Sun. Nov 24th, 2024

நிலவே என்னிடம் நெருங்காதே – 26/30

நிலவு 26

சத்தியமாக மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவனை சர்வமகி எதிர்பார்க்கவே இல்லை. ‘இவன் எங்கே இங்கே…’ என்று அஞ்சியவளுக்கு அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியவில்லை.  இதுவரை நேரமும் நீ பட்ட சிரமம் போதும் என்று உடல் நினைத்ததோ, தாக்குப்பிடிக்க முடியாது, நினைவு மங்க, தூரத்திலிருந்து வந்தவனின் விம்பம் கலங்கித் தெரிய அப்படியே தரையில் சரிந்தாள்.

அதற்கிடையில் அருகேயிருந்த இன்னொருவர் அவள் தரையில் சரிவதை அறிந்ததும், உடனேயே அவளைப் பற்றித் தாங்க முன்வர,

“டோன்ட்… டோன்ட் டச் ஹர்…” என்று கர்ஜித்தவாறு, ஒரு எட்டில் சர்வமகியை நெருங்கியவன், அவள் தரையைத் தொடும்முன் பாய்ந்து தாங்கிக்கொண்டான். அவனுடைய வலதுகரம் அவளுடைய மென்தோளைச் சுற்றி வளைக்க, இடது கரம் அவளுடைய இடது கரத்தை அழுந்தப் பற்றியிருந்தது.

குழந்தை போன்று அவளைத் தன் கரத்தில் ஏந்தியவன், நின்றவர்கள் தாமாகவே விலகி வழிவிட, உள்ளே எடுத்துச் சென்றான்.

அங்கே இருந்த சோபாவில் அவளை மெதுவாகக் கிடத்தியவன், இரண்டு கால்களையும் தூக்கி, நீள் இருக்கையின் கைப்பிடியில் வைத்தான். குளிருக்காக அணிந்திருந்த தடித்த ஜாக்கட்டின் முன்புறத்தை வேகமாகக் கழற்றியவன், அதை அவள் உடலிலிருந்து களைந்து எறிந்தான்.  உள்ளேயும் குளிருக்காக, கம்பளி ஆடை அணிந்திருக்க, அதன் பொத்தானை வேகமாகக் கழற்றிவிட்டான். அதனுள்ளேயும் இன்னொரு தடித்த ஆடை இருக்க, ‘எத்தனை ஆடைகளைத்தான் அணிவாள்…’ என்று முணுமுணுத்தவாறு அதையும் கழற்றிவிட, அப்போதுதான் அவளுடைய மெலிவு அவனின் கருத்தில் பதிந்தது.

முதல் முதலாகத் தன்னைச் சந்திக்க வந்த சர்வமகியின் பிம்பம் ஏனோ அவன்  மனக்கண்ணில் தேவையற்று வந்து போனது. அவள் அப்படியொன்றும் பருமனானவள் கிடையாது. அதே நேரம், மெலிவும் இல்லை. எல்லாமே அவளுக்கு அளவாகவே இருக்கும். அவளிடம் குறுகியிருப்பது அந்த இடை ஒன்றுதான். ஆனால் இப்போது… அவளுடைய உடல் அந்த இடைக்குப் போட்டியாக மெலிந்திருந்தது. அதைக் கண்டதும் அவனுடைய உதடுகள் அழுத்தமாக ஒன்றை ஒன்று மூடிக்கொண்டன.

இரத்தப்பசையின்றி, வெளிறிப்போய் மயங்கிக் கிடந்தவளை வெறித்துப் பார்த்தவன், அவள் கன்னத்தில் கைவைத்து அசைத்துப் பார்த்தான். அவளிடம் சிறிதும் அசைவிருக்கவில்லை. பின் கன்னத்தைத் தட்டிப் பார்த்தான்.

அதே நேரம் தேவகி விரைந்து சென்று ஒரு கண்ணாடிக் கோப்பையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஓடிவர, அதைத் தேவகியிடமிருந்து வேகமாக, கிட்டத்தட்டப் பறித்து எடுத்தவன், தன் பான்ட் பாக்கட்டிலிருந்த கைக்குட்டையை நனைத்து, அவள் நெற்றி, கழுத்து என்று துடைத்துவிட்டான்.

“மிஸ் சர்வமகி வாசுதேவன்….” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

அந்த ஆழ்ந்த குரல், உயிர் வரைசென்று பரவ, சர்வமகி மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தாள். அவள் முன்னால் நின்றவனைக் கண்டதும், மீண்டும் மயங்கிவிடுவோமோ என்கிற அச்சம் தோன்ற, எழுந்தமர முயன்றாள். அதே நேரம்,

“வோட்டர்..” என்று இவன் குரல் உயர்த்த, மறு கணம் அவன் முன்னால், ஒரு கிளாஸ் தண்ணீர் நீட்டப்பட்டது. அதை வாங்கியவன், அவளை வெறித்துப் பார்க்க, அவனுடைய விழிகளைச் சந்திக்காமலே, எழுந்தமர முயன்றாள் சர்வமகி.

எழும்புவதற்குச் சிரமப்படுவதைக் கண்ட, டிடெக்டிவ் ஏஜன்சி, உடனே அவளருகே சென்று அவள் எழுந்தமர உதவி செய்வதற்காகத் தன் கரத்தைக் கொண்டு செல்ல, சற்றும் தாமதிக்காது, அவர் முன்னால், தன் கரத்திலிருந்த தண்ணீர் குவலையை நீட்டிக் கொடுத்துவிட்டு, சர்வமியின் தோள்களைப் பற்றி எழுந்தமர உதவினான்.

“ஆர் யு ஓக்கே…?” என்றான் கனத்த குரலில்

“யெஸ்… ஐ… ஐ ஆம் ஓக்கே… தாங்க்யூ” என்று தட்டுத்தடுமாறிக் கூறியவளுக்கு மீண்டும் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது.

அவளுடைய முதுகில் கைவைத்து “ரிலாக்ஸ்…” என்றான்.

‘ரிலாக்சா…? அதுவும் இவனைப் பார்த்த பிறகா?” அவள் தவிக்க, அருகே நின்றிருந்த அந்த டிடெக்டிவ்,  தன் கரத்திலிருந்த தண்ணீரை, அவளுடைய வாயருகே கொண்டு செல்ல முயல,

அதற்கு முன்பாக, அதை வாங்கி… இல்லை பறித்து எடுத்த அநேகாத்மன், அதை அவள் உதட்டருகே கொண்டு சென்றான்.

அவள் தயங்க, சினம் கொண்டவனாக, அவள் உதட்டில் பதித்து அழுத்தி,

“குடி…” என்றான் ஒற்றைச் சொல்லாக.

மறுக்காமல் அவள் கடகட என்று அந்தத் தண்ணீரைக் குடித்து முடிக்க,

“ஷி வில் பி ஓக்கே…” என்றவாறு அவளை ஏறிட்டுப்பார்த்தான்.

“தலையைக் குனிந்து காலிடுக்கில் வைத்துக்கொள். இந்தப் படபடப்பு, மயக்கம் எல்லாம் போய்விடும்…” என்றான் தமிழில்.

உடனே மறுப்புக் கூறாமல் அவன் கூறியதை கேட்டு  தலையைக் காலிடுக்கில் வைத்துக்கொண்டாள்.

ஓரளவு இரத்தோட்டம் சமப்பட்டது.

இருந்தாலும் எழுந்து அவனைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அவனுடைய தந்தையின் இறப்புக்கு அவள் குடும்பம்தான் காரணமாகிவிட்டது. இப்போது அவனுடைய பரம்பரை நகை தொலைவதற்கும் அவர்கள்தான் காரணம் என்றாகிவிட்டது. இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை அவள் நிமிர்ந்து பார்ப்பாள்.

அவமானமும், ஏக்கமும் அவளைப் பெரிதும் வாட்ட, அப்படியே கொஞ்ச நேரம் கிடந்தாள் சர்வமகி.

அதே நேரம் ஒரு டிடெக்டிவ், விழிகளால் மற்றவர்களுக்கு எதையோ சைகை செய்ய, அவர்களும் அந்த வீட்டில் எதையோ தேடத் தொடங்கினர். அங்கே தேடுவதற்கு அதிகநேரம் தேவைப் படவில்லை. குளியலறை தொடக்கம் சமையலறை வரை எல்லா இடமும் தேடப்பட்டது.

எதையும் தடுக்க முடியாதவளாக சர்வமகி சோர்ந்துபோய் நிமிர்ந்து அமர்ந்திருந்தாள்.

அவள் மறுத்திருந்தால் அவர்களால் எதுவும் செய்திருக்க முடியாதுதான். ஆனால் அவர்கள் காவல்துறையிடம் போயிருந்தால்? அவளுடைய குடும்பம் அல்லவா சந்தி சிரித்திருக்கும்.

ஏற்கெனவே சிரித்தது போதாதா? பல்லைக் கடித்துத் தன் வேதனையை விழுங்கிக்கொண்டாள் சர்வமகி.

“இங்கே நிச்சயமாக இருக்காது சார்… என்னுடை தம்பி அப்படிப்பட்ட திருடன் கிடையாது. அவன் இந்த நகையைத் திருடியிருக்கமாட்டான். அவனோடு வந்த நண்பர்களையும் விசாரித்துப் பாருங்கள் சார்…” என்றாள் சோர்வுடன் குரல் கம்ம.

“எல்லோரையும் விசாரித்து விட்டோம். அவர்களின் வீட்டையும் சோதனை செய்துபார்த்துவிட்டோம். அங்கே இல்லை. உங்கள் தம்பி இங்கே தான் எங்கேயோ வைத்திருக்கவேண்டும்…” என்றதும் அவள் அநேகாத்மனைப் பார்த்தாள்.

“ஆத்மன்… நிச்சயமாக என் தம்பி திருடியிருக்க மாட்டான்… அவனை நான் அப்படி வளர்க்கவில்லை. தயவு செய்து அவர்களை வெளியே போகச் சொல்லுங்கள்…” என்றாள் அவள் இயலாமையுடன் சேர்ந்த அழுகையுடன்.

“மிஸ்டர் அநேகாத்மன்… கால் மி மிஸ்டர் அநேகாதமன்…” என்றான் அவன் அழுத்தமாக. அதில் அடிபட்டவளாக, அநேகாத்மனைப் பார்க்க,

அந்த விழிகளைக் காணப் பிடிக்காதவனாக, எங்கோ பார்த்தவாறு,

“எப்படி அவர்களை வெளியே போகச் சொல்லுவேன். உன் தம்பி களவாடியது எங்கள் பரம்பரை நகையை. சும்மா விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா?” என்றான் அவன் கடும் சினத்துடன்.

“இல்லை ஆத்… இல்லை மிஸ்டர் அநேகாதம்ன்… என் தம்பி…” என்று முடிக்கவில்லை, அவள் முன்னால் தன் வலது கரத்தை நீட்டி, அவள் பேச்சை நிறுத்தியவன்,

“ஸ்டாப் த நொன்சன்ஸ்… உன் தந்தை என் தந்தையைக் கொன்றார், இப்போது உன் தம்பி என் தந்தையின் வீட்டிற்குள் புகுந்து எங்கள் பரம்பரை நகையையே திருடிவிட்டான். என்னைப் பார்க்க எப்படி இருக்கிறது… எங்காவது இளிச்சவாயன் என்று போர்ட் போட்டிருக்கிறதா என்ன?” என்று ஏளனமாகக் கேட்டவன், பின்

“என் இடத்திற்குள் நுழைய எத்தனை தைரியம் இருக்கவேண்டும் உன் தம்பிக்கு. பணம் உழைக்க வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றனவே. அதைப் பார்க்க வேண்டியதுதானே.” என்றவன் அவளை வெறித்துப் பார்த்து,

“நீ நல்ல சகோதரி என்று நினைத்தேன்… ஆனால்… சே…” என்றான் அவன் பெரும் சீற்றத்துடன்.

அவனுடைய தகாத பேச்சு அவளுக்குக் கோபத்தைக் கிளப்பியது. அவள் தம்பி திருடியிருக்க மாட்டான் என்கிற நிச்சயம் இருந்ததால், அவள் கம்பீரமாக அவனைப் பார்த்தாள்.

“என் தம்பி திருடியிருக்க மாட்டான்… அவனுக்குத் திருடத் தெரியாது. அதுதான் தேடும் வரைக்கும் தேடிவிட்டீர்களே… எதுவும் இல்லையல்லவா… தயவு செய்து வெளியே போங்கள்…” என்று கூறியவள் அவனுடன் என்ன பேச்சு என்பது போல நன்றாகச் சாய்ந்து அமர்ந்து விழிகளை மூடிக்கொண்டாள்.

அதே நேரம் இன்னொரு டிடெக்டிவ் முன் புறமிருந்த குளோசட்டை இழுத்துத் திறந்தார். அதற்குள் கோர்ட் மட்டுமே இருந்தது. வேறு எதுவும் சந்தேகப் படும்படி இருக்கவில்லை. பூட்டப் போனவர், அந்த குளோசட்டின் ஓரமாக இருந்த பியூஸ் பொக்ஸ் கண்ணில் பட திறந்து பார்த்தார்.

அந்த பொக்சின் மூலையில் கிடந்த ஒரு மெல்லிய பையைக் கண்டதும், அவருடைய முகம் மலர, அதைக் கரங்களில் எடுத்தார்.

திறந்து பார்த்தவர் உதட்டில் புன்னகையும் வெற்றிக் கர்வமுமாக அதை அநேகாத்மனிடம் நீட்டினார்.

அலட்சியமாக வாங்கிய அநேகாத்மன், அந்தப் பையைக் கவிழ்த்துத் தன் கரத்திலே கொட்டினான்.

அவன் கையில் மினுங்கிக்கொண்டு விழுந்தது வைர நெக்லஸ்.

நிலவு 27

சர்வமகி அதிர்ச்சியுடன் அவன் கரங்களையே வெறித்துப் பார்த்தாள். அவளால் தன் விழிகளையே நம்ப முடியவில்லை.

பிரதீபனா திருடினான்? அவனா இப்படிப் பட்ட ஒரு ஈனக் காரியத்தைச் செய்தான்? அவள் தம்பியா இப்படி ஒரு வேலையைச் செய்தான்? அவளால் எதையுமே நம்ப முடியவில்லை. அவளுக்கு மூச்செடுப்பதே சிரமமாக இருந்தது.

அச்சத்துடன் அநேகாத்மனைப் பார்த்தாள்.

அவனுடைய விழிகளில் ஏளனமும் கோபமும், கூடவே ஆத்திரத்துடனான சீற்றமும் கசிய அவளை வெறித்துப் பார்த்தான்.

“இதற்கு என்ன அர்த்தம்?” என்றான் கடுமையாக.

அதற்கு அவள் என்ன பதிலைச் சொல்வாள்? இயலாமை பொங்க அவனை ஏறிட்டாள் சர்வமகி. விழிகளில் கண்ணீர் தேங்கியது.

தன் சகோதரியின் நிலையைப் புரிந்துகொண்ட தேவகி,

“சார்… சத்தியமாக, இதற்கும்… எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… தயவு செய்து நம்புங்கள்… இது எப்படி இங்கே வந்தது என்று எங்களுக்குத் தெரியாது…” என்றாள் தேவகி படபடப்பும் பயமுமாக.

அநேகாத்மனோ, தேவகியை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, சர்வமகியை வெறித்துப் பார்த்தான்.

“சார்…” என்று மீண்டும், தேவகி ஏதோ சொல்ல வர, அநேகாத்மன் தன் பார்வையைச் சற்றும் மாற்றினானில்லை.

“தேவகி… மாதவியையும், அபிதனையும், பூங்காவிற்கு அழைத்துச் செல்கிறாயா?” என்றாள் அவள் பெரும் வலியுடன்.

இப்போது அவளால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. இப்போ கொஞ்சக் காலமாகத்தான் அவள் ஓரளவு நிம்மதியாக இருந்தாள்… இனி அதுவும் இல்லையென்றாகிவிட்டதே…

“அக்கா… நான் சொல்வதை…”

“ப்ளீஸ்… இதை… இதையெல்லாம் அபிதன் பார்க்கவேண்டாம்…” என்றாள் கசங்கிய குரலில்

“பட்… நீ எப்படித் தனியாக…” என்றாள் தங்கை சினத்துடன் கொதித்துக்கொண்டிருந்த, அநேகாத்மனைப் பார்த்தவாறு.

“ஐ கான் மனேஜ்… நீ அபிதனை அழைத்துச் செல்…” என்று இரஞ்சிக்கேட்க, மறுக்க முடியாதவளாக, அபிதனையும், மாதவியையும் அழைத்துக்கொண்டு, வெளியேறினாள் தேவகி.

அவள் வெளியே செல்லும்வரை அமைதி காத்தவள், நிமிர்ந்து அநேகாத்மனை ஏறிட்டாள்.

“நா… நான்… பிரதீபன்… அப்படி… செய்வான்… செய்திருக்க….” அவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“சே… இதெல்லாம் ஒரு குடும்பமா? உங்களுக்கு வெட்கமாக இல்லை. உன் தந்தை ஒருத்தனை அநியாயமாகக் கொன்றான். அவன் மகன் என்னவென்றால் திருடிப் பிழைக்கிறான். இப்படி ஒரு கேடுகெட்ட வாழ்க்கையை வாழ்வதற்குப் பதில், தூக்கில் தொங்கலாம்…” என்று கடுமையாகக் கூறியவன் தனக்கு அருகே நின்றுகொண்டிருந்த டேவிட்சனை ஏறிட்டான்.

“டேவிட்சன்… உடனடியாக இவள் தம்பியைக் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்யுங்கள்… அவனைக் காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

“காவல்துறையா…” ஐம்புலனும் செயல் இழக்க மலங்க மலங்க விழித்தாள் சர்வமகி.

மங்கிய விழிகளுக்கு அவன் வெளியேறுவது தெரிந்தது. எங்கிருந்துதான் அத்தனை தைரியம் வந்ததோ, வேகமாக ஓடிச்சென்று அவன் வழியை மறித்து நின்றாள்.

“ப்ளீஸ்… ப்ளீஸ் அநேகாத்மன்… எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்… என் தம்பியை மட்டும் காவல்துறையிடம் மாட்டிவிடாதீர்கள்… அவன்… வாழ்க்கையே அழிந்துவிடும். இதற்கும் என் தம்பிக்கும் நிச்சயமாக, சம்பந்தம் இருக்காது. எங்கோ ஏதோ ஒரு தவறு நடந்திருக்கிறது… அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கமாட்டான்… என்னை நம்புங்கள்…” என்று வேதனையுடன் சொல்ல அவளை வெறித்துப் பார்த்தான் அநேகாத்மன்.

“உனக்கு முன்னாலேயே இத்தனை தடயங்கள் இருக்கிறது… இந்த நிலையிலும் உன் தம்பி செய்யவில்லை என்கிறாயா? சரி உன் தம்பி செய்யவில்லை என்றால் வேறு யார் செய்தார்கள்? நீயா? உன் இரு தங்கைகளுமா? யார் யார் செய்தார்கள்? அதுவும் உங்கள் வீட்டிலேயே மறைத்து வைப்பதற்கு எங்கேயோ இருந்து ஒரு திருடன் வந்தானா? இல்லை இந்த நகை தானாக இங்கே நடந்து வந்ததா?” என்று கடுமையாகக் கேட்டவன், மீண்டும் அவளை உற்றுப் பார்த்தான்

“என் தந்தை வீட்டிலேயே புகுந்து இந்த நகையைக் களவாடி இருக்கிறான் என்றால் உன் தம்பிக்கு எத்தனை தைரியம் இருக்கவேண்டும்?” என்றவன், திரும்பி தீயாகத் தன் விழிகளால் அவளை எரித்தவாறு… “அவன் உன் தம்பிதான் என்பதை அறிந்ததும் நான் எப்படி உணர்ந்துகொண்டேன் தெரியுமா? ஒரு வேளை அவர்கள் சொல்வது பொய்யாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன்… ஆனால்…” என்றவன் தன் கரத்தை நீட்டி அவளிடம் காட்டினான்.

“இதைப் பார்த்தபின்…” என்றவன், “சே…” என்று பெரும் வெறுப்புடன் தலையைக் குலுக்கினான்.

அவனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது. அவனை மணக்குமாறு கேட்டபோது, உலகில் இல்லாத நியாயவாதியாகக் கண்காணாத இடத்திற்கு ஓடிவந்தாளே…

எங்கேயெல்லாம் அவளைத் தேடினான். எப்படிப் பரிதவித்துப் போனான். அவளை இன்று கண்டுபிடிப்பேன், நாளை கண்டுபிடிப்பேன் என்று ஒவ்வொரு நாளும் யுகமாகக் கடத்தியவனுக்கல்லவா அந்த வேதனை தெரியும்…

அவனுடைய அலுவலகமாகட்டும், வீடாகட்டும், மற்றவர்கள் கடிதங்களைச் சேகரிக்கும் முன், இவன் ஓடிச்சென்று கடிதங்களைப் பார்த்து, எங்காவது சர்வமகியிடமிருந்து ஒரு சிறு துண்டு கடிதமாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்ப்பதும், இல்லை என்றதும் சோர்ந்து போவதும், இந்த மூன்றுவருடங்களாக அவன் வாடிக்கையாக இருந்ததே… இதை இவள் அறிவாளா?

எங்காவது, சர்வமகி போன்ற உடல் ஒற்றுமை உள்ளவர்களைப் பார்க்கும்போதெல்லாம், அது அவளா அவளா என்று பைத்தியக்காரன் போன்று, அவர்கள் பின்னால் சென்றதும், பல முறை மூக்குடைபட்டதும் அவனுக்கல்லவா தெரியும்.

எத்தனை இரவுகள், எத்தனை இரவுகள் அவன் தூக்கமில்லாமல் தவித்தான். எத்தனை இரவுகள் அவள் நலமாக இருக்கிறாளா, இல்லையா என்று தெரியாமல் பரிதவித்தான். ஒவ்வொரு முறையும் அவளுக்கொன்றுமில்லை, என்று கலங்கியது அவனுக்கு மட்டும்தானே தெரியும்.

கடவுளே… கிட்டத்தட்ட இந்த மூன்றுவருடங்களாக அவன் பெரும் சித்திரவதையல்லவா அடைந்துவிட்டான். அவன் தந்தை வீட்டில் திருடியது, சர்வமகியின் தம்பி என்பதை அறிந்ததும், என்னமாதிரி பதறிப்போனான். இத்தனை காலமாக அவளைத் தேடி அலைந்தவனுக்குப் பரிசாக, இத்தகைய பெரிய அதிர்ச்சிதானே கிடைத்தது.

சரி… தம்பி தவறு செய்துவிட்டான் என்பதை உணர்ந்து, அவள் வருந்துவாள் என்று பார்த்தாhல், இப்போதும், தன் தம்பி தவறு செய்யவில்லை என்றல்லவா அவள் வாதாடுகிறாள்… அப்படியானால், இவளும் இந்தத் திருட்டுக்கு உடந்தை போல அல்லவா இருக்கிறது. சே… பிழைப்பதற்கு இந்த வழியையா தேடினாள்… இதுதான் அவள் தன் தம்பிக்குச் சொல்லிக்கொடுக்கும் பாடம்…’ என்று மனதிற்குள் எரிந்தவன், தாங்க முடியாத கோபத்தில்,

“இதைப் பார்த்த பின்பும் உன்னை நம்புவேன் என்று நினைத்தாயா? நெவர்… உன் தந்தை ஒரு கொலை காரன் என்றால் உன் தம்பி ஒரு திருடன். நீ எப்படி? ஒரு விபச்சாரியா?” என்று அவன் கேட்க, எங்கிருந்துதான் அவளுக்கு ஆவேசம் வந்ததோ, தன் பலம் கொண்ட மட்டும் அவன் கன்னத்தில் அறைந்துவிட்டாள் சர்வமகி.

அறைந்த பின்புதான் தன் உள்ளங்கை எரிய, அவனை அறைந்ததே உறைத்தது. இருந்தாலும் அவள் வருந்தவில்லை. விழிகளில் கனல் பரவ அவனை ஏறிட்டாள்.

‘வார்த்தையை அளந்து பேசுங்கள் மிஸ்டர் அநேகாத்மன்… பேசவேண்டும் என்பதற்காக எதையும் பேசமுடியும் என்றில்லை…’ என்றது அவளுடைய விழிகளின் வீச்சு.

அவள் அறைந்ததும், ஒரு கணம் வில்லிழுத்த நாணாக இறுகி நிமிர்ந்தவன்,

“என்னையா அறைந்தாய்? என்னையா அறைந்தாய்? என்ன தைரியம் உனக்கு… என் மீது கரம் வைக்க உனக்கு என்ன தகுதியிருக்கிறது… உன்னை…” என்றவன் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் லட்சியம் செய்யாதவனாக, அவளுடைய கரங்களைப் பற்றிப் பின்புறமாக வளைத்துப் பிடித்தான். அவளைத் தன்னை நோக்கி நெருக்கியவன் அவளைத் தள்ளிச் சென்று சுவரோடு அழுத்தமாக மோதினான், அவனிடமிருந்து விடுபடுவதற்காக அவள் துடிக்க, ஒற்றைக் கையால், அவளுடைய இரு கரத்தையும் பின்புறமாகவே அழுத்தப் பற்றியவன், அவள் கழுத்தில் தன் கரத்தை வைத்து அழுத்தியவனாக,

“என்ன தைரியம் உனக்கு… என் நிழலின் பக்கமே நிற்க அருகதை அற்ற உனக்கு, என்னைத் தொட எத்தனை திண்ணகம் இருக்கவேண்டும்… இப்போதே உங்கள் எல்லோரையும் கம்பி எண்ண வைக்கிறேன்… பார்… ஜென்மத்திற்கும் வெளியே வராதவாறு நான் செய்யவில்லை… நான் அநேகாத்மனல்ல…” என்று அவன் கடித்த பற்களுக்கிடையில் வார்த்தைகளைத் துப்ப, அப்போதுதான் சர்வமகி சுயநினைவு பெற்றாள்.

என்ன காரியம் செய்துவிட்டாள். சுமுகமாகக் கையாண்டு, பிரச்சனையைத் தீர்க்காமல் ஆவேசப்பட்டு, இருந்ததையும் கெடுத்துக்கொண்டாளே. அவள் முகம் அச்சத்தால் வெளுத்தது. அவனுடைய அழுத்தமான பிடியில் மூச்சுகூட எடுக்கமுடியாது தடைப்பட்டது. அவனிடம் எதையோ கூறத் தலைப்பட்டவள். வார்த்தைகள் வராமல், தொண்டையில் தடைப்பட, ஏதோ ஒரு வித ஓசைதான் வெளி வந்தது.

அப்போதுதான் அநேகாத்மனுக்குத் தான் செய்யும் காரியம் புரிந்தது. அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவன், ஏதோ அசிங்கத்தைத் தொட்டதுபோல, வேகமாக அவளைத் தன்னிடமிருந்து விலக்கித் தள்ளிவிட்டான்.

தள்ளிய வேகத்தில், அவள் சமநிலை தவறி, பின்புறமாகச் சரிய, சற்றும் தாமதிக்காமல், அவள் இடது மேற்புற கரத்தைப் பற்றி இழுத்து நிறுத்திவிட்டுத் தீச்சுட்டாற் போல் தன் கரத்தை விலக்கிக்கொண்டான்.

“சே… துரோகி” என்று தன் தலையையே குலுக்கியவன்,

“இன்னும் கொஞ்ச நேரத்தில் பொலிஸ் இங்கே வரும்… குட் பாய்…” என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பி வெளியேறத் தொடங்க, மீண்டும் அவனை மறித்தாள் சர்வமகி. அவளுக்குப் பேசுவதற்கே சிரமமாக இருந்தது.

“ப்ளீஸ் ஆத்மன்… ஏற்கெனவே செய்யாத தவற்றுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு முறை தண்டனையை அனுபவிக்க நம்மால் இயலாது… உங்களைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன்… எங்களை விடவிடுங்கள்… நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்… காலம் பூராவும் உங்களுக்கு நான் அடிமையாக இருக்கவேண்டுமா இருக்கிறேன்… தயவு செய்து… ப்ளீஸ்…” என்றவள் அதற்கு மேல் முடிக்க முடியாதவளாகத் தன் முகத்தைக் கரங்களால் மூடி விம்மி விம்மி அழுதாள்.

அவள் அழுவதையே பார்த்துக்கொண்டிருந்தவனின் வலது புருவம் மேலேறியது. அவனுடைய உதட்டில் மறக்க முடியாத வகையில் எள்ளலும், ஏளனமும் நிறைந்த புன்னகையொன்று மலர்ந்தது.

“என்ன சொன்னாலும் செய்வாயா?” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

அடிபட்ட பாவனையுடன் அநேகாத்மனை ஏறிட, கலங்கித் தவித்த அவள் முகத்தை அவன் சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

அவனுடைய விழிகளோ, அவள் உடல் முழுவதும் அலட்சியத்துடன் ஊர்ந்து சென்றன. சுவாரசியத்துடன், அவள் உடலின் மேடு பள்ளங்களில் தங்கியும், நிலைத்தும் விழுந்தும் எழுந்தன. அந்த விழிகள் கூறிய மொழியைப் புரிந்துகொண்டவளுக்கு, முகம் மேலும் இரத்தப்பசையின்றி வெளுத்தது.

“என்ன பதிலைக் காணவில்லை…” என்றவாறு, சர்வமியை அவன் நெருங்க, இவள் பின்னால் சென்றாள். இவன் கால்கள் முன்னேற, இவள் கால்கள் பின்னேறின. இறுதியில் அவள் ஒரு சுவரில் முட்டி நிற்க, இடது கரத்தின் உள்ளங்கை, அவளுக்கு அணை போட்டவாறு சுவரில் பதிய, அவனுடைய வலது கரம், அவள் உடலை நோக்கி முன்னேறியது…

அவளுடைய கன்னத்தைக் கரம் நெருங்க, வேகமாகத் தலையைத் திருப்பிக்கொண்டாள். இவனோ அதை லட்சியமே செய்யவில்லை. அப்படியே கன்னத்தை வருடாமல், கழுத்துக்கு அவன் கரம் வந்தது. சர்வமகிக்கு பயத்தில் வியர்த்துக் கொட்ட, அவனைத் தடுக்க முடியாது கையறு நிலையில் கலங்கிப்போயிருந்தாள்.

அவனோ, தன் விழிகளை, அவள் முகத்திலிருந்து அகற்றவேயில்லை.

“எதுவென்றாலும் என்றால் என்ன பொருள்… இன்னமும் நீ விளக்கவில்லையே…” என்றவாறு, அப்படியே கீழிறங்கிய கரம், அவள் மார்பை நோக்கி வந்தது. இத்தனைக்கும் அவனுடைய சுண்டுவிரல் கூட, அவளுடைய உடலைத் தீண்டவில்லை. இவள்தான் பெரிதும் தவித்துப்போனாள்.

கீழிறங்கிய கரம், அவள் அணிந்திருந்த சட்டையின் மேற்புற பட்டனை நுனி விரலால் கழற்ற முயன்றது. சர்வமகி பதறிப்போனாள்.

நிலவு 28

“ஆத்மன்… ப்ளீஸ்….” என்று இவள் துடிக்க, அவளை அலட்சியமாகப் பார்த்து, எகத்தாளமாக நகைத்தவன், அவள் சட்டையின் பொத்தான்களைக் கழற்ற முயன்றுகொண்டிருந்த வலக்கரத்தை விலக்கி, அந்தக் கரம் கொண்டு உள்ளங்கையால், ஓங்கிச் சுவரில் அடித்தான்.

அந்த அடியில் ஒரு கணம் அதிர்ந்து போனாள் சர்வமகி. அந்த அடி தனக்கு விழவேண்டிய அடி என்பதையும் அவள் புரிந்துகொண்டாள்.

“என்ன பயந்துபோனாயா?” என்று ஏளனத்துடன் கூறியவன், அவளை விட்டு விலகி நின்றான்.

“பயப்படாதே… அதற்குக் கூட ஐ மீன்… என்னை நெருங்குவதற்குக் கூட, ஒரு தகுதிவேண்டும்… நீ அதை இழந்து மூன்று வருடங்களாகிவிட்டன…” என்றான் அவன் கசப்புடன் .

அநேகாத்மனுக்குத் தன் கோபத்தைக் கட்டுப்படுத்துவதே பெரும் சிரமமாக இருந்தது. அவள் தம்பி செய்த காரியத்தையும், எல்லோருக்கும் முன்பாக அவனை, அவள் அறைந்த அவமானத்தையும் சரி போகட்டும் என்று விட்டுவிட அவனால் முடியவில்லை.

இமயத்தின் உச்சியில், பிறர் அண்ணாந்து பார்க்க முடியாத உயரத்தில், அனைவருக்கும் சிம்மசொப்பனமாகத் திகழும் அவனை, சாதாரண வழிப்போக்கன் போல நடத்த எத்தனை தைரியம் இருக்கவேண்டும்.

அவன் பக்கமாக யாராவது தவறாகச் சிந்திக்கிறார்கள் என்றாலே, அடியோடு அறுத்தெறியும், அவனிடம் போய், வாலாட்ட நினைத்தால், விட்டுவிடுவானா என்ன?

இந்தக் குடும்பத்தால் அவன் எதையெல்லாம் இழந்தான். தந்தையை இழந்தான், பரம்பரை நகையை இழக்கப் பார்த்தான். அவனைப் பார்த்தால் அவர்களுக்கு எப்படித் தெரிகிறது? எதைச்செய்தாலும் மன்னித்துவிட்டுப் போகும் கேனையன் என்றா? அதற்கு அவர்கள் வேறு யாரையும்தான் பார்க்கவேண்டும்.

ஆரம்பத்தில் சர்வமகியின் அடக்கம், அமைதி எல்லாமே அவனை அவள் பக்கமாகக் கவர்ந்திழுத்தது என்னவோ உன்மைதான். அவளை மணக்கக் கேட்டபோது, முகத்தில் அடித்தால் போல அவள் மறுத்ததும், உச்சத்திலிருக்கும் அவனை, அந்தக் கழிசடைகளுடன், ஒப்பிட்டுப் பேசியதும், அவனுடைய தன்மானத்திற்குப் பெரும் அடியாகவே இருந்தது.

இனி அவளாக அவனை மணக்க முன்வந்தாலும் அவளை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இருக்கவில்லை. எப்படியாவது அவளைத் தன் காலில் விழவைக்கவேண்டும் என்று அவன் எண்ணினாலும், நாள் போகப் போக அவள் மீதிருந்த பரிதவிப்பு அதிகரித்ததே தவிரச் சிறிதும் குறையவில்லை.

அதுவும் அன்று அவன் கண்ட கனவிற்குப் பிறகு, சர்வமகியை விட்டுப் பிரய முடியாது என்பதை அவன் தௌளத் தெளிவாகப் புரிந்துகொண்டான். எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து சமாதானப்படுத்தலாம் என்றுதான் எண்ணியிருந்தான். ஆனால், அதற்கும் ஆப்பு வைப்பதுபோல, அவள் அனுப்பிய காசோலை வந்து சேர்ந்தது.

ஜெஸ்டினிடம் விசாரித்தபோது, அவள் அங்கே வரவில்லை என்பது தெரிந்ததும்,  விழித்துக்கொண்டான்.

.அதே நேரம், அவள் எங்கே போனாள், என்ன துன்பத்தைச் சந்திக்கிறாள் என்று ஒருபக்கம் அவன் பெரிதும் கலங்கிப்போனான். என்னதான் தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாலும், அவனால் அவளை மறக்க முடியவில்லை. அது வேறு அவனுடைய ஆத்திரத்தைக் கிளப்பியது. அவனுக்குத் தன்மீதே பெரும் எரிச்சல் வந்தது. தன்னைக் கட்டுப்படுத்த முடியாத மனத்தின் மீது பெரும் சினம் எழுந்தது.

அவளைக் காண முடியாது தவித்தபோதெல்லாம், அவள் ஒரு கொலைகாரனின் மகள் என்று தன்னை சமாதானப் படுத்த எத்தனையோ முறை முயன்றான். ஆனால், அது அவனால் முடியவில்லை. அவன் தன்னையும் மீறி அவளுக்காக ஏங்கினான் என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத் தன்னைச் சமாதானப் படுத்துவதும், அது முடியாமல், அவளைப் போல யாராவது ஒரு பெண்ணைக் கண்டால் கலங்குவதும், எங்காவது ஒரு இளம்பெண் கடினமான வேலை செய்வதைப் பார்த்த உடன் வருந்துவதும், எங்கே இருக்கிறாள் என்று தேடித் திரிந்து அலைவதும், என்று அவன் காலம் ஓடியதுதான் மிச்சம்.

இனி அவளைக் காணப்போவதில்லையோ என்று தன் நம்பிக்கையை மெல்ல மெல்ல அவன் தொலைக்கத் தொடங்கிய நேரத்தில்தான், பிரதீபனும் அவனுடைய கூட்டாளிகளுமாக அவன் தந்தையின் வீட்டில் புகுந்து பல லட்சம் டாலர் பெறுமதி வாய்ந்த நெக்லசையும், அதனுடன் இணைந்த பல நகைகளையும் களவாட முயன்றனர். முதலில் அது சர்வமகியின் தம்பி என்பது அவனுக்குத் தெரியாது.

அவன் தப்பி ஓடியதும் பிடிபட்டவர்களிடம் கடுமையாக விசாரித்தபிறகுதான் உண்மை தெரியவந்தது. முதலில் அவன் நம்ப மறுத்தான். ஆனால், அவன் நம்பிக்கைக்கு அர்த்தமில்லை என்பதைப் புரிந்தபோது, அவன் துடித்துப்போனான். அவனுக்கு சர்வமகியின் மீது ஏற்பட்ட ஆத்திரம் கரைகடந்து சென்றது.

இதற்காகத்தானா அவள் ஊர் விட்டு ஊர் சென்றது? ஒரு வேளை தன்னைப் பழிவாங்க அவள் எடுத்துக்கொண்ட ஆயுதம்தானோ இந்தத் திருட்டு… என்று தப்புத் தப்பாகவே முடிவு செய்தவனுக்கு, இதற்கெல்லாம் அவள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கடுமையாக எண்ணிக்கொண்டான்.

தம்பி தறுதலையாகப் போனதற்கு அவள் என்ன செய்வாள்? இதை அவன் யோசிக்கும் மனநிலையில் இல்லை. அதை ஆழ்ந்து ஆராய அவனுக்குப் பிடிக்கவும் இல்லை.

அவனுடைய எண்ணமெல்லாம், சர்வமகியும் சேர்ந்து இதைச் செய்திருக்கலாம் என்பதுதான். அவள் அப்படிப்பட்டவளா என்பதை ஆராய அவனுடைய கண்மூடித்தனமான ஆத்திரம் விடவில்லை.

இருந்தாலும் ஏனோ உடனே காவல்துறையிடம் போய் முறையிடவும் அவன் விரும்பவில்லை. அவனுக்குப் பிடிக்காத குடும்பமேயாக இருந்தாலும், சர்வமகியின் தம்பி சிறையில் இருக்கிறான் என்பதை ஏனோ அவனால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.

உடனே தனக்குத் தனிப்பட்டதாக நியமிக்கப்பட்ட காவலாளிகளுடன் களவாட வந்தவர்களைக் கவனிக்கவேண்டிய விதத்தில் கவனித்தான். அவர்களின் மூலமே சர்வமகி இருக்கும் இருப்பிடத்தையும் அறிந்துகொண்டான்.

உடனேயே அவளைத் தேடிப் புறப்பட்டுவிட்டான். இதற்கு அவன் வரவேண்டிய அவசியம் இல்லைதான். தன் தனிப்பட்ட பாதுகாவலர்களிடம் ஒரு வார்த்தை கூறினால் போதும், அவன் கூறியது அட்சரம் பிசகாமல் நடந்தேறிவிடும். ஆனால், அவனால் அவளை பார்க்கமுடியாது போய்விடுமே….

ஒரு பக்கம் நகையைத் தேடிய வேட்டையாக அது இருந்தாலும், நீண்ட காலத்திற்குப் பிறகு அவளைப் பார்க்கப்போகிறோம் என்று இதயம் வேகமாக அடித்துக்கொண்டதை என்ன முயன்றும் அவனால் தடுக்கமுடியவில்லை.

முதல் முதலில் உள்ளே நுழைந்தபோது, தன்னைக் கண்டதும், அவள் மயங்கி விழுவதைக் காண, உள்ளுக்குள் பதறித்தான் போனான். ஆனாலும், அவனுடைய அகங்காரம் அதனை வெளிக்காட்ட விரும்பவில்லை.

முதலில் வீடு முழுவதும் நகையைத் தேடியபோது, அங்கே அந்த நகைகள் இல்லை என்றதும், அவனை அறியாமல் பெரும் நிம்மதி தோன்றத்தான் செய்தது.

ஆனால், அந்த நகையை முன் குளோசட்டிலிருந்து ஒரு டிடெக்டிவ் எடுத்தபோது, அவன் நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்துபோனது.

இதை அவனால் நம்ப முடியவில்லை. ஏற்கெனவே, அவள் மீது கோபத்திலிருந்தவனுக்கு, இந்த சம்பவம், தீக்கு நெய் விட்டதுபோலாயிற்று. அவன் நினைத்ததுபோல சர்வமகி நல்லவள் அல்ல என்று, உள்ளங்கை நெல்லிக்காயாக அவன் ஐயமறத் தெரிந்துகொண்டான்.

அவள் நல்லவளாக இருந்திருந்தால் இந்த நகையை மறைத்துவைக்க அவள் சம்மதித்திருப்பாளா? இல்லை தம்பியைக் காப்பாற்றத்தான் நினைத்திருப்பாளா? இப்போதும் தம்பி திருடன் அல்ல என்றுதானே உறுதியாக நிற்கிறாள்.

எந்தத் திருடன்தான் தான் திருடன் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறான். இப்படித்தான் தந்தை கொலை செய்தார் என்பதை இதுவரை அவள் நம்பவில்லை. நம்பத் தயாராக இல்லை. இப்போது தம்பி திருடன் என்பதையும் அவள் மறுக்கிறாள். சே… இது என்ன குடும்பம்…’ என்று தனக்குள் வெறுப்புடன் எண்ணியவன், அழுதுகொண்டிருந்தவளை எரிச்சலுடன் பார்த்தான்.

“உன் தம்பி எங்கே?” என்றான் அதிகரித்த கோபத்துடன்.

“தெ… தெரியாது ஆத்மன்… சத்தியமாகத் தெரியாது…” என்றாள் வேதனையுடன்.

“ஐ டோல்ட் யு… நாட் டு கால் மி ஆத்மன்… நீ அந்தத் தகுதியை எப்போதோ இழந்துவிட்டாய்…” என்றான் அவன் ஏளனத்துடன்.

“சாரி… சாரி… ஆத்… அநேகாத்மன்… என்னை நம்புங்கள்… இது எப்படி இங்கே வந்தது என்று எனக்குத் தெரியாது…” என்றாள் அவள் தவிப்புடன்.

“உனக்குத் தெரியாதா? தெரியாமலா இந்த நகை இங்கே வந்தது?” என்றான் அவன் கிண்டலுடன்.

“உண்மையாக இந்த நகை எப்படி இங்கே வந்தது, ஏன் வந்தது, யார் கொண்டு வந்து வைத்தார்கள் என்பது எதுவுமே எங்களுக்குத் தெரியாது… தயவு செய்து நான் சொல்வதை நம்புங்கள்…” என்றாள் அவள் தவிப்புடன்.

“நீ சொல்வதை நம்புவதா? கத்திரிக்காயில் எண்ணைவடியும் போது நீ சொல்லு அப்போது நம்புகிறேன்… இதோ பார்… என்னுடைய எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு உன்னுடன் சமரசப் பேச்சு வைத்துக்கொள்வதற்கு எனக்கு நேரமுமில்லை, விருப்பமும் இல்லை. மரியாதையாக உன்னுடைய தம்பி எங்கே என்று சொன்னாயானால், நான் என் பாட்டில் போய் விடுவேன்.” என்றான் கறாராக.

“ஐயோ… கடவுளே… எனக்குத் தெரியாது அநேகாத்மன்… சத்தியமாகத் தெரியாது…” என்றாள் அவள் களைப்புடன்.

“இதைக் காதில் பூவைத்த எவனாவது ஒரு இளிச்சவாயன் இருப்பான் அவனிடம் போய்ச் சொல்லு…” என்றவன் திரும்பி அருகேயிருந்த தன் காவலாளியிடம் திரும்பினான்.

“ரெஃப்ரின்… கால்த பொலிஸ்… தே கான் ஃபைன்ட் ஹிம்…” என்றதும் சர்வமகி அனைத்தும் ஒடுங்கியவளாக அவனை வெறித்துப் பார்த்தாள்.

“உங்களுக்குத்தான் உங்கள் நகை கிடைத்துவிட்டதே… பிறகு எதற்குப் பிரதீபனைத் தேடுகிறீர்கள்?” என்றாள் பெரும் வலியுடன்.

“எதற்குத் தேடுகிறேனா? அவன் செய்த நல்ல காரியத்திற்கு, ஏதாவது விருது கொடுக்கவேண்டுமே… அதற்காகத்தான்…” என்று ஏளனத்துடன் கூறியவன், பின் சினம் கொண்டவனாக,

“என்னிடம் இருந்து தப்பியிருக்கிறான். என் தந்தையின் வீட்டில் புகுந்து நகைகளைத் திருடியிருக்கிறான்… சொல்வது கேட்கிறதா? நகைகள்… இந்த நெக்லசுடன் சேர்ந்த இன்னும் சில நகைகள் எனக்கு வேண்டும். எல்லாமே டைமன்ஸ்…” என்று அவன் கூற அதுவரை நேரமாகப் பிடித்திருந்த பலம் முழுவதும் வடிந்து போனவளாக ஒரு இருக்கையில் தொப் என்று அமர்ந்தாள் சர்வமகி.

“கடவுளே… உங்களை எப்படி நம்ப வைப்பேன்…” என்று தவித்துக் கலங்கியவளை, எந்த உணர்ச்சியும் இல்லாது பார்த்தவன்,

“உன்னை நம்புவதா? சே… சே…” என்று அருவெறுப்புடன் கேட்டவன் ஓய்ந்துபோயிருந்தவளிடம் தன் வெறுப்பான பரவையை வீசினான்.

‘இவள் மட்டும் நடிக்கப்போனால் என்றால்… ஆஸ்கார் விருதென்ன, அதற்கு மேல் என்ன விருது கிடைத்தாலும் இவள்தான் அதைத் தட்டிச் செல்வாள்… என்னமாதிரி நடிக்கிறாள்… இவள் தோற்றத்தைக் கண்டு நான் இளகிவிடுவேன் என்று நினைத்தாளா? அதற்கு அவள் வேறு யாரையும்தான் பார்க்கவேண்டும்…’ என்று எண்ணியவன், தன் காவலாளிகளைப் பார்த்தான்.

“இந்த வீட்டில் எப்போதும் இருவர் காவலுக்கு இருப்பதுபோலப் பார்த்துக்கொள்ளுங்கள்… யாரும் வெளியே போகக் கூடாது. இவள் தம்பி வந்ததும் உடனே எனக்கு அறிவியுங்கள்…” என்று கட்டளையிட்டவன் அங்கிருந்தவர்களை ஒரு முறை உற்றுப் பார்த்தான்.

“தவறுகளை நான் மன்னிப்பதில்லை ஜெஃப்ரி… அன்ட் டேவிட்சன்…  உங்கள் இருவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்…” என்றான் அவன் பெரும் அழுத்தமாக.

இருவரும் தலையாட்ட, “குட்…” என்றவன் திரும்பி சர்வமகியைப் பார்த்தான்.

“எனக்கு என்னுடைய மற்றைய நகைகள் வேண்டும். உன் தம்பி என் கைக்கு அகப்படும் வரைக்கும், இவர்கள் இங்கே காவலுக்கு நிற்பார்கள். அதையும் மீறி எங்காவது தப்பிப்போகவோ, இல்லை உங்கள் தம்பிக்குத் தகவல் அனுப்பவோ நினைத்தீர்கள் என்றால், பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு நான் பொறுப்பில்லை… உங்கள் தம்பியை மட்டுமல்ல, உங்கள் எல்லோரையும் சிறையில் கம்பியெண்ண வைத்துவிடுவேன்… ஜாக்கிரதை…” என்றவன் சர்வமகியை ஒரு முறை வெறுப்புடன் பார்த்துவிட்டுப் புயல் என அங்கிருந்து வெளியேறினான்.

நிலவு 29

டிசம்பர் மாதம், மாலை ஆறு மணி… குளிர் உடலில் ஊசியாகக் குத்துவதைக் கூடப் பொருட்படுத்தாமல் சர்வமகி வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய மன வேதனைக்கு முன்பாக அந்தக் குளிர் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. பொதுவாகப் பனிப்பொழிவு இடம்பெறும் காலம். வெண் பஞ்சு படர்ந்தது போல, தரை முழுவதும் பனியின் ஆதிக்கம் இருக்கவேண்டிய நேரம் அது. ஆனாலும், புவியின் வெப்பம் அதிகரித்தாலோ, என்னவோ, அவள் மனதைப்போலவே, அந்த இடம் முழுவதும் வெறுமையின் ஆட்சி.

குளிரில் முகம் விறைத்து இறுகிப்போனது கூடத் தெரியாமல் தொலை தூர வெறுமையையே சர்வமகி பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீர் என்று அவளைச் சுற்றி தடிமனான போர்வை போர்த்தப்பட, சுய நினைவு பெற்றவளாகத் திரும்பிப் பார்த்தாள் . தேவகியும், மாதவியும்தான் அவளருகே நின்றுகொண்டிருந்தனர்.

“அக்கா… குளிருகிறதே… உள்ளே வா…” என்றாள் தேவகி கனிவுடன்.

“உள்ளே வந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா தேவகி?” என்றாள் ஏக்கத்துடன்.

“அக்கா… இப்படியே குளிரில் நின்றுகொண்டாலும், எதுவும் சரியாகாதுக்கா… இதோபார் உன்னை வருத்திக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை? தயவு செய்த உள்ளே வாக்கா…” என்றாள் மாதவி கவலையுடன்.

“நீங்கள்… நீங்கள் பிரதீபன் தவறு செய்திருப்பான் என்று நினைக்கிறீர்களா?” என்றாள் சர்வமகி பெரும் தவிப்புடன். இரு பெண்களுமே அமைதி காக்க அவள் முகத்தில் பெரும் வேதனையின் சாயல் வந்து அமர்ந்துகொண்டது.

இரண்டு நாட்களாகிவிட்டன… அநேகாத்மன் வந்துபோய். இன்னும் பிரதீபனைக் கண்டுபிடிக்கவில்லை. எங்கே இருக்கிறான் என்ன செய்கிறான் என்று எதுவுமே தெரியவில்லை. எங்கேயென்று போய்த் தேடுவது. இந்தப் பரந்த கனடாவில், எப்படியென்று கண்டுபிடிப்பது…?

மூவரும் வேதனையில் தவிக்க, திடீர் என்று அவர்களின் வீட்டு மணி அடித்தது. மூவரும் பயத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

மணி அடித்தவருக்கும், பொறுமைக்கும் இடையேயான தொடர்பு காத தூரமோ, பொறுமையற்று மீண்டும், வீட்டு மணியைப் பல முறை அடித்தார். மாதவி, சர்வமகியைப் பார்க்க, அவளின் முகமோ அச்சத்தில், வெளுரிப்போயிருந்தது.

பூனைப் பாதம் வைத்துக் கதவினை அடைந்த மாதவி, கதவின் மெல்லிய கண்ணடியினூடாக எட்டிப் பார்த்தாள். அங்கே நின்றிருந்தவனின் மார்புதான் தெரிந்தது.

இவள் இரண்டடி பின்வைத்து, யோசனையுடன் பல்கணியிலிருந்த சகோதரியைப் பார்க்க, தேவகி கதவைத் திறக்கவேண்டாம் என்பதுபோலத் தலையை ஆட்ட, மாதவி இரண்டடி பின்வைத்தாள். அதே நேரம், அறைக்குள் நின்றிருந்த அபிதன், வெளியே வந்து,

“ஏய்… மாது… யாரோ கதவு மணி அடிக்கிறார்களே… கேட்கவில்லை? என்ன மரம் மாதிரி நிற்கிறாய்?” என்றவாறு கதவின் அருகே வந்தவன், யார் வந்திருக்கிறார்கள் என்பதைக்கூட எட்டிப் பார்க்காமல், மாதவி தடுக்கும் முன்பே, கதவைத் திறந்துவிட்டிருந்தான்.

வாசலில் பொறுமையற்ற மூச்சுடன் நின்றிருந்தவன், கதவு திறந்ததுதான் தாமதம், வேகமாக் கதவுடன் சேர்த்து அபிதனையும் தள்ளிக்கொண்டு, உள்ளே வந்தான் அநேகாத்மன். அவனை அந்த நேரத்தில் நால்வருமே எதிர்பார்க்கவில்லை என்பது, அதிர்ந்துபோயிருந்த அவர்களின் முகங்கள் தெளிவாகக் காட்டிக்கொடுத்தன.

அதிகாரமாக அவர்களுடைய முன்னறைக்குள் நுழைந்துகொண்டிருந்தவனின் முகம் பெரிதும் இறுகிப்போயிருந்தது.

மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டனர்.

உள்ளே வந்தவன் ஒற்றை இருக்கையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்துகொண்டான். சர்வமகியும், தேவகியும் பால்கணியை விட்டு, முன்னறைக்கு வந்தனர்.

அநேகாத்மனின் விழிகள், சர்வமகியைத்தான் ஊடுருவிக்கொண்டிருந்தன.

குளிரால் சிவந்திருந்த நாசியும், கலங்கியிருந்த விழிகளும், சற்று நீலம் பாரித்திருந்த உதடுகளும், கண்டியிருந்த முகமும், அவன் விழிகளிலிருந்து தப்பவில்லை. அவள் அதிக நேரம், குளிரில் நின்றிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன், கூடவே அவளைச் சுற்றியிருந்த போர்வையைக் கண்டதும், இவனுக்குக் கோபம் வந்தது.

‘முட்டாள்… குளிரில் நிற்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல ஆடை அணியவேண்டும் என்கிற அடிப்படை அறிவு வேண்டாம்…? வெறும் டிஷேர்ட்டும், கணுக்கால் வரை நீண்டிருந்த பாவாடையும், எந்த அளவிற்கு இந்தக் குளிரைத் தாங்கும்… அந்த போர்வையைப் போட்டிருப்பதை விடப் போடாமல் இருந்திருக்கலாம்’ என்று மனதிற்குள் சினந்தவன், காரமாகத் திட்டுவத்றாகத் தன் வாயைத் திறந்து, “ஆர் யு… ஸ்டு…” முடிக்கவில்லை, அவனுடைய செல் சத்தமிட்டது. தான் சொல்ல வந்ததை முழுவதுமாகச் சொல்லாது விடுத்து, கைப்பேசியைக் காதில் பொருத்தினான்.

“குட்… யாரும் அங்கே நிற்கவேண்டாம். லீவ் ஹிம்…” என்று கூறிவிட்டுத் அலைபேசியை மீண்டும் சட்டைப்பைக்குள் போட்டான்.

அவனுடைய வலது கரத்தின் விரல்கள் இடது காலுக்கு மேல் மடித்துப் போட்டிருந்த வலது தொடையில் தாளம் போட்டது.

அங்கே ஏற்பட்டிருந்த மயான அமைதி ஏதோ ஒரு கலவரத்தின் முதல் படி என்பதை சர்வமகி ஐயம் திரிபற, உணர்ந்துகொண்டதால், பயப்பந்து, அடிவயிற்றில் தோன்றியது. அவளுக்கு அந்த இடத்தில் என்ன பேசுவது என்றுகூடத் தெரியவில்லை. அவள் பேசினாலும், அதை அவன் கேட்டிருப்பானா என்பது வேறு கேள்வி. அதனால், மாதவியைப் பார்த்து,

“மாது… அபியை உள்ளே அழைத்துச் செல்…” என்றாள்.

மாதவி மறுத்தேதும் பேசாது, அபிதனின் தோளில் தன் வலக்கரத்தைப் போட்டு, தன் பேச்சை மதிக்காது, அவன் கதவைத் திறந்த ஆத்திரத்தில், அவன் தோளில் அழுந்தக் கிள்ள, அவன் வலியில் கத்துவதற்காகத் தன் வாயைத் திறக்க, சத்தம் வெளிவராதவாறு மறு மறுகரம் கொண்டு அடக்கி,

“டேய்… அபி… நாம் செஸ் விழையாடலம் வா…” என்றவாறு அவனை இழுத்துச் செல்ல, அபிதனோ, மாதவியின் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டு அறைநோக்கிச் சென்றான்.

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தின், டிக் டிக் டிக் என்கிற ஓசையைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை. சர்வமகிக்குத் தான் விடும் மூச்சின் சத்தமே பெரிதாகக் கேட்பதுபோலத் தோன்ற, தன்னைச் சுற்றியிருந்த போர்வையைத் தன்னுடன் சேர்த்து இழுத்து இறுக்கிக்கொண்டாள். அமைதியாக அமர்ந்திருக்கும் அநேகாத்மனைப் பார்க்கப் பார்க்க, இவளின் அச்சத்தின் அளவு பெருகிக்கொண்டே போனது.

சற்றுநேரம், எதுவும் பேசாமல் இருந்தவன், பொறுமையற்ற மூச்சுடன், தொடையில் போட்டிருந்த தன் தாளத்தை நிறுத்தித் தலையைக் கோதிக்கொண்டான். தொடையின் மேல் போட்டிருந்த காலை எடுத்தவாறே, தன் இடது கரத்தில் மாட்டியிருந்த ரொலக்ஸ் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். அவனுடைய பொறுமை மெல்ல மெல்லக் கரைவதை, தரையில் பதிந்திருந்த வலக்காலின் குதிக்கால் மேலும், கீழும் துடித்துக்கொண்டிருந்ததில் புரிந்தது.

அதற்கு மேல் அமைதியாக இருக்கமுடியாது,

“எ… என்னாச்சு…” என்றாள் சர்வமகி பயத்துடன்.

கேட்டவளை அலட்சியமாகப் பார்த்த அநேகாத்மன், பதில் கூறாமலே, டீ டேபிளில் ஒழுங்காக மடித்துவைத்திருந்த செய்தித்தாளை இழுத்து எடுத்து, அதை உதறிவிட்டு, பொருளாதாரம் சார்ந்த செய்திகளைப் படிக்கத்தொடங்கினான்.

சர்வமகியும் அசையாமல். அதே இடத்தில் சிலை போல நின்றாள். நீண்ட நேரம் அவள் அமராமல் இருப்பதைக் கடைக்கண்ணால் பார்த்தவன், அவளிடம் உட்கார் என்று சொல்லத் தன்மாணம் விடவில்லை. அதே நேரம், அவள் நிற்கும்போது, அவனாலும் அதிகாரமாக அந்த இடத்தில் உட்கார முடியவில்லை.

பொறுமையற்று, வாசித்துக்கொண்டிருந்த செய்தித்தாளை, மடித்து மீண்டும் டீ டேபிலில் போட்டுவிட்டு எழுந்தவன், தன் பான்ட் பாக்கட்டில் கைவிட்டவாறு குறுக்கும் நெடுக்குமாகக் கொஞ்ச நேரம் நடந்தான். பின் கைப்பேசியை எடுத்து,

“வட்ஸ் கோய்ங் ஆன் தெயர்…” என்று சிடுசிடுத்தான்.

மறுபக்கம், என்ன சொன்னதோ, இவன் எரிச்சலுடன் கைப்பேசியை பான்ட் பாக்கட்டில் போட்டுவிட்டு, சாப்பாட்டு மேசைக்கு அருகேயிருந்த கதிரையைக் காலால் இழுத்து எடுத்து, அதைச் சர்வமகியின் பக்கமாகத் தள்ளிவிட, அது கச்சிதமாக அவள் அருகே போய் நின்றது.

அவளோ புரியாமல் அநேகாத்மனைப் பார்க்க,

“சிட்…” என்றான் ஒற்றைச் சொல்லாக.

உடனே , மறுப்பாகத் தலையை ஆட்டிவிட்டு, நின்ற இடத்திலேயே நிற்க, இவன் தன் தோளைக் குலுக்கிவிட்டு, சற்றுத் தள்ளிப்போய், வாசலருகே எரிந்துகொண்டிருந்த மின்விளக்கையும், அதற்கு அருகேயிருந்த மின்விளக்குகளையும் அணைத்து விட்டு, மீண்டும் பழைய இடத்திற்கு வந்து அங்கிருந்த சொபாவின் கைப்பிடியில் மார்பிற்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டியவாறு, சாய்ந்து நின்றுகொண்டான்.

சர்வமகியின் விழிகள் குழப்பத்துடனேயே அநேகாத்மனைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

அப்படியே பத்து நிமிடங்கள் கடந்து போயின. திடீரென்று வீட்டின் கதவு திறப்பால் திறக்கும் சத்தம் கேட்க, அநேகாத்மன் மீண்டும், தன் பான்ட் பாக்கட்டில், கைகளை நுழைத்தவாறு, நிமிர்ந்து நின்றுகொண்டான். தலை சற்றுக் குனிந்திருந்தாலும் அவனுடைய விழிகள் மேல் நோக்கிக் கூர்மையுடன், வாசல் கதவையே துளைத்துக்கொண்டிருந்தன.

சர்வமகிக்கு எங்கே மயங்கிவிழுந்துவிடுவோமோ என்று அச்சமாக இருந்தது. திறந்துகொண்டு வருவது யார் என்று உயிரைக் கையில் பிடிப்பதுபோல வாசலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அச்சம் உண்மைதான் என்பதுபோல உள்ளே நுழைந்தான் பிரதீபன்.

உள்ளே வந்த பிரதீபன், மெதுவாகக் கதவைச் சாத்திவிட்டுத் திரும்பினான். முதலில் தெரிந்த இருட்டில், அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஓரளவு இருட்டுப் பழக்கப்பட, இரண்டெட்டு முன்னால் வைத்து, முன்னறையை எட்டிப்பார்த்தான். அங்கே நின்றிருந்தவனைக் கண்டதும் அதிர்ந்தான். வேகமாக வாசல் கதவைத் திறந்துகொண்டு, தப்பியோட முற்படும்போது, இரு வலிய கரங்கள் அவனுடைய சட்டைக் கொலறைப் பற்றிக்கொண்டது.

தன் சட்டையைப் பற்றியவனிடமிருந்து, திமிறி விலக முயன்று முடியாமல் போக, அவனைப் பற்றியிருந்த காவலாளி முன்னறைக்கு இழுத்து வந்து அநேகாத்மனின் முன்னாhல் நிறுத்தினான்.

அங்கே அநேகாத்மனைப் பிரதீபன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் அதிர்ச்சியிலிருந்து தெரிந்தது.

சர்வமகி தன் தம்பியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய முகத்தில் தெரிந்த பதட்டம், அச்சம் எல்லாமே அவன் தப்பு செய்தவன் என்பதை எடுத்துக்காட்டப் போதுமானதாக இருக்க, அதுவரை நேரமும் தன் தம்பி தவறு செய்திருக்கமாட்டான் என்று முழுதாக நம்பியிருந்தவளுக்கு, இதயத்தில் யாரோ சம்மட்டியால் பலமாக அடித்ததுபோலத் துடித்துப்போனாள்.

அவள் தம்பியா இப்படி ஒரு காரியத்தைச் செய்தான்? அவள் வளர்ப்பு அத்தனை கேவலமானதாகவா இருந்திருக்கிறது.

சிரமப்பட்டுத் தன் தம்பியை நெருங்கியவள், அவனை உற்றுப் பார்த்தாள்.

“அ… அவர் சொல்வது…” என்றவள் முடிக்கமுடியாமல் தொண்டை அடைக்கச் சிரமப்பட்டுத் தன்னைச் சமப்படுத்தியவாறு,

“அவர் சொல்வது… உண்மையா…” என்றாள் முடிந்தவரை அழுத்தமாக.

“அவர் என்ன சொன்னார்?” என்றான் பிரதீபன். அதுவரையும் அழுத்தியிருந்த பயம் எங்கோ மாயமாக மறைந்துவிட்டிருந்தது. அசட்டுத் தைரியம் அவனை ஆட்கொண்டது. அவன் செய்த தவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாதே… பிறகு என்ன?

“நீ அவர் வீட்டில் புகுந்து நகையைத் திருடினாய் என்றாரே…” இப்போது சர்வமகியின் கோபம் சற்று ஏறியிருந்தது.

“கண்டவர்கள் யார் யாரோ எப்படி எப்படியோ என்னவென்றாலும் கூறுவார்கள். அதற்கு நான் பதில் கூறவேண்டிய அவசியம் கிடையாது… யார் களவாடினார்களோ, அவர்களிடம் போய்க் கேட்கச் சொல்” என்றான் பிரதீபன் அலட்சியமாக.

“உண்மையில் நீ தவறு செய்யவில்லையா?” என்றாள் சர்வமகி. ஏனோ அவளுடைய அழுத்தமான பேச்சு பிரதீபனைச் சற்றுக் கலங்கடிக்கத்தான் செய்தது. அந்தக் கலக்கத்தைச் சாமர்த்தியமாக மறைத்தவன்,

“இதோ பார் அக்கா… எதற்கும் ஒரு அளவுண்டு… நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்கள் தேவையில்லாமல் என் மீது பழியைப் போடுகிறார்கள். அவர் வீட்டில் நான் திருடினேன் என்றதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது…” என்று அவன் படபடப்புடன் கேட்க, அவன் அருகேயிருந்த அந்தக் காவலாளி, பிரதீபனை நெருங்கினான்.

பிரதீபன் என்ன என்பதை உணர்வதற்குள்ளாக, தன் பெரிய கரத்தால், அவனை வளைத்துப் பிடித்தவன், அவன் பான்ட் பாக்கட்டிற்குள் கைவிட்டெடுக்க, அதிலிருந்து வந்து விழுந்தது ஒரு சிறிய நீல நிற வெல்வெட் பை.

பிரதீபனை விடுவித்த அந்தக் காவலாளி, தரையில் விழுந்த அந்தப் பையை எடுத்து, அனேகாத்மனினடம் நீட்ட, அதைப் பெற்றுக்கொண்டவன், தலையை மெல்லியதாக அசைத்து, அவனை வெளியே போகுமாறு உத்தரவிட, தலையைக் குனிந்து வெளியேறினான் ஜெஃப்ரி. அவன் வெளியே சென்றதும்,

தன் கரத்திலிருந்த நீலப் பையைத் தன் மறு கரத்தில் கவிழ்த்துக் கொட்ட. விழுந்தது, ஒரு நவரத்தின நெக்லசும், அதே நவரத்தினம் பதித்த கைச்செய்ன் கூடவே ஒரு சோடித் தோடும்.

அதுவரை அவன் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் அடிபட்டுப் போனது சர்வமகிக்கு.

அவளுடைய தம்பி ஒரு திருடன். அவளுடைய தம்பி ஒரு பொய்யன். இதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“அது…. நான் இல்லை…” என்று பிரதீபன் எதையோ சொல்ல வர,

“சே… வாயை மூடு…” என்று சீறினாள் சர்வமகி. இதுவரை காலமும், பார்த்திராத காட்சியது.

தேவகிகூடத் திகைத்துப்போனாள். அக்காவிற்கு இப்படிக் கோபப்படத் தெரியுமா என்று அவள் அதிர்ந்து போனாள்.

“நீ… நீ எங்கள் அம்மாக்குத்தானா பிறந்தாய்? உனக்கு வெட்கமாக இல்லை. அப்படி உனக்கு நான் என்னடா குறைவைத்தேன்… சொல்லு… சொல்லுடா… எங்கெங்கோ திருடிப் பணம் புரட்டும் அளவுக்கு நான் அப்படி என்ன குறைவைத்தேன்… சொல்லுடா… நீயெல்லாம் ஒரு தம்பியா?” என்றவள்  கோபமாகச் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே எலி அடிப்பதற்காக வைத்திருந்த நீண்ட பொல்லைக் கண்டவள் ஓடிப்போய் அதை எடுத்தாள்.

“உன்னை நான் அடித்து வளர்த்திருக்கவேண்டும்… தவறு செய்துவிட்டேன்… நான் எவ்வளவு பெரிய மடச்சி தெரியுமா… இந்த நிமிடம்வரை நீ செய்திருக்கமாட்டாய் என்று நம்பினேன்… நீ… அந்த நம்பிக்கையை… சே… எல்லாவற்றுக்கும் சேர்த்து… நீ…” என்றவள் கோபம் கண்ணை மறைக்க அவனை அடிப்பதற்காகப் பொல்லை ஓங்கினாள்.

இது வரை காலமும், சர்வமகியிடம், அத்தகைய ஆக்ரோஷத்தை யாரும் பார்த்தது கிடையாது.

திடீர் என்று கோபத்தில் கேட்ட தன் சகோதரியின் குரலில் அதிர்ந்து, வெளியே வந்த மாதவியும், சர்வமகியின் புது அவதாரத்தைப் பார்த்துத் திகைத்த தேவகியும், தம் கண்களையே நம்ப முடியாதவர்களாக, சகோதரியையே பார்த்துக்கொண்டிருந்தனர். சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பது எத்தனை பெரிய உண்மை. அவர்கள் திகைத்து நின்றது ஒரு கணமே, அடுத்த கணம்,

“அக்கா… என் மீது ஒரு அடி… ஒரு அடி விழுந்தாலும்… நான் சும்மா இருக்கமாட்டேன்.” என்றான் பரதீபன் தன் ஒற்றை விரலைத் தன் சகோதரி முன்னால் நீட்டி.

“ஓ… எனக்கு முன்னாலேயே ஒற்றை விரலை நீட்டுகிறாயா? அந்த அளவுக்குப் பெரிய மனிதராகிவிட்டீர்களோ?” என்றவள் மீண்டும் பொல்லை ஓங்கினாள்.

அது தன் மீது விழுவதற்கு முன்பாக, அதைப் பற்றிக்கொண்டவன், ஒரு இழுப்பில் அவளிடமிருந்து பொல்லைப் பறித்தான்.

“என்னை அடிக்க நீ யார்… உனக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது,… நீ எனக்கு அக்காதான்… அம்மா அல்ல…” என்றான் பிரதீபன் குரலை உயர்த்தி.

சர்வமகி ஆடிப்போனாள். தன் தம்பியா இப்படிப் பேசுவது? அவள் வளர்ப்புத் தப்பாகிவிட்டதா? எங்கே தப்பானது? புரியாமல் மலங்க மலங்க விழித்தாள் சர்வமகி.

அதேநேரம், அக்கா தம்பியின் பேச்சை வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த அநேகாதமன், தன் மார்பின் குறுக்காகத் தன் கரங்களைக் கட்டியவாறு, பிரதீபனையே கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவே வேறு யாருமாக இருந்திருந்தால், இப்போது சர்வமகிக்கு எதிராகப் பேசிக்கொண்டிருப்பவன், மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருப்பான்.

அன்று சர்வமகியைத் தொட்டதற்காக, அநேகாத்மன் அடித்த அடியில் அந்த ரட்ணபாலன் இறந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இன்று வரை கொலைகாரனைக் காவலர்கள் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் தேடல், பயனற்றது என்பது  வேறு கதை. பிறகு, சர்வமகியின் வீட்டை வாங்கவென்று வந்தவர்கள், அவள் கையைப் பற்றிக் குலுக்குகிறேன் என்கிற பெயரில், தவறான நோக்கில் நெருங்கியவர்களை, அவனுடைய பாதுகாவலர்களைக் கொண்டு, ஆளில்லாக் காட்டிற்குக் கடத்திச் சென்று, கை கால்களை முறித்து அப்படியே போட்டுவிட்டு வந்தது என்பது வேறு கதை

ஆனால், இது அப்படியல்லவே. அவளுடன் தர்க்கம் புரிபவன், அவளுடைய இரத்தம். அவளுடன் கூடப் பிறந்த தம்பி. அவனைத் தொட்டால், இவளுக்கு வலிக்குமே… அதனால் எதுவும் செய்ய இயலாத தன்மையுடன், பிரதீபனைக் கொன்றுவிடும் வெறியில் பார்த்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன்.

அது வரை பொறுமையாக இருந்த தேவகியும் கொதித்துப்போனாள். பிரதீபன், என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகவே, அவனை நெருங்கி அவன் கன்னத்தில் தன் பலம் கொண்டமட்டும் ஓங்கி அறைந்துவிட்டிருந்தாள்.

“சீ… வாயைக் கழுவு… என்ன பேச்சுப் பேசுகிறாய்… ராஸ்கல்… அக்கா மட்டும் இல்லாதிருந்திருந்தால் நாம் எல்லோருமே இப்போது பிச்சை எடுத்துத்தான் சாப்பிட்டிருப்போம்… அக்காவைப் பார்த்தா யார் என்று கேட்கிறாய்? நாயே… அவள் உடலில் ஓடும் இரத்தம்தானே உன் உடம்பிலும் ஓடுகிறது? அப்படியிருக்கும் போது உன்னால் எப்படி இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது…” என்றவளை முறைத்தான் பிரதீபன்.

அங்கே யார் யார் நிற்கிறார்கள் என்பதே மறந்தவனாக,

“அதில் உனக்குச் சந்தேகமா தேவகி… என் அப்பாதானே உனக்கும் அப்பா… அவர் ஒரு கொலைகாரன் என்பதை மறந்துவிட்டாயா? இதோ… இந்தப் பெரிய மனிதரின் தந்தையைத்தானே எங்கள் அப்பா கொன்றார்… ஒரு கொலைகாரனுக்குப் பிறந்த பிள்ளை எப்படி இருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இப்படித்தானே இருக்கவேண்டும்…” என்று அலட்சியமாகச் சொன்னவன், சர்வமகியைப் பார்த்தான்.

“நீ அக்கா என்றால்… அந்த வரைமுறையோடு மட்டும் நின்றுகொள்… அதற்கு மேல் உன் எல்லையைத் தாண்டாதே… தாண்டினாய் என்றால் நான் பொல்லாதவனாக இருப்பேன்… நான்… நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது…!” என்றவனைத் தேவகி பொங்கிய ஆத்திரத்துடன் பார்த்தாள்.

“என்ன? என்ன செய்வாய்? கொல்வாயா? கொல்லு… கொல்லுடா… இப்படி அவள் சித்திரவதை படுவதை விட, ஒரேயடியாகக் கொன்றுவிட்டாய் என்றால், அக்கா நிம்மதியாகவாவது போய் சேரட்டும்… சே… நமக்கு அக்காவாகப் பிறந்தது அவள் செய்த பாவம்… அந்தப் பாவத்திற்கு அவள் போகத்தான் வேண்டும்…” என்று கொதித்தவள், பின்பு தன் சகோதரியை நெருங்கினாள்.

அதிர்ச்சியுடன் தேவகியையே பார்த்துக்கொண்டிருந்த சர்வமகி,

“ஏன்மா அவனை அடித்தாய்…” என்றாள் வலியுடன். அதைக் கேட்டதும், அநேகாத்மன் ஒரு கணம் அதிர்ந்து போனான். இப்படியும் ஒருத்தி இந்த உலகத்தில் இருக்கமுடியுமா என்கிற கேள்வியும் அவன் மனதில் எழுந்தது.

தேவகிக்கோ, சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

“அக்கா… நீ திருந்தவே மாட்டாயா… இவ்வளவு செய்தும், நன்றியில்லாமல் பேசுகிறான்… அவனைப் போய்… சே…” என்று கோபத்துடன் திட்டியவள், பின் பிரதீபனைப் பார்த்தாள்.

“இது… இதுதான்டா நம்மோட அக்கா… அவளைப் போய் நீ… எங்களையும் அவள்தானேடா வளர்த்தாள்… நாம் தப்பு செய்யாமல்தானே இருக்கிறோம்… நீ மட்டும் எப்படி இப்படி மாறிப்போனாய்? அக்காவைப் போய்… என்ன வார்த்தை பேசிவிட்டாய்…?” என்றாள் தவிப்புடன். பிரதீபனோ, அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு,

“எங்களைப் பார்த்துக்கச் சொல்லி நாங்களா கேட்டோம்? இல்லை அல்லவா… நம்முடைய அப்பாவிடம் வாக்குக் கொடுக்கச் சொல்லி அவளுடைய கையைப் பற்றிக் கெஞ்சினோமா… எங்களை எங்கள் போக்கில் விடவேண்டியதுதானே… நம்மைக் கட்டுப் படுத்த, இவள் யார்… தானும் அனுபவிக்காமல், எங்களையும் அனுபவிக்க விடாமல்… வைக்கோல் பட்டறை போர் நாய் கேள்விப்பட்டிருக்கிறாயா தேவகி… அதுதான் இவர்ள்… எனக்கெல்லாம், அவள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை…” என்றான் அவன் குறையாத ஆத்திரத்துடன்.

“டேய்… பேசுவாயடா… நீ… இதுவும் பேசுவாய்… இன்னும் பேசுவாய்… ஏன் என்றால், உனக்குச் சிறகு முளைத்துவிட்டது அல்லவா… அது மட்டுமல்ல… உனக்கு நாங்கள் பாரமாக வந்து விடுவோமோ என்கிற பயம்… அதுதானே சே… எத்தனை சுயநலவாதி நீ… இதை விட நீ அவளைக் கொன்றிருக்கலாம்”

“ஆமாம்… எனக்கு உங்களின் கீழ் அடிமையாக இருக்கப் பிடிக்கவில்லை. எனக்குச் சுதந்திரம் வேண்டும். இதோ இவர்கள் சொல்வதற்குக் கைகட்டிக் கேட்டுக்கொண்டிருக்க நான் தயாரில்லை. இவ்வளவும் ஏன்… இவர்கள் எதற்காக நமக்காகத் தன் வாழ்நாளைத் தொலைக்கவேண்டும்? தானும் வாழாமல், நம்மையும் வாழவைக்காமல்… பேசாமல் எங்காவது போய்த் தொலையவேண்டியதுதானே… நாங்களாவது நிம்மதியாக இருப்போம்…” என்று கத்தியவனைக் கையாலாகாத் தனத்துடன் பார்த்தாள் சர்வமகி. அவள் இதயமே வெடித்துவிடும் போல, வேகமாகத் துடித்தது. மெது மெதுவாகத் தலைக்குள் வண்டு குடையத் தொடங்கியது.

அதே நேரம், அநேகாத்மனும் தனக்கு முன்னால் இருந்த கதிரையின் மேற்புரத்தை உடைத்துவிடும் வேகத்தில் அழுந்தப் பற்றியிருந்தான். எந்த நிமிடமும், அதைத் தூக்கி பிரதீபனின் மீது எறிந்துவிடும் நிலையில் அவன் இருந்தான். அவனுடைய கோபம் கனல் மூச்சாகச் சீறிப்பாய்ந்து வெளியே வந்தது…

“சீ… வாயை மூடடா முட்டாள் … இதுதான்டா உனக்கும் நம்முடைய அக்காவுக்கும் உள்ள வித்தியாசம்… தன் நலம் முக்கியம் என்று சுயநலமா எண்ணாமல், இத்தனை காலமாகத் தனக்குள் ஒரு பெரும் பிரச்சனையை வைத்துக்கொண்டு நமக்காக இது வரைகாலமும் நடமாடுகிறாளே… அவள் தொலையத்தான் வேண்டும்… எப்போதும் நாம்தானேடா அவளுக்கப் பெரிசு. நாம் சிரித்தால், தானும் சிரித்து, அழுதால், தானும் அழுது, தான் அழியப்போகிறோம் என்பது தெரிந்தும், நமக்காக நடமாடிக்கொண்டிருக்கிறாள் பார், அவள் தொலையத்தான் வேண்டும்… எங்கே தன் பிரச்சனை நமக்குத் தெரிந்துவிடுமோ என்று பயந்து, தனக்குள்ளேயே அதை மூடி மறைத்துக்கொண்டு… இது வரை காலமும் இயங்க முடியாமல் இயங்கிக்கொண்டிருக்கிறாள் பார்… அவள் தொலைத்தான் வேண்டும்… போ.. போய்த் துரத்துடா… போய் துரத்து.. அப்போதாவது நம்மை விட்டுத் தள்ளிப்போய், தனக்கே தனக்காக நிம்மதியாக வாழட்டும்…” என்று ஆவேசம் வந்தவள்போலத் தேவகி கத்த, அதுவரை நேரமும் வெறிகொண்டவன் போல, பிரதீபனைப் பார்த்துக்கொண்டிருந்த அநேகாத்மன் தேவகி சொல்வதைக் கேட்டதும் உடல் விறைக்க நிமிர்ந்தான்.

நிலவு 30

அநேகாத்மனுக்கு முதலில் தான் கேட்டது கற்பனையோ என்றுகூடத் தோன்றியது. கொல்லும் வெறியுடன், பிரதீபனைப் பார்த்துக்கொண்டிருந்தவன், முதலில் தேவகி கூறியதைக் கவனிக்கவில்லை. பின்னர்தான், அவள் சொல்வதின் பொருள் முற்று முழுதாக அவனுக்குப் புரிந்தது.

‘தேவகி என்ன உளறுகிறாள்…?’ அநேகாத்மன் எதுவும் புரியாதவனாகத் தேவகியையும், பிரதீபனையும் மாறி மாறிப் பார்த்தான்.

தேவகி கூறுவதை, இரக்கமற்றுக் கேட்டுக்கொண்டிருந்த பிரதீபனுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் எதையும் கேட்க முடிந்திருக்கவில்லை. தன் இரண்டு கரங்களையும் மேல்தூக்கிப் பிடித்தவன்,

“தெரியும்…” என்று முகத்தில் வலி தெரியக் கண்களில் கண்ணீர் குளம் கட்டக் கத்தினான் பிரதீபன். அதுவரை கொதித்துக்கொண்டிருந்த தேவகி அதிர்ச்சியுடன் பிரதீபனைப் பார்க்க,

“தெரியும் தேவகி…. எனக்கு எல்லாம் தெரியும்…” என்ற பிரதீபன் வேகமாகச் சுவர் பக்கமாகத் திரும்பி நின்றான். அவன் முதுகு குலுங்குவதிலிருந்து அவனும் அழுகிறான் என்பதைத் தேவகி புரிந்து கொள்ளத் தன்னையே நம்பமுடியாதவளாக,

“பிரதீபன்…” என்றாள் கலக்கமாக. .

சர்வமகியோ எதுவுமே புரியாதவளாகத் தன் சகோதரர்களைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது வரை காலமும் யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது என்று எத்தனை கவனமாக நடந்துகொண்டாள். எல்லாமே வீணா?

“எனக்குத் தெரியும் தேவகி… அக்கா… அக்கா உயிருக்குப் போராடுகிறாள் என்று எனக்குத் தெரியும்… உடனடியாக அவளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்பதும் எனக்குத்தெரியும்… அதற்கு மருத்துவச் செலவு அதிகம் என்றும் தெரியும்.” என்றவன் வேகமாகத் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்தான் திரும்பி தேவகியைக் கோபமாகப் பார்த்தான்.

“இப்போ கூட அக்காவைத் திட்டியது எதற்குத் தெரியுமா? அக்காவை நான் திட்டினால் அவள் தாங்குவாள். ஆனால், என்னை அவள் ஒரு அடி அடித்தாலும், என்னை அடித்துவிட்டோமே என்கிற வேதனையை அவள் தாங்கமாட்டாள். அதனால்தான் அவளை அப்படித் திட்டினேன். அதுமட்டுமல்ல, அப்படியாவது அவளுக்கு நம் மீது வெறுப்பு வராதா, இருக்கிற காலத்திலாவது அவள் தனக்கென்று ஒரு மகிழ்வான வாழ்க்கையைத் தேடமாட்டாளா என்கிற ஆதங்கத்தில்தான் தாரு மாறாகப் பேசினேன். ஆனால், அவளைத் திட்டும் போது நான்… எவ்வளவு துடித்தேன் தெரியுமா?” என்றவன் கேவினான்

தேவகிக்கு அவள் காதுகளையே நம்ப முடியவில்லை. “ப்ரதீபா…” என்றாள் அவள் தன் தம்பி அழுவதைப் பார்க்கச் சகிக்காதவளாக.

“அதுதான்… நான்… நான் மிஸ்டர்… அநேகாத்மன் தந்தையின் வீட்டில் என் நண்பர்களுடன் திருடப் போனேன்…” என்று கூறிய பிரதீபனின் குரலில் எல்லையில்லா வேதனை கேவலாக வெளி வந்தது.

அவன் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகிக்கொண்டிருந்தது. கலங்கிய அவன் விழிகளில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சர்வமகி தென்பட, வேதனையுடன் அவள் அருகே சென்றான்.

“அக்கா… சாரிக்கா… எனக்கு வேறு வழி தெரியவில்லை… எங்களுக்கு நீ வேண்டும்… உயிரோடு வேண்டும்… அதற்குப் பணம் வேண்டும்… அதனால்தான்… எங்கள் அப்பா கொலைகாரன் என்று குற்றம் சாட்டிய அந்தாள் வீட்டில் திருடப்போனேன்… எனக்குத் தெரியும்… திருட்டு மன்னிக்கக் கூடிய குற்றமல்ல… ஆனால் உன்னைக் காக்கவேண்டுமானால் நான் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தேன்… எனக்கு அந்த நேரம், நீதான் முக்கியமாகத் தெரிந்தாயே தவிர, நான் செய்ய விழைந்ததன் பாரதூரத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை…” என்றவன், திரும்பி, அநேகாத்மனை முறைத்தான்.

“இவர்களால் தானே நம் குடும்பம் சிதைந்தது. இல்லை என்றால், நம் அப்பா இன்னும் உயிரோடு இருந்திருப்பார் அல்லவா….” என்று அவன் கூற தன் தம்பியையே இமைக்காமல் பார்த்தாள் சர்வமகி. தொடர்ந்து தேவகியையும் பார்த்தாள்.

அவர்களுக்குத் தெரியாது என்று எண்ணியிருந்தவளுக்கு அது அப்படி அல்ல என்று தெரிந்ததும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தலையில் குடைந்த வண்டின் வேகம் கூடியது. எங்கோ யாரோ பலம் கொண்ட மட்டும் சுத்தியலால் அடிப்பதுபோல உணர்ந்தாள்.

“ஓ… நோ… இப்போதல்ல… அவள் யோசிக்கவேண்டும்… நிறைய யோசிக்கவேண்டும்… இந்தப் பிரச்சனையை அவள் யோசித்துத்தான் தீர்க்கவேண்டும்…” உடல் முழுவதும் எழுந்த வலியுடன், மனதின் வலியும் சேர்ந்து வாட்ட, தவித்துக்கொண்டிருந்தவளை வெறித்துப் பார்த்தான் அநேகாத்மன்.

அதே நேரம் தேவகி கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த அனேகாத்மனின் உடம்பிலிருந்து அனைத்து குருதியும் வடிந்துசென்றதுபோல, முகம் வெளிறிப்போனது. அவனுக்கு இரு காதுகளும் அடைத்தன… இதயம், இதோ இப்போதே நின்றுவிடுவோம் என்று பயமுறுத்துவதுபோல, கட்டுப்பாட்டையும் மீறி தாறுமாறாகத் துடித்தது.

எப்படியோ தன்னைச் சமாளித்தவன், சர்வமகியின் முன்னால் வந்து நின்றான். அவளுடைய இரு தோள்களையும் தன் கரங்களால் அழுத்தமாகப் பற்றியவன்,

“வட் த ஹெல் ஹப்பினிங் ஹியர்? உனக்கு என்ன பிரச்சனை? அவர்கள் என்ன உளறுகிறார்கள்? உனக்கு ஏன் சத்திர சிகிச்சை செய்யவேண்டும்? எதற்காகச் செய்யவேண்டும்? கேட்கிறேன் அல்லவா?” என்று கோபத்துடன் அவளை உலுப்ப, சர்வமகி தன் தலையை அழுந்தப் பற்றிக்கொண்டாள்.

வேதனையில் மண்டை பிளந்துவிடும் போலிருந்தது.

“மகி…” என்றவன், அவள் நிலையைக் கண்டதும் பயந்தவனாக, அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்தவாறு தேவகியை கையாலாகாத் தனத்துடன் பார்த்தான்.

“மகிக்கு என்னவாகிவிட்டது… நீங்கள் எல்லோரும் என்ன உளறுகிறீர்கள்…” என்றான் அவன் அகோரக் கோபத்துடன். அவனுடைய உடல் பயத்திலும், வேதனையிலும், தவிப்பிலும் நடுங்கியது.

தேவகியோ, அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தன் சகோதரியின் நிலையைக் கண்டவள், நிலைமை புரிந்தவளாக, உடனே செயற்பட்டாள்.

ஓடிப்போய் ஒரு மாத்திரையை எடுத்துவர, பிரதீபனோ தண்ணீரோடு தேவகியின் முன்னால் நின்றிருந்தான்.

அனேகாத்மனின் மார்பில் சரிந்திருந்த சர்வமகியின் வாயில் மருந்தை வைக்க, பிரதீபன் தண்ணீரைக் கவனமாகப் புகட்டிவிட்டான்.

ஒருவாறு மருந்தை விழுங்கிய சர்வமகி, அப்படியே விழிகளை மூடித் தளர்ந்தாள்.

ஒரு நிமிடம் அநேகாத்மனின் சர்வ நாடியும் ஒடுங்கிப்போனது. கீழே விழாவண்ணம் அவளை இறுகத் தன்னோடு அணைத்தவன், அவளைத் தன் கரங்களில், மாலையென ஏந்திக் கொண்டான்.

வேகமாகவும், பெரும் ஓசையுடனும் துடித்த இதயத்தின் ஓசையைக் கேட்ட சர்வமகி தன்னையும் மறந்து அவனுயை சட்டையை அழுந்தப் பற்றி, எதற்கோ பயந்தவளாக, அவன் மார்போடு ஒண்டிக்கொண்டாள்.

மூக்கு விடைக்க, மூச்சுக் காற்று நடுங்க, தன் உடல் உதற, அவளை இறுக அணைத்தவாறு, சோஃபாவின் அருகே சென்றவன், அவளைத் தன் மடியில் இருத்தியவாறே அமர்ந்து கொண்டான்.

அவளின் சோர்ந்த முகம், அவன் மார்பில் நிலைபெற்று நிற்க, இவன் துடித்துப்போனான். வலக்கரம் அவள் தலையிலும், இடக்கரம் அவள் கன்னத்திலும் பதித்துத் தன்னோடு இறுக்கிக்கொண்டவனின் அழுத்தமும், அக் கரம் கொடுத்த பலமும் அவளை இனி ஒரு போதும் தன்னிடமிருந்து பிரித்துச் செல்ல விடாது என்பதைக் கூறாமல் கூறின.

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், குழந்தையென, அவளைத் தன்னோடு இறுகப் பொத்திவைத்திருந்தவனின் உதடுகள் சர்வமகியின் தலையில் அழுந்தப் பதிந்தன. கொஞ்ச நேரம் அநேகாத்மனையே விழிகள் மூடாமல் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, பெருமூச்சொன்றை விட்டவாறு,

“அக்காவை… படுக்கையில் கிடத்தவேண்டும்…” என்றாள் மென்மையாக.

அவனோ எங்கே தனக்குரியதான பொம்மையைப் பறித்துவிடுவார்களோ என்று பதறும் சிறுவன் போன்று, அச்சத்துடன் மறுப்பாக அங்கும் இங்கும் தலையை ஆட்டியவன், மேலும் அவளைத் தன்னுள் புதைக்க முயன்றவனாகத் தன்னோடு இறுக்கிக்கொண்டிருந்தான். அவனுடைய மூச்சுக் காற்றில் கூட நடுக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

பயத்தின் காரணமாக வியர்வை அவன் தலையிலிருந்து வழிந்துகொண்டிருந்தது.

தேவகிக்கு ஓரளவு அநேகாத்மனின் மனநிலை, முன்பே தெரிந்திருந்தாலும், சகோதரி, தமது நல்வாழ்விற்காக, அதனை உதறி எறிந்துவிட்டாள் என்பதை அவள் ஓரளவுக்கு ஊகித்திருந்தாள்.

ஆனால், அநேகாத்மன், தன் சகோதரியின் மீது இத்தனை பெரும் காதலை வைத்திருப்பான் என்று அவள் எண்ணவில்லை. அவன் பதட்டமும், அவளை விட்டுப் பிரியமாட்டேன் என்கிற அவன் மனநிலையும், தனக்குள்ளே அவளைப் புதைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அவன் வெறியும், அவனுடைய ஆழ் மனநிலையை வெட்டவெளிச்சமாக எடுத்துக் காட்டின.

அதே வேளை அந்த மருந்தையும் மீற, சர்வமகி மெல்லியதாக முனங்க,

“ஷ்… ஷ்… இட்ஸ் ஓக்கே… பேபி… இட்ஸ் ஓக்கே… நான் உன் அருகேயிருக்கிறேன் அல்லவா… உனக்கு… ஒன்றுமில்லை… உனக்கு ஒன்றுமே ஆகாதும்மா… ஆகவும் விடமாட்டேன்… ஐ பிராமிஸ் யு… ஐ பிராமிஸ் யு…” என்றவனுக்கு முதன் முதலாக, அவன் குரலும், உடலும் மெல்லியதாக நடுங்கியது. அவளைக் குழந்தை போலத் முதுகை வருடிச் சமாதானப் படுத்தியவாறே, அவள் தலையில் தன் தலையைப் பதித்து, வலமும் இடமுமாக மெதுவாக ஆடினான்.

அவளுடைய உடலில் தெரிந்த மெல்லிய நடுக்கத்தை உணர்ந்தவன், பதறியவாறு, மெதுவாக விலகி, அவள் பூ முகத்தை ஏறிட்டான். தன் கரம் கொண்டு அவள் முகத்தை வருடிக்கொடுத்தவன்,

“என் மகிம்மாவுக்கு என்ன? இங்கே என்ன நடக்கிறது?’ என்றான் பெரும் தவிப்புடன்.

தேவகி அமைதி காக்க,

“சொல்லு தேவகி… சர்வமகிக்கு என்ன? அவளுக்கு என்ன பிரச்சனை?” என்றான் இதயம் வலிக்க, முகம் இறுக.

அநேகாத்மனையே கொஞ்சநேரம் உற்றுப் பார்த்தவள், விழிகளில் நீர் தேங்க, வெளியே வெறித்தாள்.

“அக்காவிற்கு…” என்று அவள் ஏதோ கூற முயல, கூற வேண்டாம் என்றோ, இல்லை, வலித்ததோ, சர்வமகி முனகியவாறு அசைய. உடனேயே அவளுடைய மார்பை வருடிக்கொடுத்தவன்,

“இட்ஸ் ஓக்கே… மகிம்மா… ஒன்றுமில்லை… நீ தூங்கு…” என்று மீண்டும் தன்னோடு இறுக்கி சமாதானப் படுத்தினான்.

சர்வமகி மீண்டும் மருந்தின் வேகத்தால் தூங்கினாலும், அவள் புலன்கள், தம் பேச்சிலேயே நிலைத்திருப்பதை உணர்ந்தவனாகச் சற்று நேரம் அப்படியே இருந்தான்.

அதே நேரம், தேவகி எதையோ கூறவர, தன் உதட்டில் கரம் வைத்து, அவளைப் பேசவேண்டாம் என்று தடுத்தான்.

சர்வமகியை அசைக்காதவாறு தூக்கிக்கொண்டு எழுந்தான்.

“உன் அக்காவின் அறை எது?” என்று மெல்லிய குரலில் கேட்க,

அவனை அழைத்துச் சென்று ஒரு அறையைக் காட்டினாள் தேவகி. அந்த அறையில் தனிக் கட்டிலும், ஒரு பங்க் பெட்டும் இருந்தது. தனிக் கட்டிலில், அவளை மெதுவாகக் கிடத்தி  அவள் அருகே நெருங்கிப் படுத்தாற்போல் அமர்ந்துகொண்டு அவள் தலையை வருடிக்கொடுத்தான்.

வருடிக் கொடுத்தவாறு அவ் அறையைச் சுற்றித் தன் பார்வையைச் செலுத்தியபோதுதான் அவன் கண்களுக்கு அது தட்டுப்பட்டது.

வியப்புடன் சர்வமகியை விட்டு எழுந்தவன், திறந்திருந்த க்ளோசட்டில் உள்ள ஹாங்கரில் தொங்கிக்கொண்டிருந்த அவனுடைய தடித்த கோட்டைக் கண்டவனுக்குப் பெரும் திகைப்பு ஏற்பட்டது. இது அன்று அவள் தன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எடுத்து வந்த கோட் அல்லவா… இன்னுமா இதை வைத்திருக்கிறாள்?’ என்று அவன் வியந்துகொண்டிருக்கும் போதே, தன் சகோதரியைப் பார்க்க உள்ளே வந்தாள் தேவகி. வந்தவளை ஏறிட்டு,

“இது… இந்தக் கோட்…” என்று அவன் சற்றுத் தடுமாற, தன் தோளைக் குலுக்கிய தேவகி,

“அக்கா மனம் சங்கடப்படும் போதெல்லாம், தவிர்க்க முடியாத வேதனை ஏற்படும் போதெல்லாம் இதை அணிந்துகொண்டிருப்பாள்… இதை அவள் கரத்தில் எடுத்தாள் என்றாளே, அவள் மனம் ஏதோ சிக்கலில் தவிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்…” என்று கூறியவாறு சகோதரியின் அருகே வந்தவள், சோர்வுடன் படுத்திருந்தவளின் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தாள். தன் சகோதரியின் நிலையைக் கண்டு, உள்ளம் கசங்க, விழிகளில் கண்ணீர் அடக்கமாட்டாமல் பொங்கியது.

போங்கிய கண்ணீர் வழிந்து, சர்வமகியின் நெற்றியில் விழுந்து தெறிக்க, அவளிடம் மெல்லிய அசைவு தெரிந்தது. அவசரமாகத் தன் கண்ணீரைத் துடைத்தவள், அதற்கு மேல் தன் சகோதரியைப் பார்க்க முடியாது, தொண்டை அடைக்க, அவசரமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள் தேவகி.

தன் தேவதைக்குத் தான் தேவைப்படும் போதெல்லாம், அவனுடைய கோட்டை அணிந்தவாறு தன்னை ஆறுதல் படுத்தியிருக்கிறாள் என்பதை அறிந்த போது அவனால் தாள முடியவில்லை.

பெரும் தவிப்புடன் தன்னவளருகே வந்து, கட்டிலில் கிடைத்த இடைவெளியில் அவளை நெருங்கி அணைத்தவாறு படுத்தவனுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவளுடைய நெற்றியின் மீது தன் நெற்றியைப் பதித்து சற்று நேரம் அப்படியே இருந்தவன், பின் நிமிர்ந்து, தன் புறங்கையால் அவள் கன்னத்தைத் தடவி விட்டான். பின் சற்று விலகி, விரல் கொண்டு, நெற்றியில் பூத்த வியர்வையைத் துடைத்துவிட்டான்.

அவளைக் கட்டிலில் கிடத்தியபோது, மேல் சட்டை மேலேறியிருந்ததால், தெரிந்த வெண்ணிற வயிற்றையும் இடையையும் கண்டு, மேலாடையை இழுத்து விட்டான். இழுத்து விட்ட வலக்கரம், அவள் வயிற்றிலேயே சிறிது நேரம் நிலைபெற்று நிற்க, அவள் முகத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் அநேகாத்மன். அவனையும் அறியாது, அவனுடைய கரம் அவள் வயிற்றையும், அதனுடன் ஓடிய இடையையும் மேலும் கீழுமாக மெதுவாக வருடிக்கொடுத்தது.

அவனுடைய கனிவில், அந்த மயக்க நிலையிலும், சர்வமகியின் தவிப்பு கூடியதோ, அவள் விழிகளின் ஓரமாகக் கண்ணீர் வழிய, வயிற்றில் பதிந்திருந்த வலக்கரத்தை எடுத்து, அக் கண்ணீரை வேகமாகத் துடைத்துவிட்டவன்,

“ஷ்… நான் உனக்குப் பக்கத்திலேயே இருக்கிறேன். எப்போதும் உன் பக்கத்தில்தான் இருப்பேன்… உனக்கு ஒன்றுமாகாதுடா… ஆகவும் விடமாட்டேன்…” என்று திரும்பத் திரும்பச் சொன்னவன் அப்படியே குனிந்து அவள் கன்னத்தில் மெதுவாக முத்தமிட, அதை உணர்ந்தவளாக, சர்வமகியின் அழகிய உதடுகள் மெல்லியதாக மலர்ந்து புன்னகையைச் சிந்த, கூடவே, அந்த மயக்கத்திலும், அவள் முகம், மெல்லிய நாணத்தைப் பூசிக்கொண்டது. அதைக் கண்டதும் அநேகாத்மன் ஆடிப் போனான்.

சர்வமகி அழகி என்பது தெரியும். வாடி வதங்கியிருந்த அந்த நேரத்திலும், தூசி படிந்த ஓவியமாகத்தான் அவள் தெரிந்தாளே அன்றி, அவளிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை. ஆனால், அந்த ஒற்றைப் புன்னகைக் கீற்றில், நாணிய அவள் முகத்தில், அவன் அங்கமெல்லாம் உருகிக் கரைந்து, அவள் காலடியில் விழுந்து விடத் துடித்தது.

“இந்த ஒரு சிரிப்பிற்காக என் உயிரையும் கொடுக்கலாம் மகிம்மா…” என்று கிசுகிசுத்தான் அந்தக் கலாபக் காதலன்.

அவன் குரலைக் கேட்டவாறே, அவள் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விட, அவள் மீது தடித்த போர்வையைப் போர்த்திவிட்டு, அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவனாகவே, அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு, அறையை விட்டு வெளியே வந்தான்.

சத்தம் போடாமல், அவன் வெளியே வந்து அறைக் கதவைச் சாத்தியவன், விழிகளை அழுந்த மூடித் தன்னைச் சமப்படுத்த முயன்றான்.

அவனையும் அறியாமல், அவன் மனம், “அப்பா… எதுவாக இருந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தியை எனக்குக் கொடுங்கள்…” என்று தன் தந்தையை மனதார வேண்டியவன், விழிகளைத் திறந்து, தேவகியை அழுத்தமாகப் பார்த்தான்.

“முன்னறைக்குப் போய் பேசலாம்…” என்று கை காட்ட, இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

“உட்காருங்கள் சார்…” என்றாள் தேவகி.

“இட்ஸ் ஓக்கே… இப்போது சொல்… என் மகிக்கு என்ன?” என்றான் ‘என் மகி’ என்பதில் அழுத்தம் கொடுத்தவாறு.

“என் அக்காவுக்கு மூளையில் கட்டி…” என்று அவளும் ‘என் அக்கா’ என்பதில் அதிக அழுத்தம் கொடுத்து யார்மீதோ கோபப் பட்டவள் போன்று செய்தியைப் போட்டு உடைத்தாள்,

“எ… என்ன என்ன உளறுகிறாய்? சர்வமகிக்கு… நோ… நான் நம்பமாட்டேன்… நீங்கள் எல்லோருமாக ஏதோ திட்டம் பண்ணி…” என்று அவன் முடிப்பதற்குள்ளாக இருக்கையை விட்டு எழுந்தாள் தேவகி.

விடு விடு என்று உள்ளே சென்றவள், வெளியே வந்தபோது ஒரு கோப்புடன் வந்தாள்.

“அதை அநேகாத்மனிடம் நீட்டி, படித்துப் பாருங்கள்… உங்களுக்கே புரியும்…” என்றதும், அதைப் பறிப்பதுபோலப் பிடுங்கியவன் வேகமாக ஒவ்வொரு தாளாகப் பிரித்தான். அவனையும் அறியாமல் அவனுடைய கரங்கள் நடுங்கத் தொடங்கின.

கோப்பின் திகதியைப் பார்த்தான். ஓன்றரை வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

இதுதான் அந்தக் கோப்பிலிருந்தது. சர்வமகியின் மூளையின் முக்கிய பகுதியில் ஒரு கட்டி உருவாகியிருக்கிறது. அது மெதுவாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அது புற்றுநோயாக இருப்பதற்கு வாய்ப்புள்ளதால், உடனடியாக பரிசோதனையைச் செய்து, அக் கட்டியை அகற்றவேண்டும். இல்லை என்றால், மூளைக்குப் போகும் இரத்தோட்டம் தடைப்பட்டு, எந்த நேரமும் கோமாவிற்குப் போக வாய்ப்பிருக்கிறது. கோமாவிற்குப் போனால் அவரைக் காப்பாற்றுவது இயலாத காரியம்…” என்றிருந்தது.

“இது… ப்ரெயின் டியூமர்… இதில் புற்றுநோய் என்று உறுதியாகக் கூறவில்லையே…” என்றான் அவன் வேகமாக.

“புற்றுநோய் என்று கூறவும் இல்லை, புற்றுநோய் இல்லை என்று கூறவும் இல்லை. அதற்கு பரிசோதனை செய்யவேண்டும்.”

“அதை ஏன் செய்யவில்லை?” என்று அவன் சுள் என்று எரிந்து விழுந்தான்.

“அதற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம் சார்… ஒன்று ஏதாவது தவறாக வைத்தியர்கள் சொல்லிவிடுவார்களோ என்று அவள் பயந்திருக்கலாம். இல்லை எங்கே புதிய செலவை இழுத்துவரவேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சியிருக்கலாம்… தான் படுக்கையில் விழுந்தால், எங்களை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று பயந்திருக்கலாம், எங்கள் அக்கா ஒரு போதும் தனக்காக யோசிப்பதேயில்லை…” என்றாள் தேவகி விரக்தியாக.

“டாமிட்… இதற்கேன் பயப்படவேண்டும்? உடனடியாக அறுவைசிகிச்சையைச் செய்யவேண்டியதுதானே… செய்தால் அவள் பிழைத்துக்கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறியிருக்கிறதே.” என்றான் படபடப்புடன்.

“சார்… அக்காக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே எனக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் தெரியும். இதோ இந்த அறிக்கை எடுத்த போதுதான் நான் கண்டுபிடித்தேன்…  ஆனால் அவளுக்கு இந்தப் பிரச்சனை பற்றிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்பே தெரியும். அதை அவள் அலட்சியம் செய்து எங்களுக்கும் மறைத்திருந்திருக்கிறாள். அதன் பிறகு அப்பாவின் பிரச்சனை, எங்களை ஒழுங்காக வளர்க்கவேண்டுமே என்கிற பிரச்சனை எல்லாமே இந்த விஷயத்தைத் தூக்கி ஒரு ஓரமாகப் போடவைத்துவிட்டது.

தவிர இங்கே சத்திர சிகிச்சை செய்வதற்குப் பணம் தேவையில்லைதான். ஆனால் மருத்துவச் செலவுக்கு? ஆரோக்கியமான உணவுக்கு? எல்லாவற்றிற்கும் பணம் வேண்டுமே சார்… அதற்கெல்லாம் எங்கே போவது? இப்போது அருந்தினாளே மருந்து… அதன் விலை என்ன தெரியுமா… ஒரு மருந்தின் விலையே ஐம்பத்தைந்து டாலர்கள். ஒரு பெட்டி மருந்து வாங்கவேண்டுமானால் ஐநூறு டாலர்கள் வேண்டும். இருக்கிற செலவில் தானும் செலவு வைத்துவிடுவோமோ என்கிற பயத்தில் அக்கா மருந்தெடுப்பதே கிடையாது… தாங்க முடியாது தலை வலித்தால் மட்டும் எங்களுக்குத் தெரியாமல் ஒன்றை முழுங்கி வைப்பாள்.” என்றவள் ஏக்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள்.

“எங்கே எங்களுக்குத் தெரிந்தால் நாம் பயந்துவிடுவோம் என்று அஞ்சி இது வரை தன் வேதனையை வெளியே காட்டவில்லை சார். இதை நானாகத்தான் கண்டுபிடித்தேன். எனக்குத் தெரிந்துவிட்டது என்கிற உண்மையை அறிந்தால் அவள் வருந்துவாளோ என்கிற எண்ணத்தில்தான் எனக்குத் தெரிந்தும் அதை வெளிக்காட்டாமல் எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன். அக்காவிற்கு எப்படியாவது அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்பதால் நான் வேலைக்குப் போகத் தொடங்கினேன். பணம் சேர்க்கத் தொடங்கினேன். அக்காவின் பாரத்தைக் குறைக்க முயன்றேன்…” என்றவளின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.

அந்த நேரம் பிரதீபனும் தேவகியின் அருகே பெரும் தயக்கத்துடன் வந்து நின்றான்.

“அக்காக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை எதேச்சையாகத்தான் அவள் மருத்துவ ஃபைலைக் கண்டு அறிந்தேன் தேவகி. அறிந்ததும் எனக்குப் பெரும் அதிர்ச்சிதான். இன்டர் நெட்டில் இதற்கான சிகிச்சைகளைப் பற்றி வாசித்துத் தெரிந்துகொண்டேன்… இத்தகைய அறுவைசிகிச்சை யேர்மனியில் எண்பது வீதம் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. அதனால் சிகிச்சைக்கு அவளை அங்கே அழைத்துச் செல்வது நல்லது என்று எண்ணினேன். அதற்குரிய பணத்திற்கு எங்கே போவது என்றுதான் தெரியவில்லை. எப்படியாவது அக்காவைப் பிழைக்கவைக்க வேண்டும் என்கிற வெறி மட்டும்தான் என் நினைவிலிருந்தது. என் வயதிற்கு யார் வேலை தரப்போகிறார்கள்… சொல்லு… என் நண்பர்களிடம் எனக்கு வேலை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டேன். என் அவசரத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள்தான் இந்த யோசனையைச் சொன்னார்கள்.” என்று தேவகியைப் பார்த்துக் கூறியவன், திரும்பி அநேகாத்மனைப் பார்த்து,

“உங்கள் மீது எனக்கு ஆத்திரம் இருந்தது உண்மை சார்… அதுதான் உங்கள் வீட்டைத் தேர்வுசெய்து திருடவந்தேன்… அதற்காக உங்களிடம் நான் நிச்சயம் மன்னிப்புக் கேட்கமாட்டேன்… என் தந்தையின் இறப்புக்குக் காரணம் நீங்கள்… நீங்கள் மட்டும்தான். எந்தத் தவறும் செய்யாத என் தந்தைக்குத் தண்டனையென்றால், என் தந்தையைக் கொலைக் குற்றவாளியாக்கிய உங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது? அதுதான் உங்கள் வீடு என்று நினைத்து, உங்கள் தந்தையின் வீட்டில் திருடவந்தேன்” என்றவன் தான் ஒரு ஆண் என்பதையும் மறந்து அழத் தொடங்கினான்.

அநேகாத்மனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர்களுடன் ஒப்பிடும் போது, தான் ஏதோ அந்நியப்பட்டது போன்ற உணர்வில் தவித்துப்போனான்.

தன் கரத்திலிருந்த கோப்பை அருகேயிருந்த மேசையில் வைத்தான். அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை. எல்லாமே அவன் மூளையிலிருந்து அழிந்ததுபோல, எல்லாமே மாறியது போல, ஒன்றுமே இல்லாததுபோலத் தோன்றியது.

சர்வமகிக்கு ஆபத்து. இது மட்டுமே அவன் மூளையை நிரப்பிவைத்துக்கொண்டிருந்தது. வேகமாக இருக்கையை விட்டு எழுந்தவன், எதனையோ கண்டு பயந்தவனா, எதற்கோ அஞ்சியவனாக எதையோ காணப் பிடிக்காதவனாக, எதிலிருந்தோ தப்புபவனாக, அந்த வீட்டைவிட்டு வேகமாக வெளியேறினான்.

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!