2
தங்கையின் அறைக்கு வந்த நேயநறுமை, அங்கிருந்து வந்த சுகமான வாசனையில் ஒரு கணம் வழிகளை மூடி ஆழ மூச்செடுத்து அந்த வாசத்தை அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தாள்.
தங்கையைப் போலவே அவளுடைய அறையும் படு சுத்தமாக இருந்தது. அது அது இருக்கவேண்டிய இடத்தில் அழகாகவும் நேர்த்தியாகவும் பார்ப்பதற்கே கவர்ந்திழுக்கும். சுட்டுப் போட்டாலும் இந்த சுத்தம் அவளுக்கு வரவே வராது.
அவள் தங்கையிடம் வியக்கும் விடயங்களில் அதுவும் ஒன்று.
எப்படி என்று தெரியாது படு சுத்தமாக அறையை வைத்திருப்பாள். தேவையற்ற எதுவும் அந்த அறைக்குள் இருக்காது. அனைத்தும் அது அது இருக்கவேண்டிய இடத்தில் இருக்கும். இத்தனைக்கும் இவளுடைய அறையை விட, நேரிழையின் அறை கொஞ்சம் சிறியது.
ஒரு பக்கம் தங்கையின் சுத்தத்தைக் கண்டு வியப்பு ஏற்பட்டாலும் இன்னொரு பக்கம் மெல்லிய பொறாமையும் எட்டிப்பார்க்கவே செய்தது. எப்படித் தான் இத்தனை சுறுசுறுப்பாக இருக்கிறாளோ.
எண்ணியவாறு தன் தங்கையைப் பார்த்தாள் நேயநறுமை.
நல்ல உறக்கத்திலிருந்தாள். பல்கலைக் கழகத்திற்குச் செயற்திட்டம் செய்யும் வேலையாக இரவு தூங்காமல் நீண்ட நேரமாக விழித்திருந்தாள். விளைவு ஆறு மணி ஆன பிறகும் எழாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாள்.
ஒரு பக்கம் பரிதாபம் எழுந்தாலும் மறு பக்கம் எப்போதும் தலை தூக்கும் சகோதரிக்கேயான வில்லத்தனமும் உள்ளே எழுந்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவளைக் கண்டதும் குறும்புத் தனம் கைதூக்க மெல்லிய புன்னகையுடன் தன் தங்கையை நெருங்கினாள் அந்தப் பொல்லாதவள்.
பாரதிராஜா போலக் கரங்களைத் தூக்கி ஒற்றை விழியை மூடித் தலை சரித்துத் தங்கையின் முகத்தை அப்படியும் இப்படியும் பார்த்தவளுக்கு உதடுகளில் ஒரு வில்லிச் சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.
நிதானமாகத் தங்கையின் அழகுசாதனப் பொருட்கள் வைத்திருக்கும் மேசையை நெருங்கியவள் அதில் கரிய நிற கண்மை டப்பாவை எடுத்துக் கொண்டு திரும்பி தங்கையைப் பார்த்தாள்.
“ரம்பம்பம் ஆரம்பம்
பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு மணி ஆச்சு கண்ணே இன்னும் நீ
தூக்கம் கெட்டு எழவில்லை பெண்ணே
ஏழு எட்டு மணி ஆச்சு கண்ணே இன்னும் நீ
தூக்கம் கெட்டு எழவில்லை பெண்ணே
ராகு காலம் வந்திரிச்சு
ராஜ யோகம் ஓடிப்போச்சு
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம்
பேரின்பம் ங்யா…”
தங்கைக்குக் கேட்காத வகையில் தன் செழித்த உடலை ஒடித்து அசைத்துக் காக்கா வலிப்பு நடனம் ஆடிப் பாடியவள், கையிலிருந்த கண்மை டப்பாவிலிருந்த மையைச் சுட்டுவிரலில் அப்பி எடுத்துக்கொண்டு நெருங்கினாள்.
நேரம் வந்தாச்சு
நானும் தொட்டாச்சுக் கண்மை பொடி
கிட்டே வந்தாச்சு மூஞ்சியில் போட்டாச்சு
கறுப்பு பொடி
ஃபைவ் ஓ க்ளாக் சிக்ஸ் ஓ க்ளாக்
கண் முழிக்க இல்லைன்னா
மம்மி வந்து மாறிப்பூடும் பேயா
செவன் ஓ க்ளாக் எய்ட் ஓ க்ளாக்
தாண்டும்வரை வச்சு செய்யும்
நம்மை எல்லாம் கைமாவா
வேளைதோறும் பூஜையாகும் நாள் தோறும் அர்ச்சனையாகும்…
ரம்பம்பம் ஆரம்பம் ரம்பம்பம் பேரின்பம்…” பாடியவாறே அந்த அழகிய எழில் முகத்திற்கு மீசை தாடி வைத்து பார்க்கவே பயங்கரமாக உருமாற்றி விட, திருப்தியானது நேயநறுமைக்கு.
அப்படியே தங்கைக்கு நெட்டி முறித்தவள்,
“அழகிடி என் செல்ல கட்டி…” என்றுவிட்டுக் கண்மை டப்பாவை அந்த இடத்தில் வைத்துவிட்டு தங்கையை நெருங்கினாள்.
“ஏய்… நேரு… தூங்குனா மூஞ்சி… எழுந்திரும்… எழும்பும் ஐசே! அம்மா இப்போதுதான் துர்க்கை அவதாரம் எடுத்தார்கள். காளி அவதாரம் எடுத்து உம்மைச் சம்ஹாரம் செய்வதற்கு முன்னாடி எழுந்துவிடும்…” என்று தங்கையை உலுப்பப் பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள் நேரிழை.
தூக்கக் கலக்கத்தோடு பெரியவளைப் பார்த்தவள், மூட முயன்ற விழிகளை இழுத்துப் பிடித்தவாறு.
“என்ன அக்காச்சி… இப்போது எதற்காக எழுப்பினீர்…? இன்றைக்கு ஞாயிறுதானே…? கொஞ்சம் தூங்க விடுமேன்…” என்று சிணுங்கிய தங்கையைக் கண்டதும் சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. ஆனாலும் சிரமப்பட்டு அதை அடக்கியவள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டே,
“கிழிஞ்சுது போ… நானா மாட்டேன் என்றேன்…? எனக்கும்தான் கொஞ்ச நேரம் தூங்க ஆசையாக இருந்தது. எங்கே…? உன் அம்மாதான்… என்னை அடிக்காத குறையாக எழுப்பி விட்டார்கள்… அதுவும் டைகர் ஷெரிஃபோடு டூயட் பாடி ஆடிக் கொண்டிருந்தேன் தெரியுமா…” என்ற அக்காளை கோபத்துடன் பார்த்தாள் நேரிழை..
“என்னது? என்னுடைய அம்மாவா? ஹலோ… உம்மைப் பெற்றவர்களும் அவர்கள்தான்…” என்று சொன்ன நேரிழை மீண்டும் படுக்கையில் விழுந்து விழிகளை மூட முயல, தங்கையின் அருகே அமர்ந்து கரங்களைப் பின்னால் படுக்கையில் அழுத்தி, இலகுவாகச் சாய்ந்தமர்ந்து கால்களை முன்னும் பின்னும் ஆட்டியவாறு,
“அம்மா… நேரு மாமா எழும்பமாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்… கேட்டால் அம்மா என்ன புடுங்கியா… எனக்குப் பயமில்லை என்கிறாள்…” இவள் கத்தத் துள்ளியெழுந்த நேரிழை பாய்ந்து தன் அக்காளின் வாயை மூடி, அவள் கத்தலை நிறுத்திவிட்டு,
“ஐயோ அம்மா…! நான் எழுந்துவிட்டேன்… அக்கா சும்மா சொல்கிறாள்…?” என்றாள் பதட்டமாக.
அதற்குள் கையில் தும்புத்தடியை ஏந்திக் கொண்டு அறைக்குள் புகுந்து விட்டார் அம்பிகா.
புகுந்தவர் நேரிழையை அடிப்பதற்காகத் தும்புத் தடியை ஓங்கி விட்டு மறு கணம் அதிர்ச்சியில் தன் மகளின் முகத்தைப் பார்த்தார்.
“என்னடி கோலம் இது…” வியப்பில் விழிகள் விரியக் கேட்க, நேரிழையோ,
“என்னம்மா…? என்ன கோலம்?” என்றாள் புரியாமல். பின் தாயின் முகத்தைக் கண்டு, குழம்பியவளாகக் குனிந்து தன் ஆடையைப் பார்த்தாள். எதுவும் தவறாகத் தெரியவில்லை.
“ஏன்…? என்னாச்சு?” அன்னையிடமே கேட்க, நேயநறுமையோ வந்த சிரிப்பை அடக்கப் படாதபாடு பதினெட்டும் பட்டுக்கொண்டிருந்தாள்.
உடனே இது தன் மூத்த மகளின் திருவிளையாடல் என்பது தெரிந்து போகத் திரும்பி நேயநறுமையைப் பார்த்து நெற்றிக்கண்ணைத் திறக்க, பதறினாள் நேயநறுமை.
“ஐயோ… அம்மா… சத்தியமாக எனக்கு எதுவும் தெரியாது… நான் ஒன்றுமே செய்யவில்லை…” சுத்தமாக வடிகட்டி எடுத்த பொய்யைச் சொல்ல, பெற்றவருக்குத் தெரியாதா, தான் பெற்றவளின் குறும்புத்தனம்.
அதுவரை நேரிழைய அடிப்பதற்காக எடுத்து வந்த தும்புத்தடியின் கைப்பக்கம் நேயநறுமையின் முதுகைப் பதம் பார்க்கத் துள்ளிக் குதித்தாள் அந்தத் தேவதை. சட்டென்ற படுக்கையை விட்டு எழுந்து முதுகைத் தேய்த்துவிட முயன்றவாறு,
“அவுச்…! அம்மா…! என்னை ஏன் அடிக்கிறீர்கள்? நான் ஒன்றும் செய்யவில்லை…” துடித்தவள், பேந்த பேந்த விழித்துக்கொண்டிருந்த தங்கையைக் கண்டதும் அதற்குமேல் சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.
மூத்த மகளின் சிரிப்பு, பெற்றவரையும் தொற்றிக் கொள்ள, ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், மறு பக்கம் தன் மகளின் குறும்புத் தனத்தில் கோபமும் வந்தது.
“அம்மா…! எதற்காக அக்காச்சி இப்படிச் சிரிக்கிறாள்? அப்படி என் முகத்தில் என்னதான் இருக்கிறது?” எரிச்சலுடன் கேட்டவள் முகத்தைத் தொட்டுப் பார்க்க, உதட்டிற்கு மேலாகப் பிசுபிசுத்தது.
குழப்பத்துடன் விரல்களை விலக்கிப் பார்க்க அதில் கறுப்பாகக் களிம்பு ஒட்டிக்கொண்டு வந்தது.
“என்ன இது?” குழம்பியவள் ஓடிச்சென்று கண்ணாடியைப் பார்த்தவள், தன் கோலத்தைக் கண்டு அதிர்ந்தே போனாள். புரட்சிக்கவி பாரதியையும், இராவணனையும் ஒன்றாகச் சேர்த்து முகத்தில் மீசையும், தாடியும் என்று அகோரமாக வரையப்பட்டிருந்தது.
முகத்தில் கோபம் கொப்பளிக்க,
“ர்ர்ர்…. அக்கா…” என்றவாறு சகோதரியை நோக்கிப் பாய, நேயநறுமையோ கலகலவென்று சிரித்தவாறு தங்கையின் கரத்தில் சிக்காமல் அறையை விட்டு வெளியே ஓட,
“இன்றைக்குள் இரண்டில் ஒன்று பார்த்து விடுவது… எத்தனை தைரியம் உமக்கு…?” சீறியவாறு அக்காளைத் தொடர்ந்து ஓட, இவளோ தன் தங்கைக்கு அழகு காட்டிவிட்டு முன்னறைக்குக் குதித்துக்கொண்டு ஓடினாள்.
தன் இரு பெண்களுக்காகவும் சாப்பிடாமல் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த தேவசகாயம் கிறீச் என்கிற அலறலிலும், குய்யோ முறையோ என்கிற கூச்சலிலும் அலறி அடித்துக்கொண்டு இருக்கையை விட்டு எழுந்து கொள்ள, அவருடைய மூத்த மகள், புயல் வேகத்தில் தன் தந்தையை நோக்கிப் பாய்ந்து வர, வந்தவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டவர், அவள் கனம் தாங்காமல் பின்னால் இழுபட்டுச் சென்று சுவரில் மோதி நின்றார். ஆனாலும் மகளை அணைத்தவாறு,
“என்னடா…? என்னாச்சு…? எதற்காக இப்படி ஓடி வருகிறீர்கள்…?” என்று விசாரிக்கும் போதே, முறுக்கிய மீசை, தடித்த புருவங்கள், அது வேறு அழிந்து முகம் முழுவதும் பரவிப் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்த தன் இளைய தேவதையைக் கண்டு முதலில் அதிர்ந்தவர் பின் சிரிப்பு பொங்க, தன்னை மறந்து பலமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டார்.
அதைக் கண்ட நேரிழைக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. இடுப்பில் கைவைத்தவாறு தன் தந்தையை முறைத்தவள், புசுபுசு என்று எழுந்த கோபத்தோடு அவர் கையணைப்பில் சிக்கியிருந்த அக்காளைக் கண்டதும், விழிகளில் தீப்பொறி பறக்க,
“பாருங்கள்பா உங்கள் மூத்த மகள் செய்து வைத்திருக்கும் கைங்கரியத்தை…” என்றாள் கோபமாக.
தந்தையோ தன் சிரிப்பைச் சிரமப்பட்டு அடக்கியவாறே,
“சரிடா… சரி… நான் கேட்கிறேன் தங்கம்… என் மைனாக் குட்டி எதற்காக இப்படிக் கோபப் படுகிறீர்கள்…? இருங்கள் நான் கேட்கிறேன்…” என்றவர் தன் கையணைப்பில் இருந்த மகளைப் பிரித்து,
“என்னடா இதெல்லாம்?” என்றார் வலுவாகக் கொண்டுவர முயன்ற கோபத்தோடு.
“அப்பா… எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்? உங்கள் மனைவியிடமே கேளுங்கள்…!” என்றாள் தங்கையைப் பார்த்து கலகலவென்று சிரித்தவாறு.
“என்னது…? அம்பியா இப்படியெல்லாம் செய்யச் சொன்னாள்…? என்ன தைரியம் அவளுக்கு. அம்மா… அம்பி…!” தன் குரலை உயர்த்திக் கூப்பிட, கையில் தும்புத்தடியோடு முன்னறை வந்தார் அம்பிகா.
அவர் வந்த கோலத்தைக் கண்டதும் சட்டென்று தன் தொனியை மாற்றிய தேவசகாயம், மெல்லிய அச்சத்தோடு அவர் கரத்திலிருந்த தும்புத்தடியைப் பார்த்தார்.
“என்ன சத்தம் இங்கே…?” அந்த வீட்டுக்கு அரசியாக இவர் குரலை உயர்த்திக் கேட்க,
“ஹீ… ஹீ… அதில்லைமா… மூத்தவளுக்கும் சின்னவளுக்கும் என்ன பிரச்சனை என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்… நீங்கள்… போய் உங்கள் வேலையைப் பாருங்கள்…” என்று மனைவியை அங்கிருந்து அப்புறப் படுத்த முயல, அவரோ கரத்திலிருந்த தும்புத் தடியை ஓரமாக வைத்துவிட்டு,
“ம்… இதில் விசாரிக்க என்ன இருக்கிறது? காலையில் எழுந்து கொள்ளாமல் இழுத்துப் போர்த்திக் கொண்டு உங்கள் மகள்கள் படுத்துக் கிடந்தார்கள். இதோ, இவளை எழுப்பி விட்டு, சின்னவளை எழுப்பச் சொல்லிச் சொன்னேன். அதற்கு இந்த வேலை பார்த்து வைத்திருக்கிறாள். இவளை…” என்றவர் திரும்பவும் தும்புத்தடியை கரத்தில் எடுக்க, பதட்டத்தோடு தன் மகளைக் கைவளைவிற்குள் கொண்டு வந்தார் தேவசகாயம்.
“சரிமா…! அதற்கேன் இப்படிக் கோபிக்கிறீர்கள். நான் பேசுகிறேன்… அந்தத் தும்புத்தடியைக் கொஞ்சம் அந்தப் பக்கம் வையுங்களேன்… பிளீஸ்…” கெஞ்ச, கோபம் மாறாமலே தும்புத் தடியை ஓரமாக வைத்தார் அம்பிகா.
நிம்மதி கொண்டவராக, குனிந்து தன் மகளைப் பார்த்த தேவசகாயம்,
“ஏன்மா இப்படிச் செய்தீர்கள்? பாவமில்லையா நேரு…?” என்றவர் தன் இளைய மகளைப் பார்த்து,
“நீங்கள் இங்கே வாருங்கள்…” என்றார் மறு கரத்தை விரித்து.
இப்போது இருவரையும் சமாதானப் படுத்த வில்லை என்றால், அன்றைய ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் தீர்ப்பு வழங்குவதிலேயே போய்விடும். தவிர, வீடு இரண்டு படும். ம்கூம் கட்டுப்படியாகாது.
ஆனால் இளையவளோ, தந்தையையும், அக்காளையும் முறைத்துவிட்டு,
“எனக்கும் ஒரு வாய்ப்பு வரும்.. அப்போது வைக்கிறேன் உமக்கு ஆப்பு…” கோபமாகச் சொன்னவள், தன் முகத்தில் பூசிய பூச்சை அழிப்பதற்காகக் குளியலறை நோக்கிச் செல்ல, மறு கணம் சுளீர் என்று நேயநறுமையின் பிட்டத்தில் ஒரு அடி விழுந்தது.
நேயநறுமைய துடித்தாளோ இல்லையோ, தந்தை துடித்துவிட்டார்.
“ஏய்… அம்பி… எத்தனை தரம் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், குழந்தைகள் மீது கை வைக்காதீர்கள் என்று… கேட்கமாட்டீர்களா?” கோபமாகக் கேட்க,
“இல்லை… கேட்க முடியாது. முதலில் உங்கள் பெண்ணை ஒழுங்காக அடக்க ஒடுக்கமாக இருக்கச் சொல்லுங்கள்… எப்ப பார்த்தாலும், இளையவளோடு போட்டி போடவேண்டியது… இப்படி ஏதாவது செய்து அவளை அழவைக்க வேண்டியது. அவள் அமைதியாக இருக்கிறாள் என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமா? ஏய் அப்பாவை கட்டிப் பிடித்துக்கொண்டிருந்தது போதும்… போ… போய்க் குளி…” மகளைக் கோபமாகத் திட்ட, வாகாகத் தன் தந்தையின் தோளில் சாய்ந்தவள், பழம்பெரும் நடிகை சரோஜாதேவியைப் போலக் காதுகளைப் பொத்தி,
“ஓ காட்… ஏன் மிஸ்டர் தேவசகாயம்… உங்களுக்கு இப்படி ஒரு மனைவி தேவையா? உங்களுக்கென்ன தலை எழுத்தா? பேசாமல் இவர்களை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு அழகான அமைதியான அடக்க ஒடுக்கமான பெண்ணாகப் பார்த்துக் கட்டவேண்டியதுதானே..” என்றாள் அன்னையைப் பார்த்தவாறு.
அதைக் கேட்ட தந்தைக்கோ சிரிப்பு வந்தது. ஆனாலும் அடக்கியவராக,
“நானா வேண்டாம் என்கிறேன்… உங்களுடைய அம்மா சம்மதித்தால் இப்போதே விவாகரத்துக் கொடுக்கத் தயார்தான்…” என்ற கணவனை விழிகள் இடுங்கப் பார்த்தார் அம்பிகா.
“ஆஹா… சும்மா இருந்த சிங்கத்தைச் சீண்டி விட்டேன் போல இருக்கிறதே… கன்றுக்குட்டி…. உங்கள் அம்மா நம் இருவரையும் விளக்குமாற்றால் சாற்றுவதற்குள்ளாக, போய்க் குளித்துத் தயாராகி வாருங்கள்… நான் அம்மாவைச் சமாதானப் படுத்துகிறேன்…” என்று அவசரமாகக் கூற, அதைக் கேட்டுச் சிரித்தவள், தன் தாயைப் பார்த்தாள்.
பின் கரத்தை நாடியில் வைத்து, முகத்தில் வியப்பைத் தேக்கி, எழுபதுகளில் வந்த நடிகைகள் போல விழிகளைப் படபடத்து,
“பாருங்களேன் அம்மா உங்கள் கணவரின் ஆசையை. சும்மா ஒரு பேச்சுக்கு விவாகரத்து எடுத்துவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யுங்கள் என்றுதான் சொன்னேன். கொஞ்சம்கூட மறுக்காமல், உடனே சரி என்றுவிட்டார். இவ்வளவும் தானா அவர் உங்கள் மீது வைத்திருக்கும் காதல்.?” என்றவள் ஒற்றைக் கரத்தை நெற்றியில் வைத்து, “ஐயகோ… இதைக் கேட்க யாருமே இல்லையா…? அதுவும் அழகான அடக்கமான அமைதியான பெண்ணாக அல்லவா பார்க்கப் போகிறாராம்! அப்படி என்றால், என்னுடைய அம்மா அழகாக இல்லையா? அறிவாக இல்லையா? அடக்கமாக ஒடுக்கமாக இல்லையா? எங்கள் வீட்டின் குத்து விளக்கைப் போய் இப்படிச் சொல்லி விட்டாரே இந்தப் பெரிய மனுஷன்! ஆணாதிக்கத்தைக் காட்டிவிட்டீர்களே அப்பா…! ஆணாக இருந்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? இந்த வீட்டுக்காக ஓடாகத் தேய்ந்து, பாதியாக இளைத்துப் போயிருக்கும் என் அம்மாவைப் பார்த்து இப்படிச் சொல்லலாமா???” நீட்டி முழங்கியவள், பின் கோபமாகத் தந்தையைப் பார்த்து, “இதைச் சொன்னதற்காகவே அம்மா உங்களை விவாகரத்துச் செய்யவேண்டும்…” என்று அழகாகத் தட்டை திருப்பிப் போட, தேவசகாயத்திற்குத் தலை சுற்றிக் கொண்டு வந்தது.
ஆணாதிக்கமா…? இது வரைக்கும் கட்டிய மனைவியைப் படுக்கையில் தவிர வேறு எங்கும், வா போ என்றுகூடச் சொன்னதில்லை. காலையில் மனைவி எழச் சிரமப்பட்டால் இவராக எழுந்து தேநீர் வார்த்துக்கொண்டு வந்து மனைவிக்கும் கொடுத்து தானும் குடிப்பார். இன்றைக்கும் மாதவிடாயின் போது அவரை ஒரு வேலையும் செய்யவிடாமல் இவரே அனைத்தையும் செய்வார். அவரைப் போயா ஆணாதிக்கம் பிடித்தவர் என்று தன் மகள் சொல்கிறாள்…? அதுவும் என்ன மாதிரி தட்டை திருப்பிப் போட்டு விட்டாள்! அதிர்ந்து போய்த் திருத்திரு என்று விழித்தவர்,
“நான் எப்போது மகள் சொன்னேன். நீங்கள் தானே சொன்னீர்கள்?”
“அது… அது வந்து.. நான் சொன்னால் உடனே சம்மதம் சொல்ல வேண்டுமா? எனக்கு என் மனைவிதான் உலகம். அவள் தான் வாழ்க்கை. அவளை விவாகரத்துச் செய்வது இந்த ஜென்மத்தில் நடக்காது… அப்படி ஒன்று நடந்தால் என் உயிர் உடலில் தங்காது. இப்படியல்லவா சொல்லியிருக்க வேண்டும்?” என்றவள் திரும்பி தாயைப் பார்த்து,
“நன்றாகக் கேளுங்கள் அம்மா… உங்கள் கணவர் உங்கள் மீது வைத்திருக்கும் காதலின் லட்சணத்தைப் பாருங்கள்… இதில் பதினான்கு வயதிலிருந்து உங்கள் மீது காதலாம்…” என்று தாயின் கோபத்தைத் தந்தையின் பக்கம் திசை திருப்பியவள், திரும்பி தந்தையைக் கிண்டலாகப் பார்த்து,
“ஈ..” என்று பற்களைக் காட்டிவிட்டு, ஏதோ தன்னால் முடிந்த நல்ல காரியத்தை நிறைவு செய்தாகி விட்டது என்பது போலக் குளிக்கச் செல்ல, தேவசகாயமோ பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார். அதைக் கண்டதும் அம்பிகாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.
தன்னவரைப் பற்றி அவருக்குத் தெரியாதா என்ன?
“மூத்தவளோடு சேர்ந்து சிஞ்சா அடித்தீர்களே? இப்போது எப்படி? எத்தனை வாட்டி சொன்னேன், மூத்தவளை நம்பி பேசாதீர்கள் என்று! எப்போதும் போல, இன்றும் மூக்கு உடைபட்டீர்களா?” கிண்டலாகக் கேட்டவர், வாடி நின்ற கணவனைப் பார்த்து மேலும் சிரித்துவிட்டு,
“சரி… வாருங்கள் சாப்பாடு எடுத்து வைக்க உதவி செய்யுங்கள்…” என்று கணவனையும் அழைத்துக்கொண்டு சமையலறை செல்ல, இங்கே இத்தனை பிரச்சனைக்கும் காரணமானவளோ குளியலறைக்குள் தன் கைப்பேசியில் ஆங்கிலப் பாடல் ஒன்றைச் சத்தமாக எழுப்பிவிட்டு, அதற்குத் தோதாகக் கரத்தில் கிடார் பிடித்து, பிரேக் டான்ஸ் ஆடியவாறு, குளியலறை முழுவதும் தண்ணீர் தெறித்து விழக் குளித்துக் கொண்டிருந்தாள்.

