Wed. May 20th, 2026

வெந்தும் தணியுமோ காதல் – 13

13-

எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று அவருக்குத் தெரியவில்லையா? அவளால் இந்த ஜென்மத்தில் ஆதியதுலனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் பாவம் அவர் தெரிந்திருக்க நியாயமில்லை. அவள் எண்ணும் போதே, இன்னொரு மனதோ அவளைப் பார்த்து எள்ளி நகையாடியது.

‘ஏற்றுக்கொள்ள உன்னால் முடியாதா? ஹா ஹா ஹா… அவன் பக்கத்தில் வந்தாலே உருகிப் போகிறாய். அவன் கடைக்கண் பட்டாலே இளகிப் போகிறாய். அவன் உடலின் சூடு பட்டாலே கரைந்து போகிறாய். அவன் அருகே வந்து பேசினாலே புத்தி செயலிழந்து போகிறாய். இதில் அவனை ஏற்றுக் கொள்ள முடியாதா? உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நீ ஆசைப்பட்ட வாழ்க்கைதானே இது?’ என்று அவளிடமே கேட்டது.

‘அது… அது வந்து…’ தவித்தவளுக்கு உள் மனது சுட்டது. ஆனாலும் அவன் மீது அவள் கொண்ட காதலுக்கு ஏதாவது மதிப்பிருக்கிறதா என்ன? விரக்தியில் உதடுகள் நெளிய, மீண்டும் அவளுடைய மனசாட்சி அவளைக் குத்தியது.

“ஏன் இல்லை… இந்த விநாடிவரை அவனை நினைத்துத்தானே வாழ்கிறாய். அதனால்தானே ஆல்ஃபிரெட்டைக் கூட மறுத்தாய்? சொல்லப் போனால் ஆதியதுலனை விடப் பலமடங்கு உயர்ந்தவன். ஆனாலும் அவனை ஒரு ஆணாகவே நீ நினைக்க வில்லையே? உன்னால் ஆதியதுலனைத் தவிர, வேறு எவனையும் உனக்குரியவனாக ஏற்றுக் கொள்ள முடியாது நேயா. அவனைத் தவிர வேறு யாரும் உன்னைக் காமத்தோடு தீண்ட முடியாது. சிலிர்க்க வைக்க முடியாது. முன்பு அவன் கிடைக்காமல் போனது உன் விதி என்றால், இப்போது அவன் உனக்குக் கிடைப்பதும் விதிதான். ஏற்றுக்கொள். முட்டாள்தனமாக மறுக்காதே.

நோ… அது மட்டும் என்னால் முடியாது. அன்று என்னை வேண்டாம் என்று மறுத்தவனை நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? அதுவும் என் தங்கையோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தவன், அவன் கூட நான் எப்படி? சீ.. சீ.. நினைக்கும் போதே அருவெறுத்தது அவளுக்கு.

‘இதோ… இந்தப் பிடிவாதம்… இந்தப் பிடிவாதம் தான் உனக்குச் சாபம். இதனால் நீ இழந்தது மிக அதிகம். இன்னும் இழக்கப்போகிறாயா? யோசி நேயா…’

‘இதில் யோசிக்க என்ன இருக்கிறது. என்னால் அதுலனைக் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது முடியாது முடியாது…’

‘அப்படியென்றால் மகிழினியை நீ மறக்க வேண்டியதுதான்.’

‘ஐயோ… எனக்கு மகிழினி வேண்டுமே. எனக்கென்று எஞ்சியிருக்கும் ஒரே ஒரு உறவு அவள்தானே. யாரை உதறி எறிந்தாலும் அவளைத் தூக்கி எறிந்துவிட முடியாது.’

‘அப்படியென்றால் அவனை மணப்பதுதான் ஒரே வழி.’

‘நோ… நிச்சயமாக முடியாது.’

பல்வேறு பட்ட மனப்போராட்டத்தோடு தன் தலையைப் பற்றிக்கொண்டு படுக்கையில் அமர்ந்து விட்டாள் நேயநறுமை. அவளுக்கு வியர்த்துக் கொண்டு வந்தது. ஒரு பக்கம் அவனை ஏற்றுக்கொள் என்று வாதிடும் மனது. இன்னொரு பக்கம் வெறுத்து ஒதுக்கும் புத்தி. காதலால் நொந்து போன மனது, அதையும் தாண்டி மகிழினியின் எதிர்காலம். இதற்கு மத்தியில் அல்லல் பட்டவளுக்குச் சட்டென்று அந்த எண்ணம் தோன்றியது.

இப்படி யோசித்து மனத்தை வதைப்பதை விட, நேரடியாக ஆதியதுலனிடம் சென்று குழந்தையைக் கொடுக்கும் படி கேட்டால் என்ன? நாளையே அவன் இன்னொரு பெண்ணைத் திரு… திரும… இன்னொரு பெண்ணோடு வாழ்வதென்றால், மகிழினி அவனுக்குச் சுமையாகத்தானே இருப்பாள். இவள் கேட்டதும் கொடுத்து விடமாட்டானா?

முட்டாளா நீ? எந்தத் தந்தைக்கும் தான் பெற்ற குழந்தை சுமையாக இருக்காது நேயா… இது என்ன வெளிநாடா? பெற்ற குழந்தையைச் சுமையாக நினைத்துத் தூக்கிக் கொடுப்பதற்கு? ம்கூம். நிச்சயமாக வாய்ப்பில்லை. ஆனாலும் கேட்டுப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லையே? மனது ஆயிரம் தடவையாக யோசித்து அவனிடம் கேட்டுப் பார்ப்பது என்று முடிவெடுத்தது.

மனத்தை திடப்படுத்தியவள் படுக்கையை விட்டு எழுந்து ஆதியதுலனைத் தேடிச் சென்றாள்.

ஆதியதுலன் பின்புறத் தோட்டத்தின் மத்தியில் நின்றவாறு யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். இவள் வேகமாக வரும் அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன், தன் பேச்சை நிறுத்தாமலே அவளை என்ன என்பது போலப் பார்த்தான்.

பரிதவித்த முகம் அவனிடம் எதையோ முக்கியமாகச் சொல்ல வந்திருக்கிறாள் என்பதைச் சொல்லாமல் சொல்ல, அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவரிடம் சுருக்கமாகப் பேசிவிட்டுக் கைப்பேசியை அணைத்தவன், அவளை நோக்கித் திரும்பி,

“சொல்லு…” என்றான்.

வெப்பம் காரணமாகக் கழட்டிவிட்ட நான்கு பொத்தான்கள், அவனுடைய முடியடர்ந்த பரந்த மார்பின் மேல் பகுதியை வெளிக்காட்ட, அந்த முடிகளுக்கு மத்தியில் சிக்கிக் காணாமல் போன பார்வையை இழுத்து எடுக்க முடியாமல் திணறியவளாக,

“நா… நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்…“ என்றாள்.

முழு விநாடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், அங்கிருந்த இருக்கையைக் காட்டி,

“உட்கார்…” என்றான். மறுக்காமல் அமர்ந்தாள் நேயநறுமை.

அவளுக்கு அமர்ந்தேயாகவேண்டிய நிலை. வாழ்க்கையில் முதன் முறையாகக் கால்கள் தந்தியடித்தன. மனது படபடத்தது. அவளுடைய வேண்டுதலை நிச்சயமாக ஒத்துக்கொள்ள மாட்டான் என்பது உறுதி. இருந்தும் எந்த தைரியத்தில் கேட்க வந்தாள் என்பது அவளுக்கே தெரியாத ஒன்று. இப்போது அவனிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? தடுமாறி நிற்கையில் அவனும் அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்து தன் காலுக்கு மேல் காலைப் போட்டவாறு சாய்ந்துகொள்ள, மீண்டும் அவனிடம் பாய்ந்தது மனது.

“சொல்லு நறுமை… என்ன பேசவேண்டும்…” அவன் கேட்க, ஒரு வார்த்தைக்கு ஆயிரம் பேச்சுப் பேசுபவள், அவனுடைய அந்தக் கேள்விக்கு எதுவுமே பேசத் தோன்றாமல் மலங்க மலங்க விழித்தாள்.

“நறுமை?” என்றான் அவன் மீண்டும் அழுத்தமாக. திரும்பவும் சிரமப்பட்டுத் தன் விழிகளை அவனிடமிருந்து பிரித்து எடுத்தவள்,

“நான்… நான்…. கனடா பேக முடிவு செய்து விட்டேன்…” என்றதும் அவனிடம் ஒரு கணம் அசைவு நின்று போனது. அவனுடைய கூரிய விழிகள் அவளை அழுத்தமாக ஏறிட்டன.

“ஏன்…?” ஒற்றைக் கேள்விதான். ஆனால் பதில்தான் சொல்லத்தெரியவில்லை. நீ என்னைத் தொல்லை செய்கிறாய். உன் நினைவு என்னைப் பாடாய்ப் படுத்துகிறது என்று எப்படிச் சொல்வாள்? அதுவும் பெற்றவர்களையும், கூடப்பிறந்தவளையும் முற்றாகத் தொலைத்து ஒரு மாதம் கூட ஆக வில்லை. இதில் அவர்களின் இழப்பை விட, இவனை இழந்த நிற்கும் வலிதானே அதிகமாக இருக்கிறது. இதை எப்படி அவனிடம் சொல்வது. உமிழ்நீரைக் கூட்டி விழுங்கியவள்,

“இங்கே இருந்து என்ன செய்யப்போகிறேன்? அதுதான் கிளம்பலாம் என்று..” சொல்ல ஒரு கணம் அவன் முகத்தில் தவிப்பு குடிகொண்டது. அவர்களை விட்டு அவள் தனியாகச் செல்வது இவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால் அவளைத் தடுக்க இவன் யார்? ஒரு விநாடி அமைதி காத்தவன்,

“இன்னும் இறந்தவர்களின் காரியம் எதுவும் முடியவில்லையே. அகால மரணம் வேறு. ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் துடக்குக் கழிக்க முடியும் என்று சொல்கிறார்கள். நீ புறப்பட்டால் எப்படி?” அவன் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் நேய நறுமை.

“எனக்கு இந்த சடங்கு சம்பிரதாயங்கள் எதிலும் நம்பிக்கை இருந்ததில்லை. அது உங்களுக்கே தெரியும். இதைச் செய்வதால் என் வலியும் வேதனையும் காணாமல் போய்விடுமா என்ன? இல்லை விட்டுப் போனவர்கள்தான் திரும்பி வந்து விடப் போகிறார்களா. பிறந்தவர் இறப்பது நியதி… போய்விட்டார்கள். அவ்வளவுதான்.” இறுகிய குரலில் சொன்னவளை புருவங்கள் சுருங்கப் பார்த்தான் ஆதியதுலன்.

“உனக்கு நம்பிக்கையில்லை என்பதற்காக, சம்பிரதாயங்களை ஓரம் தள்ள முடியாது நறுமை. இது நம்முடைய மனத்திருப்திக்காகச் செய்வது. இறந்த பிறகும் அவர்களின் ஆத்தமா நிம்மதியடையும் என்கிற ஒரு நம்பிக்கையில் செய்வது. குறைந்தது இன்னும் இரண்டு கிழமைகளாவது நீ இங்கே இருந்துவிட்டுப் போ…” சொன்னவனுக்கும் அவள் அருகே இருக்கவேண்டும் என்று மனது தவித்தது.

ஆனால் அவளோ, அங்கிருந்து ஒரேயடியாகத் தொலைந்து போனால் போதும் என்கிற நிலையில் இருந்ததால்,

“இ.. இல்லை… நா… நான் உடனே போக வேண்டும். விரைவாகவே வேலையில் சேர்வதாக ஆல்ஃபிரெட்டிடம் சொல்லிவிட்டேன்…” அவள் சொல்ல, அந்த ஆல்ஃபிரெட் என்கிற பெயரில் அவனுடைய தாடைகள் இறுகிப் போயின.

“நீ வேலைக்குப் போய்ச் சம்பாதிக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை நறுமை?” என்றான் அவன் எதையோ உணர்த்தும் விதமாக. அதைக் கேட்டதும் இவளுடைய உதடுகள் இளக்காரமாக வளைந்தன.

“நான் என்ன முனிவரா? தவமிருந்து ஆயிரம் வருடங்கள் உண்ணாமல் உறங்காமலிருக்க? எனக்கும் தேவைகள் இருக்கிறது அதுலன். அதை நான் சம்பாதிப்பதன் மூலம்தான் பெற முடியும்…” அவன் முகம் பார்க்காமல், எங்கோ பார்த்தவாறு சொல்ல, இவனுடைய முகம் வாடிப்போனது. அவள் ஈழம் வந்த இத்தனை நாட்களில், இவன் முகம் பார்த்துப் பேசுவதை தவிர்த்து வருகிறாள். இவனாகப் பேசப் போனாலும், அந்த இடத்தை விட்டுப் போய்விடுகிறாள். அதற்கான காரணத்தை அறியாதவன் அல்லவே அவன்.

நெஞ்சம் நிறைந்த வலியோடு அவளைப் பார்த்தவன்,

“சில சம்பவங்களை மறப்பது கடினமாக இருக்கிறது அல்லவா…?” என்றவனின் விழிகள், அவளுடைய மாற்றத்தை வேதனையோடு பார்க்க, விரக்திப் புன்னகை ஒன்றை சிந்தினாள் நேயநறுமை.

“மறக்கிறது போல என் வாழ்க்கையில் எதுவும் நடக்கவில்லையே…?” என்றாள் கசப்பாக. அதைக் கேட்டவனின் முகமும் கசங்கிப் போனது.

“நேயா…!” என்றவன் எதையோ சொல்ல வந்தான். மறு கணம் அந்த எண்ணத்தை மாற்றித் தலையை சரி என்பது போல அசைத்து,

“சரி… இதுதான் உன் முடிவென்றால் அதைத் தடுக்க நான் யார்…? உன் விருப்பம்… எப்போது கிளம்புகிறாய்..?” அவன் கேட்க,

“அடுத்த கிழமை, பதினான்காம் திகதி…” என்றாள் தரையைப் பார்த்தவாறு.

“சரி..?” என்று தோள்களைக் குலுக்கியவன், எழுந்து அங்கிருந்து செல்ல முயல, பதட்டத்தோடு எழுந்தவள்,

“அதுலன்…” என்றாள் அவசரமாக. நின்று திரும்பிப் பார்த்தவன், புருவங்கள் சுருங்க என்ன என்பது போல ஏறிட்டான்.

“நான்… எனக்கு… மகிழ்…” என்றவளுக்கு எப்படிக் கேட்பது என்று சத்தியமாகப் புரியவில்லை.

அவள் கேட்கப் போவது ஒன்றும் கடையில் வாங்கிய பொம்மையையில்லையே. உயிரும் உணர்வும் உள்ள அவனுடைய குழந்தை. அதைக் கொடு என்று கேட்டால், உடனே கொடுக்க எப்படி ஒத்துக் கொள்வான்? கரங்களைப் பிசைந்து, தடுமாறி நிற்கையில், இப்போது அவளை நோக்கி நன்றாகத் திரும்பியிருந்தான் ஆதியதுலன். அவனுடைய விழிகளோ ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டுக் கசக்கப்பட்டிருந்த அவளுடைய கரங்களில்தான் நிலைத்தன.

நேயநறுமை ஒன்றும் இப்படிக் கரங்களைப் பிசைந்து, கேட்கவந்ததைக் கேட்கத் தயங்கும் ஆள் இல்லை. எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராகக் கேட்கக் கூடியவள். அப்படிப்பட்டவள் இப்படித் தயங்குகிறாள் என்றால், அவள் கேட்க வந்தது மிகப் பாரதூரமான ஒன்று என்பதைப் புரிந்து கொண்ட ஆதியதுலன் இப்போது நிமிர்ந்து அவள் விழிகளை ஏறிட்டான். அதிலும் ஏகப்பட்ட தயக்கம். அச்சம்.

“சொல்லு…”

“அது… நான் வந்து… நான்… மகிழினியை…” எப்படி அவனிடம் கேட்பது என்று தெரியாமல் தயக்கத்தோடும் பரிதவிப்போடும் தயங்கி நிற்க, இப்போது அவனுடைய விழிகள் கூர்மையுடன் அவளை அளவிட்டன.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கூட்டுவதற்கு எதற்கு மூளை. சட்டென்று அவனுடைய கைமுஷ்டிகள் இறுகத் தலையைச் சரித்து அவளை உற்றுப் பார்த்தான். ஒரு விநாடி விழிகளை அழுந்த மூடி நின்றவன், இப்போது விழிகளைத் திறந்து,

“என்ன மகிழினி வேண்டுமா?” என்றான் நேரடியாக. அதைக் கேட்டதும் அவனைப் பார்க்கும் தைரியமற்று, எங்கோ பார்த்தவாறு ஆம் என்று தலையை ஆட்ட, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான் ஆதியதுலன்.

அவன் தன்னையே பார்ப்பது புரிய, பார்வையை மாற்றி அவனிடத்தே நிலைக்கச் செய்தவள், அவனுடைய கூர்மையான விழிகளின் வீரியத்தைத் தாங்க முடியாமல் தலை கவிழ்த்து,

“இப்போது எனக்கிருக்கும் ஒரே உறவு மகிழினி தான்… எல்லாவற்றையும் தொலைத்த பின்பு விடிவெள்ளியாக என் கண் முன்னால் மின்னும் தேவதை அவள். அவளை எனக்குக் கொடுத்து விடுங்களேன்…” என்றவள் இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து, “அவளை என் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறேன்… தயவு செய்து கொடுத்து விடுங்கள்” என்று ஏக்கமாகக் கேட்டவளை வெறித்தவன்,

“டோன்ட் பெக் மீ…” என்றான் ஒரு வித சீற்றத்தோடு.

இவளோ புரியாமல் அவனைப் பார்க்க,

“யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாதே நறுமை… அது உனக்குப் பழக்கம் இல்லாத ஒன்று… உன்னால் முடியாததும் கூட…” அழுத்தமாகச் சொல்ல, அவனைக் கலக்கத்தோடு பார்த்தாள் நேய நறுமை. அந்தப் பார்வையில் உள்ளே சுக்குநூறாக உடைந்து போனான் ஆதியதுலன்.

“அந்தப் பழைய நேயநறுமை என்றோ காணாமல் போய்விட்டாள் அதுலன். இப்போது இருப்பவள், மூச்செடுக்கத் திராணியற்று நடுக் கடலில் மூழ்கித் தத்தளிக்கும் ஒருத்தி. திக்குத் திசை தெரியாமல் காட்டில் அலைந்து திரிபவள். வெளிச்சத்துக்காக ஏங்கித் தவிக்கும் கும்மிருட்டில் தொலைந்து போனவள்…” என்றவளுக்கு உதடுகள் நடுங்கின. அவன் முன்னால் அழுதுவிடுவோமோ என்று அஞ்சியவளாக, சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி நின்றவள்,

“இந்த அபலைக்கு மூச்சுக்காற்றாய், நீந்தித் தப்ப ஒரு துடுப்பாய், பாதை காட்டும் வெளிச்சமாய், மகிழினி வேண்டும்…” என்று கரகரத்த குரலில் சொன்னவள், அவசரமாக அவன் பார்க்காமல் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவனை நோக்கித் திரும்பி, “அவளை எனக்குக் கொடுத்து விடுங்கள். உள்ளங்கையில் தாங்கிப் பாதுகாத்துக் கொள்கிறேன். பொக்கிஷமாகப் போற்றுகிறேன்…” கெஞ்சலும், தவிப்புமாகச் சொல்ல, அவளுடைய நிலையைக் கண்டு அவன் இதயம் விண்டு போனாலும் இறுக்கமாக நின்றுகொண்டான் ஆதியதுலன்.

அவள் கேட்டதும் மகிழினியைக் கொடுத்து விடலாம்தான். அதற்குப் பின்னர்? கேள்வி எழ, ஆழ மூச்செடுத்துத் தன் தவிப்பை ஒதுக்கியவன்,

“மகிழினி என் குழந்தை. அவளை உன்னிடம் கொடுத்துவிட்டு நான் என்ன செய்வது?” என்றான் நிதானமாக. அவசரமாக அவனை ஏறிட்டுப் பார்த்தவள்,

“நீங்கள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளுங்கள். இன்னொரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது திருமணம் இல்லாமல் கூடக் குழந்தை பெற முடியுமே. அப்படியேதாவது ஒரு வகையில் உங்களுக்குக் குழந்தையைப் பெற்றுக்கொள்ளுங்களேன். எனக்கு இவளைக் கொடுத்துவிடுங்கள்…” அவள் சொல்ல, சிரித்தான் ஆதியதுலன்.

“இதையே… நானும் உன்னிடம் சொல்லலாம் தானே. எதற்காக என் மகளைக் கேட்கிறாய். நீயும் ஒருத்தனை மணந்து… சாரி… இப்போது திருமணம் தேவையில்லையே… யாராவது ஒருத்தனின் விந்தணுவை வாங்கிக் குழந்தையை உருவாக்கி…” அவன் முடிக்கவில்லை, அவளுடைய முகம் அருவெறுப்பில் கசங்கிப் போனது.

யாரோ ஒருத்தனின் குழந்தையை அவள் சுமப்பதா? அவள் மகிழினியைக் கேட்பது அவளுடைய தங்கையின் மகள் என்பதற்காக மட்டும்தானா. இல்லையே… அது அவனுடைய குழந்தையும் கூட. அதனால்தானே மகிழினியை உயிராக நினைக்கிறாள். அவளைத் தன் கூட அழைத்துச் செல்லவும் ஆசைப்படுகிறாள். ஆனால் இவனோ….! கோபமும் ஆத்திரமுமாக அவனைப் பார்த்தவள்,

“இன்னொருத்தன் குழந்தையை நான்…” சொல்ல வந்ததை விழுங்கிவிட்டு, “மகிழ் இருக்கிற போது எனக்கெதற்கு இன்னொரு குழந்தை? இதோ பாருங்கள்.. இப்போது எனக்கிருக்கும் உறவு மகிழினி மட்டும்தான். இனி அவளுக்காகவே வாழ்ந்து முடித்துவிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன். தயவு செய்து அவளை என்னிடம் கொடுத்து விடுங்கள்… பதிலுக்கு நீங்கள் என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்… பணம், என்னிடமிருக்கும் சொத்து.. எதுவாக இருந்தாலும் கொடுக்கிறேன்… பிளீஸ்… அவளை என்னிடமே ஒப்படைத்து விடுங்கள்…” அவள் தன்னை மீறிக் கெஞ்ச, ஓரெட்டில் அவளை நெருங்கியவன் சட்டென்று அவளுடைய உதடுகளைத் தன் நான்கு விரல்களால் மூடிக் கொண்டான். இவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க, மறுப்பாகத் தலையசைத்து,

“சற்று முன் சொன்னதுதான் நறுமை… கெஞ்சாதே. எக்காலத்திலும், எதற்காகவும் கெஞ்சாதே, அது உனக்குப் பொருந்தவில்லை…” என்றவன், தன் கரத்தை விலக்கி, அவளை நோக்கிச் சற்றுக் குனிந்து தன் விழிகளால் அவளுடைய விழிகளை ஊடுருவிப் பார்த்தவாறு,

“பணத்தால் எதையும் வாங்கலாம் என்று நினைத்தாயா? என்னிடம் இல்லாத பணம் உன்னிடம் இருந்துவிடப் போகிறதா என்ன?” என்றான் கிண்டலாக.

உண்மைதான். அவளிடமிருக்கும் டாலர்களை, ஈழத்து ரூபாய்க்கு மாற்றினால் இலங்கைப் பணத்திற்கு ஒரு சில கோடிகளாக மாற்ற முடியும் தான். ஆனால் இவனிடம் இல்லாத பணமா அவளிடம் இருக்கப் போகிறது? கலக்கத்தோடு அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஆனால் எனக்கு… நான்..” அவள் பேச முடியாமல் தடுமாற, இப்போது நிதானமாகத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செலுத்தி,

“எனக்குப் பணம் வேண்டாம்… உன்னுடைய சொத்து எதுவும் வேண்டாம்… ஆனால்…” என்றவன் அவள் போட்டுவிட்ட மோதிரத்தை மறு கரத்தால் சுழட்டியவாறே, அவளை நெருங்கித் தன்னுடைய மூச்சுக் காற்று அவள் முகத்தில் பட்டுத் தெறிக்கும் வகையில் குனிந்து, தன் விழிகளால் அவளுடைய விழிகளைக் கவ்வி இழுத்து, அதில் தன் உணர்வுகளைக் கலக்க முயன்றவனாக,

“மரி மீ…” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

 

What’s your Reaction?
+1
11
+1
7
+1
5
+1
1
+1
1
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!