(5)
காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் சமர்த்திப் பல்கலைக் கழகத்தை முடித்துக்கொண்டு பிரைட்டன் பத்திரிகையிலேயே முழுநேர நிருபராகப் பணியாற்றத் தொடங்கினாள்.
அப்படியிருக்கையில் இவளுக்குத் திருமணத்திற்கு வரன் வந்திருப்பதாகத் தயாளன் வந்து கூற, இப்போதே திருமணமா என்று சற்றுத் தயங்கினாள் சமர்த்தி.
“காலாகாலத்திற்குச் செய்ய வேண்டியவற்றையும் செய்துவிட வேண்டுமே… அதுதான்… நல்ல சம்பந்தமாக வந்திருக்கிறது. அதைக் கைகழுவுவது அத்தனை புத்திசாலித்தனமில்லை சத்தி…” என்று கடமை தவறாத அண்ணனாகக் கூற இவள்தான் குழம்பிப் போனாள்.
திருமணமா… அதற்குள்ளாகவா? இப்போது தானே இருபத்திரண்டு நடக்கிறது. பல்கலைக் கழகம் முடித்து இப்போதுதான் வேலையில் அமர்ந்திருக்கிறாள். அதற்குள் குடும்பப் பாரத்தைச் சுமக்கவேண்டுமா? தயக்கத்துடன் அண்ணனைப் பார்த்து,
“ஆனால்… அண்ணா… இப்போதுதானே வாழவே கற்றுக்கொள்கிறேன்… அதற்குள் ஒரு சுமை தேவையா என்ன…” என்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவர்,
“இந்த வயதில் சுமையைத் தூக்க அஞ்சினால் காலம் செல்லச் செல்ல அந்த அச்சம் அதிகரிக்குமே அன்றிக் குறையாது சத்தி. ஐந்தில் வளையாதது ஐம்பதிலா வளையப் போகிறது…? அந்த அந்த நேரத்தில் செய்வது சுமையென்று எண்ணித் தள்ளிப்போட்டால், பின்னால் வரும் சுமையைச் சுமப்பது மிகக் கடினம் தங்கம்… தவிர மூத்தவள் உனக்கு ஒரு நல்ல வரன் கிடைத்தால்தானே, விதற்பரைக்கும் நல்லதாக அமையும்…” என்று கனிவோடு கூறியவரிடம் இவளால் மறுக்கவும் முடியவில்லை.
எத்தனை சிக்கல்கள் வந்தபோதும் அவளைக் கைவிடாதவர். தன் முதல் குழந்தைபோல பொத்திப் பொத்திப் பாதுகாத்தவர். இதுவரை தாய் தந்தை இல்லையே என்கிற வலியை உணர வைக்காதவர். அவளுடைய ஒவ்வொரு அடியையும் சரியான பாதையில் எடுத்து வைக்க உறுதுணையாக இருப்பவர். இதுவரை அவளிடம் எதையுமே வேண்டிக் கேட்காதவர். முதன் முறையாக அவளிடம் வேண்டி நிற்க, இவளாலும் மறுக்க முடியவில்லை. தன்னையும் மீறித் தலையைச் சம்மதம் போல அசைத்தவள்,
“சரி அண்ணா…! என் திருமணம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்றால், உங்கள் விருப்பத்திற்குச் சம்மதிக்கிறேன்.” என்று உறுதியாகக் கூற, தயாளன் கண் கலங்கிவிட்டார். அவளை நெருங்கி, அவள் முகத்தில் தன் கரங்களைப் பதித்து,
“என் மீது அந்தளவு நம்பிக்கை இருக்கிறதா தங்கம்…?” என்றார்.
“என்னண்ணா இது…? உங்களை நம்பவில்லை என்றால் நான் வேறு யாரை நம்புவேன் சொல்லுங்கள்…?” என்று கடிந்துவிட்டு,
“நீங்கள் எவனைக் கை காட்டுகிறீர்களோ, அவனுடைய முகத்தைப் பார்க்காமலே திருமணம் முடிக்கிறேன்… போதுமா…” என்று முடிக்கவில்லை,
“என்னது… மாப்பிள்ளையைப் பார்க்காமலேயே திருமணம் முடிக்கச் சம்மதிப்பாயா…? உனக்கென்ன பைத்தியமா…? அவனோடு வாழப் போபவள் நீ. அவன் நல்லவனா கெட்டவனா, மனசுக்குப் பிடித்தவனா என்று பார்க்கவேண்டாமா…? தயா, இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!” என்று சற்றுக் கோபத்தோடு கூறியவாறு, சமையலறையிலிருந்து வெளியே வந்த புஷ்பா, சமர்த்தியிடம் தன் கரத்தில் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட, அதற்காகச் சப்புக்கொட்டியவாறு அண்ணியை நெருங்கிக் குவளையை கிட்டத்தட்டப் பறித்து ஒரு உறுஞ்சு உறிஞ்சிச் சுவைத்தவாறு, “ஹா…” என்கிற பெரிய ஓசை ஒன்றை எழுப்பி, குதூகலத்தில் அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு,
“இந்தத் தேநீர் குடிப்பதற்காகவே திருமணம் முடிக்காமல் உங்கள் கூடவே இருந்துவிடுவேன் தெரியுமா…?” என்றாள் ஆசையா.
“அடிப் பாவி… நீ திருமணம் முடிக்கவில்லை என்றால் எங்கள் நிலை என்னாவது? உன்னைத் துரத்தினால்தானே என் பாதை சுத்தமாகும். நீ என்னவென்றால்… உன்னோடு சேர்ந்து என்னையும் சாமியாரினியாக்கப் பார்க்கிறாயே…!” என்றவாறு வந்தாள் அப்போதுதான் இருபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த விதற்பரை.
வந்தவள் சமர்த்தியின் கரத்திலிருந்த தேநீர் குவளையைக் கண்டு, விழிகள் மின்ன அவள் கரத்தைப் பற்றித் தன் உதட்டுக்கு இழுத்து, அவள் தேநீரின் ஒரு பகுதியைத் விழுங்கிவிட்டு,
“அம்மா… எனக்கொரு தேநீர் ப்ளீஸ்…!” என்றவாறு தந்தையின் தோள் சாய, சமர்த்தியோ, தன் கரத்தில் குறைந்திருந்த பாணத்தைக் கண்டு ஆத்திரத்துடன் நிமிர்ந்து தங்கையானவளைப் பார்த்து முறைத்தாள்.
“அண்ணி… என் தேநீர் முழுவதையும் குடித்து விட்டாள் அண்ணி…” என்று அலற, தன் தோளில் சாய்ந்திருந்த மகளை அணைத்துக் கொண்ட தயாளன்,
“எதற்கு அவளுடையதைப் பறித்துக் குடித்தாய்… வேண்டுமானால் வார்த்துக் குடிக்கவேண்டியது தானே…” என்று கடிந்தார்.
சமர்த்தியோ எஞ்சிய தேநீரைக் ஒரு மிடற்றில் குடித்துவிட்டு,
“அண்ணா… பேசாமல் இவளுக்கும் ஒரு மாப்பிள்ளையைப் பாருங்கள்… அப்போதாவது வீட்டு வேலை செய்கிறாளா பார்க்கலாம்…” எனக் கிண்டலுடன் கூற, இவளோ, தன் முகத்தைக் கோணலாக்கியவாறு,
“ஐயே..! இந்த ஆண்களோடு எவள் வாழுவாள்.. ம்கூம்… எனக்கு வேண்டாம்பா…” என்று தோளைக் குலுக்க அதைக் கேட்டு சிரித்தாள் சமர்த்தி. பெரும் கிண்டலுடன் விதற்பரையைப் பார்த்து,
“அவளா நீயி…” என்று குறிப்புக் கொடுக்க, அதைக் கேட்டதும் வாயைப் பிளந்த விதற்பரை,
“ஏய்… உன்னை…” என்றவாறு சமர்த்தியை நோக்கிப் பாய, அவளிடமிருந்து தப்புவதற்காகத் தன் அண்ணியை நோக்கி ஓடியவள், அவர் பின்னால் மறைந்து நின்றவாறு,
“பின்னே… ஆண்களைப் பிடிக்கவில்லை என்றால் அப்படித்தான் சொல்வார்கள்…” என்றாள் கிண்டலாக.
புஷ்பாவும் அதைக் கேட்டு நகைத்தவாறு,
“அவளை ஏன்டி துரத்துகிறாய்… அவள் கேட்டதில் என்ன தவறு, ஆம்பளைகளைப் பிடிக்கவில்லை என்றால், மற்றது போலத்தான் யோசிப்பார்கள்… அதுவும் இந்த நாட்டில் முடிவே செய்துவிடுவார்கள் தெரியுமா…” என்று தன் நாத்தனாருக்காக வக்காலத்து வாங்க, அதைக் கேட்டதும் காலைத் தரையில் உதைத்தவள்,
“எப்போதும் அவள் பக்கம் நின்று மட்டும் தான் பேசுவீர்கள்… எனக்காகப் பேசமாட்டீர்கள். பாருங்கள் அப்பா அம்மாவை…” என்று தந்தையிடம் முறைப்பாடு வைக்கத் தந்தையோ,
“என்ன புஷ் நீ…? குழந்தையிடம் போய் இப்படி பேசலாமா? நீ கவலைப்படாதே தங்கம், அதுதான் அப்பா இருக்கிறேன் அல்லவா… ஆமாம்… உன்னுடைய புதுப் பெண் தோழியின் பெயர் என்ன…” என்று கிண்டலாய்க் காலை வார, இவளோ தந்தையைப் பார்த்து முறைத்தாள்.
“ர்ர்ர்… ஐயோ…! பைத்தியக்காரக் குடும்பத்திற்கு மகளாக வாழ்க்கைப்பட்டு நான் படும் அவஸ்தை இருக்கிறதே… ஐயையையையோ… மாரியாத்தா… என்னைக் காத்துக்கொள்..” என்று தரையில் அமர்ந்த ஒப்பாரி வைக்க. அதைக் கண்டு மூவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பானது.
“சரி சரி… ஜோக் அபார்ட்… நீ சொல்லு தங்கம்… பையனைப் பார்க்க ஏற்பாடு செய்யவா?” என்ற தயாளனிடம்,
“அதெல்லாம் தேவையில்லை அண்ணா… உங்களுக்குப் பிடித்தால் போதும்…?” என்றவளைத் தரையில் அமர்ந்தவாறே அண்ணாந்து பார்த்து முறைத்த விதற்பரை,
“ஏய்… லூசா நீ… மாப்பிள்ளையைப் பார்க்காமல் எப்படித் திருமணத்திற்குச் சம்மதிப்பாய். அதெல்லாம் முடியாது. முதலில் மாப்பிள்ளையை நான்தான் பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தால் தான் சத்தி அவனைப் பார்க்கலாம்” என்று திட்டவட்டமாகக் கூற,
“அப்படியே செய்யலாம் என் மருமகளே! அண்ணி! முதல் விது பார்க்கட்டும். அவளுக்குப் பிடித்திருந்தால், எனக்கும் ஓகேதான…” என்று முடிக்கவில்லை, தன் மகளையும், நாத்தனாரையும் பார்த்து முறைத்தார் புஷ்பா.
“அவள்தான் சின்னப்பிள்ளை, பைத்தியம் போல ஏதோ உளறுகிறாள்.. நீயுமா சத்தி… திருமணம் உனக்கா அவளுக்கா…” என்றவர், திரும்பிக் கணவரைப் பார்த்து,
“விரைவாகச் சத்தி சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் தயா… அவளுக்குப் பிடித்தால்தான் மிச்சம்…” என்று உறுதியாகக் கூற, தயாளனும் அதற்கு உடனே சரி என்றார்.
மூன்று நாட்களின் பின், அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை சித்தார்த்தைச் சந்திக்க, உணவகம் ஒன்றிக்குச் சென்றிருந்தாள் சமர்த்தி.
ஏற்கெனவே அவளுக்காகக் காத்திருந்த சித்தார்த் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். கொஞ்சம் நடிகர் கரனை நினைவு படுத்தினான். அவளை விட ஒரு இரண்டு அங்குலங்கள் உயரமாக இருந்தான். ஏதேதோ பேசினான். அவன் பேச்சில் அதிகம் அடிபட்டது அவனுடைய வேலை, தொழில் பணம் சம்பாத்தியம் இத்யாதி இவையே. அதைத் தவிரச் சுவாரசியமாக அவன் வாயிலிருந்து எதுவும் வரவில்லை. ஒரு கட்டத்தில் இவளுக்கே சற்று அலுப்புத் தட்டத் தொடங்கியிருந்தது.
ஆரம்பத்தில் அவன் பேசும்போது இவ்வளவு சம்பாதிக்கிறானா? அப்படியானால், கடன் வட்டி என்று யோசிக்காது இலகுவாக வாழ்க்கை பயணிக்கும்.. இயந்திரத்தனமாக வேலை வீடு குழந்தை என்று சிரமப்படவேண்டியதில்லை. அளவாக இரண்டு குழந்தைகள். அக்காடா என்று வீட்டிலிருந்து சுகமாகவே வாழ்க்கையை ஓட்டிவிடலாம். தேவைப்பட்டால் வேலையில் அவனுக்குக் கொஞ்சமாக உதவலாம். மற்றும்படி எந்த அழுத்தமும் இல்லாது வாழ்க்கை நகர்ந்துவிடும். அப்படித்தான் நினைத்தாள். ஆனால் போகப் போக அதையே பெருமையாகப் பேச இவளுக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது. கூடவே இவள் வாயசைக்கவேண்டிய சிரமத்தையே அவன் கொடுக்கவில்லை. இவளுக்கும் சேர்த்து அவனே பேசினான்.
ம்… வீட்டிற்கு வானொலி கூடத் தேவையில்லை. இவனைப் பேசவிட்டே பொழுதை ஓட்டலாம். என்ன ஒன்றையே திரும்பத் திரும்பப் பேசுவதால் சற்று எரிச்சல் வரும்.. அதுவும் போகப் போகப் பழகிவிடும். முடிவு செய்தவளாக அவன் பேசியவற்றை ஒரு காதால் வாங்கி மறு காதால் வெளியேற்றியவாறு பராக்குப் பார்த்துக்கொண்டிருக்கத் திடீர் என்று யாரோ பின்னால் நின்றவாறு இவளையே உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றியது.
அந்த உணர்வு தோன்றியதும் இவளுடைய இதயம் படு வேகமாகத் துடிக்கத் தொடங்க, தன்னை மறந்து திரும்பிப் பார்த்தாள். எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை. ஆனாலும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்க,
“ஏதாவது பிரச்சனையா?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறு அவள் பார்த்த திசைக்குத் தானும் பார்த்தான் சித்தார்த். உடனே சமாளித்தவள்,
“ஒ… ஒன்றுமில்லை… யாரோ தெரிந்தவர் போலத் தோன்றியது… சரி நீங்கள் சொல்லுங்கள்… அப்புறம்…” என்று ஏதோ ஆர்வமாகக் கேட்பது போலப் பாசாங்கு செய்ய, அவனும் குதுகலமாகவே விட்டதைத் தொட்டதைப் பேசத் தொடங்கினான்.
ஒரு கட்டத்தில். பேசி முடித்தது போதும் என்று அவன் நினைத்தானோ,
“சோ.. உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா சமர்த்தி?” என்று கேட்டான்.
அவளோ சற்றுத் தள்ளி யாரோ உண்டு கொண்டிருந்த உணவு வகையறா என்ன வகை என்று நாவில் நீர் ஊறப் பெரும் ஆராய்ச்சியில் இருந்தாள்.
இரண்டு முறை அழைத்தும் இவள் கவனம் உணவு வகைகளிடம் இருக்க, அவளை நோக்கிக் குனிந்து அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்தி,
“சமர்த்தி… உன்னைத்தான்…” என்றான்.
திடுக்கிட்டு இவனைப் பார்த்தவள், சற்று அசடு வழிந்துவிட்டு, அதைச் சமாளிக்கும் முகமாக,
“அப்படியா… பிறகு என்ன நடந்தது?” என்றாள்.
அவன் பேச்சு சுத்தமாக மூளைக்கு இறங்க வில்லை. ஆனாலும் காட்ட முடியாதே. உதடுகளைப் பிளந்து ஈ என்று பற்களைக் காட்ட, குழம்பினான் அவன்.
“நான் பேசி முடிந்து அரை மணி நேரமாகி விட்டது சமர்த்தி… இப்போது நான் கேட்டது உனக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்று…!” என்றவனின் முகத்தில் மெல்லிய கோபம்.
“ஹீ… ஹீ… அதைத்தான் நானும் கேட்டேன்… நீங்கள்… என்ன நினைக்கிறீர்கள்… அப்படி என்று தான் கேட்க வந்தேன்… ஆனால்… வாய் தடுமாறி… ஹீ… ஹீ…” என்று பெரிதாக அசடு வழிய, அவனுடைய முகம் மலர்ந்தது.
“எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது சமர்த்தி.. ஆனால், உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம்…” என்றான் ஆவலாய்.
முதலில் என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் திருத் திரு என்று விழித்தவள், எப்படியோ சமாளித்து,
“வீட்டிற்குப் போய் என் முடிவை அண்ணன் அண்ணியிடம் சொல்லவா?” என்றாள்.
“நோ ப்ராப்ளம் சமர்த்தி…” என்றவன் தன் கரத்தை நீட்ட, அந்தக் கரத்தில் தன் கரத்தைப் பதிக்க, இறுகப் பற்றி ஒரு குலுக்குக் குலுக்கி விடுவித்தவன்,
“கான் ஐ ட்ராப் யு…” என்றான். உடனே மறுத்தவள்,
“ஓ… நோ… தாங்க் யு… எனக்கு வெளியே சின்ன வேலை இருக்கிறது… முடித்துவிட்டுத்தான் போகவேண்டும்… தவிர என் வாகனத்தில்தான் வந்தேன்…. அதனால் நீங்கள் கிளம்புங்கள்…” என்று அவனை அனுப்பிவிட்டுப் பெருமூச்சுடன் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவளுக்கு என்ன முடிவை எடுப்பதென்று தெரியவில்லை. குழப்பம் ஏற்பட இருக்கையில் தலையைச் சரித்தவாறு விழிகளை மூடிக் கொஞ்ச நேரம் அப்படியே இருந்தாள்.
அந்தச் சித்தார்த்தை நினைக்கும் போது உள்ளத்திலே எந்தப் பட்டாம் பூச்சிகளும் சுற்ற வில்லை. படபடக்கவில்லை. கரத்தைப் பற்றியபோது கூட எதுவும் தோன்றவில்லையே. ஒரு வேளை எல்லோருக்கும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருக்குமோ? எனோ வேளை கெட்ட நேரத்தில் அவளையும் அறியாமல் உத்தியுக்தன் மனதில் வந்து நின்றான்.
அன்று அவளுடைய கைத்தலம் பற்றியபோது இவள் உடலில்தான் எத்தனை இரசாயன மாற்றம். எத்தனை பெரிய படபடப்பு. ஆனால் இவனிடம் ஒரு துளி கூட அப்படித் தோன்றவில்லையே…? ஏன்…? புரியாத புதிருக்கு விடை கண்டு பிடிக்க முடியாமல் புருவ முடிச்சை அழுத்திக் கொடுத்தவளுக்குப் பசித்தது.
பசி வந்தால் பத்தும் பறக்குமே. அது சமர்த்திக்குச் சாலப் பொருந்தும். உடனே வேண்டிய உணவைத் தருவித்துச் சாப்பிடத் தொடங்க, மீண்டும் உள்ளே ஒரு வித குறுகுறுப்பு.
சட்டென்ற இதயத்தின் வேகம் அதிகரித்தது. யாரோ உற்றுப் பார்ப்பதுபோலத் தோன்றச் சடார் என்று தலையை நிமிர்த்திச் சுத்தவரப் பார்த்தாள். இப்போதும் சந்தேகப்படும்படி யாரும் தென்பட வில்லை. ஆனாலும் யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு மட்டும் மட்டுப்படவில்லை.
சரிதான், ஏதோ மனப் பிராந்தி… என்று எண்ணியவள் உண்டு முடித்துவிட்டு எழுந்து கை கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டிற்குப் போனால் முடிவைக் கேட்பார்கள். என்ன முடிவைச் சொல்வதென்று தெரியவில்லை.
எது எப்படியாக இருந்தாலும், ஏதாவது ஒரு கழுதையைக் கட்டிதானே ஆகவேண்டும். இப்போது வந்து பார்த்துவிட்டுப் போன மாப்பிள்ளையை மறுக்கவும் ஒன்றுமில்லை. சம்மதத்தைச் சொல்லி விடவேண்டியதுதான். முடிவு செய்தவளாகத் தன் வாகனம் நோக்கி நடந்தபோதுதான் அது நடந்தது.
வாகனத்தை நெருங்குவதற்குள்ளாக அவளுக்கு முன்பாக ஒரு வாகனம் வந்து நிற்க என்ன ஏது என்பதை அவள் உணர்ந்து கொள்வதற்கு முன்பாக அந்த வாகனத்தின் கதவு திறக்கப்பட்ட, மறு கணம் அவள் உள்ளே இழுக்கப்பட்டாள்.
அவள் சுதாரிப்பதற்குள் அந்த வாகனத்திற்குள் பலமாக இழுக்கப்பட்டாள்.
நெஞ்சம் பதற, உடலில் உள்ள இரத்தம் வடிந்து செல்ல, கடத்தியவன் யார் என்று பார்ப்பதற்குள்ளாக முகத்தில் எதுவோ அழுத்தப்பட மறு கணம் சுயநினைவிழந்தவாறே மருந்தை அழுத்தியவன்மீது சரிய, அவனோ அவளைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு அணைத்தவாறு,
“வண்டியை எடு…” என்றான் உத்தரவாய்.
மெல்லிய முனங்கலுடன் வலித்த தலையைப் பற்றியவாறு விழிகளைத் திறந்தாள் சமர்த்தி.
முதலில் மங்கலாகத் தெரிந்த உலகம் மெல்ல மெல்லத் தெளிவாக, எழுந்தமர்ந்தவளுக்கு அந்தப் புதிய சூழ்நிலை உறுத்தியது.
பதறி அடித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தாள். எதிர்பாராத அந்த அதிர்ச்சியில் மீண்டும் தலை சுழற்றியது.
ஒரு நிலையிலில்லாது சுழன்று கீழே விழ முயன்ற தலையை, இரு கரங்களாலும் பற்றிக் காத்துக்கொண்டவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சற்றுத் தெளிவாக.
மூச்சு ஓரளவு சமப்பட, சூழ்நிலை உணரும் பொருட்டு, விழிகளை மெதுவாக உயர்த்திப் பார்த்தாள். அப்போது தட்டுப்பட்டான் அவன்.
அவனைக் கண்டதும் அதுவரையிருந்த மந்தநிலை மாயமாகிப்போக, அங்கே உயிரை உறைய வைக்கும் அச்சம் சுருள்பந்தாய் மார்பைத் தாக்கியது.
கண்முன்னால் நிற்பது அவன்தானா? நம்ப முடியாதவளாகத் தன் விழிகளைச் சிமிட்டிப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. உத்தியுக்தன்தான். காலுக்கு மேலாகக் காலைப் போட்டவாறு மிக அலட்சியமாக இருக்கையில் சாய்வாக அமர்ந்து இருந்தான். விழிகளோ இவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
அந்த விழிகளில் தெரிந்தது என்ன? பழி வெறியா? கொலை வெறியா? எரித்துச் சாம்பலாக்கும் வெறியா? இல்லை அனைத்தும் சேர்ந்த கலவையா?
தெரியவில்லை. ஆனால் ஊசியாகக் குத்தும் அவனுடைய விழியின் வீச்சில் சர்வமும் நடுங்கிப் போனாள் சமர்த்தி.
அவனோ, அவள் விழிப்படைந்ததும், தன் இலகுநிலை மாறிப் பரந்து விரிந்த மார்பின் மீது கரங்களைக் கட்டியவாறு,
“ஹாய்… ஹவ் ஆர் யு…? வேல் கம் டு ஹெல்” என்றான் பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்மை ததும்பிய குரலில்.
முன்பு அவனைப் பற்றித் தெரிய முதல், அந்தக் குரலைக் கண்டு மயங்கியிருக்கிறாள். அந்தக் குரலுக்காகவே திரும்பத் திரும்ப அவனுடைய பேட்டிகளைக் கேட்டு சிலிர்த்திருக்கிறாள். அடி வயிற்றில் எழும்பும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் சிலிர்த்தவாறு ரசித்தும் இருக்கிறாள்.
ஆனால் இப்போது..! அந்தக் குரல் அவளுடைய நம்பிக்கையையும் திடத்தையும் மொத்தமாய்ச் சுக்குநூறாக உடைப்பது போலத் தோன்றியத. அந்த அளவுக்கு அக் குரலில் அழுத்தமும், கடுமையும் இருந்தது.
அதுவும் கம்பீரமான அந்த உதடுகளில் தெரிந்த ஏளனப் புன்னகை இவளுக்குப் பெரும் பீதியைக் கிளப்பியது. உடல் வெளிப்படையாகவே நடுங்க. காய்ந்துபோன தொண்டையை உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள், அவன் கேட்டதற்கு பதில் கூறாமல், எழ முயன்றாள்.
“ஹே… இட்ஸ் ஓகே… சிட் டவுன்…” என்று அவன் சொன்ன விதத்தில் பட்டென்று அமர்ந்து கொண்டாள் சமர்த்தி.
அந்தக் குரல் மிக மென்மையாகக் கூறுவது போலத்தான் தெரிந்தது. ஆனால், நிஜத்தில் அவளுடைய ஈரக்குலையையே ஓரு ஆட்டம் ஆட்டு வித்தது.
உதடுகள் காய்ந்து போக, தொண்டை வறண்டு போக, புத்தி மழுங்கிப் போகக் கிலியுடன் அவனைப் பார்த்தவள்,
“ஏ… ஏன்… எதற்காக… எ… என்னை எதற்காக இங்கே அ… அழைத்து வந்தீர்கள்” என்றவளுக்கு கடத்தி வந்தாய் என்று கூடக் கேட்க முடிந்திருக்க வில்லை.
அதை உணர்ந்தான் போல, இளநகையுடன் அவளை பார்த்து,
“சினேக் அண்ட் லாடர் விளையாடி இருக்கிறாயா? நான் சின்ன வயசில் விளையாடியது. திடீர் என்று அது விளையாடவேண்டும் போல ஆசை வந்ததா…” என்றவன் மெல்லியதாகக் குலுங்கிச் சிறிது “உன்னைக் கடத்தி வந்தேன்… இருவரும் விளையாடலாமா?” என்று கேட்க இவள் முகம் மேலும் வெளிறிப்போனது.
அதைக் கண்டு சுவாரசியமாகத் தலையைச் சரித்து அழகிய வரிசை வெண்பற்கள் தெரியுமாறு சிரித்தவன், தன் காந்தப் பார்வையை அவள் மீது செலுத்த இவளுக்கோ பீதியில் வயிற்றைக் கலக்கியது. சிரமப்பட்டுத் தன் நடுக்கத்தை மறைத்தவள், முடிந்த வரை வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்து ஓரடி எடுத்து வைப்பதற்குள், தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
நிலையில்லாது தள்ளாடிய உடலை அவள் நிலைப்படுத்துவற்குள்ளாக இருக்கையை விட்டு எழுந்தவன், ஓரெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய மேல் கரங்களை அழுந்தப் பற்றி,
“ஹே… ரிலாக்ஸ்… நோ ரஷ்” என்று மீண்டும் படுக்கையில் அமர்த்த அந்தக் கனிவும் இதமும் அவளை அமைதிப் படுத்துவதற்குப் பதில், மேலும் பயத்தைத்தான் கிளப்பியது.
மூர்க்கமாய் நடந்தால் மோதி விடலாம். கோபமாய் நடந்தால் கொதிப்புடன் கொந்தளிக்கலாம்… ஆங்காரமாய் நடந்தால் அசுரத்தனமாய் பதிலடி கொடுக்கலாம்… ஆனால் இப்படிச் சிரித்துப் பேசும் எதிராளியை எப்படி எதிர் கொள்வது? சிரிக்காமல் கோபத்தைக் காட்டுபவனை விட, இப்படி சிரித்துச் சிரித்து கோபத்தை காட்டும் எதிரி மிக மிகப் பயங்கரமானவனவனாயிற்றே.
அடுத்து அவன் என்ன செய்யப்போகிறானோ என்கிற கலக்கத்தில் நிமிர்ந்து அவனைப் பார்க்க, மெதுவாக நடந்து வந்தவன் அவளுக்கு அருகாமையில் அமர்ந்தான்.
ஏதோ தீ சுட்டதுபோலப் பதறி அடித்துப் பின்னால் சென்று தலைமாட்டடியில் கால்களை மடித்துக் கூனிக் குறுகி ஒடுங்கியவாறு அமர்ந்து அவனை ஏறிட, அவனோ கொஞ்சம் கூட இரங்காதவனாக அவளை வெறித்தான்.
அந்தப் பார்வை சொன்ன மொழியில் உயிர் ஊசலாட, குளிர்காய்ச்சல் வந்தவள் போல நடுங்கத் தொடங்கினாள்.
அதைப் பரிதாபம் போலப் பார்த்தவன்,
“ஹே… ரிலாக்ஸ்… எதற்கு இத்தனை அச்சம்…” என்றவன் அவளை மேலும் நெருங்கி, அவள் முகத்தை மறைத்து விழுந்திருந்த கூந்தலை ஒற்றை விரலால் ஒதுக்கி விட முயல, அவன் விரல்கள் தீண்டும் முதலே தன் தலையைத் திருப்பிக் கொண்டாள் சமர்த்தி. விழிகளோ அச்சத்தில் சிவந்து கண்ணீரைச் சொரியத் தயாரானது.
அவன் எதற்காக அவளைக் கடத்தி வந்து இருக்கிறான் என்பதை அறிய அத்தனை பெரிய மூளை ஒன்றும் வேண்டியதில்லையே. அவளை அவன் கண்டுகொண்டான் என்பதைச் சொல்வதற்கு இதை விட ஆதாரம் என்ன வேண்டும்?
நெஞ்சம் அடைத்துக் கொண்டு வர, திரும்பி அவனைப் பார்த்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு,
“த… தயவு செய்து என்னை விட்டுவிடு…” என்றாள் அழுகையின் ஊடே.
“என்னது விடுவதா? இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே! ஆனால் பயப்படாதே… நான் அந்தளவுக்கெல்லாம் வில்லன் கிடையாது… இந்தக் கதைக்கு நான்தான் ஹீரோ… அந்தக் கெத்தை காத்துக் கொள்ள வேண்டுமே… இல்லை என்றால் பொங்கல் புளியோதரை வைத்துவிடுவார்கள்… நீ வைத்த பொங்கலைத் தின்றே இன்னும் செரிக்காமல் திணறுகிறேன்… இதில் அதுவும் சேர்ந்தால் அவ்வளவுதான்” என்று தோள்களைக் குலுக்கியவாறு சொன்னவன், கட்டிலை விட்டு எழுந்து, அங்கிருந்த மேசையை நோக்கிச் சென்றான்.
தன் இடதுகரத்துச் சுட்டுவிரலால் அந்த மேசையின் இழுப்பறையை இழுத்துக்கொண்டே,
“உனக்கு உன்னுடைய அண்ணா அண்ணிமீது கொள்ளை பிரியமல்லவா? அவர்களுக்கு ஒன்று என்றால் நீ துடித்துப்போவாய் தானே…” என்றவனின் தொனியில் அவளுக்கு இரத்தமெல்லாம் வடிந்து போன உணர்வு. தடுமாற்றத்தோடு படுக்கையை விட்டு எழ முயல, அவளை அழுத்தமாகப் பார்த்தவன், தன் வலது கரத்தைத் தூக்கிச், சுட்டு விரலால் அவளை அமருமாறு சைகை செய்ய, மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள் சமர்த்தி.
அவனுடைய வார்த்தை கொடுத்த வீரியத்தை விட, அவனுடைய சுட்டுவிரலின் வீரியம் அதிகமாக இருந்தது.
“எழும்பாதே… கீழே விழுந்து வைக்கப் போகிறாய்… உனக்கு போட்ட மருந்தின் வீரியம் சற்று அதிகம். அது உடலை விட்டு நீங்க சற்று நேரம் எடுக்கும்…” என்றவாறு இழுப்பறையிலிருந்து தங்க நிற மினுமினுப்புத் தாளினால் அழகாக்கப் பொதிசெய்த ஒரு பரிசுத் சுருளை வெளியே எடுத்துச் சமர்த்தியை நோக்கி விட்டெறிய, அது கச்சிதமாக அவளுடைய மடியில் வந்து விழுந்தது.
“கடந்த இரண்டு வருடங்களாக உன்னிடம் கொடுப்பதற்காக வைத்திருக்கிறேன். திறந்து பார். உனக்குப் பிடித்தமான பரிசுதான்… ச..ம..ர்..த்..தி… ஐ மீன் சல்மா ஓர் லின்டா லீசி” என்றவனுடைய உதட்டில் மீண்டும் புன்னகை எட்டிப்பார்க்க, அந்த சல்மா என்கிற பெயரில் தூக்கிப் போட்டது சமர்த்திக்கு.
அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. அடி முதல் நுனி வரை அத்தனையையும் அலசி அராய்ந்து தான் கடத்தியிருக்கிறான். அதுவும் அவளுடைய பெயரை எத்தனை தெளிவாக உச்சரிக்கிறான்.
கடவுளே கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணினாளே… கடைசியில் இப்படி சிக்கிக்கொண்டேமே…
நடுக்கத்தோடு அவனைப் பார்க்க. அந்த விழிகள் இரையைக் கண்டபுலியின் பார்வைபோல அவளைக் கடுமையாக வெறித்தன.
தொண்டை வறளக் கைகால்கள் சில்லிட, நடுங்கிய கரம் கொண்டு அந்தச் சுருளைத் தூக்கியவளுக்கு இதயம் படு வேகமாக அடிக்கத் தொடங்கியது.
உள்ளே என்ன இருக்கும் என்று அறியாத அளவுக்கு ஒன்றும் அவள் முட்டாள் அல்லவே. ஆனால் அதைத் திறந்தால் வரும் பூதத்தை எப்படி சமாளிப்பது என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.
தவிப்புடன் கண்களில் கண்ணீர் குளம் கட்ட, கட்டாயம் திறந்து பார்க்கவேண்டுமா என்பதுபோல இவனைப் பார்த்தாள்.
“கமான்… ஓப்பன் இட்…” என்று கூறிவிட்டுத் தன் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கியவனின் விரல்கள் அவனையும் மீறி அங்கிருந்த காயத்தில் படிய, அவனுடைய முகம் திடீர் என்று இறுகிக் கறுத்துப் போனது.
மாறாத வடுவைக் கொடுத்தவள் அல்லவா அவள். அதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாதே. அந்த நிலையிலும் மனம் அன்று நடந்ததை அசைபோடத் தொடங்கியது.

