(23)
உலகத்தையே கிடுகிடுக்க வைக்கும் அளவுக்குச் சீற்றமாக அலறியவனின் மார்பு, ஓடியதாலும் கத்தியதாலும் மேலும் கீழும் ஏறி இறங்க… இப்போது அழுத்தம் சற்றுக் குறைந்ததால், விரிந்த கரங்கள் இரண்டும் மெதுவாகக் கீழே இறங்கின. அதுவரை அவனை ஆட்டிப்படைத்த வலியும், வேதனையும், தவிப்பும் ஓரளவு மட்டுப்பட்டது. வேகமாக முன்னும் பின்னுமாக ஏறி இறங்கிய மார்போடு மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்க மூச்செடுத்தவன், அப்படியே அந்த ஆற்றங்கரையின் ஓரமாகக் கிடந்த உடைந்த பாறைக்கற்களின் மீது தொப்பென்று அமர்ந்தான்.
அந்த நேரம் நெற்றியிலிருந்து கன்னத்தில் ஏதோ வடிந்து செல்வது தெரிய, தொட்டுப் பார்த்தான். அவனது இரத்தம்!
அவன் மரக்கிளையில் மோதி கீழே விழுந்து உருண்டதில், நெற்றியின் ஓரம் எங்கோ அடி பட்டிருக்க வேண்டும்; அதிலிருந்துதான் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. ஏனோ வினோதமாக, அந்த இரத்தத்தைக் கண்டதும் மனது இன்னும் கொஞ்சம் அமைதியானது. கூடவே, ‘விதரணை சிந்திய இரத்தத்தின் அளவில் ஒரு பகுதி கூட அவன் சிந்த வில்லையே!’ – மனதிற்குள் நினைத்தவன், கையைத் தூக்கித் தன் மணிக்கட்டால் நெற்றியின் ஓரத்தைத் துடைத்துவிட்டு, நீண்ட நிமிடங்கள் அமைதியாக இருந்தான்.
அத்தனை அழுத்தத்தையும் வெளியேற்றிய பின்பு, மனது இப்போது தெளிவாக யோசிக்க ஆரம்பித்திருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவு பிறந்தது.
அவன் விதரணையின் வீட்டிற்குச் சென்றது முதல் அங்கே நடந்த காட்சிகள் வரை அனைத் தையும் ஒவ்வொன்றாகச் சிந்திக்கத் தொடங்கினான். ஆரம்பத்திலேயே இது விதரணையை மட்டும் இலக்காக்கி வைத்த குறி அல்ல என்பதை அவன் ஓரளவு புரிந்து வைத்திருந்தான். இது விதரணைக்கான குறி என்றால், அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து அவளைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை;
அதுவும் பெற்றவர்களுக்கு முன்பாக! வெளியே கடத்திச் சென்றும் இதைச் செய்திருக்கலாம். அப்படி என்றால், வந்தவர்களின் இலக்கு அறிவழகன், அமுதா மற்றும் விதுரனாக இருக்க வேண்டும். நிச்சயமாக விதுரன் அவர்களின் இலக்கு அல்ல. அப்படியென்றால் அமுதாவும் அறிவழகனும் தான்! இதிலிருந்து அமுதாவை விலக்கிவிட்டால், வந்தவர்கள் அறிவழகனைத் தேடித்தான் வந்திருக்க வேண்டும்.
அறிவழகன் தவறு செய்திருப்பார் என்பதை அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. ஒரு வேளை அவர்கள் அறிவழகனைக் குறி வைத்து இருந்தால், எதற்காகக் கொல்ல வேண்டும்? உயிரோடு இருந்தால்தானே வேண்டியதைப் பெற முடியும்? அப்படியென்றால், காரியத்தைச் சாதித்துக் கொண்டு கொன்றார்களா அல்லது அவர் வாய் திறக்காததால் ஆத்திரத்தில் முடித்தார்களா?
வந்தவர்கள் சாதாரணத் திருடர்களாக இருக்கவும் வாய்ப்பில்லை. திருடர்களென்றால் பணத்தையோ நகையையோ எடுத்துக்கொண்டு ஓடி இருப்பார்கள்; இப்படி எல்லோரையும் நிலவறைக்கு இழுத்துச் சென்று, விதரணையைச் சித்திரவதை செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படியே திருடும்போது பெற்றோர் பிடிபட்டிருந்தாலும், அவர்களைக் கொன்றுவிட்டுத் தப்பியிருக்கலாம். ஆனால், அவர்கள் ஏன் நிலவறையில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்கள்?
மாறி வேறு வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்கள் என்று நினைப்பதற்கும் இல்லை. அவன் விதரணையின் வீட்டிற்கு அருகே வாகனத்தை நிறுத்தியபோது, அங்கிருந்த தெருவிளக்குகள் எரியவில்லை. அது திட்டமிட்டு அணைக்கப் பட்டிருக்கிறது! அப்படி யென்றால், அது அறிவழகனின் வீடு என்று தெரிந்து தான் எதிரிகள் உள்ளே நுழைந்திருக் கிறார்கள்.
அப்படி அறிவழகனிடம் என்ன மர்மம் இருக் கிறது? அவர் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்துப் பரிசோதகராக வேலை செய்பவர். அவரால் என்ன செய்துவிட முடியும்? ஒருவேளை அவர் பரிசோதித்த மருந்தின் ஆபத்தான அறிக்கை ஏதேனும் அவரிடம் இருந்ததா? அதைக் கேட்டுத் தான் துன்புறுத்தினார்களா? இவன் உள்ளே நுழைந்தபோது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்ததை வைத்துப் பார்க்கும்போது, வந்தவர்கள் எதையோ தேடியிருப்பது உறுதி.
அவனுடைய புலனாய்வு மூளை நாலா திசையிலும் சிந்தித்தது. இதற்கெல்லாம் விடை சொல்ல விதரணையால் மட்டும்தான் முடியும். ஆனால், அவளோ இப்போது எழுந்து பேசும் நிலையில் இல்லையே!
இன்னொருவன் பதில் சொல்ல முடியும்; அது உயிர் தப்பிய அந்த ஒருத்தன்! தற்போதிருக்கும் சூழ்நிலையில் அவனை நெருங்க முடியாது. நிறைய காவலதிகாரிகள் அவனைச் சூழ்ந்திருப்பார்கள். அதனால்தான் வருணின் உதவியை நாடியிருந்தான் ஏற்றமாதிபன். அவனும் ஒண்டாரியோ காவலதிகாரி என்பதால், சுலபமாக அவனை நெருங்கி விசாரிக்க முடியும். இன்று சென்று பார்ப்பதாகச் சொல்லி இருந்தான். இத்தனைக்கும் விசாரித்தாலும் பதில் சொல்லும் நிலையில் அவன் இருந்தானா என்றும் தெரியவில்லை. யோசனையோடு நெற்றியை வருடியவன் ஏதேதோ யோசித்தவாறு பாறையில் அப்படியே அமர்ந்திருந்தான்.
உடலும் மனதும் மிகவும் களைத்துப் போயிருந்தது; அவனுக்கு நினைவுதெரிந்து, இப்படி ஒரு நாளும் அவன் உணர்ந்ததில்லை. இத்தகைய உணர்வுகளுக்குப் பயந்துதானே ஒதுங்கியே இருக்க முயன்றான். கடைசியில் விதி அங்கேதான் அவனைத் தள்ளி விட்டிருக்கிறது.
பெருமூச்சோடு எழுந்தவன், ஓடி வந்த பாதையில் திரும்ப நடக்கத் தொடங்கினான். நடக்கும் போதுதான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது, இத்தனை தூரமா வந்திருக்கிறோம் என்று!
மேலும் முன்னேறினான். ஒரு மணி நேரம் நடந்திருப்பான், அவனது கைப்பேசி அலறியது. அதை எடுத்துப் பார்த்தான்; வருண்தான் அழைத்து இருந்தான். பரபரப்புடன் அழைப்பை ஏற்றுத் தன் காதில் வைத்து,
“வருண்… என்னாச்சு…? அவன் ஏதாவது காவல்துறையிடம் சொன்னானா…?” என்று எதிர்பார்ப்புடன் கூடிய ஆவலுடன் கேட்க, வருண் மறுபக்கம் அமைதி காத்தான்.
“வருண் என்னாச்சு… எதற்கு அமைதியாக இருக்கிறாய்…?” என்றவனுக்கு, மறுபக்கம் நிலவிய வருணின் அமைதி ஒருவித படபடப்பைக் கொடுக்க… நிச்சயமாகத் தன் மனதிற்குத் திருப்தி தராத செய்தியைத்தான் அவன் சொல்லப்போகிறான் என்று உள்ளுணர்வு எச்சரிக்க, “வருண்… என்னாச்சு?” என்றான் இப்போது அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
“ஆதிபன்… சாரி… அவன் இறந்துவிட்டான்…” என்று வருண் ஒரு குண்டைத் தூக்கிப் போட,
“ஙீஙீஙீஙீ…” என்று தன்னை மறந்து கத்தி விட்டான் ஏற்றமாதிபன். நடந்தவாறே பேசிக் கொண்டு வந்தவன், அதற்கு மேல் முன்னேறாமல் நின்று அங்கும் இங்கும் நடந்தவாறு தலையைக் கோதிக்கொண்டான்.
இருந்த ஒரே நம்பிக்கை அவன்தான். அடுத்து என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. நல்லதொரு தொடக்க நூல் இடையில் அறுந்து விட்டது போன்ற உணர்வில், அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கிருந்த மரம் ஒன்றில் சாய்ந்து நின்றான்.
நிச்சயமாக அவன் தாக்கியதில் அவன் மரணித்திருக்க வாய்ப்பில்லை… அப்படியென்றால்… எதுவோ உறுத்த,
“என்னாச்சு?” என்றான் ஆத்திரமும் ஏமாற்றமும் ஒன்று சேர.
“தெரியவில்லை…. இப்போது அதைத்தான் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார்கள். திடீரென்று மூச்சுத் திணறல் வந்திருக்கிறது. சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற நேரத்தில் கார்டியாக் அரெஸ்ட்… இதயம் சடுதியில் நின்றதாகச் சொல்கிறார்கள்…” என்றதும், அதற்கு மேல் என்ன சொல்வது என்று ஆதிபனுக்குப் புரியவில்லை. சத்தியமாக இதை அவன் எதிர்பார்க்கவில்லை.
“ஆதிபன்…” வருண் அழைக்க, தன் நினைவு கலைந்து
“இது இயற்கையானதா, இல்லை கொலையா?” என்றான்.
“உடற்கூறாய்விற்கு எடுத்துச் சென்றிருக்கி றார்கள். முதற்கட்ட அறிக்கை சில மணி நேரங்களில் கிடைத்தாலும், முழுமையாகக் கிடைக்க எப்படியும் ஒரு கிழமையாவது எடுக்கும்…” வருண் சொல்ல, அதைக் கேட்டு எரிச்சலுடன் எதையோ முனகிய ஏற்றமாதிபன்,
“அறிக்கையில் நிச்சயமாக நமக்குச் சாதகமான பதில் வராது வருண். இயற்கை மரணம் என்றுதான் சொல்லப்போகிறார்கள்…” என்றான் சலிப்போடு.
“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?” வருண் வியந்து கேட்க, இப்போது மரத்தை விட்டு விலகி நடந்தவாறே,
“என் யூகம் சரி என்றால்… அறிவழகன் அங்கிள் ஆபத்தான ஏதோ ஒன்றை அவர் மருந்து தயாரிக்கும் நிறுவணத்தில் கண்டுடிபிடித்திருக்கிறார். இல்லை என்றால் களவாடியிருக்கிறார். அது ஏதோ ஒரு ‘ஙீ இற்குத் தேவைப்படுகிறது. அல்லது அதனால் அந்த ‘ஙீ’ இற்கு ஆபத்து. அறிவழகனிடம் இருக்கிற அறிக்கை, அல்லது யுஎஸ்பி, ஏதோ ஒன்றை எடுக்க, அவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் அத்தனை பேரும் இறந்திருந்தால் பிரச்சனையிருந்திருக்காது. ஒருத்தன் பிடிபட்டது அந்த ஒரு நபருக்கு சிக்கலைக் கொடுக்கும் என்பதால் எப்படியும் பிடிபட்டவனைக் கொல்லத்தான் நினைப்பார்கள்… சாதாரணமாகக் கொன்றால், இந்த வழக்கு இன்னும் சிக்கலாகும். அதனால்… இந்த மரணத்தை இயற்கையாகக் காட்டத்தான் எதிரி முனைவான்,” என்றான் இவன் உறுதியோடு.
“அதை எப்படிச் சொல்கிறாய்? உடற்கூறாய்வில் அவன் கொலை செய்யப்பட்டானா இல்லையா என்பது தெரிந்துவிடுமே?” வருண் உறுதியாகச் சொல்ல, சற்று நேரம் பேசாமல் நடந்தவன், பின்,
“சொல்ல முடியாது வருண்… ஒருவேளை இறந்தவனுக்குச் ‘சக்ஸினைல்கோலின்’, ‘பொட்டாசியம்’ அல்லது ‘இன்சுலின்’ கொடுத்திருந்தால்…? பொட்டாசியம் உடலில் இயற்கையாகவே இருக்கும் ஒரு தாது. இதயம் நின்ற பிறகு செல்கள் சிதைவடையும்போது உடலில் தானாகவே பொட்டாசியம் அளவு அதிகரிக்கும். உடற்கூறாய்வில் இதயம் நின்றதால் பொட்டாசியத்தின் அளவு அதிகரித்ததாகத் தான் நம்புவார்கள். இதையே இன்சுலினின் அளவை இரத்தத்தில் கூட்டினால், இரத்தத்தின் சர்க்கரை அளவு திடீரென்று குறைந்ததால் மரணம் நிகழ்ந்ததாக நினைப்பார்கள். சக்ஸினைல்கோலினும் அப்படித்தான்… அது தசைநார்களை வலுவிழக்கச் செய்து இதயத்தை நிறுத்தும். தவிர உடலில் மிக வேகமாகச் சிதைந்துவிடும். ஆக, உடற்கூறாய்வில் இதைக் கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம்… வருண், எனக்கொரு உதவி செய்ய வேண்டும்…” என்றான் பரபரப்போடு.
“சொல்லு ஆதிபன்…”
“இந்த மருந்துகளை மருத்துவ நிபுணரின் உதவி இல்லாமல் கொடுப்பது சாத்தியமில்லை. அதனால், இறந்தவனுக்கு மூச்சுத் திணறல் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு யாராவது உள்ளே சென்று வந்திருக்கிறார்களா என்று பார்த்துச் சொல்ல முடியுமா? முக்கியமாக யாராவது மருத்துவர்கள், இல்லையென்றால் செவிலியர்… அப்படிச் சென்று இருந்தால், இது நிச்சயமாகக் கொலை தான்; ஆனால் நம்மால் நிரூபிக்க முடியாத கொலை!” அவன் சொல்ல,
“நிச்சயமாக ஆதிபன்… அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ இப்போது எங்கே இருக்கிறாய்?” என்றான் வருண்.
“மனது சரியில்லாமலிருந்தது. காற்று வாங்க வெளியே வந்தேன்…” என்று ஏற்றமாதிபன் சொல்ல… அதைக் கேட்டு வருண் என்ன நினைத்தானோ,
“விதரணை எப்படி இருக்கிறாள்?” என்றான் அக்கறையாக. அந்த நேரத்திலும் ஆதிபனுக்குள் ஒருவிதப் பொறாமை எழ,
“எதற்கு இப்போது அவளை விசாரிக்கிறாய்?” என்றான் எரிச்சலோடு.
அதைக் கேட்ட வருணின் உதட்டில் மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்தது. தன் நண்பன் மனதளவில் தடுமாறி இருக்கிறான் என்பதை உணர்ந்துதானே இந்தக் கேள்வியையே கேட்டான்!
“எதற்கா? நீதான் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டாயே… நான் முயற்சி செய்யலாம் என்று…” வருண் முடிப்பதற்குள்,
“ஓவர் மை டெட் பாடி…” என்று சீறிவிட்டு,
“என்னை வந்து முதலில் பிக்கப் பண்ணு…” என்றான் அதிகாரமாக. அதைக் கேட்டுச் சிரித்த வருண்,
“எங்கே இருக்கிறாய்?” என்றான்.
அவன் இடத்தைச் சொல்லிவிட்டு கைப்பேசியை அணைத்தவன் மேலும் நடக்கத் தொடங்கினான்.
நிச்சயமாக இது மிகப்பெரிய சிக்கல் என்பது அவனுக்குப் புரியவே செய்தது. குற்றவாளியைப் பிடிப்பது அத்தனை சுலபமல்ல என்றும் புரிந்தது. குற்றவாளியை ஒருத்தன் கொன்றிருக்கிறான் என்றால், நிச்சயமாகக் அறிவழகன் அங்கிள் சிக்கிக் கொண்ட பிரச்சனை அத்தனை சுலபமானது அல்ல என்றும் புரிந்தது. ஏதேதோ சிந்தித்தவாறு நடக்க, அந்த நேரம் வருணின் வாகனம் ஏற்றமாதிபனுக்கு அருகே வந்து நின்றது.
எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டான் ஏற்றமாதிபன். அடுத்து வண்டியை அவன் அப்படியே ஓட்ட, “எங்கே போகிறாய்… மருத்துவமனைக்கு விடு…” என்று ஏற்றமாதிபன் சோர்வுடன் சொல்ல… தன் நண்பனை ஒரு மாதிரிப் பார்த்த வருண்,
“உன்னைப் பார்த்தால் காவலதிகாரி மாதிரியா இருக்கிறது? முதலில் போய்க் குளி… நாறுது…” என்றான் வருண் மூக்கைச் சுளித்தவாறு. கூடவே அவன் நெற்றியில் வழியும் இரத்தத்தை கண்டு,
“என்னாச்சு நெற்றியில் காயம்?” அக்கறையாகக் கேட்க,
“ப்ச்… எங்கோ மோதிவிட்டேன் போல….” என்றவாறு சோர்வோடு சரிந்து அமர்ந்தவன்,
“சிசிடிவி கிடைத்ததா?” என்றான் விழிகளை மூடியவாறு.
“ம்… இன்று மதியத்திற்குள் எடுத்துக்கொடுக்கிறேன். முதலில் நீ கொஞ்சம் ஓய்வெடு…” என்றான் வருண் தன் நண்பனை நினைத்துக் கவலை கொண்டவனாக.
“அதெல்லாம் வேண்டாம் வருண்… என்னை வீட்டில் விட்டுவிட்டு நீ மருத்துவமனை சென்று, அந்த ஒளிப்பதிவுகளை சேகரித்துக் கொடு… நான் குளித்துவிட்டு வருகிறேன். இந்த பேன்ட்டை வேறு, இந்த வழக்கை நடத்தும் காவலரிடம் ஒப்படைக்க வேண்டும்…” என்றவன், வீடு வந்ததும் இறங்கி வருணைப் பார்த்தான்.
“வருண்… விதரணைக்கு நடந்தது உன்னையும் என்னையும் தவிர இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். குறிப்பாக அபிநயாவுக்குத் தெரியவேண்டாம். தேவையில்லாத ஊகங்கள், சந்தேகங்கள், கவலைகள் எதுவும் வேண்டாம்… அவள் சரியானதும், முக்கியமாகக் காயங்கள் எல்லாம் ஆறினதும் சொல்லலாம்…” அவன் சொல்ல, மறுக்காமல் தலையை அசைத்துச் சரி என்றான் வருண்.
வருண் சென்றதும் வீட்டிற்கு வந்தான் ஏற்றமாதிபன். நல்லவேளை, வித்யாதர் வீட்டில் இல்லை. தாய் யாருடனோ தொலைபேசியில் முதுகு காட்டிப் பேசிக்கொண்டிருக்க… அவசரமாக மாடியேறிச் சென்றான் ஏற்றமாதிபன்.
இறுகிய முகமும், அங்கும் இங்கும் சிதறிய காய்ந்துபோன இரத்தமும் தாயின் சந்தேகத்தைக் கிளறக் கூடும்.
அவசரமாகப் படியேறி அறைக்குப் போக, யாருடனோ பேசிக்கொண்டிருந்த மதிவதனி நிமிர்ந்து பார்த்தார். மகனின் பேன்ட்தான் தெரிந்தது. மகன் வந்துவிட்டது புரிய புன்னகைத்தவர், பேசிக்கொண்டு இருந்தவரிடம் விடைபெற்றுவிட்டு, மகனுக்காக உணவு எடுத்து வைக்கச் சமையலறைக்குள் நுழைந்தார் மதிவதனி.
ஏற்றமாதிபன் குளித்துவிட்டு ஆடை மாற்றி, பிளந்திருந்த நெற்றிக்கு மருந்திட்டுக் கீழே வந்தான். மதிவதனி உணவு எடுத்து வைக்க, எதுவும் பேசாமல் மேசையில் அமர்ந்தவன் தாய் படைத்ததை அமைதியாக உண்ணத் தொடங்கினான். அவன் சாப்பிடவில்லை என்றால் வருந்துவார். அவனுக்குப் பூரியும் கிழங்குக்கறியும் தட்டில் வைத்து,
“நேற்று இரவு எங்கேடா போனாய்…? நீ வீட்டிற்கு வரவில்லையே…” என்று கேட்டவாறு நிமிர்ந்து பார்த்தவர், மகனின் நெற்றியிலிருந்த காணத்தைக் கண்டு அதிர்ந்து,
“என்னடா, நெற்றியில் கட்டுப் போட்டு இருக்கிறாய்..” என்று பதறியவாறு மகனை நெருங்க முயல,
“அம்மா… அது ஒன்றுமில்லை, இரவில் கல் தடுக்கி விழுந்துவிட்டேன். நெற்றியில் சின்னதாக அடிபட்டுவிட்டது.” என்று தாயைச் சற்று அழுத்தமாக தடுத்துவிட்டு, அவர் கொடுத்ததை உண்ணத் தொடங்க, மதிவதனியின் முகம் வாடிப்போயிற்று.
அவன் அப்படித்தான்; பெற்றவர்களின் அனுதாபத்தைக் கூட விரும்பமாட்டான். இதற்கு மேல் கேட்டால் கோபப் படுவான். அதனால், பேசாமல் அவனுக்கு மேலும் பூரி வைக்க முயல… வேண்டாம் என்று கரத்தை நீட்டித் தடுத்தவன், போட்ட இரண்டு பூரியையும் உண்டுவிட்டுத் தட்டை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டு வந்தான் ஏற்றமாதிபன்.
தாய் அவனையே ஆர்வமாகப் பார்த்திருப்பதைக் கண்டதும் இவனுக்கு நெஞ்சம் பிசைந்தது. அவன் இருப்பது இரண்டு நாட்கள் என்று தெரிந்ததும் அவனோடு நேரம் செலவழிக்க ஆசைப்பட்டிருப்பார். இனி அவன் புறப்பட்டுவிடுவான் என்று அறிந்து நிச்சயமாக உள்ளூர வருந்துவார். இந்த இரண்டு நாட்களும் அவன் தன்னோடு நேரத்தைச் செலவு செய்யவில்லையே என்று கலங்குவார். தாயை நெருங்கியவன், அவர் தலையில் கைவைத்து எடுத்து,
“மா… நேற்று ஒரு குற்றப்புலனாய்வு விஷயமாக வெளியே போயிருந்தேன். அந்த வேலை முடியும் வரைக்கும் ஒரு மாதம் இங்கேதான் இருக்கப் போகிறேன்…” என்று சொல்ல, அன்றலர்ந்த தாமரையாய் பளிச்சிட்டது மதிவதனியின் முகம்!
ஒரு மாதம் மகன் சேர்ந்தாற்போல அவர்களோடு இருக்கப்போகிறானா…? இதை விட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்! ஏற்றமாதிபன் பல்கலைக்கழகம் முடித்ததுமே வேறு மாகாணத்திற்குச் சென்று விட்டான். இரண்டு மாதங்கள், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து நின்றுவிட்டுப் போவான். இப்படித் தொடர்ந்து அவர்களுடன் இருந்த நாட்கள் மிகக் குறைவே.
அந்த மகிழ்ச்சியில், “நிஜமாவாடா…” என்று பூரிக்க… தாயின் முகத்திலிருந்த மகிழ்ச்சியைக் கண்டு இவன் உள்ளம் இளகித்தான் போனது.
“ம்… இருக்கும் நாள்வரைக்கும் பிடித்த சாப்பாட்டை செய்து கொடுங்கள்…” அவன் கனிவோடு சொல்ல, உருகிப்போனார் மதிவதனி. இப்படி அவரோடு அக்கறையாய் பேச அவன் முயன்றதேயில்லையே.
அவன் சொன்னதும் அவசரமாகத் தலையை மேலும் கீழும் ஆட்ட, அவர் ஆட்டிய விதத்தில் இவனுக்கு புன்னகைதான் மலர்ந்தது.
“சரிமா… எனக்கு முக்கிய வேலை இருக்கு.. கிளம்புறேன்… கதவைப் பூட்டுங்கள்…” சொன்னவன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் மருத்துவமனைக்கு.

