October 19, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே – 27

(27)

 

இதோ மூன்று வாரங்கள் கடந்திருந்தன. காயங்கள் ஆறியிருக்க, கட்டுகள் அவிழ்க்கப் பட்டிருந்தன. சத்திரசிகிச்சையால் வெளியேறும் இரத்தம் வடிந்து செல்வற்காக போடப்பட்டிருந்த குழாய்களும், எழுந்து நடக்க முடியாமையால் போடப்பட்டிருந்த காதிடரும் நீக்கப்பட்டிருந்தன. ஓரளவு மல்லாக்காகப் படுக்கும் நிலைக்கு வந்து இருந்தாள், ஆனாலும் அவளுக்கு ஏற்பட்ட காயங்களின் தீவிரத்தின் அடிப்படையில், மருத்துவமனை அவளை விடுவிக்க மறுத்தது. நிலையில்லாத இரத்த அழுத்தமும், மனப்பாதிப்பும் நீடித்ததால், சிகிச்சை கொடுத்துக் கொண்டே இருந்தது மருத்துவமனை. ஏற்றமாதிபனும் மருத்துவமனைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இப்போதிருக்கும் நிலையில் அவள் மருத்துவமனையில் இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்றும் நினைத்தான் அவன்.

அன்று விதுரன் வந்து சென்ற பின், விதரணை தனக்குள் ஒடுங்கித்தான் போனாள். யாரிடமும் பேசவில்லை; சிரிக்கவில்லை. இடையில் அபிநயாவுக்கு மட்டும் செய்தியைச் சொல்லி வரவழைத்திருந்தான் ஏற்றமாதிபன்.

உறவினர்களை விட, நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? அப்போதாவது இறுகி இருக்கும் அவள் மனம் தளரமாட்டாளா என்கிற நப்பாசைதான். ஆனால், செய்தியறிந்து ஓடிவந்த அபிநயாவைக் கூட அவள் கண்டுகொள்ளவில்லை. வந்தவளிடம் புன்னகை கூடச் சிந்தாமல் திரும்பிப் படுத்துவிட்டாள். அபிநயா எவ்வளவோ பேச முயன்றாள். ஆனால் இவளோ, தன் உலகத்திற்குள் மட்டும் சுருங்கி நின்றுகொண்டாள். எப்போதும் துள்ளிக் குதிக்கும் தன் தோழியின் நிலை கண்டு, கடைசியில் அழுதது என்னவோ அபிநயாதான்.

அவளைச் சமாதானம் செய்து, அனுப்பி வைப்பதற்குள் ஏற்றமாதிபனுக்குப் போதும் போதுமென்றானது. கிளம்பும் போதே, “இது பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றுதான் சொல்லி அனுப்பியிருந்தான் ஏற்றமாதிபன். வித்யாதரும் மதிவதனியும் கூட வந்து பார்த்துவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டார்கள். மீண்டும் ஒரு முறை விதுரனை அழைத்து வந்து காட்டினான் ஏற்றமாதிபன். ஆனால், விதுரனைக் கண்டதும் மீண்டும் இரத்த அழுத்தத்தின் அதிகரிப்பு, அழுகை, கதறல் என்று விதரணை துடிக்க… அதற்குப் பிறகு விதுரனை அழைத்து வரவில்லை ஏற்றமாதிபன்.

கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கவேண்டும்.

அன்று மதியம் அவளைப் பார்க்கச் சென்றவன்,

“இப்போது எப்படி இருக்கிறது விதரணை?” என்று எப்போதும் கேட்பதையே இப்போதும் மென்மையாகக் கேட்டான்.

அது என்னவோ, அவனிடம் மட்டும்தான் முகத்தைத் திருப்புகிறாள்; கோபத்தைக் காட்டுகிறாள்; பேச முயல்கிறாள்; பழையதை நினைத்து அழுகிறாள். அவன் தவிர யார் வந்தாலும் மரப்பாவை போல அசைவற்று இருக்கிறாள். இதை என்னவென்று சொல்வது?

வந்தவனை ஒருவித விரக்தியுடன் பார்த்தவளுக்கு எப்போதும் போலக் கண்கள் கலங்க, அதைத் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

‘இவன் மட்டும் அன்று என்னை அழைத்துக் கொண்டு வந்திருந்தால்..?’

‘வந்திருந்தால் மட்டும் என்னவாம்?’

‘குறைந்தது சந்தேகப்பட்டிருப்பானே… அவளோடு உள்ளே வந்திருப்பான்… திரைப்படங்களில் நடப்பது போல அத்தனை பேரையும் நொறுக்கிக் கொன்றிருப்பான்… நிச்சயமாகச் செய்திருப்பான்!’

அவன் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் மனதிற்குள் புலம்பினாள் விதரணை.

வந்தவன், அவள் தலையை வருட முயல, அவசரமாக அவன் கரத்தைத் தட்டிவிட்டு, குமுறலோடு படுக்கையிலிருந்து எழ முற்பட்டாள். மார்பும், முதுகும் வலிக்க… இடது மார்பை வலது கரத்தால் அழுத்தியவாறு, “ஷ்…” என்றாள் வலி தாங்காமல்.

உடனே அவளுக்கு உதவ அவன் கை நீட்ட, நிமிர்ந்து அவனைப் பார்த்து முறைத்தவள்,

“வேண்டாம்… எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை. என் வேலைகளை நானே பார்த்துக் கொள்வேன்,” என்று அவன் உதவியைப் பிடிவாதமாக மறுத்துவிட்டு, படுக்கையின் வெளியே கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

‘உதவ வேண்டிய நேரத்தில் கைகட்டி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது உதவிக்கு வருபவர்களை என்னவென்று சொல்வது?’ என்கிற எண்ணம்தான் அவளுக்குள் ஓடியது.

அவள் எரிந்து விழுந்த போதும் ஏற்றமாதிபன் மௌனமாக நின்றான். ஏனெனில், அவனுக்குத்தான் அவள் நிலை தெரியுமே! உள்ளே இருக்கும் கடுமையான மன அழுத்தம், அவளை இப்படிப் பேச வைக்கிறது.

எழுந்தவள், சிரமப்பட்டு நடந்து சென்று கழிவறைக்குச் சென்றாள். இந்த முன்னேற்றம் அவனுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுக்கவே செய்தது. போன வாரம் வரை அவன்தான் அவளை ஏந்திச்சென்று கழிவறையில் விட்டு வந்திருந்தான். இப்போது அவன் உதவியை மறுத்து அவளே சென்று வருவது மிகப்பெரிய முன்னேற்றம்தானே!

தன் தேவையை நிறைவு செய்து, அங்கிருந்த கண்ணாடியைப் பார்க்காமல் முகத்தைக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள் விதரணை. அவளுக்கு இப்போது கண்ணாடி பார்க்கவே பிடிப்பதில்லை. பார்த்தால் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. அன்றும் அப்படித்தான்… முகம் கழுவலாம் என்று கண்ணாடியைப் பார்த்தவளுக்கு, தன் முகத்தில் தெரிந்த அந்த வடுவும், அன்று நடந்த கொடூரச் சம்பவங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வர… அப்படியே அதிர்ச்சியில் தரையில் மடங்கி அமர்ந்து கதறிவிட்டாள்.

அப்போது விரைந்து ஓடிவந்தது ஏற்றமாதிபன் தான். தரையில் விழுந்து கிடந்தவளை ஏந்திக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தியிருந்தான் அவன். அதற்குப் பிறகுதான் அவள் கண்ணாடி பார்ப்பதைத் முற்றிலும் தவிர்த்துவிட்டாள்.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல் தேறி வந்திருந்தாலும், அவளுடைய மூளை மட்டும் முழுதாக நடந்த சம்பவங்களை இரைமீட்க முடியாமல் தடுமாறியது. ஏற்றமாதிபன் பல முறை அவளிடம் மறைமுகமாக எதை எதையோ விசாரித்த போதும், அவளால் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை.

அங்கு நடந்த கொடூரங்களில் தாய், தந்தையின் மரணம் மட்டும்தான் அவளுக்கு அரைகுறையாக நினைவில் இருந்தது. அதுவும், யாரோ ஒருத்தன் அவர்களை வெட்டிக் கொன்றான் என்பது வரை நினைவில் இருந்தது. அதன் பின் கேள்வி கேட்டால் விழித்தாள்; அவளுக்கு எதுவும் தெரிய வில்லை. இத்தகைய பெரும் ஆபத்துகளில் சிக்கித் தப்புபவர்களின் ஆழ்மனம் செய்யும் சுய பாதுகாப்பு இது என்பது அவனுக்குத் தெரியும். அதனால் கொஞ்சம் அவகாசம் கொடுத்தான் ஏற்றமாதிபன்.

ஆனால், காவல்துறை அவகாசம் கொடுக்க வேண்டுமே! அடிக்கடி மருத்துவர்களிடம் வருவதும், இவளைப் பற்றி விசாரிப்பதுமாக இருந்தார்கள். மருத்துவர்களோ இவள் நிலையைச் சொல்லி அவர்களை மறுத்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

இதோ, இப்போதும் முகத்தைக் கழுவிவிட்டு வந்தவளைக் கருணையோடு பார்த்தான் ஏற்றமாதிபன். நெஞ்சம் தவித்தது அவனுக்கு. அவனுக்குப் பழைய விதரணை வேண்டும். அதே துள்ளலோடு, சிரிப்போடு, குதூகலத்தோடு, பெரிய விழிகளைப் படபடப்பாய் திறந்து அவனை ஆர்வமாகப் பார்த்தவாறு ஓடி வரும் அந்த விதரணை வேண்டும்.

அது சாத்தியமா? தெரியவில்லையே!

பெருமூச்சோடு தான் கொண்டு வந்த பையில்

இருந்து ஒரு சில ஆங்கில நாவல்களை எடுத்து அவளிடம் நீட்ட… அவளோ படுக்கையில் அமர்ந்தவாறு அது என்னவென்று வெறித்துப் பார்த்தாள்.

“உனக்குத்தான் புத்தகங்கள் படிக்கப் பிடிக்குமே… வாசித்துப்பார்.. மனது கொஞ்சம் அமைதியாகும்…” அவன் சொல்ல, மறு கணமே அவன் கரத்திலிருந்த புத்தகங்களைப் பிடுங்கித் தூர எறிந்தாள் விதரணை.

ஆனால், இவனுக்குக் கோபம் வரவில்லை.

“கமான்… உனக்கு உதவத்தான் முயல்கிறேன் விதரணை…” என்றவன், நடந்து சென்று அந்தப் புத்தகங்களை எடுத்து வந்து அவளுக்கு அருகே இருந்த மேசையில் வைத்துவிட்டு அவளைப் பார்த்தான்.

எத்தனை நாட்கள் இப்படியே இருக்கப் போகிறாள். இதற்கான முடிவைக் காணவேண்டாமா? பெருமூச்சோடு அவளை வெறிக்க, அவளோ அவனைத் தவிர்த்துவிட்டுப் படுக்கையில் படுக்க முயன்றாள். கொஞ்சம் பொறுமையிழந்து விட்டான் ஏற்றமாதிபன்.

ஏதோ ஒரு கட்டத்திலாவது தன்னை நிலை நிறுத்த வேண்டாமா. எப்போதம் இதே நிலையில் இருப்பது அவளுக்குத்தானே கூடாது.

“கமான் விதரணை… உன் நிலை எனக்குப் புரிகிறது. ஆனால் எத்தனை நாட்களுக்கு இப்படியெ ஒடுங்கிக் கிடக்கப்போகிறாய்… இப்படியே கிடந்தால் உன் குடும்பத்திற்கு நடந்த அநீதிக்கு எப்படி தீர்வு காண்பது? இதோ பார்… உன்னைப் பெற்றவர்களின் இந்த நிலைக்குக் காரணமானவர்களின் அடிவேரைக் கண்டுபிடிக்க வேண்டாமா?” என்று அவன் கேட்க… சட்டென்று எழுந்தமர்ந்தவள் அவனை வெறித்துப் பார்த்தாள். அந்த பார்வை அவனுடைய இதயத்தை உலுப்ப, அவளுக்கு முன்பாகப் படுக்கையில் ஒற்றைக் கால் மடித்து அமர்ந்தான் ஏற்றமாதிபன். அவள் முழங்கால்களில் தன் கரங்கைளப் பதித்து மெதுவாக அழுத்திக் கொடுத்து,

“விதரணை… உன்னையும் இந்தக் குடும்பத்தையும் இந்த நிலைக்குத் தள்ளியவர்களை ஈயை நசுக்குவது போல நசுக்கிவிடும் வேகம் உன்னை விட எனக்குத்தான் அதிகமாக இருக்கிறது… உன்னால் முடிந்தால்… அன்று என்ன நடந்தது என்று சொல் விதரணை… அப்போதுதான் என்னாலும் ஓரளவு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும். அந்த நால்வரில் ஒருவரையாவது முன்பே உனக்குத் தெரியுமா என்று சொல்… அவர்கள் எதற்கு வந்தார்கள்? அவர்களின் தேவை என்ன? இது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தால் சொல்… ஏதாவது ஒரு சின்ன ‘க்ளூ’ கிடைத்தாலும் போதும் விதரணை… நீ உதவினால் மட்டும்தான் என்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும்.. பிளீஸ்… ஹெல்ப் மீ…”

அவன் சொல்லச் சொல்ல, திடீரென்று விதரணையின் உடல் நடுங்கத் தொடங்கியது. முகம் வெளிறி, நாக்கு மேலே ஒட்டிக்கொண்டது. கடுமையான குளிர் காய்ச்சல் வந்தவள் போல் அவள் அதிரத் தொடங்க… அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டான் ஏற்றமாதிபன்.

இது ஒன்றும் முதற் தரமில்லை. மூன்றாவது தரம். அதிகம் பதறாமல் அவள் தோள்களைப் பற்றி,

“விதரணை… என்ன இது? இதோ பார்…” என்று அவளை உலுப்ப முயன்றான். ஆனால் அவளோ, பயத்தின் உச்சத்தில் அவனது சட்டையை இறுகப்பற்றி எதையோ சொல்ல முயன்றாள். வாய் தந்தியடித்தது; பற்கள் கிடுகிடு என்று நடுங்கின. பாதுகாப்புத் தேடும் ஒரு குழந்தையைப் போல அவள் தலை தவிப்புடன் அங்கும் இங்கும் எதையோ தேடியது… அவளுடைய ஆழ்மன அதிர்ச்சியால் ஏற்பட்ட ‘பானிக் அட்டாக்’ என்பதை நொடிப் பொழுதில் புரிந்து கொண்டவன், மறு கணம் அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“சரி… சரி… நான் கேட்டதை மறந்துவிடு… இப்போது நீ எதுவும் சொல்ல வேண்டாம்… அமைதி கொள்…” என்றவன், அவளது தலையை வருடிக் கொடுத்தான்; முதுகை மென்மையாகத் தட்டினான்.

ஆனாலும் அவள் உடலின் உதறல் நிற்க வில்லை. தன் முகத்தை அவன் மார்பில் மேலும் மேலும் புதைக்க முயன்றாள்.

“வேண்டாம் விதரணை… இப்படித் தவிக்காதே. எல்லாவற்றையும் மறந்துவிடு. உன் தம்பிக்காகவாவது நீ உன்னைத் தேற்றிக்கொள்… அமைதியாகு கண்ணம்மா…” என்று அவள் முதுகை வருட… அந்தத் ‘தம்பி’ என்ற ஒரு வார்த்தை அவளைச் சட்டெனக் கட்டிப்போட்டது.

அதுவரை அதிர்ச்சியில் உதறிக்கொண்டிருந்தவளின் உடல் சட்டென்று இறுக, அப்படியே நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். இன்னும் அவனது ஆடையை அவள் விடுவித்திருக்கவில்லை; அதன் இறுக்கம் மேலும் அதிகமாக, அவளது மூளையின் குழப்பத்தில்,

“தம்பி… அவனை நான் பார்க்க வேண்டுமே… தம்பியைப் பார்க்க வேண்டும்! அவன்… அவன் நன்றாகத்தானே இருக்கிறான்? அவனுக்கு ஒன்று இல்லையே…?” என்றாள் ஒரு வித சீற்றத்தோடு. புத்தியில் எதோ குழப்பம். ஒன்றன் பின் ஒன்று கோர்வையாக வர மறுத்தது. நினைவுகள் தடுமாறின. அதை அவள் முகத்தின் உணர்வுகளை வைத்துக் கண்டுகொண்டவன், உடனே அவள் முகத்தைத் தன் கரங்களால் தாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

“இதோ பார்… உன் தம்பிக்கு ஒன்றுமில்லை… ஏற்கனவே இரண்டு முறை நீ அவனைப் பார்த்து விட்டாய் நினைவிருக்கிறதா? அவன் நன்றாக இருக்கிறான். என் வீட்டில் பத்திரமாக, பாதுகாப்பாக இருக்கிறான்… நான் சொல்வது புரிகிறதா உனக்கு? இன்று மாலை திரும்பவும் அவனை இங்கே அழைத்து வருகிறேன். அதுவரை நீ ஓய்வெடு,” என்று அவளைத் தட்டிக்கொடுக்க…

அவளோ குழப்பத்தின் உச்சத்திற்குச் சென்று,

“இல்லை… நான் அவனை இப்போதே பார்க்க வேண்டும்… அம்மாவும் அப்பாவும் வீட்டில்தான் இருக்கிறார்கள்… நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன ஆயிற்று? அவர்கள் இல்லாமல் நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்றவள், அவனை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து இறங்கியவள், வேகமாக அங்கிருந்து ஓட முயன்றாள். கண்ணிமைக்கும் நொடியில் ஏற்றமாதிபன் பாய்ந்து அவளைப் பற்றிக்கொண்டான்.

மறு கணம்,

“என்னைத் தொடாதே!” என்று சீறியவள், அடிபட்ட வேங்கையாக உதறிச் செல்ல முயன்றாள். ஆனால், அடுத்த கணமே அவளை இழுத்துத் தன் இறுகிய கையணைப்பிற்குள் சிறைபிடித்துக் கொண்டான் ஏற்றமாதிபன்.

“என்னை விடு. நான் அம்மாவிடம் போக வேண்டும்… அப்பா… அப்பா தேடுவார்கள்… விடு என்னை…” அவள் திமிறி உதற முயல… அவளுடைய வேகத்தையும் ஆவேசத்தையும் சுலபமாகவே தன் இறுகிய அணைப்பில் அடக்கியவன், அவளோடு பின்னால் நகர்ந்து சென்று, அங்கிருந்த இருக்கையில் அவளைத் தன் மடியில் வைத்தவாறே தொப்பென்று அமர, அவளோ பலம் அணைத்தையும் கூட்டித் திமிறினாள்.

“ஷ்… காம் டவுன்… காம் யுவர்செல்ஃப்…” அவனது குரல் மிக மிக மென்மையாக, அவளை அமைதிப்படுத்தும் வகையில் வந்திருந்தாலும், அவளுடைய முழு மேனியும் அவனுடைய இறுகிய, பலமிக்க அணைப்பில் சிக்கித்தான் கிடந்தது.

கையையும் காலையும் அசைக்க முடியாமல், சீற்றமும் ஆவேசமுமாகக் கத்தியவள், தன் சீறல் மூச்சோடு அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்று; மீண்டும் முயன்று தோற்க, கடைசியில் இயலாமையில் வெறியாவிட்டாள் விதரணை.

தன் ஆத்திரத்தைக் காட்டும் வழி தெரியாமல் சரிந்து, அவன் புஜத்தில் பற்கள் பதியக் கடிக்க, அவனோ வசதியாகத் தன் தோளை அவளுக்குக் கொடுத்துவிட்டு, தன் அணைப்பை இம்மியும் தளர்த்தாமல்,

“இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே…. காம் யுவர்செல்ஃப் பேபி…” என்று இதமாகச் சொல்லிக் கொண்டே இருந்தான்.

இவளோ, தன் வெறி அடங்கும் வரை அவன் புஜத்தைக் கடித்த பின், மெல்ல மெல்ல தன் வேகம் அடங்கி, அவனது மென்குரலுக்கு அடிபணிந்து தளரத் தொடங்கினாள்.

ஐந்து நிமிடங்களாக அவனுடைய இறுகிய அணைப்பில் சிக்கி, ஆடிய அந்த உருத்திர தாண்டவத்தில், மனமும் உடலும் முற்றிலும் சோர்ந்து போக… மெதுவாகத் தன் கடியை விடுத்து, சோர்வோடு மயங்கி அவன் தோளில் சாய, அப்படியே அவள் தலை சரிந்துவிடாமல் தன் புஜத்தால் தாங்கிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அவன் நிலையைக் கண்டு நெஞ்சில் உதிரம் கசியவே செய்தது. ஆனால் அவனாலும் என்னதான் செய்யமுடியும் அவள் படும் சித்திரவதையைப் பார்ப்பதைத் தவிர. சற்று நேரம் தன் கரங்களின் அணைப்பில் அவளை அப்படியே தாங்கியிருந்தவன், மெதுவாகக் குழந்தையைத் தூக்குவது போல அவளைத் தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்தினான். ஆவேசத் தாண்டவம் அடங்கிய நிம்மதியில், மயக்க நிலையிலிருந்து அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள் விதரணை.

அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்து கொண்டவன், அங்கிருந்த மேசையை இழுத்து, அதிலிருந்த தொற்று நீக்கி மருந்தையும் பஞ்சையும் எடுத்துக்கொண்டு கழிவறைக்கு வந்தவன், நிதானமாகத் தன் சட்டையைக் கழற்றி அங்கிருந்த தொட்டியின் பக்கமாக வைத்தவன், விதரணை கடித்த இடத்தைக் கண்ணாடியில் பார்த்தான். எட்டுப் பற்களின் தடங்கள் மிக ஆழமாகவும், இரண்டு பற்களின் தடங்கள் சற்று மேலோட்டமாகவும் விழுந்து, அவனது சதை வரை ஊடுருவியிருந்தது.

அந்தக் காயத்திற்கு மருந்திடும்போது அவனது கைப்பேசி அலற. உடனே எடுத்து யார் என்று பார்த்தான்; வருண்தான் அழைத்திருந்தான்.

உடனே அதை ஒலிபெருக்கியில் போட்டுப் பக்கத்தில் வைத்தவன், டியூபிலிருந்து மருந்தைப் பிதுக்கி எடுத்தவாறே,

“சொல்லு வருண்…” என்றான்.

“நீ சொன்னது போல, விதரணையின் அப்பா வேலை செய்த பயோ ஃபார்மாவைப் பற்றி விசாரித்துவிட்டேன்… இட்ஸ் கிளீன்…. அங்கே எந்தத் தவறும் நடப்பதற்கான அறிகுறிகள் இல்லை. அவர்கள் தயாரிக்கும் மருந்து மாத்திரைகள் அனைத்துமே, அரசின் உரிய அனுமதியோடுதான் தயாரிக்கப்படுகிறது…” என்று வருண் சொல்ல… காயத்திற்கு மருந்து போட்டுக் கொண்டிருந்தவன் ஒரு கணம் அசைவற்று நின்றான்.

“ஆர் யு ஷூர்?”

“டாம் ஷூர்…”

“அப்படியென்றால் இதற்குப் பின்னாடி யார் இருக்கிறார்கள்?” என்றான் ஏற்றமாதிபன், தனக்குள்ளேயே ஒரு கேள்வியாக.

“அதுதான் தெரியவில்லை ஆதிபன்…” என்றான் வருண்.

“சரி… அதை விடு, அந்த செவியப் பெண்ணாக வந்தவனைப் பற்றி விசாரித்தாயா? ஏதாவது தகவல் கிடைத்ததா?” என்றான் அடுத்து.

“ம்… அது பற்றியும் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறேன்… இன்னும் ஓரிரு நாட்களில் அவனைக் கண்டுபிடித்துவிடுவேன்” வருண் சொல்ல..

“சரி” என்றவன், கைப்பேசியை அணைத்துத் தன் பான்ட் பைக்குள் போட்டான்.

மருந்து போட்டு முடித்ததால், தன் சட்டையை எடுத்துக்கொண்டு திரும்பிய ஏற்றமாதிபனின் மறு கரத்தின் பிம்பம் அங்கிருந்த கண்ணாடியில் தெரிய, அங்கே விதரணையின் பற்களின் தடங்கள் இன்னும் ஒரு சில இடங்களில் மிக ஆழமாகக் காய்ந்தும் காயாமலும் தெரிந்தன.

ஆக, அவளுடைய மன அழுத்தத்திற்கான மருந்தாக அவன்தான் இருக்கிறான் போலும்!

What’s your Reaction?
+1
12
+1
1
+1
4
+1
1
+1
8
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!