Wed. Oct 22nd, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-4

(4)

 

குழந்தைகளுடன் எப்படியோ பேரம் பேசி, எழுப்பிப் பள்ளிக்கூடத்திற்குத் தயார் படுத்துவதற்குள் மிளிர்மிருதை முழுச் சக்தியையும் விரயமாக்கியிருந்தாள்.

இப்போது அவர்கள் சீனியர் கின்டர்காடன் செல்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் குறும்புத்தனத்திற்குப் பெயர் போனவர்களாக இருந்ததால், எப்படியும் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஆசிரியரைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாள் மிளிர்மிருதை.

இவளோ எப்படிக் கண்டித்தாலும், அவர்களின் குறும்பு குறையவேயில்லை. அதுவும் ஆத்விகன் படுத்தும் பாடு இருக்கிறதே… அபயவிதுலனோ, அவனுடைய குறும்பை ரசித்தானன்றி, சற்றும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இவளோ சற்றுக் கண்டித்தால்,

“எனக்குக் கிடைக்காத மகிழ்வான சூழ்நிலை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதையேன் தடுக்கிறாய்?” என்று கூறி அவள் வாயை அடைத்துவிடுவான்.

எப்படியோ குழந்தைகளைத் தயார் படுத்தும் போதே, இன்று என்ன வம்பை விலைக்கு வாங்கப்போகிறார்களோ, என்கிற எண்ணமும் தோன்றாமலில்லை. அதனால் எப்போதும் போல, நல்ல அறிவுரைகளைக் கூறியவளுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்கென்று தெரியாமலில்லை. ஆனாலும் சொல்லாமலும் அவளால் இருக்க முடியவில்லை.

ஒருவாறு அவர்கள் தயாரானதும், அவசரமாக உணவை ஊட்டிவிட்டு மதியத்திற்காக உணவைக் கட்டிக்கொடுத்துப் பள்ளிக்கூட வாகனத்திற்காகக் காத்திருக்கும் போதே காந்திமதி பூஜையை முடித்துவிட்டு வெளியே வந்தார்.

பாடசாலை வண்டிக்காகக் காத்திருந்த குழந்தைகளின் நெற்றியில் பட்டும் படாமலும் விபூதி பூசி, நின்றிருந்த மிளிர்மிருதைக்கும் ஏதோ மந்திரம் ஓதியவாறு பூசிவிட்டு,

“அபயன் கிளம்பிட்டானாம்மா…” என்றார்.

இவள் ஆம் என்று தலையை ஆட்ட,

“சாப்பிட்டானா…?” என்றவாறு அவரும் பள்ளிக்கூட வாகனத்திற்காகக் காத்திருக்க,

“ஆமாம்மா…? சான்ட் வி செய்து கொடுத்தேன்… மதிய சாப்பாடு எடுத்துப் போகவேண்டும்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே பள்ளிக்கூட வாகனம் வந்திருந்தது.

இருவரையும் ஏற்றிவிட, பேருந்து கிளம்பிய நேரம் அந்த வானகத்தின் பின்னால் இரண்டு சக்கர வண்டிகள் பின் தொடரத் தொடங்கின.

அது அபயவிதுலனின் ஏற்பாடுதான். முன்பு தனியார் பள்ளியில்தான் படித்தார்கள். அவர்கள் சென்ற பள்ளிக்கூடம் அதீத பாதுகாப்பு நிறைந்தது. திடீர் என்று ஒரு நாள், அவர்களைப் பொதுப் பள்ளியில் சேர்க்கப் போகிறேன் என்று வந்தான் அபயவிதுலன்.

காந்திமதியும் மிளிர்மிருதையும் அதிர்ந்து போனார்கள். காந்திமதி எவ்வளவோ மறுத்துப் பார்த்தார். அவன் அதைக் கேட்கவில்லை.

சுகபோகத்தில் வாழும் குழந்தைகளை விட, வாழ்வில் அடிபட்டு முன்னேறும் பிள்ளைகளே நாளை உலகை ஆழும் என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்கு உதாரணமாகத் தன்னையே எடுத்துக்கொள்வான். மிளிர்மிருதையும் அவன் கூற்றை மறுக்கவில்லை. மறுத்த சகோதரியிடம்,

“என்னுடைய சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப் போபவர்கள் இவர்கள். அடிப்படை மனித வாழ்க்கையை உணர்ந்தால் மட்டுமே அவர்களால், என் உழைப்பை ஒழுங்காகக் கையாள முடியும்… பணம் மட்டும் வாழ்க்கையில்லை… அதற்குக் கீழே உள்ள மனித வாழ்க்கை முறையையும் அவர்கள் உணர வேண்டும்… சோ… அதற்குத் தகுந்த இடம் பொதுப் பள்ளிதான்…” என்று அவன் உறுதியாகக் கூறியிருந்தாலும், தன் குழந்தைகளுக்கான பாதுகாப்பையும் ஏற்பாடு செய்ய அவன் தவறவில்லை. கூடவே அவர்கள் சென்று வர, பள்ளிக்கூட வாகனத்தையும் ஏற்பாடும் செய்தான்.

கூடவே, குழந்தைகள் சார்ந்த தனிப்பட்ட வாழ்க்கை முறை, மறைமுகமாகவே வைக்கப்பட்டிருந்தது. TDSB (டொரோண்டோ டிஸ்ட்ரிக்ட் ஸ்கூல் போர்ட்) அவனுடைய வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு குழந்தைகளின் பின்புலத்தை இரகசியமாகவே வைத்திருக்க உதவியது. அதனால் அங்கிருந்த அனைவருக்கும் அவர்கள் யாருடைய குழந்தைகள், அவர்களின் வசதி வாய்ப்பு என்ன என்பது தெரியாமலே இருந்தது. .

கொள்ளை கொள்ளையாகப் பணம் வைத்திருந்தும் குழந்தைகளின் வசதியைக் கவனிக்கவில்லை என்றால் பின் எதற்கு அந்தப் பணம்?” என்று காந்திமதிதான் முணுமுணுத்தார். ஆனாலும் அந்த விஷயத்தில் அபயவிதுலன் சற்றுக் கறாராகவே இருந்தான்.

அவர்கள் அணியும் ஆடைகள் கூட, அபயவிதுலன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சாதாரண ஆடைகள்தான். பள்ளிக்கூடப் பையிலிருந்து, அவர்கள் அணியும் சப்பாத்துவரை அபயவிதுலனின் தேர்வே… அவர்கள் அணியும் அணிகலன்களுடன் யாராவது பார்த்தால் அவர்கள் கோடீஸ்வரனின் பிள்ளைகள் என்று சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்றதும், ஆராதனாவும் வேலைக்குத் தயாராகிக் கீழே வந்துகொண்டிருந்தாள். பல்கலைக் கழகம் முடித்த கையோடு, வேலைக்குப் போகவேண்டும் என்று ஆராதனா பிரியப்பட, சற்றும் தாமதிக்காது அவளைக் காந்திமதியின் மேற்பார்வையிலிருக்கும் இன்னொரு கிளையில் வேலைக்கு அமர்த்தினான் அபயவிதுலன். கூடவே அனைவரும் வெளியே சென்றதும், மிளிர்மிருதை தனிமையில் வீட்டில் மொட்டு மொட்டென்று இருப்பதைக் கண்டு, தன் வேலைத்தளத்தில் வந்து வேலைசெய்யுமாறு கேட்டுக்கொள்ள, இவளும் சந்தோஷமாகவே, முழு நேர வேலையை மறுத்துவிட்டுப் பகுதி நேரமாகச் சேர்ந்து கொண்டாள். அது அவளுக்குப் பெரும் வசதியாகவே போனது.

குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, மதிய சாப்பாட்டை முடித்துச் சுடச் சுட அபயவிதுலனுக்குக் கட்டியவாறு வேலைக்குப் போனால் அங்கே சென்று அவனும் அவளுமாய் உண்டு முடித்து, அவன் அறையிலேயே அவளுக்கென்று போட்டிருந்த இடத்தில் அமர்ந்து கொடுத்த வேலையை முடிப்பாள். பின்பு அபயவிதுலனோடு வீட்டிற்குக் கிளம்புவாள். இல்லை கடைக்குச் சென்று வேண்டிய பொருட்களை வாங்குவாள்… இப்படி அவள் வாழ்க்கை மிக அழகாகவே பயணித்தது.

அதுவும் தான் மாமிசம் உண்பதில்லை என்றாலும் கூட, அவனுக்காகப் பிடித்த மாமிச உணவைச் சுவைத்துப் பார்க்காமலே சமைத்து எடுத்துச் செல்லும் சந்தோஷம் அவளுக்கு எதிலும் வந்துவிடுவதில்லை. குறிப்பாகத் தன் மனைவியின் கரங்களில் உண்ணும் போது மலரும் அவன் முகத்தைப் பார்ப்பதே அலாதி சுகம் அவளுக்கு.

அன்றும் அவனுடைய மலரும் முகத்தைக் காணும் ஆவலில், அவனுக்கும் தனக்குமாய் உணவைக் கட்டிக்கொண்டு காந்திமதியிடம் விடைபெற்றுக் காத்திருந்த வாகனத்தில் ஏற, அது வேலைத் தளத்தை நோக்கிப் பயணித்தது.

பயணித்தவளின் விழிகள் ஆவலுடன் கனடிய நாட்டின் இலையுதிர் காலத்தின் அழகை ஆவலுடன் ரசிக்கத் தொடங்கின.

ஆகா என்ன அழகு… எங்குப் பார்த்தாலும் பல வர்ண நிறங்களாக மாறத் தொடங்கிய மேப்பிள் இலைகள், அழகிய சேலைக்கு வரைய்பட்ட ஓவியம்போலத் தோன்றியது. சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சள், பச்சை. என்று கண்களைப் பறித்தன. மெல்லிய காற்றிற்கும் கிளையோடு ஒட்டியிருக்கப் பிடிக்காதவையாக, கழன்று சுழன்று தரையில் விழ, யாரோ மரத்திலிருந்து பூமாரி சொரிந்தது போல அத்தனை அழகாக இருந்தது. கூடவே கொட்டிக்கிடந்த இலைகளைப் பார்க்கும் போது ஓடிச்சென்று அவற்றைக் குவித்து, அதன் மீது துள்ளி விளையாடவேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.

அவளிடமிருந்து தொலைந்து போன மகிழ்ச்சி மெல்ல மெல்ல மொட்டு விட்டு மலர்ந்து பூத்துக்கொண்டிருந்த நேரம் அது… எதைக் கண்டாலும் பூரித்துக் குதூகலிக்கத் தூண்டுகிறது. அதுவும் அபயவிதுலன் அருகில் இருக்கும் போது, எதையும் சிந்திக்க முடிவதில்லை. எல்லாமே வண்ணமயம்தான்… எல்லாமே அழகுதான்…

முகம் விகசிக்க, மரத்திலிருந்து உதிர்ந்து விழும் இலைகளைக் கண்டு ரசித்தவாறே, சென்றுகொண்டிருந்தவளின் கவனத்தைக் கவர்ந்தது பழக்கடை. அங்கே தரமான பழங்கள் கிடைக்கும். குறிப்பாக ஈழத்தில் உள்ள பழங்கள் அனைத்தையும் அங்கே விற்பதால் அக்கடை அவளுக்கு மிகுந்த பரிட்சியமே. ஆனால் பாதுகாப்புக் கருதி மிளிர்மிருதையை அங்கேயெல்லாம் போக அபயவிதுலன் அனுமதித்ததில்லை. அவளுக்கு வேண்டியதை வேலையாட்களைக் கொண்டே தருவித்துக் கொடுப்பான். அப்படியிருந்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், அவனுக்கு டிமிக்கி காட்டிவிட்டு அக்கடைக்கு அடிக்கடி வந்து போவாள்.

எப்போதும் போல அப்போதைக்கு என்ன பழங்கள் வந்திருக்கின்றன என்று பார்க்கும் ஆவல் உந்த,

“டேவிட்சன்… வாகனத்தை நிறுத்துங்கள்?” என்று ஆங்கிலத்தில் பணிக்க, அந்தக் காரோட்டி உடனே காரை நிறுத்தித் திரும்பிப் பார்த்தான்.

“என்ன மிசஸ் அபயவிதுலன்… உங்களுக்கு ஏதாவது வேண்டுமா…? அப்படியானால் இங்கேயே இருங்கள்… நான் போய் வாங்கி வருகிறேன்!” என்றவாறு இறங்க முயல, உடனே அவனைத் தடுத்த மிளிர்மிருதை,

“நோ…! ப்ளீஸ்…! நான் போகிறேன்… நீங்கள் இங்கேயே இருங்கள்… இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடுவேன்…” என்று கட்டளையாகக் கூறியவாறு அவனுடைய பதிலையும் கேட்காது, இறங்கிக் கடையை நோக்கிச் செல்வதற்காகத் தெருவைக் கடக்க முயன்ற போதுதான் அது நடந்தது.

அவள் கவனமாக இரு பக்கமும் பார்த்துவிட்டுத்தான் கடந்தாள். அதுவும் பாதசாரிகள் கடக்கும் இடத்தில்தான் கடந்தாள். ஆனால், அந்த வாகனம் எங்கிருந்து, எப்படி அத்தனை வேகத்தில் வந்தது என்று அந்தக் கடவுளுக்கே தெரியாது. திடீர் என்று இவளை நோக்கி அந்த வாகனம் பாய, கடையைப் பார்த்து நடந்தவளுக்குக் கரிய நிறத்தில் எதுவோ தன்னை மோத வருவது புரிய அதிர்ந்து திரும்பி, பதட்டத்துடன் இரண்டடி வேகமாகப் பின்னால் வைப்பதற்குள் தரையில் உருண்டுசென்று விளக்குக் கம்பத்தில் மோதி நின்றாள்.

அந்த வாகனமோ, ஒருத்தியை இடித்துவிட்டோம் என்கிற அக்கறை சிறிதும் இல்லாது, இடித்த வேகத்தில் கண்ணிமைக்கும் நொடியில் காணாமல் போயிருந்தது. ஒரு கணம் இவளுக்கும் எதுவும் புரியவில்லை. தன்னை ஒரு வாகம் அடித்துவிட்டுச் சென்றது என்பதைப் புரிந்துகொள்ளவே சற்று நேரம் எடுத்தது மிளர்மிருதைக்கு. அது மட்டுமல்ல, அவள் பின்னால் ஓடிவந்திருந்த டேவிட்சனுக்கும் உலகம் இருண்டுகொண்டு வந்தது.

கரிய வாகனம் ஒன்று மிளிர்மிருதையை நோக்கிப் பாய, அதைக் கண்டதும் பதறியவனாக, அவளை நோக்கிப் போவதற்குள் அது அவளைத் தரையில் தள்ளிவிட்டுச் சென்றுவிட்டது. ஒரு கணம் டேவிட்சனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அதே வேளை. தரையில் விழுந்து கிடந்தவளுக்கு மெது மெதுவாக உணர்ச்சி வரத் தொடங்கி மங்கிய தன் புத்தியைத் தலையை உலுப்பி நிலைப்படுத்தியவாறு, எழுந்தமர முயன்றவளுக்கு, அப்போதுதான் தனக்கு என்ன நடந்தது என்றே முழுவதுமாகப் புரிந்தது.

பதட்டத்துடன் சுத்தவரப் பார்த்தாள். விபத்து நடந்தது சற்று ஒதுக்குப் புறமான இடம் என்பதால், அவள் அடிபட்டது யாருக்கும் தெரியவில்லை.

அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகவே மிளிர்மிருதைக்கும் தோன்றியது. இல்லையென்றால், காவல்துறை, ஆம்புலன்ஸ், வைத்தியசாலை என்று ஒரு வழி பண்ணியிருப்பார்கள். அது மட்டுமோ உடனே அந்தச் செய்தி அபயவிதுலனுக்குப் போகும். பிறகென்ன, விபத்துக்குள்ளாக்கியவனை உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடுவான்… அதாவது பரவாயில்லை, அவளை வெளியே கால் எடுத்து வைக்கவே விடமாட்டான். போதாததற்கு அவனுடைய பிரத்தியேக அறையில், அவளைப் பக்குவமாக ஒரு பொன் கூண்டில் அடைத்து எங்கும் போகாதவாறு செய்துவிடுவான்…

“ஐயையோ… இதைக் கேள்விப்பட்டால் அவளை வறுத்தெடுக்காமல் கழுவில் ஏற்றிவிடுவானே… ஒரு முறைக்குப் பல முறை சொல்லியிருக்கிறான், அவள் இஷ்டத்திற்குக் கண்ட கண்ட இடங்களுக்குப் போகக் கூடாதென்று. இவள்தான் என்ன நடக்கும் என்கிற அலட்சியத்தில், இப்படி நடு ரோட்டில் வாங்கிக்கட்டிக் கொண்டாளே.

இப்படித்தான் ஒரு வருடத்திற்கு முன்பு, இத்தகைய ஒரு விபத்தில் அவள் சிக்க முயன்று அரும்பொட்டில் தப்பியவளை காவல்காக்கிறேன் என்று படுத்தி எடுத்தது இப்போதும் நினைவுக்கு வந்து அவளைப் பயமுறுத்தியது.

இவளும், ஆராதனாவும், சித்தார்த்துடனும் ஒரு பாலத்தினருகே வந்துகொண்டிருந்தவேளை, ரோலர் ப்ளேட்ஸ் அணிந்துகொண்டு வந்தவன் ஒருவன் தள்ளிவிட, பாலத்தின் மறு புறம் விழாமல் காத்துக்கொண்டது சித்தார்த்தின் இறுகிய பிடிதான். அன்று அருந்தப்பு அவள் மறு புறம் விழாமல் போனது. விழுந்திருந்தால், அவளுடைய கதை அன்றோடு முடிந்திருக்கும்.

அன்று நடந்ததன் பின் அபயவிதுலன், அவளைத் தனியாக அனுப்பியதும் கிடையாது. அவள் எங்கு போவதாக இருந்தாலும் அவள் கூடவே ஒரு பாதுகாவலன் நிச்சயமாக வருவான். அது அவளுக்குப் பெரும் சுமையாக இருந்தது. தன் சுதந்திரம் பறிக்கப்பட்டது போல உணர்ந்தவள், அபயவிதுலனிடம் மல்லுக்கு நின்று அந்தப் பாதுகாவலனை நிறுத்தினாள். அதுவும் ஒரு நிபந்தனையோடுதான். ஒன்று அவள் தனியாக எங்கும் போகக் கூடாது. இரண்டாவது அவனுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது என்பதே. அப்போதைக்குப் பூம் பூம் மாடு போலத் தலையை ஆட்டினாலும் அடிக்கடி இப்படி ஏதாவது சொதப்புவதும் வாடிக்கைதான்.

ஆனால் இன்று, இந்த விபத்தை அவள் எதிர்பார்க்காதது. இப்போது இந்தச் செய்தியை அபயவிதுலன் கேள்விப்பட்டால்… நினைக்கும் போதே ஆயாசமானது.

அதே நேரம் சுயநினைவு பெற்ற டேவிட்சன், வேகமாக வந்து பதட்டமான குரலில்,

“மிசஸ் அபயவிதுலன் ஆர் யு ஓக்கே…” என்று கேட்டவாறு, சற்றும் தாமதிக்காது, தன் கைப்பேசியை எடுத்துக் காவல்துறையை அழைக்கத் தொடங்க, டேவிட்சன் என்ன செய்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மிளிர்மிருதை,

“நோ… நோ டேவிட்சன்… ஐ ஆம் ஓக்கே… தயவு செய்து காவல்துறையை அழைக்காதீர்கள்…” என்று பதறியவாறு சிரமப்பட்டு எழுந்தவள், அவன் கரத்தலிருந்த கைப்பேசியைப் பறித்து அதை அணைத்துவிட்டு டேவிட்சனைப் பார்த்து.

“ஆர் யு மாட்…” என்றாள் ஆத்திரத்துடன். அவனோ புரியாமல் திருதிரு என்று விழிக்க, இவளோ எரிச்சலுடன், குனிந்து தன்னைப் பார்த்தாள். நல்லவேளை சற்றுத் தடித்த ஜக்கட் போட்டிருந்ததால் உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஆனால் ஜக்கட் அழுக்காகியிருந்தது. இதைக் கண்டால் அபயவிதுலனுக்குச் சந்தேகம் வரும்.

அவசரமாக ஜக்கட்டைக் கழற்றி மறு பக்கமாகமாக அணிந்துகொண்டாள்.  நல்லவேளை, அந்த ஜாக்கட் இரு பக்கமும் அணியக் கூடியது. இல்லையென்றால் அபயவிதுலன் அதை வைத்துக் குடைந்தெடுப்பான்.

நிம்மதியுடன் நடக்க முயன்றவளுக்கு அப்போதுதான் முழங்காலில் விண் விண் என்கிற வலி தெரிந்தது. ஆனால் அதை டேவிட்சனுக்குக் காட்ட முடியாது. வலியின் சிறு துளி தெரிந்தாலே, அவளைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்று விடுவான்.

பிறகு அபயவிதுலன்… அவனை நினைக்கும் போதே குளிர் பரவ, இதழ்களைச் சிரிப்பது போல இழுத்து வைத்தவள்,

“சீ ஐ ஆம் ஓக்கே டேவிட்சன்… எனக்கு ஒன்றுமே இல்லை… அந்தக் கார் என்னைத் தட்டிவிட்டது அவ்வளவுதான்… மற்றும்படி, ஐ ஆம் பேர்ஃபெக்ட்லி ஓக்கே…” பில்டிங் ஸ்டார்ங் பேஸ்மன்ட் வீக் என்பது போல நிற்க, சந்தேகத்துடன் பார்த்தான் டேவிட்சன்.

இவளோ சிரமப்பட்டுத் தன் வலியை வெளிக்காட்டாதவாறு நிற்க டேவிட்சனின் கைப்பேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்தால் அபயவிதுலன்.

பயத்துடன் எடுத்துக் காதில் பொருத்த,

“வியர் த ஹெல் ஆர் யு… வியர் இஸ் மை வைஃப் என்கிற கர்ஜனைக் குரல் அவன் காதைக் கிழித்துக் கொண்டு போகப் பயத்துடன் முகம் வெளிற நின்றிருந்தான் டேவிட்சன்.

டேவிட்சனின் முகத்தை வைத்தே யாராக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட மிளிர்மிருதை, உடனே அவனிடமிருந்து கைப்பேசியைப் பறித்து,

“விதுலா…!” என்றாள் குழைந்த குரலில். அந்தக் குரலில் சற்று நேரம் அமைதி காத்தான் அபயவிதுலன். அந்தக் குரல் தப்பு செய்துவிட்டுச் சமாளிப்பதற்காகப் பாவிக்கும் குரல் என்பது புரிய, என்ன செய்து வைத்திருக்கிறாள்? என்கிற பதட்டம் எழுந்தது.

“எங்கே இருக்கிறாய் மிளிர்மிருதை… இத்தனைக்கும் நீ அலுவலகத்தில் என் முன்னால் நின்றிருக்க வேண்டும். ஆனால் இன்னும் காணவில்லை…?” என்று சற்று அழுத்தமாகக் கேட்க, இவள்தான் சற்று சங்கடத்துடன் நெளியவேண்டியதாயிற்று.

“அது… வந்து… இன்று கிளம்பும் போது சற்றுத் தாமதமாகிவிட்டது விதுலா…! போதாததற்கு…” என்றவள் வெறிச்சோடிக்கொண்டிருந்த பாதையைப் பார்த்து,

“ஒரே ட்ராஃபிக் ஜாம்… கார் அசைகிறதேயில்லை…” என்றவள், சைகையால் டேவிட்டைப் பின்னால் தொடருமாறு கூறிக்கொண்டு, வேகமாகத் தங்கள் காரை நோக்கி ஓடி, “இதோ… இன்னும் ஐந்து நிமிடங்களில் அலுவலகத்தில் இருப்பேன்…” என்று சொன்னவள், மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கிணவாறு பின்தொடராத டேவிட்சனைத் திரும்பிப் பார்த்தாள்.

அவனோ அதிர்ந்து போய் நின்றிருக்க, அதைக் கண்டு அசடு வழிந்து, கைப்பேசி இல்லாத கரத்தால், விரைந்து வருமாறு வாயை மட்டும் அசைத்துக் கூறிக்கொண்டே காரைத் திறந்து உள்ளே அமர்ந்து கதவைப் பூட்டாமல் வைத்திருக்க, இவனோ,

“எதற்காக இளைக்கிறாய்… இப்போது எங்கே நிற்கிறாய் மிருதா…?” என்றான் அபயவிதுலன்.

“இளைக்கிறேனா…? நானா…? இ… இல்லையே…! வாகனத்துக்குள் இருக்கிறேன்… எப்படி இளைக்கும்… விதுலா…! நீங்கள் என்னைச் சந்தேகப்படுகிறீர்களா என்ன?” என்றாள் தன் குரலைச் சற்று உயர்த்தி. அந்தக் குரலுக்குச் சற்றுப் பணிந்தவனாக,

“உன்னுடைய கைப்பேசிக்கு என்ன நடந்தது… அதற்கு அழைத்தேன் நீ பதில் கூறவில்லை…” என்றான்.

அப்போதுதான் மின்னேற்றியில் வைத்த கைப்பேசியை எடுத்து வராதது நினைவுக்கு வந்தது.

“ஹீ ஹீ… அதுவா விதுலா…! மின்னேற்றியில் போட்டேனா… எடுத்து வர மறந்துவிட்டேன்…” என்று தயங்கி அசடு வழிந்தவாறு கூற, மீண்டும் அவனுடைய குரல் எகிறியது.

“மிருதா… டோன்ட்… நெவர் எவர் டூ திஸ்…” என்று அவன் கடிந்தவன், அடுத்து அவன் என்ன கூறப் போகிறான் என்பதை அறிந்து வைத்தவள் போல, தன் விழிகளை அலுப்புடன் மேலே கொண்டு சுழற்றியவள், அவன் கூறுவதற்கேற்ப வாயசைக்கத் தொடங்கினாள்.

“நீ கைப்பேசி எடுக்கவில்லை என்றதும் பயந்துவிட்டேன் தெரியுமா? எத்தனை வாட்டி சொன்னாலும் கேட்க மாட்டாயா? இதென்ன இத்தனை மறதி…? உன் கைப்பேசி உன்னிடம் இருப்பதுதான் பாதுகாப்பு கண்ணம்மா…. அதையேன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்…? என் பதற்றம் உனக்கு விளையாட்டாக இருக்கிறதா…?” என்று அவன் அழுத்தமாகக் கூற, அதையே அட்சரம் பிசகாமல் வாயசைத்தவள், பின் நல்ல பிள்ளை போல,

“ஓக்கே விதுலா…! இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யு…” என்றுவிட்டுக் கைப்பேசியை டேவிட்சனிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டவன் காதில் பொருத்த,

“டேவிட்சன்…! என்ன செய்வாயோ ஏது செய்வாயோ எனக்குத் தெரியாது. இன்னும் இரண்டு நிமிடங்களில் நீ இங்கே இருக்க வேண்டும் புரிந்ததா?” என்றுவிட்டுக் கைப்பேசியை அணைக்க, அதன் பிறகே தன் கார்க் கதவை அடித்து மூடினாள் மிளிர்மிருதை. இல்லையென்றால் அந்த ஓசையை வைத்தே அவள் இறங்கி எங்கோ சென்றிருக்கிறாள் என்பதை அறிந்துகொள்வான்.

அவன் சொல்லச் சொல்லக் கேட்காது இறங்கிச் சென்ற தன் முட்டாள் தனத்தின் மீது கோபம் வர, இருக்கையில் சாய்ந்தமர்ந்தவளை அடுத்த மூன்றாவது நிமிடத்தில் வேலைத்தளத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தான் டேவிட்சன்.

அவனுடைய முகமும் இருண்டிருந்தது. தன்னால் அவனுக்குத் திட்டு விழவேண்டியதாயிற்றே என்கிற குற்ற உணர்ச்சியில் முகம் சுருங்க, வாகனத்திலிருந்த தன் கைப்பையையும், சாப்பாட்டுப் பையையும் எடுத்துக்கொண்டு இறங்கியவள் ஒன்பது மாடிகள் கொண்ட அபயவிதுலனின் ஏ.வி.ஆர் கன்ஸ்டரக்ஷனின் தலைமைச் செயலகமான அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்தாள்.

 

 

What’s your Reaction?
+1
22
+1
5
+1
3
+1
5
+1
2
+1
0

Related Post

error: Content is protected !!