டு,
“என்னுடைய வீடுதான்… எதற்குக் கேட்கிறாய்…” என்றான் அவள் கன்னத்தில் ஒட்டியிருந்த ஒன்றிரண்டு முடியை இழுத்து எடுத்தவாறு.
“உங்களுடைய வீடா… அப்படியானால் இன்று காலை நான் இருந்த வீடு யாருடையது?” என்றாள் வியப்புடன்.
“அதுவும் என்னுடையதுதான்… அந்த அப்பார்ட்மன்டைத் தவிர, இது கொஞ்சம் பாதுகாப்பும் வசதியும் கூடியது. அதுதான் இங்கே அழைத்து வந்தேன்…” என்று கூற, அடேங்கப்பா… கனடாவில் அதுவும் டொரன்டோவில் இரண்டு அப்பார்ட்மன்ட் வைத்திருக்கிறானா…?’ என்று எண்ணிவளின் உதடுகள் மெல்லியதாகப் பிதுங்கித் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்த, எதுவும் பேசாமல் சற்று நேரம் அப்படியே இருந்தாள்.
சற்று நேரம் அப்படியே இருந்தவளுக்குத் திடீர் என்று பசிப்பதுபோலத் தோன்றியது.
ஆனாலும் அவனை விட்டுப் பிரிய அவளுக்கு ஏனோ மனம் வரவில்லை. அப்படியே காலங்கள் நீளாதா என்று ஏக்கமாக இருந்தது. அந்தப் பரந்த மார்பும், அது கொடுத்த கதகதப்பும், அவளை மென்மையாக வருடும் நீண்ட அழுத்தமான பெரிய கரங்களும், கடினம் நிறைந்த கால்களும், அவளுக்குப் பாதுகாப்பு அரணாக அவளைச் சூழ்ந்திருக்க, அந்த அரணை விட்டு வெளியேற விரும்பாத பறவையாக மேலும் மேலும் அவனை ஒன்றி நின்றாள் அந்த மெல்லிடையாள்.
‘அடேங்கப்பா… இவனுக்குக் கிங்காங் என்று பட்டம் வைத்ததில் தப்பேயில்லை. அவசரத்துக்கு அணைப்பதாக இருந்தால், அதற்கு எனக்கு நான்கு கரங்கள் தேவைபோல இருக்கிறதே…’ என்று அந்த நிலையிலும் அவள் எண்ணத் தவறவில்லை.
அவளுடைய நிலை தெரியாமல், மீண்டும் அவளுக்குப் பசி வயிற்றைக் கிள்ள,
“அர்ப்பணா… சாப்பிடலாமா?” என்றான் அவனுடைய கவர்ந்திழுக்கும் குரலில்.
அவளுடைய நிலையறிந்து அவன் சாப்பிடலாமா என்று கேட்டதும் இவளால் வியப்பைச் சிறிதும் அடக்க முடியவில்லை. அவளுடைய நிலையை எப்படி இவன் இத்தினை தெளிவாகப் புரிந்துகொள்கிறான்…? என்று எண்ணினாலும், எங்கே அவன் தன்னை விட்டுப் போய்விடுவானோ என்று அஞ்சியவள் போன்று, மறுப்பாகத் தலையசைத்தவள், வேகமாக அவன் பிடியிலிருந்த தன் வலக் கரத்தை எடுத்து, அவன் மார்புச் சட்டையை அழுந்தப் பற்றிக்கொண்டாள்.
இனியும் அவனை விட்டு விலகுவதாக அவள் இல்லை. போதும் ஒரு முறை அவனைப் பிரிந்து சென்று பட்ட பாடு போதும். இனியும் ஒரு துன்பத்தை அவள் வலிந்து அழைப்பதாக இல்லை.
அவளுடைய நிலையைப் புரிந்துகொண்டவனாக, அவனுடைய உதடுகள் மெல்லிய நகையைச் சிந்த, மீண்டும் தன் உதட்டை அவளுடைய தலையில் பதித்து எடுத்தவன், தன் சட்டையைப் பற்றியவளின் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுத்திக் கொடுத்தவன்,
“ஹேய்… நான் எங்கும் போகவில்லை கண்ணம்மா… இங்கே தான் இருக்கப்போகிறேன்… உன்னை விட்டுப் போகும் எண்ணம் தற்போதைக்கு எனக்கில்லை… பட்… இங்கே இருந்துகொண்டே சாப்பாடு என்றதும், அது நம்மைத் தேடி வர, நாம் என்ன மந்திரவாதிகளா? நாமாகத் தேடிப் பெற்றுக்கொண்டால்தான் உண்டு…” என்று அவன் கூற,
“வேண்டாம்… சாப்பாடு வேண்டாம்… இங்கேயே இப்படியே இருக்கலாம் தீரன்…” என்றவளின் குரலுடன் சேர்ந்து உடலும் நடுங்க, அவளை இறுக அழுத்தி அணைத்துக் கொடுத்தவன்,
“ஹே… நான்தான் உனக்குப் பக்கத்திலேயே இருக்கிறேனே… பிறகு என்ன… வா… நானும் இன்னும் சாப்பிடவில்லை அர்ப்பணா… பசிக்கிறதும்மா…” என்று ஆறுதல் படுத்தும் குரலில் கனிவோடு கேட்க, அவனும் சாப்பிடவில்லையே என்கிற சிந்தனை, அவள் வலியை ஓரளவு ஓரம் கட்டிவிட, மெதுவாக அவனை விட்டு விலக எத்தனிக்க அவனோ, தன் அழகிய மயக்கும் கம்பீரப் புன்னகையைச் சிந்தியவாறு, அவளுடைய கால்களுக்கிடையில் தன் கரத்தைக் கொடுத்துத் தூக்கி அருகே இருத்தி விட்டு எழுந்தான்.
உள்ளே சென்றவன், கையில் தண்ணீர் குவலையுடன் வர, இவள் என்ன என்பது போலப் பார்த்தாள்.
அவளிடம் குவலையை நீட்டியவாறு,
“முதலில் தண்ணீரைக் குடி அர்ப்பணா… பதட்டம் கொஞ்சம் மட்டுப்படும்…” என்று கூற, மறுக்காமல், நடுங்கும் கரங்கள் கொண்டு பற்றியவள், அவசர அவசரமாகக் குடித்துவிட்டு குவலையை அவனிடம், நீட்ட, அதை வாங்கி முன்னே இருந்த டீ டேபிலில் வைத்துவிட்டு, நிமிர்ந்தான்.
“லெட்ஸ் கோ டு த கிச்சின்…” என்று கூறி, அவள் முன் தன் இடக் கரத்தை நீட்ட, அதில் சிவார்ப்பணா தன் வலக்கரத்தை வைக்க, அவளை மெதுவாக எழுப்பி விட்டவன், பிடித்த கரத்தை விடாமலே, சமையலறைக்கு அழைத்துச் சென்றான். அவளை மேசையருகே விட்டுவிட்டுக் குளிர்சாதனப் பெட்டியினருகே சென்று அதைத் திறந்து ஆராய்ந்தவாறு
“ம்… என்ன சாப்பிடப்போகிறாய்?” என்று கேட்டான்.
“எது என்றாலும் எனக்கு ஓக்கே…” என்று தன் தோளைக் குலுக்கியவளுக்கு, அப்போதுதான், காயம் பட்ட தோளின் வலி புரியத் தன்னை மறந்து,
“அவுச்…” என்றவாறு அவள் முகத்தைச் சுழித்தாள். குளிர்சாதனப் பெட்டியில் தன் கவனத்தைப் பதித்திருந்தவன், அவசரமாகத் திரும்பிப் பார்த்தான்.
அவள், தன் தோள் புறத்துக் காயத்தைப் பார்ப்பதற்காக, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து வெற்றிகரமாகத் தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருந்தாள்.
அவளை ஒரு முழு நிமிடம் பார்த்தவன், தன் வேலையை விட்டுவிட்டு, அவளை நெருங்கி, அவள் என்ன என்பதை உணர்வதற்கு முன்பாக, அவளுடைய இடையின் இரு புறமும் தன் பெரிய அழுத்தமான உள்ளங்கைகளை வைத்தவன், அப்படியே அவளை, கிழங்கு தூக்குவது போலத் தூக்கி, அங்கிருந்த மேசையில் இருத்திவிட்டு,
“டோன்ட் மூவ்…” என்று சுட்டு விரலை அவள் புறமாகக் காட்டிக் குழந்தையிடம் சொல்வது போலக் கட்டளையிட்ட, அவளும் தன் விழிகளைச் சுருக்கி அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நான் என்ன நாய்க்குட்டியா? சொன்ன கட்டளைக்கு ஏற்ப நடப்பதற்கு… நான் அநா… சிவார்ப்பணா… எனக்குத் தோன்றினால் மட்டுமே பேசாமல் இருப்பேன்…” என்றவாறு தன் கரங்களை மார்புக்குக் குறுக்காகக் கட்ட முயல, அவள் வேகம் பொறுக்காமல், தோட்பட்டை சுளீர் என்று வலியைக் கொடுக்க, முகம் ஒரு கணம் கசங்கிப் பின் விரிந்தது. வலியில் விழிகளில் கண்ணீர் கூட நிறைந்துவிட்டது. கூடவே தலையின் பின்புறமும் சுள் என்று வலிக்க,
அவனோ அவளைப் பார்த்து முறைத்தான்.
“நல்லது சொன்னால் கேட்கக் கூடாது என்று ஏதாவது விரதமா என்ன? உனக்குத் தையல் போட்டிருக்கிறேன்… அதனால்தான் சொன்னேன் அசையாமல் இரு என்று…” என்று அவன் அதட்டியவாறு கூற,
“வட்… தையல் போட்டீர்களா… நீங்களா போட்டீர்கள்… எப்படிப் போட்டீர்கள்… உங்களுக்கு எப்படிப் போடத் தெரியும்? நீங்கள் மருத்துவருக்கா படித்தீர்கள்… இல்லையே… விண்வெளிப் பொறியியலில், அதுவும் முதுகலைப் பட்டமல்லவா பெற்றிருப்பதாகச் சொன்னீர்கள்…” என்று அவள் பாட்டிற்குக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு போக,
“முதுகலையல்ல… முனைவர் பட்டம்… பிஎச்டி… டாக்டரேட் முடித்திருக்கிறேன்…” என்றான் அவன் எரிச்சலுடன் கூடிய அழுத்தத்துடன். கூடவே தேவையான பொருட்களை எடுப்பதற்காக ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, குளிர்சாதனப் பெட்டியின் அருகே செல்ல,
“ஓ… அதனால்தான்… மருத்துவர் வேலை செய்கிறீர்களாக்கும்…” என்று இவள் தன்னை மறந்து கிளுகிளுத்து சிரிக்க, ஒரு கணம் விழிகள் மூட மறந்து அவளை வெறித்துப் பார்த்தான் அநபாயதீரன்.
முதன் முதலாக அவள் அப்படிச் சிரிப்பதை அருகேயிருந்து பார்க்கிறான். முன்பும் ஒரு தடவை பார்த்திருக்கிறான்தான். ஆனால் அது தொலைவிலிருந்து. இப்படி அருகேயிருந்து பார்க்கும் போது, ஏனோ அவனுக்குத் தெவிட்டவேயில்லை. மீண்டும் ஒரு முறை சிரிக்கமாட்டாளா என்று மனம் ஏங்கியது. காலம் முழுவதும் அந்த சிரிப்பைப் பார்த்துக்கொண்டே இருக்கமாட்டோமா என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. ஏனோ அவனால் தன் விழிகளை அவளுடைய முகத்திலிருந்து எடுக்க முடியவில்லை.
கூடவே, சிரிக்கும் போது, அவள் கன்னத்தில் தெரிந்த அந்த மெல்லிய குழியின் அழகில் தன்னை மறந்து நின்றது சில கணங்களே. பின் தன் நிலை புரிந்தவனாகத் தன் மீதே கோபம் கொண்டவன், தன் தலையைக் குலுக்கிவிட்டு, கடித்த பற்களுடன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தான்.
‘இந்த மிஷன் முடிந்த உடன், இவளைப் பத்திரமாகச் சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டு, அவள் பக்கம் திரும்பிப் பார்க்காது சென்று விட வேண்டும். அவள் அருகேயிருந்தால், என்னுடைய கவனம் நிச்சயமாக உயிராக மதிக்கும் என் தொழிலின் மீது இருக்காது…’ என்று தனக்குத் தானே சொன்னவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, எந்தச் சந்தர்ப்பத்திலும் அவளை விட்டுத் தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று.
அவளோ, தன் அழகாகச் சிரிக்கிறோம் என்றோ, இல்லை அவனுடைய கவனத்தைச் சிதறடிக்கிறோம் என்றோ சிறிதும் யோசிக்காமல், தன் பாட்டிற்குப் பேசிக்கொண்டே போனாள்.
“நான் கேட்டதற்கு இன்னும் நீங்கள் பதில் சொல்லவில்லையே… என் காயத்திற்கு எப்படி தையல் போட்டீர்கள். உங்களுக்குத் தையல் போட எப்படித் தெரியும்?” என்று இவள் கேட்க,
“ம்… என்னிடம் தையல் மெஷின் இருக்கிறது… அதை வைத்து உன் காயத்தின் மேல் எம்பிராய்டரி தையல் போட்டேன்… என்று தன்னை மறந்து மெல்லிய குறும்புப் புன்னகையுடன் கூறவிட்டுக் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வேண்டியவற்றைத் தேர்ந்து எடுக்கத் தொடங்கினான்.
ஆனால் சிவார்ப்பணாவோ, அதிர்ந்து போனாள்.
அடேங்கப்பா… கிங்காங்கிற்கு இப்படிக் குறும்பாகப் பேசக் கூடத் தெரியுமா? இந்தப் புன்னகையை எங்கோ பார்த்திருக்கிறேனே… எங்கே… அதுவும் மிக மிக அருகே பார்த்திருக்கிறேன்… எப்போது? அவளுடைய போதாத காலம், நினைவுக்கு வரவேயில்லை.
“நீங்கள் சிரிக்கும் போது, கம்பீரமாக இருக்கிறது தெரியுமா… இப்படியே சிரித்துக் கொண்டிருக்கலாமே, எப்போது பார்… உர்ர்ர்ர் என்று முகத்தை வைத்துக்கொண்டு…” என்று தன் கால்களை ஆட்டியவாறு அவள் குறை கூற, அவனுடைய சிரிப்பு அந்தக் கணம் காணாமல் போனது. மீண்டும் அவன் முகத்தில் கடுமை குடிகொள்ள,
“நான் என்ன படத்திற்கு போசா கொடுக்கிறேன்… எந்த நேரமும் சிரித்துக்கொண்டிருக்க?” என்று சிடுசிடுத்தவன், தன் கரத்திலிருந்த காய்கறி அடங்கிய பாத்திரத்தை, தொட்டியில் போட்டுவிட்டு தண்ணீர் குழாயைத் திருப்பிக் கழுவத் தொடங்கினான்.
“அது சரி… நீங்கள் சிரித்தாலும் ஒன்றுதான், உங்கள் மூஞ்சியை மூஞ்சூறு போல உம் என்று வைத்திருந்தாலும் எனக்கு ஒன்றுதான்… இப்போது என் சந்தேகம், எப்படி உங்களுக்குத் தைக்கத் தெரியும்? மருத்துவம் படித்திருக்கிறீர்களா? ஃபெஸ்ட் எய்ட் தெரியுமா? அதில் எல்லாமா தையல் பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள்? வேறு என்ன என்ன உங்களுக்குத் தெரியும்?” என்று வியந்தவள், பின் எதையோ நினைத்துச் சிரித்தாள்.
“பரவாயில்லை கைவசம் பல தொழில்கள் வைத்திருக்கிறீர்கள்… பூட்டு உடைக்கிறீர்கள், மருத்துவம் பார்க்கிறீர்கள், துப்பாக்கியால் சுடுகிறீர்கள்… காவல் காக்கிறீர்கள்… அத்தோடு… நீங்கள்…” அவள் கூறுவதைச் சற்றை நேரம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், தன் பொறுமையை முற்று முழுதாக இழந்தவன் போல, இவளுடைய வாயை எப்படி அடைப்பது? என்று புரியாமல் விழிகளால் நான்கு பக்கமும் அலசினான்.
சற்றுத் தள்ளியிருந்த கவுண்டர் டாப்பிலிருந்த பழக் கூடை கண்ணில் பட விரைந்து சென்று அதிலிருந்து ஆப்பிள் ஒன்றை எடுத்து, “காட்ச்” என்றவாறு அதை சிவார்ப்பணாவை நோக்கி, மெதுவாக விட்டெறிய, அதை அவள் காயம் படாத கரத்தால் லாகவமாகக் கைப்பற்றி என்ன என்பது போலப் பார்த்தான்.
“ஷட் யுவர் மௌத் அன்ட் ஈட் திஸ் ஃபெர்ஸ்ட்…” என்று விட்டு, சமைப்பதற்குரிய வாணலியைக் கவுண்டரிலிருந்து எடுத்து குக்கரில் வைத்தவாறு, சிவார்ப்பணாவைத் திரும்பிப் பார்த்தான்.
அவளோ அவனையும் ஆப்பிளையும் ஒரு முறை முறைத்து விட்டு, ஆப்பிளை ஒரு கடி கடித்துச் சப்பி விழுங்க, ஏற்கெனவே இரணப்பட்டிருந்த தொண்டைக்குள்ளாக அது சிக்கிக்கொண்டு செல்ல, அதன் வலி பொறுக்க முடியாது முகம் சிவந்து, விழிகளில் கண்ணீர் தேங்கிச் சிரமப்பட, அதைப் புரிந்துகொண்டவனாக, அங்கேயிருந்த மெடிக்கல் கபினெட்டை நோக்கி விரைந்து சென்றான்.
அதிலிருந்து, ஒரு மாத்திரையை வெளியே எடுத்துத் தண்ணீருடன் அதை சிவார்ப்பணாவிடம் நீட்ட, இவள் என்ன என்பது போலப் பார்த்தாள்.
“ஜெஸ்ட் பெய்ன் கில்லர்… எடுத்தாயானால், வலி குறைந்துவிடும்…” என்று கூற, அவள் வாங்கி வாயில் போட்டுத் தண்ணீரையும் குடிக்க, உதட்டின் ஓரமாக வழிந்த நீரைத் தன் கரத்தால் துடைத்து விட்டவன்,
இன்னும் ஒரு ஐந்து நிமிடங்களில் சமையல் தயாராகிவிடும்… அது வரையும் உடலை அசைக்காமல், முக்கியமாக வாயை அசைக்காமல் உட்கார்ந்திரு. சமையல் முடிந்ததும், சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்…’ என்று அவள் தலையில் மெல்லமாகத் தட்டி விட்டு விலகியவனை எரிச்சலுடன் பார்க்க மட்டும்தான் முடிந்தது.
“இவர் பெரிய அப்பாடக்கர்… இவருடன் பேசத்தான் தவம் இருக்கிறோமாக்கும்… ஏதோ ஃபுட் ரூலரை விழுங்கியது போல என்னமாக விறைப்புடன் நிக்குது கிங்காங். முற்பிறப்பில் பெரிய மில்ட்ரி ஆஃபீசராக இருந்திருப்பானோ…?” என்று உதட்டைச் சுழிக்க, காயம் வலித்தது.
தன் போக்கில், காயத்தைப் பார்க்கும் எண்ணத்துடன், உதட்டைச் சுழித்து, இரண்டு கண்களையும் கீழே கொண்டு சென்று உதடுகளால் குரங்கு வித்தை செய்தும், அவளால் காயத்தைப் பார்க்க முடியவில்லை. சலிப்புடன் தன் முயற்சியைக் கைவிட்டவள், போரடிக்க, விழிகளால் அங்குலம் அங்குலமாகச் சமையலறையை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினாள்.
அடேங்கப்பா… சற்று பெரிய சமையலறைதான். மிகவும் நவீன முறையில், படு சுத்தமாக இருந்தது. அது அது இருக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக இருந்தது. யாராவது கண்ணை மூடி, அந்த இடத்தில் விட்டால், தடுமாறாமல் பொருட்களை எடுத்துவிடுவார்கள்.
அடிக்கடி சிவார்ப்பணாவைத் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த அநபாயதீரனுக்கு, அவள் உதடுகளும் கண்களும் சற்று முன் செய்த வித்தையைக் கண்டு, வந்த சிரிப்பை அடக்கப் பெரும் பாடுபட்டுக்கொண்டிருந்தான். நீண்ட காலங்களுக்குப் பிறகு, அவனையும் மீறி அவனுடைய மனம் இளகி மெல்லிய மகிழ்ச்சியை உள்வாங்கித் திளைக்கத் தொடங்கியது.
(23)
அநபாயதீரன் தன்னை எண்ணி நகைக்கிறான் என்பதை அறியாமலே, தன் இதழ்களின் குரங்கு வித்தையை முடித்துவிட்டுச், சமையலறையைப் பராக்குப் பார்க்கத் தொடங்கியவளைக் கண்டதும், அவனுடைய நகைப்பு மேலும் விரிந்தது.
‘பார்க்கும் விதத்தைப் பார்த்தால், அம்மையார் சமையலறைப் பக்கமே வந்திருக்கமாட்டார்கள் போல இருக்கே…’ என்று எண்ணியவன் தன் தலையை வலம் இடமாக மெல்லியதாக ஆட்டித் தன் கவனத்தை வெட்டிக்கொண்டிருந்த மரக்கறியில் செலுத்தத் தொடங்கினான்.
அநபாயதீரன் மரக்கறிகள் வெட்டும் லாகவத்தைக் கண்டு, சிவார்ப்பணா ஒரு கணம் திறந்த வாய் மூட மறந்தவளாக நின்றாள்.
அடிக்கடி சமையல் சார்ந்த காணொளியைப் பார்க்கும் வழக்கம் உண்டு. அப்போதெல்லாம், பெரிய பெரிய சமையல் விற்பன்னர்கள், மரக்கறிகளை மின்னல் வேகத்துடன் கடகட என்று வெட்டுவதைப் பார்த்து வியந்திருக்கிறாள். ஒரு முறை, அதை முயற்சி செய்ய முயன்று வெற்றிகரமாக, சுட்டுவிரலையும் சேர்த்து வெட்டிக்கொண்ட வீரப்பராக்கிரம கதையும் உண்டு.
ஆனால் அநபாயதீரன் வெட்டும் முறையைப் பார்க்கும் போது அவளால் ஆச்சரியப்படாமல் இருக்கவே முடியவில்லை. இவன் இடதுகைப் பழக்கம் உள்ளவனோ? கத்தியை இடது கையில் பற்றியிருந்தான். வலது கரத்திலிருந்த மரக்கறியை, ஒரு இயந்திரம் படு வேகமாக வெட்டுவது போல, அவன் வெட்டி வெட்டி ஒதுக்கி வைத்தான். கூடவே உள்ளியை, நசித்து சிறிதாக வெட்டிய விதமும், வெங்காயத்தை, கத்தியின் மேல் வலக் கரத்தை வைத்து, மின்னல் விரைவுடன் சிறு சிறு பொடிகளாக வெட்டி ஓரமாக வைத்த விதமும்…
‘அடங்கொக்கா மக்கா… கிங்காங்கின் பல தொழில்களுடன் சமையல் தொழிலும் தேர்ச்சிபெற்றவன் போல இருக்கிறதே. இவன் எதையுமே விட்டு வைக்கவில்லையா? காவலன் வேலை கூடப் பார்க்கிறான்பா…’ என்று எண்ணியவளுக்கு அவனைக் குளியல் அறையில் வைத்துப் பூட்டிவிட்டுச் சென்றது நினைவுக்கு வந்தது.
அவன் சொன்னது போலக் கேட்டிருந்தால், இந்த உடல் வலியும் மன வலியும் இருந்திருக்காது அல்லவா? எப்படியோ, கிங்காங் அவளைக் காத்து இங்கே அழைத்து வந்துவிட்டான். அவளுடைய உயிரையும் காத்துவிட்டான். ஆனால் அவன் எப்போது வந்தான்? அவளைக் கொல்ல முயன்றவர்கள் யார் என்பது அவனுக்குத் தெரியுமா. அவர்களை இவன் பார்த்தானா? இதைப் பற்றி அறிந்தேயாகவேண்டும் என்கிற வெறி எழ,
அநபாயதீரன், குக்கரில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டிருக்கும் போதே,
“தீரன் நா… நான் எப்படி இங்கே வந்தேன்…” என்று மெதுவாகக் கேட்டாள்.
தன் வேலையில் கவனமாக இருந்தவன், உதட்டில் மலர்ந்த புன்னகை மாறாமலே, அவன் நடந்தவற்றைச் சுருக்கமாகச் சொல்ல, அநபாயதீரன் அங்கே வந்திருக்காவிட்டால் அவள் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டாள் என்பது புரிய, தான் செய்த மடத்தனத்தை எண்ணித் தன் விழிகளை அழுந்த மூடிக்கொண்டாள் சிவார்ப்பணா.
“நீங்கள் வராமல் இருந்திருந்தால், இப்போது நான் உயிரோடு இருந்திருக்கமாட்டேன் அல்லவா?” என்று அவள் கம்மிய குரலில் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், குக்கரின் சூட்டைத் தணித்தவாறு அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அழுந்த மூடிய விழிகளும், மெல்லியதாய் நடுங்கும் உதடுகளும், சிவந்த மூக்கின் நுனியும் அவள் வேதனையைப் பறைசாற்ற,
“யார் அர்ப்பணா அவர்கள்… எதற்காக அவர்கள் உன்னைக் கொலை செய்ய முயலவேண்டும். உனக்கும் அவர்களுக்கும் ஏதாவது பகை இருக்கிறதா?” என்று மெதுவாகக் கேட்டான்.
விழிகளைத் திறந்தவள், அநபாயதீரன்வை உற்றுப் பார்த்தாள்.
“அது தான் எனக்கும் தெரியவில்லை தீரன்… அவர்கள் யார்? எதற்காக என் வீட்டிற்குள் அத்துமீறி நுழையவேண்டும்? எதற்காக அவர்கள் என்னைத் தாக்க வேண்டும்? எதுவுமே எனக்குப் புரியவில்லையே… அதில் ஒருவன் என்னிடம் எதையோ கேட்டான்… அவன் என்ன கேட்டான் என்பது கூட எனக்குத் தெரியவில்லை… இப்போதெல்லாம் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை… ஏதேதோ நடக்கின்றன… எதற்கு நடக்கின்றன என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் வாழ்க்கையே என் கையில் இல்லாதது போல ஒரு உணர்வு… ஏதோ அடர்ந்த கொடிய காட்டில் நான் மட்டும் தனித்திருப்பதுபோல என்னைச் சுற்றி கொடிய மிருகங்கள் வேட்டையான நிற்பது போல உணர்கிறேன். மீண்டும்… என்… என் அம்மாவின் வயிற்றிற்குள்ளேயே பாதுகாப்பாகப் போய் உறங்கிவிடவேண்டும் என்று தோன்றுகிறது… அவர்கள் போன போது நாமும் சேர்ந்து போயிருக்கக் கூடாதா என்று மனம் தவிக்கிறது… தீரன்…” என்று அவள் நடுங்கும் குரலில் குழப்பத்துடன் கூற, அதைக் கண்டவனால், அதற்கு மேல் பொறுமையாகக் கைக்கட்டி நிற்கமுடியவில்லை.
குக்கரை அணைத்துவிட்டு, இரண்டெட்டில் சிவார்ப்பணாவை நெருங்கியவன், அவள் முகத்தைப் பற்றித் தூக்கி,
“ஹேய்… ஹேய்… எதற்கு இந்தக் கலக்கம்? ம்… அதுதான் நான் இருக்கிறேன் அல்லவா? எந்தக் கொடிய விலங்குகள் உன்னைச் சூழ நினைத்தாலும், அவர்கள் என்னைத் தாண்டித்தான் உன்னிடம் வரவேண்டும் அர்ப்பணா… அது அத்தனை சுலபமல்ல…” என்றவன், கசங்கியிருந்த அவளுடைய முகத்தைப் கண்டு, அதைக் காணப் பிடிக்காதவனாக, என்ன செய்கிறோம் என்பதை உணராமலே, அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான்.
அவளுடைய முதுகைத் தட்டிக்கொடுத்தவன், “அர்ப்பணா… நாம் போகும் பாதையில் கல்லும் இருக்கும், முள்ளும் இருக்கும்… இதற்காகப் பயந்து ஒரு ஓரமாக அமர்ந்துவிட்டால், நம்மால் எப்போதும் முன்னேற முடியாது… வாழ்க்கையும் அப்படித்தான். எந்தக் கஷ்டங்கள் வந்தாலும், அதை சுலபமாகக் கடந்து போய்க்கொண்டே இருக்கவேண்டும்… இது ஒரு வீடியோ கேம் போலத்தான்… துன்பங்கள் என்பது, நமக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க். அதை வெற்றியா கடந்து போய்விட்டால், நமக்கு மகிழ்ச்சி என்கிற பரிசு கிடைக்கும். மகிழ்ச்சியாக இருக்கிறோமே என்று நிம்மதியாக இருந்துவிடவும் கூடாது… அடுத்த டாஸ்க்கிற்காக நாம் தயாராக இருக்கவேண்டும். எந்தத் துன்பமாக இருந்தாலும், அது நமக்குக் கிடைத்த அனுபவம் என்று அதைக் கடந்து போய்விட வேண்டும். அதற்குரிய மன தைரியத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்… இந்தப் பயம் இருக்கிறதே… இது தான் நம்முடைய முதல் எதிரி அர்ப்பணா. நம்மை வீழ்த்தும் ஆயுதமே இந்தப் பயம்தான். எந்தச் சந்தர்ப்பத்திலும், நம்முடைய பயத்தை எதிராளி காணுமாறு நாம் ஒரு போதும் நடந்துகொள்ளக் கூடாது, அதுதான் அவனுடைய வெற்றிக்கான முதல் படி.” என்றவன், அவள் தலையை வருடிக் கொடுத்துவிட்டு விலகி நின்றவாறு,
“இனிமேல் இப்படிப் பிதற்றக் கூடாது… புரிந்ததா? நீ போக வேண்டிய பாதை அதிக தூரம் இருக்கிறது… அதன் எல்லையைத் தொடுவதற்கு நீ பயணிக்கவேண்டும்… இல்லை என்றால், ஒரு போதும் உன்னால் அதன் எல்லையைத் தொட முடியாது… எது நடந்தாலும் தைரியத்தை இழக்காதே…” என்றவன் மீண்டும் குக்கர் அருகே வந்து, அதை இயக்கி, மீண்டும் வாணலியைச் சூடாக்கினான். அவனுடைய இதயம் முதன் முறையாகத் தன் நிலை தப்பி, வேகமாக அடித்துக் கொண்டது.
‘அவள் வருந்தினால் எனக்கென்ன. அவள் மனம் கசங்கினால், என் மனம் எதற்காகக் கசங்க வேண்டும்? எனக்கும் அவளுக்கும் அப்படி என்ன பெரிய சம்பந்தம் இருக்கிறது… ஃபயர்… நீ உனது கட்டுப்பாட்டில் இல்லை. வேக்கப் மான்… நீ போகவேண்டிய தூரம் இன்னும் நிறையவே இருக்கிறது… உன் மனதைச் சலனப்படுத்தினாய் என்றால், உன் பாதையை நீ மாற்றி வேறு இடத்திற்குப் போக வேண்டிவரும். இத்தினை கஷ்டப் பட்டு இத்தினை பெரிய இடத்தில் உட்கார்ந்திருப்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முதல் உன் மனதில் புதிதாக முளைத்திருக்கும் அந்த உணர்வை மூட்டைக் கட்டி ஒரு ஓரமாகப் போட்டு விடு… இல்லை… சிரமம் உனக்குத்தான்…’ என்று ஒரு மனம் அவனுக்கு அறிவுரை கூற, தன்னுடைய மனம், கட்டுப்பாட்டையும் மீறி, வேறு எதையோ எதிர்பார்க்கிறது என்பதை உணர்ந்தவனுக்குத் தன் மீதே பெரும் ஆத்திரம் வந்தது.
இது வரை தன் மனதைக் கட்டுப்படுத்துவதில் தனக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்று எண்ணியிருந்தவனுக்கு, இது பெரும் தோல்வியையே கொடுக்கப் பல்லைக் கடித்தவாறு, வாணலியில், எதையோ போட, அது அவன் மனத்தைப் போலவே, தெறித்துச் சிதறி அடங்கியது.
ஒருவாரு தன்னை நிதானப் படுத்திக்கொண்ட அநபாயதீரன், நீண்ட பெருமூச்சொன்றை வெளியே எடுத்துத் தன் விழிகளை இறுக மூடித் தன் சீருடையையும், தன்னுடைய போர் விமானத்தையும் கூடவே ஷார்ப் நோர்சையும் நினைத்துக்கொண்டான். இப்போது, அவனையும் மீறி, துள்ளிக்கொண்டிருந்த உணர்வுகள் மெது மெதுவாக அடங்கி, அங்கே வெறுமையும் பொறுப்பும் குடி கொண்டன. அவளிடமிருந்து ரகுவைப் பற்றி அறியவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. இப்போது மெதுவாகத் தன் விழிகளைத் திறந்த போது, ஓரளவு பழைய அநபாயதீரன் மீண்டிருந்தான்.
நறுக்கிய தக்காளியை வாணலியில் போட்டவாறே,
“ரகுவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? அவன் உன்னுடைய உற்ற நண்பன்தானே…” என்றான் அவன் எதிலோ கவனம் போல்,
“அவனுடைய பெயரை எனக்கு முன்னால் எடுக்காதீர்கள்… ரகு என் நண்பனாகத்தான் இருந்தான்… ஒரு காலத்தில், இனி எப்போதும் அவன் என் நண்பனாக இருக்க முடியாது. சிறுவயதில் இருந்தே எனக்காகப் பார்த்துப் பார்த்து செய்வான் தெரியுமா? அப்பாவுக்கு அவனென்றால் கொள்ளை பிரியம். சொல்லப் போனால் என்னை விட அவன் கூடத்தான் நேரம் மெனக்கடுவார்… ஆனால் அவன்… சே… நட்புக்கே துரோகம் இழைத்து விட்டான். என்றாவது ஒரு நாள் அவன் என் கையில் சிக்குவான்… அன்றைக்கு இந்த அநா யார் என்று அவனுக்குக் காட்டுகிறேன்…” என்று அவள் பல்லைக் கடித்தவாறு நெரும,
“எப்படி சிவார்ப்பணா… உனக்கு அவன் மீது ஒரு விகிதம் கூட சந்தேகம் வரவில்லையா?” என்றான் அடுத்து.
“சந்தேகம் வந்திருந்தால், அவனுடன் பழக்கமே வைத்திருக்கமாட்டேன் தீரன்… அவன் நல்லவன் என்று நம்பினேன்… எனக்காக எதையும் செய்வான் என்று திடமாக இருந்தேன்… எல்லாமே பொய் என்று தெரிந்ததும், எப்படித் துடித்தேன் தெரியுமா? அவனுடைய துரோகம், அத்தைக்கும் மாமாவுக்கும் தெரிந்தால், அந்த இடத்திலேயே தங்கள் உயிரை விட்டுவிடுவார்கள்…” என்று வேதனையும் கோபமும் ஒன்றுடன் ஒன்று கலந்து அவளைத் தாக்க, மிக வலியுடன் அவள் கூறினாள்.
“உன்னுடைய ரகுவிற்கும் உன்னைக் கொல்ல வந்தவர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா அர்பப்ணா? எப்போதாவது, அவர்களை ரகுவுடன் பார்த்த நினைவு உணக்கிருக்கிறதா” என்று அவன் முடிப்பதற்குள்ளாக சிவார்ப்பணா கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“தெரிந்திருந்தால், அவர்களை அடையாளம் கண்டிருக்க மாட்டேனா தீரன்… அவர்களைப் பார்த்தால், ரகுவுடன் பழக்கம் வைத்திருப்பவர்கள் போலவா இருக்கிறது?” என்றாள் சிவாரப்ப்ணா உள்ளடக்கிய ஆத்திரத்துடன்.
“அதை நீ தான் சொல்லவேண்டும் அர்ப்பணா? நீ தான் ரகுவிற்கு மிக மிக நெருங்கிய கேர்ள்ஃப்ரன்ட் ஆயிற்றே” என்று அந்த மிக மிக நெருங்கிய என்பதில் சற்று அழுத்தம் கொடுத்துக் கூற, இவள் அநபாயதீரனைப் பார்த்த முறைத்தாள்.
“இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும், உங்கள் மண்டைக்குள் ஏற்ற மாட்டீர்களா? ரகுவிற்கும் எனக்கும் நட்பு என்பதைத் தவிர வேறு எதுவும் கிடையாது கிடையாது கிடையாது. சொன்னால் புரிந்துகொள்ள மாட்டீர்களா? ரகு இது வரை இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறான் என்பது, அன்று நீங்கள் உணர்த்தும் வரை எனக்குத் தெரியாது. அவனைப் பற்றி நான் முழுதாக அறிந்து வைத்திருக்கிறேன் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அப்படியல்ல என்பதை அன்றுதான் நன்றாகப் புரிந்துகொண்டேன். சொல்லப்போனால், நான்தான் ஒரு முட்டாள்… ரகுவையும் நம்பி, உங்களையும் நம்பி, எல்லாரையும் நம்பி… சிக்கித் தவிக்கிறேன்” என்று வலித்த தொண்டையையும் பொருட்படுத்தாது சற்றுக் குரல் உயர்த்திச் சொன்னவளிடம்
“ஷ்… ஓக்கே அர்ப்பணா… எதற்காக எமோஷனலாகிறாய்… சரி வா… சாப்பாடு தயாராகிவிட்டது… சாப்பிடலாம்…” என்று அவன் கூற,
“எனக்கு ஒரு மண்ணும் வேண்டாம்…” என்று இவள் முகத்தைத் திருப்ப, .
“நீ வேண்டாம் என்பதற்கு அந்தச் சாப்பாடு என்ன குற்றம் செய்தது?” என்று அவன் இளகிவிட்ட குரலில் கேட்க,
“ம்… உங்கள் கையால் செய்த குற்றம் ஒன்றே போதுமே… உங்கள் கையால் செய்த புண்ணாக்கு எதுவும் எனக்கு வேண்டாம்…” என்று இவள் முறுக்கிக் கொள்ள,
“இது புண்ணாக்கில்லை அர்ப்பணா… அதை மாட்டுக்குத்தான் வைப்பார்கள்… இது சாப்பாடு… வேண்டுமானால் சுவைத்துப் பார்…” என்றவனின் கிண்டல் குரலைக் கேட்டதும், இவளின் கோபம் பல் மடங்காக எகிறியது.
அவளுடைய சினம் கட்டுக்கடங்காமல் பொங்க, அதை உணர்ந்துகொண்டவனாக,
“அப்போ நீ சாப்பிடமாட்டாய்? அப்பாடா… சாப்பாடு மிச்சம்… நன்றிம்மா… இருக்கிற பசிக்கு இதுவே போதாது என்று நினைத்தேன்… நீயும் கருனை கூர்ந்து வேண்டாம் என்று விட்டாய்… முழுவதையும் நானே முடித்து விடுகிறேன்… நன்றிமா…” என்று மகிழ்வுடன் கூறியவன், தன் ப்ளேட்டில், அரைவாசியைப் போட்டு, முள்கரண்டியுடன் சாப்பிடத் தொடங்க இவளுக்குக் காந்தியது.
வீம்புக்கு என்னவோ சாப்பாடு வேண்டாம் என்று சொல்லியாகிவிட்டது. ஆனால், அவன் சமைத்த சாப்பாட்டின் மணம், மரத்துப்போயிருந்த அவள் பசியைக் கிளப்பிவிட, அவளையும் மீறி வாய் ஊறுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
‘சாப்பாடு முக்கியமா, ரோஷம் முக்கியமா’ என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தவளுக்கு இறுதியாக, சாப்பாடே முக்கியமாகப் பட, அவன் மிகுதியாக வைத்திருந்த வாணலியை எடுப்பதற்காகத் தன் கரத்தைக் கொண்டுபோன நேரம், தன் தட்டிலிருந்த சாப்பாட்டை, முள்கரண்டி முழுவதுமாக அள்ளி எடுத்து, அதை சிவார்ப்பணாவின் வாயருகே கொண்டு சென்றான்.
அவள் புரியாமல், என்ன என்பது போல அவனைப் பார்க்க, “நீ பசி தாங்கமாட்டாய் என்று எனக்குத் தெரியும்… பேசாமல் சாப்பிடு…” என்று அவன் கட்டளை பிறப்பிக்க, மறுக்காமல் அவள் அதை வாங்கிக்கொண்டாள்.
உணவு பஞ்சுமிட்டாய் போல, தொண்டைக்கு எந்தச் சிரமமும் கொடுக்காமல் வழுக்கிக்கொண்டு போனது. கூடவே அதன் சுவையில் தன்னை மறந்துதான் போனாள் சிவார்ப்பணா. அதுவும் தொண்டையில் வலிக்காமல் இறங்கிய உணவை எண்ணி அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கூடவே
‘அடேங்கப்பா… கிங்காங் சமையலில் வேறு அசத்துகிறானே… சகலகலா வல்லவன் போல இருக்கே… சண்டை பிடிக்கிறான், மருத்துவம் பார்க்கிறான், பூட்டை உடைக்கிறான், போதாததற்கு சமையலை வேறு அதிரடியாகச் செய்கிறானே… பேஷ்… பேஷ் இது ரொம்ப நன்னா இருக்கே…’ என்று மனதிற்குள் புகழாரம் பாடிக்கொண்டே, அவன் ஊட்டிய உணவைச் சுவைத்தாள் சிவார்ப்பணா.
ஒருவாயைத் தனக்கும், மறு வாயை அவளுக்குமாக ஊட்டி, வாணலியை முழுவதுமாக காலி செய்த பின்புதான், இத்தினை நேரமாக எத்தகைய பசியில் தாங்கள் இருந்திருக்கிறோம் என்பது இருவருக்குமே புரிந்தது.
தன் கடைசி வாய் உணவை மென்றவாறு, அவளுடைய முகத்தைத் தன் விழிகளால் அலச, அந்த விழிகளில், அவளுடைய முன்பக்க முடி, பறந்து, அவள் இதழ்களுடன் உரசிக்கொண்டிருப்பது தெரிய, அதைச் சின்னி விரலால் ஒதுக்கிவிட்டவாறு,
“யூ ஓக்கே…?” என்று கேட்டான்.
அவள் ஆம் என்று தலையை ஆட்டிய பின் அனைத்தையும், கழுவும் தொட்டியில் போட்டு, கழுவி வைத்துவிட்டு நிமிர்ந்தவனின் செவிகள் எதையோ கூர்மையாகக் கேட்டன.
“தீரன்… அவர்கள் ஏன் என்னை…” என்று அவள் எதையோ கூற வர, வேகமாகத் திறந்திருந்த தண்ணீர் குழாயை நிறுத்தியவன், விரைந்து சென்று அவள் உதட்டின் மீது தன் சுண்டு விரலை வைத்து, “ஷ்…” என்று அவள் பேச்சைத் தடுத்தவன், தன் காதுகளைக் கூர்மையாக்கி எதையோ கேட்கத் தொடங்க, இவளோ, அவனுடைய கரத்தைத் தட்டிவிட்டு,
“நான் எதற்குச் சத்தம் போடா… மல்.. இ…” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, அருகே அவள் கடித்துவிட்டு வைத்திருந்த ஆப்பிளை எடுத்து அவளுடைய வாயில் திணித்தவாறு,
“ஷட்… அப்…” என்று தன் வாயில் விரல் வைத்து அழுத்தமாகக் கூறியவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்து, கைப்பேசியை வெளியே எடுத்து, சிசிடி பதிவுகளைப் பார்க்கத் தொடங்கினான். அவனுடைய தளத்தில், நான்கைந்து பேர், எலிவேட்டரடியில் வந்துகொண்டிருப்பதும், ஒருவனின் இடை புடைத்திருப்பதையும் கண்டவனுக்கு எதுவோ புரிய, இவனுடைய உடல் இறுகியது.
“ஷிட்…” என்று சினத்துடன் முணுமுணுத்தவன், என்ன யோசித்தானோ, வேகமாக ஜன்னலை விட்டு விலகி ஹாலின் வெளிச்சத்தை மின்னல் விரைவுடன் நிறுத்தினான்.
“அர்ப்பணா… நாம் உடனேயே இங்கிருந்து கிளம்பவேண்டும்…” என்று அவசரமாகக் கூறியவன், கரத்தைப் பின் புறம் கொண்டு சென்று பான்டின் பின்புறமாக மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியின் லாக்கை விடுவித்தான். கூடவே விரைந்து சென்று அழகுக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன கபினட்டின் இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்து ஒரு பெட்டியை வெளியே எடுத்தான்.
சிவார்ப்பணா புரியாமல் அந்த இருட்டில் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டிருக்க, அந்தப் பெட்டியைத் திறந்து, அதிலிருந்த இரண்டு புலட் லோடரையும் எடுத்து பாக்கட்டில் போட்டுக் கொண்டான்.
“கமோன் அர்ப்பணா… எழுந்திரு…” என்றவாறு அவளை நெருங்கியவன், அவள் இடையில் கை பதித்து, மேசையிலிருந்து இறக்கிவிட, சிவார்ப்பணா புரியாமல் விழித்தாள்.
‘’எ… எங்கே…”
“எதையும் இப்போது விளங்கப் படுத்த முடியாது. அதற்கு இப்போது நேரமும் இல்லை. போகும் போது கூறுகிறேன்… கிளம்பு…” என்றவன் வேகமாகச் சமையலறைக்குள் நுழைந்தான்.
அவனுடைய திடீர் அவசரத்தைப் புரியாமல் திகைத்துப் பார்த்துக்கொண்டிருக்க, கரத்திலே ஐந்தாறு வெற்றுப் போத்தல்களுடன் வெளியே வந்தான். ஒவ்வொன்றையும் உடைத்து கதவின் பக்கம் போட அவனையே குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா.
“எ… என்ன இது… நீங்கள்…” அவள் முடிப்பதற்குள்ளாக அவளுடைய கரத்தில் கை வைத்துத் தன்னோடு இழுத்துக்கொண்டு ஒரு பக்கமாகச் சென்றான்.
“தீரன்… நீங்கள்…”
“ஷ்… அர்ப்பணா.. இப்போதைக்கு எதுவும் பேசாதே… உனக்கு விளங்கப்படுத்த இது நேரமில்லை. நாங்கள் இப்போது இங்கிருந்து செல்ல வேண்டும்… தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் உனக்கு மட்டுமல்ல… எனக்கும்தான் ஆபத்து…” என்று அறிவுறுத்தியவன், சுவரிலே தொங்கிக் கொண்டிருந்த பை ஒன்றை எடுத்துத் தன் தோளில் மாட்டிக் கொண்டான். கூடவே ஒரு தடித்த ஜாக்கட் ஒன்றையும் எடுத்தவாறு சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.
வேகமாக அவளுடைய கரத்தைப் பற்றி, நுழைத்து, அணிவித்து, அவளுக்குச் சிரமம் கொடுக்காமல், தானே பூட்டியும் விட்டவன், அவளை அழைத்துக் கொண்டு அந்த வீட்டின் பின் புற ஜன்னல் பக்கமாக வந்து, சிவார்ப்பணாவைப் பார்த்து,
“கவனமாகக் கேள் சிவார்ப்பணா… இப்போது நாங்கள் பின் புறமாகத் தப்பப் போகிறோம்… எதுவாக இருந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்… எந்த ஆபத்து உனக்கு வந்தாலும் அது என்னைத் தாண்டித்தான் உனக்கு வரவேண்டும். தவிர, உனக்கு எந்த ஆபத்தும் வர நான் விட மாட்டேன். அந்த நம்பிக்கை உனக்கு இருக்கிறதல்லவா?” என்று அவன் கேட்க, அவள் யோசிக்காமல்,
“ஆம்…” என்பது போலத் தலையை ஆட்டினாள்.
“தட்ஸ் மை கேர்ள்… அதே நம்பிக்கையுடன் என் கரத்தைப் பற்றிக்கொள்…” என்றவாறு தன்னுடைய கரத்தை நீட்ட, சிவார்ப்பணா யோசிக்காமல் அவனுடைய கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டாள்.
அதே நேரம் அந்த வீட்டின் முன் புறத்தில் சிறிய சப்தம் கேட்க சிவார்ப்பணா அச்சத்துடன் அவனைப் பார்த்தாள். .
“ஐ ப்ராமிஸ் யூ… உனக்கெதுவும் ஆகாது…” என்று அவன் கிசுகிசுப்புடன் கூற, அந்த இடத்தில் எந்தவிதமான வாக்குவாதமும் செய்து பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டவளாக அவனுடைய கரத்தை மேலும் அழுத்திப் பிடித்துக்கொள்ள, அவளைப் பார்த்துத் தலையை ஆட்டிவிட்டு, பின் புற ஜன்னலைத் திறந்தான்.
திறந்ததுதான் தாமதம், கடும் குளிர்காற்று அவர்களைப் பெரும் ஓசையுடன் தாக்கியது.
அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாது, அநபாயதீரன், அதன் மீது ஏறி எந்தச் சத்தமும் போடாதவாறு கீழே குதித்து, அவளை நோக்கி மீண்டும் தன் கரத்தை நீட்ட அதைப் பற்றிக்கொண்டு, சிவார்ப்பணா இறங்க எத்தனித்தவள், அப்போதுதான் அநபாயதீரன் நின்ற இடத்தையும், அவர்கள் நின்றிருந்த உயரத்தையும் கவனித்தாள்.
அதைக் கண்டதும் அவளுக்கு சர்வமும் அடங்கியது. அதிர்ச்சியில் மூச்சு கூட விட முடியாமல் சிலையென நின்றிருந்தாள்