Thu. Sep 19th, 2024

தகிக்கும் தீயே குளிர்காயவா 9/10

(9)

 

வீட்டிற்குள் நுழைந்த, சிவார்ப்பணாவிற்கு மனமும், உடலும் ஒரு நிலையில் இருக்கவில்லை. போகிற போக்கில் புத்தி பேதலித்துவிடுமோ என்று அச்சம் கூட எழுந்தது. சற்று முன் நடந்தவற்றை எண்ணிப் பார்த்தவளுக்கு அதை ஜீரணிக்கும் சக்தி இருக்கவில்லை. மாறாக ஏதோ மீள மடியாத சுழி ஒன்றிக்குள் சிக்குப் பட்டது போல அதிலிருந்து வெளி வர முடியாதவள் போல மனமெல்லாம் படபடத்தது.

 

தன் பாட்டிற்கு சோஃபாவில் வந்து விழுந்த சிவார்ப்பணா விழிகளை மூடிக் கொள்ள, மனக்கண்ணில் குறுகிய நேரத்தில் எதிரிகளைப் பந்தாடிய அநபாயதீரன் வந்து நின்றான். மனமோ ‘யார் இந்த அநபாயதீரன்?’ என்கிற கேள்வியிலேயே உழன்றுகொண்டிருந்தது. அவனைக் கண்ட நாள் முதல், சற்று முன்பு நடந்தவற்றை மீண்டும் மீண்டும் பரிசீலித்துப் பார்த்தாள். அன்று பேருந்தில் நடந்த விபத்தில் முதன் முதலாகச் சந்தித்தபோது, ஒரு சாதாரண காப்பாளன் போலத்தான் அவளைக் காத்தான். அதன் பின் அவளுடைய வீட்டில் வைத்து அவனைக் கண்டபோது எல்லாமே மாறிவிட்டதே.

 

அதுவும் ரகுவைத் தேடிவந்தவன், அவளைத் தெரிந்ததாக எந்த சந்தர்ப்பத்திலும் காட்டவில்லையே. சரி அவன் வேறு இவன் வேறு என்றே வைத்துக்கொள்வோம். பெயர் கூடவா ஒரே போல இருக்கும்… தவிர இது வரை தனக்கு அநபாயதீரன் என்கிற பெயரில் நண்பன் ஒருவன் இருந்தான் என்று ரகு கூறியதும் கிடையாது. ரகுவைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும். அவனுடைய சிறுவயது முதல், அவளுக்கு நல்ல தோழனாக இருப்பவன், இதுவரை எதையும் மறைத்தது கிடையாது. இவனை மட்டும் என்னிடம் சொல்லாமல் எதற்கு மறைத்தான்… அதுவும் அந்த அநபாயதீரன் என்னைப் பற்றி அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்துவைத்திருக்கிறானே… எப்படி? ஏன்?

 

ரகுவுக்கும், இந்த அநபாயதீரனுக்கும் நடுவில் இருப்பது என்ன? சரி அதை விடுங்கள், இன்று என்னை எதற்காகக் கடத்த நினைத்தார்கள். யார் கடத்த முயன்றது? எதற்காக என்னைக் கடத்த வேண்டும். இன்று கடத்தியவர்களில் இருவரை ஆறு மாதங்களுக்கு முன்பாக அவள் அந்த பஸ்டான்டில் கண்டிருக்கிறாள்… அந்த பேருந்தில் நடந்த விபத்து கூட ஒரு வித சதியா? என்னைக் கொல்வதற்காக…’ என்று எண்ணிக்கொண்டவள், தன் புத்தி போகும் திசையைக் கண்டு அதிர்ந்தவளாக, ‘ஏய் பைத்தியமா உனக்கு…? நீ என்ன அமெரிக்க ஜனாதிபதியின் மகளா, இல்லை, பில்கேட்சின் பேத்தியா? உன்னை எதற்காக அவர்கள் கொலை செய்ய முயலவேண்டும். நீ இறந்தால் கூட எண்ணி வருந்த ரகுவின் குடும்பம் தவிர வேறு நாதி கிடையாது… இந்த நிலையில், உன்னைக் கொல்ல, ஆட்கள் வருகிறார்களாக்கும்… அடங்கு மனமே அடங்கு… அதிகமாக யோசித்து, வாலறுபடப் போகிறாய்…’ என்று இன்னொரு மனம் அவளை அடக்க முயன்றது.

 

உண்மைதானே? அவளைக் கொலை செய்யவேண்டியதன் அவசியம் என்ன? நிச்சமாக அன்று நடந்தது விபத்துதான்… அன்று அநபாயதீரனைச் சந்தித்ததும் எதேச்சையாகத்தான். ஒரு வேளை அவன் கூறுவது போல, ரகு என்னைப் பற்றி அவனிடம் கூறியிருப்பானோ?’ அதற்கு மேல் யோசிக்க முடியாமல் தன் தலையை அழுந்தப் பற்றிக்கொண்டவளுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்த புதிர்கள் ஏனோ பொருத்தமற்றது போலத் தோன்றியது.

 

“டேய் ரகு… எங்கேடா போய்த் தொலைந்தாய்?“ என்று தன்னை மறந்து முனங்கியவள், ரகுவின் நினைவிலேயே விழிகள் மூடிக்கொள்ள மெல்ல மெல்ல உறக்கத்தின் வசமானாள்.

 

மறுநாள் காலை ஆறுமணிக்கே, அவளுடைய துயிலைக் குலைப்பதுபோல, அவளுடைய கைப்பேசி அலற, முன்தினம் நடந்த சம்பவத்தை நினைத்துக்கொண்டே, பதைத்துத் துடித்தவாறு எழுந்தாள் சிவார்ப்பணா.

 

ஒருவாறு தன்னிலை பெற்றவள், கைப்பேசி அடிப்பது புரிய, டீ மேசையில் வைத்திருந்த கைப்பையைத் துழாவித் தன் கைப்பேசியை வெளியே எடுத்து, யார் அதிகாலையில் அழைப்பது என்று பார்த்தாள்.

 

ரகு வீட்டிலிருந்துதான் எடுத்திருந்தார்கள்.

 

‘அப்பாடா… ரகு வந்துவிட்டான் போலும்…’ என்கிற மகிழ்ச்சியில், கலைந்திருந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டவாறே, கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்தாள்.

 

“ஹலோ…” என்று மகிழ்ச்சியுடன் துள்ளியவாறு அழைக்க, மறு பக்கத்திலிருந்து வந்த பதிலால் பதை பதைத்து எழுந்தாள்.

 

“இ… இதோ…. இப்போதே வருகிறேன்… மாமா… அத்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்…” என்றவாறு வேகமாகப் படுக்கையை விட்டு எழுந்தாள்.

 

குளியல் அறைக்குள் நுழைந்தவள், அவசர அவசரமாகக் குளித்துவிட்டுக் கைக்குக் கிடைத்த ஆடை ஒன்றை அணிந்து, குளிருக்கு தோதாக தடித்த மேலாடையையும் அணிந்துகொண்டு கைப்பையைத் தூக்கிக்கொண்டு போகிற போக்கிலேயே, கதவைப் பூட்டிவிட்டு அது நன்றாகப் பூட்டியிருக்கிறதா என்பதைப் பரிசோதித்துவிட்டு, வேகமாகக் கார்ப் பார்கிங்கிற்கு வந்தாள்.

 

காரை இயக்கி வெளியே வந்தவள் பிரதான சாலையில் பறக்க விட, அடுத்த பத்து நிமிடங்களில் ரகுவின் வீடு வந்தது. காரைத் தரிப்பிடத்தில், நிறுத்திவிட்டு, அங்கேயிருந்த தொடர் மாடிக் கட்டடத்திற்குள் வேகமாக நுழைந்தாள்.

 

ரகுவின் வீட்டை வந்தடைந்தவள், அழைப்பு மணியை அழுத்த, திறந்தவர் ராகவன்.

 

அவளைக் கண்டதும், அந்த வித்தியாசமான க்ரே நிறக் கண்களில் பெரும் வலி வந்து உட்கார்ந்து கொண்டது, “வா… வாம்மா…” என்று சோர்வுடன் முனங்கியவரை நெருங்கியவள், மனம் பதைபதைக்க,

 

“மா… மாமா… என்னவாகிவிட்டது” என்றவாறே வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

அவள் கேட்டதும், ராகவனின் முகம் பெரும் வேதனையில் கசங்கியது. எதுவும் சொல்ல முடியாதவராகத் தன் மார்பிற்குக் குறுக்காகக் கைக்கட்டி சுவர் ஓரமாகச் சாய்ந்து நின்றவரை நெருங்கியவள்,

“மாமா… என்ன நடந்தது…” என்று தவிப்புடன் கேட்டாள் அவள்.

 

“அதுதானம்மா எனக்கும் புரியவில்லை. என்னென்னவோ எல்லாம் சொல்கிறார்கள்… ரகு முந்தாநாள் காலை ஏழு மணிக்கு ஏதோ அவசர வேலை என்று வீட்டை விட்டுக் கிளம்பினான்… இன்னும் வீட்டுக்கு வரவில்லை… இடையிலும் நம்முடன் தொடர்பு கொள்ளவில்லை. அவனுடைய செல் வேறு நாட் ரீச்சபிள் என்று வருகிறது. என்ன பிரச்சனை என்றாலும் எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போவான். எங்கே போனான்… என்ன நடந்தது எதுவுமே புரியவில்லை…” என்று கலங்கி நின்றவரை எப்படித் தேற்றுவது என்பது புரியாமல் சற்று விழித்தாள் சிவார்ப்பணா.

 

கலங்கியபடி நின்றவரின் கரத்தில் தன் கரத்தை வைத்து அழுத்திக் கொடுத்தவளிடம்,

 

“மிகப் பயமாக இருக்கிறதுடா… கருவேப்பிள்ளைக் கொத்தாக ஒரே ஒரு பிள்ளையைப் பெற்று வைத்திருக்கிறோம். அவனுக்கு ஒன்று என்றால்… எங்களால்… எங்களால்…” என்று வலியுடன் கூறியவர், பின் தன் தலையைக் குலுக்கி,

 

“என்னை விடும்மா… பானுதான் சமாளிக்க முடியாமல் மிகவும் பயந்துபோய்த் தவிக்கிறாள்… அவளைத்தான் எப்படித் தேற்றப் போகிறேனோ…” என்று அவர் மீண்டும் கலங்க, சிவார்ப்பணா தாமதிக்காமல், உள்ளே நுழைந்து பானுமதியை நோக்கிச் சென்றாள்.

 

அவளைக் கண்டதும் மீண்டும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, இதழ்கள் நடுங்கத் தன் இரு கரங்களையும் நீட்டிய பானுமதியிடம், விரைந்து சென்று தன் கரங்களை வைத்து அழுத்திக் கொடுத்தவள்,

 

“அத்தை… உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்… ரகு ஏதாவது அவசர வேலையாகப் போயிருக்கலாம். நிச்சயமாகத் திரும்பி வருவான்…” என்று தட்டிக்கொடுக்க,

 

“எப்படிம்மா… என்னால் முடியவில்லையே கண்ணம்மா… எனக்கு உறுதுணையாக இருப்பவன் அவன் ஒருவன்தானே… அவனுக்கு ஒன்றென்றால் அதைத் தாங்கும் சக்தி எனக்குக் கிடையாது அநாம்மா… ஐயோ… என் பிள்ளையைக் காணவில்லையே…. எங்கே போய்த்தேடுவேன்… எங்கே போவதாக இருந்தாலும் சொல்லிவிட்டுத்தான் போவான்… நேற்று… நேற்று முன்தினம் காலையில்கூட வேலைக்குப் போவதாகத்தான் சொன்னான் அநா… அன்று போனவன்… இன்னும் வரவில்லையே… நான் எங்கே போவேன்…” என்று பெற்ற தாயாகக் கதறிக் கலங்கி நின்றவரின் வேதனையைப் பார்க்க முடியாது, அவரை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் சிவார்ப்பணா.

 

‘நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டுப் போனவனா? அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு அவளைத் தேடி, வீட்டிற்கு வந்தானே… பிறந்தநாள் பரிசு வேறு தந்தானே… அப்போது கூட அவன் முகத்தில் எந்த மாற்றமும் இருக்கவில்லையே… நன்றாகத்தானே இருந்தான். அப்படியிருக்கும் போது…’ என்று யோசித்தவள், பக்கத்தில் கலங்கித் தவிக்கும், அந்தத் தாயைத் தேற்றுவது முக்கியமாகப் பட,

 

“அத்தை…. ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப்… ரகுவிற்கு ஒன்றும் நடக்காது… ஏதோ அவசர வேலையாகப் போயிருப்பான்… அவனுடைய வியாபாரம், யு எஸ்ஸிலும் இருப்பதால், ஒரு வேளை உங்களிடம் சொல்லாமல்… போயிருக்கலாம் அல்லவா… அவன் என்ன சின்னக் குழந்தையா தொலைந்தால் திரும்பி வர முடியாமல் தவிப்பதற்கு…?” என்று அவளைத் தைரியப் படுத்தியவளின் கரத்தை அழுந்தப் பற்றினார் பானு.

 

“அவன் போனதில் தப்பில்லை அநாம்மா… ஆனால் தொலைப்பேசி கூடவா அவனால் எடுத்துப் பேச முடியவில்லை…. என் பிள்ளை ஒரு போதும் இப்படி அலட்சியமாக நடந்ததில்லையே…” என்று பதறியவள், பின்,

 

“அம்மா… அவனுக்கு… ஒ… ஒன்றும் ஆகியிருக்காதில்லையா?” என்று ஏக்கத்துடன் கேட்டவரின் வாயைப் பொத்தினாள் சிவார்ப்பணா.

 

“ஏன் அத்தை… இப்படியெல்லாம்… தப்பாக யோசிக்கிறீர்கள்… நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் நடக்காது…. வேண்டுமானால் பாருங்கள்… அவன் நிச்சயமாக நாளைக்கிடையில் வந்துவிடுவான்… கவலைப் படாதீர்கள்…” என்று அவள் தேற்றும் போதுதான் கதவடியில் யாரோ நிற்பது புரிந்தது.

 

எதேச்சையாகத் திரும்பியவள் அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் அதிர்ந்து திகைத்தாள். பானுமதியும் வாசலைத்தான் பார்த்தார் போலும்,

 

“அம்மா… தம்பி பெயர்… அநபாயதீரனாம்… பால்ய சினேகிதன்… சின்ன வயசில் ஒன்றாகப் படித்தவர்கள்… நாங்கள் இங்கே வந்ததும் தொடர்பு விட்டுப் போச்சு… இப்போதுதான்… ஏதோ ஃபேஸ் புக்கில் இருவரும் மீண்டும் சந்தித்தார்களாம்… அவனைத் தேடிக் கொண்டு இங்கே வந்தான்…” என்று அவர் வருத்தத்துடன் கூற, சிவார்ப்பணா அவனைத் தீப்பார்வை பார்த்தாள்.

 

அவளுடைய முகம் கோபத்தால் சிவந்து போனது. ‘இவன் இங்கே என்ன செய்கிறான்?’ என்று எண்ணியவளுக்கு அதுவரை மறந்துபோயிருந்த முன்தின நினைவுகள் மனக் கண் முன்னாக வந்து நின்றன. ‘இவன் நல்லவனா கெட்டவனா என்பது கூடத் தெரியாமல், அத்தை எப்படி இவனை உள்ளே விட்டார்கள்?’ எரிச்சலுடன் எண்ணியவள், தன் தலையை நன்றாகக் குனிந்து பானுமதியின் காதருகே சென்றவள்,

 

“என்ன அத்தை இது… யார் எவர் என்ன சொன்னாலும் நம்பிவிடுவீர்களா? உண்மையாக இவன் ரகுவின் நண்பன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றாள் பானுமதிக்கு மட்டும் கேட்கும் குரலில்.

 

“இல்லைம்மா… தம்பி ரகுவைப் பற்றி அத்தனை செய்திகளையும் அப்படியே சொல்கிறானே… ரகு சின்ன வயதில் எங்கே படித்தான் என்பதிலிருந்து, யார் யார் நண்பர்களாக இருந்தார்கள் என்று அனைத்தையும் கூறுகிறாரே…” என்று பானு மதி கூற,

 

“சரி அத்தை… ரகுவுடைய வயது என்ன… இந்த தடியனுடைய வயதென்ன… இருவரும் நண்பர்கள் என்றால் நம்பும் படியாவா இருக்கு?” என்று எரிச்சலுடன் கேட்க,

 

“கண்ணு… ஒரே பள்ளிக்கூடத்தில் தம்பி சீனியரா இருந்தாராம் தங்கம்… ஏதோ ப்ராஜக்ட் விஷயத்தில் இவர்தானாம் ரகுவுக்கு உதவி செய்தாராம்… அதிலிருந்த நண்பர்களானார்களாம்…” என்று பானுமதி கூற இவள்தான் இறுதியில் தன் பல்லைக் கடிக்க வேண்டியதாயிற்று.

 

‘என்னைப் பற்றித் தெரியாமலே, எனக்குப் பிடித்த உணவு வகைகள் என்ன என்பதைத் தெரிந்து வைத்தவனால், ரகுவைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க முடியாதா? என்ன அத்தை நீங்கள்?’ என்று அவளால் மனதிற்குள் நினைத்தவள், அதை வாய்விட்டுச் சொல்வதற்காக வாயைத் திறக்க,

 

“என்ன பானும்மா… உங்கள் அநா என்ன சொல்கிறார்கள்? இவனை நம்பி எப்படி உள்ளே விட்டீர்கள் என்று கேட்கிறாளா?” என்று கிண்டலும், அதன் கூட சேர்ந்த ஏளனத்துடனும் கேட்க, இவள் முகம்தான் இஞ்சி தின்ற குரங்கின் முகமானது.

 

‘எப்படி அவளைப் புரிந்து வைத்திருக்கிறான்…’ முகம் சிவக்க முறைத்தவளை அலட்சியம் செய்தவனாக பானுமதியை ஏறிட, நகைப்புடன்  சிவார்ப்பணாவைப் பார்த்துத் தன் வலது ஒற்றைப் புருவத்தை மேலேற்றி, ‘என்ன என்னுடைய கணிப்பு சரியா?’ என்பது போலப் பார்த்தான்.

 

சிவார்ப்பணாவால், அவனைப் பார்த்து முறைக்க மட்டும்தான் முடிந்தது. ஆனாலும் மனதிற்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்.

 

‘உண்மையில் இவன் யார்? இவன் நிஜமாகவே, ரகுவின் நண்பனா? இவன் வந்ததற்கும், ரகு காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? இல்லை, காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக… கண்டபடி எண்ணத் தோன்றுகிறதா. இவனுடைய பின்புலம் எதுவும் தெரியாமல், இவன் எப்படிப் பட்டவன் என்பது புரியாமல், இவனை எப்படி அனுமானிப்பது?’ ஒன்றுக்கும் பதிலில்லாது, குழப்பத்துடன் அவனைப் பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது.

 

ஆனால் அவனுடைய முகத்தில் நிச்சயமாகத் தப்பான உணர்வு தென்படவில்லை. கூடவே உண்மையான நண்பனைக் காணமுடியவில்லையே என்கிற கவலையும் தெரியவில்லை. மாறாக ஏதோ செதுக்கிவைத்த சிற்பம் போல, எந்த உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாது, நின்றிருந்தான் அவன்.

 

ஏனோ அவனுடைய முகத்திற்கு நேராக, அதுவும் பானுமதி இருக்கும் போது, தவறாகப் பேசவும் சிவார்ப்பணாவால் முடியவில்லை.

 

“ஆசையாக ரகுவைப் பார்க்க வந்திருப்பீர்கள்… ஆனால்…” என்றவளால், என்னதான் முயன்றும் தன் குரலில் தெரிந்த ஏளனத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

அதைப் புரிந்துகொண்டவன் போல, அவனுடைய விழிகள் சற்று சுருங்கி விரிந்தனவே தவிர, வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை.

 

“உண்மைதான்…. அவனைப் பார்த்துவிடலாம் என்கிற பெரிய நம்பிக்கையுடன் இருந்தேன்… பட்… நீண்ட நாட்களாகத் தொலைந்துபோன என் நண்பனை இன்னும் பார்க்க முடியவில்லையே…” என்றான் சோகம் போல.

 

ஆனால், அந்த சோகம் கூட, சிவார்ப்பணாவிற்குக் கிண்டல் போலவே தோன்றியது. மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, அவன் சாதாரணமாகக் கூறுவது கூட, அவளுக்குத் தப்புத் தப்பாகத் தெரிகிறதோ?

 

சிவார்ப்பணாவிற்கு ஏனோ அவனைச் சந்தேகப்படாமல் இருக்கமுடியவில்லை. இவன் சொல்வது உண்மையா பொய்யா? என்கிற ஆராய்ச்சியில், இறங்கத் தொடங்கியவளுக்கு, என்னவென்று வரையறுக்க முடியாத, ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளையும் மீறி, இவனை நம்பாதே என்று உள் மனம் சொன்னது. மீண்டும் ரகுவின் நினைவு அவளை யோசிக்க வைக்க, இரண்டு நாட்களாக எங்கே போயிருப்பான் இந்த ரகு? என்கின்ற கேள்வி அவளைக் குடைந்தது.

 

அவனுடைய நண்பர்களுக்குக் கூடவா அவன் எங்கே போனான் என்று தெரியாது? யோசித்தவளாக,

 

“அத்தை… நீங்கள் ரகுவின் நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தீர்களா?” என்றாள் அவசரமாக.

 

“ஆமாம் அம்மா… அவன் இன்னும் வந்து சேரவில்லை என்றதும் மாமா எல்லோரையும் விசாரித்தார். ஒருவருக்கும் அவன் எங்கே போனான் என்று தெரியவில்லை. தாங்களும் விசாரித்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள்… அவன் இது வரை எங்களிடம் சொல்லாமல் எங்கும் போனதில்லை. அதுதான் பயமாக இருக்கிறதம்மா.” என்று கலங்கி நின்றவரை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் தவித்தவள். அருகே நின்றிருந்த அநபாயதீரனை வெறித்தாள்.

 

‘யோவ்… நண்பனைத் தேடிவந்தேன் என்று சொல்ல மட்டும் தெரிகிறது அல்லவா? வருந்துகிறார்களே. அவர்களைச் சமாதானப் படுத்தாமல், பிடித்து வைத்த பிள்ளையார் போல, அப்படியே இருக்கிறாயே…’ என்று மனதிற்குள் திட்ட, அதைப் புரிந்துகொண்டானோ என்னவோ,

 

எதுவும் செய்ய முடியாத நிலையில், தன்னைப் பார்த்துக்கொண்டு இருந்தவளை இமைக்காது முழு நிமிடம் பார்த்தவன், ஏனோ அவள் தவிப்பைக் காணப் பிடிக்காதவனாக, இரண்டெட்டில், பானுவை நெருங்கி, அவளுடைய கரத்தைத் தன் கரத்தில் ஏந்தி, அழுத்திக் கொடுத்தவாறு,

 

“வேதனை வேண்டாம் ரகும்மா. ரகு எங்கும் போயிருக்க மாட்டான். எப்படியாவது அவனைக் கண்டுபிடித்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டியது, என் பொறுப்பு… ப்ளீஸ் உங்களைத் தேற்றிக்கொள்ளுங்கள்” என்று ஆறுதல் படுத்த, ஏனோ அவனுடைய அந்தக் குரலில் ஓரளவு அமைதியானார் பானுமதி.

 

பானுமதியின் தோள்களில் தட்டிக்கொடுத்த, சிவார்ப்பணா,

 

“அத்தை… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தீர்களானால், மனம் சற்றுத் தெளிவாகச் சிந்திக்கும்… ரகு நிச்சயமாக வீட்டிற்கு வந்துவிடுவான்… இல்லையென்றாலும், அவனைத் தேடிக் கண்டுபிடித்து உங்களிடம் சேர்ப்பிருப்பது என் பொறுப்பு! ஐ ப்ராமிஸ் யு…” என்று தன் கழுத்தில் கைவைத்துக் கூறி, பானுமதி படுக்க உதவி செய்துவிட்டுத் திரும்ப, அவளின் கரத்தைப் பற்றிய பானுமதி, விழிகளில் உயிரைத் தேக்கி,

 

“என் மகன் கிடைத்து விடுவானில்லையா?” என்றார் ஏக்கத்துடன்.

 

அதற்கு என்ன பதிலைக் கூறுவது? அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்கிற துப்புக் கூடக் கிடையாதே. அதைக் கூற முடியாதவளாக, எப்படியாவது ரகுவைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்கிற வேகம் எழ,

 

“நிச்சயமாக அத்தை… அவன் எங்கும் போயிருக்க மாட்டான்… கிடைத்துவிடுவான்…” என்று உறுதி கூறிவிட்டு, அவர் தூங்கட்டும் என்று, மெதுவாக அந்த அறையை விட்டு வெளியேறியவளுக்கு ஏனோ, மனம் கனத்துப் போயிருந்தது.

 

கலங்கி, வதங்கி நிற்கும் அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? சொன்னால்தான் வேதனை குறையுமா? இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்று ஆரம்பத்தில் அவளுக்குப் புரியவில்லை. எங்கோ ஏதோ பெரும் பிரச்சனையில் ரகு சிக்கியிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்கு நன்கு புரிந்தது. இல்லையென்றால், ரகு இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கும் போயிருக்க மாட்டான்.

 

‘டேய் எங்கேடா போய்த் தொலைந்தாய்?’ என்று சலிப்புடன் எண்ணியவளுக்கு, ரகுவின் அறையைக் குடைந்தால் என்ன? என்கின்ற யோசனை எழுந்தது.

 

அதைச் செயற்படுத்துவதற்காக, பானுமதியின் அறையை விட்டு வெளியே வர முயல, அவளுடைய பாதையை அடைத்ததுபோல அநபாயதீரன் குறுக்காக நின்றிருந்தான்.

 

எரிச்சலுடன் ‘நந்தி…’ என்று திட்டியவள், “வழி…” என்றாள் மொட்டையாக.

 

ஒரு கணம் அவளை ஆழப் பார்த்தவன், பின் வழி விட, அவனுடைய என்னதான் முயன்றும், அவனை உரசிச் செல்வதை அவளால் தடுக்க முடியவில்லை.

 

அந்த எரிச்சலையும் மீறி மனம் படபடக்க, ‘ராட்ஷசன்…’ என்று திட்டியவாறே, ரகுவின் அறையை நோக்கிச் சென்றாள்.

 

அவள் மேல்த் தளம் நோக்கிச் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த அநபாயதீரன், அவனும் அந்த அறையை விட்டு வெளியேறி, முன்னறைக்கு வர, அங்கே ராகவன் ஜன்னலுக்கு அப்பால் எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

அசைவு தெரிய, தன் கனவு கலைந்தவராகத் திரும்பிப் பார்த்த ராகவனின் முகத்தில் யோசனை அப்பிக் கிடந்தது.

 

“ரகுப்பா… சிவார்ப்பணாவிற்குத் தெரியாமல் ரகு எதையும் செய்யமாட்டான் என்றீர்கள்… ஆனால், அவளுக்கும் ரகுவைப் பற்றி, எதுவும் தெரிந்திருக்கவில்லையே…” என்றான்.

 

“உண்மைதான் தம்பி. ரகுவைப் பற்றிய எந்தத் தகவலாக இருந்தாலும் அது சிவார்ப்பணாவிற்குத் தெரியாமல் இருக்காது. சில வேளை எங்களிடமே பேசத் தயங்கும் ரகு அவளிடம் மட்டும் மனம் விட்டுப் பேசுவான். ஆனால், அவளுக்கும் தெரியாது என்கிறபோதுதான் இன்னும் பயமாக இருக்கிறது தம்பி…” என்று ராகவன் வருத்தத்துடன் கூற,

 

“நான் கொஞ்சம் சிவார்ப்பணாவுடன் பேசிப்பார்க்கிறேன் ரகுப்பா.…” என்று கூறிவிட்டு, சிவார்ப்பணாவைத் தேடிக்கொண்டு மேல் தளத்திற்குச் செல்ல, அவனையே வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ராகவன்.

 

(10)

 

அநபாயதீரன், ரகுவின் அறைக்கு உள்ளே நுழைந்த போது சிவார்ப்பணா… அங்கே இருந்த மேசை ஒன்றைக் குடைந்து கொண்டிருந்தாள்.

 

அங்கே நுழைந்தவனை அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை என்பது அவளுடைய விரிந்த விழிகளினூடாக அவன் அறிந்து கொண்டாலும் அதை வெளிக் காட்டாமல்,

 

“ஹாய்… சாரி… உனக்கு உதவலாம் என்று…” என்று அவன் கூற, மீண்டும் அவன் பக்கம் சாய முயன்ற தன் மனத்தைக் கடிவாளம் இட்டு இறுக்கப் பிடித்தவள், ரகுவின் அறைக் கதவை வேகமாகச் சாற்றினாள்.

 

பின் திரும்பி, அவனை நெருங்கி வந்து அவன் அணிந்திருந்த ‘டொமி ஹில்’ ஷேர்ட்டின் கழுத்துப் பட்டையை இறுகப் பற்றி,

 

“யார் நீ… மரியாதையாக உண்மையைச் சொல்… இல்லை… என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது… உனக்கும் ரகுவிற்கும் என்ன சம்பந்தம்… எதற்காக இங்கே வந்திருக்கிறாய்?” சீற, அநபாயதீரனோ, எந்த உணர்ச்சியும் இல்லாமல், தன் இரு கரங்களையும், பான்ட் பாக்கட்டில், செருவி, கீழ்க் கண்ணால், தன் சட்டையைப் பற்றியவாறு, தன்னைப் பார்த்துச் சீறிக்கொண்டிருந்த அந்தக் கொடியிடையாளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“கேட்கிறேன்… அல்லவா… சொல்லப்போகிறாயா இல்லையா… நீ வந்த பின்தான் ரகு தொலைந்து போனான்… மரியாதையாக உண்மையைச் சொல்… ரகு எங்கே… உனக்கும் ரகுவுக்கும் என்ன சம்பந்தம்” என்று அவனை உலுப்ப முயன்றவாறு ஆவேசத்துடன் கேட்க, அப்போதும் அவனிடத்தே பெரிய மாற்றம் இருக்கவில்லை.

 

அவனுடைய அமைதியும், அழுத்தமும், சிவார்ப்பணாவை ஓரளவு நிலைப்படுத்த, அப்போதுதான் கோபத்தில், அவனுடைய சட்டையை இறுகப் பிடித்துக்கொண்டிருப்பது, புரிந்தது. ஆனாலும் அவனிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை.

 

மெதுவாகத் தன் கரத்தை விலக்கியவள், அவன் முன்பாகத் தன் மாற்றத்தைக் காட்டப் பிடிக்காமல், நிமிர்ந்து நின்று, தன் மார்புக்குக் குறுக்காக் கைகளைக் கட்டி அவனை வெறித்துப் பார்த்தாள்.

 

அவனோ அவளுடைய முறைப்பைச் சிறிதும் லட்சியம் செய்தானில்லை. அங்கேயிருந்த சுழல் நாற்காலியை அலட்சியமாக இழுத்து எடுத்து, அதில் ராங்கியாக அமர்ந்து, தன் காலின் மேல் காலைப் போட்டான். கூடவே, கைப்பிடியில் வலது கரத்தின் முழங்கையை, அழுத்து வைத்து, மடிந்த சுட்டு விரலுக்கும், பெரு விரலுக்கும் இடையில், தன் உதடுகளும், நாடியும் பதியுமாறு அமர்ந்தவன், கதிரையை வலமும் இடமுமாகக் கால் வட்டமாக ஆடியவாறு சிவார்ப்பணாவையே சற்று நேரம் இமைக்காது பார்த்தான் அந்த கிங்காங்.

 

அவனுடைய தோரணையைப் பார்க்கப் பார்க்க, சிவாரப்பணாவின் கடுப்பு எல்லையைக் கடந்து பொங்குவதற்குத் தயாராக இருந்தது. ஆனால் அந்தத் தீரனோ, அவளுடைய உணர்வுக்கு நேர் எதிர் உணர்வில் நின்றிருந்தானோ, முதலில் யோசனையாக அவளை மேய்ந்த அவனுடைய பார்வையில் இப்போது மெல்லிய இரசனை உதயமாகியது.

 

சற்றுக் கலைந்த, முன்னுச்சிச் சுருள் கூந்தல், அவள் புருவங்களுடன் இணைந்து, இடது கண் இமையுடன், ஏதோ இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டிருக்க, அதற்குக் கீழ், கோபத்தால் சற்றுச் சிவந்திருந்த அந்த நீள் விழிகள் அவனைப் பார்த்து முறைக்க, அதற்குப் போட்டியாக, மெல்லிய கூர் நாசியில் வீற்றிருந்த, சிறிய மூக்குத்தி மினுமினுக்க, அழகிய கோவ்வை உதடுகளோ, அவளுடைய பற்களுக்குள் சிறைப்பட்டிருக்க, சற்றுக் கீழே, வெண் தந்தத்தில் கடைந்தெடுத்த கழுத்தில், பொட்டுபோல் தெரிந்த சிறிய கரிய மச்சமும், அதற்குக் கீழ், மார்புக்குக் குறுக்காகத் தந்தக் கரங்களைக் கட்டியிருந்தாலும், ஆடைகள் உடலை மறைத்தாலும், அதையும் மீறித் தெரிந்த, எழுச்சியையும், பெண்மையின் லாவண்யங்களையும், அவனுடைய ஊடுகதிர் விழிகள் ஓரளவு ஊகிக்க, மொத்தத்தில், ரவிவர்மனின் ஓவியத்திற்குச் சவால்விடும் அவள் அழகில், பெரிதும் தவித்துத்தான் போனான் அந்த ஆண்மகன்.

 

இவளுக்கோ, அவனுடைய அலட்சியத் தோரணையைப் பார்க்கும் போது, சுர்ர்ர்.. என்று ஏறிக் காந்தியது.

 

ஒரு கணம் தன் சதைப் பற்றுள்ள, செவ்விய மேல் உதட்டினை, வரிசைகொண்ட, வெண் கீழ் பற்களால், அழுந்தக் கடித்துத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவள், முடியாமல்,

 

“வட்…” என்று தலையைச் சரித்து அலட்சியமாகாக் கேட்டாள் சிவார்ப்பணா.

 

அவள் கேட்ட அழகில், மீண்டும், தலைகுப்புற விழுந்தவனுக்கு, மீண்டும் எழ மிகச் சிரமமாக இருந்ததோ?

 

அவனுடைய பார்வை மாற்றத்தைக் கண்டவளுக்கு ஏனோ மார்பு படபடக்க, அதை வெளிக்காட்டாது மறைக்க முயன்றவளாக,

 

“இ… இப்போது எதற்கு இங்கே வந்தீர்கள்…?” என்றாள் தன் எரிச்சலை மறைக்காத குரலில்.

 

“இது என்னம்மா கேள்வி… உனக்கு உதவலாமே என்று வந்தேன்… அது தப்பா?” என்றவனின் வாய்தான் அசைந்ததே தவிர, விழிகள் மட்டும் அவளுடைய அழகை ரசனையுடன் பருகிக்கொண்டிருக்க, அவனுடைய உடலோ, உதவியைச் செய்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்காததாக, நன்கு சாய்ந்து அமர்ந்துகொண்டது. அதைக் கண்டதும்,

 

“ம்… நீங்கள் ஆணியே பிடுங்க வேண்டாம்… போய், வேறு வேலை இருந்தால் பாருங்கள்…” என்று சிடுசிடுத்தவள், இவனுடன் என்ன பேச்சு என்பதுபோல, விட்ட இடத்திலிருந்து ரகுவைப்பற்றி ஏதாவது துப்புக் கிடைக்கிறதா என்று தேடத்தொடங்கினாள்.

 

அது வரை அமைதி காத்த அநபாயதீரன், இப்போது எழுந்து சிவார்ப்பணாவின் அருகே வந்தான்.

 

மெதுவாகத் தன் விழிகளால் அந்த அறையை நோட்டமிட்டான். அதன் பிறகு அவனுடைய கூரிய விழிகள் சிவார்ப்பணாவின் மீது நிலைத்தன.

 

எதேச்சையாகத் திரும்பிய சிவார்ப்பணா, தன்னையே உற்றுப் பார்க்கும் அநபாயதீரனைக் கண்டதும், வியப்புடன் புருவங்கள் மேலேற, என்ன என்பது போல, சிறியதாகத் தன் தலையை மேலும் கீழும் ஆட்டியவாறு கேட்டாள்.

 

அவனோ தன் பார்வையைச் சிறிதும் மாற்றாமல் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன், பின் அந்த மேசையிலிருந்த பேப்பர் வெய்டரை எடுத்து அதைக் கையில் வைத்து உருட்டியவாறு, ஜம்ப் பண்ணி, அந்த மேசையில் அமர்ந்து, இடது தொடையில், கரத்தை முட்டுக் கொடுத்தவாறு, அந்தக் கரத்திலே பேப்பர் வெய்ட்டரை வைத்து சற்று எறிந்து விளையாடியவன்,

 

“நான் எதற்கு இங்கே வந்தேன், எனக்கும் ரகுவுக்கும் என்ன சம்பந்தம்? இதைப்பற்றிய ஆராய்ச்சியை பிறகு வைத்துக்கொள்ளலாம், முதலில், உனக்கும், ரகுவுக்கும் இடையில் இருக்கும் நட்பு எத்தகையது? அதை முதலில் சொல்” என்றான் தூக்கி எறிந்து விளையாடிக்கொண்டிருந்த அந்தக் கல்லிலேயே பார்வையைப் பதித்தவாறு.

 

அது வரை ஏதாவது தடயங்கள் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்த சிவார்பப்ணாவின் கரங்கள் அப்படியே நின்றன. நின்ற இடத்திலிருந்தவாறே திரும்பி அவனைப் பார்வையால் எரித்தவள்,

 

“வட் டூ யு மீன்?” என்றாள் சீற்றமாக. அவளுடைய சீற்றத்தைக் கணக்கில் கொள்ளாத அநபாயதீரன், எறிந்த கல்லை இறுகப் பற்றியவாறு அவளைத் தன் கூரிய விழிகளால் ஏறிட்டான்.

 

“இட்ஸ் வெரி சிம்பிள் குவஸ்ட்ஷன்… உனக்கும், ரகுவுக்குமிடையில் இருப்பது என்ன?” என்றான். இப்போது, அவனுடைய குரலில் அதீத அழுத்தம் தெரிய, சிவார்ப்பணா பொறுமையற்ற மூச்சுடன் அவனைப் பார்த்து முறைத்தவாறு,

 

“ஹெள டெயர் யு… எத்தனைத் தைரியம் இருந்தால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையைக் கேட்பீர்கள். அதற்குரிய, அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?” என்று பெரும் சீற்றத்துடன் கேட்டவளின் விழிகள், கோபக் கணைகளாக மாறி, அவன் மீது வேகமாகத் தாக்கியது.

 

“ம்கூம்… இதே பதிலை நானும் சொல்லலாம் அல்லவா? ரகுவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்னுடைய தனிப்பட்ட விடயமாக இருக்கலாமே… இது அவனுடைய வீடு… நான் வருவேன்… வராமல் போவேன்… அதைப் பற்றிக் கேட்கவேண்டிய அதிகாரம், ரகுவின் தாய் தந்தைக்கு மட்டும்தானே இருக்கிறது? அதை நீ கேட்பது முறையா என்ன?” என்று அவன் அழுத்தந்திருத்தமாகக் கேட்க, இவள் ஒரு கணம் வாயடைத்துப் போனாள்.

 

‘உண்மைதானே… இது ரகுவுடைய வீடு… இவன் அவனுடைய நண்பன்… அப்படித்தான் சொல்கிறான்… அப்படியிருக்கையில் அவன் வருவான் போவான்… ரகுவின் தாய் தந்தைக்கு இல்லாத அக்கறை இவளுக்கெதற்கு?’ மிதமிஞ்சிய சீற்றத்தில் உதடுகள் நடுங்க,

 

“கோ டு ஹெல்… மிஸ்டர் அநபாயதீரன்…” என்று பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்பியவள், அவனைப் பார்க்கப் பிடிக்காமல், மேலும் ரகுவின் மேசையின் இழுப்பறையைத் திறந்து எதையோ எல்லாம் தேடத் தொடங்கினாள்.

 

“குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று சொல்வார்கள்… உன் நெஞ்சும் குறுகுறுக்கிறதோ… அப்படியானால்…” என்று மேசையிலிருந்து இறங்கியவன், தன் வேலையை விட்டு முறைத்துக்கொண்டிருந்தவளின் அருகே வந்தான்.

 

என்னதான் முயன்றும், அவனுக்கே உரித்தான அந்தப் பிரத்தியேக வாசனையை நுகராமல் அவளால் தவிர்க்க முடியவில்லை. அவளையும் மீறி, அவள் நாசிக்குள்ளாகப் புகுந்து, சுவாசப் பையை நிரப்பி பிராணவாயுவுடன் இரத்தம் முழுவதும் கலந்து மனம், மூளை முழுவதும் பயணம் செய்து, அவள் புத்தியை மழுங்கடிக்க முயன்றது. அதனால் இதயம் சற்றுத் தடுமாற, புத்தியோ, இவன் அபாயகரமானவன், இவன் அருகாமையைச் சுவாசிக்காதே, உன்னை முழுவதுமாக மழுங்கடித்து விடுவான் என்று எச்சரிக்கை செய்தது.

 

மனதிற்கும், புத்திக்கும் இடையில் நடந்த அந்த யுத்தத்தில், எந்தப் பக்கம் சாய்வது, என்ற புரியாமல் தவித்துப் போனாள் சிவார்ப்பணா. சிரமப்பட்டு, சண்டை பிடிக்க முயன்ற, புத்தியையும், மனதையும் பிரித்தெடுக்க முயன்றவளை, மேலும் சோதிப்பவன் போல, மிக மிக நெருங்கி நின்றான் அந்தத் தீரன்.

 

அதுவும் மனதில் பச்சையாகக் குத்தியிருந்தவனின் முகம், மிக நெருக்கத்திலிருந்தும், அந்த நெருக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில், அவள் புத்தி விதிர் விதிர்க்க, மனமோ அவன் பக்கமே சாய்வேன் என்று அழிச்சியாட்டம் செய்தது. எப்படியோ ஓரளவு தன்னை மீட்டெடுத்தவள்,

 

“எ… என்ன செ…ய்கிறீர்…கள்…” என்று தவிப்போடு கேட்டாலும் அவள் பார்வை மட்டும் அவள் கட்டுப்பாட்டையும் மீறி ஒரு வித அவஸ்தையுடன் அவன் முகத்தில் கோலம் வரையத் தொடங்கியது. அவனோ அவள் அவஸ்தையைச் சற்றும் கருத்தில் கொண்டானில்லை. தன் பாட்டிற்கு அவளை நோக்கி மேலும் நெருங்கினான்.

 

இருவருக்குமிடையில் உள்ள இடைவெளி வேகமாகக் குறைய, உடனே அதன் தூரத்தைக் கூட்டவேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டவளாக, பின்னால் செல்ல முயல, பாழாய்ப் போன மேசை அவள் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது.

 

அச்சத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் தெரிந்த மிரட்சியைக் கண்டவனின் உதடுகளில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

 

தன்னுடைய தவிப்பை அவன் நன்றாக ரசிக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட சிவார்ப்பணாவிற்குத் தவிப்பு மறைந்து இப்போது அந்த இடத்தில், கோபம் வந்து அமர்ந்துகொண்டது.

 

‘என் நிலை உனக்குச் சிரிப்பாக இருக்கிறதா?’ என்று மனதிற்குள் திட்டினாலும், அவளையும் மீறி ஒருவித தர்மசங்கடம் ஆட்கொள்ள, முதலில் அவனுக்கும் தனக்கும் இடையேயான இடைவெளியை அதிகரிக்கவேண்டும் என்பதன் உண்மை புரிய, உடனே அவனிடமிருந்து விலகுவதற்காகத் திரும்பினாள்.

 

ஆனால் அந்த விடாக்கண்டனோ, அவளுடைய எண்ணத்தைக் கணத்தில் ஊகித்து, அவள் அசையாதவாறு, இரு புறமும் தன் கரங்களைப் பதித்து அணையாக்கி, அவள் முகத்திற்கு நேராகத் தன் முகத்தைக் கொண்டு சென்றான்.

 

கொஞ்சம் அசைந்தாலும், மூக்கும் மூக்கும் உரசும் நிலை. சிவார்ப்பணா கதிகலங்கிப்போனாள். தவிப்புடன் கீழ் உதடுகள், அவளுடைய மேல் பற்களுக்குள் சிறைப்பட, இவனுடைய அந்த அதீத கவரும் பார்வை, அவளுடைய கீழ் உதட்டில் நிலைத்து நின்றது.

 

கடிபட்டிருந்த அவளுடைய செவ்விய உதடுகளைக் கண்டதும், அவனையும் அறியாது, அவனுடைய நாக்கு, காய்ந்த தன் உதடுகளை ஈரப்படுத்த, கூடவே, அவனுடைய மேற்பற்கள் அவனுடைய கடினமான, அழுத்தமான கீழ் உதட்டை மென்மையாகக் கடித்து நின்றன.

 

சற்று நேரம், அவளுடைய கீழ் உதட்டில், தன் விழிகளால் கவிதை படித்தவன், பின் தன் வலக் கரத்தின் பெரு விரலால், மெல்லிய வெண்ணிறப் பற்களுக்குள் சிறைப்பட்டிருந்த, செழுமை மிக்க அந்த உதடுகளை நிரபராதியாக்கிவிட்டுத் தன் உதட்டையும் விடுவித்து,

 

“என் முன்னால் இப்படி உன் உதடுகளைக் கடிக்காதே…” என்றான் மென் குரலில்.

 

அவனுடைய அந்த ஆழமான, குரலில் உள்ளம் சிலிர்க்கத் தன் விழிகளை மேலேற்றி அவன் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தாள். பின் ஏதோ சொல்ல வாய் எடுத்தவள், அவன் விழிகள் சொன்ன மொழியில் சொல்ல வந்தது மறந்து போனவளாக வாயடைத்து நின்றாள்.

 

இப்போது, அவன் வலக்கரத்தினை எடுத்திருந்ததால், அந்த இடத்தில் இடைவெளி கிடைக்க, இனியும் அவனுடைய அருகாமையை நுகர முடியாது என்கிற பரிதவிப்பில், வேகமாக அவனை விட்டுத் தள்ளி நின்று பின் முறைத்தாள்.

 

“இ.. இனிமேல்… என் அ… அருகே வரும்… வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்…” என்று திக்கித் தவித்துக் கூற,

 

“டன்… பட்… நான் கேட்கும் கேள்விகளுக்கு ஏதுவான பதில் சொன்னால், நிச்சயமாக நெருங்க மாட்டேன்…” என்றான் கிண்டலாக. அவளோ அவனை முறைக்க,

 

“நான் சொன்ன சொல்லை மீறுவதில்லை…” என்று உறுதி போலக் கூறியவன், பின்,

 

“உனக்கும் ரகுவிற்கும் இடையில் உள்ளது எத்தகைய நட்பு? டூ யு லவ் ஹிம்?” என்றான் நேரடியாக. சிவார்ப்பணாவிற்கு வந்த கோபத்தில், அருகேயிருந்த கதிரையைத் தூக்கி, ஓங்கி அவன் மண்டையில் போடவேண்டும் என்கிற வேகம் எழுந்தது. சிரமப்பட்டுத் தன்னைச் சமாளித்தவளுக்குத் தன்னை நினைத்தே சிரிப்பாக இருந்தது.

 

தப்பு என்னவோ அவனிடம்தான் இருக்கிறது. ஆனால், அவள் அல்லவா, தவறு செய்ததுபோலத் தவிக்கிறாள்… அவள் பதில் கூறாமல் அமைதி காக்க,

 

“கேட்டேனே… பதிலைக் காணவில்லை?’’ என்றான் அவன்.

 

அந்தக் குரலில் தெரிந்த எச்சரிக்கை அவளை அதற்கு மேல் அதிகம் யோசிக்கவிடவில்லை.

 

“ரகுவுக்கும் எனக்கும் இடையிலிருந்த நட்பு எத்தகையது என்பதை வரையறைப் படுத்திக் கூற முடியாது… நல்ல நண்பன் என்கிற பார்வையில் பார்ப்பவர்களுக்கு நாங்கள் நல்ல நண்பர்கள்… தவறான பார்வையில் பார்ப்பவர்களுக்கு…” என்றவள் இடை நிறுத்தி, அவனைத் தன் விழிகள் என்னும் கூரிய வாள் கொண்டு வெட்டி, “நாங்கள் தப்பானவர்கள்” என்றாள் தைரியமாக அவனைப் பார்த்தவாறு.

 

“ம்… ஃபெயர் இனஃப்…” என்று தலையை ஆட்டிக் கூறியவன், இப்போது அவளை விட்டுச் சற்றுத் தள்ளி நின்று மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி,

 

“உன்னுடன் இத்தனை நெருக்கமாகப் பழகிய உயிர் நண்பன், தான் எங்கே போகிறேன் என்பதைக் கூடச் சொல்லாமலா போய் இருப்பான்?” என்று ஆச்சரியப் படுவதுபோலக் கேட்க, அவன் கூறிய விதத்தில் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்துகொண்ட சிவார்ப்பணா, அநபாயதீரனைத் தீ விழிகள் கொண்டு எரித்தாள்.

 

“ஹெள டெயர் யு… என்ன… என்னையே சந்தேகப் படுகிறீர்களா?| என்று கேட்ட போது, மிதமிஞ்சிய ஆத்திரத்தில் குரல் நடுங்கத் தொடங்கியது. ஆனால் அவனோ தலையை மறுப்பாக ஆட்டி,

 

“சந்தேகமா? இல்லை அர்ப்பணா… இல்லை… உயிர் நண்பன், நெருங்கிய தோழன்… இதுவரை எதையும் உன்னிடமிருந்து மறைக்காதவன், எங்கே போகிறேன் என்பதைச் சொல்லாமலா விட்டிருப்பான்? ஆச்சரியமாக இல்லை?” என்றவனின் குரலில் ஏளனம் தெரிய, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சிவார்ப்பணா.

 

‘இவன் என்ன சொல்ல வருகிறான்… ரகு காணாமல் போனதற்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சந்தேகப்படுகிறானா? இல்லை அது தெரிந்து கொண்டும் மறைக்கிறேன் என்கிறானா? விட்டால் அவன் காணாமல் போவதற்கு நான்தான் திட்டம் அமைத்துக் கொடுத்தேன் என்று சொல்லுவான் போல இருக்கிறதே…’ மெது மெதுவாகப் பத்திரகாளி அவள் உடலுக்குள் புகத் தொடங்கினாள்.

 

“என்ன சொன்னீர்கள்… அப்போ… ரகு எங்கே போயிருக்கிறான் என்று தெரிந்தும் மறக்கிறேன் என்கிறீர்களா?” என்றாள் வெடிக்க முன்னம் தெறிக்கும் தீப்பொறி போல.

 

“அப்போ அவன் எங்கே போனான் என்று உனக்கு உண்மையாகவே தெரியாதா? அவன் சொல்லவே இல்லையா? இல்லை அவன் சொல்லிவிட்டுச் சென்றதை நீ மறந்துவிட்டாயா’ என்றவனின் குரலில் தெரிந்த கிண்டலில் பொறுமையை இழந்தவளாக,

 

“லுக் மிஸ்டர் அநபாயதீரன்… நான் ஒன்றும் அறுபது வயதுக் கிழவியோ… இல்லை ஏதாவது அம்னீசியாவால் பாதிக்கப்பட்ட நோயாளியோ கிடையாது… எல்லாத்தையும் மறப்பதற்கு… அப்படி ரகு ஏதாவது சொல்லியிருந்தால் அதை மறக்கும் அளவுக்கு நான் ஒன்றும் அலட்சிய வாதியும் கிடையாது… ரகு இது வரைக்கும் என்னிடம் எதையும் கூறவில்லை… தவிர நான் ஒரு போதும், அவனுடைய தனிப்பட்ட விடயங்களில் என் மூக்கை நுழைத்ததும் கிடையாது” என்று சீறிப் பாய்ந்தவள், அதற்கு மேல் அவனுடன் தர்க்கம் புரிய உடலில் வலுவில்லாது போக,

 

“டூ யு நோ வட்… ஐம் டன் வித் யு… உங்களுடன் நேருக்கு நேர் சமர் செய்ய, என்னிடம் சக்தியும் இல்லை, விருப்பமும் இல்லை… ப்ளீஸ்… லீவ் மி எலோன்…” என்று சலிப்புடன் கூறியவள், அதற்கு மேல் உன்னுடன் என்ன பேச்சு என்பது போல, விட்ட இடத்திலிருந்து, ரகுவைப் பற்றிய ஏதாவது துப்புக் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினாள்.

 

“கூல் டவுன் அர்ப்பணா. எதற்கு இத்தினை கோபமும் பதட்டமும்? நான் அப்படி என்ன தவறாகக் கேட்டுவிட்டேன்…? காணாமல் போன நம்முடைய ரகுவைத் தேடிக் கண்டு பிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்பதைக் கண்டறியத்தான் அப்படிக் கேட்டேன். மற்றபடி உன் மீது சந்தேகப் பட்டல்ல… இதை நீ நம்ப வேண்டும்…” என்று அவன் கூற, விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்த்தவள், உன்னுடன் எனக்கென்ன பேச்சு என்பது போல, அவன் சமாதானத்தை ஏற்கப் பிடிக்காதவளாக மேசையின் பக்கமாகத் திரும்பினாள்.

 

மேசையில் அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு ஃபைலையும் திறந்து பார்த்தாள். அவளுக்குச் சாதகமாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

 

எரிச்சலுடன் அருகேயிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவளுக்கு ஏதோ உடல் பலவீனமான உணர்வு.

 

“ஓ…. ரகு… எங்கே போய்த் தொலைந்தாய்? உன்னால் நான் படும் சித்திரவதையைப் பார்… எவன் எவனெல்லாமோ என்னிடம் கேள்வி கேட்கிறான்… பதில் தெரியாமல் நான் இங்கிருந்து முழிக்கிறேன்… ப்ளீஸ்டா… எங்கிருந்தாலும், வந்து தொலைடா… கபோதிப்பயலே.. ” என்று மனதிற்குள் திட்டி முனங்கியவளின் விழிகளில் சுவரில் மாட்டியிருந்த கபேர்ட் தென் பட, எழுந்து அதை நோக்கிச் சென்றாள்.

 

கபேர்ட்டை இழுத்துப் பார்த்தாள். பூட்டியிருந்தது. இரண்டு கரங்களாலும் இழுத்துப் பார்த்தாள்.

 

மகூம்… அசைந்து கொடுக்காமல் அடம் பிடித்தது.

 

அதன் திறப்பை எங்கே வைத்திருப்பான்? என்கின்ற யோசனையில் அருகே நின்ற அநபாயதீரனையும் பொருட் படுத்தாமல் சுற்றம் முற்றும் பார்த்தாள்.

 

ஏறி நின்று கபேர்ட்டின் மேல் புறத்தைப் பார்க்க கம்பியூட்டர் கதிரையைத் தவிர சாதாரண கதிரை எதுவும் அகப்படவில்லை.

 

அந்தக் கதிரையை இழுத்தாள். அதன் மீது ஒரு காலை வைத்து ஏற, அது உருண்டது. பலன்ஸ் பண்ணுவதற்காகப் பாய்ந்து அருகே நின்ற கபேர்ட்டைக் கரங்களால் அழுந்தப் பற்றியவள், ஒருவாறு அதன் பலத்துடன் மறு காலையும் வைத்து ஏறினாள்.

 

அவளையே பார்த்துக்கொண்டிருந்த அநபாயதீரனுக்குப் பொறுமை காற்றில் பறப்பதுபோல் இருந்தது.

 

“வட் த ஹேல் ஆர் யு டூயிங்? என்று கேட்டவன், அவளுடைய பாரத்தால் உருளத் தொடங்கிய கதிரையைப் பாய்ந்து சென்று பற்றிக் கொண்டான்.

 

விழப்போகிறோம் என்கின்ற அச்சத்தில் வேகமாகக் குனிந்தவள், அருகே நின்றவனின் பலத்த புஜங்களைப் பற்றிக்கொண்டு தன்னைச் சமாளித்தாள்.

 

இதே புஜங்களுக்குள் ஆறு மாதங்களுக்கு முன்பு அடைக்கலம் புகுந்திருக்கிறாள்… இப்போதும் அவற்றின் மீது விழுந்து, குழந்தையாகி அவன் கரங்களுக்குள் குடியிருக்க வேண்டும் என்று மனம் தவிக்க, அந்த மனத்தின் மீது பெரிய பாறாங்கல்லைப் போட்டு அடக்கியவள்,

“ஏய்.. மனசாட்சியே… லூசா நீ… அவன் உன்னைப் படுத்தும் பாடு உனக்குப் புரியவில்லையா? முதலில் அவன் யார் என்பதே நமக்குத் தெரியமாட்டேன் என்கிறது… பிறகு எதற்காக அவன் கரங்களுக்குள்ளேயே நுழைந்துவிட வேண்டும் என்று தவிக்கிறாய்… அடங்கு…” என்று எச்சரித்தவளாக,

 

“சா…சாரி…” என்று முணுமுணுத்தவாறு அவனை விட்டு விலகியவள் மேலும் நிமிரத் தொடங்க, உடனே அவளுடைய கரத்தைப் பற்றித் தடுத்தவன்,

 

“இப்போது எதற்காக இதன் மீதேறி வித்தை காட்ட நினைக்கிறாய்?” என்றான் அவன் கோபம் சிறிதும் மாறாமலே.

 

‘இவன் யார் என்னை அதிகாரம் செய்வதற்கு… நான் கதிரைக்கு மேலேறி வித்தை காட்டுவேன், இல்லை இதோ இந்த கபேர்ட்டிற்கு மேலேறி பரதநாட்டியம் ஆடுவேன்… இவனுக்கு என்ன வந்தது?’ என்று கடுப்புடன் எண்ணியவள்,

 

“ம்.. வேறு வேலையில்லை பாருங்கள்… அதனால்தான்…” என்று சுள் என்று விழுந்தவள், மீண்டும், கபேர்டின் மேற்புறம் கரங்களைச் செலுத்தியவாறு திறப்பைத் தேடிப்பார்த்தாள்.

 

சற்றுப் பொறுத்துப் பார்த்தவன், அதற்கு மேல் முடியாதவனாக, அவளுடைய மெல்லிய இடையைத் தன் வலிய கரங்களைப் பதித்துக் குழந்தையை இறக்குவது போலக், கீழே இறக்கி விட அதிர்ந்து போனாள் சிவார்ப்பணா.

 

அவனுடைய அருகாமை, அவனுடைய ஸ்பரிசம் ஒவ்வொன்றும் அவளுக்குச் சொல்லாத பல புதிய சேதிகளைக் கூறப் போதுமானதாக இருந்தது.

 

இப்போதுதானே, அவன் நினைப்பு வேண்டாம் என்று ஒரு ஓரமாகப் போக நினைத்தாள். அவள் நினைத்தாலும், அவன் விடமாட்டான் போல இருக்கிறதே… ஆமாம்… யாரைக் கேட்டு என்னைப் பற்றித் தூக்கி இறக்கிவிட்டான்…

 

பொதுவாக சிவார்ப்பணா யாரையும் தொட்டுப் பேசும் ரகம் கிடையாது. பெண் நண்பர்களைக் கூட அவள் அதிகம் தொட்டுப் பேச அனுமதித்ததில்லை. அதற்காக ஒன்றும் அவள் கட்டுப் பெட்டி என்றும் சொல்ல முடியாது. ஏனோ அன்னியர் தொட்டுப் பேசுவது அவளுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் முதன் முதலாக, அவளுடைய மெய்யை மட்டுமல்ல, மெய்யுடன் உயிரையும் தொட்டுச் சென்றவன் இந்த அநபாயன். ஆனால் அவன்… சே…’ மீண்டும் மாரியாத்தா, மெதுவாக அவள் மீது குடிபுக,

 

தன் இடையில் இரு கரங்களையும் பதித்து,

 

“என்ன தைரியம் இருந்தால் என்னைத் தொட்டுத் தூக்குவீர்கள்?” என்றாள் சினத்துடன். அவனோ அவளைக் கிண்டலாகப் பார்த்து,

 

“சாரி… அர்ப்பணா… எனக்குத் தொட்டுத் தூக்கித்தான் பழக்கம். தொடாமல் தூக்கும் கலையை இன்னும் நான் பயிலவில்லை…” என்று கூறியவாறு, மெதுவாக அந்தக் கபேரட்டின் கதவை இழுத்துப் பார்த்தான்.

 

கோபமும், சினமும் போட்டிப்போட அவனைப் பார்த்து முறைக்கத்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடிந்திருக்கவில்லை. ஆனாலும் அப்படியே விட்டுவிடவும் மனமில்லாமல்,

 

“நாளைக்குச் சிரித்துக்கொள்கிறேன்… மிஸ்டர் அநபாயதீரன்…” என்று கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, அவள் என்ன சொல்கிறாள் என்பது புரியாமல்,

 

“எஸ்கியூஸ் மி?” என்று அவளைத் திரும்பிப் பார்த்தவாறு கேட்டாலும், கைகள் தம் போக்கில், அந்தக் கதவைத் திறக்க முயன்றுகொண்டிருந்தன.

 

“இல்லை… இப்போது ஒரு ஜோக் சொன்னீர்களே… அதற்கு இப்போது சிரிக்க முடியவில்லை… நாளைக்குச் சிரிக்கிறேன் என்றேன்…” என்றபோது, ஏனோ அவளுடைய கோபம் சற்றுத் தணிந்துபோயிருந்தது.

 

“ஜோக்கா… நான் ஜோக்கடித்தேன் என்று யார் சொன்னார்கள்? நான் உண்மையைத்தான் சொன்னேன்…”: என்றவன், கதவைத் திறக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டவனாக, தன் பான்ட் பாக்கட்டில் கையை விட்டு ஸ்விஸ் ஆர்மியின் சிறிய கத்தியை வெளியே எடுத்தான்.

 

அதிலிருந்த கம்பிபோன்ற ஒன்றை நிமிர்த்தி அதைக் கொண்டு அந்தக் கதவின் சாவித் துவாரத்திற்குள் நுழைத்து. சப்தமிடாமல் மெதுவாக எதையோ அசைத்துத் திருப்ப, கதவின் பூட்டு நல்ல பிள்ளையாகத் திறந்துகொண்டது.

 

வியப்பும் அதிர்ச்சியும் போட்டிபோட, அவனையும் அவன் கரத்தையும் மாறி மாறிப் பார்த்த சிவார்ப்பணா. பூட்டைக் கூட இவ்வளவு சுலபத்தில் திறக்கிறானே… ஒரு வேளை இவன்…’ என்று சந்தேகத்துடன் அநபாயதீரனை ஏறிட்டுப் பார்க்க ,

 

அவள் என்ன நினைக்கிறாள் என்பதை உடனேயே ஊகித்தவன் தன் கரத்திலிருந்த ஸவிஸ் ஆர்மி கத்தியை ஏறிட்டான். அதை மடித்து மறு படியும் தன் பான்ட் பாக்கட்டில் வைத்தவன், அவளை அழுந்தப் பார்த்தான்.

 

“கொஞ்சக் காலத்துக்கு முன்பு இந்தப் பூட்டுக் கம்பனியில் தான் வேலை பார்த்தேன்… சோ… திறப்பது எளிமையாகிவிட்டது…” என்று அவளுடைய சந்தேகப் பார்வைக்கு விளக்கம் கொடுக்க,

 

அவனுடைய விளக்கத்தை எள்ளளவும் நம்பவில்லை என்பது போல, அவளுடைய முகம் கோபத்தில் மேலும் சிவந்துபோனது.

 

“நீங்கள் சொன்ன உடனே நான் நம்பிவிட்டேன்… மிஸ்டர் அந…பா..” என்று கூறத் தொடங்கியவள், அந்தக் கபேர்ட்டைத் திறக்கத் திறக்க அங்கேயிருந்த பொருளைக் கண்டதும், மிகுதி வசனங்களைத் துப்ப முடியாமல் கண்கள் அதிர்ச்சியில் பெரிதாக விரிய, கரங்கள் நடுங்க, நடுங்கிய கரங்கள் கொண்டு திறந்த தன் வாயை மூடியவாறு அப்படியே நின்றிருந்தாள் சிவார்ப்பணா.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!