(28)
மேலும் இரு நாட்கள் கழிய திரும்ப விதுரனைப் பார்க்கவேண்டும் என்று தொடங்கி விட்டாள் விதரணை.
அதைக் கேட்டவனின் முகம் சட்டென்று இறுகிப்போனது.
“எதற்கு…? திரும்பவும் உணர்ச்சிவசப்பட்டு இரத்த அழுத்தத்தைக் கூட்டவா? முதலில் உடல் தேறி வா… அதற்குப் பிறகு அவனைப் பார்க்கலாம்…” முடிவாகச் சொல்ல, அந்த நிலையிலும் அவனை வெறுப்போடு பார்த்தாள் விதரணை.
“என் தம்பியைப் பார்ப்பதைத் தடுக்க நீங்கள் யார்…? இனி எனக்கென்று இருப்பவன் அவன் ஒருவன்தான். நான் அவனைப் பார்க்க வேண்டும்…” என்று அழுத்தமாகவும், கூடவே சற்று குரலை உயர்த்தியும் சொல்ல… அதைக் கேட்டு அவனுக்குக் கோபம் எழவே செய்தது.
ஏற்கனவே அவன் மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. இன்னும் அந்தக் கொலையாளி பிடிபடவில்லை. அவனைப் பிடித்தால் தான் இதற்குப் பின்னாலிருக்கும் காரணம் யார் என்று தெரியும்… இதில் அறிவழகன் வேலை செய்த பயோ-பார்மா நிறுவனத்தில் தவறில்லை என்று வேறு வருண் சொல்லியிருந்தான். சரி, இவனே சென்று விசாரிக்கலாம் என்றாலும், இவளை இங்கேயே தனியே விட்டுவிட்டுச் செல்லத் தயக்கமாக இருந்தது. இவன் இல்லாத நேரத்தில் யாராவது உள்ளே புகுந்துவிட்டால்…? அந்த நினைவே அவனைக் கலக்கமடையச் செய்தது. இதில் இவள் வேறு ‘விதுரன், விதுரன்’ என்று புலம்புகிறாள். இதோ சும்மா பேசுவதற்கே காயத்தில் வலி ஏறி முகம் கசங்குகிறாள். இதில் விதுரனைக் கண்டால் சொல்லவும் தேவையில்லை!
பற்களைக் கடித்தவன்,
“விதரணை… இப்போதுதான் கொஞ்சமாவது உடல் தேறி வருகிறாய். ஆனால், மனதளவில் இன்னும் தடுமாற்றத்தோடு இருக்கிறாய். தேறுவதற்கு கொஞ்சம் நேரம் கொடு. உன் தம்பியைத் திரும்பப் பார்க்கும் திடம் உனக்கு வந்ததும் நிச்சயமாக அழைத்து வருகிறேன்…” என்று அவன் உறுதியுடன் சொல்ல…
“இல்லை… நான்…” அவள் முடிக்கவில்லை; அவளுடைய உதட்டில் தன் சுட்டுவிரலை வைத்து அவள் பேச்சைத் தடுத்தான் ஏற்றமாதிபன்.
“போதும்… நீ நன்றாகி வராமல் அவனை அழைத்து வரமாட்டேன். பேசும்போதே காயத்தின் வலியில் முகம் சுணங்குகிறாய். இதில் தம்பியை வேறு பார்க்கப் போகிறாளாம்…” அவன் சொல்லும் போதே, அந்த அறைக்குக் காலை உணவுத் தட்டை ஏந்தியவாறு ஒரு பணியாளர் வந்தார். அவரிடம் தட்டை வாங்கிவிட்டு, அனுப்பியவன்,
“நீ உட்கார்ந்து சாப்பிடப் போகிறாயா, இல்லை இப்படியே படுக்கையில் அமர்ந்து சாப்பிடப் போகிறாயா?” என்று கேட்டான்.
விதரணைக்கோ சாப்பிடச் சுத்தமாகப் பிடிக்க வில்லை. வேண்டாம் என்று மறுக்க… அவளுடைய மறுப்பைச் சற்றும் கருத்தில் எடுக்காதவனாக, சாப்பாட்டுத் தட்டை வைக்கும் வண்டிலை இழுத்துக் கொண்டு அவளுக்கு அருகே வந்தான். அதில் உணவுத் தட்டை வைத்து, அவள் சுலபமாகச் சாப்பிடும் வகையில் கட்டிலை உயர்த்திவிட்டு, வண்டிலை உள்ளே தள்ளி அவள் சாப்பிட வசதி செய்து கொடுக்க… விதரணையோ அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நான்தான் வேண்டாம் என்று…” அவள் முடிக்க வில்லை; ஒரு கரண்டி சூப்பை அள்ளி எடுத்து அவள் வாயில் திணித்திருந்தான் ஏற்றமாதிபன். வேறு வழியில்லாமல் அவன் ஊட்டியதை முழுதாக விழுங்கிக் கொண்டாள் விதரணை. அவன் அடுத்த வாயும் கரண்டியால் அள்ளத் தொடங்க, அவன் கரத்திலிருந்த கரண்டியைப் பறித்தவள்,
“உங்களுக்கு வேறு வேலையே இல்லையா? எதற்கு இங்கேயே அடைகாக்கும் கோழி போல இருக்கிறீர்கள்…? உங்கள் காதலி… அதுதான் அந்த ஜாஸ்மின் தேட மாட்டாளா?” வெறுப்பும் எரிச்சலுமாக அவசரமாகக் கேட்க… ஏற்றமாதிபன் தலை சரிந்து அவளைப் பார்த்து மென்னகை ஒன்று புரிந்தான்.
“உனக்கு நான் போக வேண்டுமா, இல்லை ஜாஸ்மினைப் பற்றி அறிய வேண்டுமா?” என்று புருவங்களைத் தூக்கிக் கேட்க… அவனை முறைத்தாள் விதரணை.
“உங்கள் காதலைப் பற்றி அறிந்து நான் என்ன செய்யப்போகிறேன்? எனக்கு உங்களைப் பார்க்கப் பிடிக்கவில்லை. தயவுசெய்து வெளியே போங்களேன்..” இப்போது அவள் குரலை உயர்த்திய போது, அவளுடைய விழிகளில் கண்ணீர் பொங்கத் தொடங்கியிருந்தது.
அவளுடைய நிலை அவனுக்குப் புரியவே செய்தது. பெற்றவர்களை இழந்தாயிற்று; கூடப் பிறந்தவனைப் பார்க்க முடியவில்லை; காதலனாக நினைத்தவனோ அந்நியனாக இருக்கிறான். மொத்தத்தில் அநாதை போல உணரும் அவளிடம் என்ன விளக்கத்தைச் சொல்ல முடியும்? இதோ, இப்போது கூட அவளிடம் உண்மையைச் சொல்லி விடலாம்தான். அவளை உயிருக்கும் மேலாகத் தான் காதலிப்பதாகத் தெரிவிக்கலாம்தான். அதை அவள் நம்புவாளா என்கிற கேள்வி ஒரு பக்கமிருக்க, அவளிருக்கும் மனநிலையில் அவன் காதலை அவள் ஏற்றுக்கொள்வாளா என்பது அடுத்த கேள்வி. நிச்சயமாக விதரணை ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் மீது பரிதாபப்பட்டுத்தான் இந்த முடிவை அவன் எடுப்பதாக நினைப்பாள். வேண்டாம்! அவள் நன்றாகக் குணமாகட்டும்; அவன் பிறகு அவனுடைய காதலை அவளுக்குச் சொன்னால் புரிந்து கொள்வாள்.
முடிவு செய்தவனாக,
“ப்ச்.. உன்னை இங்கே தனியே விட்டுவிட்டு எங்கே போவது?” என்று கேட்டவன், பக்கத்திலிருந்த இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்தவாறு,
“சாப்பிடு விதரணை. அப்போதுதான் உடல் நிலை விரைவாகவே சரியாகும். வீட்டிற்கும் போக முடியும்…” என்றான். அவன் சொல்ல, வலியோடு ஒரு வாய் சூப் வைக்க முயன்றாள். ஆனால், கண்ணீர்தான் கொடகொடவென்று கொட்டத் தொடங்கியது. மறுகணம் கரத்திலிருந்த கரண்டியைப் கீழே போட்டவள், சட்டென்று கரத்தால் முகத்தைப் பொத்தி விம்மி அழத் தொடங்க… மின்னல் வேகத்தில் அவளை நோக்கி வந்துவிட்டிருந்தான் ஏற்றமாதிபன்.
உணவு வண்டியை இழுத்துத் தள்ளிவிட்டவன், அவளுக்கு அருகே அமர்ந்து அழுதவளை இழுத்துத் தன் மார்பில் போட்டுக்கொள்ள… அவளோ அவனிடம் தஞ்சம் புகப் பிடிக்காமல் திமிறி விடுபட முயன்றாள். அவனோ அவள் தலையையும் உடலையும் பலமாக இழுத்துத் தன் மார்பில் போட்டு இறுக அணைத்துக் கொள்ள… மெல்ல மெல்ல அவள் அழுகை நின்று போனது.
இப்போது அவளை விட்டு விலகி, அவள் கண்ணீரை மென்மையாகத் தன் கரத்தால் துடைத்து விட்டவன், மீண்டும் வண்டிலை இழுத்துவந்து அவளை உண்ண வைக்க முயன்றான். இவளோ தவித்தாள். அவளுக்கு இந்த வலியிலிருந்து எப்படி மீண்டு வருவதென்றே தெரியவில்லை.
பரிதாபமாக அவனைப் பார்த்தவள், “என்னால் முடியவில்லை.. நான் என்ன செய்யட்டும்… ரொம்ப பலவீனமாக உணர்கிறேன்… என்னால் நானாகவே இருக்க முடியவில்லை… செத்துப் போக வேண்டும் போல இருக்கு…” அவள் முடிக்கவில்லை; பாய்ந்து வந்து அவள் கரங்களைப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன்.
“டோன்ட்… டோன்ட் சே தட் xxxx வேர்ட்…” என்று சீற்றமாகச் சொன்னவன், சிரமப்பட்டுத் தன்னை அடக்கியவனாக,
“இதோ பார் விதரணை… செத்துப்போவது அனைத்துக்கும் தீர்வாகாது… ஒத்துக் கொள்கிறேன். உன் இழப்பு பாரதூரமானதுதான்… ஆனால், மாற்ற முடியாதது. நடந்தது நடந்துவிட்டது. பிடிக்கிறதோ இல்லையோ வாழ்ந்தே ஆகவேண்டும்… புரிந்து கொள்…” என்று அவன் சொல்ல… அவளோ மறுப்பாக எதையோ சொல்ல வந்தாள்.
“போதும் விதரணை… இதற்கு மேல் எதுவும் பேசாதே. முதலில் சாப்பிடு…” என்று எழுந்தவன், உணவுத் தட்டைக் கரங்களில் எடுக்க முயல, வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது.
நிமிர்ந்து பார்க்க, அங்கே வின்சன்ட் மேத்யூவோடு சேர்த்து மேலும் மூன்று காவலர்கள் ஒன்டாரியோ காவலருக்கான கருநீலச் சீருடை அணிந்து கம்பீரமாக வந்துகொண்டிருந்தார்கள்.
அவர்களைக் கண்டதும், “ஹாய்.. வின்சன்.. ஹவ் ஆர் யூ…?” கேட்டவாறு, வண்டியைச் சரியாக விதரணைக்கு முன்பாக நிறுத்திவிட்டு விலகித் தன் கரத்தை நீட்டினான். அவன் கரத்தைப் பற்றிக் குலுக்கிய வின்சன்,
“ஃபைன் ஆதிபன். அண்ட் ஹவ் ஆர் யூ…” என்று சுமுகமான பேச்சுகளுக்குப் பின்பாக விதரணையை ஏறிட்டார்.
அவருக்கு இந்த வழக்கினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றால் விதரணையின் ஒத்துழைப்புத் தேவை. இத்தனை நாளும் விதரணை மருத்தத்துவ இரீதியாக அவருடைய விசாரணைக்குத் தயாராக இல்லை என்று மருத்துவர் அறிக்கை கொடுத்திருந்தார். இப்போதுதான் அவளைப் பார்த்துப் பேச மருத்துவமனை அனுமதி கொடுத்து இருக்கிறது. உடனே வந்துவிட்டார் வின்சன்.
நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தவர், “இப்போது எப்படி இருக்கிறார்கள் ஆதிபன்…?” என்றார் சிவந்த முகமும் கலங்கிய விழிகளுமாக இருந்தவளைச் சுட்டிக்காட்டி.
ஒரு பெருமூச்சு விட்டவன், “உடலளவில் ஓரளவு தேறிவிட்டாள். ஆனால், மனதளவில் இன்னும் அந்த அழுத்தத்திலிருந்து வெளியேறவில்லை… நிறையக் குழம்பியிருக்கிறாள்… எதையும் அவளால் சரியாக நினைவுபடுத்த முடியவில்லை. பேச்செடுத்தால் அழுகிறாள்…” என்றான் அவள் நிலையை அவர்களுக்குப் புரியவைத்துவிடும் நோக்கத்தில்.
அதைக் கேட்டுத் தலையசைத்த வின்சன், “ம்.. புரிகிறது… ஆனால் இந்த கேசை முன்னெடுத்துச் செல்வதாக இருந்தால், இவர்களிடம் ஒரு சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கிறது. இவர்கள் பதில் சொல்லும் நிலையில்தானே இருக்கிறார்கள்?” என்று ஏற்றமாதிபனிடம் கேட்க… ஒரு கணம் தயங்கினான் அவன். முன்தினம் கேட்டுத்தான் அவள் உருத்திரதாண்டவம் ஆடினாளே! ஆனால், மறுப்பதற்கு இவனுக்கு அதிகாரமில்லை. அதுவும் மருத்துவர்கள் சரி சொன்ன பின் தடுக்கும் அதிகாரம் அவனுக்கில்லை.
பெருமூச்சோடு தலையசைத்தவன், “முயற்சி செய்து பாருங்கள்…” என்றான் சுருக்கமாக.
நன்றி சொன்னவர், பக்கத்தில் இருந்த இருக்கையைப் போட்டுவிட்டு விதரணையைக் கனிவாகப் பார்த்தார்.
“உங்களின் இழப்பை எண்ணி நிஜமாகவே வருந்துகிறோம்…” அவர் சொல்ல… விரக்தியில் விழிகள் கலங்கினாள் விதரணை. கூடவே ஏற்றமாதிபனைத்தான் பரிதாபமாகப் பார்த்தாள்; அவள் உடல் நடுங்கியது. தன்னையும் மறந்து ஏற்றமாதிபனை நோக்கிக் கரத்தை உயர்த்த… நெருங்கி வந்து அவள் கரத்தை அழுந்தப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன். இது எதுவும் வின்சன்டின் விழிகளிலிருந்து தப்பவில்லை!
அவன் கரத்தைப் பற்றிக்கொண்டதுதான் தாமதம், ஆக்டோபஸ் போல அவன் முழுக் கையையும் தன் கரங்களால் உருட்டிப் பிடித்து மார்போடு அணைத்துக்கொண்டவளின் நகம், அவன் மேல்கைத் தசையை வலிக்குமாறு அழுத்தியது. நிமிர்ந்து ஏற்றமாதிபனைப் பார்த்தவள், ‘எதையும் கேட்க வேண்டாம் என்று சொல்லேன்…’ என்று கெஞ்சலாக விழிகளினூடாகக் கேட்க… அவனோ தன் கரத்தை வளைத்துப் பிடித்தவளின் கரங்களின் மீது தன் மறுகரத்தை வைத்து,
“விதரணை… அவர்கள் கேட்கும் கேள்விக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். சொன்னால் தான் அவர்களாலும் இந்த வழக்கைப் பற்றிய ஒரு முடிவுக்கு வர முடியும். புரிந்து கொள்…” என்று அவன் மென்மையாகச் சொல்ல… இவளோ அவன் உடலோடு ஒட்டி நின்றவாறு மறுப்பாகத் தலையசைத்தாள்.
பின் அந்தக் காவலர்களைப் பார்த்து, “எனக்கு எதுவும் நினைவில்லை… லீவ் மி அலோன்… ஏற்றன்… அவர்களைப் போகச் சொல்லுங்கள்… ஐயோ… என்னைக் கொஞ்சம் நிம்மதியாக இருக்க விடுங்களேன்…” என்று அவள் சத்தமாகக் கத்த… அதற்கு மேல் விசாரணை என்று அவளைக் குடையவில்லை காவலர்கள். அவளுடைய அந்த நிலை அவர்களுக்குப் புரியவே செய்தது. இப்படி எத்தனை பேரைப் பார்த்திருப்பார்கள்.
உடனே இருக்கையை விட்டு எழுந்தவர்கள்,
“ஹனி… இட்ஸ் ஓகே… டோன்ட் வொரி… நாங்கள் உன்னிடம் எதுவும் கேட்கவில்லை… சரியா… உன்னை அமைதிப்படுத்திக் கொள்…” என்றவர், ஏற்றாமதிபனைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு வெளியேறினார்.
அவளோ இன்னும் அவனோடு ஒன்றிக் கொண்டு, “எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும்… அப்பாவிடம் போக வேண்டும்… அவர்கள் எங்கே…” என்றாள் குழப்பமும் அழுகையுமாக.
உடனே அவளைத் தன்னிடமிருந்து விலக்க முயல… அவளோ மேலும் அவனை இறுக்கிப் பற்றியவாறு அவனுக்குள் புதைய முயன்றாள். அவளை அணைத்தவாறே அந்தப் படுக்கையில் சாய்ந்தவன்,
“போகலாம்… போகலாம்… முதலில் அமைதியாகு…” என்று அவளைத் தட்டிக்கொடுத்து அசுவாசப் படுத்த, கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய உடல் தளர்ந்தது. அதை உணர்ந்து குனிந்து பார்த்தான். விழிகள் திறந்திருந்தாலும், அவள் குழப்பமும் தவிப்பும் நன்றாகவே குறைந்திருந்தது. சற்று நேரம் அப்படியே கிடந்தவள், அவளையும் மீறி விழிகள் உறங்குவதற்காக மூடிக்கொள்ள… மெதுவாக அவளை விட்டு விலகியவன், அவள் மீது போர்வையைப் போர்த்திவிட்டு வெளியே வந்தான். வாசலில் வின்சனும் அவர் உதவியாளர்களும் இவனுக்காகத் தான் காத்திருந்தார்கள்.
“சாரி ஏற்றமாதிபன்… எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை…” அவர் சொல்ல… இவனும் காவலதிகாரிதானே, இவனுக்குத் தெரியாதா அவர்களின் நிலைமை!
“புரிகிறது… ஆனால் இவள் இழப்பு ஒன்றும் சாதாரணமானது அல்லவே! கண் முன்னால் பெற்றவர்களின் மரணத்தைப் பார்த்திருக்கிறாள்; அவளும் செத்துப்பிழைத்து வந்திருக்கிறாள். இது சரியாகக் காலங்கள் எடுக்கும்…” என்று சொல்ல…
“ஆமாம்.. நீங்கள் சொல்வது சரியே…… ஆனால் என் பக்கத்து அறிக்கையை ஒப்படைத்தால்தான் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும்… உங்களிடமாவது ஏதாவது சொன்னார்களா ஆதிபன்?” என்றார் ஆவலாக.
இவனோ உதடுகளைப் பிதுக்கிவிட்டு, “இன்னும் இல்லை வின்சன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இரண்டு மூன்று முறை முயன்றேன். ஆனால், கேட்கும் போதெல்லாம் அவள் தன்னிலையை இழக்கிறாள். அவளால் சரியாக யோசிக்க முடியவில்லை…” என்று அவன் சொல்ல… பெருமூச்சோடு தலையசைத்தார் வின்சன்.
“இவர்கள் பதில் சொல்லாமல் எங்களால் அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியாது…” என்று அவர் கூற… தலையசைத்தவன், “விதுரனும் பதில் சொல்லும் நிலையில் இல்லை…” என்றான் கவலையாக.
“ம்… அவரிடமும் விசாரிப்பது பற்றி மருத்துவரிடம் பேசினேன். ஆனால், தற்போதைக்கு அவரிடம் பேசுவது பலன் அளிக்காது என்று மருத்துவர்கள் சொன்னார்கள். தாய் தந்தைக்கு நடந்த அதிர்ச்சியால் ‘டிசோசியேட்டிவ் அம்னீசியா’ (Dissociative Amnesia) என்கிறார்கள். தாங்க முடியாத ஒரு கொடூரமான சம்பவத்தையோ அல்லது வலியையோ ஒருவனால் எதிர்கொள்ள முடியாமல் போகும்போது, அவனது மூளை தற்காப்புக்காக அந்த குறிப்பிட்ட நினைவுகளை மட்டும் ஒரு இருட்டறைக்குள் பூட்டி மறைத்துவிடும். அந்த அதிர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் போதுதான் அவனால் தெளிவாக எதையும் கூற முடியும். அதுவரை அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றிருக்கிறார்கள்… மருத்துவரின் உத்தரவை மீற முடியாது…” அவர் சொல்ல… தலையை அசைத்தான் ஏற்றமாதிபன்.
“ம்… நானும் விதுரனிடம் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். அவனுக்கு பெற்றவர்களின் மரணம் மட்டும்தான் நினைவிருக்கிறது. மற்றும்படி என்ன நடந்தது என்பதை அவனால் மீட்டெடுக்க முடியவில்லை. வீட்டில் ஒடுங்கித்தான் இருக்கிறான். விதரணையிடம் மட்டும் கொஞ்சம் வெளிப்படையாக இருந்தது போல இருந்தது… ஆனால் அவனைக் கண்டால் இவள் நிலை மோசமாகிறது…” என்றவன், இரண்டு தினங்களுக்கு முன்பாக விதுரன் வந்ததும், அதற்குப் பிறகு நடந்ததையும் சுருக்கமாகச் சொன்னான். அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஏற்றமாதிபனின் கைப்பேசி அடித்தது.
உடனே எடுத்துப் பார்க்க, வருண்தான் அழைத்திருந்தான். நேற்றிலிருந்து அவன் ஆவலாகக் காத்திருந்த அழைப்பு; ஆனால், தவறான நேரத்தில் வந்திருக்கிறது. சிரமப்பட்டுத் தன் முகபாவனையில் எதையும் வெளிக்காட்டாமல் கைப்பேசியை அணைத்தவன், நிமிர்ந்து காவலதிகாரியைப் பார்க்க… அவருடைய விழிகளில் கூர்மை தென்பட்டது.
“நீங்கள் எடுத்துப் பேசலாமே…” அவர் சொல்ல… தோள்களைக் குலுக்கியவன்,
“அத்தனை முக்கிய அழைப்பில்லை வின்சன்.” என்று சொல்லும் போதே திரும்பவும் அவனுடைய கைப்பேசி அழைத்தது. அதுவே சொன்னது வருண் முக்கியமான தகவலுக்காகத்தான் அழைக்கிறான் என்று! ஆனால், இந்தக் காவலருக்கு முன்பாக எடுத்துப் பேச முடியவில்லை அவனால். தனிப்பட்ட முறையில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க அவன் முயல்கிறான் என்று தெரிந்தால், அப்படிச் செய்ய அதிகாரமில்லை, உடனடியாக அந்த முயற்சியைக் கைவிடு என்று தேவையற்ற எச்சரிக்கை வரும். அவன் என்ன செய்தாலும் அதைச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். இப்போதைக்கு அவனுடைய முயற்சி யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தவன், மீண்டும் கைப்பேசியை அணைத்துவிட்டுக் காவலரைப் பார்த்தான்.
வின்சனின் காவலர் புத்தி சந்தேகப்படத் தூண்டியது. அந்தச் சந்தேகத்தோடு அவனை ஏறிட்டவர், “அவசரமான அழைப்பு இல்லையென்றால் எதற்காகத் திரும்பத் திரும்ப அழைக்கிறார்கள்…?” என்று அவர் கேட்க… சலிப்பாக உச்சுக் கொட்டியவன்,
“என் நண்பன்தான் அழைக்கிறான் வின்சன். எனக்குக் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அதற்கு வா என்று நிற்கிறான்…” என்று அவன் பொய்யுரைக்க… அதை நம்பிய வின்சன் கொஞ்சம் தெளிந்தவராக,
“அதற்குப் போய் வாருங்கள் ஆதிபன்… உங்களுக்கு அது நிச்சயம் தேவை…” என்றவர் விடைபெற்றுச் செல்ல… அவர் செல்லும் வரை பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு இருந்தவன், அவன் கண்ணை விட்டு மறைந்ததும் பரபரப்போடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,
“என்னாச்சு வருண்… கண்டுபிடித்துவிட்டாயா?” என்றான் பரபரப்பாக.
வருணும் அவனுடைய நேரத்தை அதிகம் சோதிக்கவில்லை. “நம்ம பழைய குடோனுக்கு வா ஆதிபா…!” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் ஏற்றமாதிபனின் முகத்தில் ஒருவிதப் பளபளப்பு. அந்தப் பளபளப்பு இரையைக் கண்டுவிட்ட ஒரு சிங்கத்தின் பளபளப்பு!
அந்தத் திருப்தியோடு விதரணையைப் பார்த்தான்; அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். இப்போதைக்கு எழும்ப மாட்டாள் என்பது நிச்சயம். தன் கைப் பேசியை எடுத்து ஒருவருக்கு,
“உன் உதவி தேவை…” என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்ப… அடுத்த கணம், “எப்போது?” என்று வந்தது.
“இப்போதே… முடிந்தால் விரைவாக…” என்று அடுத்த குறுஞ்செய்தியை அனுப்பிவிட… இரண்டு விநாடி தாமதத்திற்குப் பிறகு, “பத்து நிமிடங்களில்…” என்று பதில் வந்தது.
“சரி…” என்று மீள் பதில் அனுப்பியவன், விதரணையின் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.
சரியாகப் பத்து நிமிடங்கள் கழிய, அறையை விட்டு வெளியே வந்தான். அந்த அறைக்கு முன்பாக ஒரு இருக்கையில் நாளிதழ் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த நபரை உற்றுப் பார்த்தான். அவரும் தன் கையிலிருந்த நாளிதழைச் சற்று இறக்கிவிட்டு ஏற்றமாதிபனைப் பார்த்தார். அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது அவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்று! ஒரு விநாடி இருவரின் விழிகளும் மோதிக்கொள்ள… அவர் ஏற்றமாதிபன் மட்டும் பார்க்கும் வகையில் தலையை மேலும் கீழும் அசைத்துவிட்டு மீண்டும் நாளிதழைப் படிக்கத் தொடங்க… அடுத்து மின்னல் வேகத்தில் மருத்துவ மனையை விட்டு வெளியே வந்தான் ஏற்றமாதிபன்.
அடுத்த அரை மணிநேரத்தில் அந்தக் காட்டுக்குள் நுழைந்த ஏற்றமாதிபனின் வாகனம், அங்கே பாழடைந்து கிடந்த குடோன் முன்பாக வந்து நின்றது. வேகமாக வண்டியை விட்டு வெளியே வந்தவன், குடோனை நோக்கி நகரத் தொடங்கினான். துருப்பிடித்த நிலையிலிருந்த அந்தக் கதவுகளைத் திறந்த போது ஏற்படுத்திய அந்த இரும்பின் ஓசை அங்கிருந்த அமைதியைக் குலைக்க, உள்ளே நுழைந்தான்.
அங்கே உடைபட்ட ஜன்னல்களின் ஊடாக வந்த காட்டு வெளிச்சத்தில், கூரையிலிருந்து கீழே கட்டப்பட்டிருந்த இரும்புச் சங்கிலியில் தலைகீழாக நிர்வாணக் கோலத்தில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தான் அந்தச் சீன நபர். ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான் என்பதற்குச் சான்றாக அவனுடைய முகம் வீங்கி, இரத்தம் உறைந்து போயிருந்தது. அவன் தண்ணீரில் அமுக்கப்பட்டிருக்கிறான் என்பதற்கு ஆதாரமாக அவனது வியர்வையோடு சேர்ந்து நீர் கொட்டிக் கொண்டிருக்க… அவனுக்குக் கீழே ஒரு பெரிய பீப்பாயில் (Barrell) இரத்தம் கலந்த நிலையில் தண்ணீர் முக்கால்வாசிக்குக் கிடந்தது. தரை முழுக்க அவனை முக்கி எடுத்ததில் நீர் பரவிக் கிடந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்பு செவிலியர் உடையில் வலம் வந்த அந்த நளினம் இப்போது அவனிடம் இல்லை; பதிலுக்கு அவன் முகத்தில் மரண பயம் அப்பட்டமாகத் தெரிய… அவனையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் வருண்.
“டேய்… அவன் வந்து உன் மீது கைவைப்பதற்கு முன்பாக உண்மையைச் சொன்னால் கொஞ்சம் வலி இல்லாமல் தப்பித்துக் கொள்வாய்… அவன் கையில் மட்டும் நீ சிக்கினால், சத்தியமாகச் சொல்கிறேன் உன் உயிருக்கு நான் உத்தரவாதமில்லை. உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன். உண்மையைச் சொல்லிவிடு…” என்று வருண் சொல்ல… அதைக் கேட்டவாறே நிதானமான நடையோடு அவர்களை நெருங்கி வந்தான் ஏற்றமாதிபன்.
“ஏதாவது சொன்னானா வருண்…?” கேட்டவன், சற்றுத் தள்ளியிருந்த மேசையிலிருந்த கையுறைப் பெட்டியிலிருந்து இரண்டு கையுறைகளை எடுத்துக் கரங்களில் அணிந்தவாறு, அவனுக்கு நேராக ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான் ஏற்றமாதிபன்.
கையுறைகளைச் சரியாக்கியவாறு நிமிர்ந்து தொங்கிக்கொண்டிருந்தவனைப் பார்த்தான். அவன் விழிகள் மூடியிருந்தன.
திரும்பி வருணை ஏறிட… வருண் அவன் பார்வையை வைத்தே என்ன கேட்கிறான் என்பதைப் புரிந்துகொண்டவனாக, மடிக்கணினியை எடுத்து ஏற்றமாதிபனிடம் கொடுக்க… அதிலிருந்த அந்த குற்றவாளியின் விபரங்களைப் படித்துவிட்டு வியப்பில் புருவங்களை உயர்த்தியவன், மீண்டும் மடிக்கணினியை வருணிடம் நீட்டிவிட்டுத் தொங்கிக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தான்.
“சென்-வாங்… இதுதான் உன் பெயரா…? ஏன்டா வைத்தியராகப் படித்துவிட்டு, கொலையெல்லாம் செய்கிறாய்?” என்று அவனுடைய தாய்மொழியான காண்டோனீஸில் (Cantonese) ஏற்றமாதிபன் சொல்ல… ஒரு விநாடி அந்தச் சர்வதேசக் குற்றவாளியின் விழிகள் அதிர்ச்சியில் திறந்தன.
இவன் தன் மொழியில் பேசியதில் ஏற்பட்ட ஆச்சரியமாக இருக்கலாம். பிறகு மீண்டும் அவன் விழிகளை மூட, திரும்பி வருணைப் பார்த்து,
“ஏதாவது சொன்னானா?” என்றான்.
வருணோ உதடுகளைப் பிதுக்கிவிட்டு,
“சொல்ல மாட்டேன் என்கிறான் ஆதிபா…” என்றான் சலிப்பாக. அதைக் கேட்டதும் நடந்து சென்று வருணுக்குப் பக்கத்திலிருந்த அந்த கத்தியைக் கரத்தில் எடுத்து, அதன் கூர்மையை அவதானித்தவாறு மீண்டும் அந்தச் சீனனை நெருங்கி,
“செத்தாலும், உண்மை சொல்லக் கூடாது என்பது நீ ஏற்றுக்கொண்ட உறுதி மொழியாக இருக்கலாம் சென்-வாங். ஆனால்…” என்ற ஆதிபன், தன் கத்தியின் முனையை அந்தச் சீனனின் நெஞ்சுக் குழியில் வைத்துச் சற்று அழுத்த, அந்தக் கூரிய முனை அவன் தோலைத் துளைத்துச் சற்றே உள்ளே சென்றிருருந்தது. ஆனாலும் அந்த வலியை இம்மியும் வெளியே காட்டாமல் இறுக்கத்தோடு அவன் நின்றிருக்க, சற்று கத்தியை மேலே கொண்டுவந்தவாறு,
“உண்மையை அறியாமல் குற்றவாளியை வெளியே விடுவது என் வழக்கமில்லையே. என்ன செய்வது?” என்று அவனையே கேட்டவாறு, கத்தியை விலக்கி, அப்படியே அந்த கத்தியை மேலேற்றிக் கொண்டு வந்தவன், கடைசியாக அவனுடைய உயிர்நாடியின் தொடக்கத்தில் கத்தியை வைத்து மெதுவாக அழுத்த… இப்போது அந்தச் சீனனின் முகத்தில் பீதி தெரிந்தது. அதை உடனே கண்டு கொண்டான் ஆதிபன். எந்த ஆணும் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பான்; ஆனால், ஆண்மையை…?
“இதோ பார், நீயும் பெண்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; உனக்கும் சந்ததிகள் வேண்டும். இந்த இடத்தில் கத்தி நுழைந்தால் எப்படி இருக்கும், என்னாகும் என்பதை மருத்துவம் படிச்ச உனக்கு நான் சொல்லத் தேவையில்லை… உண்மையைச் சொன்னால், காதும் காதும் வச்சது போல இரகசியத்தை அறிந்துவிட்டு உன்னை விடுதலை செய்துவிடுவேன். இல்லை…” என்றவனின் கத்தி கொஞ்சமாகச் சதையைத் துளைக்க… அதுவரை இறுக்கத்தோட கிடந்தவனின் மகத்தில் இப்போது அச்சம் வெளிப்படையாகத் தெரிந்தது.
“நாட் பேட்… உன் வம்சத்தின் மீது அத்தனை அக்கறை! சரி சொல்லு… மருத்துவமனையிலிருந்த அந்தக் குற்றவாளியை ஏன் கொன்றீர்கள்? அதற்கான பின்னணி என்ன? கொல்லச் சொல்லி உங்களை அனுப்பியது யார்? அதை மட்டும் சொல்லு போதும்… உன்னைத் தொந்தரவு செய்யாமல் பூப்போல அனுப்பிவிடுவேன். இல்லை என்றால்…” என்று ஏற்றமாதிபன் இன்னும் தன் கத்தியின் முனையை அழுத்த, அது அரையங்குலம் உள்ளே சென்று விட்டிருந்தது. அவனோ பயத்திலும் வலியிலும் தன்னை மறந்து அலறிவிட்டான்!
“உன்னைக் கொல்வது என் நோக்கமில்லை. வைத்தியராகப் படித்துவிட்டு நீ இந்தத் தொழில் செய்கிறாய் என்றால், அதையும் தாண்டி உனக்குள்ள குடும்பத்தின் சூழ்நிலையை என்னால் யூகிக்க முடிகிறது. நீ மட்டுமில்லை, உன்னைப் போன்ற நிறையப் பேர் இந்தச் சிலந்தி வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்…” என்றவன், தன் கத்தியை விலக்கிவிட்டு, அதில் படிந்திருந்த இரத்தத்தை அவன் வயிற்றில் பூசிவிட்டுக் கத்தியோடு தன் இரண்டு கரங்களையும் சற்று மேலே தூக்கிக்காட்டி, “சத்தியமாக உன்னை விட்டுவிடுகிறேன்.. உண்மையை மட்டும் சொல்லு..” என்று கேட்க… அவனோ இப்போது அழுதான். ஆனால், வாய் திறக்கவில்லை.
இப்போது ஏற்றமாதிபனின் பொறுமை காற்றில் பறக்க… கத்தியால் ஒரே வீச்சுத்தான்! தொங்கிக் கொண்டிருந்தவனின் காது ஒன்று தனியாகத் தரையில் விழுந்து கிடந்தது! அதைக் கண்டு அலறி விட்டான் அவன்.
“இப்போது காது… அடுத்தது…” என்றவனின் பார்வை தொங்கிக்கிடந்த ஆண்மையின் மீது பதிய…
“சொல்கிறேன்… சொல்கிறேன்…” என்றவன் வலியில் அழுதான். பின் ஆழ மூச்செடுத்துவிட்டு, “நீ எந்த விதமாக எப்படிக் கேட்டாலும் என்னிடம் இருக்கும் பதில் ஒன்றே ஒன்றுதான். எனக்குத் தெரியாது. நான் இந்தத் தொழிலுக்குப் புதியவன். நீ சொன்னது போல என் குடும்பத்தைக் காப்பாற்றத் தான் இதில் சேர்ந்தேன். ஒரு நாள் என் தலைவர் என்னை அழைத்தார்; மருத்துவமனையிலிருக்கும் ஒருத்தனைக் கொல்ல வேண்டும், நிறையப் பணம் கொடுக்கிறேன் என்றார்கள். எனக்கும் பணம் தேவை… சரி என்று சம்மதித்தேன். இது தவிர வேறு எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது… நம்பு…” என்றவனின் கண்களிலிருந்து கண்ணீர் சிந்த… அவனையே சற்று நேரம் அழுத்தமாகப் பார்த்தான் ஏற்றமாதிபன். அவனுடைய கலக்கமும், அச்சமும், அழுகையும் அவன் சொல்வது உண்மை என்றது.
“சரி… நீ சொல்வதை நான் நம்புகிறேன்… உன் தலைவன் யார்? அவன் பெயர் என்ன? அவன் எங்கே இருக்கிறான்?” என்று அழுத்தமான கேள்வியைக் கேட்க… ஏற்றமாதிபனைப் பரிதாபமாகப் பார்த்தான் அந்தச் சீனன்.
“அதைச் சொன்னால் என்னைக் கொன்று விடுவார்கள்….” என்றான் அழுதவாறு.
“நீ சொல்லவில்லை என்றால் நான் கொன்று விடுவேனே…” என்றான் இவன்.
“அது… அவரை இதுவரை நான் நேராகப் பார்த்ததில்லை. எல்லாமே இணையவழித் தொடர் பாடல்கள்தான்…” என்றான் அவன் தயக்கமாக.
“சரி… அந்த இணையவழித் தொடர்பு எது?” அவன் கேட்க… அதைச் சொல்வதற்காக அவன் வாய் எடுத்த நேரம், தெற்கு மூலையிலிருந்து பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று சரியாகத் தொங்கிக்கொண்டிருந்தவனின் நெற்றிப்பொட்டில் பாய… மறுகணம் தலை சிதறித் தன் இறுதி நிமிடத்தை இறுக அணைத்துக் கொண்டான் சென்-வாங்.
முதல் பாகம் முற்றும்.

