Thu. Sep 19th, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே – இறுதி அதிகாரங்கள்

நிலவு 56

அதே நேரம் தேவகி உள்ளே வந்தாள். தன்னைக் கூடக் கவனிக்காமல் கோபமாகச் செல்லும் அநேகாத்மனை வியப்புடன் பார்த்தவள், சகோதரியின் அருகே வந்தமர்ந்தாள். குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவள்,

“என்னக்கா… உன் பிராணநாதர் கோபமாகச் செல்கிறார்…? நீ ஏதாவது சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடித்தாயா?…” என்றாள் நகைப்புடன்.

“இ…ல்…லை… தே…வகி…” என்று சிரமப் பட்டுப் பேச வாய் எடுத்தவள் முடிக்கமுடியாமல் தொண்டையில் எதையோ விழுங்கினாள். அதன் பின் மெதுவாகத் திக்கித் திணறி இதயம் முழுவதும் வலி பெருக, விஷயத்தைக் கூற,

“அக்கா… ஏனக்கா அப்படிக் கேட்டாய்…? இந்த இரு மாதங்களாக அத்தான் படும் சித்திரவதை உனக்குத் தெரியாது… அவர் வீட்டுப் பக்கமே வருவதில்லை… உனக்கு அது தெரியுமா?

நீ ஹாஸ்பிடலில் இருக்கும் நாள் வரை தானும் இங்கேயே இருப்பேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்… வேலைக்குக் கூடப் போவதில்லை… இதில், இவர் எடுத்து நடத்தவேண்டிய முக்கிய கேஸிற்கு இவர் போகவில்லை. அதனால், இவருக்கு எதிராக நஷ்ட ஈடு வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், உன் விழிப்பிற்காகவே காத்திருந்தார்…

அவருடைய முக்கிய வேலைகளைப் பார்ப்பதற்காக, யார் யாரையோ பொறுப்பு விட்டுவிட்டு வைத்தியசாலையே கதி என்றிருக்கிறார். இதில் அத்தானின் கவனம் தொழிலில் இல்லை என்பதை உணர்ந்து, அவருடைய ஷியார்சை விழுத்த வேறு சதி நடக்கிறது. எத்தனையோ முறை, அவரைச் சென்று, அவர் தொழிலைக் கவனிக்கும்படி நான் கூறியும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், உன் கூடவே இருந்தார்… அவரிடம் போய் இப்படிச் சொல்லிவிட்டாயே…

அதுமட்டுமல்லக்கா… யாரையும் உன் அருகேகூட வரவிடவில்லை. உனக்குத் தான்தான் சேவகம் செய்யவேண்டும் என்று பிடிவாதமாக நேர்சைக் கூட உன் அருகில் விடாமல் பாத்ரூம் வரைக்கும் அழைத்துச் சென்றவரிடம் போய்… ஏனக்கா… அவரைப் புரிந்துகொள்ளாமல்…” என்று சிறு கோபத்துடன் கூறியவளைத் தவிப்புடன் பார்த்தாள் சர்வமகி.

“இ… இல்லை… என்னால்… அவருக்கு… மிகவும் தொந்த…ரவாக…” அவள் முடிப்பதற்குள் தலையை ஆட்டினாள் தேவகி.

“உன்னால் மட்டுமல்ல… நம்மாலும் அவருக்குத் தொந்தரவுதான்… நீ இங்கே மருத்துவமனையில் கிடக்கும் நாள் வரை அத்தானுக்குத் தொந்தரவுதான். எப்போது நீ பழையதுமாதிரி வீட்டுப் பொறுப்பை எடுத்து நடத்துகிறாயோ, அப்போதுதான் அத்தானுக்குத் தொந்தரவில்லாமல் இருக்கும்… ஓ காட்… இந்த இரண்டு மாதங்களாக அத்தான் அத்தான் போலவா இருந்தார்? ஏதோ பைத்தியக்காரன் போல… பார்க்கவே பயமாக… என்ன ஆடையை மட்டும் கிழித்துக்கொள்ளவில்லை… மற்றும் படி… அவர் உணர்விலேயே இல்லை” என்றவள் தலையைக் குலுக்கினாள்.

“அக்கா… உனக்கு ஒன்று தெரியுமா?” என்றவள் தன் கைப்பையைத் திறந்து அதிலிருந்து ஒரு செய்தித்தாளை வெளியே எடுத்தாள். அதைப் பிரித்து சர்வமகியின் முன்னால் காட்டினாள்.

“இதோ பார்த்தியா… நம்முடைய அப்பாவின் செய்தி… அவர் கொலைக் குற்றவாளியல்ல… என்பதை ஆதாரத்துடன் அத்தான் நிருப்பித்திருக்கிறார்… அத்தானின் தந்தையின் இறப்பிற்கும், நம் அப்பா சிறையில் போவதற்கும் யார் காரணம் தெரியுமா? தெரிந்தால் நீ அதிர்ந்துபோவாய்…” என்றவள் செய்தித்தாளை மடித்து வசதியாக சர்வமகி பார்ப்பதற்கு முன்னால் நீட்டினாள்.

அந்தக் கட்டுரையைப் படித்த சர்வமகியின் விழிகள் வியப்பால் மலர்ந்தது.

“தே…வ…கி?” என்றாள் புரியாமல்.

“ஆமாமக்கா… நாம் இதுவரை காலமும் நல்லவர் என்று நினைத்திருந்த நடராஜன் அங்கிள்தான் இதற்கெல்லாம் காரணம். அப்பாவும் அவரும் பார்ட்னஸ்… அவருக்கு ஏற்கெனவே அப்பாவின் மீது பகை இருந்திருக்கிறது. எங்கள் அப்பாவைப்பற்றித்தான் நமக்குத் தெரியுமே. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புவார். நடராஜன் அங்கிளையும் நம்பிவிட்டார். நடராஜன் அங்கிள் தொழில் எல்லாவற்றையும் சுரண்டி தன்னதாக ஆக்கிக் கொண்டார். அதன் பின் அத்தானின் தந்தையால் பலருடைய தொழில்களும் விழுந்துவிட்டது. எல்லோருமாகச் சேர்ந்துதான், வெங்கடேஷ் மாமாவைப் பழிவாங்க எங்கள் அப்பாவைப் பயன்படுத்திக் கொண்டார்கள்…. அந்த டிஎன் நிறுவனம் என்பது எல்லாம் அவர்களின் செட்டப்… அப்பாவை மாட்டவைத்துவிட்டு அவர்கள் தப்பிக்கொண்டார்கள்.

இது எல்லாவற்றிற்கும் காரணம் நடராஜன் தான் என்பதைக் கண்டுபிடித்தது அத்தான்தான் அக்கா…” என்று தேவகி கூற,

“எ… எப்படி…”

“நீ கொடுத்த டயரியை வைத்துத்தான்… அதில் அப்பா டிஎன் நிறுவனத்தைச் சந்திக்கப் போவதற்கு முன்தினம் நடராஜன் அங்கிளை சந்தித்திருக்கிறார். டிஎன் நிறுவனம் பற்றிய செய்தியை அப்பாக்குக் கூறி, ஆர்வத்தை ஏற்படுத்தியதே அவர்தான். அந்தக் கோணத்தில் அத்தான் யோசித்தார். அப்படியானால் நடராஜன் அங்கிளுக்கும் இதற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கவேண்டும் என்பதை அத்தான் அறிந்து தன் ஆட்களைக் கொண்டு அக்கு வேறு ஆணிவேராக விசாரிக்கச் சொன்னார்… எல்லாம் விசாரிக்கத்தான் உண்மை வெளியே வந்தது…

ஆனால் விதியைப் பாரக்கா… அந்த நடராஜன் அங்கிளுடன் கூட்டுச் சேர்ந்தவர்கள் எல்லோரும், நடராஜன் அங்கிள் உண்மையை உளறிவிடுவாரோ என்று எண்ணி, அவருடைய பேஸ்மன்டிலேயே அவரைக் கொலை செய்து, அங்கேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். தன்னை கூட்டாளிகள் கொன்றுவிடுவார்கள் என்று முன்னமே நடராஜன் அங்கிளுக்கத் தெரிந்திருக்கிறது. அதனால் அவர் இறுதியாகத் தன் கைப்பேசியில் வாக்குமூலம் வேறு கொடுத்துவிட்டார். அதைக் கைப்பற்றி, மற்றைய அனைவரையும் காவல்துறையினர் பிடித்துவிட்டனர்.

அவர்களுக்கு எதிராக அத்தான்தான் வாதாடப்போகிறார்…” என்று கூறிய தங்கையை வியப்புடன் பார்த்தாள் சர்வமகி.

“அக்கா… இன்று அப்பா நிரபராதி என்பதை வெளியுலகம் தெரிந்துகொண்டிருக்கிறது என்றால், இதற்குக் காரணம் அத்தான் தான். அதோடு இந்தச் செய்தியை உலகம் முழுவதும் வெளிவரும்படி செய்திருக்கிறார்… அன்று உன்னை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோமல்லவா…? அன்றுதான் எங்கள் அப்பா குற்றவாளி அல்ல என்கிற ஆதாரம் நிரூபிக்கப் பட்டது. அதுவும் அப்பாவால் கொலைசெய்யப்பட்டவரின் மகனே முன்னின்று இந்த செய்தியை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்றதும், வேறு கதை இல்லாமல் ஏற்றுக்கொள்ளப் பட்டுவிட்டது.

அதுமட்டுமல்லக்கா… நம்முடைய அத்தான், அந்த கொலையாளிகளுக்கு எதிராக வாதாடப்போகிறார் என்பதை அறிந்ததும், அத்தானுக்குக் கொலை மிரட்டல் கூட விட்டார்கள். அத்தான் எதைப் பற்றியுமே கவலைப்படவில்லை.

“கொ.. கொ…லை மிரட்டலா… என்ன சொல்கி..றாய் தே..வகி…”

“யெஸ் அக்கா… இந்த செய்தி வெளியேறினால், அவரைக் கொன்றுவிடுவதாகவும், அந்தக் கேசிலிருந்து உடனடியாக விலகுமாறும் அந்த முக்கிய குற்றவாளி தீரன் எச்சரித்திருந்தார். அதற்கு அத்தான் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. முதல் வேலையாக எங்களுக்கும் உனக்கும் செக்யூரிட்டி அரேஞ் பண்ணினார். அவர் தன்னைப் பற்றிக் கவலைப் படவேயில்லை. அவருடைய அஸிஸ்டன் அவரை எச்சரித்தபோது, நான் இப்போது இருக்கிற நிலைக்கு, சாவே பரவாயில்லை என்று கூறிவிட்டார்…” என்று அவள் கூற சர்வமகியின் முகம் வெளிறியது.

“ஐயோ… அப்படி…யானால் அவ…ரைக் கவன..மாக இருக்…கச் சொல்லவே…ண்டுமே…” என்று பதறினாள் சர்வமகி.

“அதைப் பற்றிக் கவலைப் படாதேயக்கா… அவர்கள் எல்லோரையும் கூண்டோடு பிடித்தாகவிட்டது.” என்ற போதும், தெளிவில்லாத முகத்துடன்,

“உண்…மை…யாகவா?” என்றாள் தவிப்புடன்.

“நான் ஏனக்கா பொய் சொல்லப் போகிறேன்… அத்தானின் தந்தைக்கு எதிராகச் சதிசெய்தவர்கள் அனைவரையும் பிடித்தாகிவிட்டது.” என்றவள் சிறிது நிறுத்தித் தன் சகோதரியைப் பார்த்தாள் தேவகி.

“அது மட்டும் அல்லக்கா… இன்னொரு விஷயத்தையும் நீ கேள்விப்பட்டால் மயங்கியே விழுந்துவிடுவாய். நம் அத்தான் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?” என்று கூறியவள் தமக்கையின் ஆர்வமான விழிகளைக் கண்டதும்,

“அத்தானின் தந்தையின் உயிலின் படி தன் மகன் மணம் முடித்தால்தான் சொத்துக்கள் அவர் பேருக்கு வரும் என்று எழுதிவிட்டார்…” என்று தேவகி கூற சர்வமகியின் முகம் வாடியது. அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் தேவகி.

“உங்கள் இருவரின் திருமணம் நடந்து முடிந்ததும், மாமாவின் சொத்து முழுவதும் அத்தானுக்கு வந்துவிட்டது. அதை அத்தான் என்ன செய்தார் தெரியுமா? அத்தனை சொத்துக்களையும் பிரித்து நம் ஐவரின் பெயரிலும் எழுதிவைத்துவிட்டார். அந்தச் சொத்து நம் இருபத்து நான்காவது வயதில் கிடைக்குமாறும் ஏற்பாடு செய்திருக்கிறார்.. மிகுதியை வறிய குடும்பங்களின் முன்னேற்றத்திக்காக ஒரு ட்ரஸ்டியை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் அமைத்திருக்கிறார். அந்த ட்ரஸ்டியின் பெயர் என்ன தெரியுமா? “சர்வமயம்…”.” என்றதும் சர்வமகி அதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்தாள்.

“இ… இது எ… எப்போது…” என்றாள் புரியாமல்.

“இது எல்லாம் உங்கள் திருமணம் நடந்த சொற்ப நாட்களுக்குள்ளேயே நடந்துவிட்டது. உன் பிறந்த நாள் பரிசாக உன்னுடைய பங்கை உனக்குக் கொடுக்க அத்தான் எண்ணியிருந்தாராம். அதற்கிடையில் நீ… இங்கே வந்து படுத்துவிட்டாயே…” என்றாள் தேவகி குறையுடன்.

“ஓ…” என்ற சர்வமகியின் முகம் பெரிதும் வாடியது. யாருடைய சொத்தை யார் அனுபவிப்பது. அவன் ஏன் அப்படிச் செய்தான்… அதுவும் திருமணமான புதிதில் செய்ததாக அல்லவா கூறுகிறாள். அப்படியானால் அநேகாத்மன் அந்த சொத்தை அடைவதற்காக அவளை மணக்கவில்லை… அவளுக்காகவே அவளை மணந்திருக்கிறான். இதயத்தில் அழுத்திய பாரம் மாயமாக மறைந்துபோக இப்போது முகத்தில் தெளிவு வந்தது. அவனுக்கு வேதனையைக் கொடுக்கிறோமோ என்கிற தாழ்வு மனப்பான்மை ஓடிப்போனது.

“அது மட்டுமல்லக்கா… உன்னை லைஃப் சப்போர்ட்டில் வைத்திருப்பதாகக் கூறியதும் அத்தான் பட்ட பாடு… இப்போது நினைத்தாலும் இதயம் நின்றுவிடும் போல் இருக்கிறது. கடைசியாக மருத்துவர்களையே மிரட்டிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளேன்… நீங்கள் என் மனைவியைக் காப்பாற்றவில்லை என்றால் நான் தற்கொலை செய்வேன்… என்று கூறிவிட்டார்…” என்ற தேவகி கூற சர்வமகி அதிர்ச்சியுடன் தேவகியைப் பார்த்தாள்.

“தே… தேவகி….” என்றவளுக்கு நடுக்கத்தில் நாவே எழும்பவில்லை.

“ஆமாமக்கா… நீ இல்லாத சித்திரவதையை அனுபவிப்பதை விட தற்கொலை எவ்வளவோ பரவாயில்லை என்றார். உன் மீது எத்தகைய அன்பிருந்தால் இப்படியெல்லாம் அவரால் யோசிக்க முடியும்… நீ லைஃப் சப்போர்ட்டில் இருந்த நான்கு நாட்களும் அத்தான் சாப்பிடவே இல்லை… தவிர நாங்கள் உன்னைப் பார்க்க வந்த போதெல்லாம் அத்தான் எங்களை நிமிர்ந்தே பார்க்கவில்லை. உன்னை மட்டும்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்… நீ அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டாய்… என்ற பின்தான் உன்னை எங்களோடு, விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று வந்தார். அவரைப் போய் நீ …” என்று குறைபட, துடித்துப்போனாள் சர்வமகி.

அவனுடைய வெறித்தனமான, ஆத்மார்த்தமான காதலுக்கு அவள் தகுதியானவள்தானா என்கிற சந்தேகம் வேறு தோன்றியது. அவனுடைய காதலுக்கு முன்பு, அவன் இழைத்த தவறுகள் காணாமல் போக, உடலும், உளமும் அவனை எண்ணி உருகத் தொடங்கின.

‘ஓ… ஆத்மன்.. உங்களுடைய இந்த அன்புக்கு விலையாக நான் எதைக் கொடுப்பேன்… என் உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லையே… அதைக் கூட நீங்கள் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள மாட்டீர்களே…’  என்று ஆத்மார்த்தமாகத் தன் கணவனின் நினைவில் துடித்து உருகத்தொடங்கினாள் அந்தப் பேதை.

தன் சகோதரியின் கலங்கிய முகத்தைக் கண்டவள், அவளை மேலும் நெருங்கி, கலைந்த தலைமுடியை வருடிக் கொடுத்தவாறு,

“அக்கா… அத்தான் உன்னை மிகவும் விரும்புகிறார்… உயிருக்கும் மேலாக…” என்ற தேவகியை கண்கலங்கப் பார்த்தாள் சர்வமகி.

“எ..எ… எனக்கு அது தெரி…யும்… ஆத்மன் என்னைக் கா… தலிக்கி…றார் என்று … தெரியும்… ஆனால்… தன்னுயி..ரைத் துச்.சமாக எண்…ணி எனக்காக… அவர்… தேவகி… நான்… என்ன… செ…ய்யட்டும்… என்… ஆத்மன்… இல்லாமல்… என்னால்… என்னால்… உயிர்… வழமு…டியாது… ஆனால்… அவர்… கோ…பி…த்துக்…கொண்டு… போ…ய்விட்டாரே…” என்று திக்கித் திணறித் தவித்தவளை வியப்புடன் பார்த்தாள் தேவகி..

“கோபித்துக்கொண்டா… அத்தானா… அதுவும் உன் மீதா… சும்மா போக்கா… அவராவது உன்மீது கோபப்படுவதாவது…” என்றவளை வருத்தத்துடன் பார்த்தாள் சர்வமகி.

“இல்லை… அவருக்கு கோபம்… வந்தால்… அதை… அடக்க… யாராலும்… முடியாது…” என்றவளைத் தேற்றும் முகமாகப் பார்த்தாள் தேவகி.

“அத்தான் வருவார் அக்கா… அவருக்கு உன்னை விட்டுப் பிரிந்து ஐந்து நிமிடங்கள் தன்னும் தனியாக இருக்கமுடியாது…” என்று அவள் முடிக்கவில்லை,

“யாருக்கு இருக்கமுடியாது?” என்கிற அழுத்தமான கடுமையான குரல் வாசல் புறம் இருந்து வர இரு பெண்களும் திகைப்புடன் திரும்பிப் பார்த்தனர்.

நிலவு 57

அநேகாத்மன் பற்றிய செய்தியைத் தன்னை மறந்து கேட்டுக்கொண்டிருந்த சர்வமகியும், அவனைப் பற்றிய சுவையான செய்திகளைத் தெரிவித்துக்கொண்டிருந்த, தேவகியும், வாசற்கதவில், ஒருவன் வந்ததையோ, அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்ததையோ உணரவில்லை.

இடையில் குறுக்கிட்டு “யாருக்கு இருக்கமுடியாது…” என்கிற அழுத்தமான குரல் கேட்க, அந்தக் குரல் யாருடையது என்பதைப் உடனே புரிந்துகொண்ட சர்வமகி, உள்ளமும், முகமும் மலர்ந்து விகாசிக்க நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் எண்ணியது போல, அநேகாத்மன்தான் கதவின் நிலையில் சாய்ந்தவாறு இரண்டு கைகளையும் பான்ட் பாக்கட்டில் செலுத்தி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனைக் கண்டதும், முகம் முழுவதும் பாசத்தில் மலர,

“என்ன அத்தான்… கோபித்துக்கொண்டு போனீர்கள் என்று அக்கா வருத்தப்பட்டார்கள்… நீங்கள் என்ன என்றால் திரும்பி வந்து நிற்கிறீர்களே…” என்றாள் தேவகி கிண்டலுடன்.

“போனேனா…! எங்கே…? அதுவும் உன் அக்கா இங்கே இருக்கும் போது நான் எங்கே போவேன்…! அவளை விட்டுவிட்டு என்னால் எங்கேயும் போக முடியாதே தேவகி…” என்றவன் அழுத்தமான நடையுடன் சர்வமகியின் அருகே வந்தவன், எப்போதும் போல, அவளைச் சற்றுத் தள்ளி விட்டுக் கிடைத்த இடைவெளியில் அவளை நெருக்கியவாறு அமர்ந்துகொண்டான்.

எப்போதும் போல அவனுடைய வலது கரம் அவளுடைய இடது கரத்தைப் பற்றிக்கொண்டது. அதைக் கண்டு பலமாக நகைத்த தேவகி,

“என்னத்தான்… இவ்வளவுதானா உங்கள் ரோஷம்… சே… சே… பெரிய கோபக்காரர், பிடிவாதக் காரர்… அழுத்தமான பேர்வழி… எக்ஸட்ரா எக்ஸட்ரா… என்று அனைவராலும் அறியப்பட்ட நீங்களா, கோபித்துக்கொண்டு சென்றுவிட்டு, அடுத்த நிமிடம் இங்கே வந்து நிற்கிறீர்கள்? சே…சே… இதை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை…” என்று உதட்டைப் பிதுக்க,

“ஏன் மச்சினிச்சி என் மானத்தை வாங்குகிறாய்? நீ சொன்னாயே… கோபக்காரன், பிடிவாதக்காரன், அழுத்தமான பேர்வழி, அந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா… இது எல்லாம் உன் அக்காவிற்கு முன்னால் வெறும் புஸ்வானம்… நானாவது உன் அக்காவிடம் கோபித்துக்கொண்டு போவதாவது… நோ சான்ஸ்…”

என்றவன் சர்வமகியின் கரத்தைத் தூக்கித் தன் உதட்டில் அழுத்தி விடுவித்தான்.

அவனிடமிருந்து வந்த சிகரட் வாசைன, எதற்காக அவன் வெளியே போனான் என்பதை எடுத்துக் காட்ட, அவனை முறைத்தாள் சர்வமகி.

அவள் முறைப்பைப் பார்த்தவன்,

“வட்…” என்றான் புரியாதவன் போன்று. அவள் எதற்காக முறைக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாளா அவன். அவள் மீண்டும் முறைக்க,

“ஓக்கே… ஓக்கே… சாரி… டென்ஷன்டா… அதுதான்… அதுவும் ஒன்றுதான் எடுத்தேன்…” என்று அவன் கூற, அவளின் முறைப்பில்,

“சரி…சரி.. ஓன்லி ஃபைவ் சிகரட்ஸ்தான்…” என்க, இவள் மேலும் முறைக்க,

“நான் என்னம்மா செய்வது… நீ வேறு என்னை வெறுத்துவிட்டாயோ என்று… கலங்கிப்போனேன்டா… அதுதான்… என் பயத்தைப் போக்க… சிகரட் பிடித்தேன்… பட் ஐ பிராமிஸ் யு… நீ என் அருகே இருந்தால், அதைத் தொடவே மட்டேன்… என்னை நம்பும்மா…” என்று அவளிடம் கெஞ்ச,

அதற்கு மேல் தன் கோபத்தைப் பிடித்து வைத்திருக்க முடியாதவளாக, அவனுக்கு முன்பாகத் தன் கரத்தை நீட்டி,

“இ…னி… கு…டிக்..க.. மாட்…டே…” அவள் முடிக்கும் முன்பாக, அவள் என்ன கூற வருகிறாள் என்பதைப் புரிந்தவனாக, அவள் கரத்தின் மீது தன் கரத்தைப் பதித்து,

“ஐ ப்ராமிஸ் யூ கண்ணம்மா… நீ என் அருகில் இருக்கும் வரை, ஒரு போதும் இந்தக் கருமத்தைத் தொடமாட்டேன்… இது உன் மீது ஆணை…” என்றான் மனம் உணர்ந்து.

“இத பார்டா… இது போங்கு ஆட்டம்… அப்போ அக்கா இல்லாத நேரம் குடிப்பீர்களாக்கும்… நீங்கள் நீதிமன்றத்துக்கு போகும்போது அக்கா இருக்கமாட்டார்கள்… அப்போ அங்கே குடிப்பீர்களா?” என்று அவள் போட்டுக் கொடுக்க,

“எங்களுக்கு வில்லி வெளியே தேவையில்லை… உள்ளேயே இருக்கு…” என்று அவன் சலிக்க,

“அதுதானே… தேவகி கூறியதில் என்ன தப்பு?” என்றவாறு தன் கணவனை மீண்டும் விழிகளால் துளைக்க,

“அப்படியில்லம்மா… நீ என்னோடு இருக்கும் வரை என்றால், என்னைப் பிரியாமல் என் கூடவே காலம், காலமாக இருக்கும் வரைக்கும் நான் தொடமாட்டேன்…” என்றான் அவன். அவள் நம்ப மாட்டாமல் பார்க்க,

“லாயரின் மனைவி என்று காட்டுகிறாய் பார்த்தாயா… சந்தேகப் படுகிறாயே… சரி உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்… நான் இனி இந்த ஜென்மத்தில் சிகரட் பிடிக்கமாட்டேன்… போதுமா…” என்றான் உறுதியாக. அதைக் கேட்டதும், சர்வமகியின் முகம் மலர்ந்தது. அதைக் கண்டதும்,  அவனுடைய வலது கரம், அவள் தோள்களைச் சுற்றி விழுந்து, தன்னோடு அவளை நெரித்துக்கொண்டது.

மீண்டும் அவள் கவலையுடன், அநேகாத்மனை ஏறிட,

“இப்போ என்னடா…” என்றான் அவள் கூந்தலை ஒதுக்கியவாறு.

“தே..வகி… உ..ங்க…ளு…க்கு… எதி…ராக… வழ…” என்று அவள் முடிக்கும் முன்பாகத் தன் கரத்தை அவள் வாயில் வைத்து,

“டோன்ட் ஸ்ட்ரெய்ன் யுவர் செலஃப் மகிம்மா…” என்றவன் தேவகியைப் பார்த்து முறைத்தான்.

இதையெல்லாம் உன் அக்காவிடம் கூறவேண்டுமா?” என்பதுபோலப் பார்க்க, அவளோ அவனைப் பார்க்காமல், வேறு எங்கோ வேடிக்கை பார்த்துவிட்டு, இனி நின்றால், தன் தலையிலேயே மண்ணையள்ளிப் போடவேண்டிவரும் என்பதைப் புரிந்தவளாக,

“ஓக்கே அத்தான்… நான் போகவேண்டும்… பிறகு மாதவியையும், பிரதீபனையும, அபீதனையும் அழைத்து வருகிறேன்…” என்ற தேவகி மீண்டும் குனிந்து சர்வமகியின் கன்னத்தில் முத்தங்கொடுத்து நிமிர்ந்தாள். அவனோ சற்றுப் பொறாமையுடன், தேவகியைப் பார்த்தான்,

“ஹேய்… தட்ஸ் மை ப்ளேஸ்…” என்றான் உண்மையான எரிச்சலுடன். அதைக் கேட்டு நகைத்தவள், தாளமுடியா பாசத்துடனும், அன்புடனும், அருகே நின்ற அநேகாத்மனை இறுக அணைத்து விடுவித்தாள்.

“அத்தான் நீங்கள் இல்லை என்றால் எங்கள் அக்கா இப்போது உயிரோடு இல்லை. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன் அத்தான்… ஐ பிராமிஸ் யு…” என்று கூறி விடைபெற்றாள்.

“சில்லி கேர்ள்…” என்று நகைத்தவாறு, அவள் போகும்வரை பார்த்துக்கொண்டிருந்த அநேகாத்மன் திரும்பினான். சர்வமகி அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் விழிகளில், தெரிந்த கேள்வியைப் புரிந்துகொண்டவன், எழுந்து அவளோடு ஒட்டிப் படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து, அவளைத் தன் மார்பில் விழுத்தி,

“இதை விடமாட்டாயா?” என்று சலிப்புடன் கேட்டான். அவள் மீண்டும் கேள்வியாக நோக்க, அவள் முதுகை வருடியவாறே,

“இப்போ அந்தப் பிரச்சனையெல்லாம் தீர்த்தாச்சும்மா… எனக்கு எதிராக வழக்குப் பதிந்தவர்களையே நீதிமன்றத்துக்கு இழுக்குமாறு செய்துவிட்டேன். என்னைப் பற்றியும் நன்கு தெரிந்ததால், எனக்கு எதிராகப் போட்ட வழக்கை மீளப் பெற்று விட்டார்கள்… உண் கணவனை வீழ்த்த இனி ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் கண்ணம்மா… அந்த ஒருவன் நாம் பெற்ற பிள்ளையாக மட்டும்தான் இருக்கமுடியும்…” என்றான் அவன் அலட்சியமும், கர்வமுமாக.

இதுதான் அநேகாத்மன். இதுதான் அவன் இயல்பு. ஆனால், அவன் இயல்பு, அவன் மகியிடம்மட்டும், விருப்பத்துடனேயே தொலைந்து போகும்.

“உங்…கள்… தந்…தை…யின்…சொ…” அவள் முடிக்கும் முன், அவளைச் சுற்றித் தன் அழுத்தமான இரு கரங்களையும் மாலையாகப் போட்டு அவள் கன்னத்துடன் தன் மூக்கை உரசியவன் பின் அவளைக் குனிந்து பார்த்தவாறு,

“மகி… என் அப்பாவின் சொத்து எனக்குத் தேவையே இல்லை… அப்போ எனக்கு மணமுடிக்கும் எண்ணமே இருக்கவில்லை மகிம்மா… அதனால் அவருடைய சொத்து எனக்குத் தேவைப்படவும் இல்லை. நான் உழைக்கும் பணமே, மூன்று சந்ததிகளுக்குப் போதும். இதில் எனக்கெதற்கு அப்பாவின் சொத்து… உன்னை மணந்த பிறகுதான், அப்பாவின் சொத்து எனக்கு வந்தது. உன்னால்தானே அது எனக்குச் செந்தமானது. அப்போ, அது உனக்குரியதுதானே. அதுதான், வந்த சொத்தில், கொஞ்சத்தை உங்கள் எல்லோருக்கும் எழுதி வைத்தேன். ட்ரஸ்டியும் ஆரம்பித்தேன்.” என்றவன் சற்று நிதானித்துப் பெருமூச்சொன்றையும் எடுத்து விட்டான்.

“இப்போது யோசிக்கும்போது, அதுதான் சரியென்று தெரிகிறது கண்ணம்மா… உன் தந்தை செய்யாத குற்றத்திற்காக சிறையில் போய் இறந்தார். அவர் இறப்புக்கு ஏதோ ஒரு விதத்தில் நானும் காரணமல்லவா… நான் அறியாமல் செய்த தவறு என்றாலும், அது தவறுதானே… அதனால் அப்பாவின் சொத்து முறைப்படி உங்கள் எல்லோருக்கும் உரியதுதான் மகிம்மா…

ஆனால், அப்பாவின் பி.வி.எஸ்சின் மெய்ன் பிஸ்னசை மட்டும் நான் வைத்திருக்கப்போகிறேன்… அது அவரின் கனவு. அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து, பெருக்கிய கம்பனி. தவிர, அந்த நிறுவனம் கட்டும்போது, என் அம்மாதான் அடிக்கல் நட்டார்களாம்… அதை அம்போ என்று விட்டுவிடமுடியாது. அது வேறு யாரின் கைகளுக்குப் போவதையும் நான் விரும்பவில்லை. அது மட்டுமல்ல, எல்லா நிறுவனங்களுக்கும் தாய்க்கம்பனி அதுதான். அந்தக் நிறுவனத்திலிருந்துதான், அப்பா மற்றைய தொழில்களைத் தொடங்கினார்…” என்றான் அவன் வேதனையுடன். பின் ஒன்றோடொன்று கோர்த்திருந்த தன் கரத்தை விலக்கி, அவள் கரத்தினூடாகக் கொண்டு சென்று இரு உள்ளங்கைகளையும் தாங்கிக்கொண்டவன், அதை வருடிக்கொடுத்தவாறே, அவள் தோளில் தன் நாடியைப் பதித்து,

“இன்னும் கொஞ்சக் காலம் போனதும், உன் சகோதரர்களுக்குரிய பணம் அவர்களுக்கே வந்து சேரும். அப்போதுதான் அவர்களால் சரியாக அந்தப் பணத்தைக் கையாள முடியும் என்று கூற, சர்வமகியோ, தன் தலையைத் திருப்பி, தன் தோளில் நாடியைப் பதித்திருந்தவனை இமைகள் மூடாது பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன… அப்படி என்னை விழுங்குவதுபோல பார்த்துக்கொண்டிருக்கிறாய்…” என்று கேட்டவன் திரும்பி தன் தலையைச் சற்றுத் தூக்கி சர்வமகியின் நெற்றியில் முத்தமிட்டு, “ இப்போது என் மீதிருந்த சந்தேகம் தீர்ந்ததா? “ என்றான் கனிவுடன்.

அவள் மறுப்பாகத் தலையை ஆட்ட, “இன்னும் என் மீதிருந்த சந்தேகம் போகவில்லையா…” என்றவனின் குரலில் அதீத வலி தெரிய,

“இ… இல்லை… சந்தே..கம்.. இ..ல்லை… உங்கள்… மீது எனக்..கு சந்தே..கம் இல்லை… வரு..த்தம்… நீ…ங்கள்… எனக்..கு மட்டு…ம்… உரி…யவராக… இரு…க்க வேண்டும்… என்கி…ற கோ…பம்… தவிர…“ என்று  அவள் பேசச் சிரமப்பட்ட, அவள் வாயில் தன் கரத்தைப் பதித்து,

“எனக்குப் புரிகிறதுடா… ப்ளீஸ்… கஷ்டப் படாதே…“ என்று சமாதானப் படுத்தினான். அவளோ,

“இல்லை… நா…ன் பேச…வேண்…டும்…“ என்று மறுத்தவள், “ என்னால்… உங்..கள்.. மகி..ழ்ச்..சி.. தொலை…ந்து… போ…ய் விடு…மோ… என்… “ அவள் முடிக்கவில்லை,

“ஷட் அப்… ஷட் அப்… சர்வமகி…“ என்று சீறிய அனேகாத்மன், வேகமாக அவளை விட்டு விலகி எழுந்து நின்றான். உடல் முழுவதும் கோபத்தில் விறைத்தது. தன் கோபத்தைத் தணிக்கப் பெரும் பாடு பட்டவன், தன் முடியை இரண்டு கரங்களாலும் அழுந்தக் கோதிக்கொண்டான்.

“உன்னால் என் மகிழ்ச்சி தொலைந்து போகுமா? ஆர் யு மாட்… நீ இல்லை என்றால்தான் என் மகிழ்ச்சி தொலைந்து போகும் சர்வமகி… அதையேன் புரிந்துகொள்ள மறுக்கிறாய்… வித்தவுட் யு… ஐ ஆம் நத்திங்…” என்றான் அவன் கடுமையாக. அதற்கு மேல் அவனால் பேசவும் முடியவில்லை. சில நேரங்களில் மௌனம்தான் சிறந்த பதிலாக இருக்கிறது.

“ஆத்மன்… ப்ளீஸ்…”

“டோன்ட் சே எனிதிங் டாமிட்… வலிக்கிறதடி…” என்று தவிப்புடன் கூறியவனை ஏறிட்டவள்,

“ஐ… லவ்… யு…” என்றாள் சர்வமகி மென்மையாக. அவனுக்கு அவள் கூறியது புத்திக்கு எட்ட கொஞ்ச நேரம் எடுத்ததது. முதலில் நம்பா தன்மையுடன் தன் மனைவியை ஏறிட்டவன், வேகமாக அவளை நெருங்கி,

“வட்… எ… என்ன… என்ன சொன்னாய்… திரும்பச் சொல்…” என்றான் பரபரப்புடன்.

“சொ…ல்கி…றேன்…” என்றவாறு தன் கரங்களை விரித்துப் பிடிக்க, அந்த சிறிய கரங்களுக்குள் பெரும் காதலுடன், அடைக்கலமானான் அநேகாத்மன். ஆனாலும், அந்தப் பெரிய உருவத்தை முழுவதுமாக அவளால் அணைக்க முடியவில்லை. அவனோ அவளுடைய முயற்சியை இலகுவாக முறியடித்தவாறு, அவள் பணியைத் தானே செய்ய, இப்போது சர்வமகி அவன் அணைப்பில் ஐக்கியமாகியிருந்தாள். அவளைத் தன்னோடு இறுக்கி அணைத்து, அவள் நாடியைத் தன் சுண்டுவிரலால் பற்றித் தூக்கி, அவள் விழிகளுடன் தன் விழிகளைக் கலந்தவன், “இ… இப்போ… சொல்…” என்றான் தவிப்புடன்

“ஐ… செட்.. ஐ… லவ்… யு…” என்றாள் அவள் மென்மையாக. அதைக் கேட்டதும் அநேகாத்மனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

“மகி… நீ… ஓ மை காட்….” என்றவன் அதற்கு மேல் பேச முடியாமல் அவள் முகம் முழுவதும் ஆவேசத்துடன் முத்தமிட்டான். அவள் கன்னம், நெற்றி, மூக்கு, கண்கள், கன்னம், கழுத்து, மூக்கு என்று ஒழுங்கில்லாது முத்தமிட்டவன், இறுதியில் அவள் உதடுகளில் ஐக்கியமாகி நின்றான். நீண்ட நேரத்திற்குப் பின்பு அவளை விடுவித்தவன், முகம் முழுவதும் தித்திப்பு பொங்கி வழிய,

“ஓ காட்… நான் இந்த உலகத்தில் பிறந்ததற்கான பலனை இன்றுதான் அனுபவிக்கிறேன் கண்ணம்மா… ஐ ஆம் சோ ஹாப்பி… முதன் முதலாக உன் வாய் திறந்து என்னைக் காதலிப்பதாகக் கூறியிருக்கிறாய் லேட்டாக வந்த காதல் என்றாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறது… தாங்ஸ்டா…” என்றான் பெரும் அளவிடமுடியா மகிழ்ச்சியுடன்.

“இ… இல்லை…”

“இல்லையா… எது இல்லை?” என்றான் புரியாமல்.

“லேட்டாக வந்த காதல்… இல்லை… இது… பழைய கா…தல்…”

“வட்… பழைய காதலா? என்ன சொல்கிறாய்?” என்று அவன் வியப்புடன் கூற,

சர்வமகி மெல்லிய குரலில் தான் அவனை முன்னமே விரும்பியதைக் கூறினாள். “ஆனால்… என்னுடைய உடல் நிலை…யால்… உங்களை விட்டு விலகவேண்டியதாயிற்று…” என்றவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டான் அநேகாத்மன்.

“ஓ பேபி… யு ஆர் மை ஹார்ட்… என் தேவதை… என் சகலமும்… நீ என் சர்வமும் நீ, என் உடல் முழுவதும் பரவியிருக்கும் ஆத்மா நீ மகிம்மா… ஐ லவ் யு… ஐ லவ் யு… ஐ லவ் யு…” என்று தன் அன்பை மீண்டும் முத்தங்களால் தெரிவித்தான்.

“நீங்களும்தான் அநேகாத்மன்… என் உலகம் முழுவதும் அனேகமாய் பரவியிருக்கும் ஆத்மா நீங்கள்தான்… என் சகலமும் நீங்கள்தான்…” என்றவள் உரிமையுடன் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். சாய்ந்தவளின் கன்னத்தில் எதுவோ உறுத்தத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னம்மா…?’ என்றான் அநேகாத்மன் கனிவுடன்.

“எது…வோ உறுத்…துகி…றது…” என்றாள் மென்மையாக. தொடர்ந்து தன் கரத்தால் அவனுடைய மார்பைத் தடவிப் பார்த்தாள்.

“ஓ… அது ஒன்றுமில்லை… செய்ன்…” என்றவன் அதை எடுத்து வெளியே விட்டான். அந்தச் செய்னைக் கண்ட சர்வமகி திகைத்தாள்.

“இது… இது…” என்று தடுமாறினாள்.

“உன்னுடையதுதான்… அன்று என் வீட்டில் நான் செய்த உதவிக்குக் கூலியாக வைத்துவிட்டுப் போனது… உன்னிடம் தரவேண்டும் என்று நினைத்தேன்… பட்… ஏனோ என்னிடமே தங்கிவிட்டது. பிறகு உனக்கு ஆபத்து என்றதும் என் கழுத்தில் போட்டுக்கொண்டேன். ஏதோ நீயே என் மார்பில் சாய்ந்திருப்பதுபோல ஒரு உணர்வு… இதில் இருக்கும் பிள்ளையார்தான் உன்னைக் காப்பாற்றி என்னிடம் மீட்டு வந்தது…” என்றவனை வியப்புடன் பார்த்தாள்.

“என்ன? வீட்…டில் ஒரு கட…வுள் பட…மே வைத்..திருக்..கத் தெரி..யா..தவரா பிள்..ளையா..ரைப் பற்..றிப் பேசுகி..றீர்க..ள்?” என்றாள் வியப்பை மறைக்காத குரலில்.

‘’இப்போது வீட்டிற்கு வந்து பார்… வீடே கோவில் மாதிரி ஆக்கிவிட்டேன்… அடிபட்டு உள்ளம் வலிக்கிறபோதுதானே ஞானம் வருகிறது… எப்போது உனக்கு ஆபத்து என்று உணர்ந்தேனோ அப்போதே கடவுள் நம்பிக்கையும் வந்துவிட்டது.” என்றவன் அவளை இறுக அணைத்தான்.

“அதற்..கா..க இப்ப..டி..யா?” என்றவள் கிண்டலுடன் சிரித்தாள்.

“எதற்காக இப்போது சிரிக்கிறாய்?” என்றான் புரியாமல்.

“இ..து பெண்..க..ள் அணி..யும் செய்..ன்… நீங்க..ள் அணி..கிறீர்..களே…” என்றாள் நகைப்புடன்.

“சோ வட்… இது உன்னுடையது… அது போதும் எனக்கு… தவிர பெண்கள் தான் தாலி அணியவேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? இது நீ எனக்குக் கட்டிய தாலி… எனக்கு இடப்பட்ட வேலி…” என்றவன் மீண்டும் அவளை நோக்கிக் குனிந்தான்.

“உங்..களு..டன் பே..சி வெல்..ல முடி..யு..மா ஆத்ம..ன்?” என்று நகைத்தவள் அவன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தாள்.

அதே நேரம் உள்ளே வந்த நார்ஸ் இருவரின் அணைப்பையும் கண்டு திகைத்தார். தன் தொண்டையைச் செருமி அவர்களை இந்த உலகத்திற்கு மீண்டார்.

வெட்கத்துடன் விலகிய சர்வமகியைப் பிடிவாதமாகத் தன் அணைப்பில் நிறுத்திய அநேகாத்மன் புன்னகையுடன் செவிலியரைப் பார்த்தான்.

“எங்கள் தமிழில் ஒரு பழ மொழி இருக்கிறது… பூஜை வேளைக் கரடி என்று… அந்தப் பழ மொழியை இப்போது நீங்கள் நினைவு படுத்துகிறீர்கள்…” என்ற சுத்தமான தமிழில், அநேகாத்மன் கூற,

“வட் பூஜை… வட் கரடி…” என்றார் அந்த வெள்ளைக் காரப் பெண்மணி.

அவரின் திணறல் சர்வமகியை நகைக்க வைக்க அவள் வலியையும் மீறி கலகலவென சிரித்தாள்.

அவள் சிரிப்பையே கண்ணிமைக்காது அநேகாத்மன் பார்க்க, அந்த நிலையிலும், அவன் உடலில் இரத்தம் அதிகமாகப் பாயத் தொடங்கியது.

“உங்கள் மனைவி நகைப்பது இனிமையாக இருக்கிறது மிஸ்டர் அநேகாத்மன். இந்த நகைப்பு வாடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்…” என்றார் அந்த தாதி கனிவுடன்.

“அதை விட வேறு என்ன வேலை எனக்கு?” என்ற அநேகாத்மன் நர்ஸ் நிற்பதையும் பொருட்படுத்தாமல், அவள் இதழ்கள் நோக்கிக் குனிய,

“ஹேய்… மிஸ்டர் அநேகாத்மன்… ஐ ஆம்  ஸ்டில் ஹியர்…” என்று பதட்டத்துடன் அவர் கூற, இவனோ,

“சோ வட்…” என்றவாறு மேலும் குனிந்தான்.

“ஓக்கே மிஸ்டர் ஆத்மன்… டாக்டர் எல்லாம் செக் பண்ணிவிட்டார்.” என்றதும், இவன் விலுக் என்று நிமிர்ந்தான்.

“எ… எவ்ரிதிங்க் இஸ் ஓக்கே…” என்றபோதே இவன் குரல் நடுங்கியது.

“அது உங்கள் கையில்தான் இருக்கிறது…” என்றார் அந்த நேர்ஸ் பெரும் சோகத்துடன்.

“அப்படியென்றால்…” என்றவனுக்கு உடல் வெடவெடத்து வியர்த்தது.

அவனைப் பார்வையால் அளந்துகொண்டிருந்த சர்வமகிக்கு பெரும் வியப்பாக இருந்தது. யாருக்கும், தலைவணங்காதவன், அழுத்தமானவன், எதற்கும் பதறாதவன், தன் சட்டம், தன் நீதி என்று வாழ்ந்து வந்தவன், முதன் முறையாக இப்படிப் பதறுவதை அவள் பார்க்கிறாள். அதுவும் தன் நிமிர்த்தம் என்று எண்ணும் போது, இவளுக்குப் பெருமையில் உள்ளம் விம்மியது.

‘இவன் என்னவன், எனக்கே எனக்கானவன்… என்னைத் தன் உள்ளங்கையில் தாங்கிக் காத்துக்கொள்ளப் பிறந்தவன்… என் இம்மைக்கும் மறுமைக்கும் துணையானவன்… என் உலகம் இவன், என் உயிர் இவன்… என் உணர்வும் இவன்…” என்றவள் பெரும் நிம்மதியுடன் அவன் தோள் சாய, மீண்டும் அவன் உயரம், சிரமம் கொடுக்க, உடனேயே அதைப் புரிந்துகொண்டவன் போல,

அச்சமும், பதட்டமும் மாறாமலே, அவள் வாக்காகச் சாய்ந்திருப்பதற்காகத் தன் கரத்தை அகட்டி, அவளைத் தன் மார்பில் சாய வைத்தவன், ஒரு போதும், அவளை விட்டுவிடுவதில்லை என்பதைப்போல, அவளைத் தன்னோடு இறுக அணைத்தவாறு அந்த தாதியை ஏறிட்டான்.

“சொல்லுங்கள்… எது என் கையில் இருக்கிறது… இவளுக்காக நான் எதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன்…” என்று அவன் உறுதியுடன் கூற,

அவனின் நிலையைப் புரிந்துகொண்ட அந்த தாதியும், மெல்லியதாக நகைத்தவாறு,

“நீங்கள்… நாளையே உங்கள் மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம்…” என்று கூற, முதலில் திகைத்தவன், பின் அவர் கூறியதன் பொருள் புரிய, அவன் கத்திய ‘ஹூ ரே’யில் அவர் சொல்லவந்த மிகுதி அமுங்கிப் போனது…

நிலவு 58

ஐந்து வருடங்களுக்குப் பிறகு

அதிகாலை ஐந்து மணிக்கு விழிப்பு வந்து எழுந்தான் அநேகாத்மன். வழமைபோல, அவனுடைய விழிகள் தன் உயிரின் பாதியை விழிகளால் தேட, அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். அவன் புறமாகச் சரிந்து தன் கன்னத்தில், கை பதித்து விழிகள் மூடித் தூங்கிக்கொண்டிருக்கும் தன் மனையாளின் அழகில் மெய் மறந்துபோய்ப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்தக் காதலன்.

அதே அமைதியும் அன்பும் ததும்பும் முகம், சற்று உடம்பு வைத்திருந்தாலும், அது கூட  அவளுக்குப் பேரழகையே கொடுத்திருந்தது. அவனுடைய விழிகள் காதலும், காமமும் சேரத் தன் மனையாளின் அங்கங்களை ஆறுதலாக மிக மிக ரசித்துப் பார்க்கத் தொடங்கினான். இறுதியில் அவன் விழிகள் ஐந்து மாதக் கருவைத் தாங்கியிருந்த வயிற்றில் நிலைத்தன. இவனுடைய உதட்டில் மெல்லிய புன்னகை. கூடவே சற்றுப் பயமும் அவனை ஆட்கொள்ள, அவனையும் அறியாமல் அவளுடைய தலையை வருடிக் கொடுத்தான் அநேகாத்மன்.

அதே நேரம், சர்வமகியிடம் அசைவு வர, தன் கரத்தை விலக்கி, சட் என்று படுத்துத் தூங்குவதுபோல பாசாங்கு செய்ய, மெதுவாக விழித்தவளின் கண்களில் தெரிந்தது, அவள் அன்பன் அநேகாத்மனே.

முகம் முழுவதும் மலர, உதடுகள் நகையைச் சிந்த, தன் கரத்தை நீட்டி அவன் தலை முடியைக் கோதிக் கொடுக்க, தன் நடிப்பைக் கைவிட்டு, அவளை இழுத்துத் தன் கைவளைவில் வைத்துக்கொண்டான். அவனுடைய உதடுகளோ அவள் கழுத்தடியில் கச்சிதமாகப் பொருந்திக் கொள்ள,

“ஏய்… பொண்டாட்டி…” என்றான் கிசுகிசுத்த குரலில்.

“என்ன… புருஷா…” என்றாள் இவள்.

“அதிகம் சிரமப்படுத்துகிறேனா?” என்றான், முன்தின இரவின் இனிமையில்.

க்ளுக் என்று நகைத்தவள், இதை ஒவ்வொரு நாளும் கேட்கிறீர்கள் ஆத்மன்… என்றவாறு அவள் விலக முயல, அவளை இன்னும் இழுத்துத் தன் அணைப்பில் வைத்திருக்க.

“விடுங்கள் ஆத்மன், தேவ் எழுந்து அழப்போகிறான்…” என்று இவள் திமிற,

“எனக்கு வில்லனே அவன்தான்டி…” என்று கொதித்தவாறு தன் மனைவியை விட, அதில் நகைத்தவள். குனிந்து தன் மணாளனின் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு எழுந்தாள். அதே நேரம், அவர்கள் மகன் தேவின் அழு குரல், அருகேயிருந்த தொட்டிலிலிருந்து வர,

“ஐயையோ… அழத் தொடங்கிவிட்டான்… போச்சு… இனி அவனைச் சமாதானப் படுத்துவது பெரும் சிரமம்…” என்று பதறியவள்,

“இதோ வாரேன்டா கண்ணா…” என்றவாறு கலைந்திருந்த தலைமுடியைக் கோதிக் கொண்டையிட்டவாறு, மகனை நோக்கி அவசரமாகச் செல்லத் தொடங்க, அவளுக்கு முன்பாக மறு பக்கம் துள்ளி எழுந்த அநேகாத்மன், விரைந்து சென்ற அழும் தன் இரண்டு வயது மகனை வாரி அணைத்துத் தூக்கினான்.

மகனோ, தந்தையை விடப் பிடிவாதம் கொண்டவனாகத் தன் பசியை உடனே ஆற்றுப்படுத்தவில்லை என்கிற கோபத்தில் இன்னும் சற்றுப் பெரிதாகத் தன் குரலை உயர்த்தினான்.

தன் மகனால், தன்கொண்டவனால், தூங்கமுடியாது போய்விடுமே என்கிற கவலையில்,

“ஆத்மன்… நான் பார்த்துக்கொள்கிறேன்… நீங்கள் தூங்குங்கள்…” என்று சர்வமகி கூற,

இல்லைம்மா… நான் அவனைக் கீழே கொண்டு வருகிறேன்… நீ பாலை தயாராக்கு…” என்றவன், வீறிட்டுக்கொண்டிருந்த தன் மகனைக் குனிந்து பார்த்து,

“சன்… இட்ஸ் இனஃப்…” என்று மட்டும்தான் கூறினான். மறு கணம் மகனின் அழுகுரல் உடனே கப்பென்று நிற்க, அதைக் கண்டவன் மெல்லியதாக நகைத்தான்.

தேவ், தந்தையின் குரலைக் கேட்ட மறுகணம், அவனுடைய முடி நிறைந்த மார்பில் தொப் என்று தன் தலையை வைத்து சொகுசாகப் படுக்க, தன் கணவனின் ஒரு சொல்லில், அடங்கிப்போன தேவைக் கண்டு சிரித்த சர்வமகி, மகனின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, போகிற போக்கில், கணவனின் கபேர்டிலிருந்த ஒரு டீ சேர்ட்டை இழுத்து எடுத்து, அதை அவன் தோளில் போட்டுவிட்டு, சமையலறையை நோக்கி இறங்கத் தொடங்கினாள்.

அநேகாத்மனும், தன் மகனைப் பக்குவமாக இறுக அணைத்தவாறு சர்வமகியுடன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.

மகனுக்குப் பாலெடுக்கப் போகும் போது, மகன் மீது இத்தனை உயிராக இருக்கும் ஆத்மன், அவன் வயிற்றில் ஜனித்தபோது, செய்த அடாவடியை நினைக்கும் போது ஒரு பக்கம் கோபமாகவும், இன்னொரு பக்கம் நகைப்பாகவும் இருந்தது.

வேலைத்தளத்திலிருந்தவனுக்கு, சர்வமகி மயங்கிவிட்டாள் என்கிற செய்தியைக் கேட்டதும், எதையும் யோசிக்காது வீட்டிற்கு வந்தவன் பதறித் துடித்து, தெரிந்த வைத்தியர்களை அழைத்து அந்த வீட்டையே இரண்டு படுத்திவிட்டான். அதன் பின் அவன் தந்தையாகப் போகிறான் என்பதை அறிந்ததும், அவனுடைய முதல் எதிர்வினை, மயங்கும் நிலைக்கு வந்ததுதான்.

நல்லவேளை பிரதீபன் அருகில் நின்று தள்ளாடிய அவனைத் தாங்கிக்கொண்டான். சர்வமகி கூட அவன் நிலையைக் கண்டு தன் நிலை மறந்து பதறிப்போனாள்.

அச்சமும், பயமும் போட்டிபோட தன் மனையாளைப் பார்த்தவனின் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது.

“என்னாச்சு ஆத்மன்?” என்று பதறியவாறு சர்வமகி கேட்க,

“எ… எப்படி… நாம்தான்… குழந்தை வேண்டாம் என்று… கவனமாக இருந்தோமே…” என்று அநேகாத்மன் திக்கித் திணற, முகம் முழுக்க நாணத்துடன், தன் வயிற்றில் கரம் பதித்து,

“கடவுள் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்திருக்கிறார் ஆத்மன்…” என்று அவள் பெரும் பூரிப்புடன் கூற, அதை அடுத்த கணமே தவிடு பொடியாக்கினான் அவள் கணவன்

“நமக்கு குழந்தை வேண்டாம்மா… அழித்துவிடு…” என்று பெரிய ஒரு குண்டைத் தூக்கிப் போட, அனைவரும் முதலில் அதிர்ந்து பின் பதறிப்போனார்கள்.

“ஆத்மன்…” என்கிற சர்வமகியின் கோபம் நிறைந்த குரலைக் கேட்டவன், வேகமாக எழுந்து அவள் அருகே படுக்கையில் அமர்ந்து, அவள் கரத்தைத் தன் கரத்தில் ஏந்தி,

“வேண்டாம்மா… நமக்கு குழந்தையே வேண்டாம்… இன்னொரு முறை… உன்னை அந்த மருத்துவமனையில் அப்படி…” நினைத்ததும், அவன் உடல் ஒரு கணம் நடுங்கி அடங்க,

“ஆத்மன்… எனக்கு ஒன்றுமில்லை… ஐ ஆம் பேர்ஃபெக்ட்லி ஆல் ரைட்… வைத்தியர்களே சொல்லிவிட்டார்கள் அல்லவா… நான் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெறலாம் என்று…” என சமாதானப் படுத்த முயல,

“மை ஃபுட்… மகி… ஆர் யு கிரேசி… பிரசவ வலி பற்றி உனக்கு என்ன தெரியும்… நீ அதை எப்படித் தாங்குவாய்… நோ.. அதற்கு நான் அனுமதிக்க மாட்டேன்மா…” என்று அவன் பிடிவாதமாகக் கூற.

“ஆத்மன்  இது உங்களுடைய குழந்தை… என்னுடைய உயிர்… நீங்கள் என்மீது வைத்த காதலுக்கும், நான் உங்கள் மீது வைத்த காதலுக்கும் கடவுளாகக் கொடுத்த பரிசு இந்தக் குழந்தை… இதை எப்படி….” என்று இவள் குரல் கம்மக் கேட்க,

“டாமிட்… மகிம்மா… உன்னை விட… எனக்கு குழந்தையொன்றும் பெரிசில்லை… கூடவே அவசியமுமில்லை… ப்ளீஸ் நான் சொல்வதைக் கேள்… இன்னொரு வலியை நீ அனுபவிக்க நான் ஒரு போதும் விடமாட்டேன்…” என்று அவன் உறுதியுடன் கூற

“ஆத்மன் என்ன பேசுகிறீர்கள்… உங்களுக்கென்று ஒரு வாரிசு வேண்டாமா… உங்கள் சொத்தை ஆள்வதற்கு, உங்களைப் பின்பற்றி வருவதற்கு ஒரு குழந்தை வேண்டாமா?” என்றாள் சர்வமகி கோபமாக.

“அதற்குத்தான் பிரதீபனும், அபிதனும் இருக்கிறார்களே… அவர்கள் நமக்கு போதாதா? ப்ளீஸ் மகி… எனக்கு என் வாரிசுகளை விட, நீதான் முக்கியம். உன்னை வருத்தி எனக்கொரு குழந்தை வேண்டவே வேண்டாம்… பேசாமல் இதை…”

“ஸ்டாப் இட் ஆத்மன்… ஸ்டாப் இட்… இதற்கு மேல் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை பேசினீர்கள் என்றாலும்… நான் இந்த வீட்டில் இருக்கமாட்டேன்…” என்று அவள் கடுமையாகக் கூற, இறுதியில் அவன்தான் தன் வாயை மூட வேண்டியிருந்தது.

எல்லோரும் அவனுக்கு ஆறுதல் படுத்தியும் அவன் தெளிந்தானில்லை. ஏன் வைத்தியர்கள் கூட அவனைத் தெளிய வைத்தும் அவன் சிறிதும் தன் கருத்தை மாற்றினானில்லை.

காலை எழுந்ததும், மயக்கம், வாந்தி என்று அவள் துன்பப்பட்ட போதெல்லாம், இவன் குற்ற உணர்ச்சியில் துடித்துப் போனான். ‘நான் கவனமாய் இருந்தேனே… எப்படி இப்படியாச்சு?’ என்று பெரிதும் வருந்தினான் அந்தக் காதலன்.

“ஏன்மா என்னைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாய்… நீ இப்படி கஷ்டப் படுவதை என்னால் பார்க்கமுடியவில்லையே கண்ணம்மா… நான் என்ன செய்யட்டும்?” என்று தவித்தவனை அவளால் தேற்றுவது பெரும் பாடாகத்தான் போனது. எப்படியோ, ஐந்தாம் மாதம் கடக்க, ஓரளவு தன் புராணத்தைக் குறைத்துக் கொண்டாலும், அவன் தவிப்பு ஓயவேயில்லை… இரவு தூங்கும் போது, அவள் கால்களைப் பற்றி அமுக்கி விடுவதிலிருந்து, சரிந்திருக்கும் வயிற்றுக்குத் தலையணை வைப்பதிலிருந்து அவள் அசையும் போதெல்லாம் பதறி எழுந்தமர்வதிலிலிருந்து, ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தான் அநேகாத்மன்.

அவனுடைய அளவு கடந்த அன்பில் சர்வமகி பெரிதும் கரைந்துபோனாள். பிரசவ வலி வந்ததும்,  சர்வமகி எப்படியோ, அநேகாத்மன்தான் துடித்துப் போனான். அவன் பதற்றத்தைக் கண்டவள், அவனுக்காகவே தன் வேதனையை அடக்க முயன்றாள். தன் மனைவியின் நிலையைப் புரிந்தவன்,

“ஐ ஆம் ஓக்கே கண்ணம்மா… ஐ ஆம் ஓக்கே…” என்று கூறி அவளைச் சமாதானப் படுத்த முயன்றாலும், வெளிறிய அவன் முகமும், நடுங்கிய அவன் உடலும், அவன் அச்சத்தைப் பறை சாற்ற,

“ஆத்மன்… இது இயற்கை… இந்தக் குழந்தை எனக்கு வேண்டும்… நமக்காக நான் தரும் காதல் பரிசு இது… தயவு செய்து இந்தக் குழந்தையை வெறுக்காதீர்கள்…” என்றாள் அந்த வலியிலும்.

“நான் எப்படி கண்ணம்மா நம்முடைய குழந்தையை வெறுப்பேன். அதுவும் உன்னில் ஜனித்ததாயிற்றே… அதை எப்படி நான் மறுப்பேன்… என் கோபம் எல்லாம் என் மீதுதான்… நான் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கவேண்டும்… உன்னை இத்தனை வேதனைக்கு நான்தான் தள்ளிவிட்டேன்…” என்று கரைந்தவனை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் தவித்தவளை, மேலே யோசிக்க முடியாது வலி அவளைப் பற்றிக் கொள்ள, அவள் துடித்ததை விட இவன் துடித்து மருகித் தவித்து, இது முடியாதோ என்கிற நிலையில், அவனுடைய மகன், இந்த பூமியில் தந்தையின் குரலுடன், கதறியவாறு அவன் மறு பிரதியாக ஜனித்தான்.

இறுதிக் கணத்தில், குழந்தையைப் பிரசவித்து தன் கணவனின் முகத்தைப் பார்க்க, அவனோ, அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“வாழ்த்துக்கள்… உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது…” என்று கூறி, குழந்தையை சர்வமகியின் மார்பில் கிடத்த, அவள் சிலிர்த்துப் போனாள். தன் கணவனின் உயிர்… அவளுள் உருவான தெய்வம். தன் கணவனுக்கு அடுத்து அவளைத் தாங்கப்போகும் தூண்… அவள் வருந்தும்போது, தந்தைக்குத் துணையாகத் தன் தோள்கொடுக்கப்போகும் செல்வன் அவன்… தன் மகன் என்கிற பூரிப்பில் உடல் சிலிர்த்தாள் அந்த அன்னை.

மகிழ்ச்சியும் பூரிப்பும் சேரத் தன் கணவனைப் பார்க்க, அது வரை விழிகள் கலங்க, உளம் உருகப் பெரும் பூரிப்பில் தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்த தன் மனையாளின் அழகில் மெய்மறந்திருந்தவன், தன் உயிரானவளின் விழிகள் தொடுத்த கேள்வியைப் புரிந்துகொண்டவனாகத் தன் மனைவியின் மார்பில் கிடந்த மகனைப் பார்த்தான்.

அவனுடைய இரத்தம். அவன் உயிரானவளின் வயிற்றில் ஜெனித்தவன்… இம்மைக்கும் மறுமைக்கும் அவர்களுடன் கூடவே வரப்போகும் புதிய உறவு… உடல் சிலிர்க்க ஒற்றை விரல் கொண்டு மகனின் கன்னத்தினை வருடினான் அநேகாத்மன்.

அவன் மகனோ முதன் முறையாக, அப்பா நான் உன்கூடவே காலம் முழுவதும் உனக்குத் துணையாக இருந்து அம்மாவைக் காத்துக்கொள்வேன் என்று கூறுவது போலத், தன் தந்தையின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டான்.

அந்த ஸ்பரிசத்தில் மெய்மறந்து போனான் அநேகாத்மன். அது ஒரு உன்னதமான உணர்வு. வெளிவந்த மகனின் முதல் ஸ்பரிசம். எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத, தெகிட்டாத இன்பம். மகனின் தொடுகையில் உளம் உருகிப்போன தந்தையின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

எட்டி தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டவன், “நன்றிம்மா…” என்றவாறு எப்போதும் போல, அவளை அணைத்து அவள் கழுத்து வளைவில் தன் முகத்தைப் பொருத்தி, பிறர் கவனத்தைக் கவரா வண்ணம், அழ, அதைப் புரிந்துகொண்ட சர்வமகியின் விழிகளும் கண்ணீரால் நனைந்தன.

குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள்…” என்று வைத்தியர் கேட்க.

‘வெங்கட்’ என்று சர்வமகியும்,

“வாசுதேவ்…” என்று அநேகாத்மனும் ஒரே குரலில் கூற, இருவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். சர்வமகியின் முகத்தில் அழகிய புன்னகை மலர,

“வெங்கட்வாசுதேவ்… அநேகாத்மன் வெங்கட்வாசுதேவ்” என்றாள் கணீர் என்ற குரலில்.

அதன் பின், ஆத்மன் சர்வமகியைக் கீழே விடவேயில்லை. தானே அனைத்து வேலைகளையும் செய்தான். தேவகி, மாதவி யாரையும் தன் மனைவிக்காக எந்த வேலையும் செய்ய விடவில்லை.

ஓரளவு சர்வமகி தேறி வர, இனிக் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தவன், சர்வமகியிடம் கூறினால், அவள் சம்மதிக்கமாட்டாள் என்கிற காரணத்தினால், அவளுக்குத் தெரியாமலே ஒரு நாள் மருத்துவமனைக்குச் சென்று தன்னை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டான்.

இதற்கிடையில் தேவகிக்கு நல்ல வரனாக விரும்பி வந்து கேட்க, பெரும் மகிழ்வுடன் அவளுக்குத் திருமணம் செய்து வைத்தனர். இதோ கையெட்டும் தூரத்தில் ஒரு வீட்டையே பரிசாகக் கொடுத்து இருவரையும் சர்வமகிக்கு உதவியாக அருகிலேயே அமர்த்தினான். அவளுக்கும் ஒரு ஆண் குழந்தை. பெயர் சர்வாத்மன். ஆம் தன் சகோதரிக்கும் தன் அத்தானுக்கும் நன்றி செலுத்தும் முகமாகத் தன் சகோதரியின் முதல் பெயர் வருமாறும் அத்தானின் இறுதிப்பெயர் வருமாறும் வைத்தாள்.

மாதவிக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் மூன்று மாதங்களில் அவளுக்கும் திருமணம் நடந்து விடும்.

பிரதீபன் இப்போது, பல்கலைக் கழகத்தில் மூன்றாமாண்டு சட்டக்கல்வி பயில்கிறான். அவன் தன்  அத்தானைப் போல வரவேண்டும் என்கிற வெறியில் படிக்கிறான். அபிதனுக்கு இப்போது பதினான்கு வயதாக இருந்தாலும், சகோதரியின் சேலைத்தலைப்பை இன்னும் விடவில்லை.

சர்வமகியின் குழந்தை வெங்கட்வாசுதேவ் தேவகிக்கும், மாதவிக்கும் பிரதீபனுக்கும், அபிதனுக்கும் செல்லக் குழந்தையாகிப்போனான். அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்குச் செல்லம் கொடுத்து பழுதாக்கியாயிற்று.

இந்த நிலையில் சர்வமகி மீண்டும் கர்ப்பமானாள். சர்வமகிக்கு உலகை ஜெயித்து விட்ட மகிழ்ச்சி. ஆனால் அநேகாத்மன்தான் அதிர்ந்து போனான். இது எப்படி சாத்தியம். அவன்தான் குழந்தை வேண்டாம் என்று சத்திர சிகிச்சைக்குத் தன்னை உட்படுத்திக்கொண்டானே.

தான் மீண்டும் கருவுற்றிருக்கும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும், உயிரானவளிடம் சென்று உண்மையைச் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், திரு திருவென்று விழிக்கத்தான் அவனால் முடிந்தது.

தன் சத்திர சிகிச்சையில் ஏதோ குழறுபடி நடந்திருக்கிறது என்பதை உடனே புரிந்துகொண்டவனுக்கு, அதைச் செய்த வைத்தியர் மிது கொலை வெறியே வந்தது. அதுவும் கூட முகம் முழுக்கப் பூரிப்புடனும், மகிழ்ச்சியுடனும் குதித்துக்கொண்டிருந்த மனைவியைக் கண்டதும், அந்தக் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டுக் காணாமல் போனது.

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் வேறொன்று நினைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டவன், இயற்கை சக்திக்கு முன்னால் மகிழ்ச்சியாகவே தோற்றுப்போனான்.

சர்வமகியை யாரும் எந்த வேலையும் செய்ய விடுவதில்லை. அதுவும் பிறக்க இருப்பது பெண் குழந்தை என்பதை ஸ்கானிங்கில் தெரிந்ததால், அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி. பெயர் கூடத் தயார். அவள் தாயின் பெயரையும், அவன் தாயின் பெயரையும் இணைத்துக் கவிபானு என்று தீர்மானித்து விட்டார்கள்.

அநேகாத்மனுக்கு முன்னமிருந்த அச்சம் இல்லா விட்டாலும், தன் மனைவி சிரமப்படப்போகிறாளே என்கிற வேதனை எள் அளவும் குறையவில்லை.

“மகிம்மா… என்ன யோசனை… தேவ் அழுகிறானே…” என்றவாறு அநேகாத்மன் முன்னறையில் அமர்ந்தவாறு குரல் கொடுக்க, தன் பழைய நினைவிலிருந்து மீண்டவள், சமையலறைக்குள் நுழைந்தாள். அதே நேரம் மாதவியும், பால் போத்தலுடன் வெளியே வந்தாள்.

“என்னடா… நீ தூங்கவில்லை?” என்று சர்வமகி கேட்க,

“இல்லையக்கா… தேவ் அழும் குரல் கேட்டது… அதுதான்… பால் கரைக்க எழுந்துவிட்டேன்…” என்று கூறிய தங்கையின் அன்பில் மனம் நிறைய, பால் போத்தலை வாங்கிக்கொண்டு கணவனை நோக்கிச் சென்றவளின் கவனத்தை அழைப்பு மணியின் சத்தம் திசைதிருப்பியது.

விரைந்து சென்று கதவைத் திறந்தால், தன் ஒரு வயது மகனை இடையில தாங்கிக்கொண்டு, கணவன் பின் தொடர, பதற்றத்துடன் நின்றிருந்தாள் தேவகி.

“என்னம்மா… என்னாச்சு…” என்று கவலையுடன் சர்வமகி கேட்டவாறு அவள் கரத்திலிருந்த சர்வாத்மனைத் தன் கரங்களில் ஏந்த, அவளிடம் தன் மகனை ஒப்படைத்தவாறே,

“இல்லைக்கா… நம்ம தேவ் அழுத சத்தம் கேட்டதே… அதுதான் ஓடிவந்தேன்…” என்றவளின் பார்வை, தன் மருகனிடம் செல்ல, அவன் தந்தையின் மார்பில் சொகுசாக சாய்ந்து அழுவதைக் கண்டதும், கவலையுடன்,

“ஏன்கா அழுகிறான்?” என்றாள் பயத்துடன்.

“பாலுக்காக அழுகிறான் தேவகி… அதுக்காகவா இப்படி ஓடிவந்தாய்?” என்று அவள் கண்டிக்க,

“ஓ… இல்லைக்கா.. ஒரு போதும் காலையில் அவன் அழமாட்டானே… அதுதான் கொஞ்சம் பயந்துவிட்டேன்…” என்ற தங்கையின் அன்பில் மனம் கரைந்தவளாக,

“உட்காரம்மா…” என்று கூறிவிட்டுத் தன் கணவனிடம், பால்போத்தலை நீட்டினாள்.

தன் மனைவியின் கரத்திலிருந்த பால் போத்தலை வாங்கி அழும் மகனுக்குக் கவனமாகப் புகட்டினான் அநேகாத்மன்.

அந்த அழகில் கனிந்தவளாக, தன்னவன் அருகே செல்ல முயல, வயிற்றுப் பள்ளையோடு, தேவகியின் பிள்ளையை சுமந்திருப்பதைக் கண்ட மாதவி, விரைந்து சென்று அவள் கரத்திலிருந்த சர்வாத்மனைத் தன் கரத்தில் ஏந்திக்கொள்ள, தன் தங்யையைப் பார்த்து மெல்லியதாகப் புன்னகைத்தவாறு, உயிரானவனின் அருகே நீண்ட இருக்கையில் சாய்வாக அமர்ந்தாள் சர்வமகி.

மனைவி தன்னருகே அமர்ந்ததும் , முகம் மலர, தன் மனைவியின் வலக்கரத்தைத் தன் இடக்கரத்தால் அழுந்தப் பற்றி விடாமலே வைத்துக்கொண்டான் அவள் காதல் கணவன்.

கதவின் அழைப்பு மணியால் ஏற்பட்ட சத்தத்தில், தூக்கம் கலைந்து எழுந்து வந்த அபிதன்,

“மாது… டீ ப்ளீஸ்…” என்றவாறு, தன் சகோதரி சர்வமகிக்கு அருகே வந்தமர்ந்தான். தேவகியைக் கண்டதும்,

“தேவகிக்கா… என்ன இந்தப்பக்கம்…” என்றவாறு தன் தலையை பொத் என்று சர்வமகியின் மடியில் போட்டு மீண்டும் உறங்கத் தொடங்கினான்.

அதே நேரம் அவசரமாக சர்வமகி அநேகாத்மனைப் பார்க்க, அவனும் அபிதனைத்தான் பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

என்னதான் அவன் நல்லவனாக இருந்தாலும், இந்த விஷயத்தில் அவனால் நல்லவனாக இருக்கமுடியவில்லை. இன்னும் தன் மனைவியை யாரும் சொந்தம் கொண்டாடுவதை அவனால் அந்தளவுக்கு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் இளைய தம்பியைப் பார்த்து முறைப்பதைக் கண்டதும், இவள் உதடுகளில் மெல்லிய கிண்டல் புன்னகை மலர, அதைக் கோபத்துடன் பார்த்தவன், அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்,

“வட்…” என்றான் இன்னும் அபிதனை முறைத்தவாறு.

“யார் மீது பொறாமைப் படுவதொன்றில்லையா?” என்றாள் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“அது எனக்குரிய இடம் …” என்றான் அவன் அதே கோபத்துடன்.

“ஏன் உங்கள் பிள்ளை இந்த மடியில்தானே வளர்ந்தான்…” என்றாள் இவள் நகைப்புடன்.

“அவன் கூட என் எதிரிதான்டி….” என்று இவன் மெல்லிய கோபத்துடன் கூற, அதைக் கண்ட பிரதீபன், நிலைமையை ஓரளவு ஊகித்தவனாக,

“தடியன்… இன்னும் குழந்தை என்று எண்ணம்… எழுந்திருடா…” என்று பிரதீபன் சத்தம் போட்டான்.

தன் தாயின் மடியில் தலை வைத்திருக்கும் தன் சின்ன மாமன் மீது கோபம் கொண்ட தேவ், தன் தந்தையின் மார்பிலிருந்து தன் தலையை விலக்காமலே, தந்தை கொடுத்த பாலை அருந்தியவாறு, மாமனின் தலை முடியைப் எம்பிப் பற்றி இழுத்துக் காலால் உதய,

தேவகியின் மடியிலிருந்த சர்வாத்மனோ, தன் பெரியம்மாவின் மடியில் விழுந்த சின்னமாமன் மீது எரிச்சல் கொண்டவனாக, மாதவியின் பிடியிலிருந்து விலகித் தத்தித் தத்தி நடந்து வந்து, தன் ஒரு வயது மூத்த அண்ணனுக்குத் துணையாக, அபிதனின் தலை முடியைப் பற்றி இழுக்க, அதே நேரம், அது வரை வயிற்றில் சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்த அந்தக் குட்டித் தேவதை, தானும் போட்டிக்கு வருபவளாக அன்னையின் வயிற்றிலிருந்தவாறே, மாமனை எட்டி உதைக்க, அந்த மாமனோ, கோசுறு தட்டியது போலத் தட்டிவிட்டு இன்னும் சுகமாகத் தன் விழிகளை மூடினான்.

அதைக் கண்ட பிரதீபன்,

“நண்பேன்டா… என்னை என்ன பாடு படுத்தினான்… உனக்கு ஆப்பு வைக்க இந்த இரண்டு வாண்டுகளும் போதும்… அப்படித்தாண்டா என் தங்கக் கட்டிகளே… இன்னம் இறுக்கி இழுங்கலே…” என்று சேர்ந்து உற்சாகப்டுத்த, பெரியமாமன் கொடுத்த உற்சாகத்தில், இன்னும் இருவரும் சேர்ந்து இழுக்க,

“டேய் என் தம்பி பாவம்டா.. விடுங்கடா…” என்று தேவகி பதற,

“ஆமாம் பெரிய தும்பி… டேய் இழுத்து விழுத்துங்கடா…” என்று பிரதீபன் மேலும் உற்சாகப் படுத்த,

“அக்கா… உன் தும்பியின் வாயை மூடச் சொல்லு இல்லையென்றால் எனக்கு கணக்கில் கொஞ்சம் டவுட் இருக்கு கிளயர் பண்ணச் சொல்லு…” என்று அபிதன் கூற,

“என்ன கணக்கா… அதுவும் உனக்கா… ஆளை விடுடா சாமி… அதை விட நான் சன்னியாசம் வாங்கிடுறேன்” என்றவாறு அவன் கையெடுத்துக் கும்பிட, அனைவருக்கும் தேநீர் கொண்டுவந்த மாதவியோ,

“சுத்தம்… ஏன்டா அபிதன் உனக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?” என்று வார,

“இதப்பார்ரா பஞ்சாயத்திற்கு வந்திருக்கிற மங்கம்மாவை…” என்று கொதித்த பிரதீபனைக் கண்ட அனைவரும் மகிழ்ந்து நகைத்தனர்.

பெருமையுடனும், மகிழ்வுடனும் சிரித்த தன் மனையாளின் அழகில் சொக்கிப்போன அந்த உயிர்க் காதல் கணவன், அந்தக் கலவரத்திலும், அவள் தோள்மீது தன் கரத்தைப் போட்டுத் தன்னை நோக்கி இழுத்து மகனுக்கு அருகே தன் மார்பில் விழுத்தி,

“ஏய்… இப்படிச் சிரிக்காதே என்று முன்பே சொன்னேன் அல்லவா… இப்படிச் சிரித்தால் நான் என்ன செய்யட்டும்…” என்று கணவனுக்கே உரிய பார்வையுடன் அவள் முகம் நோக்க, அந்தப் பார்வையில் அந்திவானமாகச் சிவந்த அவள் உடல் சூட்டை உணர்ந்தவன், அடக்க முடியாமல், உதடுகள் நோக்கிப் பயணப்பட,

“ஹே… என்ன நடக்குது இங்கே… நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் மச்சான்…” என்று தன் விழிகளை மூடியவாறு தேவகியின் கணவர் ஆரூரன் கத்த, அதைக் கேட்ட சர்வமகி வேகமாகத் தன் கணவனைத் தள்ளிவிட்டு, தாங்க முடியா வெட்கத்தில் தன் முகத்தை மூடினாள்.

“ஹே… மை ஏஞ்சல்…” என்றவன் அவளை இழுத்து மீண்டும் தன் மார்போடு அணைத்துக்கொள்ள, மேலும் தன் முகத்தை அவன் மார்பிலேயே மறைத்துக்கொண்டாள் அந்த மாசற்ற மங்கை. அதைக் கண்ட அநேகாத்மனும் மற்றவர்களும் பெரும் குரலெடுத்து நகைக்க, அந்த வீடே பெரும் மகிழ்ச்சியில் திளைத்தது.

கூடவே, படமாகத் தொங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மற்றும் வாசுதேவன் இருவரும் தம் தம் துணைகளுடன், ஆத்மார்த்தமாக அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்துக்கொண்டிருந்தனர்.

(சுபம்)

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!