Sun. Apr 5th, 2026

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண் விழித்தால்தான் அவனுடைய மூளை முற்று முழுதாக இயங்கும். சரியாக யோசிக்கும். இல்லை என்றால் ஒருவித மந்த நிலையில்தான் செயல்படுவான்.

இந்த மூன்று நாட்களுக்குள் அபிநயாவுக்கு விபரம் தெரிந்து பதறியடித்து ஓடிவந்தாள். தன் தோழியின் நிலை கண்டு அழுதவளைத் தேற்றியது ஏற்றமாதிபன்தான். கூடவே, விதரணைக்கு இப்படியானது பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டான். விதரணையின் நிலையறிந்து அவள் தோழிகள் வருகிறேன் என்று அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஓரளவு அவள் நலமாகித் தன் பாட்டில் எழுந்து அமரும் வரை, தெரியாமல் இருப்பதே நல்லது என்று நினைத்தான் ஏற்றமாதிபன்.

இந்த மூன்று நாட்களிலும், அபிநயாவை விதரணையின் அருகே அமர்த்திவிட்டு இவன் வீட்டுக்குச் சென்று குளித்துத் தயாராகி வந்ததும் அபிநயாவை அனுப்பி வைப்பான். இரவில் அவள் கரங்களைப் பற்றியவாறு அமைதியாக அவளையே பார்த்திருப்பான் ஏற்றமாதிபன். உறக்கம் வரும் போது அவளுடைய கரத்தை அழுந்தப் பற்றியவாறே படுக்கையில் தலைவைத்துப் படுத்திருப்பான்.

அன்றும் இரவு ஏற்றமாதிபன் வதரணையின் கரத்தைப் பற்றியவாறு அவள் தலையைச் சுற்றிக் கரம் ஒன்றை வைத்து அவளுடைய பிறை நுதலைத் தன் புறங்கைகளால் வருடிக் கொடுத்தவாறு, இமைக்காமல் அவளையே பார்த்திருந்தான் ஏற்றமாதிபன்.

“விதுமா….” அவனுடைய ஆண்மை ததும்பும் இறுகிய கரகரத்த குரல் இளகி மென்மையாக ஒலிக்க, அந்த ஒலிக்குக் கூட இரும்பை இளக்கும் தன்மை இருப்பது போல அத்தனை குழைந்து வர, விதரணையோ கொஞ்சம் கூட அசைவின்றி அப்படியே கிடந்தாள்.

“பேபி கேர்ள்…” என்றான் இப்போது மிக மிக மென்மையாக. முதன் முறையாக அவளைப் பார்த்தபொது அவன் அப்படித்தானே உணர்ந்தான். குட்டியாய், குழந்தை முகத்தோடு, மிட்டாய்க்கு ஆசைப்பட்ட குழந்தையாய் அவனைப் பார்த்து நின்றாளே. அது எப்போதாவது மறந்து போகுமா அவனுக்கு? அந்த பெரிய விழிகளும், துடிக்கும் உதடுகளும், இன்றை வரைக்கும் அவன் மறந்ததில்லையே. மீண்டும் அதே போல ஆர்வம் பொங்கி வழியும் அவள் விழிகளைப் பார்க்கும் எக்கம் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அது சாத்தியமில்லையே.

தன்னை மறந்து குனிந்தவன், தாடி, மீசை உதடுகள் என்று அவள் நெற்றியில் அழுந்த மென்மையாக ஒரு முத்தம் வைத்தான் ஏற்றமாதிபன். அதைக் கூட உணராதவளாக அவள் கண்கள் மூடிக் கிடக்க, மீண்டும் ஆசையாக ஒரு முத்தம் வைத்தான்.

முன்பு எதற்காக அவளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்த்து விலகிச் சென்றானோ, இப்போது அதற்கான காரணங்களுக்கு அர்த்தமேயில்லாமல் போனது அவனுக்கு. இதற்கு மேலும் அவளை விட்டு விலக முடியாது. அவள் எழுந்ததும் அவளை மணந்து கொள்ளப் பாகிறான். அவன் கரங்களுக்குள் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தைப் பொத்திப் பாதுகாப்பது போல அவளைப் பாதுகாக்கப் போகிறான். அவள் மனதில் தீராத வடுவாக பதிந்து போன கசடுகளை அவனுடைய அன்பால், காதலால், ஆண்மையால் போக்கிவிடப் போகிறான்.

உறுதியாக நினைத்தவானக அவளிடமிருந்து தன் முகத்தைப் பிரித்தவன்,

“எழுந்து கொள் கண்ணம்மா… மூன்று நாட்களாக சுயநினைவு இல்லாமல் இருக்கிறாய். இன்னும் ஒரு நாள் கழிந்தால், அது சிக்கலாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதற்கு மேலும் உன்னை இவர்கள் வதைப்பதைப் பார்த்துக்கொண்டு என்னால் இருக்க முடியவில்லை… தயவு செய்த விழித்துக் கொள்…” மென்மையாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னவன், தன் கரத்திலிருந்த அவள் கரத்தை எடுத்து அதைத் தன் உதட்டில் அழுத்தமாகப் பொருத்தினான்.

அந்த நேரம் செவிலியர் ஒருத்தர் உள்ளே வந்தார். மெதுவாக தன் கரத்திலிருந்த அவள் கரத்தை விடுவித்தவன் செவிலியரைப் பார்க்க, ஏற்றமாதிபனைக் கண்டு மென் புன்னகை ஒன்றைச் சிந்திய செவிலியர் “ஹாய் ஆதிபன்… எப்படியிருக்கிறாய்?” என்று இளம் புன்னகையுடன் கேட்டவாறே தன் தன் கடமையைப் பார்க்கத் தொடங்க ஏற்றமாதிபன் புன்னகையுடன் பதில் சொன்னவாறே, செவிலியர் திரையில் பார்த்துக் கணக்கெடுப்பதை தானும் விழிகளால் பார்த்துக் கணக்கெடுத்தான்.

“இன்று மதியம் வரை இவளுடைய இரத்த அழுத்தம் குறைவாக இருந்தது. ஆனால் இப்போது திடீரென்று சற்று அதிகமாக இருக்கிறது…” என்று அந்தச் செவிலியர் முணுமுணுக்க,

“ஏன்… என்னாச்சு?” என்று ஒருவிதப் பதற்றத்தோடு கேட்டான் ஏற்றமாதிபன்.

“பயப்பட ஒன்றுமில்லை ஆதிபன். இவர்கள் மயக்க நிலையில் இருந்தாலும், இவருடைய ஆழ்மனம் இன்னும் நடந்த அந்தப் பயங்கரச் சம்பவத்திலேயே உறைந்திருக்கிறது. ஏதோ ஒரு கொடூரமான கனவு அல்லது நினைவு அவளைத் துரத்துகிறது; அவளது உடல் அந்தப் பயத்திற்கு எதிர்வினை ஆற்றுகிறது. இது ஒருவிதத்தில் நல்ல குறியீடுதான்… நினைவு திரும்புவதற்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். ஆனால், இப்படித் திடீரென்று இரத்த அழுத்தம் எகிறுவது இதயத்திற்கு நல்லதல்ல. உடனடியாக இதற்கான தணிப்பு மருந்துகளை (Sedatives) அதிகரிக்க வேண்டும்,” என்றார் அந்தச் செவிலியர்.

விரைந்து வெளியேறிச் சென்றவர், அடுத்த ஐந்தாவது நிமிடம் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு வந்து, அவளுடைய சிரை வழியே (IV) ஏற்றினார். ஒரு சில விநாடிகளில் விதரணையின் இதயத் துடிப்பு சீராகி, இரத்த அழுத்தம் குறையத் தொடங்கியது. அதைக் கண்டு அந்தச் செவிலியர் நிம்மதியடைந்தார்.

“குட்…” என்றவர், வழக்கம்போல விதரணையின் மேலாடையைத் தளர்த்தி காயங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினார். அந்த நேரத்தில் ஏற்றமாதிபனும் விதரணையின் மார்புக் காயங்களையும், மார்பகங்களில் ஏற்பட்டிருந்த கண்டல்களையும் கவனிக்கத் தவறவில்லை.

இப்போது கண்டல் மார்பகம் முழுவதும் பரவி கருநீலமாக மாறியிருந்தது. சொல்லப்போனால் நெஞ்சு முழுவதும் கருநீலமாக மாறிவிட்டிருந்தது. அது அவளது வெண்மை நிறத்திற்கு அந்தக் காயங்கள் பச்சை குத்தியது போல ஆழமாகத் தெரிய, அதைப் பார்க்கவே அவனுக்குள் பெரும் கலக்கம் ஊடுருவியது. ஆனால், வீக்கம் சற்றுக் குறைந்திருப்பது போலத் தோன்றியது. அந்தக் கண்டல்கள் இப்போது பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல அந்த கருநீல நிறம் மறைந்துவிடும். ஆனால், உள்ளே திசுக்களில் ஏதாவது சிதைவு ஏற்பட்டிருந்தால்? அதை நிச்சயமாகப் பரிசோதிக்க வேண்டுமே! பின்னாளில் இதுவே அவளுக்குப் பெரிய சிக்கலைக் கொண்டு வரலாம். இப்போது கவனிக்கத் தவறிவிட்டால், பிற்காலத்தில் அந்த இடத்தில் வலி மிகுந்த கட்டிகள் அல்லது நீர்க்கட்டிகள் (Cysts) உருவாக வாய்ப்புண்டு.

அதனால், அங்கே அவளுடைய காயங்களைப் பரிசோதித்துக்கொண்டிருந்த செவிலியர் விக்டோரியாவை ஏறிட்டவன்,

“விக்டோரியா, அவளது மார்பில் ஏற்பட்ட அந்தக் கருநீலக் கண்டல்கள் வெறும் கத்திக் குத்துத் தழும்பைத் தாண்டி, உள்ளே திசுக்கள் ஏதும் சேதமடைந்திருக்குமா? நீங்கள் அதைப் பரிசோதனைக்கு உட்படுத்தினீர்களா? இல்லை என்றால் பின்னாளில் அதுவே இவளுக்குச் சிக்கலைக் கொண்டு வந்துவிடும்…” என்றான் வருத்தமாக.

“நாங்கள் அறுவை சிகிச்சையின்போது ஏற்கனவே ‘சிடி ஸ்கேன்’ (CT Scan) எடுத்துப் பார்த்துவிட்டோம். கத்திக் குத்தால் மார்புத் தசைகளில் ஆழமான கிழிசல் (Muscle tear) இருக்கிறது; அதைத் தையல்கள் மூலம் சரிசெய்திருக்கிறோம். அந்தத் திசுக்கள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும். ஆனால், பலமாக மார்பகங்களை அழுத்தியதால் ஏற்பட்ட திசுச் சிதைவை (Fat Necrosis) இப்போது பார்க்க முடியாது. முதலில் அவளுக்கு நினைவு திரும்பட்டும். கத்திக் குத்தையும் தாண்டிய வேறு ஏதாவது வலி மார்பகங்களைச் சுற்றி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வலியின் தன்மையைப் பொறுத்து என்ன விதமான பரிசோதனை செய்வது என்று முடிவு செய்யலாம்,” என்ற செவிலியர், அவளுடைய மேலாடையை மேலும் விலக்கி இரண்டு மார்பகங்களையும் மென்மையாக மேலும் கீழும் என்று அழுத்திப் பரிசோதித்துத் திருப்தி கொண்டவராக மீண்டும் ஆடையைச் சரிசெய்து,

“பரிசோதித்தவரை கண்டல்களின் இறுக்கம் தவிர, வேறு எங்கும் கட்டிகள் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும் அவள் விழித்ததும் முழுமையான பரிசோதனையைச் செய்யலாம். மற்றபடி தையல் போட்ட காயங்கள் ஓரளவு ஆறிவிட்டன. நாளைக்கு மேலே உள்ள பிளாஸ்டரைக் கழற்றிவிடலாம்… இதுவரை எல்லாம் நன்றாகவே போகிறது ஆதிபன். பயப்படாதீர்கள், விரைவில் உங்கள் காதலி குணமடைந்துவிடுவார்,” என்று விக்டோரியா சொல்ல, ஏற்றமாதிபனின் முகம் மலர்ந்தது.

“அவளுக்கும் வேறு வழியில்லை விக்டோரியா. அவள் குணமாகியே ஆக வேண்டும்…” என்று அவளது முதுகுப் புறமாக அமர்ந்து, ஆடையின் முடிச்சைப் போட்டவாறே அவன் சொல்ல, புன்னகைத்த விக்டோரியா, “உன் காதலி மிகவும் அதிர்ஷ்டசாலி, உன்னைப் போன்ற ஒரு காதலனை அடைவதற்கு…” என்றார் விரிந்த புன்னகையுடன்.

அதைக் கேட்டு மெலிதாக நகைத்தவன், “நானும் அதிர்ஷ்டசாலிதான் விக்டோரியா… இவள் எனக்குக் கிடைக்க…” என்று கூறினான். அதற்குப் புன்னகைத்துவிட்டு அவர் வெளியேற, பக்குவமாக அவளுடைய முதுகுக்குத் தலையணை வைத்தான். போர்வையை அவள் மீது போர்த்திவிட்டு, மீண்டும் அவளுக்கு முன்பாக இருந்த இருக்கையில் அமர்ந்து அவளுடைய கரங்களைப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அன்று அதிகாலை நான்கு மணியளவில், ஏற்றமாதிபன் விதரணையின் கரங்களைப் பற்றியவாறே அவளுடைய வயிற்றுக்கு அருகாமையில் படுக்கையில் தலை வைத்து நல்ல உறக்கத்திலிருந்தான்.

அவசர சிகிச்சை அறையின் இயந்திரங்களின் ‘பீப்’ சத்தம் மட்டும் அந்த அறையை நிறைத்திருக்க, விதரணையின் சுட்டுவிரலில் மெல்லிய அசைவு. அதைத் தொடர்ந்து இரண்டு விரல்கள் அசைந்தன. தொடர்ந்து அவளுடைய கால்களின் அசைவு.

அவளது மூடிய இமைகளுக்குப் பின்னால் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து மெல்ல… மிக மெல்ல அவளது இமைகள் பிரிந்தன. இருண்ட அறையில் அவளுக்கு எதுவும் தெளிவில்லை. முதலில் அவளுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்று சுத்தமாகப் புரியவில்லை. உள்ளே ஏதேதோ தவிப்பு, குழப்பம், தடுமாற்றம், புரியாத நிலை. அதை விலக்க விழிகளை மெதுவாக மூடித் திறந்த விதரணைக்கு, இன்னும் அந்த மந்த நிலை போகவில்லை. மெதுவாகத் தலையை அசைத்து எதையோ தேட முயன்றாள். ஒன்றும் புலப்படவில்லை. உடல் முழுக்க வலித்தது.

அந்த வலியோடு முனக முயன்றாள். முடியவில்லை; தொண்டை அடைத்துக் கிடந்தது. சட்டென்று பெற்றவள் நினைவுக்கு வந்தாள். அம்மா பக்கத்திலிருந்தால் இந்த வலி அனைத்தும் காணாமல் போய்விடும், இந்த மந்த நிலை தொலைந்து போகும். “அம்மா…” மீண்டும் அழைக்க முயன்றாள். குரல் வரவில்லை. ஏன் குரல் எழும்ப மறுக்கிறது? ஏதாவது பயங்கரக் கனவு காண்கிறோமோ… ஏன் இடது மார்பில் இத்தனை வலி? “அம்மா… எங்கேம்மா இருக்கிறீர்கள்? வலிக்கிறது…” சொல்ல முயன்றாள், முடியவில்லை.

யாராவது உதவிக்கு வாங்களேன்… கத்தத் தோன்றியது; முடியவில்லை. சிரமப்பட்டு அங்கும் இங்கும் பார்க்க முயன்றாள். அடுத்த சில விநாடிகளில், அவளது மூளைக்குள் அந்தப் பழைய நினைவுகள் மின்னலென மோதின. இரத்தம் படிந்த கத்திகள், தன் பெற்றோரின் கடைசி அலறல், அந்தக் கயவர்களின் கொடூரமான கைகள்… எல்லாம் ஒன்று சேர நினைவுக்கு வர, அவளது உடல் சட்டென்று தூக்கிப் போட்டது. அவளது இதயத் துடிப்பைக் காட்டும் மானிட்டர் (Monitor) இப்போது அபாயச் சத்தமிட்டு வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.

மூச்சு விட முடியாமல் திணறியவள், தன் மார்பிலும் முதுகிலும் இருந்த ஆழமான காயங்களின் வலியை முதன்முதலாக உணரத் தொடங்கினாள். கத்திக் குத்து விழுந்த இடமெல்லாம் நெருப்பாய் எரிய, அவளது கைகள் காற்றில் எதையோ தடுத்து நிறுத்தப் போராடின. “வேண்டாம்… அவர்களை விடுடா… டேய்… அப்பா… அம்மா… விதுரா!” என்று அவளது வாய் சத்தமில்லாமல் முணுமுணுத்தது.

அதுவரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவன், திடீரென்று யாரோ அவனை உலுப்புவது போலத் தோன்ற, எப்போதும் எச்சரிக்கையாக இருந்தே பழக்கப்பட்டவன் என்பதால், திடுக்கிட்டுச் சடாரென்று எழுந்து பார்த்தான். அங்கே விதரணையின் உடலில் ஏற்பட்ட அசைவைக் கண்டு முதலில் மகிழ்ந்தவன், அவளுடைய விழிகள் சொருகிய விதத்தையும் முகத்தில் தெரிந்த பயத்தையும் கண்டு பதறிப்போனான்.

எப்போதும் சரிந்த நிலையில் படுக்க வைக்கப்பட்டிருப்பவள், இப்போது மல்லாக்கப் படுத்திருந்தாள். கைகளோ மெல்லிய அசைவில் தொடங்கி, விநாடிக்குள் பலமாக அசையத் தொடங்கின; அடுத்து உடல் துடிக்கத் தொடங்கியது. தொண்டையோ எதையோ சொல்லத் துடித்தது. சீற்ற மூச்சு அவளை விட்டு வெளியேற, தலையோ பலமாக வலம் இடமாக அசையத் தொடங்க, பதறியவாறு அவளுடைய தோள்களைப் பற்றிக்கொண்டான் ஏற்றமாதிபன்.

அவளுடைய தொண்டையின் அசைவை வைத்து அவள் எதையோ சொல்ல முயல்கிறாள் என்பது அவனுக்குப் புரிய, “விது… பயப்படாதே! கண்ணம்மா… மை பேபி கேர்ள்… உனக்கு ஒன்றுமில்லை… நான் இங்கேதான் இருக்கிறேன். உனக்குப் பக்கத்தில்தான் இருக்கிறேன்… நீ இப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். விது… என்னைப் பார்…” என்று அவளுடைய புத்திக்கு ஏறும் விதத்தில் அவன் சொல்ல, அவளோ மேலும் துடித்து உதறத் தொடங்கினாள்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் பாய்ந்து அவளருகே படுத்தவன், அவளை மென்மையாக இழுத்துத் தன்னோடு அணைத்தவாறு அவள் தலையையும், முதுகையும் மென்மையாக வருடி,

“கண்ணம்மா… காம் யுவர்செல்ஃப்… உன்னைத் திடப்படுத்திக்கொள்… நீ நன்றாக இருக்கிறாய்… என்னைப் பார்… இங்கே உன் பக்கத்தில்தான் இருக்கிறேன். நீ நன்றாக இருக்கிறாய்…” என்று  அவளை மென்மையாக அணைத்தவாறு தட்டிக்கொடுத்தும் அசுவாசப்படுத்தியும் சொல்ல, அவளுடைய கண்கள் இப்போது கண்ணீரைப் பொழியத் தொடங்கின. தொண்டை கமறியது. மண்டையில் ஏறிய அந்தத் கொடூர நினைவுகள் தரை இறங்காமல் அவளை வதைக்க, உள்ளே இழுத்த மூச்சு வெளிவராமல் தடுமாறியது.

அதைப் புரிந்தவனாக அவளுடைய முகத்தை ஒரு கரத்தால் பற்றி,

“ஷ்… ஷ்… பம்கின்… யு ஆர் ஓகே… டு யு ஹியர் மி…? யு ஆர் பேர்ஃபக்ட்லி ஓகே…! இங்கே பார்… என்னைப் பார்… விதுமா… இங்கே என்னை ஒரு முறையாவது பாரேன்… உனக்கு ஒன்றுமில்லை…” என்றவன், அவள் தவிப்பு கொஞ்சம் கூடக் குறையாமல் இருப்பதைக் கண்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறியவனுக்கு அவளை எப்படி விழிப்படையச் செய்வது என்று சத்தியமாகப் புரியவில்லை. அவளை அந்த நிலையில் கண்கொண்டு பார்க்கவே அவனால் முடியவில்லை.

அவளுடைய கண்களில் தெரிந்த மரண பயமும், ஆற்றாமையும், தவிப்பும், கலக்கமும், இயலாத தோல்வியும் ஆதிபனின் இதயத்தை அறுத்தன. இன்னும் அவள் தன்னிலைக்கு வரவில்லை என்பதைப் புரிந்துகொண்டவனுக்கு  முதலில் அவளைச் சுயத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பது மட்டும் புரிய, கொஞ்சம் கூட யோசிக்காமல் மறு கணம் அவளுடைய வேதனையில் தவித்த உதடுகளை முழுதாகத் தன் இறுகிய, ஆண்மை மிக்க உதடுகளால் பற்றி, தன் மூச்சுக்காற்றை அவளுக்குக் கொடுத்து, நீண்ட முத்தத்தால் அவளை நினைவுலகிற்குக் கொண்டுவர முயன்றான்.

அவனுடைய முத்தத்தின் வேகமும் ஆதிக்கமும் அதிகரிக்க அதிகரிக்க, அதுவரை துடித்த அவளுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப்போகத் தொடங்கியது. வெறித்துத் துடித்த அந்த விழிகள் இப்போது அமைதியைத் தத்தெடுத்துக் கொண்டன. அவனது கரங்களின் கதகதப்பையும், அந்த உதட்டின் உயிர் மூச்சையும் உணர்ந்ததும் அவளது வேகம் சற்று குறைய, மெதுவாக அவளுடைய உதடுகளில் இருந்து தன் உதடுகளை விலக்கியவாறு அவளை ஆழமாக உற்றுப் பார்த்தான் ஏற்றமாதிபன்.

அவளது கண்கள் இப்போது நிலைகுத்தி அவனையே பார்த்தன. மந்த நிலை விலகி, மெல்ல மெல்லத் தன் முன்னே இருப்பது ஆதிபன் தான் என்பதை அவளது மூளை அடையாளம் கண்டு கொண்டது. அவனது கூரிய விழிகளில் தெரிந்த அந்தத் தவிப்பும், கலக்கமும், அதையும் மீறித் தெரிந்த உறுதியும் அவளுக்குள் ஏதோ ஒரு பாதுகாப்பான உணர்வைக் கொடுக்க, சற்று நேரம் அவனையே இமைக்காமல் பார்த்தாள் விதரணை.   மெல்ல மெல்ல கண்முன்னே தெரிந்த அந்த கம்பீர முகத்தை விழிகளால் கவ்விப் பிடித்து இதயத்திற்கு அனுப்பியவள்,

“ஏற்றன்….” என்று அவளது இதழ்கள் சத்தமில்லாமல் உச்சரித்தன.

அவளது அந்த மென் குரலிலும், அவள் அழைத்த ஏற்றன் என்கிற அழைப்பிலும் ஒரு கணம் சிலிர்த்துத்தான் போனான் அந்த ஆண்மகன். அவனுடைய உடலில்  மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வில், சட்டென்று அவன் விழிகளில் கண்ணீர் துளி கோடாய் இழுக்க, வலது கரத்தின் உள்ளங்கையை அவளுடைய கன்னத்தில் பொத்தினாற்போல வைத்தவன் அவள் விழிகளை மாறி மாறிப் பார்த்தவாறே,

“யெஸ் பேபி… யெஸ்.. இட்ஸ் யுவர் ஏற்றன்…” என்று கரகரத்த குரலில் சொன்னவன், மறு கணம் அவளுக்கு வலிக்காத வகையில் மென்மையாகத் தன் உடல் படர அவனை அணைத்துக் கொண்டாள்.

இதயமோ அவளுடைய அந்த ஒற்றை அழைப்பில் தேனாய் உருகிப் போக, தேகமெங்கும் இனிப்பாய் தித்தித்தது.  இத்தனை நாட்களாக அவன் காத்துக்கொண்டிருந்த அந்த ஒரு வார்த்தை! அதைக் கேட்ட மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் பாகாய் உருகியவன், மெதுவாக அவளை விடுவித்து அவளுடைய நெற்றியில் மென் முத்தம் ஒன்றைப் பதித்து விலகி, அவள் கன்னத்தைப் பெருவிரலால் வருடிக் கொடுத்தவாறு,

“மை பேபி கேர்ள்… பயப்படாதே… நான் இங்கேதான், உன் பக்கத்தில்தான் இருக்கிறேன். எப்போதும் இருப்பேன். இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது.  வரவும் விடமாட்டேன். உன் நிழலாக நான் எப்போதும் இருப்பேன் தங்கம்மா… ஐ பிராமிஸ் யு…” என்று அவன் தழுதழுத்த குரலில் சொல்ல, விதரணையின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் வழிந்து அவனது கையில் விழுந்தது.

அதைக் கண்டு பதறியவன்,

“ஷ்..ஷ்.. ஷ்.. டோன்ட் பேபி… டோன்ட் கிரை… அதைப் பார்க்கும் சக்தி எனக்கில்லை…”  தவிப்போடு அவள் கன்னத்தை வருடிய அதே பெருவிரலால் அவள் கண்ணீரையும் துடைத்துவிட்டவன், மறு பக்கம் வழிந்த கண்ணீரைத் தன் கடிய உதடுகளால் துடைத்து விட, விதரிணையின் உதடுகளோ அழுகையில் மேலும் நடுங்கத் தொடங்கியது. மீண்டும் மீண்டும் வழிந்த கண்ணீரை பெருவிரலும் உதடுகளும் துடைத்துவிட, சற்று நேரம் இருவரும் அப்படியே இருந்தனர்.

இப்போது விதரணையின் மூச்சு கொஞ்சம் சீராகத் தொடங்கியிருந்தது. ஆனால், அடுத்த கணமே அவளது பார்வை அறை முழுதும் அலைபாய்ந்தது. ஏதோ ஒன்றைத் தேடியது அவளது கண்கள். பின் பீதியில் முகம் வெளுற, வலது கரத்தால் அவனது சட்டையைப் பலமாகப் பற்றிக்கொண்டவள்,  தன்னிடமிருந்து விலக்கியவாறே.

“அப்பா… அம்மா… விதுரன்… அனைவரும் எங்கே? ஏன் இங்கே இல்லை?” என்று திக்கித் திணறி வினவ, ஏற்றமாதிபனுக்க என்ன பதிலைச் சொல்வது என்று சத்தியமாகப் புரியவில்லை.

அவள் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையில் கிடந்து தவிக்கிறாள் என்பது புரிந்தது. அதனால்தான் பெற்றவர்களுக்கு நடந்த துன்பம் தெரிந்திருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நிகழ்கால மனது தவிப்பது புரிய,  அவளுடைய அந்தக் கேள்விக்கு என்ன பதில்லைச் சொல்வது என்று தெரியாமல் அவனுடைய இதயம் ஒரு கணம் துடித்தது.

இப்போது உண்மையைச் சொன்னால் நிச்சமயாக அவளால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது புரிய, அதைச் சொல்ல முடியாமல் தவித்தான் அவன்.

அந்த நேரம், அவளது மார்பில் இருந்த காயத்தின் வலி  அவளைச் சுண்டி இழுக்க, வலியால் முனகியவாறு வலது கரத்தால் நெஞ்சைத் தொட முயன்றாள்.

அதை உணர்ந்தவனாக சட்டென்று அவளை விட்டு விலகிய ஏற்றமாதிபன், படுக்கையை விட்டு இறங்கி அவள் நிமிர்ந்து படுக்காத வகையில் அவள் உதறியதில் தள்ளிப்போன தலையணையை எடுத்து அவள் முதுகில் பதித்து,

“அவர்களைப் பற்றி இப்போது யோசிக்காதே விது. நீ முதலில் குணமாக வேண்டும். அவர்கள்… அவர்கள் பாதுகாப்பாக ந.. நன்றாகத்தான் இருக்கிறார்கள்,” என்று ஒரு பொய் சொல்லி அவளைத் தேற்ற முயன்றான் ஆதிபன். ஆனால், அந்தப் பொய்யைச் சொல்லும்போது அவனது குரலில் இருந்த நடுக்கத்தை விதரணை கவனிக்கத் தவறவில்லை.

கழுத்தில் இரத்தம் பீறிட்டுப் பாய தந்தை சரிந்தது நினைவுக்கு வந்தது. அதே போலத் தாயும்… மெல்ல மெல்ல அனைத்தும் நினைவுக்கு வர, அவளுடைய விழிகள் சொல்லமுடியாத வலியோடும் வேதனையோடும் விரிந்தன. மறு கணம் அவளுக்குப் போர்வையைப் போர்க்க முயனற்வனின், மேல் சட்டையை வலது கரத்தால் கசக்கிப் பற்றியவள், பலமில்லாமலே அவனைத் தன்னை நோக்கி இழுக்க, அவளுடைய இழுப்புக்குத் தானாகவே அவள் முகம் நோக்கிச் சரிந்தான் ஏற்றமாதிபன்.

 ” பொய்… பொய்தானே சொல்கிறீர்கள்…  அங்கே இரத்தம்… அப்பாவின் கழுத்து வெட்டப்பட்டு… அம்மா வேறு.. நோ…. நோ…” என்றவளின் குரல் உடைந்து  விம்மலாக மாற, அதை எப்படித் தேற்றுவது என்று புரியாமல் ஏற்றமாதிபன் தவிக்க, அந்த இக்கட்டான நிலையைக் காப்பாற்றவென்று உள்ளே நுழைந்தாள் விக்டோரியா.

What’s your Reaction?
+1
8
+1
5
+1
1
+1
0
+1
10
+1
0

Related Post

2 thoughts on “நீயின்றி உயிராடும் திகிலாலே…”
  1. இதுவரை படித்ததில் இந்த கதை சற்று வித்தியாசமான தாகவும் சுவராஸ்யமான தாகவும் இருக்கிறது நன்றி நயனிமா

    1. இப்பதான் எழுதிட்டு இருக்கேன்பா. இன்னும் எழுத நிறைய இருக்கு. முடிச்சதும் புத்தகமா போட்டுட்டு இங்க போடுறேன்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!