12-
இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது.
‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்பான். எனக்கும் ஆல்ஃபிரெட்டுக்கும் இடையில் எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அதைக் கேட்க இவன் யார்? அதுதான் அன்று என் காதலைத் தூக்கி எறிந்துவிட்டு நேரிழையை ஏற்றுக்கொண்டானே. அதற்குப் பிறகு எந்த தைரியத்தோடு நமக்கிடையில் எதுவுமே இல்லையா என்று கேட்பான். கோபத்தில் மனது கிடந்த தவிக்க, அவன் கரங்கள் பட்ட உடலோ வேறு சொன்னது.
அவன் தொடுகைதான் அதற்குப் போதை ஆயிற்றே. கொஞ்சம் கூட வெட்கமின்றி அவன் அணைப்பில் தன்னிலை கெட்டுக் கிடந்த உடல், திரும்பவும் அவன் அணைப்புக்காக ஏங்கி நிற்க, எரிச்சல்தான் வந்தது இவளுக்கு.
இது என்ன நரகவேதனை. அவன் எனக்குச் சொந்தமில்லாதவன் என்று தெரிந்தும் அவன் அருகே நின்றால் என்னால் நிதானமாக இருக்க முடியவில்லை. சீராகச் சுவாசிக்க முடியவில்லை. இதோ அவன் கரம் பட்ட இடங்களெல்லாம் தித்திக்கிறது. அவளுடைய தங்கையின் கணவனாகிய பின்னும் கூட அவனுடைய அருகாமைக்காக ஏக்கம் கொள்ளும் மனத்தை அடக்க முடியாமல்தானே தொலைதூரம் ஓடிப்போனாள். ஆனால் விதி திரும்பவும் அவனருகே நிறுத்தி வைத்து சதிராடுகிறது.
இல்லை… இனியும் இப்படியே விட்டால், அவள் பைத்தியமாவது உறுதி… உடனே இங்கிருந்து சென்றுவிடவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக. முடிந்தால் இப்போதே. இல்லை என்றால், இத்தனை நாட்களும் பாதுகாத்து வைத்த அவளுடைய மானம் மரியாதை அத்தனையும் பொடிப்பொடியாக நொறுங்கிப் போகும். முடிவு செய்தவள் தன் கைப்பேசியை எடுத்து விமான நிலையத்தை அழைத்து உடனே கனடா செல்வதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தாள். அவள் நேரம், ஒரு இருக்கை கூட கிடைக்கவில்லை. அவள் பதிவு செய்த திகதியில்தான் பயணம் செய்ய முடியும் என்றார்கள். அதற்கு இன்னும் ஒரு கிழமை இருக்கிறதே. அதுவரை ஆதியதுலனின் அருகாமையில் வெந்துபோவாளே. “ஙீஙீஙீஙீ” வாய்க்குள் முனங்கியவளுக்கு, அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்தது. நிச்சயமாக அவளால் அங்கே தங்க முடியாது. இதற்கு ஒரே வழி, எங்காவது விடுதியில் தங்கி விட்டுச் செல்வதுதான். முடிவு செய்தவள், விரைந்து சென்று பெட்டியை எடுத்து அதில் தன் பொருட்களை அடுக்கத் தொடங்கிய நேரம், அவளுடைய கதவு மெதுவாகத் திறந்தது. அதுவரை முகத்தில் தெரிந்த வலியையும் வேதனையும் துடைத்து எடுத்தவள், நிமிர்ந்து பார்த்தாள்.
வேறு யார், மகிழினிதான், கையில் ஒரு பொம்மையை ஏந்தியவாறு, உள்ளே வந்துகொண்டு இருந்தாள். அவளைக் கண்டதும், பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தவளின் கரங்கள், அந்தரத்தில் நின்றன.
குழந்தையை எப்படி மறந்தோம்? கரத்திலிருந்த பொருள் நழுவித் தரையில் விழ, உடலின் சக்தி வடிந்தவள் போல அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்றாள் நேயநறுமை. விழிகளோ பரிதவிப்போடு தங்கையின் மகளையே வெறித்தன.
தற்போது அவளுக்கு எஞ்சியிருக்கும் சொந்தம் அந்தக் குழந்தை மட்டும்தான். நேரிழை, தனக்குப் பதிலாக விட்டுச் சென்ற சொத்து. இவளை இங்கே விட்டுவிட்டு எப்படிச் செல்வது? வலி நிறைந்த கேள்விகள் அவளைக் குடைய, அதுவரையிருந்த அழுத்தம் மேலும் அதிகரிக்க, அந்த அழுத்தத்தின் பாரத்தைத் தாங்க முடியாமல் கால்கள் மடங்கிச் சரிய, தரையில் தொப்பென்று அமர்ந்தாள் நேய நறுமை. இயலாமை கொடுத்த பலவீனத்தில் கரங்களால் தன் தலையைத் தாங்கி அமர்ந்து கொள்ள,
“அம்மா…” என்கிற மழலைக் குரலோடு குழந்தை அவளை நெருங்க, அதன் அம்மா என்கிற அழைப்பில் உயிர்மெய் உருகிப்போனாள் நேயநறுமை.
என்ன காரணமோ தெரியாது, அவளைக் கண்ட நாள் முதல், குழந்தை அம்மா என்றுதான் அழைக்கிறது. ஒரு வேளை தாயின் முகத்தை இவளுடைய முகம் ஒத்திருப்பதால் இருக்கலாம். அவள் அம்மா என்னும் போதெல்லாம் இவள் சிலிர்த்து அடங்குகிறாள். உள்ளே பட்ட வலிக்கு மருந்து தடவுவது போல உள்ளம் குளிர்ந்து போகிறது. இதோ இப்போதும் பேரலையாகப் பொங்கி எழும் உணர்ச்சிகளைக் குழந்தையின் அம்மா என்கிற ஒற்றை வார்த்தை அடங்கச் செய்ய, தன்னை நோக்கி வந்தவளை இழுத்து வாரி அணைத்துக் கொண்டாள் நேயநறுமை.
அப்படியே அவளுடைய தங்கைதான் அந்தக் குழந்தை. ஒரு காலத்தில் ஒட்டு மொத்த பாசத்திற்கும் சொந்தக்காரியாக இருந்தவள். ஆதியதுலனின் மீது காதல் என்று அவளுடைய பொறாமையைத் தூண்டி யாரும் அறியாத வகையில் அவளுக்கு மட்டும் எதிரியாக மாறிப்போனவள். இன்று இரண்டு வயதுக் குழந்தையாக அவளுடைய அணைப்பில் சிக்கிக் கிடக்கிறாள். யாரை விட்டுச் சென்றாலும், இவளை எப்படி விட்டுச் செல்வாள்? மனது வேதனையில் வெம்மிக் கூப்பாடு போட, அதன் தலையில் தன் முகத்தைப் புதைத்து அப்படியே அமர்ந்திருந்தாள் நேயநறுமை.
குழந்தையும், தன்னை அணைத்திருப்பது அன்னை என்று நினைத்ததோ, இல்லை அவளோடு அமர்ந்திருப்பது பாதுகாப்பு என்று எண்ணியதோ, வாகாக அவள் மடியில் அமர்ந்து தன் மழலை மொழியில் ஏதேதோ பேச, குழந்தை பேசுவதைத் தன் வலி அனைத்தையும் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் நேயநறுமை. குழந்தையும் பேசிக் களைத்து அவள் மடியிலேயே உறங்கிப் போக அதைக் கூட உணராமல் அதன் அணைப்பில், அதன் வாசனையில் தன்னை இழந்து கிடந்தாள் அவள்.
எத்தனை நேரமாக அப்படியே அமர்ந்து இருந்தாளோ, அவளுடைய வாசல் கதவில் அரவம் கேட்க, தன் நிலை கலைந்து நிமிர்ந்து பார்த்தாள். பாஸ்கரன்தான் வந்திருந்தார்.
தரையில் அமர்ந்தவாறு மகிழினியை மடியில் வைத்திருந்தவளைக் கண்டதும், மென்புன்னகை சிந்தியவர்,
“மதியம் கடந்துவிட்டது… இன்னும் நீ சாப்பிட வில்லை என்று வேலையாள் சொன்னார்… அது தான் பார்க்க வந்தேன்…” என்று தயக்கமாகச் சொன்னவர், மெதுவாக விழிகளைத் திருப்பிக் கட்டிலில் இருந்த பெட்டியைப் பார்த்தார். புருவங்கள் சுருங்கக் கேள்வியாக நேயநறுமையை ஏறிட, அவளும் கனடா புறப்படுவது என்கிற வேகத்தில், அடுக்கிவைத்திருந்த பெட்டியைத்தான் வெறித்தாள்.
“நேயா…” அவர் தயங்க, அவருடைய விழிகளைப் பார்க்கும் தைரியமின்றி,
“நான்… கனடா போக முடிவுசெய்துவிட்டேன் மாமா…” என்றாள்.
“அது தெரிகிறது… ஆனால் ஏன்… இன்னும் கொஞ்ச நாட்கள் எங்களோடிருக்கலாமே…” அவர் சொல்ல விரக்திப் புன்னகை ஒன்றைச் சிந்தினாள் நேயநறுமை.
ஒரு விநாடி அவன் அருகே நின்றாலே மூச்சு முட்டுகிறது. இதில் இன்னும் தங்குவதென்றால், மூச்சுக்காற்றுக்குத் தவித்து இறந்தே போவாள்.
மறுப்பாகத் தலையசைத்தவள்,
“இங்கே இருந்து என்ன செய்யப்போகிறேன்… இருந்தால் மட்டும் விட்டுப்போன என் அம்மாவும் அப்பாவும் வந்துவிடப் போகிறார்களா…? இல்லை நேருதான் என்னிடம் ஓடிவரப் போகிறாளா? இங்கே இருக்க முடியவில்லை மாமா… மூச்சு முட்டுகிறது. அம்மா அப்பாவின் நினைவு அதிகமாகத் தாக்குகிறது. அது… என்னைப் பலவீனமாக்குகிறது… நான் எனக்கே அன்னியப் பட்டது போலத் தோன்றுகிறது.. ம்கூம்… நான் இங்கிருந்து புறப்படுவதுதான் சரி…” அவள் சொல்ல, அதற்கு என்ன பதிலைச் சொல்வார் பாஸ்கரன். பெருமூச்சொன்றை விட்டவர்,
“அதுதான் உன் முடிவென்றால், உன்னைத் தடுக்க நான் யார்? ஆனால்” என்று வேதனையுடன் சொன்னவர், அவள் மடியில் கிடந்த குழந்தையை ஏறிட்டுப் பார்த்து,
“நீ போனால் குழந்தைதான் தவிப்பாள் நேயா. அவள் உன்னைத் தன் தாயாகப் பார்க்கிறாள்…” அவர் சமயம் பார்த்து ஊசியேற்றக் குழந்தையை மேலும் தன்னோடு அணைத்துக்கொண்டாள் நேய நறுமை.
“அவள்… அவள் இல்லாமல் நானும்… நானும் சிரமப்படுவேன்” என்றாள் எல்லையில்லா வலியோடு.
“ஏன் சிரமப்படவேண்டும்? மகிழை உன் குழந்தையாகவே ஏற்றுக்கொள் நேயா…” பாஸ்கரன் சொல்ல, தன் மடியில் கிடந்த மகிழினியை மேலும் இறுக அணைத்து அதன் தலையில் தன் முகத்தைப் புதைத்து,
“இவள் என் குழந்தைதான் மாமா…” என்றாள் குரல் கம்ம.
“நேயா…?”
“ம்…”
“இவள் நிஜமாகவே உனக்கு உரிமையான குழந்தையாக மாறவேண்டுமா?” அவர் கேட்க, அவரைப் பெரும் எதிர்பார்ப்போடு ஏறிட்டாள் நேய நறுமை.
“இதை விட எனக்கு வேறு என்ன வேண்டும்… இவளை எனக்கே கொடுக்கிறீர்களா…? நானே இவளை வளர்க்கிறேன். என் சொந்தக் குழந்தையாகப் பார்த்துக் கொள்கிறேன். நான் தொலைத்த உறவை இவளிடம் கண்டு களிக்கிறேன்…” என்று கூற, சற்று நேரம் இமைக்காமல் அவளையே பார்த்தார் பாஸ்கரன். அந்த விழிகளில் தெரிந்த ஏக்கமும், பரிதவுப்பும் அவர் நெஞ்சைப் பிசைய, சற்று நேரம் பதில் சொல்லாமல், அமைதி காத்தார்.
நேயநறுமையும் குழந்தையின் தலையையும் உடலையும் பரவசத்தோடு வருடிக் கொடுத்தவாறு,
“நான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டேன் மாமா… யார் மீதோ, எதன் மீதோ இருக்கும் கோபத்தில், அம்மா, அப்பா, நேருவைப் பார்க்காமல் தள்ளிவைத்தேன். அதற்குப் பெரிய தண்டனையாக, அவர்களை இழந்தும் விட்டேன். இப்போது எனக்கு எஞ்சியிருப்பது, இவள் மட்டும்தான்… இவளை மட்டும் எனக்குக் கொடுத்துவிடுங்கள் பிளீஸ்…” என்றவளின் விழிகளில் கண்ணீர் கோர்க்க அவளை நோக்கி வந்தார் பாஸ்கரன்.
அவளை உற்றுப் பார்த்தவர்,
“குழந்தையைக் கொடுப்பது என் கையில் இல்லைமா… அது ஆதியதுலனின் கையில்தான் இருக்கிறது… ஆனால்… இந்தக் குழந்தை உனக்கு நிரந்தரமாக வேண்டும் என்றால், அதற்கு ஒரு வழியும் இருக்கிறது…” என்றார் அவளை உற்றுப் பார்த்தவாறு.
தன் கண்களை அழுந்தத் துடைத்தவள், அவரை அவசரமாகப் பார்த்து,
“சொல்லுங்கள்… நான் என்ன செய்யவேண்டும். என்ன செய்தால், இவள் எனக்குச் சொந்தமாவாள்… சொல்லுங்கள் மாமா… உயிரைக் கொடுத்தாவது அதைச் செய்து முடிக்கிறேன்…” சொல்ல சிரித்தான் பாஸ்கரன்.
“உன் உயிரைக் கொடுத்தால், இவளை எப்படி வைத்துப் பார்ப்பாய்?” கேட்க, அவளுக்கே தன் முட்டாள் பேச்சில் சங்கடமாகப் போயிற்று.
“அது வந்து…” அவள் தயங்கித் தடுமாற, புன்னகையுடன் அவளுக்குப் பக்கமாகத் தரையில் அமர்ந்து கொண்டவர், அவள் முகத்தை அழுத்தமாகப் பார்த்து,
“நீ உன் உயிரையெல்லாம் கொடுக்கத் தேவையில்லை, எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் ஒரு காரியம் செய்யலாம்…” என்றார் இதமான குரலில்
“சொல்லுங்கள் மாமா…” பரபரப்புடன் கேட்க, ஒரு விநாடி தொண்டைக்குள் உமிழ்நீர் கூட்டி விழுங்கியவர், அடுத்து,
“ஆதியை திருமணம் செய்துகொள் நேயா…?” என்றார் அழுத்தமாக. கூடவே தெளிவாகவும்.
அவர் சொன்னதைக் கேட்டு அண்ட சராசரங்களும் தன் செயலை நிறுத்திவிட்ட அதிர்வுடன் அவரை வெறித்தாள் நேயநறுமை. அவள் சரியாகத் தான் கேட்டாளா? இல்லை அவர் வேறு ஏதோ சொல்ல, அது இவள் காதில் தப்பும் தவறுமாக விழுந்ததா? குழம்பியவளாக,
“மா… மாமா… எ.. என்ன சொன்னீர்கள்?” அதிர்ச்சி சற்றும் விலகாமல் கேட்க, மெல்லிய புன்னகையைச் சிந்தியவர், கொஞ்சமாகச் சரிந்து குழந்தையின் தலைமுடியை வாரிவிட்டவாறு,
“நீ சரியாகத்தான் கேட்டாய் நேயா… என் மகனைத் திருமணம் செய்துகொள் என்றேன். மகிழினியை உன் சொந்தக் குழந்தையாக்கு என்கிறேன்…” அவர் சொல்ல, குழந்தையை அணைத்துப் பிடித்தவாறு சட்டென்று எழுந்து நின்று விட்டாள் நேயநறுமை. என்னது ஆதியதுலனை அவள் மணப்பதா? அவள் காதலை உதறித் தள்ளிவிட்டு, தங்கையோடு வாழ்ந்து அவள் கூட ஒரு குழந்தையைப் பெற்றவனை இவள் மணந்து கொள்வதா? அந்த நினைப்பே அவளைக் கொன்று குவிக்க,
“நோ…” என்றாள் உறுதியான குரலில். பின் மறுப்பாகத் தலையை அசைத்து,
“நோ… நோ… நோ…” திரும்பத் திரும்பச் சொன்னவள், திரும்பி பாஸ்கரனைக் கோபமாகப் பார்த்து,
“நோ….” என்றாள் அழுத்தம் திருத்தமாக. பின் ஆத்திரத்தில் முகம் சிவக்க,
“நான் செத்தாலும் சாவேனே தவிர, உங்கள் மகனைத் திருமணம் செய்ய மாட்டேன்…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.
“நேயா… தயவுசெய்து வார்த்தைகளை விடாதே. அது வீரியமானது.” என்றவர் சற்று நேரம் அமைதி காத்தார். பின் சிரமப்பட்டு எழுந்து நின்று,
“இதோ பார்மா… நான் ஆதிக்காகவோ, இல்லை உனக்காகவோ பேசவில்லை. நான் பேசுவது இந்தக் குழந்தைக்காக. எதுவுமே தெரியாத இந்தப் பச்சைக் குழந்தையின் எதிர்காலத்திற்காகத்தான் பேசுகிறேன். நான் கேட்கிறேன் என்று சொல்வதை விட உன்னிடம் பிச்சை எடுக்கிறேன் என்று கூடச் சொல்லலாம்…” என்றவரின் விழிகள் இப்போது கலங்கிப் போயிருந்தன.
அதுவரை குழந்தையை ஏந்தியிருந்தவள், அதன் கனம் உறுத்த, நடந்து சென்று குழந்தையைப் படுக்கையில் கிடத்திவிட்டுக் குழந்தையின் கன்னத்தை மென்மையாக வருடிக் கொடுத்து விலகியவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல், மீண்டும் பெட்டியில் பொருட்களை அடுக்கத் தொடங்க, அவளுடைய செயலே, சொன்னது அவளுடைய முடிவை.
“நேயா… நான் சொல்வதைக் கொஞ்சம்…” அவர் முடிக்கவில்லை, அவரை நோக்கித் தன் கரத்தை நீட்டி அவர் பேச்சைத் தடுத்தவள்,
“மாமா… நீங்கள் போகாத ஊருக்கு வழி கேட்கிறீர்கள்… தயவு செய்து… இந்த மாதிரி இனிப் பேசாதீர்கள்…” என்றாள் அவள் அடக்கி வைத்த ஆத்திரத்தோடு.
“இல்லம்மா… போகமுடியாமல் திணறும் ஊருக்குச் சுலபமாகப் போக வழி சொல்கிறேன்…” என்றவர், ஒரு பெருமூச்சு எடுத்து விட்டார்.
“உனக்கும் உறவு என்று சொல்ல ஒரு பிடிமானம் தேவை. அதை இந்தக் குழந்தையால் மட்டும்தான் கொடுக்க முடியும். அதற்கு இந்தக் குழந்தையை உன் சொந்தமாக்கவேண்டும். அதற்கு ஒரே வழி நீ ஆதியை மணப்பது…” அவர் அழுத்தமாகக் கூற, இவளோ மறுப்பாகத் தலையை அசைத்து,
“அது மட்டும் என்னால் முடியாது… அவரை இந்த ஜென்மத்தில்…” என்றவள் அந்த நினைப்பே கசப்பைக் கொடுக்க, மறுப்பாகத் தலையை அசைத்து, “முடியாது…” என்றாள் உறுதியாக.
“இதோ பாரம்மா… நீ ஆதியை மணக்க மறுப்பதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் மகிழினிக்காகவாவது இந்தத் திருமணத்திற்கு நீ சம்மதம் தெரிவிக்க வேண்டும்… அந்தக் குழந்தை அன்னையில்லாத குழந்தையாக வளரக் கூடாது நேயா…” என்றவரை உற்றுப் பார்த்தாள் நேயா.
“மகிழினி ஏன் அன்னை இல்லாத குழந்தையாக வளரவேண்டும். அதுதான் அவளை நான் அழைத்துப் போகிறேன் என்கிறேனே. அவளுக்குத் தாயாக நான் இருப்பேன் மாமா…?” அவள் சொல்ல, மீண்டும் பாஸ்கரனின் உதட்டில் புன்னகை.
“அன்னையின் அணைப்பு கிடைக்கும். ஆனால் தந்தையின் அரவணைப்பு? மகிழினி ஆதியின் குழந்தை. இவளை நீ உன் கூட அழைத்துச் செல்வதற்கு அவனுடைய அனுமதி முதலில் வேண்டும்? மகிழினி நேரிழை இல்லாமல் கூட இருப்பாள். ஆனால் ஆதியில்லாமல் இருக்கவே மாட்டாள். அநேகமான நாட்கள் அவன் மார்பில் தான் படுத்து உறங்குவாள். உன்னுடைய பிடிவாதத்திற்காகக் குழந்தையைப் பலியாக்க முடியாது…” என்றவர் படுக்கையில் அமர்ந்து குழந்தையை வருடிக் கொடுத்தவாறு,
“ஒரு குழந்தை சீரும் சிறப்புமாக வளர வேண்டும் என்றால், தாயும் தந்தையும் அவசியம்” அவர் சொல்ல,
“அப்படியென்றால் உங்கள் மகனை இன்னொரு திருமணம் செய்யச் சொல்லுங்கள். மகிழினிக்கு நல்ல ஒரு தாய் கிடைப்பாள்…” என்றாள் வெறுப்பாக. கூடவே அந்த நினைப்பும் கசந்து வழிந்தது.
அவள் சொன்னதைக் கேட்டுத் தோள்களைக் குலுக்கிய பாஸ்கரன்.
“உனக்கு ஆதியதுலனைப் பற்றிச் சரியாகத் தெரியாதுமா. மிகுந்த பிடிவாதக் காரன். அவனுடைய வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் இடம் உண்டு. அந்தப் பெண்…” என்றவர் சட்டென்று தன் பேச்சை நிறுத்திச் சொல்ல வந்ததை விழுங்கி விட்டு, நேயநறுமையைப் பார்த்தார்.
“நீ சொல்வது போல அவனுக்கு வேறு திருமணம் செய்து வைத்தாலும், அவள் மகிழினிக்கு நல்ல அன்னையாக இருப்பாள் என்று உன்னால் உறுதியாகக் கூற முடியுமா? சொந்த இரத்தம் குழந்தையைப் பார்ப்பது போல அன்னிய இரத்தம் பார்த்துக் கொள்ளுமா…? இத்தனைக்கும் உன் தங்கை மீது உனக்கு உயிர் என்கிற போது, அவள் குழந்தையை நீ அசட்டையாக விட்டு விடுவாயா” சொல்ல நிதானமாக அவரைப் பார்த்தாள் நேய நறுமை.
அவருடைய வாழ்க்கையில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் இடமிருக்கிறது என்று சொல்கிறீர்கள். அந்த ஒரே ஒரு பெண் நேரிழை தானே. அப்படியிருக்கிற போது அவர் என்னை ஏற்றுக்கொள்வார் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?” இவள் கேட்க, ஒரு கணம் பதில் சொல்ல முடியாது திணறினார் பாஸ்கரன்.
“அது வந்து… நீ நேரிழையின் அக்கா… குழந்தைக்காக உன்னை மணக்கச் சம்மதிப்பான்…” அவர் சொல்ல இளக்காரமாகச் சிரித்தாள் நேய நறுமை.
குழந்தைக்காக என்னை மணக்கச் சம்மதிப்பானா? வேடிக்கைதான். எண்ணியவள், பாஸ்கரனை அழுத்தமாகப் பார்த்தாள்.
“சாரி மாமா… நான்…” அவள் முடிக்கவில்லை, அவள் முன்பாகக் கரத்தை நீட்டி அவள் பேச்சைத் தடுத்தார் பாஸ்கரன். நிதானமாக அவளைப் பார்த்தவர்,
“உடனே எடுக்கும் முடிவு பெரும்பாலும் வெற்றியைக் கொடுப்பதில்லை. இப்போதே நீ எனக்குப் பதில் சொல்லவேண்டும் என்றில்லை. யோசி. எல்லாப் பக்கமும் நின்று நிதானமாக யோசி. அதற்குப் பிறகு உன் பதிலைச் சொல்…” சொன்னவர், அதற்கு மேல் அவளோடு வாதிடாமல் குழந்தையைத் தன்னோடு அள்ளி எடுத்துக்கொண்டு வெளியேற, இவளோ தன் உடலே பாரம் என்பது போலப் படுக்கையில் பொத்தென்று அமர்ந்தாள். அவளால் அவர் சொன்னதை ஜீரணிக்கவே முடிய வில்லை.

