Fri. Oct 24th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-20

(20)

 

வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது.

அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து முதலில் இறங்கிய மிளிர்மிருதையை இறுக அணைத்துக் கொள்ள உடலோ அழுகையில் குலுங்கியது.

“கண்ணம்மா… உனக்கொன்றும் இல்லையல்லவா…?” என்று அவளை ஒரு முறை முழுதாகப் பார்த்துப் பின் அவள் தலையை வருடிக் கொடுக்கும்போதே, அபயவிதுலன் மறுபக்கமிருந்து இறங்கினான். அதைக் கண்டதும் தம்பியை நெருங்கி அவனை இறுகக் கட்டிக்கொண்டார்.

“என் சாமி… உயிரே என்னிடமில்லை கண்ணா… என்னப்பா ஆச்சு…” என்று அவன் முகத்தைப் பற்றிக் கேட்டவர்,

“பார்த்து நடந்திருக்கக் கூடாதா?” என்றவன்”கத்தியால் குத்தினானாமே… அவன் குத்தும்போது, ஏடாகூடமாக வேறு எங்காவது பட்டிருந்தால்…” என்றவருக்கு அந்த நினைப்பே படு பயங்கரத்தைக் கொடுக்க, உடல் குலுங்கியது. தன் சகோதரியின் நிலையைப் புரிந்துகொண்டவனாக, அவரை அணைத்துக்கொண்ட அபயவிதுலன்,

“ஷ்… அக்கா… ஐ ஆம் ஓக்கே… கொன்ட்ரோல் யுவர் செல்ஃப்… அதுதான் எதுவும் ஆகவில்லையே.. பிறகு என்ன?” என்று அவர் முதுகைக் காயம் படாத கரத்தால் வருடியவாறு கூற, அவரோ,

“என் குலமே நீதான்டா… செய்தியைக் கேட்டதும்… தெய்வமே…” என்று பதறியவர், மெதுவாக அவனிடமிருந்து விலகி, அவன் காயப்பட்ட கரத்தை இரு உள்ளங்கைகளாலும் கவனமாக பற்றித் தூக்கிப் பார்த்தார். கட்டிய கட்டிலிருந்து கசிந்த இரத்தத்திலிருந்து காயத்தின் ஆழம் எத்தகையது என்பதைப் புரிந்துகொண்டார் காந்திமதி.

மீண்டும் உதடுகள் துடிக்க முகம் கசங்க, தன் உதடுகளால் காயத்தின் மீது ஊதி,

“கவனமாகக் கட்டுப்போட்டார்கள் அல்லவா… என்ன சொன்னார்கள்… தையல் போட்டார்களா…”என்று மேலும் கலங்க, மெல்லியதாக நகைத்தவன், அவர் தோளின் மீது தன் கரத்தைப் போட்டு,

“ஷ்… அக்கா… ஐ ஆம் பேர்ஃபக்ட்லி ஆல்ரைட்… இவளைத்தான் குத்த வந்தார்கள். தடுத்தேன் கையில் ஏறிவிட்டது… அதைத் தவிர எனக்கொன்றுமில்லைக்கா…” என்றவனுக்கு அவரைச் சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

எப்படியோ வீட்டிற்குள் நுழைந்து, காந்திமதியை ஆசுவாசப் படுத்தி அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விசாரித்த சந்திரனையும், அவர் மனைவியையும் சமாதானப் படுத்தி நிமிர்வதற்குள் அபயவிதுலனுக்குப் பெரும் களைப்பாகிப் போனது. இறுதியில்,

“இதோ பாருங்கள்… எனக்கொன்றுமில்லை… நன்றாகத்தான் இருக்கிறேன்… நாளை நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொண்டு இதற்காகக் கவலைப் பட்டுப் பயனில்லை… ப்ளீஸ்… இதைப் பெரிய விஷயமாக எடுப்பது எனக்குப் பிடிக்கவில்லை. சந்திரன் அங்கிள்… நீங்கள் இப்போது புறப்படுங்கள்… நாளைக்கு அதிகாலை வேறு எழ வேண்டும்…” என்று அவன் கூற அங்கே சற்று அமைதி நிலவியது.

“இந்த நிச்சயதார்த்தத்தைச் சற்று பின்னுக்குப் போடுவோமா அபயா…” என்று சித்தார்த் கேட்க, அவனை அழுத்தமாகப் பார்த்த அபயவிதுலன்,

“நோ சித்தார்த்…! நாங்கள் முடிவு செய்தது போல நிச்சயதார்த்தம் நாளைக்கு நடக்கும்… திருமணமும் குறித்தது போல அன்று நடக்கும்…” என்று அழுத்தமாகக் கூறியவன், திரும்பி,

“அக்கா… ஐ ஆம் சோ டயர்ட்… படுக்கப் போகிறேன்… ஐ நீட் சம் ரெஸ்ட்…” என்றவன் திரும்பிக் கலங்கியிருந்த மிளிர்மிருதையைப் பார்த்து, அவளை நெருங்கி அவள் கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து,

“எதையும் யோசிக்காதே மிருதா… நான் இருக்கிறேன் அல்லவா…” என்று மெதுவாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மாடியேறித் தன் அறைக்குள் நுழைந்தவனுக்கு முதலில் ஒன்றும் ஓடவில்லை.

“யார் அவர்கள்… யார்… யார்…” என்று தலையைப் போட்டுக் குழப்பிய அபயவிதுலனுக்கு எல்லாம் மர்மமாகவே இருந்தது. முதன் முறையாக மிளிர்மிருதையை ஒருவன் தள்ளியபோதே, அக்குவேறு ஆணிவேராக விசாரித்துப் பார்த்தவனுக்கு, அந்த விபத்தில் தன் எதிரிகள் யாரும் சம்பந்தப்பட்டது போலத் தெரியவில்லை.

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழிந்த நிலையில் எல்லாம் அமைதியாக இருக்க, ஒரு வேளை அது விபத்துதானோ என்று நிம்மதியடைந்த வேளையில், யாரோ வாகனத்தால் மோதிவிட்டுச் சென்றது, அந்த நிம்மதியைக் குலைத்தது.

மீண்டும் தேடுதல் வேட்டையில் அவன் அடைந்தது என்னவோ பெரும் தோல்விதான். முடிந்த வரை, தெரிந்து அத்தனை எதிரிகளைப் பற்றியும் விசாரித்தாகிவிட்டது. சிறிய துப்புக் கூடக் கிடைக்கவில்லை. ஆனால் இன்று…! இதை எப்படிச் சும்மா விட முடியும்…? சோர்வுடன் அங்கிருந்த இருக்கையில் தொப்பென்று அமர்ந்தவனுக்குத் தலையை வலித்தது. நெற்றிப் பொட்டைக் காயம் பட்ட கரத்தால் அழுத்தி விட்டுக்கொள்ள, கரத்தின் அசைவில் காயமும் வலித்தது.

எரிச்சலுடன் தூக்கிப் பார்த்தவனுக்கு அதில், அந்தக் கறுப்பனின் உருவம் இழித்தவாறு இவனைப் நெருங்கியது. அதை நினைத்ததும், கட்டுக்கடங்காமல் ஆத்திரம் வந்தது.

தன்னையும் மறந்து விரல்களை அழுந்த மூடி மூடித் திறந்து பார்த்தான். இதயத்தின் அடி நுனி வரை வலிய உணர முடிந்தவனுக்கு, ஆத்திரம் சற்றும் மட்டுப்படவில்லை. இதே வலி மிளிர்மிருதைக்கு ஏற்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணியபோதே, அவனுடைய உடல் ஆடிப்போனது.

அவன் மட்டும் தக்க தருணத்தில் பாயவில்லையென்றால், அவள் வயிற்றை நோக்கியல்லவா அந்தக் கத்தி இறங்கியிருக்கும். நினைக்கும் போதே, அவனுடைய முகத்திலிருந்து இரத்தம் வடிந்து சென்றது.

சோர்வுடன் தன் விழிகளை இறுக மூடித் தலையைப் பின்னால் சரித்துச் சற்று நேரம் அப்படியே கிடந்தான்.

விழிகள் தூங்குவதற்காகக் கெஞ்சின. கண்களைக் காயம் படாத கரத்தால் அழுந்த துடைத்தவன், எழுந்து ஒற்றைக் கரத்தாலேயே ஷேர்ட் பட்டனைக் கழற்றத் தொடங்கினான். கரங்கள் பொத்தான்களைக் கழற்றினாலும் நினைவு மட்டும் யார் யார் என்பதிலேயே நின்றிருந்தது.

சட்டையைக் கழற்றி, பிஜாமாவிற்கு மாறி, படுக்கையில் விழுந்து விழிகளை மூடியபோதும், மூளையும் புத்தியும் ஓயவில்லை. பதிலில்லாத அதே கேள்வி, அதே யோசனை… யார் என்று தெரியாமல் தோல்வியை நோக்கிச் செல்கிறோம் என்றபோது கடும் சீற்றம் எழுந்தது.

விழிகளை மூடிக் கிடந்தவனின் காயம் பட்ட கரத்தை மலர்க் கரம் ஒன்று பற்றிக்கொண்டது.

அக் கரத்தின் ஸ்பரிசத்தில், அதுவரையிருந்த இறுக்கம் காணாமல் போக இப்போது, அவனுடைய முகத்தில் இளகிய நகையொன்று மலர்ந்தது. விழிகளைத் திறக்காமலே,

“ஓ மை ஏஞ்சல்…” என்று முனங்கியவாறு, தன் கரத்தை ஏந்தியிருந்த அத் தளிர் கரத்தைப் பற்றி இழுத்தபோது, எந்த மறுப்பும் கூறாது அவன் மேனியின் மீது வந்து விழுந்தாள் மிளிர்மிருதை. விழுந்தவளின் முதுகைச் சுற்றித் தன் கரத்தை எடுத்துச் சென்று தன்னோடு அணைத்துக் கொண்டவன், தலையணையில் தன் தலையைச் சரியாக வைப்பது போலத் தூக்கி அங்கும் அங்கும் வைத்து நிலைப்படுத்தியவன், பெருமூச்சுடன் அவள் அருகாமையை உணர்ந்து ரசித்தவாறு,

“என் தேவதை இன்னும் தூங்கவில்லையா என்ன?” என்றான் காதலுடன். கூடவே அவள் தலையைப் பற்றித் தன் மார்பில் பதித்து முதுகைத் தட்டிக்கொடுத்தவாறு,

“தூங்குமா… காலை எழுந்துகொள்ள வேண்டும் அல்லவா…” என்று கேட்க, அவனுடைய கழுத்து வளைவில் இரண்டு கண்ணீர்த் துளிகள் பட்டு வழிய, அதை உணர்ந்தவனாகப் பதறித் துடித்தவாறு தன் விழிகளைத் திறந்தான் அபயவிதுலன். இரண்டு கரங்களாலும், அவள் தலையைப் பற்றித் தூக்க, அங்கே முகம் சிவக்க, மூக்கு விடைக்க, நின்றிருந்த மனையாளைக் கண்டு துடித்துப் போனான்.

அவள் இன்னும் நடந்த சம்பவத்திலிருந்து மீளவில்லை என்பதைப் புரிந்துகொண்டவனாக,

“ஓ… மை பேபி… இன்னுமா அதை நினைத்துக்கொண்டிருக்கிறாய்…” என்றவாறு படுக்கையை விட்டு எழ முயல, அவளோ அவன் மார்பில் கரத்தைப் பதித்து மேலும் அவனைக் கட்டிலில் தள்ளிவிட்டு, பொத்தென்று அவன் முடியடர்ந்த பரந்த மார்பில் தன் முகத்தைப் புதைத்தவள் அதற்கு மேல் முடியாதவளாகத் தன்னையும் மீறிக் கதறிவிட்டாள்.

அதுவரை அடக்கி வைத்திருந்த வலி, அணையுடைத்துப் பாய்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட அபயவிதுலன்,

“ஷ்… கண்ணம்மா… ஐ ஆம் ஓக்கேமா… எதற்கு இப்படி அழுகிறாய்… ம்…” என்று சமாதானப் படுத்தினாலும், இவனுடைய முகம் கனிந்துதான் போனது.

அவனுக்காய் அவனுடைய தேவதை பதறுவதும் ஒரு வித சுகம்தானே.

சற்று நேரம் அவன் முகத்தில் மார்பில் புதைத்துக் கிடந்தவள், பின் எப்படியோ தன்னைச் சமாளித்தவளாகத் தலையை இடது புறமாகத் திருப்பி, விக்கியவாறு,

“அம்மா சொன்னது போலக் கரத்தில் குத்தியது… மார்பில் இறங்கியிருந்தால்…” நினைக்கும் போதே அவளுடைய ஆவி பிரிந்துவிடும் போன்ற பரிதவிப்பில் நடுங்கியவள், தன் தலையை நிமிர்த்தி அழுகையினூடே அவனை முறைத்துப் பார்த்து, “இனி ஒரு போதும் இப்படிச் செய்யாதீர்கள் விதுலா…! ப்ளீஸ்…” என்றவளைச் சற்றுக் கோபமாக ஏறிட்டான் அபயவிதுலன்.

“மிருதா… என்ன பேசுகிறாய்… ஒருத்தன் உன்னைக் கொல்ல வருகிறான்… பார்த்துக்கொண்டிருக்கச் சொல்கிறாயா? ஆர் யு மாட்… என் உயிர்டி நீ… உன் மீது கீறல் பட்டாலே தாங்க மாட்டேன்… ஆனால் அவன்… யாராக இருந்தாலும் இதற்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் மிருதா… நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும்…” என்று கடுமையாகக் கூறியவனின் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவளுக்கு அந்தக் கணமே அவனைத் தன்னுள் அடக்கிவிடும் வேகம் வந்தது.

தன்னைப் பற்றி யோசிக்காது, என்னைப் பற்றி மட்டும் யோசிக்கிறானே… இத்தகைய அன்பைப் பெற நான் என்ன தவம் செய்தேன்… எண்ணும் போதே உள்ளம் உருகி அவனுக்குள் ஐக்கியமாகத் தொடங்கியது.

“என்னைப் பற்றி யோசிக்கிறீர்களே… உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால்…” என்றவள் அவனுடைய வலது கன்னத்தில் தன் கரத்தைப் பதித்து, அவனுடைய இடது கன்னத்தில் முத்தமிட்டபோது அபயவிதுலனின் வலி அனைத்தும் மாயமாக மறைந்து போனது.

அவளோ, அப்படியே தலையை இறக்கி, அவன் கழுத்து வளைவில் தன் உதடுகளைப் பொருத்தியெடுக்க மறு கணம் சிலிர்த்துப் போனான் அபயவிதுலன். ஒரு முறை அவனுடைய உடல் தூக்கிப் போட்டது என்று சொன்னால் மிகையில்லை.

அவளுடைய முத்தத்தில் தன்னிலை கெட்டு நின்றவனை மீண்டும் தலை நிமிர்த்திப் பார்த்தாள் மிளிர்மிருதை.

எனக்காக எத்தனையைச் செய்திருப்பான்… ஆனால் நான்… இவனுக்கே இவனுக்காய் எதைக் கொடுத்திருக்கிறேன்? எண்ணும் போதே எதுவும் இல்லை என்றுதான் தோன்றியது.

கூடவே மருத்துவமனையில் அவன் கொடுத்த முத்தம் நினைவுக்கு வர, இவளுடைய முகம் சிவந்து போனது. தன் கரத்தைத் தூக்கி அவனுடைய நெற்றியில் வைத்தவள், எதுவோ உந்த, அடர்ந்த புருவத்தை வருடிக்கொடுத்து, கூர்மையான விழிகளை வருடி அப்படியே கன்னத்தின் ஓரம் விரல்களால் தீண்டிக்கொண்டு வந்தவள், குனிந்து அவன் உதடுகளில் தன் ஈர உதடுகளைப் பொருத்த அபயவிதுலன் முழுதும் தன் நிலை கெட்டான்.

தன்னை மறந்து ”மிருதா…” என்றபோது, அவனுக்குப் பேச்சு வராது வெறும் காற்றுதான் வந்தது. அவளோ, அவனைப் பார்க்க முடியாதவளாகத் தன் விழிகளை மூடி,

“விதுலா…! என்னை எடுத்துக்கொள்ளுங்கள்…” என்றாள் உதடுகள் நடுங்க. முதலில் புரியாமல் குழம்பியவன், அடுத்து அவள் கூறியதன் பொருள் விளங்க அதிர்ந்து போனான்.

“மிருதா…” என்றான் மீண்டும். அவளோ தன் விழிகளைத் திறந்து தவிப்புடன் அவனைப் பார்த்த,

“எ… எடுத்துக்கொள்ளுங்கள் விதுலா…!” என்றாள் மீண்டும். ஒரு கணம் அவளை ஆழப் பார்த்தவன், தன் விழிகளை அவள் விழிகளுடன் கலந்தான். அந்த விழிகளினூடாகச் சென்று இதயத்திற்குள் நுழைந்து அவள் உணர்வை உணர முயன்றான். அவளுடைய உண்மை நிலை புரிய, அவளைப் புரட்டித் தன் இடது கரத்தின் கை வளைவில் கிடத்தியவன், வலது கரத்தைத் தூக்கி அவள் முகத்தில் பதித்து, அவளை ஆழமாகப் பார்த்தவாறு,

“கண்ணம்மா… நானும் நீயும் இணையும் தருணம் அற்புதமானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்… உனக்குக் கொடுத்த வலியை, மறு தடவை சுத்தமாகத் துடைத்து எடுத்துவிட விரும்புகிறேன்… மறு முறை நம் இரு உடல்களும் ஓருடலாய் ஆகி நாமாகும் போது, அங்கே எந்தச் சங்கடங்களும், வலிகளும், வேதனைகளும் இருக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன்… அதற்குரிய தருணம் இதுவல்ல… உன் முழுமையான மன மாற்றத்திற்காகக் காத்திருக்கிறேன் மிருதை… நீ நீயாக என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் கண்ணம்மா…” என்று கூற வியந்தவாறு அவனைத் திரும்பிப் பார்த்த மிளிர்மிருதை,

“நான்… நானாகத்தானே வந்திருக்கிறேன் விதுலா…! நானாகத்தான் என்னைக் கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்… தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்…” என்று அவசரமாகக் கூற மெல்லிய புன்னகையைச் சிந்திய அபயவிதுலன்,

“இல்லை… நீ இன்னும் தயாராக இல்லை…” என்று அழுத்தமாகக் கூறியவன், அவள் பக்கமாகச் சரிந்து படுத்து, தன் சுட்டு விரலால் அவள் நெற்றியிலிருந்து கன்னம் வரைக்கும் கோடாக இழுத்தவன்,

“நாணத்தால் சிவக்கவேண்டிய முகம், சங்கடத்தால் சிவந்திருக்கிறது…” என்றவன், அவள் விழிகளை வருடிக் கொடுத்து, காதல் இருக்கவேண்டிய இந்தக் கண்களில் இப்போது அச்சம்தான் தெரிகிறது…” என்றவாறு அவளுடைய சிவந்த உதடுகளை வருடியவாறு, “மெல்லிய முத்தத்திற்கு ஏங்கி நடுங்க வேண்டிய இந்த உதடுகள், இப்போது எனக்கேதாவது ஆகியிருந்தால் என்கிற பரிதவிப்பில் நடுங்கிக் கொண்டிருக்கின்றன…” என்றான். பின் அவள் புறமாகக் குனிந்து அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பொருத்தி எடுத்து, “இப்போது நீ என்னிடம் நெருங்கி உன்னைக் கொடுக்கத் தயாராக இருப்பதற்குக் காரணம் நன்றி பெருக்கு… எனக்காகத் தன் உயிரையும் கொடுக்க நினைத்தவனுக்கு, இந்த உடலைக் கொடுக்க நீ தயாராகிவிட்டாய்…” என்றவன், அவளை இழுத்துத் தன் மார்பில் போட்டு மல்லாக்காகப் படுத்தவன்,

“எனக்காக நீ இத்தனை யோசித்து உன்னையே எனக்குத் தர நினைக்கிறாய் பார்… இதை விட வேறு என்ன பேறு எனக்குக் கிடைக்கப்போகிறது… அது எத்தனை பெரும் மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது தெரியுமா?” என்று கேட்டவன், இடது கை வளைவிலிருந்தவளை அக் கரம் கொண்டே அவள் மேனியை வருடிக் கொடுத்தவாறு, “எனக்கு வேண்டியது உன் உடல் அல்ல மிருதா… ஆத்மார்த்தமான உன் காதல். அதனுடன் சேர்ந்த இந்த மேனி… உளமார்ந்த விருப்பு… கூடவே இந்த விழிகளில் தெரியும் ஆர்வம்… இவை எல்லாம் கலந்து எப்போது எனக்குப் படைக்கிறாயோ, அன்றைக்கு அதை எடுத்துக் கொள்கிறேன்… இப்போது பரிதாபத்தால் தரும் இன்பம் நிரந்தரமாகவும் இருக்காது, உண்மையான மகிழ்ச்சியையும் கொடுக்காது…” என்றவன் திரும்பி அவளைப் பார்த்து,

“அடுத்த முறை, நாம் இணையும் போது, ஆணவம் இருக்காது கண்ணம்மா… அதில் காதல் மட்டுமே இருக்கும்… வலி இருக்காது… இறைவனை நுகர்ந்த அனுபவம் இருக்கும்… நான் சொல்வது புரிகிறது அல்லவா?” என்று கேட்கத் தன் விழிகளை மட்டும் உயர்த்தி அபயவிதுலனை ஏறிட்டுப் பார்த்தாள் மிளிர்மிருதை.

“அது நடக்குமா?” என்றாள் கிசுகிசுப்பான குரலில். அவளுடைய கன்னத்தில் உள்ளங்கையை வைத்தவன்,

“நிச்சயமாக… அதுவும் மிக விரைவில்…” என்று விட்டுக் குனிந்து மெல்லியதாய் அவள் உதட்டில் முத்தமிட்டு விலகியவன், மீண்டும் அவளைத் தன்னோடு அணைத்து,

“தூங்கு… நாளைக்குச் சீக்கிரம் எழும்பவேண்டும்…” என்றவாறு தன்னவள் கரங்களில் இருக்கும் நிறைவுடன் விழிகளை மூட, அவனுடைய வெம்மையான அணைப்பின் சுகத்தில் மிளிர்மிருதையும் தன் விழிகளை மூடிக்கொண்டாள்.

 

 

What’s your Reaction?
+1
9
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!