Wed. Oct 22nd, 2025

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 21,22,23

 

 

சேதி 21

*********

 

              சென்னையின், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் நின்று கொண்டிருந்த வனராஜனின் மனதில் பலவேறு குழப்பங்கள். மனமெனும் சாலையில் குறுக்கும் நெடுக்கும் பயணித்த எண்ணங்களின் நெரிசலில் தலைபாரமாக ஆரம்பித்தது. சமாளித்துக் கொண்டவனாய்,

 

          

“பை தி பை ஐ அம் மன்யு அகர்வால்”, என்று கை நீட்டியவனின் கையை பற்றி விடுவித்த வனராஜன், 

 

 “ நான் செல்லத்த ஹாஸ்டலில் விட்டுட்டு அம்மா பார்க்க வரட்டுமா?” என்று கேட்டான்.

 

“நைட் ஏன் ப்ரோ! நாளைக்கு காலைல வாங்க..நான் அம்மாட்ட கேட்டுட்டு டைம் உங்களுக்கு மெசேஜ் பண்றேன்…ஆமா….இவனுங்கள இப்படியே வா விட்டுட்டு போறது..தப்பாச்சே!!!!!” என்று நாடியைத் தடவ,

 

அமர்த்தலாய் சிரித்தவாறே,”யார் சொன்னா விட்டாச்சு னு….” என்று சொல்லவும், அங்கே போலீஸின் பேட்ரோல் வாகனம் வரவும் சரியாக இருந்தது.

 

அதிகாரி தோரணையில் வந்தவர் வனராஜன் அருகில் வந்து கை குலுக்கி தன்னை அறிமுக படுத்திக் கொண்டவர், தேவையான உதவி செய்ய சொல்லி மேலிடத்தில் இருந்து ஆணை வந்ததாகக் கூறவும், அருகில் இருந்த நித்யா நடந்தவற்றை க் கூறினாள். , “ ஓகே சார்…நீங்க இங்கே இருந்து கிளம்புங்க…பொண்ணுங்க பேர் அநாவசியமா வெளியே வரவேணாம்..ட்ரக்ஸ் மணி..ஏற்கனவே டிப்பார்ட்மெண்ட் கட்டம் கட்டி வச்சுருந்த ஆளுதான்.அவன் ஆளுங்களால ..… வசம்மா வந்து சிக்கிட்டான்.….இனி நாங்கப் பார்த்துக்குறோம்.. “ எனவும் ,

 

அருகில் இருந்த செல்லக்கிளி ,” நித்யாக்கா வண்டியும் என் செல் போனும் அங்க இருக்கு…” என்றாள் மெல்லிய குரலில்,

 

“ அதை பத்திரமா உங்ககிட்ட சேர்த்துடுறோம்..நீ கவலைப் படாதே மா…நீங்க கிளம்புங்க சீக்கிரமா..” என்றவர்,வனராஜனின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு தன்னுடன் வந்த காவலர்களை அழைத்துக்கொண்டு வேகமாக அந்த தெருவிற்குள் சென்றார்.

 

இடது புருவம் உயர்த்தி புன்னகை சிந்திய மன்யு, “ கலக்குறீங்க ப்ரோ….. டீகே…காலைல சந்திப்போம்…” என்று சொல்லிவிட்டு ,நித்யாவை கூட்டி க் கொண்டு கிளம்பினான்.

 

   தன் அருகில் நின்று கொண்டிருந்த வாகனத்தில் ஏறிய வனராஜனின் முகம் இறுகிப் போய் இருந்தது.

நித்யா சொன்னதைக் கேட்டவனின் மனம் ,’ எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து இருந்திருக்கிறார்கள்…ஒருவேளை தான் நினைத்திருந்தபடி அவளை கல்லூரியில் சென்று பார்த்திருந்தால், இவ்வளவு களேபரம் நடந்திருக்கதோ..ஏற்கனவே…ஆண்கள் என்றால் பயம் அவளுக்கு….இப்போது இந்த சம்பவம் அவளை மனதளவில் மிகவும் பாதித்து இருக்குமே..எவ்வளவு பயந்தாளோ…பதறினாளோ அந்த நேரத்தில்…இரண்டு சிறு பெண்கள்…. நான்கு மலைமாடுகள் போன்ற ஆண்கள்.. இருவரும் சமயோஜிதமாக சமாளித்திருக்கவில்லை என்றால்……. ’ கண்களை இறுக மூடியவன், தன்னவளின் சில்லிட்டிருந்த கரங்களை பற்றிக் கொண்டான். திடுமென்று அவன் தன் கரம் பற்றவும் லேசாக திடுக்கிட்டவள், பின் மெதுவாக அவனின் தோள் சாய்ந்து கொண்டாள். அள்ளி அணைக்கத் துடித்த கரங்களை , இருக்கும் இடம் உத்தேசித்து கட்டுப் படுத்தியவன் ,தன் கரங்களின் அழுத்தம், வெம்மை மூலமாகவே அவளைத் தேற்ற முயன்றான்.

 

மழையின் காரணமாக, வாகனம் வேறு ஊர்ந்து ஊர்ந்து சென்று அவனின் பொறுமையை சோதித்தது . பதினைந்து நிமிடத்தில் வரவேண்டிய விடுதி, முப்பது நிமிடங்கள் தாண்டியும் சென்று அடைய முடியவில்லை.

தோளில் சாய்ந்திருந்தவள், தலை நகருவதைக் உணர்ந்தவன், அவள் உறங்கிவிட்டதை அறிந்து, வருத்தப் புன்முறுவல் சிந்தியவனாய் , மெதுவாக மடி தாங்கிக்கொண்டான். சாலை விளக்கின் ஒளியில் அவளின் மேலாடையின் முதுகுப்புறம் கிழிந்திருப்பதையும் ,அங்கு தென்பட்ட நகக்காயத்தையும் கண்டதும், அவனின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

 

பற்களைக் கடித்தவன், தன் அலைபேசி எடுத்து,” ஐ வான்ட் டூ கில் தட் பாஸ்டர்ட்ஸ்….” என்று செய்தி அனுப்ப,” இப்போ தான் DSP டீடைல்ஸ் சொன்னார்….ஆல் மோஸ்ட் ஓவர்..…. டன்…மச்சான்….” என்று பதில் வந்தது.

 

ஆவேசம் சற்று அடங்கியவனாய் ,இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

ஒருவழியாக ஹாஸ்டல் வந்து விட்டது. அவளின் தூக்கத்தைக் கலைக்க மனமற்றவனாய், வாகனத்தில் ஹீட்டரை ஆன் பண்ண சொல்லிவிட்டு சத்தமில்லாமல் இருக்கும் படி ஓட்டுனரிடம் சைகை செய்தான்.

 

அவரும் அமைதியாக , வாகனத்தை நிறுத்திவிட்டு, அவன் சொன்னது போல் செய்துவிட்டு , இறங்கி தள்ளி நின்று கொண்டார்.

பத்து நிமிடங்கள் ஆனதும்,திடுமென உடல் தூக்கி வாரிப் போட விழித்து எழுந்து கொண்டாள் செல்லக்கிளி.

 

அவளின் உடல் உதறியதும் புரிந்து கொண்டவனாய்,”செல்லம்மா,உன் அத்தான் தான் ,செல்லம்மா…நீ பத்தரமா இருக்க..பாரு..” என்று அவளை லேசாக தட்டி நிகழ்வுக்கு கொண்டு வரவும், மலங்க மலங்க விழித்தவளுக்கு, சற்று நேரத்தில் அனைத்தும் நினைவு வந்தது. முகம் சற்றே கசங்கினாலும், நிமிடத்தில் சரி செய்து கொண்டாள்.வெளியே பார்த்தவள்,விடுதிக்கு வந்துவிட்டதை உணர்ந்து, மெல்ல விலகி தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கத் தலைப்பட்டாள்.

 

கை பற்றி தடுத்தவன்,” நாளைக்கு லீவு போட்டுரு…நான் உன் போன் எடுத்துட்டு வரேன், இல்லாட்டி புது போனே வாங்கிட்டு வரேன்…உன் பிரின்ட் நம்பர் தறியா எனவும்…” புருவம் சுருக்கி யோசித்தவள், ஞாபகம் இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள்.

 

“சரி வா நான் உள்ள வந்து உன்னை விட்டுட்டு , உன் பிரின்ட் ட்ட நம்பர் வாங்கிகுறேன்” எனவும், சரி என்று தலை அசைத்தவள், இறங்க முற்பட, அவளின் கைப்பற்றி இழுத்தவன்.. இறுக மார்போடு அணைத்து உச்சியில் இதழொற்றினான்.அவளுக்கும் அந்த ஆறுதல் தேவைப்பட்டிருந்ததோ!! அவனின் அணைப்பில் பாந்தமாய் அடங்கியவள்,அமைதியாய் இருந்தாள். முழுதாய் ஒரு நிமிடம் கடந்த பின்பும் ,விடுவிக்காமல் இருந்ததும், லேசாய் அசைந்து தன் எதிர்ப்பை தெரிவித்தாள்.

 

புன்முறுவலுடன் விடுவித்தவன், அவளுடனேயே இறங்கி, இணைந்து நடந்தவாறே,” நாளைக்கு பத்து.. பதினோரு மணிபோல வருவேன், மதியம் வெளிய சாப்பிடலாம். பாடுன அன்னைக்கு போட்டிருந்தியே அந்த ட்ரெஸ்…. போட்டு ரெடி ஆ இரு…..சரியா? “ எனவும் ‘என்ன ஆர்டர் எல்லாம் பலம்மா இருக்கே ‘ என்பது போல் திரும்பி முறைத்தாள். அவளின் முறைப்பைக் கண்டவன் சிரித்தவாறே,

 

“ ரொம்ப முறைக்காதே, எதையும்…. நினைக்காதே…என்னை தவிர…” எனவும் ,,முறைப்பு கூடியது.

வாய்விட்டு சிரித்தவன், அவளருகில் நெருங்க, விலகி வேகமாக நடந்தாள்.  

 

       விடுதி வாசலில் அவளுக்காக காத்திருந்த திவ்யா, அவளைக் கண்டதும் ,வேகமாக வந்தாள். அவள் தங்களருகே வந்ததும் தன்னை செல்லகிளியின் நெருங்கிய உறவினனாக அறிமுகப்படுத்தி க் கொண்ட வனராஜன், நித்யாவின் வண்டி பழுதாகி சிறு விபத்து. அப்போது அலைபேசி மழை நீரில் கீழே விழுந்து பழுது பட்டு விட்டதாக சொல்லி, அவளின் எண்ணை வாங்கி கொண்டு விபத்து அதிர்ச்சியில் இருப்பதால் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டுதிரும்பி இவளை ப் பார்த்தவன், முறுவலுடன் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்.

 

அவன் பேச்சை ஆ வென கவனித்து கொண்டிருந்த செல்லக்கிளி, ‘ அதுதானே, பேச இவுகளுக்கு சொல்லியா தரணும் ..’ என்று மனதுக்குள் முணங்கியவாறு விடுதியின் உள்ளே சென்றவள் மனதில் , நடந்த சம்பவங்களின் பாதிப்பு விலகி, அவன் சொல்லிய படி அவன் நினைப்பே எஞ்சி நின்றது.

 

***********************

  தன் அறைக்கு சென்று குளித்து உடைமாற்றி, படுத்தவன் அலைபேசிக்கு மன்யுவிடம் இருந்த மறுநாள் காலை எட்டு மணிக்கு வரும்படி செய்தி வந்திருந்தது.நன்றி என்று பதில் அனுப்பியவன்,

 

       அன்னைக்கு அழைத்து , ஒரு முக்கிய வேலை வந்துவிட்டதால், சென்னையில் தங்கவேண்டிய சூழல் வந்துவிட்டதாக சொல்லி விட்டு அலுப்புடன் கண்களை மூடினான். நாளை என்னென்ன சேதிகள் தன்னை அடையபோகிறதோ என்று எண்ணியபடி…

 

 மறுநாள் சரியாக எட்டு மணிக்கு கௌரியின் வீட்டை அடைந்தவனை , வாசலில் வந்து வரவேற்ற மன்யு உள்ளே அழைத்து சென்றான். எதுவும் நடவாதது போல் கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த நித்யாவைப் பார்த்த வனராஜன் அவளின் மனஉறுதி எண்ணி ஆச்சர்யம் அடைந்தவன், அவளிடம் மீண்டும் ஒரு முறை நன்றி கூற சிரித்தவாறே ,” நீங்க தான் பாராட்டுறீங்க, நேத்து நயிட் ல இருந்து, ஆளாளுக்கு என்னை ஒரே திட்டு, ஏன் அந்த நேரம் வெளிய போனே, அந்த சின்ன பொன்னையும் ஆபத்துல சிக்க வச்சுருக்க னு, இவுங்க கொடுத்த வாத்து வண்டியால தான் எல்லா பிரச்சனையும் னு அவுங்களுக்கு புரியலை” என்று தலையில் கை வைத்ததும், அவளின் மண்டையில் கொட்டிய மன்யு,” அதன் உனக்கு பைக் வாங்கி தரேன்னு நான் சொல்லிட்டேனே..”

“நீ…!!!..வாங்கி தருவ!!……. எப்போ?? ,,நீ வேலைக்கு போய்..சம்பாதிச்சு…….அது வரை….” என்று ஆரம்பிக்கவும், அங்கே வந்த கௌரி, “ காலேஜ் கு நேரமாச்சு , சாப்பிட்டு கிளம்பு, மன்யு ,நீயும் தான்… “ என்றவர்,திரும்பி வனராஜனைப் பார்த்தவரின் கண்களில் இனிய அதிர்வு, நட்பாக புன்னகை சிந்தியவர்,” நீங்க உக்காருங்க…..” என்றார்

 

அப்போது தன் அறையிலிருந்து வெளியே வந்த மணிச்சந்த் வனராஜனை பார்த்து ஒரு நிமிடம் நின்றவர், பின் முறைத்தவாறே ,சாவிகளை எடுத்துக்கொண்டு வெளியேறினார். இவர் ஏன் தன்னை பார்த்து முறைக்கிறார் என்று யோசனையுடன் கௌரியை திரும்பி பார்க்க, அவர் வனராஜனின் முகத்தையே பாசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

நித்யா கல்லூரிக்கு கிளம்ப, அவளை விடுவதற்கு மன்யு வை பணித்தவர், வனராஜனின் அருகில் வந்து அமர்ந்தார்.

 

           மடியில் கோர்த்திருந்த கைகளை சற்றுநேரம் உற்றுப்பார்த்தவர், மெதுவாக திரும்பி வனராஜனைப் பார்த்தார். ,”சொல்லுங்க…எப்படி கண்டுபிடிச்சீங்க… எதுக்கு தேடி வந்துருக்கீங்க?”

 

“மரியாதை எல்லாம் வேணாம் ஆன்ட்டி, வா போ னே சொல்லுங்க….” என்று சற்று நிறுத்தியவன்,”சில குழப்பங்கள் ஆன்ட்டி, நான் என் அம்மாக்காக வந்துருக்கேன்….அவுங்க வாழ்க்கைய மட்டுமில்லாம, உங்க வாழ்க்கையும் புரட்டிப் போடுற மாதிரி சில விஷயங்கள் இருபத்தைந்து வருஷம் முன்னே நடந்துருக்கு..நீங்க அதிலிருந்து மீண்டுட்டீங்க போல..ஆனா அவுங்க இன்னும் மீளலை…இன்னமும் அதே இடத்துல இருக்காங்க னு தோணுனதால… என்ன நடந்தந்ததுன்னு தெரிஞ்சுக்க வந்துருக்கேன்…சொல்லுங்க ஆன்ட்டி…”

 

பெருமூச்சுவிட்டவர் கண்களை மூடிக் கொண்டார் ,தன் இளமை காலத்திற்கே சென்று விட்டாரோ என்று எண்ணும் வண்ணம் அவரின் முகம் பொலிவுற்று துலங்கியது,” நானும் சௌந்தரும் ஒன்னாதான் அந்த காலேஜுக்குள்ள நுழைஞ்சோம்…ஒரே நேரத்துல அப்ளிகேஷன் பில் அப் பண்ணோம்…. எலக்ட்ரானிக்ஸ் பொதுவா பெண்கள் அதிகமா தேர்ந்தெடுக்குற துறை..எனக்கு அதுல ஆர்வம் அதிகம் . எங்க கிளாஸ் ல இருபத்தெட்டு பெண்கள் இரண்டு பேர் தான் ஆண்கள்….அதுல ஒருத்தன் தான் சௌந்தர்…..அவனுக்கும் எலக்ட்ரானிக்ஸ் ல ஆர்வம் அதிகம்.” ,

 

சற்று நிறுத்தியவர், “ எனக்கு தெரிஞ்சு , சௌந்தர் வாழ்க்கைல அவனுக்கு பிடிச்சு, அவனுக்கு கிடைச்சது அந்த படிப்பு மட்டும் தான்….மத்த எல்லாமே அவன் மேல திணிக்க பட்டது…..அவன் அமைதியா ஏத்துகிட்டு வாழ்றது…அவன் கொஞ்சம் மனசு விட்டு பேசுனது என்கிட்ட மட்டும் தான்..பார்த்தவுங்ககிட்ட எல்லாம் புலம்புறது..தன் பிரச்சனைய வெளிகாட்டுறது …அவன் இயல்பு கிடையாது..”…பெருமூச்சு விட்டவர்,” அமைதியா அன்பு செலுத்தவும், நட்பா இருக்கவும் தான் அவனுக்கு தெரியும்…. பொதுவா அதிகம் பேசாம அமைதியா இருக்குற சௌந்தர்க்கும் அதிகமா பேசுரதே வழக்கமா வச்சுருக்குற எனக்கும் எப்படி நட்பு உருவாச்சுன்னு எல்லோருக்கும் ஆச்சர்யம்….எலக்ட்ரானிக்ஸ் ல இருந்த அதிக ஆர்வம்..எங்களை ஒன்னு சேர்த்துருக்கலாம்….ரெண்டு பேரின் ரசனை…எண்ணங்கள் பல விஷயத்துல ஒத்து போச்சு…படிக்கிறது… அஸ்ஸைன்மெண்ட்ஸ்…ப்ரொஜெக்ட்ஸ்..எல்லாம் மோஸ்டலி சேர்ந்து தான் பண்ணுவோம்…

 

எங்களுக்குள் ஒரு அழகான…நட்பு..புரிதல்…இருந்தது…நட்புக்குன்னு ஒரு கற்பு இருக்கு..அது உங்களுக்குள்ள இயல்பாவே இருந்துச்சு..அதை தாண்டி ரெண்டு பேரும்…. என்னைக்கும் யோசிச்சது கூட இல்லை..ஆனா பார்க்கரவங்க பார்வை அப்படி இல்லை னு எங்களுக்கு தெரியலை.

 

ஆனா அது பல பேர் கண்ணை உறுத்துச்சு னு கூட நானோ அவனோ நினைக்கலை. ரெண்டு பேருமே ஹாஸ்டல்….எங்களுக்குன்னு ஒரு நல்ல நட்பு வட்டமும் இருந்தது….எங்க கூடவே இருக்குற யார் கண்ணுக்கும் எங்க லெக்சரேர்ஸ அனுபவப்பட்ட கண்களுக்கு தவறா தெரியாத எங்க நட்பு..யார் கண்ணுக்கு ….”.தொண்டையை செருமியவர் , 

 

     “யார் கண்ணுக்கு…. காதலா பட்டுச்சு னு தெரியலை..சௌந்தர் அம்மாக்கு காதும் மூக்கும் வச்சு விஷயம் போயிடுச்சு…..அதுக்கு அவுங்க..நேறா அப்பா வேலை பார்க்குற சிவகாசி பேக்டரி கு போய் எல்லோர் முன்னாடியும் அசிங்கமா பேசி திட்டிருக்காங்க..அவுங்க சொன்ன குற்றச்சாட்டுகள்… எங்க க்உடும்பட்ஆயே..வால்அரிப்பை கேலி செய்வதாய்…..அது கேட்டு அப்பாக்கு ஒரே அதிர்ச்சி…..அவமானமா ஆகிடுச்சு….உடனே என்னை ஹாஸ்டல் ல இருந்து வரவச்சவர்..என்கிட்ட என்ன ஏதுனு கூட கேட்கலை..படிப்பு முடிக்க ஒரே ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்த நிலைல என் படிப்பை நிறுத்தி, என்னை சென்னைல இருந்த மணிச்சந்த் பையா வ வரவச்சு,அவர் கூட புனே கு என் அம்மா வழி சொந்தங்கள் இருந்த இடத்துக்கு அனுப்பிட்டார்…

என் கூட பிறந்த அண்ணா மணிச்சந்த்.. அவர் பள்ளிப்படிப்பு முடிச்சதும் வியாபரத்துல தான் ஆர்வம் னு சொல்லிட்டு சென்னைல அவர் நண்பரொட சேர்ந்து இங்க கடைல வேலை பார்த்துட்டு இருந்தார்….சிவகாசி வேலைய விட்டுட்டு, சென்னை வந்துட்ட அப்பா, அண்ணா எல்லோருமாக புனே கு வந்து அங்கே அவர்கள் சொன்ன அவுங்களோட தூரத்து சொந்தமான ஹர்ஷாக்கு என்னை கல்யாணம் பண்ணி வச்சாங்க.. ஹர்ஷா மிலிட்டரி ல இருந்தார்..பார்டர் ல பாதுகாப்பு பணி..என்னையும் அவரோடவே இந்தியாவோட எல்லைப்பகுதிக்கு கூட்டிட்டு போய்ட்டார்….எல்லாமே ரொம்ப வேகமா நடந்து முடிஞ்சுட்டது..

 

        என் கணவரான ஹர்ஷா……என் கண்ணீரை சரியா புரிஞ்சுகிட்டார்… என் அழுகை…. என் படிப்பு பறிபோனதுக்கு…நல்ல நட்பு கொச்சை படுத்த பட்டதற்கு னு…அவர் புரிஞ்சுகிட்டார்..என்னை நம்பினார்….பார்க்க அவ்ளோ முரட்டுத் தனமா இருந்த அவர் மனசு ரொம்பவே மெல்லியது.இனிமையானது….அதுல எனக்கு னு இடம் கொடுத்து …காதல்னா என்னனு காட்டினார்…பிறந்த போதே தாயை இழந்த எனக்கு அன்புனா என்னனு காட்டினார்….மூன்று வருடங்கள் அற்புதமான காதல் வாழ்க்கை வாழ்ந்த எங்களுக்கு , குழந்தை பாக்கியம் இல்லங்குற குறை தவிர எதுவும் இல்லாம நாங்க சந்தோஷமா தான் இருந்தோம்.. ..எங்க வாழ்க்கைய புரட்டி போட அந்த யுத்தம் வந்தது..எல்லை பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியான அவர் அவருக்கு வந்த ஆணைப்படி பார்டர் தாண்டி போய் யுத்தத்தில் ஈடுபட்டார்….அதுக்கு அப்புறம் அவரை யாரும் பார்க்கலை..சிறைபிடிக்க பட்டாரா..கொல்லப்பட்டாரானு சரியான தகவல் இல்லை…”,எங்கோ வெறித்து நோக்கியவாறு பேசிக் கொண்டிருந்தவரின் கண்களில் இருந்து கண்ணீர்…சிறு அருவி என இறங்கியது….

 

“அவருக்கு என்ன ஆச்சு னு குழப்பமான நிலைல இருந்த என்னை பார்க்கவந்த என் அப்பா, என் நிலை பார்த்து , அங்கே தனியே விட முடியாம தன்னோட சென்னைக்கு கூட்டிட்டு வந்தார். திருமணம் ஆகி கணவனை இழந்த நான், குடும்பம் கல்யாணத்துல பெரிதா ஆர்வம் இல்லாம , தொழில் தவிர ஏதும் யோசிக்காத அண்ணனின் நிலை பார்த்து மிகுந்த வருத்தத்தில் இருந்தவர், ஹார்ட் அட்டாக் ல இரண்டே நிமிஷத்துல என்னை விட்டுட்டு போய்ட்டார். அண்ணனை சார்ந்து நிற்க விரும்பாத நான் பாதில

விட்டு போயிருந்த படிப்பை முடிக்க முயற்சி செய்ய, திரும்ப இங்க கல்லூரில உதவி கேட்டு வந்த போது நான் சௌந்தரை பார்த்தேன்.

 

என்னோட நிலைக்கு தானும் தன் குடும்பத்தினரும் தான் மறைமுககாரணம்னு அவன் ரொம்ப பீல் பண்ணினான். எங்க காலேஜ் மதுரை யூனிவேர்சிட்டி ல இருந்து சென்னைக்கு யூனிவேர்சிட்டி கு மாத்தப் போறதால..ஆறு மாதம் கழித்து தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் னும், அதும் 1 வருட படிப்பை முடிக்க வேண்டியது இருக்கும் னு சொன்ன போது, சௌந்தர் அதுவரை தன் பேக்டரி ல வேலை பார்க்க சொன்னான். மணிச்சந்த் பையா என்கிட்ட ஓட்டுதல் இல்லாம நடந்துகிட்ட தாலே, நானும், அவரை தொந்தரவு பண்ணாம அங்கே வேலை செய்யலாம்னு முடிவு செய்தேன்..அது மிக பெரிய அனர்த்தை …..எங்க ரெண்டு பேர் வாழ்க்கைலையும் ஏற்படுத்திருச்சு..”

 

சற்று தயங்கியவர், “ என்னுடைய உடல் பிரச்சனை, வாழ்க்கைக்கு குழப்பங்க்ளின் காரணமா மன்யு உருவாகி இருந்தது , நான்கு மாசத்துக்கு அப்புறம் தான் தெரிய வந்தது.எனக்கு இருந்த சோகம், குழப்பங்கள்ல நான் அதை தெரிஞ்சுக்கமாவே இருந்துருக்கேன். சாப்பிட மணமில்லாம, தலைசுற்றலா இருந்தது எனக்கு பெரிய விஷயமா தோணலை..கவனிச்சு சொல்ல தாயோ பெண்களோ பக்கத்தில் இல்லியே….” என்று விரக்தி புன்னங்கை பூத்தவர்,

 

      “ஆனா, என் குழந்தைய வச்சு என் நடத்தை மேலயும் என் மேலயும் திரும்ப சேறு வாரி பூசுவங்கன்னு நானோ சௌந்தரோ எதிர் பார்க்கவே இல்லை….

 

தவமிருந்த போது கிடைக்காத செல்வம், கைல கிடைச்ச வேளை, என் சொந்தங்கள் என்ன விட்டு போய்ருந்தது.. என் நட்பு என்னால அசிங்க பட்டு நின்னது..இதை கேள்வி பட்ட நான், என்னை ஒரு பொருட்டவே நினைக்காத என் அண்ணா மணிச்சந்த் கிட்டவே போயிரலாம்னு ங்க இருந்து கிளம்பிட்டேன், விஷயம் தெரிஞ்சு ரயில் நிலையத்திற்கு என்னை பார்க்க ஓடி வந்த சௌந்தர்ட்ட , என் கண்ணீர் தவிர எதுவும் கொடுக்க முடியாத, காட்டப் பிடிக்காத சூழல்ல அந்த இடத்தை விட்டு வந்தேன்..இனிமேலும் என் நட்பு அசிங்க படக்கூடாதுங்குற வைராக்கியம் எனக்கு..எங்க போறேன், என்ன செய்ய போறேன்னு எதுவும் அவனுக்கு நான் சொல்லலை..

 

என் அண்ணன் மணிச்சந்த் என்னை வா ன்னும் சொல்லலை, போன்னும் சொல்லலை. அவரோட இடத்துல என்னை இருக்க விட்டதே பெரிய விஷயம் னு , அடுத்து என்ன பண்ணனு யோசிச்சி போது, என் ஹர்ஷா தன் இறப்புக்கு அப்புறமும் எனக்கு துணையா வந்தார். என் படிப்பை முடிக்க, மேல் படிக்க தேவையான பொருள் அரசாங்கம் மூலமா என்னை தேடி வந்தது. மன்யு பிறந்தான், கல்லுக்குள் ஈரம் போல் பையா மனசுல அவன் மேல ஒரு பாசம். அடுத்து இங்கயே இருந்த தன் நண்பணின் வற்புறுத்தல்ல அவர் தங்கையைக் கல்யாணம் செய்துகிட்டார். எங்க அம்மா போலவே அந்த பெண்ணும் நித்யா பிறக்கும் போது அதிக ரத்தபோக்குநல பாதிக்க பட்டு இறந்து போய்ட்டா..நித்யா பிறந்தபோது அவளை என் கைல தான் கொடுத்தாங்க. 

 

அவளை நானே வளர்க்க ஆரம்பிச்சேன், அவ அம்மான்னு கூப்பிட்டது என்னை தான். மன்யு நித்யா ரெண்டு பேருமே என் பிள்ளைகள்..அவுங்க முன்னேற்றம் வாழ்க்கையே என் வாழ்வுன்னு நான் முடிவு செய்து, தெளிந்த நீரோடை மாதிரி போய்ட்டு இருக்கேன்.”

 

பெருமூச்சு விட்டவர், “நான் சொன்னது எல்லாமே என் ஹர்ஷா மேல ஆணையா உண்மை..எதும் சந்தேகம் இருந்த மன்யு பெர்த் சர்டிபிகேட்,

DNA டெஸ்ட் எடுத்து பார்த்துக்கோங்க..அது..….இனியாவது என் நண்பன் நிம்மதியா வாழட்டும்குறதுக்காக…” என்றார் உணர்ச்சியே இல்லாத குரலில் …எங்கோ பார்த்தவராய்.

 

பதறிப்போய் அவரின் கைகளை பற்றியவன், “ என் தந்தை தவறு செய்திருந்தால் அதை சீர் செய்யத்தான் நான் உங்களை தேடினேன் அம்மா….என் தாய் தந்தையின் மனங்களை அலைகழித்த விஷயங்களை இனி சரி செய்ய முடியும் னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு…உங்க பெண் என் உயிரை மீட்டு கொடுத்தாள், நீங்க என் மன அமைதிய மீட்டு கொடுத்துருக்கீங்க…”

 

எனவும் கண்களில் கேள்வியோடு அவனை ஆச்சர்யமாக பார்த்தார் கௌரி..

 

          கம்பீர புன்னகை சிந்தியவன்,”இனி ஒரு முறை உங்களுக்கு மன்யு நித்யா தவிர யாரும் இல்லை னு நீங்க நினைக்கவோ சொல்லவோ கூடாது..உங்க இழந்த நட்பை மீண்டும் உங்க கிட்ட கூட்டிட்டு வருவேன்..ஒரு பிள்ளையா எப்பவும் உங்களுக்கு துணை இருப்பேன் “ எனவும் கௌரியின் கண்கள் கலங்கியது..

 

நான் கிளம்புறேன் மா என்றவனிடம் கண்களில் நீரும் உதட்டில் புன்னகையுமாய் விடை கொடுத்தார் கௌரி ஹர்ஷா அகர்வால்.

 

*************************

 

பல வருடங்களாக மனதின் ஒரு மூலையில் நின்று துயரம் கொள்ள செய்த வேதனை, தன் அன்னையின் மனதை கரையானாய் அரித்த வாதனையின் மூலகாரணம், தனக்கும் செல்லக்கிளிக்கும் இடையில் இரும்புதிரையாய் நின்ற தாய் மாமனின் தந்தை பற்றிய குற்றச்சாட்டு..அத்தனையும் கதிரவனைக் கண்ட பனி போல் கரைந்து மறைந்து ஓடியதும்….தானும் காற்றிலே மிதப்பவன் போல் உணர்ந்தான் வனராஜன். 

 

அதே உற்சாகத்தோடு, தன் செல்லகிளியை பார்க்க விரைந்தோடி சென்றவனை , காண அவனின் கிளி வாசலில் நிற்கவில்லை..

 

அழைத்து ஆள் அனுப்பிய பின்பும் பத்து நிமிடங்கள் கழித்து, கழுவி துடைத்த முகத்துடன் , அவன் சொன்ன ஆடை அணியாமல் ஏதோ ஒரு ஆடையை அணிந்து பதம் நோகுமோ என அஞ்சியவள் போல மெதுவாக, தலைகுனிந்து வந்தவளை பார்த்த வனராஜனின் கண்கள் கூர்மையுற்று , அவளின் உணர்ச்சி துடைத்த முகத்தை உற்று நோக்கின.

 

“ வெளியே சாப்பிட போகலாம்னு சொன்னேனே..ஏன் இப்படி இருக்க???.சரி இதுவே நல்ல தான் இருக்கு.. வா போகலாம்.” என்றான். செல்லக்கிளியோ நிமிர்ந்து பாராமல்,

 

“இல்லை… நான் எங்கேயும் வரலை எனக்கு ஆறு மணி பஸ் ல அப்பா டிக்கெட் போட்ருக்காங்க.. நான் ஊருக்கு போறேன்..” என்றதும், யோசனையாய் அவளை உற்று நோக்கியவாறே,

 

“என்ன ஆச்சு…ஏதும் பிரச்னையா ..நேத்து நடந்தது நீ சொல்லிட்டியா..என்ன…” என்று கேட்டான்.

 

எங்கோ பார்த்த படி நிதானமாய் சொன்னாள்,” நாளைக்கு காலைல எனக்கு நிச்சயதார்த்தமாம்……”

 

 

சேதி 22

**********

 

           அன்றிலிருந்து இரண்டு நாட்கள் முன்பு….. செல்லக்கிளியின் வீடு…

 

சென்னையிலிருந்து சிகிச்சை முடிந்து திரும்பி இருந்த,

ஈஸ்வரியின் அன்னையை பார்க்க போய்விட்டு வந்ததில் இருந்து மிகுந்த யோசனையுடன் இருந்தார் கற்பகவள்ளி…… தன் மாமியாரான முத்துநாச்சியார்க் கு அழைத்து ப் பேசியவர், சற்றே தெளிந்தவராய் , தன் கணவர் வேல் ராஜனுக்கு அழைத்தார்.

 

“மதியம் சாப்பிட வீட்டுக்கு தானே வரீக” என்ற கேள்வியில், ‘வீட்டுக்கு வாங்க’ என்ற அழைப்பு தொக்கி நின்றது..

 

“ என்ன விசேசம் இன்னிக்கு..… இங்கன சோலி நிறையா கிடக்கு..”

 

சற்று தயங்கியவாறு

“..ஒரு முக்கியமான விஷயம் பேசணும்..அதான்”

 

“ம்ம் வேலைய ஒதுக்கிட்டு வர கொஞ்சம் நேரமாகிடும் ….ரெண்டு மணிக்கு வாறேன்”

 

எனவும் சந்தோஷத்துடன் அலைபேசி இணைப்பை நிறுத்தினார். 

 

சொன்னது போல வந்து நின்ற கணவரைப் பார்த்ததும்…எல்லாமே சரியான திசையில் நகர்வதாக அவர் மனதிற்குப் பட்டது.

 

முதலில் பசியாற உணவை எடுத்தது வைத்தவர்,அவர் சாப்பிட்டு முடித்த பின்பும் ஏதோ யோசனையில் இருக்க,”என்னத்த போட்டு கொழப்பிக்கிட்டு இருக்குற வள்ளி..சீக்கிரம் சொல்லு நான் மில்லுக்கு கிளம்பனும்..”

 

என்று கேட்கவும் வாய் பூட்டு அவிழ்ந்தவராய், “ இன்னிக்கு நம்ம தெருவுல இருக்காகளே ஈஸ்வரி அம்மா சந்திராக்கா, அதான் பேங்க் மானேஜர் பாலமுருகன் சாரு சம்சாரம் அவுகளை பாக்க போயிருந்தேன். 

 

       அவுகளுக்கு கர்ப்பபையில கட்டி இருந்துச்சு…அதை மருத பெரிய ஆஸ்பத்ரில வச்சு ஆபரேஷன் பண்ணினாக..அப்புறம் அது புத்துநோய் கட்டினு சொன்னதும் மேல நல்லா பாக்கச்சென்னைக்கு போனாக..அங்க நம்ம செல்லமும் அவ கூட படிக்க ஒரு வடகத்தி பொண்ணும் அங்க புத்துநோய்க்குன்னு பெசல் ஆஸ்பத்திரி இருக்காமே, அந்த ஆஸ்பத்திரி ல…. பாக்க…. வைக்க, ரொம்ப உதவி பண்ணிருக்குறாங்க..

 

அந்த வடகத்தி பொண்ணு கூட பெரிய கிளாஸ் ல படிச்ச பிள்ளைக அங்கன கேன்சர் ஆசுபத்ரில்ல டாக்டர் ஆ இருக்காகளாம், அதுனால அது கூடவே வந்து,இருந்து னு ரொம்ப உதவி பண்ணுச்சாம்..”

 

“ சரி…. இப்போ அந்த அக்கா நல்லா இருக்காங்க தானே..”

 

“எங்க தலை முடியெல்லாம் கொட்டுதாம், அரை ஆளா இருக்காங்க…. ஆபரேசன் பண்ணும் போதே ரொம்ப பயந்தாக…புத்து நோய்.கட்டினதும் இன்னமும்..ஏற்கனவே பிள்ளைகள இங்கன விட்டுட்டு ஆளுக்கு ஒரு பக்கமா இருந்தாக.. அவுக அம்மா வீட்டு ல கூட பிறந்தவுகல வச்சு தா வளர்த்தங்க..இப்போ தங்கச்சி தம்பி எல்லாம் அவுக அவுக பிள்ள குட்டினு ஆகி போச்சுது..இன்னமும் தொந்தரவு கொடுக்கணுமானு ஒரே விசனம்..

கடைசி பையன் நம்ம சரவணாவிட ஒரு வயசு தா சின்னவன்..

 

இப்போ வீட்ல ஒரு விசேஷம் நடந்த நல்லாருக்கும் னு ஜோசியரு சொன்னாராம்..பையனுக்கு…. அதன் சென்னைல வேலை பாக்குறானே… அவனுக்கு கல்யானம் பண்ணனும்னு அந்த அக்கா மனசுல தோனி போச்சுது..

 

கலியாண பேச்சு ஆரம்பிச்சதுக்கு வேணாம் வேணாம் னு சொன்ன பையன் …” சற்று தயகிவாறு கணவர் முகத்தை பார்த்தவர், “ நம்ம செல்லத்தனா கட்டிக்குடுறேன்னு சொன்னானாம்….”எனவும் திடுக்கிட்டு,கோபத்துடன் பார்த்தார் வேல் ராஜன். மன்னிப்பு கோரும் முக பாவனையுடன் தயங்கியவாறு,

 

“அந்த அக்கா அதை சொல்லி கண்ணுல தண்ணீர்யோட பொண்ணு கேட்டாக…சின்னவயசுல இருந்து நம்மை பொண்ணை பார்த்து அவுங்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்….ஈஸ்வரியும் செல்லமும் சோட்டுக்கார பிள்ளைக..மதனி நத்தனாரா ஆனாலும்…எப்பவும் ஒத்துமையா இருப்பாங்க…கடைசி பையனையும் நல்ல பார்த்துகிடுவாகனு அவுக நினைக்குறாக..

 

நாம மில்லு கட்டும் போது அந்த அண்ணாச்சி…. ஈஸ்வரி அப்பா நிறைய உதவி பண்ணிருக்காங்க …அவுக பேங்குல இருந்து நிறைய சலுகை பண்ணி கொடுத்தாங்க தான் இருபத்துஅஞ்சு லட்சம் வாங்கி கொடுத்தா சொன்னீகளே..நாம அடுத்து வட்டி முதலோட அந்த கடனை அடைச்சுட்டோம்..ஆனாலும் சமயத்துல உதவுனாகளே… அந்த நன்றி, நினைப்பும் வந்துருச்சு..

 

அவுக ஒரு உதவினு நம்ம கிட்ட இப்போ கேக்காக..

 

அந்த பையனும் நல்ல பையன்..பாக்கவும் லட்சணம்..எந்த கெட்ட பழக்கமும் கிடையாது..நம்ம கண்ணு முன்னாடி வளர்ந்தவன்..யார் வம்புதும்புக்கும் போனதில்லை… நல்ல படிப்பு படிச்சுட்டு பெரிய வேலை இருக்கான்..மாசமானா லட்ச கணக்குல சம்பாதிக்கறான்..இப்பமே சென்னை ல வீடு வாங்கிட்டானாம்…..அவுக அம்மாக்கு எல்லா ஆசுபத்திரி செலவும் அவன்தான் பாக்குறானாம்..ரொம்ப நல்ல குணமும் கூட….”

 

“ அதெல்லாம் சரி… இருக்கட்டும்… அதுக்கு…..அவுக அவசரத்துக்கு நம்ம புள்ளைய கட்டி வைக்க சொல்றியா..செல்லம் சின்னபொண்ணு..சாதாரண படிப்பில்ல….டாக்டர் படிப்பு..ஆசைஅசையா சேர்ந்துருக்கு……அது படிக்குமா..கல்யானம் பண்ணி குடும்பத்தை பாக்குமா..”

 

“இல்லைங்க…. அந்த பையன் வெளிநாடு போற ஆர்டர் வந்துறுக்காம்…அவுக அம்மா சிகிச்சைக்காக மூணு மாசம் நிறுத்தி வச்சுருக்கானாம்…போனா 4 வருஷம் ஆகிடுமாம்.. அதான்.. இப்போ நிச்சயம் மாதிரி வச்சுட்டு..கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணம் பண்ணிட்டு ….அப்புறமும்… படிப்பு முடிக்குற வரை காத்திருக்கேன்..மேல் படிப்பு வெளிநாட்டில் கூட படிக்க வைக்குறேன் னு அந்த பையன் சொல்லுறான் போல..அவுங்களும் தயங்கி தயங்கி தான் கேட்டாங்க..

 

அவுகளும் பொண்ணை பெத்தவுக..அவுக பொண்ணு வயசு தானே நம்ம செல்லத்துக்கு…இந்த நேரத்துல கேக்குறோம்னு சங்கடப்பட்டுகிட்டே தான் கேட்டாக…பையன் பிடிவாதமா சொல்லிட்டானாம்…

 

வேற எந்த பெண்ணையும் கட்ட மாட்டேன்னு…அவுக சென்னைக்கு போற முன்னமே…நம்ம பொண்ணை பத்தி…கலையானம் அப்படி.. பேசிட்டு போனதும்…அங்கன ஆசுபத்திரில அந்த அக்காக்கு புத்துநோய் உடம்புல வேற எங்கேயும் பரவலை.. அப்படினு டெஸ்ட் முடிவு வந்துச்சாம்…..நம்ம பொண்ண பேசுன ராசி… அப்படினு எல்லாம் நினைக்குறாங்க..அவுக வீட்ல…

 

    அந்தக்கா மனசுல இன்னும் பயம் இருக்கு.. அவுங்களுக்கு ஒண்ணுனா மூணு பிள்ளைகளை தனியா விட போறோமின்னு அவுக தவிப்பு…. ஆதங்கம். ஒரு தாயா எனக்கு புரியுதுங்க…

 

பையன் ,குடும்பம். எல்லாம் நமக்கு நல்லா தெரிஞ்சவுங்க..நமக்கு ஒரு பிரச்னைல உதவுனவுக..அவுக கூட பிறந்தவுக எல்லோருமே நம்மளுக்கு தெரியும் …அங்கே போனா நம்ம செல்லம் ராசாத்தி மாதிரி இருப்பா..

 

நீங்க என்ன நினைக்குறீங்க..”, யோசனையுடன் நெற்றியை வருடியவர்,

 

 

                “ பதினெட்டு வயசு தா ஆகுது அதுக்குள்ள நம்மபிள்ளை ய கல்யாணம் காட்சின்னு சிரமப்படுத்தனுமா!!!”

 

             “அதுல என்னங்க சிரமம்..அவ நல்லா படிகரவ…அவ படிப்புக்கு இடைஞ்சல் வராம அவுக பார்த்துக்குறேன்னு சொல்ராங்க..இப்போதைக்கு நிச்சியம் மட்டும் வச்சுகிடலாம், அவன் வெளிநாடு போய் வந்ததும் கல்யாணம் வச்சுகிடலாம்னு சொல்ராங்க..நாமா தேடுனா கூட இது மாதிரி பையன், குடும்பம் கிடைக்குறது கஷ்டம்..

அத்தட்ட கூட கேட்டேன்..அவுங்களுக்கு ரொம்ப சந்தோசம்.. …இனி நீங்க தான் சொல்லனும..

நாளைக்கு உங்கள பார்க்க ஈஸ்வரி அப்பா அம்மா வராகளாம்..இங்க நம்ம வீட்டுக்கு….”

 

எனவும் யோசனையாய் அமர்ந்து இருந்தவர்..” சரி யோசிப்போம்…” என்று விட்டு மில்லுக்கு கிளம்பினார்..

 

யோசித்தவருக்கு மனைவி கூறிய சாதகங்கள் சரியாக படவே..மறுநாள் வந்து பெண் கேட்டவர்களிடம் மறுத்து ஏதும் கூறவில்லை…..

 

   அடுத்து புரட்டாசி பிறப்பதால்..இந்த வாரத்திலேயே பூ வைத்து உறுதி செய்து கொள்ளுவதாகவும், அருகே இருந்த மண்டபத்தில் சிறியதாக..இரு வீட்டு முக்கிய உறவினர்களை மட்டும் வைத்து நிச்சயம் செய்து விடலாம் என்றும் திருமணம் பிறகு ஒரு வருடத்திற்குள் செய்யலாம்..என்றும் சொன்னார்கள்.

 

    செல்லக்கிளியின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்க எடுத்த போது, இப்போது செய்வது சரிதான், இல்லாவிட்டால் எட்டு வருடங்கள் கழித்து தான் திருமண யோகம் வரும் என்று பார்த்தவர் கூறிவிட்டு,பெண்ணுக்கு சிறு சிறு கண்டங்கள், மனபோராட்டங்கள் இருக்கும்…திருமணம் பேசுவது நல்லதிற்கு தான் எனவும்…..

 

’சரி தான் மாலை பொருத்தம் வந்து விட்டால் எல்லாம் தானாக நடக்கும்’ என்று சொல்வது உண்மைதான் போலும் என்று எண்ணியவராய்.மகளிடம் பேச நினைத்து அழைக்கையில் அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது..புயல்.. மழை காரணமாக..அவளின் தோழி என்னும் சரியாக கிடைக்கவில்லை..எனவே மறுநாள் காலையில் விடுதி எண்ணுக்கு அழைத்து சுருக்கமாக விவரம் கூறியவர்…கிளம்ப சொல்லி பணித்துவிட்டு…நிச்சயதார்த்த ஏற்பாடுகளில் இறங்கினார் வேல் ராஜன்…

 

******************

 

       

 

             காற்றில் பறந்து பறந்து மேலேறிய பட்டம், நூலறுப்பட்டதும்…சுழன்று…தள்ளாடி..பறக்கமுயன்று..இயலாமல் தரை இறங்குவது போல்…..

வனராஜனின் மனமும் தரை இறங்கியது..ம்ஹூம்…இறக்கப்பட்டது..

 

‘என்ன விளையாடுகிறாயா’ என்பது போல் முறைத்தவன்….வாயினால் கேட்கவும் செய்தான்,

 

அதற்கு பதில் ஏதும் சொல்லாதவளாய் அமைதியாய் தலை குனிந்தவள், “நான் போறேன்…” என்று திரும்ப, வேகமாய் சென்று வழி மறித்து அவள் முன் நின்றான்.

 

“ஒழுங்கா சொல்லிட்டு போ..என்ன நிச்சயதார்த்தம் யார் கூட!!..”

 

தலைகுனிந்தவள் நிமிர்ந்தால் தானே…

 

“ஈஸ்வரி அண்ணன்… அப்பா அம்மா முடிவு பண்ணிருக்குறாங்க..”

 

“நீ…….” என்றான் எரிமலை குழம்பாய் சுடும் உஷ்ணத்துடன் ஒற்றை எழுத்தை கடுப்புடன் துப்பினான்..

 

செல்லக்கிளி

   நிமிரவே இல்லியே…முனங்கலாய் வார்த்தைகள் வந்தன.

 

 

“எங்க அம்மா அய்யா என்ன சொல்றாங்களோ அதான்…”

 

என்றவள் அவனைச்சுற்றி கொண்டு முன்னே செல்லப் போக ..தன்னை கடக்க முயன்றவளின் மேல்புற கையை பற்றி நிறுத்தினான்.

 

உதற முயன்று முடியாமல், தன் கையால் விலக்க முயல,போராட்டத்தில், அவன் கையில் ஒற்றை நீர்த்துளி பட்டு வழிந்தது…

 

அவளின் விலக்க முயன்ற கையையும் இன்னொரு கையால் தடுத்து நிறுத்தியவன்கையில் பட்ட ஈரத்தை உணர்ந்து , வலது கையால் அவளின் முகத்தை நிமிர்த்த கார்காலமேகமாய் கண்ணீரை வடித்துக் கொண்டிருந்தன அவள் விழிகள்..

துடித்து போனான் வனராஜன்..

 

     அவளின் கன்னத்தோடு சேர்த்து கைவைத்து தலையை ப் பற்றி இழுத்தவன் ,தன் மார்பில் சாய்த்து க் கொண்டான்.

இன்னொரு கையையும் அவளின் முதுகுப்புறமாக செலுத்தியவன்,நகர விடாமல் அழுந்தப் பற்றிக் கொண்டான்..

 

“ அழாதே செல்லம்மா, என்னாலே பார்க்க முடியல..

      உனக்கு பிடிக்காதது..ஏதும் நடக்க விட மாட்டேன் …. நம்பு…படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பண்ண நினைக்குறாங்களே… பெரியவுங்க யாரும் ஒன்னும் சொல்லலையா..ஊருக்கு போய் இருக்கு இந்த ஆச்சி தாத்தா….எல்லோருக்கும்…”

 

எனவும் மௌனமாக கண்ணீர் வடித்தாள் செல்லக்கிளி.. கண்ணை துடைத்து விட்டவன் மெதுவாக நடத்தி..அருகிலிருந்த கல் இருக்கையில் அமர வைத்தான்..அழுகையை அடக்கியவள் மெதுவான குரலில்,

 

“ அந்த அத்தைக்கு கான்சர் இருந்தது..அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருந்தாங்க…இப்போ நல்லாகிடுச்சு…. ஈஸ்வரி அண்ணனுக்கு onsite வந்துருக்காம்…அதுனால நிச்சயதார்த்தம் மட்டும் வைக்கணும் னு அவுங்க சொல்லிருக்காங்க.. வெளிநாடு போறவுங்க திரும்பி வர மூனிலிருந்து நாலு வருஷம் ஆகுமாம்..அம்மா அய்யவும் ,படிப்புக்கு பாதிப்பு இல்லை னதும் சரினு சொல்லிட்டாங்க போல….” என்றதும் ,

 

யோசனையாய் அவளை ப் பார்த்தவன், “ அப்போ… உன் படிப்புக்கு பாதிப்பு வராது னு தெரிஞ்சுருச்சு..… அப்பறம் எதுக்கு இந்த அழுகை…” எனவும் கோபமாய் நிமிர்ந்தாள்.. விலகி எழுந்து நடக்க தலைப்பட, எதிர்பார்த்தவனாய்…, உடகர்ந்து இருந்தவாறே பின்புறமாக அவளின் மேல கைகளையும் பற்றி இழுத்ததும் , அவனின் மடியில் விழுந்து மார்பில் தஞ்சமானது கிளி..

 

கோபத்துடன் இரண்டு முழங்கைகளால் அவனின் விலாவில் குத்தியவள் அவன் பிடி தளர்ந்ததும் எழுந்து நடந்தாள்.. பின்னொடு சென்றவன் குறும்புப் புன்னகையுடன், “ எந்த பஸ் ல டிக்கெட் போட்ருக்கு…” என்று கேட்டான். நின்று முறைத்தவள், விழுங்குவதுபோல் பார்த்த அவனின் உரிமைப் பார்வை கண்டு, வெட்கம் வர,தன்னையறியாமல் முகம் சிவக்க,

 

“சொல்ல மாட்டேன்..” என்றுவிட்டு தொடர்ந்து நடந்தாள்… அவள்உடன் நடந்தவாறே தன் அலைபேசியை எடுத்தவன், “அண்ணே, நான் நாயக் பயர் ஒர்க்ஸ் வனராஜன்..எங்க மாமா வேலராஜன் சென்னை டூ வேம்பகோட்டை டிக்கட் சொல்லிருக்காங்க..எனக்கும் ஒரு டிக்கெட் வேணும் …என்னாது….ஏசி பெர்த் சேர்ந்து ரெண்டு இருக்கா..” என்று விட்டு அவளை பார்த்தவன் அவள் முறைத்ததும், குறும்பு புன்னகையை தொடர்ந்தவாறு,.. வேணாம். அந்த பேர்த்துக்கு கீழ இருக்குற seater டிக்கெட்…இல்லாட்டி பக்கத்துல சிங்கிள் பெர்த் போடுங்க…” என்று விட்டு அலைபேசி இணைப்பைத் துண்டித்தவன், அவளை பார்க்க,

 

“கூடவா வர போறீங்க…..” ஆமென்று தலை அசைத்தவன், அவளை விழுங்கும் பார்வையைத் தொடர்ந்தபடி,

 

“ம்ம்ம் வாழ்க்கை முழுசுக்கும்…”

 

…..உதட்டைக கடித்தவள் முகத்தில் வெட்கம் வந்தது…மறைத்தவளாய் சிறு புன்னகையுடன் விடுத்திக்குள் நுழைய போனவளின் இரு விரல்களைப்ப் பற்றியவுடன், அப்படியே நின்றாள், அவன் முகம் பார்க்காமல் எதிர்புறமாய் திரும்பியபடி,

 

“நாளைக்கு நிச்சயதார்த்தம்..உனக்கும் எனக்கும் னு நான் பண்ணினா …இந்த அழகு முகத்துல சிரிப்பு வருமா….இல்ல அப்பத மாதிரி கண்ணுல தண்ணி வச்சுப்பியா…” என்று மென்மையாக கேட்கவும், திரும்பி அவனைப் பார்த்தவள், கண்களில் மலர்ச்சியும், உதட்டில் அழகு புன்னகையும் பதிலாக பரிசளித்தாள்..

 

பின் மெதுவாகவே அவன் விரல்களில் இருந்து தான் விரல்களை உருவிக் கொண்டவள்,

 

“இதுக்கு மேல நீங்க வர முடியாது..” எனவும், சிரித்தவாறு,” உன் மனசுக்குள்ள வந்துட்டேனே.. இதுக்குள்ள வந்தா என்ன வராட்டி என்ன..”,என்றவனின் குரலில் அப்படி ஒரு கர்வம்..

 

“சரி ரெடியா இரு நான் 5 மணிக்கு வரேன்..சேர்ந்தே கோயம்பேடு போயிரலாம்..” என்றவன் திரும்பி நடக்க, கால்களுக்கு அடியில் மேகங்கள் வந்து குவிய,பதம் மண்ணில் படாமல் பறப்பது போன்ற உணர்வு..

 

மனதிற்குள் ரஹமான் பாட ஆரம்பித்தார்..

 

‘நீ……..ல மழை சாரல்…..

தென்றல் நெசவு நடத்தும் இடம்

நீ……..ல மழை சாரல்…..

 

 வானம் குனிவதிலும்….

மண்ணை தொடுவதிலும்….

காதல் அறிந்திருந்தேன்

 

கானம் குறைந்துவரும்

மௌன திருவெளியில்

ஒரு ஞானம் வளர்த்ருந்தேன்..

 

இதயம் எரித்திருந்தேன்

நான் இயற்கையில்

திளைத்திருந்தேன்…..

 

சிட்டு குருவி ஒன்று…

சினேக பார்வை கொண்டு..

வட்ட பாறையின் மேல்

என்னை வா.. வா. என்றது….

 

 

 கிச்சு கிச் என்றது

கிட்ட வா என்றது…

 

பேச்சு ஏதுமின்றி

பிரியமா.. என்றது..

 

 ஒற்றை சிறு குருவி

நடத்தும் ஓரங்க நாடகத்தில்

சற்றே திளைத்திருந்தேன்

 

 கிச்சு கிச் என்றது

கிட்ட வா என்றது

 

பேச்சு ஏதுமின்றி

பிரியமா என்றது…..’

 

*******************************

 

 

சேதி 23

*********

 

          வனராஜன் அருகில் இருந்தவரை தோன்றாத எண்ணங்கள் எல்லாம் அவன் அந்த புறமாக நகர்ந்ததும் தோன்ற ஆரம்பித்து விட்டன செல்லக்கிளிக்கு.

 

 

‘இவுக பாட்டுக்கு… நாளைக்கு நிச்சயம்… என்னோடனு சொல்லிட்டு போறாகளே.. அவுக அய்யா,ஐயாம்மா பத்தின நினைப்பு இல்லியே…எங்க அய்யா அம்மாட்ட என்ன சொல்ல போறாக!! காதலிக்கிறோமினா…அய்யயோ…..” ,என்று எண்ணிப் பதட்டமடைந்தாள்..

 

காதல்…..

இந்த வார்த்தையை க் கேட்டாலோ, நினைத்தாலோ உடலில் பரவும் பதட்டம் பயம் இப்போதும் அவளை தாக்கியது..

 

     அய்யா தம்பி அருகில் கூட நெருங்கி அமராதவள், வனராஜன் அருகில் இயல்பாய் இருந்தது எப்படி… அவனின் அணைப்பில் அடங்குவதும், அவன் மடியில் உறங்கியதும் எப்படி..இந்த இயல்பும், உரிமை உணர்வும் தான் காதலா..

 

    பூங்காவனத்துடன் நிச்சயம் என்றதும் கலங்கிய மனம், அவனுடன் நிச்சயம் என்றதும் மலர்ந்து மகிழ்ந்தது அந்த காதல் எனும் மயக்கும் உணர்வினாலா!!!! நான் கண்ணத்தானை காதலிக்கிறேனா!!!

 

 

          அப்படி அவன் அங்கு வந்து எல்லோர் முன்பும் சொல்லிவிட்டால், அய்யா, அம்மாவை….வந்திருக்கும் உறவினர்களை எப்படி எதிர்க்கொள்ளப் போகிறோம்..

 

   நாளை என்ன நடக்கும்? என்ன செய்ய போகிறேன்!!அவன் வா என்று கூப்பிட்டால் போய்விட முடியுமா?? மீண்டும் கண்ணீர் வர ஆரம்பித்தது…

    

பல்வேறு குழப்பங்களுடன் தன் பயணப்பையை அடுக்கி கொண்டிருந்தாள். திவ்யபாரதி வந்ததும், அவசரமாக ஊருக்கு செல்வதாக கூறியவள்,எதற்கு என்று கேட்டவளிடம் ,பதில் கூறாமல், இரண்டு நாட்கள் விடுமுறை சொல்லிவிடும்படி மெதுவான குரலில் கூறினாள்.

 

 சொன்ன நேரத்திற்கு முன்பாகவே வந்த வனராஜன், வரவேற்பில் காத்திருந்தான். பயணப்பையை சுமந்த படி வந்தவள், முகத்தில் இருந்த குழப்பம் பார்த்து, யோசனையுடன் சுருங்கின அவனின் விழிகள்.

 

அவளிடமிருந்து பையை வாங்கியவன்,அமைதியாய் நடந்தான் வாகனத்தை நோக்கி.

 

‘என்ன குண்டு போடப் போறா தெரியலையே..முகமே சரியில்லையே…’ என்று எண்ணி காதலனின் முதல் தகுதியான… முகத்தை படித்து காரியமாற்றும் பணியை செவ்வன செய்து கொண்டிருந்தான்.

 

 அவனின் பின்னொடு வந்தவள், வாகனத்தில் ஏறி அமர்ந்து, ஜன்னல் புறமாக தள்ளி அமர்ந்தாள். பையை முன்னிருக்கையில் வைத்தவன், பின்னால்,அவள், ஜன்னலின் அருகே ,அந்த புறமாக திரும்பியபடி, கதவை ஒட்டியவாறு அமர்திருப்பதைப் பார்த்து சிரிப்பு வர மெதுவாக ஏறி,’ நீ வரலைனா.. நான் வந்துட்டு போறேன்’, என்று எண்ணியவனாய்..ஏறி நகர்ந்து அவளுக்கு மிக அருகில் அவளை ஒட்டியவாறு அமர்ந்தான். தேகம் விரைக்க, நகர்ந்தால் இன்னமும் நெருங்குவான் என்று புரிந்து அசையாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

 பயணத்திறக்காக இலகு உடையாக, ட்ராக் பேண்ட், பருத்திச் சட்டை அணிந்திருந்தவன்,

  தன் சட்டை பையிலிருந்து அலைபேசியை எடுத்து, அவள் கைப்பற்றி திருப்பி ,கைகளில் வைத்தான்,

 

அவன் கைப்பற்றியதும், லேசான அதிர்வுடன் பார்த்தவள், அலைபேசியைக் கண்டவுடன்,” என் போன்… வேலை செய்யுதா..” என்று கேட்டவாறு, அத்தனை இயக்கி பார்த்தாள்.

 

எடுத்தவுடன் திரையில் வந்த படத்தை பார்த்து இனிமையாய் அதிர்ந்தாள். அவளே தான். இரட்டை சடை, தாவணியில் இருந்தவள், பொங்கலை தொன்னைகளில் வைத்து கொண்டிருந்தாள்.

 

யோசனையுடன் சுருங்கிய முகம், நினைவு வந்து விட்டதில் விரிந்து மலர்ந்தது.

 

“ திருணாமலை ல எடுத்தீங்களா.. ..காட்டவே இல்ல… என்று சொல்லிய படி ரசித்து பார்த்தாள்.

 

“இது மட்டும் தானா..இன்னும் எடுத்தீங்களா” என்று கேட்டவாறு நிமர்ந்தவள் அவனின் கண்களில் தெரிந்த பாவனையில் வாயடைத்துப் போக, உதட்டை கடித்தவாறு, திரும்பிக் கொண்டாள்.

 

‘ ப்ப்பா… என்ன பார்வை இது…கிறங்குனாப்புல பார்த்தே சாச்சுப்புடுவாக போலவே ‘ என்று எண்ணியவளின் உள்ளம் பட படக்க ஆரம்பித்தது…

 

“ இன்னும் நிறைய இருக்கு…ஆனா அது உன்கிட்ட காட்ட முடியாது…” எனவும், திரும்பி பார்த்தாள்.

 

தன்கண்களை, தலையை சுட்டி க் கட்டியவன், அழகிய புன்னகையுடன்,”இங்க இருக்கு…” என்றான்.

 

மலைத்தவள்..அதை மறைத்தவளாய், அவன் புறம் சாய்ந்தாள், கிளி என்ன செய்யுது என்று விசித்திரமாய் பார்த்தவனை, தலை அசைத்து அருகில் வருமாறு அழைத்தாள்.

 

மெதுவாக குனிந்து, காதும் கன்னமும் அவள் உதட்டின் அருகே கொண்டு செல்ல, “ இந்த டயலாக், எந்த படத்திலிருந்து சுட்டீங்க……”, எனவும், புன்னகை மாறாமல்,இடது கையால் இருநாள் தாடியை வருடியவனாய், “ வனராஜனின் செல்லக்கிளி படத்துல…” என்றான்.

 

“மம்க்கும் ரொம்பத்தான்…” என்றவாறு, திரும்ப தன் வேலையை, வேடிக்கை பார்க்கும் வேலையை செய்தாள்.

 

“போன் எதுக்கு அவசரமா…சரிசெய்து….கொடுத்திருக்கு…. மாமாக்கு…அதான்..உங்க அய்யாக்கு போன் பண்ணி, இந்த நிச்சயத்துல இஷ்டமில்ல னு சொல்றதுக்கு..அவர் பாவம் இந்நேரம் நிறைய ஏற்பாடுகள் செய்திருப்பாரு… அந்த ஈஸ்வரி அண்ணன் கிட்டயும் சொல்லனுமில்ல…அவன் பேரு என்ன..எப்போ பாரு.. ஈஸ்வரி அண்ணன்.. நொண்ணன்.. னே சொல்லிட்டு இருக்க வேண்டியதா இருக்கு…”

 

“அய்யாக்கா…..” என்று மலைத்தவளிடம்,

“மாமா ட்ட சொல்ல பயமா இருந்தா, அத்தைட்ட…இல்லாட்டி உன் ப்ரண்ட் அந்த ஈஸ்வரிட்ட சொல்லு…” என்றான், அலட்டாமல் நிதானமாய்….

 

“……………..”

 

“ நாளைக்கு நான் வந்தேன்னா….நான் உன்னை விரும்புறேன்…நீயும் என்னை விரும்பரேன்னு சொல்லி தான் , நிச்சயத்தை நிறுத்த முடியும்….” என்றான் அவள் பயத்தின் நாடி பிடித்தவனாய்,

 

“ஆத்தி…….”

 

“பின்னே…என்ன செய்ய சொல்ற…..”,என்றான் நிதானமாய்,

 

“இல்ல…நிச்சயத்துல இஷ்டமில்ல….அப்படின்னு மட்டும் சொன்னா என்ன??”

 

“அப்போ என் மேல இஷ்டமில்லையா…”எனவும் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்….

 

“இப்போ நான் ஊருக்கு போய்ட்டேன்னா, அடுத்து எப்போ வருவேணு தெரியாது செல்லம்..இன்னும் ஒரு வருஷம் நான் அங்கே இருக்கணும், அதுக்கு அப்புறமும் என்னை அங்கே இருக்க சொல்லி சொல்லிட்டு இருக்குறாங்க…ஆனா நான் சரியா ரெண்டாவது வருஷம் திரும்பிடுவேன்.. இங்கே புதுசா காஸ் பேக்டரி கட்ட போறோம்..அதுக்காக…இடம் பார்த்து ரெஜிஸ்டர் பண்ண தான் இப்போ வந்துருக்குறது..நான் வந்தது நல்லதா போச்சு…உன் மனசும் எனக்கு தெரிஞ்சுருச்சு..…..இன்னும் பத்து நாள் ல கிளம்பனும் செல்லம்…..இந்த பிரச்சனை களை முடிச்சுட்டு போனா ரெண்டு பேருக்கும் நிம்மதி…ஆமா….. 

 

நீ பயப்படுற அளவு…நம்ம காதல் என்ன குத்தமா…”

 

மெதுவாக அவள் இடக்கரம் பற்றிக் கொண்டவன், “ நீ சொல்ற ஒத்த வார்த்தை, ஒரு செயல்ல தான் உன்…..நம்ம வாழ்க்கை இருக்கு….”எனவும், கண்கள் மூடிக்கொண்டவள், பற்றிய அவன் கரத்தை இறுக்கி பிடித்துக்கொண்டாள்…

 

பற்றியவாறே , மெதுவாக உயர்த்தி, பூச்செண்டாய் தெரிந்த மெல்லிய கரத்தின் ,புறத்தில், இதழை ஒற்றினான். 

 

அவளின் உடல் சிலிர்ப்பதும், ரோமக்கால்கள் குத்திட்டுக் கொள்வதைப் பார்த்தவன், தன்னை அடக்கி கொண்டு மெதுவாக, அவள் கரத்தை மடி மேல் வைத்து விட்டு, விலகி அமர்ந்தான்…

 

அதன் பின் பேருந்து நிலையத்தை அடைந்து ,தங்களின் இருக்கைகளை அடைந்தவர்கள் இடையே மௌனம் கோலோச்ச, நயனங்கள் மட்டும் அவ்வப்போது பேசிக்கொண்டன..

 

அதிகாலையில் இணைந்து இறங்கிய இருவரையும் பார்த்து வேல் ராஜன் ஒரு நிமிடம் திகைத்துப் போனார்.

 

 வெளிநாட்டு வாசத்தில் நிறம்கூடித் தெரிந்த மருமகனும், படிப்பின் களையில் பொலிவுகூடி தெரிந்த மகளும் அருகருகே நிற்பதைப் பார்த்தவர், ஒரு நிமிடம் திடுக்கிட்டார். 

 

“வா மாப்பிள்ளை”..என்றவர்..நாக்கை கடித்துக்கொண்டு, “ராஜா எப்படி இருக்க? நேத்தே வாரதா சொன்ன!! இன்னிக்கு தான் வறியா… செல்லத்துக்கு நிச்சயதார்த்தம் இன்னைக்கு இரவு ஏழு மணிக்கு…அழைக்க வீட்டுக்கு வரேன்..அவசியம் வரணும்…” எனவும்,

 

மந்தகாச புன்னகை சிந்தியவனாய்,” நான் இல்லாம உங்க பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்துருமா!!! வந்துருவேன் மாமா”, என்று விட்டு விடை பெற்றவன், வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த,தன் பெரிய பெரிய பயண பொதிகளை ,இறக்கிக் கொண்டிருந்த தன் வாகன ஓட்டியின் அருகே சென்றான். திரும்பி தன் தந்தையின் பின்சென்று கொண்டிருந்தவளை பார்க்க, தந்தையின் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நடந்து கொண்டிருந்தாள் அவனின் செல்லம்மா.

 

எப்போதும் போல் அவளின் நடையழகை லயித்துப் பார்த்தவன்,’அப்பா வந்ததும் கண்டுக்கிறாளா பாரு ‘ என்று செல்லமாய் கோபப்பட, 

 

சட்டென்று நின்றவள், தலை திருப்பி அவனைப் பார்த்து,புன்னகைத்து, போய்வருகிறேன் என்பதாய் தலை அசைத்தாள். 

 

அவ்வளவு தான்..இதழ்கள் சிரிப்பில் விரிய, மனம் துள்ள…. அங்கேயே ஒரு குத்தாட்டம் போடத்துடித்த தன் கால்களை அடக்கியவன், சிரித்தவாறே தானும் தலை அசைத்து விடை கொடுத்தான்.

      

        தம் வாகனத்தில் ஏறியவன், வீடு செல்ல அங்கே ஆவலாய் காத்து கொண்டிருந்தனர் அவனின் குடும்பத்தினர். இரண்டு வருடம் கழித்து பார்த்த பாட்டி வேதநாயகி, அவனை அணைத்துக் கொள்ள, அமைதியாக நின்றான். தாத்தா கோவிந்தராஜனின் பாதம் தொட, அவர் தடுத்து, கண்கள் பனிக்க அணைத்துக் கொண்டார்.

 

      தந்தையின் கண்களில் தெரிந்த பெருமிதம், தாயின் கண்களில் தெரிந்த பாசம், அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, 

     அனைவரின் பாச விசாரிப்புகளுக்கு பதில் கூறியவன், “டாட் மாம், ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என,

“குளிச்சுட்டு சாப்பிட்டு பேசலாம் கண்ணா…” என்ற தாயார், சற்று நேரத்தில், அவன் அறைக்கு தேடி வந்தார். குளித்துவிட்டு தலை துவட்டி வந்தவனை ,பார்த்து,

 

“ கண்ணா….இன்னிக்கு செல்லத்துக்கு நிச்சயம் பண்ண போறாங்க…சாயங்காலம் ஏழு மணிக்கு…உன் மாமா இன்னும் கூப்பிட வரலை.கூப்பிட்டாலும் இங்க யாரும் வர மாட்டாக…..நல்ல வேளை நீ வந்துட்ட..சாயங்காலமா நாம ரெண்டு பேரும் போய்ட்டு வந்துருவோமா…”, அவரின் தோள் மீது கை வைத்து ,குனிந்து அவர் கங்களைப்பார்த்தபடி

 

“நிச்சயதர்த்தமா……..அது ..நடக்கும் இப்போ இல்ல….நீங்களும் டாட் ம் சொல்ற நேரத்துல…..நாள் ல”

எனவும் குழப்பமாய் பார்த்தார்..அவனின் புன்னகை கண்டு,

பின் புரிந்தவராய் லேசாய் அதிர்ந்தவர்,” என்ன கண்ணா.. முடிவே பண்ணிட்டியா!!!நான் சொன்னேனே…சரி வராது னு..”

 

“ இல்ல மாம்.. எனக்கு செல்லம் தான் . அவளுக்கு நான் தான்..இதுல மாத்தமே இல்ல….முதல்ல உங்க பிரச்சனை… அந்த பிரச்சனை பத்தி பேச தான் உங்களை கூப்பிட்டேன்…வாங்க கீழ போகலாம்..”

எனவும் கலங்கியவராய் , அவன் பின்னே நடந்தார் சொர்ணக்கிளி.

 

கீழே அலுவல் அறைக்குள் அன்றைய தினசரியை படித்து கொண்டிருந்த சௌந்தரராஜன், புன்னகையுடன் மகனை ஏறிட்டார்.

 

“நான் சென்னை ல கௌரி மா வ பார்த்டேன் டாட்…”

எனவும் சௌந்தரராஜனனும் சொர்ணக்கிளியும் அதிர்ந்து நின்றனர்..

 

****************

 

செல்லகிளியின் வீட்டில் ,தன் அலைபேசியை தொலைக்காட்சியில் இணைத்து, தன் கல்லூரியில் எடுத்த படங்கள், காணொளிக் காட்சிகளை, காட்டிக் கொண்டிருந்தாள் செல்லக்கிளி..

 

தன் அலைபேசியில் பேசியவாறே அங்கு வந்த வேல் ராஜன்,தற்செயலாக தொலைக்காட்சியின் ஒளித்திரையில் தெரிந்த பிம்பத்தை பார்த்து…மின்சாரம் தாக்கப் பட்டது போல் அதிர்ந்தார்..

 

கௌரி….என் அவர் சத்தமாய் சொல்லவும், செல்லக்கிளி ஆச்சரியமாய், அவரை திரும்பி பார்த்து, “அய்யா ,இவுங்களை எப்படி உங்களுக்கு தெரியும்..இவுங்க என் சீனியர். தேர்ட் இயர் படிக்குறாங்க..நித்ய கௌரி மேத்தா..” அதிர்ச்சி விலகதவராய்..

 

“ செல்லம் அந்த போனை கொடு நான் இப்பவே என் அக்கா வீட்டுக்கு போகணும் …” என்றார்..

 

அடுத்த பத்தாவது நிமிடம் வேதா மாளிகைக்குள் நுழைந்தார்.

 

அங்கே வழக்கம் போல் சோபா வில் இருந்த வேதநாயகி, தன்னை விடுத்து தன் மகன் பேரன் மருமகள் மூவரும் குடும்பமாக தனியே ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்புடன் இருந்தார்.

 

வேகமாக உள்ளே வந்த வேல் ராஜன், முகமன், போலி மரியாதை எல்லாம் துறந்து, “ எங்கே உங்க புள்ள…!!!” என்றார்..கோபமாய்..

 

வேதநாயகிக்கு.. பலவருடங்களுக்கு முன்பு பார்த்த வேல் ராஜன்…இதே ரௌத்ரத்துடன்..இதே போல் அவர் கேட்ட ஞாபகம் வந்தது..

 

“ என்னடப்பா…சத்தம் எல்லாம் பலமா இருக்கு!!எங்க வந்து யார் வீட்ல பேசுற..ஞாபகம் இருக்கா..”

 

“பணம் தவிர ஏதும் இல்லாத வீட்ல பேசுரேன்னு ஞாபகம் இருக்கு!!!கூப்பிடுங்க உங்க புள்ளைய…எங்க என் மருமகன்!!!” என்றார் எரிமலை போல் கொதித்து நின்று..

 

சத்தம் கேட்டு வனராஜன் வேகமாக வர, தாத்தா கோவிந்தராஜன் தங்கள் அறையிலிருந்து வெளிவர அனைவரும் ஹாலில் குழுமினர்.

 

பின்னோடு சொர்ணகிளியும் சௌந்தரராஜனும் வந்தனர்.

 

வனராஜனை பார்த்த வேலராஜன்,” மாப்பிள, இங்க பாரு..இதுல இருக்குற அக்கிரமம் பாரு..”

 

“ இங்கே இருந்து போகையில் வயித்து பிள்ளையோட போன அந்த கௌரி, பின்னொடு இன்னொரு குழந்தைக்கு தாயாகி இருக்கா…நித்ய கௌரியாம்…அவ பேரு… இதுஎல்லாம் உன் அப்பா..பெரிய மனுஷனுக்கு தெரியுமா…தெரியாமையா..இல்ல காரண கர்த்தாவே அவர் தானா…”

 

அவரின் ரௌத்திரம் கண்டு ஆனானப்பட்ட வேதநாயகியே சமைந்து போனார் என்றால்,வனராஜன் ஆடிப் போனான்.

 

“ மாமா.. ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க…நான் சொல்றேன் ..” என கேட்கும் நிலையில், வேலராஜன் இல்லை…கோபத்துடன் முன்னேறியவர்,சௌந்தரராஜனின் சட்டையைப் பிடிக்க, அதிர்ந்த சொர்ணக்கிளி…”தம்பிஈஈஈஈஈஈ…” என்று அலறினார்.

 

அதற்குள் வேலராஜன் கை ஓங்கியிருக்க…அருகில் சென்ற சொர்ணக்கிளி, கையை பிடித்து தடுத்து தம்பிக்கும் கணவருக்கும் நடுவில் வந்தார்..

 

 “என்னை விடுக்கா..இந்தாள அந்த தே***** அவ பெத்தது…..எல்லோரையும் வெட்டிப் பொலி போட்டாதான் என் ஆத்திரம் அடங்கும்..”என கர்ஜித்தவரைக் கண்டு கோபம் மிக பளாரென்று அறைந்தார் சொர்ணக்கிளி.

 

தன் அக்கா…பாசத்தின் மறு உரு…பொறுமையை பூமாதேவிக்கு கற்று கொடுப்பவர் என்று தான் தினம் தினம் மனதில் வைத்து தொழும் ,தன் அக்கா, தன்னை அடித்ததை உணராதவர் போல் வெறித்துப் பார்த்தார் வேலராஜன்.

 

வேகமாக வந்த வனராஜன், தன் மாமனின் கை பற்றி இழுத்துத் தள்ளிக்கொண்டு சென்றான்.

 

“அவசரப்பட்டுடீங்களே மாமா…கொஞ்சம் பொறுமையா கேட்டுருக்கலாமே..நானே இன்னும் கொஞ்ச நேரத்துல.. அங்க மாம் டாட் கூட்டிட்டு அங்கே வரணும் னு தான் இருந்தேன்…நான் சொல்ல வரத கேளுங்க……” எனவும்,

 

    இதுவரை அதிர்ந்து கூட பேசாத

சௌந்தரராஜன் கர்ஜித்தார், “ இதே தான் பல வருஷங்களுக்கு முன்பும் இதே அவசரம் தான்..அவனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணை தே***.என்றான்..என்னை கைநீட்டி அடித்தான்.. அதும் என் வீட்டில், என் தாய் தகப்பன், வேலைக்கரராகள் முன்னால்….”, எனவும் கண்களில் நீருடன் தம்பியைப் பார்த்தார் சொர்ணக்கிளி..

 

“இவுக சொல்றது உண்மையா தம்பி…அடிச்சியா…அவமானப்படுத்தினியா….”, என கண்களில் வலியுடன் கேட்க,

 

தலையைப் பற்றிக் கொண்ட வேல்ராஜன்,” எனக்கு நினவில்லக்கா…எனக்கு இந்த அம்மா ,உன்னை கேவலமா பேசனதும், நம்ம தகுதியை பத்தி பேசியதும், இவர் என் சட்டையைப் பிடிச்சு இந்த வீட்டை விட்டு வெளியே தள்ளுனதும் தான் ஞாபகம் இருக்கு….”, என்றார்..

 

அதைக்கேட்டு சொர்ணகிளியின் கண்கள் நீரூற்று போல் கண்ணீரை வடித்தன. திரும்பி கணவரைப் பார்த்தவரின் பார்வை ‘அப்படியா’ என்று கேள்வி கேட்டது.

 

அங்கே இருந்த கோவிந்தராஜன், “எல்லோரும் நிறுத்துங்க..பலவருசம் முன்னாடி இப்படி பதட்ட பட்டு நடந்து தான் இப்போ வரை யாரையும் முகமுழி பார்க்க ஏலம்மா என் மருமக மகன் கஷ்டப்படுறாங்க…இப்போவாவது பொறுமையா உக்கார்ந்து பேசுங்க…என் மகன் பத்தரை மாத்து தங்கம்…அதை மனசுல வச்சுக்கிட்டு பேசு வேலராசா…உக்காரு..உக்காருங்க.. என் அதட்டி அனைவரையும் அமர வைத்தார்.

 

 

 “ பொதுவா ஒரு சண்டை… கோபத்துல பேசும் போது நாம பேசுறது மறந்துரும்,…. செஞ்சது மறந்துரும்,…

 ஆனா.. எதிராளி பேசுனது, செஞ்சது தெளிவா ஞாபகம் இருக்கும்….இது மனுஷ இயல்பு…அன்னைக்கு நீங்க சொன்னது ரெண்டும் நடந்தது…

 

ஆனா அதை செய்யவச்சது…என் பொண்டாட்டி பேச்சும்….என் பையனோட மௌனமும் தான்..என் பையன் பொதுவா கடகடன்னு பேசுரவன் இல்லை…

 

.வேலராசா..நீ வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசரவன்…அன்னைக்கும் இதே மாதிரி வெறிகொண்டு வேற வந்துருந்த…..ரெண்டு பேரும் அப்போதே கொஞ்சம் நிதானமா பேசிருக்கலாம்…

 

 

எனக்கும் என் பையன் தப்பு செஞ்சுருப்பனோ னு சந்தேகத்துல யாரையும் தடுக்கவோ சமதானப்படுத்தவோ முடியல…

 

 

அப்புறம்..எனக்கு என் குடும்ப வாரிசுகள் முக்கியமா பட்டதால என் மகனை நிறுத்தி விசாரிக்காமல் அங்கே கரிசகுளத்துக்கு என் மருமகளை கூப்பிட வந்துட்டேன்.அவளும் என் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து வந்தா….

 

 

  இங்க வந்த பிறகு என் மகன்…தன் மனைவி பிள்ளைகள் மேல காட்டின பாசம் அக்கறை நிசம்….எல்லாம் சரியாகிடுச்சுன்னு நினைச்சிட்டு இருந்தேன் …திரும்ப என்ன பூதம் கிளம்புது…” என்றார் வேதனையுடன்..

 

எழுபது வயது முதியவர் பதட்டப் படுவதை, சோர்வுறுவதைக் கண்டு வனராஜன் வேகமாக அவர் அருகில் சென்று அமரவைத்து தண்ணீர் கொடுத்தான்.

 

“அய்யப்பா காலைல போட வேண்டிய மாத்திரை போட்டுடாங்களா க்ராண்ட்மா…” என கேட்க, 

முகம்சிறுத்து இருந்த வேத நாயகி , ஆமா என்று தலை அசைத்தார். வனராஜன்,

 

“எல்லோரும் கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளுங்க…அப்பாவும் மாமாவும் அசாதாரணமான கோபத்துல இருக்காங்க..மாம் மனசுல வேதனையோட இருக்காங்க ஏன் எதுக்குன்னு காரணம் தேடுனபோது, நான் மாமா மூலமா கௌரி அம்மா பத்தி தெரிஞ்சுக்கிட்டேன்..அப்புறமா அம்மா தவத்துக்கு முடிவு வரணும் ,ஏதாவது தவறு நடந்துருந்தா சீர் செய்யணும் னு நான் துப்பறியும் நிறுவனம் மூலமா தீவிரமா கௌரிமா வ தேடுனேன்…..மாமா ……நீங்க நினைக்குறதுபோல இல்ல ..அவுங்க ரொம்ப நல்லவங்க..அப்பாவோட நல்ல தோழி…அப்பாக்கு எலக்ட்ரானிக்ஸ் நா ரொம்ப பிடிக்குமாம்..இங்க யாருக்காவது தெரியுமா..

 

தன் அம்மா ஆசைப்படி எல்லாம் செஞ்ச என் அப்பா குடும்ப தொழிலை வெற்றிகரம நடத்திட்டு இருக்குற என் அப்பாக்கு ரொம்ப பிடிச்சது அந்த துறை தான்..

 

    அதுல ஆர்வமா இருந்த கௌரிமா கூட அவர் நட்பு கொண்டது ,ஒத்து போன ரெண்டு ஆர்வங்கள் தானே தவிர..ஒத்து போன ரெண்டு மனசோ..காதலோ கிடையாது…அதுல அவுங்க தெளிவா இருந்துருக்கங்க..அது புரியாம யாரோ கொளுத்தி போட்டத நம்பி க்ராண்ட்மா நீங்க பண்ண வேலையில அவுங்க ஊரைவிட்டே போயிருக்காங்க..

 

அப்பா!!!! கௌரிமா ஊர் விட்டு போனது..படிப்பை நிறுத்தி கல்யாணம் நடந்ததுக்கு காரணம்.. உங்க நட்பு மட்டுமில்ல..க்ராண்ட்மா வோட அசிங்கமான பேச்சு தான் முக்கிய காரணம்…அதன் உங்களுக்கு தெரியுமா!! “

 

எனவும் அதிர்வுடன் ‘ இல்லை ‘ என்பதாய் தலை அசைத்தார்ர் சௌந்தரராஜன்.

 

    தான் செய்த வினை பல வருடங்கள் தாண்டி தன்னை எதிர்கொண்டு தாக்குவதை, அதிர்வுடன் பார்த்து கொண்டிருந்தார் வேதநாயகி..வருத்தமா…அதெல்லாம் இல்லை அவரின் திமிர் பார்வையில்..

 

 

  தன் மகனிடம்….. தன் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏற்றும் வேலையை கச்சிதமாக செய்யும் பேரன் பேசுவதை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

 

“ டாட்… மாமா உங்களை பேசுனது…க்ராண்ட்மா ஆரம்பிச்சு வச்சது தான்.. மாமா அவுங்க சொன்னதை திருப்பி சொன்னார் அவ்ளோ தான்..

 

அப்போ உங்க கோபம் முதல்ல க்ராண்ட்மா மேல தான் வந்துருக்கணும்…அது பட மாட்டடீங்க..ஏன் னா பேயானாலும் தாய் அப்படி தானே பா…” எனவும் 

 

  கண்களில் வலியோடு தலை குனிந்து கொண்டார் சௌந்தரராஜன்.

 

   “என்னடா மாமனும் மருமகனும் சேர்ந்து என் பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிக்க பார்க்குறீங்களா!!!” என்று ஆத்திரமாய் கேட்டார் வேதநாயகி..

 

“ நானில்லை க்ராண்ட்மா… நீங்க தான்… உங்க பேச்சு தான்…. ஒரு பொண்ணு வாழ்க்கையை தலைகீழ் திருப்பி போட்டுச்சு…இன்னொரு பொண்ணான என் அம்மா. வாழ்க்கையை. அவுங்களை நிம்மதியா ஒரு நாள் இருக்க விட்டுருக்கீங்களா..மருமகளை…அடிமையா தானே வச்சுருக்க நினைச்சீங்க..எங்க அம்மா வாழ்வு கெட்டு போனதுக்கு நீங்க தான் காரணம்..

 

இப்போ அவுங்க எப்படி வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குறாங்க தெரியுமா….” என்றவனை இடைமறித்தார் வேதநாயகி,

 

  “அவளுக்கென்ன???? 3 வேலைக்காரங்களை வச்சுக்கிட்டு ……நித்தம் ஒரு பட்டு புடவை… மாசம் ஒரு நகை னு என் மகன் கொடுக்குறதை போட்டுக்கிட்டு சந்தோஷமாதான் இருக்கா….” என்று நொடித்தவரை கூர்ந்து பார்த்தவன்,

 

 “ பணம் பவிசு ல சந்தோசப்படுறது உங்களுக்கு இயலபா இருக்கலாம் …எங்க அம்மா அன்பு பாசம் கௌரவம் னு இருக்குறவுங்க..அது கொடுத்துருக்கீங்களா…” என்று விட்டு தந்தையிடம் திரும்பி,

   “ டாட்.. சாரி டூ சே திஸ்….. நீங்களும் அதை வேடிக்கைதான் பார்த்திட்டு இருந்துருக்கீங்க…உங்க நட்பு துன்ப பட்டதுக்கு, மாமா செய்ததிற்கு நீங்க மாம் அ பழி வாங்கிடீங்க….”என்றான் கோபத்துடன்..சிறிது வருத்தத்துடன்…

 

     சௌந்தரராஜன் வலியோடு கண்கள் மூடியவாறு, “அப்படி இல்லை கண்ணா நான்…என் மனைவி டா…உண்மையா இருந்தேன்..ஆனா என்னை நம்பாம ..தன் பிறந்த வீட்டை.கூட பிறந்தவனின் பேச்சை …பெருசா நினைக்குறவள..இந்த வீட்டை தன் மக்களுக்காக சகிச்சுட்டு இருக்குறதா காட்டிக்குறவள என்ன செய்து அணுகன்னு எனக்கு தெரியலை..அவ தண்டனை கொடுத்தா நான் அதை ஏத்துகிட்டேன்….கௌரி வாழ்வை பாழாக்கினதுக்கு தண்டனையா..என் சொர்ணா தப்பே செய்யாம தண்டனை அனுபவிச்சுருக்கான்னு இப்போ உணருறேன்…

 

தாம்பத்தியத்தை யாசிச்சு வாங்க அவமானமா உணர்ந்ததும் ஒரு காரணம்..

 

தவறு செய்தவன் மாதிரி அவ பார்த்த பார்வை..எதையும் உரிமையா என்கிட்ட கேக்காத அவ விலகல் என்னை அனு அணுவா கொன்னது..” 

 

கணவரின் பேச்சில்

வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த சொர்ணக்கிளி,

 

  “தவறு நீங்க செய்யறதா நான் நினைச்சுருந்தா திரும்ப இந்த வீட்டுக்கு வந்திருக்கவே மாட்டேன் அத்தான்..என் கூட நீங்க வாழ்ந்த அஞ்சு வருஷ வாழ்க்கைல நான் போலி தனத்தை என்னிக்கும் பார்த்ததில்லை ….அந்த நம்பிக்கை ல தான் திரும்ப வந்தேன்..ஒவ்வொரு நாளும் நீஙக என் கிட்ட இதான் நடந்தது னு சொல்லுவீங்கன்னு உங்க முகத்தை பார்த்து ஏமாந்து போறதே பழக்கமாகி விலகி போய்ட்டேன்..”என்றார் வேதனையுடன்…

 

அவரையே பார்த்து கொண்டிருந்த சௌந்தரராஜன்,” ‘அத்தான்’….நீ… இந்த வார்த்தை சொல்லி இருபத்திஅஞ்சு வருஷம் ஆச்சு சொர்ணா…”

 

எனவும் வனராஜன் எழுந்து வந்து தன் தந்தையின் தோள் அணைத்துக் கொண்டான். பின் வேல்ராஜனை ப் பார்த்து,

 

 “கௌரிம்மாவை நான் தேடி கண்டுபிடிச்சுட்டேன்.என் அப்பா குற்றமற்றவர் னு என் அடி மனசு…. அவர் பாசத்தை அனுபவிச்ச மனசு சொல்லுச்சு..அதுக்கு தான் தேடுனேன்…சந்தேகப் பட்டு இல்ல”

 என்று விட்டு கௌரியை ப் பற்றிக் கூறியவன்..

 

குற்றம் செய்த பாவனையுடன் தலை கவிழ்ந்த மாமனின் அருகில் சென்று அமர்ந்து கைகள் பற்றி கொண்டான்..

 

“அதில இன்னொரு சுயநலமும் இருக்கு..நான் செல்லம்மா.. செல்லகிளியை விரும்புறேன்..

 

எங்க பொண்ணு கேட்டா ..கொடுத்த ஒரு பொண்ணை……எங்க அக்கவையே ஒழுங்கா பார்த்துக்கலை னு நீங்க காறி துப்பிருவீங்களோன்னு பயம்…அதுக்காகவும் தான் தேடுனேன்..”என்று விளையாட்டுபோல் பேசியவன், அழுத்தமான குரலில்,

 

“இப்போ கேக்குறேன் உங்க பொண்ணை எனக்கு கட்டி கொடுப்பீங்களா..

 

நீங்க பார்த்துருக்குற மாப்பிள்ளை க்கு கொஞ்சமும் குறையாத தகுதி எனக்கு இருக்கு..அவ கனவு எனக்கு எப்பவும் ரொம்ப முக்கியம்..அது உங்களுக்குத் தெரியும்….அவ படிப்பு முடிக்கவும் நான் என் கனவு தொழிற்சாலையான மருந்து பட்டி னு சொல்ற காஸ் துணி தயாரிப்பு தொழிற்சாலையை நிர்மாணம் பண்ணவும் சரி யா இருக்கும்…

என்ன சொல்றீங்க மாமா” எனவும்..

அசந்து போய் பார்த்துக் கொண்டிருந்தார் வேலராஜன்.

 

எழுந்து வந்த சௌந்தர்ராஜன்..”மாப்பிள்ள!!! என்ன சொல்ற ???உன் பொண்ணை..என் மருமகளை… என் பையனுக்கு கொடுக்க சம்மதம் தானே …”எனவும் 

அவரின் மாப்பிள்ளை என்ற சொல்லில் கண்கலங்கியவர் எழுந்து அவர் கைகளை பற்றி கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்..

 

“நான் கோபத்துல செய்ததை பேசியதை மறந்து மன்னிச்சு பெரிய மனுசன்னு நிரூபிச்சுடீங்க மச்சான்…நான் அறிஞ்சு செய்யலை..மன்னிச்சுறுங்க மச்சான்..”

 

எனவும் அவரின் தோள் தட்டியவர்..

 

“சரி எப்போ பூ வைக்கலாம்..கல்யாணம் வச்சுக்கலாம் அதை பேசு..பழசை எல்லாம் தூக்கி குப்பைல போட்டுட்டு புதுசா சொந்தங்களோட சந்தோஷமா இருப்போம்….” என

பார்த்துக்கொண்டிருந்த சொர்ணகிளியின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்து மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது….

 

************************

கிளி பேசும்……….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!